நீயில்லை நிஜமில்லை 26(2) இறுதிபதிவு

IMG-20200630-WA0009

நீயில்லை நிஜமில்லை 26(2) (இறுதி பதிவு)

 

நீ இல்லாதாகினும்

காலத்தின் வேகம் நிற்காது!

நிஜம் பொல்லாதாகினும்

பொய் வகையில் சேராது!

 

அந்த எந்திர ராட்சத பறவை தன் வயிற்றுப் பகுதியை திறந்து வைத்திருந்தது. பயணிகளோடு பயணியாய் அதனுள் நுழைந்து தனக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டான் அரவிந்த்.

 

இதே விமானத்தில் முதல்முறை பறக்கும் போது எத்தனை கனவுகளோடு மெய்சிலிர்த்து பறந்தான். சில மாதங்களுக்கு முன்பு தாய்நாடு திரும்பிய போது வெறுமையும் விரக்தியும் சுமந்து வந்திருந்தான்.

 

இப்போது தனக்கென்று எதுவுமில்லை என்ற வலியான மனநிலை மட்டுமே! நெஞ்சக்குழி அடைத்து கொண்டது. உடல் முழுவதும் ஏதோ பொறுக்க முடியாத வேதனை வலிகளின் ஊர்வலம்… 

 

இந்த வேதனையும் வலியும் காதல் பரிசாக அவனின் சனா தந்தது. ஏற்றுக் கொள்ள தான் வேண்டும். உயிரானவர்கள் பிரிவின் வேதனையை அவன் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் போல…

 

இருக்கையின் பின்புறம் தலைசாய்த்து கண்மூடிக் கொண்டான்.

 

வெற்றிமாறனின் உருவம் அவன் மனத்திரையில் காட்சியானது.

 

பிரபாகர், காதம்பரியிடம் பேசியவை மறுபடி அவன் நினைவில் வந்து போனது.

 

*

*

*

 

“அந்த வேலை வேணாம் இங்கேயே இருக்க போறதா தான எல்லாத்தையும் விட்டுட்டு வந்த, இப்ப மறுபடி போறேன்னா என்ன அர்த்தம்?” அரவிந்த் வெளிநாடு செல்வதை பிரபாகர் பிடிவாதமாக மறுத்தார்.

 

“உன்னால இங்க தவிர வேறெங்கையும் குப்ப கொட்ட முடியாது. எண்ணி ஆறு மாசத்துல இங்க திரும்பி வரலனா என் பேரை மாத்திக்கிறேன்’னு எங்க சீனியர் பெட் கட்டி இருந்தாரு மாம்ஸ், பாவம் வயசான காலத்துல அவர் பேரை ஏன் மாத்திக்கனும்னு தான் திரும்பி போறேன்…” அரவிந்த் பிடிக்கொடுக்காமல் பதில் தர, காதம்பரி அவனை கவலையாக பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

 

“சித்து சைக்கிள்ஸ் இப்ப நல்ல மார்கெட்டிங் போயிட்டு இருக்குனா அதுக்கு காரணம் நீ எடுத்த எஃபெக்ட்ஸ் தான்… இதை இங்கேயே இருந்து நீ மேனேஜ் பண்ணேன் டா, ஏன் மறுபடி தனியா எங்கேயோ போய் கஷ்டப்படனும்?” பிரபாகர் ஆதங்கமாக பேச,

 

“நான் இங்க இருந்தாலும் எங்க இருந்தாலும் எனக்காக யாரும் இல்ல மாம்ஸ்… நீங்க டென்ஷன் ஆகாதீங்க…” அவன் விட்டெற்றியாக பேச,

 

“அப்ப நாங்க உனக்கு யாரும் இல்லையா அரவிந்த்?” அவரின் குரல் கலங்கியது.

 

“ப்ச் விடுங்க மாம்ஸ், எனக்குன்னு யாரும் வேணா, நான் இப்படியே இருந்துக்கிறேன். கொஞ்சமாவது நிம்மதியா இருப்பேன்…” 

 

“இப்ப என்ன சொல்ல வர அரவிந்த்? நாங்க எல்லாம் உனக்கு தேவையில்லன்னா?” காதம்பரி கேட்க, அவன் பதில் தரவில்லை. 

 

“என்னடா யாரோ மாதிரி பேசுற? செத்து பொழைச்சு வந்திருக்க அஞ்சலிய ஒருமுறை கூட நீ வந்து பாக்கல… உனக்கும் நாங்க கெட்டவங்களா தெரியுறோமா?” பிரபாகர் நொந்து கேட்க, இப்போதும் பதிலின்றி நின்றிருந்தான்.

 

“விடுங்க பிரபா, அவனுக்கு நாம தேவையில்லனு முடிவு பண்ணிட்டான். நாம போலாம்” என்ற காதம்பரியுடன் பிரபாகரும் எழுந்துக் கொண்டார்.

 

“வெற்றிப்பா கடைசியா உங்கள பார்க்க தான வந்திருந்தாரு… ஏதாவது சொன்னாரா?” அரவிந்த் கேட்டுவிட, கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

 

“எங்களை சந்தேகப்படுறியா அரவிந்த்?” காதம்பரி விளங்காமல் கேட்க,

 

“நீங்க என்கிட்ட எதையும் மறைக்கலன்னு சொல்லுங்க, நானும் உங்களை சந்தேகப்படலனு சொல்றேன்” ஒரு முடிவோடு அவன் பேசுவது அவர்களுக்கு புரிந்தது.

 

#

#

#

 

”ஏன்டா வெற்றி, கம்பெனி ஷேர்ஸ் வித்ததுக்கு பார்ட்டி வச்சு கொண்டாடுற முதல் ஆளு நீதான்டா” பிரபாகர் வேடிக்கையாக சொல்லி சிரிக்க,

 

”யாருக்குடா வித்தேன் உனக்குதான‌ கொடுத்திருக்கேன் பிரபா. என் பையன் கம்பெனி போறுப்பெடுத்துக்கல பரவால்ல, இப்ப என் மருமக எடுத்துக்க போறா அவ்வளவு தான” வெற்றிமாறன் உற்சாகமாகவே சொன்னார்.

 

“யாரு அஞ்சலியா? அடாபாவி ஒரே பால்ல ரெண்டு சிக்ஸர் அடிக்க பார்க்கிறயா…” பிரபாகரும் சொல்லி சிரிக்க, இருவரும் கையடித்து கொண்டனர்.

 

“அண்ணா, தொழில் வேற, குடும்பம் வேற, அஞ்சலிய இதுல இழுக்காதீங்க” காதம்பரி கண்டனம் தெரிவிக்க,

 

“எல்லாத்தையும் ரூல்ஸ்குள்ள அடக்காத காதும்மா, என் பையனுக்கு உன் பொண்ணை கொடுக்க மாட்டியா என்ன?” வெற்றிமாறன் நேரடியாகவே கேட்க,

 

“உங்க பையனுக்கு என் பொண்ண கொடுக்கிறதுல எனக்கும் சந்தோசம் தான் அண்ணா, ஆனா அரவிந்த் உங்க சொந்த பையன் இல்லையே…! எங்க, எப்படி பிறந்தவனோ? குலம், கோத்திரம் எதுவும் தெரியாதவனை இந்த அரண்மனைக்கு மருமகனா கொண்டு வர முடியாது… எங்க சுத்துபட்டு சொந்தக்காரங்க இதை கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க…” காதம்பரி தன் மறுப்பை தெரிவிக்க, வெற்றிமாறன் வேகமாக எழுத்தே விட்டார்.

 

“என்னமா என் அரவிந்தை இப்படி சொல்லிட்ட, அவன் எப்படி பிறந்து இருந்தாலும் எங்க வளர்ப்புமா, அவனை விட அஞ்சலிக்கு நல்ல மாப்பிள்ளைய பார்க்க முடியுமா உன்னால, இதை உங்ககிட்ட எதிர்ப்பார்க்கல ச்சே” அதற்குமேல் அங்கே நிற்காமல் வெற்றிமாறன் வெளியேறிவிட்டிருந்தார்.

 

முதலும் முடிவுமாக அன்று அரவிந்தின் எதிர்காலம் பற்றி அவருக்குள் பயம் வந்திருந்தது. அந்த பயமே அவரை பலவீனப்பட்டுத்தி அடங்க வைத்துவிட்டது.

 

#

#

#

 

“எங்களுக்குள்ள அன்னிக்கு நடந்த பேச்சு இவ்வளவு தான், வெற்றி அண்ணா இறந்ததுக்கு நான் பெசினது தான் காரணம்னு நீ நினச்சா அதுக்காக எந்த தண்டனையும் கொடு, நான் ஏத்துக்கிறேன்…

 

அரண்மனை குடும்ப சொந்தங்களோட சாதி கெடுபிடி உனக்கே தெரிஞ்சு இருக்கும் அரவிந்த்… அவங்க எல்லாரையும் எதிர்த்து எங்களால எதுவும் செய்ய முடியாது… நடக்க முடியாத ஆசைய அண்ணா வளர்த்துக்கறது சரியில்லன்னு தான் அப்படி சொன்னேன்… உன் மனசுலயும் அஞ்சலி மேல அப்படி ஏதாவது நினப்பு வந்திடுமோனு பயந்து தான் உன்ன அவாய்ட் பண்ணேன்…

 

இப்ப எல்லாமே தலைகீழா ஆகிடுச்சு… உனக்காக எதை செய்யவும் அஞ்சலி தயாரா இருக்கா, இங்க யாரை நொந்துக்கிறது, என்ன செய்யறதுன்னு எதுவுமே எங்களுக்கு புரியல…” காதம்பரி தன்பக்க நிதர்சனத்தை சொல்லிவிட்டு அமைதியானார்.

 

‘வெற்றிப்பா என்னை பற்றிய கவலையில் கடைசி நிமிடங்களை கடந்திருக்கிறார்’ என்பது இவன் மனதை நீரோட்ட துகளாய் அடித்துச் சென்றது.

 

“ஏன் நாம செய்ய முடியாது? அத்தனை சொந்தக்காரங்களை எதிர்த்து தான அர்ஜுனுக்கு அவன் பங்கை எழுதி வச்சோம்… என் மகளோட சந்தோசத்துக்காக எத்தனை பேரை எதிர்க்கவும் நான் தயாரா இருக்கேன்” என்ற பிரபாகர், 

 

“வெற்றி சொன்னது நிஜமாகட்டும் அரவிந்த், அஞ்சலிக்கு உன் நினப்பு தவிற வேற எதுவும் இல்லடா, அப்பாவா என் பொண்ணுக்காக உன்கிட்ட கேக்குறேன்… அஞ்சலிய ஏத்துக்கடா” பிரபாகர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கேட்க, அதை ஆமோதிக்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் காதம்பரி நின்றிருந்தார்.

 

“வேணா மாம்ஸ்… உங்க குடும்ப கௌரவத்துக்கும் அஞ்சலியோட காதலுக்கும் நான் தகுதியாவன் கிடையாது. என்னோட மனநிலையில் அவளுக்கு கஷ்டத்தை தவிர என்னால எந்த சந்தோசத்தையும் கொடுக்க முடியாது… இந்த பேச்சை இதோட விட்டுடுங்க” அரவிந்த் முடிவாக மறுக்க, அதற்குமேல் வற்புறுத்தி கேட்க முடியாமல் அவர்களும் அமைதியாயினர்.

 

*

*

*

 

யாரை என்று குற்றம் சாட்டுவது?

யாருக்கு என்று நியாயம் சொல்வது?

பல சிக்கலான முடிச்சுகளின் நீண்ட ஒற்றை நூலாய் வாழ்க்கை பாதை!

வாழ்வின் நீளம் முடியும் மட்டும் இன்னும் எத்தனை முடிச்சுகள் விழுமோ? அதில் எத்தனை விலகி தெளியுமோ? மற்றவை அவிழா முடிச்சுகளாக இறுகி மக்கி மறைந்திடுமோ?

 

நினைவுகள் தந்த சுழற்சியில் அவன் சலித்து ஓய்ந்து கண்மூடிக் கொண்டான்.

 

அவனின் கைவிரல்களோடு வேறு கைவிரல்களும் கோர்க்கப்பட,‌ அதன் மென்மையை உணர்ந்தவன் திடுக்கிட்டு நிமிர, அவனருகே அஞ்சலி அமர்ந்து இருந்தாள் நிர்மலமான முகத்துடன்.

 

அரவிந்த் கேள்வியாக அவளை பார்க்க, “நீ தொலைச்ச உன் நிம்மதி கிடைக்காம மறுபடி ஓடி போற, நான் உன்ன தடுக்கல… என்னோட நிம்மதி, சந்தோசம் எல்லாம் நீ மட்டும் தான்…” என்றவள் பேச்சில் குறுக்கிட்டவன்,

 

“என்னை படுத்தாத அஞ்சலி, உன்னோட வாக்குவாதம் பண்ற தெம்பு இல்ல எனக்கு” என்று சோர்வாக சொன்னான்.

 

“நீ ஒருத்தி மேல வச்சு இழந்து போன காதலை தான் நான் உன் மேல வச்சு தவிச்சுட்டு இருக்கேன்… என் உயிரை காப்பாத்த அத்தனை போராடின இல்ல, என் உணர்வையும் எனக்கு காப்பாத்தி கொடு டா” அவள் கேட்க,

 

“உன்ன பார்க்கும் போதெல்லாம் எனக்கு சனா நினைவு தான் வரும்… எப்படி  என்னால உன்ன ஏத்துக்க முடியும்?” அவன் குரல் வெறுமையாக ஒலித்தது.

 

“நீ உன் சனாவ மறக்கவும் வேணா, என்னை ஏத்துக்கவும் வேணா, உன்னோட இருக்க மட்டும் மறுப்பு சொல்லாம இரு போதும்”

 

“ப்ளீஸ் டி, வேணாம், உனக்கு தான் கஷ்டம்” என்றான்.

 

“முன்னவும் கேக்கல, இப்பவும் எப்பவும் உன்கிட்ட காதலை பிச்சையா கேட்க மாட்டேன்…”

 

“நீ அனாதை இல்ல, உனக்கு துணையா நான் இருக்கேன், உனக்கு நம்பிக்கையா நான் இருக்கேன்… என்னை போக மட்டும் சொல்லாத” என்று அவள் அவன் முகம் பார்த்து நேராய் சொல்ல, இவனும் மறுக்கவில்லை.

 

அர்ஜுன் சென்ற பிறகு, இதே தனிமையில் உழன்று அவன் இல்லாமல் போய்விடுவது போன்ற பயம் அவனை ஆட்கொண்டு அவதிப்படுத்திக் கொண்டிருந்தது. ஆறுதலாக ஆதரவாக இவன் சாய்ந்து கொள்ள இவனுக்கும் அவளின் தோள் தேவையாக இருந்தது.

 

சுயநலம் தான். அவளுக்கு காதலை தர முடியாமல், அவளிடம் ஆறுதலை மட்டும் வேண்டுவது‌ சுயநலம் தான் அவனுக்கு புரிந்தது.

 

“சாரி டி” என்று அவன் தன்பிடியில் அழுத்தம் கூட்டினான். அஞ்சலி மென்மையான புன்னகை தந்தாள்.

 

தன்னவன் உடன் இருப்பதே அவளுக்கு போதுமானதாய்…

 

தனக்கானவளை முழுதாக ஏற்கவும் முடியாமல், முழுதாக விலக்கவும் முடியாமல் தவித்தவனாய், அவள் அருகாமையில் தனிமை அகன்றிட, சன்னல் வழி பார்வையை செலுத்தினான்.

 

அந்த ராட்சத எந்திர பறவை அவர்களை தன்னுள் அடக்கிக் கொண்டு மேலெழும்பி பறந்தது.

 

அங்கே காட்சிகள் மாறிட, எங்கும் மேகங்களின் திட்டுக்களும், நீல வான பின்னனியுமாக விரிந்தது.

 

    *************முற்றும்**************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!