நெஞ்ச தாரகை 16

நினைவுகள்…

அவை கடந்த கால ரெயிலில் ஏறி வேடிக்கைப் பார்க்க உதவும் பயணச்சீட்டு.

சில நேரங்களில் பசுமை நிறைந்த இயற்கையை காட்டும் அதே ஜன்னல் இருக்கை, பல நேரங்களில் வறட்சி வீசும் பாலைவனத்தையும் கண்களில் காட்டும் என்பதை எழில்மதி மறந்துப் போனாள்.

அவனுடன் இணைந்து பசுமையான நினைவுகளை உருவாக்குவதற்காக வெளியே வந்தவளை இளங்காற்று தலை கோதி வரவேற்றது.

அவள் முகத்தில் மெல்லிய முறுவல்.

பல வருட தவம் அவளுக்கு இது. அவனுடன் ஒன்றாய் இணைந்து ஒரு பயணம் என்பது… 

இதுவே அவனுடன் இணைந்து செல்லும் இறுதி பயணமாக மாறிவிடுமோ என்ற அச்சமும் அவள் மனதை கவ்வி கொண்டது.

ஆனாலும் எதிர் காலத்தை எண்ணி நிகழும் கணங்களை இழக்க அவளுக்கு விருப்பமில்லை.

அவனுடனான முழுப் பயணத்தையும் ரசித்துவிட்டு, இன்றைய நாள் இறுதியில் தான் வீட்டை விட்டு செல்ல எடுத்த முடிவை சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.

அவள் முடிவெடுத்து முடித்த நேரம் அவளின் முன்பு கீறிச்சுட்டு கொண்டு வந்து நின்றது அவனின் கார்.

அதைக் கண்டு உதட்டைப் பிதுக்கியவள், “எனக்கு கார்லே போக வேண்டாம்… பைக்லே தான் போகணும்” என்றாள் கட்டளையாக.

“உன்னை வெளியிலே கூட்டிட்டு போறதே பெரிசு. இதுலே கட்டளை வேறயாக்கும். ஒழுங்கா வண்டியிலே ஏறு. இல்லை வண்டியை உன் மேலே ஏத்துடுவேன்” என முறுக்கிக் கொண்டு நின்றவனைப் பார்த்து முகத்தை சுருக்கிக் கண்ணடித்தாள்.

அடுத்த நிமிடம் சட்டென முகத்தைத் திருப்பி கொண்டவன், “இங்கே பாரு கண்ணடிக்கிற வேலை எல்லாம் என் கிட்டே வெச்சுக்காதே. அப்புறம் கல்லெடுத்து அடிச்சுடுவேன்” என்றான் அவள் முகம் பார்க்காமல் எங்கோ பார்த்துக் கொண்டு.

“மாமா, பாட்டி சொன்னதை மறந்துட்டீங்களா? நான் இன்னைக்கு என்ன கேட்டாலும் செய்யணும், எதிர்த்து பேச கூடாதுனு  உங்க கிட்டே சத்தியம் வாங்குனாங்க இல்லை…” சத்தியத்தை வைத்து சத்தியவானை கட்டிப் போடப் பார்த்தாள்.

இம்முறை அவனால் முன்பு போல மறுக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல் பைக்கை கொண்டு வந்து அவளின் முன்பு நிறுத்தினான்.

மெல்லிய புன்னகையுடன் அவன் பின்னால் ஏறி அமர்ந்த எழில் அவன் தோள் வளைவில் தன் கையைப் படர விட சட்டென்று தட்டிவிட்டான்.

“மாமா அந்த சத்தியம்” என்று மீண்டும் எழில் சொல்ல காவ்யநந்தன் முகத்தில் இயலாமை இலக்கணம் எழுதியது.

தலையில் அடித்துக் கொண்டவன் இம்முறை அவள் கையைப் போடும் போது தட்டிவிடவில்லை.

அவள் முகத்தில் மீண்டும் ஒரு மெல்லிய மெந்நகை.

அவன் தோளை இறுக்கிப் பிடித்துக் கொண்டவள் மாடியில் நின்று தங்களையே பரிதவிப்போடு பார்த்துக் கொண்டிருந்த லட்சுமி மற்றும் பாட்டியை நோக்கி, கைகளை உயர்த்திக் காட்டினாள்.

அவர்கள் முகத்தில் கொஞ்சமாய் நம்பிக்கை ரேகைகள் படர துவங்கிய நேரம், காவ்ய நந்தனின் பைக் அங்கிருந்து  சீறிப் பாய்ந்து புறப்பட்டுவிட்டது

செல்லும் அவர்களையே பார்த்து, இனியாவது இவர்கள் வாழ்க்கை சரியாகிவிட வேண்டும் என  இறைவனிடம் கோரிக்கை வைத்துவிட்டு திரும்பியவர்களின் கண்களில், மூடிக் கிடந்த முகில் நந்தனின் அறை தென்பட்டது.

கல்யாணம் முடிந்த அடுத்த இரண்டு வாரத்தில் தனி அறைக்குள் நீலாம்பரியாய் அடைந்து கிடந்தவனைக் கண்டு அத்தனை கலக்கம் லட்சுமிக்குள்.

மூத்த மகனுக்காக தான் எடுத்த முடிவால் இளைய மகனின் வாழ்க்கை பிழன்று விட்டதோ என்று அவர் வருந்தாத நாளில்லை.

எப்போது ஆஸ்திரேலியா சொல்லப் போகிறேன் என்று வந்த நின்றானோ அப்போதே உள்ளுக்குள் நொறுங்கிப் போனது தாயின் மனம்.

ஆனால் அதன் பின்னர் வந்த நாட்களில்
மேகாவும் முகிலும் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. திருமணம் முடிந்த புது நாட்களில் கதவைத் திறக்காத ஆதார்ஷ தம்பதிகளாக மாறிவிட்டார்கள் என உள்ளுக்குள் எண்ணிக் கொண்டது பெரியவர்களின் உள்ளம்.

ஆனால் உள்ளே நடந்ததோ வேறு ஒன்றென அறியவில்லை இவர்கள்.

முகில் அவள் உணர்ச்சியை வெளிக் கொண்டு வர மும்முரமாய் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்ததால் அறையை திறந்து வெளியே வர நேரமில்லை என்பதை அறிந்து கொள்ளாமல் போயினர் இவர்கள்.

மூடிக் கிடந்த அறையை ஆசுவாசமாய் பார்த்தவர்கள் “இவனாவது சந்தோஷமா இருக்கிறானே…” என்ற நிம்மதியோடு காவ்ய நந்தனை எப்படி வழிக்கு கொண்டு வருவது என அடுத்த திட்டம் போட ஆயத்தமானவர்களுக்கு தெரியாது, உள்ளே ஒரு ஜோடி கண்ணீரில் கரைந்து கொண்டிருக்கிறது என்று.

💐💐💐💐💐💐💐💐

கல்ஹத்தி நீர்வீழ்ச்சி.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்று. பறவைகளை பார்வையிட விருப்பமுள்ளவர்களுக்கு சொர்க்கமான இடம் இது.

இதன் சுற்றுப்புறங்கள் இயற்கையான மற்றும் அமைதியான சூழலை கொண்டுள்ளதால் மௌனப்பிரியர்களுக்கு ரசனையான இடம்.

அதனால் தான் மௌனத்தை தத்தெடுத்த காவ்ய நந்தன், அவளை இங்கே கூட்டிக் கொண்டு வந்தான்.

வழி நெடுக பைக்கில் அவனை வம்பிழுத்துக் கொண்டே வந்தாள் அவள்.

பாட்டியிடம் காலையில் ஆசீர்வாதம் வாங்கவேண்டும் என்ற நட்பாசையில் “அவள் என்ன செய்தாலும் இன்று எதுவும் கேட்க மாட்டேன்… திட்ட மாட்டேன்” என வாக்கு கொடுத்தது எத்தனை பெரிய பிறழ் என்பதை அவன் காலம் கடந்து தான் உணர்ந்திருந்தான்.

இந்த இடம் அவனுக்கு மிகவும் பிடிக்கும். அமைதியை நாடி அடிக்கடி இங்கே வருவான்.

ஆனால் அருகில் வந்தவளோ விடாமல் பேசி நச்சரித்துக் கொண்டிருக்க பொறுமை இழந்தவன் திரும்பி அவளை ஒரு பார்வைப் பார்த்தான்… அதில் அவளது சர்வாங்கமும் அடங்கியது.

“இங்கே இருந்து பைக் போகாது. ஏறி நடக்கணும் வா” என சொல்லியவன் விடுவிடுவென நடந்து முன்னால் போக எழில்மதியோ கொஞ்ச தூர நடையிலேயே சோர்ந்துப் போய் நின்றுவிட்டாள்.

அவள் முகத்திலிருந்த தண்ணீரெல்லாம் வெளியே வியர்வை முத்துக்களாக வடிய, மேல் மூச்சு வாங்கியது அவளுக்கு.

தன்னை எப்போதும் தொடரும் நிழல் சட்டென்று காணாமல் போனதை உணர்ந்து காவ்யநந்தன் திரும்பிப் பார்க்க, அங்கே எழில் முடியாமல் நின்றிருந்தாள்.

வேகமாய் அவளை நோக்கி எட்டெடுத்து வைத்தவன், “வாய் மட்டும் நாலு முழத்துக்கு நீளுது. ஆனால் ஒரு நானூறு அடி நீளமுள்ள மலையை ஏற முடியாதா?” என்று சலித்துக் கொண்டான்.

அவள் முகத்தில் அரும்பிய வியர்வையோடு “ஒரு பத்து நிமிஷம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறமா ஏறுறேனே… ப்ளீஸ் மாமா” என்று மூச்சு வாங்க கெஞ்சினாள்.

அவள் முக பாவனையே, உடலின் சிரமத்தை பறை சாற்ற மௌனமாய் அவளருகில் நின்று கொண்டான்.

ஒரு பத்து நிமிடங்களில் தன்னை சமன்படுத்தி கொண்டவள் மெல்ல மலையேற துவங்க, இம்முறை காவ்ய நந்தன் வேக எட்டுக்களை வைக்கவில்லை. அவள் வேகத்திற்கு இணையாகவே நடந்தான்.

அந்த மலையை ஏறி முடிக்க பத்து முறை ஓய்வு எடுத்தவளைக் கண்டு அவனுக்கே பாவமாக இருக்க, “வேண்டாம்… சிரமப்படாதே வா.. கீழே போயிடலாம்” என்றான் அவள் உடல் நலம் கருத்தில் கொண்டு.

ஆனால் அவள் பின்வாங்கவில்லை.

“பிறந்தநாள் அன்னைக்கு ஆசையா வந்த உன்னை ஏமாத்த இஷ்டமில்லை… நான் கண்டிப்பா ஏறிடுவேன் மாமா” என சொல்லிவிட்டு மீண்டும் ஏற துவங்கியவளை கண்டு இரண்டு நொடிகள் அப்படியே பார்த்து ஸ்தம்பித்து நின்றான்.

தன் உடல் நிலையை கூட கருத்தில் கொள்ளாமல் அவன் உள்ள நிலைக்கு முக்கியத்துவம் கொடுப்பவளின் மீது அவனுக்கு கோபமும் இன்னதென்று பிரித்தறிய முடியாத வேறு ஒரு உணர்வும் பொங்கி எழும்பியது.

தன்னையே வெறித்துப் பார்த்தவனை நின்று, திரும்பி அவள் புருவத்தை உயர்த்தவும் சட்டென்று மோன நிலையைக் கலைந்தவன், தோளைக் குலுக்கி கொண்டு அவளைப் பின் தொடர்ந்தான்.

அவர்கள் பயணத்தின் முடிவில் அழகாய் வீற்றிருந்தது கல்ஹத்தி நீர்வீழ்ச்சி.

வெள்ளியை உருக்கி விட்ட, கவின் மிகு நீரோடையை கண்டு எழில்மதி விழி விரித்தாள்.

இத்தனை தூரம் சிரமப்பட்டு நடந்து வந்தது இந்த அழகிய அருவியை காண தான் என நினைக்கும் போது அவளுக்குள் ஒரு வித திருப்தி.

வாழ்வின் அழகிய தருணங்களை ரசிக்க சில வலிகளையும் தடைகளையும் கடந்து முன்னேறி வர வேண்டும் என்பது இந்த பயணத்தில் புரிய அழகாய் ஒரு புன்முறுவல் பூத்தாள்.

இந்த நீரோடையை அடைந்தது போல தன் மாமனின் காதல் நீர்வீழ்ச்சியை அடைய முடியுமா என ஏக்கத்தோடு திரும்பி அவனைப் பார்த்தாள்.

அவனோ இவளின் மீது பார்வை செலுத்தாமல், அங்கிருந்த இயற்கையை ரசிப்பதிலேயே கவனமாய் இருந்தான்.

மற்றவர்களின் கிண்டல் மொழியையும் கேலிப் பார்வையையும் தவிர்க்க எண்ணி, இத்தனை நாட்களாக அறைக்குள் மன உளைச்சலோடு அடைந்து கிடந்தவனுக்கு இந்த இயற்கை மிகவும் அவசியமாக இருந்தது.

தென்றல் அவனைத் தொட்டுப் போக அவன் இறுகி கிடந்த முகத்தில் மெல்லியதாய் ஒரு மலர்ச்சி ஏற்பட்டது.

அங்கே வெகு சிலர் மட்டுமே அருவியில் குளித்துக் கொண்டிருக்க, தான் கொண்டு வந்திருந்த போர்வையை எடுத்து தரையில் விரித்தவன், ஆயாசமாக சாய்ந்து படுத்துக் கொண்டு கண்களை மூடினான்.

பல அலைப்புறுதல்களுக்கு பிறகான ஆசுவாசமான விழி மூடல் அது.

எழில்மதி என்ற ஒருத்தி தன்னருகிலேயே இல்லை என்பதைப் போல நடந்து கொண்டான் அவன். ஆனால் அவளுக்கோ இந்த உலகில் காவ்ய நந்தன் என்ற ஒருத்தன் மட்டுமே இருக்கின்றான் என்பது போல  அவனது முகபாவனைகளையே நொடி விடாது பார்த்து கொண்டிருந்தாள்.

ஆசுவாசமாய் விழி மூடி படுத்தவனைக் கண்டவள், “இன்னைக்கு நைட்டு இதை விட நிம்மதியா கண்ணை மூடி தூங்குவ மாமா… நான் உன்னை விட்டு போக போறேன்ற என் முடிவை சொன்னா!” என நினைத்தவள் முகமோ விரக்தி  புன்னகையை வரைந்தது.