நுட்பப் பிழையவள்(8)

8

⚠️ Disclaimer :- Sensitive content

 

      ~ அழுகையெனும் வரம்~

அதிகாலை மணி நான்கிருக்கும். அப்பொழுதுதான் இமையாவிற்கு அந்த அழைப்பு வந்தது. அது வந்த மறுகணமே வண்டிச்சாவியை மட்டும் எடுத்தவள் அணிந்திருந்த இரவு உடையைக்கூட மாற்றாமல் விடுவிடுவென இரண்டிரண்டு படிகளை பதட்டமாய் கடந்தென சில நொடிகளில் அவளது கார் அந்த நிசப்தமான சாலையில் பறந்துக்கொண்டிருந்தது. அதனுள் இருந்த இமையாவின் மனமோ அவளிடமே இல்லாமல் அதைவிட வேகமாய் படபடத்துக்கொண்டிருந்தது. உள்ளுக்குள் உறுப்புகளென எதுவுமில்லாது வெறும் குளிர்காற்றால் அடைக்கப்படுவதுபோல் ஒரு உணர்வு.

அத்தனை நேரம் தூங்க இயலாமல் புரண்டுக்கொண்டிருந்தவள் அப்பொழுதுதான் லேசாய் கண்ணயர்ந்தாள். அவள் கண்ணசந்த அடுத்த ஐந்து நிமிடங்களில் அந்த அழைப்பு. அது ஜீவனிடமிருந்து வந்தது. இவள் அழைப்பை எடுத்தப்பொழுதே உள்ளுக்குள் அத்தனை கலவரம் அதுவும் அதை ஏற்றதும் அது எகிறித்துடித்தது அந்த நிசப்தம் நிறைந்த முதல் சில கணங்கள். அதைத் தொடர்ந்த ஜீவனின் குரல். அவன் அழுதிருக்கிறானா? இல்லை அழத் தயாராய் இருக்கிறானா? என்று பிரித்தறிய முடியாத ஒரு குரல். இன்னும் சில நொடிகள் பேசினாலும் அழுதுவிடுவேன் என்று அச்சமூட்டியது. அதைத் தொடர்ந்த அவன் சொன்ன செய்தி. முதலில் அவனால் பேசவே இயலவில்லை அதுவே இவளுக்கு பதட்டமாய் இருக்க படுக்கையின் கீழிருந்த செருப்பை மாட்டிக்கொண்டாள். அவன் “அபி… ஆக்ஸிடெண்ட்… சர்வா ஹாஸ்பிட்டல்…” என்றதிலேயே அவளது உலகம் ஒரே நொடியில் சட்டென தலைகீழாய் தாளம் தப்பாமல் புரண்டது… திடீரென ஏதோ ஒரு அடர்ந்த காட்டின் நடுவே பனிமூட்டங்களிடையே அவள் ஆன்மா தொலைந்துவிட்ட உணர்வு… அது அங்குமிங்குமாய் திக்குத்தெரியாத காட்டில் ஓடியோடி தத்தளிப்பதை போலவே அவளும் என்ன செய்ய ஏது செய்யவென புரியாமல் தவித்து பிறகு கார் சாவியைதான் தேடுகிறோம் என்பதையே உணராமல் தேடி கண்டுபிடிப்பதற்குள் லேசான மூச்சுத் திணரலே வந்துவிட்டது அதை பொருட்படுத்தாது நெஞ்சை லேசாய் நீவிக்கொடுக்கக்கூட தோணாது கையை மட்டும் வைத்தழுத்தியவள் விடுவிடுவென வெளிவாசலுக்கு ஓடினாள்.இதெல்லாம் சில நொடிகளில் நடந்துவிட ஜீவனோ சில கணங்கள் கழித்து “சீக்கிரம் வாயேன் இமையா” எனும்பொழுது அவள் வண்டியிலிருந்தாள்.

‘கிளம்பிட்டேன்’ எனும் ஒற்றை வார்த்தையைக்கூட சொல்லத் தோன்றாமல் போக அந்தப் பக்கமும் அழைப்பு துண்டிக்கப்பட மருத்துவமனையை மட்டுமே மனதில் வைத்தாள் இவள்.

ஏன்!? என்னவாகியது? என்ற பல கேள்விகளைத் தாண்டி அவள் மனது போட்டு அரற்றியதெல்லாம் ‘அபி எப்படியிருக்க?? ப்ளீஸ் நல்லாரு!! தயவுசெஞ்சு நல்லாரு!! நான் உன்ன பத்திரமா பாத்துக்கறேன்… ப்ளீஸ் அபி… ப்ளீஸ்…. ப்ளீஸ்… ப்ளீஸ் கடவுளே!! என் அபியை பத்திரமா பாத்துக்கோ!! ப்ளீஸ் அபி இன்னும் கொஞ்ச நேரம்தான் நான் வந்துடுவேன்… ப்ளீஸ்… ப்ளீஸ்…’ என்ற மனம் உள்ளுக்குள் கதறியழ வெளியில் பதறிய கைகளில் வலு குறைய அதை மனத்துடன் சேர்த்து ஸ்டிரிங் வீலில் இறுக்கிப் பிடித்து உடலையும் இறுக்கியவளின் பற்கள் அழுந்த தாடை இறுகின. சுற்றியிருக்கும் அத்தனையையும் சுக்கு நூறாய் உடைத்து நொறுக்குளவு பதட்டமும் பயமும் ஆட்கொண்டிருந்தது.

வண்டியை அப்படியே விட்டவள் மருத்துவமனையினுள் ஓட்டமாய் நுழைந்த மறுகணமே ஆஸ்பத்திரி வாசம் அவளை சூழ்ந்துக்கொள்ள கிட்டத்தட்ட இடித்து தள்ளி விழுவதுபோல அந்த ரிஸப்ஷனில் வந்து நின்றவள் என்ன கேட்டாளோ? எப்படி கேட்டாளோ? அதற்கு எதிரில் இருப்பவள் சொன்னதில் என்ன விவரம் புரிந்ததோ விடிவிடுவென படிகளை நோக்கி ஓடியவள் எப்படி எங்கும் விழாமல் அதை கடந்தாளோ? ஒரு வேளை அதைவிட பெரிதாய் ஏதும் காத்திருப்பதால் இங்கு அவ்வளவாய் அடிபடவில்லையோ?

மூச்சு வாங்க காரிடாரின் முக்கில் திரும்பியவளின் பார்வையில் பத்தடி தூரத்தில் ஜீவனும் அவன் அப்பாம்மாவும் விழுந்தனர். அவர்களுடனே அப்பொழுதே அறையிலிருந்து வெளியில் வந்த தோற்றத்துடன் ஒரு மருத்துவரும். அந்த மருத்துவர் எதையோ சொல்லவும் இவள் இங்கேயே நின்றுவிட்டாள். அவர் சொல்வதில் கவனம் பதிக்க முயன்றாள். ஆனால் அவளுக்கு கேட்டது என்னவோ “சாரி ஃபார் யுயர் லாஸ்… எவ்வளவோ முயற்சி செய்தோம்… காப்பாத்த முடியல” போன்ற வார்த்தைகளும் அதைத் தொடர்ந்த வத்சலாவின் “அய்யோ!!” என்ற அலறலும் சுவரருகில் நின்றிருந்த ஜீவன் அப்படியே தரையில் சரியும் காட்சியுமே. அதற்கு பிறகு அவர் பேசிய எதுவுமே இவளை சென்றடையவில்லை. ஒரே நொடியில் அவள் ஆன்மா அவளுடலைவிட்டு பிரிந்ததுபோல் ஒரு உணர்வு. சட்டென அகம் முழுதும் ஐஸ்கட்டியாய் சில்லிட்டுப்போக அவளது புறத்திலோ அதற்கு நேரெதிராய் வேர்வை சுரப்பிகள் அதிவேகமாய் செயல்பட்டன. அவள் அணிந்திருந்த உடை உடலோடு பிசுபிசுவென ஒட்டுமளவு வேர்த்துக்கொட்டியது. காதுகளின் திறன் அதிவேகமாய் குறைந்துவிட்டிருந்தது. கால்கள் மொத்தமாய் வலுவிழந்துக்கொண்டிருந்தன. அவள் உடலே அவள் கட்டுப்பாட்டில் இல்லாமல் காற்றில் ஆடுவதுபோலொரு உணர்வு. ஈரமான கைகளிரண்டும் நடுநடுங்கிக்கொண்டிருக்க வலக் கையின் விரல்களை மூடி மூடித் திறந்தாள். இதெல்லாம் சிறிது நேரத்திலேயே நடந்துவிட மறுகணமே என்ன தோன்றியதோ எதிலிருந்தோ தப்பி ஓடுவதைப்போல திரும்பி வந்த வழியில் விடுவிடுவென நடந்துக்கொண்டிருந்தாள். கண்கள் இரண்டும் மங்கலாய் ஏதோ பனிமூட்டத்திற்குள் நடப்பதைப்போல இருந்தன.. கால்கள் எந்நொடியிலும் விழுந்துவிடுவேன் என்றது. தடுமாறியபடி நடந்தவள் வழியில் எத்தனையோ பேரை இடித்துவிட்டே சென்றாள். அதற்கு அவர்கள் திட்டியதுகூட இவளுக்கு கேட்கவில்லை. உலகமே அவ்ட் ஆஃப் ஃபோகஸில் தெரிந்தது. ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறியவள் தான் வண்டியில் வந்தோம் என்பதையே மறந்தவளாய் அப்படியே நடக்கலானாள். அவள் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் வழிந்துக்கொண்டிருந்தது. ஆனால் அது சற்றும் உரைக்காததுபோல சாலையில் தடுமாறியபடி நடந்துக்கொண்டிருந்தாள் இவள். இவளிடம் மொத்தமும் எப்படியாவது வீட்டிற்கு சென்றுவிட வேண்டும் என்பதைபோன்றதொரு தோற்றம்.

அந்த அதிகாலை நேரத்தில் சாலையில் அழுதுக்கொண்டே ஒருத்தி தடுமாற்றத்துடன் விடுவிடுவென நடப்பது அவளை அந்நேரத்தில் பார்த்தவர்களுக்கு எப்படி இருந்ததோ ஆனால் தன்னைச் சுற்றிய உலகம் என்ற ஒன்றையே மறந்தவளாய் போய்க்கொண்டிருந்தாள் அவள். மனம் முழுதும் ஆழ்கடலின் நிசப்தத்துடன். எப்படி உணர்கிறோம் என்றே புரியாமல். என்ன செய்கிறோம் என்றே தெரியாமல். அவளது கால்கள் மட்டும் ஏதோ ப்ரோகிராம் செய்ததைப்போல வீட்டை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது.

அவள் வீடு வந்தடைந்தப்பொழுது நன்றாகவே விடிந்துவிட்டிருந்தது. வான் முழுதும் அத்தனை வெளிச்சம் பரவ அவள் மனம் முழுதும் இருள் சூழத் தொடங்கியது.

வீட்டினுள் நுழைந்தவள் சற்றும் நிதானிக்காமல் படிகளை கடக்க இம்முறை பல தரம் விழுந்து எழுந்தாள். ஆனால் ஒரு முறைக்கூட வலியென்ற ஒன்றை அவள் வெளிக்காட்டவேயில்லை. ஏன்? உடலின் வலி அவள் மனதின் வலியின் முன் அத்தனையாய் மரத்துவிட்டதா? அங்கங்கு ஏற்பட்ட சில காயங்களை உணராதவளாய் அறையினுள் நுழைந்தவள் நேராய் சென்று அவளது மெத்தைக்கும் மேசைக்கும் நடுவிலிருந்த சிறு இடைவெளியில் அமர்ந்து முழங்கால்களை கைகளால் கட்டி தலையை அதன்மேல் வைத்து உள்ளங்கைகளால் பின்னந்தலையோடு சேர்த்து காதுகளையும் மூடிக்கொண்டாள். சில நிமிடங்களில் அவளது கண்ணீருக்கு குரல் வந்ததுபோல “ஆ!!!!!” என்ற கதறலுடன் சத்தமாய் அவ்வீடே அதிரும்படி அவள் அழ, அப்பொழுதே வந்திருந்த பொன்னம்மா பதறியடித்துக்கொண்டு அவளறை வாசலுக்கு வந்து “என்னாச்சு மா!?” என்று பதற்றமாய் கதவைத்தட்டினாள். அதற்கு ஒரு பதிலும் இல்லாது போனது மட்டுமின்றி இமையாவின் அழுகை அத்தனையாய் கூடிக்கொண்டே போனது. என்னவானாது ஏதானது என்று புரியாமல் கலங்கிய பொன்னம்மா ஒருகட்டத்தில் அபிக்கு அழைக்க அப்பொழுதே புரிந்தது.

“அய்யோ அபிக்கண்ணு!!” என்று கதவுக்கு இந்தப்பக்கம் பொன்னம்மா அழ குரலை இழக்குமளவு அடித்தொண்டையில் இருந்து கதறியபடி கதவுக்கு அந்தப்பக்கம் இமையா என அவ்வீடே முதல் முறையாய் ஒருத்தரின் இழப்பிற்கு அடிமனதிலிருந்து அழுதது.

பல மணி நேரங்கள் கடந்தும் இமையாவின் அழுகை மட்டும் நின்னபாடில்லை. ஒருகட்டத்தில் தன்னை தேற்றிக்கொண்ட பொன்னம்மா இங்கிருந்தே அவளுக்கு ஆறுதல் சொல்ல அது எதுவுமே இவள் காதில் விழுந்தால்தானே? இவளுக்கு மொத்த உலகமும் கிணற்றுக்கடியில் இருந்து பேசுவதுபோல் அல்லவா இருக்கிறது. அழுதழுது ஒருகட்டத்தில் அந்த அழுகயில் மயங்கியேவிட்டாள் இமையா.

பல மணி நேரங்கள் கடந்தன…

இம்முறை தரையில் கிடப்பவளுக்கு போர்வை போர்த்திவிட அபி வராததுனாலையோ என்னவோ இரவு ஒருகட்டத்திற்கு மேல் உடல் உறைய விழித்துவிட்டாள் இமையா. தொண்டை பயங்கரமாய் வலித்தது ஆனால் அது உரைக்கவேயில்லை. பல மணி நேரங்களுக்கு முன் அந்த அறை இருந்ததற்கு நேரெதிராய் அத்தனை நிசப்தமாய் இருந்தது. அவள் அழவில்லை. வலிக்கவில்லை. சொல்லப்போனால் அவளால் எதையுமே உணர முடியவில்லை. மௌனமாய் சூன்யத்தையே வெறித்துக்கொண்டிருந்தாள். இதே இமையாதான் அவள் தந்தை இறந்தப்பொழுது ஒரு சொட்டு கண்ணீர்கூட வடித்திருக்கவில்லை. அழுதுவிடச் சொல்லி எத்தனையோ பேர் சொல்லியும் அசராமல் அமர்ந்திருந்தாள். அத்தனை தெளிவாய் அவள் இருந்ததே பலருக்கு வினோதமாய் பட்டது. ஏன் அபிக்கூட இவளிடம் சொன்னாளே, “ரொம்ப வலிச்சா அழுதுடு மீ… உள்ளயே வச்சுக்காத!! அழுகையொன்னும் பலவீனமில்லை!! அதுவும் ஒரு உணர்வுதான்… சொல்லப்போனா அழறதுக்குதான் தைரியம் வேணும்…” என்று அதற்கு இவள்கூட, “எனக்கு நிஜமாவே அழுகை வரல அபி” என்றுவிட்டாள். ஒருவேளை அவர் ஒருதரமேனும் அப்பாவென்ற உணர்வை அவளுக்கு குடுத்திருந்தால்… அப்படியொன்றை உணர்த்தியிருந்தால் அழுதிருப்பாளோ என்னவோ… அதுவும் பல கசப்பான சம்பவங்களுக்குப் பிறகு சக மனித உயிர் என்ற வருத்தம்கூட அவளுக்கு இருக்கவில்லை. அவர் வாழ்ந்த காலத்திலுமே இருவரும் ஒரே கூரையின் கீழ் வாழும் வெவ்வேறு மனிதர்களாய் இருந்தனர்.

சொத்து முழுதும் இவளதென்று ஆனப்பொழுதும் கேட்டாள், “உனக்கு அவரையே பிடிக்கல அவர் சொத்து மட்டும் எதுக்கு?” என்று

“இதுவரை எனக்கு பிடிச்சது நான் கேட்டதுனு எனக்கு எதுவுமே கிடைக்கல நான் கேக்கவுமில்ல அதுவேற விஷயம்… ஆனா நான் இதுவரை அவர்ட்ட எதையும் கேட்டதில்லை எனக்கு கொடுக்கப்பட்டதைதான் வாங்கிருக்கேன்… அது வலியோ பணமோ… தனிமையோ… இதுவும் எனக்கு கொடுக்கப்பட்டது… வாங்கிக்கறேன். எனக்கு இது தப்பா தோணலை” என்றிவள் சொல்லியிருக்கிறாள்.

இப்பொழுது அத்தனையும் அர்த்தமற்றதாய் தெரிந்தது. அபி அப்பாவைப் போலல்லவே! இருவரும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் என்பதைத் தாண்டி சோல்மேட்ஸ்.. இவளுக்கு அபி அன்பெனும் சொல்லிற்கு அப்பாற்பட்டவள்!! இவளில் ஒரு பாதியென்பதை கடந்து அவளே மையமாய் மாறியவள். அபி இமையாவின் வீடு!! இமையா ஒரே நாளில் வீட்டை இழந்த குழந்தையாய் இரவு குளிரில் நடுச்சாலையில் நிற்கிறாள். அவள் என்றுமே அபியை இழக்கக்கூடுமென்று நினைத்ததே இல்லை. ஆம்!! எவ்வளவு மோசமான சூழலிலும் ஏனோ அபியிடம் மட்டும் அவ்வுணர்வு எழுந்ததேயில்லை. அவர்களிடையே அவர்களால் பிளவு வரும் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. ஏன் எதனாலையும் வருமென அவள் நினைத்ததில்லை. ஒரு நாள் அபி தன்னிடம் பேச்சை முறித்துக்கொள்ளக்கூடும் போன்ற எண்ணங்கள் அவளிடம் எழுந்ததேயில்லை. ஏனோ இவளுள் அப்படியொரு நம்பிக்கை! அபிக்காக எதுவேணாலும் என்ற எண்ணமோ? மற்றவர் பேசாவிட்டால் கண்டுக்ககூட செய்யாதவள் அபியென்று வரும்பொழுது முழுசாய் சரியத் தயாராய் இருந்தாள். ஆனால் மரணமென்ற ஒன்றை அவள் எப்படி மறந்தாள்? ஒருவேளை தனக்கு சாதகமற்ற எதையும் நினைய தோணாமல் மனம் சதி செய்துவிட்டதோ? இவளால் எதையுமே ஏற்றுக்கொள்ள இயலவில்லை. வாழ்க்கையில் அதிகளவு இழப்பை கடந்துவிட்ட அதே இமையாவால் இந்த இழப்பை மனதளவில் முதலில் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. இதோ இப்பொழுதும் இந்தொடியும்கூட என்னவோ எல்லாம் வெறும் கெட்ட கனவு என்று சொல்லிக்கொண்டு இவள் விழித்தட்டி விழித்தால் எல்லாம் பழைவாறு மாறிவிடுமா என்றுதான் ஏங்கியது. என்னை எதுவுமே தாக்காது என்று எச்சூழலிலும் அசராமல் சுற்றியவளுக்கு சூராவளியில் சிக்கியது போலானது.

நேரங்கள் கட்ந்தது… நாட்கள் கடந்தது… வாரங்கள் கடந்தது…. ஆறு மாதங்களும் கடந்தது… ஆனால் அவள் மட்டும் எதையுமே கடக்கவில்லை. அன்று எங்கு நின்றாளோ அதே இடத்திலேயே நின்றுவிட்டாள். இந்த ஆறு மாதக்காலத்தில் ஒரு முறைக்கூட அவளறையை தாண்டி வெளியுலகம் என்ற ஒன்றை அவள் பார்த்திருக்கவில்லை. வேலை… அது இப்பொழுது இருக்கா இல்லையாவென்றே தெரியவில்லை. இவள் யாரிடமும் பேசியிருக்கவில்லை. இந்த ஆறு மாதமும் உணவுத் தட்டை பொன்னம்மா கொண்டுவந்து வாசலில் வைத்துவிட்டு கெஞ்சிவிட்டு போவதும் இவள் பல மணி நேரங்கள் கழித்து காய்ந்த ரொட்டியை மட்டும் முழுங்கிவிட்டு இருப்பதுமாய் இருந்தது.

பொன்னம்மாவை பயம் சூழ்ந்துக்கொண்டது. இமையா வாரக்கணக்கில் வீட்டினுள் அசராமல் இருப்பவள்தான். ஆனால் இம்முறை ஆறு மாதங்கள்… அதுவும் அவள் அறையைக்கூட தாண்டியிராத ஆறு மாதங்கள்… இவர் அவள் முகத்தை பார்த்தே ஆறு மாதங்கள் ஆகின்றன… முதல் முறையாய் மனநலத்தின் மீது கவனம் திரும்பியது. அவரது வாழ்க்கை முழுக்க பார்த்திருந்த கடந்திருந்த சம்பவங்களை தாண்டி இதை பார்க்க தொடங்கினார். முன்பொரு காலத்தில் இவர் வீட்டுப் பக்கத்தில் புதிதாய் கல்யாணமாகி வந்த மருமகள் தான் என்றோ எதற்கோ டாக்டரைப் பார்த்தாள் என்று தெரியவரவும் அவளுக்கு பைத்தியக்கார பட்டம்கட்டி கடைசியில் விவாகரத்தே வாங்கியதை பார்த்தது நினைவில் வந்தது. பைத்தியத்தை என் புள்ள தலையில் கட்டி வச்சுட்டாங்க என்று டௌரியை வாங்கிக் குவித்து பெண்வீட்டை ஒவ்வொரு நொடியும் நாங்கள் மாப்பிள்ளை வீடு என்று விரட்டிய குடும்பத்தின் புலம்பலுக்கு அத்தனைபேரும் தலையாட்டியதும் நினைவு வந்தது. அத்தனை காலம் மனநலத்துக்காக மருத்துவம் என்றாலே பைத்தியம்தான் என்று புரிதல் வைத்திருந்தவருக்கு இப்பொழுது தான் அது அப்படியில்லை என்று பார்த்துணர்கிறார். அபி எத்தனையோ முறை சொல்லியும் தலையாட்டிவிட்டு விட்டது இன்று புரிகிறது ஆனால் சொல்லிய அவள் இல்லையே!! அவரால் முடிந்தவரை இமையாவிடம் கதவுக்கு இந்தபுறம் இருந்தே தினமும் பேசத்தான் செய்கிறார். இல்லையேல் எதையாவது புலம்புகிறார். ஆனால் அது எதற்குமே அப்பக்கத்திலிருந்து ஒரு ம் கூட வந்ததில்லை. எப்படி வரும்? இங்கு இவளுக்குதான் காதில் ஒன்றுமே விழமாட்டேன் என்கிறதே! அப்படியே ஒன்னு ரெண்டு காதில் விழுந்தாலும் அது மனதில் பதிவதேயில்லை. உணர்வுகளற்று மரத்துப்போன அவள் உடலை அவளாலையே உணர முடியவில்லை.

உணர்வுகளே இல்லாமல் இருந்தால் வலிக்காதுல-வில் தொடங்கி வலியையாவது உணர்ந்துவிடமாட்டோமா என்பதில் வந்து நிற்கிறது மனம்.

உள்ளுக்குள் நிறையவே வலி!! ஆனால் அதை வெளிப்படுத்ததான் இவளிடம் வார்த்தையோ கண்ணீரோ இல்லாமல் போனது. உள்ளுக்குள் உருளும் வலியை வெளிக்காட்ட முடியாமல் எத்தனையோ முறை அழுதுவிடு!! ப்ளீஸ் என்று மனம் கதறினாலும் ஒரு துளி கண்ணீர் கூட வராமல் தலையை எதிலாவது முட்டி உடைத்து வலியிலாவது அழுகை வருகிறதா என்றே பார்க்கத்தூண்டியது. சிறு துளி கண்ணீருக்காய் அவள் கண்மணிகள் இரண்டும் காந்தின.

அதே இடத்தில் அமர்ந்து அறையை வெறிந்திருந்தவளின் பார்வையில் அத்தனையும் அர்த்தமற்றதாய் தெரிந்தது. வலித்தால் சொல்லி அழ வேண்டும் என்பதை அவளுக்கு யாரேனும் சொல்லாத பொழுது வலித்ததைவிட அதை அபி சொல்லி இவள் அனுபவித்த பிறகு ரொம்பவே வலித்தது.

மெல்ல எழுந்துச் சென்றவள் அந்த ஆளுயர கண்ணாடியின் முன் நின்றாள். கையில் கத்தியுடன். அவளையே அவள் பார்த்தாள். வலக்கையிலிருந்த கத்தியை இடக்கை மணிக்கட்டில் அழுந்த பதித்தபடி அவள் உருவத்தை அவளே கண்ணாடியில் இமைதட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் அழுத்தியதில் ரத்தம் கொஞ்சம் கொஞ்சமாய் வழிந்தது. ஒரே நொடி. ஒரே ஒரு நொடிதான். முழுதாய் அழுத்தி இழுக்க விழைந்தவளை தடுத்தது,

“பாவம் அந்த ஜீவன் தம்பியும் கைல பச்சை குழந்தைய தூக்கிட்டு வெளில போயிருச்சு… ஹ்ம்” என்ற பொன்னம்மாவின் வழக்கமான புலம்பலில் ஒரு கணம் அப்படியே உறைந்து நின்றாள். கத்தி கையிலிருந்து தானாய் சரிந்து விழுந்தது. அவள் மனம் முழுதும்,

“அபிக்கு குழந்தை…” என்று முணுமுணுத்தது.

இந்த முறையும் அபியெனும் மந்திரம் இமையாவின் உயிரை பிடித்துவைத்தது.