நேசமுரண்கள் – 7
நேசமுரண்கள் – 7
நேசமுரண்கள் – 7
தென்றலை எதிர்ப்பார்க்க…
சூறாவளியாக நீ.
உன்னை வெறுத்து போய்
நான் நிற்க…
உறவுகள் வெறுமையாய்…
வாழ்வில் வசந்தம் வேண்டாம்…
புயல் வீசாமல் இருந்தால் போதும்.
இன்பம் வேண்டாம்…
நிம்மதி போதும்.
மெல்லிய காற்று தன் பூங்கரங்கள் கொண்டு முகத்தில் தடவி அவளின் கோபத்தை குறைக்க முயன்றாலும் முடியாமல் தோற்றுத்தான் போனது வினோதாவிடம்.
மெல்லவும் முடியாமல் முழுங்கவும் இயலாதது போன்று, எதையும் செய்ய முடியாத கையறு நிலை வினோதாவிற்கு, அவளின் மனதில் உள்ள ஆத்திரம் முழுவதும் முன்னிருக்கையில் அமர்ந்து ஒன்றும் தெரியாதது போல் இயல்பாக காரை ஓட்டிக் கொண்டிருந்த ‘மாண்புமிகு மங்குனி அமைச்சர் விஜயவர்மன்’ மீதுதான் இருந்தது.
‘பாவி! இவனே பிளான் பண்ணி பண்றானா?, இல்லை இவனுக்கு இப்படி அமையுதானு தெரியலையே… எனக்கு என்னடான்னா சென்னையில் இருக்க அவனோட வீட்ல இருக்கிறதுக்கே அவ்வளவு கடுப்பா இருக்கு… இதுல’ என்று யோசித்து கொண்டிருந்தவளை முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்பி விட்டான் மழையரசன்.
சட்டென பிடித்து விட்ட மழை அந்த மாலை நேரத்தின் மோகனத்தை அதிகரிக்க முயல, அதற்கு வென்சாமரம் வீசியது மெல்லிய குளிர்காற்று.
வர்மனின் அருகே அமர்ந்திருந்த பிள்ளைகள் இரண்டும் அந்தி சாயும் பொழுதின் அழகை பார்த்து ரசிக்க… அவர்களின் குதூகலம், ரசனை எதுவும் சிறிதும் பாதிக்காதவளாய் காரின் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்த மனைவியின் முகத்தின் மீது வர்மனின் பார்வை பதிந்து விலக…
மலர் போன்ற வதனத்தில் பணிதுளியாய் மின்னிய நீர் முத்துக்களின் மீது பொறாமை வந்தது அவனிற்கு.
அவள் பக்கம் மட்டுமே சிறிது திறந்திருந்த கார் கண்ணாடியை மூடியவன். ஏசியை மிதமான அளவு வைத்துவிட்டு பிளேயரில் இளையராஜாவின் இசையினை ததும்ப விட்டான்.
மாலை நேர பயணம் மழைச்சாரலுடன், மெல்லிய குளிர்ச்சி காரினுள் சூழ்ந்திருக்க, ராஜாவின் இசையில் எஸ் பி பி யின் குரல் இந்த ஏகாந்த சூழ்நிலைக்கு மணிமகுடம் போல் இருந்தது.
மெல்ல வினோதாவின் ஆத்திரம் கட்டுக்குள் வர… கோபம் விலகிய அவளின் அழகிய விழிகளில் சிறிது பயம் வந்து ஒட்டிக் கொண்டது, தாங்கள் போகும் இடத்தை நினைத்து.
சூழ்நிலை அவளின் மனதை சிறிது சமன்செய்து இருக்க… தனது பயத்தை அறிந்தவளாய், அதை அடக்க வழி தெரியாமல் இரண்டு வருடங்களுக்கு பிறகு முதல் முதலாக மெல்லிய குரலில் “விஜய்” என்று கணவனை இல்லை இல்லை முன்னாள் கணவனை அழைத்தாள்.
மனைவியின் இந்த அழைப்பில் விஜயவர்மனின் உடல் சிலிர்த்தது. ஏறக்குறைய இருபத்தி ஐந்து மாதங்களுக்கு பிறகு கேட்க்கும் இந்த வார்த்தையில் அவனின் கைகளில் கார் ஒரு நொடி தடுமாறி சீரானது.
ஆரம்பித்துவிட்டாள் தான் ஆனால் அதற்கு மேல் ஒன்றும் பேச முடியாமல் பழைய நினைவு வார்த்தைகள் தொண்டையில் அடைக்க அமைதியாக மாறி விட…
அவளின் தவிப்பு எதற்கானது என உணர்ந்து கொண்டவன் “அம்மா எதுவும் சொன்னாங்களா வினு?” என்றான் மெல்லிய குரலில்.
‘அம்மா’ என்ற அவனின் வார்த்தையும் வர்மனின் தடுமாற்றம் நிறைந்த குரலும் அதுவரை சற்றே இளகியிருந்த அவளின் மனதை கடினபட போதுமானதாக இருக்க, “ஆஹா… ரொம்ப கரிசனம் தான் உங்க கிட்ட பேசினதில்ல ஒரு வார்த்தை குறைவில்லாமல் என்கிட்ட சொன்னாங்க, அதுவும் ரொம்ப அன்பா.” என்றாள் கோபமும் குத்தலுமாக.
அவளின் மாமியார் பேசிய சில வார்த்தைகள் பெண்ணவளின் மனதை சுக்குநூறாக போதுமானதாக இருந்தது.
அன்று கணவனின் செயல்களில் மனதிற்குள் உழன்று கொண்டிருந்தவளின் கவனத்தை கவர்ந்தது மாமியாரிடம் இருந்து வந்த அழைப்பு.
‘எடுப்பதா வேண்டாமா?’ என மனதிற்குள் கேள்வி அலை அடிக்க, எதற்கும் சுலபத்தில் அழைக்காத அருளாசினியின் தொலைபேசியை அலசியம் செய்ய முடியாத வினோதா போனை எடுத்தாள்.
“அருளாசினி பேசுறேன்” என்றார் அவளின் மாமியார் தனக்கே உரிய அழுத்தமான குரலில்.
“சொல்லுங்க அத்தை” என்ற வினோதா பதிலில் வெடித்துவிட்டது அவரின் வாய்ப்பூட்டு.
“என்னத்த சொல்றது அத்தா… நீங்க ரெண்டு பேர் பண்ண கூத்துல கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் பிள்ளைகளை கண்ணுல காட்டல… ஊரு முழுக்க சீக்கா இருக்க இந்த நேரத்துல கூட எங்கள வந்து பாக்கணும்னு உனக்கு தோணல இல்ல…” என்றவர்.
சில நொடி மௌனத்திற்குப் பிறகு “பிடிவாதத்தை பிடித்து தொங்காமல், வீட்டுக்கு வந்து சேருங்க, என் பேரன், பேத்தியை கூட்டிக்கிட்டு” என்றவர் அவளின் எந்த வித சமாதானங்களையும் கேட்க விருப்பம் இல்லாதவர் போல் அழைப்பை அணைத்து விட்டார்.
அந்த வார்த்தைகள் அட்சரம் பிசகாமல் அவளின் நினைவில் வந்தது இப்போது.
பெண்ணவள் எண்ணியது போல் அவளிடம் பேசிய வார்த்தைகளை மட்டுமே வர்மனிடம் அவனின் தாய் பேசவில்லை.
வினோதாவிடம் ஆற்றாமையாய் வெளிப்பட்ட அருளாசினியின் வார்த்தைகள் மகனிடம் கோபத்தீயாய் வந்து விழுந்தது.
அன்றைய வினோதாவின் நிலை கண்டு அன்னையிடம் பேசாத மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டு, மறுநாள் காலை முதல் வேலையாக தனது தாய்க்கு அழைக்க.
இரண்டு அழைப்புகள் ஏற்காமல் அவனை தவிக்க விட்டவர் மூன்றாவது அழைப்பில் தான் போனை எடுத்தார்.
எடுத்தவர் “என்ன?” என்று அசட்டையாக கேட்டு அவனுக்குத் தாய் என நிரூபித்தார் அலட்சியத்தில்.
வர்மனோ என்ன பேசுவது என்று தடுமாற… பின் வீட்டுக்கு “கூப்பிட்டு இருந்தீங்களா?” என்றான் மொட்டையாக “நான் ஏன் வீட்டுக்கு எல்லாம் கூப்பிட போறேன்… கல்லு மண்ணு எல்லாம் என்கிட்ட என்ன பேசப்போவது?” என்று நக்கலாக கூறியவர் என் பேரன் பேத்திகளோட அம்மாகிட்ட பேசினேன்” என்றார் ஒருவித வெறுமையான குரலில்.
அன்னையின் குரல் அவனின் வார்த்தைகளுக்கு அணை போட்டுவிட அமைதியாக எதிர்முனையில் தாய் பேசுவதற்காக காத்திருந்தான்.
“ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தி இரண்டு பிள்ளை பெத்து, வாழ விரும்பவில்லை என்று தீத்து விட்டு, இப்போ எந்த உறவும் இல்லாம, வீட்டுக்கு கூட்டி வந்து தங்க வைப்பது உனக்கு சாதாரணமா இருக்கலாம்… எனக்கு அது கவுரவம் இல்லை, அதே சமயம் அது அந்த பொண்ணுக்கு நீ கொடுக்கும் மரியாதையும் இல்லை.”
“ஒரு பெண்ணா அவளுடைய மரியாதை எனக்கு முக்கியம்” என்றார் மகனிடம் குத்தலாக.
அன்னை தீயாய் கொட்டிய வார்த்தைகளை கண்டு கொள்ளாமல் “கொரோனா டைம் டிராவல் பண்ண கூடாது கவர்மென்ட் இ பாஸ் வாங்கணும்” என்றவனின் வார்த்தையில்.
“நீ பெரிய வக்கில்னு வெளிய சொல்லிராத” என்றாள் கோபமாக.
நறுக்கு தெரித்தார் போல இருந்த அன்னையின் வார்த்தையில் இரண்டே நாட்களில் சிறப்பு அனுமதி பெற்று இதோ இந்த பயணம் மனைவி(?), மக்களுடன் இணைந்து தொடங்கி விட்டது.
ஏனோ எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை விஜய்யின் மனம்.
தன்னவளின் கோப முகம் மனதை சுக்குநூறாக உடைக்க, “வினோ கொஞ்சம்” என்று ஆரம்பிக்க, “பிளீஸ் விஜய் எதுவும் பேச வேண்டாம், இதுவரை பிள்ளைகள் முன்பு பேசிய வார்த்தைகளே அதிகம். யார் நினைத்தாலும் நடந்தது எதையும் மாத்த முடியாது” என்று வெறுமையாக கூறியவள் மனம் பழைய நினைவுகளின் பால்செல்ல, கொண்டவன் மனமும் அவளை பின்தொடர்ந்தது.
நொடியில் உலகையே சுற்றி வர வல்லமை கொண்ட மனம் ஒளியின் வேகத்தை விட அதிகமாகவே, கடந்து சென்ற நாட்களின் பின் ஓடியது.
***********************************
வினோதாவின் அண்ணன் அரவிந்தன் மாப்பிள்ளையின் புகைப்படத்தை தங்கையிடம் தர, எந்த வித ஆர்வமும் இல்லாமல் அதை பிரிக்க போனவளை பார்த்து பத்தி கொண்டு வந்தது அவனின் அண்ணன் மனைவிக்கு வருணிகாவிற்கு.
“கட்டிக்கப்போறவன் முகத்தை பார்க்கிற மாதிரியா மூஞ்சியை வச்சிருக்க… என்று கடுப்பாக கூறியவள்.
“கண்ணம்மா, கொஞ்சமே கொஞ்சம் நம்ம வாழ்க்கை முழுவதும் வரப்போற உறவை, முதல் முதலா பார்க்கப் போற அதை மனதில் வைத்து படத்தை பார்த்து யோசித்து விட்டு பதில் சொல்டா” என்றாள் நயமாக.
அவளின் வார்த்தைகள் கேட்ட பின்பு தான் எத்தனை பெரிய முக்கியமான நிகழ்வு இது தன் வாழ்வில் என்று தோன்றியது பெண்ணவளுக்கு.
இதுவரை எந்த புகைப்படத்தையும் அவளிடம் அவள் வீட்டார் தந்ததில்லை. 90% உறுதியானால் மட்டுமே மகளிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பது வினோதாவின் தந்தையின் முடிவு.
எனவே இது முழுவதுமாக உறுதியான ஒன்று, தன் சம்மதத்திற்காக மட்டுமே காத்திருக்கிறது என்று நொடியில் புரிந்து கொண்ட உள்ளம் நிதர்சனத்தை உணர்ந்து படபடக்க தொடங்கியது.
அதற்கு மேல் அந்த கூட்டத்தில் வைத்து எல்லோர் முன்பும் வருங்கால துணையில் புகைப்படத்தை பார்க்க அவளின் பெண்மை விடவில்லை வினோதாவை.
“நான் கொஞ்சம் நேரம் கழித்து பதில் சொல்லவா அப்பா?” என்று தந்தையின் கண்களை பார்க்காமல் சொன்னவள், சட்டென தனது அறைக்கு சென்று விட… அவளை பின்தொடர்ந்தது தோழியின் மெல்லிய சிரிப்பொலி.
அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. கட்டிலின் மேல் அமர்ந்தவள், மெதுவாக தயக்கத்துடன் ஃபோட்டோ உறையை நீக்கி பார்க்க…
அவள் கவனத்தை முதலில் கவர்ந்தது அவனின் கேசம் தான். அடர்த்தியாய் அலையலையாக இருந்த முடிகள் அவனது கோதுமை வண்ண நிறத்திற்கு எடுப்பாய் இருக்க, கூர்மையான விழிகளுடன் போட்டி போடுவதை போல் இருந்தது அவனது நாசி. அழுத்தமான உதடுகள் சிறு புன்னகை தவழ பார்த்தவுடனே அவளது கருத்தில் படர்ந்து கவனத்தில் நின்றது அவனது தோற்றம்.
முகம் சிவக்க படத்தை பார்த்து கொண்டிருந்தவளின் அருகே வந்த வருணி மெல்லிய சிரிப்புடன் “விஜயவர்மன்” என்றாள் வினோதாவின் காதில் ரகசியமாக.
‘விஜய்” என்று மென்மையாக காதலுடன் ஒலித்தது வினோதாவின் குரல்.
அது உணர்த்திய அர்த்தத்தில் வருணியின் மனம் நிறைந்து விட்டது.
அதன் பின் திருமண வேலைகள் தொடங்கி விட… ஒரு நல்ல நாளில் மாப்பிள்ளை வீட்டாரே, பெண் பார்க்க வருவதாக சொல்லிவிட, இளம் பெண்களுக்கே உரிய ஆசைகளுடன் சுற்றித்திரிந்த வினோதாவின் கனவுகளின் நாயகனாக விஜயவர்மன் அழகாக வலம் வர இனிமையாக நகர்ந்தன அவளின் பொழுதுகள்.
******************************
தாய் தந்தையிடம் எவ்வளவு போராடியும் ஜெயிக்க முடியாமல் முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு தான் கிளம்பினான்.
பெண் பார்க்கும் படலத்திற்கு தயாரான விஜயவர்மனின் முகம் கலையிழந்து இருந்தது.
‘முன்னாடி ஊர் பக்கமெல்லாம் பொம்பளப் பிள்ளைகளுக்குத்தான் கட்டாய கல்யாணம் பண்ணி வைப்பாங்க… அதுகூட இப்ப எவ்வளவு மாறிடுச்சு, சட்டம் படிச்சு இவ்வளவு பெரிய வேலையில் இருக்கிற, எனக்கு நடக்கிறது ரொம்ப அதிகம்’ என்று மனதினில் நினைத்தவன் வெளியில் சொல்லிக் கொள்ளவில்லை.
எவ்வளவுதான் படித்து வெளியில் திறமையாக பணிபுரிந்தாலும் சிறு வயது முதல் அவனுக்கு தந்தை மீது இருந்த பயம் கலந்த மரியாதை சிறிதும் நீங்கவில்லை.
எவ்வளவு வளர்ந்தாலும் அவனுக்கு தந்தை சொல் வேதம் தான்.
அவன் முதல் முதலில் அவர்களிடமிருந்து முரண்பட்டது இந்த திருமண விடயத்தில் மட்டும் தான்.
தனது வீட்டிலிருந்து மாலை நான்கு மணிக்கு புறப்பட்டவர்கள் சரியாக ஐந்தரை மணிக்கு, தன் சுற்றம் சூழ குடும்பத்துடன் ஆதவன் வீட்டிற்கு வந்து இறங்க, வீட்டு வாசலிலேயே அரவிந்தனும் ஆதவனும் அவர்களை வரவேற்க தயாராக இருந்தனர்.
மேல்பூச்சு கலக்காத வெள்ளந்தியான கிராமத்து மக்கள் சில நிமிடங்களிலேயே ஒன்னு மண்ணாக பேச தொடங்கிவிட அந்த இடமே இனிய சலசலப்புடன் காணப்பட்டது.
வினோவின் வீட்டினருக்கு பார்த்தவுடனே விஜயவர்மன் பிடித்துவிட்டது. தோற்றம், தொழில் என எந்த விதத்திலும் அவனிடம் அவர்களுக்கு சிறு குறை கூட தோன்றவில்லை.
அத்துடன் அவனின் பெற்றவர்களும் நல்லவிதமாகவே தோன்ற பெண்ணின் வீட்டினரை பொறுத்தவரை அனைத்தும் அவர்களுக்கு சம்மதமாக இருந்தது.
ஆதவனும் விஜயேந்திரன் தங்களின் தொழிலான விவசாயம் தொடர்பாக ஆரம்பித்த பேச்சு வார்த்தை சுலபமாக முடியாது போல் தோன்றி விட, அருளாசி தான் மனதிற்குள் தலையில் அடித்துக்கொண்டு வெளியில் தன் கம்பீரமான குரலில் “நேரம் ஆயிட்டே இருக்கு மருமவ பொண்ணை வர சொல்லுங்க” என சொல்ல வேண்டி இருந்தது.
நீல நிற பட்டுப் புடவையில் பாந்தமாக பொருந்தியிருந்த வினோதா அண்ணியுடன் மென்மையாக நடந்து வந்து சபையில் உள்ளவர்களுக்கு வணக்கம் தெரிவித்து நிற்க, அவளின் அழகு அங்கு இருந்தவர்களில் மனதில் நிறைந்தது வர்மனை தவிர.
அவனுக்கு எந்த வித எதிர்பார்ப்பும் சுவாரசியமும் தோன்றவில்லை இப்போது. அதற்காக அவன் பெண்களையே பார்க்காதவன் என்றெல்லாம் இல்லை.
அழகான பெண்களை இதுவரை ருசிக்கவில்லையே தவிர ரசிக்க தெரிந்தவன் தான். தந்தையின் கண்டிப்பு தாயின் வளர்ப்பு அவனை தப்பு வழியில் செல்ல விடவில்லை இந்த நிமிடம் வரை.
இப்போது அவளை பார்க்கவில்லை, வருங்காலத்தில் ஒவ்வொரு கணமும் அவளின் பார்வைகாக ஏங்கி நிற்கப் போவது அறியாமல் இருந்தவன், கட்டாயத்தின் பெயரில் அழைத்து வந்ததால் அவனுக்கு பார்க்கத் தோன்றவில்லை.
வினோதா பல விநோதங்கள் அவனின் மனதில் விதைக்கப் போவது உணராமல் அமைதியாக அமர்ந்திருந்தவனை, இந்த உலகத்திற்கு அழைத்து வந்தது அரவிந்தனின் வார்த்தைகள்.
விஜயேந்திரனிடம் “மாமா தப்பா எடுத்துக்காதீங்க… அவுங்க ரெண்டு பேர் தனியா பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்” என்றான் சாதரணமாக. அவனிற்கு வர்மனின் அமைதி விசித்திரமாக இருக்க ‘தங்கை பேசி தனது வாழ்வை முடிவு பண்ணட்டும் அவர்களுக்கு விருப்பம் இல்லை என்றால் இதை நிறுத்திவிட வேண்டும்’ என்ற எண்ணம் தோன்றி இருந்தது.
கிராமமாகவே இருந்தாலும் பெண்ணின் மனதிற்கு பெரிதும் மதிப்பு கொடுக்கும் ஆதவனுக்கு இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை சம்பந்தமாக தலையசைத்தார்.
விஜயேந்திரன் சம்மதமும் அருளாசினியின் வார்த்தைகளில் வெளிப்பட, இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு தாராளமா பேசட்டும்” என்றவர் மெல்லிய சிரிப்புடன் சொல்லவும். மாலை நேர காற்று மலர்களுடன் கொஞ்சி விளையாடும் பொழுது, தோட்டத்தில் நிகழ்ந்தது அவர்களின் தனிமையிலான முதல் சந்திப்பு.
வினோதாவிற்கு முதலில் அவனிடம் என்ன பேச வேண்டும் என்பதே தெரியவில்லை, அவள் அமைதியாக நின்றிருக்க, வர்மன் “இந்த கல்யாணத்தில் உனக்கு சம்மதமா?” என்றான் நேரடியாக.
அவனின் கேள்வி அவள் மனதில் மெல்லிய சாரல் வீச செய்ய “ஆம்” என்று அவளின் தலை சம்மதமாக ஆடியது.
பெற்றவர்களிடம் சொல்ல முடியாத மறுப்பை அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்து அவள் விழிகளை பார்த்தவன் என்ன நினைத்தானோ பின் அமைதியாகி விட்டான்.
இளமை ததும்பும் அழகிய குழந்தை முகத்துடன், வயதிற்கே உரிய குறும்பு கண்களில் மின்ன நின்றிருந்தவளின் பார்வை அவனை சிறிது அசைத்து தான் பார்த்தது.
எதையும் இனி மாற்ற முடியாது என்று நினைத்து கொண்டிருந்தவன் மனதை அதற்கு தகுந்தவாறு சமன் செய்து கொண்டு “உன்னோட பெயர் என்ன?” என்றான் இயல்பாக.
அதில் திகைத்துப் போன அவள் மனம் மிகவும் ஏமாற்றமாக உணர்ந்தது ‘என்னோட பேரு கூட அவருக்கு தெரியாதா?’ என்று நினைத்தவுடன் பெண்ணவளின் அகன்ற விழிகளில் நிராசை மின்ன “வினோதா” என்றாள் வெற்று குரலில்.
அவள் ஏமாற்றங்கள் அப்பொழுதே ஆரம்பமாகி விட்டன என்று பாவம் பெண் அவள் அறியவில்லை.
“உன்கிட்ட பேரு கேட்டா, அதுக்கு உன் பேரே தெரியாது என்று அர்த்தம் கிடையாது, சும்மா பேச்சுவார்த்தையை தொடங்குவதற்காக கூட இருக்கலாம், அதுக்குள்ள எதற்கு இந்த வாட்டம்?” என்றான் சாதாரணமாக அவளின் அந்த தோற்றத்தை கண்டு இளகிய மனதுடன்.
“ஓ அப்படியா! நான் கூட வக்கீல் சார் கோர்ட்ல பேசுற மாதிரி இங்கேயும் விசாரணையை ஆரம்பிச்சுட்டாரு என்று நினைச்சேன்” என்றாள் சிரிப்புடன்.
அவளின் சிரிப்பை ரசனையாக பார்த்தவன் “நம்ம வீட்டுக்கு வா, அப்பறம் என்னோட விசாரணை எல்லாம் எப்படின்னு உனக்கு நல்லாவே தெரிஞ்சிடும்” என்றான் கண்களை சிமிட்டி குறும்பாக.
“இப்ப எதையுமே உனக்கு என்னால விளக்கமாக புரிய வைக்க முடியாது” என்றான் ‘புரிய வைப்பது’ என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து, அவர்களுக்கு சற்று தொலைவில் தள்ளி அமர்ந்து அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த அவளின் அப்பத்தா வை கண்களால் ஜாடை காட்டி.
அவனின் வார்த்தைகளில் சிவந்த முகத்தை மறைக்க முடியாமல் தவித்தவள் சட்டென்று திரும்பி நின்று விட, அவளின் அருகில் வந்தவன் மெல்ல காதருகில் குனிந்து.
“ இப்ப உன்கிட்ட கூட வர முடியல, அதுவும் உன்னோட பாடிகாட் பார்த்தா ரொம்ப பயமா இருக்கு எனக்கு” என்றான் நக்கலாக.
அவனின் கேலியில் “விஜய்” என்றாள் சிணுங்கலாக.
மென்மையான குரலில் சிறிது காதலுடன் இழையோட அழைத்த அவளின் அந்த அழைப்பு வர்மனுக்கு பிடித்துதான் இருந்தது.
வர்மனுக்கு தன்னை நினைத்து வியப்பாக இருந்தது வேண்டாம் என்று நினைத்த திருமணத்தை அவன் மனது இயல்பாக ஏற்றுக் கொண்டதை நினைத்து.
தன் நினைத்தாலும் நடப்பதை நிறுத்த முடியாது என்று மனம் உணர்ந்து கொண்டதால் இப்படி நடந்துகொள்கிறது என்று தனக்குத் தானே ஒரு சப்பைக்கட்டு கட்டிக் கொண்டவன், அப்போதைய தன் கவனத்தை வினோதாவின் மீது நிலை நிறுத்த, அவனால் இயல்பாக பேச முடிந்தது அவளிடம்.
இவர்கள் வந்ததிலிருந்து அமைதியாக இருப்பதால் தனது அப்பத்தாவை ‘அப்பாவி’ என்று நினைத்து விட்ட அவனைக் கண்டு சிரித்தவள் நினைத்துக் கொண்டது ‘அது ஒரு சொர்ணாக்கா உங்களுக்கு அது பயப்படும்மா?, நீங்க தான் அதுக்கு பயப்படனும், புதுசா வேற்று ஆட்களை பார்க்கவும் அமைதியா இருக்கு என்று’ அதற்கு மேல் அவனிடம் எதுவும் பேசாமல் அமைதியாக சிரித்தவள் போகலாம் என்பது போல் தலையசைத்தாள்.
திருமண தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து விட இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் திருமணத்திற்கு முந்தைய நாள் நிச்சயதார்த்தம் என்று பெரியவர்களால் தீர்மானம் செய்யப்பட்டு விட, செய்முறை தொடர்பான விஷயங்களும் சுமூகமாக முடிக்கப்பட்டது.
ஆதவனும் அரவிந்தனும் அவர்கள் வீட்டு இளவரசிக்காக இதுவரை சேர்த்து வைத்தது போதுமான அளவு இருக்க, சேர்மக்கனியின் கை வண்ணத்தில் விருந்து அமர்க்களப்பட்டது அன்றைய தினம்.
குழந்தைகள் இருவரும் உறங்கி இருக்க, கண்களை மூடி அமர்ந்திருந்த மனைவியை பார்த்தவன் வண்டியில் இருந்து வெளியே வந்து அவள் பக்க கதவை திறக்க,
அதுவரை மனதில் நிழலாடிய பழைய நினைவுகளில் இருந்து விடுபட்ட, வினோதாவின் விழிகள் வியப்பில் விரிந்தன அந்த இடத்தை கண்டவுடன்.
தாலாட்டும் காற்றே வா
தலை கோதும் விரலே வா
தொலைதூர நிலவே வா
தொட வேண்டும் வானே வா
உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்
என் ஜென்மம் வீணென்று போவேனோ
உன் வண்ண திருமேனி சேராமல்
என் வயது பாழ் என்று ஆவேனோ
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல்
என் ஆவி சிறிதாகி போவேனோ
என்னுயிரே நீதானோ
என் உயிரே நீதானோ