நேச தொற்று-2b

நேச தொற்று-2b

“எதுக்கு டா என் கட்டிலிலே வந்து படுத்த?”

“அது தரையிலே படுத்தா தூக்கம் வரலை… அதான் வேற கட்டில் எதுவும் இருக்கானு கேட்க வந்தேன். “

“கேட்க தானே வந்தே… அப்புறம் ஏன் இங்கேயே படுத்து தூங்குன?”

“நானும் எவ்வளவு நேரம் கேட்கிறதுக்கு உன்னை எழுப்புவேன். நீ நல்லா குறட்டை விட்டுட்டு தூங்கிட்டு இருந்தே. உன்னை எழுப்பி எழுப்பி டயர்ட் ஆகி அப்படியே தூங்கிட்டேன்.” என்று அவன் சொல்ல என்ன சொல்வது என்று தெரியாமல் தலையை சொறிந்தாள்.

அவளுக்கு தெரியும் தூங்க ஆரம்பித்தால் பாறாங்கல்லே தலையில் விழுந்தாலும் எந்திரிக்க மாட்டோம் என்று.

தவறு தன் மீது என்று தெள்ளத்தெளிவாக தெரிந்துவிட்டது.

ஆனால் அவனிடம் மன்னிப்பு கேட்க ஈகோ ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் அவனை மன்னிப்பது போல காட்டிக் கொண்டாள்.

“சரி சரி இனி இப்படி எனக்கு தெரியாம என் ரூம்க்குள்ளே வரக்கூடாது. எதிர் ரூம்லே மேட்ரஸ் இருக்கு… அந்த ரூம்ல கொஞ்சம் திங்க்ஸ்லாம் வெச்சு பூட்டி இருந்தேன். அதை எல்லாம் க்ளீன் பண்ணிட்டு உனக்கு அந்த ரூம் தரேன், அங்கேயே படுத்துக்கோ. இனி என் ரூம் பக்கம் காலை வெச்சே உனக்கு சூடு தான்” என சொல்ல அவன் பயத்தில் சட்டென்று கால்களை இழுத்துக் கொண்டான்.

இன்னும் மலைமேல் இருந்து கீழே விழுந்த பிரம்மையில் இருந்து அவன் வெளிவரவே இல்லை.

அவளையே பயந்து போய் பார்த்து கொண்டு  இருக்க அவள் சிறிதும் சட்டை செய்யமால் வெளியேறினாள்.

“டேய் ஆதி நீ மலை மேலே இருந்து கீழே விழல டா. பாழங்கிணத்துக்குள்ளே  தான்டா விழுந்திருக்க. இப்போதைக்கு இந்த கிணத்துக்குள்ளே தான் இருந்தாகணும் வேற வழியில்லை.” என்று எண்ணியபடி பால்கனி பக்கம் வந்தான்.

அடிவானத்தில் குங்குமம் சிதறியதுப் போல செவ்வானம் காட்சியளித்தது.

மெல்ல மெல்ல சூரியன் பூமியில் தன் கிரணங்களை பரப்ப தயாராகி கொண்டு இருந்தான்.

அவனது கதிர்கள் பட்டு அந்த ஏரிக்கரை தங்கஜரிகை நெய்த பட்டாய் காட்சியளித்தது.

பறவைகள் கீரிச்சுடும் ஒலி காதை நிறைக்க இப்படி ஒரு ரம்மியமான சூழலில் அவன் கண்விழித்ததே இல்லை என்று எண்ணிய நேரம் சிறிது நேரத்திற்கு முன்பு வாங்கிய மிதி நியாபகம் வந்தது.

சட்டென்று தன் இடுப்பை தேய்த்துக் கொண்டு திரும்பி பார்க்க அருகே ஆருஷா நின்று கொண்டு இருந்தாள், கைகளில் தேநீர் கோப்பையை தாங்கிக் கொண்டு.

அவனை நோக்கி தேநீர்க் கோப்பையை நீட்ட நன்றியுணர்வு கண்களில் மின்ன புன்னகையோடு அவளைப் பார்த்தான்.

“ரொம்ப லாம் உன் மேலே பாசம்னு கற்பனை பண்ணிக்காதே… இன்னைக்கு ஃபுல்லா நீ வேலை செய்யுறதுக்கு எனர்ஜி வேணும்ல. அதுக்காக தான் இந்த டீ ” என்று சொல்லிவிட்டு கண்டு கொள்ளாமல் போய்விட்டாள்.

அவன் தலையில் எரிந்த பிரகாசமான விளக்கு இன்னும் பிரகாசமாய் எரிந்தது. அவன் சரியான பல்ப் என்பதை நிரூபிப்பதன் பொருட்டு.

வேகமாக டீயைக் குடித்தவன் முதலில் வீடு கூட்ட துடைப்பத்தை எடுத்தான்.

மெதுவாக கூட்ட துவங்கியவன் பாதி கூட்டிவிட்டு திரும்பிப் பார்க்க சுத்தமாக இருந்த தரை மீண்டும் குப்பையாகி இருந்தது.

கீழே இருந்த பேப்பரையும் அவள் கையில் இருந்த பேப்பரையும் மாற்றி மாற்றி பார்த்தவன் திரும்பி அவளை முறைத்துவிட்டு மீண்டும் கூட்ட துவங்கினான்.

அடுத்து சமையலறை சென்று பாத்திரங்களை எடுத்தவனது கண்கள் பால் குண்டாவை கண்டதும் கோரமாக மாறியது.

“ஐயோ இந்த கருகிப் போன பால் சட்டியை நான் தான் துலக்கனுமா? ” வெறுப்போடு பால் பாத்திரத்தை பார்த்தான்.

“பால் குடிக்க மட்டும் இனிக்குது. பால் குண்டானை துலக்குறதுக்கு மட்டும் கசக்குதோ?” என்று அவள் கத்தி  கேட்க அமைதியாக துலக்க ஆரம்பித்தான்.

இரண்டு முறை வீடு பெருக்கல்…

ஒரு முறை சமான் துலக்கல்… 

அவனுக்கு வேண்டிய 20 ரூபாய் டோக்கன் கிடைத்துவிட்டது.

நேராக அவளிடம் வந்து நின்றான், கோவிலில் பிரசாதம் வாங்கும் பக்தனைப் போல…

அவளும் அவனுக்கு உணவு பரிமாறி தானும் சாப்பிட துவங்கினாள்.

“ம்ம்ம் ” என்று தொண்டையை கணைத்தான் அவன்.

நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் சாப்பிட குனிந்தாள்.

“ம் ம் ம் ம் ம் ம்” என்று இம்முறை அதிகமாய் கணைக்க

“என்ன விக்ஸ் மாத்திரையை மறுபடியும் போடணுமா… பேசாம சாப்பிடு.”  என்று அதட்டினாள்.

“இல்லை நீ எப்பவும் இப்படி தானா? ” என்றான் அவளை நோக்கி கேள்வியாக..

“எப்படி?” என்று பதில் கேட்டவளின் கண்களிலோ கூர்மை.

“இல்லை இப்படி அடங்கா பிடாரியா அதிகமா எதுவும் பேசாம… இப்படி தான் எப்பவும் கோவமா பேசுவியா ஆருஷா?”

“என் self respect ஐ டச் பண்றவங்க கிட்டே மட்டும் தான் நான் இப்படி நடந்துப்பேன். என்னை அடக்க நினைக்கிறவங்க கிட்டே மட்டும் தான் நான் அடங்காபிடாரியா மாறிடுவேன். மத்தபடி நான் ரொம்ப ஜாலி டைப் தான் மிஸ்டர் ஆதி. “

“நான் என்ன அப்படி உன் self respect ஐ டச் பண்ணிட்டேன்? வேலைக்கு போகாம இருனு சொன்னது குத்தமா?”

“இல்லை அது தப்பு இல்லை. ஆனால் சொன்ன விதம் தான் ரொம்ப தப்பு. சரி நீயே சொல்லு,  ஏன் நீ டகிரி படிச்ச?”

“இதென்ன கேள்வி நல்ல வேலை பார்க்க தான். நம்ம காலிலே நாம நிக்க முடியும்னு ஒரு நம்பிக்கை வரதுக்காக… நம்ம குடும்பத்தை பார்த்துக்க தான். “

“அதே aim ல தானே நானும்  டிகிரி முடிச்சேன். என்னை மட்டும் வீட்டுலே இருனு சொல்றது என்ன நியாயம்.”

“ஆனால் இது ஒன்னும் புதுசு இல்லையே ஆரு. இது காலங்காலமா நடக்கிறது தானே…” என்றான் தயக்கமாக.

“ஆதி, நான் ஸ்டேட் ஃப்ர்ஸ்ட் எடுத்த பொண்ணு. கஷ்டப்பட்டு படிச்சு வேலை தேடி இப்போ சொந்தகாலிலே நிற்கிறேன். ஆனால் கல்யாணம் பண்ண அப்புறம் நான் இதெல்லாம் பண்ணக்கூடாது. வீட்டுலேயே இருந்து சமைச்சு போடுனு சொன்னா எனக்கு கோவம் வர தானே செய்யும். இதுக்கு நான் டிகிரி முடிக்காமே டைரக்டா குக்கரி க்ளாஸ் படிச்சு இருப்பேனே..”   எனக் கேட்க

“ஆமாம் நீ சொல்றதும் நியாயம் தான்…” என்றான் தயக்கமாக.

“நாங்க அவ்வளவு கஷ்டப்பட்டு வாங்குன வேலையை  நீங்க ஈஸியா தூக்கி போட்டுட்டு வர சொல்லுவீங்க.
ஏன்னு பதில் கேள்வி  கேட்டா உன் சம்பாதியத்துல வாழ எனக்கு இஷ்டம் இல்லைனு சொல்லுவீங்களோ… இல்லை தெரியாம தான் கேட்கிறேன் அதுல என்ன பெரிய கௌரவ குறைச்சல்?  இப்போ வேற எந்த வழியும் இல்லாம  இந்த வீட்டுல வாழ்நாளை கடத்துறதுக்காக ஒரு நாள் வேலை செஞ்சதுக்கே உனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது. அப்போ எங்களுக்கு ஆயுசு முழுக்க எவ்வளவு கஷ்டமா இருக்கும்.” என அவள் கேட்க அவனிடத்தில் எந்த பதிலும் இல்லை.

மௌனமாய் இருந்தான்.

அவள் கேட்டது எல்லாம் நியாயமான கேள்விகள்.

நமக்கு கனவு இருப்பதை போல அவளுக்கும் இருக்கக்கூடாதா?

சிந்தனைகள் அவனை பின்ன  அமைதியாக இருந்தவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

“என் மேலேயும் தப்பு இருக்கு. இது மொத்த சமூகத்து மேலயும் எனக்கு இருந்த கோபம், வெறுப்பு. அதை முழுசா நான்  உன் மேலே காமிச்சுட்டேன். சாரி ஃபார் தட் ஆதி, அண்ட் அந்த டோக்கன் விஷயம் சும்மா உங்களை உணர வைக்கிறதுக்காக தான் கொடுத்தேன். இனி அந்த டோக்கன் சிஸ்டம்லாம் வேண்டாம்.” என்று சாப்பிட்ட தட்டை எடுத்து கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.

அவனுக்கோ அந்த அறையும் அவன் உள்ளமும் ஏதோ புழுக்கமாக இருந்தது.

யோசனையோட அறைக்கதவை திறந்து வெளியே போக செல்ல எத்தனிக்க, எதிர்ஃப்ளாட்டில் இருந்த இரண்டு வயது குழந்தை இவனைப் பார்த்து சிரித்தது.

இவனும் பதிலுக்கு சிரித்தான்.

அது கையில் வைத்து இருக்கும் பொம்மை துப்பாக்கியை வைத்து இவனை சுட இவன் தன் மார்பிலேயே குண்டு பட்டதைப் போல கீழே விழுந்து நடித்தான், சிவாஜியே தோற்கும் அளவிற்கு…

இவன் அந்த குழந்தையை பார்த்து ” உங்க பேர் என்னடா குட்டி?” என கேட்க

“அபி” என்று மழலை மொழியில் பதிலளித்தது குழந்தை.

“என் பேரு என்ன தெரியுமா? ஆதி…. ஆதி ஆதி சொல்லு குட்டி. ” என்று அந்த குழந்தையை ஊக்குவிக்க அந்த குழந்தை பேரை சொல்லவே இல்லை.

பல முறை முயற்சித்தலுக்கு பிறகு, “ஆதி ” என்று மழலை குரலில் சொல்ல இவன் சிலிர்த்துப் போனான்.

குழந்தைகள் குழந்தைகள் தான்.

எப்பேர்ப்பட்ட வலியாக இருந்தாலும்  குழந்தைகள் ஆற்றிவிடும்.

சிரிப்புடன் கதவில் ஒருக்களித்து நின்றவனோ இப்போது கதவை முழுமையாக திறந்துவிட்டு அந்த குழந்தையின் எதிரில் வந்தான்.

“நைட்டி நைட்டி.. ” என சொல்லி அவனைப் பார்த்து சிரித்தது அந்த குழந்தை.

வேலை செய்து கொண்டு இருந்த ஆருஷாவுக்கு சிரிப்பு பொங்கி வர கட்டுப்படுத்திக் கொண்டாள்.

“குழந்தையாம் குழந்தையாம்… சரியான குட்டி சாத்தான். ” என்று அவன் கோபமாக  கதவை மூட முயன்ற நேரம் அவன் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தது.

அவன் ஏர்போர்ட்டில் பார்த்த அதே பெண் பக்கத்து ப்ளாட்டில்…

“வாவ் பியூட்டி… “என்று அவன் சொல்ல

“ஹே handsome with nighty ” என்று பதிலுக்கு அவள் சொல்லியதும் கடுப்பில் கதவை அறைந்து சாத்திவிட்டு திரும்பினான்.

வயிற்றைப் பிடித்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரித்து கொண்டாள் ஆருஷா.

“போட்டுக்க நைட்டி கொடுத்து சின்ன புள்ளையிலே இருந்து அழகான பொண்ணு வரைக்கும் என்னை டேமேஜ் பண்ணிட்ட இல்லை. மவளே உன்னை இருடி. ” என்றவன் கடுப்பில் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து ஊற்ற முதலில் அதிர்ச்சியில் நின்றவள் பின் கோபத்தில் ப்ரிட்ஜை திறந்து முட்டையை எடுத்து அவன் மேல் அடித்தாள்.

அவன் டைனிங் டேபிளின் மீது இருந்த ஜீசை எடுத்து ஊற்றினான்.

இவள் கெட்ச்அப்பை பதிலுக்கு ஊற்ற இருவரது குழாய் அடி சண்டை இனிதே ஆரம்பமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!