நீயில்லை நிஜமில்லை 8(2)

நீயில்லை நிஜமில்லை 8(2)

 

உடல் கூட்டில் 

உயிர் அடைந்திருக்கும் வரை

நானும் நிஜம் தான்!

 

அரவிந்துடன் அதிக நேரம் செலவழிக்க முடியாமல் இருப்பது அஞ்சலிக்கு வெறுமையாக இருந்தது. ஒரே இடத்தில் வேலை செய்தாலும் கூட, அவனிடம்  அதிகம் பேச நேரம் வாய்ப்பதில்லை இவளுக்கு.

 

மதிய உணவு வேளையில் தன்னுடன் இணைந்து உண்ணுமாறு இவள் அழைத்தும் அரவிந்த் அதை மறுத்து விட்டிருந்தான். இப்போதெல்லாம் அவனிடம் புதுமாதிரியான மாற்றங்கள் தெரிந்தன. தொலைபேசியில் பேசும்போதும் அதிகம் மழுப்பலான பதில்களையே தந்து நழுவிக் கொண்டிருக்கிறான்.

 

இந்த நிலையில் தான் அரவிந்த், அர்ச்சனா பற்றி உலவும் கிசுகிசுக்கள் அவளுக்கும் தெரிய வந்தன.

 

இப்போதெல்லாம் அரவிந்துடன் அர்ச்சனாவை அடிக்கடி பார்க்க நேர்ந்த போது கூட அஞ்சலி அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

 

ஆனால், அவர்களை இணைத்து வலம்வந்த கிசுகிசு பேச்சுகள், வெறும் வதந்திகளாக இருந்தாலும் கூட, அரவிந்த் பெயர் அதில் அடிபடுவதை அஞ்சலி விரும்பவில்லை. எனவே தான் அர்ச்சனாவை உடனே அறைக்கு அழைத்திருந்தாள்.

 

மாலை பணிநேரம் முடியும் சமயம் அர்ச்சனா, அஞ்சலி முன் வந்து நின்றாள். 

 

“நீங்க இப்படி பொறுப்பில்லாம இருப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கல அர்ச்சனா” எடுத்தவுடன் அஞ்சலி இப்படி சொல்லவும் அர்ச்சனாவிற்கு என்னவென்று விளங்கவில்லை.

 

‘அச்சோ இந்த நேரத்தில இவங்க எதைப்பத்தி லெட்சர் எடுக்கிறாங்கன்னு புரியலயே… அரவிந்த் வேற ‘நான் வெளியே வெயிட் பண்றேன் சீக்கிரம் வா’ன்னு சொல்லி இருக்கான்… எப்படி எஸ்கேப் ஆகுறது?’ அர்ச்சனா யோசனையில் நின்றிருக்க,

 

“இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம் அர்ச்சனா?” அஞ்சலி விடாமல் கேட்க,

 

“மேடம் நீங்க என்ன கேக்குறீங்கனு எனக்கு புரியல”

 

“நீங்க அரவிந்த் கூட பழகறதை பத்தி கேட்டுட்டு இருக்கேன்” அஞ்சலியின் பதிலில் இவள் நெற்றி சுருங்கியது.

 

“இதுல நீங்க கேட்க என்ன மேடம் இருக்கு?” அர்ச்சனாவின் கேள்வியும் நேராக பாய்ந்தது.

 

“ஏன் நான் கேட்க கூடாது?” அஞ்சலி ஒற்றை புருவம் உயர்ந்து நெளிந்தது.

 

“அது எங்களோட பர்சனல் மேடம், அதுல நீங்க தலையிடனும்னு என்ன அவசியம்?” அர்ச்சனாவும் சளைக்காமல் கேட்டாள்.

 

‘எங்க சொந்த விசயத்தில தேவையில்லாம எதுக்கு இவங்க மூக்க நுழைக்கிறாங்க?’ அர்ச்சனாவிற்கு உள்ளுக்குள் கனன்றது.

 

“வாட்? உங்க பர்சனல் பத்தி எனக்கு எந்த இன்ட்ரஸ்டும் இல்ல அர்ச்சனா, உங்க கூட அரவிந்த் பேரு அடிபடறது எனக்கு பிடிக்கல” அஞ்சலி அழுத்தமாக சொல்லிட,

 

“உங்களுக்கு பிடிக்கலனா என்ன அர்த்தம் மேடம்?” அவர்கள் வாதம் சூடுபிடித்தது.

 

அஞ்சலி பதில் தராமல்  நேர் பார்வையாக பார்த்து இருந்தாள்.

 

அர்ச்சனாவிடம் எந்த தயக்கமும் இல்லை. “நானும் அரவிந்தும் லவ் பண்றோம், சீக்கிரம் கல்யாணம் செஞ்சிக்கவும் முடிவு எடுத்து இருக்கோம். இதுல வேலவெட்டி விட்டுட்டு மத்தவங்க கிசுகிசுத்தா அது எங்க தப்பில்ல மேடம்” அர்ச்சனா விளக்க, அஞ்சலியின் பார்வை அவள் மீது கசப்பை உமிழ்ந்தது.

 

“ஹே யூ, உனக்கு என்ன தெரியும் அரவிந்த் பத்தி? சும்மா வாயிக்கு வந்ததை எல்லாம் உளறிட்டு இருக்க? இதான் ஃபர்ஸ்ட் அன் லாஸ்ட் வார்னிங், இனி இப்படி உளறிட்டு இருந்த நடக்கிறதே வேற?” அஞ்சலியின் பார்வையும் குரலும்‌ எச்சரிக்கையாக ஒலிக்க,

 

“என்ன மேடம் சும்மா மிரட்டுறீங்க? நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கு, நானும் அரவிந்தும் லவ் பண்ணறது உண்மை. உங்களுக்கு கீழ வேலை செஞ்சா நாங்க காதலிக்க கூடாதுன்னு சட்டம் போடுவீங்களா?” அர்ச்சனாவின் பொறுமையும் சிதறிக் கொண்டு இருந்தது.

 

அதை கேட்டு அஞ்சலி சத்தமாக வாய்விட்டு சிரித்து விட, அர்ச்சனாவிற்கு ஏதோ தவறாக தோன்ற மனது தடதடத்தது.

 

“இங்க வேலை செய்யற யாரோட பர்சனல் பத்தியும் தெரிஞ்சிக்க எனக்கு எந்த அவசியமும் இல்ல அர்ச்சனா… பட், அரவிந்த் என்னோட பர்சனல்… அவனபத்தி இப்படி கண்டதையும் உளறினா என்னால சும்மா வேடிக்கை பார்த்திட்டு இருக்க முடியாது” நிதானமாக ஆரம்பித்து சீறலாக நிறுத்தினாள்.

 

‘என்ன? அரவிந்த் இவங்களோட பர்சனலா? இதுக்கு என்ன அர்த்தம்?’ அர்ச்சனாவின் மனது கலவரமானது.

 

“மேடம்… நான் உங்ககிட்ட உண்மைய தான் சொல்கிறேன், அரவிந்தும் நானும்…” அர்ச்சனா முடிக்கும் முன்னே அஞ்சலி பேச்சை வெட்டினாள்.

 

“ஜஸ்ட் ஷட் அப்… மறுபடி மறுபடி அரவிந்த் பேரை இழுக்காதீங்க அர்ச்சனா… ஹீ இஸ் மைன்…” அஞ்சலியின் அழுத்தமான பதிலில் அர்ச்சனா உள்ளுக்குள் உடைந்து போனாள். கண்கள் கலங்க உறைந்து நின்று விட்டாள். 

 

‘அப்படின்னா… அரவிந்த் என்னை ஏமாத்திட்டியா?’ அவளின் அவனுக்கான உலகம் இருளடைத்துக் கொண்டது. கண்களில் கண்ணீர் பெருகியது.

 

நூறில் ஒரு சதவீதம் கூட அஞ்சலிக்கு அரவிந்த் மீது சந்தேகம் வரவில்லை. அவன் தன்னை விடுத்து வேறு பெண்ணின் காதலில் விழுந்து இருப்பான் என்று! எனவே நிமிர்வாகவே நின்றிருந்தாள்.

 

அந்த இரு பெண்களின் கனத்த மௌன நிமிடங்களுக்கு இடையே, அர்ச்சனாவின் அலைப்பேசி ரீங்காரமிட்டது.

 

இயந்திரத்தனமாக அதை எடுத்து காதில் ஒற்றிவளின் கன்னங்களில் கண்ணீர் கோடிட, எதிர்முனையில் அரவிந்த் தான் பேசினான்.

 

“சனா, எவ்வளவு நேரம் வெளியே வெயிட் பண்றது? இப்ப நீ இங்க வரீயா? இல்ல நான் உள்ள வந்து உன்ன இழுத்திட்டு வரவா?” அவன் பொறுமையிழந்து கத்த,

 

“அரவிந்த்…” அர்ச்சனாவின் உடைந்த அழைப்பில், “ஹேய் என்னாச்சு சனா?” அவன் பதறினான்.

 

“நீ என்ன லவ் பண்ணலையா? என்னை… ஏமாத்தறயா? நீ எனக்கு இல்லையா அரவிந்த்?” என்று தேம்பினாள்.

 

“என்ன உளர்ற சனா? என்னாச்சு உனக்கு? இப்ப எங்க இருக்க நீ, முதல்ல அதை சொல்லு?” அவன் படபடக்க.

 

“அஞ்சலி மேடம் கேபீன்ல இருக்கேன்…” அர்ச்சனா சொல்லிவிட்டு வைக்கவும், அரவிந்த் வேகமாக வந்து கதவை திறக்கவும் சரியாக இருந்தது.

 

அர்ச்சனாவின் கலங்கிய குரல் கேட்டதுமே பாய்ந்தோடி வந்திருந்தான்‌ அவன்.

 

அந்த அறையில் இரு பெண்களும் எதிரும் புதிருமாக நின்றிருந்தனர். அவர்களிடையே மேஜை தடுப்பு மட்டுமே.

 

அஞ்சலியின் அழுத்தமான முகத்தையும், அர்ச்சனாவின் கலங்கிய முகத்தையும் கவனித்தவன் சற்று தேங்கி நின்றான்.

 

“என்னாச்சு அஞ்சலி?” அரவிந்த் முதலில் அஞ்சலியிடம் பேச, அர்ச்சனாவிற்குள் ஏதோ சிதைவது போலானது.

 

“நத்திங் டா, இவங்க தான் ஏதோ குழப்பிட்டு இருந்தாங்க, நான் டவுட் கிளியர் பண்ணிட்டேன், இனி எந்த குழப்பமும் வராது” என்றாள் அஞ்சலி சாதாரணமாக.

 

அவனுக்கு எதுவும் புரிவதாக இல்லை. “ஜெல்லி புரியற மாதிரி பேசு, சனா அழற மாதிரி நீ என்ன சொல்லி தொலைச்ச?” தன் காதலிக்காக தோழியிடம் குரல் உயர்த்தினான்.

 

அரவிந்தின் ‘சனா’ அழைப்பு, அஞ்சலிக்கு நெருடலாக தோன்றியது.

 

“என்னடா அவளுக்காக என்கிட்ட பரிஞ்சிட்டு வர? முன்ன பின்ன யோசிக்காம ஆசபட்டா இப்படி தான் அவதி படனும்” அஞ்சலிக்கு ஏனோ ஆத்திரமாக வந்தது.

 

அர்ச்சனா மேலும் அங்கே நிற்க முடியாமல் விலக முற்பட, அவளின் கைபிடித்து தடுத்து நிறுத்தியவன்,‌ “எனக்கு தலையும் புரியல வாலும் புரியல. என்ன நடக்குது இங்க?” அவன்  இருவருக்கும் பொதுவாக கேள்வியை வீசினான்.

 

அவன் பிடியை உதறிய அர்ச்சனா, “நீ என்னை லவ் பண்றேன்னு சொன்னது உண்மை இல்லையாம்… நீ இவங்களுக்கு மட்டும் தான் உரிமையானவனாம்… இவங்க சொல்றாங்க… நீ சொல்லு, என்கூட  பழகினதெல்லாம் வெறும் டைம்பாஸ் தானா? ஏன் என்னை ஏமாத்தின?” அர்ச்சனா ஆங்காரமாக கேட்க, அரவிந்த்  திடுக்கிட்டான்.

 

“என்ன டா, அவ பாட்டுக்கு ஏதேதோ பேசிட்டு போறா நீ சும்மா வேடிக்கை பார்த்துட்டு நிக்கிற? இவங்கிட்ட சொல்லு உனக்கு என்னை மட்டும் தான பிடிக்கும்! உனக்கான உரிமை எல்லாம் எனக்கு மட்டும் தான்! உன் மனசுல, நினப்புல நான் மட்டும் தான இருக்கேன்!” அஞ்சலியும் ஆவேசமாக தன் மனதை உடைத்து பேசிட, அவனின் அதிர்ச்சி இன்னும் பலமடங்காக அவனை தாக்கியது.

 

இமைக்கவும் மறந்து அஞ்சலியை வெறித்தபடி நின்றிருந்தான். அவள் சொன்ன ஒவ்வொன்றையும் உள்வாங்கி கொள்வதே இவனுக்கு சிரமமாக இருந்தது.

 

கொஞ்ச நஞ்சமாக ஒட்டி இருந்த நம்பிக்கையும் அர்ச்சனாவுக்கு முழுதாக அற்று போனது. 

 

ஜமீன் பரம்பரை வாரிசு, கணக்கற்ற சொத்துகளுக்கு சொந்தகாரி, பேரழகியான அஞ்சலிக்கு ஈடாக, ஊர் பேர் சொல்லவும் தெரியாத எந்த ஆதரவும் அற்ற துரதிர்டசாலியான தான் எப்போதுமே ஈடாகவே முடியாது என்ற நிதர்சனம் அர்ச்சனாவை உயிரோடு கொல்வதாய்.

 

அரவிந்த் இரு கைகளாலும் தலையை அழுத்த கோதி விட்டுக் கொண்டான். “ஹே ஜெல்லி… நீ சும்மா தான விளையாடுற? நமக்குள்ள… ஃப்ரண்ஷீப் தாண்டி… வேற எதுவும்… இல்லல” கேட்கும் போதே அவன் இதயத்தின் தடதடப்பு கூடியது. 

 

அஞ்சலியின் மனதில் அப்படி எதுவும் இருக்க கூடாது… கூடவே கூடாது என்று அவசர வேண்டுதல் வைத்தான். அவனின் வேண்டுதல் காலதாமதமாகி இருப்பதை அறியாமல்!

 

அஞ்சலி தன் நெற்றியில் தட்டிக் கொண்டு, “அச்சோ கடைசில நானே சொல்ல வேண்டியதா போச்சு… சரியான மடையன்டா நீ… நீதான் என்கிட்ட முதல்ல வந்து பிரோபோஸ் பண்ணனும்னு இத்தனை வருசமா வெயிட் பண்ணிட்டு இருந்தேன்… எல்லாமே போச்சு… இந்த டென்சன்ல நானே எல்லாத்தையும் உளறி கொட்டிட்டேன்” என்று அழகாய் அசடு வழிந்தாள் அவள்.

 

அரவிந்தின் மனம் ‘அய்யோ’ என்று அலறியது. 

 

“கங்கராஜுலேஷன் சார்ர்ர்” என்று சிவந்து கலங்கிய விழிகளோடு வாழ்த்தினை கடித்து துப்பினாள் அர்ச்சனா.

 

இப்போது தான் அர்ச்சனாவும் அங்கிருப்பதை உணர்ந்து கொண்டான் அரவிந்த். இரு பெண்களில் யாரை முதலில் சமாதானபடுத்துவது என்று தெரியவில்லை அவனுக்கு. 

 

“அரவிந்த் இவங்க ரொம்ப பேசுறாங்க டா, ஏதோ நீ சகஜமா சிரிச்சி நாலு வார்த்தை பேசிட்டேன்றத்துக்காக, ஆஃபிஸ் ஃபுல்லா நீங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ்னு ரூமர் வேற கிளப்பி விட்டு இருக்காங்க, இப்பவே இங்கேயே அவங்ககிட்ட தெளிவா சொல்லிடு, நீ எனக்கு மட்டும் தான்னு” அஞ்சலி படபடத்தாள்.

 

“கையில இருக்கறதை விட பெட்டரா வேற ஒன்னு கிடைச்சா யாருக்கும் மறுக்க தோனாது மிஸ்டர்… அதுக்காக என்னை நீ…” அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டை அடைக்க, அர்ச்சனா வேகமாக திரும்பி நடந்தாள்.

 

இரு பெண்களும் தரும் அழுத்தத்தில் தன் தலை பிளந்து விடும் போலானது அவனுக்கு. 

 

“நில்லு சனா…” 

 

அரவிந்த் குரல் அழுத்தமாக ஒலிக்க, கதவருகே வந்து விட்டவள் தாமதித்து நின்று திரும்பினாள்.

 

“அஞ்சலி… உன் மனசுல இப்படியொரு எண்ணம் வச்சிருப்பன்னு… சத்தியமா எனக்கு தெரியாது… நம்ம ஃப்ரண்ட்ஷிப் தாண்டி உன்ன நான் யோசிச்சது இல்ல” அவன் திணறலாக பேச,

 

“அரவிந்தா…?” இப்போது அஞ்சலியின் மனதில் புயல் சூழும் அறிகுறிகள் தென்பட்டன.

 

“சாரி அஞ்சலி… நானும் அர்ச்சனாவும் லவ் பண்றோம்! அவளை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! இதை முன்னமே உன்கிட்ட சொல்லாதது என்னோட தப்பு தான்… என்னால என் சனாவை விடமுடியாது!” அரவிந்த் தன் மனமறிந்த உண்மையை உறுதியோடு சொல்லி விட்டான்.

 

அஞ்சலியால் இன்னும் கூட அவன் சொன்னதை நம்பமுடியவில்லை. அவன் பேசிய மொழி புரியாதது போல அவனையே பார்த்தப்படி நின்றிருந்தாள்.

 

அவள் மனம் கலங்கியது; கண்கள்  கலங்கவில்லை. அவனை அதிர்ச்சியில் வெறித்தது வெறித்தபடி நின்றிருந்தாள்.

 

அவளுக்கு மாறாக அர்ச்சனாவும் பேரதிர்ச்சியில் தான் நின்றிருந்தாள். அரவிந்த் தன்மீது வைத்திருக்கும் காதலின் உறுதியைக் கண்டு அவள் கண்ணீர் மேலும் மேலும் பெருகியது. தன்னவனின் தனக்கான அன்பின் ஆழம் உணர்ந்து நெகிழ்ந்து போய் நின்றிருந்தாள். இன்னும் இன்னும் அவன் மீது காதல் கூடியது அவளுக்கு.

 

இருவருக்கும் நடுவே நின்றிருந்த அரவிந்தை அர்ச்சனாவின் கண்களில் பெருகி வழிந்த கண்ணீர் தான் அசைத்தது. அவளருகில் வந்தவன் அவள் கன்னங்களை‌ துடைத்து, “பைத்தியகாரி, நான் உன்ன அப்படியே விட்டுடுவேன்னு நினச்சியா?” என்று சிறு குரலாக கடிந்து கொண்டான்.

 

அர்ச்சனா மேலும் கீழுமாக தலையை ஆட்டி, நிற்கும் சூழ்நிலையும் மறந்து, அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள். “நான் ரொம்ப பயந்துட்டேன் அரவிந்த்… கொஞ்ச நேரத்தில செத்து போயிட்டேன்” என்று தேம்பினாள்.

 

அதேநேரம் அவர்களை அப்படி காண சகியாமல், அஞ்சலி அங்கிருந்து வேகமாக வெளியேறினாள்.

 

அதை கவனித்தவன், “உண்மைய சொல்லு இதான் சாக்குன்னு என்னை கழட்டிவிட தான பிளான் பண்ண” என்று அர்ச்சனாவை சீண்ட, நிமிர்ந்தவள் அவனை முறைத்து விட்டு, கண்ணீரோடு சிரித்தும் விட்டாள்.

 

“குட் கேர்ள், இப்படி தான் சிரிச்சிட்டே இருப்பியாம்… நான் போய் அஞ்சலிய சமாதானபடுத்திட்டு வரேன்” என்று அவன் விலக, இவள் வேறாய் பார்த்தாள்.

 

“அஞ்சலி என்னோட ஃபிரண்ட், அவளையும் என்னால கஷ்டபடுத்த முடியாது” அவன் உறுதியாக சொல்ல,

அர்ச்சனா ஏதோ பேச வாயெடுத்தாள்.

 

அவளை தடுத்தவன், “மறுபடி என்னை சந்தேகப்பட்ட உன்ன தோலைச்சிடுவேன் பார்த்துக்க…” என்று காதல் மிரட்டல் விடுத்துவிட்டு, அஞ்சலியை தேடி ஓடினான். அவளையும் எப்படியாவது சமாதானம் செய்ய வேண்டுமே!

 

வெளியே அஞ்சலி காரில் ஏறுவதை பார்த்தவன், வேகமாக ஓடி வந்து அவளுடன் ஏறிக் கொண்டான். கார் சாலையில் வழுக்கியது.

 

அஞ்சலியின் காஜல் விழிகள் வெளிப்புறம் இலக்கின்றி வெறித்தபடி இருக்க, அவளின்‌ லிப்ஸ்டிக் உதடுகள் தன் துடிப்பையும் வெடிப்பையும் அடக்க போராடிக் கொண்டிருந்தன. அவளின் முகத்தின் இறுக்கம் ஒவ்வொரு கணத்திற்கும் கூடிக் கொண்டே போனது.

 

“அஞ்சலி… அஞ்சலி என்னை பாரு… ப்ளீஸ் டி ஏதாவது பேசு… என்மேல கோவமா திட்டிடு… ஏய் ஏன் இப்படி இருக்க…” அவனின் பேச்சுக்கு இவளிடம் எந்த எதிர்வினையும் இல்லாமல் போக, அவனுக்குள் பதற்றமானது.

 

அவள் கரத்தை பிடித்து அழுத்தியவன், “ரிலாக்ஸ் ஜெல்லி ப்ளீஸ்… சத்தியமா எனக்கு தெரியாது நீ என்னை லவ் பண்றேனு… புரிஞ்சிக்க டா… இப்படி இருக்காத ஃபிரீயா விடு” அவன் கெஞ்சவும் அவளிடம் அசைவில்லை.

 

இவர்களின் போராட்டத்தில் இருவரும் ஓட்டுநரின் பதற்றத்தை கவனிக்காமல் விட்டிருந்தனர். வழக்கத்திற்கு மாறான வேகத்தில் கார் சாலையில் நிலையின்றி தாருமாறாக போய் கொண்டிருந்தது.

 

“ஏன் டி இப்படி இருக்க எதையாவது பேசி தொலையேன்… முன்னவே எங்கிட்ட சொல்லி தொலைக்க வேண்டியது தானே… ஒரு ஹேர்கிளிப் வாங்கினா கூட என்கிட்ட மறக்காம சொல்லுவியே, என்மேல காதல் வந்தா அப்பவே சொல்லி தொலைக்கறத்துக்கு என்ன உனக்கு?” அவள் இரு தோள்களையும் பிடித்து உலுக்கினான்.

 

அவன் கைகளை உதறிவிட்டவள், “நான் சொல்லி தான் உனக்கு என் காதல் தெரியனுமா? நீ என்னை புரிஞ்சி வச்சிருக்கறதும் இவ்வளவு தானா?” அவளும் ஆவேசமாக கேட்க, காரின் குலுக்கலில் இவர்களும் குலுங்கிட,  அவன் நெற்றியோடு நேராக இவள் நெற்றி முட்டிக்கொண்டு வலிக்க, மொத்தமாக அவன்மீதே விழுந்து சரிந்தாள்.

 

“டிரைவர் என்னாச்சு?” அரவிந்த் கத்த, 

 

“சார் வண்டி பிரேக் பிடிக்கல… என்னால கண்ட்ரோல் பண்ண முடியல… இப்ப வேற வழி இல்ல வெளியே குதிச்சிடுங்க சார்…” என்று அரற்றிய ஓட்டுநர், அதே வேகத்தில் கார் கதவை திறந்து வெளியே குதித்தும் விட்டான்.

 

அரவிந்தும் அடுத்த நொடி யோசிக்கவில்லை. எதிர்புறம் கார் கதவை திறந்து, அஞ்சலியை தள்ளிவிட்டு தானும் கீழே பாய்ந்தான்.

 

சாலையோரத்தின் புதர்களும், செடிகளும் மண்டி கிடந்த பகுதி அது. இருவரும் கல்லும் முள்ளும் கிழிக்க  உருண்டு சென்று எதிலோ மோதி சுயநினைவு இழந்தனர்.

 

சாலையில் கட்டுபாடின்றி தாறுமாறாக ஓடிய கார், சற்று தூரத்தில் கவிழ்ந்து தீப்பிடிக்க, சற்று நேரத்தில் வெடித்தும் சிதறியது.

 

****

 

நிஜம் தேடி நீளும்…