நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான் -26

அவனின் அதிரடி தாக்குதலை எதிர்பாராதவள் அமைதியாய் காரில் ஏறி அமர்ந்துக்கொண்டாள்.

 

கையில் வலி எடுத்ததால் மிதமான வேகத்தில் கார் அந்த சாலையில் ஊர்ந்து செல்ல, காரில் ஒரு அசாத்திய அமைதி நிலவ, அந்த அமைதி இவனை வதைக்க எப் எம் ஐ ஆன் செய்தான் வழக்கம் போல். அதில்.

 

என்னை விட்டு செல்லாதே எந்தன் அன்பே

வேண்டும் உன் காதல் ஒன்றே

உன்னை மட்டும் நேசித்தேன் இது உண்மை

இன்னும் ஏன் இந்த ஊடல்

 

என் உயிர் காதலை உந்தன் காதோரம்

ஒரு முறையாவது சொல்ல நீ வேண்டும்

எந்தன் ஆசை முத்தங்கள் உன்னை சேருமோ

இல்லை காதல் யுத்தங்கள் இன்னும் நீளுமோ

 

உந்தன் கண்ணில் நீ சிந்தும் ஈரம் ஏனடி

நெஞ்சில் பாரம் வேண்டாமே என்னை பாரடி

 

என்ற பாடல் வரிகள் அவனின் மனநிலையை உரைக்க அவன் அவளை பார்க்க, சட்டென எப் எம் ஐ அனைத்தவள், ஜன்னல் வழியாக சாலையை நோட்டம் விட துவங்கினாள். இவனும் அவளை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு திரும்பிக்கொள்ள.

நேராக வீட்டை அடைந்தவன் முதலில் இறங்கி அவள் பக்கம் வந்து குடையை பிடிக்க.

 

அதை பிடுங்கி தூக்கி வீசியவள் , விறு விறுவென உள்ளே சென்று விட்டாள். அவள் போவதையே பார்த்தவன் இவனும் உள்ளே சென்று விட.

 

மழை வெளுக்க துவங்கியது தனதறைக்கு சென்ற ஆத்மியின் மனம் கதறி துடித்தது.

 

“ஏன்டா  என்னையும் காயப்படுத்தி, நீயும் காயப்பட்டுக்கிற, உன்னை நீயே ஏன் கஷ்டப்படுத்திக்கிற, என்னை அனுப்பிடு நான் போகிறேன்னு சொல்றேன் அதுக்கும் விட மாட்றா, உனக்கு என்ன தான்டா வேணும் என்கிட்ட இருந்து…” என்று கத்தியவள் அழ ஆரம்பித்துவிட்டாள்.உடையை கூட மாற்றாது அழுதழுது தூங்கிபோனவள் கதவை யாரோ தட்டும் சப்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தவள், மெல்ல போய் கதவை திறக்க, கையில் சூடான பாலுடன் தேவ் நிற்க அவனை இவள் கேள்வியாய் பார்க்க.

 

“மஞ்சள் கலந்த பால், மழையிலே நனைஞ்சு இருப்ப இதை குடி, நல்லது” என்றவன் டம்ளரை நீட்ட.

 

“பாலுல என்ன கலந்திருக்க?”என்றாள் அவனை கலங்கடிக்கவென.

 

அதற்கு தேவ் கோபம்கொள்ளாது “சர்க்கரை தான் பத்தலைனா சொல்லு போட்டுக்கொண்டு வரேன்”என்று கூலாய் உரைத்தவன் அவள் ஒரு நிமிடம் அசர அதை பயன்படுத்தி அங்கிருந்த மேசையில் பாலை வைத்து விட்டு ஓடிவிட்டான்.

 

அவன் சென்றதும் நினைவு வந்தவளாக தலையில் அடித்துக்கொண்டவள் “காமெடியாம் ச்சைய்,” என்றவள், அந்த பாலை கிட்டிக்கு ஊற்றி விட்டாள்.

 

‘இவனை புரிஞ்சிக்கவே முடியலையே, அப்போது நம்ம மேல தப்பிருக்குனு நினைத்து பழி வாங்குனான் அது லாஜிக், இப்போ நம்ம மேல தப்பு இல்லன்னு தெரிஞ்சு நம்ம மேல பாசத்தை காட்டுறான், ஒரு வேலை பாவ மன்னிப்பு கேக்குறானோ? இல்லையே இவனோட குணத்துக்கு நம்ம இவனை இவ்ளோ அசிங்கப்படுத்தியதற்கு போடி வெளியேன்னு சொல்லியிருக்கணுமே? ஏன் இவன் அப்படி சொல்லல, நம்ம கிட்ட என்ன எதிர்பார்க்கிறான்’ என்று ஆத்மியின் மனது பல விதமாக யோசிக்க.

 

***********

தனதறைக்கு வந்த தேவ்வின் நினைவுகள் தன்னவளை அவன் கடைசியாக  நேரில் சந்தித்த நிகழ்விற்கு  கூட்டிச்செல்ல இவனோடு நம்மலும் போவோமே.

 

கொல்கத்தாவில் வேலைக்கு சேர்ந்து சில மாதங்கள் முடிந்திருந்த நிலையில் சாரதாவின் நச்சரிப்பின் காரணமாகவும், தன்னவளின் நினைவுகள் அதிகம் வந்ததாலும் சென்னைக்கு பறந்து வந்தவன், முதலில் வீட்டிற்கு சென்று, அங்கு அறிவழகனோடு இருக்க பிடிக்காமல், உடனே கிளம்பியிருந்தான் அவனது பாவையை நோக்கி.

 

மாலை நேரம் மெல்ல மெல்ல இருள் சூழ, ஈரமான காற்று மேனியை குளிரவைக்க, மழை வரும் அறிகுறி,மெல்லிய மழை சாரல் ஒரு ரம்மியமான பொழுது.

 

அந்த பார்ட்டி ஹால் வெளியே உள்ள குளுமைக்கு சற்றும் குறையாத குளிரை பரப்பிக்கொண்டிருந்தது. பிறந்த நாள் விழா,ஆத்மிக்கு பிறந்தநாள் விழா வெகு கோலாகலமாக நடந்துக்கொண்டிருந்தது.

 

பிங்க் நிற சின்டரல்லா ஆடையில் அழகு பதுமையான நடந்து வந்தாள் ஆத்மி, அவளது அழகை ஒளிந்து நின்று ரசித்த நம் கள்ளனோ, அவளை காதலோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவளை சிறிது நேரம் பார்த்து ரசித்தவனோ, அங்கிருந்த ஒரு சிறுமியிடம் ஒரு கிப்டை  கொடுத்துவிட்டு சென்றிருந்தான்.அந்த சிறுமி அந்த பார்சலை ஆத்மியிடம் கொடுக்க, அதை பெற்றுக்கொண்டவள் “யார் கொடுத்தது?”என்று கேட்க.

 

அவளுக்கு எந்த பதிலும் கூறாத சிறுமி, ஓடிவிடவே, அந்த கிப்டை பார்த்தவளின் பார்வை ப்ரம் என்ற இடத்தில் பார்க்க அங்கே,

 

“என் காதலின் நாயகிக்கு  இன்று பிறந்தநாள்,

என்னை காதலிக்க வைத்த கன்னிக்கு இன்று பிறந்தநாள்,

என்னை இம்சிக்கும் இம்சை அரசிக்கு இன்று பிறந்தநாள்,

என்னை அடிமையாக்கிய ராணிக்கு இன்று பிறந்தநாள்”

 

என் காதல் நீ, உன் தேடல் நான், 

என் உலகம் நீ, அதில் உன் தேடல்  நான்,

அன்பே, தேடு என்னை தேடு, காலம் கணிகையில் உன் முன் வருவேன்!

  • உன் காதல் தேவன்.

 

அதில் லயித்தவளின் மனம் அழகாய் அதிர, யாராய் இருக்கும் என்று அவள் சுற்றும் முற்றும் தேட, அந்தோ பரிதாபம் யாரும் தென்படவில்லை. யாராய் இருக்கும் என்று பலவிதமாய் யோசித்தவள், ‘அவளது தோழிகள் யாரும் அவளிடம் விளையாடுகிறார்களோ’ என்று எண்ணினாள், ஆனால் அதை அவர்களிடம் கேட்க முடியவில்லை. இப்போதைக்கு அந்த பரிசை ஒளித்து வைத்தவள் கேக்கை வெட்டி அவளது பிறந்த நாளை கொண்டாடினாள்.

 

விழா முடிந்து வீட்டிற்கு வந்ததும், முதலில் அந்த பரிசை திறந்து பார்க்க, அதிலிருந்ததை கண்டு கண்கள் மின்ன அதை எடுத்தாள்.

 

தொலைப்பேசி ஒலியெழுப்பி தேவ்வினை கலைக்க, அதை எடுத்த பார்த்தவன் அதில் ஒரு பார்வேர்டு மெசேஜ் வர அதை படித்தான்.

 

“தொடக்கம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்ற ஒன்றும் உண்டு.

சண்டை என்ற ஒன்று இருந்தால் சமாதானம் என்ற ஒன்றும் உண்டு.

காதல் என்ற ஒன்று இருந்தால்

ஊடல் என்ற ஒன்றும் உண்டு”

மாறும் மாற்றம் ஒன்றே மாறதது.

 

ஏனோ அவனிற்கு அது இப்பொழுது தேவையாக இருந்தது, சில நேரங்களில் அப்படித்தான் ஒரு விஷயத்தை நாம் பலமுறை படித்திருப்போம், அதுவே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நமக்கு தேவைப்படும்போது அதை படிக்கும்போது அது தரும் ஆறுதல் வார்த்தைகளால் வடிக்க முடியாதது.அப்படித்தான் தேவ்விற்கும் இருந்தது.

 

அப்படியே உறங்கி போயிருந்தான் தேவ், நேற்றை போல் இன்றும் அவனது கைகளுக்கு மருந்து போடப்பட்டது.

 

*************

மறுநாள் காலை.

 

காலை கண் விழித்த  ஆத்மிக்கு தலை வலி எடுக்க ஆரம்பிக்க, கிட்சன் சென்று காபி குடிக்கலாம் என்று அவள் செல்ல,அங்கு ஏற்கனவே தேவ் இருக்க, அவனை பார்க்க பிடிக்காதவள் வெளியேற நினைக்க “ஒரு நிமிசம்”என்று தேவ் தடுக்க.

 

அதை கண்டுக்கொள்ளாது அவள் முன்னேற, அவளுக்கு முன் சென்று வலியை மறித்தவன்.”உன் கூட பேசணும்”என்றான்.

 

“எனக்கு உன் கூட பேச வேண்டாம்”என்றாள் அவள் கோபமாக.

 

“ஒரு நிமிஷம்,நான் சொல்றதை கேளேன்” என்றான் அவன்.

 

“எதுக்கு டா கேக்கணும், நீ சொல்றதை நான் எதுக்கு கேக்கணும், கேக்க முடியாது, பேசாம போய்டு” என்று நடக்க ஆரம்பித்துவிட்டாள்.

 

வேற வழி இல்லாத அவன் அவளது கை பிடித்து தடுக்க.அதில் கடுப்பானவள் “பொறுக்கி நாயே”என்று அவன் கன்னத்தில் ஒன்று வைத்திருந்தாள். அவளது அறையில் கண்ணம் எரிய அவளை வலியோடு நோக்கினான் அவன்.

 

அவளோ, “தொடாதன்னா, உனக்கு புரியாதா, நீ தொட்டா எனக்கு உடம்பெல்லாம் மிளகாய் தேச்ச மாதிரி எரியுது”என்றாள் வெறுப்புடன்.

 

“இல்லை… நீ நிக்கலை அதான் உன்னை தடுக்க”என்றான்.

 

“தடுக்குறியா? எதுக்கு? உன்கூட பேச பிடிக்கலனு சொன்னேன்ல,அப்போவும், இப்பவும் நீ மாறவேயில்லை, உனக்கு உன் தேவை தான் முக்கியம், ச்செய் அசிங்கமா இல்லை”என்றாள் அவள்.

 

“ம்ப்ச், நீ உன் இஷ்டப்படி இங்க இருந்து போகலாம்,அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்”என்றான்.

 

“எதுக்கு நான் போகணும்…நான் போக மாட்டேன்,அன்னைக்கு என்னை விடுனு சொன்னேனே நீ விட்டியா? எதேதோ பேசின, நம்பிக்கை புடலங்காய்னு, இன்னைக்கு என்னாச்சு? ஓ அவமானமா இருக்கா? நேத்து உனக்கு நடந்தது.இருக்கணும் அதுக்கு தானே அப்படி பண்ணேன்”என்றாள் அவள்.

 

அவன் மெல்லிதாய் சிரிக்க, அதை கண்டு கடுப்பானவள்.

 

“இப்போ எதுக்கு சிரிக்குற, எப்படி உன்னால சிரிக்க முடியுது, எனக்கு பத்திக்கிட்டு வருது”என்றாள் தேவ்வின் மில்கி.

 

“இல்லை, இப்போவும் எனக்கு நம்பிக்கை இருக்கு, என் நம்பிக்கை ஒரு சதவிதம் கூட குறையல”என்றான் தேவ்.

 

“அப்போ எதுக்கு இப்போ போக சொல்ற”என்றாள்.

 

“நீ கஷ்டப்படுவன்னு தான்”என்றான் 

 

இப்பொழுது சிரிப்பது இவளது முறை ஆகிற்று “நான் கஷ்டப்படுறதை உன்னால பார்க்க முடியலையா? நல்ல காமெடி, உன்னை என்னைக்கு என் வாழ்க்கையில் பார்த்தேனோ அன்றிலிருந்தே கஷ்டம் மட்டும் தான் அனுபவிக்குறேன், இன்னும் சொல்லனும்னா அந்த கஷ்டத்தை கொடுத்தவனும் நீதான் இப்போ நீயே வந்து இப்படி சொல்றது எனக்கு வேடிக்கையா இருக்கு”என்றாள் அவள்.

 

“உண்மை தான், அப்போ நடந்தது எதுனாலன்னு உனக்கு நல்லாவே தெரியும், முடிந்த கதையில் நடந்ததை என்னால் மாற்ற முடியாதே, அதனால் இப்போ மாற்றலாம்னு நினைக்கிறேன்”என்றான்.

 

“நீ ஒன்னும் மாற்ற வேண்டாம், போதும் எல்லாம் போதும்! கண்டிப்பா நான் போறேன், உன்னால என்னை தடுக்க முடியாதபடி போவேன்…”என்றாள் அவள் ஆக்ரோஷமாக.

 

அவன் அமைதியாய் இருக்க.

 

“நீயே போன்னு சொல்லுவா, அன்னைக்கு சொன்ன அதே காரணத்தை சொல்லி என்னை மறுபடியும் வரவைக்க மாட்டன்னு என்ன நிச்சயம்?”என்றாள் அவள்.

 

“நீ என் வாழ்க்கையில் இருக்கணும்னு நான் நினைச்சா, அதை கண்டிப்பா செய்வேன் அதுக்கு எந்த காரணமும் தேவையில்லை அது உனக்கே தெரியுமே, அதே நான் தான் உன்னை போக சொல்றதும், எதுவா இருந்தாலும் அதை நான் நினைக்கணும்”என்றான் அவன் அழுத்தமாக.

 

அதில் கொதி நிலைக்கு சென்றவள்”அத தான் டா சொல்றேன், நீ யாரு முடிவு எடுக்க? நீ முடிவு எடுக்குறது தான் எனக்கு பிடிக்கலை, உன் அகங்காரம்,உன் திமிர் , இது தான் டா நான் அடக்கனும் நினைக்கிறேன்”என்றாள்.

 

” நீ சொல்றதுலாம் எனக்கு இருக்கு, இப்பவும் இருக்கு அதை உன்னிடம் மட்டும் நான் காட்டுறது இல்லை அது உனக்கும் தெரியும்”என்றான் அவன்.

 

அவள் ஏளனமாக தன் உதட்டை சுழிக்க, இதை எல்லாம் கவனித்துக்கொண்டிருந்த சாரதா.

 

“போதும் டா, அன்னைக்கு சொன்னோம்ல எல்லாரும் சொன்னோம் அவளை போக விடுனு, அன்னைக்கு நீ தான் அடம்பிடிச்ச, அவளை வலுக்காட்டாயமாக இருக்க வச்ச, இப்போ போக சொல்ற?” என்றார் சாரதா.

 

“அது தான் சாரதாம்மா, இவனுக்கு என்ன பிரச்சனை, நினைச்சு நினைச்சு பேசிட்டு இருக்கான், இவனுக்கு என்ன வேணுமாம்?”என்றாள் ஆத்மி.

 

“ஆத்மி உன் மனசு என்ன சொல்லுதோ அதை பண்ணு, உன் விருப்பம் தான், யாரு சொல்றதையும் நீ கேட்கவேண்டாம்”என்றார் சாரதா.

 

இதில் எதிலும் பங்கெடுக்காது அமைதியாய் இருந்தார் அறிவழகன்.சிறிது நேரம் யோசித்த ஆத்மி.

 

“நான் போக மட்டேன் சாரதாம்மா, அதுவும் இவன் சொல்லி கண்டிப்பா போக மாட்டேன், இவன் எதற்கு என்னை போக சொல்றான்”என்றாள் அவள்.

 

அதற்கு மேல் அங்கே நிற்காமல் சென்று விட்டான் தேவ், அவன் போவதை பார்த்த மூவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க. அன்றைய நாளின் காட்சிகள் யாவும் மூவரின் கண் முன் தெரிந்தது.

 

(அடுத்த பதிவில் ஆத்மியின் தவறு, தேவின் மனமாற்றம், கடந்த காலத்தின் நிகழ்வு போன்ற அனைத்தும் ரிவீல் ஆக போகிறது…இன்னும் நான்கு யூடிகளில் கதை முற்றுபெற்றுவிடும் தோழமைகளே, கீப் சப்போர்டிங்…)