நேச தொற்று-7b

சமையல் மேடையில் மூன்றாம் உலகப்போர் நடத்திக் கொண்டிருந்தனர் அங்கிருந்தவர்கள்.

பாவம் அந்த அடுப்பும் பாத்திரங்களும் வாய் இருந்தால் கதறி இருக்கும்.

அந்தளவுக்கு அதைக் கொடுமைப்படுத்திக் கொண்டு இருந்தார்கள்.

ஆதவ் மும்முரமாக எதையோ நறுக்கிக் கொண்டு இருக்க தர்ஷியோ அவனையே முறைத்துக் கொண்டு இருந்தாள்.

“ஹலோ மிஸ்டர் கொஞ்சம் அந்த பஞ்சு மிட்டாய் தலையை டவல் போட்டு கட்டி வைக்கிறீங்களா?”

“ஏன் தர்ஷி மேடம்? இதாலே உங்களுக்கு என்ன ப்ராப்ளம்னு தெரிஞ்சுக்கலாமா?”

“இல்லை உங்க பரட்டை தலையிலே இருக்கிற மொத்த முடியும் சாப்பாடுல விழுந்துட போகுது… அதான் தலை முடியை கட்டிக்கோங்கனு சொல்றேன் ஆதவ்”

“உனக்கு எதுக்கு இவ்வளவு அக்கறை? என்னமோ நான் செஞ்சதை சாப்பிட போறா மாதிரி ஃபீல் பண்றீங்க மேடம்.”

“நீ செஞ்ச சாப்பாட்டை யாரு சாப்பிட போறா? எங்கே நாங்க செய்யுற டிஷ்ல முடி வந்து விழுந்துட போதோனு தான் நான் ஃபீல் பண்றேன் ” என்றாள் அவள் மேவாயை தாடையில் இடித்துக் கொண்டு.

“ஆமாம் பெரிய டிஷ். ஒரு தக்காளி சாதமும் அதுக்கு தொட்டுக்க ஊறுகாய்யும் ஒரு டிஷ்ஷா?”

“பின்ன டிஷ் இல்லாமா antenna வா?”

“ஹா ஹா காமெடி நான் அப்படி போய் ஓரமா சிரிச்சுட்டு வரவா?”

“நோ நோ இங்கேயே சிரி. அங்கே போய் சிரிச்சா அங்கேயும் உன் முடி எல்லாம் விழுந்து கிடக்கும். “

“அடிங்க என்னனு தெரியாம தான் கேட்கிறேன்.  ஏன் வந்ததுல இருந்து இப்படி என் முடியை வைச்சே கலாய்ச்சுக்கிட்டு இருக்கே “

“உன் முடி என் கண்ணை உறுத்துது ஆதவ்.”

“ம்ம்ம் உறுத்தும் உறுத்தும்…அப்படியே உறுத்துற அந்த கண்ணை நோண்டி  காக்காக்கு போட்டா அப்புறம் உறுத்தவே உறுத்தாது. “

“என் கண்ணை நோண்டிடுவியா டா பனைமரம்?” என்று அவள் ஜல்லிக்கரண்டியை அவன் முகத்திற்கு நேரே நீட்ட அவனும்,

“ஆமாம் டி கத்தரிக்காய் ” என்று அவள் நீட்டிய ஜல்லிக்கரண்டியை நோக்கி அவனும் ஒரு ஜல்லிக்கரண்டியை நீட்டினான்.

இரண்டு ஜல்லிக் கரண்டிகளும் பெருக்கல்குறி போட்டது.

“ரெண்டு பேரும் அந்தப்பக்கமா போய் களரி சண்டை போடுங்க. இல்லை கதக்களி ஆட்டம் ஆடுங்க. ஆனால் இங்கே இருந்து என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க. குக்கர் விசில் சத்தம் எத்தனை வந்ததனு என்னாலே சரியா concentrate பண்ண முடியல. அந்த விசில்  சத்தத்தை விட உங்க சத்தம் அதிகமா இருக்கு.  ” என்று ஆதி கறார் குரலில் சொன்னான்.

ஆதவ்வும் தர்ஷியும் ஒருவரை பார்த்து ஒருவர் மேவாய்யை இடித்துக் கொண்டு திரும்பினர்.

“ஆதவ் அங்கிள் வாசமே செமயா இருக்கே. அச்சோ என் வேற வயிறு கறுக்முறுக்குனு சத்தம் போடுதே… எப்போ ரெடி ஆகும்?” என்றாள் நிவி தவித்தபடி.

“இதோ நிவி செல்லம். அடுத்த விசில் வந்த உடனே ரெடி ஆகிடும். ” என்று அவன் சொல்லி முடித்த அடுத்த நொடி இரண்டு குக்கர்களிலும் இருந்து ஒரே சமயம் விசில் அடித்தது.

இரண்டு பேரும் குக்கரை திறக்க அந்த அறையே வாசனையால் நிறைந்தது.

தக்காளி சாதம் வாசனையும் பிஸ்மிலாபாத் வாசனையும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டது.

“ஆரு அக்கா கிட்டே சாப்பிட்டுட்டு வேலை பார்க்கலாம்… முதலிலே dining table ஐ வந்து உட்கார சொல்லு டா.” என அபியிடம் சொல்லி அனுப்பிய ஆதவ் நிவியிடம் தான் செய்த பிஸ்மில்லாபாத்தை தட்டில் போட்டு கொடுத்து ஆருவின் முன்னே வைக்க சொன்னான்.

ஆதியோ இங்கே ஊறுகாய் பாட்டில் தேடும் மும்முரத்தில் அதை கவனிக்க தவறி இருந்தான்.

அவன் ஊறுகாய் பாட்டிலை தேடி சாப்பாட்டை போட்டுக் கொண்டு வெளியே வர அங்கே ஆரு தட்டில் ஏற்கெனவே வைக்கப்பட்டு இருந்த பிஸ்மில்லாபாத்தை சாப்பிட்டு கொண்டு இருந்தாள்.

கையில் தட்டோடு வந்த ஆதி அங்கே ஆரு சாப்பிடுவதைப் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் dining table இல் வைத்துவிட்டு அமர்ந்தான்.

“இன்னும் கொஞ்சம் பிஸ்மில்லாபாத் வைங்க” என்று தட்டை நீட்டிய படி ஆரு சொல்ல ஆதவ்வோ அந்த நேரம் தண்ணீர் அருந்திக் கொண்டு இருந்தான்.

உடனே அவனுக்காக காத்திராமல் ஆதியே அவள் தட்டுகளில் பிஸ்மில்லாபாத்தை புன்னகையுடன் எடுத்து வைத்தான்.

“தேங்க்ஸ் ” என்று வாங்கிக் கொண்டவள் அப்போது தான் அவன் அருகில் இருந்த இன்னொரு தட்டை கவனித்தாள்.

“என்னது ஆதி?” என்று ஆரு அவனை நோக்கி கேட்க  அவளின் கேள்விக்கு நிவி பதில் தந்தாள்.

“ஆரு அக்கா. நானும் ஆதவ் அங்கிளும் ஒரு டீம். ஆதி அங்கிளும் தர்ஷியும் ஒரு டீம். ரெண்டு டீம் சமைச்ச சாப்பாட்டுல நீங்க எங்க சாப்பாட்டை தான் சாப்பிட்டீங்க. சோ நாங்க தான் வின்.” என குஷியோடு கத்தினாள்.

ஆருவுக்கோ லேசாக வருத்தம் மேலிட்டது, ஆதி செய்த சாப்பாட்டை சுவைக்கவில்லேயே என்று.

“ஓய் ஆதி. இன்னும் எந்த டீம்மும் வின் பண்ணல. நீ சமைச்சதை கொண்டு வா. நான் சாப்பிட்டு சொல்றேன் யாரு வின் னு.  ” என்று தன்னருகில் வைத்து இருந்த ப்ளேட்டை தள்ளி வைத்துவிட்டு ஆதியின் அருகில்  இருந்த அந்த  ப்ளேட்டை எடுத்தாள்.

அந்த தட்டில் இருந்த உணவைப் பார்த்ததும் நொடிப் பொழுதில் அவள் முக பாவனை மாறியது.

மாறிய தன் முகத்தை உடனே சரி செய்து கொண்டாள்.

ஆனால் அவளது முகபாவத்தை சட்டென்று கண்டு கொண்டான் அவன்.

என்ன என்று அவன் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே நிவி, ஆதியின் காதுகளில் மெதுவாக சொன்னாள்.

“அங்கிள் ஆரு அக்காவுக்கு தக்காளி சாதமே பிடிக்காது பிஸ்மிலாபாத் தான் பிடிக்கும். தர்ஷி அக்காவுக்கு தான் தக்காளி சாதம் பிடிக்கும். “

நிவி சொன்னதைக் கேட்டதும் ஆதிக்கு உடனே புரிந்தது.

ஏன் ஆருவின் முகம் சட்டென்று மாறியது என்று.  ஏன் அந்த மாற்றத்தை உடனே மறைத்துக் கொண்டாள் என்றும்.

அவளுக்கு பிடிக்காத தக்காளி சாதத்தை அவள் அவனுக்காக சாப்பிட உதட்டருகே கொண்டு போன அடுத்த நொடி ஆதி அவளை தடுத்தான்.

“ஆரு நீ பிஸ்மிலாபாத் தானே சாப்பிட கேட்டே. நீ இதை சாப்பிடு. நான் தக்காளி சாதம் சாப்பிடுறேன். “

“பரவாயில்லை ஆதி… நான் ஒரு வாட்டி தக்காளி சாதத்தை டேஸ்ட் பண்ணி பார்க்கிறேனே. “

“ஆரு மா. உனக்கு பிடிக்காத தக்காளி சாதத்தை நான் பண்ணேன்றதுக்காக நீ சாப்பிட்டு தான் ஆகணும்னு நான் சொல்ல மாட்டேன். நீயும் எனக்காக சாப்பிடணும்னு நான் எதிர்பார்க்க மாட்டேன். நீ உனக்கு பிடிச்சதை சாப்பிடு மா.  இதுல எதுக்கு போட்டிலாம் வேண்டி கிடக்கு? எனக்கு உன் வயிறு நிறைஞ்சா போதும்”  என்று சொல்லி அவன் பிஸ்மிலாபாத் இருந்த தட்டை அவளருகில் வைக்க ஆரு அவனையே இமைக்காமல் பார்த்தாள்.

இவன் ஏன் இப்படி இருக்கிறான்? இவன் எதனால் இப்படி இருக்கிறான்?

இவனிடம் கொஞ்சம் கூட பொறாமை இல்லையே…

நான், என் சந்தோஷம், என் விருப்பம் இது மட்டும் தானே அவனுக்கு முக்கியமாக தெரிகிறது.

அவன் விருப்பத்திற்கு மாறாய் நான் நடந்து கொண்டேன் என்று அவன் சிறிதும் கோபப்படவில்லையே.

ஆதவ் செய்த சாப்பாட்டை நான் கேட்கும் போது கூட முகத்தில் சிறு வருத்தம் இல்லாமல் புன்னகையோடு என் தட்டில் வைத்தானே.

எப்படி அவனால் முடிந்தது? என் மீது கொண்ட காதலால் தான் அவனால் இவ்வளவும் செய்ய முடிகிறதோ? என்று எண்ணியபடி  அவள் உணவோடு சேர்த்து அவன் முகத்தையும்  மென்று கொண்டு இருந்தாள்.

“ஐயோ தூ தூ” என்று தர்ஷி திடீரென்று துப்ப  ஆதியோ,

” துப்புற அளவுக்கா நான் செஞ்ச தக்காளி சாதம் இருக்கு ” என்று விட்டத்தைப் பார்த்து யோசனையோடு கேட்டான்.

“ஐயோ சாதத்துலலாம் குறை சொல்ல முடியாது handsome. உண்மையா நல்லா இருக்கு. ஆனால் பக்கத்துல உட்கார்ந்து இருக்கே இந்த பூதத்தாலே தான் நான் இப்படி துப்பிக்கிட்டு இருக்கேன்” என்றாள் ஆதவ்வை நோக்கி கைநீட்டியபடி.

“அடியே யாரை பார்த்து பூதம்னு சொல்ற?”

“உன்னை பார்த்து தான் டா ஆதவ். அப்பவே சொன்னேன் அந்த பஞ்சு மிட்டாய் தலையை துணி வெச்சு கட்டு கட்டுனு. இப்போ பாரு. சாதத்துல முடி வந்து விழுந்து இருக்கு. அது எப்படி டா நீ செஞ்ச சாதத்துல எல்லாம் முடி வராம நாங்க செஞ்ச சாப்பாடுல முடி வந்தது. ” என்றாள் கேள்வியாக.

“அதுவா நீ தான் என் முடியை வெச்சு கொஞ்சம் ஓவரா கலாய்ச்சல.அதான் உன்னை பழி வாங்க நாலு முடியை பிடுங்கி நீ சாப்பிடுற சோத்துல போட்டுட்டேன். நாளைக்கு எப்படி பிச்சுக்குனு போக போதுனு மட்டும் பாரு. ” என்றான் ஆதவ் காலரைத் தூக்கிவிட்டபடி.

“ஆதவ் யூ ராஸ்கல்… சீட்டர். ” என்று சொல்லி அவனை அடிக்க முற்பட ஆதவ் எழுந்து ஓடினான்.

நிவியும் அபியும் அவர்களின் பின்னே ஓட  “பார்த்து போ அபி. கீழே விழுந்துட போற” என்று கத்தியவாறே ஆதியும் அவர்களின் பின்னே ஓடினான்.

ஓடிக் கொண்டு இருந்த ஆதியையே திருட்டு பார்வை பார்த்து ரசித்துக் கொண்டு இருந்த ஆரு மெதுவாக அந்த தக்காளி சாதம் வைக்கப்பட்டு இருந்த தட்டை அருகினில் இழுத்தாள்.

சுற்றி முற்றி பார்த்தவள் தக்காளி சாதத்தை எடுத்து தன் உதடுகளில் வைத்தாள். வழுக்கிக் கொண்டு உள்ளே போனது.

தனக்கு பிடிக்காத தக்காளி சாதத்தை தனக்கு பிடித்த ஆதிக்காக ரசித்து உண்ண தொடங்கினாள்.

இடை இடையே ஆதியின் முகமும் அவன் பேசிய வார்த்தைகளும் நினைவுக்கு வர “என் க்யூட் குஞ்சப்பா டா நீ… ” என சொல்லி சாப்பிட்டு முடித்தாள்.

சாப்பிட்ட தட்டை எல்லாம் எடுத்துக் கொண்டு சிரித்த முகத்தோடே உள்ளே நுழைந்த ஆருவின் முகம் பத்ரகாளியாய் உருப் பெற்றது அங்கே கண்ட காட்சியில்.

ஆதி என்று அவள் கத்தவும் அவன் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது.

“என்ன ஆச்சு ஆரு? ஏன் இப்படி கத்துற?” என்று சொல்லி அவன் கிச்சன் வாசலுக்குள் சென்ற நேரம்  கோபமாக ஆரு வீசிய டம்ளர் அவன் காலடியில் கிடந்தது.

“just miss டா  ஆதி. இல்லைனா அந்த டம்ளர் உன் காலை சம்பவம் பண்ணி இருக்கும்” என்று நினைத்தபடியே ஆருவைப் பார்த்து,

” என்ன ஆச்சு ஆரு ” என்றான்.

“என்னடா பண்ணி வெச்சு இருக்கீங்க கிச்சனை. எனக்கு ஹெல்ப் பண்றேனு சொல்லி இப்படி என்னை இரண்டு மடங்கா வேலை கொடுத்திட்டீங்களே பாவிங்களா. நானே சமைச்சு இருந்தா இவ்வளவு சமானும் சேர்ந்து இருக்காது. வீடும் இப்படி அலங்கோலம் ஆகி இருக்காது. கோயில் மாதிரி இருந்த கிச்சனை இப்போ  குப்பைக்கூளமாக மாத்திட்டீங்களே டா. ” என்று சொல்லி அவள் இன்னொரு டம்ளரை அவன் மீது வீசியெறிய லாவகமாக தப்பினான்.

“ஆரு மா… நான் ஒருத்தன் மட்டும் கிச்சனை இப்படி பண்ணல. இரு போய் அந்த culprits களையும் இழுத்துட்டு வரேன், அடியை ஷேர் பண்ணிக்க. இப்படி என்னை மட்டுமே போட்டு குமுறது நியாயம் இல்லை ஆரு சொல்லிட்டேன். “

“என்ன நியாயம் இல்லை? இல்லை என்ன நியாயம் இல்லைனு கேட்கிறேன். நீ தானே என் கையிலே வகையா மாட்டுன நீயே எல்லா அடியும் வாங்கிக்கோ. ” என அவள் எறிந்த  ஜல்லிக்கரண்டி அவன் மீது பறந்து வந்தது. அதையும் வாகாக கேட்ச் பிடித்துவிட்டான்.

“இங்கே பாரு ஆரு. நீ நல்லா சாப்பிட்டு தெம்பா அடிக்க ரெடியா இருக்கே. ஆனால் நான் இன்னும் சாப்பிடல. energy ஏத்திட்டு வரேன். அப்புறமா இந்த சின்னபுள்ளையை போட்டு என்ன வேணாலும் அடிச்சுக்கோ. ” என அவன் சொல்ல கோபமாய் முறைத்தவளின் பார்வை அவன் வெளியே சென்றதை உறுதி செய்துக் கொண்டவுடன் அதுவரை இதழோரத்தில் அடக்கி வைத்து இருந்த சிரிப்பு அவள் இதழ்களை ஆக்கிரமித்து கொண்டது.

“ஸ்வீட் குஞ்சப்பா ” என்று அவள் உதடுகள் செல்லமாய் முணுமுணுத்துக் கொண்டது.