நேச தொற்று-2a

லாப்டாப்பில் தன் பார்வையை பதித்தபடி வேலை செய்து கொண்டு இருந்தாள், ஆருஷா.

அவளின் கவனத்தை கலைக்க விக்கிப் பார்த்தான், இருமி பார்த்தான் தொண்டையை செருமிப் பார்த்தான். அவளோ இது எதற்கும் அசரவே இல்லை.

வேகமாக தன்னுடைய அலைபேசியை எடுத்தவள் “விக்ஸ் மாத்திரை சாப்பிடுங்க… கிச்சு கிச்சு போக்குங்க ” என்ற விளம்பரத்தை you tube இல் ஒலிக்கவிட, ஏதோ பேச வந்தவன் எதுவும் சொல்லாமல் கோபமாய் அங்கிருந்து போய்விட்டான்.

இவள் மீண்டும்  லாப்டாப்பில் கவனம் செலுத்த அவனோ சிறிது நேரத்திற்கு பிறகு வெட்கம் மானம் இல்லாமல் மறுபடியும் வந்து அவள் முன்பு நின்றான்.

நிமிர்ந்து என்னவென்று பார்வையாலே கேட்டவள் மீண்டும் வேலையைப் பார்க்க தொடங்கினாள்.

“நான் பசி தாங்க மாட்டேன்… “

“சரி அப்போ தாங்கிக்காதே ” என்று சொல்லி மீண்டும் வேலையில் கவனமானவளை நினைத்து அவன் உதடுகளில் முணுமுணுப்பு.

‘சரியான திமிருப்பிடிச்சவ. ஐயோ இப்படியே விட்டா, சிறு குடல் பெரு குடலை தின்னுடுமே… சரி வெட்கம் மானத்துக்கு கொஞ்ச நாள் லீவ் விட்டுடுவோம்… நமக்கு சோறு தான் முக்கியம்… ‘ என யோசித்தவனின் மனம் வெட்கத்தை இன்ஸ்டால்மென்ட்டில் மறந்தது.

“எனக்கு ரொம்ப பசிக்குது” என்றான் மீண்டும்.

“யாரோ ஒருத்தர் என் சம்பாதியத்துல சாப்பிட மாட்டாருனு சொன்னாரு. அந்த மானஸ்தன் எங்கே காணாம போயிட்டாருனு தான் எனக்கு தெரியல ” என்று அவள் சுற்றிமுற்றிப் பார்க்க தலையை தொங்கப் போட்டு கொண்டான்.

‘நாம கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டோமோ அவள் கிட்டே… அய்யோ நம்ம பேசுனதை நமக்கே திருப்பி தராளே… இப்போ என்ன சொல்லி சமாளிக்கிறது?’ என்று அவன் அப்படியே அமைதியாக நின்றான்.

“என்ன இன்னும் என் முன்னாடியே நின்னுட்டு இருக்கீங்க மிஸ்டர் ஆதி. கிளம்புங்க. “

“அது ஆருஷா…” என அடுத்து சொல்ல முடியாமல் தயங்கி நின்றவனை ஒரு முடிவோடு பார்த்தாள்.

“என் சம்பாதியத்துல சாப்பிடுறது தான் உங்களுக்கு தயக்கமா இருக்கும்… அதனாலே நீங்க இந்த வீட்டுல நான்  கொடுக்கிற வேலை எல்லாம் செய்யுங்க. நான் உங்களுக்கு அதுக்கு ஒரு டோக்கன் மாதிரி தரேன். அந்த டோக்கனை கொடுத்து என் கிட்டே சாப்பாடு வாங்கிக்கோங்க.”

“டோக்கனா எனக்கு என்னனு புரியலயே ஆருஷா?” குழம்பியவனைப் பார்த்து  எழுந்தவள் ஒரு பேப்பர் ஸ்கேல் மற்றும் பேனாவையும் எடுத்து கொண்டு வந்தாள்.

அந்த பேப்பரை சின்ன சின்ன துண்டுகளாக கிழித்தவள் 5, 10 ,15 , 20 என்று எழுதிவிட்டு அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

“இதோ இந்த 5 ரூபாய் எழுதி இருக்க துண்டு, ஒரு டோக்கன். நீங்க வீடு பெருக்குனா 5 ரூபாய் டோக்கன் கிடைக்கும். பாத்திரம் துலக்குனா 10 ரூபாய் டோக்கன். துணி துவைச்சா 15 ரூபாய் டோக்கன். பாத்ரூம் கழுவுனா 20 ரூபாய் டோக்கன். ஒரு வேளை சாப்பாடு நீங்க என் கிட்டே இருந்து வாங்கணும்னா, எனக்கு 20 ரூபாய் டோக்கன் கொடுக்கணும்.” என சொல்ல பாவமாக பார்த்தான்.

“எனக்கு ரொம்ப பசிக்குதே. இப்போ நான் துணி துவைச்சு, வீடு பெருக்குனா தான் எனக்கு 20 ரூபாய் டோக்கன் கிடைக்கும். ஆனால் அதை எல்லாம் முடிக்கவே எனக்கு பாதி நாள் போயிடுமே. அது வரை பசி தாங்க மாட்டேன்.  நான் வேணா சாப்பிட்டு முடிச்சுட்டு வேலை செஞ்சு டோக்கனை தரட்டுமா. ” பாவமாக கேட்டான் அவன்.

“நோ நோ டோக்கன் கொடுத்தா தான் சோறு போடுவேன். என் சம்பாதியத்துல தான் சார் சாப்பிட மாட்டிங்க இல்லை. வேணும்னா ஒன்னு பண்ணு. பாத்ரூம் கழுவ 5 நிமிஷம் தான் ஆகும். போய் கழுவிட்டு வந்து 20 ரூபாய் டோக்கன் வாங்கிக்கோ. நான் உனக்கு சோறு போடுறேன். ” என்றவள் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றவனை நோக்கி

“பக்கெட்டும் ப்ரஷ்ஷீம் அந்த பக்கம் இருக்கு” என சொல்ல கோபமாக அவளைப் பார்த்தவன் பக்கெட்டையும் ப்ரஷ்ஷையும் எடுத்துக் கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்தான்.

“பாவி பாவி… சரியான கல் நெஞ்சக்காரி. பசிக்குதுனு கேட்கிறானே சோறு போடுவோம்னு தோணுதா பாரு… பாழாப் போன கொரானா மட்டும் என் கையிலே கிடைச்சுது. அதை அடிச்சு கொன்னு போட்டுடுவேன். இவள் கிட்டே போய் என்னை கோர்த்துவிட்டுட்டியேடா கொரானா…. ” புலம்பியபடியே வேலை பார்க்க துவங்கினான்.

“மவனே இது வெறும் ட்ரைலர் தான்டா நீ பேசுன பேச்சுக்கு என் கிட்டே நல்லா வாங்க போற… ரெடியா இருந்துக்கோ. ” என கொரானா மற்றும் ஆருஷாவின் இரண்டு உள்ளங்களும் மைண்ட் வாய்ஸ்ஸில் பேசிக் கொண்டது.

அவன் பாத்ரூம் கழுவி முடித்துவிட்டு வெளியே வர இவள் அவனுக்கு சாப்பாடு போட்டாள்.

அவன் பசியில் வேக வேகமாய் சாப்பிட்டான்.

உண்டு முடித்ததும் தான் அவனுக்கு கண்கள் தெளிவாகவே தெரிந்தது.

இவன் ஏப்பம் விட்டபடி தட்டில் இருந்து பார்வையை விலக்கி நிமிர்ந்து பார்க்க ஆருஷாவோ கேவலமாக அவனைப் பார்த்தாள்.

“இல்லை ரொம்ப பசி அதான் இப்படி .. ” என தலையை சொறிந்து கொண்டு சொல்ல தலையில் அடித்து கொண்டபடி  மீண்டும் சாப்பிட ஆரம்பித்தாள்.

“ஆருஷா… “

“ம்ம்ம்… “

“ஏதாவது லுங்கி இருக்கா?”

“லுங்கிலாம் இல்லை. நைட்டி தான் இருக்கு… வேணுமா?”

“என்னது நைட்டியா?”

“ஆமாம் நைட்டி தான்…  என்ன நைட்டியானு கேவலமா கேட்கிற? அதுவும் உடம்பை மறைக்கிற ஒரு துணி தானே.” என்று சொன்னபடியே உள்ளிருந்து ஒரு நைட்டியை அவன் மீது தூக்கி வீசி விட்டு போனாள்.

கொஞ்ச நேரம் அவளையும் நைட்டியையும் மாற்றி மாற்றி பார்த்து கொண்டு இருந்தவன் வேறு வழியில்லாமல் நைட்டியை போட்டுக் கொண்டு தூங்க சென்றான்.

ஏனோ புது இடம் என்பதாலோ,
தரையில் படுத்து இருப்பதாலோ,
இல்லை அவன் அம்மாவிடம் பேசவில்லை என்பதாலோ, 
இல்லை தினமும் போடும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இன்று போடாததாலோ , இல்லை ஏதோ ஒரு காரணத்தினாலோ அவனுக்கு தூக்கமே வரவில்லை.

எழுந்து ஆருஷாவின் அறைக்கு வந்தவன் வேறு ஏதாவது கட்டில் இருக்கிறாதா என கேட்பதற்காக எழுப்பினான் எழுப்பினான், எழுப்பி கொண்டே இருந்தான்.

கும்பகர்ணிப் போல உறங்கி கொண்டு இருந்தாள் அவள்.

எழுப்ப முயற்சித்து சோர்வானவன் அப்படியே அந்த கட்டிலில் படுத்து உறங்கிவிட்டான். 

அதிகாலையில் விழித்தவளின் கண்களோ  கட்டிலில் தன் அருகே படுத்துக் கொண்டு இருந்த ஆதியைப்  பார்த்து திகைத்தது. 

பிறகு வந்த  கோபத்திற்கு அவனை எட்டி மிதித்தாள்.

“ஐயோ ஐயோ நான் மலை மேலே இருந்து கீழே விழுந்துட்டேன். நான் சாகப் போறேன்… நான் சாகப் போறேன்… ” என தூக்கக்கலக்கத்தில் பதறியபடி சொல்லி கீழே விழுந்தவனின் மீது தலையணையை தூக்கி எறிந்தாள்.

“மூதேவி கட்டில் மேலே இருந்து தான் டா கீழே விழுந்த… மலை மேலே இருந்து கீழே விழல. நீ சாகலடா இன்னும்… இனி மேல் தான் நீ சாகப் போற. ” என்று சொல்ல மரண பயத்தில் கண்விழித்தான் ஆதி.

அவன் முன்பு பத்ரகாளியாக மாறி நின்று இருந்தாள் ஆருஷா.