நுட்பப் பிழையவள் (3)

ei8A7K447279-5e86b980

 

 

 

3

 

   “`சில சமயங்களில்…“`

 

இதமான மஞ்சள் மாலைப் பொழுதது.

அந்த வங்கியும் வழமைப் போலவே மெல்லிய பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்து. அதை தூரத்தில் அந்த வேப்ப மரத்தடியில் சிறு துண்டு  நவாப் பழமாய் தனது வண்டியை நிறுத்திவிட்டு அதன் மேல் சாய்ந்து நின்றபடி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். அவள் இமையா.

 

உள்ளே…

ஏற்கனவே அவசர அவசரமாய் கிளம்பிக்கொண்டிருந்தவள்தான்.. இருந்தும் இமையாவை அங்கு கண்டதிலிருந்து அபியிடம் வேகம் வெகுவாய் கூடியிருந்தது என்னவோ உண்மைதான். கூடவே விஷயம் அறிந்த சிலரின் சிற்சிறு சினேகமான கேலி கிண்டல்களை சிறு புன்னகை ஒன்றுடன் சமாளித்தவாரே வெளியேறினாள் அபி. அன்று அவள் மீதி நேரத்துக்கு விடுப்பு சொல்லியிருந்தாள். காரணம் யாதென்று கேள்வி வரவே சொல்லவேண்டியதாகிப் போனது… அவளை பெண் பார்க்க வருகின்றனர் என்று… அதற்குதான் இந்த கேலியும் கிண்டலும்.

 

வாசலுக்கு வந்தவளின் முன் எதிர் திசையில் கருப்பு ஜீன்ஸ், சிவப்பும் கருப்புடனான  இடை இடையில் வெள்ளி மற்றும் ஊதா கோடுகளுடன் முழங்கை வரை மடித்துவிடப் பட்டிருந்த முழுக்கை சட்டையும், கண்களில் கூலர்ஸுமாய் கைகளை நெஞ்சுக்கு நேராக கட்டிக்கொண்டு ஒற்றை காலை மடக்கி வைத்தபடி நின்றிருந்த இமையாவையே பார்த்திருந்தவளின் இதழ்களில் தாமாய் மலர்ந்தது சிறு முறுவல். காரணம், சட்டென எழுந்த நினைவு, ஐந்து நிமிடத்திற்கு முன் அவள் ஏதேட்ச்சையாய் கேட்க நேர்ந்த உரையாடல்.

 

அபி வெளியில் வருவதையே பார்த்திருந்ததாலோ என்னவோ அவளது சிரிப்பு துளி தப்பாமல் இவள் கவனத்தில் விழுந்தது. அதுவும் நெருங்க நெருங்க பலம்பெற்றுக்கொண்டல்லவா இருந்தது.

 

“சொல்லிட்டு சிரிக்கலாம்…” – இமையா

 

இவள் கேட்டதும் காத்திருந்ததுபோல் எழுந்த நகைப்பொலி ஒன்றுடன் தன்னை நிதானப்படுத்திக் கொள்வதைப்போல,

 

“ஹா… உண்மையாவே நீ பாய்ஃப்ரெண்ட் மெட்டீரியல்தான் போல…” – அபி

 

புரியாத பார்வை ஒன்று இவளிடம்

“என்ன!?” – இமையா

 

“அது… உள்ள இரண்டு பேரு பேசிட்டிருக்கத கேட்டேன்… ரெண்டு ஃப்ரெஷர்ஸ், அதுல ஒருத்தி சொல்றா நீ சரியான பாய்ஃப்ரெண்ட் மெட்டீரியலாம்…” – அபி

 

மெல்லிய புன்னகை இன்னும் அவளிதழ் விட்டு இறங்கியிருக்கவில்லை.

 

“அப்படினா?” – இமையா

 

“அப்படினா ஒரு டிபிக்கல் பாய்ஃப்ரெண்டா இருக்கதுக்கான எல்லா தகுதியும் உனக்கிருக்காம்…” – அபி அதே சிரிப்புடன்.

 

“கஷ்டகாலம்! அதுக்கு நீ ஏன் சிரிக்கற?” – இமையா

 

“இல்ல… அவ சொன்னப்போ என்ன இது மெட்டீரியல் அது இதுனு மட்டும்தான் யோசிக்கத் தோணுச்சு, ஆனா உன்ன இங்க இப்படி நீ ஒரு கால மடக்கி வச்சிட்டு சாஞ்சு நிக்கறத பாக்கறப்போதான் அவ ஏன் அப்படி சொன்னானு தெரியுது” – அபி

 

இமையாவிற்கு புரிந்தது. அன்றைக்கான படபடப்பில் இந்த காரணமற்ற சிரிப்புக்கும் பங்குண்டென… அபியின் சிரிப்பும் பதட்டத்தில்தான் என்பதை இவளால் முழுதாய் உணர முடிந்தது. 

 

“சத்தமா சொல்லாத என் ஃப்யூச்சர் டேட்டிங் ஆப்ஷன் குறைஞ்சிடப்போது” – இமையா

 

இமையாவின் பார்வை வேறிடம் செல்ல அதையுணர்ந்து  திரும்பியவளின் பார்வையில் அந்த பக்கத்து பேக்கரியில் அமர்ந்திருந்தவன்பட்டான்.

 

“ஒரு மணி நேரம் யாராவது காத்திட்டிருப்பாங்களா!? அதுவும் இந்த வெய்யில்ல… போரடிக்கல?” – அபி

 

“நான் காத்துட்டிருப்பேனே. வெய்யிலா? நல்லா பாரு வேப்ப மரத்தடியில நின்னுட்டிருக்கேன்… அதுமட்டுமில்லாம இவ்வளோ ஸ்வீட்டான பேக்கரியொன்னு கண்ணு முன்ன இருக்கும்போது போரடிக்குமா?” – இமையா

 

இமையா அப்படிதான். சில சமயங்களில் ஐந்து நிமிடங்கள் காத்திருக்கும் பொறுமை இல்லாது பறப்பவள் சில சமயங்களில் இதோ இதைப்போல… ஐந்து மணி நேரமானாலும் அசராமல் காத்துக்கிடப்பாள்.  சில சமயங்களில் அபியின் அவதானிப்புகளுக்கே அப்பார்ப்பட்டது அவளது மனம்.

 

“அப்படி பாக்காத அவருக்கு அன்னீஸியா இருக்கப் போகுது” – அபி

 

“??” -இமையா

 

“நம்மள யாராவது பார்த்துட்டேயிருந்தா ஒரு மாதிரி இருக்காதா? அந்த மாதிரிதான அவனுக்குமிருக்கும்?” – அபி

 

அபி தீவிரமாய் இதை உரைக்கிறாள் என்பதை உணர்ந்தவள்,

 

“அதான் கூலர்ஸ் போட்டிருக்கேன்ல” – இமையா

 

கண்சிமிட்டி உரைத்தவளையே ஒரு கணம் பார்த்தவள் கணித்துவிட்டாள் இன்னதென..

 

“சீண்டிப் பாக்கறீயா நீ!?” – அபி

 

“பிங்கோ! (BINGO!)” என்று புன்னகைத்தவாரே கதவை அபிக்கு திறந்துவிட்டு அவளும் அமர்ந்தாள்.

 

உண்மையில் இமையாவின் பொழுது அந்த பேக்கரியை வேடிக்கைப் பார்த்ததில்தான் கழிந்தது. ஆனால் அது அந்த அழகனாலன்றி அவனது பக்கத்து மேசையில் அமர்ந்திருந்த குட்டி குடும்பம் ஒன்றால். அம்மா அப்பா மூன்று வயது மகளென இனிமையான சூழலில் மகள் செய்யும் சிற்சிறு விஷயங்களையும் கண்டு பூரிக்கும் அந்த இளம் தம்பதியையும் அரவணைப்பின் கதகதப்பு தரும் இதத்தில் அங்குமிங்குமாய் ஓடி அவர்களையும் தன் பின்னால் ஓட வைக்கும் குழந்தையிடத்திலும்தான் இவளது கவனம். 

 

சில சமயங்களில் இம்மாதிரியான காட்சிகள் அவளுக்கு அத்தனையாய் ரசிப்பதில்லை. சில சமயங்களில் இதைவிட ரசனையான காட்சி இருப்பதாய் அவளுக்கு தோன்றுவதில்லை.

 

திருப்பத்தில் வண்டியை திருப்பியவாரே,

 

“எங்க போகனும்?” – இமையா

 

“அம்மா பார்லர் போய்ட்டு வரச் சொன்னாங்க” – அபி

 

அபியை திரும்பிப் பார்த்தவள் ஒரு கணம்  அவளிலேயே கவனம் பதித்துவிட்டு,

 

“போக வேண்டியது பார்லருக்கு இல்ல” – இமையா

 

“என்ன?” – அபி

 

பதிலின்றி வண்டியை திருப்பியவள் அடுத்த ஐந்து நிமிடத்தில் வண்டியை ஓரிடத்தில்  நிறுத்திவிட்டு அபியிடம்,

 

“இறங்கு அபி” என்றாள். இறங்கிய அபியின் முன் இருந்தது ஐஸ்கிரீம் பார்லர்.

 

“இந்த பார்லர் இல்ல” – அபி

 

“தெரியும். கைய பாரு இப்பவே குடிக்க கிடைக்காத மொடா குடிகாரியாட்டம் நடுக்கம்! இப்படியே போனா கையில குடுக்க வேண்டிய காப்பிய மாப்பிள்ளை தலைல ஊத்திருவ!!” – இமையா

 

“நீயும் உன் உவமையும். காபி குடுக்கற சீன்லாம் இருக்காது மீ” – அபி

 

“இது நிம்மதியா இல்ல வருத்தமா?” – இமையா

 

“ரெண்டுமில்ல தகவல்” – அபி

 

“எல்லாத்தையும் முறைப்படி செய்யனும்னு செய்யறவங்க இதையும் செஞ்சிருக்கலாம் போலவே…” – இமையா

 

இவளது கேலி உணர்ந்த அபி தோளில் பட்டென தட்டியவாறு

 

“ம்ம்… அந்த விஷயத்தில மட்டும் அவங்க இன்னைய ட்ரெண்ட்க்கு வந்துட்டாங்க” – அபி

 

“அது சரி!” – இமையா

 

வழமைப்போல அபிக்கு பிடித்தமான பட்டர்ஸ்காட்ச்சை வாங்கி அவள் கையில் திணித்துவிட்டு தானும் ஒன்றை உண்டுவிட்டென வண்டியை கிளப்பினாள். 

 

ஒவ்வொன்றாய் பேசிக்கொண்டே வந்தவர்கள் ஒரு கட்டத்தில்,

 

“ப்ச்! ஐஸ்க்ரீம் இப்போ சாப்பிட்டிருக்க கூடாது மீ” – அபி

 

“ஏன் அப்படி சொல்ற?” – இமையா

 

“இப்போ பசிக்க ஆரம்பிச்சிட்டு” – அபி

 

பாவமாய் உரைத்தவளின் முகத்தை காணாவிடினும் அதிலிருக்கும் சிணுங்கலை உணர்ந்த இமையாவின் இதழ்களில் மெல்லிய முறுவல். அப்படியே இடக்கையை நீட்டி டாஷ் போர்ட்டை திறந்துவிட்டு

 

“அதுல சாக்லெட் இருக்கும் அபி” என்றுவிட்டு சாலையில் கவனம் பதித்தாள் இவள்.

 

தேடிய அபியின் கையில் சாக்லெட் மட்டுமின்றி சிறியளவிலான அழைப்பிதளும் அகப்பட அதை கையிலெடுத்தவள் அதே கேள்வி பாவம் மாறாது, “இதென்ன மீ?” என்று கேட்டாள்.

 

ஒரு கணம் பார்வையை அவள் கையில் இருந்ததில் பதித்துவிட்டு மீண்டும் சாலையில் கவனமானாள் இமையா.

 

“பிரிச்சு பாரு” – இமையா

 

கொஞ்சமும் கேள்வி குறையாது பிரித்தவளின் முகத்தில் மெல்லிய ஆச்சர்யத்துடனான ஆனந்தம் கலந்திருந்தது. அதை மறையாது இதழிலும் தவழவிட்டவாரே

 

“ஹே!! இது… நீ அன்னைக்கு சொன்ன அவங்க தானே!?”

 

“ம்ம்” என்று புன்னகையால் பதிலளித்தாள்.

 

“வாவ்!! பரவால்ல மீ… யார் என்ன சொல்லுவாங்கன்றத தாண்டி… செமல!? என்னைக்கு??” – அபி

 

“ம்ம்…இந்த ‘அவனா நீ’ கைண்ட் ஆஃப் க்ராப் ஜோக்ஸ்-க்கு மத்தியில இது பெரிய முடிவுதான்… என்ன பண்றது… நாமதான் இன்னும் ஆண்கள் அழுவது சரியா? பெண்கள் குடிப்பது கலாச்சாரமாங்றத தாண்டியே வரலையே…” – இமையா

 

“ம்ம்… மறுக்க முடியாத உண்மை. நீ அன்னைக்கு சொன்னப்போக்கூட அவ்ளோவா தெரியல… இப்போ இதை பார்த்தப்பறம்தான் முழுசா உணர முடிது.” என்றவள் நினைவு வந்தவளாய், “ஹே! எல்லாரும்லாம் அப்படியில்ல மீ”

 

“ம்ம் ஆமா ஆமா… அந்த முக்கால்வாசிய தவிர” – இமையா

 

அவளது கேலி புரிந்துவிட அவள் தோளில் அடித்தாள் “உன்ன!!”

 

“அதை நீயே வச்சிரு அபி. டேட் பார்த்து வச்சுக்கோ… போயிட்டு வரலாம். என்ட்ட இருந்தா மறந்துடுவேன்” – இமையா

 

சரியென்பதாய் தலையசைத்து அதை தோள்பையினுள் வைக்கும்பொழுதுதான் நினைவிலாடியது. அவள் பைக்குள் இருந்து சிரித்த அந்த புதினம்.

 

“மீ!! இந்த எழுத்தாளரோட  சமீபத்திய கதை வாசிக்கனும்னு சொன்னல்ல?” – அபி

 

அவளது கேள்வியும் அவள் கையில் புத்தக வடிவில் எதையோ பிடித்திருப்பதும் ஓரக்கண்ணில் வரிவடிவமாய் தெரிந்துவிட இவளுக்குப் புரிந்துப்போனது அபி அதை வாங்கிவிட்டாளென…

 

“வாங்கிட்டியா!?” – இமையா

 

“ம்ம்… வாசிச்சும் முடிச்சாச்சு!!” – அபி

 

“ஒரே நாள்லையா?” – இமையா

 

“நீ வேற… காலைலதான் டெலிவராச்சு” – அபி

 

“அப்போ நீ பேங்க்ல வேலை பார்க்கல…” – இமையா

 

“வேண்டாம்னா விடு!” – அபி

 

“சரி சரி!! வழக்கம்போல…” – இமையா

 

“ம்ம் இரு…” – அபி

 

இமையாவிற்கு ஒன்றும் கதைகளின்மேல் அத்தனை ஈர்ப்பெல்லாம் இருந்துவிடவில்லைதான். ஏன் சிறு வயதில் கலர் கலராய் கண்சிமிட்டிய காமிக்ஸ் புக்ஸ்கூட அவளை அத்தனையாய் ஈர்த்ததில்லை. ஆனால் அதெல்லாம் அவளுக்கு அபியெனும் ஒருத்தி அறிமுகமாகி, பிறகொரு நாள் அவள் கையில் தடியாய் ஒரு புத்தகத்தை காணும்வரைதான்.

 

அந்த இமையாவிற்கு கதைகளில் விருப்பமிருக்கவில்லைதான் ஆனால் அபி மீது அலாதி அன்பிருந்தது. அப்படிப்பட்ட அபி தீவிரமாய் ஆழ்ந்து வாசிக்கும் அப்புத்தகத்தில் அப்படியென்ன இருக்கிறதென்ற தேடலே அவளது வாசிப்பின் தொடக்கம். அவள் அபியை அறிந்துக்கொள்ளவே வாசிக்கத் தொடங்கினாள். அவளது பிடித்தம் பிடித்தமின்மைகளை உணர நினைத்தாள். 

 

அந்தப் பழக்கம் இன்றும் தொடர்கிறது. இன்றும் அபி வாசித்து முடிக்கும் புத்தகங்கள் அனைத்தும் இவளிடம் வந்துவிட்டே பிறகு அபியின் அலமாரிக்குச் செல்லும். அதனுடனே அபியின் பிரத்யேக கதைச் சுருக்கமும்..!!

 

“இதுதான் மீ” என்று முடித்தவள் இமையா குழப்பமாய் இருப்பதுபோல் தெரியவும்.

 

“நீ என்ன நினைக்கற?” – அபி

 

“என்ன?” – இமையா

 

“இல்ல… ஒரு பக்கம் எல்லாத்துலயும் தி பெஸ்ட்டா இருக்கற அவளையே சுத்தி சுத்தி வர வுமனைஸர்/ ப்ளேபாய் ரகத்துல ஒருத்தன்… இன்னொரு பக்கம் எல்லாத்துலயும் நியாயமா ஊருக்கு நல்லவனா இருந்துட்டு அவக்கிட்ட ஆதிக்கம் செலுத்தர இன்னொருத்தன்… இதுல அவ முடிவு என்னவா இருக்கும்?” – அபி

 

இதழோரத்தில் சிறு வளைவொன்றுடன், “இதென்ன மல்ட்டிபிள் சாய்ஸ் கேள்வியா அபி?”

 

“சொல்லு மீ” – அபி

 

அவள் பதிலுரைத்தாள். அவளது பதிலில் அபியின் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாய் தெரிந்தது.

 

“எப்படி??” – அபி

 

“ஏன்?” – இமையா

 

“உனக்கு இவங்க கதைகள் பிடிக்கறதில்ல அதிசயமே இல்ல!! அவளும் அதே முடிவத்தான் எடுத்தா…” – அபி

 

“ஹே!! ஸ்பாய்லர்!!!!” – இமையா

 

“ஆமா போ… கதையவே சொல்லிட்டேனாம்… க்ளைமாக்ஸ சொன்னதுல ஸ்பாயலரா… ரோட்ட பாத்து ஓட்டு மீ” – அபி 

 

சின்ன சின்ன பேச்சுக்களுடன் பார்லரில் வேலையை முடித்துக்கொண்டு வீடு திரும்பினர் இருவரும்.