நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-18

அவனின் மிரட்டலுக்கு பயந்து பேசாமல் வாங்கி சாப்பிட்டவள், அமைதியாய் நிற்க, அவள் நிற்பதை பார்த்தவன்.

“நைட் ஃபுல்லா நிக்குறதா உத்தேசமா, இல்லை கணவனுக்கு மரியாதையா?” என்று நக்கலாகக் கேட்க.

சட்டென உட்கார்ந்தாள் ஆத்மி.அப்பொழுது அவன் சத்தமாகச் சிரிக்க இவள் அவனைப் புரியாது பார்க்க அவளின் குழப்பத்தைப் பார்த்தவன்.

“இல்லை, உன் புத்திசாலித்தனத்தை நினைத்தேன் சிரித்தேன்”என்றான் நக்கலாக.

அவள் மௌனமாய் இருக்க, “இப்போலாம் நீ ஏன் சரியா பேசுறது இல்லை…”என்று அவன் கேட்டிட.

அவனை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் இவள் பார்க்க, அதற்குச் சிரித்தவன்.

“போய்த் தூங்கு, நாளைக்கு வெளியே போகணும்”என்றான்.

‘மறுபடியுமா? இப்போ, என்ன செய்யக் காத்திருக்கானோ?’என்று மனதோடு நினைத்தவள். ‘எங்கே படுக்க?’ என்று மனது கேட்ட கேள்வியில், அவனை இவள் பார்க்க.

இங்கே ஒருத்தி நிற்கிறாள் என்பதை கொஞ்சமும்  கண்டுக்கொள்ளாதவன் பேசாமல் படுத்துக்கொள்ள, சிறிது நேரம் நின்றவள், விட்டால் போதும் என்று ஹாலில் சென்று சோபாவில் உடலைக் குறுக்கி படுத்துக்கொண்டாள்.

நடு இரவில் கண்விழித்து அவன் பார்க்க, பக்கத்தில் அவள் இல்லாததை கண்டு கடுப்பானவன் அவளைத் தேடி முன்னறைக்கு செல்ல, அங்கே அவள் படுத்திருப்பதை கண்டவன்.

‘திமிரு பிடிச்சவள்’ என்று மனதில் அவளைத் திட்டிவிட்டு, அவளைத் தன் கரங்களில் ஏந்திக் கொண்டான்.

அவனின் தீண்டலில் பயந்து விழித்தவள் அவனைப் பயத்தோடு பார்க்க, அவளை முடிந்த மட்டும் முறைத்தவன் கட்டிலுக்கு சென்று அவளைவிட.

அவன் விட்டதும் எழுந்து கட்டிலுக்கு மறுபக்கம் போய் நின்று கொண்டவளை கண்டவன், அவளைப் புருவம் உயர்த்தி பார்த்தான்.

“உன்னோட கபடி கபடி விளையாட இது ப்ளே கிரவுண்ட் இல்ல, உன்கூட நான் ஒரே ஒரு விளையாட்டு தான் விளையாடுவேன், அது விளையாட இப்போ எனக்கு மூட் இல்ல, சோ, தேவையில்லாம சீன் போடாதே, பேசாம வந்து படு”என்றவன் பின், நிறுத்தி…

“நான் நல்ல பையனா இருக்கணும்னு தான் நினைக்குறேன் நீ தான் விடமாட்ற”என்றான் விஷமமாக.

அதில் இன்னும் பயந்தவள், பேசாமல் சென்று படுத்துக்கொண்டாள்.

மெல்லியதாய் சிரித்தவன், அவனும் சென்று படுத்துக்கொண்டான்.

*************

அடுத்த நாள் காலை முதல் வேலையாக  அறிவழகன் சாரதாவை காணவந்துவிட்டார்.

“சாரு, நீ வீட்டுக்கு வந்திடு டா, சொன்னா கேளு, நீ அங்க வர்றது தான் சரி”என்றார் வேறெதுவும் கூறாது.

“எதுவும் பிரச்சனையா? ஆத்மி நன்றாக இருக்கிறாள் தானே”என்று கேட்டார் சாரதா உடனே.

“அப்படித்தான் தெரிகிறது, ஆனால் ஏதோ சரியில்லாதது போல் தெரிகிறது. நீ வர வேண்டும், வந்தே ஆகனும், நம்ம பையனுக்காக வர வேண்டாம், அந்தப் பொண்ணுக்காக வா”என்றார்.

“இல்லைங்க, அவன் பாவம் பண்ணி சேர்த்து கட்டின வீட்டுக்கு நான் வரமாட்டேன், அதுக்கு நான் இங்கையே இருந்துக்கிறேன்”என்றார்.

“ஏன் பிடிவாதம் பிடிக்கிற, நம் மகனும் இதில் அப்படியே உன்னைப் போல்”என்றார் ஆதங்கமாக.

“பிடிவாதம் இல்லைங்க இது, மன வருத்தம், என் பிள்ளையை நான் சரியா வளர்க்கலைங்கற மனவருத்தம், எல்லா பிள்ளைகளுக்கும் நல்லது கெட்டது, ஒழுக்கம்ன்னு இத்தனை வருசமா சொல்லிக் கொடுத்துட்டு வர்றேன் ஆனா என் பிள்ளைக்கு அதைச் சொல்லிக்கொடுக்க தவறிட்டேனோ” என்றார் மனத்தாங்கலுடன்.

“இல்லை டா, இதில் உன் தவறு எதுவும் இல்லை, அவன் எப்போ உன் கூட இருந்தான் நீ அதைப் போதிக்க”என்றார்.

“கூட இல்லை தான், அவனின் பிடிவாதத்திற்கு நான் சம்மதித்திருக்கக் கூடாதுனு நினைக்குறேன்”என்றார்.

“இப்போ அவன் முன்ன போல் இல்லைமா, அவன் மாறிட்டான், அத்தோட அவ்ளோ பெரிய தப்பு பண்ணின என்னையவே நீ மன்னிச்சுட்ட” என்றவரின் நினைவுகள் கடந்த காலத்திற்குள் செல்ல, சாரதாவும் மௌனமாய் அதற்குள் புகுந்தார்.

*************

சாரதா மிடில் கிளாஸ் வீட்டுப்பெண், தாய் இல்லாத பிள்ளை, தந்தையின் செல்லம் அதனால் கொஞ்சம் அதிகமாகவே வழங்கப்பட்டது.

தந்தையின் செல்வமாக வலம்வந்தவருக்கு, மறுக்கப்பட்டது என்று ஒன்றுமே கிடையாது, கேட்டவை அனைத்தும் உடனே கிடைத்துவிடும் அருமையான வாழ்வு. ஆனால் சாரதா தேவையில்லாத பொருட்களை வாங்கி குவிக்கும் ஆள் இல்லை. ஆதலால், அவரின் தேவைகள் அனைத்தும் அவரின் பயன்ப்பாட்டிற்காக வாங்கப்படுவது மட்டுமே.

படிப்பிலும்  படு சுட்டி, சிறு வயது முதலே அந்தச் சிவப்பு பேனாவின் மீது தீராத காதல் சாரதாவிற்கு, ஆசிரியர் ஆக வேண்டும் என்பதை தன் வாழ் நாளின் இலட்சியமாய் கொண்டு இன்று இங்கே நிற்கிறார். தற்போது,  கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார்.

வாழ்வு அழகாகவும், அருமையாகவும், தெளிந்த நீரோடை போலவும் சென்று கொண்டிருந்தது. அவரைப் பார்க்கும்வரை.

 ரவி, அந்தக் கல்லூரியில்  சீனியர் மாணவர். ரேகிங் சிஸ்டம் அப்பொழுது அங்கங்கே நடந்துக்கொண்டிருந்தது. ஆனால் ஆசிரியரின் கண்டிப்புக்கு பயந்து தங்களது ஜூனியர்களை சந்திக்கும் நிகழ்வுகளைத் தள்ளி வைத்திருந்தனர் சீனியர்கள்.

அன்று அனைத்து பேராசிரியர்களுக்கு உடனடி மீட்டிங் என்று சுற்றரிக்கை வரவே, குஷியாகி போனவர்கள் அவர்கள் வர மதியம் ஆகும் என்பதையும் தெரிந்துக்கொண்டு அன்றே, தங்களது ஜூனியர்களின் வகுப்பறைக்குப் படை எடுத்துவிட்டனர்.

தடாலடியாக உள்ளே நுழைந்தவர்களை கண்டு இவர்கள் மிரள, ஆனால் சாரதா மட்டும் கண்களில் குறும்போடு அனைவரையும் பார்த்தார்.அங்கிருந்தவர்களை பார்த்த ரவி “சீனியர்ஸ் வந்திருக்கோம், வணக்கம் வைக்கணும்னு தெரியாதா?”என்று அதட்டிட.

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டவர்கள் ‘வணக்கம்’ என்றனர் சத்தமாக. 

“நிறுத்து நிறுத்து, இப்டிதான் வணக்கம் சொல்லுவாங்களா? ஆமா, ஆனா நாங்க வணக்கம் சொல்லச் சொல்லலியே… வணக்கம் வைக்கணும்” என்றார்.

“எங்க வைக்கணும் சீனியர், டேபிளுக்கு மேலயா? இல்லை டேபிளுக்கு கீழயா?”என்று கண்களைச் சிமிட்டினார் சாரதா.

“என்ன கொழுப்பா? நீ இங்க வா” என்று அவர் சாரதாவை அழைக்க.

“டவுட்டு தானே கேட்டேன், உங்களுக்குத் தெரியாட்டி தெரியாதுனு சொல்ல வேண்டிதானே”என்றார் துடுக்காக.

“இல்லையே உனக்குச் சொல்லிதர தான் கூப்பிடுறேன், இங்கே வா”என்றழைக்க.

அமைதியாய் வந்து நின்றார் அப்பொழுது “பாஸ், இவங்களுக்கு நான் சொல்லித் தர்றேன்”என்று வந்து நின்றார் அறிவழகன்.

ரவியும் தகர்ந்து விட, சாரதாவின் பக்கத்தில் வந்தவர், “குனிந்து வணக்கம் வை” என்றார்.

அவரும் பண்ண, “இன்னும் குனி “என்று அவருக்குக் கட்டளைகளை அவர் தொடர்ந்து  இடக் கடுப்போடு சற்று நல்லாவே குனிந்தவரின் டாப்ஸ் லூசாக இருக்க, அது அவரின் மார்போடு ஒட்டியில்லாது அந்த இடத்தையும் மறைக்காது முன்னே வந்துவிட.

விளையாட்டுத்தனமாக அவர் இதைச் செய்ய வைக்க, அவரின் பார்வை தரையை மட்டும்  பார்த்தபடி இருந்தது. ஆனால் தன்நிலையை கவனித்தவர் சட்டென மேல பார்க்கத் தயாளனின் பார்வை தவறாய் புரிந்துக்கொண்டவரும் யோசியாது ‘பளார்’ என்று அவரை அறைந்திருந்தார்.

ஒரு நிமிடம் அனைவருமே ஸ்தம்பித்து இவர்களைப் பார்க்க அறிவழகனுக்கோ ஒன்றும் புரியாத நிலை, ‘இங்கே என்ன நடந்தது’ என்று அவர் யோசிக்க, வாயிற்குள் அவரைத் திட்டியவரும்  சட்டெனத் திரும்பி வெளியே சென்றுவிட்டார்.

அவமானம் ஆம், ஜூனியர், சீனியர் அனைவரின் முன்பும். ஆனால் அது எதற்கென்று தான் அவருக்குப் புரியவில்லை. கோபம் அளவுக்கு அதிகமாய் வந்தது, ஆத்திரம், கோபம் அனைத்தும் ஒன்று சேர்ந்து வன்மமாய் மாற அது அப்படியே சாரதா மேல் திரும்ப. அது பழி வாங்க துடித்தது.

************

அன்றைய நிகழ்விற்கு பின் அவரை எங்கும் காணவில்லை சாரதா, அத்தோடு அன்றே சீனியர் மாணவிகள் இவரிடம் என்ன நடந்தது என்று கேட்டிட இவரும் கூற ‘நீ தவறாய் புரிந்துக்கொண்டிருப்பாய் அவர் அப்படி பட்டவர் அல்ல’ என்று அனைவரும் ஒன்று போலே உரைக்க.ஏனோ மனதில் ஒரு நெருடல் அன்று எல்லார் முன்னிலையிலும் அடித்திருக்க கூடாதோ என்று.

அவரை மறுமுறை பார்த்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இவர் நினைக்க, விதி வேறொன்றை நினைத்திருந்தது.

ஒருமுறை அந்த ரவியை தனிமையில் காண நேர்ந்தது அப்பொழுது அவரிடம் அறிவழகன் பற்றி இவர் கேட்க ‘அவன் அன்றிலிருந்து கல்லூரிக்கு வருவதில்லை’ என்கிற செய்தி கிட்டியது.

மிகவும் வேதனையாகி போனது சாரதாவிற்கு. அவரின் அட்ரஸை வாங்கியவர் அவரைச் சந்திக்க கிளம்பிவிட்டார். அது தான். ஒரே முறை சந்தித்த நபரை மறுமுறை தனியாகச் சென்று பார்க்க நினைத்தது.அதுக்காக அவர் சும்மா ஒன்றும் சென்று விடவில்லை. அவரைப் பற்றி விசாரித்தவரையில் தவறாக எதுவும் கூறப்படவில்லை அதை நம்பி சென்றார். கோபமும் வன்மமும் ஒரு மனிதனை மிருகம் ஆக்கும் என்பதை மறந்து.

அவரின் இல்லத்து முகவரி அது. அங்கு அவரின் தாய், தந்தை, தமக்கையோடு அவர் வசிப்பதாகத் தெரிந்துக்கொண்டே சென்றார், அனைவர் முன்னிலையிலும் மன்னிப்பு வேண்ட, அவரின் துரதிஷ்டம் அன்று அனைவரும் வெளியூர் சென்றிருந்தது தான்.அவர் இவரைக் காணவந்தவர் காலிங் பெல்லை அடிக்க.

கதவைத் திறந்தவரும் இவரைக் கண்டு.பின், முகத்தில் எதுவும் காட்டிக்கொள்ளாது உள்ளே சென்று விட. ஒரு நிமிடம் தயங்கி நின்றவரும் பின் உள்ளே செல்ல, வீட்டின் ஹாலில் அவர் அமைதியாய் அமர்ந்திருக்க, அவரின் முன் சென்று நின்றவர்.

“சா…ரி…”என்று கேட்டிட, அவரை நிமிர்ந்து பார்த்தவரும் அமைதியாய் எழுந்து போய்விட.இவர் குழம்பி போய்ப் பார்க்க.

வரும்போது கையில் ஒரு கப் காபியோடு வந்தார் அறிவழகன் “மன்னிக்கணும்னா இந்தக் காபியை குடிங்க “என்றார் புன்னகையுடன்.

அவர் மறுக்க முடியாமல் தவிக்க, “ஓ… இன்னும் நம்பிக்கை வரலியோ…”என்றவர் பின் அந்தக் காபியை ஒரு சின்ன டம்ப்ளரில் ஊற்றி அவர் குடித்து காண்பிக்க.

மெல்லிதாய் சிரித்தவர் “நம்பாமலாம் இல்லைங்க சீனியர், எனக்குக் காபி பிடிக்காது…”என்றார் புன்னகையுடன்.

“ஓ சாரி, டீ ஓகே வா” என்று அவர் கேட்க.பரவாயில்லை அந்தக் காபியையே கொடுங்க என்று வாங்கி கொண்டவரும் ஒரு மிடறு குடிக்க.

“காபி நல்லா இருக்கா?”என்றவரின் கேள்வியில்.

“இதற்கு முன் காபி குடித்தது இல்லையே, இந்தக் காபியோட டேஸ்ட் எப்படி இருக்கும்னு தெரியலையே… நம்ம காலேஜ் பக்கத்தில் உள்ள நாயர் கடையில் காபி நல்லா இருக்குமாம் அங்க போய்க் குடிச்சு பார்த்திட்டு இது எப்படினு சொல்றேன்…”என்றார் சீரியஸாக.

சிரித்து விட்டார் அறிவழகன் “சும்மாவாவது நல்லா இருக்குனு சொல்லி இருக்கலாம்…”என்றவருக்கு.

“சும்மா நல்லாவே இருக்கு”என்று அவர் கொடுத்த பதிலில் இருவருமே சிரித்து விட்டிருந்தனர்.

அதன்பின் அவர்களுக்குள் நல்ல நட்பு தொடர்ந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காது, அவருக்காக இவர் சாப்பாடு எடுத்துச் செல்வதும் வாடிக்கை ஆகிற்று.

நன்றாகப் போய்க் கொண்டிருந்தது…ரவி அவரிடம் வந்து தன் காதலை சொல்லும் வரையில்…

முதல் முறை சாரதாவை அவர் பார்த்தபோதே காதல் வயப்பட்டிருந்தார். ஒரு நல்ல நாளில் அதைச் சாரதாவிடமும் உரைத்தார்.அவரின் மனதில் அறிவழகன் தான் இருந்தார் ஆனால் அதை ரவியிடம் மறைத்து ‘தான் வேறு ஒருவரை காதலிப்பதாக மட்டும் உரைக்க’ அதைக் கேட்ட ரவியும் சாரி, எந்த உதவினாலும் கேளுங்க என்று விலகிக்கொண்டார்.

இவர்கள் பேசுவதை கண்ட அறிவழகனிற்கு பொறாமை தீக்கனன்றது. ரவியின் தோழன் ஒருவனிடத்தில் அவன் ‘என்ன என்று கேட்க?’ அவருக்குக் கிடைத்த பதில் தான் கசந்தது.

அதைவிட, திரும்பி வந்த சாரதாவிடம் அவர் ‘என்னவென்று கேட்க?”

“ஒன்றுமில்லை”என்ற அவரின் பதில் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் ஆனது.

அது மறுபடியும் பழைய வன்மத்தையும் சேர்த்து எழுப்பி விட்டது, அதன் விளைவுகளைச் சாரதா தாங்குவாரா?

************