நேச முரண்கள் – 1

நேச முரண்கள்… 1

 
எதிர்பார்ப்புகள் தான்
ஏமாற்றத்திற்கு காரணம் 
என்று தெரிந்தும்…
மடத்தனமான என் மனம்…
உன்னிடம் எதிர்பார்த்து
ஏமாந்தது  உயிர் வரை
வலிக்குதடா..!
 
  
இந்தியன் ஏர் லைன்ஸ் விமானம் டெல்லியிலிருந்து புறப்பட்டு மதியம் சரியாக ஒரு மணிக்கு மீனம்பாக்கத்தை அடைந்தது.
 
 
சென்னை விமான நிலையத்திலிருந்து இறங்கி வெளியே வந்த வினோதாவின் முகத்தில்…  நம் சிங்கார சென்னைக்கு உரிய வெயில்  அடிக்க… தன் கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டவளின் கரங்களை பற்றிக் கொண்டு நின்றிருந்தான் விஜய தீபன்.
 
 
 அவனின் அருகில் சிறு சிற்பம் போல் குண்டு விழிகளுடன் கொழுக்கு மொழுக்கு  கன்னத்துடன்  பால் வண்ணத்தில் ஏழு வயது சிறுமி ரஸ்மிகா… தன் அண்ணனின் விரலை பிடித்து நிற்க.
 
 
 
அந்த அழகிய இரு மொட்டுக்களை இவ்வுலகிற்கு கொடையாக கொண்டு வந்தவள்  சிந்தனையோ தன் வாழ்வில் நடந்த அனைத்து விடயங்களுக்கும்  காரணமானவன் மீது இருந்தது.
 
 
வினோதாவின் உள்ளத்தில் மீண்டும் வேண்டாத சில சிந்தனைகள் மனதில் தோன்ற, மாற்ற முடியாத சில நிகழ்வுகளில் காரணமாய் மனம் சுணங்க… தன் குழந்தைகளை அவர்களின் தந்தையிடம் விடுமுறைக்கு விட வந்திருந்தாள்.
 
 
 
அவனின் மீது உள்ள கோபத்தில் டெல்லி வரை ஒற்றை ஆளாக சென்று தந்தையின் கண்ணில் படாமல் பிள்ளைகளை வளர்க்க எண்ணியவளை கட்டி போட்டு இழுத்தது…
நீதி மன்ற  தீர்ப்பு .
 
 
அவள் விவாகரதிற்கு பிறகு அவனை விட்டு தூரம் தள்ளி சென்றதை முதலில் கண்டு கொள்ளாதவன்.
 
விடுமுறைகள் வரும் போது அவனை காண தவிர்ப்பது  புரிந்து கொண்டு, எதையும் உடனே சாதிக்கும் அவனின் பிடிவாத குணம் நீதிமன்றம் மூலம் அவளுக்கு தனது உரிமையின் அளவை புரிய வைத்து.
 
 
அழகாக அவனின் குழந்தைகளின் மீதான தனது தனியுரிமை பெற்றவன்.
 
 
 சென்ற விடுமுறைக்கு தானே சென்று அவர்களை அழைத்து வந்தவன்.
 
 
இந்த விடுமுறைக்கு மகனின் மூலம் அழகாக காய் நகர்த்தி, அவளுடன் சேர்ந்து அவர்களையும் வர வழைத்திருந்தான்.
 
 
அதற்குள் சிறுவர்கள் இருவரும் தந்தையைப் பார்த்து விட…
 
“அப்பா” பாய்ந்து சென்று, தங்களை நோக்கி குனிந்தவன் கழுத்தைக் கட்டிக்கொண்டனர்.
 
ஆறு அடிக்கும் மேல் உயரத்தில்… கருமைக்கும் சற்று முந்தைய நிறத்தில்… கூர்மையான கரிய விழிகளுடன்…  தன் வயதிற்குறிய கம்பீரத்துடன் தோன்றிய விஜய வர்மன் பொக்கிஷமென, தன் உயிரில் ஜனித்த பிள்ளைகளை அணைத்தவனின் விழிகளோ! ரகசியமாக தான் முழுவதும் அறிந்த… அதே சமயம் தன்னை முழுவதுமாக உணர்ந்த… அவனின்  ரோஷக்கார அழகியின் மீது படிந்தது.
 
 
 
அவள் மீது அவனுக்கு கோபம் உள்ள அதே நேரத்தில்…  மனதின் ஓரத்தில் உள்ள காதலை யாரும் அறியாமல் மறைத்து வைத்திருப்பவனின்  அறிவோ..!  தான் என்ற கர்வதின் புறம் நிற்பதால்… அவளிடம் கூட தன்னை… தன் நேசத்தை…  வெளிப்படுத்துவதில்லை அந்த திமிர் பிடித்தவன்.
 
 
முப்பத்திரண்டு வயதிலும், பார்ப்பவர் மனதை கவரும் வகையில்… இளமை ததும்ப… தன் தோள் வரை புரளும் கூந்தலை அள்ளி எடுத்து முடிந்து… ஜீன்ஸ், குர்த்தியில் நின்றிருந்தவளின் கண்கள் அவனை வெறுமையுடன் நோக்கியது.
 
 
வினோதாவின் கண்கள் மிகவும் உயிர் ஓட்டம் நிறைந்தது… அது அவளின் மனதை கண்ணாடி போல் காட்டிவிடும், அத்தகைய கண்களின் வெறுமையை கண்டு மனம் தவித்தது வர்மனுக்கு.
 
 
அது வரை அமைதியாக சிறுவர்களின் செயல்களை பார்த்திருந்தவள், அவனின் பார்வை தன்னை அணுவணுவாய் ஆராய்வதை கண்டு வேகமாக அவர்களை நெருங்கியவளை  உணர்ந்து புன்னகைத்தவன்,  ரசனையாக அவளை களவாடிய படி…“ஹாய் வினு எப்படி இருக்க?” என்று கேட்க.
 
‘கேக்குறது பாரு… அட லூசு… இவ்வளவு நேரம்  நாக்க தொங்க போட்டு விட்டு உத்து பார்க்கிறப்ப தெரியலையா எப்படி இருக்கேன்னு… பக்கி பய… கண்ணு ரெண்டையும் நோண்டனும்…’ என்று மனதிற்குள் அவனை வறுத்து பொடி செய்து  பறக்க விட்டவள்.
 
“ஹாய்… விஜயவர்மன்… எனக்கு என்ன… ரொம்ப ஹாப்பியா… நிம்மதியா… இன்னும் சொல்லபோனால் ரொம்ப சுகமாக இருக்கேன்.” என்றாள், அவனை மனதிற்குள் வசைப்பாடிய நினைவில், மர்ம புன்னகையுடன்.
 
 
அதுவரை இலகுவாக மனதிற்குள் இருப்பவளை கண்டு,  சிரித்துக் கொண்டிருந்தவன், அவளின் நக்கலான பதிலில் பழைய படி இறுகி விட்டான். 
 
 
குடும்பத்தை தொலைத்து தனி ஒருவனாய்!  எப்போதும் இருப்பவனின் இறுக்கம், தன் பிள்ளைகள் வரவை எண்ணி நீண்ட நெடிய காலத்திற்கு பின்பு இன்று தான் சற்றே  இலகி இருந்து,  அவனிடம் பேசிய ஒரு வார்த்தையில் மீண்டும் அவனை கடினமாக்கி விட்டாள்… அவனின் காதல், பாசம், அன்பு, வெறுப்பு, கோபம், தாபம் அனைத்துக்கும் உரியவள்.
 
 
அவளுக்கும் அவனுக்கும் இடையே விழுந்த திரையை என்ன செய்ய… அவர்கள் விரும்பினால் அன்றி வேறு யாரும் ஒன்றும் செய்வதற்கில்லை…
 
 
வாழ்க்கை இனிமையாக அமைய, ஒன்று சூழ்நிலையை தனக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள வேண்டும் இல்லை… சூழ்நிலைகளுக்கு ஏற்ப தான் மாறிக்கொள்ள வேண்டும்… அப்படி இல்லையென்றால் எதுவும் மகிழ்வை தந்து விடாது.
 
 
அவளின் முகத்தினை பார்க்க விருப்பம் இல்லாமல், குழந்தைகளை நோக்கி திறும்பியவன்,  “தீபா…  ரஷ்மி… நம்ம வீட்டுக்கு  போகலாமா..?” என்றவன் வினோதாவை பார்த்து ‘வா’  என்பது போல் தலை அசைக்க…
 
‘இவன் “வா” அப்படினு தலைய ஆட்டுனா  பின்னாடியே போக… நானென்ன அவன் வீட்டு பூனை குட்டியா…? போடா டேய்…’ என்று நினைத்தவள் அலட்சியமாக சிறு துரும்பை போல் அவனை பார்க்க.
 
 
அவள் மகனோ… தந்தையிடம் “ஓகே டாடி” என்றவன்  “மா வாங்க” என்று அவளின் கரங்களை பற்ற…
 
தன்னை கட்டு படுத்திக்கொண்டு ஒரு பெரு மூச்சு விட்டவள்.
“உங்களுக்காக கபிள் ஆப் டே’ஸ் (couple of days) மட்டும் இருப்பேன் குட்டிஸ்… அதுக்கு மேல  முடியாது… ஓகே வா செல்லம்ஸ்” என்றாள் குழந்தைகளிடம் பொறுமையாக தன் மனதில் உள்ள வருத்தங்களை மறைத்துக் கூற.
 
அவளின் பதிலில் குழந்தைகள் முகம் வாடியது என்றால்… வர்மனின் வதனமோ கோபத்தில் கொதித்தது.
 
எதுவும் பேசாமல் குழந்தைகளின் பெட்டியை வர்மன் எடுத்து கொள்ள… அவளுடையதை வினோதா கொண்டு வர காரினை அடைந்தவர்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
 
தீபன்,  ரஸ்மியிடம் ஏதோ ரகசியமாக சொல்ல அந்த குட்டி தங்கமோ… அதை அப்படியே ஏற்று நடக்க, கவிதையாய் இருந்தது அவர்களின் பாசம்.
 
 
ரஷ்மி குறும்புகளின் மொத்த உருவம், அவளின் அண்ணனிடம் மட்டுமே அடங்க கூடியவள்… அவனின்  அக்கறையில் அந்த சின்ன சிட்டு எப்பவும் அடிபணிந்து தான் போய் விடும்.
 
 
விஜய தீபனிடம் இயல்பாகவே அவன் தந்தையை போல் அளுமை திறன் அந்த பத்து வயதிலேயே அமைந்திருந்தது.
 
 
தங்கையை பேசாதிருக்க செய்தவனின் விழிகள், சற்றே கவலையுடன் தன்னை உருவாக்கியவர்களை நோக்கியது, பின் அமைதியாகி விட்டவன் கரங்கள் ரஸ்மியை தோளோடு அணைத்து கொண்டது.
 
 
பெற்றவர்களின் மனநிலை குழந்தைகளிடம் பிரதிபலிக்க… சூழ்நிலை மௌனம் என்னும் ஆடையணிந்து அமைதியாக காட்சியளித்தது அவர்கள் அவனுடைய இல்லம் வந்து அடையும் வரை…
 
 
வீட்டை நெருங்கிய போது தன்னை அறியாமல்  வினோதாவின் உடல் விறைத்தது.
 
 
****************************
 
வீட்டின் கதவை இயல்பு போல பிள்ளைகளிடம் சாவியை தந்து திறக்க சொன்னவன் கரங்கள் வினோவின் கைகளை பற்றிக் கொள்ள…
அவனிடம் கோபமாக பேச வாயைத் திறந்தவளின் வார்த்தைகளை, குழந்தைகளின் சந்தோஷ கூச்சல் தடை செய்ய அவர்களை பார்த்தவளின் விழிகள் இரண்டும்  நம்ப முடியாத வியப்பில் விரிந்தன.
 
 
அவனின் பிறந்த நாள் ஒன்றிற்கு… வினோ மனம் நிறைந்த காதலுடன் இதே போல சாக்லேட் மழையை அவன் மீது பொழிய செய்த போது …
 
“இது என்ன சின்ன பசங்க மாதிரி… எனக்கு சுத்தமா பிடிக்கல… இரண்டு  குழந்தைகளுக்கு அம்மா  நீ… கொஞ்சமாவது அறிவு இருக்கா… இல்லையா…?” என்று அவளிடம் காய்ந்திருந்தான் இப்போது  அதே செயலை செய்திருந்த அந்த உத்தமன்.
 
ரஷ்மி “வாவ் சூப்பர் டாடி… லவ் யூ சோ மச்…  போன டைம் இப்படி செய்யலயே?” என்றாள் குதூகலமாக.
 
அவளின் அழகிய முகம் கண்டு புன்னகைத்தவறே… லாஸ்ட் டைம் நான் வந்து  உங்கள கூட்டி வந்தேன்…” என்றவன் அதே புன்னகையுடன் “இப்போ உங்க மம்மி யோட வந்துருகிங்க இல்ல சோ சர்பிரைஸ்…” என்றவன் ரஸ்மியின் ஆப்பிள் கன்னத்தில் முத்தமிட்டான்.
 
 
 பழைய நினைவுகளில் தாக்கத்தில் இருந்தவளை அவனின் வார்த்தைகள் மேலும் கடுப்பேற்ற… வேகமாக வீட்டினுள்ளே என்றவளின் பாதங்கள், பிள்ளைகள் அறியாவண்ணம் அந்த சாக்லேட்களை சிறிது ஏத்திவிட்டு அவன் பார்க்க உள்ளே சென்றன.
 
அது வரை மிகுந்த ஆவலுடன் அவளது செயல்களை பார்த்துக் கொண்டிருந்த வர்மனின் முகம் சிறுத்து விட்டது…  ‘முன்ன பிடிச்சதெல்லாம் இந்த ராட்சசிக்கு பிடிக்கவில்லை போல இருக்கு’ என்று மனதிற்குள் புலம்பியவன் அமைதி ஆகிவிட.
 
“அண்ணா… என் பப்பி பொம்மை எங்க சீக்கிரம் தாங்க… நான் ஊஞ்சலில் உட்கார்ந்து விளையாட போறேன், என் குட்டி பப்பி கூட…” என்ற ரஷ்மியின்  சந்தோசம் நிறைந்த அழகிய குரல் சப்தமாக ஒலிக்க…
 
“பாப்பா… இப்பதான் உள்ள வந்தீங்க… போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க…” என்ற தீபனின் குரல் சிறு கடினதுடன் வெளிப்பட… அப்போது தான் அழகாக தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வெளிய வந்த அண்ணனை பார்த்தவள்,  ” இதோ அண்ணா” என்று தனது அறையை நோக்கி துள்ளி குதித்து ஓடினாள்.
 
அவள் சென்ற பின் “அப்பா இவ்வளவு இனிப்பு சாப்பிட்டா… பாப்பாக்கு இருமல் வரும், இதை சீக்கிரம் எடுத்து மறைத்து வைக்கணும்..”என்றவன், “வாங்க அம்மா…”என்று தாய்யையும் துணைக்கு அழைக்க…
 
வர்மனிடம் கடுப்பை காட்ட முடிந்தவளால், மகனிடம் முகம்  திரும்பி செல்ல முடியவில்லை.
 
ஆழமான நிமிடங்கள் அமைதியாய் நகர்ந்தது பெரியவர்கள் இருவருக்குள்.
 
 
மதிய  உணவை  நட்சத்திர உணவகத்தில் இருந்து பிள்ளைகளுக்கு பிடித்தவாறு, ஆடர்  செய்தவன்.
 
 
அவர்களுடன் தனது நேரத்தை செலவு செய்ய…
 
 
வினோதாவிற்கு அந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஏதோ முள்ளின் மேல் இருப்பது போல் வேதனையாக இருந்தது. 
 
 
எத்தனை கனவுகளுடன் ஆரம்பித்த வாழ்க்கை.
 
முதல் முதலாக வர்மனின் புகைப்படத்தை பார்த்தவுடன் தோன்றிய விருப்பம், திருமணத்தில் கைகூடிய உடன் காதலாக உருமாற…
 
 
மனம் நிறைந்த எதிர்பார்ப்புகளுடன் தோன்றி… பின் ஏமாற்றத்துடன் முடிந்தது அவர்களின் பந்தம். 
அந்த வீடு அவளது இன்பம், துன்பம், வருத்தம், ஏமாற்றம், அழுகை அனைத்தும் உணர்ந்தது, நினைக்க நினைக்க அவளுக்கு தன்னையறியாமல் கண்கள் கலங்க அமைதியாக சோபாவில் கண்மூடி சாய்ந்து விட்டாள்.
 
 
குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாலும் வர்மனின் பார்வை கவனம் வினோதா மீது இருக்க…
 
 
ஏதும் செய்ய முடியாத தன் கையறு நிலையை எண்ணி…  தன்னுள் தோன்றிய கோபத்தை அடக்கியவன் கவனத்தை குழந்தைகளின் மீது திருப்பினான்.
 
 
ஹாரி பாட்டர் படத்தை ஹோம் தியேட்டரில் வர்மன் போட்டு விட… நேரம் சிறகுகள் கட்டி பறந்தன, சிட்டுகள் இரண்டுக்கும்.
 
 
அன்றைய தினம் வீடு முழுவதும் குழந்தைகளின் ஆர்ப்பாட்ட குரலுடன்… விளையாட்டு தனங்களுடன் அழகாக நகர…
 
 
 
வினோதாவின்  குரல் அவனிடம் அல்லாமல்…  குழந்தைகளிடம் மட்டுமே வெளிப்பட…
 
 
வர்மனுக்கு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு குடும்பமாய் மனைவி குழந்தைகளுடன் இருப்பது அப்படி ஒரு நிறைவை கொடுத்தது.
 
 
 
அதற்காக அவளுடன் இணைய வேண்டும் என்றோ… மீண்டும் அவளுடன் வாழ்க்கையை மகிழ்வுடன் தொடங்க வேண்டும் என்ற எண்ணமோ… சிறிதும் அவனிடம் இல்லை.
 
 
அவனைப் பொறுத்தவரை பிரிவுக்கு முக்கிய காரணம் அவளது வார்த்தைகள். அதை கடந்து வர, இன்றளவும் கூட அவனால் முடியவில்லை.
 
 
மனைவியிடம் தோல்வி அடைபவன் தான்… வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான் என்ற சிறிய விஷயம் கூட தெரிந்து கொள்ளாத மூடனாய் வெறுமையான இரவுகளுடன்… தனிமையை மட்டும் துணையாக கொண்டிருக்கும் வர்மனுக்கு சிறிய இளைப்பாறுதல்  போல் தோன்றியது வினோதாவின் வருகை.
 
 
இரவு குழந்தைகள் தூங்கும் வரை கூட, தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேச விரும்பாத, அவளை கண்டு பல்லை கடித்துக் கொண்டு    வேகமாக, வினோதாவின் அருகில் வந்தவன் அவளிடம் பேச ஆரம்பிக்கும் முன்…
 
 
“ப்ளீஸ்… மிஸ்டர் விஜய வர்மன். இப்போ உங்க கூட பேசுற அளவுக்கு என் மனநிலை இல்லை, என்னை கொஞ்சம்  நிம்மதியா இருக்க விடுங்க…” என்று அவனிடம் முகத்தில் அடித்தது போல கூறியவள் நொடி கூட அவனின் அருகில் நிற்க விரும்பாமல் சென்று விட…
அதில் வர்மனின் பொறுமை காற்றில் பறந்து சென்று விட… கோபமாக வந்து கட்டிலில் விழுந்தவன் விழிகள் இரண்டும் கோவை பழம் என சிவந்திருந்தது.
 
 
அவளின் உதாசினம் தாங்காத அவனின் மனம் சொன்னது “போடி…திமிர் பிடித்த மோகினி… நீ எனக்கு வேணாம்… வேணவே வேணாம்.
 
 
போ நீ போ 
போ நீ போ
தனியாக தவிக்கின்றேன் 
துணை வேண்டாம்
அன்பே போ…
பிணமாக நடக்கின்றேன்
 உயிர் வேண்டாம் தூரம் போ…
நீ தொட்ட இடமெல்லாம் 
எரிகிறது 
அன்பே போ…
 
 
****************************