நுட்பப் பிழையவள் (4)

4

 

             “` நூலிலாடும்…“`

 

வாசலில் பெரிய கோலத்தில் தொடங்கி அவ்வீடே சற்று எளிமையான பூ அலங்காரத்துடன் அந்நிகழ்வுக்கு தயாராகி நின்றது. ஒரு சில நெருங்கிய உறவுகள் மட்டும் வந்தபடியிருந்தனர். மற்றபடி தானாய் சொன்னால் மட்டுமே இவையனைத்தும் பார்ப்பவர்களுக்கு மறுமுறை எடுப்பாய் தோன்றும்.

 

அபி வீட்டினுள் நுழையும்பொழுதே அவளுக்காகவே காத்திருந்த வஸந்தி, அபியின் அம்மா விறுவிறுவென வீட்டினுள் நுழைந்தவளிடம் வந்தவாறே, “எப்போ வரச் சொன்னா எப்ப வர்ற? இன்னைக்கும் அவளோட சேந்து ஊர்ச்சுத்திட்டுத்தான் வரனுமா!? எல்லாம் உங்கப்பாவ சொல்லனும் பொட்டப்புள்ளைக்கு செல்லத்தக் குடுத்து கெடுத்துருக்காரு!”

 

அவரது குரலில் இருந்த படபடப்பு நேரமாகிவிட்டதனால் என்பதை உணர்ந்தவள்

 

“அம்மா…” – அபி

 

“என்னவோ… உன் அத்தக்காரி அப்போவே கேக்க ஆரம்பிச்சிட்டா… யார் வாயிலும் விழாமதானே கண்ணு உன்ன இருக்கச் சொல்றேன்…” – வஸந்தி

 

எங்கு யாரேனும் தன் மகளைப் பற்றி ஏதேனும் பேசிவிடுவரோ என்ற பயத்தில் குழைந்து அபியின் நாடி பிடித்தபடி கேட்டது அன்னையின் குரல்.

 

“ஊர் வாய் பொல்லாதது கண்ணு” – வஸந்தி

 

“அதான் சீக்கிரம் வந்துட்டேன்ல மா…” – அபி

 

“இந்த அடம் மட்டும் அப்படியே அவர கொண்டிருக்கு!!” என்று செல்லமாய் வைதவர் வாசல் புறம் பார்வையை ஒரு முறை பதித்துவிட்டு “எங்க அவ?”

 

“எவ?” – அபி

 

“அதான் எப்பவும் உன்கூட ஒட்டிக்கிட்டே திரிவாளே உன் ஃப்ரெண்டு..” – வஸந்தி

 

“அம்மா!” – அபி

 

“வரலைன்ன விடு நல்லது” – வஸந்தி

 

“அம்மா… ஏன்மா..” – அபி

 

அபி அலுப்பும் கடுப்புமாய் தொடங்கும் முன்னரே அத்தனை நேரம் வாசலில், வஸந்தி பேசியதைக் கேட்டபடி ஒரு கணம் நின்றுவிட்ட இமையா உள்ளே நுழைந்தாள்.

 

“அபி இதை வண்டியிலையே விட்டுட்ட பாரு!!” – இமையா

 

இவர் பேசியதை அவளும் கேட்டிருக்கிறாள் என்பதை இருவராலும் உணர முடிந்தது அபியின் பார்வை வஸந்தியை வருத்தமும் கோபமுமாய் நோக்க, வஸந்தி அவரது பார்வையிலேயே அவரது பிடித்தமின்மையைக் காட்டியபடி நின்றிருந்தார். அவரிடம் இமையாவிற்காக வெறும் அலட்சியம் மட்டுமே.

 

இதையனைத்தையும் பார்த்தும் பாராததைப்போல மென்சிரிப்புடன் அபியை அவளறைக்கு தள்ளிச் சென்றாள் இமையா.

 

அபியின் அறையில்…

 

“இப்போ ஏன் முகத்த இப்படி வச்சிருக்க அபி?” – இமையா

 

“அம்மா பேசினத நீ கேட்டதானே?” – அபி

 

பதிலேதுமில்லை அவளிடம்.

 

“அப்போ கேட்ட…” – அபி

 

“ப்ச்! அதுக்கென்ன இப்போ?” – இமையா

 

“அதுக்கென்ன இப்போன்னா?” – அபி

 

“அபி… முகத்துக்கு நேரா ஒன்னும் பின்னாடி ஒன்னும் என்ன பத்தி பேசறவங்களுக்கு மத்தியில ஆண்டி எவ்ளவோ மேல்… பாரு அவங்க விருப்பமின்மையைக்கூட எவ்வளவு தெளிவா காட்டினாங்க! She couldn’t even fake a smile…” – இமையா

 

“மீ??” – அபி

 

“இவ்வளவு நேரம் அந்த பார்லர்ல செய்ததுலாம் ஒன்னுமேயில்லாம போயிடும் நீ மூஞ்ச இப்படி சுளிச்சேன்னா…” – இமையா

 

இம்முறை அபியிடம் மௌனம்.

 

“அபிமா… நான் இங்க யாருக்காக வரேன்? நான் யாருக்காக வரேனோ அவ எனக்காக பாக்கறதே எனக்கு போதும்! நீ தேவையில்லாம ஆண்டிட்ட வாதம் பண்ணாத” – இமையா 

 

ஏனெனில் பல முறை அபி வஸந்தியிடம் இதற்காகச் சண்டைப் பிடித்திருக்கிறாள்.

 

இவள் என்ன சொல்லியும் அவளிடம் பதிலேதுமில்லை. அவள் முன் மண்டியிட்டமர்ந்திருந்தவள் இப்பொழுது எழுந்து நின்றாள்.

 

“அபி… என்னை ஒரு வாட்டி அணைச்சுக்கறீயா!?” – இமையா

 

மெல்லிய முறுவலொன்றுடன் இமையாவை இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள் அபி.

 

அவர்களது தொடக்கமும் இதே அணைப்பால்தான்.

 

சற்று நேரத்தில் அறையினுள் நுழைந்த வஸந்தியின் முகத்தில் சிறு படபடப்பு அதனுடனான எரிச்சல் அதையும் தாண்டிய மகிழ்வென எல்லாம் இருந்தது.

 

“ஸ்வீட்டெல்லாம் எங்க?” – வஸந்தி

 

“எந்த ஸ்வீட்?” – அபி

 

“நாம செஞ்ச பலகாரம் போகக் கொஞ்சம் ஸ்வீட் வாங்கிட்டு வரச்  சொல்லி மெஸேஜ் அனுப்பினேனே அபி” – வஸந்தி

 

“எனக்கெதுவும் வரலையேம்மா” – அபி

 

பரபரவென ஃபோனை எடுத்துப் பார்க்க அப்பொழுதுதான் கவனித்தார் அது டெலிவராகியிருக்கவேயில்லை என..

 

“சரி நான் சமாளிக்கிறேன்…” – வஸந்தி

 

“ஆண்டி நீங்க என்ன வேணும்னு மட்டும் சொல்லுங்க நான் போய்ட்டு வரேன்” – இமையா

 

‘நீயா?’ என்பதுபோல் வஸந்தி அசூசையாய் பார்க்க “அதெல்லாம் வேண்டாம் மீ..” என்று தொடங்கிய அபியிடம்

 

“இதுல என்ன இருக்கு அபி? இங்கருக்கற கடைதானே…” என்றவாரே வண்டிச் சாவியைக் கையிலெடுத்தவள் கிளம்பியும் விட்டாள்.

 

அபியின் குற்றப் பார்வை வஸந்தியை துளைக்க ‘நானா போகச் சொன்னேன்?’ எனும் விதமாய் அசட்டையாய் தோள் குலுக்கி அகன்றுவிட்டார். வழமைபோல வஸந்திக்கும் இமையாவிற்கும் நடுவில் கையறு நிலையில் நின்றாள் அபி. 

 

அவளால் வஸந்தி ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிந்ததே தவிர அதை ஏற்கத்தான் முடியவில்லை. அவளது தந்தை கோபாலன் இப்படியில்லை. அவர் எப்பொழுதுமே தன்னை சற்று முற்போக்குவாதியாய் காட்டிக்கொள்ள விரும்புபவர். அதுமட்டுமின்றி காலகாலமாய் திரையிலிருந்து திண்ணைவரை கடக்கும் சராசரி குடும்பத் தலைவன் ரகம் அவர். இம்மாதிரியான விடயங்களில் தனக்கு ஆர்வமிருப்பதாய்கூட காட்டிக்கொள்ள மாட்டார். அதே சமயம் மகளின் மீதுகொண்ட பிரியத்தால், அதுவும் அபியின் ஒரே நட்பெனவும் மகளுக்கு மறுத்துப் பழகியிராதவர் இதையும் மறுக்கவில்லை. 

 

இமையாவிற்கொன்றும் இது புதிதல்ல. இதைப்போலப் பலதை கடந்துவிட்டவள்தான். அதுவும் வஸந்தி இப்படிப் பேசி கேட்பதும் அவளுக்குப் புதிதல்லவே. பள்ளிப் பருவத்திலும் இதே போலொரு முறை நடந்ததுண்டு.

 

இருவருமாய்  வெளியே செல்ல திட்டமிட்டிருக்க, இவள் அபியை அழைக்க அவள் வீட்டிற்கு வந்த பொழுதுதான் அது நடந்ததும். 

 

அழைப்பு மணியை அழுத்திவிட்டு இவள் காத்திருக்க சற்றிற்கெல்லாம் வெளியில் எட்டிப்பார்த்த வஸந்தி இவளைக் கண்டுவிட்டு, “அவ குளிச்சிட்டிருக்கா. இப்போ வந்துருவா” என்றதோடு சரி. கதவடைத்துச் சென்றுவிட்டார். ஒரு பேச்சிற்குக் கூட உள்ளே வா என்றெல்லாம் கேட்கவில்லை. அதே போல் அபியிடமும் உடனே தகவலை பகிரவில்லைபோலும். ஒரு மணி நேரம் கழித்து உலர்ந்த கேசமும் அப்பொழுதே மாற்றப்பட்டிருந்த உடையுமாய் வேகவேகமாய் வெளியில் ஓடி வந்த அபியின் முகத்திலிருந்த கலக்கமே அதைச் சொன்னது. வஸந்தியுமே இமையா இவ்வளவு நேரம் காத்திருப்பாள் என்றெல்லாம் நினைத்திருக்கவில்லை. 

 

பொதுவாய் இமையாவை இம்மாதிரி யாரும் நடத்தியதில்லை. ஏனெனில் அவள்தான் யாரிடமும் நெருங்குவதேயில்லையே! இது அவளது சுயத்தை வெகுவாய் சீண்டுவதுதான் இருந்தும் ஏன் அன்று அங்கு நின்றாள்? ஏன் இப்பொழுதும் இப்படிச் செய்கிறாள்? போன்ற கேள்விகளுக்கு அவளிடமிருக்கும் ஒரே விடை… அபி… அபி… அபி மட்டுமே!

 

 

வஸந்தியின் இம்மாதிரியான நடத்தைகளுக்குப் பின்னும் ஒரு காரணமிருந்தது. அது, அக்காரணம் அவரது பயமாகவும் இருந்தது.

 

அது இமையாவின் குடும்பப் பின்னணி. காற்றுவாக்கில் கேள்விப்பட்டு பின்னறிந்துக்கொண்ட சிலவற்றிலேயே அவருக்கு இமையாவிடம் ஒதுக்கம்தான். எங்கு அது எவ்வகையிலும் தனது ஒரே செல்ல மகளைப் பாதித்துவிடுமோ என்ற அச்சமே இதற்கெல்லாம் அச்சாரம். அவர் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் மறுத்துப்பேசும் மகளும் கண்டும் காணாததுபோல கடந்துவிடும் கணவனுமாய் இருக்க வஸந்தி அவரது எதிர்ப்பை வெளிப்படையாகவே காட்டினார்.

 

இமையாவின் அப்பா அம்மா இருவருமே காதலித்து மணமுடித்தவர்கள். பிரச்சனை யாதெனில் அப்பா அம்மாவைக் காதலித்தார், ஆனால் அம்மாவை மட்டுமின்றி இன்னும் சிலரையும் காதலித்தார். காதலர்களாய் மட்டுமிருந்த காலகட்டத்தில் தன்னை மட்டுமே நேசித்து தனக்காகவே எல்லாம பார்த்துப் பார்த்து செய்தென உருகி உருகி காதல் செய்தவனின் கடந்தகாலத்தை எடுத்துப்பார்க்க அவள் விரும்பவில்லை. உலகமே அவனைப் பெண்பித்தன் என்றது. ஆனால் அவளோ அவனில், அவன் அவளைப் பிரதானமாக்கியதில் பித்தானாள். அவன் மாறிவிடுவான் என்று நம்பினாள். தனியொருத்தியாய் வளர்ந்தவளுக்கு அவனது அக்கறையும் அவன் கொடுக்கும் முக்கியத்துவமும் நான் நேசிக்கப்படுகிறேன் என்ற உணர்வையே கொடுக்க வேறெதைப்பற்றியும் சிந்தியாமல் திருமணப் பந்தத்தினுள் அவன் கரம் கோர்த்து நுழைந்துவிட்டாள்.

 

அவள் கண்ட திரையிலிருந்து வாசித்த கதைவரை, ஏன் என்றோ யாரோ சொல்லக் கேட்ட நிஜ வாழ்க்கை சம்பவம்வரை பெண்பித்தனென இருப்பவன்கூட அவனுக்குத் தகுந்தவளின் காதலில் தடம் மாறி வந்துவிடுவான் என்பதே எழுதப்படாத நியதி.

 

ஆரம்பக்காலத்தில் அச்சுப் பிசகாமல் எல்லாம் அப்படியே, அவள் ஆசைப்பட்டபடியே நடந்தது. அன்பான குடும்ப வாழ்வென்று அவள் மகிழ்கையிலேயே திடீரென வேகத்தடையாய் அவளை முட்டி தடுமாறச் செய்தது நிதர்சனம்.

 

அவன் இப்பொழுதும் அவளைக் காதலித்தான்தான். ஆனால் கூடவே மற்ற சிலரையும் அல்லவா காதல் செய்து தொலைக்கிறான்! அவளால் அதை ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. தானொரு நல்ல மனைவி இல்லையா? அதனால்தான் அவன் மாறவில்லையோ? என சில நாட்கள்… பிறகு தான் இவனை மணந்து பெரிய தவறிழைத்துவிட்டோமோ? என சில நாட்கள்… இனி என்ன என் வாழ்வில்? என்ற நிராசையில் சில நாட்களென நூலிலாடும் பொம்மையாய் தன் மண வாழ்வை காப்பாற்றிக்கொள்ளவும் முடியாமல், விட்டொழிக்கவும் இயலாமல் அவள் ஓடிக்கொண்டிருந்தாள். அந்தப் போராட்டத்தில் அவள் மகளென்ற ஒருத்தியை மறந்தே போனாள். எந்த வயதில் இமையா அம்மாவை மனத்தால் நாடினாளோ அவ்வயதில் அவளுக்கென இருவருமே இருக்கவில்லை.

 

இமையா தனியொரு தீவாய் தனக்குள்ளேயே முடங்கிப்போனாள். குழந்தைகளுக்கு அப்படியென்ன மன அழுத்தம் வந்துவிடப்போகிறது? என்று அவசியமற்று துள்ளுபவர்களை கண்டால் இமையாவிற்கு இன்று சிரிப்பாய் இருக்கும். ஏனெனில் இன்னும் அவளுக்குள் அடைப்பட்டுக்கொண்டு கிடக்கும் அந்த குட்டி இமையாவின் அழுத்தங்களை எவரறிவர்!? சொன்னாலும்தான் இவர்களால் புரிந்துக்கொள்ளவோ இல்லை அதை ஏற்றுக்கொள்ளவோ இயலுமா? என்றெண்ணி பல முறை சிரித்திருக்கிறாள். 

 

அந்த இமையா வீட்டில் அவளைச் சுற்றி அம்மா அப்பாவென இருந்தும் அவள் மட்டும் தனியுலகொன்றினுள் அடைப்பட்டுக் கிடப்பதைப்போல உணர்வாள்.

 

காதலா? கணவனா? வாழ்க்கையா? என்ற போராட்டத்தையெல்லாம் ஒரு கட்டத்தில் கடந்து மகளொருத்தியே இனி என் வாழ்வென அவள் வந்தப்பொழுது இமையா முழுதாய் தன்னுலகினுள் அடைந்து தன்னைச் சுற்றியொரு வேலியிட்டிருந்தாள்.

 

கணவனிலிருந்து வெளி வந்தவள் இப்பொழுது மகளும் தன்னை ஒதுக்குவது புரிந்துவிட மனதளவில் ஒடிந்தே போனாள்.

அவளுக்கு தானும் இமையாவிற்கு இதையேதான் செய்தோம் என்று உரைத்திருக்கவில்லை. மாறாய் என் வாழ்வேன் இப்படி? என்று முழுதாய் மூழ்கத்தொடங்கினாள். அவளுக்கு மகள் மனதில் இப்படியொரு ரணம் இருந்ததுகூட தெரிந்திருக்கவில்லை.

 

மனதளவில் பிரிந்திருந்தவள் ஒரு நாள் உடலளவிலும் முழுதாய் பிரிந்துவிட்டாள்.

 

சிலர் அவளது தற்கொலை என்றனர். சிலர் மன அழுத்தம் தாங்காமல் உடலையும் உருக்கி இப்படியென்றனர்.  இன்னும் சிலர் ‘அவனை நம்பிய பாவத்திற்கு…’ என்று புலம்பினர். இந்த புலம்பல்கள் அனைத்தும் காதில் விழுந்தும் அந்நேரத்தில் எதுவுமே இமையாவிற்கு உரைக்கவோ புரியவோ இல்லை. எட்டு வயதிற்குள்ளான குழந்தைக்கு அதை புரிந்துக்கொள்ளும் அளவு விவரம் இருக்கவில்லை. ஆனால் அதற்கு பின் விவரம் தெரிந்த காலங்களில் இதற்கான அர்த்தம் புரிந்தாலும் அவளால் வெறுமையாய் சிரிக்க மட்டுமே முடிந்தது. கடைசியில் அவளது மரணத்திற்கு தானும் ஒரு காரணி! என்று எண்ணியதுண்டு. இன்னும் கூட்டிற்குள் ஒடுங்கினாள். பள்ளியில் நட்புக்கள் என்றெவரும் இல்லை. வீட்டிலோ… பல பெண்களை நேசித்த மனிதரின் கண்களில் மகளெனும் சிறுமி தட்டுப்படவேயில்லை. 

 

இமையாவின் அந்நாட்கள் எப்படி கழிந்தது என்றால் அவளுக்கே தெரியுமோ என்னவோ… அவளது நாட்களுக்கிடையில் வித்தியாசமென்ற ஒன்றே இருந்ததில்லை.

 

அப்படி சிறு ஓடையாய் நீண்டுக்கொண்டிருந்தவளின் வாழ்வில்தான் அந்நாளும் வந்தது. அது அபியை முதன்முதலாய் இவள் பள்ளியில் கண்ட நாள். இவள் அப்பொழுது ஏழாவதில் இருந்தாள். பாடம் நடந்துக்கொண்டிருந்தப்பொழுது திடீரென மற்றொரு ஆசிரியருடன் வகுப்பினுள் நுழைந்தாள் அபி. வேறெதோ ஒரு பள்ளியிலிருந்து ட்ரான்சஃபராகி வந்ததாகவும் தன்னைப் பற்றியும் அவள் அறிமுகம் செய்துக்கொண்டதைகூட வெற்றுப் பார்வையுடன்தான் பார்த்திருந்தாள்.

 

“வெரி குட்! உனக்கு பிடிச்ச இடத்துல உக்காந்துக்கலாம் அபி” என்ற ஆசிரியையிடம் கன்னம் குழிய சிரித்து தலையசைத்தவளின் பார்வை கடைசி பெஞ்சில் ஓரமாய் அமர்ந்திருந்த இமையாவின் அருகிலிருந்த இடம் கண்ணில் பட்டது. ஏனெனில் மற்ற பெஞ்சுகளிலெல்லாம் எல்லோரும் சேர்ந்து அமர்ந்திருக்க அவளருகில் மட்டும் வெகுவாய் இடம்விட்டு  தள்ளி அமர்ந்திருந்தனர் அந்த கடைசி பெஞ்சின் மற்ற மாணவிகள்.

 

இவள் நேராய் சென்று அதில் அமர்ந்துக்கொண்டாள். அபி தன்னருகில் அமர்வது தெரிந்தும் அசையாதிருந்தாள் இமையா.

 

“ஹாய்!! நான் அபி. நீ?” என்று கைநீட்டியவளை உணர்ச்சிகளற்ற பார்வை ஒன்று பார்த்துவிட்டு திரும்பிவிட்டாள் இவள். இவள் அப்படி செய்ததில் அபிக்கு ஒரு மாதிரியாகிவிட அவளுக்கு அந்தப் பக்கம் அமர்ந்திருந்தவர்கள், “விடு அபி. அவ அப்படிதான்” என்றபடி அவளை அவர்கள் புறம் திருப்பிக்கொண்டனர் பேச்சில்.

 

இவளையே ஒரு கணம் புரியாது பார்த்துவிட்டு அபியும் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு உற்சாகமாய் பதிலளிக்கத் தொடங்கினாள். 

 

நேரம் செல்ல செல்ல அபியும் புதுத் தோழிகளுடன் நன்றாகவே பொருந்திப்போனாள்.  மதிய இடைவேளையில்கூட அனைவரும் ஒன்றாய் உண்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பொழுதுதான்.

 

“ஆமா… அவ ஏன் அப்படி பண்ணா?” – அபி

 

அவளுக்கு ஏனோ காரணம் வேண்டியிருந்தது.

 

“ப்ச்! நீ இன்னும் அவள விடலையா?” – ஒருத்தி

 

“சொல்லேன்” – அபி

 

“அவ அப்படிதான் அபி. சரியான லூசு. அவ ஃபேமிலியே அப்படிதான்னு அம்மா சொன்னாங்க” –  மற்றொருத்தி

 

“வாட்!?” – அபி

 

“ஆமா அபி. அவ அம்மா அவ அப்பாவால சூஸைட் பண்ணிக்கிட்டாங்களாம். அவ அப்பால்ல…” – இன்னொருத்தியென இமையாவின் குடும்பக் கதை அங்கு அலசி ஆராயப்பட்டது. பனிரெண்டு வயது பதிமூன்று வயது  குழந்தைகளுக்கு முன் வைத்து அவரவர் வீட்டில் பேசியவைகள் அனைத்தும் அவர்களிடத்தில் பிரதிபலித்தன.

 

“அதான், நாங்க யாரும் அவட்ட பேசமாட்டோம். நீயும் பேசாத! ” – முதலாமவள்

 

“வாட்!? உனக்கு வேணும்னா நீங்க பேசாதீங்க! நான் பேசனுமா பேசக்கூடாதானு நீங்க ஏன் சொல்றீங்க? அவ குடும்ப விஷயத்தப்பத்தி பேசறதே தப்பு. இதுல நீங்கல்லாம் சேர்ந்து அவள ஒதுக்கி வேற வச்சுருக்கீங்கன்னு தெரிஞ்சிருந்தா உங்கட்டலாம் பேசியிருக்கவே மாட்டேன்!!” – அபி

 

பொரிந்து தள்ளிவிட்டு அவர்களை சுற்றிக்கொண்டு வந்தவள் வலப்பக்கமாய் படிகளுக்கு திரும்ப, அவள் முன் வழியை மறித்தவாறு அங்கு கடைசியிலிருந்து மூன்றாவது படியில் சாய்ந்து நின்றுக்கொண்டிருந்தாள் இமையா. அபி,  இமையா இதையெல்லாம் கேட்டுவிட்டாளோ? வருந்துகிறாளோ? என்று அவளை கலக்கமாய் பார்க்க இமையாவோ

 

“அதிகப்பிரசங்கி” என்று வழமைப்போல உணர்ச்சியற்ற குரலில் சொல்லிவிட்டு திரும்பி நடந்துவிட்டாள்.

 

அபிக்குதான் ஒரு கணம் ஒன்றும் புரியாமல் போனது. புரிந்த பிறகோ கோபமும் குழப்பமுமாய்  விடுவிடுவென படியேறியவள் வகுப்பினுள் அதே வேகத்துடன் நுழைந்தாள். இமையா அவளிடத்தில் அமர்ந்திருந்தாள். அவள் முன் சென்று நின்றவள்.

 

“இப்போ ஏன் அப்படி சொன்ன!?” – அபி

 

பதிலேயில்லை.

 

“உன்ட்டதான் கேக்கறேன். ஏன் அப்படி சொன்ன!?” – அபி

 

ஏனோ அபியால் அந்த “அதிகப்பிரசங்கி” என்ற சொல்லை மட்டும் பொருத்துக்கொள்ளவே இயலவில்லை.

 

“எனக்காக பேச சொல்லி உன்ட்ட கேட்டேனா நான்?” – இமையா

 

“ஏன் பேசக்கூடாது? எனக்கு தப்புனு தோனுச்சுனா நான் சொல்லதான் செய்வேன்” – அபி

 

“நாளைக்கு உன்கிட்ட யாரும் பேசமாட்டாங்க” – இமையா

 

“பேசாட்டி போறாங்க! எனக்கு எதுனு நான் பாத்துக்கறேன். முதல்ல நீ உன்ன பாரு! ஒருத்தர் நம்ம பத்தி தப்பா பேசினா அவங்க பல்லை ஒடைக்க வேண்டாம்!? நீ இப்படி என்ன வேணா பேசிக்கோங்கனு இருந்தா..” – அபி

 

அபி படபடவென பேசிக்கொண்டே போக அவ்வளவு நேரம் அமர்ந்திருந்த இமையா எழுந்து நின்றாள்.

 

“ஒரு தடவை என்னை அணைச்சுக்கறீயா?” – இமையா

 

படபடத்துக்கொண்டிருந்தவளின் பேச்சு அப்படியே நின்றது. நிதானித்தாள். என்ன தோன்றியதோ இமையாவை இறுக்கமாய் அணைத்துக்கொண்டாள் அபி.

 

“அவங்க என்னை ஒதுக்கல, நான்தான் எல்லாரையும் ஒதுக்கி வச்சிருக்கேன்” – இமையா

 

இவளின் வார்த்தைகள் அந்த அணைப்பினூடே அபியின் செவியை அடைந்தன.

 

நான் அணைச்சுக்கவா-விற்கும், நீ என்னை அணைச்சுக்கறீயா-விற்கும் இடையிலான அடர்ந்த வித்தியாசத்தை அபி உணர்ந்த கணமது..!!