நுட்பப் பிழையவள்(9)

9

~ ரோஜா இதழ் ~

பார்க்கும் படங்களிலும் படிக்கும் கதைகளிலும் காதல் தோல்வியால் அல்லது காதலுக்காய், காதலித்தவருக்காய் தன்னுயிரைத் தானே மாய்த்துக்கொள்வது போன்ற காட்சியமைப்புகளை இதழோரத்தில் சிறு ஏளன வளைவுடன் கடப்பவள் அவள்.

காதல்கொண்ட இருவரில் ஒருவர் உயிர் பிரிந்தால், இறந்தவரின் மேல் பரிதாபமும் உயிரோடு இருப்பவரின் மேல் தனிக் கவனமும் திரும்பி, சில காலத்தில் மற்றவர் மனம் மாறி புதியதொரு உறவினில் நுழைந்தாலோ இல்லை என்று அடுத்தகட்டத்திற்கு நகர்ந்தாலோ அந்நபர் அக்காதலுக்குத் தகுதியற்றவராய், போலியானவராய் சித்தரிக்கப்படுவதும், கடைசிவரை இழப்பின் வலியில் வாடாவிடினும் அதையே தொடர்ந்து முன்னிறுத்திக்கொண்டிருக்கும் ஒருவராய்… இருப்பதுவே அவர் அக்காதலுக்குத் தரும் மரியாதையாய் ஒரு மாய பிம்பத்தை உருவேற்றி மனதளவில் தன்னுயிரை மாய்த்துக்கொள்வதில்தான் தன் காதலின் ஆழமும் புனிதமும் அடங்கியிருக்கிறதென்று ஒரு மெல்லிய அழுத்தம் சமுதாயத்திடமிருந்தும் இருப்பதாகவே அவள் நினைத்தாள். தனக்குச் சொல்லப்படும் ரோமியோ ஜூலியட்டிலிருந்து அத்தனை காவிய காதல்களும் மரணத்திலல்லவா தன் காதலின் புனிதத்தை நிலைநாட்டுகிறது? அப்படி ஒருவர் இறந்து மற்றொருவர் பிழைத்துவிட்டால் கடைசிவரை பாட்டு,கதை,படம், சுற்றமென ஏதோவொரு விதத்தில் மறைமுகமாகவோ இல்லை நேரடியாகவோ தொடர்ந்து “guilt-trip” செய்துக்கொண்டேயல்லவா இருக்கிறது?

அவள் “தற்கொலை” என்ற சொல்லை உணர்ந்து அறிந்தவள். அதன் வலியும் தாக்கமும் முழுதாய் உணர்ந்தவள் அவள்!! ஒரு தற்கொலையின் பின்விளைவுகளை அனுபவித்தவள் மட்டுமின்றி அதே எண்ணங்களால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவளும்கூட!! அவளுக்கு அதன் தீவிரம் தெரியும்!! அதன் அழுத்தங்கள் புரியும்!! இன்னமும் காயங்களாகத் துடிக்கும் வடுக்கள் அவளுள் ஏராளம்.

அப்படிப்பட்ட அவள்தான் இன்று கையில் கத்தியை வைத்து அழுத்திக்கொண்டு கண்ணாடி முன் மனதில் இருள் சூழ்ந்த அறையின் குளுமையோடு நின்றுகொண்டிருக்கிறாள். அவள் அழுத்த அழுத்த ரத்தம் அவள் கால் விரல்களை முத்தமிட்டன. முகத்தில் துளி உணர்வும் இல்லாமல் வலியின் பிரதிபலிப்பும் இல்லாமல் அசராமல் அப்படியே நின்றிருந்தாள். அவள் காதில் பொன்னம்மாவின் வார்த்தைகள் விழுந்து அது அவளுக்கு உரைக்கும்வரை!!

“பாவம் அந்த ஜீவன் தம்பியும் கைல பச்சை குழந்தைய தூக்கிட்டு வெளில போயிருச்சு… ஹ்ம்” என்ற பொன்னம்மாவின் வார்த்தைகளே காதுக்குள் ரீங்காரமிட்டன. கத்தி கையிலிருந்து நழுவி விழுந்தது. அவள் மனம் முழுதும்,

“அபிக்கு குழந்தை…” என்று முணுமுணுத்தது.

எப்படி இதை சிந்தியாமல் விட்டாள்? ஒருவேளை இச் சிந்தனைக்கான இடமே இல்லாமல் போனதாலா? அவள் உலகம் அபியுடனே நின்றுவிட்டதாலா? இல்லை எதையுமே அவள் இன்னும் ஏற்றுக்கொள்ளாததாலா? அபி.. அபி.. என அவள் முழுதும் அபியே நிறைந்திருக்க அவள் அவளையே மறந்திருக்கையில் இதை யோசியாமல் விட்டதில் அதிசயமேதுமில்லையே!

காதில் விழுந்து மனதில் நீண்ட காலத்திற்குப் பின் புகுந்த வார்த்தைகளால் தாக்கப்பட்டவளின் தோற்றம் மெய்யாகவே தாக்கப்பட்டவள்போல ஒருவித பதைபதைப்பு! நழுவி விழுந்த கத்தியை மறந்தவளாய் பேசத்தவிக்கும் ஏக்கங்களைப்போல அவளது பதட்டம் அப்பட்டமாய் தெரிய மனமோ ‘அபிக்கு குழந்தை’ என்றதைத் தாண்டியிருக்கவேயில்லை! அவ்விரு வார்த்தையை மட்டுமே மனம் உரு போட்டுக்கொண்டிருக்க ஒரு நொடி சுதாரித்தாள். சட்டென மறுகணமே கதவை திறக்க அங்கு பொன்னம்மாவை காணவில்லை. அவர் அப்பொழுதே படியிறங்கிவிட்டார்போலும். இவள்தான் அவர் சொல்லிச் சென்ற வார்த்தையை கிரகித்து படபடத்தென்றிருந்தாளே. அங்கிருந்து கீழே பார்த்தவளுக்கு பொன்னம்மா படியிறங்கி அடுக்களையை நோக்கி சென்றுகொண்டிருப்பது தெரிந்தது. அடுத்த கணமே தடதடவென படிகளில் இவள் இறங்க அந்த சத்தத்தில் ஒரு கணம் பயந்து பதறித் திரும்பிய பொன்னம்மாவின் கண்கள் இவளைக்கண்டு முதலில் பார்த்துவிட்ட நிம்மதியையும் பிறகு அவளுருவத்தைக் கண்டு கவலையையும் பூசிக்கொண்டது.

ஆம்! அவள் உருவத்தைத்தான். ஆறு மாதங்களுக்கு முன்னிருந்ததைவிட இப்பொழுது சற்று அதிகமாகவே வளர்ந்துவிட்டிருந்தது அவளது கேசம். ஆனால் அதைச் சரிவர ஏன் சராசரியாய் கூட கவனியாததால் எண்ணை பசையற்று ஒரு மாதிரி இருந்தது. அவள் நிறையவே மெலிந்திருந்தாள். முன்னிருந்ததைவிட வெகுவாய் இளைத்திருந்தாள்.வெளிறிய முகம். சோர்ந்த கண்கள். அவளது உடை… அதை அவர் கடைசியாய் பார்த்தபொழுது நிச்சயம் நன்றாக இருந்தது. மொத்தத்தில் அவர் அவளை எப்படி பார்க்கக் கூடாது என்று எண்ணினாரோ அப்படியே இருந்தாள். ஏதோ ஒரு விதத்தில் அவள் அவர் செவி வழி மட்டுமே அறிந்திருந்த அவளது அம்மாவை அவருக்கு ஞாகபப்படுத்தினாள். சட்டென எதுவோ ஒட்டாமல் போக உற்றுநோக்கியவர் வெகு அருகே வந்துவிட்டவளின் கையை கண்டுவிட்டார். அதில் அவர் கண்களில் சொல்ல முடியாதொரு உணர்வலை!!

தன்னையே சிலையாய் நின்று பார்த்திருந்த பொன்னம்மாவின் கண்களில் தோன்றி மறையும் உணர்வுகளைக் கண்டாலும் அதை உணர்ந்து ஆராயும் கவனமற்றவளாய் விடுவிடுவென அவரிடம் சென்றவள் அவர் தோள்களை இறுக பற்றிக்கொண்டு, “அபிக்கு குழந்தை இருக்கா? சொல்லுங்க பொன்னம்மா!! ப்ளீஸ்!! பொன்னம்மா!!” என்று பொறுமையற்று பதட்டமாய் கத்திக்கொண்டிருக்க அவரது பார்வையோ அவர் தோள் மேல் ரத்த கோடுகளுடன் சிறு சிறு சொட்டுக்களாய் சொட்டிக்கொண்டிருந்த அவளது கையிலேயே இருந்தது. அவள் உலுக்கியதில் கலைந்தவரின் முகம் பதட்டம், பயம், அழுகை, கோவம் என அத்தனை உணர்வுகளையும் ஒன்றாய் ஒட்டிக்கொள்ளத் தன்னை உலுக்கிக்கொண்டிருந்தவளைப் பிடித்து நிறுத்தியவர் “என்ன பண்ணி வச்சிருக்க!?” என்று அதட்ட ஒரு நொடி அப்படியே நின்றுவிட்டாள் இமையா. பொன்னம்மா இதுவரை அவளிடம் குரலை உசத்தியதில்லை. ஏன் வார்த்தைக்கு வார்த்தை பாப்பா, கண்ணு என்று அழைப்பவர் அவர்.

அவளை அப்படியே தரதரவென இழுத்துச்சென்றவர் ஒரு இருக்கையில் உட்கார வைத்துவிட்டு உடனே சென்று மருந்து டப்பாவை எடுத்து வந்து அருகில் அமர்ந்தார்.

காயத்தை தெரிந்தளவில் சுத்தம் செய்து மருந்து வைத்துக் கட்ட தயார் செய்துகொண்டிருக்க, அதிர்ச்சியில் இருந்து மீண்டவளைப்போல மீண்டும் அவர் சுத்தம் செய்த கையை “ப்ச்! இதொன்னுமில்லை” என்று உருவிக்கொண்டவளை நிமிர்ந்து பார்த்தவரை அப்பொழுதுதான் அவள் கவனித்தாள். பொன்னம்மாவின் கண்கள் கலங்கியிருந்தது. அவள் என்ன செய்யவிருந்தாள் என்பதைக் கண நேரத்தில் காயத்தைப்பார்த்து கண்டுகொண்டவருக்குக் குலை நடுங்கியது. இத்தனை வருடம் வேறெங்கும் செல்ல மனதின்றி அங்கு அவளுக்காகவே இருந்தவராயிற்றே அவர். எல்லாம் அவளை இந்த கோலத்தில் பார்க்கவா? எந்த வார்த்தை அவளை பிடித்து வைத்ததெனத் தெரிந்திருக்கவில்லை ஆனால் அதைக் கடவுள் புண்ணியமாகவே நினைத்தார். அத்தனை வருட வாழ்க்கை வாழ்ந்தவர் ஆனால் இந்த சூழலில் என்ன செய்யவென தெரியாமல் பேச்சற்று நிற்கிறார். அவள் இன்று இல்லாமலும் போயிருக்கலாம் என்ற எண்ணமே உள்ளுக்குள் நிலநடுக்கத்தைக் கொடுத்தது. அவர் பார்க்க வளர்ந்தவளல்லவா அவள். இப்படியொரு முடிவை அவள் எடுப்பாளென அவர் கனவிலும் நினைத்ததில்லையே! பாவம் அவர் அறிருந்திருக்கவில்லை, இது வருடங்களாய் அவள் போராடும் ஒன்றென… இன்று கண்ணால் காணவே தனக்குத் தெரிகிறதென.

“அபி… அபிக்கு குழந்தை இருக்கா..?” தயங்கித் தயங்கிக் கேட்டுவிட்டாள். அவள் எதை எதிர்பார்க்கிறாளென அவளுக்கும் புரியவில்லை.

பொன்னம்மாவோ ஒருகணம் அவளையே கூர்ந்து பார்த்துவிட்டு அவள் கையை பிடுங்கி மருந்து வைக்கத் தொடங்கினார், “இப்படியே குழந்தைய பார்க்கப் போக முடியாது” என்றபடி.

பொருள் உணர்ந்ததும் ஒருகணம் உடல் முழுதும் சில்லென ஆகியது. தன்னிச்சையாய் தன் கரத்தை அவரிடமிருந்து உருவியிருந்தவள் இரு உள்ளங்கைகளாலும் முகத்தை மூடி மடியில் முட்டுக் கொடுத்துத் தாங்கினாள். சற்று நேர அமைதிக்குப் பின்னர் சட்டென எழுந்துகொண்டவள் “எங்க இருக்காங்க?” என்று கேட்டுவிட்டு அதற்குப் பதிலைக்கூட எதிர்பாராதவளைப்போல வெளியில் செல்ல எத்தனிக்க, அவளது தோள் பற்றி இவர் தடுக்க முயல அவளோ நொடிக்கு நொடிக்குப் படபடப்பைக் கூட்டிக்கொண்டு ‘எங்க? எங்க?’ என்றல்லவா பரபரத்தாள்.

இமையாவை கண்ட பொன்னம்மாவின் கன்னங்களில் கண்ணீர் கோடுகள் காயாமல் நதியாகின. நெஞ்சு இத்தனை கனக்குமா என்று எண்ணுமளவு பாரமாகின. என்ன தோன்றியதோ அவள் தோளை இறுகப் பற்றியவர் அமைதியாய் நிற்கச் சற்று நேரத்தில் அவளே மெல்ல மெல்ல தன்னிலைக்கு வந்தாள். சில கணங்கள் மௌனத்தில் கழிந்தன.

“எனக்கு பார்க்கனும் பொன்னம்மா” என்ற இமையாவின் குரலில் அவரால் எதையும் கண்டுகொள்ள இயலவில்லை. ஆழ மூச்சிழுத்தவர் கண்களை துடைத்துக்கொண்டு,

“மொதல்ல ஆஸ்பத்திரி போனும் பாப்பா” என்றார் மறுபடியும் கசியத் தொடங்கிய அவளது காயத்தைக் கண்டு.

தன் கையை திருப்பிப் பார்த்தாள். மெய்யாகவே நிறைய ரத்தம் போயிருந்தது போலக் காயம் சற்றே ஆழமாய் தான் இருந்தது.

“போறேன் பொன்ன..” என்று சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே எல்லாம் ஔட் ஆஃப் ஃபோகஸில் கொஞ்சம் கொஞ்சமாய் தூரமாய் சென்றுகொண்டிருக்க உடல் லேசாகி பறப்பதை போலிருந்தது. கடைசியாய் காதில் கேட்டதும் உணர்ந்ததும் பொன்னம்மாவின் “பாப்பா!!” என்ற அலறலும் அதை தொடர்ந்த அவர் அவளை தாங்கிப்பிடித்தப்பொழுது அவரது உடலின் கதகதப்பும். அவள் சொல்ல நினைத்தது என்னவோ “அருண் அங்கிள்” ஆனால் சொன்னது என்னவோ, “அரு.. அங்..” தான். நா உலர்ந்துவிட்டிருந்தது.

தாங்கிப்பிடித்த பொன்னம்மாவிற்கு அவள் சொல்ல நினைத்தது புரிந்துவிட்டிருந்ததுபோலும். சட்டென அவளை அங்கிருந்த இருக்கையிலேயே கிடத்திவிட்டு தொலைப்பேசியிடம் ஓடினார். அந்த “அருண் அங்கிளை” அழைக்க. அருண் இமையாவின் குடும்ப மருத்துவர். செய்தி பகிரப்பட்ட சற்று நேரத்திலெல்லாம் அருண் அங்கு ஆஜராகியிருந்தார். அவளது காயத்தை அவர் பரிசோதிக்க இடையில் லேசாய் கண்விழித்த இமையா “ஹாஸ்..பிட்டல் வேணாம்” என்று அரற்ற அவள் தலை கோதியவரோ, “வேணாம்! போகல.. போகல” என்று மெல்லச் சொல்லச் சொல்ல மறுபடியும் நினைவிழந்தாள். அவள் நினைத்ததைப் போல காயம் அவ்வளவு ஆழமாய் இருக்கவில்லை. வீட்டில் வைத்தே பார்க்குமளவு இருந்தது. பொன்னம்மாவின் பயத்தை அவராலும் புரிந்துகொள்ள முடிந்தது. அவருக்கும் கேஸ் அது இதென்று ஆவதில் விருப்பமில்லை. இமையாவை இப்படிப் பார்க்கவே அவருக்குச் சங்கடமாய் இருந்தது.

வெகு நேரம் சென்று கண்விழித்த இமையா அவளறையில் இருந்தாள். ஒரு கையில் கட்டு போடப்பட்டிருக்க மறுகையில் சலைன் ஏறிக்கொண்டிருந்தது. அருகில் பொன்னம்மா அமர்ந்தவாறே உறங்கிக்கொண்டிருந்தார். அவள் அதை நீக்கிவிட்டு நிமிர்ந்து அமர அவளது அசைவு உணர்ந்து பொன்னம்மா விழித்துவிட்டார்.

“அதை ஏன்மா எடுத்த?”

“எவ்வளவு நேரமாச்சு?”

“ஒரு நாள்” என்கவும் சட்டெனப் படுக்கையில் இருந்து எழுந்தவளுக்குத் தலை லேசாய் சுற்ற அப்படியே அமர்ந்துவிட்டாள்.

“என்னாச்சு? என்ன பண்ணுது பாப்பா?” என்று பதறி அவளருகில் வந்த பொன்னம்மாவிடம்,

“ஒன்னுமில்ல.. டக்குனு எழுந்திரிச்சேன்ல” என்றாள் அவளுக்கு அவளே சொல்லிக்கொள்வது போல.

“இரு கண்ணு குடிக்க ஏதாவது கொண்டு வரேன்” என்றுவிட்டு விடுவிடுவென அறைவாசல் வரை சென்றவர் ஒரு நிமிடம் அப்படியே நின்று திரும்பி அவளையே தயக்கமும் சந்தேகமுமாய் பார்க்க, அதன் அர்த்தம் உணர்ந்த இமையாவோ, “கொண்டு வாங்க” என்றுவிட்டு சாய்ந்தமர்ந்துக்கொண்டாள். ஏதோ ‘நான் எதுவும் செய்துகொள்ளமாட்டேன்!’ என்று சொல்லியதுபோல். அதை முழுமையாய் நம்பாவிடினும் ஆழ மூச்சிழுத்துவிட்டு அங்கிருந்து அகன்றுவிட்டார் பொன்னம்மா.

அமர்ந்திருந்தவள் எழுந்துச்சென்று தன்னை சுத்தம் செய்துகொண்டு வந்தாள். அணிந்திருந்த டீஷர்டில் அடித்த மருந்து வாடை வேறு குமட்ட அதை மெத்தையில் கழட்டியெறிந்தவள் உள்ளிருந்து முழுக்கைச் சட்டையொன்றை எடுத்து அணிந்துகொண்டு கீழிறங்கினாள்.

அடுக்களையில் பொன்னம்மா இவளுக்கென எதையோ செய்துகொண்டிருந்தது தெரிந்தது. இவள் அடுக்களையினுள் நுழையவும் கவனித்துவிட்ட பொன்னம்மா சாப்பாட்டு மேசை நாற்காலியை அவள் அமர்வதற்கு வாக்காய் இழுத்துப்போட்டவாறே, “நீயேன்மா வந்த? நானே கொண்டாந்துருப்பேனே” என்றார்.

“எங்க இருக்காங்க பொன்னம்மா?” என்றவள் எங்கு விட்டாளோ அச்சு பிசகாமல் அங்கிருந்தே தொடங்கினாள்.

பழச்சாறு நிறைந்த கண்ணாடி டம்ளரை அவள் முன் வைத்தவர், “மொத இத குடி கண்ணு” என்க அவளோ பழச்சாற்றைப் பார்வையால் கூட தீண்டாமல் அவரையேதான் பார்த்திருந்தாள். எனக்கு வேண்டியது இதுவல்ல! என்ற பார்வையுடன்.

“ஹ்ம்..” என்று ஆழ மூச்சிழுத்துவிட்டவர், “நீ குடி இமையாமா நான் விலாசத்த எடுத்துட்டு வாரேன்” என்றுவிட அவரையே ஒரு கணம் பார்த்தவள் பிறகு கவனத்தை டம்ளரிடம் திருப்ப அவரும் அங்கிருந்து சென்றார், “முடி எப்படி கெடக்கு பாரு” என்று முணுமுணுத்தவாறே.

அடிக்கடி தலையைக் கோதும் பழக்கமுடையவள். வழமைபோல வலக்கையைக் கூந்தலில் நுழைக்க அது ஆங்காங்கே சிடுக்காய் வேறு இருக்க முதலில் மெல்ல ஒற்றைக் கையால் சிடுக்கெடுக்க முயன்றாள். இடக்கை வலி பயங்கரமாய் இருந்தது. அது அவளையறியாமலே அவள் அந்த கையை மென்மையாய் கையாண்டாள். குறைத்து உபயோகித்தாள். ஒரு கட்டத்தில் சிக்கெடுக்க முடியாமல் முடி வேறு இன்னுமின்னும் விரல்களிடையில் சிக்கிக்கொள்ள இயலாமையில் பொறுமையிழந்தவள் கூந்தலை வன்மையாய் கையாள, அவள் பிடித்திழுக்க இழுக்க தலை வலி கை சோர்வென இன்னும் வலிக்கச் சட்டென அருகில் கிடந்த கத்திரி கோலை எடுத்தவள் முடியை வெட்டப் போகவும் பொன்னம்மா, “பாப்பா!!” என்ற பதட்டம் நிறைந்த அதட்டலுடன் வரவும் சரியாய் இருந்தது.

அருகில் வந்துவிட்டவர் அவள் கையிலிருந்த கத்திரியை பிடுங்கித் தூர வைத்துவிட்டு அவளிடம் திரும்பினார்.
“அப்படியென்ன கண்ணு கோவம்?? பொறுமையா சீப்பால வாரினா வந்துட்டுபோது! அதுக்குனு ஒரேடியா வெட்டிருவியா? ” என்றுவிட்டு கையோடு கொண்டு வந்திருந்த சீப்பால் சிக்கெடுக்க எதுவும் சொல்லாது மௌனமாய் அமர்ந்திருந்தாள் இமையா. அவருக்கு இன்னும் அவளது குட்டை கூந்தலுக்கு பின்னிருக்கும் கதைகள் தெரிந்திருக்கவில்லை. இருந்தும் சரியாக விழுந்தது அவரது வார்த்தைகள், ஒரேயடியாய் வெட்டிவிடுவாயாவென.

பொன்னம்மாவிற்கோ எப்படி உணர்கிறோம் என்றே புரியவில்லை. அன்று கையை வெட்டிக்கொண்டு நின்றாள், இன்று முடியை வெட்ட நிற்கிறாள். சிறு பிள்ளைகள் இருக்கும் வீட்டில் ஒளித்து வைப்பது போல இனி கூரிய பொருட்களை ஒளித்தா வைக்க முடியும்? அப்படி அவர் எத்தனையை ஒளித்து வைத்திட முடிந்திடும்? காலம் முழுக்க இவள் எப்பொழுது எதை செய்வாள் என்று பார்த்துக்கொண்டே தான் இருந்திட முடியுமா அவரால்? இல்லை அவளை அன்று அப்படி பார்த்த பிறகு இரவில் நிம்மதியாய் கண்ணசந்திடத்தான் இயலுமா? அவரால் எத்தனை காலத்திற்குப் பாதுகாத்திட முடியும்? அதுவும் அவளிடமிருந்தே எனும்பொழுது. ஏனோ அவள் இப்பொழுது ஜீவனையும் அந்தக் குழந்தையையும் சந்திப்பதுதான் மூவருக்கும் நல்லதெனப்பட்டது, முக்கியமாய் அவளுக்கு! அவர் நம்பினார்! நிச்சயம் அந்தக் குழந்தையாவது இவள் மனதை மாற்றுமென்று.

கையிலிருந்த சிறியளவிலான தாளை மேசையில் அவள் முன் வைத்தார்.

“நான்தான் ஒத்தாசைக்கு ஆள் பாத்து அமத்தினேன்” என்ற கூடுதல் தகவலுடன்.

ஒரு கணம் அந்த தாளையே பார்த்தவள் அடுத்த நொடியே அதை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டாள். சென்றவளையே பார்த்திருந்த பொன்னம்மாவின் மனம் அவர் வணங்கும் அத்தனை கடவுளிடமும் வேண்டுதல்கள் வைத்தது.

“வீல்!” என்றலறிய குக்கர் விசில் சத்தத்தில் நினைவுகளில் இருந்து திடுக்கிட்டு விழித்த ஜீவன் ஓடிச்சென்று அடுப்பை அணைத்துவிட்டு வந்து குழந்தை எழுந்துவிட்டாளா என்று பார்த்தான். இல்லை. இன்னும் உறங்கிக்கொண்டுத்தானிருந்தாள். அவள் உறங்கும் நேரத்தில் குக்கர் வைத்த தனது மடத்தனத்தை எண்ணி தன்னை கடித்துக்கொண்டான் அவன்.
மணியை பார்த்தான், வீட்டு வேலைகளில் அவனுக்கு ஒத்தாசையாய் இருக்கும் மீரா வருவதற்கு இன்னும் நேரம் நிறையவே இருந்தது. அதற்குள் சமையலை முடித்துவிட எண்ணி விட்டதில் இருந்து தொடங்க அடுக்களையினுள் நுழைந்தான். அவன் வேலையை விட்டிருந்தான்.

திடீரென அழைப்புமணி சத்தம் கேட்கவும் “அதுக்குள்ள வந்துட்டாங்களா?” என்ற சந்தேகத்தோடவே கதவைத் திறந்தவன் நிச்சயம் இமையாவை அங்கு எதிர்பார்த்திருக்கவில்லை. அதை அவன் முகமே சொல்லியது. அவள் “ஜீவா..” என்று ஓரெட்டு வீட்டினுள் எடுத்து வைக்க அப்படியே அவளை இறுக அணைத்துக்கொண்டவன் அவள் தோளில் முகம் புதைத்திருக்கச் சற்று நேரத்திலெல்லாம் அவளது தோள்பட்டை துணி ஈரமாவதை உணர்ந்தாள் இமையா. நிறைய நேரத்திற்கு மௌனமாய் அப்படியே நின்றவன் ஒரு கட்டத்தில் மெல்ல மெல்ல விசும்பலில் தொடங்கி லேசாய் உடல் குலுங்கி என சற்று நேரத்தில் வாய்விட்டு சத்தமாய் அழ ஆரம்பித்துவிட்டான்.

அவன் அழுத விதம், ஏதோ அவன் அத்தனை நாளும் அவள் தோளுக்காய் காத்திருந்து அத்தனை அழுகையையும் அடக்கி வைத்திருந்ததைப்போல இருந்தது. தொலைந்த குழந்தை அன்னையைக் கண்டவுடன் அழுவதைப் போல அழுதவனைத் தேற்ற தெரியாது அப்படியே நின்றிருந்தவள் மெல்ல அவனை அணைத்துக்கொண்டாள். பரவாயில்லை அழுதுவிடு! என்பதைப்போல.

அழுது ஓய்ந்தவன் சற்று நேரத்தில் கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தான். அவளிடம் கேட்க அத்தனை இருந்தது. ஆனால் எதுவும் அந்நொடி தோன்றாமல் போக, அவள் முகத்தை பார்த்தவன், “நீ வா” என்றுவிட்டு அவள் கைப்பிடித்து இழுத்துச் சென்றான். அவள் நினைத்ததுபோலவே தொட்டிலிடம் அழைத்துச்சென்றவன் அவளைப் பார்க்க அர்த்தம் உணர்ந்தவளோ இன்னமும் நம்பியும் நம்பாமலுமாய் அவனைப் பார்க்க அவனோ ‘ஆம்’ என்று விழியசைத்தான். உள்ளுக்குள் அத்தனையும் லேசாய் நடுங்க அதை வெளியில் காட்டாதவாறு தொட்டில் அருகில் சென்றவள் மண்டியிட்டமர்ந்தாள். குழந்தைகளில் சாயல் எல்லாம் பார்க்கத் தெரியாது அவளுக்கு. ஆனால் ஒரு கணம் அவள் அபியைத்தான் கண்டாள் அந்தக் குழந்தையிடம். ஒரு வேளை அதைத்தான் அவள் மனம் எதிர்பார்த்ததோ? இதயம் நின்று துடித்தது என்பார்களே? அப்படிதான் இருந்தது அவளுக்கும். அதே ரோஜா நிற இதழ்கள் குட்டி குட்டி விழிகளென அப்பொழுதே தூக்கத்திலிருந்து விழித்திருந்தாள் அவள். இவள் ஒற்றை விரலால் வெகுவாய் தயங்கித் தயங்கி அவள் சொப்பு கையைத் தொடப் பட்டெனப் பற்றி தன் கைகளுக்குள் அடக்கிக்கொண்டாள் இமையாவின் விரலை. இமையாவும் வாழ்க்கையை ஒற்றை விரலால் தொட்டுப்பார்க்கத் தொடங்கினாள்.

குழந்தைகள் யார் விரலைக் கொடுத்தாலும் பிடித்துக்கொள்ளத்தான் செய்கிறார்கள். ஆனால் அத்தனை வித ஆறுதல்களும் ப்ரத்யேகமாய் கதவை தட்டுவது போலாகிவிடுகிறது அவ்விரல் நமதாய் இருக்கும்பொழுது.

“பேரென்ன?” பார்வையை அவளிடமிருந்து அகற்றாமல் ஜீவனிடம் கேட்டாள்.

“மீயாழ்” என்றதும் அவளுக்கு சட்டென முகம் மாறியது. விரலை அவளிடமிருந்து உருவிக்கொண்டவள் ஜீவனை ஒரு நொடி கேள்வியாய் பார்த்தாள்.

“நான் அப்பறமா வரேன்” என்றுவிட்டு அவள் திரும்ப அப்பொழுதே அவன் கவனித்தான் அவளது கையை. சட்டென அவளது கையை பிடித்து நிறுத்தியவன் இடக்கை சட்டையை மேலே இழுத்துவிடக் கண்கள் இரண்டும் அதிர்வில் விரிந்தது.

“என்ன பண்ணி வச்சுருக்க இமையா?” என்று அதிர்வில் தொடங்கி அதட்டலில் முடிந்த குரலுக்குப் பதிலாய் சட்டை கையை இழுத்துவிட்டு, “வரேன்” என்றதோடு அந்த அறையிலிருந்து வெளியேறியவள் வாசலுக்கு வரவும் அதே சமயம் வீட்டினுள் யாரோ பெரிய பெட்டியை உருட்டிக்கொண்டு நுழையவும் சரியாய் இருக்க ஒரு நிமிடம் நின்றவள் பார்வையைப் பெட்டியிலிருந்து அதைத் தள்ளிக்கொண்டு வந்தவரிடம் உயர்த்தினாள். சில கணங்களே ஆனாலும் சட்டெனப் பிடிபட்டுவிட்டது அது யாரென. அது அவனேதான். அந்த நீல விழிக்காரன்.

அவளை சுற்றி எத்தனை பேர் இருந்தாலும் அவள் வாழ்க்கையினுள் வெகு சிலரே! இந்த நீல விழியனும் அவளை ஏதோ ஒரு விதத்தில் பாதித்திருக்க வேணும் நினைவில் நிற்க.

அதே சமயம், “இமையா..” என்று எதையோ சொல்லிக்கொண்டே அறையினுள்ளிருந்து வந்த ஜீவனும் வந்திருந்தவனைக் கண்டு ஒரு கணம் அதிர்ந்து பிறகு “நிலா?” என்றான் இன்னதென்று விளக்க முடியாதொரு குரலில்.

வாழ்வின் கண்ணாடி விளிம்பில் அமர்ந்திருக்கிறேன் நான். எக்கணமும், எதுவும் பட்டு இது நொறுங்கி விழலாம். அல்லது அதற்குள் நான் இங்கிருந்து எழுந்துச் சென்றுவிடலாம். எதிரில் வெட்டவெளி விழச்சொல்லி இழுக்கிறது, பின்னால் வீடு ஏக்கமாய் பார்க்கிறது. குழம்பி நின்ற என் நாசி தீண்டி கவனம் ஈர்த்தது வீட்டினுள்ளிருந்து வந்த பூவாசம்..!! வெளிப்புறம் கிடந்த என் கால்கள் வீட்டை நோக்கித் திரும்பின..!!