நீயில்லை நிஜமில்லை 24

IMG-20200630-WA0009

நீயில்லை நிஜமில்லை 24

 

என் மேனியில்

உன் குருதி தெறிப்புகள்!

எனக்குள் 

உயிர் கொய்திடும் வலிகள்!

நீயில்லை! நிஜமில்லை!

 

ஒருநாள் முழு ஓய்விற்கு பிறகு சற்று தெளிந்து, அஞ்சலி அறையை விட்டு வெளியே வந்திருந்தாள். அவளின் தாயோ தந்தையோ அவளிடம் இதுவரை ஏதும் கேட்கவில்லை. இருவர் முகத்திலும் தளராத இறுக்கங்கள் இறுகி தெரிந்தன.

 

“சாரி ம்மா, சாரி ப்பா, நான்… செஞ்சது தப்பு தான்…” என்று அஞ்சலி கெஞ்சலோடு மன்னிப்பு வேண்ட, காதம்பரியின் கரம் மகளின் கன்னத்தில் அழுத்தமான தடம் பதித்தது.

 

விறுவிறுவென்று எரிந்த கன்னத்தில் கைவைத்தப்படி அம்மாவை கலங்கி பார்த்தவள், “சாரி ம்மா” என்று அவரை அணைத்துக் கொண்டாள். அடித்தாலும் அன்னையிடமே ஆறுதல் நாடும் மகள் பாசம் வளர்ந்தும் மாறாததாய்.

 

“எப்பவும் தைரியமா இருக்கனும்னு சொல்லி சொல்லி வளர்த்தேன். அந்த வார்த்தை கூட உனக்கு நினைப்புல இல்லாம இப்படி கோழைத்தனமா…” காதம்பரியின் கண்டன வார்த்தைகள் கலங்கி நிற்க, அஞ்சலியை தலை கவிழச் செய்தது.

 

“நீ இப்படி செய்வனு நாங்க எதிர்பார்க்கல டா, நீயில்லாம நாங்க மட்டும் வாழ்ந்து என்ன சாதிப்போம்னு நினைச்ச டா?” பிரபாகரும் கேட்க, “சாரிப்பா…” என்று அவரின் தோளில் சாய்ந்து மன்னிப்பு வேண்டினாள்.

 

இவர்களை கவனித்தப்படி உள்ளே வந்த அரவிந்த்,  அவர்கள் முன் தயக்கத்துடன் அமர்ந்தான்.

 

அவனுக்குள் அதீத போராட்டம்… 

 

“என்னாச்சு அரவிந்த்?” பிரபாகர் விசாரிக்க, நிமிர்ந்தவன் முகத்தில் என்றுமில்லாத அழுத்தம்.

 

“முக்கியமான விசயம், தனியா பேசலாம் மாமா” அரவிந்த் சொல்ல,

“என்ன விசயம் அரவிந்த்?” காதம்பரியும் கேட்க, அஞ்சலி கவனித்திருந்தாள்.

 

அரவிந்த் உடனே பதில் பேசவில்லை. உள்ளுக்குள் எரிமலையாக வெடித்து சிதறிக் கொண்டிருந்தான் அவன். தன் மனநிலையை ஒருமுகப்படுத்திக் கொள்ள முயன்று சற்று தாமதித்தான்.

 

“உள்ள வா அர்ச்சனா, ஏன்மா அங்கேயே  நிக்கிற?” பிரபாகர் வாஞ்சையாக அழைக்க, அரவிந்த் திகைத்து திரும்பி பார்க்க, அர்ச்சனா தயங்கியபடி அரண்மனைக்குள் வந்தாள். இவன் நெற்றி சுருங்கியது. 

 

“பார்த்துக்கமா உன் அரவிந்தை நாங்க எதுவும் செய்யல, அன்னிக்கு வரிஞ்சு கட்டிட்டு சண்டைக்கு வந்தியே மா” பிரபாகர் இலகுவாகவே பேச, அர்ச்சனா  சின்னதாக புன்னகைத்து, அரவிந்தின் முகம் பார்த்தாள்.

 

அவன் எழுந்து அவளெதிரே வந்தான். எப்போதும் அவளைப் பார்த்ததும் அவன் பார்வையில் பளிச்சிடும் மின்னல் பரவசம் இப்போது தோன்றாததில் அர்ச்சனாவிற்கு ஏமாற்றமானது.  

 

அவன் தன்னை விட்டு விலகி போவது போன்ற தோற்றம் அவளுக்குள் வலி சேர்ப்பதாய்.

 

“என்னாச்சு உனக்கு? ரெண்டு நாளா எத்தனை கால், எத்தனை மெஸெஜ், எதுக்குமே ஆன்சர் பண்ணனும்னு தோனல இல்ல… இப்ப உனக்கு நான் தேவையில்லாதவளா போயிட்டேனில்ல?” அர்ச்சனா தாழ்ந்த குரலில் அவனிடம் ஆதங்கப்படவும்,

 

“இப்ப எதுக்காக இங்க வந்த?” அரவிந்தின் கண்டிக்கும் விதமான கேள்வியில் அவள் விழிகள் அகன்று விரிந்தன.

 

“ஓஹோ இப்ப நான் யாருன்னு கூட கேப்ப போல?” அர்ச்சனா கோபமாக எதிர் கேள்வி வீசினாள்.

 

“முன்ன நீ யாருன்னு தெரியாம தான் இருந்தேன்… இப்ப உன்ன பத்தி முழுசா தெரிஞ்சிட்டு தான் கேக்கிறேன், இப்ப எதுக்கு இங்க வந்த?” வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் அழுத்தம் கூட்டி கேட்டான்.

 

அர்ச்சனா அவனை வித்தியாசமாக பார்த்தாள். அரவிந்த் இப்படி ஒட்டாமல் பேசி‌ முன் எப்போதும் பார்த்ததில்லை அவள். “என்னாச்சு உனக்கு? உன்கிட்ட பேசனும் அரவிந்த், முதல்ல இங்கிருந்து போகலாம் வா” அர்ச்சனா அவன் கையை பற்ற, இவன் உதறி விலகி நின்றான். அவள் முகம் அதிர்ந்து சுருங்கி போனது. 

 

நேசம் கொண்டவனின் சிறு விலகலும் அவள் நெஞ்சை தகிக்க செய்வதாய்.

 

“எதுவாயிருந்தாலும் இங்கேயே பேசு அர்ச்சனா” அரவிந்த் அவள் அதிர்வைக் கண்டும் அழுத்தமாக நின்றான்.

 

“அரவிந்த் நீ அர்ச்சனா கூட போடா, நாம அப்புறம் பேசிக்கலாம்” பிரபாகர் சொல்லவும், இப்போதும் அவன் அசையவில்லை.

 

அவன் பார்வை கவனம் மொத்தமும் அர்ச்சனா மீது இருந்தது. அர்ச்சனாவின் சங்கடமான பார்வை அவனை விடுத்து அந்த பிரமாண்ட கூடத்தை ஒருமுறை சுற்றி வந்தது.

 

அரவிந்திற்கு நேர் பின்னால், பிரபாகர், அஞ்சலி, காதம்பரி மூவரும் நீள சோஃபாவில் அமர்ந்து இவர்களை தான் கவனித்து கொண்டிருந்தனர். அர்ச்சனாவுக்கு நேர் பின்னே அரண்மனை வாயிலில் நான்கு காவல் ஆட்கள் கையில் சிலம்ப கம்போடு நின்று இவர்களை தான் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். கூடத்தின் ஒருபகுதியில் இருபுறம் வளைந்து செல்லும் இருபக்க மாடி படிக்கட்டுகள் தெரிந்தன. அவளின் பார்வை மாடியை ஒருமுறை பார்த்து விட்டு தாழ்ந்தது. இவர்களை தவிர அந்த பரந்த கூடம் வெறுமையாக தான் இருந்தது. இருந்தும் இங்கு அவனுடன் வாதாடுவதில் அவளுக்கு விருப்பமிருக்கவில்லை.

 

“ஏன் அமைதியா இருக்க? ஏதோ முக்கியமா பேசனும்னு சொன்னல்ல” என்ற அரவிந்த் பார்வையில் இருக்கும் ஏதோவொன்று இவளை உரசி பார்க்கத்தான் செய்தது. இருக்கும் இடத்தை பொறுத்து தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றாள்.

 

“இதுவரைக்கும் முக்கியமான விசயத்துக்காக மட்டும் தான் நாம பேசினோமா? விசயம் எதுவும் இல்லனா, நமக்குள்ள பேசவும் எதுவும் இல்லையா?” அவளின் உரிமை கேள்வியில் அரவிந்த் முகம் இறங்கியது. கண்களை அழுத்த மூடி திறந்து, தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து நின்றான்.

 

“பேச்சை மாத்த ட்ரை பண்ணாத அர்ச்சனா, பி ஃபிராங்க், என்ன பிளானோட இங்க வந்திருக்க, ஒழுங்கா சொல்லிடு?” அரவிந்த் நேரடி கேள்வியில் இவள் முகம் கசங்கியது.

 

“வாட்? பிளானா?” அவள் இட வலமாக தலையசைத்து கேட்க, இவன் கண்களில் சிவப்பேறின.

 

“ஓஹ் உனக்கு பிளான் பத்தி எதுவும் தெரியாதில்ல, பட் உன்னபத்தி இப்ப முழுசா தெரிஞ்சுக்கிட்டேன்…” என்றவன் குரலில் ஆத்திரம் கூடியது.

 

அவளை விட்டு திரும்பியவன், “அங்கிள் நான் உங்ககிட்ட பேச வந்த விசயம்…! அஞ்சலிய டார்கெட் பண்ண கொலைகாரன் யாருன்னு கண்டுபிடிச்சாச்சு…” அவன் சொல்ல மூவரும் திகைத்து எழுந்து கொண்டனர்.

 

“நிஜமாவா அரவிந்த்? யாரது?” பிரபாகர்  கேட்க, அஞ்சலி, காதம்பரி முகத்திலும் அந்த கேள்வி தான் தொக்கி இருந்தது.

 

அவன் அர்ச்சனாவை கைகாட்டி, “இதோ இப்ப அர்ச்சனா அவனை பத்தி எல்லாத்தையும் சொல்லுவா பாருங்க” என்றவன், “சொல்லு அர்ச்சனா, யாரு அந்த கல்பிரிட்?” இவளிடம் கேட்க, அனைவரின் பார்வையும் ஒன்றாக அர்ச்சனா மீது பதிந்தது. அவள் நிர்சலனமாக அவனை எதிர்க்கொண்டாள்.

 

“யாரை பத்தி என்ன சொல்ல சொல்ற? புரியற மாதிரி பேச மாட்டியா?” அவனை கடிந்தும் கொண்டாள்.

 

“ம்ஹும் ஆன்ட்டி, நான் வந்த பிறகு தான், அஞ்சலிக்கு ஆபத்து வருதுன்னு நீங்க அடிக்கடி சொன்னீங்கல்ல… நான் வந்த அப்ப தான் அர்ச்சனாவும் கம்பெனியில ஜாய்ன் பண்ணா… உங்களுக்கு ஞாபகம் இருக்குல்ல?” அரவிந்த் அவரிடம் கேட்க, காதம்பரி பதற்றத்தோடு ஆமோதித்து தலையசைத்தார்.

 

அங்கே பேச்சு எந்த திசை நோக்கி நகர்கிறது என்பதை அனைவராலும் புரிந்து கொள்ள முடிந்தது. அங்கிருந்தவர்களை படபடப்பு சூழ்ந்தது.

 

“உனக்கு நினைவு இருக்கா அர்ச்சனா…? முதல் முறை என்னை பார்க்க நீ இங்க வந்த அன்னைக்கு தான் இந்த அரண்மனைக்குள்ள விஷம் வந்தது? அடுத்த முறை எனக்கு பர்த்டே விஷ் பண்றேன்னு இங்க வந்தல்ல, சரியா அப்ப தான் கத்தியோட அரண்மனைக்குள்ள ஒருத்தன் வந்தான்…? ஊட்டி கெஸ்ட் ஹவுஸ்க்கு நீ வர வரைக்கும், அங்க எந்த ஆபத்தும் எங்களுக்கு வரல… நீ வந்ததும் உன்கூடவே கொலைக்கரனும் வந்துட்டான்…? நான், நீ, அந்த கொலைக்காரன்… நாம மூனு பேருக்கும் செமயா லிங்க் ஒர்க் ஆகுதில்ல?” அரவிந்த் ஒவ்வொன்றாக சொல்லி அவளிடம் ஆலோசனை போல கேட்க, அவளின் முகம் கருத்தது.

 

“இப்ப என்ன சொல்ல வர அரவிந்த்? என்னை சந்தேகபடறியா?” அர்ச்சனா குரல் ஓங்கி ஒலிக்கவும்…

 

அவர்களைப் பார்த்திருந்த அனைவரின் முகத்திலும் அதிர்ச்சி ரேகைகள்.

 

“அரவிந்த், போயும் போயும் அந்த கொலைக்காரனை அர்ச்சனாவோட சம்பந்தப்படுத்தி பேசுற? உனக்கு மூளை குழம்பி கிடக்கு போல” அஞ்சலி தான் அவனை கடிந்தாள். ஏனோ அர்ச்சனாவை அத்தனை கீழாக அவளால் எண்ணவும் முடியவில்லை.

 

“ஆமா டா அர்ச்சனா மேல நீ சந்தேகப்படுறது சரியில்ல” பிரபாகரும் முன்வந்து சொன்னார்.

 

“மாம்ஸ் நல்லா கண்ண திறந்து பாருங்க இவங்க ரெண்டு பேரையும்,‌ நான் சொல்றது உண்மைன்னு உங்களுக்கே புரியும்… இவங்க ரெண்டு பேரோட முகமும் ஒரே சாயலா இருக்கிறதை நான் அன்னிக்கு கவனிக்கலனா, இப்பவும் உங்களமாதிரி நானும் இவளை கண்மூடித்தனமா நம்பிட்டு தான் இருந்திருப்பேன்” அரவிந்த் அடித்து சொல்லவும் தான் மற்றவர்கள் பார்வை அந்த இரு பெண்களின் முக சாயல் ஒற்றுமையை கவனித்து பார்த்தன.

 

சாதாரணமாக பார்க்கும்போது அவர்கள் தோற்றம் மாறுபட்டு தான் தெரிந்தது. உடை, நடை, பாவனைகளில் பெருத்த வித்தியாசங்கள் தான் தெரிந்தன. கூர்ந்து கவனிக்கும் போது மட்டுமே அவர்களின் முகத்தின் சாயல் ஒற்றுமையை கண்டறிய முடிந்தது.

 

அத்தனை தெளிவான ஒற்றுமை இல்லையென்றாலும், அரண்மனை குடும்பத்தின் அந்த சாயலை ஒதுக்கவும் இயலாது. காதம்பரியும், பிரபாகரும் மேலும் அதிர்ந்து நிற்க, இப்போதும் அஞ்சலிக்கு அர்ச்சனா மீது சந்தேகம் எழவில்லை.

 

“இந்த பொண்ணு யாரு பா?” பேச்சு சத்தம் கேட்டு அங்கே வந்த திரிபுரசுந்தரி நடுங்கிய குரலில் வினவ,

 

“பெரியநாயகி அம்மாவோட பேத்தி, அர்ச்சனா மாரியப்பன்…!” அத்தகவல் அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சி தந்தது என்றால், அர்ச்சனாவின் முகத்திலும் திகைப்பின் சாயல் பரவியது.

 

அன்று உதகை விருந்தினர் மாளிகையில் அரை இருட்டு அறையில் ஒரேமாதிரி உடையில் அர்ச்சனாவையும் அஞ்சலியையும் அருகருகே பார்த்தவனுக்கு, ஒரு நொடி, இரு பெண்களின் தோற்றமும் ஒத்ததாய் தெரிந்தது(identical origin). அப்போது தன் குழப்பத்தினால் வந்த காட்சிப்பிழை என்று அதை தவிர்த்தவனுக்கு பிறகு தான் பொறி தட்டி இருந்தது. 

 

அதுவரை அவனுக்கு ‘அவன் சனா’வின் நடவடிக்கைகளில் சிறிதும் சந்தேகம் ஏற்பட்டதில்லை. 

 

அதன்பிறகு தான் தன் விசாரணையைத் தொடங்கி இருந்தான். முடிவு அவனை அதிர செய்தது; ஆத்திரமூட்டியது; கலங்கவும் வைத்தது.

 

அர்ச்சனா பற்றிய உண்மையை தான் விளக்கியும் நெடுமாறன் தாமதிப்பதற்கான காரணமும் இவனுக்கு புரிந்து தான் இருந்தது. 

 

இதுவரை அர்ச்சனாவிற்கு எதிராக கிடைத்த ஆதாரங்கள் யாவுமே சந்தேகத்தின்‌ அடிப்படையில் ஆனவை மட்டுமே. அவற்றை வலுவான சாட்சியாக எடுக்க முடியாது. அசைக்க முடியாத வலுவான ஆதாரத்திற்காக போலீஸ் வலைவிரித்து காத்திருக்கிறது.

 

தன் சனாவை கொலை குற்றவாளியாக காணும் துணிவு இவனுக்கு இல்லை. அஞ்சலியை பலி கொடுக்கும் தைரியமும் இவனுக்கு இல்லை. 

இரு பெண்களையும் எவ்வித சேதமும் இன்றி காப்பாற்ற வேண்டிய கட்டாயம் இவனுக்கு. அதற்கு இவனறிந்த ஒரேவழி அர்ச்சனாவை உண்மையை ஒத்துக் கொள்ள வைப்பது! போலீசாரிடம் சரணடைய வைப்பது!

 

இதனால் குறைவான தண்டனையோடு அவளை காப்பாற்ற முடியும், அதற்காக தான் அவளிடம் போராடிக் கொண்டு இருக்கிறான்.

 

ஆனால் அர்ச்சனா…!

 

“நீ என்மேல இப்படி சந்தேகப்பட கூடாது அரவிந்த்…” அர்ச்சனா குரல் உயர்த்தி மறுத்துச் சொல்ல, இவன் முகமும் ஆத்திரம் காட்டியது.

 

“அஞ்சலி பத்தியும் அவளோட சில்லியான பழக்க வழக்கம் பத்தியும் உன்கிட்ட சொன்ன அடி முட்டாள் நான் தான்… என்னை பார்க்க வர சாக்குல இங்க வந்து, பொண்ணுக்குட்டி கைபையை தூக்க ஹெல்ப் பண்ற மாதிரி அன்னிக்கு அரண்மனை சமயல்கட்டு வரைக்கும் வந்த புது ஆள் நீ மட்டும் தான்…” 

 

“…!”

 

“ரூபி இறந்து போனதை நான் சொன்னப்ப, நீ அந்த நாய்குட்டிக்காக இறக்கபடவுமில்ல, அஞ்சலிக்காக வருத்தப்படவுமில்ல, ‘அரண்மனைக்குள்ள விஷம் வந்திருக்க சான்ஸ் இல்ல, இதெல்லாம் அஞ்சலியோட டிராமா’னு என்னை குழப்பி விட டிரை பண்ணல்ல?” 

 

“…!”

 

“எனக்கு இல்லாத பொறந்த நாளுக்கு செலபிரேட் பண்ண வந்தியே, எப்பவும் இல்லாத மேக்கப் அலங்காரத்தோட… சரியா அதே நேரத்தில அஞ்சலி மேல அட்டாக் நடந்தப்போ கூட, எனக்கு உன்மேல சந்தேகம் வரல, காதல் என் கண்ணை மறச்சிடுச்சு… 

 

இப்ப நான் தெளிவா இருக்கேன் அர்ச்சனா, யாரு அந்த கொலைக்காரன்? எதுக்காக இப்படி எல்லாம் செய்ற? என்ன பிளானோட இங்க வந்திருக்க?” 

 

அரவிந்தின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டில் அந்த கூடமே அதிர்ந்தது. அங்கிருந்த மனிதர்களும் தான்.

 

அரவிந்த் கேட்ட, எந்த கேள்விக்கும் அர்ச்சனாவிடம் பதில் வரவில்லை. அவளிடம் பயமோ, பதட்டமோ கூட தெரியவில்லை. அரவிந்தை தாண்டி அவளின் அசையா பார்வை வேறுபக்கம் திரும்பவும் இல்லை.

 

“பேசு அர்ச்சனா… பைத்தியக்காரத்தனமா உன்ன காதலிச்சேன், என்னைவிட உன்ன அதிகமா நம்பி இருந்தேன், என்னை ஒன்னுமில்லாம செஞ்சுட்டல்ல… பேசுடீ” அவன் குரலில் அடக்கிய வலி தெறித்தது.

 

அர்ச்சனா அசையவில்லை, அவளிடத்தில் பெரிதாக மாற்றமும் தெரியவில்லை.

 

“இப்பவாவது வாய திறந்து பேசி தொலடி, உண்மைய ஒத்துக்க… இல்ல அர்ஜுனை விசாரிக்க வேண்டியது இருக்கும்”

 

அர்ஜுன் பெயரை சொல்லவும் இவள் முகம் பரபரப்பானது. “வேணாம் அரவிந்த், அஜ்ஜுவ இதுல இழுக்காத, அவனுக்கு எதுவும் தெரியாது” என்றாள் பதறியவளாக.

 

“அப்ப உனக்கு தெரியும் இல்ல, சொல்லு” அரவிந்த் அவளை விடாமல் கேட்க, 

 

“நீ என்னை சந்தேகப்பட கூடாது அரவிந்த்…! உனக்கு நான் முக்கியமா? இல்ல இவங்க முக்கியமா? இப்பவே முடிவு பண்ணிக்க” அவளின் அமர்த்தலான குரலில் எச்சரிக்கை ஒலித்தது.

 

“உனக்கு நான் முக்கியமா? இல்ல உன்னோட இந்த கொலைவெறி முக்கியமா? நீ முதல்ல உன் முடிவ சொல்லு, நானும் என் முடிவை சொல்றேன்” அவனும் அசராமல் கேட்டான். 

 

“இப்ப நீ என்னை என்ன செய்ய சொல்ற அரவிந்த்…? இதோ நீ தலையில தூக்கி வச்சு கொண்டாடுறியே இந்த குடும்பத்தை நானும் தலையில தூக்கி வச்சு கொண்டாடனும்னு சொல்றீயா…? எப்படி முடியும் என்னால? இதோ இவங்க தான்… எங்க மொத்த குடும்பத்தையும் என் கண் முன்னாலயே… வெட்டி சாச்சது… தெரியுமா உனக்கு?” அதுவரை பிடித்து வைத்த நிதானம் அறுந்து போக, அவளின் உடல் நடுங்க, முகம் சிவக்க ஆங்காரமாக பேசினாள்.

 

“நீ தப்பா புரிஞ்சிட்டு இருக்க அர்ச்சனா, இவங்க யாருக்குமே உங்க குடும்பத்தை பத்தி எதுவுமே தெரியாது. உங்க தாத்தா செஞ்சதுக்கு நீ இவங்க மேல வன்மம் பாராட்டுறது சரியில்ல…” அவன் குரல் இறங்கி அவளுக்கு புரிய வைக்க முயன்றது.

 

“எனக்கு யாரும் தாத்தா இல்ல… அவனெல்லாம் மனுசனே இல்ல… இரத்தவெறி பிடிச்ச மிருகம்… எவ்வளவு பெரிய அருவா தெரியுமா, என் அப்பத்தா, என் மாமா, என் அப்பா, என் அம்மா எல்லாரையும் என் கண்ணு முன்னாலயே… துடிக்க துடிக்க…!” அவளின் உடல் வியர்த்து வழிந்தது.

 

“என் முகமெல்லாம் ரத்தம்… என் கையெல்லாம் ரத்தம்… என் டிரஸ் எல்லாம் ரத்தம்… எங்க வீடெல்லாம் ரத்தம்…” அர்ச்சனா முகம் வெளிர, தன் முகத்தையும், கைகளையும் உடையையும் காட்டிப் பேசினாள்.

 

“என்னையும் என் தம்பியையும் கிணத்துல வீசி எறிஞ்சாங்க தெரியுமா…? நான் பெரிய பொண்ணு நீந்தி பொழைச்சுக்கிட்டேன்… ஆனா தம்பி… சின்ன குழந்தை அவன்… கல்லுல மோதி அடிப்பட்டு இரத்தம் வழிஞ்சு… என் கையிலயே அவன் உயிர் போச்சு தெரியுமா? எனக்கு எப்படி இருந்து இருக்கும்…?” அவளின் சிவந்த விழிகளில் கலங்கி வழிந்த கண்ணீரும் இரத்த சிவப்பின் பிரதிபலிப்பாய்…

 

அரவிந்திற்கு இந்த செய்தி புதியது. அவளின் நிலை புரிந்து இவன் மனமும் இளகியது. அவளை நோக்கி ஓரடி வைத்தான்.

 

“வராத அங்கேயே நில்லு” அர்ச்சனா குரல் அவனை தடுத்தது. 

 

“நீ என்னை சந்தேகப்பட்டு இருக்க கூடாது அரவிந்த்… நான் உன் சனா தான! உன் சனா மேல நீ எப்படி சந்தேகம் படலாம்?” அவள் கேள்வியில் இவன் திணறி நின்றான்.

 

அர்ச்சனா பேசுவதை கேட்டு அங்கிருந்த அனைவரும் கூட மனம் கலங்க, அதிர்ச்சியின் விளிம்பில் நின்றிருந்தனர். அர்ச்சனா சொல்வதை உள்வாங்கிக் கொள்ளவே அவர்களுக்கு சிறிது அவகாசம் தேவைப்பட்டது.

 

“உன் குடும்பத்தை அழிச்சாங்கன்னு இவங்க குடும்பத்தையும் அழிக்க போறீயா? பழிக்கு பழி வாங்கினா எல்லா சரியா போச்சா? இதெல்லாம் சைகோ தனமா இல்ல” இப்போது  அரவிந்த் குரலில் நிதானம் வந்திருந்தது. 

 

“நான் சைகோவா? உன்ன வளர்த்த அம்மா செத்ததுக்கு நீ தற்கொலை செஞ்சிக்கற அளவுக்கு போனல்ல, உன் அப்பா இறந்ததை தாங்கிக்க முடியாம, இங்க வந்து வேலைக்காரனா அல்லல் பட்டுட்டு இருகில்ல… இதுக்கு பேரு பாசம்னா…

 

என்னை பெத்து பொத்தி வளர்த்த எங்க குடும்பத்தை ஒட்டு மொத்தமா சிதைச்சுட்டு போனவங்களை பழிவாங்கறது பாசம் கிடையாதா? என்னால தூங்க முடியல… ஒவ்வொரு ராத்திரியும் என் அம்மா, அப்பாவோட அலறல் சத்தம் இப்பவும் என் காதுல கேட்டுட்டே இருக்கு… எங்க குடும்பம் ஒருநாள்ல அனுபவிச்ச கொடுமைய அதுக்கு காரணமான இந்த குடும்பம் ஒவ்வொரு நாளும் அனுபவிக்க வேணாம்…” நடு கூடத்தில் அத்தனை பேர் முன்னே அர்ச்சனா வெஞ்சினம் உரைத்தாள்.

 

“அய்யோ ஆத்தா, என் புருசன் செஞ்ச பாவத்துக்கு எந்த தண்டனைனாலும் நான் ஏத்துக்கிறேன் தாயீ… என் பேத்திய விட்டுடுமா… நீயும் இந்த வீட்டு பொண்ணுமா உன் பழிவெறிய விட்டுடு மா” திரிபுரசுந்தரி அர்ச்சனாவிடம் கண்ணீர் கசிய, கைகூப்பி வேண்டி நிற்க,

 

“சுலபமா பாவத்தை தீத்துக்கலாம்னு பார்க்கறீங்க இல்ல… என் அம்மா இந்த குடும்பத்து பொண்ணில்லனு பழி போட்டு தானே சாகடிச்சீங்க… இப்ப நான் மட்டும் இந்த குடும்பத்து பொண்ணா? காரியம் சாதிச்சுக்கிற உங்க சுயநல புத்திய எவ்ளோ அழகா எக்ஸ்போஸ்‌ பண்றீங்கல்ல… நீங்க எல்லாரும் இதே அரண்மனையில நல்லா இருக்கனும்… ஆனா ஒருநாள் கூட நிம்மதியா இருக்க கூடாது… இந்த சொத்துல நாங்க பங்குக்கு வருவோம்னு தான எங்களை ஒட்டுமொத்தமா கருவறுத்தீங்க… இந்த சொத்து வாரிசில்லாம அழிஞ்சு மண்ணோட மண்ணா போகனும்… போக வைப்பேன்…”

 

“போதும் உன் பைத்தியக்காரத்தனத்த நிறுத்து அர்ச்சனா… நல்லதோ கெட்டதோ வாழறத்துக்கு தான் வாழ்க்க இப்படி ஒருத்தர ஒருத்தர் மாத்தி மாத்தி செத்து மடியறத்துக்கில்ல… 

 

எங்களை பழி தீர்த்துக்கிட்டா மட்டும் உனக்கு என்ன கிடைச்சிட போகுது? உங்க குடும்பத்தை அழிச்ச எங்க அப்பாவுக்கும், அஞ்சலிய கொல்ல துடிக்கிற உனக்கும் என்ன பெரிசா வித்தியாசம் இருக்கு… நீயும் இப்ப கொஞ்ச கொஞ்சமா மிருகமா மாறிட்டு  இருக்க…” காதம்பரியும் அவளிடம் ஆவேசமாக பேசினார்.

 

“ஆமா நான் மிருகம் தான்… உங்க அப்பன் அந்த கிழவன் எப்படி துடிச்சு துடிச்சு செத்தான்னு நீங்கல்லாம் கண் குளிர பார்த்தீங்கல்ல… எத்தனை ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு போனீங்க, ஒரு டாக்கராலயாவது அவனுக்கு என்ன நோய்னு கண்டுபிடிச்சு சொல்ல முடிஞ்சதா? அவன் உடம்புக்குள்ள நாங்க செலுத்தின மருந்து அப்படி…! 

 

அரண்மனைக்காருக்கு பைத்தியம் பிடிச்சது வெளியே தெரிய கூடாதுன்னு தனி அறையில அடைச்சு வச்சு குடும்ப கௌரவத்தை காப்பாத்திக்கிட்டீங்கல்ல!” அர்ச்சனா இதழில் குரூர சிரிப்பு வந்து மறைந்தது. 

 

“இருட்டு அறைக்குள்ள கத்தி, கதறி, தன் உடம்ப தானே காயப்படுத்திக்கிட்டு செத்து ஒழிஞ்சானில்ல…! அத்தனை கொடுமையான சாவ உங்க எல்லாருக்கும் கொடுக்க எவ்வளவு நேரம் ஆகி இருக்கும் எனக்கு… ஆனா நான் அப்படி செய்யலையே… எந்த வாரிசுக்காக எங்க குடும்பம் அழிஞ்சதோ, அந்த வாரிசு இல்லாம அழிஞ்சு போகனும்… அவ்வளவு தான்” அர்ச்சனாவிடம் பழிவெறி ஊறி போயிருந்தது.

 

இதற்குள் அர்ச்சனாவின் பின்னோடு நான்கு காவல் ஆட்கள் அவளை தப்பவிடாது எட்டவே வளைத்தப்படி நின்றிருந்தனர்.

 

அவளை சுற்றிலும் அவளுக்கு எதிராக நிற்கும் ஆட்கள். வெளியே காவலர்கள் இந்த அரண்மனையை முழு‌ கண்காணிப்பில் வைத்திருப்பதும் அவளுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் அவளிடம் பயமோ, பதற்றமோ கிஞ்சித்தும் இருக்கவில்லை. மாறா பழிவெறியையும் அடங்கா  ஆத்திரத்தையும் அதீத ஆவேசத்தையும் மட்டுமே அவள் முகமும் வார்த்தைகளும் காட்டிக் கொண்டிருந்தன.

 

அர்ச்சனா இத்தனை தூரம் பொறுமையாய் விளக்கம் சொல்வதற்கு ஒரே காரணம் அரவிந்த் அவளை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே. மற்ற யாரை பற்றியும், எதை பற்றியும் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை அவளுக்கு.

 

“எதுக்குமா நமக்குள்ள இந்த பழிவெறி எல்லாம்… சின்ன பொண்ணு உனக்கு வாழ வேண்டிய வாழ்க்கை நிறைய இருக்கு விட்டுடு மா… உனக்கு சேர வேண்டிய சொத்தையும் நாங்க எழுதி தந்துறோம்…” பிரபாகரும் அவளுக்கு புரிய வைக்க முயன்றார்.

 

“நாங்க இந்த சொத்துக்காக பூச்சி காட்டுறேன்னு நினைச்சிட்டீங்களா? இல்ல நாங்க பரிகொடுத்த உயிருக்கு பேரம் பேசறீங்களா?” அவள் எதற்கும் மசிவதாக இல்லை.

 

“அர்ச்சனா காம் டௌன், என்ன பிளானோட இங்க வந்திருக்க? உனக்கு துணையா இருக்கிற அவன் யாரு சொல்லிடு?” அரவிந்த் அவளிடம் தன்மையாகவே விசாரிக்க, அவள் பதில் பேசாது நின்றாள். 

 

அவள் உள்ளே வந்து சரியாக இருபத்திரண்டு நிமிடங்கள் கடந்து இருந்தன. இன்னும் எட்டு நிமிடங்களுக்குள் அவள் ஏதேனும் முடிவெடுத்திட வேண்டும்! அவளுக்குள் யோசனை ஓடியது. அவளின் திட்டத்திற்கு முன்னும் இப்போதும் தடைக்கல்லாக குறுக்கே இருப்பது அரவிந்த் மட்டும் தான். அவள் கவலையும் அவனைப் பற்றி மட்டுமே இந்த நிமிடம் வரையில்.

 

“பிளீஸ் அர்ச்சனா, இப்ப டைம்மில்ல, இந்நேரம் போலிஸ் இங்க வந்திட்டு இருப்பாங்க… எல்லா உண்மையும் ஒத்துகிட்டு சரண்டர் ஆகிடு, இப்ப அதுதான் உனக்கு சேஃப்டி… வேற எதுவும் முட்டாள்தனமா செய்ய நினைக்காத ஓகே” அரவிந்த் அவளுக்காக தான் பேசிக் கொண்டிருந்தான்.

 

அவன் அவளுக்காக சொல்வது புரிந்தும், அதை ஏற்கும் மனநிலை இல்லை அவளிடம். அவள் வேறு வழியை தேடி கொண்டிருந்தாள்.

 

“அர்ச்சனா, அரவிந்த் உனக்காக தானே சொல்றான் கேளு, நான் ஒருத்தி சாகறதால உனக்கோ, உங்க குடும்பத்துக்கோ எதுவும் கிடைக்க போறதில்ல… ப்ளீஸ்” துணிந்து முன்னே வந்து பேசிய அஞ்சலி தன்னை மீறிய பயத்தில் உறைந்து நின்று விட்டாள்.

 

அதுவரை சேலைக்கட்டிற்குள் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கி அர்ச்சனாவின் கைகளில், அஞ்சலியைக் குறிநோக்கி! 

 

சடுதியில் அஞ்சலியை மறைத்தபடி  அரவிந்த் முன் வந்து நிற்க, அடுத்தடுத்த நொடிகளில் அர்ச்சனாவை பிடிக்க வந்த காவல் ஆட்களின் கைகளிலும் கால்களிலும் ஆங்காங்கே குண்டு பாய்ந்திட, குருதி வெளியேற அலறியபடி கீழே சரிந்தனர்.

 

அர்ச்சனா நின்ற இடத்தில் இருந்து நகராமல் கைகளை மட்டும் தான் அசைத்திருந்தாள். சைலன்சர் பொருத்தப்பட்ட அந்த துப்பாக்கியிலிருந்து பாய்ந்த எந்த குண்டும் குறி தப்பியிருக்கவில்லை. 

 

மேலும் முன்னேறியவர்களை அவள் குறி வைக்க, “யாரும் கிட்ட வராதீங்க போங்க… ஸ்டாப் இட் அர்ச்சனா” அரவிந்த் கூச்சலிட்டு அவர்களை தூரவே நிற்க செய்தான். அங்கு எந்த உயிரும் சேதமாவதை அவன் விரும்பவில்லை.

 

சில நிமிடங்களில் அங்கே எல்லாமே மாறி இருந்தது. அந்த இடம் கூச்சல், குழப்பம், அலறல் சத்தத்தில் அல்லாடிப் போனது.

 

அர்ச்சனாவிடம் துப்பாக்கி இருக்கும் என்று அரவிந்த் எதிர்பார்த்திருக்கவில்லை. அதுவும் சில நொடிகளில் பெரிதாக ஓசையின்றி மூன்று பேரை சாய்த்து இருந்தது அவளின் லாவகமான தாக்குதல்.

 

இதுவரை பேசியவர்கள் அனைவரும் உச்சக்கட்ட பயத்தில் ஒடுங்கி நின்றிருந்தனர்.

 

“முதல்ல கன்ன கீழ போடு அர்ச்சனா, இன்னும் இன்னும் பிரச்சனைய பெருசாக்கிட்டு இருக்க நீ…” அரவிந்த் கத்திவிட்டான்.

 

“எனக்கு எதைப் பத்தியும் கவலை இல்ல… முதல்ல நீ ஒதுங்கு அரவிந்த்… இல்ல உனக்கும் இவங்க கதிதான்” அர்ச்சனா எச்சரிக்க,

 

“ஏய், ஏன்டி? ச்சே… என்னையும் கொன்னுட்டு அஞ்சலியும் கொன்னுட்டு நீ என்ன‌ செய்ய போற… கொலையும் இரத்தத்தையும் நேரடியா பார்த்து பார்த்து உனக்குள்ளயும் கொலைவெறி ஊறி போயிருக்கா?” நிலைமை மோசமாக கைமீறி போவதை உணர்ந்து அரவிந்தின் பதற்றம் உச்சத்தை தொட்டிருந்தது.

 

“ஆமா எனக்கு இரத்தவெறி பிடிச்சு இருக்கு… இப்பவும் என்னை விட உனக்கு அவ தான் முக்கியமா போயிட்டா இல்ல…” என்று அர்ச்சனாவும் வாதாடினாள். அவனை நோக்கி அவளின் கைத்துப்பாக்கி நீண்டபடி இருந்தது.

 

“எப்பவோ யாரோ செஞ்ச பாவத்துக்கு, எந்த தப்பும் செய்யாத அஞ்சலிய பழி தீர்த்துக்க நினைக்கிற உன் முட்டாள்தனத்தை விட்டு தொலையேன்…”

 

“நாங்க என்ன பாவம் செஞ்சோம், எந்த தப்புமே செய்யாம எங்க உலகம் சிதைஞ்சு போச்சே… யாரும் கேக்கலையே…”

 

அர்ச்சனாவிற்கும் அரவிந்திற்கும் இடையே குறைந்தது ஐந்தடி இடைவெளி இருந்தது. அவள் முன்னெச்சரிக்கையாக எட்ட நின்றே அவர்களுடன் வாதாடிக் கொண்டிருந்தாள். அகன்ற இடமாதலால் முன்பு யாருக்கும் அது வித்தியாசமாக படவில்லை. இப்போது அவளின் தாக்குதலுக்கு அது வாய்ப்பாக அமைந்து விட்டது.

 

“பாட்டனோட சொத்து சுகத்தை மட்டும் அனுபவிச்சா போதுமா? அவனோட பாவத்தையும் அனுபவிக்க வேணாமா…? லாட்ஸ்டா சொல்றேன் நகர்ந்திடு அரவிந்த்…” அவள் எச்சரிக்கையை சட்டை செய்யாமல் அரவிந்த் அவளை நோக்கி வர, அஞ்சலியை மற்றவர்கள் அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றனர்.

 

“சனா பிளீஸ்… உன்ன இப்படி என்னால பார்க்க முடியலடி… என் சனா கொலைக்காரி இல்ல… இது எல்லாத்தையும் விட்டுடு, என்கிட்ட வந்துடு ப்ளீஸ்…” அரவிந்த் சற்று பொறுமையாக அவளை இளக வைக்க முயன்றான்.

 

“நீ இப்படியெல்லாம் பேசினா நான் உருகி கரைஞ்சிடுவேன்னு நினைக்காத அரவிந்த்… நீ அவ்வளவு ஸ்மார்ட் எல்லாம் இல்ல. அது உனக்கே தெரியும்… முன்ன வராத விலகி போயிடு…” அவளின் எச்சரிக்கையையும் மீறி அவன் முன்னே வர,

 

“பதினாலு வருசம் என்னை வளர்த்தவங்களோட கதறலுக்கு முன்ன, நாலு மாசம் பழகின உன்னோட காதல் பெருசில்ல அரவிந்த்…” என்ற அர்ச்சனாவின் கைத்துப்பாக்கியிலிருந்த குண்டு அவன்மீதும் பாய்ந்தது.

 

“ஆஆ… அரவிந்த்…” அஞ்சலியின் அலறல் அங்கு பெரிதாக ஒலித்தது.

 

அரவிந்த் தோள்பட்டையில் தான் குண்டு பாய்ந்திருந்தது. குருதி கொப்பளித்து வர, வலி தாங்காது மடிந்து அமர்ந்தவன், முயன்று எழுந்து அர்ச்சனாவை பார்த்தான்.

 

அஞ்சலி கதறி அவனிடம் வர முயல, “விடுங்க என்னை… அச்சோ அரவிந்த்… ரத்தம்…” மற்றவர்கள் அவளை விடாமல் பிடித்து பாதுகாப்பாக இழுத்து செல்லவே பிரயத்தனப்பட்டனர்.

 

அர்ச்சனாவின் முகமும் கலங்கி தான் இருந்தது. இதுவரை அவளிடம் இருந்த உறுதி ஆட்டம் கண்டிருந்தது. 

 

“கையில இல்ல இங்க சுடு சனா…” என்று அரவிந்த் தன் நெஞ்சைக் சுட்டி பேசினான். “நீ யாரு என்னன்னு எதுவுமே தெரியாம உன்ன பார்த்ததும் பிடிச்சு போய் காதலிச்சேன் பாரு… எனக்கு இது தேவைதான்! என்னோட காதலை துருப்பு சீட்டா யூஸ் பண்ணி என்னை வச்சே அஞ்சலிய கொல்ல முயற்சி பண்றது கூட தெரியாம நீ மட்டும் தான் எனக்குன்னு நம்பி இருந்தேன் பாரு… உன் கையாலயே என்னை கொன்னுடு! நீ தான் கொலைகாரின்னு தெரிஞ்சும் உன்ன வெறுக்கவும் முடியாம, விலக்கவும் முடியாம, இப்பவும் உன்ன காப்பாத்த போராடிட்டு இருக்கேன் பாரு… சூட் மீ பிளடி ஈடியட்!”

 

“எனக்கும் அஞ்சலிக்கும் நடுவ நீ குறுக்க வந்திருக்க கூடாது அரவிந்த்… உன்னால தான், உனக்காக தான்… என்னோட ஒவ்வொரு பிளானும் ஃபிளாப் ஆச்சு தெரியுமா உனக்கு…?

 

அஞ்சலி கூடவே நிழல் மாதிரி நீயும் சுத்திட்டு இருந்த, எங்க அட்டாக்ல உனக்கு எதுவும் ஆகிடுமோன்ற பதட்டலதான் எங்க எல்லா பிளானும் சொதப்பிடுச்சு… 

 

எனக்கெல்லாம் சாதாரண பொண்ணா உன்கூட வாழனும்னு ஆசை வந்திருக்கக் கூடாது… உன்னோட வெகுளித்தனத்தில நான் மயங்கி இருக்கக் கூடாது… உன்மேல ஆசைப்பட்டு இருக்கக் கூடாது… பாழாபோன இந்த காதல் உன்மேல வந்திருக்கவே கூடாது…” அர்ச்சனா உணர்ச்சிவசப்பட்டு பேச, அவள் கையிலிருந்த துப்பாக்கியும் வெடித்தது.

குண்டு தரையில் பட்டு தான் தெறித்து இருந்தது.

 

ஆனால் அஞ்சலி உச்சக்கட்ட பயத்தில் அலறி விட்டாள். 

 

“நோ… வேணா அர்ச்சனா… அவன ஒன்னும் செய்யாத… நான் தான உனக்கு சாகனும்… நான் செத்து போயிறேன்… அவன விட்டுடு பிளீஸ்…” 

தன்னை பிடித்து இருந்தவர்களையும் உதறிவிட்டு இங்கே ஓடிவர முயன்று, முடியாமல் அங்கிருந்த படியே சத்தமிட்டு கதறிக் கெஞ்சினாள்.

 

“அரவிந்த் வேணா வந்திரு பிளீஸ்… யாராவது நான் சொல்றதை கேளுங்க… யாரும் என்னை கொல்லவும் வேணா, காப்பாத்தவும் வேணாம்… எல்லாத்தையும் விட்டுடுங்க ப்ளீஸ்…”

அங்கே அஞ்சலியின் அழுகுரல் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. 

 

அர்விந்தும் ஒரு நொடி ஸ்தம்பித்து மீண்டான். “சனா… கன்ன கீழ போட்டுடு  ப்ளீஸ்… நீ இன்னும் பிடிவாதம் பிடிக்கிறதுல எந்த‌ அர்த்தமுமில்ல…” கை வலியில் இரத்தம் வழிய அவளிடம் கெஞ்சினான்.

 

தன்னவனுக்காக வேறொருத்தி உயிர் துறக்க துணிவதும், தானே தன்னவனை காயப்படுத்தி துணிந்து நிற்பதும் அர்ச்சனாவை புரட்டி போட்டிருந்தது. அவள் மிரண்டு நின்றிருந்தாள். 

 

“அர்ச்சனா கன்ன கீழே போடு…” வெளியில் இருந்து எச்சரித்தப்படி துப்பாக்கி ஏந்திய படி நெடுமாறன், துரைசாமி சில காவலர்களுடன் வேகமாக நுழைந்து அவளை எட்டவே சூழ்ந்து நின்றனர்.

 

அர்ச்சனா குறித்த நேரத்தின் கடைசி நிமிடத்தை நொடிமுள் கடந்து கொண்டிருந்தது. இனி முடிவு அவள் கையில்…! அர்ஜுனின் முகம் அவளுக்குள் நிழலாடியது. தன்னை சமாளித்துக் கொண்டாள்.

 

“அரவிந்த்… நான் இங்க வரும் போது அஞ்சலிய கொல்றது மட்டும் தான் என்னோட டார்கெட், இடையில நான் உன்ன சந்திக்காம விலகி இருக்கனும்… உன்ன பார்த்து, பேசி, பழகினப்போ நான் தவறிட்டேன்… அஞ்சலிக்கு முன்ன நீ நிப்பனு தெரிஞ்சுக்காம போனப்போ நான் தவறிட்டேன்… எங்கே என்னோட டார்கெட்ல உனக்கு ஏதாவது ஆகிடுமோ யோசிச்சேன் பாரு அப்ப நான் மொத்தமா தோத்துட்டேன்…” 

 

“இப்பவும் உனக்காக… உன்மேல வச்ச காதலுக்காக நான் தோத்து போயிட்டேன்… பட் சாரி… அஞ்சலிய உன்னால இப்ப காப்பாத்த முடியாது…! அப்புறம் என்னையும்…!” 

 

அவள் சொல்வதை அரவிந்த் உணரும் முன்னே, தன் துப்பாக்கியை திருப்பி தன் நெற்றியில் வைத்து அழுத்தி விட்டிருந்தாள்!

 

“சனா… நோ…!” அரவிந்த் அலறி அவளிடம் பாய்ந்தோடி வர, அர்ச்சனா கீழே சரிந்திருந்தாள். அவள் முகத்தில் குருதி தெறிப்புகள்… 

 

அனைவரும் ஒரு நொடி உறைந்து மீள, அந்த இடைவெளியில் அஞ்சலியின் மீது வேறொரு குண்டு பாய்ந்தது… அவளும் சரிந்து விழுந்தாள்…!

 

அரவிந்திற்கு உலகமே தட்டாமாலை சுற்றுவதாய்… அடுத்தடுத்த அதிர்ச்சிகள், அதிக இரத்த இழப்பு… அவனையும் உணர்விழக்க செய்ய, தரையில் விழுந்தான்.

 

அதுவரை மாடியில் மறைவில்‌ இருந்த அந்த நிழலுருவம் வெளியே வந்து நின்றது. தன் துப்பாக்கியையும் முகமூடியையும் கழற்றி கீழே வீசிவிட்டு, மடிந்து அமர்ந்து கதறலானது.

 

அவனை பிடிக்க காவலர்கள் மாடியை நோக்கி தடதடவென ஓடினர்.

 

****

 

நிஜம் தேடி நகரும்…