நெஞ்ச தாரகை 15

முடிவுகள்.

வாழ்க்கைப் படகின் திசையை மாற்றும் காற்றைப் போல அவை.

ஒரு திசை, நம்மை இலக்கிற்கு கூட்டிச் செல்லும். இன்னொரு திசை நம்மை திக்கற்ற காட்டுக்குள் நிற்க வைத்துவிடும்.

இதில் எழில்மதி எடுத்த இந்த முடிவு எந்த திசைக்கு கூட்டி செல்லும் என்பதை அறியாமல் பெரியவர்கள் சஞ்சலம் கொண்டனர்.

“எழில்மா, தெளிவா யோசிச்சு தான் முடிவு பண்ணி இருக்கியா?” லட்சமி கலக்கமாய் கேட்கவும் வெற்றுப் பார்வையோடு மௌனமாய் தலையசைத்தாள் எழில்.

“நல்லா யோசிச்சுட்டேன் அத்தை. அவர் பக்கத்துலேயே இருந்து வெறுப்பு சம்பாதிக்கிறதை விட தள்ளி இருக்கிறது தான் மேல். நான் எங்க வீட்டுக்கே போயிடுறேன்” என்று முடிவாக உரைத்தவளைக் கண்டு பாட்டி வருந்தினார்.

“அவன் கிட்டே ஒரே ஒரு தரம் உண்மையை சொல்லிப் பாருடா. கண்டிப்பா என் பேரன் உன்னை ஏத்துப்பான்…” என்றவரின் வார்த்தைகளைக் கேட்டு கசந்த முறுவல் பூத்தாள்.

“நான் முன்னாடியே சொன்ன பதில் தான் பாட்டி… அந்த உண்மை அவர் என்னை காதலிக்க தொடங்கின அப்புறம் தெரியுறது தான் நல்லது. இல்லை மாமா உள்ளுக்குள்ளே உடைஞ்சுடுவாங்க” என்று அப்போதும் அவனுக்காக யோசித்தவளைக் கண்டு பெரியவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

“என்னைப் பார்த்தாலே கடந்த காலம் நியாபகம் வருதுனு சொல்றாரு பாட்டி… என்னை காயப்படுத்திட்டு அவர் வேதனையிலே நிற்கிறாரு.. நான் அவர் சந்தோஷமா வாழணும்னு தான் இவ்வளவும் பண்னேன்… ஆனால் அவரோ என்னை மனுஷனா வாழ விடுனு கெஞ்சி கேட்கிறார்… அவரை கஷ்டப்படுத்தி பார்க்கவா, பாட்டி நான் அவர் வாழ்க்கைக்குள்ளே நுழைஞ்சேன்” என்றவளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவள் உள் மன வேதனையின் திரட்சிகளாய் வெளிப்பட்டது.

“நான் இங்கே இருந்து போயிடுறேன் பாட்டி… அவராவது நிம்மதியா இருக்கட்டும்” என்றவளின் முடிவை மறுத்து பாட்டி பேச வாயெடுத்த நேரம் கதவைத் திறந்து கொண்டு காவ்ய நந்தன் உள்ளே நுழைந்தான்.

“என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க பாட்டி” என்றவன் அவர் காலில் விழவும், பாட்டியின் கைகளோ அசையாமல் நின்றது.

“இன்னும் என் மேலே கோபம் போலயா பாட்டி… நான் தான் எந்த தப்பும் பண்ணலைனு சொல்றேன்லே. ஒழுங்கா ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று மீண்டும்  காலில் விழ அப்போதும் பாட்டியிடம் அசைவில்லை.

“பாட்டிமா… ஆசீர்வாதம் பண்ண போறீங்களா இல்லையா?” என்று மெல்லிய குரலில் சலித்துப் போய் கேட்டான்.

“நீ இன்னைக்கு எழிலை வெளியே கூட்டிட்டுப் போறேனு சொல்லு, நான் உன்னை ஆசீர்வாதம் பண்றேன்” என்று எங்கோ திரும்பி பார்த்துக் கொண்டு பாட்டி சொல்ல, இவனோ சட்டென்று நிமிர்ந்து எழிலை முறைத்தான்.

அவளோ பாட்டியைத் திரும்பி முறைத்துப் பார்த்தாள்.

“அவளை வெளியே கூட்டிட்டுப் போறேனு சொல்லுடா… இல்லை ஆசீர்வாதம் பண்ண மாட்டேன்” என்று மீண்டும் பாட்டி அசராமல் சிக்ஸர் அடிக்கவும் காவ்ய நந்தன் க்ளீன் போல்ட்.

ஒவ்வொரு வருடமும் பாட்டி தாத்தாவின் ஆசீர்வாதத்திலிருந்து துவங்குபவனுக்கு இன்று அவர்களின் ஆசீர்வாதம் இல்லாமல் புது வருடத்தை துவங்க விருப்பம் இல்லை.

சம்மதமே இல்லாமல் தன் சம்மததத்தை தெரிவித்தான்.

“சரி கூட்டிட்டு போய் தொலையுறேன்…” என்று பல்லை கடித்துக் கொண்டு சொன்னவன் பாட்டியின் காலில் விழ, இம்முறை மறுக்காமல் ஆசீர்வாதம் செய்தார்.

காவ்ய நந்தன் முகத்தில் கருப்பு வெள்ளை புகைப்படத்தைப்  போல பாதி கோபம் பாதி புன்னகை.

தன் பாட்டியிடம் ஆசிர்வாதம் வாங்கியதில் மகிழ்ச்சி. ஆனால் எழில்மதியை வெளியே கூட்டிக் கொண்டு செல்ல சொன்னதில் வெறுப்பு.

“அவளைக் கிளம்பி இருக்க சொல்லுங்க…” என்று தகவலாய் சொல்லிவிட்டு வெளியே சென்றவனைக் கண்டு பெருமூச்சு விட்ட பாட்டி,

“எதைப் பத்தியும் யோசிக்காம, அவனோட சேர்ந்து இந்த நாளை சந்தோஷமா அனுபவிச்சுட்டு வாடா” என்று எழில்மதியை நெட்டி முறித்து அனுப்ப லட்சுமி கலங்கிப் போய் நின்று கொண்டிருந்தார்.

தன் மகன் மனம் மாறி மருமகளை ஏற்றுக் கொண்டுவிட மாட்டானா என்ற ஏக்கம் அவர் விழிகளில் தெறித்தது.

கண்டிப்பாக எழில்மதியை ஏற்றுக் கொல்வான், ஆனால் அதற்குள் காலம் கடந்துப் போய் இருக்கும் என்று அந்த தாய் மனம் அப்போது  அறியாமல் போனது.

💐💐💐💐💐💐💐

எழில் மதி அவன் அணிந்திருந்த ஊதா நிற சட்டைக்கு தோதான வண்ணத்தில் சேலையை தேர்ந்தெடுத்தாள்.

வெள்ளி ஜரிகையிட்டு முந்தானையில் சிறு சிறு இலைகள் சிதறி இருந்ததைப் போல் இருந்த சேலையில் மிக பாந்தமாய் இருந்தாள்.

கழுத்தில் தொங்கட்டானை அணிந்து விரலால் சுண்டிவிட ஊஞ்சலைப் போல முன்னும் பின்னும் ஊசல் ஆடியது. கார்மேகத்தின் கருமையை அள்ளி கண்ணிற்கு தீட்டியவள்,  நெற்றியில் சூரியனின் சுடரை கிள்ளி எடுத்து பொட்டாய் வைத்துக் கொண்டாள்.

அருகிலிருந்த குங்கும சிமிழியில் இருந்து குங்குமத்தை விரலால் எடுத்தவளுக்கோ தன் தலைவன் தொட்டு நெற்றியில் வைத்துவிட மாட்டானா என்று உள்ளுக்குள் சிறு ஏக்கம் தோன்றி மறைந்தது.

ஆசையோடு அந்த குங்கும சிமிழை நோக்கிக் கொண்டிருந்த நேரம் கதவைத் திறந்து கொண்டு காவ்ய நந்தன் உள்ளே வந்தான்.

அவள் அணிந்திருந்த சேலையைப் பார்த்தவன் குனிந்து தன் சட்டையைப் பார்த்தான்.

இரண்டும் சேம் பின்ச் போட்டுக் கொண்டது.

“ப்ச்” என்று சலிப்பாக உச்சு கொட்டியவன் வேகமாய் கப்போர்ட்டை திறந்து வேறு ஒரு வண்ண நிறத்தில் உடையை எடுத்தான்.

எழில்மதியும் விடவில்லை.

வேகமாக சென்று அவன் அணிந்த சட்டை நிறத்திற்கு மீண்டும் ஒரு புடவையை தேர்ந்தெடுத்து உள்ளறைக்குள் சென்று மாற்றிக் கொண்டு வந்து நின்றவளைக் கண்டு கோபமானான் நந்தன்.

அணிந்திருந்த சட்டையை ஆத்திரமாய் கழற்றி வீசிவிட்டு,வேறு நிறத்தில் ஆடை அணிய மீண்டும் அதே வண்ண கலவையில்  எழில் மதி சேலை அணிந்து அவனை வெறுப்பேற்றினாள்.

அவளுக்கு அவனுடன் விளையாடும் இந்த விளையாட்டு பிடித்திருந்தது.

தான் வீட்டை விட்டு சென்றுவிட்டால், இந்த முசுட்டு மாமனோடு இதே போல வம்பிழுக்க முடியாது என உணர்ந்தவள் அவனை ஆசை தீர வம்பிழுக்கு இழுத்தாள்.

அவனுடன் இருக்கப் போகும் இந்த ஒரு நாளில் காலத்துக்குமான நினைவுகளை சேகரித்து வைத்துவிட முடிவெடுத்தவளுக்கு தெரியாது… இன்றைய இதே நாளில் தான், மறக்க முடியாத வலியை காலம் கொடுக்கப் போகிறது என்று.