நீயில்லை நிஜமில்லை 7(2)

நீயில்லை நிஜமில்லை 7(2)

 

உதிர்ந்த பூக்களின்

ஊமை வார்த்தைகள் நிஜமா?

விழுந்த சருகுகள் அதனை

மொழிப்பெயர்த்திடுமா?

 

அதிகாலை சுகமான உறக்கத்தில் ஆழ்ந்திருந்தவளின் மூக்கோடு மூக்கு உரசி, அவளின் வெண்பட்டு கன்னத்தையும் ஈரம் செய்ய,‌ “ச்சு ரூபி டோன்ட் டிஸ்டர்ப்” அஞ்சலி இமைகள் திறவாமல் முணுமுணுத்தாள்.

 

அதை சிறிதும் சட்டை செய்யாமல் மீண்டும் அவளின் மூக்கை உரசி, முகத்தை நக்கி எழுப்பியது அவளின் செல்ல நாய்க்குட்டி.  கோபமாக விழித்து எழுந்தவள், “ஏன் தொல்லை செய்யற ரூபி? உன்ன யாரு இவ்ளோ விரசா எழும்ப சொன்னதாம்?” என்றவள் போர்வையில் முகம் மூடி உறக்கம் தொடர முயல, அந்த நாய்க்குட்டி அவளின் போர்வையை வாயால் பற்றி இழுத்து குரைத்தது.

 

இவள்‌ சலித்து கொண்டே எழுந்து அமரவும், அந்த அறை ஜன்னல் திரையை பற்களால் கடித்து அந்த நாய்க்குட்டி விலக்கிட, செம்மை நிற சூரிய கதிர்கள் ஜன்னல் வழி  அவளறையில் விழுந்தது இதமாய்.

 

இயற்கையின் அதிஅற்புதமான காட்சியோடு அவளின் புத்தம்புது நாளும் அழகான விடியல் கொண்டது.

 

சோர்வாக ரூபியை கைகளில் ஏந்தி,  அவளறையின் பால்கனி மாடத்தில் வந்து நின்றாள்.

 

இருள் பிரியும் நீல‌ வானம், தூர சிவந்த பந்தாய் மேலெழும் காலை சூரியன், கீழே  அரண்மனை தோட்டத்தின் பச்சை புல்வெளி விரிப்பு என எல்லாமே வண்ணமயமாய். பேரழகாய்!

 

அவள் கவனத்தை அதிகம் ஈர்த்தவை, அவளின் மாடத்தின் அருகே நெடுசாண்டையாக வளர்ந்திருந்த மரமல்லி மரத்தில் இன்று முழுவதுமாக பூத்து செறிந்து இருந்த வெண் பூக்கள் கூட்டம்.

 

அதை பார்த்ததும் அஞ்சலி சிறு குழந்தையாக துள்ளியோடி, அருகே தெரிந்த ஒற்றை மரமல்லி மலரை எட்டி பறித்து, அதன் நீண்ட காம்பில் இதழ்களை குவித்து ஊதினாள்.

 

“ப்பீ… ப்பீ ப்பீ…”

 

அஞ்சலிக்கும் அந்த மரத்திற்கும் இடையே இருக்கும் நெருக்கங்கள் ஏராளம். ஒவ்வொரு வருடமும் அந்த மரம் பூக்கும் பருவத்திற்காக காத்திருப்பாள்.

 

மரமல்லி மலர் கூட்டத்தின் இதமான மணமும், அதன் காப்பை ஊதும் போது எழும் சத்தமும் அவளுக்கு மிகவும் பிடித்தவை. எனவே தான் அந்த மரத்தை  வெட்டவும் தீவிரமாக மறுத்து விட்டிருந்தாள்.

 

‘மௌவல் பூத்திருச்சுன்னு அரவிந்த் கிட்ட சொல்லனும்’ அஞ்சலி சிறுசிரிப்புடன் எண்ணிக் கொண்டாள். அவன்தான் முன்பு சொல்லி இருந்தான், சங்க தமிழில் மரமல்லி மலருக்கு ‘மௌவல்’ என்று பெயர் என்று.

 

“ஏனுங்க சின்னம்மணி கூப்பிட்டிங்களா?” என்று அவள் மலரூதும் சத்தம் கேட்டு, கீழிருந்து தோட்டக்காரர் குரல் கொடுக்க, தன் கையிலிருந்த மலரை மறைத்து கொண்டவள், “நேத்து மொட்டு விட்டுச்சே பன்னீர் ரோஜா பூத்திருச்சாண்ணா?” என்று கேட்டாள்.

 

“இல்லிங்கம்மணி அது பூக்க இன்னும் ரெண்டு நாளெடுக்குமுல” அவர் சொல்ல,

 

“அப்ப சரி, தோட்டத்தில புல்லு வெட்டி எத்தனை நாளாச்சு? இப்படி மண்டி கிடக்கு” அஞ்சலி கேட்கவும், தலையை சொரிந்து கொண்டவர், “இன்னிக்கு வெட்டி போடுறேனுங்க” என்க. இவள் தலையசைத்து விட்டு உள்ளே வந்துவிட்டாள்.

 

தலையில் ஈரத்துண்டு சுற்றி இருக்க, விடியற்காலை குளியல் முடித்து மங்கலகரமாக வெளியே வந்தார் காதம்பரி தேவி. 

 

அரண்மனை வாசலை கூட்டி பெருக்கிக் கொண்டிருந்த இரு பெண்களை பார்த்து, “என்ன பவளம் இப்பதான் வாசல் கூட்டுறீங்க மதியத்துக்குள்ள கோலம் போட்டுடுவீங்களா?” அவரின் அதிகார குரலில், அவர்கள் கைகள் இன்னும் வேகமெடுத்தன.

 

“எத்தனை தடவ சொல்றது ஆறுமணி முன்ன வாசல் கூட்டி கோலமிட்டு இருக்கனும்னு, இனி தாமதமாச்சு…” அவர் முடிக்காமல் நிறுத்த இருபெண்களும் பவ்வியமாக தலையாட்டினர்.

 

தோட்டம் பக்கம் நடக்க, அங்கே தோட்டக்காரர் புற்களை வெட்டிக் கொண்டிருந்தார். “என்ன ஐய்யப்பா காலங்காத்தாலயே வேலை நடக்குது போல?” காதம்பரி கேட்கவும், “அதுங்க சின்னம்மணி தானுங்க புல்லு வெட்ட சொன்னாங்க” அவரின் பதிலை காதிலிட்டபடி வீட்டுக்குள் வந்தார்.

 

பரந்த கூடத்தில் பெருக்கி துடைக்கும் வேலைகள் அங்கங்கே நடந்து கொண்டிருந்தன. அவற்றை மேற்பார்வை பார்த்துவிட்டு சமையலறைக்கு வர, அங்கே அனைவருக்கும் காலை தேநீர் தயாராகிக் கொண்டிருக்க, காலை உணவுக்கு என்னென்ன செய்ய வேண்டுமென்று சொல்லிவிட்டு பூஜை அறைக்கு நடந்தார்.

 

திரிபுரசுந்தரி அப்போதுதான் பூஜையை தொடங்கி இருக்க, கைக்கூப்பி வணங்கி நின்றார். பூஜை முடித்து தாயும் மகளும் வெளியே வர, அஞ்சலியும் பிரபாகரும் தேநீர் டம்ளர்களோடு கூடத்தில் பேசிக் கொண்டிருக்க, அவர்களும் வந்து இணைந்து கொண்டனர். பெரும்பாலும் இவர்கள் பேச்சு, நிறுவனம், தோழில், நில குத்தகை, வரவு, செலவு பற்றி நீளும்.

 

தினமும் வழக்கமான காலைநேர அரண்மனை நிகழ்வுகள் தான் இவை. 

 

“உங்களை பாக்கோனும்னு பட்டம்மா வந்திருக்குங்க” வேலைக்கார பெண் வந்து சொல்ல, “ம்ம் நான் தான் வர சொல்லி இருந்தேன், உள்ள வர சொல்லு” என்ற காதம்பரி எழுந்து உள்ளே சென்றார்.

 

தடித்த உடலும், நூல் சேலை கட்டும், மூப்பின் தோற்றமும் ஏந்தி உள்ளே வந்த பட்டம்மா, அனைவருக்கும் பொதுவாக வணக்கம் வைத்தார். அரண்மனை நிலத்தில் வேலை பார்ப்பவர்.

 

“பார்த்து நாளாச்சு எப்படி இருக்க பட்டம்மா?” திரிபுரசுந்தரி நலம் விசாரிக்க,

 

“உங்க புண்ணியத்தில இருக்கேனுங்க” என்றார் அவரும்.

 

“உங்க பேத்தி சிட்டு எப்படி இருக்கா, படிப்பு முடிச்சிட்டா இல்ல” அஞ்சலி ஞாபகமாக வினவ,

 

“நீங்க தான சின்னம்மணி, அரண்மனை சோலிக்கு வந்த புள்ளய காலேசல்லாம் சேர்த்து படிக்க வச்சீங்க, இப்ப படிப்ப முடிச்சு போட்டு வேலைக்கு போகுறேன்னு அடம்பிடிக்குதுங்க. வயசு புள்ளய வெளிய அனுச்சிபோட்டு இந்த கிழவிக்கு இருப்பு கொள்ளாதுங்க, அதான் கண்ணாலத்த முடிச்சு போடலாம்னு பாக்கறெனுங்க” பட்டம்மா விவரித்து பேசினார்.

 

“நல்ல விசயம் தான். தனியாளா நின்னு எப்படியோ பேத்திய வளர்த்து ஆளாக்கிட்ட” பிரபாகரும் மெச்சுதலாக சொல்ல, 

 

“உங்க புண்ணியத்துல பேத்திய கரையேத்திடுவேனுங்க, என்ற பேரந்தான் இன்னும் தருதலையா நிக்கிறானுங்க, படிப்பும் ஏறல, வேலவெட்டிக்கும் போகாம, அவங் கொலைகார அப்பனாட்டமே என்ற கழுத்தறுக்க பொறந்திருக்கானுங்க” ஈரம் கசிந்த தோல் சுருங்கிய கன்னத்தை முந்தானையால் துடைத்துக் கொண்டார்.

 

“விசனபடாத பட்டம்மா, சிறு வயசு புள்ள தான எடுத்து சொன்னா புரிஞ்சுப்பான். அப்பன் வழியில புள்ள போவனும்னு எழுதி வைக்கலில்ல. உன்ற நல்ல மனசுக்கு ஆண்டவன் இனி ஒரு குறையும் வைக்க மாட்டான்” திரிபுரசுந்தரி மனமார சொல்ல, பட்டம்மாவிற்கும் சற்று ஆறுதலானது.

 

அப்போது காதம்பரி தேவி வந்தார். கைகளில் பெரிய பித்தளை தாம்பாளத்தில், பட்டுச்சேலை, வெற்றிலை, பாக்கு, பூ, பழம், மஞ்சள், குங்குமம், தங்க சங்கிலி, கட்டு பணமும் எடுத்து வந்து பட்டம்மாவிடம் தந்திட, அவர் முகம்கொள்ளா நிறைவுடன் தன் மடியேந்தி பெற்றுக் கொண்டார். 

 

“நீங்க நல்லாயிருக்கோனும் அம்மணி, உங்க குடும்பம் தலைமுறை தலைமுறையா தலைச்சோங்கோனும்” அவர் மனதார வாழ்த்தினார்.

 

“இன்னும் உன் பேத்தி கல்யாணத்துக்கு ஏதாவது தேவைப்பட்டா தயங்காம வந்து எங்கிட்ட கேட்டு வாங்கிக்கோ, தென்னந்தோப்புல ஆள் சேர்க்க சொல்லி இருக்கேன் உன் பேரனையும் வந்து சேர்ந்துக்க சொல்லு” காதம்பரிதேவி கட்டளையாக சொல்லவும், பட்டம்மாவிடம் வார்த்தை இல்லை தலையாட்டி, கைக்கூப்பி விட்டு வெளியே நடந்தார்.

 

தங்களுக்கு நேரமாக அஞ்சலியும் பிரபாகரனும் தயாராக புறப்பட்டனர்.

 

****

 

அன்று மாலையில் அர்ச்சனாவை பூங்காவிற்கு அழைத்து வந்திருந்தான் அரவிந்த்.

 

புல்வெளி பாதையில் மாலையின் மயக்கத்தில் இருவரும் இணையாக நடமிட்டனர். 

 

குழந்தைகள், பெரியவர்கள், குடும்பம், காதலர்கள் என அவர்களை சுற்றிலும் பல காட்சிகள் சிதறி கிடந்தன. இருவரும் அவற்றை பார்வையால் கடந்தபடியே நடந்தனர்.

 

ஏனோ எப்போதும் வளவளக்கும் அரவிந்த் இன்று அமைதியாக வர, அவன் முகத்தை ஏறிட்டு, “என்னாச்சு” அர்ச்சனாவின் வினவலுக்கு,

 

“ஒன்னுமில்லயே” இவன் விடையிட்டான்.

 

“அப்புறம் ஏன் பேசாம வரீங்க?” அவள் அடுத்த கேள்வி தொடுக்க,

 

“ஏன் நான் பேசனுமா?” அவன் அடுத்த கட்டத்திற்கு தாவினான்.

 

“இல்ல… எப்பவும் பேசுவீங்க, இப்ப பேசாம…” 

 

“நான் என்ன பேசுனா உனக்கு பிடிக்கும் சனா?” அவள் முடிக்கும் முன் இவன் கேள்வி எடுத்தான்.

 

“உங்களுக்கு பிடிச்சது எதை பேசினாலும் எனக்கு பிடிக்கும்” என்றாள் அவளும்.

 

“இப்பெல்லாம் எல்லாத்தையும் விட எனக்கு உன்ன மட்டும் தான் பிடிக்குது சனா?” அரவிந்த் ஆழ்ந்து சொல்ல, 

 

அர்ச்சனா பதிலின்றி நிற்க,

“நான்… உன்ன பேசவா?” அரவிந்த் தன் உணர்வுபெருக்கை அவளிடம் ஒற்றை கேள்வியாக நீட்ட, இவள் இதய துடிப்பின் வேகம் கூடியது.

 

“ஏன் இப்படி? நீங்க சாதாரணமா பேசுங்க இப்படி வேணா, என்னமோ மாதிரி இருக்கு” அர்ச்சனா பரிதவித்து சொன்னாள்.

 

“ப்ச் உன்னால கவிதை எல்லாம் கிறுக்க ஆரம்பிச்சிட்டேன் சனா” 

 

“இதுல கவிதை வேறயா?”

 

“ம்ம் சொல்லவா”

 

“வேணானா சொல்லாம விட போறீங்களா என்ன?”

 

“ம்ஹும் சொல்லிட்டு தான் விடுவேன்”

 

“அச்சோ முடியல”

 

“அடி நிலவே

எங்கிருந்து வந்தாயோ?

என்னை முழுதாய் கொள்ளையடித்து

தவணைமுறையில் 

கொன்று சாய்க்கவே!”

 

“ஐய பிடிக்கல, கொலை அது இதுனா கவிதை எழுதுவாங்க?” அவள் முகம் பிடித்தமின்மை காட்டியது.

 

“அது அப்படி தான் எனக்கு தோனுச்சு, நான் எழுதின முதல் கவிதை இதுதான் தெரியுமா” என்றான்.

 

மீண்டும் சிறு அமைதி.

 

“சனா… நாம கல்யாணம் செஞ்சுக்கலாமா?” அரவிந்த் யாசிக்க, இவள் வேரூன்றி நின்று விட்டாள்.

 

“புரியுது, நாம பழக ஆரம்பிச்சு கொஞ்ச நாள் தான் ஆச்சு, இவ்வளவு அவசரப்பட்டு நான் கேட்க கூடாது தான், ஆனா, எங்க வீட்டோட வெறுமையை தாங்க முடியல… அது நம்ம வீடா, நீ, நான், நம்ம குழந்தைங்கன்னு உயிரோட்டமா மாறனும் அதான் கேக்குறேன்” என்றான்.

 

‘என்னாது குழந்தைங்களா?!’ அவளின் பங்கய விழிகள் விரித்தன.

 

அவள் அதிர்ச்சியை பார்த்து சிரித்து விட்டவன், “ரொம்ப எல்லாம் யோசிக்காத, இப்போதைக்கு நீ சம்மதம் மட்டும் சொன்னா போதும்” என்று அவன் கண்ணடிக்க,

 

“அரவிந்த்… கல்யாணம் எல்லாம் ரொம்ப பெரிய வார்த்தை… அதைபத்தி நாம எடுத்தோம் கவிழ்த்தோம்னு பேச முடியாது… அதோட, உங்க வீட்டிலேயும், எங்க வீட்டிலேயும் எடுத்து நடத்த பெரியவங்க யாரும் இல்ல…” அர்ச்சனாவின் குரல் கரகரத்தது.

 

அரவிந்த், “ஹே சனா, நீ சம்மதம் சொல்லிட்ட” என்றான் அவன் துள்ளலாய்.

 

‘என்ன?’ அவள் கேள்வியாக விழிக்க,

“சனா பேபி, நீ ஓகேன்னு சொல்லாம சொல்லிட்ட… தேங்க் யூ பேபி…” என்று உற்சாகமாக சொன்னவன், சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்து விட்டு, அவசரமாய் அவள் கன்னத்தில் தன் முதல் இதழ் தடம் பதித்துவிட்டு, விலகி ஓடினான்.

 

குழம்பி நின்ற அர்ச்சனா, அவன் செயலை திடுக்கிடலோடு உணர்ந்தவள், அவனை துரத்திக்கொண்டு பின்னோடு ஓடினாள்.

 

“ஏய் நில்லு… எவ்வளவு திமிர் இருக்கனும் உனக்கு? ஏதேதோ பேசி என்னை குழப்பி விட்டு… நான் அசந்த நேரத்தில என்ன காரியம் செஞ்சிருக்க நீ… நில்லுடா உன்ன…” இவள் துரத்தவும்,

 

“சான்ஸ் கிடைக்கும் போதே யூஸ் பண்ணிக்கனும் ஸ்வீட் ஹார்ட், அதான் நானும் யூஸ் பண்ணிக்கிட்டேன்… எனக்கு உரிமையானதை எடுத்துக்க உன்கிட்ட பர்மிஷன் எல்லாம் கேட்டுட்டு இருக்க மாட்டேன்… தோனும்போது எடுத்துக்குவேன் அவ்வளவு தான்… அதான் நேரா கல்யாணம் செஞ்சிக்க கேட்டேன்… நான் வேணும்னா இதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு தான் ஆகனும் செல்லாகுட்டி…” முன்னால் ஓடியபடியே அரவிந்த், அவளிடம் வம்பு வளர்த்துக் கொண்டிருக்க,

 

இன்னும் வேகம்பிடித்து ஓடியும், இவளால் அவனை பிடிக்க முடியவில்லை. மூச்சு வாங்க சோர்ந்து மடங்கி கீழே அமர்ந்து விட்டாள்.

 

அரவிந்தும் தன் ஓட்டத்தை நிறுத்திவிட்டு அவளருகே வந்து மூச்சு வாங்க அமர்ந்துக் கொண்டான்.

 

நிமிர்ந்தவள், “நான் உனக்கு… ரொம்ப… இடங்கொடுத்திட்டேனோனு தோனுது…” என்றாள் மூச்சு வாங்கியபடியே.

 

“அந்த இடம் எனக்கு மட்டுமே உரிமைங்கிறப்போ… நீ கொடுக்காமையே நான் எடுத்துகிட்டதுல… என்ன தப்பு?” அவனும் வேக மூச்சுகளுக்கு இடையே தர்க்கம் பேசினான்.

 

“எதுக்கும் ஒரு… முறை இருக்கு… நீங்க இப்படி செஞ்சது… எனக்கு பிடிக்கல” 

 

“எப்படி? இப்படியா?” என்றவன் அவளின் மறு கன்னத்திலும் இதழ் பதித்து மீண்டான்.

 

அர்ச்சனா அதிர்வோடு சுற்றிப் பார்க்க, அங்கே யாரும் தென்படவில்லை. இருவரும் ஓடிய வேகத்தில் பூங்காவின் மறுபுறம் வந்திருந்தனர்.

 

‘தன் பிடித்தமின்மையை சொல்லியும் அதையே செய்பவனை, என்ன தான் செய்து தொலைப்பது?’ என்று ஆயாசம் கொண்டவள், “ஏன் இவ்வளவு அவசரம் அரவிந்த்? எனக்கு என்னவோ ரொம்ப பயமா இருக்கு” என்று தவிப்பாக சொன்னவளை, தன்னோடு அணைத்துக் கொண்டான்.

 

“நான் உனக்காக இருக்கும் போது உனக்கென்ன பயம்?” என்று உறுதி தந்து உரிமை காட்டியவன் கைகளில் இருந்து விலகி கொண்டவள், “முதல்ல கல்யாணம், அப்புறம் தான் இந்த கட்டிபுடி வைத்தியம் எல்லாம், அதுவரை தள்ளியே நில்லுங்க” என்று அவனை தள்ளி நிறுத்த, அரவிந்த் அவள் சொன்ன விதத்தில் குறும்பாக கண் சிமிட்டி சிரித்து விட்டான்.

 

“அப்போ சீக்கிரம் கல்யாணத்தை‌ முடிச்சிட வேண்டியது தான்” என்று.

 

****

 

காதலின் பழக்கங்கள் காதலர்களின் வழக்கங்களாக மாறிப் போயின.

 

அவனின் ‘குட் மார்னிங் சனா’ குறுஞ்செய்தி தினம் இவளின் விடியல் அலாரமாக,

 

அவனுக்கென இவள் சமைலறையில் தன் கைப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள முயல,

 

அவன் பேசும் அர்த்தமற்ற செய்திகளையும் இவள் மனப்பெட்டகம் சேமித்துக் கொள்ள விழைய,

 

பெண்ணுள்ளே அவன் உலகம் புகுந்து கொண்டு இவள் மேன்மையை ஆளத்துவங்கி இருக்க,

 

ஆணவன் ரசனை பார்வைகள் அவளிடம் உரிமை பார்வைகளாயின.

 

இவன் ஆர்வ பேச்சுகள் எல்லாம் அவளை சுற்றியே மேய்ந்திட,

இவன் கள்ள பார்வையின் கனம் கூடிட,

நீளும் இடைவெளிகள் எரிச்சல் மூட்டிட,

பெண்ணிலவை சுற்றும் மீசை சூரியனாய் மாறி இருந்தான் இவன்.

 

இவர்களின் பார்வை பாஷைகளும் நெருக்கங்களும் அவர்கள் வேலையிடத்தில் கிசுகிசுக்களாக, சுவாரஸ்யமான பேசு பொருளாக மாறியிருக்க, அதைப்பற்றி இவர்களும் பெரிதாக கண்டு கொள்வதாக இல்லை.

 

****

 

நிஜம் தேடி நகரும்…