அவர்கள் மருத்துவமனையிலிருந்து நகர்ந்ததுமே, விரைவாக மருத்துவர் குழு தயாளனை சூழ்ந்துக்கொண்டனர், அவசரமாகச் சிகிச்சை வழங்கப்பட்டது, இனிமே இவருக்கு அதிர்ச்சியான சம்பவங்களே தெரியவரக் கூடாது அது அவரின் உயிருக்கு ஆபத்து எனக் கூறியிருந்தனர்.
அவர் கண் விழித்ததும் பல கேள்விகளைத் தாங்கி நின்றபடி அவர் முன் நின்றார் அகிலா.
அவர் எதைக் கேட்பார் என்று தெரிந்ததால் ஒரு நிமிடம் அமைதியாய் இருந்தவர், பின் அன்று என்ன நடந்தது என்பதை விவரிக்கத் துவங்கினார்.
**************
ஆத்மியை பெண் கேட்டுச் சாரதா வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்…
காலை 8 மணி.
அந்த வீட்டில் தொலைகாட்சியின் சத்தம் மட்டுமே எதிர் ஒலித்தது,
அதனைப் பார்த்தபடி தனிமையில் அமர்ந்திருத்தார் தயாளன், நேற்றைய இரவு தான் குடும்பமாகக் கொல்கத்தாவை வந்தடைந்திருந்தனர் அவர்கள், இரவு ஒய்வெடுத்தவர்கள் அதிகாலையிலே வீட்டுற்கு சில பொருட்கள் தேவைப்படுவதாகச் சொல்லி இவரைக் கிளப்ப,’தான் வரவில்லை அசதியாய் இருக்கிறது, நீங்கள் சென்று வாருங்கள்’என்று முடித்துக்கொண்டார்.
ஆகையால் தாய், தமக்கை, தமக்கையின் சிறுவாண்டுடன், நமது கதாநாயகியும் சென்றுவிட்டிருந்தாள்.
தொலைக்காட்சியின் எட்டு மணி செய்தியில், திடீரென ஒரு பரபரப்பு நிகழ்வதை உணர்ந்தார் தயாளன், இவ்வளவு நேரம் அரைத்த மாவையே அரைத்தவர்கள். சட்டெனப் பிரேகிங் நியூஸ் ஒளிப்பரப்பாகியது அதில்.
‘சற்று முன் கிடைத்த செய்தி, இருள் உலகின் தாதாவாக இத்தனை நாட்கள் செயல்பட்டு வந்தவர் பிரபல முக்கிய புள்ளியான தேவ் அநபாயனே ஆவார் என்று அதிகார தகவல்கள் கிடைத்துள்ளன’ என்று கூறியவர்கள்.
அவனின் புகைப்படத்தைத் திரையில் ஓடவிட ஏனோ, அவனைப் பார்த்த மாத்திரத்தில் பிடிக்கவில்லை தயாளனுக்கு. பின், அந்தச் செய்தியை உன்னிப்பாகக் கவணிக்க துவங்கினார்.
‘கடந்த ஐந்து வருடமாகவே, கொல்காத்தாவை ஒருவர் ஆட்டிப் படைத்தார் என்றால் அது மிகையாகாது, பல பெண்கள் மர்மமான முறையில் கடத்தப்பட்டுள்ளனர், கொடூரமான கொலைகளுக்கும் இங்கே பஞ்சமில்லை, மணல் கொள்ளை, பணப்பட்டுவாடா என்று பல்வேறு சட்டவிரோத பணிகள் நடந்த வண்ணம் உள்ளது’
‘இத்தனை காலமாக ஆராய்ச்சி செய்த காவல் துறையால் இதை அனைத்தையும் செய்தவர் ஒருவர் என்பதை மட்டும் கண்டுப்பிடித்திருந்தனர்’
‘இப்பொழுது அது யார் என்பதும் அதிகாரப்பூர்வமாகக் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. வெளி உலகில் வி.ஐ.பி ஆகவும், செல்வந்தாரகவும் செயல்ப்பட்டு வரும் தேவ் அநயாயன் கடத்தப்பட்ட பெண்களோடு எடுத்துக்கொண்ட இந்தப் புகைப்படம் சிக்கியுள்ளது’ என்று கூறியவர்கள் அந்தப் புகைப்படத்தையும் ஒளிப்பரப்பினர்.
அது அனைவரும் வரிசையாய் நின்று எடுத்த புகைப்படம் அல்ல இங்கொருவர் அங்கொருவராக நின்றிருந்தனர் தேவ் ஒருபக்கமாகத் தெரிந்தான்.
இதைக் கண்ட தயாளனுக்கு ஆத்திரம், பெண் பிள்ளைகளை அவரும் பெற்றெடுத்திருக்கிறார் அல்லவா, சட்டென டீவியை அணைத்தவர் அமைதியாய் அமர்ந்துக்கொண்டார்.
அதே நேரம் இங்கே, அந்த வீட்டிலிருந்து அவசர அவசரமாகக் கிளம்பியிருந்தார் சாரதாம்மா ஆத்மியின் இல்லம் நோக்கி,
போன மாதம், ஆத்மியின் பள்ளி தோழி ஒருத்தியை (இவரது மாணவியும் கூட) சந்திக்க நேர்ந்தபோது, ஆத்மியின் தொலைப்பேசி எண்ணைப் பெற்றுக்கொண்டவர் உடனே அவளுக்கு அழைத்திருந்தார், சாரதாவிற்கு தலை கால் புரியவில்லை, சாதரண நலம் விசாரிப்புகளுக்குப் பின், அனைத்து தகவல்களையும் அவளிடமிருந்து வாங்கியவர், கொல்கத்தாவிற்கு மாற்றல் ஆனது விரைவில் வர உள்ளது என்று அனைத்தையும் இவள் நான் இங்கதான்டா இருக்கேன், நீ வா என்று கூறியவர் இங்கே குடிவரப் போகிற வீட்டு முகவரியை வாங்கிவிட்டிருந்தார்.
அதன்படி, இன்று சம்பந்தம் பேசச் சென்றுவிட்டார், அவளுக்குச் சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டிச் சொல்லாமல் வந்திருந்தார், இத்தனை நாள் அவர் பொறுமை காத்ததே அதிசியம்தான், அதனால்தான் அவர்கள் வந்த மறுநாளே கிளம்பிவிட்டிருந்தார்.பெண் கேட்க.
ஆத்மியின் வீட்டை அடைந்தவர், உள்ளே செல்ல அவரை வரவேற்ற தயாளன்,” நீங்க…”என்று கேள்வியோடு கேட்க.
“நான் சாரதா, ஆத்மியின் ஆசிரியை” என்றார் அறிமுகப்படுத்திக்கொள்ள.
“ஓ, நீங்கதானா அது சொல்லியிருக்கா உங்களைப் பத்தி நிறையாவே” என்று கூறியவர், “இருங்க காபி எடுத்திட்டு வரேன்”என்று நகரப்போக.
“இல்லை, வேண்டாம்”என்று இவர் மறுக்க.
“முதல்முறை, அத்தோடு உங்களுக்கு எதுவும் கொடுக்கலைனா என் மகளுக்குப் பதில் கூற முடியாது” என்று சிரித்தவாறு கூறியவர்.
காப்பியை கலந்து இவரிடமும் கொடுத்தார், ஒரு மிடறு குடித்தவர் பின் அமைதியான குரலில் “
“ஆத்மி எங்கே?” என்று கேட்டார்.
“அவள் வெளியே சென்றிருக்கிறாள்” என்றார் தயாளன்.
“நல்லது தான், நான் பேச வந்ததை உங்களிடம் கூறுகிறேன்” என்று அவர் புதிர் போட.
ஒன்றும் புரியாது விழித்தவர்,”என்ன சொல்றீங்க?”என்றார்.
“என் மகனுக்கு ஆத்மியை பெண் எடுக்கலாம் என்றிருக்கிறேன்”என்றார் தன்மையாக.
அமைதியாய் இருந்தார் தயாளன், அவரின் யோசனையைப் பார்த்தவர், “என்னாச்சு, ஏன் ஒன்னும் சொல்லமாட்றீங்க? அவன் நல்லா படிச்சவன், நல்லா சம்பாதிக்கிறான், நல்ல பையன், அவளை நல்லாவே வெச்சு பார்த்துப்பான்”என்று அடுக்கிக்கொண்டே போக.
“இல்லை அதில்லை, கல்யாணம்ங்கிறது சாதாரண விசயம் இல்லை, எல்லாம் பார்க்கணுமே என்று தான் யோசனை, வாழப் போவது அவள்தானே, அவளின் சம்மதம் இல்லாமல் நான் எதுவும் செய்யமாட்டேன்”என்றார்.
“ஓ, சரிங்க அப்போ, பேசிட்டே சொல்லுங்க உங்க மகளிடம்”என்றார்.
“நிச்சயமாக, என் மகள் உங்கள் மகனைப் பார்த்திருக்கிறாளா?”எனறார்.
“இல்லைங்க, அவன் சின்ன வயசுல இருந்தே ஹாஸ்டலில் தான் படித்தான், பள்ளி, கல்லூரி எல்லாமே ஹாஸ்டலில் தான், படித்து முடித்தவுடன் இங்கே வேலை கிடைக்கவும் வந்துவிட்டான்” என்றார்.
“ஓ, சரி சரி, தம்பி என்ன வேலை பார்க்கிறார்” என்று கேட்டார் தயாளன்.
“ஐ.டி நிறுவனத்தின் சி.இ.ஓ வாக இருக்கிறான்” என்றார்.
“பரவாயில்லையே, என் மகளும் ஐ.டி தான்”என்றார்.
“தெரியுமே, இருவரும் ஒரே துறை வேலை, ஒன்றாக வேலை செய்யலாம் அல்லவா?”என்றார் எதிர்ப்பார்ப்புடன்.
“அது சரி, இருப்பிணும் வீட்டில் கேட்டுவிட்டு சொல்கிறேன், போட்டோ எதுவும் இருக்கிறதா”என்றார்.
“ம், இந்தாங்க”என்று ஒரு கவரை கொடுத்தார்.
அதை வாங்கியவரும் “சரிங்க, பார்த்திட்டு சொல்றோம்” என்றார்.
“சரிங்க, அப்போ நான் கிளம்புறேன்”என்று அவர் கிளம்ப.வழியனுப்பி வைத்தவர் போட்டோவைத் திறந்து பார்க்க.சற்று முன் தொலைக்காட்சியில் பார்த்த அதே உருவம் கம்பீரத்தோடு நிழற்ப்படமாய் அதில் இருக்க, ஆத்திரத்தில் அந்தப் புகைப்படத்தைத் தூக்கி எறிந்திருந்தார். இவரது அலைப்பேசி எண்ணை வாங்க மறந்த சாரதா அதைப் பெறவெனத் திரும்ப வரத் தயாளன் தூக்கி வீசிய புகைப்படம் அவரது காலடியில் விழ.அதை எடுத்தவர்.
“என் மகனைப் பிடிக்கலனு சொல்றதுக்கு உங்களுக்கு முழு உரிமை இருக்கு, அதுக்காக இப்படி தூக்கி வீச வேண்டாம்” என்றார் அவரும் கோபமாக.
“சரி, உங்க பிள்ளையைப் பிடிக்கலை போய்டுங்க”என்றார் இவரும் கோபமாகவே.
அதிர்ந்தவர்,”என்ன காரணம், என் பிள்ளை தங்கமான பிள்ளை”என்றார்.
“தங்கமாம் தங்கம், ஒரு பொறுக்கிய பெத்திட்டு அதுக்கே உங்களுக்கு இவ்ளோ வாய்”என்றார் ஆத்திரத்தோடு.
“வார்த்தையை அளந்து பேசுங்க, என்ன நினச்சிட்டு இருக்கீங்க?”என்றார்.
“இப்படியொரு பிள்ளையைப் பெத்துட்டு, கொஞ்சம் கூடக் கூசாம படியேறி பொண்ணு.கேட்டு வந்துட்டீங்க”என்றார்.
“போதும் நிறுத்துங்க, என் பிள்ளை மேல அபாண்டமா பழி போட வேண்டாம்”என்றார் கோபத்தோடு.
“பழி போடுறேனா, உங்க மகன் லட்சணத்தை ஊரே பாக்குது உங்களுக்குத் தெரியாதாக்கும்”என்றார் ஏளனமாக.
“நான் நம்ப மாட்டேன், என் மகன் ரொம்ப நல்லவன்”என்றார்.
“ஓஹோ, இருங்க இதைப் பாருங்க”என்றவர் டீவியை ஆன் செய்து அந்த நியூஸை காண்பித்தார்.
அதைப் பார்த்தவருக்கு தலை சுத்தியது, வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக்கொண்டது.
“இல்…லை…இது…பொய்…நான்…”என்றார்.திக்கிதிணறி
“பொய்யா, ஆதாரத்தோட காட்டுறாங்க இவன் உங்களுக்கு நல்லவனா?”என்றவர் “இன்னமும் இவனை நம்ப நான் ஒன்றும் முட்டாள் இல்லை” என்றார்.
சாரதாம்மா அவரைப் பார்க்க “உங்க பிள்ளைக்குப் பெண் கொடுக்குறதுக்கு பதிலா என் பொண்ணுக்கு நானே விஷம் கொடுத்திடலாம், தயவு செய்து இனிமே என் பொண்ணுகிட்ட பேசாதிங்க, என் வீட்டு பக்கமே வர்றாதீங்க, என் பொண்ணு வாழ்க்கையை கெடுத்துடாதீங்க”என்றார்.
அமைதியாய் திரும்பி நடந்தார் சாரதாம்மா, அவரின் நடை தளர்ந்தது, அமைதியாய் காரில் ஏறி அமர்ந்தவர்தான். பின், காரிலிருந்து அவராய் இறங்கவேயில்லை.
தயாளன் தன் மகளுக்குச் சாரதாம்மாவின் மேல் பாசம் அதிகம் என்பதை அறிந்தவர், அவர் இங்க வந்தது தெரிந்தால் மன்னிப்பு கேட்கிறேன் என்று கிளம்பிவிடுவாள் என்பதால் அதை மறைத்தவர், தேவ் என்பவனையும் மறந்திருந்தார்.
இந்தச் சம்பவத்தை அப்படியே மறைத்தவரால் முழுமையாக மறைக்க முடியவில்லை என்பதே உண்மை. இரண்டாவது நாளே அங்க வந்து நின்ற தேவ் அநபாயனை சத்தியமாக எதிர்ப்பார்க்கவில்லை, யாருக்கும் எதுவும் தெரியக் கூடாது என்பதற்காகவே அவனைத் தெரியாதது போல் நடித்தார், பாவம் அவரின் நடிப்பு எடுப்படவில்லை.
இவற்றைத் தன் மனைவியிடம் பகிர்ந்துக்கொண்ட பின், அவரது கண்டன பார்வை அவரை வதைக்க.
“நம்ம பொண்ணு வாழ்க்கையை நீங்களே அழிச்சுடிங்களே, ஒரு வார்த்தை உங்க பையனை எங்களுக்குப் பிடிக்கலைனு சொல்லியிருக்க வேண்டிதானே, இப்படியெல்லாம் பேசுனது ரொம்ப தப்புங்க, ரொம்பவே தப்பு”என்று அழ ஆரம்பித்துவிட்டார்.
அவருக்கும் தன் தவறு புரியவே செய்தது.
****************
அவன் தோசை கேட்டதால், மாவு இல்லை என்று சிந்தித்து கொண்டே கிட்சன் சென்றவளுக்கு அதிர்ச்சி.
காரணம் கிட்சன் நிறைய பாத்திரங்களும், பிரிட்ஜில் காய்கறிகள், பழங்கள் என்று எல்லாம் இருக்க, சரியாகச் சொல்லணும் என்றால் பக்கா கிட்சனாக இருந்தது, இதை எல்லாம் எப்போ வாங்கி வைத்தான் என்று யோசித்தவளாக.
மாவை எடுத்துத் தோசை வார்த்து அவனுக்குக் கொடுக்க, அமைதியாய் வாங்கி சாப்பிட்டான். அவள் அவனை யோசனையாகப் பார்க்க.
அவளது பார்வைக்கான பொருளைத் தெரிந்துக்கொண்டவன் “கிட்சன்ல கேமரா மாட்டிட்டேன், நீ இதுல எதையும் கலக்கல சோ, யோசிக்காம சாப்பிடுறேன்”என்றான் அவளது பார்வைக்கு பதில் தரும் வகையில்.
ஆத்மி அதிர்ச்சி ஆகவில்லை இவனின் செயல்கள் இப்படித்தான் இருக்கும் என்று அவள் நம்பியதால்.
அவள் மூன்று தோசைகளை வைக்க, இரண்டை சாப்பிட்டவன் மீதம் இருந்த ஒன்றை தன் தட்டில் வைத்துச் சாப்பிடு என்று அவளிடம் கொடுக்க.
கண்களால் அவனை எரித்தவள், “ச்செய், நீ சாப்பிட்டதையா?”என்றாள் அருவெறுப்புடன்.
“ஆமாம், நான் தான் சொன்னேன்ல ஆதி காலத்தில் புருசன் சாப்பிட்ட தட்டுல தான் பொண்டாட்டி சாப்டுவாங்க தெரியுமா?”என்றான் அவன் ஏளனமாக.
“செத்தாலும் சாவேன், நீ சாப்பிட்டதை சாப்பிட மாட்டேன்” என்றாள் ஆத்மியும்.
“உன் விருப்பம்” என்றவன் மீதம் இருந்த தோசையை குப்பை தொட்டியில் போட்டான்.
“அடுத்து போய்க் காப்பி எடுத்திட்டு வா”என்றவன் அவனது லாப் டாப்போடு ஐக்கியமாக.
காப்பி போட்டுக் கொடுத்தால், அன்றைய நாள் முழுவதுமே அவளை ஒரு நிமிடம் கூட உட்கார விடாது வேலை வாங்கியவன், அதாவது சுடுதண்ணீர் கொடு என்பான், அதிக சூடு என்பான், குறைந்த சூடு என்பான், இப்போ தண்ணீரே வேண்டாம் ஜூஸ் கொடு என்பான் இவ்வாறு அவளைப் படாய் படுத்தினான்.அவளுக்கு உணவு என்பது சிறிதும் வழங்காமல். மதிய உணவின் போதும் சரி இரவு உணவின்போதும் சரி “சாப்பாடு வேணும்னா நான் சாப்ட்ட தட்டுல சாப்பிடு” என்று கூறியவன் அவள் அசைந்து கொடுக்காததால், கண்டுக்கொள்ளாது கைகழுவி சென்று விட்டான்.
இரவும் கனிந்தது, நேற்றைய கொடூரத்தின் மிச்சமே இன்னும் மறையாமல் இருக்க, இன்று என்ன நேருமோ என்று பயந்தவள், பயந்து பயந்து அறைக்குள் வர, ஏதோ சிங்கத்தின் குகைக்குள் போவது போல் இருந்தது அவளுக்கு.
ஒரு பவ்லில் திராட்சையை ஒவ்வொன்றாய் பறித்து வாயில் போட்டுக்கொண்டிருந்தான் தேவ்.
இவளைப் பார்த்தவன்” இங்க வா”என்றான் கட்டளையாக.
எச்சிலை தொண்டைக்குள் விழுங்கியவள், மெல்ல அவன் பக்கத்தில் போக, சிறிது திராட்சையை கையில் எடுத்தவன் அவளிடம் நீட்ட , வேண்டாம் என்று தலையை இருபுறமும் ஆட்டியவளின் கைகளை பற்றி தன் மேல் சரித்துக்கொண்டவன் தன் வாயில் இருந்த திராட்சையை அவளது வாயிற்கு மாற்றம் செய்ய.
அவள் அதிர்ந்து இவனை பார்க்க, சிறிது நேரத்தில் அவளை விட்டவன் மறுபடியும் அவளிடம் திராட்சையை நீட்ட, அவள் யோசிக்க “இந்த முறையும் வாங்காட்டி, மொத்தத்தையும் இப்போ பண்ணுனது போலவே உனக்கு கொடுப்பேன், ஒருவேலை உனக்கும் அது பிடிச்சிருக்கோ”என்றான் விஷமமாக.
_தொடரும்_