நேச தொற்று-3b
நேச தொற்று-3b
“மவனே பச்சக்குனு ஒட்டுச்சானாடா கேட்கிறே… அதே அம்பு எப்படி உன் ஹார்ட்டை ரெண்டா கிழிக்க போதுனு மட்டும் இப்போ பாரு. ” என்று சொல்லி அவள் ஜல்லிக்கரண்டி எடுத்தாள்.
இவன் பயத்தில் இரண்டடி பின்னே சென்றான்.
“இங்கே வா ஆதி… “
“வர மாட்டேன், நீ என்னை அடிப்ப. நீ மிதிச்ச மிதியோட வடு கூட இன்னும் ஆறல… அதுக்குள்ளே இன்னொரு மிதியை என்னாலே தாங்க முடியாது.”
“தாங்கி தான் ஆகணும். நீ பேசுன பேச்சுக்கு தாங்கி தான் ஆகணும். இங்கே வா ஆதி.” என்று சொல்ல அவன் இன்னும் எட்டடி பின்னே சென்றான்.
“நான் வர மாட்டேன் ஆரு. நீ அந்த ஜல்லிக்கரண்டியை கீழே போடு நான் வரேன்.” என்று அவன் சொல்ல அவள் ஜல்லிக்கரண்டியை கீழே போட்டாள்.
“என்னை அடிக்க மாட்டேனு ப்ராமிஸ் பண்ணு ஆரு. நான் வரேன்.”
“அடச்சீ அடிக்க மாட்டேன் வந்து தொலை. ப்ராமிஸ்…போதுமா ” என சொல்ல அவளை நோக்கி சென்றவன் கீழே கிடந்த ஜல்லிக்கரண்டியை தன் காலால் அறையின் மூலைக்கு தட்டிவிட்டபடி அவளின் முன்பு வந்து நின்றான்.
கீழே போட்டவள் மறுபடியும் அந்த ஜல்லிக் கரண்டியை எடுத்து அடித்து தன்னை காயப்போட்டுவிடுவாளோ என்ற முன்னெச்செரிக்கையோடு செயல்பட்டான்.
ஆனால் அவனுக்கு தெரியவில்லை இது அவன் பின்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நேரம் என்று.
“ஓ அலர்ட்டா இருக்கீங்களா மிஸ்டர் ஆதி.. சரி அப்படியே கொஞ்சம் திரும்புங்க. “
“எதுக்கு ஆரு?”
“திரும்புங்களேன் சொல்றேன். ” என்று அவள் சொல்ல இவனும் திரும்பினான்.
“இதோ இதுக்கு தான்” என்றவள் எட்டி ஒரு மிதி பின்னே மிதிக்க எட்டடி தள்ளிப் போய் விழுந்தான் அவன்.
“ஆரு யூ cheater… அடிக்க மாட்டேனு சத்தியம் பண்ணிட்டு இப்படி பண்ணிட்டியே. நீ சத்தியவான்னு நினைச்சு உன் பக்கத்துல வந்தேன். என்னை ஏமாத்திட்டே. ” என்று இடுப்பை தேய்த்துக் கொண்டே கேட்டான் அவன்.
“இல்லையே மிஸ்டர் ஆதி. நான் அடிக்க மாட்டேனு தானே சத்தியம் பண்ணேன். மிதிக்க மாட்டேனு சத்தியம் பண்ணதா எனக்கு நியாபகமே இல்லையே.”
“இந்த வியாக்கியானம் நல்லா பேசு ஆரு. எப்படி வலிக்குது தெரியுமா?”
“வலிக்கனும்னு தானே மிதிச்சேன்.”
“ஒரு லவ்வு சொன்னது குத்தம்னா இப்படி போட்டு மிதிக்கிற என்னை. “
“நீ சொன்னது தப்பே இல்லை ஆதி.”
“அப்போ எதுல தப்பு ஆரு?”
“சரி நீ சொல்லு எதனாலே என்னை காதலிக்கலாம்னு தோணுச்சு?”
“அது நான் உன்னை பத்தி தப்பா நினைச்சுட்டேன் ஆரு. நம்ம முதல் முறையா சந்திக்கும் போது சரியான திமிர் பிடிச்சவன்னு தோணுச்சு.
ஆனால் நீ அதுக்கப்புறம் பேசுனதைக் கேட்ட அப்புறம் சரியா தான் பேசி இருக்கேனு புரிஞ்சது.
நான் நினைச்சா மாதிரி நீ தப்பானவள் இல்லை. நீ ரொம்ப நல்லவ.
உன்னைப் பத்தின எல்லா தப்பான அபிப்ராயமும் பொய்யுனு தெரிஞ்ச உடனே உன் மேலே காதல் வந்துடுச்சு. உன்னை பிடிச்சு இருந்தது அதான் லவ்வை நேரடியா சொல்லிட்டேன். எனக்கு மனசுல எதையும் மறைச்சு வெச்சு பழக்கம் இல்லை. அதான் கேட்டேன். இதுல என்ன தப்பு. “
“இங்கே பாரு ஆதி, நீயா தான் என் மேலே ஒரு தப்பான அபிப்ராயத்தை வெச்சே. நீயா தான் அந்த அபிப்ராயம் தப்பா இல்லைனு ஒரு முடிவுக்கு வந்தே. நான் எப்பவும் போல என்னை மாதிரி அப்படியே தான் இருக்கேன்.
ஆனால் நீ தான் என்னைப் பத்தி ஏதேதோ யோசிச்சு அப்புறம் அது இல்லைனு நீயே ஒரு முடிவுக்கு வந்து ஒரு சுழலிலே சுத்திக்கிட்டு இருக்கே. என்னை பத்தியே இப்படி யோசிக்கிறதாலே இதுக்கு பெயர் காதல்னு அர்த்தம் இல்லை.
இதுக்கு பேரு குழப்பம். குழப்பத்துல வந்து காதலை சொல்றவனை அடிக்காம கொஞ்சவா செய்வாங்க.”
“அப்போ இதுக்கு பேரு லவ் இல்லைனு சொல்றீயா ஆரு.”
“ஆமாம்.”
“அப்போ காதல் வர என்ன காரணம்?”
“அந்த காரணத்தை நீயே கண்டுபிடிச்சு சொல்லு ஆதி. சப்போஸ் நீ சொல்ற அந்த காரணத்தை என் மனசு ஏத்துக்கிச்சுனா உன்னை லவ் பண்றதைப் பத்தி யோசிக்கிறேன். ஆனால் நீ ஒவ்வொரு தடவை தப்பா காரணம் சொல்லும் போதும் இப்படி தான் மிதிப்பேன். நியாபகம் இருக்கட்டும். ” என்று சொல்லிவிட்டு தன் வேலையைப் பார்க்க துவங்கினாள்.
இவனோ வலித்த முதுகை சுவற்றில் சாய்த்தபடி காதல் வர என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்து கொண்டு இருந்தான்.
அந்த நேரம் அறைக்கதவு திறந்தது.
தர்ஷி தான் உள்ளே வந்துக் கொண்டு இருந்தாள், இரண்டு வானரங்களை கூட்டிக் கொண்டு.
“ஆதி அங்கிள் நான் விட்ட அம்பு எப்படி இருந்துச்சு.” என நிவி கேட்க
“ரொம்ப ஷேமமா இருந்தது.” என்றான் வலியை மறைத்த குரலில்.
“ஆமாம் ஏன் அங்கிள் இப்படி செவத்துல முட்டு கொடுத்துட்டு உக்கார்ந்துட்டு இருக்கீங்க.”
“அது நான் சுவத்தை முட்டு கொடுத்து உட்காரல நிவி மா. சுவரு தான் என்னை முட்டு கொடுத்து நின்னுட்டு இருக்கு” என ஆதி பில்ட்-அப் கொடுத்து கொண்டிருக்க ஆரு தொண்டையை கணைத்தாள்.
பட்டென்று வாயை மூடிக் கொண்டான்.
“அங்கிள் வீட்டுல செம போர். ஸ்கூலும் இல்லையா… அதான் ஜாலியா தாயபாஸ் விளையாடலாம்னு வந்தோம். நீங்களும் வரீங்களா அங்கிள். ” என்றாள் நிவி.
“ஓ எஸ் விளையாடலாமே… ஆனால் நான் சுவத்தை விட்டு நகர மாட்டேன் நீங்க எல்லாரும் இங்கே தான் வரணும் ஓகேவா” என்றவன் கேட்க எல்லோரும் அவனை சுற்றி வட்டமாக அமர்ந்து விளையாட தயாராகினர்.
“ஆமாம் தாயாபாஸ் விளையாட மொத்தம் 4 பேரு வேணுமே. அபி குட்டி பையன் அவனாலே காய் நகர்த்த முடியாதே .” என அவன் சொல்ல தர்ஷி திரும்பி ஆருவைப் பார்த்தாள்.
“ஓய் ஆருமா, அங்கே வேலைப் பார்த்தது போதும். ஆள் குறையுது விளையாட வா.”
“இல்லை தர்ஷி கொஞ்சம் வேலை இருக்கு. நீங்க விளையாடுங்க நான் அப்புறமா ஜாயின் பண்ணிக்கிறேன்.” என்று மறுத்தாள்.
“இல்லை நீ இப்படி சொன்னாலாம் கேட்க மாட்டே… அபி, நிவி போய் ஆரு அக்காவை விளையாட இழுத்துட்டு வாங்க” என தர்ஷி கட்டளையிட இரண்டு குழந்தைகளும் ஆருவின் முன்னால் வந்து நின்றது.
அந்த குழந்தைகளிடம் மறுத்து பேச முடியாமல் லாட்டாப்பை மூடிவிட்டு அவளும் ஆட்டத்தில் கலந்து கொண்டாள்.
“நம்ம அபிக்குட்டி தாயக்கட்டை உருட்டுவானாம். அக்கா காயை நகர்த்துவேனாம். ஓகே வா அபிக்குட்டி ” என ஆரு குழந்தையைப் பார்த்து கேட்க அவன் சரி என்று தலையசைத்தாள்.
ஆருவும் நிவியும் ஒரு அணி.
தர்ஷியும் ஆதியும் மறு அணி.
தாயாபாஸ் கட்டத்தை சுற்றி அமர்ந்து இருந்த எல்லோர் முகத்திலும் ஜெயிக்க வேண்டும் என்ற வெறி.
முதல் வாய்ப்பு தர்ஷியிடம் இருந்து ஆரம்பித்தது.
நிவி, தர்ஷியை நோக்கி ” தர்ஷி அக்கா தாயம் போட்டுடாதே ” என்றாள்.
“தர்ஷி நீ தாயத்தை போடு. நாம தான் ஜெயிக்கிறோம். ” என்றான் ஆதி.
“இல்லை ஆதி அங்கிள், நானும் ஆருவும் அக்காவும் தான் ஜெயிப்போம் ” என்று நிவி சொல்ல அபி இடையில் புகுந்தான்.
“அப்போ நானு” என்று.
“சரி சரிடா… நீ நானு ஆரு அக்கா நம்ம மூணு பேரும் சேர்ந்து எதிர் டீம்க்கு நாமத்தை போட்டுவோம்.” என்றாள் தர்ஷி.
“நீ நாமம் போடுறதுக்கு முன்னாடி நான் பட்டை போடுறேன். ” என்று ஆதி சொல்லி தர்ஷி கையில் இருந்த தாயக்கட்டையை பார்த்தான்.
எல்லோருடைய கவனமும் தர்ஷியின் கைகளில் இருந்த தாயக்கட்டையில் வந்து குவிந்தது.
அவள் வேகமாக உருட்டினாள்.
எல்லோரும் என்ன போட்டு இருக்கிறாள் என்று பார்க்க முதல் ஆட்டத்திலேயே முதல் வாய்ப்பிலேயே தர்ஷி தாயத்தை போட்டுவிட்டாள்.
தனது அணி முதலிலேயே தாயத்தைப் போட்டுவிட உற்சாகப் பெருக்கில் தர்ஷியின் கைகளில் hi-fi கொடுத்தான் ஆதி.
“சூப்பர் சூப்பர் தர்ஷி மா… இப்படி தான் போடணும். நாம ரெண்டு பேரும் சேர்ந்து அந்த டீம்மை தோற்கடிக்கிறோம். ” என்றான் ஆனந்தமாக.
அவனை நிமிரந்துப் பார்த்தாள் ஆரு.
அவளின் பார்வையில் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தான் அவன்.
எதற்காக இப்படி பார்க்கிறாள் என யோசித்தவனின் மூளையில் சட்டென ஒரு மின்னல் வெட்டியது.
இதனால் தான் இதனால் தான் அவள் என்னை இப்படி பார்க்கிறாள் என்று உள்ளம் துள்ளி குதித்தது.
கண்டுபிடித்துவிட்டான் காதலுக்கான காரணத்தை…
அதை பிறகு அவளிடம் சொல்லி அவளின் காதலை பரிசாக பெறலாம் என நினைத்தவன் தற்போது ஆட்டத்தில் கவனத்தை செலுத்தினான்.
‘ராசா நீ வேற ஒரு பரிசை பெறப் போற கன்ஃபார்ம் ஆகிடுச்சுடா ஆதி. ரெடியா இருந்துக்கோடா மகனே.’ என்ற கொரானாவின் மைன்ட் வாய்ஸ் பாவம் அவனுக்கு கேட்கவே இல்லை.