நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான் -19

அறிவழகனுக்கு கோபம், ஆத்திரம், வன்மம் எல்லாம் ஒருசேர வந்தது. சாரதா தன்னிடமிருந்து அவருடைய காதலை மறைப்பதாக அவர் நினைத்தார். 

 

அதன்பின் சாரதா வழக்கம் போலவே நடந்துக்கொண்டதால், ‘நாம் தான் தவறாய் புரிந்துக்கொண்டோமா’ என்று நினைத்து அறிவழகனின் கோபம் மற்றும் வன்மமும் சற்றே மட்டுப்பட்டிருக்க.

 

இப்படியே ஒரு வாரம் கழிய…

 

ஒரு அவசர வேலையாகத் தன் குடும்பத்தோடு வெளியூர் சென்றிருந்தார் அறிவழகன்.

 

 இந்தச் செமஸ்டருக்கான பிராஜக்ட் சம்பந்தமாக ரவியின் உதவியை நாடியிருந்தார் சாரதா, அதற்கான காரணம் அவரின் தற்போதைய பிராஜெக்டும் இவரின் பிராஜெக்ட்டும் ஒத்து போனதால் மட்டுமே. ஒரு மாதம் கெடு மட்டும் பிராஜெக்ட் முடிக்க வழங்கப்பட்டதால் அவசர அவசரமாக அவர் அந்த வேலைகளில் இறங்கினார்.

 

அன்று, தகவல் சேமிப்பதற்காக ரவியுடன் வெளியே சென்றிருந்தார் சாரதா.

அறிவழகன் திரும்பி வந்தவுடன், கல்லூரிக்கு வந்தவர், சாரதாவை தேட, ‘அவர் ரவியுடன் வெளியே சென்றிருக்கிறார்’ என்று தகவல் மட்டுமே கிடைக்க கொதித்துவிட்டார் அறிவழகன்.

 

மனதின் ஆழத்தில் புதைந்து கிடந்த கோபமும், வன்மமும் இம்முறை அதிகமாகவே மேல் எழும்பியது, கல்லூரி முடிந்தும் காத்திருந்தார் அவர்களின் வருகைக்காக.

 

சரியாக ஆறு மணிபோல் வந்தார்கள் இருவரும், இவரைக் கண்டதும் கண்களில் ஒரு மின்னலோடு ஓடி வந்தார் சாரதா, காதல் கொண்டவர் அல்லவா, பல நாட்களுக்குப் பின் அவரைக் கண்டதால் ஒரு பரவசம் அவரிடத்தில்.

 

அதைக் கண்ட அறிவு ‘இன்று இவளிடத்தில் எக்ஸ்ட்ரா உற்சாகம் தெரிகிறதே, காதலனுடன் வெளியே சென்றதால் இருக்கும்’ என்று  அதனையும் தவறாய் நினைத்தது பேதை மனம்.

 

எங்கே சென்றாய்? என்று கேட்பதற்கு பதில், “ஒரே ஜாலி தான் போல” என்றார் இரு பொருள் பட.

 

அதை ஒருகோணத்தில் மட்டுமே எடுத்துக்கொண்ட சாரதாவும்.

 

“ஆமாம் அழகா (சமீபமாக அழகா என்று அவரை அழைத்துப் பழகியிருந்தார் சாரதா, பெண்களைப் பொறுத்தவரை எப்பொழுது தன்னவனை தான் மட்டும் அழைக்கும்படியாக ஒரு பெயர் வேண்டும் என்று நினைப்பார்கள்) காலையிலே போனோம், லன்ச் சாப்டோம், ஐஸ்க்ரீம் சாப்டோம், ஜூஸ் குடித்தோம்” என்றார் கண்கள் விரிய.

 

இங்கே இவர்,’ ஆம் பிராஜெக்ட்காகத் தகவல் சேமிக்க சென்றோம் என்று சொல்லாமல் உண்டது விளையாடியது என்பதை கூறியது வினையானதோ.

 

சாரதாவை பொறுத்தவரையில் அவரின் காதல் அது அவரின் அழகன் மேல் மட்டுமே, அவரின் மேலிருந்த காதலை காட்டிலும் அவரின் மேலிருந்த நம்பிக்கை ‘என்னை அவன் தவறாக நினைக்கவே மாட்டான்’என்பதாகவே இருந்தது.

 

அவர் அன்று நடந்த அனைத்தையும் ஆர்வத்தோடு விவரிக்க, அதைக் கவனிப்பது போல் காட்டிக்கொண்ட அறிவழகனின் நிலையோ உடல் மட்டுமே அங்கே இருந்தது, மனது வேறெங்கோ இருந்தது.

 

அவரின் அமைதியை கண்ட சாரதா “என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?”என்று அக்கறையுடன் விசாரிக்க.

 

“ம்ப்ச், ஒன்றுமில்லை…”என்றார் சலிப்பாக.

 

“இல்லையே, என் அழகன் இன்று சரியில்லையே…”என்று கூறியவர் என் அழகன் என்று அவரைக் குறிப்பிட்டதை நினைத்துத் தன் நாக்கை கடித்துக்கொண்டார்.

 

எங்கே அவர் கண்டுக்கொள்வாரோ என்று அழகனை சாரதா பார்க்க. அவரோ “ஒன்னுமில்லைன்னு சொன்னா விட்டுத்தொலையேன், ஏன் உசுரை வாங்குற”என்று எரிந்து விழுந்திருந்தார்.

 

சாரதாவின் மனம் அதில் அடிவாங்கியது, முதல் முறை அவரது காதலை அவரின் அவனிடத்தில் உரைத்தார், ஆனால், அதை அவர் கண்டுக்கொள்ளவுமில்லை. இருந்தும் ‘அவருக்கு ஏதோ பிரச்சனைபோல அதான் இப்படி பேசிட்டான்’என்று தன்னை தானே சமாதானமும் பண்ணிக்கொண்டார் பேதை பெண்.

 

சாரதாவை கடிந்துக்கொண்டு சென்றவரால் நிம்மதியாக இருக்கமுடியவில்லை. ஏனோ, மனம் வலித்தது. தன் பொருள் தன்னை விட்டுப் போகப் போகிறது, அவள் எனக்கு இப்போதெல்லாம் நேரம் ஒதுக்குவதில்லை, அவளுக்கு இப்போது நான் முக்கியமில்லை, எனப் பல்வேறு சிந்தனைகள் பூதமாய் வந்து அவரைத் துரத்தியது, பொய்மையை உண்மையாய் பாவித்து ஒரு பொய்யின் மீது வன்மம் கொண்டு பொய்யை அவரே உண்மை ஆக்கிவிட்டாரோ…?

 

மறுநாள் காலேஜ் வந்ததும் சாரதாவை தேடி செல்ல ரவியுடன் சாரதா அமர்ந்திருக்க அதைப் பார்த்தவர் பார்வையில் கனல் கொஞ்சம் கொஞ்சமாய் ஏறியது. அவர்கள் இருவரும் தங்களது  கருத்துக்களை  நியாயப்படுத்தி விவாதித்துக் கொண்டிருந்தனர்.

 

சாத்தான் புகுந்த மனம் அதையும் தவறாகவே சிந்திக்கவைத்தது. ரவியுடன் பேசியபடியே திரும்பிப் பார்த்த சாரதா வழக்கம்போலவே ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்து, கைகளால் காத்திருக்கும்படி சொல்ல.

 

அதில் கோபத்தின் உச்சிக்கே சென்றவர், திரும்பி நடக்க ஒருவனின் மேல் மோதி நிற்க, அவனை அடிக்கசென்று விட்டார் அறிவழகன்.

 

அவரைத் தடுத்தவன்,”எதுக்கு இப்போ அடிக்குற? ” என்றான் கோபமாக.

 

“எதுக்கு டா என் மேல மோதுன”என்றார் இவரும்.

 

“ம், ஆசை, நீதான் என்மேல வந்து மோதின, வந்துட்டான் பேச”என்றான் அவன் கடுப்பாக.

 

“டேய், மரயாதையா பேசு” என்று கைநீட்டி எச்சரிக்க.

 

“என்ன கிழிச்சிடுவ, உன்னை ஒருத்தி கைநீட்டி அடிச்சா, அவளை அடிக்க உனக்கு வக்கில்லை, நேத்து நீ, இன்னைக்கு வேறொருத்தன்னு இருக்கா அதையும் கேக்க துப்பில்லை, வந்துட்டான் மரியாதை கேட்டு”என்றான் நக்கலாக.

 

அவனின் வார்த்தைகளில் சினம் தலைக்கேற அவனின் மூக்கில் ஒரு குத்து குத்தி அவனைத் தாக்கியவர் விறு விறுவெனச் சென்றுவிட்டார்.

 

ரவியிடம் கூறிவிட்டு வந்து பார்த்த சாரதா அறிவழகனை காணாது தவித்து. பின், ‘இது வேலைக்கு ஆகாது அழகனிடம் நம் காதலை சொல்லிடவேண்டியதுதான்’ என முடிவும் எடுத்துக்கொண்டார்.

 

வீட்டிற்கு வந்தததும் அவரது அறைக்குச் சென்று, கதவை அடைத்துக்கொண்ட அறிவழகனின் சாத்தான் மனது ஒரு கேவலமான திட்டத்தை வகுத்ததது.

**************

 

இன்று பிராஜெக்ட் சப்மிஷன் டே என்பதால் சற்றே பரபரப்பாய் இருந்தார் சாரதா, இன்றே தன் காதலை கூறவும் முடிவெடுத்தவர். வழக்கதுக்கு மாறாக இன்று புடவை அணிந்துக்கொண்டவர், தலையில் கொஞ்சம் மல்லிகை, கழுத்தில் மெல்லிய சங்கிலி, காதிற்கு ஜிமிக்கி, உதட்டில் தவழும் புன்னகை என்று தேவதையாய் இருந்தவரின் அழகிற்கு அழகு சேர்த்தது அவரின் இன்றைக்கான புது வெட்கம்.

 

அழகு பதுமையாகக் கிளம்பியவர் நேராய் பஸ் ஸ்டாப் வந்தவர், பேருந்திற்காகக் காத்திருக்க, வழக்கமான காத்திருப்புக்கூட நீண்டதாய் தெரியவே உதட்டைச் சுளித்தவர் அந்த ஏகாந்தத்தை கலைக்க விரும்பாது அமைதியாய் கனவுலகில் மிதக்க.

 

அவரின் முன் ஒரு வண்டி வந்து நின்றதை கவனிக்காது இரண்டு மூன்று முறை ஹாரன் அடித்ததும் இயல்புக்கு வந்தவரின் முன் நின்றார் அவர்.அவர் ரவி.

 

“நீங்களா? என்ன இங்க?” என்றார் சாரதா ஆச்சிரியமாக.

 

“நான்தான், இன்னைக்கு பந்த் சோப்பஸ் வராது” என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட.

 

“ஐயோ…,” என்று பதறினார் சாரதா இருக்காதா பின்ன, அவரின் இத்தனை நாள் உழைப்பல்லவா…

 

“ஆமாம், அதான் உன்னைக் கூட்டிட்டு போக வந்தேன், என்றார் ரவி.

 

அவர் யோசிக்க “தயங்காதே, இதில் எந்த உள்நோக்கமும் இல்லை, உன் உழைப்பு வீணாகிட கூடாதுனு தான் வந்தேன், என்னை நம்பு “என்றார்.

 

அவரின் தயக்கம் இன்னும் அவரை விட்டுப் போகவில்லை “நம்பிக்கை இல்லைன்னா வேணாம்”என்று அவர் திரும்புகையில்.

 

“இருங்க வரேன்” என்று புறப்பட்டுவிட்டார் சாரதா.

 

கல்லூரியில் காத்துக்கொண்டிருந்த அறிவழகனிற்கு இவர்கள் இருவரும் ஒன்றாய் வந்ததுக்கூட பரவாயில்லை, வண்டியில் வந்தது தான் பற்றிக்கொண்டு வந்தது.

 

‘இருக்குடி உனக்கு”என்று மனதில் சூலுரைத்துக்கொண்டவர்.

 

“வா சாரு”, என்று தன்மையாய் அழைத்தார்.

 

தன்னவன் தன்னை சந்தேகிக்க மாட்டான் என்று இவர் நம்பியது வீண் போகவில்லை என்று மகிழ்ந்தார் அந்தப் பேதை.

 

அவரிடம் நின்று பேசபோனவரை “வா போகலாம்”என்று கூட்டிச்சென்று விட்டார் ரவி, காரணம் அவர்களின் கடைசி நேரத்து உரையாடல் இன்னும் முடிக்கப்படாமல் இருந்ததால். அவசரம் புரிந்து அவரும் சென்று விட.

 

‘போ…போ…’ என்று மனதில் வன்மமாய் நினைத்துக்கொண்டார்.

 

அவரின் திட்டப்படி, முதலில் கல்லூரி முதல்வருக்கு ஒரு அழைப்பு வந்தது அதில் ‘ரவியின் தாயார் உடல்நிலை மோசம்’என்று கூறி செய்தி வரவே, அதை உடனே ரவியிடம் பகிர்ந்துக்கொண்டனர். அவரும் என்னவோ, ஏதோ என்று பதறிக்  கிளம்பிவிட.(அப்பொழுதெல்லாம் தொலைப்பேசி கிடையாது, ஒரு சிலர் என்று ஏன் கைகளை விட்டு எண்ணிவிடலாம் அத்தனை இடங்களில் மட்டுமே தொலைப்பேசியிருந்தது)

 

அவர் கிளம்பியதும் சாரதாவிடம் வந்தவர், “வா உணவு உண்ண போகலாம்”என்றழைக்க.

 

மறுக்க முடியாது தவித்தவர், பின்,” இதோ வருகிறேன்” என்று கூறி சென்றுவிட்டார்.

 

சரியாக அரைமணி நேரம் கழித்து வந்தவர், “கிளம்பலாம்” என்றார் சோர்வாக.

 

அவரின் சேர்வை தவறாய் எடுத்துக்கொண்டது மனது மறுபடியும், பிராஜெக்டை வைக்கச் சென்றவரிடம் பல கேள்விகளைக் கேட்டுப் பேராசிரியர்கள் திணறடிக்க, பயத்தில் சில கேள்விகளுக்கு விடை தெரிந்தும் கூற முடியாது அவர்களின் திட்டுகளையும் பெற்று வந்ததால் இந்தச் சோர்வு.

 

ஒரு உயர்தர ஹோட்டலுக்கு அழைத்து வந்தவர், முதலில் உணவை வரவழைத்து. அவருக்கும் கொடுக்க மனமே இல்லாது கொஞ்சமாய் உண்டவரும்.அமைதியாகவே இருக்க.

 

அவரின் அமைதியில் இன்னும் கடுப்பானவர்.பின், மெதுவாக இங்கு மேலிருந்து பார்த்தால் அருமையாய் இருக்குமாம் மொத்த ஊரும் தெரியுமாம், வா சென்று பார்ப்போம் என்றழைக்க.

 

முதலில் மறுத்தவர் பின், மன அமைதிக்காக ஓகே சொல்ல அவரை இருபதாவது தளத்திற்கு அழைத்துச் சென்றவரும், பின், ஒரு அறையைத் திறக்கப்போக. பயந்த சாரதா “இங்க எதுக்கு?” என்றார் பயம் கலந்த குழப்பத்தில்.

 

“நான் தான் சொன்னேனே மேலிருந்து பார்த்தால் அழகாய் இருக்கம்ணு”என்றார்.

 

“அதுக்காக இங்கு ஏன் வந்திருக்கிறோம்?”என்றார் மறுபடியும்.

 

“ஹே, இது கண்ணாடி அறை நல்லா தெரியும் ஒரு பத்து நிமிஷம் பாத்துட்டு போய்டலாம்” என்று விட. அதை நம்பி, அமைதியாய் அவரும் உள்ளே செல்ல, கதவைப் பூட்டியவர். அவரைப் பின் தொடர.

 

உண்மையில் அந்த வியூவ் அழகாகவே இருந்தது, அதை அவரும் ரசித்தார், மனது சிறிது சுலபமாகியது.பக்கத்தில் அரவம் கேட்டு அவர் திரும்பிப் பார்க்க.

 

அங்கு அறிவழகன் கைகளில் பூங்கொத்துடன் நிற்க, ஆச்சிரியத்துடன் அவர் அவரைப் பார்க்க, “நான் உன்னை விரும்புகிறேன் சாரதா”என்றார் அறிவழகன்.

 

சாரதாவிற்கு தலை சுற்றாத நிலை, சந்தோஷத்தில் தத்தளித்தார். அவர் கூற நினைத்த வார்த்தைகள் அவரிடமே உரைக்கப்பட அது சந்தோஷத்திற்கும் ஒரு படிமேல் அப்படித்தான் இருந்தது சாரதாவிற்கு.

 

கண்களில் கண்ணீரோட அதை அவர் வாங்க நினைக்கையில் அறிவழகனின் வார்த்தைகள் சாட்டையாய் இறங்கியது.

 

“இப்படி தான் அவனும் உனக்குக் காதலை சொன்னானா?” என்றார் வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்து.

 

கண்களில் அதிர்ச்சியோடு சாரதா “யாரை…”என்றார் திக்கியபடி.

 

“நடிக்காத டி, இன்னும் நடிச்சு ஏமாத்தாத, இன்னமும் நான் கேனையில்லை உன்னை நம்ப…”என்றார் ஆத்திரத்தோடு.

 

“நீங்க என்ன சொல்றீங்க, அழகா” என்றார் கண்ணீரோடு.

 

“அடச்சீ வாய மூடு, என் பேர சொல்லாத உனக்கெல்லாம் வெக்கமே இல்லையாடி, எவன் கூப்பிட்டாலும் போய்டுவியா? அதுலையே தெரியுது உன் லட்சணம்” என்றார் வார்த்தைகளில் விஷம் தேய்த்து.

 

“யார் கூப்பிட்டாலும் போய்டுவேனா? என்ன உளருறீங்க, நீங்கன்னு தான் வந்தேன்”என்றார் ஆதங்கத்தோடு.

 

“ஓஹோ, நான் யாரு உனக்கு, உன் காதல் இருக்கும்போதே என்கூட வர”என்றார்.

 

சாரதாவினால் இதை எதையும் கேட்கமுடியவில்லை, கண்களில் கண்ணீர் வடிந்துக் கொண்டே இருந்தது.

 

“இப்போ, நீ நான் சொன்னாலும் கேக்கணும்,” அந்த என்ன என்பதில் அழுத்தம் கொடுத்து “இல்லைனா உன்னைப் பிராஸ்ட்டிடுயூட்ன்னு போலீஸ்கிட்ட பிடிச்சுக்கொடுப்பேன்” என்றார் கேவலமாக.

 

சாரதாவிற்கு தன் காதைத் தன்னாலே நம்பமுடியவில்லை, ச்சேய், இப்படியொரு கேவலமான ஜென்மத்தோடு தான் இத்தனை நாள் இருந்தேனா, அதுக்கூட பரவாயில்லை இவனைக் காதலித்தேனா? தன்னையே வெறுத்தார் சாரதா.

 

************