நீயில்லை நிஜமில்லை 25 (ஈற்றயல் பதிவு)
காற்றாகி போவேனோ?
உன் சுவாசம் சேர வருவேனோ?
நீயில்லாது வேறு எதுவும்
நிஜமில்லை எனக்கு!
அரவிந்தின் கனத்த கண்ணிமைகள் முயன்று திறக்க, கண்முன்னே அர்ச்சனாவின் பூமுகம் காட்சியானது. இமையாடாமல் தன்னவனை விழிகளில் நிரப்பியபடி அமர்ந்திருந்தாள் அவள்.
அவளுக்காக அரவிந்தின் முகம் அதீத வேதனையைக் காட்டியது. படுக்கையில் இருந்து எழ முயன்றான். முடியவில்லை. அவன் மனமும் உடலும் அதிக வலியை உணர்த்துவதாய்.
“சனா… ஏன்டி இப்படி பண்ண?” அவன் தன்னுள் ஓய்ந்து உடைந்து போய் கேட்க,
“தப்பு தான் அரவிந்த்… உன்ன என் கையாலேயே சுட்டுட்டேனே… ரொம்ப வலிக்குதா?” அவன் தோள்பட்டை காயத்தின் கட்டை கண்கள் கலங்க வருடி தந்தாள்.
“ரொம்ப வலிக்குது டி, அங்க இல்ல இங்க…” என்று தன் நெஞ்சை சுட்டியவன், “தாங்கவே முடியல சனா… ஏன் இப்படி பண்ண? ஏன்டி இப்படி பண்ண?” அரவிந்த் கலங்கி வெடித்தழுது மறுபடி மறுபடி அதே கேள்வியை கேட்க,
“எல்லாமே உன்னால தான், நீ ஏன் அஞ்சலிய காப்பாத்த நினச்ச? உனக்கு நான் தான முதல்ல முக்கியமா இருக்கனும்? ஆனா நீ எனக்கு சப்போட் பண்ணல… அவளுக்கு தான் சப்போட் பண்ண” அர்ச்சனா ஆற்றாமையோடு அவனை குற்றம் கூறினாள்.
“ஏய், எல்லாம் உனக்காக தான் டி செஞ்சேன், என் சனாவ எப்படி கொலைகாரியா என்னால பார்க்க முடியும்…? என்னால முடியாது” கலங்கி தவித்த அவன் முகமும் ஆற்றாமையை காட்டியது.
“நான் என்ன செய்யட்டும்? நானும் உன் அஞ்சலி மாதிரி சொகுசா வாழ்ந்து இருந்தா நல்லவளா, மென்மையானவளா இருந்திருப்பேன். ஒரே நாள்ல எல்லாத்தையும் பறிகொடுத்துட்டு, முட்டி மோதி, விழுந்து எழுந்து, அவமானப்பட்டு அசிங்கப்பட்டு, சின்ன சின்ன தேவைக்கு கூட அதிகமா கஷ்டப்பட்டு வந்தவ நான், கரடு முரடா தான் இருப்பேன்… ஏன் உன் அப்பா, அம்மாவ யாராவது கொன்னிருந்தா நீ கொலைக்காரனா ஆகி இருக்க மாட்டியா? நானும் அப்படித்தான்… பொண்ணா பொறந்துட்டா வலியும் பகையும் எனக்கு மட்டும் இல்லாம போயிடுமா என்ன?” அர்ச்சனா தன்நிலை விளக்கம் கூற,
“உன்னபத்தி எல்லாத்தையும் என்கிட்ட மறைச்சிட்டியே சனா… என்ன முட்டாளாக்கிட்டியேடி… உனக்கு நான் என்னடி தப்பு செஞ்சேன்? எனக்கு இத்தனை பெரிய நரக வேதனைய கொடுத்து இருக்க?” தன் வாழ்நாள் முழுதும் நினைந்து நொந்து மருங்கும் தண்டனை அவள் அவனுக்கு ஈந்தது. அர்ச்சனாவின் பார்வையில் வாஞ்சை கூடியது. குனிந்து அவன் நெற்றியில் இதமாக இதழ் பதித்து மீண்டாள்.
“ஏன்னா என்னால உன்ன கொல்ல முடியாது… அதான் என்னை நானே கொன்னுக்கிட்டேன்!” என்று சொல்ல, அரவிந்த் கதறி அழ முயன்றான். முடியவில்லை, ஏதோ தொண்டைக்குள் அடைத்துக் கொண்டது. அவனிடம் பெருங்கேவல் மட்டுமே வந்தது.
“நீயில்லாம நான் எப்படிடீ… எனக்கு நீ வேணும் சனா, வந்திடு… நீ முன்ன சொன்னமாதிரி இந்த ஊரைவிட்டு எங்காவது தூரமா போயிடலாம்… நமக்கு யாரும் வேணா, நீயும் நானும் மட்டும் போதும்…” அவன் கெஞ்சலில் இவள் முகம் வேதனைக் காட்டியது.
“உன்னமாதிரி தான் அஜ்ஜுவும் நான் இல்லாம கஷ்டப்படுவான்… நீ அவன பார்த்துப்பல்ல அரவிந்த்… அவனுக்கு ஒன்னும் தெரியாது. சின்ன பையன் ஆனா, பேச்சு மட்டும் பெரிய மனுசன் மாதிரி பேசுவான்… உன்ன நம்பி தான் அவன விட்டுட்டு போறேன்…” என்று எழுந்துக் கொண்டாள்.
அரவிந்த், அவள் கரத்தை இறுக்கி பிடித்து கொண்டான். அவளின் முகம் அவனிடம் இளக்கம் காட்டியது.
“என்னையும் என் காதலையும் மறந்துடாத அரவிந்த், என்னோட சிரிப்பையும் என் முத்தங்களையும் உன்கிட்ட இருந்து அழிச்சிடாத… உன் நினைவுகளோட உனக்குள்ள வாழ்ந்திட்டிருப்பேன் எப்பவும் என்னை துரத்திடாத…” அவள் யாசித்து நிற்க,
“என்னைவிட்டு போகாத சனா… ப்ளீஸ்… என்கூடவே இருந்திடு இல்ல என்னையும் கூட்டிட்டு போயிடு…” அவன் கண்களில் கண்ணீர் சொறிய, தன்நிலை மறந்து அவளிடம் மன்றாடினான்.
“நான் போகனும் அரவிந்த், எனக்காக என் அப்பத்தா, மாமா, அத்தம்மா, அம்மா, அப்பா, குட்டி தம்பி முத்தா எல்லாரும் காத்திருக்காங்க, நான் அவங்கிட்ட போகனும்…” என்றவள், அவன் கையை விடாது எத்தனை வலிமையாக தன் பிடியை இறுக்கியும் தன் கையை உருவிக்கொண்டு நடந்தாள்.
“போகாத சனா… சனா… சனா…!” கத்தியவாறு படுக்கையில் இருந்து வேகமாக எழுந்தவனை செவிலி பெண்மணி வந்து தாங்கிக் கொண்டார்.
“இவ்ளோ வேகமா எல்லாம் எழுந்துக்கக் கூடாது பா, பொறுமையா படுத்து ரெஸ்ட் எடு பா” என்றார் அவர்.
“சிஸ்… சிஸ்டர்… சனாவ என் சனாவ கூப்பிடுங்க… போக வேணாம்னு சொல்லுங்க” அவன் பிதற்ற,
“அவ்ளோ தான உன் கூட வந்தவங்க வெளிய தான் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க, நான் போய் உன் சனாவ கூட்டிட்டு வரேன்… நீ அமைதியா படுத்திரு பா” என்று அவனை படுக்க வைத்துவிட்டு வெளியே சென்றார்.
அரவிந்த் பார்வை அங்கே சுற்றிலும் கவனித்தது. அதுவொரு மருத்துவ அறை. சிறிது அசைந்தாலும் வலது தோள்பட்டையில் வின் வின்னென்று வலி தெறித்தது. குண்டடிப்பட்ட காயத்தில் பெரிதாக கட்டிடப்பட்டு இருந்தது.
அவன் மாய பிரம்மையில் இருந்து விலகி வேதனையோடு தன்னை மீட்டுக் கொள்ள முயன்றான்.
சில நிமிடங்களில் பிரபாகர் அவனை காண அறைக்குள் வந்தார். “எப்படி இருக்க அரவிந்த்? இப்ப வலி பரவால்லயா? நேத்து முழுக்க சுயநினைவுக்கு வராம இருக்கவே நாங்க ரொம்ப பயந்துட்டோம் டா” என்று பரிதவித்து சொன்னார்.
“நௌ ஐயம் ஓகே மாம்ஸ்… அஞ்சலிக்கு என்னாச்சு? இப்ப எப்படி இருக்கா?” அவனும் பயத்துடன் தான் விசாரித்தான்.
“முதுகுல குண்டு பாஞ்சிருக்கு டா… இன்னும் அன்கான்ஷியஸ்ல தான் இருக்கா… டாக்டர் டூ டேஸ் டைம் கொடுத்து இருக்காங்க” என்றவர் குரல் தளர்ந்தது.
“அவ எழுந்து வந்துடுவா மாமா? நீங்க கவலைபடாதீங்க” என்று நம்பிக்கையாக சொன்னவன், சற்று தயங்கியபடி, “சனா… அர்ச்சனாக்கு என்னாச்சு?” என்று கேட்டான்.
அவர் இல்லையென்று தலையசைத்தார். “குண்டு சரியா நெத்திய துளைச்சு வந்திடுச்சு… அர்ச்சனா காப்பாத்த கூட வாய்ப்பு கொடுக்கல” என்றார் சோர்வாக.
நூறில் ஒரு சதவீதமாவது அர்ச்சனா உயிர் பிழைத்திருக்க மாட்டாளா? என்று அவனுள் ஒட்டியிருந்த நப்பாசை, இதயத்தை கிழிக்கும் வலி தந்து அழிந்து போனது.
“அர்ஜுன்… அவன் எங்க மாமா?”
“வந்திருக்கான்… எங்க யார் கூடவும் எதுவும் பேசல, மார்ச்சுவரி வெளியவே உக்கார்ந்து இருக்கான்… நீ கண் முழிச்சிட்டன்னு சொல்லி கூப்பிட்டு பார்க்கிறேன்”
தலையாட்டிக் கொண்டான். பிறகே நினைவு வர, “அஞ்சலிய ஷூட் பண்ணது யாரு மாமா?” அவன் கேட்க,
“மாசாணி…” என்றார்.
#
#
#
மூன்று தலைமுறைகளைப் பாதித்த கதை இது.
மகேஸ்வர பூபதி என்னும் தனிப்பட்ட மனிதனின் காமம், குரோதத்தினால் உருபெற்ற கதை இது.
மனையாள் உடன் இருக்க, பிள்ளைச் செல்வம் தானிருக்க, அன்னிய பெண்ணை நாடிய தன் சபல புத்தி தவறாக தொன்றவில்லை அவருக்கு. ஒழுக்க நெறி தவறிய கணவனை கேள்வி கேட்டு எதிர்த்து நின்ற மனைவியின் துணிச்சல் பெருங்குற்றமாக தோன்றியது.
அதுவும் நீசபுத்திக்காரனென கணவன் முகத்தில் உமிழ்ந்து விட்டு, பிள்ளையோடு வாசல் தாண்டிய தன் தர்மபத்தினி கருக்கொண்டிருக்கிறாள் என்பதையும் அறியாது, அவள்மீது வெறுப்பையும் வன்மத்தையும் விதைத்துக் கொண்டார் அவர்.
புனிதமான கணவன், மனைவி உறவில் கலங்கம் ஏற்படுத்திய கணவனை துச்சமென எறிந்துவிட்டு நடந்தார் மறத்தமிழச்சியாக பெரியநாயகி. பிறந்த வீடும் அடைக்கலம் வழங்காது மறுக்க, தான் அணிந்திருந்த நகைகளை விற்று சிறு இடத்தை தங்களுக்கென அமைத்துக் கொண்டார் அவர்.
அரண்மனையில் இருந்து அவர்களை நிழலாக தொடர்ந்து வந்திருந்தான் பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன். பெரியநாயகி அவனை உடன் வரவேண்டாம் என்று விரட்டியும் கேளாது தொற்றிக் கொண்டு வந்திருந்தான். அவன் பெயர் மாசாணி என்கிற மாசிலாமணி… தோற்றத்தில் ஆண்மையும் சுபாவத்தில் பெண்மையும் கலந்து அர்த்தநாரியாக நிற்பவன். அரண்மனையில் எடுபிடி, அடிமை வேலைகளைச் சிறுவயது முதலே செய்து வந்தவன். பெரியநாயகி மீதும், அவர் மகன் மீதும் மிகுந்த மதிப்பு வைத்திருப்பவன். அவனின் விசுவாசத்தை உணர்ந்து பெரியநாயகியும் அவனை உடன் இறுத்திக் கொண்டார்.
பின்தங்கிய அந்த மலையடிவார கிராமத்தின் எளிமையான வாழ்வை தாயும் மகனும் விரைவாகவே பழகிக் கொண்டனர். அவர்களுக்கு சேவகனாய் எல்லா உதவிகளையும் விசுவாசமாக செய்து வந்தான் மாசாணி. அடுத்த எட்டு மாதங்களில் பெண் மகவை பெற்றெடுத்தார் பெரியநாயகி. பிறந்த வீட்டிற்கு தகவலும் சொல்லி இருந்தார். அந்த தகவல் அவள் கணவருக்கு கிட்டாமல் போயிருந்தது. அவரோ புது மனைவி, புது வாழ்க்கை என முதல் மனைவி கொடுத்த அவமானத்தின் வடுவை மறைத்துக் கொண்டிருந்தார்.
சக்கரம் போல காலம் சுழன்றது. பெரியநாயகியின் உழைப்பில் அவர்கள் குடும்பத்தின் நிலையும் உயர்ந்திருந்தது. அவரின் மக்கள் சின்னய்யாவும், தங்க பெண்ணும் பருவமெய்தி அன்னைக்கு எல்லா விதத்திலும் ஆதரவாக இருந்தனர். தனியொரு பெண்ணாக தன் பிள்ளைகளுக்கு திருமண வாழ்வை அமைத்துக் கொடுத்து, பேத்தி, பேரன்களையும் கண்டு நிறைவை அடைந்திருந்தார் பெரியநாயகி அம்மையார். அதுவரை அவர்கள் வாழ்வில் எந்த குறுக்கீடும் ஏற்பட்டிருக்கவில்லை.
முப்பத்தைந்து வருடங்கள் கழித்து, அரண்மனையில் இருந்து தகவல் வந்திருந்தது பெரியநாயகிக்கு. பத்திரத்தில் கையெழுத்து போட வேண்டும் என்று.
வந்தவன் தன்மையாக கேட்டிருந்தால் நிச்சயம் பெரியநாயகி கையெழுத்திட்டு தந்திருப்பார் தான். ஆனால் வந்தவனோ அனாவசியமான வார்த்தைகளைக் கையாண்டான். பெரியநாயகி அம்மையாரின் வயதுக்கும் மரியாதை தராது, கீழ்மையான விளிப்புகளைப் பயன்படுத்தியதோடு அல்லாமல், மிரட்டல் தொணியில் கேட்கவும், அவரது மகனும் மருமகனும் கோபத்தில் அவனை தாக்கி விரட்டியடித்தனர்.
அடிவாங்கிய கோபத்தில் மகேஸ்வரபூபதியிடம் அவன் போய் சொன்னது ஓரே விசயம் தான். பெரியநாயகிக்கு மகனை தவிர வேறொரு மகளும் பிறந்திருக்கிறது என்று அவன் சொன்ன தகவலில், அவர் கொதித்தெழுந்து விட்டார்.
தன் மனைவி தனக்கு துரோகம் இழைத்து விட்டாள் என்ற எண்ணம் நரை விழுந்த பின்னும் அவரால் ஜீரணித்துக்கொள்ள இயலவில்லை. அவரின் இரத்தம் கொதித்துப் போனது. இவர் தன் மனைவிக்கு செய்த துரோகத்தினை மறந்தே போய்விட்டார் அல்லது அதை ஆண்மையின் லட்சனமாக கருதிக் கொண்டார் போலும்.
முன்பு இவர் முகத்தில் உமிழ்ந்து விட்டு வெளியேறியதே இன்னும் அவருக்குள் அவமானத்தின் வடுவாக இருக்க, மனைவி துரோகம் செய்தாள் என்ற தகவல் குரோதமாக மாறி இருந்தது இப்போது.
அதே வேகத்தில் முன் யோசனை, நிதானம் சிறிதும் இன்றி, நட்டநடு இரவில் ஆட்களோடு சென்று, அந்த குடும்பத்தை மொத்தமாக வளைத்தார். நிலத்திற்கு நடுவே தனித்திருந்த வீடு அவர்களுடையது. நடு இரவு நேரம் வேறு. பெரியநாயகி கத்தி, கதறி கூறிய எதையும் இவரின் செவிகள் ஏற்கவில்லை. தன் உதிரத்தின் துளிகளை இவரே வெட்டி சாய்த்தார். மனைவி, மகன், மகள், மருமகன், அர்ச்சனா, முத்துவேல் என்று மகள் வயிற்றுப் பேரப்பிள்ளைகளையும் இரக்கமற்று கிணற்றில் வீசிவிட்டே ஓய்ந்தார்.
தடுக்க வந்த மாசாணியும் வெட்டுப்பட்டு வீழ்ந்தான். இவரின் கோர தாக்குதலில் தப்பியது இரு உயிர்கள். பெரியநாயகியின் மருமகளும், மகன் வயிற்று பேரன் அர்ஜுனும். தாயும் மகனும் தாய் வீட்டிற்கு சென்றிருந்ததால் தப்பித்து இருந்தனர்.
நீந்தி தம்பியோடு கரை சேர்ந்த அர்ச்சனா, அவன் நினைவற்று இருக்க, ‘முத்தா… எழுந்திடு… உனக்கு ஒன்னுமில்ல… கண்ண திற…” அந்த சிறுமியின் அழுகுரல் காற்றில் தான் கரைந்து போனது. பலத்த காயத்துடன் மாசாணியும் உயிர் தப்பி இருந்தார்.
தன் கண்முன்னே தன்னவர்களின் கொடூர மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது அந்த சிறுமியின் மனநிலை இறுகிபோனது. அத்தனை கோர சம்பவத்தை கொள்ளையரின் வெறிச்செயல் என்று வழக்கை முடித்திருந்தது காவல்துறை.
வீடு, நிலம் விற்று, ஊரை விட்டு வந்தபிறகும், இளங்குறுத்தான அச்சிறுமியின் மனதில் பழிதீர்க்கும் வன்ம தீ பற்றி எரிந்துக் கொண்டிருந்தது. சரியான நேரத்திற்காக காத்திருந்தாள். தன்னை எல்லா வழிகளிலும் தயார்படுத்திக் கொண்டாள். மாசாணியும் தன்னை ஆதரித்த குடும்பத்திற்காக எதையும் செய்ய துணிந்திருந்தான்.
அரண்மனையில் முன்பு வேலை செய்தவர் என்பதால் அங்கிருக்கும் ரகசிய வழிகள் மாசாணிக்கு அத்துப்படி. அவ்வழியில் உள்ளே வந்து தான் உறக்கத்தில் இருந்த மகேஸ்வரபூபதியின் உடலில் எதிர்வினை மருந்தை ஏற்றினார். அந்த மருந்தின் தாக்கமும் அவரின் சுயநலத்தின் பாவமும் அவருக்கான தண்டனையை கொடுக்க, தன்னிலை மறந்து பித்தாகி ஒரறைக்குள் கத்தி கதறி மடிந்து போனார். அவர் மரித்தும் அவர் செய்த பாவத்தின் மிச்சங்கள் எஞ்சி இருந்தன.
ஐந்து உயிருக்கு ஒற்றை உயிரின் பலியில் அடங்குவதாக இல்லை அர்ச்சனாவின் வன்ம தீ. அவர்களின் குடும்பத்தை அழிக்கும் அத்தனை அரக்கத்தனமும் அவளிடம் வரவில்லை. அந்த குடும்பம் தூக்கி வைத்து கொண்டாடிய அஞ்சலி மீது அவள் பார்வை விழுந்தது. அந்த ஒருத்தியின் இந்த கொண்டாட்டத்திற்காக தான் தன் குடும்பம் மொத்தமும் அழிந்து போனது என்ற உண்மை அவளை தகிப்பதாய்.
இதற்கிடையே குடும்ப பொறுப்புகளையும் இவள் நிறைவேற்றிக் கொண்டிருந்தாள். தன் அத்தையை அம்மாவாக, தன் அத்தை மகனை தம்பியாக ஏற்று, படிப்பிலும் தேறி, பகுதிநேர வேலைகள் பார்த்து கல்லூரி முடித்து, தனக்கான வேலையையும் அமைத்துக் கொண்டாள்.
இயல்பாக நகர்ந்த அவர்கள் வாழ்வில் அர்ஜுன் அம்மாவின் எதிர்பாராத மரணம், மறுமுறை அர்ச்சனாவை சுழற்றிப் போட்டிருந்தது.
அவருக்குள்ளிருந்த மன உழற்சி அத்தோடு இரு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க, தன் சக்தி மீறி உழைத்தவர், தன் உடல்நிலையை பேணாது பாதியிலேயே உயிர் துறந்திருந்தார். அர்ஜுனை அர்ச்சனா தாங்கிக் கொண்டாள். அவளைத் தாங்க தான் யாருமில்லை என்று மனம் வெதும்பிக் கொண்டாள்.
சென்னையில் இவர்களுக்கு சற்று உதவியாக இருந்தவர், அர்ஜுன் அம்மாவின் தூரத்து உறவினனான லாரி ஓட்டுனர். அவனுக்கு அர்ச்சனாவின் மீது ஒருவித பித்து. ஆனால் அவளை நெருங்கும் துணிவு வந்ததில்லை. இவர்கள் அரண்மனை குடும்ப வாரிசு என்பதை எப்படியோ மோப்பம் பிடித்திருந்தவன், பேராசையில் புத்திசாலித்தனமாக திட்டம் வகுத்து தான் தான் பெரியநாயகி மகன் என்று பொய்கூறி, காதம்பரியிடம் அடிப்பட்டு ஓடிவந்திருந்தான். அதன் பொருட்டு அவனுக்கு மூண்ட கோபம், வில்லங்கமான சொத்தின் மீதிருந்த பேராசை, அதன் வாரிசான அஞ்சலி இல்லாமல் போனால் தான் அடைய வாய்ப்பு இருக்கலாம் என்ற கண்மூடித்தனமான திட்டத்தில், அஞ்சலியின் காரை அடித்து விபத்தை ஏற்படுத்த முனைந்தவன், அவனுக்கு அதுவே எதிர்வினையாகி மாண்டும் போனான்.
அர்ச்சனா தன் திட்டத்தின் படி, அர்ஜுனை பாதுகாப்பாக அவன் விருப்பப்படி படிக்க தலைநகருக்கு அனுப்பி வைத்தவள், அவர்கள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்வதில் கவனம் காட்டினாள். ஆறுமாத முயற்சிக்குபின் அங்கேயே வேலையும் கிடைத்தது. இதில் அர்ச்சனா எதிர்பாராதது அரவிந்தின் காதல்… தன்னை தாங்க யாருமின்றி வெறுமைப்பட்டு இருந்தவள், அரவிந்தின் நேசத்தில் சாதாரண பெண்ணாய் இளகி தான் போனாள்.
அவளின் திட்டம் தங்கள் மீது எவ்வித சந்தேகமும் வாராது அஞ்சலியின் மரணம் விபத்தாக நடத்த வேண்டும் என்பதாய். ஆனால், விபத்துக்கான காரில் அஞ்சலியுடன் அரவிந்த் ஏறிக் கொள்ள, முதல்முறை அர்ச்சனா உயிர் துடித்துப் போய் விட்டாள். உடனே கார் விபத்தை தடுக்கும்படி மாசாணிக்கு தகவல் அனுப்ப, அவரும் அவர்கள் பின்னோடு விரைந்தார். கீழே விழுந்து மயங்கியவர்களை விரைவாக ஆம்புலன்ஸை வரவழைத்து இவரே காப்பாற்றும்படி ஆயிற்று.
அவர்களின் அடுத்தடுத்த திட்டங்களும் ஏதோவொரு வகையில் தோல்வியில் முடிந்தது. காதலையும் காப்பாற்றி, பழியையும் தீர்த்துக்கொள்ள போராடியவள் இறுதி கட்டத்தில் தன் உயிரை பணயம் வைத்து விட்டிருந்தாள்.
அர்ச்சனா பழியை விட்டிருந்தால் காதலை பெற்றிருப்பாள். காதலை விட்டிருந்தால் பழியை தீர்த்திருப்பாள். இரண்டையும் விட முடியாது பிடிவாதத்தின் அசாத்திய தைரியத்தில் தன்னையே விட்டிருந்தாள்…
#
#
#
“இன்ஸ்பெக்டர், நான் அர்ஜுன், மாசாணிய பார்க்கனும்” என்று தன் முன்னே நின்றவனை சற்று கூர்ந்து பார்த்தார் துணை ஆய்வாளர் துரைசாமி.
சராசரி உயரம், சற்று பூசினாற் போன்ற உடல்வாகு, திராவிட நிறம், அமுல் பேபி போன்று வெகுளித்தனமான முகம் என அழுது ஓய்ந்த வாடிய தோற்றத்தில் நின்றிருந்தான் அர்ஜுன்.
துரைசாமி அவனை அழைத்து வந்து, மாசாணி இருந்த சிறை அருகே நிறுத்திவிட்டு நகர்ந்தார்.
ஆறடிக்கு குறையாத உயரம், கட்டான தேகம், நாற்பதை தொட்டிருந்த தோற்றம், ஆண்மையின் வலிமை காட்டும் உடல் பலமும், பெண்மையின் வாஞ்சையைக் காட்டும் முக பாவமும், அழுதழுது ஓய்ந்து இருண்டிருந்த மாசாணியின் முகம், அர்ஜுனைக் கண்டதும் ஒளிர, எழுந்தோடி வந்தார்.
“அச்சு பாப்பா… நம்ம விட்டு போயிட்டா அஜ்ஜு தம்பி… என் கண்ணு பார்க்கவே பரிகொடுத்துட்டேன் தம்பி…” அவர் சொல்லி கலங்கி அழுது விட்டார்.
இங்கு வந்ததில் இருந்து அர்ஜுனுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சிகள், அவனுக்கு எல்லாமுமாக இருந்த அவன் அச்சுக்காவும் இல்லாது போனதில், கண்ணைக்கட்டி காட்டில் விட்ட நிலைமை. இதயத்தை பிழியும் கனமான உணர்வுகளின் தாக்கம்.
“உன் சொந்தகாரங்க கூடவே இருந்துக்கிறேன்னு சொல்லிட்டு தான எங்களவிட்டு போன? இங்க என்னென்னமோ சொல்றாங்க, உன்னையும் அக்காவையும் கொலக்காரங்கன்னு சொல்றாங்க… தெரியுமா?” அர்ஜுன் எதையும் நம்ப முடியாமல் கேட்க,
“உன்கிட்ட எதுவும் சொல்லி உன்னயும் கஷ்டப்படுத்த வேணாம்னு தான் பா எல்லாத்தையும் மறைச்சோம்… நீயாவது சந்தோசமா இருக்கனும்னு ஆசப்பட்டுச்சு பாப்பா” என்ற மாசாணி நீர் வழிந்த தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
“இப்பவாவது சொல்லேன் எதுக்கு இதெல்லாம்…” அர்ஜுன் குரல் உயர்த்தி கேட்க,
“அந்த பூபதி அரண்மனை குடும்பத்துக்கு முதல் வாரிசு நீதான் தம்பி… உங்க அப்பாவோட அப்பா வழி சொத்து அது…” மாசாணியும் அவனிடம் மறைத்தவற்றை விளக்கமாகவே சொன்னார்.
அர்ஜுனுக்கு இது எதுவுமே தெரியாது. தன் சிறு வயதில் குடும்பத்தினர் அனைவரும் கொள்ளைகாரர்களால் மடிந்து போனார்கள் என்பதே அவனறிந்த செய்தி… அதையும் கால ஓட்டத்தில் மறந்து போயிருந்தான் அவன்.
நிலத்தையும் வீட்டையும் விற்று சென்னை வந்த பிறகு, அம்மாவும் அக்காவும் மட்டுமே அவன் உலகம் என்று சுருங்கி போனது. அர்ச்சனா தன் மாமன் மகள் என்பது தெரிந்தும் அக்கா என்றழைத்தே பழகி விட்டிருந்தான்.
இவன் அம்மா தவறிய பிறகு அர்ச்சனாவின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்திருந்தது. அதுவரை மேற்படிப்பிற்கு தூரமாக எங்கும் அனுப்ப முடியாது என்றவள், அவனை தலைநகரம் சென்று படிக்க ஒப்புக் கொண்டாள். சென்னையை விட்டு கோவைக்கு அருகில் வேலை தேடிக் கொள்வதாக இடம் மாற்றிக் கொண்டாள். இவனுக்கும் அப்போது இது பெரிய பிரச்சனையாக தெரியவில்லை.
இப்போது யோசித்து பார்க்க அவனுக்கு தலை கிறுகிறுத்தது. “நீதான் அச்சுக்கா மனசுல கொலைபழிய ஏத்தி விட்டியா?” மென்மையான குணம் கொண்ட அர்ச்சனாவை அவனால் இப்போதும் தவறாக, அதுவும் கொலையாளியாக எண்ண முடியவில்லை.
“அய்யோ இல்ல தம்பி, என் உடம்ப தேத்திக்கிட்டு நானே அந்த குடும்பத்தை வெட்டி சாச்சுறேன்னு தான் சொன்னேன், ஆனா அச்சு பாப்பா தான் கேக்கல, உங்க தாத்தா பைத்தியமா அல்லாடி சாகனும்னு சொல்லுச்சி… நானும் பாப்பா சொன்னபடிக்கு செஞ்சேன்…”
“அதுக்காக கொலை செய்யற அளவுக்கு போவீங்களா? என்கிட்ட சொல்லி இருந்தா நான் அக்காகிட்ட பேசி இருப்பேன் இல்ல” அர்ஜுன் நொந்தபடி சொல்லி தளர்ந்தான்.
அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. இப்போது தான் என்ன செய்ய வேண்டும்? தனித்து விடப்பட்ட சிறுவனாய் சோர்ந்து அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டான்.
துரைசாமி அவனை தட்டி எழுப்பி, குடிக்க தண்ணீர் தந்து ஆசுவாசப்படுத்தினார். அன்று நடந்தவற்றை அர்ஜுனனுக்கு புரிய வைத்து அரவிந்திடம் அனுப்பி வைத்தார்.
படுக்கையில் சற்று சாய்ந்து அமர்ந்த நிலையில் இருந்த அரவிந்தின் முகம் அர்ஜுனைப் பார்த்ததும் சற்று உயிர் பெற்றது.
“அர்ஜுன்…”
“அக்காவ பார்த்துக்கோங்கனு அத்தனை முறை சொன்னேனே… இப்படி அச்சுக்காவ சாக விட்டுட்டீங்களே மாமா… எனக்கு அச்சுக்கா வேணும்… நான் அச்சுக்கா கிட்ட பேசனும்… ஏன் இப்படியெல்லாம் செஞ்சான்னு கேக்கனும்… அக்காவ வர சொல்லுங்க… என் அச்சுக்காவ திருப்பி கொடுங்க…” அர்ஜுன், அரவிந்தை பிடித்து உலுக்கி, அவனை அணைத்துக் கொண்டு கதறி அழுது தீர்த்தான்.
அங்கே ஆறுதல் வார்த்தைகள் இல்லை. இரு ஆண்களின் வாழ்வோடு பிணைந்து இருந்தவள் இப்போது இல்லை என்ற நிஜத்தை உணர்ந்தும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இரு ஆண்களும் கலங்கி துடித்துக் கொண்டிருந்தனர்.
எதையும் ஆற்றும் தேற்றும் வல்லமை காலத்திற்கு மட்டுமே உண்டு. காலம் எதற்காகவும் நிற்பதில்லை. யாருக்காகவும் நிற்கவில்லை…
****
அஞ்சலி உயிர் பிழைத்திருந்தாள். தகவல் கிடைக்க அரவிந்திற்கு நிம்மதி. ஏனோ அவளை சென்று பார்க்கும் எண்ணம் தோன்றவில்லை அவனுக்கு.
ஓரளவு உடல்நலம் தேறியதும் வீடு திரும்பி இருந்தான். அர்ஜுனையும் வற்புறுத்தி தன்னுடனேயே அழைத்து வந்திருந்தான்.
காவல் துறையினர் தங்கள் சட்ட சம்பிரந்தாயங்களை முடித்து அர்ச்சனாவின் உடலை அவர்களிடம் ஒப்படைத்து இருந்தனர்.
அர்ச்சனாவின் பூவுடலுக்கு இறுதி சடங்குகள் நடைப்பெற்றுக் கொண்டிருந்தன.
நீரேந்திய கண்களோடு அர்ஜுனும் அரவிந்தனும் அங்கே நின்றிருந்தனர்.
பிரபாகர், காதம்பரி முன்னின்று அனைத்தையும் எடுத்து செய்தனர். முதலில் அவர்கள் எடுத்து செய்வதை அர்ஜுன் மறுத்திருந்தான். அவனை அரவிந்த் தான் சமாதானப்படுத்தி ஒப்புக்கொள்ள வைத்திருந்தான்.
இதோ இப்போது அவர்கள் முன்னே, அரண்மனை குடும்ப வழக்கப்படி, அனைத்து ஈமை சடங்களுடன் பெண்ணவளின் பொன்னுடல் எரியூட்டப்பட்டது.
ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க
மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திடில் செடி வந்து சேரும்
தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரிய கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்…
-கவிஞர் வைரமுத்து
****
கனமான நாட்கள் மெதுவாக நகர்ந்துக் கொண்டிருந்தன. தாயை இழந்த குழந்தை தந்தையிடம் ஒட்டிக் கொள்வதைப் போல, அர்ஜுனும் அரவிந்திடம் ஒட்டிக்கொண்டான். இருவருக்கும் இடையே உள்ளார்ந்த அன்பும் தோழமையும் வளர்ந்திருந்தது.
மாசாணி தன் குற்றங்களை தானே ஒப்புக்கொண்டு சட்டம் தரும் எந்த தண்டனைக்கும் உடன்படுவதாக வாக்குமூலம் அளித்தார். திட்டமிட்ட கொலைமுயற்சி பிரிவுகளின் கீழ் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றவாளி தானே முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டதால் ஏழாண்டுகள் சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
தான் தூக்கி வளர்த்த அர்ச்சனாவை காப்பாற்ற முடியவில்லையே என்ற வேதனையைத் தாண்டி, இந்த சிறை தண்டனையை ஏற்றுக் கொள்வதில் அவருக்கு பெரிதாக வருத்தம் இல்லை.
அர்ஜுனிடம் வாஞ்சையோடு விடைபெற்று கொண்டு மாசாணி சிறைக்கு சென்றார்.
இந்த வழக்கில் திறமையாக செயலாற்றியதைப் பாராட்டி நெடுமாறன், துரைசாமிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தது.
“அடிச்சு பிடிச்சு ரெண்டு பேரும் ப்ரோமோஷன் வாங்கிட்டீங்க, வாழ்த்துக்கள் சார்” அவர்களிடம் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டான் அரவிந்த். இந்த இரு மாதங்களில் உடல் இளைத்து முகம் சிறுத்து தோற்றம் மாறி தெரிந்த அவன் தோளை நட்போடு தட்டினார் நெடுமாறன்.
“என்னடா வர வர மோசமா போயிட்டு இருக்க? அர்ஜுன் கூட அர்ச்சனா இல்லன்றதை ஏத்துகிட்டு அவன தேத்திட்டு இருக்கான். நீ ஏன்டா இப்படி உன்னயே வருத்திக்கிற?” அவர்
அக்கறையாக கேட்க,
அரவிந்த் விரக்தியாகப் புன்னகைத்தான்.
“நான் இருந்த ஆசிரமத்தில என்கூட விளையாடின பையன் திடீர்னு இறந்து போனப்போ முதல்முறை ரொம்ப பயந்து போயிட்டேன் சார். உடல்நல கோளாறு, ஊட்டச்சத்து இன்மைன்னு எப்படியோ அங்க அடிக்கடி குழந்தைங்க இறப்பு நிகழ்ந்து போகும்… ஏதோவொரு வகையில நான் அதுல ரொம்ப பாதிக்கப்படுவேன்… சித்தும்மா இறந்த போது மறுபடியும் அதே பாதிப்பு எனக்கு வந்தது… வெற்றிப்பா தவறினப்பவும் அதே வேதனை, ஆற்றாமை… இப்ப அர்ச்சனாவும் எனக்கு அந்த தண்டனைய தான் கொடுத்துட்டு போயிருக்கா…” அவன் முகம் ஆற்றாமை காட்டியது.
நெடுமாறனுக்கும் அவன் நிலை பரிதாபமாய்.
“சரி டா உன் நிலமை புரியுது, அதுக்காக இப்படியே அர்ச்சனாவ நினைச்சிட்டு உன்ன வருத்திக்கிட்டு வாழ்க்கையை ஓட்டலாம்னு நினைக்கிறியா?” அவரின் கேள்விக்கு இவனிடம் பதில் இல்லை.
“நேரடியாவே கேக்கிறேன், அஞ்சலியோட காதலை அக்ஸப்ட் பண்றதுல இப்ப உனக்கு என்ன பிரச்சனை?”
அவர் சொன்னதை கேட்டு அரவிந்த் சிரித்து விட்டான். “சார் காதலென்ன காய்கறி வியாபாரமா? இது இல்லனா அது வாங்கறதுக்கு அதுவொரு ஸ்ட்ராங் ஃபீலிங் சார்… நீயில்லனா நானில்லன்ற உணர்வு…”
“இதெல்லாம் பேச தான் சரிப்பட்டு வரும் வாழ ஒத்து வராது… முன்னால் காதல்ல தோத்தவங்க தான் இன்னால் சம்சாரியா வாழ்ந்துட்டு இருக்காங்க… அவசரகதி வாழ்க்கையில எல்லாமே கடந்து போகும், காதலும் கூட கடந்து போகும்… புரியுதா” அவர் நிதர்சனத்தை விளக்க முயன்றார்.
“என்னோட காதலும் கடந்து போனா அப்போ பார்க்கலாம் சார்”
“பாக்கலாம்னா என்ன அர்த்தம்… உனக்கு அஞ்சலிய பிடிக்கும் தான? தன்னோட பழிக்காக உன்ன சுட கூட தயாரா இருந்த அர்ச்சனாவ விட, உனக்காக உயிரையும் கொடுக்க தயாரா இருக்க அஞ்சலியோட காதல் பெருசா தெரியலயா உனக்கு?” நெடுமாறன் ஆத்திரமாகவே கேட்டார்.
“காதல் காதல் மட்டும் தான் சார், அதுல பெருசு, சிறுசு பேதமெல்லாம் இல்ல. அது ஜஸ்ட் ஃபீலிங்… அந்த ஃபீலிங்க்ஸ எனக்குள்ள தோன செஞ்சவ என் சனா மட்டும் தான்…” என்று துன்ப பெருமூச்செறிந்தான்.
“நீ சரியான எமோஷனல் ஃபூல் டா…” அவர் அவனை கடிந்தார்.
“இப்படியே இருந்துட்டு போறேன் சார்… சனா இல்லன்னு இப்ப நான் அஞ்சலிய தேடி போனா, அதைவிட கேவலமான பிஹேவியர் வேற எதுவுமில்ல… நான் அப்படி செஞ்சா சனா மேல நான் வச்சிருக்க காதலுக்கு மட்டுமில்ல, அஞ்சலி என் மேல வச்சிருக்க நேசத்தையும் அசிங்கப்படுத்தற மாதிரி ஆகிடும்…” அவன் பதிலில் நெடுமாறன் வாயடைத்துப் போனார்.
“சரி இனிமே என்ன செய்ய போறதா முடிவெடுத்திருக்க?”
“சித்து நியூமாடல் சைக்கிள்ஸ் லான்ச்சாகி நல்லா சேல்ஸ் போயிட்டு இருக்கு சார்… அப்பாவோட கடைசி ஆசையை நிறைவேத்திட்டேன்னு மனசுக்கு நிம்மதியா இருக்கு… இனி இங்க எனக்கு எந்த வேலையும் இல்லன்னு தோனுது… மறுபடி அப்ராட் போலாம்னு இருக்கேன்… என்னோட ஜாப் எனக்காக வெயிட் பண்ணிட்டிருக்கு அங்க” அரவிந்த் தன்னுடைய முடிவினைச் சொல்ல,
“நீயெல்லாம் எதுக்கும் சரிப்பட்டு வரமாட்ட போய் தொலைடா” என்று தலையில் அடித்து கொண்டு கோபமாகவே சென்று விட்டார் நெடுமாறன்.
****
நிஜம் தேடி நகரும்…