நீயில்லை நிஜமில்லை 10

நீயில்லை நிஜமில்லை! 10

 

கனவில் வந்து கைக்கோர்க்கிறாய்,

காதலாடுகிறது என் நெஞ்சம்!

நீயில்லை இது நிஜமில்லை 

என்ற பின்னும்!

 

தன் உடல் காயத்தின் வலியையும் மறந்து காதல் தந்த துயரில் வெதும்பி கொண்டிருந்தாள் அஞ்சலி.

 

என்னை விட என் அரவிந்தை சரியாக புரிந்தவர்கள் வேறு யாருமில்லை என்ற அவளின் இறுமாப்பு சுக்குநூறாக நொறுங்கி போயிருந்தது.

 

அவனை விட என்னை தெரிந்தவர்கள் யாரும் இல்லை என்று அரவிந்த் மீது இவள் கொண்டிருந்த கண்மூடித்தனமான நம்பிக்கையும் மோசமாக அடிப்பட்டு போயிருந்தது.

 

எல்லாமே இவள் தவறு தான்.

நட்பு என்ற தூய வெள்ளை தாளில், காதல் என்ற வண்ணங்கள் பூசியது இவள் பிழை தானே!

 

தனக்குள் முச்சு முட்டும் அளவு அவன்மீது நேசம் இருந்தும், ஒரு வார்த்தையால், சிறு பார்வையால் கூட அவனிடம் வெளிப்படுத்தாமல் பொத்தி வைத்தது இவள் தவறு தானே!

 

‘ஏன் டீ முன்னாடியே சொல்லி தொலைச்சிருக்க வேண்டியது தான?’ அவன் கேள்வி திரும்ப திரும்ப அவளை வாள் கொண்டு வீசியது.

 

எப்போதுமே இருவரும் நெருங்கிய நல்ல நண்பர்கள் தான். கிண்டர்கார்டன் வகுப்பிலிருந்து இருவரும் கைகோர்த்து பள்ளிக்கு சென்றவர்கள், கல்லூரி வரைக்குமே, இணைந்த கரங்களை விலக்கவே இல்லை.

 

அவன் உடனிருந்த ஒவ்வொரு தருணமும் இவளுக்கு பொக்கிஷம் என்பதை விட, அவன் உடன் இல்லாத தருணங்கள் வெகு சொற்பம் என்றே கூறலாம். இவள் தன் பெற்றோரோடு இருந்த நேரங்களை விட, அரவிந்தோடு செலவழித்த நேரங்கள் தான் அதிகம்.

 

பிரிவு என்பது, அரவிந்த் வெளிநாட்டில் வேலை கிடைத்து உலகம் சுற்ற சென்ற இந்த நான்கு வருடங்கள் தான். ஆனாலும் அதிலும் கூட இவள் பெரிதாக பிரிவை உணரவில்லை. தினமும்  அலைபேசி உரையாடல், நேரங்கிடைக்கும் போது வீடியோ கால் உரையாடல் என நன்றாகவே சென்றது.

 

தன்னில் உணர்ந்த நேசத்தை அவனிடம் இவள் வெளிபடுத்தவே இல்லை. சொல்லி வருவதல்ல நேச உணர்வு. அது அவனாய் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று காத்திருந்தாள். அரவிந்த் தன்னை தாண்டி வேறு பெண்ணை நாட மாட்டான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவளுள் ஆழமாய் வேரூன்றி இருந்தது.

 

அந்த நம்பிக்கையை அசைத்து வேரோடு பிடுங்கி எறிந்திருந்தான் அரவிந்த். 

 

காயமில்லை, ரத்தமில்லை ஆனாலும் உயிர்வலி தருவதாய்.

 

****

 

அப்போது பதினொன்றாம் வகுப்பில் படித்து கொண்டிருந்த பள்ளி மாணவி அஞ்சலி. சென்ற வருடம் வரை பள்ளி தோழனாக எப்போதும் உடனிருந்த அரவிந்த், கல்லூரி சென்றபடியால் மிகுந்த வெறுமையை உணர்ந்திருந்தாள்.

 

அவளை சுற்றி எல்லாம் இருந்தும் எதிலும் மனம் செல்லாமல் ஒருவித பொருந்தா தன்மையில் தவித்திருந்தாள். அரவிந்த் உடன் இல்லாதது அதிக தனிமையை தந்திருந்தது அஞ்சலிக்கு.

 

அவனுடனேயே இருந்துவிட்டால் என்ன? என்ற எண்ணங்கள் பேதை நெஞ்சை அலைகழிக்க ஆரம்பித்திந்த சமயம் அது.

 

அரவிந்த் அப்போது மிகுந்த கவலையின் பிடியின் இருந்தான். மருத்துவமனையில் மாத கணக்கில் உடல்நிலை தேய்ந்து சிகிச்சை பெற்று வந்த தன் சித்தும்மா படும் அவஸ்தைகள் அந்த இளைஞனை நிலைகுலையச் செய்திருந்தன. 

 

அஞ்சலி உடன் இன்மையை உணர்ந்தும் அதற்குமேல் அவனால் ஏதும் யோசிக்க முடிந்திருக்கவில்லை.

 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சித்தாரா தவறிவிட, அரவிந்த் முழுவதுமாக உடைந்து போனான். மறுபுறம் வெற்றிமாறனும் உயிர் துணையின் இழப்பில் கலங்கி போயிருந்தார்.

 

அந்த பாரமான சூழ்நிலையில் அஞ்சலியின் குடும்பம் இவர்களுக்கு பெருந்துணையாக இருந்தனர். அவரின் காரியம் முடிந்து உறவுகள் எல்லாம் விடைபெற்றிருக்க, வெற்றிமாறனும்  நிறுவனத்திற்கு சென்று இருந்தார். 

 

வெறிச்சோடி கிடந்த வீட்டில் அரவிந்த் மட்டுமே தனித்து இருந்தான்.

 

அந்த வளர்ந்த சிறுவனின் எண்ணம் முழுவதும் தன் சித்தும்மாவின் நினைவுகளிலேயே அமிழ்ந்து கரைவதாய். 

 

அவர் தவறிய நாளில் இருந்து கிட்டத்தட்ட இந்த வாரம் முழுவதும் துளி உறக்கமும் இன்றி மன அழுத்தத்தின் பிடியில் சிக்கித் தவித்திருந்தான் அவன்.

 

அத்தனை அம்மா செல்லம் அரவிந்த் வளர்ந்த பிறகும்கூட.

 

அநாதை என்ற பெயரோடு ஆசிரமத்தில் அல்லல்பட்டிருந்தவன் வாழ்வை பிரகாசமாக்க தேவதையாக வந்தவர், அவன் சித்தும்மா!

 

அவரின் விரல் பிடித்த தருணத்தில் இருந்து இவன் வாழ்வில் சந்தோசமும் உற்சாகமும் மட்டுமே.

 

இப்போது தன் சித்தும்மா இல்லாது தானும் வாழ்தல் முடியாது என்ற முரணான, முட்டாள்தனமான தோற்றம் தொடர்ந்து அவனை அலைகழிக்க, தீவிர விரக்தியின் பிடியில், மாடியின் சுவற்றில் ஏறி குதிக்க தயாராகி நின்றான்.

 

அவன் வீட்டிற்கு வந்த அஞ்சலி பார்த்தது இதைத்தான். உடனே கத்தி விட்டாள்.

 

“அரவிந்தா… அங்க என்னடா பண்ற? முதல்ல இறங்கி வாடா…” அஞ்சலியின் குரல் அரவிந்தை கலைக்க, தன் கோழைச்செயல் புரிந்து உடனே இறங்கியும் விட்டான்.

 

படிகளில் வேகமாக ஏறி வந்து மூச்சு வாங்க அவன் முன் நின்றவள், அவன் கன்னத்தில் மாறி மாறி அறைந்து, “என்னடா ஆச்சு உனக்கு? என்ன காரியம் செய்ய பார்த்த?” அவன் நெஞ்சில் ஆவேசமாக குத்தினாள்.

 

வலி தாங்காது அஞ்சலியின் கைகளை தடுத்து பிடித்தவன், “நான் வேணும்னு செய்யல, ஏதோ ஃபீலிங்கல தான் இப்படி… விடு” என்று அவளை உதறிவிட்டு, வேகமாக இறங்கி அவன் அறைக்குள் புகுந்து கொண்டான்.

 

கோழைத்தனமாக தற்கொலைக்கு முயன்றது அவனுக்கே அவமானமாக இருந்தது. தலையை பிடித்து கொண்டு கட்டிலில் அமர்ந்து விட்டான். இங்கிருந்து எங்காவது தூரமாக ஓடி போக வேண்டும் போல் இருந்தது அவனுக்கு.

 

அவன் பின்னோடு வந்த அஞ்சலி அவனை கலக்கத்தோடு பார்த்து நின்றாள். 

 

சிவப்பு வண்ண டாப்ஸ், மஞ்சள் வண்ண லாங் ஸ்கர்ட் அணிந்து, தலையை போனிடைல் இட்டு, பள்ளி செல்லும் பருவ பெண்ணாக, சற்று குள்ளமான தோற்றத்தில் இருந்தாள் அஞ்சலி.

 

அடர்ந்த சிகையும், அரும்பு மீசையும், மெலிவான தேகமும் கொண்டு, டீ சர்ட், ஸார்ட்ஸ் அணிந்தபடி கல்லூரி இளைஞன் தோற்றம் அரவிந்த் உடையது.

 

இவளின் இதயம் இன்னும் படபடத்தபடியே தான் இருந்தது.

அவனை தெளிவு படுத்த வழி தெரியாமல் விழித்தவள், நேராய் குளியலறை‌ சென்று வாளி தண்ணீரை பிடித்து வந்து அரவிந்த் தலையில் அப்படியே கொட்டி விட்டாள்.

 

அரவிந்த் அதிர்ந்து எழுந்து, “ஏய் கிறுக்கு, என்னடி இதெல்லாம்?” அவளிடம் கூச்சலிட,

 

“நீ தான் டா கிறுக்கு, நீ செஞ்சதைவிட நான் ஒன்னும் பெருசா செய்யல” அஞ்சலியும் அவனுக்கு இணையாக கத்தினாள்.

 

“அதான் நான் சாகல இல்ல, ஏதோ தெரியாம செஞ்சுட்டேன் விடேன்” என்றவன் அவமான உணர்வில் அவளுக்கு முகம் காட்டாது, துண்டை எடுத்து தன் ஈர தலையைத் துவட்டிக் கொண்டான்.

 

“எப்படி உன்னால அப்படி யோசிக்க முடிஞ்சது? அங்கிளையும் என்னையும் பத்தி நீ யோசிக்கவே இல்லையா?” அஞ்சலி வெதும்பி கேட்டு நிற்க,

 

தன் ஈர சட்டையை கழற்றி வீசியவன், “இதைபத்தி நீ வேற யார்கிட்டேயும் சொல்ல கூடாது. அப்பா கிட்ட கூட, புரியுதா?” என்று மிரட்டலாக சொல்லிவிட்டு, உடைமாற்றும் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

 

அஞ்சலிக்கு இப்போதே வெற்றி அங்கிளிடம் இதை சொல்லிவிட வேண்டுமென அவர் எண்களை கைப்பேசியில் அழுத்த இவள் விரல்கள் பரபரத்தன. முயன்று தவிர்த்தவள், ஓய்ந்து போய் கூடத்தின் சோஃபாவில் வந்து அமர்ந்து விட்டாள்.

 

உடைமாற்றி வந்த அரவிந்த், அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, நனைந்து ஈரம் சொட்டிய மெத்தையை தூக்கி சென்று வெயிலில் இட்டு வந்தான்.

 

அஞ்சலியின் கலக்கமான தோற்றம் அவனை தாக்க, “ஜெல்லி சாரி, இனிமே இப்படி செய்யமாட்டேன், ப்ராமிஸ்” என்றான் அவளின் பதற்றம் உணர்ந்து.

 

“எனக்கு சின்னதா கீறல் விழுந்தா கூட, உன்கிட்ட தான சொல்லுவேன் அரவிந்தா, நீயும் எல்லாத்தையும் என்கிட்ட தான ஷேர் பண்ணுவ, இப்ப என்னாச்சு உனக்கு, மைன்ட்ல இவ்வளவு பிரஷர ஏத்தி வச்சிருக்க, என்கிட்ட பேசணும்னு கூட தோனலையா உனக்கு?” என்றவள்,

 

முகம் நிமிர்த்தி, “சித்தும்மா போயிட்டா உனக்கு நாங்கெல்லாம் தேவையில்லையா? நான்… நான் உனக்கு ஒன்னுமே இல்லையா அரவிந்தா?” என்று கேட்டவளின் உதடுகள் அழுகையில் பிதுங்கின.

 

அவனை அதிகம் சந்திக்க முடியாமல் இருப்பதே அவளால் தாங்க முடியாமல் இருக்க, இவன் மொத்தமாக போய்விட முடிவெடுத்ததை அந்த சிறு பெண்ணால் தாங்க முடியவில்லை.

 

அவள் அழுகையில் துணுக்குற்று அவள்முன் மண்டி இட்டு அமர்ந்தவன், “ப்ளீ‌ஸ் அழாத ஜெல்லி, நான் செஞ்சது தப்பு தான்… சித்தும்மா இல்லன்றதை என்னால ஏத்துக்க முடியல, அவங்க என்னைவிட்டு போனதுல இருந்தே என்னால தூங்கவே முடியல வேற… அந்த ப்ரஷர்ல தான் ஏதோ முட்டாள்தனமா… விடு, ப்ராமிஸ் இனி இப்படி செய்யவே மாட்டேன்” தன் நிலை கூறி, அஞ்சலியை சமாதானப்படுத்த முயன்றான்.

 

தனக்காக அவள் கலங்குவதை இவனால் வேடிக்கை மட்டும் பார்த்திருக்க முடியவில்லை.

 

“முடியல டா, என் அரவிந்த் இப்படி செய்வான்னு நான் நினைச்சு கூட பார்க்கல… நான் லேட்டா வந்திருந்தா என்னவாகியிருக்கும்?” என்று அஞ்சலி பதற்றம் குறையாமல் தேம்ப, 

 

“ப்ச் எனக்கு தான் ஒன்னும் ஆகல இல்ல, இங்க பாரு,‌ நான் முதல்லையே ரொம்ப டயர்ட்ல இருக்கேன். நீ வேற இப்படி அழுது என்னை டென்ஷன் படுத்தாத” என்று சிடுசிடுத்தான்.

 

அஞ்சலிக்கு புரிந்தது. இப்போது அவனுக்கு ஆறுதலும் நல்ல தூக்கமும் மட்டும் தான் தேவை என்று. 

 

தன் முகத்தை அழுத்தி துடைத்து கொண்டவள், “நீ முதல்ல படுத்து நல்லா தூங்கி எழு, எல்லாம் சரியாகிடும்” என்று சொல்ல,

 

“படுத்தா தூங்கவே முடியல ஜெல்லி, கொஞ்சம் கண்ணசந்தாலும் சித்தும்மா என் தலை கோதுற மாதிரி தோனுது… அப்புறம் எப்படி தூங்க? அவங்க நெனப்பு தான் வருது” என்று நொந்துபோய் சொன்னான்.

 

“அவ்ளோ தானே நீ வா என் மடிமேல படுத்துக்கோ, நான் தலைகோதி விடுறேன் சித்தும்மா மாதிரியே” என்றவள், அவன் தலைவைக்க வாட்டமாக சோஃபாவின் கீழே தரையில் சம்மனிட்டு அமர்ந்து கொண்டாள்.

 

அரவிந்த் மறுக்கவில்லை அவள் மடியில் தலை சாய்த்து இறுக கண்மூடிக் கொண்டான். அஞ்சலியின் விரல்கள் அவனின் சிகையை இதமாக கோதி விட்டன சித்தாராவை போலவே.

 

தோழியின் மடியில் தாய்மடியின் இதத்தை உணர்ந்தவனின் கண்ணோரம் கண்ணீர் கசிந்திட, சில‌ நிமிடங்களில் ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்து விட்டான்.

 

அரவிந்த் உறங்கிய பிறகு தான் அஞ்சலியின் பதற்றமும் சற்று குறையலானது. 

 

அவனின் அம்மாவின் இடத்தை தனக்கு அளித்திருக்கிறான் என்பதே அவளுக்குள் தித்திப்பதாய்.

 

அழுகையில் சோர்ந்திருந்த அவளின் பூமுகம் இப்போது அழகாய் மலர, உறங்கி கொண்டிருந்தவனை வஞ்சனை இல்லாமல் ரசித்து கொண்டிருந்தன அவளின் விழிகள்.

 

எப்போதும் பார்ப்பவன் தான் இன்று அவள் பார்வைக்கு புதிதாய் தெரிந்தான். முதல் முறை தோழமையை தாண்டி அவனை தனக்கு மிக நெருக்கமாக உணர்ந்தாள் அவள்!

 

“நீ என் பக்கத்தில இல்லன்றப்பவே எனக்கு மூச்சு முட்டி போகுது, எப்படி நீ என்னவிட்டு போக நினைக்கலாம் மடையா?”

 

தன்னிலை மறந்து‌ உறக்கத்தில் இருப்பவனிடம் உளறிக் கொண்டிருந்தாள்.

 

“இப்பெல்லாம் உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் தெரியுமா? உன்கூட நானிருந்தா மட்டும் போதும்ற மாதிரி எல்லாம் எனக்கு தோன ஆரம்பிச்சிருச்சு! எனக்கு என்னவோ ஆகிடுச்சுனு உன்கிட்ட சொல்ல வந்தா… இப்படியா என்னை பயமுறுத்தி வைப்ப?” என்று நொடிந்து கொண்டாள்.

 

“கொஞ்சம் அழகா தான் டா இருக்க, என்ன சரியான அழுமூஞ்சியா இருக்க, விடு இனி உன்ன நான் பத்திரமா பார்த்துப்பேனாம்”

 

“அச்சோ உன்ன இப்படி சைட் அடிக்கிறேனே தப்பில்லையா டா… இதெல்லாம் உனக்கு தெரிஞ்சா என்னை லூசுன்னு தான சொல்லுவ… எனக்கே அப்படி தான் தோனுது” வெட்கங்கள் சிதற, இதழ்கள் மடித்து சத்தமின்றி சிரித்து கொண்டாள்.

 

“சரி சரி உனக்கு என்மேல இதேமாதிரி ஃபீலிங் வர வரைக்கும் நானும் நல்ல பொண்ணா நடந்துப்பேனாம்… எப்பவும் உனக்காக நான் இருப்பேனாம் அரவிந்த்” என்று ஆழ்ந்து உரைத்தவள், அவன் நெற்றி கேசம் விலக்கி, மென்மையாய் இதழ் பதித்து மீண்டாள். 

 

“ரொம்ப நாள் என்னை காக்க வைக்காத டா, சீக்கிரம் ஃபீல் பண்ணுவ இல்ல…?” 

 

இதுவும் ஒருவகை நேசம்… 

 

உனக்காகவே உன்னை நேசிக்கிறேன் என்ற உணர்வு.

 

தான் சொல்லி அவன் தன்மீது கொள்வது முழுமையான காதலாகாது, அவனாக தன்னைப்போல் காதலை உணர்ந்து தன்னிடம் வெளிப்படுத்த வேண்டும் என்று காத்திருந்தாள். அரவிந்த் தன்னை தாண்டி போகமாட்டான் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையில். 

 

எல்லாம் இப்போது தகர்ந்து போயிருக்க, உள்ளமும் உருவும் திரிந்து போயிருந்தாள் அஞ்சலி.

 

தன் மனம் அவன் மீது கொண்ட காதலை வெளிப்படுத்தாமல் மறைத்து வைத்தது தான் இவள் செய்த அடிமுட்டாள்தனம்.

 

அதனால் தான் இப்போது மொத்தமாக அவனையே தொலைத்து விட்டு வெதும்பி நிற்கும் நிலை அவளுக்கு.

 

அவனுக்காக இந்த ஏழு வருடங்கள் என்ன, அதற்கு மேலும் காத்திருக்க அவளுக்கு சம்மதம் தான். ஆனால்,

இனியும் அஞ்சலி காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

 

அவளை தாண்டி அவன் சென்ற பிறகு இனி எதற்காக காத்திருப்பது?

 

யாருக்காகவும் எதற்காகவும் அவளால் அரவிந்தை இழக்க முடியாது. அவனுக்காக அவள் எதற்கும் தயாராகி இருந்தாள். 

 

இங்கு நியாயம், தர்மம் என்ற கட்டுபாடுகளை தாண்டி செல்லவும் அஞ்சலி துணிந்து விட்டிருந்தாள்!

 

அர்ச்சனா என்னும் தடைக்கல்லை தங்களின் நடுவே இருந்து எப்படியும் அகற்றி விடவேண்டும் என அஞ்சலியின் யோசனை‌ ஓடியது.

 

இனியும் எதைப்பற்றியும் கவலைக் கொள்ளும் நிலையில் அவள் இல்லை… ஒரு முடிவுக்கு வந்திருந்தவள் அதை செயல்படுத்தவும் முனைந்தாள்…

 

****

 

நிஜம் தேடி நகரும்…