நீயில்லை! நிஜமில்லை! 3

நீயில்லை நிஜமில்லை! 3

 

வார்த்தைகள் தான் 

பொய் பேசும்

பார்வையும் கூட 

பொய் காட்டுமா?

எங்கே நீ இல்லாமல் போனாய்?

ஏன் எனக்கு நிஜமற்று போனாய்?

 

கோவையின் புறநகர் பகுதியில் இருந்து உட்புறம் சுமார் ஒருமணி நேர பயணத்திற்கு பிறகு மாயனூரை அடையலாம். 

 

அங்கே சுற்று வட்டாரத்தில் ‘மாயனூர் பூபதி அரண்மனை’ இன்றும் பிரசித்திப் பெற்றதாக விளங்கி வருகிறது. அவ்வூரின் முக்கால்வாசி நிலபுலன்கள் அரண்மனைக்கு சொந்தமானது.

 

பழமையின் நிறைவும் புதுமையின் அழகும் கொண்டு, வெள்ளை சுண்ணம் மிளிர, பறந்து விரிந்திருந்தது அந்த அரண்மனை. 

 

இந்த அரண்மனை வாசிகள் ஜமீன்தார் குடும்பமாக கோலொச்சி ஆண்ட பரம்பரை. அக்குடும்பத்தின் பெருமை போல இன்றும் கம்பீரமாக‌ நிமிர்ந்து நிற்கிறது பூபதி அரண்மனை. 

 

அந்தி சாயும் வேளையில், அரண்மனை முன் புரத்தில் அடுத்தடுத்து இரண்டு மகிழுந்துகள் வந்து நின்றன.

 

முதல் காரில் இருந்து பிரபாகர் இறங்கி வர, அடுத்த காரில் இருந்து அஞ்சலி உடன் அரவிந்தும் வாயடித்தபடி இறங்கி உள்ளே வந்தனர்.

 

எப்போதும் போல இப்போதும் அந்த அரண்மனையை தலை நிமிர்த்தி பார்த்தான் அரவிந்த். அந்த அரண்மனையின் பிரமாண்டமும், பெருமையும், செழிப்பும், அமைப்பும், மதிப்பும் எப்போதுமே அவனை மலைக்க வைக்கும். இப்போதும் மலைக்கவே வைத்தது.

 

“காதும்மா… அரவிந்த் வந்திருக்கான் பாருங்க” என்று உற்சாகமாக குரல் கொடுத்தபடியே தங்கள் அறைக்குள் நுழைந்து கொண்டார் பிரபாகரன்.

 

அவரின் அழைப்பில் மேல் தளத்தில் இருந்து இவர்களை பார்த்த இரு பெண்மணிகளின் முகத்திலும் ஒருவித அதிருப்தி வந்து போனது.

 

“நான் ரீஃபிரஷ் ஆகிட்டு இதோ வந்திடுறேன், இங்கேயே வெயிட் பண்ணு டா” என்று அரவிந்தை கூடத்தின் சோஃபாவில் அமர சொல்லிவிட்டு அஞ்சலி தன் மாடி அறை நோக்கி விரைந்தாள். அஞ்சலியின் வரவை உணர்ந்த அவளின் செல்ல நாய்க்குட்டியும் அவள் காலை சுற்றி பின்னோடு ஓடி வர, அதை கைகளில் தூக்கி கொண்டு செல்லம் கொஞ்சியபடி, அஞ்சலி வலப்பக்கம் வளைந்த படிகளில் துள்ளலாக ஏறிச் செல்ல, இந்த பெண்கள் இருவரும் இடப்பக்கம் வளைந்த படிகள் வழியே முகம் இறுக இறங்கி வந்தனர்.

 

அதில் முதலாம் பெண்மணி அறுபது வயதை கடந்தவர், மற்றொருவர் நாற்பது வயதை தொட்டிருந்தார். அவர்களின் ஒத்திருந்த முக சாயல் தாய், மகள் என்பதை உணர்த்துவதாய்.

 

வெண்பட்டும், கழுத்தில் மயில் பதக்கம் பதித்த கனமான இரட்டை வட சங்கிலி, காதோடு ஒளிவீசிய வைர கம்மல், கைகளில் கனம் குறைந்த நுண்ணிய வேலைப்பாடுகள் அமைந்த ஒற்றை தங்க வளையல் என தோற்றத்தில் ஆடம்பரமாகவும் பார்வைக்கு சாந்தமானவராகவும் தன் முதுமை காரணத்தால் சற்றே தளர்ந்த நடையாக இறங்கி வந்தார் திரிபுரசுந்தரி. 

 

சாதாரண பெண்களை விட அசாத்திய உயரம், உயரத்திற்கு ஏற்ற கட்டான உடல்வாகு, மெல்லிய வெங்காய தோல் நிற சேலையில், மிதமான அணிகலன் அலங்காரத்தில், அழுத்தமான பார்வையும், நிமிர்ந்த நடையும் அவரின் ராஜ கம்பீரத்தை இன்னும் கூட்டி காட்டியது. 

 

அவர் காதம்பரி தேவியார். மகேந்திர பூபதி- திரிபுரசுந்தரியின் ஒற்றை மகள். அந்த அரண்மனையை பொறுத்தவரை அரியணை ஏறாத பட்டத்து மஹிஷி.

 

அவர்கள் இருவரின் பார்வையும் அரவிந்த் மீது தான் நிலைத்து இருந்தது. 

 

இந்த நான்கு வருடங்களில் பெரிதாக மாற்றம் தெரியாத அரண்மனையின் உள்ளமைப்பை ரசனை குறையாமல் பார்த்தபடி அமர்ந்து இருந்தான் அவன்.

 

அவர்கள் வரவை உணர்ந்து திரும்பியவன், மரியாதையாக எழுந்து நின்று, “ஹாய் ஆன்ட்டி, நான் அரவிந்த், என்னை ஞாபகம் இருக்கா உங்களுக்கு” என்று இயல்பு மாறாமல் பேசியவன்,

“ஹாய் பாட்டிம்மா, எப்படி இருக்கீங்க” என்று நலம் விசாரித்தான்.

 

“எனக்கு என்ன அரவிந்தா நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கப்பா” திரிபுரசுந்தரி வாஞ்சையாகவே விசாரிக்க,

 

“நல்லா இருக்கேன் பாட்டிம்மா” என்றான்.

 

“ம்ம் உக்காரு அரவிந்த், உன்ன மறக்க முடியுமா என்ன?” என்று அவனுக்கு எதிரேயிருந்த சோஃபாவில் நிமிர்வாக அமர்ந்து அழுத்தமாக அவனை பார்த்தார் காதம்பரி தேவியார்.

 

திரிபுரசுந்தரி, “எனக்கு பூஜைக்கு நேரமாச்சு, நீங்க பேசிட்டு இருங்க” என்று அவர் பூஜை அறையை நோக்கி நடந்தார்.

 

“சொல்லு அரவிந்த்” காதம்பரி தேவி கேட்க,

 

“என்ன ஆன்ட்டி?” அவர் எதை கேட்கிறார் என்பது விளங்காமல் பதில் கேள்வி கேட்டான்.

 

“எதுவுமே தெரியாத அப்பாவி மாதிரி உன்ன காட்டிக்க முயற்சி செய்யாத அரவிந்த்”

 

“…”

 

“உனக்குன்னு எதுவுமே மிச்சமில்லாத இங்க… நீ திரும்பி வர வேண்டிய தேவையென்ன?”

 

“…”

 

“எங்க கம்பெனியில பிடிவாதமா நீ வேலை வாங்க வேண்டிய அவசியம் என்ன?”

 

“நான் உங்க கம்பெனியில வேலை செய்யறது… உங்களுக்கு விருப்பம் இல்லையா ஆன்ட்டி?” அரவிந்த் தயக்கத்துடன் தான் கேட்டான்.

 

முன்பு போல தன்னுடன் அன்பு பாராட்டும் மனநிலையில் அவர் இல்லை என்பது அவனுக்கு நன்றாகவே புரிந்தது.

 

“உன்மேல எனக்கு நம்பிக்கை இல்ல அரவிந்த்” அவர் பதில் அவன் முகத்தில் அறைய, அமர்ந்த நிலையில் இருந்து எழுந்து கொண்டான்.

 

“பதறாத அரவிந்த், முதல்ல உக்காரு” என்றவர், “உங்க அப்பா வெற்றிமாறன், கம்பெனில உங்க ஷேர்ஸ்ஸ சட்டபடி எங்களுக்கு உரிமையா எழுதி கொடுத்துட்டு அதற்கான முழு தொகையையும் வாங்கிட்டு தான் கிளம்பினார்… எதிர்பாராதவிதமா அன்னைக்கு நைட்டே அவர் இறந்து போனது துக்கமான விசயம் தான்… நடந்ததுக்கு யாரையும் குற்றம் சொல்ல முடியாது”

 

அவன் தன் தந்தையின் பாரமான நினைவோடு அமைதி காத்தான்.

 

“ஆனா, நீ இப்படி, உன்னோட  வேலையை தூக்கிப்போட்டு திடுதிப்புனு இங்க வந்து,‌ எங்க கம்பெனில சாதாரண வேலை கேட்டு நிக்கறது… எனக்கு எதுவுமே சரியா படல… உன் மனசுல என்னதான் நினைச்சிட்டு இருக்க அரவிந்த்? ஏன் இப்படி பைத்தியக்காரத்தனமா நடந்துக்கிற?” அவர் சந்தேகமாக கேள்விகளை அடுக்கினார்.

 

‘ஏன் எல்லாரும் என்னோட‌ முடிவுகளை பைத்தியக்காரத்தனமா பார்க்கிறாங்க? இல்ல நிஜம் தான், நான் பைத்தியக்காரன் தான்… அடி முட்டாள் தான்… என்கிட்ட இருந்து நான் தப்பிக்க போராடிட்டு இருக்கேன்… இதை நான் யார்கிட்ட சொல்லுவேன்?’ அவன் மனம் கலங்கி தவித்தது.

 

“எவ்வளவு நேரம் யோசிப்ப அரவிந்த்? நான் கேட்டதுக்கு பதில் கொடு” அவர் அதே பிடியில் நிற்கவும், பிரபாகரனும் அஞ்சலியும் அவர்கள் அருகே வரவும் சரியாக இருந்தது.

 

வேலையாள் அனைவருக்கும் தேநீர், தின்பண்டம் பரிமாறிவிட்டு நகர்ந்தார். மனமே இல்லாமல் தேநீரை மட்டும் அரைகுறையாக பருகி வைத்தவன் எழுந்து கொண்டான்.

 

“அப்ப நான் கிளம்புறேன்” அவன் பொதுவாக விடைபெற, அஞ்சலி, அரவிந்த் கைபிடித்து தடுத்தாள்.

 

“டேய் எங்க கழன்டுக்கலாம்னு பார்க்கிற, உன்கிட்ட பேச எவ்வளவு விசயம் இருக்கு தெரியுமா” என்று அவனை முறைத்தவள்,

 

“ம்மா, ப்பா நான் அரவிந்த் கூட வெளியே போயிட்டு வந்திடுறேன்” என்று தகவலாக சொல்ல,

 

“அஞ்சலி…” காதம்பரியின் குரல் அழுத்தமாக ஒலித்தது.

 

“ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டுல இருப்பேன் ம்மா” என்று அஞ்சலி உறுதிதர,

 

“சரி டா, ரெண்டு பேரும் பத்திரமா போயிட்டு வாங்க” பிரபாகரன் விடை தந்தார்.

 

தயங்கி நின்ற அரவிந்தை இழுத்துக் கொண்டு சென்றாள் அஞ்சலி தேவி.

 

“என்னங்க இது, வயசு பசங்களை இந்த நேரத்தில வெளியே அனுப்பி வைக்கிறீங்க?” காதம்பரி கண்டனமாக கேட்க,

 

“என்ன காதும்மா புதுசா கேட்கிற, அரவிந்தும் அஞ்சலியும் இதுக்கு முன்ன இப்படி ஊர் சுத்தினதே இல்லையா என்ன?” அவர் சாதாரணமாக சொல்ல, காதம்பரி கணவனை மறுத்து பேச மனம் வராமல் அமைதியானார்.

 

****

 

“என்னடா ஆச்சு, இஞ்சி தின்ன குரங்கு மாதிரி முகத்தை வச்சுட்டு வர்ற?” காரை சீரான வேகத்தில் இயக்கியபடி அஞ்சலி கடுப்பாக கேட்க, அப்போதும் அரவிந்தின் முகம் தெளிந்தபாடில்லை.

 

“இப்பெல்லாம் சரியான உம்முனாமூஞ்சி ஆகிட்டு வரடா நீ” என்றவள், “சரி இப்ப எங்க போலாம்னு சொல்லு?” என்று கேட்டாள்.

 

“வீட்டுக்கு போலாம்” அவன் தொய்வாக பதில் தர, அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு வண்டியின் வேகத்தை கூட்டினாள்.

 

அரவிந்த் வீட்டிற்குள் இருவரும் அமைதியாக வந்தனர். அந்த வீட்டின் வெறுமை இருவர் மனதையும் கனக்க செய்வதாய்.

 

முன்பெல்லாம் அரவிந்த், அஞ்சலி வாசலில் இறங்கும் போதே சித்தாரா, உள்ளிருந்து விரைந்து வந்து விரிந்த சிரிப்போடு வரவேற்பார். வயது வித்தியாசம் இன்றி, சித்தாராவும், வெற்றிமாறனும், அரவிந்த், அஞ்சலியுடன் சரிசமமாக வாயடிப்பார்கள். இவர்கள் நால்வரும் சேர்ந்தாலே அந்த வீடெங்கும் சிரிப்பு சத்தமும் கலாட்டா வாதங்களும் அரங்கேறி கலகலக்கும்.

 

அத்தனை சந்தோசம் தந்த வீடு, இப்போது ஆழ்ந்த நிசப்தத்தில் மூழ்கி கிடந்தது. பார்த்து, பேசி, தொட்டு, விளையாடி பழகிய வெற்றி அங்கிளும், சித்தும்மாவும் இப்போது இல்லவே இல்லை என்பதை இப்போதும் ஏற்றுக்கொள்ள கடினமாக இருந்தது அஞ்சலிக்கு.

 

‘தனக்கே இப்படி என்றால் அரவிந்த் மனம் என்ன பாடுபடும்!’ என்று அவள் திரும்பி பார்க்க, அங்கே சோஃபாவில் இருகரங்களால் தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டான் அவன்.

 

சமையலறை சென்று குளிர்சாதன பெட்டியில் குடிநீர் பாத்தலை எடுத்து வந்தவள், கண்ணாடி தம்ளரில் ஊற்றி அவனருகே வந்து அமர்ந்தாள்.

 

கவிழ்ந்து இருந்தவன் தோள் பற்றி, “முதல்ல தண்ணீ குடி டா” என்று அவனை நிமிர்த்தி தம்ளரை தந்தாள்.

 

அவன் கண்கள் சிவந்து இருந்தன. குளிர் நிரை தொண்டைக்குள் சரித்துக் கொண்டவன், “உன் தோள்மேல கொஞ்சநேரம் சாஞ்சிகிட்டுமா, ப்ளீஸ்” அவன் கரகரத்த குரலில் யாசிக்க, இவள் அவன் தலையை தட்டி தன் தோள்மீது சாய்த்து கொண்டு, அவன் தோளை ஆறுதலாக தட்டிக் கொடுத்தாள்.

 

அந்த முழு ஆண்மகனின் மனபாரம் முழுவதும் இந்த மெல்லியளாலின் மிருதுவான தோள் தாங்கி கொண்டது.

 

அவன் எதுவும் சொல்லவில்லை. இவள் எதுவும் கேட்கவில்லை. நிமிடங்கள் கரைந்தன.

 

சற்று மனந்தெளிந்தவனாக அவளிடம் இருந்து விலகி கொண்டான். “சாரி, தோள் வலிக்குதா?” என்றான் சங்கடமாக. கிட்டத்தட்ட அரைமணிநேரம் தன் மனபாரத்தோடு சேர்த்து உடல் பாரத்தையும் அவள் தோள்மீதே சாய்த்திருந்தான்.

 

“ம்ம் கொஞ்சம் வலிக்குது தான், ஆனா, நீ இப்படி பேசறது தான் என்னை ரொம்ப

ஹர்ட் பண்ணுது டா… என்ன புதுசா ப்ளீஸ், சாரி எல்லாம் சொல்ற என்கிட்ட?” அஞ்சலி உரிமை கோபம் காட்டிட, அவன் பதிலின்றி அவளை பார்த்திருந்தான்.

 

அவன் உள்ளுக்குள் எவ்வளவு உடைந்து இருக்கிறான் என்பதை அவன் முகமே அவளுக்கு காட்டியது.

 

“அம்மா என்ன சொன்னாங்க?” நேராகவே கேட்டாள். மாலைவரை நிறுவனத்தில் துறுதுறுவென இருந்தவன் தங்கள் வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் முகம் வாடி போனதை அவளும் கவனித்து இருந்தாள் தான். 

 

அவனும் அவளிடம் எதையும் மறைக்கவில்லை. இதுவரை மறைத்து பழக்கமில்லை. காதம்பரி பேச்சின் சாரத்தை ஒப்புவித்தான்.

 

“காலையில நானும் உங்கிட்ட இதையே தானடா கேட்டேன்… அதை அம்மா கொஞ்சம் ஹார்ஸா கேட்டு இருக்காங்க, விடு” என்று தேறுதல் சொல்ல,

 

“இல்ல அஞ்சலி, என்னால அங்க நிம்மதியா இருக்கவே முடியல… மனசு உடம்பெல்லாம் என்னவோ மாதிரி கஷ்டமா பண்ணுச்சு… வேலையில சுத்தமா கவனம் போகவே இல்ல… மூச்சு முட்டுற மாதிரி இருந்துச்சு… மறுபடியும்… மறுபடியும் செத்து போயிடலாம்னு தோன ஆரம்பிச்சுருச்சு…” என்று அவளின் கையை இறுக பிடித்து கொண்டான்.

 

பார்வைக்கு திடமாக தெரியும் ஆண்மகன் இப்படி உடைந்து அழும் தருணம் பார்க்க பெரும் அவஸ்தையானது. 

 

அந்த அவஸ்தையோடு அவள் அமைதியாக அவனை பார்த்து இருந்தாள். முன்பு சித்தும்மா தவறிய போதும் கூட இப்படித்தான் தீவிர மன அழுத்தில் மாடியிலிருந்து குதிக்கும் வரை போய் விட்டான். அன்று சரியான நேரத்திற்கு தவறுதலாக இவள் வந்ததால் அவனை சேதாரம் இன்றி மீட்க முடிந்தது. 

 

அன்று அவன் செய்ய துணிந்த காரியம் இதுவென உணர்ந்ததும், ஆவேசமாக அவன் கன்னத்தில் மாறி மாறி அறைந்து இருந்தாள் அஞ்சலி. அப்போது அவள் பள்ளி மாணவியாக இருந்தாள்.

 

அஞ்சலி, வெற்றிமாறன் எடுத்த சின்ன சின்ன முயற்சிகளால் தான் அவனை அந்த மன இறுக்கத்தில் இருந்து மீட்டு வர முடிந்தது. இப்போது அவரும் இல்லை என்றானபின் அஞ்சலி மட்டுமே இவனின் ஒட்டு மொத்த ஆறுதல்.

 

அவனை இந்த மனஅழுத்ததில் இருந்து எப்படியும் மீட்டாக வேண்டிய பொறுப்பு அவளுடையது. அது அவளால் மட்டுமே முடியும் என்றும் நம்பினாள்.

 

“நீ சொன்ன மாதிரி டாக்டர் கிட்ட கௌன்சிலிங் போனேன், பட் என்னால வெளிவர முடில… அப்பாவோட இழப்புக்கு நானும் காரணம்னு இங்க அடிச்சிகிட்டே இருக்குடீ” தன் நெஞ்சை தொட்டு காண்பித்தான்.

 

“அவர் கூப்பிடும் போதே நான் வந்திருக்கனும் இல்ல… நான்… நான் தான் கம்பெனி ஷேர்ஸ் சேல் பண்ணிட்டு என்னோடவே வந்துட சொன்னேன்…” என்று கலங்கினான்.

 

“சித்துவும் நானும் ஆரம்பிச்ச கம்பெனிடா, நஷ்டமாகுறத பார்க்க முடில, எனக்கு கொஞ்சம் சப்போர்ட் கொடுறான்னு கேட்டார் அஞ்சலி… அப்ப கூட நான் அதை ஈஸியா எடுத்துட்டேன்… ஒருவேளை நான் அவர் சொந்த மகனா இருந்திருந்தா… ரத்த பாசத்துல ஓடி வந்திருப்பேனோ? அப்படி இல்லாததால தான அவரையும் மொத்தமா தொலைச்சுட்டேன்…” என்று கதறி விட்டான்.

 

இப்போதும் அவனை அழவிட்டு அமைதியாக வேடிக்கை பார்த்து இருந்தாள். அவள் கைகள் அவனின் அழுத்தமான பிடியில் சிக்கி வலித்தது.

 

“சாரிப்பா… சாரிப்பா… நான் கெட்ட பையனாயிட்டேன்… ரொம்ப சுயநலமா இருந்துட்டேன்… சாரி சித்தும்மா… சித்தும்மா” அவனின் ஒருமணிநேர கதறல், இப்போது முனங்கலாக வடிந்து இருந்தது.

 

தரையில் அமர்ந்து, சோஃபாவில் அஞ்சலியின் மடியில் தலை வைத்து விசும்பி கொண்டிருந்தான். அவள் அவன் முதுகை மெதுவாக தட்டி கொண்டிருந்தாள்.

 

இவளிடம் அவனுக்கு சொல்ல ஆறுதல் வார்த்தைகள் ஏதும் கிட்டவில்லை. நேரமும் எட்டை தொட நெருங்கி கொண்டிருந்தது.

 

அவனுக்கு மறுபடி தண்ணீர் புகட்டி அமர வைத்தாள். பால் காய்ச்சி எடுத்து வந்து, உடன் தூக்க மாத்திரையும் கொடுத்து வற்புறுத்தி பருக செய்தாள்.

 

அரவிந்த் அவள் முகத்தை சங்கடமாக பார்க்க, அவன் கன்னத்தில் சப்பென்று ஓரறை வைத்தாள். 

 

“சித்தும்மாவும் அங்கிளும் உன்ன எப்பவாவது வேறா பார்த்து இருப்பாங்களா டா, என்னவோ புதுசா அவங்க பெத்த பிள்ளை வேற, நீ வேறன்ற மாதிரி பேசுற… மவனே மறுபடி இப்படி உளர்ன உன்ன தூக்கி போட்டு மிதிச்சிடுவேன்” என்று ஆவேசமாக பேச, இவன் முகம் இறங்கியது.

 

“யாரு நீ? என்னை தூக்கி போட்டு மிதிப்ப?” என்று கேட்டு சோர்வாக சிரிக்க முயன்றான்.

 

ஆறடிக்கு சற்று குறைவான உயரம், அடர்ந்த சிகை, அகன்ற மார்பு, எப்போதுமே சிக்ஸ்பேக் பிரியன், வெளிநாட்டு காலநிலையால் மாநிறம் மாறி இப்போது வெளிர் நிறம் கூடி, இன்னும் அழகாக தெரிந்தான். 

 

‘இவனை எப்படி தூக்கி போட்டு மிதிப்பது? கீழே தள்ளி வேண்டுமானால் மிதிக்கலாம்’ ஆவேசத்தில் பேசிவிட்டு இப்போது தன்னால் முடியுமா என யோசித்து பார்த்தாள்.

 

ஆனாலும் விடாது, “ஏன் முடியாதுங்கிறியா? மவனே நானா இருந்ததால ஒரு அறையோட விட்டேன், இதுவே சித்துமாவா இருந்தா உன்ன ஓட‌ ஓட அடிச்சு துவைச்சு காய போட்டு இருப்பாங்க” என்றாள் மிரட்டலாக.

 

அவனுக்கும் தன் சித்தும்மா பற்றி தெரியுமாதலால், ஆமோதித்து தலையசைத்தபடி, எதிரில் முறைத்து நின்றவளை ஆறுதலாக அணைத்துக் கொண்டான்.

 

அஞ்சலியின் உடல் ஒருமுறை விறைத்து இளகியது. தூக்க மாத்திரை தந்த சோர்வில் அவன் தடுமாறுவது இவளுக்கு புரிந்தது. இல்லையெனில் சாதாரணமாக அவளை அணைப்பவன் கிடையாது.

 

“நீயில்லன்னா, நான் என்னாகி இருப்பேன்…? நீ எனக்கு வேணும் ஜெல்லி… லவ் யூ டீ…” என்று அவன் அணைப்பினூடே பிதற்ற,

 

அவன் பின்னந்தலையில் வலிக்க தட்டியவள், “நிஜமாவா டா, நீ என்னை லவ் பண்றீயா?” அஞ்சலி அதிசயம் போல கேட்க,

 

மனம் லேசாக புன்னகையோடு அவளிடமிருந்து விலகியவன், “ஆமா ஜெல்லி, நீ என்னோட ‘தேர்ட் லவ்’ தெரியுமா?” என்றான்.

 

“அடாபாவி, அப்போ ஃபர்ஸ்ட், செகண்ட் லவ் யாருடா?” அவனிடம் வில்லங்கமான பதிலை எதிர்பார்த்து இவள் கேட்க,

 

அதற்கு இன்னும் பெரிதாக இதழ் விரித்து சத்தமின்றி சிரித்தவன், “என்னோட ஃபர்ஸ்ட் லவ் என்னோட சித்தும்மா, செகண்ட் லவ் வெற்றிப்பா, தேர்ட் லவ் இந்த அஞ்சலி பாப்பா…” என்று சிலாகித்து சொன்னவன் முகத்தில் சட்டென இருள் பரவியது.

 

“அஞ்சலி… நீயும் அவங்களை மாதிரி என்னை விட்டு போக மாட்டல்ல…! எனக்கு பயம்மா இருக்குடி… நான் ஏன் இவ்வளவு மோசமா யோசிக்கிறேன்…” அவன் கண்கள் மறுபடி கலங்கின. கைகள் நடுங்கின.

 

“டேய் ஓவரா பண்ணாத டா, நீ என்னை துறத்தனா கூட நான் உன்ன விட்டு போகமாட்டேன், உன்கூடவே இருந்து உன் கழுத்தறுப்பேன் போதுமா… போய் தூங்கு போ” என்று அவன் தூங்கும் வரை அருகிருந்து விட்டு, இவளே வீட்டையும் பூட்டிக்கொண்டு கிளம்பினாள்.

 

மணிமுள் இரவு ஒன்பதைத் தாண்டிக் கொண்டிருந்தது. அது இருவழி சாலை. 

 

மிதமான வேகத்தில் அஞ்சலி காரை இயக்கி கொண்டிருந்தாள். மனம் முழுவதும் அரவிந்த் பற்றிய யோசனைகள். 

 

எதிரே தரிக்கெட்டு ஒரு சரக்கு வாகனம் சீறிக்கொண்டு வர, அது இவளை நெருங்கும்வரை இவளும் அதை கவனிக்கவில்லை.

 

கவனித்த வேளையில்…! 

 

சாலையில் மற்ற கார்களை முந்துவதே லட்சியம் என கொண்டு ஒவ்வொரு காராய் தவிர்த்து பாய்ந்து வந்த அந்த உயர்ரக கார், இவளுடையதையும் முந்திக் கொண்டு, அதே வேகத்தில் பாய்ந்து, எதிரே சரக்கு லாரியில் பலமாக மோதியது…

 

****

 

நிஜம் தேடி நகரும்…