நீயில்லை நிஜமில்லை 9

நீயில்லை நிஜமில்லை! 9

 

இரவோடு சூரியன் 

நிஜமில்லை!

பகலோடு தண்ணிலவு 

நிஜமில்லை!

உன்னோடு நானும் 

நிஜமில்லை!

 

விபத்து பற்றிய விசாரணைக்காக அவர்கள் முன்பு அமர்ந்து இருந்தார் இன்ஸ்பெக்டர் நெடுமாறன், உடன் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமியும்.

 

அளவான உடற்கட்டோடு, முப்பதுகளின் வயதில் இருந்தார் நெடுமாறன். காக்கி உடையில் கம்பீரமாக தெரிந்தார். 

 

சற்று மெலிந்த தோற்றத்தில், ஆராய்ச்சி பார்வையோடு தெரிந்தார் துணை ஆய்வாளர் துரைசாமி.

 

அவர்கள் எதிரே கை, கால் முகத்தில் சிராய்ப்பு, காயங்கள், அங்கங்கே சிறு கட்டுக்கள் இடப்பட்ட நிலையில், அரவிந்தும் அஞ்சலியும் அமர்ந்திருந்தனர். 

 

இரண்டு நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து இன்று தான் அரண்மனை வந்திருந்தனர். விசாரணைக்காக அரவிந்தும் இவர்களுடன் இங்கேயே வந்திருந்தான்.

 

விபத்தை பற்றிய கேள்விகளுக்கு இருவரும் தங்களுக்கு தெரிந்த பதில்களை சொல்லிக் கொண்டிருந்தனர். 

 

“உங்க டிரைவர் பத்தி சொல்லுங்க?”  இன்ஸ்பெக்டர் நெடுமாறன் கேள்விகள் தொடர, 

 

“கொஞ்ச நாளைக்கு முன்ன தான் வேலைக்கு சேர்ந்தான். நல்லவனா தான் இருந்தான். ஆனா இப்படி முடிஞ்சிருக்க வேணாம்…” பிரபாகர் குரல் சற்று வேதனையுடன் இறங்கியது.

 

“லாஸ்ட் மினிட்ல ‘காரை கண்ட்ரோல் பண்ண முடியல, நீங்க குதிச்சிடுங்க’னு சொல்லிட்டு முன்னாடி அவன் குதிச்சுட்டான். அப்ப தப்பிக்க வேற வழியும் எனக்கு தோனல, அஞ்சலிய முதல்ல தள்ளிவிட்டு நான் அவ கூடவே குதிச்சிட்டேன்” அரவிந்த் அப்போது நடந்ததை விளக்கினான்.

 

“ம்ம் உங்க டிரைவர் குதிச்ச வேகத்தில உருண்டு போய் அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தில தலைமோதி, ஸ்பாட் அவுட்… நல்லவேளை நீங்க குதிச்ச இடத்துல புதரும் செடியும் மட்டும் இருந்ததால நீங்க வெறும் காயங்களோட தப்பிச்சு இருக்கீங்க” காவல் ஆய்வாளர் விளக்கி சொல்ல அங்கிருந்த அனைவருக்கும் நெஞ்சம் பகீரென்றது.

 

“நீங்க தான லாஸ்ட் மன்த், லாரி ஆக்ஸிடென்ட் ஸ்பாட்ல இருந்தது?” இன்ஸ்பெக்டர் அஞ்சலியிடம் கேட்க, அவள் ஆமென்று தலையசைத்தாள்.

 

“ஓஹ் ஓகே, இனிமே ஜாக்கிரதையா இருங்க, எங்கேயும் தனியா வெளியே போக வேணாம், யாராவது சந்தேகப்படும்படி உங்களுக்கு தோனினா எங்களுக்கு இம்மிடீயட்டா இன்ஃபார்ம் பண்ணுங்க…” அவர் அடுக்கிக் கொண்டே போக,

 

“இன்ஸ்பெக்டர், இது ஜஸ்ட் ஆக்ஸிடென்ட் தானே?” அஞ்சலி குழப்பமாக கேட்டாள்.

 

“எங்களுக்கு அப்படி தெரியல மிஸ் அஞ்சலி, உங்க காரோட பிரேக் ஃபெய்ல் ஆகல, கட்டாகி இருக்கு! இது பிரி பிளானட் மாதிரி தான் எங்களுக்கு சந்தேகம் வருது! அதோட அந்த லாரி இன்ஸிடென்ட்… அதுவும் உங்களை டார்கெட் பண்ணதா இருக்கலாம்…!” என்று சிறிது யோசித்தவர், 

 

“எதுக்கும் சேஃப்டியா இருங்க, எங்க இருந்தாலும் உங்க பாதுகாப்பை உறுதிபடுத்திகோங்க, நாங்க எங்களோட விசாரணையை தீவிரப்படுத்தறோம்” என்று அவர்கள் அனைவரின் தலையில் இடியை இறக்கிவிட்டு, தன் தொப்பியை தலையில் பொருத்திக் கொண்டு இன்ஸ்பெக்டர் நெடுமாறன் மிடுக்காக சென்றுவிட்டார்.

 

“ஆண்டவா… என்ன இந்த போலீஸ் காரரு இப்படி சொல்லிபுட்டு போறாரு” என்று திரிபுரசுந்தரி கலங்கி பதறிட,

 

“ம்மா, அப்படியெல்லாம் யாரும்‌ நம்ம அஞ்சு மேல கைவைக்க முடியாது. இன்ஸ்பெக்டர் டவுட்டா தான் சொல்லிட்டு போறாரு, வேற ஒன்னும் இல்ல, அஞ்சுமா வந்து ரெஸ்ட் எடு வா” என்று காதம்பரி மகளை கைப்பிடித்து எழுப்பி, அவளை தாங்கி நடந்தார்.

 

“அப்ப நானும் கிளம்பறேன் சர்” அரவிந்த் எழுந்து கொள்ளவும், நின்று திரும்பிய அஞ்சலி, “அப்பா, அவன் அங்க தனியா போய் என்ன செய்ய போறான்? உடம்பு குணமாகுற வரைக்கும் இங்கேயே தங்க சொல்லுங்க… நம்ம கெஸ்ட்ரூம் கொடுங்க” என்று சொல்லி விட்டு அவள் சென்று விட்டாள்.

 

பிரபாகரனுக்கும் அதுவே சரியென தோன்ற, வற்புறுத்தி அரவிந்தை தங்கள் அரண்மனை தோட்டத்து புறம் அமைந்திருந்த விருந்தினர் அறை ஒன்றில் தங்க வைத்தார். 

 

அரவிந்த் மேலும் எதுவும் யோசிக்க வில்லை. உடல் வலியும் மருந்தின் வீரியமும் அவனை உறக்கத்திற்கு இழுத்துச் சென்றது.

 

****

 

மறுநாள் காலை அரவிந்த் உடல்நிலை ஓரளவு தேறி இருந்தது. வலியும் குறைந்து இருக்க, எழுந்து முகம் கழுவி தயாராகி, நேரே அஞ்சலியைப் பார்க்க விரைந்தான்.

 

அன்றிலிருந்து அஞ்சலி அவனிடம் முகம் கொடுத்து பேசவில்லை. அவனை தவிர்த்தபடி தான் இருந்தாள். அரவிந்தால் அப்படி அவளிடம் விலகி போக முடியவில்லை. 

 

அஞ்சலி தன்னை காதலித்து இருக்கிறாள்! அதுவும் வருட கணக்காக! என்பதை இப்போதும் நம்புவது கடினமான தான் இருந்தது அவனுக்கு.

 

அவளை எப்படியும் சமாதானப்படுத்த வேண்டும், அவள் மனதை தெளிவிக்க வேண்டும் என்ற முடிவோடு அவளின் அறையை நோக்கி சென்றான். 

 

அதேநேரம் அர்ச்சனா, அரவிந்தை பார்க்க அந்த அரண்மனை வாசலுக்கு வந்திருந்தாள்.

 

விபத்து பற்றி தெரிந்ததில் இருந்து அர்ச்சனா ஒருபுறம் துடித்துக் கொண்டிருந்தாள். அரவிந்த் உயிரோடு மீண்டு வந்ததே அவளை சற்று ஆசுவாசப்படுத்திக் இருந்தது. மருத்துவமனையில் இரண்டு நாட்களும் அரவிந்த் உடன் தான் அவனை கவனித்துக் கொண்டு இருந்தாள். அஞ்சலி பற்றி பெரிதாக யோசிக்க தோன்றவில்லை அவளுக்கு. அவள் எண்ணம் முழுவதும் அரவிந்த்… அரவிந்த் என்று அவனை சுற்றி மட்டுமே சுழன்று கொண்டிருந்தது.

 

உடலில் இரத்த காயங்களோடு அவனை பார்த்து கலங்கி விட்டாள். 

 

‘ஏன் இப்படி?’ அவள் மனம் கிடந்து அரற்றி கொண்டது.

 

இனி தன்னவனுக்கு எந்த ஆபத்தும் நேரக்கூடாது என்று வேண்டுதல் வைத்திருந்தாள். 

 

அர்ஜுனும் விவரம் கேள்விப்பட்டு, இங்கே வருவதாக சொல்ல, அவனின் படிப்பை காரணம் காட்டி மறுத்து விட்டிருந்தாள் அர்ச்சனா. அக்காவின் பேச்சை மறுக்க இயலாது, தினமும் அரவிந்திடம் பேசுவதை வழக்கமாக்கி கொண்டான்.

 

அரவிந்த் அரண்மனையில் தங்கி இருப்பதாக நேற்றிரவு தகவல் தந்திருக்க, மனம் தாளாமல் காலையில் அவனை பார்க்க இதோ வந்து விட்டாள் அர்ச்சனா.

 

வாயில் காவலாளியிடம், அரவிந்தை பார்க்க வந்திருப்பதாக சொல்ல, காவலாளி அரவிந்த் தங்கிருக்கும் அறை பக்கம் கைகாட்டி வழி சொன்னார். 

 

அரண்மனையை சுற்றி கொண்டு அங்கே வந்த அர்ச்சனாவை வெறுமையான அறை தான் வரவேற்றது.

 

****

 

அஞ்சலியின் அறையும் வெறிச்சோடி தான் இருந்தது. 

 

அரவிந்திற்கு அவளின் பழக்கம் நினைவு வர, சுந்தரி பாட்டியின் அறைக்கு சென்று பார்த்தான். 

 

அங்கே தான் அஞ்சலி உறக்கத்தில் இருந்தாள். 

 

சிறு வயதில் இருந்தே அஞ்சலிக்கு இந்த பழக்கம் தொற்றிக் கொண்டது. சிறுமியாக கனவு கண்டு பயம் கொள்ளும் போதும், குமரியாக மனது சஞ்சலிக்கும் போதும் தன் பாட்டியிடம் வந்து படுத்துக் கொள்வாள்.

 

‘சரியான பயந்தாங்கோலி’ என்று நினைத்தபடி அவளின் அருகில் வந்தான்.

 

அஞ்சலி மட்டும் தனியாக தான் படுத்திருந்தாள். சுந்தரி பாட்டி எழுந்து சென்று விட்டார் போலும்.

 

அன்று உயிர் பயத்தில் அவசரகதியில் அஞ்சலியை தள்ளிவிட்டு, இவனும் குதித்து விட்டான் தான். ஆனால் அந்த நொடியின் படபடப்பு இன்னும் இவனுக்குள் அடங்குவதாக இல்லை. இவன் சற்று தாமதித்து இருந்தாலும் இருவரும் இன்று இல்லாமல் போயிருப்பார்கள்!

 

உடல் முழுவதையும் போர்வைக்குள் புகுத்தி முகம் மட்டும் தெரிய உறங்கிக் கொண்டிருந்தவளின் பளிங்கு முகத்தில் அடிப்பட்ட கீறல்கள் மட்டும் தனியே தெரிந்தன.

 

முகம் சுருக்கி, மெதுவாய் அவள் தூக்கம் கலைந்து இமைகள் திறக்க, அரவிந்தின் மீசைமுகம் அவளுக்கு காட்சியானது.

 

மறுமுறை இமைக்கவும் மறந்து அவனையே பார்த்தபடி படுத்திருந்தாள் அவள். 

 

தனக்கே தனக்கென உரிமையாய் எண்ணியிருந்த ஆசை முகம், இனி தனக்கு உரிமையில்லையா?

 

அவள் மனதிற்குள் இதுவரை பொக்கிஷமாக மறைத்து, மூடி வைத்திருந்த தன் காதலை முழுவதுமாக விழிகளில் தேக்கி பார்த்தபடி இருந்தாள்.

 

அவளின் இந்த உரிமை பார்வை இவனுக்குள் சங்கடம் பரப்புவதாய் இருக்க, அதை தவிர்த்தவன், “குட் மார்னிங் ஜெல்லி” அவளோடு இயல்பாக பேச முயன்றான்.

 

அஞ்சலி பதில் பேசவில்லை எழுந்து அமர்ந்தாள். ‘நானும் சனாவும் லவ் பண்றோம்’ அன்று அரவிந்த் சொன்னது இப்போதும் அவள் காதில் ஒலித்து, இவளின் இதய தசைகளை கிழிப்பது போன்ற வலியை தருவதாய்.

 

கலங்கும் விழிகளை அவனிடம் காட்டாது வேகமாக கட்டிலில் இருந்து இறங்க, அடிப்பட்ட கால் வலியெடுத்து தொய்ந்து அவள் விழவும், அரவிந்த் அவளை தாங்கி பிடித்தான்.

 

“ஹே பார்த்து ஜெல்லி, என்னாச்சு? கால் ரொம்ப வலிக்குதா?” அவன் அக்கறையாக கேட்க, அவனின் கையை உதறிவிட்டு அஞ்சலி குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

 

“அரவிந்த்…” காதம்பரி தேவியார் குரல் கண்டனமாக ஒலிக்க, அறை வாயில் புறம் திரும்பினான்.

 

“என்னோட சந்தேகம் சரின்னு நிரூப்பிக்கிற நீ ஒவ்வொரு முறையும். முதல்ல எங்க கம்பெனிக்குள்ள வந்த, நேத்து எங்க அரண்மனைக்குள்ள வந்த, இப்ப அஞ்சலி தனியா இருக்க அறைக்குள்ளயே வந்திருக்க… நான் உன்ன மறுபடி வார்ன் பண்றேன் அரவிந்த்” காதம்பரி ஒற்றை விரல் நீட்டி மிரட்ட, அரவிந்த் அவரை கூர்மையாக பார்த்தபடி நின்றிருந்தான்.

 

“உங்களுக்கு என்ன தான் பிரச்சனை ஆன்ட்டி? நான் இதுக்கு முன்ன அரண்மனைக்கு வந்ததே இல்லையா? இல்ல அஞ்சலி ரூம்க்கு வந்ததில்லையா? ஏன் என்னை யாரோ மாதிரி பார்க்கிறீங்க? கேவலமா சந்தேகபடுறீங்க? ஏதேதோ தப்பா யோசிச்சு குழம்பி பேசுறீங்க?” அரவிந்தின் நேரடியான கேள்வியில் காதம்பரி தேவியின் முகம் இருளடைந்தது.

 

“எனக்கு உன்மேல இருந்த நம்பிக்கை போயிடுச்சு அரவிந்த், போன மாசம் வரைக்கும் நாங்க சந்தோசமா நிம்மதியா இருந்தோம், எப்போ நீ இங்க வந்தியோ, அப்ப இருந்தே ஏதேதோ பிரச்சனை தலையெடுக்குது, இப்ப அஞ்சலியோட உயிருக்கு ஆபத்துன்ற வரைக்கும் வந்து இருக்கு, எனக்கு தெரியும் இதுக்கெல்லாம் நீ தான் காரணம்” அவரும் நேரடியாக குற்றம் சாட்ட,

 

“என்னை எப்படி நீங்க சந்தேகபடலாம் ஆன்ட்டி? நிஜமா உங்களுக்கு மூளை குழம்பி போய் இருக்கு போல, நல்ல டாக்டரா போய் பாருங்க” என்று ஆத்திரமாக தொடங்கி, சற்று நிதானித்து சொன்னவன், மேலும் அங்கே நிற்காமல் சென்று விட்டான்.

 

இவர்கள் பேச்சு காதில் விழுந்தும் அதன் சாரம் அஞ்சலியின் மூளையில் பதிவாகவில்லை. அவளின் யோசனை, சிந்தனை, அறிவு அனைத்தையும் அடைத்து இருந்தது அரவிந்தின் மீது அவள் கொண்ட நேசம்.

 

எந்தளவிற்கு என்றால் அன்று தாறுமாறாக ஓடிய காரை உணர்ந்தும் அவளுள் சிறிதும் உயிர் ஆபத்து பற்றிய பயம் எழவில்லை. அவளின் மனம் முழுவதும், ‘அரவிந்த் தன்மீது காதல் கொள்ளவில்லை. தன்னை விடுத்து வேறொருத்தியை நேசிக்கிறான்!’ என்பதே சுற்றி சுழன்று அவளை நிலைக்குலையச் செய்து கொண்டிருந்தது.

 

இப்போதும் கூட…

 

சாற்றிய குளியலறை கதவில் சாய்ந்து வழியும் கண்ணீரில் கரைந்தபடி நின்றிருந்தாள் அஞ்சலி. அதிக நேரம் நிற்க, உடலிலும் மனதிலும் தெம்பின்றி சரிந்து கீழே அமர்ந்து கதறி விட்டாள்.

 

இதற்கு முன்  நினைவு தெரிந்து  எதற்காகவும் இப்படி கதறியது இல்லை. அப்படி ஒருநிலை வந்ததும் இல்லை. எப்போதும் எந்த இக்கட்டான சூழலிலும் திடமாக சிந்தித்து செயல்படும் குணம் கொண்டவள். எல்லாவற்றுக்கும் சேர்த்து இப்போது அழுது கரைந்து கொண்டிருந்தாள் அஞ்சலி.

 

****

 

காதம்பரியின் பேச்சில் எரிச்சலோடு தான் தங்கியிருந்த அறைக்கு வந்தவனுக்கு, அங்கே எதிர்பாராமல் தன் தேவதையின் தரிசனம் கிடைக்க  தேங்கி நின்றான்.

 

கோபம் உமிழும் பார்வையோடு அவனுக்காக காத்திருந்த அர்ச்சனா, அவனை பார்த்தும் முகத்தை திருப்பி கொண்டு அமர்ந்து விட்டாள்.

 

தொழிற்முறை பெரும்புள்ளி விருந்தினர்களுக்காகவும்,‌ பெரிய குடும்ப சொந்தங்களுகாகவும் விசாலமாக, அனைத்துவித வசதிகளுடனும்  வடிவமைக்கப்பட்டிந்த விருந்தினர் அறை அது. 

 

முன்புறம் சிறிய ஹால் போன்று அமைத்து அதில் உயர்ரக பெரிய சோஃபா, பெரிய திரை தொலைக்காட்சி, சிறிய அளவிலான குளிர்சாதன பெட்டி பொன்ற‌ அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் அமைக்கப்பட்டிருந்தது.

 

தரையில் விரித்திருந்த கம்பளம், சுவரில் அணிவகுத்த அழகு பொருட்கள் எல்லாம் செழிப்பையும் ரசனையையும் பறைசாற்றின.

 

சற்று உட்புறமாக கட்டில், மெத்தை, அதனோடு இணைந்த குளியலறை, கப்போர்ட் வசதிகள் என அனைத்தையும் அரவிந்த் பார்வை ஒருமுறை சுற்றி வந்தது. 

 

நேற்றைய களைப்பில் வந்தவுடன் படுத்து உறங்கி விட்டிருந்தான். காலையில் அஞ்சலியை பார்க்க  கிளம்பும் வேகத்தில் அறையை கவனித்திருக்கவில்லை.

 

இப்போதும் கவனிக்க இவன் புருவங்கள் மெச்சலாக ஏறி இறங்கின. அந்த அழகான அறையில், உயிர் கொண்ட சிற்பம் போல அமர்ந்திருந்தாள் அர்ச்சனா.

 

அரவிந்தின் கோபதாபமெல்லாம் அவளை பார்த்தும் எங்கோ சென்று ஒளிந்து கொண்டன.

 

அவளின் கோப முகம் கூட, இவனை அவளிடம் ஈர்க்க தான் செய்தது.

 

“என்னை தான பார்க்க வந்த, அப்புறம் இப்படி முகத்தை திருப்பிகிட்டா என்ன அர்த்தம்?” என்று அவளை தன்புறம் திருப்பி, அருகில் அமர்ந்தான்.

 

“உனக்கு வீடு, வாசல் தான் இருக்கில்ல, இப்ப ஏன் இங்க வந்து தங்கி இருக்க?” அவன் இங்கே தங்குவதில் விருப்பமில்லை என்பதை கார பேச்சில் வெளிப்படுத்தினாள்.

 

“அங்க தனியா தான இருக்கேன், கொஞ்சம் உடம்பு குணமாகுற வரைக்கும் இங்கேயே இருக்க சொல்லி…”

 

“உங்க அஞ்சலி சொன்னாங்களாக்கும்” அவன் ஆரம்பித்த வாசகத்தை இவள் முடித்த வேகத்தில், அரவிந்த் வாயடைத்து கொண்டது.

 

“சண்ட போட தான் என்னை தேடி இங்க வந்தியா சனா?” அரவிந்த் பேச்சை மாற்ற முயல,

 

“ஆமா, இப்பவே எனக்கு ரெண்டுல ஒன்னு தெரிஞ்சாகனும், உனக்கு நான் முக்கியமா? இல்ல அவங்க முக்கியமா?” 

அர்ச்சனா அவனை விடுவதாக இல்லை.

 

“என்ன மாதிரியான கேள்வி இது? நீ என்னோட லைஃப் சனா, என்னோட சேர்ந்தவ. அஞ்சலி என்னோட ஃப்ரண்ட்…”

 

“ஆனா, அவங்க உன்ன ஃப்ரண்டா மட்டும் நினைக்கலையே அரவிந்த்! அதான இங்க பிரச்சனை” அர்ச்சனா அவனிடம் வாதத்தை தொடங்க, அரவிந்திற்கு இவளிடம் எப்படி சொல்லி புரியவைப்பது என்று விளங்கவில்லை. தனக்கும் அஞ்சலிக்கும் இடையேயான பிணைப்பு வாதத்திற்கு அப்பாற்பட்டதென்று.

 

“சனா, நீ முதல்ல டென்ஷன் ஆகாம நான் சொல்றதை பொறுமையா கேளு ப்ளீஸ்” அரவிந்த் கெஞ்சவும் இவள் சற்று அமைதியானாள்.

 

“கின்டர்கார்டன்ல இருந்து நாங்க ரெண்டு பேரும் ஃப்ரண்ஸ், எங்களுக்கு நடுவுல ஒளிவு மறைவுன்னு எதுவுமே இருந்ததில்லை. அஞ்சலி எப்ப என்ன நேசிக்க ஆரம்பிச்சா, ஏன் அதை எங்கிட்ட சொல்லாம மறைச்சா எனக்கு சுத்தமா புரியல. அவ என்னை லவ் பண்றதை இன்னும் கூட என்னால நம்ப முடியல” அரவிந்த் சொல்லி நிறுத்த,

 

“எனக்கும் ஒரு விசயம் விளங்கல அரவிந்த்? அஞ்சலி ஃபிரண்ஷிப் பேருல உன்ன ஏமாத்தி இருக்காங்க, அதுக்காக உனக்கு கோபமே வரலையா? எனக்கு அப்படியே பத்திகிட்டு வருது” அர்ச்சனா ஆத்திரத்தை அடக்கிய குரலில் கேட்டாள்.

 

“இதுல கோவபட என்ன இருக்கு? மனசுக்கு தான் கஷ்டமா இருக்கு. அஞ்சலிய எப்படியாவது சமாதானப்படுத்தலாம்னு பார்த்தா, அவ என்கிட்ட பேச கூட மாட்டேங்கிறா” என்று தலையைக் கோதிக் கொண்டான்.

 

“உங்களுக்கு அவங்களபத்தி இவ்ளோ கஷ்டமா இருந்தா, நீங்க பேசாம அவங்களையே லவ் பண்ணுங்க சர், அவங்களையே கல்யாணம் செஞ்சுகோங்க, உங்க அஞ்சலி ரொம்ப சந்தோசப்படுவாங்க” அர்ச்சனா கடுப்பாக மொழிய,

 

“ஏன் இப்படி எல்லாம் பேசுற சனா? உனக்கு என்மேல நம்பிக்கை இல்லனா நேரடியாவே சொல்லிடு” அரவிந்திற்கும் கோபமேறியது.

 

“எப்படி உன்ன நம்ப முடியும்‌ அரவிந்த்? நீ என்னையும் விட்டு கொடுக்க மறுக்கிற, அஞ்சலியையும் விட்டு கொடுக்க மறுக்கிற? எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல எப்ப நீ எந்த பக்கம் சாய்வன்னு உனக்கே புரியல, இதுல நான் உன்ன நம்பனும் வேறையா?”

 

“இவ்ளோ சீப்பாவா நீ என்னை நினச்சிருக்க சனா? நான் ஒன்னும் மரத்துக்கு மரம் தாவுற குரங்கு இல்ல உன்ன விட்டு அவகிட்ட தாவறத்துக்கு. இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்கோ என்னோட லவ், ஃபியூச்சர் நீ‌ மட்டும் தான்…! 

 

அதுக்காக அஞ்சலி எப்படி வேணா போகட்டும்னு என்னால விட முடியாது. நான் எத்தனையோ முறை மனசலவிள உடஞ்சு ஓஞ்சி போனப்பெல்லாம் என்னை தாங்கி பிடிச்சது அவதான். எனக்கு ஆறுதலா சப்போட்டா இருந்ததும் அவ மட்டும் தான். இப்ப அவ உடஞ்சி போயிக்கா, அவளை இப்ப தூக்கி நிறுத்த வேண்டிய கடமை எனக்கிருக்கு. இப்ப இல்ல எப்பவும் அஞ்சலிக்கு நான் சப்போட்டா இருப்பேன் அவளோட நல்ல ஃப்ரண்டா, போதுமா?” 

 

அரவிந்தின் நீளமான பேச்சில் இப்போது வாயடைத்து நிற்பது அர்ச்சனாவின் முறையானது.

 

அங்கே சில நிமிடங்கள் அமைதி நீடித்தது.

 

“சரி அரவிந்த் உன் இஷ்டம், நான் இனிமே அவங்களபத்தி பேச விரும்பல” அர்ச்சனா முடித்துவிட,

 

“நீ அஞ்சலிய தப்பா நினைக்காத சனா, அவ ரொம்ப நல்ல பொண்ணு. லைக் குழந்தை மாதிரி அவ, எடுத்து சொன்னா புரிஞ்சுக்குவா, நீ அவள வெறுத்துடாத, நீங்க ரெண்டு பேரும் இப்படி எதிரும் புதிருமா இருக்கிறது எனக்கு பிடிக்கல” என்றான்.

 

அவனை முறைப்பாக பார்த்தவள், “உன் அஞ்சலி பேசின பேச்சுக்கு என்னை என்ன அவ கூட கொஞ்சி குலாவ‌ சொல்றீயா? எவ்வளவு அழுத்தமா‌ சொன்னாங்க தெரியுமா? ‘நீ அவளுக்கு மட்டும் தான் சொந்தமானவன்’னு அந்த வார்த்தைய கேட்டு நான் எவ்ளோ துடிச்சு போனேன் தெரியுமா? 

 

எனக்கு என்னவோ அஞ்சலி இதை இப்படியே விடுவாங்கன்னு தோனல, நினைச்சதை அடையனும்ற பிடிவாதம் எல்லா பணக்காரங்க ரத்தத்தோடவும் ஊறி போயிருக்க விசயம். நம்ம விசயத்துல அவங்கள நான் சுத்தமா நம்ப மாட்டேன் அரவிந்த்” என்று படபடத்துவிட்டு கிளம்பி விட்டாள்.

 

அரவிந்திற்கு தலையை பிய்த்துக் கொள்ள வேண்டும் போல் என்றிருந்தது. 

 

சனாவுடன் இனிதாக பொழுதை கழிக்க இவன் காதல் மனம் ஏக்கம் கொள்ளதான் செய்தது. ஆனால் இந்த சூழலில் பேச பேச பிரச்சனை தான் அதிகமாகும் என்றும் தோன்றியது.

 

இதற்கெல்லாம் எப்போது முடிவென்று இப்போதே அவன் உள்ளத்தில் அலுப்பு தட்ட ஆரம்பித்தது!

 

****

 

நிஜம் தேடி நகரும்…