நெஞ்ச தாரகை 18

அதிர்ச்சி!

எதிர் பார்க்காத பொழுதில் எதிர் பாராத நேரத்தில் நடக்கும் நிகழ்வுகள் இதயத்தை ஓடாத கடிகாரம் போல காலம் மறந்து ஸ்தம்பிக்க வைக்கும்.

அப்படி தான் காவ்ய நந்தனும் ஸ்தம்பித்துப் போய் நின்று இருந்தான்.

எழில்மதி மயங்கியதோ சரி, இல்லை அவசரமாக அவளை திலக் வர்மா தோளில் போட்டுக் கொண்டு கண்ணீரோடு ஓடியதோ சரி… அவன் மூளையில் எதுவுமே தெளிவாக பதியவில்லை.

அவன் மனம் முழுக்க தன் காலை வந்து தொட்ட எழிலின் உதிரத்திலேயே உறைந்து கிடந்தது.

எப்படி தான் மருத்துவமனைக்கு வந்தோம் என்றும் புரியவில்லை. எவ்வளவு நேரம் அவசர சிகிச்சை பிரிவு கதவில் பதிக்கப்பட்டு இருந்த அந்த குட்டி கண்ணாடியின் அருகே நின்று கொண்டிருந்தான் என்றும் தெரியவில்லை.

ஆனால் அவன் கண்கள் மட்டும் அங்குமிங்கும் நகராமல் எழில்மதியையே வெறித்தபடி நின்று இருந்தது.

“என் தங்கச்சி என் கூட இருந்து இருந்தாவே நல்லா இருந்து இருப்பாளே… தப்பு பண்ணிட்டேனே… இவனுக்குப் போய் கல்யாணம் பண்ண வெச்சுட்டேனே” தலையில் அடித்துக் கொண்டு திலக் கோபத்தில் கத்திக் கொண்டிருக்க எப்போதும் பதிலுக்கு பதில் கொடுப்பவன் இன்று மொழியின்றி நின்றிருந்தான்.

அவன் அமைதியை கலைக்கும்படி, “பேஷண்டோடே ஹஸ்பெண்ட் யாரு?” என்று கதவைத் திறந்து கொண்டு மருத்துவர் வரவும் காவ்ய நந்தன் முன்னால் வந்தான்.

அவன் கண்ணில் மருத்துவர் என்ன சொல்ல போகிறாரோ என்ற பரிதவிப்பு.

“எப்படி இருக்காங்க?” என்று கேட்டவனின் குரலில்  தாயும் சேய்யும் நலமாய் இருக்கிறார்கள் என சொல்லவிடமாட்டார்களா என்ற ஏக்கம் விரவி கிடந்தது.

“சாரி, அம்மாவை மட்டும் தான் காப்பாத்த முடிஞ்சுது…” என்ற மருத்துவரின் வார்த்தைகளில் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என்ற மறைபொருள்   ஒளிந்து கிடக்க காவ்யநந்தன் இதயம் கூர்வாளால் இரண்டாய் வெட்டியதைப் போல துடிதுடித்தது.

“ப்ளீடிங் ஹெவியா இருக்கிறதாலே, ஒரு இரண்டு நாள் ஹாஸ்பிட்டலிலே அட்மிட்ஷன் இருக்கணும். ஒன் அவர் கழிச்சு பேஷன்டை பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டுப் போகவும் ஸ்தம்பித்துப் போய் காவ்யநந்தன் நாற்காலியில் அமர்ந்துவிட்டான்.

அவள் வயிற்றில் குழந்தை இருந்தது என்ற அதிர்ச்சியிலே இருந்தே வெளி வர முடியாமல் சிக்கித் தவித்தவனுக்கு, அந்த குழந்தையும் இப்போது இல்லை என்ற உண்மை தெரியவர குற்றவுணர்வு அவன் மனதை இரண்டாய் துண்டாடியது.

“என்ன தான் நடந்தது… என்ன தான் நடக்கிறது!… என்ன தான் நடக்க போகிறது”

நிழல் காலமும் புரியவில்லை. இறந்த காலமும் விளங்கவில்லை. எதிர் காலமும் யோசிக்க முடியவில்லை. முக்காலங்களும் சேர்ந்து சதி செய்ய தலையை பாராமாக இவன் பிடித்துக் கொண்ட நேரம் லட்சுமியும் பாட்டியும் பதற்றமாய் மருத்துவமனைக்குள் ஓடி வந்தனர்.

எழில்மதியின் நிலை அறிந்த இருவரின் கண்ணிலும் தாரை தாரையாய் நீர் கொட்டியது.

வீட்டின் மூத்த மருமகள் அவள்!

அதுவும் தலைச்சம் பிள்ளையை வயிற்றில் சுமக்கிறாள் என தெரிந்திருந்தும் காவ்யனின் எதிரில் சீராட்டி பாராட்டி பார்த்துக் கொள்ள முடியவில்லை!

ஆனாலும் இவர்கள் இருவரும் மூத்த மருமகளுக்கு அரண் போல தானே வீட்டில் சுற்றிக் கொண்டு கிடந்தனர்.

இளைய மருமகளை கூட சரியாக கவனிக்காமல் இவளின் பின்னாலே தானே பிரசவத்திற்கான அறிவுரைகளை யாருக்கும் தெரியாமல் சொல்லியபடி அவளைப் பத்திரமாக காத்தனர்.

ஆனால் இறுதியில் இப்படி நடந்துவிட்டதே!

எண்ண எண்ண அழுகையும் ஆற்றாமையும் பொங்கி எழுந்தது பெரியவர்களுக்குள்.

“ஐயோ, உன் சந்தோஷத்துக்காக வீட்டை விட்டு போறேனு சொன்னவளோட சந்தோஷத்தை மொத்தமா பறிச்சுட்டியேடா பாவி” என பாட்டி தலையில் அடித்துக் கொண்டு அழ காவ்ய நந்தனுக்கு அதிர்ச்சி.

அவள் தன்னை விட்டு செல்ல நினைத்தாளா? அதுவும் தன் சந்தோஷத்திற்காக செல்ல நினைத்தால் என்ற செய்தி அவனுக்கு முற்றிலும் புதிது.

“உன் முரட்டு குணம் தெரிஞ்சு இருந்தும், அவளை இன்னைக்கு உன் கூட வற்புறுத்தி அனுப்பி இருக்கக்கூடாது…” பாட்டி குழந்தை போன வருத்தத்தில் கதறிக் கொண்டிருக்க காவ்யநந்தனை குற்றவுணர்வு ஊசி சுருக் சுருக்கென குத்தியது.

“ஐயோ! அப்போவே அவள் கிட்டே உண்மையை சொல்லிடுனு தலைப்பாடா அடிச்சுக்கிட்டோமே… ஆனால் அவள் உனக்கு முக்கியத்துவம் கொடுத்து உன் சந்தோஷத்தை மட்டுமே யோசிச்சு எல்லா ஏச்சு பேச்சையும் தாங்கிக்கிட்டாளே” பாட்டியால் மருமகளுக்கு இப்படி ஆனதை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. சப்தமாய் கத்தி அழவும் அவசரமாய்  வெளியே வந்தார் நர்ஸ்.

“ஹாஸ்பிட்டெலிலே அமைதியா இருக்கணும் பாட்டி… இப்படி கத்தக்கூடாது” என்று கண்டிப்பாய் சொல்லவும் பாட்டி குரலைக் குறைத்துக் கொண்டாலும் விடாமல் முணுமுணுவென உதடுகளில் காவ்யநந்தனை ஏசியபடியே இருந்தார்.

பாட்டியின் ஆற்றாமை அவனுக்கு புரிந்தது. அவராவது மனதினில் உள்ள கோபத்தை எல்லாம் வெளியே வார்த்தைகளாய் தள்ளிவிட்டுவிடுகிறார், அதுவும் தன் தோளில் வாகாக சாய்ந்து கொண்டு…

ஆனால் தன் அம்மா?

வந்ததிலிருந்து ஒரு வார்த்தை கூட அவனிடம் பேசவில்லை. ஏன் அவன் முகத்தைக் கூட நிமிர்ந்துப் பார்க்கவில்லை.

அந்த ஒதுக்கமே காவ்யநந்தனை மேலும் மேலும் வலிக்க வைத்தது.

பாட்டியின் முதுகை தட்டிக் கொடுத்தவாறே நிமிர்ந்து எதிரிலிருந்த அன்னையை கலக்கமாய்ப் பார்த்தான்.

“எனக்கு இப்படினு தெரியாதுமா” என்றான் தடுமாற்றமாய்.

எதிர்முனையில் மௌனம்.

“நான் வேணும்னு பண்ணலைமா” வார்த்தை, உடையாமல் சொன்னாலும் அவன் குரல் உடைந்து வந்தது.

“மா… அது… கோபத்துலே… என்ன பண்றதுனு தெரியாம” வார்த்தையை முடிக்க முடியாமல் கண்ணீர் துளிர்க்க, பட் பட்டென தன் தலையில் அடித்துக் கொண்டான்.

“நீங்களாவது என் கிட்டே அவள் கர்ப்பமா இருக்கானு சொல்லியிருக்கலாமே மா… நான் கவனமா இருந்து இருப்பேனே” என்றவனின் முகம் கவலையில் கசந்து போயிருந்தது.

“ஏன்மா எல்லாரும் சேர்ந்து என்னை முட்டாளாக்கிட்டிங்க… இப்போவாவது என்ன நடந்ததுனு உண்மையை சொல்லுங்களேன்” என்றான் தலையில் அடித்துக் கொண்டு.

“என் குழந்தை எப்படிமா அவள் வயித்துலே…? எனக்கு புரியலை”
அவன் தயங்கி தயங்கி கேட்கவும் திலக் வர்மாவின் வருத்தம் கவ்விய குரல் இடையில் விழுந்து ஒலித்தது.

“என் தங்கச்சி வாழ்க்கை அழிய காரணமானவன் நான் தான்… நான் உனக்காக வெச்ச கன்னி வெடியிலே அவள் காலை வைச்சு தன் வாழ்க்கையை அழிச்சுக்கிட்டாளே” என்று கதறியவனைக் கண்டு குழப்ப மேகங்கள் சூழ்ந்தது காவ்ய நந்தனுக்குள்.

💐💐💐💐💐💐💐

சில மாதங்களுக்கு முன்பு.

திலக் வர்மா – காவ்ய நந்தன் இருவருக்குள்ளும் சிறுவயதிலிருந்தே ஆகாது.

எங்கு பார்த்தாலும் முட்டி கொள்ளும் அவர்களுக்கு. இருவரும் நேருக்கு நேர் சந்தித்தால் அங்கு அடிதடி நிச்சயமாக இருக்கும்.

அதுவும் அன்றோ… அவர்கள் இருவரும் அடித்துக் கொள்ள ஒரு வலுவான காரணமும் வேறு இருக்க ஏடாகூடாமாய் மோதிக் கொண்டார்கள்.

“டேய் நாயே… அந்த பொண்ணு தான் உன்னை பிடிக்கலைனு சொல்லிடுச்சுலே. அப்புறம் எதுக்குடா அந்த பொண்ணை தொந்தரவு பண்றே. பிடிக்காத பொண்ணோட காலடியை கூட தொடக்கூடாதுடா நாதாரி நாயே” பேருந்து நிறுத்தத்திலே வைத்து திலக் வர்மாவின் முகத்தில் பூரான் ஓட வைத்துவிட்டான்.

திலக் வர்மா தன்னை தொந்தரவு செய்வதாக ஒரு பெண் காவ்ய நந்தனிடம் வந்து புகார் கொடுக்கவும் பதிலுக்கு பொங்கி விட்டான் இவன்.

திலக்கிற்கோ எல்லார் முன்னிலும் காவ்ய நந்தன் கேவலப்படுத்தி அடித்துவிடவும் அசிங்கமாகப் போய்விட்டது. அதுவும் தனக்கு பிடித்த பெண்ணிற்கு எதிரே காவ்ய நந்தன் அடித்தது வேறு அவனுக்கு அவமானமாக போய்விட்டது.

அடிப்பட்ட நாகமாய் சீறியது திலக் வர்மாவின் உள்ளம்.

“நாயே… என்னையாடா எல்லார் முன்னாடியும் அடிச்ச… உன் தலையை நிமிராதபடி செய்யுறேன் பாரு” வஞ்சமாய் கத்தியவாறே காவ்யனின் வயிற்றில் குத்துவிட்டான்.

“நான் என்ன உன்னை மாதிரி ஒழுக்கங்கெட்டவனா டா… ஊர் முன்னாடி தலை குனிஞ்சு நிற்க? ஒழுக்க சீலன்டா நான்… என்னை உன்னாலே எதுவும் பண்ண முடியாது” என்று பதிலுக்கு காவ்யனும் அவன் தோள்பட்டையில் இடியாய் தன் கரத்தை இறக்கினான்.

“உன்னை எங்கே அடிச்சா விழுவேனு எனக்கு தெரியும்டா… அங்கே அடிக்கிறேன்… அதுவும் நிமிரவே முடியாதபடி” என சூளூரைத்த திலக்கோ அதற்கான திட்டத்தை செயல்படுத்த மும்முரமாய் இறங்கிவிட்டான்.

💐💐💐💐💐💐

நிலவின் வெளிச்சத்தில் மினுமினுத்த அந்த தோட்டத்தில் பழி வெறியோடு நின்று கொண்டிருந்தான் திலக் வர்மா.

அவன் எதிரே முக்காடு போட்டு முகத்தை மறைத்தவாறு ஒரு பெண்.

“உன்னோட வேலை என்னன்னா… காவ்ய நந்தன் இருக்கிற எஸ்டேட்டுக்கு போறது. அடுத்த நாள் காலையிலே கசங்கின சேலையோட ஊர் முன்னாடி வந்து நிற்க வேண்டியது புரிஞ்சுதா… நாளைக்கு இந்த ஊர் ஜனங்க அவனைப் பார்த்து காறித் துப்புறா மாதிரி உன் பர்ஃபார்மென்ஸ் இருக்கணும்” என சொல்லி அந்த பெண்ணின் முன்னே பத்தாயிரம் ரூபாய் பணக்கட்டைத் தூக்கிப் போட்டான்.

திலக்கின் முகம் முழுக்க முழுக்க குரோதத்தில்  மின்னியது.

ஏற்கெனவே காவ்ய நந்தனின் உணவில் போதை மருந்தை கொடுத்து அவன் எஸ்டேட் அருகிலேயே இருக்கும் வீட்டில் கொண்டு சென்று விட்டுவிட்டார்கள்.

இன்னும் அரை மணி நேரத்திற்குள் அவனுக்கு போதை உச்சத்துக்கு சென்றுவிடும்.

அந்த நேரம் பார்த்து இந்த பெண்ணை அவன் அறைக்குள் அனுப்பி அவன் கட்டி  காப்பாற்றும் பெயரை ஊருக்குள் நாறடித்துவிட கேவலமாய் ஒரு திட்டம் தீட்டினான்.

எல்லாம் சிறப்பாய் நடக்கப் போகிறது, நாளை காலை ஊர் முன்னால் தன் ஜென்ம பகையாளி தலை குனிந்து அசிங்கப்பட போகிறான் அந்த நினைப்பே அவனுக்கு பெரும் போதையாய் இருந்தது.

“நாளையோட நீ நிமிர்ந்து நிற்க முடியாதுடா காவ்ய நந்தா…” மதர்ப்பாய் திலக் கத்தவும் அதுவரை சிலைப் போல நின்றிருந்த எழில்மதிக்குள் உயிர் வந்தது.

தன் அண்ணன் கெட்டவன் என்று தெரியும். ஆனால் இத்தனை கீழ்த்தரமானவன் என தெரியாது.

அதுவும் தான் உயிருக்கு உயிராய் நேசிக்கும் காவ்ய நந்தனை வீழ்த்த இப்படி ஒரு திட்டம் தீட்டுவான் என எதிர்பார்க்கவில்லை எழில்மதி.

திலக் வர்மா தங்கைக்கு சிறந்த அண்ணனாய் இருந்தான். தாய் தந்தை இல்லாத குறையை அவள் உணராத வண்ணம் பார்த்து பார்த்து ஒவ்வொன்றாய் அவளுக்கு சிறப்பாய் செய்வான். ஆனால் மற்றவர்களுக்கோ அவன்  கெட்டவனாய் இருந்தான், குறிப்பாய் காவ்ய நந்தனுக்கோ அவன் தான் எமன்.

தன் மாமனுக்காக என்ன தான்  பேசி வாதாடினாலும் திலக் மனமும் மாறப் போவதில்லை போட்ட திட்டத்திலிருந்தும் பின் வாங்க மாட்டான் என உணர்ந்தே இருந்தவள் வில்லை எய்தியவனை விட்டுவிட்டு அம்பு செல்லும் திசை நோக்கி வேகமாய் சென்றாள்.

எஸ்டேட் அருகிலேயே இருந்த காவ்யநந்தனின் வீட்டிற்குள் நுழைந்த அந்த பெண்ணின் பின்னே வேகமாய் ஓடிய எழில்மதி. அவள் உள்ளே சென்று தாழ்ப்பாள் போடுவதற்கு முன்பு வேகமாய் வந்து காலை வைத்து தடுத்தாள்.

“அக்கா” என அழைத்தவளுக்கோ ஓடி வந்ததில் மேல் மூச்சு பலமாக வாங்கியது.

அந்த பெண் குழப்பமாய் நிமிர, கழுத்தில் கையிலிருந்த நகையை பரபரவென கழற்றிக் கொடுத்தவள், “எங்க அண்ணா கொடுத்ததுக்கு மேலேயே இந்த நகையை வித்தா பணம் கிடைக்கும்கா. ப்ளீஸ் இங்கேயிருந்து போயிடுங்க” என கையெடுத்து கும்பிட எதிரிலிருந்த பெண்ணோ முதலில் திகைத்தாள்.

பின்னால் தன் கையிலிருந்த நகையையும் பணத்தையும் மாறி மாறிப் பார்த்தவள் தான் நினைத்ததை விட தேவைக்கு அதிகமாகவே பணம் கிடைத்துவிட எதுவும் பிரச்சனை பண்ணாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

அவர் ஏற்கெனவே கிடைத்த பணத்தை எடுத்துக் கொண்டு அப்படியே வேறு ஊருக்கு போய்விடாலமா என்று எண்ணிக் கொண்டிருக்க, திலக்கோ அதிகாலையில் அவன் ஊர் முன்னால் அசிங்கப்படுவதை பார்த்து திருப்தி அடைந்த பின்னால் தான் மீதி பணத்தை கொடுப்பதாக சொல்லி இருந்தான்.

இப்போதோ நினைத்தைவிட அதிகமான பணம் கையில் இருக்க, வேண்டாமென மறுப்பதற்கு என்ன அந்த பெண்  முட்டாளா!

அதனால் தான் எந்த தகராறும் செய்யாமல் அந்த பெண் கிளம்பிவிட்டாள். ஆனால் திலக்கிற்கோ ஏனோ அந்த பெண்ணை முழுவதாய் நம்ப மனமில்லை.

எனவே ஏற்கெனவே அங்கே காவ்ய நந்தன் எஸ்டேட் அருகே உலவு பார்ப்பதற்காக அனுப்பிய ஒருவனுக்கு கால் செய்தான்.

“டேய் வீரா எங்கடா இருக்க?” எடுத்தவுடனே அதட்டல் வெளிப்பட்டது திலக்கிடம்.

“காவ்யன் எஸ்டேட் வீட்டுக்கு முன்னாடி தானா நின்னுட்டு இருக்கேன்” எதிர் முனையில் இருந்தவனோ பிடித்துக் கொண்டிருந்த தம்மை அவசரமாய் கீழே போட்டு நசுக்கிவிட்டு அவசரமாய் எஸ்டேட் வீடு இருக்கும் திசையை நோக்கி அடியெடுத்து வைத்தான்.

“அப்போ சரி… அந்த பொண்ணு வீட்டுக்குள்ளே போனதை கன்ஃபார்ம் பண்ணிட்டு வெளியே இருந்து தாழ்ப்பாள் போட்டுடு… எனக்கு என்னமோ முழுசா அந்த பொண்ணு மேலே நம்பிக்கை வரலை. பணத்தை வாங்கிக்கிட்டு கம்பியை நீட்டிட கூடாதுலே” என்று திலக் வர்மா சொல்லி முடிக்கவும் எதிரிலிருந்தவன் வீட்டை அடையவும் சரியாக இருந்தது.

உள்ளே ஒரு பெண் உருவம் திரும்பி  நின்று கொண்டிருப்பதை ஊர்ஜிதம் செய்த அந்த வீரா என்பவன் கதவை வெளியிலிருந்து சட்டென்று தாழ்ப்பாள் போட்டுவிட்டான்.

கதவு அடைப்படும் ஓசை கேட்டு சட்டென்று திகைத்து திரும்பி பார்த்தாள் எழில்மதி.

அந்த பெண்ணை வழியனுப்பிய எழிலுக்கோ தலைக்கு வந்த பிரச்சனை தலைப்பாகையோடு போய்விட்டது என்ற நிம்மதி. தன் மாமனின் மரியாதையையும் பெயரையும் கெடாமல் பாதுகாத்துவிட்டோம்  என்று எண்ணியவளுக்கோ ஆசுவாசமாய் மூச்சு வெளிப்பட்டது.

கட்டிலில் போதையில் கண்ணை மூடிக் கிடந்த காவ்ய நந்தனை காதலாய்ப் பார்த்து வைத்தவள் ஓடி வந்ததில் தொண்டை வறண்டு போய்விட மேஜை மேலிருந்த தண்ணீரை எடுத்து குடித்து கொண்டிருந்த நேரம் பின்னால் யாரோ கதவை அடைத்துவிட்டார்கள்.

யாரோ என்ன? இதுவும் தன் அண்ணனிடம் கைங்கர்யமாய் தான் இருக்கும்!

திலக்கை மனதிற்குள் வண்ணம் வண்ணமாய் அர்ச்சனை செய்தபடி,  ஓடிப் போய் கதவை படபடவென தட்ட அந்தோ பரிதாபம் அவள் தப்பித்து செல்வதற்கான எல்லா திசையும் மூடப்பட்டுவிட்டது.

போதை மருந்து கொடுத்து அரை மணி நேரம் முடிந்திருக்க காவ்ய நந்தனின் உச்சி வரை இப்போது போதை பரபரவென பரவியிருந்தது.

முதன்முறை போதை வஸ்துவை உணரும் அவன் உடலில் முன்னுக்குப் பின்னான முரண்பாடுகள். தலை பாரம் அழுத்த சரிந்து கிடந்தவன் கதவு தட்டப்படும் ஓசை கேட்டு மெதுவாய் கண் திறந்தான்.

அங்கே எழில் வடிவாய் நின்றிருந்த பெண்ணைக் கண்டு அவனுக்குள் ஏற்றிய போதை இரண்டு மடங்காய் செயல்பட்டது.

அவளை நோக்கி காவ்ய நந்தன் செல்ல, அவனின் சிவந்த கண்ணை கண்டு பயந்து பின்வாங்கிய எழில்மதி, “வேண்டாம் மாமா” என சொல்லி முடிப்பதற்குள் அவன் இறுகிய கைவளைவுக்குள் சுருண்டு கிடந்தாள்.