நீயில்லை நிஜமில்லை 5

நீயில்லை நிஜமில்லை! 5

 

நிஜத்திற்கும் மாயைக்கும்

இடையே ஊசலாடுகிறேன் நான்!

நிஜம் சொல்லிவிடு இன்றே,

நீ நிஜமில்லை என்றே!

 

இன்று வார விடுமுறை தினம். சோம்பலாக எழுந்து அப்போதுதான் குளித்து வந்து, ஏதாவது சமைக்கலாமா இல்லை ஓட்டல் போகலாமா என்று குளிர்சாதன பெட்டியை கிளறி கொண்டிருந்தான் அரவிந்த். அழைப்புமணி ஓசை இட்டது.

 

இந்நேரத்தில் யாரென அரவிந்த் கதைவை திறக்க, வாசலில் நின்றிருந்த காதம்பரி, அவன் வந்த கோலத்தை பார்த்து பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டார் சங்கடமாக.

 

அரவிந்த் அவர் வரவை வியந்து பார்த்து, “வாட் எ பிளசன்ட் சர்பிரைஸ் ஆன்ட்டி. உள்ள வாங்க” அவன் உற்சாகமாய் வரவேற்க,

 

பார்வையை அவன் பக்கம் திருப்பாமல் தன் நெற்றியில் தட்டிக் கொண்டவர், “அரவிந்த் போய் முதல்ல டிரஸ் மாத்திட்டு வா” கடுப்பாக மொழிய, இப்போது தான் தன்னை கவனித்தான்.

 

இடுப்பில் ஒற்றை துண்டு மட்டும் கட்டிக்கொண்டு வெற்றுடம்பாக வந்திருந்தான். முகத்தில் அசடு வழிய, “சாரி ஆன்ட்டி, நீங்க உள்ள வந்து உக்காருங்க. நான் இதோ இப்ப வந்திடுறேன்” என்று தன் அறையை நோக்கி கிட்டத்தட்ட ஓடினான்.

 

அவன் உடை உடுத்தி வர, அவர் கூடத்து சோஃபாவில் அமர்ந்து காத்திருந்தார். அரவிந்த் யோசனையோடு சமையலறை வந்து இருவருக்குமாக குளம்பி தயாரித்து, எடுத்து வந்து அவரிடம் நீட்டினான். தனக்கும் ஒரு கப் எடுத்து கொண்டு அவரெதிரில் அமர்ந்து கொண்டான்.

 

கோப்பையில் குளம்பி தீரும் வரை இருவருக்கிடையே எந்த பேச்சும் இல்லை. 

 

“நீ செய்யறது எதுவும் சரியில்லை அரவிந்த். எனக்கு சுத்தமா பிடிக்கல” காதம்பரி எடுத்ததும் சொல்ல,

 

“ஆன்ட்டி காஃபி நான் போடல. காஃபி மேக்கர்ல தான் ப்ரேப்பர் பண்ணேன். ஏன் உங்களுக்கு டேஸ்ட் பிடிக்கலையா?” என்று சொன்னவனை சலிப்பாக பார்த்து முறைத்தார் காதம்பரி.

 

“நான் காஃபி பத்தி பேசல, நீயும் அஞ்சலியும் பழகறதை பத்தி பேசறேன்” என்றார் நேரடியாக.

 

இவனுக்கு இப்போதும் விளங்கவில்லை. “நானும் அஞ்சலியும் நேத்து இன்னைக்கு பழகல. ஸ்கூல் போனதுல இருந்தே கிளோஷ் ஃப்ரண்ஸா இருக்கோம். இதுல நீங்க எதை புதுசா சொல்றீங்க ஆன்ட்டி?” அவன் வினவ,

 

“நீங்க ஜஸ்ட் ஃப்ரண்ஸா இருக்கவரைக்கும் எனக்கு எந்த பிராப்ளமும் இல்ல. யாருக்கும் ப்ராப்ளம் இல்ல. ஆனா… நீ அஞ்சலியோட ஃபிரண்ட்ஷிப்ப மிஸ்யூஸ்‌ பண்ண பார்க்கிற அரவிந்த்” அவரின் குற்றச்சாட்டு நேராக அவனை தாக்கியது.

 

“நானா? நான் என்ன மிஸ்யூஸ் பண்றேன்னு சொல்றீங்க?” அவர் சொல்ல வருவது இவனுக்கு சுத்தமாக புரிவதாகவில்லை.

 

“சும்மா உனக்கு ஒன்னுமே தெரியாத மாதிரி நடிக்காத அரவிந்த். உன்னோட டோட்டல் பிளானை நான் கேட்ச் பண்ணிட்டேன்” என்றவர் தான் ஊகித்ததை விளக்கவும் செய்தார்.

 

“எனக்கு என் ட்ரீம் ஜாப் கிடைச்சிடுச்சு. இனி இந்தியா வர ஐடியா இல்லவே இல்லனு குதிச்சிட்டு போனவன், வெற்றி அண்ணா தவறின மூனு மாசத்தில, வேலைய விட்டுட்டேனு வந்து நிக்கிற. அதுவும் உங்க கம்பெனி ஷேர்ஸ் கூட உன்கிட்ட இல்லன்னு தெரிஞ்சும்…!

 

வந்த அன்னைக்கே, பிரபாவையும் அஞ்சலியையும் ஃபோர்ஸ் பண்ணி எங்க கம்பெனில வெறும் செகரட்டரி வேலை வாங்கி இருக்க…! நான் கூட உனக்கு அப்பாவ இழந்த டிப்ரஷன்ல புத்தி மழுங்கி போச்சுனு நினச்சுட்டேன்.

 

ஆனா இப்ப தானே எனக்கே புரியுது நீ எவ்வளவு பெரிய தில்லாலங்கடி பிராட்னு” 

 

அவர் ஆவேசமாக பேசி கொண்டே போக, குறுக்கிட்ட அரவிந்த் “ஆன்ட்டி, உங்க மேல எனக்கு நிறைய மரியாதை இருக்கு, அதால தான் அப்பவும் இப்பவும் உங்களை எதிர்த்து பேசாம‌ இருக்கேன்… இப்ப திடீர்னு நீங்க ஏன் என்னை தப்பான கண்ணோடத்திலயே‌ பார்க்கறீங்கன்னு எனக்கு நிஜமா புரியல… நம்ம அங்கிள் கம்பனி தானேனு ஒரு உரிமையில வேலை கேட்டது பெரிய தப்போனு இப்ப தோனுது” அவனும் ஆதங்கமாக சொன்னான்.

 

என்னவோ அவனுக்கு எல்லாமே கசந்தது.

 

“நீ வேலை செய்றதுல எனக்கு எந்த அப்ஜக்ஷனும் இல்ல. பட், இந்த வேலைய சாக்கா வச்சு, நீ அஞ்சலிய நெருங்க முயற்சி பண்ணாலோ,‌ இல்ல காதல், கத்திரிக்காய்னு சொல்லிட்டு அவளோட மனச கலைக்க பார்த்தாலோ, நான் சும்மா வேடிக்கை மட்டும் பார்த்துட்டு இருப்பேன்னு‌ நினைக்காத அரவிந்த்” அவர் குரல்‌ மிரட்டலாக ஓங்கி‌ ஒலித்தது.

 

அரவிந்திற்கு சுறுசுறுவென‌ கோபம் எற, “நீங்க எங்க ரெண்டு பேரையும் சந்தேகப்படுறீங்களா ஆன்ட்டி? எனக்கும் அஞ்சலிக்கும் நடுவுல அப்படி எதுவுமே இல்ல. ச்சே நீங்க ஏன் இப்படி கீழ்தரமா யோசிக்க ஆரம்பிச்சுட்டீங்க?” வெறுத்து போனான்.

 

“ஷட் அப் அரவிந்த், நீ யோக்கியன் மாதிரி பேசினா நம்பறத்துக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்ல. நேத்து பாதி மீட்டிங்ல வெளியே போய் அங்க ஒரு சீன் கிரேட் பண்ண வேண்டிய அவசியம் என்ன உனக்கு? ஏன்னா நீ அப்படி வெக்ஸாகி போனா தான், உன்ன சமாதானப்படுத்த அஞ்சலி உன் பின்னாடியே வருவா அதானே…

 

ஆஃபீஸ் பொறுத்தவரைக்கும் அஞ்சலி முதலாளி, நீ எங்களுக்கு கீழ வேலை பார்க்கிற தொழிலாளி. இது தெரிஞ்சும் நேத்து எல்லாரும் பார்க்கிற மாதிரி நீங்க ரெண்டு பேரும் தனியா நின்னு பேசிட்டு இருந்தீங்க… இதனால என்ன இஷ்யு கிரேட் ஆகும்னு‌ சின்ன ஐடியாவாவது இருக்கா உனக்கு?” காதம்பரி தன் உடல் நடுங்க அவனை பார்த்து கத்தினார்.

 

அரவிந்த் எதுவும் பேசவில்லை அமைதி காத்தான்.

 

“ஐ பிளேம் யூ அரவிந்த், நீ என் பொண்ணை உன் வலையில விழ வச்சு, கல்யாணம் செஞ்சுக்க திட்டம் போடுற, நோகாம பூபதி குடும்ப, தொழில் சாம்ராஜ்யம் மொத்தமும் உன் கைக்கு வந்திடும்னு கனவு கண்டுட்டு சுத்திட்டு இருக்க” காதம்பரி அடித்து பேச,

 

“போதும் மேடம்… என்ன தெரியும் உங்களுக்கு என்னைபத்தி? என்ன தெரியும் உங்களுக்கு என் அஞ்சலி பத்தி? எப்படி நீங்க எங்களோட இத்தனை வருச ஃபிரண்ட்ஷிப்பை கேவலபடுத்தலாம்?

 

உங்ககிட்ட ஆர்கியூ செஞ்சு எங்களைப்பத்தி ப்ரூஃப் பண்ண வேண்டிய எந்த அவசியமும் எனக்கு இல்ல மேடம். என்னை நீங்க நம்பலன்னாலும் பரவால்ல, உங்க பொண்ணை நம்புங்க” அவனும் உள்ளக் கொதிப்போடு பதில் பேசினான்.

 

“என் பொண்ணு மேல எனக்கு இருக்க நம்பிக்கை எப்பவும் குறையாது. அவ உன்மேல வச்ச நம்பிக்கையை நீ மிஸ்யூஸ் பண்ண நினைக்காத. அவ்வளவு தான்” என்று எழுந்து விட்டார்.

 

“எனக்கு அந்த மாதிரி எந்த ஐடியாவும் இல்ல. தெளிவா கேட்டுக்கங்க… நீங்களே எங்களை இணைச்சு வைக்க நினைச்சா கூட, நானும் அஞ்சலியும் அதுக்கு சம்மதிக்க மாட்டோம். போதுமா” என்றவன் அவர் வெளியே வர வாசல் கதவை திறந்து விட்டு நின்றான்.

 

காதம்பரி அவனை எரிக்கும் பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றார். 

 

அரவிந்த் மனம் வெறுத்து போய், சோஃபாவில் பொத்தென்று அமர்ந்து விட்டான். என்ன முயன்றும் அவர் தன்னை சந்தேகப்பட்டு குற்றம் சாட்டியதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

எந்த வேகத்தில் அரண்மனையை அடைந்தாரோ, அதே வேகத்தில் அஞ்சலியின் திருமண பேச்சை ஆரம்பித்தார் காதம்பரி தேவியார்.

 

“அஞ்சலிக்கு பொறுப்பு வரனும் நம்ம பிஸ்னஸ் அவ கைல எடுத்துக்கனும்னு இத்தனை நாளா அவளோட கல்யாண பேச்சை நாம யாரும் எடுக்கல. இந்த ரெண்டு வருசமா அஞ்சலி பிஸ்னஸ் நல்லாவே ரன் பண்றா. 

 

அவளுக்கு தன்னால முடியும்ற நம்பிக்கையும் கூடியிருக்கு. இனிமே அஞ்சலிக்கு கல்யாண ஏற்பாட்ட ஆரம்பிக்கலாம்னு முடிவு எடுத்து இருக்கேன். சீக்கிரம் வரன் பார்க்க ஆரம்பிச்சிடலாம்”

 

ஒரு முடிவோடு காதம்பரி உத்தரவிடுவது போல பேச, அஞ்சலியின் முகம் யோசனைக் காட்டியது. பிரபாகர் சந்தோசமாக தலையசைக்க, திரிபுரசுந்தரி பேத்தியை நிறைவாக அணைத்து கொண்டார்.

 

அங்கே மேலும் நீண்ட அவர்கள் பேச்சு எதுவும் அஞ்சலியின் கவனத்தில் பதிவதாக இல்லை.

 

****

 

மறுநாள் காலை அரவிந்த் யோகா, தியான பயிற்சி மையத்திற்க்கு வரவில்லை. அஞ்சலி அவனை அலைப்பேசியில் அழைக்க, அவன் எடுக்கவும் இல்லை.

 

அஞ்சலி எரிச்சலோடு அவன் வீட்டிற்கு வர, அரவிந்த் அவர்கள் தோட்டத்தில் தான் உட்கார்ந்து இருந்தான். இவள் வந்ததை கவனித்தும் வாளாமல் இருந்தான்.

 

“உனக்காக நான் என் வேலையெல்லாம் விட்டுட்டு வரேன். நீயென்ன கண்டுக்காம உக்கார்ந்து இருக்க, ஏன் டா இன்னைக்கு யோகா கிளாஸ் வரல?” அஞ்சலி கோபமாக கேட்க,

 

“இத்தனை நாளா உனக்காக தான் வந்தேன். அவ்வளவு தான். இனிமே என்னால வரமுடியாது. விட்டுடு ஜெல்லி” அரவிந்த் சலிப்பாக தன் மறுப்பை தெரிவித்தான்.

 

தன் நெற்றியில் அடித்துக் கொண்டவள், “உன்னோட நல்லதுக்கு தான் சொல்றேன், நீ ரெகுலரா யோகா, மெடிடேஷன் செஞ்சா தான் உன் மைண்ட் ஸ்ராங்கா வச்சுக்க முடியும். புரியுதா?”

 

“ம்ம் புரியுது, ஆனா எனக்கு பிடிக்கல”

 

அவள் முறைத்து, “உன்னல்லாம் திருத்தவே முடியாது போடா” அஞ்சலி சலித்துக் கொண்டாள். 

 

முன்பும் இப்படிதான் இவள் யோகா பயிற்சிக்கு அவனை வற்புறுத்தி அனுப்பி இருக்க அதை பாதியிலேயே நிறுத்திவிட்டான். அதனால் தான் இம்முறை இவளும் உடன் வந்தாள். இப்போதும் மாட்டேன் என்பவனை என்னதான் செய்வது?

 

“ஒரு இடத்தில கொஞ்ச நேரம் அமைதியா உக்கார்ந்து யோகா, மெடிடேஷன் செய்ய கூட நோகுதா உனக்கு” அஞ்சலி கடுகடுக்க,

 

“ஆமா, சும்மா உக்கார்ந்து இருக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது, ஆள விடு” என்றான்.

 

‘அன்றைக்கு அப்படி கலங்கி அழுதது என்ன? இப்போது இப்படி அலட்சியமாக பேசுவது என்ன?’ என்றெண்ணி முறைத்தவள்,

 

“காலையில நீ என்னை டென்ஷன் படுத்தாத டா, முதல்லயே எனக்கு தலைவலி படுத்தி எடுக்குது, எனக்கு சூடா காஃபி எடுத்துட்டு வா போ”  அவனை ஏவினாள்.

 

“ம்ம் என்னை பார்த்தா உன் அரண்மனை சமையல்காரன் போலவா தெரியுது?” என்று அரவிந்த் நொடிந்து கொண்டாலும், அவளுக்காக குளம்பி தயாரிக்க எழுந்து உள்ளே சென்றான்.

 

அவன் போவதை பார்த்து, அஞ்சலி சிறு புன்னகையோடு தோட்டத்திலேயே அமர்ந்து கொண்டாள்.

 

அவளுக்குள் ஏதேதோ யோசனைகள்! 

 

புதியாய் தலை நீட்டும் தயக்கங்கள்!

 

அரவிந்த் அவளை அழைத்து, அவள் கையில் காஃபியை கொடுத்தவன், “ஜெல்லி உனக்கு பாஸ்தா ஓகேவா? இல்ல பிரெட் ஆம்லேட் போடவா?” இரு கைகளையும் பரபரவென தேய்த்தப்படி,  சமையல் பாத்திரங்களை உருட்ட,

 

“ரெண்டுமே செய்யலாம். நானும் ஹெல்ப் பண்றேன்” என்றாள். இருவரும் சேர்ந்து காலை உணவை தயாரித்து முடித்து, சாப்பிட அமரவும், அஞ்சலி மெல்ல பேச்சை தொடங்கினாள்.

 

“எனக்கு அலையன்ஸ் பார்க்கிறாங்க அரவிந்த்…” என்று.

 

“ஓஹ்…” அவனிடம் வேறு பதில் வரவில்லை. பாஸ்தாவை வாய்க்குள் திணித்து வயிற்றில் நிரப்பிக் கொண்டிருந்தான்.

 

“ஏதாவது சொல்லேன் டா” தட்டில்  முற்கரண்டியை அலைந்தபடி அஞ்சலி கேட்க,

 

“இதுல நான் என்ன சொல்ல? நீ தான் சொல்லனும்” என்றவனை அஞ்சலி இமை அசையாது பார்க்க, அவள் பார்வையின் பொருள் விளங்கவில்லை இவனுக்கு.

 

மேலும் அதைப்பற்றி பேச்சு வளர்க்காமல் இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.

 

பின்னாளில் இன்று பேசாமல் விட்டது பற்றி அவள் நினைத்து நினைத்து வருந்தும் நிலை வரும் என்று தெரிந்திருந்தால் இன்றே வெளிப்படையாக பேசி இருப்பாளோ‌ என்னவோ? 

 

ஆனால் முதல் வார்த்தை அரவிந்திடம் இருந்து தான் வரவேண்டும் என்று ஒரு பெண்ணாய் இவள் எண்ணியதிலும் தவறில்லை தான்.

 

அவள் மனதை உணரும்‌ திறம் அரவிந்திற்கு இருக்கவில்லை. காதம்பரி தன்மீது சாற்றிய குற்றச்சாட்டிலேயே அவன் மனம் உழன்று கொண்டிருந்தது.

 

“சரி என்னைபத்தி விடு, உன் ஃபியூச்சர் பத்தி என்ன முடிவு எடுத்து இருக்க. அதை சொல்லு? உன்னோட லைஃப் பார்னர் பத்தி!” அஞ்சலி அவனை விடாமல் கிளற,

 

அரவிந்த் மனத்திரையில் சத்தமில்லாமல் அர்ச்சனாவின் முகம் மின்னி மறைய, ஒருவித அதிர்ச்சியுடன் அதை உள்வாங்கிக் கொண்டான்.

 

“தெரியல ஜெல்லி, இனி தான் யோசிக்கனும்” என்று பதில் தந்துவிட்டு சமைத்த பாத்திரங்களை கழுவி வைக்கலானான்.

 

அவனின் விட்டேற்றியான பதிலில் அஞ்சலிக்கு ஒருபுறம் கோபம் வரத்தான் செய்தது. மேலும் அதைப்பற்றி பேச வில்லை. 

 

அவன் கழுவி வைத்த பாத்திரங்களை துடைத்து அடுக்கி வைத்தாள். அஞ்சலிக்கு ஓரளவு வீட்டு வேலை பழக்கம் தான். சித்தாரா முன்பு பழக்கிவிட்டது.

 

அரவிந்த் தயாராகி வரவும் இருவரும் நிறுவனம் நோக்கி விரைந்தனர். மனதில் வெவ்வேறு எண்ணங்களோடு.

 

****

 

நேராக அலுவலகம் வந்தவன் பார்வை அர்ச்சனாவை தான் தேடி அலைந்தது. அவள் கண்ணில் படுவதாக இல்லை.

 

மேலும் தேட முடியாமல் அவனுக்கான வேலைகள் அவனை இழுத்து கொண்டன. வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி, அதற்கான மூல பொருட்களின் தேவை, முடிவு பெற்ற பொருட்களின் தர ஆய்வு என அனைத்தையும் கண்காணித்து பிரபாகரனிடம் சமர்பிக்க வேண்டியது என இன்னும் மற்ற வேலைகளிலும் அலைந்து கொண்டிருந்தான்.

 

எப்போதுமே அரவிந்தின் வேலைகளில் ஒருவித துறுதுறுப்பு பாணி இருக்கும். அதை பார்ப்பவர்களுக்கு தன்னால் சுறுசுறுப்பு ஒட்டி கொள்ளும்.

 

நேற்று காதம்பரி பேச்சில் மனம் சோர்ந்து இருந்தவன், இன்று ஏனோ அதையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு அர்ச்சனாவை பார்க்க பரபரத்தான்.

 

மதிய உணவு இடைவேளையில், அர்ச்சனா சாப்பிட அமர, அவள் எதிரில் அரவிந்த் வந்து அமர்ந்து கொண்டான் தன் உணவு தட்டோடு.

 

“காலையில இருந்து உன்ன பார்க்கவே முடியல, ரொம்ப பிஸியோ?” அரவிந்த் சாதாரணமாக வினவ,

 

“ம்ம் ஒரேயடியா மானிட்டரும் ஃபைல்ஸும் பார்த்து பார்த்து இப்பவே கண்ணுல பூச்சி பறக்குது” அர்ச்சனாவும்  இயல்பாகவே பேசினாள்.

 

“அது போக போக பழகிடும்” என்றவன், “நான் எதுக்கு உன்ன தேடினேன்னு கேட்கமாட்டியா?” இவன் புதிராக கேட்க, அவள் ஏன் என்பது போல்‌ அவன் முகத்தை ஏறிட்டாள்.

 

“மார்னிங் என்னோட ஃபியூச்சர் லைஃப் பார்னர் பத்தி பேச்சு வந்தது… ஏனோ சட்டுனு என் மைண்ட்ல உன் ஃபேஸ் கிளிக் ஆயிடுச்சு…” அவன் பரபரப்பாக சொல்லி செல்ல, அர்ச்சனாவிற்கு புரையேறிக் கொண்டது.

 

அவள் அவசரமாக தண்ணீர் எடுத்து பருக, “எனக்கு ஏன் உன் முகம் தோனுச்சுன்னு தெரியவே இல்ல. நான் உன்ன யோசிச்சு கூட பார்க்கல‌ பட், ஒரு செகண்ட் உன் முகம் வந்துட்டு போயிடுச்சு” அவன் விடாமல் சொல்லி முடித்தான்.

 

“என்ன அரவிந்த் சர், என்கிட்ட ட்ராக் ஓட்ட டிரை பண்றீங்களா?” இவள் புருவம் சுருக்கி கேட்க,

 

“ச்சே ச்சே அப்படி ஏதாவது இருந்தா நான் நேரா சொல்லிடுவேன். சுத்தி வளைச்சு பேசி டைம் வேஸ்ட் பண்ண மாட்டேன்”

 

“திஸிஸ் யுவர் லிமிட் சர், வீணா பேசி உங்க மரியாதைய நீங்களே கெடுத்துக்காதீங்க. அவ்ளோ தான் சொல்லுவேன்” அவள் குரல் இலகுதன்மையற்று ஒலித்தது.

 

“ப்ச் யா ஐ நௌ. லிசன் அர்ச்சனா… என்னோட வாழ்க்கையில எனக்கே எனக்குன்னு ஒருத்தி வரனும்னு ஆசை… அவள நான் பித்து பிடிச்சு காதலிக்கனும்னு ஆசை… அவளோட கண் அசைவுல பம்பரமா சுழனும்னு ஆசை… இதெல்லாம் நடக்குமானு எனக்கு தெரியாது.‌ ஆனாலும் அப்பப்போ கிரேஸியா இப்படி தோனும்” அரவிந்த் உளறி கிளற,

 

“இப்ப எதுக்கு இதையெல்லாம் என்கிட்ட சொல்றீங்க?” அர்ச்சனாவிற்கு மதிய பசியே அற்றுவிட்டது.

 

“இதுவரைக்கும் நிறைய கேர்ள்ஸ கிராஸ் பண்ணிருக்கேன்… யார்கிட்டேயும் இந்த ஃபீல் வந்தது இல்ல. ஒருவேளை நீ ஏன் எனக்கானவளா இருக்க கூடாதுன்ற ஒரு சின்ன கியூரியாசிட்டி” அவன் சொல்லிவிட்டு தோள் குலுக்க,

 

எழுந்து கொண்டவள், “நிச்சயமா உங்களுகானவ நான் இல்ல சர்” அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு கோபமாக சென்று விட்டாள்.

 

அரவிந்த் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. “ம்ம் பார்க்கலாம்” என்று தன் உணவை காலியாக்குவதில் மும்முறமானான்.

 

****

 

அன்று இரவு உறக்கம் சேராமல் அர்ச்சனாவின் மனதிற்குள் சலசலப்பு.

 

தலையை குலுக்கிக் கொண்டு தன் அலைப்பேசியை எடுத்து தம்பிக்கு அழைப்பு விடுத்தாள்.

 

மறுமுனை எடுக்கப்பட்டதும், 

 

“தூங்கிட்டியா? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” அர்ச்சனா வினவ,

 

“இல்ல க்கா, படிச்சிட்டு தான் இருந்தேன். நீ இன்னும் தூங்காம என்ன செய்யற?” 

அவனும் கேள்வி விடுத்தான்.

 

“அது… தூக்கம் வரல அஜ்ஜு… ஏதோ டிஸ்டர்ப்பா இருக்கு, ஒரு இடியட் இன்னைக்கு என்னை டென்ஷன் பண்ணிட்டான்”

 

“யாரு க்கா அது, என் அக்காவ டிஸ்டர்ப் பண்ணவன்?” அவன் கேட்க,

 

“அரவிந்த்… நான் வேலைக்கு சேர்ந்து ஒரு மாசம் கூட முடியல. அதுக்குள்ள வந்து… என்னென்னமோ உளறிட்டு போறான். மட பையன்”

 

“ஏதாவது பிரச்சனை செஞ்சானா? நான் அங்க வரவா?” தம்பி பதற்றமாக கேட்க,

 

“இல்லடா, அப்படி ஏதாவது பிரச்சனை செஞ்சா நான் உன்கிட்ட தான சொல்லுவேன்” என்று இன்னும் சற்று நேரம் பேசிவிட்டு வைத்தாள்.

 

தம்பியிடம் பேசியதில் இப்போது மனம் சற்று தெளிந்திருக்க, இழுத்து போர்த்திக் கொண்டு உறக்கம் தழுவினாள்.

 

அவளின் கனவு பாதையில், அரவிந்தின் குறுகுறுத்த முகம் வந்து சிரித்து போனது!

 

****

 

நிஜம் தேடி நகரும்…