நுட்பப் பிழையவள்(12)

12

~தீண்டல்~

பயத்தில் அதிர்ந்து சில கணங்கள் விழி மூடி நின்றவன் எதிர்பார்த்ததுபோல எதுவும் நடவாமல் போக, மெல்ல விழிகளை திறந்தான். அவன் கண்களைத் திறந்த பொழுது அவள் அவனைச் சுற்றிக்கொண்டு வெளியேறிக் கொண்டிருந்தாள். ஒரு கணம் ஒன்றுமே புரிபடாமல் போக அசையாது நின்றவனுக்கு மெல்ல மெல்லத் தன்னுணர்வு வந்தது. நடந்தவை உரைத்தன. சட்டெனத் திரும்பினான். அவள் கண்ணெட்டும் தூரம்வரை காணவில்லை. எப்பொழுதோ கீழ்த் தளத்திற்குச் செல்லும் படிகளைக் கடந்திருந்தாள். ஆனால் வெகு தூரம் சென்றிருக்க மாட்டாள் என்று தோன்றவும் விடுவிடுவென படிகளில் இறங்கி பேஸ்மென்ட்டை நோக்கி ஓடினான். அவன் ஒவ்வொரு படிகளாய் கடைசி சில படிகளை கடக்கும்பொழுதே அவன் விழிகள் அந்த பார்க்கிங் லாட்டில் நின்றிருந்த வாகனங்களுக்கு மத்தியில் அவள் தென்படுகிறாளா என்று பார்க்கத் தொடங்கியிருந்தது. அவன் தேடியது போல பார்க்கிங் லாட்டில் அவள் இல்லாமல் போக சட்டென ஓரெண்ணம்! அதே பேஸ்மென்டின் மறுபுறம் இருந்த வாயிலுக்கு விரைந்தான். அது அந்த அபார்ட்மென்டின் பின் புறத்திலிருந்த சாலை. இங்கு அபார்ட்மென்டின் பார்க்கிங் லாட்டினுள் அவள் வண்டியை நிறுத்த முடியாதலால் வெளியில் நிறுத்தியிருக்கலாம் என்று தோன்றவே விரைந்தான். அவன் நினைத்தது போலவே அவளும் அங்கு தான் இருந்தாள். அவன் அங்கு வரவும் சரியாய் கார் கதவைத் திறந்தவள் இவனது, “ஹலோ! இமையா! நில்லு!” என்ற குரலில் முகத்தில் கேள்வி பாவத்துடன் திரும்பியவள் அவன் தன்னை நோக்கி ஓடி வருவதைக் கண்டதும், அதைக் காணாததுபோல கார் கதவை அகலத் திறக்க அதில் இன்னும் கோபமுற்றவன் வேகமாய் வந்து இடக் கையால் கதவை பட்டென மூடிவிட்டு வலக்கையை தன் இடையில் பதித்தபடி வழியை மறித்துக் கொண்டு நின்றான். ஓடி வந்ததில் சற்று அதிகமாகவே மூச்சிரைத்தது. வெகு அருகில் நின்றவனையே காரில் சாய்ந்துகொண்டு கைகளைக் குறுக்காகக் கட்டியபடி முகத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் வெற்று பார்வை பார்த்துக்கொண்டிருந்தாள் இமையா. ‘அடுத்து இதென்ன விளையாட்டு’ என்பதைப் போல.

தன்னை நிதானித்துக்கொண்டு நிமிர்ந்தவன் இடம் மாறாது அப்படியே அவளிடம், “இப்ப நான் என்ன சொன்னேனு கைய ஓங்கறீங்க?” என்றான். அவனது குரலில் உண்மையான கோபமும் குழப்பமும் குடிகொண்டிருந்தது. அவனைப் பொருத்தவரை அவன் அப்படி என்ன செய்துவிட்டான்? என்றுதான் எண்ணம்.

“ஒன்னு நீ சொல்லு இல்ல நீங்க சொல்லு! ரெண்டத்தையும் குழப்பாத” என்றாள் அவன் கேள்விக்குச் சற்றும் சம்பந்தமின்றி.

அவள் எதைச் சொல்கிறாள் என்று அவனுக்கும் புரியத்தான் செய்தது. சட்டென அவளிடம் பேசியதில், அதுவும் முதன் முறையாய் ஒழுங்கான பேச்சு வார்த்தையாகிட இதில் அவள் வேறு எதிர்பாராத சமயத்தில் கையை ஓங்கியதில் சற்றே தடுமாறத்தான் செய்தான். இருந்தும், “அது என் இஷ்டம்” என்றான் வீம்பாக. அவனுக்குக் கோபம் குறைந்திருக்கவில்லை.

அவனது பதிலில் சற்றும் தாமதிக்காமல் உடனே வந்தது அவளிடம் இருந்து, “அப்ப இதுவும் என் இஷ்டம்” என்று. அத்துடன் சேர்ந்த கிளம்ப எத்தனிக்கும் பாவம். எங்கே? அவன் அசைந்தால்தானே நகர முடியும்.. இருந்தும்.

அவள் விலகலாய் திரும்புவதைக் கண்டவன், “அதெப்படி உன் இஷ்டம் ஆகும்? அது வயலென்ஸ்! ஃபிஸிக்கல் அசால்ட்!” என்றான் படபடவென.

அவனையே உற்று நோக்கியவள், “அப்போ நீ பண்ணது மட்டும் என்ன?” என்று பார்வையை அகற்றாமல் கேட்டிட, அவள் எதைச் சொல்கிறாள் என்று உணர்ந்தவன் ஒரு நொடி பேச்சற்று போனான். ஆனால் அது ஒரு கணம்தான். பிறகு, தன் விழிகளையே உற்று பார்த்தவளின் விழிகளினுள் கவனம் செலுத்தியவன் தெளிந்திருந்தான்,

“நான் கட்டாயபடுத்தலை” – அவன்

“கன்ஸன்ட்டும் கேட்கலை” – அவள்

“நீ என்ன தள்ளிவிட்றுக்கலாம்” என்றவனுக்கு அதைச் சொல்லும்பொழுது அவனுக்கே இடித்தது ‘இதென்ன மடத்தனம்! என் விருப்பமில்லாமல் முத்தமிட்டு விட்டாய் என்று சொல்பவளிடம் போய் நீ ஏன் என்னைத் தள்ளிவிடவில்லை.. மறுக்கவில்லை என்று கேட்டுக்கொண்டு!’ என்று அவன் மனசாட்சியே அவனை இடித்துரைத்தது. அதை எதிரில் இருப்பவளும் கண்டுகொண்டாள் என்பது அவள் பார்வையிலேயே தெரிந்தது. அவளது வெற்று பார்வையில் எதைக் கண்டானோ!

“நீ என்ன சீண்டற” என்றான். உண்மையில் அவள் சீண்டத்தான் செய்கிறாளா இல்லை தான் விருப்பமின்றி ஒருவரை முத்தமிட்டு விட்டோம் என்று அவள் சொல்வதை ஏற்றுக்கொள்ள அஞ்சி அவன் மனம் வெவ்வேறு கோணங்களைக் காட்டியதோ!

அவனது “நீ என்ன சீண்டற”வில் ஒரு நொடி அவனையே உற்று நோக்கியவள் பிறகு மெல்ல அவனை நெருங்கினாள். அவன், அவள் வழியை மறித்தபடி கைகள் இரண்டையும் அணையாய் வைத்துக்கொண்டு நின்றிருந்தாலும் அவர்களிடையே இடைவெளி இருக்கத்தான் செய்தது. ஏனெனில் அவனது அப்போதைய எண்ணம் அவளைத் தடுத்து நிறுத்துவதாக மட்டுமே இருந்ததே தவிர அவன் வேறெதைப் பற்றியும் நினைத்திருக்கவில்லை. ஏன்! அவள் இப்பொழுது இப்படி நெருங்கி வர வரையிலுமே தான் எப்படி நின்றுகொண்டிருக்கிறோம் என்றெல்லாம் அவன் கவனித்திருக்கவில்லை. அவள் நெருங்கவும், அவர்கள் இடையே இருந்த சிறு இடைவெளியும் குறையவும் தன்னிச்சையாய் ஓரெட்டு பின்னால் அவன் எடுத்து வைக்க சிறு இதழ் வளைவுடன் அதை கவனித்தவளோ, இடக்கையால் அவன் சட்டையைப் பிடித்து தன் புறம் இழுத்தாள். அதில் சற்று தடுமாறி தன் மேல் மோத வந்தவனின் நெஞ்சில் தன் வலக்கையை வைத்து நிறுத்தியவளுக்கு அவன் உடலின் மெல்லிய அதிர்வை உணர முடிந்தது. இடக்கையில் இருந்த சட்டையை இன்னும் இறுக்கமாய் பிடித்தவள் பாதங்களைச் சற்றே உயர்த்தியபடி அவன் காதுக்கு வெகு அருகில் செல்ல ஸ்பரிசிக்காவிடினும் அவன் கழுத்து வளைவின் அருகே அவளது மாய தீண்டல் கூசச் செய்தது. அவள் வலக்கையினுள் அவனது இதயத்துடிப்பு எகிறிக்கொண்டிருந்ததை அவளால் உணர முடிந்தது.

அவன் காதுக்கு வெகு அருகே சென்றவள் மென் குரலில், “கேட்காம தொட்டா வெறுப்பும் பயமும் தான் வரும், பிடித்தம் வராது” என்றுவிட்டு பின்னால் நகர்ந்தவள் முன்பு நின்ற நிலைக்கே திரும்பிவிட அவனுக்குத்தான் சர்வமெங்கிலும் மெல்லிய உதறல். அவளது வறண்டப் பார்வை அவனையே சில நிமிடங்கள் அளவெடுத்தது. பின்னர் வழமைபோல கூந்தலைக் கோதிக்கொண்டவள் நகர்ந்தாள்.

சில நிமிடங்களுக்கு அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்படியே நின்ற இடத்தில் சிலையாய் இருந்தவனின் சிந்தனை வலை அறுந்தது. சட்டென அவளருகே அவளைப் போலவே நெருங்கி நின்றவனுக்கு நிச்சயமாய் மூளை வேலை நிறுத்தம் செய்திருக்க வேண்டும். இல்லையெனில் நீ செய்தாய் நானும் செய்வேன் என்று நின்றிருக்க மாட்டான்.

அவள் கையை இறுகப் பற்றியிருந்தவன், ” இப்ப நீ செஞ்சது மட்டும் சரியா..” என்று எதுவோ சொல்ல தொடங்கும்பொழுதே அவள் முகத்தில் தோன்றிய சிறு மாற்றம் கொஞ்சம் கொஞ்சமாய் பெரிதாவதைக் கவனித்தான். அது வலியினால் வந்த சுளிப்பு! சட்டென அவன் கையில் இறுக பற்றியிருந்த அவள் கரத்தை திருப்பி பார்த்தான். அப்பொழுதுதான் கவனித்தான் அந்த கட்டை.

“ஐம்.. ஐம் ஸாரி” என்றவன் சட்டெனக் கையை விட்டுவிட்டான்.

“கைல என்னாச்-” என்று கேட்கத் தொடங்கும் பொழுதே அவன் மூளை பழைய இயல்பு நிலைக்குச் சென்றிருக்க வேண்டும்! சட்டெனப் புரிபட்டுவிட

“அறிவிருக்கா உனக்கு?” என்று மறுபடியும் தன் கையை பிடிக்க வந்தவனிடம் இருந்து தன் கரத்தை தனக்கு பின்னால் மறைத்துக்கொண்டவள் அவனையே எரிச்சலாய் ‘உனக்கென்ன இப்போ?’ என்பதைப் போல் பார்த்தாள்.

ஆனால் அவனுக்குத்தான் அது எதுவுமே கவனத்தில் பதியவில்லையே! ஏன் அத்தனை நேரம் இருந்த அந்த மெல்லிய படபடப்பு உணர்வு கூட மொத்தமாய் வடிந்துவிட்டிருந்தது அவள் கையை பார்த்ததும்.

“என்ன பண்ணி வச்சிருக்க நீ? உன்னையெல்லாம் எப்படி உங்க வீட்டுல தனியா விட்டு வச்சிருக்காங்க?..” என்று படபடவென பொரிந்து தள்ளியவனுக்கு அப்பொழுதுதான் தான் என்ன சொன்னோம் என்று உரைத்தது. மானசீகமாய் தன்னை அறைந்துகொண்டவன், “நா.. ஏதோ டென்ஷன்ல..” என்க அவளோ
எரிச்சல் சற்றும் குறையாது கதவைத் திறந்து உள்ளே அமர்ந்துகொண்டாள்.

விடுவிடுவென சுற்றிக்கொண்டு மறுபுறமாய் வந்தவன் சன்னல் வரை குனிந்தான் கதவை திறக்க முயற்சி செய்தபடி.

“நானும் வரேன்! ஹாஸ்பிடல் போவோம். நீ தனியா போகாத!” என்று லேசாய் கசிந்திருந்த அவள் கையை சுட்டிக்காட்டினான்.

“இருபத்தி ஏழு வருஷமா தனியாதான் போயிட்டு வரேன். எனக்கு என்ன பாத்துக்க தெரியும். நீ உன் வேலைய பாரு! இம்சை..” என்றதோடு அந்த கார் அங்கிருந்து மறைந்திருந்தது. அவன்தான் அது அந்த தெருவை கடக்கும் வரையிலும் அசையாது நின்றிருந்தான் அவளது “இருபத்தி ஏழு வருஷமா தனியாதான் போயிட்டு வரேன்” இல். ஏனோ அந்த வார்த்தைகளில் அவனுள் சட்டென எதுவோ உடைந்து நொறுங்கியது. அது என்னவென்று தான் தெரியவில்லை. கார் கண்ணில் இருந்து எப்பொழுதோ மறைந்திருந்தது. வெகு நேரம் அப்படியே நின்றிருந்தவன் பின்னர் ஒரு சிறு தலை உலுக்கலுடன் வீட்டை நோக்கித் திரும்பினான் ‘நீ பாத்துக்கிட்ட லட்சணம் தான் தெரியுதே!’ என்ற அவனது மனக் குரல் அந்த காற்றோடு காற்றாய் கலந்து கரைந்தது.

அதனுடனே சேர்ந்த ‘நா ஏன் டென்ஷனாகனும்? யார் எப்படி போனா எனக்கென்ன! அதான் என் வேலைய பாக்க சொல்லிட்டாள..’ என்ற விட்டேற்றியான பதிலும் பாவமுமாய் தோளை அலட்சியமாய் உதறியவனின் நடையில் வேகம் கூடியிருந்தது.

ஏனோ சம்பந்தமின்றி எடுத்ததற்கெல்லாம் எரிச்சல் எரிச்சலாய் வந்தது. எதையோ தீவிரமாய் சிந்தித்து ஏதோ ஒன்றைத் தீர்மானித்துக்கொண்டே வீட்டு வாசலுக்கு வந்தவன் அதே எரிச்சலுடன் ஷூவை உதற அது துள்ளிக் குதித்து இரண்டாவது படியில் சென்று விழுந்தது. அதைக் கவனித்தவனுக்கோ எரிச்சலையும் தாண்டி ஆயாசமாய் வந்தது. வேண்டா வெறுப்பாய் சென்று எடுத்து வந்தவன் அதை அதனுடைய இடத்தில் வைத்துவிட்டு கதவில் கை வைக்க அது உள்பக்கமாய் பூட்டப்பட்டிருந்தது.

‘இவனொருத்தன்! அஞ்சு நிமிஷம் போயிட்டு வரதுக்குள்ள பூட்டிருவான்!’ என்று அலுத்துக்கொண்டாலும் அவனுக்கே அடி மனதில் அதுதான் சரியெனப்பட்டது. அதில் இன்னும் எரிச்சல்தான் வந்தது. தன்னிடம் இருந்த சாவியைக் கொண்டு திறந்தவன் உள்ளே நுழையவும் அப்படியொரு மணம் அவன் நாசியை நிறைத்தது. துவைத்த துணிகளை உலர்த்திக்கொண்டிருக்கிறான் போலும் என எண்ணியபடி உள்ளே நுழைந்தான் நிலா.

அவனெதிரில் இருந்த அறைக்கதவு விரியத் திறந்திருக்க அவ்வறையின் தரையில் பெரிய பாய் ஒன்றை விரித்து அதன் மேல் இதமான துணி ஒன்று விரிக்கப்பட்டிருந்தது. மனதுக்குள் சிரித்துக்கொண்டான் அண்ணனை எண்ணி,அவனது அளவுக்கு அதிகமான முன்னேற்பாடுகளை நினைத்தே, ‘பிள்ளைய அப்படி தரையிலகூட விடாம பாக்கறானாம்!’

அந்த பாயில் குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான பொம்மைகளும் விளையாட்டு சாமான்களும் சில அங்குமிங்குமாய் கிடக்க அதற்கு நடுவில் மீயாழ் விளையாடிக்கொண்டிருந்தாள்.

அவளையே பார்த்திருந்தவனுக்கு உள்ளுக்குள் எரிச்சல் மறைந்து ஒருவித இலகு நிலை. பிறகு கொஞ்சம் கையாலாகாத உணர்வு! மீயாழை பார்க்கப் பார்க்க ஒன்று மட்டும்தான் தோன்றியது, எல்லாம் சரியாய் போயிருந்தால் இந்நேரம் எப்படி இருந்திருப்பாள்? இரண்டு வீட்டிற்கும் முதல் பேரக்குழந்தை! குடும்பமே கொண்டாடியிருக்கும்.. இப்படி தனியாய் விளையாட அவளை ஒரு பத்து நிமிடங்கள் கூட விட்டிருக்க மாட்டர்! அவனுக்கும் அவர்களுக்கும் ஒத்துப்போகாமல் இருக்கலாம், ஆனால் இந்த விடயத்தில் அவர்கள் எப்படியெல்லாம் மீயாழை தாங்கியிருப்பார்கள் என்று அவனுக்குத் தெரியும். அப்படிப்பட்டவர்கள் ஏன் இன்று இதை இப்படி அவசரப்பட்டுக் கெடுத்துக்கொண்டார்கள்? ப்ச்.. ஏனோ அவளுக்கு நியாயப்படி கிடைக்கவேண்டியது எதுவோ மறுக்கப்பட்டதுபோல் உணர்ந்தான் அவன்.

இப்பொழுது அவனது கவனம் அப்படியே அவ்வறையிலிருந்து அதற்கு பாரலெல்லாய் இருந்த பால்கனிக்கு தாவியது. ஜீவன் மீயாழ் தூங்கும்பொழுது துவைத்து வைக்கப்பட்டிருந்த துணியைக் காயப்போட்டுக்கொண்டிருந்தான். நான்கு துணிகளுக்கு ஒரு முறை எனும் விதம் அவ்வப்பொழுது அவள் என்ன செய்கிறாள் என்பதை எட்டிப்பார்த்துக்கொண்டான்.

மீயாழின் பொக்கை வாய் புன்னகையில் எண்ண அலைகள் அனைத்தும் அடங்கிவிட, “மீ குட்டி என்ன பண்றீங்க?” என்ற திடீர் உற்சாக குரலுடன் அறையினுள் நுழைய இருந்தவனைத் தடுத்தது ஜீவனின் “நிலா” என்ற அதட்டல். உடனே நாடக பாணியில் பெரு மூச்சொன்றை வெளியிட்ட நித்திலனும், “ரைட்டு!” என்றுவிட்டு குளியலறை நோக்கி நடந்தான்,

“எத்தன தடவ சொல்றது வெளில போய்ட்டு வந்து அப்படியே யாழி கிட்ட போகதன்னு..” என்ற ஜீவனின் குரலிடம் இருந்து தப்புவது போல.

வீட்டினுள் நுழைந்த இமையாவிற்கு வலியைத் தாண்டி எரிச்சல் உணர்வே மிகுந்திருந்தது. அவன் ஏதோ ஒரு விதத்தில் அவளை தொந்தரவு செய்துவிட்டதுபோல் இருந்தது. அதை அவன் பேசியதைவிட தான் நின்று கேட்டதுதான் இன்னும் எரிச்சலாய் வந்தது. ‘இம்சை.. இம்சை!’ என்று முணுமுணுத்துக்கொண்டே அறையினுள் நுழைந்து கதவடைத்துக்கொண்டவள் உணரவில்லை அவள் முதன் முறையாய் அபியை சந்தித்தபொழுது அவளையும் “அதிகப்பிரசங்கி” என்றுதான் அழைத்தோமென.

அன்றைய நாள் வெகு நேரம் அவனே அவள் எண்ணங்களை ஆக்கிரமித்திருந்தான். ஒருவர் தன்னை இந்தளவு எரிச்சலாக்கக் கூடும் அதைத் தானும் காதுகொடுத்து கேட்டுக்கொண்டு வருவோம் என்றெல்லாம் அவள் நினைத்தே பார்த்திருக்கவில்லை.

அதன் உச்சக்கட்டமாய் அடுத்த நாள் காலை அவள் எழுந்தபொழுது அவள் வீட்டு முகப்பறையில் அமர்ந்திருந்தான் நித்திலன்.