நீயில்லை நிஜமில்லை 6

நீயில்லை நிஜமில்லை! 6

 

தீயிட்டும் தகிக்கவில்லை,

உன் ஒற்றை கண்ணீர் துளி 

பட்டு தெறிக்க

வெந்து தணிகிறது தேகம்!

 

வீட்டில் தேர்ந்தெடுத்து காட்டிய ஒவ்வொரு மாப்பிள்ளையின் நிழற்படத்தையும் பார்த்து விட்டு, “ப்ச் எனக்கு பிடிக்கல” என்று ஒற்றை மறுப்போடு நகர்ந்து விடுவதை வழக்கமாக்கி கொண்டாள் அஞ்சலி.

 

பெற்றவர்களுக்கு ‘ஏன் இப்படி’ என்று தான் இருந்தது. 

 

தங்கள் வீட்டு இளவரசி மனதில் வரித்தது போன்ற ஒரு துணைவனை ஏழுகடல் தாண்டியும் கண்டுபிடித்து அவள் முன் நிறுத்தும் வேகம் அவளின் பெற்றோருக்கு.

 

இதற்கிடையே நிறுவன வேலை, உற்பத்தி, தயாரிப்பு, ஏற்றுமதி வேலைகள் என பிரபாகரையும் அஞ்சலியையும்‌ இழுத்துக் கொண்டன. பிரபாகருடன் அரவிந்தும், அஞ்சலியுடன் அர்ச்சனாவும் வேலை நிமித்தம் சுற்றிக் கொண்டு இருந்தனர்.

 

அஞ்சலியுடன் அர்ச்சனா நன்றாக தன்னை பொருத்திக் கொண்டாள். தான் இடும் வேலைகளை பிசிரில்லாம் செய்து முடிக்கும் அவளின் நேர்த்தி, கடமை உணர்வு, வளையாத தோற்றம், பிசிரற்ற பேச்சு என அனைத்தும் அஞ்சலிக்கு அர்ச்சனாவின் மீது நல்லெண்ணத்தை வளர்த்திருந்தது.

 

அர்ச்சனாவும் தன் கடமையில் கண்ணாக இருந்தாள். ஆனாலும் இவளுக்கு இருக்கும் எத்தனையோ பிரச்சனைகளில் புது‌ பிரச்சனையாக உருவெடுத்து இருந்தான் அரவிந்த்.

 

பெரிதாக எந்த தொந்தரவும் செய்யவில்லை ஆயினும் அர்ச்சனாவை  கடக்கும் தருணங்களில் ரசனையான சற்று ஆர்வமான பார்வையை அவள் மீது வீசிவிட்டு நகர்ந்தான்.

 

அவளோடு பேச கிடைக்கும் வாய்ப்புகளிலும், முன்னுக்கு பின்னாய் எதையாவது உளறி, அவளை குழப்பிவிட்டு குதூகளித்தான்.

 

“தினமும் சேரி கட்டி வரீயே உனக்கு கஷ்டமா இல்லையா அர்ச்சனா?” தேநீர் இடைவேளையில் அனாவசியமாக கேள்வி கேட்ட அரவிந்தை, அர்ச்சனா கடுப்பாக முறைத்தாள்.

 

“அது என்னோட இஷ்டம் உங்களுக்கு என்ன கஷ்டம் சார்?” சுற்றி ஆட்கள் இருக்க, அதிகமாக கடிந்து கொள்ள முடியவில்லை அவளால்.

 

“இல்ல. நம்ம ஆஃபிஸ்ல சேரி தான் கட்டி வருனும்னு எந்த ரூல்ஸும் இல்லையே. நீ வேற எப்பவும் சேரியிலேயே வரீயா அதான் ஒரு கிளாரிஃபிகேஷனுக்கு கேட்டேன்” அவன் அலட்டாமல் பேச்சு வளர்க்க,

 

“என் அம்மாவுக்கு நான் சேலை கட்டினா தான் பிடிக்கும். அதால தான் சேரில வரேன். போதுமா உங்களுக்கு கிளாரிஃபிகேஷன் கிடைச்சுதா?” என்று பற்களை நறநறத்தப்படி சொன்னவள், பாதி பருகி இருந்த தேநீர் காகித கப்பை அப்படியே குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு சென்று விட்டாள்.

 

அவள் பின்னோடு விரைந்தவன், “ஏன் இவ்ளோ கோபம்? நான் சாதாரணமா தான கேட்டேன்” அவன் வினவ,

 

“என் டிரஸ் பத்தி நீங்க பேசறது எனக்கு பிடிக்கல”

 

“அதான் ஏன்? இங்க எல்லா லேடிஸ் கூடவும் நான் இப்படித்தான் பேசுறேன். அவங்க யாருக்கும் தப்பா தெரியல, ஏன் உனக்கு மட்டும் தப்பா தெரியுது?” அரவிந்த் கேட்ட விதத்தில் அர்ச்சனா தேங்கி நின்றாள்.

 

“உங்க லைஃப் பார்னர் பத்தி பேசும்போது என் முகம் உங்க மனசுல வந்து போச்சுனு சொன்னீங்க? இப்ப நீங்க எது பேசினாலும் எனக்கு தப்பா தான் தோனுது” என்றாள்.

 

“ஓய், ஒரு செகண்ட் உன் ஃபேஸ் தோனுச்சுன்னு தான் சொன்னேன். உன்ன லவ் பண்றேன்னு சொல்லலியே” அரவிந்த் தோள் குலுக்க,

 

“முதல்ல இப்படித்தான் ஆரம்பிப்பீங்க, அப்புறம் லவ்ன்னு வந்து நிப்பீங்க, தேவையா எனக்கு?”

 

“நீ இவ்ளோ கான்பிடன்டா சொல்றதை பார்த்தா, நான் உன்கிட்ட லவ் சொல்லியே ஆகனும் போல இருக்கே” அவன் சொன்ன பாவனையில் இவளே சற்று குழம்பி விழிக்க, அரவிந்த் இதழ் மடித்த சிரிப்புடன் அவளை கடந்து சென்றான்.

 

ஏனோ அர்ச்சனாவுடன் தான் செலவழிக்கும் சிறு தருணம் கூட அவனுக்குள் இனம்புரியாத மகிழ்ச்சியை தந்தது. முன்னைப்போல தாய், தந்தையின் எண்ணம் வந்து அவன் மனம் சிதையும் வேளையிலும் அர்ச்சனாவுடனான சின்ன சின்ன நினைவுகளே அவனை‌ மீட்டெடுக்க போதுமானதாக இருந்தது இப்போதெல்லாம்.

 

தனக்குள் ஏற்படும் இந்த மாற்றத்திற்கான காரணத்திற்கு ‘காதல்’ என்ற பெயரை அவன் இன்னும் சூட்டவில்லை. 

 

‘நான் அர்ச்சனா விசயத்தில் அத்தனை தீவிரமாக இருக்கிறேனா?’ என்பதை அவனே கண்டறிய வேண்டியதாக இருந்தது.

 

‘உனக்கு தோனும் டா… இவ தான் எனக்கு எல்லாம்னு அந்த ஃபீல் ஒரேயொரு பொண்ணு மேல தான் வரும். அப்ப அவளுக்காக என்ன செஞ்சாலும் சரின்னு தோனும்… என்ன செஞ்சாலும்…’ அன்று வெற்றிமாறன் சொன்னதை நினைத்துக் கொண்டவன், ‘ஒருவேளை சனாவுக்காக எதையும் செய்ய என் மனசில உந்துதல் வந்தா மேல பார்க்கலாம்’ என்று எண்ணிக் கொண்டான்.

 

காதலி என்று முழுமையாக ஏற்றுக்கொள்ளும் முன்னே அவளுக்கான செல்ல பெயரை மறவாமல் சூட்டி இருந்தான்.

 

முந்தைய அரவிந்தாக இருந்தால் நிச்சயம் தன் மனதின் சிறு சலனத்தையும் அஞ்சலியிடம் கொட்டி கவிழ்த்து இருப்பான். ஆனால் அன்று காதம்பரி வந்து பேசி சென்றதற்கு பிறகு, அவளிடம் இருந்து எட்டவே நிற்க பழகிக் கொண்டான். வழக்கமான அலைப்பேசி உரையாடலையும் மேலோட்டமான பேச்சோடு முடித்துக்‌‌ கொள்வான்.

 

அஞ்சலிக்கு இதில் பெரிதாக வித்தியாசம் தோன்றாததால் இவளும்‌ காரணம் கேட்கவில்லை. அவளுக்கும் ஏதும் தெரிந்திருக்கவில்லை.

 

****

 

ஏனோ காலையில் இருந்து ஓயாத வேலைகளுக்கு இடையேயும் அவனுள் ஒருவித வெறுமை பரவியது. இன்று அர்ச்சனா வேலைக்கு வந்திருக்கவில்லை. அதுதான் காரணமா? அவனுக்கு புரியவில்லை. இன்றைய பகற்பொழுதை நெட்டி தள்ளியவன், ஏதோ தோன்ற அங்கிருந்த பிரசித்திபெற்ற அம்மன் கோயிலுக்கு வந்திருந்தான்.

 

தவறாமல் வெள்ளிக்கிழமைகளில் சித்தாரா இக்கோவிலுக்கு வரும் வழக்கத்தை கொண்டிருந்தார். அதிகமாக அம்மாவுடன் வருவது அரவிந்தாக தான் இருக்கும். அந்த பழக்கத்தில் தான் இன்றும் சந்நிதி உள்ளே வந்தான்.

 

அம்மாவுடன் வந்த நினைவுகள் ஒருபுறம் தேனாய் இனிக்க, மறுபுறம் அவர் இல்லாத நிதர்சனம் தீயாய் தகிக்க செய்தது அவனை.

 

கர்பகிரகம் வந்து நின்றவன் கைக்கூப்பி மனதின் அமைதியை வேண்டினான்.‌ இப்போதெல்லாம் அவனின் உச்சபட்ச வேண்டுதல் இதுதான். அவன் கண்விழித்து திரும்ப, எதிரே அர்ச்சனாவின் தரிசனம்!

 

தீபாராதனையை கண்களில் ஒற்றி, குங்குமத்தை மோதிர விரலால் தொட்டு சிறு கீற்றாக நெற்றியில் இட்டுக் கொண்டிருந்தாள்.

 

இக்காட்சி, அவன் கண்கள் வழி நினைவடுக்கில் முத்திரை இட்டு சேகரித்து கொண்டது அவனின் ஆழ் மனது.

 

இன்றும் சேலையில் தான் வந்திருந்தாள். பிளைன் எலுமிச்சை வண்ண சேலை. அவளை தனித்து காட்டியது அவனுக்கு. ஆனால் அவள் முகம்?

 

மாநிற மேனியளின் பொன் முகம் சிவப்பேறி கலங்கி தெரிந்தது. அவள் இவனை கவனிக்கவில்லை திரும்பி நடந்தாள்.

 

அரவிந்த், அவளிடம் பேசலாமா? வேண்டாமா? என்று சற்று தயங்கினான்.

 

முன்னே நடந்தவளின் கைப்பேசி இசைக்க, சற்று ஒதுங்கி நின்று எடுத்து பேசினாள்.

 

“சொல்லு அஜ்ஜு” அவள் குரல் கரகரப்பாக கேட்டது.

 

“இதுக்காக தான் க்கா சொன்னேன், இன்னைக்கு நான் உங்கூட அங்க வந்து இருக்கேன்னு” அவன் குரலில் ஆற்றாமை வெளிப்பட்டது.

 

“இல்லடா, உன்னோட எக்ஸாம் விட்டுட்டு எல்லாம் வர தேவையில்ல”

 

“அப்ப நீ தைரியமா இருக்கனும். நீ அங்க அழுதுட்டு இருந்தா என்னால எப்படி ஒழுங்கா எக்ஸாம் அட்டர்ன் பண்ண முடியும்?” தம்பியின் கேள்வியில்,

 

“இல்ல டா, நான் அழல, இப்ப கூட கோயிலுக்கு தான் வந்திருக்கேன். உன் பேர்லயும், என் பேர்லையும் தான் அர்ச்சனை பண்ணேன். நீ கவலைபடாம இரு. பை” என்று அவனுக்கு சமாதானம் சொல்லி வைத்துவிட்டு பிரகாரம் நோக்கி நடந்தாள்.

 

“நானும் கூட வரலாமா?” தன் பின்னிருந்து ஒலித்த குரலில் அவள் திரும்ப, அங்கே அரவிந்த் நின்றிருந்தான்.

 

அவனை பார்த்தவள், ஏதும் பேசாமல் முன்னே திரும்பி தொடர்ந்து நடக்க,

வேக எட்டுக்களோடு அவனும் இவள் உடன் சேர்ந்து நடந்தான். 

 

அவள் கேள்வியாக பார்க்க, “மௌனம் சம்மதம்னு சொல்லுவாங்க, அதான்” அவன் தேடிப்பிடித்து காரணத்தை உளற,

 

“பெண்ணோட மௌனத்தை வெறும் சம்மதம்ற ஒத்த வார்த்தையில அடச்சிட முடியாது” என்றாள் அவளும் அழுத்தமாக.

 

அவன் மேலும் பேச வர, “நான் சாமி கும்பிடனும், என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்று இறைவியின் திருநாமத்தை முனுமுனுத்தபடி பிரகாரம் சுற்றி வரலானாள். மூன்று சுற்று முடிந்து நின்று வணங்கி விட்டு ஒருபுறமாக பார்த்து அமர்ந்து கொண்டாள்.

 

அரவிந்தும் எந்த தொந்தரவும் செய்யாமல் அவளுடன் சுற்றி வந்தவன், சற்று இடைவெளி விட்டு அவளெதிரே அமர்ந்தான். 

 

“என் சித்தும்மா கூட உன்னமாதிரி தான், காயத்ரி மந்திரத்தை விடாம முனுமுனுத்திட்டு பிரகாரம் சுத்தி வருவாங்க” என்றான் அம்மாவின் நினைவோடு.

 

“ஓ… இன்னைக்கு உங்க அம்மா வரலையா?” ஏதோ கேட்க வேண்டும் என்று அர்ச்சனா கேட்க, அரவிந்த் இல்லையென்று தலையசைத்தான்.

அவன் முகம் கலக்கத்தை பிரதிபலித்தது.

 

“சித்தும்மாவுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம், அதான் என்னை விட்டு அவங்க கிட்டையே போயிட்டாங்க” என்று சாதாரணம் போல சொல்ல முயன்றான். முடியவில்லை.

 

அர்ச்சனாவிற்கு அவன் நிலை புரிவதாய்.

 

அவள் தயங்கி, “உங்க அப்பா?” என்று விசாரிக்க,

 

“அப்பாவுக்கு சித்தும்மான்னா ரொம்ப இஷ்டம். அதான் அவரும்… என்னை விட்டு அவங்க கூட போயிட்டாங்க” என்று சின்னதாக சிரிக்க முயன்றான். முடியவில்லை.

 

மாறாக அர்ச்சனாவின் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் இமை தாண்டி கன்னங்களில் வழிந்தது. 

 

அதைப்பார்த்தவன், “ஹேய் என்னாச்சு சனா?” பதறி கேட்க,

 

“அம்மா… இன்னைக்கு அம்மா எங்களைவிட்டு போன நாள்…” அவள் உதடுகள் பிதுங்கி அழுகைக்கு தயாரானது.

 

இவனுக்கு அய்யோ என்றானது. ‘உன் சுயபுராணத்தை இங்க சொல்லனும்னு அவசியமா டா? அவ அழறா பாரு ஏதாவது சமாதானம் சொல்லி தொலைடா’ அவன் மனசாட்சி இவனை கடித்து குதறியது.

 

“சனா அழாத ப்ளீஸ்… இது கோயில்… யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க…” என்றான்.

 

காலையில் அம்மாவிற்கு திதி கொடுத்துவிட்டு அறைக்கு திரும்பியதில் இருந்து அழுது அழுது கரைந்தவள், முயன்று தன்னை மீட்டு கொள்ள தான் கோயில் நாடி வந்திருந்தாள். எத்தனை அழுதாலும் சோகம் தீருவதாக இல்லை.

 

முகத்தை வேறுபக்கம் திருப்பி, உதட்டை கடித்து அழுகையை நிறுத்த முயன்றாள்.

 

அங்கிருந்தவர்கள் பார்வை அவள்மீது நிலைத்து திரும்புவதை கவனித்தவன், “முதல்ல இங்கிருந்து போகலாம் வா” என்று அவளின் அர்ச்சனை‌ கூடையை ஒரு கையில் எடுத்து கொண்டு, அவள் கையை மறுகையில் பிடித்து அழைத்து வெளியே நடந்தான்.

 

அவளை தன் பைக் அருகே நிறுத்திவிட்டு, நகர்ந்து போய் பழச்சாறு வாங்கிவந்து அவளிடம் நீட்டினான்.

 

“முதல்ல இதை குடி, காலையில இருந்து எதுவும் சாப்பிடாம இருக்கல்ல” என்று அவள் கைகளில் திணித்தான்.

 

மறுக்க முடியாமல் மெதுமெதுவாக பருகினாள். அவளின் முகமும் சற்று தெளிந்தாற் போல தெரிந்தது.

 

தான் அன்று கலங்கி அழுத போது மடிதாங்கிய அஞ்சலியின் நினைவு வந்து அரவிந்த் மனதை இப்போதும் நிறைய செய்வதாய்.

 

“தேங்க்ஸ்” என்றாள் அவனிடம். அர்ச்சனாவின் நன்றி குரல் இவனை கலைத்தது.

 

“உன்ன தைரியமான பொண்ணுனு நினச்சிருந்தேன். நானே ஒரு அழுமூஞ்சி, நீயும் எனக்கேத்த அழுமூஞ்சி தான் போல” அரவிந்த் கேலி போல சொல்ல, அவனை முறைக்க முயன்றாள். முடியவில்லை. பார்வையை வேறுபுறம் திருப்பி கொண்டாள்.

 

“சரி எங்க போகனும் சொல்லு, நான் ட்ராப் பண்றேன்” அரவிந்த் கேளாமல் உரிமை எடுத்துக் கொள்ள விழைய,

 

“பரவால்ல, தனியா வந்த மாதிரி எனக்கு தனியா போகவும் தெரியும்” என்று சுதாரித்து பேசினாள்.

 

“ஓஹோ தாராளமா போ, எனக்கு வேலை மிச்சம்” என்று அலட்சிய பாவனை காட்டி அவன் ஒதுங்கி நிற்க, இப்போது நன்றாகவே அவனை முறைத்து வைத்தாள்.

 

“இதென்னடா வம்பா போச்சு? என்கூடவும் வர மாட்டேன்கிற, தனியா போக ஒதிங்கி நின்னாலும் முறைக்கிற! இப்ப நான் என்ன தான் செய்ய?” அரவிந்த் நொந்தபடி கேட்க, அர்ச்சனா முகத்தில் சிரிப்பு இழையோடியது.

 

இதையே சாக்கென்று கொண்டு அரவிந்த் பைக்கை உயிர்பிக்க, சற்று தயங்கி, அவன் பின்னோடு பயணப்பட்டாள்.

 

‘ஏன் இப்படி எந்த மறுப்பும் சொல்லாம இவன் வண்டியில ஏறிட்டேன்?’ 

 

‘இது சரியா? தப்பா?’

 

‘இவனை பத்தி நமக்கு எதுவுமே தெரியாது வேற’

 

அர்ச்சனாவின் மனம் பலவாறு எண்ணி தடதடத்தது.  

 

எப்போதும் இவளுக்கு துணை இவள் தம்பி, அவனுக்கு துணை இவள். 

இதுவரை இதுபோல வேற்று ஆணுடன் தனித்து வந்ததில்லை. அதுவேறு மனதை பிசறியது.  

 

அரவிந்த் தவறானவனாக தோன்றவில்லை எனினும் ஏதோ ஒருமுனையில் தான் தடுமாறுவது போன்ற தாக்கம் அவளிடம்!

 

வண்டி நின்றிட நிமிர்ந்தாள். அதுவொரு உணவகம்.

 

“நீங்க போய் சாப்பிடுங்க… எனக்கு இன்னைக்கு சாப்பாடு இறங்காது. தப்பா எடுத்துக்காதீங்க. நான் ஆட்டோ பிடிச்சு போயிக்கிறேன்” என்று அவனிடம் இருந்து விலகி செல்ல முயல,

 

அரவிந்த், “இந்த உலகத்திலேயே கொடுமையான விசயம் என்னனு தெரியுமா?” சம்பந்தம் இல்லாமல் கேட்க, இவள் விழித்தாள்.

 

“நம்ம கையாலேயே சமைச்சு அந்த கண்றாவிய நாமே சம்பிடறது தான்” என்று நொந்தபடி சொல்ல,

 

அர்ச்சனாவின் முகத்தில் புன்னகையின் முகவரி.

 

“நீ ஒரு பத்து நிமிசம் கம்பெனி கொடுத்தா,‌ அந்த கொடுமையில இருந்து இந்த ஒருவேளை நான் தப்பிச்சுப்பேன்” அவன் கண்கள் சுருக்கி கெஞ்சலாக கேட்க, இவள் இன்னும் தயங்கி நின்றாள்.

 

“லைட்டா டிபன் மட்டும் தான், வா சனா பளீஸ்” எப்படியும் கொஞ்சமாவது அவளை உண்ண வைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் இவனுக்கு.

 

அவள் அரை மனதாக தலையசைத்து அவனுடன் நடந்தாள். சற்று ஓரமாக இருந்த மேசையில் இருவரும் அமர்ந்தனர். மிதமான உணவு வகைகளை அரவிந்த் சொல்லிவிட்டு அவளிடம் பேச ஆரம்பித்தான்.

 

எல்லாமே பொருளற்ற வேடிக்கை பேச்சுக்கள்.

 

இவளும் பொருளை ஆராய முனையவில்லை.

 

அவன் வளவளப்பு இவளுக்கு சலிக்கவும் இல்லை.

 

ஏற்ற இறக்கங்களோடு அது இதுவென பேசினான். தன் வெளிநாட்டு அனுபவத்தை நகைச்சுவை கலந்து பேசினான். நடுநடுவே வெட்டி வசனங்களை கோர்த்து தோரணை காட்டி அவளை வாய் விரிய சிரிக்கவும் வைத்தான்.

 

பத்து நிமிட கோரிக்கை, அரைமணிநேரம் தாண்டியும் நீண்டது. உணவு தட்டு காலியாகி இருக்க, ஐஸ்கிரீம் கிண்ணங்கள் சுவையாக உருகி வழுக்கின அவர்கள் நாவினில்.

 

அம்மாவின் நினைவுகளில் அமிழ்ந்து கரைந்திருந்தவளை லாவகமாக மீட்டு எடுத்து இருந்தான் அரவிந்த். 

 

தன் அம்மா, அப்பா நினைவுகளில் கலங்கி கரையேறி இருந்த அனுபவங்கள் அவனுக்கு ஏதுவாகின.

 

வானம் நன்றாகவே இருள் பூசிக் கொள்ள, இருவரின் பயணமும் மீண்டும் தொடங்கியது.

 

அர்ச்சனா வழி சொல்ல, அவள் தங்கியிருந்த வீட்டின் முன் இறக்கி விட்டான். 

 

“தேங்க்ஸ்” என்றாள் அவனிடம்.

 

“எதுக்கு?” அவளோடான பேச்சை முடித்துக் கொள்ள மனமின்றி நீட்ட,

 

“ஃபார் எவிரிதிங்” என்றவள் மென்னகை தந்து, “இந்த நாள்ல கூட என்னால சிரிக்க முடியும்னு எனக்கு தெரிய வச்சதுக்காக” என்றாள்.

 

“நம்ம மீறின சில விசயங்கள், நமக்கு கஷ்டமா இருந்தாலும் அதை ஏத்துக்கிட்டு கடக்க முயற்சிக்கனும். இதை நான் வெறும் ஆறுதலுக்காக மட்டும் சொல்லல, நான் பட்டு தெளிஞ்சு சொல்றேன்” அரவிந்த் சொல்ல, அவள் ஆமோதித்து தலையசைத்து கொண்டாள்.

 

“ஓகே சனா, நாளைக்கு மீட் பண்ணலாம் பை” அவன் விடைப்பேற,

 

அர்ச்சனா, “நீங்க என்னை முழு பேர் சொல்லியே கூப்பிடுங்க, என் பேரை வெட்டி ஒட்டி கூப்பிடறது எனக்கு பிடிக்கல” தன் மறுப்பை தெரிவிக்க, 

 

அரவிந்த் புருவம் சுருங்க அவள் முகத்தில் பார்வை பதித்து, சின்ன தலையசைப்புடன் தன் இரும்பு குதிரையின் வேகம் கூட்டி விரைந்து விட்டான்.

 

****

 

படுக்கையில் விழுந்த பின்னும் அவள் உள்ளமெங்கும் அவன் யோசனை!

 

அவளுள்ளே ஏதேதோ தடம் மாறும் தடங்கள்!

 

‘ஒரு நாள்ல அப்படி என்னாச்சு எனக்கு? நான் என்ன இத்தனை பலவீனமானவளா?’ என்று தன்னை உலுக்கிக் கொண்டாள் அர்ச்சனா.

 

தன் தம்பியிடம் பேச விழைந்தாள்.

 

வழக்கமான பேச்சுக்களில் ஆரம்பிக்க, இன்று அரவிந்தை சந்தித்தது பற்றி ஆரம்பித்து, அவர்களுள் நடந்த அனைத்தையும் அவனிடம் ஒப்புவித்து தான் ஓய்ந்தாள்.

 

இறுதியில் தம்பியிடம் இருந்து ஒரு கேள்வி தான் வந்தது.

 

“உனக்கு அரவிந்தை பிடிச்சு இருக்கா க்கா?” சின்னவன் யோசனையாக கேட்க,

 

“தெரியலையே அஜ்ஜூ” பெரியவள் சஞ்சலமாக பதில் தந்தாள்.

 

“சரி க்கா, தெரியும் போது என்கிட்ட மறக்காம சொல்லிடு… இப்ப குழப்பிக்காம தூங்கு. குட் நைட்” என்க.

 

“குட் நைட் டா” என்று கைப்பேசி வைத்தவளுக்கு ஏனோ காரணமே தெரியாமல் மனம் குறுகுறுத்தது.

 

****

 

நிஜம் தேடி நகரும்…