நெருப்பின் நிழல் அவன்! 10 (ஆ)

அத்தியாயம்: 10 (ஆ)

குமரனை வெட்டி கொல்லும் ஆத்திரத்தில் ஊட்டி வந்தவனுக்கு குமரனின் இறப்பு செய்தி உவப்பானதாக இருக்கவில்லை. அந்த நயவஞ்சகனை அவன் கையாள் கொன்று இருந்தாள் ஈஸ்வரனின் மனதின் காயம் ஆறி இருக்குமோ..!! என்னவோ..!! ஆனால் அவன் இல்லாமல் போனது இயலாமையை தந்தது.

மிதுன் மூலம் சாரதா தேயிலை பறிக்க வருவது தெரிந்து துடித்து போனான். அவனுக்கு சற்றும் குறைவு இல்லா வளத்துடன் வாழ வேண்டியவள் தேயிலை பறிக்கிறாள். மனம் துடித்த போதும் சாரதாவை பார்க்க துடித்த கால்களை கட்டுபடுத்த முடியாமல், ஐந்து வயதில் வைத்த பாசம் துளியும் குறையாமல் அவன் பாப்பாவை பார்க்க சென்றான்.

இரவு முழுவதும் சாரதாவை பார்க்கும் ஆர்வத்தில் தூங்காமல் விழித்து இருந்தவன் காலையிலேயே எழுந்து ஜாகிங் செல்வது போல் வந்தவன் கண்ணில் முதலில் பட்டது சாந்தவியும் அவளின் குரங்கு செயலும் தான். விவரம் தெரிந்த வயதில் இருந்து வெறுத்த முகத்தை ஒரு நிமிடம் தன்னை மறந்து ரசிப்போம் என்று அவன் நினைத்தும் பார்த்திருக்கவில்லை. ஆனால் சாந்தவியின் செயல் செய்ய வைத்திருந்தது.

காலை பனியில் முகம் ரோஜா பூ என லேசாக சிவந்து இருக்க, தேயிலை பறிக்கும் உடையில் இருந்தவள் குளிருக்காக தலையில் ஒரு முயல் குள்ளாவும் அணிந்து இருந்தாள். அந்த முயல் குள்ளாவில் இருந்த காதுகள் இரண்டும் மேல் நோக்கி நிற்காமல் பக்கத்திற்கு ஒன்றாக விழுந்து கிடக்க அதை சிறு கோபத்துடன் பிடித்து மேலே தூக்கி விட்டாள்.

அது பிடிப்புக்கு எதுவும் இல்லாமல் அடுத்த நொடியே மீண்டும் கீழே விழுந்து இருந்தது. அதை கண்களை உருட்டி முறைத்தவள் மீட்டும் தூக்கி விட அது மீண்டும் விழவும்.. பாவமாக உதடு சுழித்தவள், சுற்றி யாரும் தன்னை கவனிக்குறார்களா என்று நோட்டம் விட்டவள்.., அப்படி யாரும் பார்க்கவில்லை என்றதும் திருட்டு முழி முழித்துவள் சட்டென்று செடிகளுக்கு நடுவே அமர்ந்து கொண்டாள்.

அவள் திருட்டு முழியும், அவளின் செயலும் ஈஸ்வரனின் பார்வையை அவள் மீது கட்டி போட்டது. கீழே அமர்ந்த சாந்தவி.. தொப்பியை கழற்றி தேயிலை செடியை நொடித்து, அதன் கொப்பை உடைத்து இரு முயல் காதின் உள்ளே பக்கத்திற்கு ஒன்றாக சொருகி முட்டு கொடுத்து மீண்டும் தலையில்மாட்டி கொண்டவள், அது நேராக நின்றதை கண்களை உருட்டி பார்த்து, பளிச் என புன்னகைத்து தனக்கு தானே… மெச்சி கொண்டு, மீண்டும் வேலையை தொடர்ந்தவளை பார்த்த சக்தியின் இதழில் குறிஞ்சி பூ என அறிதாக சிரிப்பு வந்து அமர்ந்தது.

சாரதாவை பார்க்க வந்து சாந்தவியின் செய்லில் அப்படியே நின்றவன் சாரதைவை பார்க்க நினைத்து நகர போக, சாரதாவே சாந்தவியிடம் வந்து இருந்தாள். சாரதாவை பார்த்ததும் சக்தியின் கண்கள் வெளிப்படுத்திய உணர்வை வார்த்தையால் சொல்ல முடியாது. சக்தி.., சாரதாவை கண்ணில் நிறப்பி கொள்ள, முதுன் வந்தவன் “என்னடா.. உன் தங்கச்சியை பார்த்தாச்சா..!” என்று கேட்க, அவனிடம் “ஆம்..” என்று தலையாட்டியவன், சாரதா உரிமையாய் சாந்தவியின் தலையின் குட்டியதை பார்த்து “பக்கத்துல நிக்குறது யார்..?” என்று கேட்க, “சாரு தங்கச்சி சாந்தவி..” என்று மிதுன் கூறவும், ஈஸ்வரனிடம் அதுவரை இருந்த இலகு தன்மை விலகி முகம் கோபத்தில் இறுகி போனது.

குமரன் மகள் என்றதும் சக்தியின் கோபம் முழுவதும் சாந்தவி மேல் திரும்பியது. அவளை பார்க்க கூட பிடிக்காதவன் அதன் பிறகு சாரதாவை பார்க்கும் நேரத்தை கூட சாந்தவி உடன் இல்லாத நேரமாக பார்த்து கொண்டான்.

சக்திக்கு தன் மொத்த கோபத்தையும் சாந்தவி மேல் கொட்டி விட்டால், சாரதா உடனான் உறவு கேட்டு விடுமோ..! என்று அவளை தவிர்த்து விடுவான். ஆனால் அவளை முதல் முறை பார்த்த நினைவு மட்டும் நெஞ்சை விட்டு நீங்கவில்லை.

சாரதா கஷ்டப்படுவது பிடிக்காமல் மிதுனை சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள கூறினான். அவனும் நேரம் பார்த்து சாரதாவிடம் கூற.. அவளோ பெற்றவர் சம்மதம் இல்லாமல் முடியாது என்றதோடு சாந்தவியையும் தனியாக விட முடியாது என்று விட அந்த கோபமும் சாந்தவி மேல் வந்தது.

இடையில் சக்திக்கு திருமணம் முடிவாக சாரதாவையும் பார்த்துவிட்டு, முதுனுக்கு பத்திரிகை வைக்க வந்தவன், குளிர் தாங்காமல் சிக்ரெட் பிடிக்க நினைத்தவன் சிகரெட் வாங்க வந்து விட்டு வெளியே வரவும் சாந்தவி வருவதை பார்த்தவன். அவள் முகம் பார்க்க பிடிக்கவில்லை என்றாலுப் குரலை அருகில் கேட்க ஆவல் கொண்டு அவள் முகம் பார்க்காமல் திரும்பி நின்றான்.

ஆனால் அடுத்து.. அடுத்து.. சாந்தவி பேசியது குமரனின் துரோகத்தை நினைவு படுத்தியது. குமரனின் ரத்தமாக சாந்தவிடம் மட்டும் நல்ல குணமா இருக்கும் என்று இகழ்ச்சியாக உதடு சுழித்தவன் கண்கள் பழி வெறியை சிந்த சாந்தவியை கடத்தி இருந்தான்.

“சாந்தவி அப்படி இல்லை..” என ஆசை கொண்ட மனம் கூறினாலும் ஒரு முறை சூடு பட்டவன் அடுத்த முறையும் பட விரும்பவில்லை. இங்கே மிதுனிடம் ஏற்கனவே வருவதாக கூறி இருக்க, அவன் சந்தேகம் தன் மேல் திரும்பாமல் இருக்க ஆள் ஏற்பாடு செய்து சாந்தவியை அவன் இடத்திற்கு அனுப்பிவிட்டு அவன் இங்கே மிதுனுடன் இருந்து கொண்டான்.

இரண்டு நாள் கழித்தும் குமரன் மேல் இருந்த ஆத்திரமும், சாந்தவி மேல் இருந்த கோபத்திலும் தான் அவளை துன்புறுத்தினான். ஆனால் அவளின் அழுகை அவனை ஏதோ செய்தது உண்மை. சாராதா சாந்தவியை நினைத்து அழுவதை பார்த்தவன் அதே துடிப்பு சாந்தவியிடம் இருக்கிறதா என்று அறியவே உன் குடும்பத்தை கொலை செய்யட்டா என்று கேட்டான். சாரதாவிற்கு ஒன்று என்றதும் சாந்தவியின் துடிப்பு ஈஸ்வரனை சற்று இலக வைக்க அவளை விட நினைத்தவன் அவளின் முட்டாள் தனமான சவாலை ஏற்று அனுப்பி வைப்பது போல் அனுப்பி வைத்தான்.

தன்னை எதிர்க்க முடியாமல் பயத்தில் சாரதாவிடம் உண்மையை கூறி சாரதாவுடன் ஊரை விட்டு செல்ல கூடாது என்று தான், சாந்தவியை கடத்திய உண்மையை மிதுனுக்கு கூறி அவளை ஊரை விட்டு செல்லாமல் பார்த்து கொள்ள சொன்னான்.

அவளை பார்த்தாலே பொங்கும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவளை பார்க்க கூடாது என்று ஈஸ்வரன் நினைக்க, அடுத்து சாந்தவி செய்தது மீண்டும் குமரனை அவன் கண் முன் கொண்டு வந்தது.

அவள் மேல் உள்ளுக்குள் பூத்த சிறு பூவும் கருகி போனது சாந்தவி ஆலைக்கு வைத்த வெடியில். அதில் மூர்க்கம் ஆனவன் குமரனின் ஒட்டுமொத்த கர்மாவையாம் சாந்திக்கு என முடிவு அவளை தன் வஞ்சனை வலைக்குள் இழுத்து இருந்தான்.

இப்போதும் தன் மார்பில் சாய்ந்து கதறியவள் மீது பரிதாபம் வருவதற்கு பதில் கோபமே வர… தாடை இறுக நின்றவன், சாந்தவியை பிடித்து ரொட்டில் தள்ளி இருந்தான்.

சாந்தவி அவனை நிமிர்ந்து பார்க்க “இனிமேல்.. உன் கை என் மேல பட்டுச்சி.. அப்பறம் நான் மனுசனா இருக்க மாட்டேன்!!. நீ எப்பவும் எங்க வீட்டு பொண்ணாக முடியாது. அப்பறம் என்ன சொன்ன..! என் மனைவியா…!! க்கூம்.. அது கொஞ்ச நாள் மட்டும் தான். சாரதாவுக்கு எங்க வீட்டு சார்பா செய்ய வேண்டிய கடமைக்காக உன்னை யூஸ் பண்ண தான் கல்யாணம் பண்ணேன். அது நடந்ததும் நீ நடு தெருவில் தான் நிற்கனும். நிற்க வைப்பேன்…” என்று சிங்கம் என கர்ஜித்தவன் வேக எட்டுகளுடன் சென்று ஜீப்பை எடுத்தான்.

ஈஸ்வரனின் சொல்லில் மனம் மரத்து போக அவனை பார்த்தாள். தங்கைக்கு சீர் செய்ய தன்னை பயன்படுத்தி கொண்டானாம் ஈஸ்வரனின் அந்த வார்த்தையில் நொறுங்கி போனாள். “உன் தேவைக்கு யூஸ் பண்ண நான் என்ன பொம்மையாடா..!” என‌ கத்த தோன்றிய மனதை உள்ளுக்குள்ளேயே அடக்கி கொண்டாள். சாரதவிற்காக அவளே தன்னை அழித்து கொள்ள நினைத்தவள் தானே..! இப்போது அவன் செய்கிறான் அவ்வளவே!

இனிமேல் அவனின் கொடும் சொற்களில் தான் வாழ்ந்தாக வேண்டும். அது தான் குமரன் அவனுக்கு கொடுத்த வலிக்கு தான் கொடுக்கும் மருந்து.. என நினைத்தவள் தன் உணர்வுகளை அங்கேயே புதைத்துவிட்டு அவனுடன் சென்றாள்.

நிழல் தொடரும்…