நுட்பப் பிழையவள்(2)
நுட்பப் பிழையவள்(2)
பிழை-2
“`வழமையின் வாசம்“`
மூன்று வருடங்களுக்குப் பிறகு….
அந்த அறை முழுதும் இருள் சூழ்ந்திருக்க அங்கு வெப்பநிலை என்பது பெயரளவில் கூட இருக்கவில்லை! மாறாய் தேகத்தை உறைய வைக்குமளவு குளிர் ஏஸியின் உபயத்தால் படர்ந்திருந்தது. அறையினுள் துளி ஒளி கூட வராதளவு அனைத்து திரைச்சீலைகளும் இறுக்கமாய் நின்றுக்கொண்டிருந்தது. அது போதாதென்பதைப்போல கனத்த போர்வை ஒன்றால் தலைவரை மூடிக்கொண்டு துயில்ந்திருந்தாள் இமையா.
அவளுக்கு அப்படி இருந்தால்தான் உறக்கும் பிடிக்கும்.. அப்படி ஒரு எண்ணம்..!!
இரண்டு தரம் பொன்னம்மா கதவை தட்டிவிட்டு சென்றாயிற்று. பொன்னம்மாவின் தட்டலெல்லாம் இவளுக்கு கேட்டாலும் எழத்தான் முடியவில்லை. விருப்பமற்ற கனவுகள் பல வரிசைக்கட்டியது போல புரண்டுக்கொண்டிருந்தவள் ஒரு கட்டத்தில் சட்டென எழுந்தமர்ந்தாள். முகத்தை கையால் தாங்கியபடி.
ச்சே!! அதே கனவு… எப்பொழுதாவது வரும் அதே கனவு இப்பொழுது சில நாட்களாய் அவ்வப்பொழுது எட்டிப்பார்க்கிறது.
இம்முறையும் அவன் கண்களை தவிர்த்து அவள் வேறெதையும் பார்க்கவில்லை.
தலையை அழுந்த கோதியவாறு எழுந்துச் சென்று திரைச்சீலைகளை விலக்கி அறையின் தாகத்திற்கு வெளிச்சமளித்தாள்.
அங்கு நின்றபடியே சில கணங்கள் வானை வெறித்தவளுக்கு அவளை நினைத்தே சிரிப்பாய் வந்தது. நிஜத்தில் கண்களை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டு கனவில் முகத்தை காணவில்லையே என்றால் என்ன அர்த்தம்? அதுசரி இத்தனை வருடங்களுக்குப் பிறகும் ஏன் அச் சம்பவம் மட்டும் அவளுக்கு அடிக்கடி கனவில் வருகிறது? அவளுக்கு முத்தமொன்றும் புதிதில்லையே!? முதல் முத்தம் என்று சொல்வதற்கு… ஒரு வேளை அது அவளால் தொடங்கப்படாததாலா? ப்ச்!! நினைக்க நினைக்க எரிச்சல்தான் வந்ததே ஒழிய வேறெதுமில்லை!
பொன்னம்மா மறுபடியும் கதவை தட்டினாள்.
“பாப்பா!! பாப்பா!! காபியாவது குடிமா…” என்று.
அப்பொழுதுதான் மணியைப் பார்த்தாள். வெகு நேரம் உறங்கிவிட்டது புரிந்தது.
“நானே கீழ வரேன் பொன்னம்மா” என்றிவளின் குரல் கேட்டு பொன்னம்மா வாசலிலிருந்து திரும்பி நடப்பதை இவளால் உணர முடிந்தது.
பொன்னம்மா இவளுடனே வெகு காலமாய் பயணிப்பவள். இவளது பதின்பருவத்தில் இங்கு வேலைக்கு வந்து சேர்ந்திருக்கலாம்… சரியாய் நினைவில் இல்லை இவளுக்கு… ஆனால் இத்தனை வருடங்கள் கடந்தும் அங்கேயே இருக்கும் வெகு சிலரில் பொன்னம்மாவும் ஒருத்தி.
வெளியே புறப்படுவதற்கு ஏற்றார்போல் தயாராகி கீழிறங்கினாள். பொன்னம்மாவின் கைவண்ணத்தில் மேசையில் இவளுக்கென உணவு காத்திருந்தது. மேசையின் அருகே சென்றவள் அமர்ந்து உண்ணத் தொடங்கினாள்.
பொன்னம்மாவும் தொடங்கினாள் சின்கில் கிடந்த பாத்திரத்தை உருட்டியவாரே…
“அபிம்மா எங்கமா? கொஞ்ச நாளா ஆளையே காணோம்…” -பொன்னம்மா
“வேலையா இருப்பா” – இமையா
அவளுக்கும் பொன்னம்மா எதற்கு தொடங்கினாள் என்று தெரியும்.
“அபிமா சொல்லுச்சு” – பொன்னம்மா
“ஓ…” – இமையா
“அபிமாக்கு வீட்டுல வரன் பாக்காங்களாமே…” – பொன்னம்மா
“அப்படிதான்போல” – இமையா
அதற்கு நான் என்ன செய்ய? என்ற பாவம் அவளிடம். கூடவே அபியை இன்று சந்திக்க வேண்டும் என்ற குறிப்பெடுத்தல்.
“ஹும்…. ” என்றொரு பெருமூச்சை இழுத்துவிட்டு “ஐய்யா இருந்திருந்தா… உனக்கும் இப்ப நல்லது கெட்டது பார்த்துருப்பாரு….” என்று அலுத்துக்கொண்டாள் பொன்னம்மா.
சாப்பிட்டுக் கொண்டிருந்தவளின் கை தட்டில் ஒரு கணம் உறைந்து நின்றது. பிறகு ஏளன பாவத்துடன் நிமிர்ந்தவள்,
“ஏன் பொன்னம்மா… உங்கய்யா இருந்திருந்தா மட்டும் என்ன பார்த்துருப்பாருனா நினைக்கற?” என்றவள் சின்ன சிரிப்பொன்றுடன் தலையை சிலுப்பிவிட்டு தட்டில் கவனமானாள். பொன்னம்மா மௌனம் காத்தாள். இதற்கு அவளால் என்ன சொல்ல முடியும்?
சாப்பிட்டு கை கழுவியவள் அருகிலிருந்த பொன்னம்மாவைப் பார்த்துவிட்டு, ஏதோ நினைவு வந்தவள் போல…
“எல்லா கல்யாணமெல்லாம் நல்லதுல வராது பொன்னம்மா” என்றுவிட்டு வெறித்துப் பார்த்த பொன்னம்மாவிற்கு சிரிப்பை பரிசாக்கிவிட்டு கிளம்பிவிட்டாள்.
வண்டியை நிறுத்திவிட்டு காபி ஷாப்பினுள் நுழைந்தவளை அவளது வழமை வளைத்துக்கொண்டது. வேலை சுவாரஸ்யத்திலிருந்தவளின் முன் சற்று நேரத்திலெல்லாம் வந்து நின்றாள் அவள்.
அவளை இவள் அங்கு அடிக்கடி பார்த்திருக்கிறாள். அவள் இந்த காபி ஷாப்பின் வழமையான வாடிக்கையாளர்களில் ஒருத்தி. எப்பொழுதும் இதோ… இப்பொழுது இவர்கள் அமர்ந்திருக்கும் இதே ஓரத்து இருக்கையில்தான் அவளும் அவளின் தோழியும் அமர்ந்திருப்பர். அதனாலையோ என்னவோ திடீரென வந்து “உங்ககிட்ட கொஞ்சம் பேசலாமா?” என்று கேட்டவளுக்கு மறுப்பு தெரிவிக்கும் மனம் வரவில்லை இமையாவிற்கு!
“ம்ம் பேசலாமே” என்றதோடு இங்கு வந்து அமர்ந்துவிட்டனர் இருவரும்.
மௌனத்தை முதலில் கலைத்தது இமையாதான்.
“அவங்க வரலையா?” – இமையா
புன்னகைத்து “இல்லை” என்று இடவலமாய் தலையசைத்தவளின் முகம் பார்க்கவே அத்தனை மனோகரமாய் இருந்தது.
“அவளுக்கு உங்க பாட்டுனா ரொம்ப இஷ்டம்… அதுக்காகவே இங்க வருவோம்” – அவள்
ஆம்! இமையா அங்கு வேலை பார்ப்பதற்கு பல காரணங்கள் இருந்தது அதில் இதுவும் ஒன்று! மாலை நேரத்தில் காபியுடன் சேர்த்து இவளது இசையை ருசிக்கவெனவே சிலர் வருவர். இவர்களும் அதில் சேர்த்தி போல…
முறுவலுடன் அதை ஏற்றுக்கொண்டாள் இமையா.
“உங்க ஃப்ரெண்ட்க்கு ம்யூஸிக்னா இஷ்டமா?” – இமையா
“ம்ம்… ஃப்ரெண்ட் இல்ல பார்ட்னர்…” -அவள்
ஒரு கணம் புரியாமல் பார்த்தவள் புரிந்த பின்பு எதிரிலிருந்தவளிடம் கை நீட்டினாள்.
“வாழ்த்துகள்!!” என்று புன்னகைத்தவாரே
தன் முன் நீட்டப்பட்டிருந்த இமையாவின் கையை பற்றிக்கொண்டு சின்ன சிரிப்புடன் தலையை மறுப்பாய் அசைத்தவள் “இன்னுமில்ல… இனிமேல்தான் ப்ரபோஸ் பண்ண போறேன்” என்றாள் முகம் மலர்ந்து.
“அப்போ ஆல் த பெஸ்ட்!!” – இமையா
“தாங்க் யூ!!” – அவள்
அவளது வாழ்த்தைப் பெற்றுக்கொண்டவள் சிறு தாளை இமையாவிடம் நீட்டினாள்.
இவள் புருவங்கள் நெளிய குழப்பமாய் அதை வாங்கிட அவளோ, “இன்னைக்கு இந்த பாட்டு பாடுவீங்களா? நேயர் விருப்பம்…” என்றவாரே தன்னை ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருப்பவளைக் கண்டவள் அவளிடம் விரிய புன்னகைத்து தலையசைத்தாள்.
“நிச்சயமா!”
அவள் கிளம்பிவிட்டாள். இவளும் வேலையில் கவனமாகிப்போனாள். எல்லாம் சரியாய் மாலை தென்றல் வீச அவர்கள் இருவரும் காபி ஷாப்பினுள் நுழையும்வரைதான்.
சொன்னதைப் போலவே வந்துவிட்டவளை கண்டு இவள் முறுவல் செய்ய அவளோ உள்ளே நுழையும்பொழுதே இமையாவைதான் கண்களால் தேடினாள்.
இமையாவை கண்டுவிட்டவளின் கண்களில் நிம்மதி.
சற்று நேரத்திலெல்லாம் கையில் கிட்டாரோடு அந்த குட்டி மேடைக்கு வந்த இமையாவின் பார்வை கார்னர் இருக்கையவளின் புறம். அவளும் இமையாவைதான் பார்த்திருந்தாள். அவளை நோக்கி முறுவலொன்றை வீசிவிட்டு மீட்டத் தொடங்கினாள்.
உன் உயிர்
அதன் இசை தேன்
தரும் பூவின் நிழலோ
மோகத்திரை
மூன்றாம் பிறை மூங்கில்
மரம் முத்தம் தரும்
இமையா இங்கு பாட அங்கு அவள் அவளவளின் அருகில் வந்து அமர்ந்து அவள் கரம் கேட்டு நின்றாள். அவளும் கரம் கோர்த்தாள். சுற்றிலும் கை தட்டல்களுடன் தொடங்கியது அவர்களது காதல் பயணம்..!!
இமை விரல்களில்
காற்றாய் கை வீசு மலர்
படுக்கையில் மெளனம் நீ
பேசு காதலே தனிமையில்
ஒரு காதல் தாழ் போட்டு இடைவெளியினில் என்னை
நீ பூட்டு காதலே
தீண்டும் தினம்
தென்றல் மணம் கூந்தல்
இழை வெந்நீர் மழை உன்
காதலால் என்னுள் நூறு கனா
இங்கிருந்தபடியே கண்களை மூடித்திறந்து வாழ்த்துரைத்தாள் இமையா.
அவள் வீடு திரும்ப வழமைபோல இருட்டிவிட்டிருந்தது. அப்பெரிய பங்களா இருட்டிலும் சோபை குறையாமல் நின்றிருந்தது. காரை நிறுத்திவிட்டு இறங்கியவள் வீட்டை நிமிர்ந்து நோக்கினாள். வெறும் கட்டிடம். உள்ளே சென்றுவிட்டாள். அத்தனை பெரிய வீட்டில் தனித்திருக்கும் பயமெல்லாம் அவளிடம் இல்லை. அது சேர்ந்திருந்தவர்களுக்கு மட்டுமேயான உணர்வல்லவா…
அவ்வப்பொழுது தலையைக் காட்டியபடி ஊசலாடிக்கொண்டிருந்த தூரத்து உறவும் மூன்று வருடங்களுக்கு முன் முழுதாய் முறிந்துவிட்டிருந்தது. அதுவும் அவளால் தான்.
இப்பொழுதும் நினைவிருக்கிறது அபிதான் வருந்தியதெல்லாம்.
“உனக்கிருக்க ஒரே சொந்தம் அவங்கல்லாம் மீ… விட்டுடாத…” – அபி
“போறேனு சொல்றவங்கள பிடிச்சு வைக்கறதுல என்ன பயன்?” – இமையா
“மீ… நீ பிடிச்சு வைக்க வேணாம்… முயற்சி பண்ணி பாரேன்… ஒரேயொரு தடவ..” -அபி
அவளும் முயற்சி செய்துப் பார்த்தாள். அவர்கள் அவளைவிட்டு சொத்தை பிரித்துக்கொண்டனர். அவளும் விட்டுவிட்டாள். இந்த வீட்டோடு சேர்த்து இன்ன பிற சொத்துக்களும் இருந்தன… முதலில்… அதை பிரித்தது போகதான் இப்பொழுது அவளிடம் இருப்பதெல்லாம்.
கிட்டாரையே ஒரு கணம் வெறித்தவளுக்கு இன்று காபிஷாப்பில் நடந்தவை அனைத்தும் நினைவிலாடின… அந்த சந்தோஷச் சூழலும்… ஃபோனை எடுத்து அபிக்கு தகவல் அனுப்பினாள்
நாளை சந்திக்க வருவதாக.
தொடரும்….