நெருப்பின் நிழல் அவன்! 17

அத்தியாயம்: 17

சூரியன் தன் பணியை தொடங்கி பூமி எங்கும் தன் இளம் சூட்டை பரப்பி கொண்டிருந்த காலை வேலை நேரம் மணி ஒன்பதை நெருங்க ஈஸ்வரன் இன்னும் அவன் அறையை விட்டு வெளிவந்திருக்கவில்லை. ‘அவன் எப்போது கிளம்புவான்..!’ என்று சாந்தவி குட்டி போட்ட பூனையாக அறையை சுற்றி வந்தாள்.

இப்போது எல்லாம் காலையில் சீக்கிரமாக சாப்பிட்டு பழகியது பசிக்க வேறு செய்தது. ஃப்ரிட்ஜில் பழங்களும் முடிந்திருக்க, ரத்தினம் ஜாகிங் செல்வது போல் இவளுக்கு ஸ்நாக்ஸ் வாங்க சென்றிருந்தார். சாந்தவி பசி பொறுக்க மாட்டாள் என தெரிந்த உமையாள் அறைக்கு வந்தவர்.. இவள் குறுக்கும் நெடுக்குமாக நடப்பதை பார்த்து “சக்தி இன்னும் ரெடி ஆன மாதிரி தெரியலை சாந்தவி. உனக்கு சாப்பாடு ரூம்புக்கு எடுத்துட்டு வந்து தரவா..?” என்று கேட்க,

“ம்கூம்.., எனக்கு பேசிட்டே சாப்பிட்டா தான் சாப்பிட்ட மாதிரி இருக்கும். நீங்க போய் உங்க மகனை எழுப்பி சீக்கிரம் கிளம்பி போக சொல்லுங்க…” என்று வீம்மாக கூற,

“அவனாவது ஒரு முறை தான் துரத்தி விட்டான்.. நீ தினமும் என் பிள்ளைய வீட்டுல இருக்க விடாம துரத்தி விடுற, அவன் வீட்டுல அவனுக்கே இருக்க உரிமை இல்லை… என்ன கொடுமை..!!” என்று உமையாள் அழுத்து கொண்டே செல்ல

“துரத்தி விடலை கூட்டிட்டு போய் நடு தெருவுல அனாதையா விட்டுட்டு வந்தார்…” என சாந்தவி கோபமாக கூற

“இவ வேற ஆ.. ஊ.. னா இதையே சொல்லிக்கிட்டு..” என்று புலம்பி கொண்டு வெளியே வந்த உமையாள் ஈஸ்வரன் வருகிறானா என்று பார்த்தார். ஈஸ்வரனும் வந்தவன் என்றும் இல்லாத திருநாளாக டிராக் பேண்ட் டீ சர்ட்டுடன் கீழிறங்கி வர ‘இவன் என்ன இன்னும் கிளம்பாம இருக்கான்..! அவ வேற சண்டைக்கு வருவாளே…!’ என நினைத்து கொண்டே “என்ன சக்தி… இன்றைக்கு ஆலைக்கு போகலையா..? நேரம் ஆகிட்டே…!” என்று கேட்க,

“போகனும் மா மாட்டுத்தாவணி பக்கம் ஒரு தென்னந்தோப்பு ஏலம் வருது. அதை எடுக்க பதினொன்றறைக்கு போகனும். அதான் மெதுவா கிளம்பளாமேன்னு இருந்துட்டேன்..” என்றவன் “டீ குடுங்கம்மா…” என்று கேட்டான்.

“இரு எடுத்துட்டு வரேன்…” என்று கூறி சமையலறை சென்ற உமையாள் “அவ சும்மாவே குதிப்பா.., இன்னைக்கு என்ன செய்ய போறாளோ..!” என்று புலம்பி கொண்டே மகனுக்கு டீ போட்டார்.

வெளியே சென்று விட்டு சாந்தவிக்கு ஒரு மாதத்திற்கு தேவையான‌ ஸ்நாக்ஸ் வாங்கி கொண்டு உள்ளே வந்த ரத்தினம், ஹாலில் அமர்ந்து இருந்த ஈஸ்வரனை பார்த்து “இவன் என்ன இந்நேரம் இங்க இருக்கான்..! வெளிய போகலையா..?, கார் வெளிய இல்லைனு நம்பி தானே உள்ள வந்தோம்…” என்று அதிர்ந்தவர், கையில் இருந்த பையையை ‘மறைக்க முடியாது..’ என்று தெரிந்தும் பின்னால் மறைத்து கொண்டு ஈஸ்வரன் கருத்தை கவராமல் அறைக்கு செல்ல போக,

தன் முன்னால் ஆள் நடமாடும் உணர்வில் நிமிர்ந்த ஈஸ்வரன் ரத்தினத்தையும், அவர் கையில் இருந்த பையையும் அதை அவர் மறைக்க முயல்வதையும் பார்த்தவன் “எங்கப்பா போய்ட்டு வரிங்க…?, அது என்ன கையில இவ்வளவு பெரிய பை…?!” என்று புருவம் சுருக்கி கேட்டான்.

வீட்டுக்கு தேவையாக மளிகை பொருட்கள் போன் செய்து சொன்னால் வீட்டில் கொண்டு வந்து கொடுத்து விடுவார்கள். அப்படி இருக்க அவர் இவ்வளவு பெரிய பையில் என்ன வாங்கி வருகிறார் என்று கேட்க,

“அது உன் அம்மா இப்போ எல்லாம் ராத்திரி திடிர்னு பசிக்குதுன்னு சொல்றா…, அதான் அவளுக்கு சாப்பிட பழம் வாங்கிட்டு வந்தேன். இரு ரூம்ல வச்சிட்டு வரேன்…” என்று நழுவ பார்க்க,

“ஏன்‌ அம்மா நைட் சரியா சாப்பிடுறது இல்லையா..?, அதுக்கு ஏன் இவ்வளவு வாங்கிட்டு வந்துருக்கிங்க..? இங்க கொண்டு வாங்க பார்ப்போம்…!” என்று கூறி கொண்டே எழுந்து சென்று பையை வாங்கி பார்க்க, மஞ், கிட்கேட், டைரிமில்க், கேக், ஐஸ்கிரீம், என அனைத்து சாக்லேட் ஐட்டமும் பெயருக்கு கொஞ்சம் பழங்கள் இருப்பதை பார்த்தவன், “என்னப்பா இதெல்லாம்…! இதை எல்லாம் அம்மா சாப்பிட்டா அவங்க உடம்பு என்ன ஆகும். அதுவும் இவ்வளவு வாங்கிட்டு வந்துருக்கிங்க…” என்று கேட்டு கொண்டே இன்னும் என்ன எல்லாம் இருக்கிறது என்று ஆராய்ந்தவன், அதில் இருந்த விதை இல்லா கருப்பு திராட்சையை எடுத்து சாப்பிட போக

“டேய் அதை எடுக்காத டா..” என்றார் ரத்தினம் சற்று பதறி. அது சாந்தவிக்கு மிகவும் பிடிக்கும். டிவி பார்க்கும் போது சாப்பிடுவாள். இன்று கடையில் அரைகிலோ தான் இருக்க, இருந்ததை வாங்கி வந்திருந்தார். அதையும் ஈஸ்வரன் எடுத்து கொண்டான்.

“ஏன்பா…?” என்று கேட்டு கொண்டே ஈஸ்வரன் சாவகாசமாக அதை சாப்பிட, “உன் அம்மாக்கு ரொம்ப பிடிக்குமேன்னு வாங்குனேன்..” என்றவருக்கு “இது நாவல் பழம் மாதிரி இருக்கு இல்ல மாமா…!” என்று சாந்தவி கூறுவது நினைவு வர, அவளிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தார்.

“அதுக்கு என்ன..? நான் வரும் போது வாங்கிட்டு வரேன்.., அப்பறம் இதெல்லாம் ஃப்ரிட்ஜில வைங்க நானும் எடுத்து சாப்பிட்டுப்பேன்…” என்று ஈஸ்வரன் சொல்ல, ரத்தினமும் வேறு வழி இல்லாமல் எல்லாவற்றையும் கொண்டு சமையலறை ஃப்ரிட்ஜில் ‌வைத்தார்.

திராட்சையை சாப்பிட்டு கொண்டே பேப்பர் படித்தவன் “டீ வேண்டாம்..” என்று விட்டு பேப்பர் படித்து முடித்து அறைக்கு சென்று குளித்து கிளம்பி வந்தவன் சாப்பிட அமர்ந்தான்.

சாப்பிடும் போது தான் முக்கியமான ஃபைலை அறையில் வைத்துவிட்டு வந்தது நினைவு வர.. சாப்பிட்டு எழுந்தவன் “அம்மா போய்ட்டு வரேன்..” என்று உமையாளிடம் கூறி விட்டு ஃபைல் எடுக்க அவன் அறைக்கு சென்றான்.

ஈஸ்வரன் ‘எப்போது செல்வான்..’ என்று கடுப்பில் இருந்த சாந்தவி அவன் சாப்பிட்டு முடித்து ஆளை காணும் என்றதும்.. சன்னல் வழியாக அவன் கார் இருக்கிறதா என்று பார்த்தாள்.

ஈஸ்வரன் கார் சர்வீஸ் சென்றிருக்க, ஜீப்பில் தான் செல்வதாக இருந்தான். ஜீப் செட்டில் நிற்க ரத்தினமும் அதை அறியாமல் தான் வந்து சிக்கி கொண்டார். இப்போது சாந்தவியும் அவன் கார் இல்லை என்றதும் அறையில் இருந்து வெளியே வந்தவள் “மாமா உங்க பையன் போயாச்சா…? ஹப்பாடா… இப்போ தான் நிம்மதி!, யாரை கேட்டு என் பழத்தை குடுத்திங்க..?” என்று கேட்டு அவருக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தாள்.

பைலை எடுத்துவிட்டு அறையில் இருந்து கீழே வந்த ஈஸ்வரன் தன் முன்னால் கடந்து சென்ற சாந்தவியை பார்த்து ஸ்தம்பித்து நின்று விட்டான். மூன்று மாதத்திற்கு பிறகு அவளை பார்க்கிறான். சீக்கிரம் வெளியே வருவாள் என்று எதிர் பார்த்தான் தான், ஆனால்.. இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கவில்லை.

“வாடி முயல் குட்டி…, சிக்கிட்டியா..!” என்று நினைத்த ஈஸ்வரன் இதழில் உறைந்த புன்னகையுடன் சாந்தவியை வேடிக்கை பார்த்தான். வீட்டிலேயே இருந்து தேகம் வெளுத்து சற்று சதை வைத்து மொழு மொழுவென இருந்த மனைவியை மார்பின் குறுக்கே கை கட்டி நின்று ரசிக்க, அதை எதையும் அறியாத சாந்தவி ரத்தினத்திடம் வம்பு வளர்த்து கொண்டிருந்தாள்.

ஈஸ்வரன் சாந்தவியை பார்த்துவிட்டதை பார்த்து உமையாள், ரத்தினம் இருவரும் திகைத்தாலும் உள்ளுக்குள் தோன்றிய நிம்மதியுடனும் இருக்க, அதை எதையும் அறியாத சாந்தவி ரத்தினத்திடம் பேசிக்கொண்டே போனவள் “இது எல்லாம் எனக்கு தான். உங்க மகனுக்கு தர மாட்டேன்…” என்று கூறிவிட்டு, சிறுபிள்ளை போல் ரத்தினம் வைத்திருந்த பையை தூக்கி கொண்டு அறைக்கு செல்ல வர மாடி படி அருகில் நின்ற ஈஸ்வரனை பார்த்து விட்டாள்.

இந்த மூன்று மாதங்களாக அவன் குரல் மட்டுமே கேட்டிருந்தவளுக்கு அவனின் இந்த தோற்றம் இதயத்தில் அதிர்வை கொடுத்தது. இத்தனை நாட்கள் கடந்து பார்த்தது இதயத்தின் காதல் கண்ணீராக வெளிப்பட்ட அதே நேரம் அவன் அவளை விட்டு சென்றதும் நினைவு வர, வந்த கண்ணீரை அடக்கி கொண்டு கோபமாக ஈஸ்வரனை கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல போகவும், அவளை போக விடாமல் கை பிடித்து இழுத்த ஈஸ்வரன் அவளை இறுக்கி அணைத்திருந்தான்.

சாரதா அடிக்கடி போன் செய்வதை வைத்தே சாந்தவி வீட்டில் இருப்பதை தெரிந்து கொண்டவன், ‘அவளாக எப்போது தன் மேல் இருக்கும் கோபம் குறைந்து வருகிறாளோ… அப்போது வரட்டும்’ என்று நினைத்து பொறுமையாக காத்திருந்தான்.

ஆனால் எதிர்பாராத விதமாக அதற்கு முன்பே அது நடந்து விட இனிமேல் அவளே செல்ல நினைத்தாலும் அவன் விட போவதில்லை. ஈஸ்வரனின் அணைப்பில், சாந்தவி எந்த உணர்வும் இல்லாமல் அப்படியே ஸ்தம்பித்து நின்க, “சாரி டி…” என்ற ஈஸ்வரனின் சொல்லில் ஆவேசமாக அவனை தள்ளி விட்டவள் அவனை அறைந்து இருந்தாள்.

முன்பு இருந்த ஈஸ்வரன் என்றால் அவள் நீட்டிய கையை பிடித்து அவளுக்கு பதில் கொடுத்து இருப்பான். இப்போது அவன் மேலும் தவறு இருப்பதால் அமைதியாக இருந்தான்.

“சாந்தவி..” என்று உமையாள் கோபமாக அதட்ட, ஈஸ்வரன் கோபத்தில் முகம் செந்தனலாக சிவந்து நிற்க, எதையும் கருத்தில் கொள்ளாதவள் “யாருக்கு வேணும் உன் சாரி..?, தெரியாம செஞ்சவங்களுக்கு தான் மன்னிக்கு கேட்க உரிமை இருக்கு. அது உனக்கு இல்லை. எப்போ என்னை வேண்டாம்னு நடு ரோட்டுல விட்டுட்டு வந்தியோ… அப்பவே எல்லாம் முடிஞ்சி போச்சி. போக இடம் இல்லாதவனு தெரிஞ்சே விட்டுட்டு வந்த இல்லை அதை மறக்க மாட்டேன்!!, இனிமேல் என் பக்கத்துல வந்த… அப்பறம் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..” என்று ஒரு விரல் நீட்டி கோபமாக திட்டியவள் யாரையும் திரும்பி பார்க்காமல் அறைக்கு சென்று கதவடைத்து கொண்டாள்.

ஈஸ்வரன் ஹால் சோஃபாவில் சாந்தவி அறையை பார்த்து அப்படியே அமர்ந்து விட, பெரியவர்கள் இருவரும் அவர்களே பேசி தீர்த்து கொள்ளட்டும் என அவர் வேலையை பார்க்க சென்று விட்டார்.

அறைக்குள் வந்த சாந்தவியோ.. “அன்றைக்கு விட்டுட்டு போய்ட்டு இப்போ வந்து சாரியாம்… சாரி! உன் சாரி யாருக்கு வேணும்..?” என்று அழுகையில் ஊடே ஈஸ்வரனை திட்டி கொண்டிருந்தாள்.

ஈஸ்வருக்கு அவளின் கோபம் புரிய பொறுமை காத்தவன், அவளை தான் பார்த்து விட்டதால் இனிமேல் அறைக்குள்ளேயே இருக்க மாட்டாள் வீம்புக்கேனும் வெளியே வருவாள் என்று நினைத்து அவள் இருக்கும் திசை பார்த்து அமர்ந்து இருக்க, சாந்தவியோ.. இரவு சாப்பாட்டிற்கு கூட‌ வெளியே வராமல் ஈஸ்வரனை முற்றிலும் தவிர்த்து விட்டாள்.

ஈஸ்வரன் இரவு ஆகியும் ஹாலை விட்டு நகராமல் இருப்பதை பார்த்த ரத்தினம் “லேட் ஆகிட்டு சக்தி போய் படு. நாளைக்கு பேசிக்கலாம். அவ கோபமும் நியாயம் தானே..!” என்று கூறி ஈஸ்வரனை அவன் அறைக்கு அனுப்பி வைத்து விட்டு அவர்கள் அறைக்கு வந்தார்.

மாடியில் அவன் அறைக்கு வந்த ஈஸ்வரன்.. என்ன முயன்றும் நித்ரா தேவி அவனை தீண்டாமல் போக்கு காட்ட, ஒரு முடிவுடன் இறங்கி கீழே வந்தவன் ரத்தினம் தம்பதியர் அறை கதவை தட்டி விட்டு உள்ளே சென்றான்.

சாந்தவியின் மனநிலையை மாற்ற சற்று நேரம் தாயம் விளாயாடிவிட்டு அப்போது தான் படுக்க அயத்தமான ரத்தினமும், உமையாளும் ஈஸ்வரனை புரியாமல் பார்த்தனர்.

சாந்தவி அவன் ஒருவன் வந்ததே தெரியாதது போல் பெட்டை உதற அவளை முறைத்த ஈஸ்வரன் “மேல பயங்கறமா குளிருது… நான் இங்கேயே படுத்துக்குறேன்” என்றான் சாந்தவியை பார்த்து கொண்டே.

“குளிருதுனா ஏசிய ஆஃப் பண்ணிட்டு படு சக்தி..” என்று உமையாள் அக்கறையாக கூற, “அப்போ.. இங்க படுத்தா மட்டும் குளிராதா…?” என்று சாந்தவி இடக்காக கேட்க, “ஆமாடி மாடி தாண்டி பனி வீசாது…” என்று ஈஸ்வரனும் இடக்காகவே பதில் கொடுக்க, சாந்தவி அவனை முறைத்துவிட்டு திரும்பி கொண்டாள்.

மகனின் எண்ணம் புரிந்த ரத்தினம் “சரிடா இங்க எங்க படுப்ப..?” என்று கேட்க,

“அதான் இந்த கட்டில் இருக்கே.., இதுலயே அட்ஜஸ்ட் பண்ணி படுத்துக்குறேன்…” என்று சாந்தவியின் சிங்கில் பெட்டில் சென்று அமர, “மாமா அப்போ நான் எங்க படுக்குறது..?, வேணுன்மா பாத்ரூம்குள்ள போய் படுத்துக்கட்டுமா…?” என்று சாந்தவி எரிச்சலாக கேட்க,

“அது உன் இஸ்டம்…” என்ற ஈஸ்வரன், சாந்தவி பெட் சீட்டை எடுத்து மூட போக, அதை வெடுக்கென பிடுங்கி கொண்டவள் “விட்டா கட்டி இருக்குற சேலையையும் உருவிடுவான் போல…!” என்று முணுமுணுப்பாக திட்டி கொண்டே இரண்டு கட்டிலுக்கும் நடுவில் கீழே படுக்க, “அதான் விட‌ மாட்டேங்குறியே…” என்று ஈஸ்வரனும் முணுமுணுப்பாக கூறி படுத்து கொண்டான்.

ஈஸ்வரனை திட்டி கொண்டே படுத்த சாந்தவி நன்றாக உறங்கி விட நடு இரவில் ஏதோ கையில் சுரண்ட தூக்க கலக்கத்தில் இரண்டு முறை தட்டி விட்டவள் மூன்றாவது முறை பயத்தில் அலற போக அவளை கத்த விடாமல் அவள் வாயை பொத்தி கொண்ட ஈஸ்வரன் “ஏன்டி கூப்பாடு போடுற..?” என்றான் அதட்டலாக.

அவன் கையை தட்டி விட்ட சாந்தவி அவனை முறைத்து விட்டு திரும்பி படுத்து கொள்ள “தலை வலி தூக்கம் வர‌லை டி. ஸ்டிராங்க இஞ்சி டி போட்டு தாயேன்…” என்று மீண்டும் சாந்தவியை சுரண்ட, “எனக்கு இஞ்சி டி போட தெரியாது..” என்று சாந்தவி திரும்பாமலேயே பதில் கொடுக்க,

“சரி காபி போட்டு தா…” என்று கேட்க, “எனக்கு காபியும் போட வராது…, உங்களுக்கு ராத்திரி தான் தலைவலி வருமா..?” என்று சாந்தவி கோபத்தில் சிடுசிடுக்க,

“பின்ன இப்படி தளதளன்னு பொண்டாட்டி தனியா படுத்தா தலை வலி வராம என்ன செய்யும்..!” என்று அவள் கேட்காமல் புலம்பியவன் “சரி எனக்கு தனியா போக பயமா இருக்கு. நீயும் கூட வாடி. நானே டீ போட்டுக்குறேன்…” என்று ஈஸ்வரன் கெஞ்ச, போகாவிட்டால் தூங்க விடமாட்டான் என்று கடுப்புடன் சாந்தவியும் எழுந்து சென்றாள்.

சாந்தவி டைனிங் டேபிளிலேயே அமர்ந்து கொள்ள, ஈஸ்வரன் கிச்சன் சென்றவன், மிகவும் பழக்கம் போல் டீ தூள், இஞ்சி எல்லாம் சிறு தடுமாற்றம் கூட இல்லாமல் எடுத்து டீ போட்டவன் “உனக்கு டீ வேணுமாடி..?” என்று சாந்தவியிடம் கேட்க,

“வேண்டாம்…” என்ற சாந்தவி கோபத்தில் முகத்தை திருப்பி கொள்ள, ஈஸ்வரனும் ஒரு தோள் குலுக்களுடன் டீயை அருந்தினான்.

தன்னை கண்டு கொள்ளாமல் டீ குடித்த ஈஸ்வரனை அவன் அறியாமல் ஓர கண் போட்டு பார்த்த சாந்தவி “சன்னியாசம் போக போறானா..? இப்படி தாடி வளர்த்து வச்சிருக்கான்…! முகமே தெரியலை..” என்று குறைபட்டு கொண்டவள் “வேண்டாம்னு சொன்னதும் விட்டுட்டான்…, திமிர் பிடிச்சவன். கோபத்தை குறைக்க யோகா பண்ணி என்னத்துக்கு… திமிர் போகுதா பாரு…!” என்று அவனை திட்டி கொண்டே கிச்சன் சென்று ஃப்ரிட்ஜை திறந்து பார்த்தாள்.

ரத்தினம் எப்போதும் குளிர்பானங்கள் அதிகம் வாங்கி கொடுக்க மாட்டார் உடலுக்கு கேடு என என்வே சின்ன சைஸ் கோக், பெப்சி மட்டுமே இருக்க, “இது காரமா இருக்காதே…, நாளைக்கு மாமாவை காரமா‌ ஜுஸ் வாங்கிட்டு வர சொல்லி இவனை வெறுப்பேத்தி குடிக்கனும்..” என்று தனக்கு தானே பேசி கொண்டு மீண்டும் வந்து அமர,

அவள் செய்கையில் உள்ளுக்குள் சிரித்து கொண்ட ஈஸ்வரன்

வானத்தை விட்டு நிலவெங்கு விலகும்
வாசத்தை விட்டு மலறெங்கு விரியும்
உனக்காக நான் எனக்காக நீ
உயிர் வாழும் காலம் வரையும்
மோகத்தை விட்டு மனமெங்கு திரியும்
மேகத்தை விட்டு மழையெங்கு விளையும்
கொடி போல நீ மடி மீது தான் விழும்போது காதல் மலரும்…

என்று சந்தோசமாக பாடி கொண்டே டீயை ரசித்து குடித்தான்.

நிழல் தொடரும்…