நேச தொற்று – 4b

நேச தொற்று – 4b

“ஆரு நான் ஒன்னு கேட்பேன்.. நீ திட்ட மாட்டியே.”

“அது நீ கேட்கிறதைப் பொறுத்து. “

“இல்லை சன்டே ஆனா, அது சாப்பிடலனா எனக்கு கை கால் எல்லாம் உதறும் நடுங்கும்.” என அவன் முழுவதாய் சொல்லி முடிக்கும் முன்பே அவனைப் பார்த்து முறைத்தாள்.

“ஏன்டா என்ன திமிர் இருந்தா என் கிட்டேயே வந்து உனக்கு சன்டே ஆனா சரக்கு வேணும்னு கேட்ப… என்ன கொழுப்பு இருக்கும்டா உனக்கு?” என்று அவளது கைகளை முறுக்கியபடி அவனைப் பார்த்தாள்.

“ஐயோ ஆரு மா. முதலிலே கையை கீழே இறக்கு. லைட்டா பதறுதுல எனக்கு. நான் சரக்கு வேணும்னு கேட்க வரல… சிக்கன் வேணும்னு தான் கேட்க வந்தேன். சன்டே சன்டே சிக்கன் சாப்பிடுறது எனக்கு ஒரு போதை மாதிரி பழக்கம் ஆகிடுச்சு. அன்னைக்கு சிக்கன் சாப்பிடலனா எனக்கு கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பிச்சுடும். ப்ளீஸ் ஆரு எனக்கு சிக்கன் செஞ்சு தரீயா?”

“சிக்கன் செய்யுறதுல எந்த பிரச்சனையும் இல்லை சிக்கன் கிடைக்கிறதுலே தான் ப்ரச்சனையே.  கொரானாவாலே இங்கே சிக்கன் கடை இருக்காதுனு சொல்லிட்டாங்களே என்ன பண்றது ஆதி? ஒரு சன்டே சிக்கன் சாப்பிடலனா ஒன்னும் ஆகிடாது  தானே”

“ஐயோ ஆரு! இப்பவே பாரு… கை கால் எல்லாம் எப்படி நடுங்குதுனு. ” என்று அவன் சொல்லி கொண்டு இருக்கும் போதே அறைக் கதவு திறக்கப்பட்டது.

இரண்டு பேரும் திரும்பி பார்க்க அங்கே அபியும் நிவியும் சோகமாக நின்று கொண்டு இருந்தனர்.

“என்ன ஆச்சு நிவி அபிக்கு. ஏன் இவ்வளவு சோகமா இருக்கீங்க?”

“இன்னைக்கு சிக்கன் இல்லையாம் ஆரு அக்கா.” என்றாள் அழுகை கலந்த குரலில்.

“அட இதுக்கு போய் நிவிக்குட்டி அழலாமா? இப்போ சாப்பிடலனா என்ன இன்னொரு சன்டே சாப்பிடலாம். “

“இல்லை ஆரு அக்கா… சன்டே அதுவுமா நான் சிக்கன்  சாப்பிடலனா எப்படி உயிரோட இருப்பேன். ” என்று அவள் அழுது கொண்டே சொல்ல

“நானும் எப்படி உயிரோட இருப்பேன்… ” என்று சொல்லி அபியும் அவளோடு அழுதான்…

“சிக்கன் இல்லைனா நானும் செத்துடுவேன்… ” மறுபுறம் ஆதியின் குரலும் அழுகையோடு ஒலித்தது.

இவர்களின் அழுகை சத்தம் கேட்க முடியாமல் ஆரு இறுக்கமாய் காதுகளை மூடிக் கொண்ட நேரம் கண்ணை கசக்கி கொண்டு இருந்த ஆதியின் முகம் சட்டென பிரகாசம் ஆகியது.

“ஆரு ஆரு ” என்றவன் அழைக்க காதுகளில் இருந்து கையை எடுத்தாள்.

“நீ அந்த சத்தத்தை கேட்டியா ஆரு?”

“மூதேவி நான் தான் காது மூடிட்டு இருந்தேனே… எனக்கு எப்படி சத்தம் கேட்டு இருக்கும்?”

“கரெக்ட் தான் உனக்கு கேட்டு இருக்காது தான். ஆனால் எனக்கு கேட்டுச்சே… கோழி கொக்கரக்கோனு கூவுற சத்தம் எனக்கு கேட்டுச்சே.”

“ஆதி நீ கோழியைப் பத்தி யோசிச்சு யோசிச்சு பைத்தியம் ஆகிட்டே. அதான் உனக்கு கோழி சத்தமாவே கேட்குது.”

“இல்லை இல்லை ஆரு அக்கா… எனக்கும் சத்தம் கேட்டுச்சு.” என்று நிவி சொல்ல அபியும் ஆமாம் கேட்டுச்சு என்றான்.

ஆருவுக்கும் இப்போது சப்தம் கேட்டது.

நால்வரும் பால்கனி பக்கம் எட்டி பார்த்தனர்.

அங்கே அந்த ஏரிக்கரை ஓரம் ஒரு கோழி கொக்கரோகோ என்று கத்தி தன்னை சிக்கன் குழம்பு வைக்க சொல்லி volunteer ஆக voice கொடுத்து கொண்டு இருந்தது.

ஆதி வில்லத்தனமாய் அந்த கோழியைப் பார்த்தான்.

நிவியும் அபியும் ஆருவை நச்சரித்தனர்.

“ஆரு அக்கா… கோழிக் கடை இல்லைனா என்ன? அந்த கோழி தான் இருக்கு இல்லை. இன்னைக்கு சிக்கன் சாப்பிடலாம். “

“கண்டிப்பா சிக்கன் சாப்பிடுறோம் நிவி மா. ஆதி அங்கிள் இருக்கேன் நீ கவலைப்படாதே. “

“உனக்கு கோழிப் பிடிக்க தெரியுமா ஆதி?” என ஆரு வியந்து போய் கேட்க ஆதி இல்லை என்று தலையாட்டினான்.

“அப்புறம் எப்படி கோழியைப் பிடிப்ப… அது ஓடிப் போயிடுச்சுனா?” மறுகேள்வி கேட்டாள் அவள்.

“ஏன் ஆரு இப்படி நெகட்டிவா பேசிக்கிட்டு இருக்கே… நான் போய் கோழியை வா னு  கூப்பிட்டா அது பாட்டுக்கு வந்துட போகுது. எல்லாம் பாசிட்டிவா தான் நடக்கும் பாரு. “

“எப்படி எப்படி நீங்க வந்து கூப்பிட்ட உடனே என்னை குழம்பு வெச்சு சாப்பிடுங்கனு சொல்லி கோழி உங்க கிட்டே வந்துடும் அப்படி தானே.”

“அப்படி தான் ஆரு.” என்றான் இவன் பதிலுக்கு.

“அக்கா நம்ம இப்படியே பேசிக்கிட்டே இருந்தா அந்த கோழி எகிறி குதிச்சு போயிடும். வாங்க போகலாம்… ” என்று நிவி சொல்லிவிட்டு கோணிப்பையை எடுக்க ஓடினாள்.

ஆரு, ஆதி, அபி, நிவி எல்லோரும் மாஸ்க்கை அணிந்து கொண்டு வட்டமாக நின்று கொண்டனர்.

“டீம் ஆப்பரேஷன் கோழி யை வெற்றிகரமா execute பண்றோம். ” என சொல்லி வெற்றிக்குறி போட்டவர்கள் நேராக சம்பவம் நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

அந்த கோழியை வில்லத்தனமாய் நால்வரும் பார்க்க கோழியும் அவர்களை வில்லத்தனமாய் பார்த்து முறைத்தது.

“எல்லோரும் பலமா அணையை கட்டுங்க டா… அபி நீ வடக்கு பக்கமா போ… நிவி நீ தெற்கு பக்கமா போ… ஆரு நீ கிழக்கு பக்கமா போ… நான் மேற்கு பக்கமா போறேன். நம்ம போடப் போற ஸ்கெட்ச்ல இருந்து அது தப்பிக்கவேக்கூடாது. ” என அவன் படபடவென்று சொல்ல மூவரும் அதே இடத்திலேயே அப்படியே நின்று கொண்டு இருந்தனர்.

“ஆபரேஷன் கோழி டீம் உங்களுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி எல்லோரும் அசமந்தமா நிக்குறீங்க. போய் பொசிஷன்ல நில்லுங்க.” என ஆதி கத்த,

“இல்லை ஆதி அங்கிள் வடக்குனா என்ன? சாப்பிடுற பொருளா?” என்றான் அபி.

“இப்படி எடக்கு எடக்கா கேட்கக்கூடாது அபி கண்ணா… வடக்கு னா எனக்கு right side ல இருக்கிற place.. அங்கே போய் நில்லுங்க. ” என சொல்ல அபி அவனுக்கு எதிரே போய் நின்றான்.

நிவி ஆதியைப் பார்த்து முழிக்க ” அப்போ உனக்கும்  தெற்குனா என்னனு தெரியாதா நிவி?” என்றான் சோகமான குரலில்..

“இல்லை அங்கிள் ” என்று அவள் பரிதாபமாய் தலையாட்ட

” அபிக்கு opposite side ல போய் நில்லு மா.” என்றவனது கட்டளைக்கு இணங்க அவள் அங்கே போய் நின்றாள்.

ஆனால்  ஆரு மட்டும் எதையோ யோசித்துக் கொண்டு  நின்று இருக்க அவளின் மீது ஆதியின் பார்வை விழுந்தது.

“என்ன ஆரு உனக்கு தனியா சொல்லணுமா… போ போய் எனக்கு ஆப்போசிட்ல நில்லு” என்றவன் கத்த அவள் அவனுக்கு எதிரில் போய் நின்றாள்.

நால்வரும் கோழியை சுற்றி  வெறியோடு பார்த்து நின்றனர்.

அட்டாக் என்று ஆதி சொல்ல நால்வரும் வெறித்தனமாக பாய்ந்தனர் கோழியின் மீது.

“சக்சஸ் சக்சஸ் என் கையிலே கோழியோட கொண்டை சிக்கிடுச்சு… ” என்று ஆதி கத்த

“மூதேவி அது என் தலையிலே இருக்கிற கொண்டை டா. ” என்று ஆரு கத்தினாள்.

“அப்போ கோழி”

“அது போய் 5 நிமிஷம் ஆயிடுச்சு… “என்று ஆரு சொல்ல நால்வரும் எழுந்து நின்றனர்.

“இப்போ எங்கேனு கோழியைப் போய் தேடுறது ஆதி அங்கிள். ” என்று நிவி சோகமாக கேட்டாள்.

“அதைப் பத்தி நீ கவலைப்படாதே நிவி மா. என் கிட்டே ஒரு சூப்பர் ப்ளான் இருக்கு.” என்று சொல்லியவன் செருப்பால் அந்த மண்ணின் மீது கோடு வரைந்தான்.

“ஆரு நீ 25 டிகிரி இந்த பக்கமா போ ” என்று காலால் கோடு வரைந்து அவள் செல்ல வேண்டிய திசையை காண்பித்தான்.

” நிவி நீ 130 டிகிரி இந்த பக்கம் போ ” என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே ஆரு இடைமறித்தாள்.

“ஹே லூசு 25 டிகிரியும் 130 டிகிரியும் ஒரே direction ஐ தான் பாயிண்ட் பண்ணும். “

“ஓ அப்போ எனக்கு தெரியாம geometry ல புதுசா ஒரு ரூல் கொண்டு வந்துட்டாங்களா… அப்போ சரி நிவி மா நீ 140 டிகிரி angle அங்கிட்டு போ. ” என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே கோழியின் சப்தம் மீண்டும் கேட்டது.

நான்கு பேரும் திரும்பி பார்க்க அங்கே கோழி தன் இறக்கையை ஆட்டிக் கொண்டு நின்றது.

“ஆபரேஷன் கோழி டீம் இப்போ நாம தனித்தனியா பிரிஞ்சு போய் கோழியைப் பிடிக்க வேண்டிய நேரம்..” என்று அவன் சொல்ல நான்கு பேரும் நான்கு திசையில் ஓடினர், கோழியை சுத்துப் போடுவதற்காக…

சரியாக கோழி ஆதி ஓடிய திசையில் ஓட ஆருவும் அவன் பின்னாலேயே ஓடி வந்தாள்.

“உன்னை வேற பக்கம் தானே ஓட சொன்னேன்… ஏன் என் பின்னாலே ஓடி வர” என அவன் கேட்க

“நீ எப்படி இருந்தாலும் கோழியை பிடிக்க மாட்டே… அதான் உன் பின்னாடி ஓடி வரேன்… ” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே ஓடிச் சென்ற கோழி இவளைப் பார்த்து திரும்பி நின்றது.

மெதுவாக அதன் அருகில் “பக் பக்” என்று சொல்லி கொண்டே போன ஆரு லாவகமாக அந்த கோழியைப் பிடித்துவிட்டாள்.

“ஐ ஐ சூப்பர் சூப்பர் ஆரு அக்கா. கோழியை சூப்பரா பிடிச்சுட்டே.” என்று அவர்களின் பின்னே ஓடி வந்த நிவியும் அபியும் சந்தோஷமாக குதித்தனர்.

கோழியைப் பிடிக்க நடந்த கூத்தில் ஆருவின் தலைமுடி அவிழ துவங்கியது.

அதை சரி செய்வதற்காக ஆரு ஆதியின் கைகளில் கோழியைக் கொடுத்தாள்.

ஆனால் கோழி திமிறிய திமிறில் பயந்துப் போய் ஆதி கோழியைப் பறக்க விட்டுவிட்டான்.

கொலைபயத்தோடு அவன் திரும்பி பார்க்க அங்கே மூவரும் கொலை வெறியோடு அவனை முறைத்தனர்.

கோழியைப் பிடிக்க வேண்டிய நால்வரும் இப்போது ஆதியைத் துரத்தி பிடித்து அடிக்க ஓடினர்.

நிவியின் கைகளில் தான் முதலில் ஆதி மாட்டினான்.

“அங்கிள் நான் உங்க மேலே ரொம்ப மரியாதை வெச்சு இருந்தேன்… ஆனால் நீங்க இன்னைக்கு பண்ண காரியத்தை நான் மன்னிக்கவே மாட்டேன்.” என்று சொல்லி நிவி அவன் வயிற்றில் குத்துவிட்டாள்.

“டேய் மவனே நீ மட்டும் கோழியோட வீட்டுக்கு வரல… உன்னை வீட்டுக்குள்ளேயே சேர்க்க மாட்டேன்டா. வந்தா கோழியோட வா.இல்லாட்டி திரும்ப வந்துடாதே. ” என்று ஆரு சொல்லிவிட்டு முறைத்தாள்.

‘அபி மட்டும் தான் பாசக்கார பையன் நம்மள எதுவும் திட்டல அடிக்கல’ என்று நினைத்துக் கொண்டு இருந்த நேரம் ஆதியின் தோளின் மீது ஏறி அவனது தலையின் மீது கொட்டிவிட்டு ” பிச்சு பிச்சு ” என்று சொல்லிவிட்டு திரும்பி நடந்தான்.

“ஆப்பரேஷன் கோழி டீம் இப்படி டக்குனு என்னை மட்டும் தனியா விட்டுப் போன என்ன அர்த்தம். இது தான் நம்ம டீம்க்கு நீங்க தர co operation ஆ” என கேட்க முன்னால் சென்று கொண்டு இருந்த மூன்று பேரும் திரும்பி கல்லை எடுத்தனர்.

“இல்லை இல்லை வேணாம்… வன்முறை வேணாம்… நானே இந்த ஆப்பரஷனை தனியா முடிச்சு காட்டுறேன். வந்தா கோழியோட தான் வீட்டுக்கு வருவேன். மிளகு மசாலாலாம் ரெடியா வை ஆரு மா”

“துடைப்பக்கட்டை, ஜல்லிக்கரண்டிலாம் ரெடியா வெக்கிறேன்… கோழி இல்லாம வீட்டுக்குள்ளே வா உனக்கு இருக்கு. ” என்று ஆரு சொல்லிவிட்டு நிவியையும் அபியையும் அழைத்துக் கொண்டு சென்றுவிட்டாள்.

‘ஐயையோ வீர வசனம் பேசிட்டேனே..இப்போ எங்க போய் கோழி பிடிப்பேன்.. எப்படி பிடிப்பேன்.. இப்பவே கை எல்லாம் நடுங்க ஆரம்பிச்சுடுச்சே.. ‘ என்று புலம்பியபடி அப்படியே அங்கேயே அமர்ந்துவிட்டான்.

கோழியை பிடிப்பானா ஹீரோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!