நேசப் பரிமாணங்கள்

நான் நானாக…!

 

‘பூட்டப்பட்ட கதவுகளுக்குத்தான், சாவிகள் தேவைப்படுகின்றன, இதயத்துக்கல்ல…

என் அகம் அது தொலைந்ததும் உன்னிடம்தான்,

அடைந்ததும் உன்னிடம்தான்,

இப்போது அலைவதும் உன்னிடம்தான்’

 

தாய் மொழியென்றாலே அதிசயம்தான் என்பதாக சாய்வாக நேர்தியில்லாமல் எழுதப்படும் ஆங்கில எழுத்துக்கள் போலல்லாமல் மிகத்தெளிவாக, நான்கு வரிக்கிறுக்களை தன் நாட்குறிப்பில் கொட்டிக்கொண்டிருந்தாள் ஒருத்தி.

 

புத்தக மேசையில் கடைப்பரப்பட்ட, சிறார்களுக்கான பாடப்புத்தகத்தின் நடுவே அவளின் விரல்கள் பேனையை பிடித்துக் கொண்டு அசைவதும் குறிப்புக்களின் தாள்களைப் புறட்டுவதிலும் கருத்தாகவிருந்தது.

 

எழுதிய கவிதையிலும் ஒரு எழுத்துப்பிழை பல்லைக்காட்டவும், “கருத்தும் பிழைதான், கவிதையும் பிழைதான்” என இதழை வளைத்தவள் நாட்குறிப்பை மூடவும், அவளின் அலைப்பேசி தன் சிணுங்களை உணர்தவும் சரியாகயிருந்தது.

 

தொடுதிரையில் ‘சாவுமணி’ என்ற பெயர் அவள் கண்களில் பட்டது. அழைப்பைத் துண்டித்துவிட்டு, நாளைய நாளுக்கான பாடத்திற்கு தேவையான குறிப்பை தொகுக்கத் தயாராகவும் மீண்டும் அடுத்த அழைப்பு, இம்முறை ‘சங்கு’ என்ற பெயரைக் காட்டியது தொல்லைபேசி.

 

அவ் அழைப்பையும் அவள் ஏற்க மறுக்கவும், தொடர்சியாக ‘தாரை, தப்பட்டை, மலர்வளையம், சாவுக்கூத்து’ என்று ஒவ்வொரு பெயராகக்காட்டவும் கடுப்பானாள் அவள்.

 

“விடாது கறுப்பு மாதிரி தொடரும் அழைப்பு” என்று சத்தமாக பேசியவளின் செவியில் அடுத்த அழைப்புக்கான ஓசை கேட்கவும், உச்சஸ்தானியில் ஏறிய சினத்துடன் தொலைபேசியைப் பார்க்க ‘ஒப்பாரி’ என்ற திருநாமத்தை அது காட்டியது.

 

“என்னதான் உங்க பிராப்ளம்” எடுத்தவாக்கில் அவள் கத்தவும், மறுமுனையில், “காதுமா காதுமா” என்று நிஜத்திலும் அழுதுவடியும் குரல் கேட்டது.

 

“பச் அம்மா! இப்போ எதுக்கு ஆளுக்கு ஒருவாட்டி காஃல் பண்ணி தொல்லை பண்ணுறீங்க?” எரிச்சலாக வினவினாள். முதலில் அப்பா, பின் அக்கா, தம்பி, பாட்டி, தாத்தா என வரிசையாக அழைத்ததில் கடுப்பாக உணர்ந்தவள் அதனை கத்தலாக வெளிப்படுத்தினாள்.

 

“வேற எதுக்குடீ உன்னை கூப்பிடுவாங்க. அந்த தம்பி நம்பரை வாங்கி பேசப்போறேன்னு சொல்லிட்டு, உனக்கு மனநோய் இருக்கு ராத்திரி பத்துமணிக்கு மேலே யாரைப் பார்த்தாலும் கடிச்சி வைச்சிடுவேன்னு பொய் சொன்ன? அப்பா உன்மேல கோபத்துல இங்க கொந்தளிச்சு போய் உக்காந்துட்டு இருக்காரு” புடவைத் தலைப்பில் மூக்கை உரிஞ்சும் சத்தம் இவளின் காதில் நன்றாக விழுந்தது.

 

“பின்ன இஷ்டமில்லைனா விட்டுடனும். இதோட பத்துவாட்டி வந்தவனுங்கல ஓட விட்டிருக்கேன். இனியும் புத்திக்கு உறைக்கும்னு நினைக்கிறேன். சும்மா ஒப்பாரி வைக்காம போய் சாப்பிட்டு படுமா. வீட்டில எல்லாரும் சாப்பிட்டு இருபாங்க நீ மட்டும் தான் பாக்கியிருப்ப. போ போய் வேலையைப்பாரு. இன்னொரு வாட்டி மாப்புளனு பேச்சை எடுத்தனு வை, வீட்டுக்கு உன் கனவுல கூட திரும்பி வரமாட்டேன் பார்த்துக்கோ”  என்றவள் அழைப்பை நிறுத்திவிட்டு, தொலைபேசியைக் கட்டிலில் விட்டெறிந்தாள்.

 

இதற்கு மேல் பாடப்புத்தகத்தை அலசமுடியாது என்றெண்ணியவள், பூஞ்சிட்டுக்களின் சிற்றெழுத்துக்களிலாவது மன நிம்மதியை தேடலாம் என சிறுவர்களிடம் காலையில் வழங்கிய செயற்பாடான,

 

‘உங்களுக்குப் பிடித்த ஆசிரியர்’ எனும் தலைப்பில் வழங்கப்பட்ட குட்டிக் கட்டுரைகள் எழுதப்பட்ட தாள்களைச் சரிபார்க்க ஆரம்பித்தாள். ஒன்று, இரண்டு, மூன்று எனப் பார்வையைச் செலுத்தியவளின் கரங்களில் அடுத்துச் சிக்கியது என்னவோ அவளது மாணவி எழிலியின் கைவர்ணமே.

 

“மை ஃபேவரிட் டீச்சர்” என ஆங்கிலத்தில் அவள் வாசிக்கவும், அடுத்தவரியில் அவளின் பெயரே மின்னியது. “ஹேர் நேம் இஸ் காதுதாம்பினி” என வாசித்தவளுக்கு புன்னகையுடன் கண்ணில் நீரும் துளிர்த்தது. காதாம்பினி எனும் அழகு தமிழ் பெயரினைக் காதுதாம்பினி என உச்சரித்த ஒருவனின் முகம் பனித்த கண்களுக்கு நடுவில் வந்து சிரித்தது.

 

நானும் அவனும்…!

 

உச்சி வெயில் சுள் என்று முகத்தை தொட்டுச் செல்ல, ‘இங்க கஷ்டப்பட்டு படித்தால் கல்லூரியில் சந்தோசத்துக்கு பஞ்சமிருக்காது’ காலகாலமாக பாடசாலை ஆசிரியர்களின் அறிவுரையை நம்பிய ஜீவியாக அவ் பொறியியல் கல்லூரியினுள் காதாம்பினி நுழைந்தாள்.

 

தாமரபரணியாற்றின் தண்ணீரில் அணைகட்டி விளையாடிய கிராமத்துப் பெண்ணான  அவளுக்கு சென்னை மக்களையும், அவர்களின் நடையுடை கலாச்சாரத்தையும் நோக்கும் போது சற்று வியப்பாகவே இருந்தது. 

 

பயத்தை வெளிக்காட்டாத குணமும், அதீத துணிச்சலும் வாய்த்துடுக்கும் எப்போதும் அவளிடம் ஒட்டிக் கொண்டிருப்பதினால் நிமிர்ந்த நடையுடனே கல்லூரிக்குள் நுழைந்தாள்.

 

முதலாமாண்டு மாணவர்களுக்காக பகடிவதைகள் ஒவ்வொரு மரத்தின் நிழலிலும் அரங்கேர, இவளையும் விட்டுவைக்காமல் ஒரு ஐவர் படை பிடித்துக் கொண்டது.

 

“ஏய் இங்க வா” என ஒருத்தி அழைக்கவும், இவளும் வீராப்பாக நடந்து சென்று அவர்களின் முன் நின்றாள். “என்ன அக்கா” இவள் கேட்கவும், “பெயர் என்ன?” என்றான் அடுத்தவன். 

 

“காதாம்பினி” அழுத்தம் திருத்தமான இவளின் பேச்சும் தைரியமும் ஒரு வகையில் அக் குழுவினருக்கு பிடித்துவிட்டது என்றே சொல்லலாம். 

 

“கிராமப் பக்கமா ஊரு?” அடுத்தவள் கேட்கவும், “ஆமாக்கா” மீண்டும் அதே நிமிர்வு. “என்ன இருந்தும் ஊர்கார பொண்ணுனா ஊர்கார பொண்ணுதான். நல்ல தைரியமா பேசுற” ஒருத்தன் புன்னகைக்கவும் இவளும் புன்னகைத்தாள்.

 

“நம்ம காலேஜ்ல ரேகிங்னு ஹராஸ்மண்ட் எதுவும் பண்ண மாட்டோம்மா. சும்மா ஒரு ஃப்ரண்ட்லி பாண்டிங்காக தான் இந்த ரேகிங் சிஸ்டம். அதனால…” மற்றையவள் இழுக்கவும், “புரியலக்கா” என்றாள் காதாம்பினி.

 

“இருமா” என்று கையைக் காட்டிவிட்டு ஐவரும் யாரையோ தேட, இவளும் அவர்களின் பார்வை செல்லும் திசையில் திரும்பினாள். “டேய் தம்பி இங்கவாடா” காற்றில் அசையும் கேசத்தை கைவிரலால் கோதியபடி நடந்து கொண்டிருந்தவனின் முதுகை நோக்கி அவர்கள் குரல்கொடுக்க அவனும் இவர்களை நோக்கி நடந்து வந்தான்.

 

“எஸ், வை டிட் யூ கோஃல் மீ?” அவனின் நுனிநாக்கு ஆங்கில புலமையில் ஒரு நொடியில் காதாம்பினிக்குள் எதோ சில்லிட்டது. “டேய் டேய், அடங்கு. ஃபர்ஸ்ட் இயர்தானே?” என்று அவர்கள் வினவவும், “யாஹ்” என்று உதட்டை வளைத்தான்.

 

“நல்லதாப் போச்சு. இதோ பாரு இனி இந்தப் பொண்ணுதான் உன் ஃப்ரண்ட் பார்ட்னர். அதாவது நீங்க இரண்டு பேரும் சேந்து உங்க காலேட்ஜ் எக்ஸ்பீரியன்ஸ ஒரு நோட் போல எழுதி எடுக்கனும். அதை நாங்க இந்த காலேட்ஜை விட்டுப் போகும் போது உங்களுக்குப் பிடிச்ச சீனியருக்கு கிஃப்ட் பண்ணுரிங்க” என ஒருத்தி விளக்கவும், 

 

“சோ….” என்றான் அந்த ஆடவன். “இனி நீங்களே இன்ட்ரோ ஆகிடுங்க” என்று கூறிவிட்டு சீனியர் மாணவர்கள் அவர்களின் வகுப்பை நோக்கி நடந்து விட இவர்கள் இருவரும் தனித்து விடப்பட்டனர்.

 

“ஏய் வாட்ஸ் யூவர் நேம்?” சற்று அழுத்தமாக அவன் கேட்கவும், “காதாம்பினி” என்றாள். “வாட் காதுதாம்பினியா?” புரியாதவனாக அவன் வினவ, “கா, தா, ம், பி, னி” ஒவ்வொரு எழுத்துக்களாக சொல்லி விளக்கவும், “ஏதோ ஆம்பினி” என்றவன், 

 

“ஐ எம் வனமுகிலன். இந்த ரேகிங் எல்லாம் ஃபாலோ பண்ண முடியாது தான் பட் ஐ லைக் தீஸ் வே. அரகண்ட் ஆக இல்லாம ஃபன் புரோஸஸ்” என்றவன், பேசினான் பேசிக் கொண்டேயிருந்தான்.

 

தான் சென்னை வாசியெனவும், ஒரு அக்கா மாத்திரமுள்ளதாகவும், பெற்றோர் முயற்சியாளர்கள் ஏதோ வியாபாரம் மேற் கொள்வதாக கூறி விளக்கியவன் இறுதியில் இருவரும் ஒரே வகுப்பு என்பதையும் கண்டுகொண்டான்.

 

அவனின் வினாக்களுக்கு பதில் வழங்கினாலும், அவளின் முகவரியையோ குடும்பத்தை பற்றியோ அதிகமாக அவள் ஏதுமே குறிப்பிடவில்லை. அவனும் அவளுக்கு விருப்பமில்லை என விட்டுவிட்டான்.

 

நாட்கள் அதன்பாட்டில் நகரவும், இருவருக்கிடையிலான நட்பும் மொட்டாகி மலராகி விரிந்து முகிழ்ந்தது.

 

“ஆம்பினி! ஓய் வா வா, அம்மா இன்னைக்கு ஏதோ மீன் குழம்பு செய்தாங்களாம். எனக்கு உன் நியாபகமாவே இருந்திச்சு இந்தா சாப்பிடு” வனமுகிலன் ஒருபாத்திரத்தை அவள் முன் நீட்டினான்.

 

“வனா! ஏன்டா தினத்திக்கும் ஏதாச்சும் உன் வீட்டிலயிருந்து கொண்டு வந்து கொடுக்குற” முகத்தைச் சுருக்கினாள் காதாம்பினி. 

 

“அட போடி. நான் எல்லாம் வெளிய கூப்பிட்டாளும் நீ வாரது கிடையாது. ஹாஸ்டல் சாப்பாட்டை சாப்பிட்டு தேஞ்சு போய் கிடக்குற நீ.” என்றவனாக கன்னத்தில் கையைக் குற்றிக் கொண்டு அவள் குறிப்பு எழுதுவதை வேடிக்கை பார்த்தான்.

 

“என்னடா” அவனை ஏறிட்டு அவள் கேட்கவும், “எப்படி டீ இந்த அளவு படிப்ஸ்ஸா இருக்குற. கண்டிப்பா பேட்ச் டாப்பர் தான் போ” என்றவன் சிரிக்க, சிரிக்கும் போது அவனது வலது கண்ணின் ஒரு அங்குலம் இடைவெளியில் எழுந்த சுருக்கத்தை முதல்முதலாய் ரசித்தாள்.

 

“போடா டேய் வாயில நல்லா வருது. உன் நோட் புக் கொடு அதையும் முடிச்சிடுறேன்” என்றவள் அவளே அதையும் எழுத ஆரம்பிக்கவும், பேனையின் அசைவுக்கு ஏற்ப கையின் கண்ணாடி வளையல்கள் ஜதிபாடியது.

 

“ஆம்பினி. ஏய் ஆம்பினி” ராகமாக இழுத்தான். “எழுதவிடுடா” என்றாளவள், “எப்பவும் கண்ணாடி வளையல் தானா?” கேள்வியாக அவன் வளையலை நோக்க, “நல்லாயில்லையாடா?” என்கவும், “எனக்குப் பிடிச்சிருக்கு. இந்த சத்தம் நீ எழுதும் போது ரொம்ப கியூட்டா இருக்கு. எப்போவும் இப்படியே இருடீ” என்றவன் அவளின் உச்சிமுடியைச் செல்லமாக கலைத்துவிட்டு சிரித்தான்.

 

கல்லூரியில் அழகன் எனும் விம்பத்தில் நோக்கப்படுபவன் வனமுகிலன். சில பெண்மாணவிகள் காதாம்பினியிடமே கடிந்து விடுவதும், அவளிடமே அவனுக்குத் தூதனுப்ப முயற்சிப்பதுமுண்டு. நாட்கள் புயல் வேகத்தில் கடக்க, அவளுள்ளும் சலனம் ஒன்று எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. அவனை முதல் நாள் சந்தித்ததிலிருந்தே அவளுள் ஒரு துடிப்பு இடம்பெற இப்போது அது ஆட்பரிப்பாக மாறியிருந்தது.

 

அன்றொரு நாள் விடுமுறையின் போது, விடுதியிலே உறங்கிக் கொண்டிருந்தாள் காதாம்பினி. விடுதியில் பெறும்பாலானவர்கள் தங்களது வீட்டிற்குச் சென்றிருக்க, அவள் தனித்து விடப்பட்டதால் இரவு எட்டுமணிக்கே உறங்கியிருந்தாள்.

 

நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் தூக்கத்தில் புறண்டவள் எதன் மீதோ முட்டவும், சட்டென எழுந்து அமர்ந்தவள் மென்விளக்கொளியில் கண்டது வனமுகிலனையே.

 

இவள் உறங்கும் கட்டிலின் சட்டத்தில் காலைத் தூக்கிவைத்துக் கொண்டு, படிப்பதற்கு பயன்படுத்தும் கதிரையில் கைகளைக் கட்டிக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்தான்.

 

கண்ணின் கருமணி தெரித்து விழுமாறு விழித்தவள், அவனைத் தட்டி எழுப்பவும், “ஆம்பினி, ஹப்பி பர்த் டே டீ” என்று சிறிய கேக்கை நீட்டவும், அவனின் புஜத்தில் நருக்கென கிள்ளியவள்,

 

“வனா டேய் எப்படிடா இங்க வந்த. எதுக்கு வந்த?” என சத்தமிட்டாள். “கத்தாதடி”என்று அவளின் வாயை உள்ளங்கையால் பொத்தியவன், “உன் பர்த் டே மறந்து போச்சா? எப்படி வாரதாம் உங்க வார்டனைக் கரெக்ட் பண்ணித்தான். ஆக்சுவலி அவங்க ஹஸ்பண்ட் எங்க கம்பனில தான் வொர்க் பண்ணுறாரு. கைல கால்ல விழுந்து உன்னைப் பார்க்க வந்தா கிள்ளுற நீ” படபடத்தவன், அவளை விடுவித்து கேக்கை வெட்டி ஊட்டியும் விட்டான்.

 

“இந்தா கிஃப்ட். பிரிச்சுப் பாருடீ” சிறிய அட்டைப் பெட்டியை நீட்டவும் அவனை விழியெடுக்காமல் பார்த்தவள் அதனைப் பிரிக்க,  உள்ளே சில கண்ணாடி வளையல்களும் கோவில் குங்குமமும் ஒரு புடவையும் மடிக்கப்பட்ட கடுதாசியொன்றுமிருந்தது.

 

“ஏன்டா?” பிரவகமாக ஏதோ உடைப்பெடுக்க அவளுக்கு வேறு எந்த கேள்வியும் எழவில்லை. “எப்போவும் குட்டியாக் குங்குமம் வைச்சிருப்பியா அதுக்காக உனக்கு பிடிச்ச கோவிலுக்கு போய் எடுத்துட்டு வந்தேன். வேறு என்ன கிஃப்ட் கொடுக்குறதுனு தெரியலடீ அதுதான் உன் கிட்ட எனக்கு பிடிச்ச எல்லா விசயமும் இதுல இருக்கு” கண்களை சுருக்கி சிரித்தான்.

 

கடுதாசியை விரித்துப் பார்க்க, “முதல்நாளின் முதல் தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று தமிழில் எழுதி வைத்திருந்தான். அங்கங்கே சில எழுத்துப் பிழைகளும்கூட. “நீ தான் நல்லா கவிதை எழுதுவ. எனக்கு தமிழ் அவ்வளவா வராது. அட்ஜஸ் பண்ணிக்கோ” புன்னகையுடன் அவள் கூந்தலைக் கலைத்து விட்டான்.

 

பிறந்தநாள் கொண்டாட்டம் என ஒரு முழு நாளை அவனுடன் ஒதுக்குமாறு கட்டளையிட்டு காதாம்பினியை வனமுகிலன் தன் வசம்மேலும் இழத்துக் கொண்டிருந்தான்.

 

நானும் அவர்களும்….!

 

கல்லூரிக்காலம் சிட்டாக பறக்க, காதாம்பினி மற்றும் வனமுகிலன் நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்தனர். தங்களின் சீனியர் மாணவர்களுக்கான பிரியாவிடையில் அவர்கள் தயாரித்த ‘கல்லூரியும் காதாவனமும்’ எனும் குறிப்பேட்டை அவர்களிருவரின் விருப்புக்குறிய அக்காவொருத்திக்கு பரிசாகவும் வழங்கியிருந்தனர்.

 

இறுதியாண்டு என்பதால் மிகவும் கெடுபிடியான நாட்களே அவர்களை வரவேற்றது. அந்நாட்களுடன் சேர்த்து ஒரு புதுமுகத்தாளையும் வரவேற்றனர். 

 

ஈழமதியி, நவநாகரிய மங்கையாக இவர்களின் வகுப்புக்குள் அடியெடுத்து வைத்தாலும் சகமாணவர்கள் அனைவரும் காதாம்பினியைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கவும் அவளுள் காதாம்பினி மீது ஒரு வகை வெறுப்பு மேலிட்டது.

 

மாநிறத்துடன், கிராமப்புறங்களுக்கு உரிய அழகுடன் சாதாரண நூல் சுடிதார்களில் நீண்ட கூந்தலைப் பிண்ணி முடிந்திருக்கும் காதாம்பினியை ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது என்ற மனநிலை அவளை தூபமிட மேலும் வசிகரமான வனமுகிலன் மீதும் அவளுக்குள் ஆர்வம் எழுந்தது.

 

“ஹாய் கையிஸ். முகில் அண்ட் காதாம்பினி ரைட்” என அவர்களிருவரிடமும் அறிமுகப்படலத்தை நிகழ்த்தி மெல்ல மெல்ல இருவரின் நட்புக்குள்ளும் தானும் புகுந்து கொண்டாள்.

 

ஆரம்ப நாட்களில் வனமுகிலனுக்கு ஈழமதியியின் மீது நட்பு எனும் பந்தம் உருவாகாமலே விலகி நடக்க ஆரம்பித்தான். அதிலும் தனது காதாம்பினியிடம் இவள் உரிமை எடுப்பதா என்ற சினம்கூட துளிர்த்தது.

 

காதாம்பினி நாளாக நாளாக ஈழமதியினை உற்ற தோழியாகவே பாவிக்க ஆரம்பித்தாள் ஆனால் அவளுடைய வனமுகிலனுக்கான இடத்தை விட்டுக்கொடுக்க ஒரு போதும் அவள் தயாராகவிருக்கவில்லை.

 

“முகில் ஏன் என்கிட்ட பேச மாட்டுற” வனமுகிலனிடம் நேரடியாக ஈழமதியி வினவவும், “அப்படிலாம் இல்லையே” என்றவன் முகத்தை முறிக்கக் கூடாது என்பதற்காக சாதாரணமாக பழகவும் ஆரம்பித்தான்.

 

நான்காம் ஆண்டின் செயற்திட்ட பணிகள் ஆரம்பிக்கும் போது வனமுகிலனுக்கு பொறுப்பாக ஒரு விரிவுரையாளரும் காதாம்பினி மற்றும் ஈழமதியிற்கு வேறொரு விரிவுரையாளரும் வந்தனர்.

 

“ஆம்பினி!.யூ கேன் டூ இட். கண்டிப்பா பேட்ஜ் டாப்பர் ஆகுறடீ. புராஜெக்ட்ட சரியாப்பண்ணு நான் இருக்கேன் எப்பவும்” என்று அவளை ஊக்கப்படுத்தியவன், அவனது வேலையிலும் கருத்தாகவிருக்க, ஈழமதியி தனது ஆட்டத்தை ஆரம்பித்தாள்.

 

செயற்திட்டத்தில் வனமுகிலன் எடுத்துக் கொண்ட தலைப்பும் ஈழமதியின் தலைப்பும் சற்று ஒற்றுமை கொண்டதால் அவனிடம் உதவி என கைநீட்டி, அதிகமான நேரங்களை அவனுடன்செலவிட ஆரம்பித்தாள். முதலில் தயங்கிய வனமுகிலன் இப்போதெல்லாம் காதாம்பினியைத் தவிர்த்து ஈழமதியியுடன் பழக ஆரம்பித்தான்.

 

ஒரு நாள் தரவுகளைச் சேகரிக்க, ஈழமதியியுடன் வெளியில் சென்ற காதாம்பினியிடம், “காதாம்பினி! எனக்கு…எனக்கு” என இழுத்தாள் ஈழமதியி. 

 

“பசிக்குதா மதி? எதுவும் வாங்கி..” அவளின் பேச்சைத் தவிர்த்தவளாக, “காலேஜ்ல எல்லாப் பசங்களும் நீயும் முகிலும் லவ்வர்ஸ்னு பேசிக்குறாங்க. ஆனா அப்படிக்கிடையாதுல? முகில் ரொம்ப வசதியானவன் உன்னை மாதிரி கிராமத்துப் பொண்னை அவன் லைஃப் பார்ட்னரா ஏத்துக்குவானா என்ன? அதுவுமில்லாம நானும் அவனும் லவ் பண்ணுராேம். ஆனா பாரு இந்தப் பசங்க உன்னையும் அவனையும் சேர்த்து வைச்சுப் பேசுது. அதனால எனக்கு நீ ஒரு உதவி பண்ணுடீ. இனி அவன் கிட்ட இருந்து விலகி போயிடு. அவனே இப்போ உன் கிட்ட டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணுறான்னா அதுக்கு காரணமும் இதுதான்டீ. பிளீஸ் அவனை விட்டுடு.” நீண்டதாக பேசி காதாம்பினியின் மனதை வினாடியில் விதிர்விக்க வைத்தாள்.

 

அவளின் வேண்டுகோள் கூட காதாம்பினிக்கு உறைக்கவில்லை. வனமுகிலனுக்கு தான் பொறுத்தமில்லையாம். அதிலும் ஏன் இவளை காதிலிப்பதையாவது தன்னிடம் சொல்லியிருக்கலாமே என்ற ஆதங்கம் அதிகரிக்க அதிகரிக்க, அடுத்து வந்த நாட்களில் வனமுகிலன் உட்பட  அனைவரையும் தன்னிலிருந்து தூர நிறுத்திக் கொண்டாள்.

 

நானும் தனிமையும்…!

 

எழியின் கட்டுரையினை வாசித்த காதாம்பினி, தனது கல்லூரி நாட்களையும் அதனுடனான அவளது ‘வனா’ எனும் அவளின் நண்பனையும் நினைவுகூர்ந்தாள். சென்னையின் கல்லூரிக் கல்வியை முடித்து ஐந்து வருடங்கள் ஓடிவிட்டிருந்தன.

 

முதலில், வனமுகிலனின் சொற்படி கல்லூரியில் முதலிடம் வந்தவள், பிரியாவிடையன்று யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஊருக்கு கிளம்பிச் சென்றிருந்தாள். அழைப்பேசி இலக்கம் சமூக வளையத்தள கணக்குகள் அனைத்தையும் முடக்கிவிட்டு, தனக்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டாள்.

 

மனதில் அதீத சஞ்சலமென்று குத்திக் குடைந்த காலமது. தனக்கான துணையாக தனிமையைக் கையிலெடுத்தவள், வீட்டினரிடம் கூட அன்டிக்கொள்வதில்லை. விவசாய நடுத்தரக் குடும்பமாகவிருப்பினும் காதாம்பினியை சுயேட்சையாக வளர்த்து விட்டிருந்ததனால், 

 

எடுத்த எடுப்பில் யாரும், “ஏன் காது தனியா இருட்டுல உக்காந்து இருக்க?” , “காது அடுத்து எதுவும் படிக்கலாம்ல?”, “காது சென்னைல ஐடி கம்பனில நல்ல வேலைக்கு ஆஃபர் வந்திருக்கு போகலாம்ல?” , “காது இஷ்டம்னா சொல்லு கல்யாணம் பண்ணி வைச்சிடுறோம்” என்று கேள்விகளைத் தொடுத்ததால் முகத்தை திருப்பிக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள். 

 

“ஆம்பினி இந்த வளையல் உனக்கு…” வனமுகிலன் அவளுக்கு பொறுத்தமாகவிருக்கிறது என்று கூறிய அனைத்தையும் துரந்தவள், தன்னையும் மெல்லத்துரந்து பித்தாகி ஒரு வருடம் அலையவும், அவளின் அக்கா தான் பணிபுரியும் பள்ளிக்கு ஒரு நாள் இவளை அழைத்துச் சென்றிருந்தார்.

 

“மிஸ்” என்று வாண்டு ஒன்று காதாம்பினியின் புடவைத் தலைப்பை பிடித்து இழுக்கவும், முட்டியிட்டு அமர்ந்து அக்குழந்தையை அணைத்தவள் ஒரு முடிவுக்கு வந்தவளாக, ஆசிரியராக அதுவும் குட்டிக்குழந்தைகளுக்கு ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என அதற்கான கற்கை நெறியைப் படிக்க ஆரம்பித்தாள்.

 

“அப்பா, அம்மா எனக்கு பெங்களூருல வேலை கிடைச்சிருக்கு. நீங்க வேணாம்னு சொன்னாலும் அங்க போய்த்தான் தீருவேன். நான் அனுமதி எல்லாம் கேட்க இதைச் சொல்லல. ஒரு அறிவிப்பாக இருக்கட்டும்னு…” அறைக்குள் புகுந்தவள், அடுத்த நாளே பெங்களூரில் தனியார் பாடசாலையில் ஆசிரியராக கடமையேற்று ஒரு பெண்கள் விடுதியிலும் தங்கிக் கொண்டாள்.

 

மழலையின் வாசம், கொஞ்சல், சிரிப்பு, மொழி என இப்போது அவளின் தனிமைக்கான துணை பிஞ்சுகளின் கையெழுத்துக்களில் உயிர்ப்பெற்றது. வயது செல்கிறது என பெற்றவர்கள் வரன்பார்க்க, அனைத்ததையும் பொய்க் காரணம் கூறித் தட்டிக் கழிப்பவள் மனதில் வனமுகிலனே.

 

இத்தனை ஆண்டுகளில் வனமுகிலனுக்கும் ஈழமதியிற்கும் நிச்சயம் திருமணம் முடிந்து குழந்தை கூடப்பிறந்திருக்கும் என நம்பியவளுக்கு அவனை மறந்து தனக்கான வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொள்வது சாத்தியமற்ற ஒன்றாகவேயிருந்தது.

 

“ஆம்பினி! ம்ஹ் ஆம்பினி ஆம்பினினு சொல்லி சொல்லி என்னைப் பைத்தியம் ஆக்கிட்டான். எழிலியைப் பார்க்கும் போது எல்லாம் அவன் நியாபகம் வந்துட்டே இருக்கு. இப்போ அவனுக்கும் குழந்தை பிறந்திருக்குமில்ல? பொண்ணா இருந்தா என் பெயரை வைச்சிருப்பானா? நான் தப்பு பண்ணுறேனே, அவன் இப்போ குடும்பஸ்தன் இன்னுமா என்னால அவனை மறக்க முடியல?” எழிலியின் கட்டுரையை வாசித்தவள் கண்ணாடியில் தன் விம்பத்தைப் பார்த்துக்கத்த,

 

“எப்படி முடியும். ஃப்ரண்டு ஃப்ரண்டுனு சொல்லியே அவனை லவ் பண்ணித்தொலைச்சிட்டேன். அஞ்சு வருஷமாச்சு இன்னும் முடியல. விடு காதாம்பினி, எப்போவும் கடைசிவரை அவனோட ஆம்பினியா அவனையே மனசுல நினைச்சிட்டு வாழ்ந்துடலாம்” தினக்கூத்தாய், வழக்கமான சுய சமாதானத்தில் இறங்கியவள், கட்டிலில் சென்று தலையணைக்குள் முகம் புதைத்தவள் விம்மி வெடிக்கத்தொடங்கினாள்.

 

நான் அவனாகவே…! 

 

தினமும் தொடரும் தேடல்களாக ஆதவன் விசும்பில் ஓட, தாமதமாக எழுந்த காதாம்பினி அவசரக்குளியளைப் போட்டவளாக கையில் கிடைத்த புடவையொன்றை அணிந்து கொண்டு பாடசாலைக்கு கிளம்பிச் சென்றாள்.

 

“குட் மார்னிங் மிஸ்!. பிரிண்சிபால் உங்களை பிரேயர் ரூம்க்கு வரச்சொன்னார்” என்று வாசலிலே அலுவலக உதவியாளர் சொல்லிச் செல்லவும், அவளும் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றாள்.

 

விளக்குகள் அணைக்கப்பட்டு இருட்டாக இருந்த அறையை ஆச்சரியமாக அவள் விழிக்க, “ஹாப்பி பர்த் டே டூ யூ” என்று வாழ்த்துப் பாடலுடன் விளக்குகளும் உயிர்ப்பெற்றது.

 

சற்று யோசனையாக முகத்தைச் சுருட்டியவள் பின் யூகித்தது இன்று அவளுடைய பிறந்த தினமென்பதே. அனைவரும் வாழ்த்தி கேக் வெட்டி என ஒரு மணி நேரத்தைக் கடத்திச் செல்லவும், பின் காதாம்பினி அவளுடைய வகுப்பறைக்குச் சென்றாள். அங்கும் அவளது குட்டிச் சிட்டுக்கள் வாழ்த்த, இளநகையைத் தவழவிட்டாள். இது புதிதாக நடக்கும் ஒன்றல்லவே. அனைத்து ஆசிரியர்களுக்கும் அவர்களின் ஜனன தினத்தின் போது இவ்வாறான வாழ்த்துக்கள் கிடைக்கப்பெறும்.

 

“தேங்ஸ் குட்டீஸ். லெட்ஸ் ஸ்டார்ட் தீ லெசன்” பாடத்தை ஆரம்பிக்க புத்தகத்தை புரட்டவும், ஐந்து வயதான எழிலி அவளின் முன் வந்து நின்றாள்.

“வாட் எழிலி?” காதாம்பினி சிரிக்கவும், தானும் சிரித்த எழிலி “இ..இந்த சாரி அழகு..அழகா” தமிழில் தடுமாறினாள்.

 

“என்னடாமா?” எழுந்து அவள் முன் மண்டியிடவும், “இந்த புடவைல நீங்க அழகு” ஒவ்வொரு சொல்லாக திக்கி திக்கி கோர்த்தவள், தனது கையிலிருந்த ஒரு பெட்டியை நீட்டினாள். 

 

“பூவையைத் தழுவும் புடவை, பூவைக்கு ஆடையா? இல்லை அவளின் வனத்திற்கு தரிசனத்தடையா?” அட்டைப்பெட்டியின் மீது தமிழ் எழுத்துக்கள் மின்னின. அவளின் வனாவின் எழுத்துக்கள் ஆனால் எந்த எழுத்துப் பிழையுமில்லாமல்.

 

உடனே அவள் தனது புடவையை நோக்க வனமுகிலனிடம் முதல் பிறந்தநாள் பரிசாக கிடைத்த புடவையை உடுத்தியிருந்தாள். கைகள் மெல்ல நடுக்கமெடுக்க, பரிசுப் பெட்டியைத் திறந்தாள். சில கண்ணாடி வளையல், குங்குமம், புடவை கூடவே மல்லிச்சரடு மற்றும் மஞ்சட்கயிறு.

 

தலை கிறுகிறுவென சுற்றவும், தன்னைச் சமப்படுத்திக் கொள்ள மேசையில் கை ஊன்றிவள் மூச்சை இழுத்துவிட்டு காற்றாகிப் போன குரலில் “யாரு?” என்றாள் எழிலியிடம்.

 

“வனா மாமூ” எழிலியிடம் இப்போது அதே சுருங்கிய கண்கள் சிரித்தது. “எ..” காதாம்பினியின் கேள்விக்கு முன்னமே, “கார்ல” என்றாள் எழிலி.

 

அடுத்த இரண்டு நிமிடங்கள் எப்படி சுற்றியது என்று காதாம்பினியிடம் கேட்டால், பதில் பூச்சியம் தான். மாடிப்படிகளில் தடதடவென ஓடினாள். ஜீவ நதியொன்று பொங்கிப் பெருகி கடலைச் சேருவது போல அவளின் வனமுகிலனைத் தேடி ஓடினாள்.

 

கடைசியில் காணக்கிடைக்காத ஒன்றைக் கண்டது போல பாடசாலை வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது சாய்ந்து நின்ற வனமுகிலனைக் கண்டும் விட்டாள்.

 

“வனா” மூச்சிறைக்க அவள் இதழ் மெல்ல அசைக்கவும், “ஆம்பினி” என்று கையை விரித்தான் அவன். அடுத்த கனமே அவனின் மார்பினில் புதைந்து ஓவென அழுது தீர்த்துவிட்டாள். ஐந்து வருடம் கண்ணில் அணைகட்டிய உவர்நீர் அவனின் மார்புச்சட்டையை நனைத்து ஈரமாக்கியது.

 

அவளின் முதுகை வருடி அவன் ஆதரவாக, “போதும்டீ” என்றான் கெஞ்சலாக, உடனே அவனினை தூரத்தள்ளியவள், வந்த வேகத்தில் திரும்பி நடந்தாள்.

 

“ஏய் காதுதாம்பினி நில்லு” என்று கத்திக் கொண்டே அவளின் கையைப் பிடித்து இழுக்க, “லீவ் மீ” எனக் கத்தியவள் அவனைத்திரும்பி முறைத்தாள்.

 

“என்னடீ” சலிப்பாக கேட்கவும், “எப்படியிருக்க வனமுகிலன். மதி எப்படியிருக்கா?” கேள்வி முடியும் முன்னே அவளின் கன்னத்தில் இறங்கியிருந்தது அவன் கரங்கள்.

 

“மனசுல என்ன தியாகச்செம்மல்னு நினைப்பா? அவ பேசவேண்டாம்னு சொன்னாளாம், இவ தூக்கிப் போட்டுட்டு போனாளாம்” என்றவன் மீண்டும்,

 

“உனக்கு மண்டையில இருக்குற சரக்கு படிப்புக்கு மட்டும் தானாடீ? ஒருத்தன் உன் பின்னால குட்டி போட்ட பூனை மாதிரி சுத்துறான். நீ என்னடானா அவன் வேற ஒருத்தியக் காதலிக்கான்னு நினைச்சிட்டு, எங்கிருந்தாலும் வாழ்கனு வந்துடுவியா? ஈழமதியி என்ன பண்ணினா தெரியுமா?” என்றவன்,

 

ஈழமதியி எப்படியாவது வனமுகிலனையும் காதாம்பினியையும் பிரிக்க வேண்டும் என்பதால், காதாம்பினியிடம் பொய் கூறியது போல முகிலனிடமும் கூறியிருந்தாள். அதாவது காதாம்பினி செயற்த்திட்டத்தில் அதிக கவனம் செலுத்தாமல் இருப்பதாகவும் தனது படிப்பைக் கெடுத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினாள். இதற்கு காரணம் முகிலனின் மீதான அவளின் காதலே எனவும் ஓதினாள். முகிலனோ அவளின் படிப்பை நோக்காக கொண்டு சற்று விலகியிருந்து பின் அனைத்தும் முடிந்தவுடன் பேசிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்.

 

“உன் மேல இருக்குற பொறாமைல அவ புகைஞ்சா நீ யாருக்கும் சொல்லாம லாஸ் டே ஓடி வந்துட்ட. கொஞ்சமாச்சும் என் கிட்ட கேட்டு இருக்கலாம்ல?. என் சட்டைக் காலரைப் பிடிச்சு ஏன்டா அவாயிட் பண்ணுறனு கேட்டு இருக்கலாம்ல? முடியலடீ முழுசா அஞ்சு வருஷம் உன்னைத் தேடி தேடியே நொந்து போயிட்டேன்” என்றவன் கடைசிவாக்கியத்தின் போது அவளை இறுக்கி அணைத்துக் கொள்ள அவனின் துளி நீர் அவளின் முதுகில் வீழ்ந்தது.

 

“எப்படிடா?” தடுமாற்றமாக அவள் வினவவும், “வா” என அவளை இழுத்து காரினுள் தள்ளியவன், உள்ளே அமர்ந்து பேச ஆரம்பித்தான்.

 

“ஃபேர்வல் அப்போ, உன்னைத் தேடினேன். நம்ம ஜூனியர் பசங்க நமக்கு இரண்டு பேருக்கும் ஒரு ஸ்லேம் புக் கிஃப்ட் பண்ணினாங்க. அதைக் கொடுத்துட்டு, என்னையும் உன்க்கிட்டவே கொடுக்கலாம்னு வந்தேன். அப்போதான் ஈழமதியி யாருக்கிட்டையோ நம்ம விசயத்தை பேசிட்டு இருந்தா. அவளுக்கு கன்னத்தில சப்புனு ஒன்னு விட்டுட்டு ஹாஸ்டலுக்கு வந்தா நீ ஊருக்குப் போயிட்டதா சொன்னாங்க. உன் அட்ரஸ் நீ எப்பவும் சொன்னதே கிடையாது. சரி காலையில காஃல் பண்ணி பேசிக்கலாம்னு விட்டா, உன் ஃபோன் ரீச் ஆகல.

 

அப்போ தான் அக்காவுக்கு எழிலி பொறந்து இருந்தா. ஒரு வாரம் போயிடட்டும்னு பார்த்தா, மாமா லண்டன் ஆபிஸ்ஸ பாத்துக்க ஆள் இல்லைனு அங்க அனுப்பிட்டாங்க. மூனு மாதமா முப்பதாயிரம் தடவை உனக்கு காஃல் பண்ணியிருப்பேன். சென்னை வந்து காலேஜ்ல உன் அட்ரஸ் வாங்கலாம்னு பார்த்தா, ஃபயர் ஆக்சிடன்ல எல்லா டாக்குமென்ட்ஸ் எரிஞ்சு போச்சு” பெருமூச்சை விட்டவன், அவளின் கையை எடுத்துக் கன்னத்தில் அழுத்திக் கொண்டு,

 

“உன்னை முதல் தடவ பார்த்தப்போ எதுவும் தோனலைடீ. ஆனா பார்க்கப்பார்க்க இந்த ஆம்பனி இங்க வந்து ஒட்டிக்கிட்டா” என்று தனது நெஞ்சை சுட்டிக் காட்ட, “வ..வனா, என்ன சொல்ல உனக்கு எப்படியோ அதுதான் எனக்கும். ஆனா உனக்காக எதையும் செய்யனும்னு தான் மதி சொன்னதும் விட்டுட்டு வந்தேன். ஐ எம்…” என்றவளிடம்,

 

“விடுடீ இந்த பிரிவு என்னைப் போல உனக்கும் வலினு எனக்கும் தெரியும். தேடினேன்டீ, ரொம்ப தேடினேன். ஐடீ கம்பனி முழுக்க தேடினேன். ஆனா நீ எங்கேயும் கிடைக்கல. ஒரு வாரத்துக்கு முன்ன தான் எழிலிய இங்க விட வரும் போது உன்னைப் பார்த்தேன். அதுவும் வீட்டுல எங்க மிஸ் அப்படி இப்படினு சொல்லிட்டே இருப்பா ஆனா உன் பெயரைச் சொல்லவே மாட்டா. எனக்கும் அவ சொல்லச் சொல்ல உன் நியாபகமா இருக்கும். அக்கா அவளை விடச் சொல்லவும் ஏதோனு தான் வந்தேன். ஆனா நீ..” அவன் கண்கள் கலங்கி குட்டையாக, அதைத் துடைத்துவிட்டவள்,

 

“எழிலியைப் பார்க்கும் பேதெல்லாம் உன் நியாபகம்தான் வரும் வனா. தினமும் அவ முகத்துல உன்னைத்தான் பார்த்தேன்” அவளும் அழ ஆரம்பிக்க, அவன் துடைத்துவிட்டவனாக,

 

“ஆம்பினி எங்கூடவே வந்துடுரியா?” கையை நீட்டினான், அவளும் அவன் உள்ளங்கையில் முகம் புதைக்க, “மேடம்க்கு ராத்திரியான கடிக்குற வியாதியிருக்காமே?” என்று கலகலக்க, 

 

“அப்போ?” என்றவளின் முடியைக் கலைத்தவன், ” ஸ்வீட் சப்ரைஸ் கொடுக்கலாம்னு உன் வீட்டு நம்பர் கண்டுபிடிச்சி பேசினேன். அவங்களும் நீ பேசுவனு சொன்னாங்க. ரொம்ப நாளுக்கப்புறம் பேசுறம்னு ஆர்வமாக பேச ஆரம்பிச்சா, ஹலோ சொல்லும் முன்னே கத்துர” என்று சொன்னவன் அவளின் கிள்ளலைப் பரிசாக வாங்கிக் கொண்டான்.

 

“வனா! போடா” என தலையைச் சிலுப்பவும், “போடாவா இல்லை வாடாவா?” என்றவன், “நீ வேணும்னா ராத்திரி கடிச்சுக்கோ ஆனா நான் இப்போவே” வாக்கியத்தின் முடிவுரையை அவளின் வடிவழகான அதரங்களில் நிகழ்த்தினான். மூன்றெழுத்தின்  பரிமாணங்கள் வட்டமாகி சதுரமாகி வாழ்ந்து வளர்ந்து காதலாகி இனி அவனவள் ஆக்கியது.

 

இனி அவளுடன் என்றும் அவனே..!