நீயில்லை நிஜமில்லை 7(1)

நீயில்லை நிஜமில்லை! 7(1)

 

மொட்டுகளின் காதில் எல்லாம்

உன் பெயரை தினம் ஓதுகின்றேன்!

என் தோட்டத்து மலர்கள் 

உனக்காக மட்டும் மலரட்டும் என்று!

 

ரெக்கை கட்டி பறக்க வேண்டும் போலிருந்தது அரவிந்திற்கு.

 

அவன் இளமையின் தேடல் இன்றோடு முடிந்திருந்தது அவளிடம்!

 

அர்ச்சனா மீது தனக்கேற்பட்ட உணர்வு, வெறும் ஈர்ப்பா, இல்லை அதற்கும் மேலான ஒன்றா என்ற குழப்பத்திற்கு  அவளின் கண்ணீரில் பதில் கிடைக்கப் பெற்றான்.

 

அவளின் கலங்கிய முகமும் கண்ணீரும் இவனை வெகுவாக தாக்க, எப்படியும் அவள் கண்ணீரை போக்க வேண்டும் என்று இவன் உள்ளம் துடிதுடித்துவிட்டது. 

 

அதன்பிறகு எதைப்பற்றியும் யோசிக்க தோன்றவில்லை அவனுக்கு. 

 

அவளிடம் பேசினான்; அவளை பேச  வைத்தான்; சாப்பிட வைத்தான்; சிரிக்கவும் வைத்து விட்டான். 

 

இந்த ஒருநாள் அர்ச்சனாவின் மனதிலும் அரவிந்த் பற்றிய நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தது.

 

மறுநாள் அலுவலகத்திற்கு வந்த அரவிந்திடம், அர்ச்சனா விரிந்த புன்னகையோடு காலை வணக்கம் சொல்ல,

 

அவள் சிந்திய ‘குட் மார்னிங்’ வார்த்தைகளுக்குள் இவன் சிக்கிக்கொள்ள விழைந்தான்.

 

“வெரி ஹேப்பி மார்னிங் சனா” என்று நகர்ந்தான் வேலையின் அவசரம் பொருட்டு.

 

மதியமும் இவனுக்காக உணவு மேசையில் காத்திருந்த அர்ச்சனாவை கவனித்து, வேகமாக வந்தவன், “ப்ச் எனக்கு லேட் ஆயிடுச்சு சனா, நீ சாப்பிட வேண்டியதுதானே, எதுக்கு இவ்வளவு நேரம் வெயிட் பண்ணனும்?” என்றான் அரவிந்த் அக்கறையாக.

 

“பரவால்ல..‌. ஒருத்தருக்காக வெயிட் பண்ணி சாப்பிடறதும் புதுசா இருக்கு. நல்லா தான் இருக்கு” என்றாள் மென்னகையுடன்.

 

“ஆஹான் ஏன் இதுவரைக்கும் நீ யாருக்காகவும் சாப்பிட வெயிட் செஞ்சதில்லையா என்ன?” அரவிந்த் சாப்பிட்டு கொண்டே கேள்வி வைக்க,

 

“ம்ஹும் இல்ல… நானும் தம்பியும் ஒரே ஸ்கூல், ஒன்னா தான் சாப்பிடுவோம். வீட்டுலயும் அம்மாவோட சேர்ந்து தான் சாப்பிடுவோம், காலேஜ்ல… நான் அதிகமா சாப்பிட்டதில்ல” அவளும் உணவருந்திய படி பதில் தந்து கொண்டிருந்தாள்.

 

“என்ன? ஏன்?” அரவிந்த் புருவம் உயர்த்தி கேட்க,

 

“அப்ப இருந்தே பார்ட் டைம்ல வேலை பார்த்துட்டு தான் படிச்சேன்… அதால சமைக்க நேரமிருக்காது. காலைல, அப்புறம் வீட்டுக்கு போய் சாப்பிடுவேன். லன்ச் பிரேக்ல லைப்ரரில டைம் ஸ்பென்ட் பண்ணுவேன் யூஸ்புல்லா இருக்கும்” அர்ச்சனா வருத்தமாக எல்லாம் சொல்லவில்லை சாதாரணமாகவே சொல்ல, இவனும் அதை சாதாரணம் போல எடுத்துக் கொண்டான்.

 

“ரியலி யூ ஆர் கிரேட் சனா” அவன் வாழ்த்திட,

 

“அப்படி ஒன்னும் பெருசா இல்ல, இதுல என்ன கொடுமைன்னா, என் தம்பியும் என்னை மாதிரியே பார்ட் டைம் வேலை பார்த்து தான் படிப்பேன்னு வீம்பு செஞ்சிட்டு இருக்கான். அதான் கஷ்டமா இருக்கு” என்றாள் குரல் இறங்க,

 

“சரிதான், உன் தம்பி பேரென்ன? என்ன செய்றான்?” அரவிந்த் கேள்விகளை அடுக்க,

 

“அர்ஜுன். எனக்கு எப்பவுமே செல்ல அஜ்ஜு. காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறான். லா படிக்கனும்னு ஆசை அவனுக்கு. சரிக்கு சரியா வாயடிப்பான், நல்லா படிப்பான், என்மேல ரொம்ப கேர் எடுத்துக்குவான்…” அர்ச்சனா உற்சாகமாக தம்பியைப் பற்றி சொல்லி சென்றாள்.

 

“இவ்வளவு ஸ்பெஷலான பர்சனை நானும் மீட் பண்ணியாகனுமே” அரவிந்த் இழுக்க,

 

இவள் முகம் சுருக்கி, “இப்ப முடியாதே, அவன் நியூ டெல்லில படிக்கிறான்… நானும் இங்க எங்காவது கிட்ட காலேஜ்ல அப்ளே பண்ண சொன்னேன், அந்த கிறுக்கன் கேக்கவே இல்ல, அவனோட மார்க்கு அங்க ஈஸியா சீட் கிடைச்சது, என்னை தாஜா செஞ்சுட்டு போயிட்டான்” என்றாள் ஒருபுறம் கவலையும் மறுபுறம் பெருமையுமாக.

 

அவள் முகம் காட்டும் வெவ்வேறு பாவங்களை ரகசியமாக ரசித்தவன், “என்னைபத்தி உன் அஜ்ஜு கிட்ட சொல்லிட்டியா?” என்று கேட்டான். அவள் தன்னை எந்த இடத்தில் வைத்திருக்கிறாள் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் அவனுக்கு.

 

“ம்ம் சொல்லிட்டேனே, முன்ன நீங்க என்னை வெறிச்சு வெறிச்சு பார்த்ததையும் சொன்னேன், நேத்து எனக்காக நீங்க பார்த்து பார்த்து செஞ்ச எல்லாத்தையுமே சொல்லிட்டேன்” என்றாள்.

 

“அவ்வளவு தானா?” அரவிந்த் வேறேதோ குறைவது போல கேட்க,

 

“ம்ம் இன்னும் இருக்கே” என்றவள், ஆர்வத்தில் மின்னிய அவன் கண்களைப் பார்த்து, “எல்லாத்தையும் நான் சொன்னதுக்கு அப்புறம்… ‘உனக்கு அரவிந்தை பிடிச்சு இருக்கானு?’ அஜ்ஜு கேட்டானா?” என்று நிறுத்தினாள்.

 

அவள் என்ன பதில் தந்திருப்பாள் என்று இவன் இதயம் வேலை நிறுத்தம் செய்ய,

அரவிந்தின் தவிப்பை உள்ளுக்குள் ரசித்தபடி, அவள் வேண்டுமென்றே பதில் தர தாமதித்தாள்.

 

“நீ என்ன பதில் சொன்ன? சீக்கிரம் சொல்லு சனா?” அவன் அவசரப்படுத்த, சிரித்து கொண்டவள், “தெரியலன்னு சொன்னேன்” என்றாள்.

 

“ஓஹ்” இவனுக்கு புஸ்ஸென்று ஆனது.

 

“அதுக்கு அஜ்ஜு, தெரிஞ்சப்புறம் மறக்காம சொல்ல சொன்னான்” என்றாள் அடுத்ததாய்.

 

“சீக்கிரம் தெரிஞ்சிகிட்டு என்கிட்டயும் மறைக்காம சொல்லிடு சனா…” அரவிந்த் குரல் மிக மிருதுவாக அவளை மோதியது.

 

அவன் முரட்டு ஆண்மையின் மென்மை இவளின் பெண்மைக்குள் ஏதேதோ மாற்றங்களை விதைப்பதாய்.

 

****

 

மாலை, அர்ச்சனா கிளம்பும் நேரம், அரவிந்த் அடித்து பிடித்து ஓடி வந்து, தன் பைக்கோடு அவள்முன் நின்றான்.

 

“இன்னைக்கும் நானே உன்ன டிராப் பண்ணவா சனா?” என்று. 

 

அவனை சில நொடிகள் விழி எடுக்காமல் பார்த்தவள், “எனக்கு நீங்க ட்ரைவர் டியூட்டி பார்த்து தான் ஆகனுமா? இப்பவே நல்லா யோசிச்சிக்கங்க” என்று கேட்டாள் ஒற்றை புருவம் உயர்த்தி.

 

அவன் பளீரென்ற சிரிப்புடன், “லைஃப் லாங்க் உனக்கு மட்டுமே நான் செக்கியூரிட்டி டியூட்டி பார்க்கனும்னாலும் எனக்கு டபுள் ஓகே” அவன் சொன்ன தோரணையில் இவள் வாய்விட்டு சிரித்து விட,

 

அப்போது பணி முடித்து செல்பவர்கள் அனைவரின் பார்வையும் இவளிடம் திரும்பியது. மேலும் அங்கே நிற்க முடியாமல் இவன் வண்டியில் தொற்றிக் கொண்டாள். 

 

இரட்டிப்பு குதூகலத்துடன் அந்த புது காதலர்களை சுமந்தபடி, அவன் இரும்பு குதிரை வேகமடுத்து பாய்ந்தது.

 

எதிர் வந்த நாட்களும் காதலர்களுக்கு வண்ணமையமாக புதுவித பரவசங்களை ஏந்தி வந்தன.

 

இந்த காதலில் மட்டும் என்னதான் இருக்கிறதோ?

தனை கொண்ட இரு உள்ளங்களை தலைகீழாய் மாற்றி சுழற்றி வைக்கிறது!

அவர்களை அவர்களுக்கே புத்தம் புதிதாய் பரிசளித்து வேடிக்கை காட்டுகிறது!

 

அவர்களின் பேச்சு, வீடு சென்ற பிறகும் அலைப்பேசியில் தொடர ஆரம்பித்து, முகப்புத்தக முகவரி பகிர்ந்து, வாட்ஸ் ஆப்பில் இரவும் பகலுமாக பொருளற்ற குறுஞ்செய்திகள் சிறகின்றி பறந்தன.

 

இதுவரை இல்லாத அளவு வாழ்வின் மீது பிடிமானம் தோன்றியது அரவிந்திற்கு. அர்ச்சனாவுடன் செலவழிக்கும் ஒவ்வொரு நொடியும் சுவாரஸ்யம் கூட்டியது.

 

அவள் இல்லாமல் இத்தனை வருடங்கள் தனித்து வாழ்ந்தோம் என்பதை ஆச்சர்யமாக எண்ணி சிரித்துக் கொண்டான் அவன்.

 

வறுமையும் ஏமாற்றங்களும் இழப்புக்களும் மட்டுமே கடந்து வந்த அவளின் அர்த்தமில்லாத வாழ்க்கையின் முற்றும் முதல் அர்த்தமாக மாறி இருந்தான் அரவிந்த்.

 

அவனின் இதமான பார்வையும் இசைவான வார்த்தைகளும் ஏன், உரிமையான சண்டைகள் கூட அர்ச்சனாவின் கருப்பு வெள்ளை வாழ்க்கையில் வானவில்லின் வண்ணக்கலவையை இறைத்து போவதாய்.

 

அவளுக்குள் எப்போதும் அவன் நினைவே! அவனுக்குள் எப்போதும் அவள் நினைவே! இதற்கு பெயர் தான் காதல் என்பதாக!

 

ஆனாலும் காதல் என்ற வார்த்தையை மட்டும் மறந்தும் கூட உச்சரிக்கவில்லை இருவரும்.  ஒருவருக்கொருவர் இன்னும் வெளிப்படையாக காதலை பகிர்ந்து கொள்ளவும் இல்லை.

 

அரவிந்தின் வாய் மொழியாக தன்மீதான காதலை கேட்க, அர்ச்சனா பார்த்திருக்க, அவனோ அப்படி ஒன்றை பற்றி எண்ணமில்லாவனாகவே வெட்டி பேச்சுக்களோடு நாட்களை நகர்த்தி வந்தான். அர்ஜுன் அவனிடம் பேசும் வரை.

 

அர்ஜுன் முதல் முறை அரவிந்திடம் பேசினான். அலைப்பேசி வழி தான்.

 

“ஹாய் மாம்ஸ்! நான் அர்ஜுன், ம்ம் நான் உங்கள மாம்ஸ்னு கூப்பிடலாமில்ல” என்று உற்சாகமாக தொடங்கியவன், சற்று நிறுத்தி உரிமைக்கு அனுமதி கேட்க,

 

“என்னை அப்படி கூப்பிடற உரிமை உனக்கு மட்டும் தான் இருக்கு அஜ்ஜு” அரவிந்த் சொல்லவும்,

 

“அச்சோ மாம்ஸ் நீங்களும் அக்கா மாதிரி அஜ்ஜுனு கூப்பிடாதீங்க ப்ளீஸ்” என்று அர்ஜுன் அலற,

 

“ஓ உன் அக்கா மட்டும் தான் உன்ன அஜ்ஜுனு கூப்பிடனுமா? என்ன?” அரவிந்த் சிரித்தபடி கேட்க,

 

“நீங்க வேற மாம்ஸ், ஏதோ நாய்குட்டிய கூப்பிடற மாதிரி இருக்கு. அப்படி கூப்பிடாதன்னு சொன்னா அவ கேக்குறதே இல்ல, வேணும்னே இப்படி‌ கூப்பிட்டு என் மானத்த வாங்குறா, நீங்களாவது சொல்லுங்க மாம்ஸ்” வருங்கால மாமனிடம் முதல் கோரிக்கை வைத்தான்.

 

“உன்னோட வாய்ஸ் ஸ்கூல் பையன் மாதிரி தான் இருக்கு அர்ஜுன். சோ சனா உன்ன அஜ்ஜுனு கூப்பிடறதுல தப்பே இல்ல” என்று காலை வாரியவன், “நீ சீக்கிரம் வளரு மச்சான் அப்ப தான், உன் அக்காவுக்கு நீ பெரியவனா தெரிவ” என்று அரவிந்த் கலாய்த்து சிரித்தான்.

 

“வளர்ந்துட்டா போச்சு மாம்ஸ்” என்ற அர்ஜுன் சற்று தயங்கி, “அக்காவ பத்தி உங்க கிட்ட பேசனும்னு தோணுச்சு” என்று நிறுத்த,

 

“சனா பத்தி நீ எவ்வளவு பேசினாலும் நான் சலிக்காம கேட்க தயார் தான் சொல்லு அர்ஜுன்” அரவிந்த் ஆர்வமாக கேட்க விழைந்தான்.

 

“அக்கா அவளை ரொம்ப தைரியமா காட்டிக்குவா, ஆனா அவ அத்தனை தைரியசாலி எல்லாம் இல்ல. எங்க அப்பாவுக்கு அக்கான்னா ரொம்ப செல்லம். நான் போறாமை படற அளவுக்கு அத்தனை செல்லம். 

 

சின்ன வயசுல செம வாலுத்தனம் பண்ணுவா, ரொம்ப பிடிவாதம் கூட.

அப்பா தவறினதுக்கு அப்புறம் அக்கா ரொம்ப இறுகி போயிட்டா…

 

அந்த வயசுல எனக்கு சரியா நினைவில்ல, கடங்காரங்க எங்ககிட்ட ரொம்ப மோசமா நடந்துக்க ஆரம்பிச்சாங்க, வேற வழியில்லாம,

எங்க வீடு, எங்க நிலம் எல்லாத்தையும் அவங்களுக்கு கொடுத்துட்டு, நாங்க சென்னை வந்துட்டோம்.

 

சென்னையில எங்க தாய்மாமா தான் எங்களுக்கு உதவியா இருந்தாரு. இப்போ அவரோட உதவி கூட எங்களுக்கு இல்ல. முன்ன அக்கா வேலை செஞ்ச இடத்துல ஒருத்தன் பிரச்சனை பண்ணான்னு நான் தான் அவனை அடிச்சுட்டேன். அதுக்கப்புறம் அங்க அக்கா தனியா இருக்கிறது சரியாபடல. அதான் சென்னையவிட்டு வந்துட்டோம்” அர்ஜுன் ஒவ்வொன்றாக சொல்லி வர,

 

“சென்னைய விட்டே வர அளவுக்கு என்ன பிரச்சனை?” அரவிந்த் கேட்க,

 

“நான் அடிச்சது அந்த கம்பெனி எம் டிய, பெரிய இடம் வேற, எனக்கு காலேஜ் சீட் கிடைச்சி இருந்தது…! அங்க அக்காவ தனியா விட மனசில்ல, அதான்” அர்ஜுன் காரணத்தை விளக்கினான்.

 

“இதையெல்லாம் உங்களுக்கு எதுக்கு இப்ப சொல்றேன்னா, இனி அக்கா உங்க பொறுப்பு மாமா, எங்க அவ தனியாவே இருந்திடுவாளோனு ரொம்ப பயந்துட்டு இருந்தேன்… உங்களை விரும்பறதை சொன்னதும் தான் எனக்கு நிம்மதி ஆச்சு”

 

“ஹேய்ய் சனா என்னை பிடிச்சிருக்கிறதா உன்கிட்ட சொன்னாளா?” அரவிந்த் துள்ளலாக கேட்க,

 

“அக்கா சொல்லாம எப்படி நான் உங்களை மாமான்னு கூப்பிட்டு இருப்பேன்?” பதிலாய் கேள்வியை திருப்ப,

 

“அப்ப ஏன் என்கிட்ட இன்னும் சொல்லல?” அரவிந்த் சுணங்கினான்.

 

“என் மக்கு மாம்ஸ், அக்காவா வந்து உங்களுக்கு ப்ரோபோஸ் பண்ணுவா, நீங்க எப்ப ப்ரோபோஸ் பண்ணுவீங்கன்னு தான் அங்க வெயிட்டிங். சீக்கிரம் பேசி முடிச்சு கல்யாண சேதி சொல்லுங்க. நான் ஓடி வரேன்” என்று அர்ஜுன் உற்சாகமாக சொல்லவும்,

 

“சொல்லிட்டல்ல இனி நான் பாத்துக்கிறேன் விடு மச்சான்” என்று சட்டை காலரை தூக்கி விட்டு மிதப்பு காட்டினான்.

 

தன் நேசத்திற்கு உரியவளிடம் இருந்து தனக்கான காதலை உணர்வது அவனை வானம் தாண்டி மிதக்க செய்தது.

 

வெற்றிமாறன், சித்தாரா நிழற்படத்தின் முன் வந்தவன், “எனக்கும் காதல் வந்துடுச்சு சித்தும்மா… நீங்க சொன்னது போலவே, இப்ப அர்ச்சனாவுக்காக என்ன வேணாலும் செய்யலாம்னு தோனுது டேட்… சீக்கிரம் சனாவ இங்க கூட்டிட்டு வர போறேன், உங்களுக்கும் ஹேப்பி தானே” என்று அரவிந்த் அவர்களிடம் உற்சாகமாக உரைத்தான்.

 

நிழற்பட சட்டத்தின் கண்ணாடி சிறைக்குள் அடைந்திருந்தவர்கள் தங்கள் மகனை சலனமின்றி பார்த்தபடி இருந்தனர்.

 

****

 

நிஜம் தேடி நகரும்…