நுட்பப் பிழையவள்(10)

10

~ ஐ லவ் யூ ~

ஜீவன் சமைத்துக்கொண்டிருந்தான். மீயாழ் அத்தனை நேர அழுகைக்குப் பிறகு அப்பொழுதுதான் உறங்கத் தொடங்கியிருந்தாள். அவளுக்கெனவே ஃபோனில் சேமித்து வைத்திருந்த ‘ப்ளே லிஸ்ட்டின்’ உதவியுடன் அவள் துயில்ந்திருக்க அதை மாற்றிவிட்டு காதில் ‘ப்ளூ டூத் இயற் ஃபோனை’ மாட்டிக்கொண்டு சாப்பாட்டு மேசையில் அமர்ந்து காய் நறுக்கிக்கொண்டிருந்தான். ஏனோ இப்பொழுதெல்லாம் அவனால் அவனைச் சுற்றி சத்தமின்றி இருக்க முடிவதில்லை. தொடர்ந்து ஏதேனும் ஒன்று கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அது இசையோ இல்லை டீவியோ ஏதாவது ஒன்று அவன் காதுகளைச் சீண்டவோ இல்லை தீண்டவோ வேணும் அவனுக்கு!

காய் வெட்டுவதிலேயே கவனமாய் இருந்தவனை அசைத்துப் பார்த்தது அந்த வரி! “வீ வேர் ஷிப்ஸ் இன் த நைட்” என்ற ‘ஸ்வீட் நைட்’ பாடலின் வரியில் மனம் சட்டென நின்றது. அந்த பாடல் முழுதுமே அவனுள் எதையோ செய்தது. நெஞ்சுக்கூட்டில் ஏதோ முட்டிக்கொண்டு வருவதும் ஆனால் அதை எவ்வழியிலும் வெளிப்படுத்த முடியாமல் தனியறையில் கதவைத் தேடித் தவிப்பதைப் போல இருந்தது. மனம் முழுதும் எப்பொழுதும் தயார் நிலையில் நின்றிருந்த நினைவுகளும் உணர்வுகளும் ஒரு பாட்டில் உடைப்பெடுத்தன.

அபி.. எப்படிப்பட்டவள் அவள்?! அவன் எதிர்பார்த்திரா நேரத்தில் லேசாய் இரு விரல் மொழிக்கொண்டு கதவைச் சிறிதாய் தட்டிவிட்டு வாழ்வினுள் நுழைந்த வசந்த காலம் அல்லவா அவள்! அவன் கனவிலும் அப்படியொருத்தியை கற்பனை செய்திருக்கவில்லை. ஏனெனில் முதலில் அவளைப் பிடித்தது. ஆனால் அதற்குப் பிறகு அந்த பிடித்தம், காதல், காமம் என அத்தனையும் தாண்டி இவளைவிடத் தன்னை எவரால் உணர்ந்து புரிந்துகொள்ள முடிந்திடும்? என்றளவு அல்லவா இருந்தது. சண்டை? அதுவும் நிச்சயம் இருந்தது! ஆனால் அதையும் தாண்டி இவன் கண்ணைக் கசக்கினால் அத்தனை கோவத்திலும் இவன் கண்ணைத் துடைத்துவிடும் முதல் கரம் அவளதாய் தான் இருக்கும்! எத்தனையோ நாட்கள் சண்டையிட்டுவிட்டு அதற்கு நடுவில் வேறு ஏதேனும் பிரச்சனையில் அவன் தலையைப் பிடித்துக்கொள்ளும்பொழுது முதலில் “பரவால்ல! யூ டிட் வெல்!” என்று உரைப்பதும் அவள்தான் பிறகு அவன் கவலை நீங்கியதும் மௌனியாய் மாறி சண்டையைத் தொடர்வதும் அவளேதான்.

அவனுக்கு எப்பொழுதும் தான் தன்னை சுற்றியிருப்பவர்களைவிட சற்று மன முதிர்ச்சியுள்ளவன் என்ற எண்ணம் உண்டு. ஆனால் அதுவும் சுக்கல் சுக்கலாய் போனது அவளை அறிந்த பின்பு. மன முதிர்வு எல்லாம் இறுக்கமும் அமைதியுமாய்தான் இருக்க வேண்டுமா? ஏன் விளிம்பில் நிற்கையில் தற்செயலாய் இடித்து கன்னம் குழிய சிரித்துவிட்டு ஓடிவிடும் மழலையாய் இருக்க கூடாதா? அவள் அப்படிதான் இருந்தாள்! அவளது மன முதிர்ச்சியும் அப்படிதான் இருந்தது. வெளியில் விளையாட்டுப் பிள்ளையாய் தெறியும் விளையாட்டுத்தனமற்ற அன்பைக் கொண்டவள் அவள்.

திடீரென “ஜீவா ஐ லவ் யூ!!” என்பாள். இவன் வெட்க சிரிப்புடன் தலையசைத்து நகர்ந்தால் போலியாய் முறைப்பாள்.

“ஏன்?”

“அதான் கேக்கறேன் ஏன்? திருப்பி சொன்னா நாங்களும் சந்தோஷப்பட்டுப்போம்ல..”

“சொல்லிதான் தெரியனுமா?”

“அதை உணர்வுகளுக்கு குரல் கொடுக்கற ரைட்டரே இப்படி கேக்கலாமா?”

“உன்ன!!” என்று அவள் கேசம் கலைத்துவிட்டு நகர்ந்தவனின் கரம் பற்றிக்கொண்டவள்,

“உன் பேரு ஜீவானு எனக்கு தெரியும் அப்பறம் ஏன் மூச்சுக்கு முன்னூறு தடவை ‘ஜீவா ஜீவா’னு ஜீவாபுராணம் பாடறேன்? ஏனா உன் பேரையும் தாண்டி அதோட அர்த்தம் அதை ஒவ்வொரு தடவையும் உச்சரிக்கும்போது உள்ளுக்குள்ள வர அந்த பிரத்யேகமான அந்த உணர்வு! நான் ஒரு நாள்ல எத்தனையோ ‘ஜீவா-க்களை’ சந்திக்கலாம், கடந்து வரலாம், ஏன் அவங்கட்ட பேசறப்போ அவங்க பேர சொல்லி பேசவும் செய்யலாம்! ஆனா இந்த ஜீவாவ கூப்பிடும்போது மட்டும்தானே அந்த ‘ஜீவா’ ஃபீல் வருது! வார்த்தைகள் ஒன்னா இருந்தாலும் அதை தாங்கி வர உணர்வுகள் வேற வேறதானே? நான் உன்ன நேசிக்கறனு எனக்கும் தெரியும் உனக்கும் தெரியும் அப்பறமும் ஏன் சொல்றேன்? எத்தனையோ நாள் நான் மூட் ஆஃபா இருக்கப்போ நீ சிரிக்கறதயோ இல்லை எதையாவது பண்ணிட்டு முழிக்கறதையோ பார்த்தா மனசு ஒரு நிமிஷம் எல்லாத்தையும் ஒத்திவைக்கத்தான் செய்யுது! அது உனக்கே தெரியாதுதானே? நீதான சொன்ன நம்ம கூடவே இருக்கவங்க மனசுல என்ன ஓடுதுனு நமக்கு தெரியாதுனு.. அப்போ நீ நேசிக்கற ஒருத்தர உன்னோட ரேண்டம் ‘ஐ லவ் யூ’ பிடிச்சு வைக்கும் தெம்பு கொடுக்கும் ஒரு நிமிஷம் யோசிக்க வைக்கும்னாலும் அது பெரிய விஷயம்தானே? நீ அவங்களுக்காகவோ எனக்காகவோ சொல்ல வேணாம்! உனக்காக சொல்லி பாரு! அது சொல்லும்போது நீயே ஃபீல் பண்ணுவ அதை! எனக்கு ஒவ்வொரு வாட்டியும் உன்ட்ட சொல்றப்பலாம் ச்சை! லவ் யூ-வையும் தாண்டி ஒரு வார்த்தை கிடைச்சிடாதா என் உணர்வு அத்தனையையும் கொட்டனு தோணும்! மனசு இதமாகும். உன்ன நல்லா பத்திரமா பாதுகாத்து பாத்துக்கனும்னு தோணும்!!” என்றுவிட்டு அவள் சிரித்தது இப்பொழுதும் இதோ! இவனுக்கு அருகில் அமர்ந்து அவள் பேசுவதைப் போலவே தோன்றியது.

அவன் அடிக்கடி “லவ் யூ” சொல்ல தொடங்கியது அவளால்தான். மெய்யாகவே இதமாய் இருந்தது. வாழ்க்கையில் சற்று இறுக்கம் தளர்ந்தாற்போல இருந்தது. அவளிடம் பல முறை சொல்லியிருக்கிறான்தான்.. இருந்தும் அது பத்தவில்லை! அவளுக்கான அவன் காதல் அவனிடம் இன்னும் நிறையவே இருந்தது. ஆனால் அதை வாங்கிக்கொள்ள வேண்டியவள்தான் பாதி பரிமாற்றத்திலேயே சென்றுவிட்டாள். இப்பொழுது அவனுக்குத்தான் சேர்த்து வைத்த காதல் கனக்கிறது இரும்பு பந்தாய்.
எத்தனை எத்தனை விதமாய் அவளைக் காதலிக்க நினைத்திருந்தான்? இப்பொழுது என்னவோ ரயிலைத் தவறவிட்டு வெற்று தண்டவாளத்தை வெறிப்பதுபோலல்லவா இருக்கிறது. அவள் மட்டும் அருகில் இருந்தால் இப்பொழுது இறுக அணைத்துப் பிடித்து வைத்துக்கொள்வான்.

அன்று மட்டும் அவன் வேலைக்குச் செல்லாமல் இருந்திருந்தால்.. இல்லை இப்படித்தான் நடக்கப்போகிறது என்றால்.. இது மாற்ற முடியாத ஒன்றெனில் அவளை இன்னும் சற்று சீக்கிரமே சந்தித்திருப்பானோ? இல்லை இல்லை!! அவளைச் சந்திக்காமலே இருந்திருப்பானோ? இல்லை.. இன்னொரு முறை என்ற வாய்ப்பு கிடைத்தாலும் அவன் மறுபடியும் அவளையேதான் சந்தித்திருப்பான். ஆனால் இம்முறை எவ்வளவு குறுகிய காலமாய் இருந்தாலும் அவனது முழு காதலையும் அவளிடம் கொட்ட முயற்சி செய்திருப்பான். அவளையும் தாண்டி அவளை நேசித்திருப்பான்.

“டேய் ஜீவா பையா..” என்றுவிட்டு கேலியாய் ஒலிக்கும் அவளது சிரிப்பு சத்தம் எப்பொழுதோ கேட்ட நினைவு. இறந்தது அவள்தான், ஆனால் இழந்தது அவனல்லவா? உயிரைப் பறிகொடுப்பது எத்தனை வலியோ அதைவிட உயிரானவரைப் பறிகொடுத்துவிட்டு வாழ்வது பெரும் வலியல்லவா?

இதை சுற்றியிருப்பவர் புரிந்துகொள்ளாவிடினும் பரவாயில்லை, அவனது பெற்றோரே புரிந்துகொள்ளவில்லையே? இல்லை தவறாய் புரிந்துகொண்டனர் என்பதே சரியாகும்!

அபி இறந்த சில காலங்களிலேயே தொடங்கிவிட்டது. முதலில் மருமகளை இழந்த துக்கத்தில் இருந்த வத்சலா தன்னை சிறிது சிறிதாய் தேற்றிக்கொண்டவரால் மகனைக் கண்கொண்டு பார்க்க இயலவில்லை. எப்படியிருந்தவன்? என்ற எண்ணமே ஆட்கொள்ள மற்ற எதையும் சிந்தித்துப் பார்த்துச் செயல்படும் நிலையில்கூட அவர் இருக்கவில்லை. உடனே சென்று வஸந்தியிடம் கொஞ்சக் காலம் குழந்தையை வைத்துக்கொள்ளும்படி கேட்க அங்கு வஸந்தியோ கோபாலனுக்காய் பார்த்து அதே விசயத்தை வத்சலாவிடம் திருப்பி கேட்கவென ஒரு கட்டத்தில் அது வாக்கு வாதத்தில் தான் சென்று நின்றது. அவர்களது ஒரே மகளது குழந்தையை வைத்துக்கொள்ளக் கசக்குமா? என்ற கேள்விக்கு அவரிடம் இருந்த பதிலெல்லாம் ‘தங்களது ஒரே மகளது குழந்தை’ அதுவும் இனி அவள் இல்லை என்பதை நினைவூட்டிக்கொண்டே இருக்கும் குழந்தை என்பதாய் தான் இருந்தது. வஸந்தி பயந்தார். கோபாலன் வெகுவாய் எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாத ரகம் என்றாலும் அவருக்கு மகள் என்றால் உயிரென்பதை அறிந்தவர் அல்லவா அவர்? அப்படிப்பட்டவர் தினமும் தனிமையில் எங்கோ வெறித்தபடி அமர்ந்து அழுது தீர்ப்பதைக் கண்டும் காணாமலும் காலம் தள்ளிக்கொண்டிருந்தார் அவர். அவருக்கும் வலிதானே? இதில் எங்கு எவரை, எந்தளவு தேற்ற முடியும்? இப்படிப்பட்ட நேரத்தில் குழந்தையை வீட்டிற்குக் கூட்டி வருவது சரியெனப் படவில்லை! ஏதேனும் ஒரேயொரு கணமெனினும் அந்த குழந்தையால் தான் அபி இன்று இல்லை என்று தோன்றிவிட்டால்? ஏற்கனவே ஒரு முறை நெஞ்சை பிடித்துக்கொண்டு விழுந்துவிட்ட மனிதரின் மனநிலையைத்தான் பார்க்கத் தோன்றியது அவருக்கு. இப்படி மாற்றி மாற்றி இருவரும் பேச்சில் இருந்து வாக்குவாதத்திற்குச் சென்றுவிட ஒரு கட்டத்தில் அது சண்டையாய் மாறத் தொடங்க அத்தனை நேரம் அமைதியாய் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்த ஜீவனின் பொறுமை பறந்தது. ‘என் குழந்தைக்கு இல்லாத வீடு எனக்கும் தேவையில்லை’ என்றவன் அத்தோடு பேச்சு வார்த்தை முடிந்தது என அன்றே அப்பொழுதே மீயாழுடன் வீட்டைவிட்டு வெளியேறியும்விட்டான். அவனுக்கு இருவரையும் ஓரளவு புரிந்துகொள்ள முடிந்ததே தவிர அதை ஏற்றுக்கொள்ளத்தான் இயலவில்லை. இதில் இப்படிப்பட்ட சூழலில் மீயாழ் அங்கு வளர்ந்தால் என்றேனும் யாரேனும் எதையாவது அவள் காயப்படும்படி சொல்லிவிடுவரோ என்று அஞ்சினான். அவளுக்கு அந்த வயதில் அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் போகலாம், ஆனால் அதைச் சொல்லியவரின் அந்நேரத்து உணர்வுகளை புரிந்துகொள்ள முடியுமே! அதையும் தாண்டி விவரம் தெரியத் தெரிய அவ்வார்த்தைகளின் அர்த்தமும் விளங்கிவிட்டால்? அவனால் எப்படி எல்லாவற்றையும் தடுக்க முடியும்? அதான் முடிந்தளவு வார்த்தைகளிடமிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து வந்துவிட்டான்.

இந்த வீடு.. இது அபியும் இவனும் சேர்ந்து வாங்கியது! அவர்களது அத்தனை வருடச் சேமிப்பையும் போட்டு மீயாழுக்காய் வாங்கியது. இந்த ஃப்ளாட்டை வாங்கும் முன் பார்க்கவென முதன் முதலாய் அபியும் இவனும் வந்தது இன்னும் ஞாபகமிருந்தது. ஒவ்வொரு அறையாய் பார்த்துவிட்டு எங்கு எதை வைக்கலாம், பால்கனி சிட்டவுட்டில் தினம் இரவு அமர்ந்து பேச எந்த மாதிரி சேர் வாங்கலாம், என்று இருவரும் பேசிக்கொண்டது அதற்குப் பிறகு குழந்தையை எப்படியெல்லாம் வளர்க்க வேண்டும் என்று பேசிக்கொண்டதென ஒவ்வொன்றாய் அவன் அவ்வீட்டினுள் நுழைந்ததில் இருந்து நினைவுபடுத்திக்கொண்டே இருக்க அன்று முழுதும் ஈர விழிகளுடன் அவன் உலா வந்தது மகளைத் தூங்க வைத்ததென எல்லாம் இப்பொழுதும் நினைவிலாடியது. ஏதோ ஒரு வேகத்தில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்துவிட்டாலும் முதலில் சற்று தடுமாறியவன் பிறகு சுதாரித்துக்கொண்டான். அவனும் அபியும் எடுத்துக்கொண்ட அத்தனை ‘பேரண்டிங்’ க்ளாஸ்களும் கைகொடுத்தன கூடவே பொன்னம்மாவின் உதவியும். அவர்தான் விசயம் அறிந்ததும் முதலில் வந்து பார்த்தது. உடனே அவருக்குத் தெரிந்த ஒரு ஆளாய் பார்த்து இவனுக்கு ஒத்தாசைக்கு அமர்த்திவிட்டதும். முதலில் ‘பேட்டர்னிட்டி லீவ்’ எடுத்திருந்தவன் பிறகு வேலையை விட்டுவிட்டான். இப்பொழுதைய அவனது முதல் ப்ரையாரிட்டி மீயாழ்.. மீயாழ்.. மீயாழ் மட்டுமே!! அவனுலகம் மகளைச் சுற்றி சுழல தொடங்கிவிட்டது.

“வீல்” என்று அலறிய குக்கர் விசிலில் நினைவுகளில் இருந்து மீண்டவன் தன்னையே கடிந்துகொண்டு அதை அணைத்துவிட்டு வந்ததும் அழைப்பு மணி அடித்ததும் அப்பொழுதுதான்.

இமையா ஒரு நாள் வருவாள் என்று தெரியும். ஆனால் அந்த நாள் இன்றாய் இருக்குமென அவன் அறிந்திருக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு நெருங்கிய தோழி ஒருத்தியைச் சந்தித்துவிட்ட தளர்வா? இல்லை கடைசியில் தன்னுணர்வுகளை புரிந்துகொள்ளக் கூடிய ஒருத்தியைப் பார்த்துவிட்ட நிம்மதியா? இல்லை சற்று நேரத்திற்கு முன் கேட்ட பாடலும் அதன் தொடர்ச்சியாய் வரிசைக்கட்டி நின்ற நினைவுகளின் அழுத்தமுமா என்று அவனறியான்! ஆனால் அவளைக் கண்ட மறுகணம் உள்ளம் துடைத்து வைத்த பலகையாய் இருக்கச் சட்டென அணைத்துக்கொண்டவனின் அழுத்தங்கள் அனைத்தும் கண்ணீராய் உருப் பெற்றிருந்தன. கேட்க எத்தனையோ இருந்தது. சொல்ல அதைவிட அதிகமாய் இருந்தது. ஆனால் அது எதுவுமே அந்நொடி தோன்றவில்லை. எல்லாம் அவள் கையிலிருந்த கட்டை காணும்வரைதான். அவள் இந்தளவு செல்லக்கூடும் என்றவன் நினைத்திருக்கவில்லை. ஏன் நிஜத்தில் அவன் எதையுமே நினைக்கும் நிலையில் இல்லையே! இப்பொழுது நினைத்துப் பார்க்கவே பகிரென்றானது. அவனுக்காவது மீயாழ் இருந்தாளே! பிடித்துக்கொள்ள. அதற்கு முன்னும்கூட அழுதால் கண்ணீரைத் துடைத்துவிட அவன் அம்மா இருந்தாரே! ஆனால் அவளுக்கு? இதில் யார் இழப்பு பெரிது யார் இழப்பு சிறிது என்று பார்க்கத் தயாராய் இல்லை அவன். ஆனால் அவளைப் புரிந்துகொள்ள முயன்றான்.

அவள் செல்வதைக் கண்டு அதிர்வில் இருந்து தன்னை மீட்டுக்கொண்டவன் அவளை நிறுத்த வரவும்தான் வாசலில் நின்றவன் கவனத்தில் விழவும் “நிலா” என்றவன் பின் நிதானித்து

“இமையா, இதுதான் நித்திலன். என் தம்பி” என்று அறிமுகம் செய்ய வாசலில் நின்றவனுக்கு அந்தளவுகூட பொறுமையில்லைபோலும். கையிலிருந்த எல்லாவற்றையும் அப்படியே விட்டவன் “ஜீவா” என்றோடி வந்து கட்டிக்கொண்டான்.

“என்னடா ஆச்சு?” என்றவன் குரல் உடைந்திருக்க அவன் ஆறுதல் சொல்ல வந்தானா இல்லை ஆறுதல் தேடி வந்தானா என்பதே புரியாமல் போனது.

ஜீவன் அறிமுகம் செய்ததற்கு லேசாய் தலையசைத்தவள் புதியவன் வீட்டினுள் நுழையவும் வெளியேறிவிட்டாள் ஒரு “வரேன்” உடன்.