நுட்பப் பிழையவள்(7)

 

           ~ அத்தை பாப்பா ~

 

சில காலங்களில்… 

 

திருமணத்திற்குப் பின் அபியும் ஜீவனிற்கும் இடையேயான உறவும் இருவரது குடும்பங்களுக்கிடையேயான உறவும்கூட வெகு நன்றாகவே பொருந்திப்போக எந்த ஒரு தங்குத்தடையுமின்றியே நாட்கள் மெல்லிசையாய் ஓடியது. 

 

அபிக்கு வங்கியில் வேலை என்றால் ஜீவனுக்குத் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் உத்தியோகம்! காலையில் வேலை மாலையில் அரட்டையென அழகாகவே அவர்கள் நாட்கள் பயணிக்க வீட்டிலும் அத்தனையும் சுமுகமே. அவர்கள் இருவரும் ஜீவனின் வீட்டில் இவனது அம்மா அப்பாவுடன்தான் இருந்தனர். ஜீவனின் அன்னை வத்சலா பள்ளி ஆசிரியராய் இருந்தவர். இவனது அப்பா அமிர்தன் தாஸில்தார் அலுவலகத்தில் நல்லதொரு பணியிலிருந்தவர். அவர்களது அபியதைவிடச் சற்றே வசதியான குடும்பமே. 

 

அன்றும் கீழ்த்தளத்தில் வத்சலாவும் அமிர்தனும் ஏதோ பேசிக்கொண்டிருக்க மேலே அதற்கு நேரெதிராய் மற்ற இருவரையும் கூர்மையாய் பார்த்தபடி கைகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள் இமையா. 

 

“மீ எதாவது சொல்லேன்…” – என்று மெல்ல ஒலித்தது அபியின் குரல். 

 

ஒருகணம் அபியிடம் முழுப் பார்வையையும் திருப்பியவள், “யூ ட்ரெய்ட்டர்!! நீயும் சொல்லல…” என்றுவிட்டு மீண்டும் உம்மென்றாக இமையா பேசியதிலேயே அவளுக்கு அத்தனையாய் கோபம் எதுவும் இல்லை என்பதை மற்ற இருவருக்கும் நன்றாய் புரிந்தது. 

 

அப்பாவியாய் முகத்தை வைத்திருந்த அபியைப் பார்த்த ஜீவனோ அவளிடம் தான் பார்த்துக்கொள்வதாய் கண்ணைக் காட்டிவிட்டு, “அதைத் திறந்து பார்க்கலையா?” என்றான் இமையாவின் கை அருகிலிருந்த அந்த புதினத்திலேயே கவனமாய். 

 

பட்டென கையருகில் மேசையிலிருந்த புத்தகத்தை தன்புறமாய் இழுத்தவள் அவனையேதான் பார்த்திருந்தாள். பின் சிறு மௌனம்.

 

“ஏன் இவ்ளோ நாளா சொல்லலை?” – இமையா

 

மெல்லிய குரலில் கேட்டவளையே பார்த்திருந்த ஜீவன் அத்தனை நேரம் அமர்ந்திருந்த இருக்கையைவிட்டு அவள் புறமாய் வந்து அவள் கண்களையே நோக்கியவன் ஆழ்ந்த அதே சமயம் மிக மிருதுவானதொரு குரலில் அப்பொழுதே பேசத்துவங்கிய குழந்தையின் தந்தையின் பரிவோடு, “இமையா… உன்கிட்ட சொல்லக்கூடாதுனு நினைப்பேனா நான்? அபிக்கும் கல்யாணத்துக்கு அப்பறம்தான் தெரியும்… அவ அன்னைக்கே அப்பவே உன்டட சொல்லனும்னு ஒத்த காலுல நின்னா… நான்தான் இப்போதைக்கு வேணாம்… என் அடுத்த கதை இன்னும் கொஞ்ச நாள்ல பப்ளிஷ் ஆகப்போது அப்போ நானே அவக்கிட்ட சர்ப்ரைஸா சொல்றேனு சொன்னேன்…. எனக்கு அபி சொன்னப்போ எவ்ளோ சந்தோஷம் தெரியுமா? நம்ம இமையாவோட அபிமான எழுத்தாளர் நானு தெரியரச்சே…” – ஜீவன்

 

 

“முன்னவே சொல்லிருக்கலாம்ல…” – தான் சொல்வது அபத்தமாய் இருக்கிறதென்று தனக்கே தெரியவும் குரல் மெலிந்து மறைந்தது. 

 

 

“சொல்லிருக்கலாம்தான்… ஆனா அப்போ சொல்றதுக்கும் இப்போ சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்கே!!” என்றவனின் பார்வை அந்த புதினத்தையே சுட்டிக்காட்டியது. 

 

 

சற்று நேர அமைதி அங்கு நிலவ மெல்ல அருகிலிருந்த புத்தகத்தின் அட்டையை ஒற்றை விரலால் தூக்கினாள். அதில் ஜீவனின் கையெழுத்தில் “எங்கள் இமையாகியவளுக்கு…” என்று கையொப்பமிடப்பட்டிருக்க உள்ளுக்குள் சட்டென ஒரு வெற்றிடம்… அதன் முழுதும் சரசரவெனப் பரவும் இதத்தின் வாசம்… குளுமையாய் சிறு உணர்வு..!! ஆனால் வெளியிலோ, “ஹௌ சைல்டிஷ்… (How childish)” என்ற போலியான வார்த்தைகள்

 

சற்று நேரத்திலெல்லாம் கையில் ஒரு காப்பி கோப்பையுடன் ஆளுக்கொரு இடமாய் ஐக்கியமானவர்கள் மெல்லக் காப்பியைப் பருகிக்கொண்டிருக்க, 

 

 

“உனக்கு எதாவது செய்யனும்னு ஆசை இருக்கா இமையா?” – ஜீவன்

 

 

திடீரென எழுந்த அவனது கேள்வியை கிரகித்துக்கொள்ள சில மைக்ரோ மணித்துளிகளே இவளுக்கு போதுமானதாக இருக்க இவளது பார்வையோ சட்டென விழுந்தது அபியின் பிடியில். அதே சமயம் அபியும் இவளையேதான் பார்த்திருந்தாள். இருவரிடையேயும் மெல்லிய முறுவல்… காரணம் யாதெனில் இதே கேள்வியை அபியும் முன்னர் ஒருதரம் இவளிடம் கேட்டிருக்கிறாள். இவன் இப்பொழுது கேட்டதுமே இவளது மனம் சட்டெனப் பின்னோக்கிதான் பாய்ந்துவிட்டதே!! 

 

 

 

அந்தி மாலைப்பொழுதொன்றில் இமையாவின் வீட்டில்… இரண்டு உள்ளங்கைகளுக்கு இடையில் கதகதப்பாய் பொறுக்கும் சூட்டில் அகத்திலும் வெதுவெதுப்பை உணர்த்திக்கொண்டிருந்த காப்பி கோப்பையும் அந்த பால்கனி ரெய்லிங்கில்  சாய்ந்து நின்றபடி வானை வெறித்திருந்தனர் இருவரும். இமையா வீடு சற்றே மரங்களுக்கிடையில் பச்சை மணம் அடர்ந்திருந்தது. அது பாதியே மாலைநேர பனிவாடையுடன் சேர்த்து சிலுசிலுவென காற்று வீசிக்கொண்டிருந்தது. 

 

 

“உனக்கு எங்கேயாவது போகனுமா மீ?” – அபி

 

 

பார்வை வானிலேயே பதித்திருந்தவளின் குரல் மட்டும் இவளை எட்ட இவளும் வானை வெறித்தபடியே, 

 

 

“ம்… ரொம்ப தூரம் போகனும். நானே என்ன பின்தொடர முடியாத தூரத்துக்கு போகனும்” – இமையா 

 

 

வானிலிருந்த பார்வையை இமையாவிடம் திருப்பினாள். 

 

 

“போ மீ ஆனா தூரமா இல்ல பக்கமா!!” – அபி 

 

 

இமையாவின் பார்வையும் இப்பொழுது அபியிடம். கூடவே புரியாத பார்வை ஒன்றும். 

 

 

“நீ ரொம்ப தூரம் வந்துட்ட மீ… இன்னும் தூரமா போனா திரும்பி போகவே முடியாம போய்டலாம்… டோன்ட் அபேண்டன் யுவர்செஃப் லைக் தட் மீ!! (Don’t abandon yourself like that Mee) இது தூர போனா தீருரது கிடையாது” – அபி 

 

 

பேசிக்கொண்டிருந்த அபியையே விழியெடுக்காமல் பார்த்திருந்த இமையாவின் இதழோரங்களில் இளமாலை முறுவல் ஒன்று. அதை மறையாமல் அப்படியே அருகில் நின்றவளின் பின்னந்தலை முடியை லேசாய் கலைத்துவிட்டவள் பிறகு பழையபடி திரும்பி வெளியில் பார்வையைப் பதிக்க அபியும் பழையபடி வானை வெறித்தாள். 

 

 

“ம்… ரொம்ப தூரமா போகனும் ஜீவா” – இமையா 

 

 

“ரொம்ப தூரம்னா?” – ஜீவன் 

 

 

“ரோட் ட்ரிப்!! இங்கருந்து நிலபரப்போட கடைசி துண்டுவரை” – இமையா

 

 

“ஏன் இன்னும் போகல?” – ஜீவன் 

 

 

“போகனும்… ஆனா இதுவரை தோணினதில்லை பாப்போம்!!” – இமையா 

 

 

“சில விஷயங்களாம் தோணின உடனே செஞ்சிடனும் இமையா. அது எவ்ளோ சில்லியா இருந்தாலுமே!” – ஜீவன் 

 

 

“இதுக்குதான் அபிக்கிட்ட அதிகம் பேசாதன்னு சொல்றேன்” – இமையா 

 

 

 

“ஹா.. ஹா.. ” என்று மெல்லச்சிரித்த ஜீவனையே பார்த்திருந்த இமையாவினுள் மீண்டும் அதே உணர்வு!! அது இவனை எங்கோ பார்த்த உணர்வு!! இப்பொழுதெல்லாம் இவ்வுணர்வு அடிக்கடி வருகிறது. முன்பு அபி, அபியின் திருமணம் புதிய சூழல் போன்ற வேறு சில விடயங்களில் கவனமாய் இருந்துவிட்டதாலோ என்னவோ அப்பொழுது இதை அவள் கவனித்திருக்கவில்லை. இப்படி உணர்ந்திருக்கவில்லை. ஆனால் அதற்குப் பிறகு எல்லாம் மனதில் சமநிலைக்கு வந்ததும் இது தனியாய் தெரிந்தது. வழமைபோல் அதை அப்படியே ஒதுக்கியவள் அபி சொல்லிக்கொண்டிருந்ததில் கவனமானாள். நேரம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் வாரத்தில் இரு முறையாவது மூவரும் சந்தித்துக்கொள்வதோ இல்லை வேறெதேனும் திட்டமிட்டு வெளியில் செல்வதோவென வழமையாக்கியிருந்தனர். அப்படிதான் இன்றும் இவர்களது வீட்டில் நடந்தது. 

 

 

அதேபோல் சில மாதங்களுக்குப் பிறகு மற்றொரு மாலை வேளையில்… அதே வீட்டில்… 

 

 

விடுவிடுவென இரண்டு இரண்டு படிகளாய் தாண்டி படியேறியவள் அதே அவசரம் சற்றும் குறையாமல் அபி – ஜீவனின் அறையினுள் நுழைந்தாள். கதவைத் திறந்தவளிடம் இருந்த சிறு  பதட்டம்கூட அவ்வறையில் இல்லை. அதற்கு நேர்மாறாய் அமைதியாய் இருந்தது. இவள் கதவைப் பட்டெனத் திறக்கவும் இவளது பார்வை அறையை அலசவும் சரியாய் இருந்தது. அபி அங்கிருந்த இருக்கையொன்றில் அமர்ந்திருக்க ஜீவன் அவளுக்கு எதிரில் சுவரில் சாய்ந்து நின்றிருந்தான். ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்போலும். ஆனால் அதே சமயம் அவளுக்காய் காத்திருந்தது போலவும் தோன்றாமல் இல்லை. 

 

 

அவர்களைப் பார்த்ததும் மெல்லியதாய் அதாவது எதிரில் இருப்பவருக்கு தெரியாதளவு மெல்லியளவு ஆசுவாசமடைந்தவள், 

 

 

“என்ன பண்றீங்க ரெண்டு பேரும்!?” என்றாள் உணர்வுகளற்ற அவளது சாதாரண குரலில். 

 

 

“வந்துட்டியா!? உனக்குதான் வெய்டிங்!!” – அபி

 

 

“அபி நீ பேசின அழகுல நான் வேலையாவது வெட்டியாவதுனு அப்படியே விட்டுட்டு வந்துருக்கேன்…” என்ற இமையா அதையும் அதே அமைதியான குரலிலேயே சொன்னாள்.

 

 

“நீ எப்படி அதுக்குள்ள வந்த?” – ஜீவன்

 

 

“ஷார்ட்கட்” – இமையா

 

 

“ஒரு நாளில்லை ஒரு நாள் நீ ஓவர் ஸ்பீட்ல உள்ள போ போற!!” – அபி

 

 

“அதுக்கு நீ இப்படி மொட்டகட்டயா கூப்பிடாம இருக்கனும்” – இமையா

 

“ஓகே போதும் ரெண்டு பேரும்!! அபிமா என்ன பண்ற நீ?” இவர்கள் இருவரது வாக்குவாதத்தைக் கேட்ட ஜீவன் நடுவில் குதித்து அபியிடம் கண்களால் சைகை செய்தான். அதற்கு அபியும் பதிலுக்கு அதையே செய்ய அவர்கள் இருவரையும் கவனித்துக்கொண்டிருந்த இமையாவோ, 

 

 

“உங்க ரெண்டு பேருக்கும் என்னாச்சு?” என்றாள். இதுவும் அதே குரலில். ஆனால் கொஞ்சமே கொஞ்சம் குழப்பத்துடன். 

 

 

 

அபி கண்களால் மெத்தையை சுட்டிக்காட்டினாள். அவளைத் தொடர்ந்த இமையாவின் பார்வையில் பட்டது அது. அது டீல் நிறத்தில் செவ்வக வடிவத்திலான அட்டைப்பெட்டி. இமையா இவர்களைப் புரியாத பார்வை பார்க்க இவர்களோ ‘திறந்து தான் பாரேன்!!’ என்று கண்களால் பேசினர். 

 

 

 இவர்களிடம் கேள்விப் பார்வை ஒன்றை வீசியவள் அதன் அருகில் சென்றாள். அந்த பெட்டியின் மீது நீல வெள்ளை நிறத்தில் சிறு ரிப்பனால் பட்டர்ஃப்ளை நாட் போடப்பட்டிருந்தது. அதை மெல்ல உருவியவள் அந்தப் பெட்டியைத் திறக்க அவள் முகத்திலிருந்த கேள்வி பாவம் இன்னும் அதிகமாகியது ஒரு நொடிக்கு.  அதனுள்ளிருந்த குழந்தைகளுக்கான டீஷர்ட் ஒன்றைப் பார்த்ததும். சில நொடிகளே ஆனாலும் சட்டெனப் பொறிதட்ட மறுமுறை அந்த டீஷர்டிலிருந்த வாக்கியத்தை வாசித்தாள்.

 

 

“Don’t mess with me my aunt is crazy”  என்றதைப் பார்த்ததும் என்ன செய்வதென்றே புரியவில்லை அவளுக்கு. சட்டென மலர்ந்துவிட்ட பூந்தோட்டத்தைப்போல அவ்விடமே அப்படியொரு உணர்வலையில் மிதந்தது. இவள் திறக்கும்பொழுதே இவளருகில் வந்து நின்றுவிட்டனர் போலும், திரும்பவும் அருகில் நின்ற அபியை முகம் கொள்ளா புன்னகையுடன் பார்த்தவள் “இது…!?” என்று இழுக்க அபியோ, “நீதான் வந்ததும் போட்டுவிடனும்!!” என்று மிருதுவாய் வயிற்றின் மீது கை வைத்துச் சொல்ல. வார்த்தைகளின்றி அபியை இறுக்கமாய் அணைத்துக்கொண்டாள் இமையா. எண்ணி ஐந்தே நொடிகளில் அருகிலிருந்த ஜீவனின் கரத்தையும் இறுகப் பற்றியவள், “வாழ்த்துகள்!!” என்க இம்முறை அவளது குரல் முழுதும் உணர்வுகளின் எதிரொலி. 

 

அடுத்த எட்டு மாதங்களும் அபியை அனைவரும் அப்படித் தாங்கினர். தங்களது ஒரே குழந்தைக்கு இப்பொழுது ஒரு குழந்தையென வஸந்தியும் கோபாலனும் மகளை அங்குத் தாங்க இங்கு ஜீவனும் அவனது பெற்றோர்களும் அவளுக்கென ஒவ்வொன்றாய் பார்த்துப் பார்த்துச் செய்தனர். இதில் இமையாவை பற்றிச் சொல்லவா வேண்டும்!? 

 

 

அன்றும் அப்படிதான் நெருங்கிய நண்பரின் மகன் கல்யாண ரிசப்ஷனுக்கு செல்ல ஆசையிருந்தாலும் அபியைத் தனியே விட்டுச்செல்வதா? அந்தளவு இது முக்கியமா? என்று நினைத்து மறுத்துக்கொண்டிருந்த வத்சலாவை ‘ஒரு ஒரு மணி நேரம்தானே!?’ என்று அபி சமாதானப்படுத்தி அமிர்தனுடன் அனுப்பி வைக்கப் பாதி தூரம் சென்றவர் மனம் கேட்காமல் அமிர்தனை மட்டும் சென்று வருமாறு சொல்லிவிட்டு வீடு திரும்பிவிட்டார். திடீரென அழைப்பு மணி அடிக்கவும் யாரெனப் பார்த்துவிட்டு கதவைத் திறந்த அபியிடம், “மனசு கேக்கல… மாமா பார்த்துபார்!!” என்று உள்ளே நுழைந்த வத்சலாவையே சின்ன முறுவலுடன் பார்த்திருந்த அபி மௌனமாய் தலையசைத்துவிட்டு கதவடைத்து உள்ளே சென்றாள். அந்த இரண்டு நாட்களாய் ஜீவன் இரவு நேரம் வீட்டிலிருக்கவில்லை. நைட் ஷிஃப்ட். முதலில் அவனுக்கு அதில் விருப்பமே இல்லை அவன் ஒவ்வொரு கணங்களையும் அபியுடன் கழிக்க எண்ணினான். அது சாத்தியமற்றதென அவனும் அறிந்தேதான் இருந்தான். 

 

 

சீரான இடைவேளையில் அபிக்கு அவனிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துவிடும். இப்பொழுதும் தனதறையில் அமர்ந்திருந்தவளை அந்த குறுஞ்செய்தி வந்த சத்தம் கலைக்கச் சிறு புன்னகையுடன் அதற்குப் பதில் அனுப்பிவிட்டு அவள் நிமிரவும் வாசலில் வந்து நின்ற வத்சலா, “நான் படுக்க போறேன் அபி. ரூம்ல தான் இருப்பேன் எதாவது வேணும்னா குரல் குடு!! உங்க மாமாட்ட இன்னொரு சாவி இருக்கு அவரே கதவ திறந்துப்பார் நீயும் சீக்கிரமா தூங்கு” என்றுவிட்டுச் சென்றார். 

 

 

அபி இப்பொழுது இருப்பது கீழ்த்தளத்தில் இருந்த ஒரு அறையில். முதல் சில நாட்களிலேயே அவளுக்குக் கீழே இருக்கும் அறைதான் இப்போதைக்குச் சரியென அனைவருமாய் சேர்ந்து முடிவு செய்து மேலே அவர்களது அறையிலிருந்த, அவளுக்கு அப்போதைய தேவைக்கு ஏற்ற சில பொருட்களை மட்டும் கீழ்த் தளத்திலிருந்த அறைக்கு மாற்றினர் அவள் அதிகம் படியேற வேண்டாமென்று. 

 

 

ஒரு சொட்டு தூக்கம் வராது அமர்ந்திருந்த அபி மணியைப் பார்த்தாள் அது பன்னிரண்டைத் தொட்டுக்கொண்டிருந்தது. தனது ஃபோன் கேலரியில் இருந்த ஒவ்வொரு ஃபோட்டோவாய் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு திடீரென ஓர் எண்ணம்!! அதில் சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றைப் பார்த்து. அது அவளும் இமையாவும் சேர்ந்தெடுத்துக்கொண்டது. அது சற்றே பழைய புகைப்படம் ஒன்றை நினைவுபடுத்த அவளது பழைய ஆல்பத்தை தேடியவள் அது அந்த கப்போர்டில் கிடைக்காமல் போகவுமே நினைவு வந்தது. அது மேல் அறையில் இருப்பது. 

 

 

மெல்ல எழுந்து படியேறியவளுக்கு வத்சலாவின் அறையில் அவர் அசந்து உறங்குவது வரிவடிவமாய் தெரிந்தது. அவரை எழுப்பிவிடாது சத்தமெழுப்பாமல் படியேறினாள். அவள் நினைத்தது போலவே அந்த ஆல்பம் அங்குதான் இருந்தது. அங்கிருந்த குட்டி மேசையில் அதை வைத்துவிட்டு அமர்ந்தவள் ஒவ்வொரு பக்கமாய் அதைப் புரட்டப் புரட்ட அவர்களது முதல் சந்திப்பிலிருந்து இன்றுவரை நடந்த ஒவ்வொரு சம்பவமும் நினைவிலாடி இதழில் புன்னகையாய் மலர்ந்தது. அகம் முழுதும் நெகிழ விழியுயர்த்தியவளின் பார்வையில் பட்டது அந்த டைரி. 

 

 

 

பழைய நினைவுகளையெல்லாம் புரட்டிக்கொண்டிருந்த அபிக்கு அப்பொழுதே அன்று காலையில் அவள் மனதில் குறித்து வைத்தது நினைவில் வர நினைவு வந்த அந்த கணமே இமையாவிற்கு அழைத்துவிட்டாள். 

 

 

 

அபிக்கு காலையில் அவள் ஆர்ணிகாவை சந்தித்தது அவர்களது உரையாடலென அனைத்தும் மனதில் வந்துபோயின. ஆர்ணிகா அபியின் சிறு வயது தோழி. அபியைவிட ஐந்தாறு வயது மூத்தவள். அவளது பக்கத்து விட்டிலிருந்தவள். இருவருக்குமிடையே நல்ல நட்பிருந்தது. ஆர்ணிகாவின் குடும்பம் மொத்தமாய் அம்ஸ்டர்டேமில் போய் செட்டிலாகும்வரை. அதற்குப் பின் இருவருக்குமிடையேயான தொடர்பு அற்றுப்போனது. வருடங்கள் பல ஓடிய பிறகும் இவளை நினைவு வைத்து இவள் வீட்டிற்குச் சென்று விசாரித்து இவள் எண்ணை வாங்கியிருக்கிறாள் ஆர்ணிகா. வாங்கியது மட்டுமின்றி அப்பொழுதே அழைத்துப் பேசிவிட இருவரும் அன்று காலையே காபி ஷாப் ஒன்றில் சந்தித்தனர். அதன் தொடர்ச்சிதான் இப்பொழுது இவள் இமையாவிற்கு அழைப்பதும். 

 

 

 

அழைத்து இரண்டே நொடியில் அப்பக்கத்தில் அழைப்பு எடுக்கப்பட்டிருந்தது. போதாக்குறைக்கு  “சொல்லுடா!?” என்ற தெளிவான குரலும். அதுவே சொல்லியது இமையா இன்னும் உறங்கவில்லையென. அவள் அப்படிதான் ஒன்று நாள் கணக்கில் தூங்கவே மாட்டாள் இல்லையெனில் ஒரேயடியாய் தூங்கிக் கழிப்பாள். ஏதோ ஒரு புள்ளியில் அவளது தூக்கம் அவள் பிடியிலிருந்து தப்பி அவள் உணர்வுகளின் பிடியில் சிக்கியிருந்தது. தூங்கக் கூடாதென்று இல்லை அவளால் தூங்க இயலவில்லை. 

 

 

 

“என்ன பண்ற மீ!?” – அபி 

 

 

“வெட்டிதான் சொல்லு” – இமையா 

 

 

“இன்னைக்கு காலைல ஆர்ணிகாவ மீட் பண்ணறதா சொல்லிருந்தேன்ல!?” – அபி 

 

 

“ஆமாம், உன் சின்ன வயசு ஃப்ரெண்ட்” – இமையா 

 

 

“ம்ம்… ஆர்ணிகா இப்போ டாக்டர் ஆர்ணிகா… தெரபிஸ்ட்…” – என மெல்ல இழுத்தாள் அபி

 

 

“நல்லது” – அவள் சொல்ல வருவது புரிந்துவிட அது புரியாததுபோலவே பிடிகொடுக்காமல் பேசினாள். 

 

 

“மீ!!” – அபி 

 

 

“சொல்லு அபி!?” – இமையா 

 

 

“அப்போ நீ வரமாட்ட!?” – அபி 

 

 

“எங்க வரனும்!?” – இமையா 

 

 

“அப்படியே தெரியாத மாதிரி நடிக்காத!! அப்பாய்ன்மெண்ட் புக் பண்ணிருக்கேன்” – அபி 

 

 

“நல்லது. ஜீவாவ கூட கூப்பிட்டு போய்ட்டு வா” – இமையா 

 

 

“மீ….” – அபி 

 

 

பெருமூச்சொன்றை இழுத்துவிட்டு, “அபி எனக்கு இஷ்டமில்ல! நான் எங்கயும் வரல. தயவுசெஞ்சு என்கிட்ட கேட்காம எதுவும் செஞ்சு வைக்காத!!” – இமையா 

 

 

“ஏன் ஏன் இஷ்டமில்லை!?” – அபி 

 

 

“இஷ்டமில்லைன்னா இஷ்டமில்லை அவ்ளோதான்” – இமையா 

 

 

“மீ…” – அபி 

 

 

“புரிஞ்சுக்கோ அபி… அங்கபோய் என்ன பண்ண சொல்ற!? எனக்கு புரியல… எனக்கே என்னப்பத்தி புரியாதப்போ நான் இன்னொருத்தர்ட்ட என்ன சொல்ல முடியும் என்னனு உதவி கேட்க முடியும்?” – இமையா 

 

 

“மீ…. அதுக்குதான் அவங்க படிச்சிருக்காங்க. நீ எதுவும் சொல்ல வேணாம். அவங்களே உன்ன பேச வைப்பாங்க… ஒரே ஒரு தடவை இதை ட்ரை பண்றதுல என்ன குறைஞ்சிடப்போகுது மீ!? உடம்பு வலிக்குதுனா கீழ விழுந்து கைய உடைச்சா ஹாஸ்பிட்டல் போய் மெடிக்கல் ஹெல்ப் எடுத்துக்கறல்ல? அப்போ ஒன்னும் என் உடம்பு நான்தான் சரி செய்யனும்னு வீம்பு பிடிக்கறதில்லையே!! அப்போ ஏன் மனசு ஒடஞ்சா மட்டும் அதுக்கு உதவி கேட்க தயங்கனும்!? எந்தவிதத்துல உன் கையவிட உன் மனசு குறைஞ்சிது?” – அபி 

 

 

“குறைஞ்சது ஒசந்ததுனு நான் சொல்லல அபி… உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கனு எனக்கு தெரியல…” – இமையா 

 

 

 

“உனக்குதான் புரியல மீ… நம்மளால எல்லாத்தையும் கட்டுப்படுத்திட முடியாது… அப்படி நம்ம கட்டுப்பாட்ட மீறி ஒன்னு போகும்போது அதுக்கு உதவி கேக்கறதுல என்ன தப்பிருக்கு!? நீ சொல்ற மாதிரி எனக்கு நீ சொல்ற நிறைய விஷயம் புரியாம போகலாம் அதுக்கு தீர்வு தெரியாம இருக்கலாம்… ஆனா ஒருவேளை அவங்களுக்கு தெரிஞ்சதுனா? உனக்கான தீர்வு உன்கிட்டதான் இருக்கு, ஆனா அதை உன்னால அடையாளம் கண்டுக்க முடியாத நிலமைல இன்னொருத்தரோட உதவிய எடுத்துக்கறதுனால நீ எந்தவிதத்துலயும் குறைஞ்சிடப்போறதில்லை மீ!! என்னதான் இருந்தாலும் அவங்க எவ்ளோ ட்ரை பண்ணாலும் நீ நீயா முயற்சி செய்யாத வரை அதுக்கு பலனிருக்காது.” – அபி 

 

 

“நான் முயற்சி செய்யாம இல்லை அபி… எனக்கு மட்டும் இப்படி வலிச்சிக்கிட்டே இருக்கனும்னு ஆசையில்லையே!?  என்னால முடியல… நான் எவ்வளோதான் இதுக்குள்ளருந்து, எனக்குள்ளருந்து வெளில வரனும்னு நினைச்சாலும்… முயற்சி செஞ்சாலும் கடைசில அதைவிட மோசமா விழுந்தடறேன்… ஆரம்பிச்சதவிட இன்னும் பின்னால போயிடறேன்… இத்தனை வருஷமா கூடயிருக்க உனக்கு தெரியலையா அபி நான் தொடர்ந்து ட்ரை பண்றது!?” – இமையா 

 

 

“தெரிஞ்சதாலதான் சொல்றேன் மீ. இந்த ஒரு வாட்டினு. நீ இத்தனை வருஷமா உன்கிட்டயே போராடிட்டிருக்கத பாத்துட்டுதான் சொல்றேன். கதவை திறக்கறவரைதானே அந்தப் பக்கம் என்னனு பயம்!? ஒரு தடவை திறந்துதான் பாத்துடுவோமே… ஒரே ஒரு வாட்டி ட்ரை பண்றதுல எதுவும் குறைய போறதில்லையே… ம்ம்!?” – அபி 

 

 

இமையா அமைதியாய் இருக்க அபி, “மீ!?” என்றழைத்தாள்.

 

 

“எனக்கு என்ன சொல்லனு தெரியல அபி… இதைப்பத்தி நாளைக்கு பேசுவோமா?” – இமையா

 

 

“எஸ்கேப்பாகற!! சரி விடு பாத்துக்கறேன்!!” என்று வைத்தவளினுள்ளே எப்படியாவது இமையாவையும் ஆர்ணிகாவையும் சந்திக்க வைத்துவிட வேண்டுமென்ற எண்ணம் திண்ணமானது. 

 

 

அபி அழைப்பைத் துண்டித்துவிட்டு படியிறங்கவென முதல் படியில் அவள் கால் பதித்ததுதான் தெரியும் மைக்ரோ ஸெக்கண்டில் காலுக்கு அடியிலிருந்த வெற்றிடம் அடுத்து நடக்கப்போவதை உணர்த்தி அகத்தினுள் அனைத்தும் சில்லிடச் சட்டென அருகிலிருந்த கைப்பிடியைப் பிடிக்க முயன்றதுவரை தான் அபிக்கு நினைவிருந்தது.