நீயில்லை நிஜமில்லை 4

நீயில்லை நிஜமில்லை! 4

 

என்னுள் 

காதல் என்ற மாயம் 

நுழையும் வரை

நானும் நிஜமாய் மட்டுமே

இருந்தேன்!

 

முன் சென்ற காரை முந்த வேண்டும் என்ற வேகத்தில், எதிர் வரும் லாரியில் கவனம் வைக்க மறந்தனர் அந்த இளைஞர்கள். 

 

அஞ்சலியின் காரை முந்தியதும்  பின்னால் அவளை பார்த்து சத்தமிட்டு போதையில் கொக்கரிப்பதில் ஆர்வம் காட்டி எதிரில் வந்த ஆபத்தை அறியாது, தப்பிக்க வழியும் தேடாது… மடிந்து போயினர்.

 

அஞ்சலி லாரியை கவனித்து சுதாரிக்கும் நேரத்தில், கண்ணிமைக்கும் நொடியில் அவள்முன் அந்த கோர விபத்து நடந்து முடிந்து இருந்தது.

 

அவள் கண்களில் கண்ணீர் பெருகி வழிய, முன்வந்த கேவலோடு அதிர்ச்சியில் இருகைகளால் வாயைப் பொத்தி கொண்டாள்.

 

இப்போது தானே அவர்களை பார்த்தாள். எல்லோருமே கல்லூரி மாணவர்கள் போலத்தான் தெரிந்தனர். இவளைவிடவும் இளவயதினர். யாரவர்கள் என்று தெரியாத போதும், இந்த கதி அவர்களுக்கு கொடிது என்பதை நினைக்க அவளின் மனம் தாங்கவில்லை.

 

தன்னை சமாளித்து கொண்டு தந்தையைக் கைப்பேசி வழி அழைத்து, நடந்ததை கலக்கத்தோடு சொல்ல, அவரும் உடனே அங்கு விரைந்து வந்தார்.

 

அங்கே போலீஸ் வாகனம், மருத்துவ வாகனம் வந்திருந்தது. அதிலிருந்த நால்வரில் ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை என்பது பரிதாபம். 

 

லாரி ஓட்டுனர் படுகாயம் அடைந்திருக்க, அவன் தீவிர சிகிச்சைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தான்.

 

விபத்தை நேரில் பார்த்ததால், காவல் ஆய்வாளர் அஞ்சலியை விசாரித்தார். அவள் நடந்ததை அவரிடம் சொல்லிவிட்டு, அரண்மனைக்கு வர, இரவு பன்னிரண்டு மணி தாண்டி இருந்தது.

 

நடந்ததை கேள்விப்பட்ட திரிபுரசுந்தரி, காதம்பரி இருவரும் பதற்றம் கொண்டு உறங்காமல் காத்திருந்தனர். அஞ்சலி அவர்களுக்கு சமாதானம் சொல்லிவிட்டு தன் அறைக்கு வந்து குளித்து, உணவை மறுத்து உறங்க முயன்றாள். 

 

அந்த விபத்து காட்சி மீண்டும் மீண்டும் கண்முன்னே தோன்றி அவளை மிரள செய்வதாய்.

 

சிறிது நேரம் பட்டு மெத்தையில் புரண்டவள் உறங்க முடியாமல் எழுந்து தன் பாட்டியின் அறைக்கு வந்து அவரை அணைத்தப்படி படுத்துக் கொண்டாள்.

 

“ஏன்டாம்மா பயமா இருக்கா?” பேத்தியின் தலையை வருடியபடி சுந்தரிம்மா கேட்க,

 

“பயமெல்லாம் இல்ல அம்மம்மா, ரொம்ப கஷ்டமா இருக்கு, எல்லாருமே சின்ன பசங்க வேற… தாங்க முடியல… மனுசங்களோட வாழ்க்கை அவ்வளவு தான் இல்ல… சட்டுனு முடிஞ்சு போகுது” அஞ்சலி கவலையாக மொழிய,

 

“அதெல்லாம் அவங்கவங்க விதிம்மா, நானில்ல அறுபது வயசு தாண்டியும் கல்லு புள்ளையார் கணக்கா, மனச உலப்பிக்காம தூங்குடா” பேத்தியை தட்டி தூங்க வைத்தார்.

 

இது எதுவும் தெரியாது அரவிந்த், அங்கு தூக்க மாத்திரை பலனாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

 

மறுநாள் சூரியன் சுடும் போதே தூக்கம் கலைந்து எழுந்தவன், குளித்து முடித்து, தனக்கான குளம்பி கலந்து பருகிட, அவன் அலைபேசி அழைப்பு விடுத்தது.

 

எடுத்து, “குட் மார்னிங் ஜெல்லி” என்றான் மனம் தெளிந்தவனாய்.

 

“மண்ணாங்கட்டி மார்னிங், இன்னும் பத்து நிமிசத்தில நான் சொல்ற இடத்துல நீ இருக்கனும்” என்று இடத்தை கூறி, உத்தரவிட்டு வைத்து விட்டாள் அஞ்சலி.

 

‘இது வேறையா?’ என்று சலிப்போடு இவனும் தயாரானான். கதவு வெளிப்புறம் பூட்டி இருக்க, தன்னிடமிருந்த துணைச்சாவிக் கொண்டு கதைவை திறந்து, மறுபடி பூட்டிவிட்டு கிளம்பினான்.

 

‘ச்சே பாவம்‌, நேத்து அஞ்சலிய படுத்தி எடுத்துட்டேன் போல’ என்று நொந்தும் கொண்டான்.

 

ஆட்டோவில் தான் வந்து இறங்கினான். அவன் பைக்கை நேற்று மாலை நிறுவனத்திலேயே விட்டு, அஞ்சலியின் காரில் அரண்மனை வந்திருந்தான். அதனால்தான் இப்போது இந்த ஆட்டோ பயணம்.

 

அது தியானம் மற்றும் யோகா பயிற்சி நிலையம். அரவிந்த் வந்ததும் அஞ்சலி அவனை இழுத்து கொண்டு உள்ளே சென்றாள்.

 

இருவரும் சிறிது நேரம் அடிப்படை தியான பயிற்சி மேற்கொண்டனர். நாளையில் இருந்து காலை ஆறு மணிக்கு வருவதாக பதித்துவிட்டு திரும்பினர்.

 

வழியில் ஓட்டலில் காலை உணவை முடித்துக் கொண்டு நிறுவனம் நோக்கி காரில் செல்ல, இப்போது தான் இரவு நடந்த விபத்தை பற்றி அஞ்சலி, அரவிந்திடம் விவரித்தாள்.

 

அவள் சொன்னதை ஒருமுறை மனதில் ஓட்டி பார்த்தவனுக்கு திக்கென்றானது.

 

“அஞ்சலி… நீ சொல்றதை பார்த்தா, அந்த கார் உன்ன ஓவர்டேக் பண்ணலன்னா, அந்த லாரி உன்… காரை மோதி இருக்கும்…” அவன் பதறி சொல்ல, இவளும் ஆமோதிப்பாக தலையசைத்தாள்.

 

அரவிந்த் தன் தலையை அழுத்திக் கோதிக் கொண்டான்.

 

“எதுக்கும் இனி கேர்புல்லா இரு, நீ தனியா கார் டிரைவ் பண்ண வேணா…” அரவிந்த் சொல்ல,

 

“டேய் போதும் டா, அதான் எனக்கு ஒன்னும் ஆகல இல்ல, ஆனா அந்த பசங்களும் பாவம்டா” என்றவள் குரல் இரங்கியது.

 

ஆனால் அரவிந்த் மனதிற்குள் இனம்புரியாத தடதடப்பு பரவியது.

 

அலுவலகம் வந்ததும் நேராக பிரபாகரிடம், “மாம்ஸ் முதல்ல அஞ்சலிக்கு ஃபுல் டைம் டிரைவர் யாரையாவது அம்பாயின்ட் பண்ணுங்க… இனி அவ தனியா எங்கும் போக கூடாது” என்று படபடக்க, 

 

“டேய், நான் டிரைவரை வர சொல்லிட்டேன் டா, இனி பயமில்லை விடு, வந்ததே லேட் நீ, போய் மெயில் செக் பண்ணு முதல்ல” என்று முதலாளியாக உத்தரவிட, அவனும் தன் வேலையை கவனிக்கலானான்.

 

****

 

அரவிந்த் ஆழ்ந்த யோசனையில் இருந்தான். அவன்‌ வேலைக்கு சேர்ந்து ஒருவாரம் முடிந்து இருந்தது.

 

பிரபாகர் கீழே வேலை செய்வதில் அரவிந்திற்கு எந்தவித சுணக்கமும் தோன்றவில்லை. அவர் சொல்லும் வேலைகளை பொறுப்பாக முடித்தவன், அவரோடு வாய் வளர்ப்பதையும் விடவில்லை.

 

இந்த ஒருவாரத்தில் பிரபாகர், அஞ்சலி இருவரும் வெற்றிமாறன் விற்ற நிறுவன பங்குகளை பற்றி ஏதும் பேச்செடுக்கவில்லை.‌ அரவிந்தும் அதைப்பற்றிய எந்தவொரு கேள்வியையும் கேட்கவுமில்லை.

 

இப்படியே கேட்காமல் விடுவதற்கு அவர் விற்ற பங்குகள் குறைவானவையும் அல்ல. நிறுவனத்தின் சுமார் அறுபது சதவீத பங்குகளை ஏதோவொரு வேகத்தில் தன் நண்பரிடம் விற்றவர், அன்றைய இரவு உறக்கத்தின் பின் விழிக்கவே இல்லை.

 

தந்தையின் இறப்புக்கு பறந்தோடி வந்த அரவிந்திற்கும் இதை பற்றி ஏதும் தெரிந்திருக்கவில்லை. பிரபாகர் கூட, அரவிந்த் திரும்ப கிளம்பும் போது, சற்று பொறுமையாக தான் இதை அவனிடம் விளக்கி இருந்தார்.

 

கேட்டவனுக்கு முதலில் அதிர்ச்சி தான். ஆனாலும் பெரிதாக எதையும் காட்டிக்‌ கொள்ளவில்லை. இறுக்கத்துடனே கிளம்பி விட்டிருந்தான்.

 

எது எப்படி இருந்தாலும், தான் வாய் வார்த்தையாக சொன்ன ஒரே காரணத்திற்காக மட்டும், தன் தந்தை நிறுவன பங்குகளை மொத்தமாக விற்றிருப்பார் என்பதில் அவனுக்கு முழு நம்பிக்கை இல்லை. அதுவும் அவர் ஆதாரமாக நினைத்த தொழில், வெறும்‌ ஒருவார இடைவெளியில், தன்னிடம் தகவல் கூட தெரிவிக்காமல் விற்றது அவனுக்கு ஒரு மூலையில் நெருடிக் கொண்டு தான் இருந்தது.

 

ஆனாலும் தன் பிரபா மாமாவை சந்தேகிக்கவும் அவனுக்கு மனம் வரவில்லை. இதைப்பற்றி அஞ்சலிக்கும் எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவளுக்கு தெரிந்திருந்தால் நிச்சயம் தன்னிடம் மறைத்து இருக்க மாட்டாள்‌ என்பது அவனுக்கு திண்ணம்.

 

இதுவரை நிறுவன பங்குகள் கைமாறியது பற்றி இவனிடம்‌ பேசிய ஒரே ஆள், காதம்பரி தேவியார் மட்டுமே. முழு விவரம் தெரியாமல் அவரிடம் எதிர் வாதம் புரியவும் இவன் விரும்பவில்லை.

அமைதி காத்தான்!

 

தனிமைக்கும் இழப்பிற்கும் இடையேயும், நம்பிக்கைக்கும் நெருடலுக்கும் இடையேயும் அரவிந்த் நிதானத்தை கையாண்டு காத்திருந்தான். 

 

அதே நினைவில் வந்தவன் எதிரில் யாரோ மீது மோதிட, “ஒஹ் சாரி” என்று நிமிர, எதிரே தன் நெற்றியை தேய்த்தபடி அர்ச்சனா நின்றிருந்தாள்.

 

“இந்த ஆஃபிஸ்ல எல்லாரும் கனவு கண்டுட்டே நடப்பீங்களா? ஏன் சர் இப்படி?” என்று கேட்டு முகம் சுருங்கினாள்.

 

இன்று தான் முதல்நாள் வேலையில் சேர்ந்து இருந்தாள். வந்ததும் இப்படி மோதல் என்றால் அவளுக்கும் ஒருவித எரிச்சலானது.

 

“வேற யார்மேல மோதினீங்க மிஸ் அர்ச்சனா?” அரவிந்த் சாதாரணமாகவே கேட்க,

 

“நான் மோதல, அதோ அந்த கட்டம்போட்ட சட்ட தான் மோதிட்டு போச்சு” தன் பின்னால் அவள் கைக்காட்ட அங்கே எந்த சட்டையும் அரவிந்திற்கு புலப்படவில்லை.

 

“அங்க யாரும் இல்லையே”

 

“இடிச்சவன் இன்னும் அங்கேயேவா நிப்பான், போயிட்டு இருப்பான்” அவள் அதே எரிச்சலோடு சொல்ல,

 

“மிஸ் அர்ச்சனா… எனக்கென்னவோ நீங்க தான் வேலை கிடைச்ச சந்தோசத்துல கண்மண் தெரியாம எல்லாரையும் இடிச்சுட்டு வரீங்கனு தோனுது”‌ என்று இழுத்தான். 

 

“சார்… என்னை பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு?” அவள் காரமாக முறைக்க,

 

‘அவள் எப்படி தெரிகிறாள் தனக்கு?!’

 

அரவிந்த் அவளை பார்வையால் அளவிட்டான். இன்றும் சேலையில் தான் வந்திருந்தாள். மஞ்சள் நிறத்து மேனியள். பார்வைக்கு செப்பு சிலை போல அழகாக தெரிந்தாள். 

 

‘அலைஞ்சு திரிஞ்சு தேடி பிடிச்சு சலிச்சு எடுத்து ஒரு சேலை கட்டின தேவதையை கரெக்ட் பண்ணி, லவ் பண்ணி, கல்யாணம் பண்ணிக்கனும்’ அவன் அன்று விளையாட்டாக பேசியது‌ இப்போது தேவையில்லாமல் நினைவுக்கு வந்து தொலைத்தது.

 

புதுவித ஆர்வம் அவன் பார்வையில் ஒட்டிக் கொள்ள, அவள் முகத்தை கவனிக்கலானான். கோபம் பூசிய அவள் முகம் இவனை காந்தமாய் இழுப்பதாய்.

 

அவன் பார்வையில் மாற்றத்தை கண்டு கொண்டவள், பற்களை நறநறவென கடித்தப்படி விலகி நடந்தாள்.

 

‘இங்க வேலை செய்யறவங்க எல்லாம் அரை கிறுக்கா இருப்பாங்க போல, முதல் நாளே இப்படியா’ என்று நொந்தபடி.

 

‘டேய் அரவிந்தா, உன் போக்கு சரியில்ல டா, வந்த வேலைய மட்டும் கவனி’ அவன் அறிவு எச்சரிக்கை செய்ய, அசடு வழிய தலையை கோதியபடி நகர்ந்தான்.

 

****

 

முக்கிய ஆலோசனை சந்திப்பு ஏற்பாடாகி இருந்தது. பிரபாகர் உடன் அரவிந்தும், அஞ்சலி உடன் அர்ச்சனாவும், மேலாளர் அருளாளன் மற்றும் சில நிர்வாகத்தினர் கூடியிருக்க, தலைமை இருக்கையில் காதம்பரி தேவியார் அமர்ந்து இருந்தார்.

 

அவரின் ஒப்புதல் இன்றி நிறுவன குழுமத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாது.

 

சட்டப்படி, உரிமை படி தொழிலிலும் நிர்வாகத்திலும் முழு அதிகாரம் பெற்றவர் காதம்பரி தேவியார் தான். பிரபாகர் அவரின் கணவர் என்ற பெயரில் தொழில், நிர்வாகத்தை இயக்கும் உரிமையை மட்டும் பெற்றிருந்தார்.

 

காதம்பரி தேவியாருக்கு அடுத்து ஜமீன் சொத்துக்கள் தொழில்கள் அனைத்திற்கும் ஏக உரிமை பெற்றவள் ஜமீனின் ஒற்றை வாரிசான அஞ்சலி தேவி மட்டுமே.

 

அங்கே அமர்ந்திருந்த அனைவரையும் ஒரு அளவிடுதலோடு பார்த்திருந்தாள் அர்ச்சனா.

 

அழுத்தமான முகபாவத்தோடு காதம்பரி அமர்ந்திருக்க, அவருக்கு அடுத்து இருபுறமும் பிரபாகர், அஞ்சலி‌ அமர்ந்திருந்தனர். இருவரின் முகத்திலும் சற்றும் உயிர்ப்பு இல்லை. ஏதோ ஒவ்வாத‌ சங்கட நிலையில் வேறுவழியின்றி அமர்ந்திருப்பது போலவொரு தோற்றம்.

 

‘ஏன் இப்படி?’ அர்ச்சனாவிற்கு புரியவில்லை.

 

அடுத்து இரு நிர்வாகிகளும், மேலாளரும்‌ அமர்ந்திருந்தனர். அந்த நிர்வாகிகள் முகத்திலும் ஒருவித சங்கடம்.

 

நிமிர்ந்து அரவிந்த் முகம் பார்க்க,‌ ஏகத்துக்கும் இறுகி தெரிந்தது‌ அவன் முகம்.

 

வேலைக்கு வந்த நாள் முதலாக அவன் துறுதுறு தோரணையை கவனித்து இருந்தவளுக்கு இந்த இறுக்கம் வேறாக தெரிந்தது.

 

பாவம் அர்ச்சனாவிற்கு ஒன்றும் புரிவதாக இல்லை. 

 

‘எப்போதடா மீட்டிங் முடியும்’ என்று பார்த்து இருந்தாள்.

 

காதம்பரி தான் முதலில் பேசினார். அனைவரையும் வரவேற்று சம்பிரதாய பேச்சை தொடங்கியவர், “நாம புதுசா சித்து சைக்கிள் கம்பெனி ஷேர்ஸ் வாங்கினது எல்லாருக்கும் தெரியும். இனி அந்த கம்பெனியும் எம்எம்பி (மாயனூர் மார்கண்டேய பூபதி என்பதின் ஆங்கில சுருக்கம்) குரூப்ஸ் கீழே இயங்கும் என்பதை மகிழ்ச்சியோடு அதிகாரபூர்வமாக அறிவிக்கிறேன். இப்ப நஷ்டத்தில இருக்க அந்த கம்பெனிய, லாப வழியில திருப்ப என்னென்ன செய்யலாம்னு ஆலோசிக்க தான் இந்த மீட்டிங். உங்களோட ஐடியாஸ் சொல்லலாம்…”

 

அங்கே பதில் பேச இரு நிர்வாகிகளும் தயக்கம் காட்டினர். சித்து சைக்கிள் நிறுவனத்தின் இரண்டாம் மூன்றாம் பங்குதாரர்கள் அவர்கள். இதுவரை இந்த நிறுவனத்தின் லாபத்தை மட்டுமே சுகித்தவர்கள். நிறுவன பொறுப்பு அனைத்தையும் கவனித்துக் கொண்டது வெற்றிமாறன் மட்டும் தான். 

 

இப்போதும் அவர்கள், நிறுவன வளர்ச்சிக்கு காதம்பரி தேவியார் எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் தாங்கள் ஒத்துழைப்பதாக ஒப்புதல் வழங்கினர்.

 

அதற்கு மேலும் அங்கே நிற்க முடியாமல் அரவிந்த் வேகமாக வெளியேறிவிட்டான். அதை பார்த்த அஞ்சலி, “அரவிந்த்…” தவிப்பாக அவனை அழைக்க,

 

“அஞ்சலி…” காதம்பரியின் அமர்த்தலான குரலில் மறுபடி அமைதியாக அமர்ந்து கொண்டாள்.

 

‘என்னடா நடக்குது இங்க? இந்த அரவிந்த் எதுக்கு வீணா சீன் கிரேட் பண்றான்? போச்சு இன்னியோட அவன் சீட் கிழிஞ்சது’ என்று எண்ணிக்கொண்ட அர்ச்சனா மேலும் அங்கே அவரவர் தந்த ஆலோசனைகளில் கவனத்தை செலுத்தினாள். முக்கியமான சிலதை குறிப்பெடுத்துக் கொண்டாள்.

 

வெளியே, எத்தனை முயன்றும் அரவிந்தால் தன்னை சமன்படுத்திக் கொள்ள முடியவில்லை. 

 

தன் அம்மா, அப்பாவின் முயற்சி, உழைப்பு, கனவு அந்த நிறுவனம்… அதன் அடையாளம் இனி இல்லை என்பதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. 

 

ஒரு மகனாக தன் கடமையில் இருந்து தவறியதாக அவன் மனம் அவனை இடித்து உரைத்தது.

 

மீட்டிங் முடிய வெளிவந்த அஞ்சலி, அரவிந்தை தேடி விரைந்தாள். அவன் வெளியே வாகனம் நிறுத்தும் இடத்தில் நெற்றியை பிடித்தபடி தன் பைக்கின் மீது சாய்ந்து நின்று இருந்தான்.

 

அஞ்சலி தயக்கமாக அவன் தோள் தொட நிமிர்ந்தவன் கண்கள் சிவந்திருந்தன.

 

“சாரி டா”

 

அவனிடம் பதில்‌ இல்லை.

 

“ஷேர்ஸ் கைமாறின விசயம் முன்ன எனக்கும் தெரியாது. வெற்றி அங்கிள் இதைப்பத்தி என்கிட்ட எதுவுமே ஷேர் பண்ணல” அவள் விளக்கம் தர,

 

“என்கிட்டயே அவர் ஒருவார்த்தை சொல்லல” அரவிந்த் விரக்தியாக முடித்தான்.

 

“உனக்கு சொன்னதுக்கு அப்புறம் தான் டேட் எனக்கு தெரியபடுத்தினார். என்னால நம்பமுடியல. நான் திரும்ப திரும்ப செக் பண்ணி பார்த்துட்டேன் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் பக்காவா இருக்கு. அதால‌ எதிர்த்து பேசவும் என்னால முடியல” என்றாள்.

 

“இதுல யாரையும் குற்றம் சொல்ல நான் விரும்பல. தப்பெல்லாம் என்னோடது தான். அப்பா கூப்பிடும் போதே நான் மறுப்பு சொல்லாம வந்திருக்கனும். என்னோட சுயநலம் தான் எல்லாத்துக்கும் காரணம்” அரவிந்த் வெறுத்து சொல்ல, அஞ்சலி அவனை சமாதானம் செய்யும் வழி அறியாமல் தயங்கி நின்றிருந்தாள்.

 

அவர்கள் இருவரும் தனித்து நின்றிருப்பதைப் பார்த்த காதம்பரியின் முகத்தில் எரிச்சல் பரவ, தன் காரில் ஏறியவர் மனதில் ஏதேதோ யோசனைகள் ஓடின.

 

****

 

நிஜம் தேடி நகரும்…