நேச முரண்கள் – 10

நேச முரண்கள் – 10

முரண் – 10.

 
 
காதல், கல்யாணம் 
எல்லாம் புரிவதற்கு 
முன்
மனங்கள் விலகி விட…
நேசம் கலந்து நிற்குமோ!
இல்லை…
முரண் பட்டு விலகுமோ!
 
 
 
தாயின் மடியில் சுருண்டு கிடந்த மகளை கண்டு அத்தனை வருத்தமாக இருந்தது அன்னைக்கு.
 
 
மறுவீட்டிக்கு அழைக்க வந்த  வருணிகா, அரவிந்தன்  இருவரும் காய்ச்சல் கண்டு படுத்திருந்த தங்கையை பார்த்தவுடன் அதிர்ந்து விட்டனர்.
 
 
நேற்று திருமணத்தில் பூச்செண்டு போல் அழகாக இருந்தவள் ஒரே நாளில் வாடி வதங்கி போய் இருக்க அவளின் அண்ணன் தங்கள் அன்னைக்கு அழைத்து வரவழைத்து விட்டான்.
 
 
வர்மனின் தோழியே வந்து வைத்தியம் பார்த்திருக்க “அவுங்களுக்கு ரெஸ்ட் இல்லாதது தான், இப்படி படுக்க வச்சிருக்கு. ஒன் வீக் ஃபுல் பெட் ரெஸ்ட் எடுத்தா, எல்லாம் சரி ஆகிடும்” என்றவள், 
 
 
தனிப்பட்ட முறையில் வர்மனை கடிந்து கொள்ளவும் தவறவில்லை.
 
 
“என்னடா காஞ்ச மாடு எதிலோ பாஞ்ச  மாதிரி நடந்துருக்க… மனைவியின் நிலையறிந்து நடந்ததுக்க வேண்டிய முதல் நிகழ்வை இப்படி கொடூரமாக மாத்திருக்க, கொஞ்சமாவது மனித தன்மை வேண்டாமா?” என்று பேசிக்கொண்டே போனவள் அவன் முகம் போன போக்கில், 
 
 
“சரி விடு, அவுங்களுக்கும் சின்ன பிராப்ளம் இருக்கு. ஒரு ஒன் வீக் ப்ரீஆ விடு, நெக்ஸ்ட் வீக் கிளினிக் கூட்டி வாடா… கொஞ்சம் வினோதா கிட்ட பேசணும்” என்றவள் கிளம்பி விட, வர்மனிற்கு தான் அத்தனை தலையிறக்கமாய் இருந்தது.
 
 
நடந்தது யாருக்கும் தெரியாமல் இருந்தாலும் மனைவியை கண் கொண்டு பார்க்க முடியவில்லை அவனால். அதே நேரம் அவனது இயல்பான குணம் தலைதூக்க மனைவியை எண்ணி கடுப்பாகவும் வந்தது.
 
 
என்னமோ ஊரு  உலகத்தில் நடக்காதது நடந்துட்ட மாதிரி அவளின் அன்றைய பயம் மனதில் தோன்ற,
 
 
 “ஒன்னுதுக்கும் வேலைக்கு ஆகாத போந்தா கோழி போல இது” என்று மனதில் வறுத்து எடுத்தவன் அமைதியாக இருந்து விட்டான். அதன் பிறகு அவள் புறம் தலைவைத்து கூட படுக்கவில்லை,  அந்த பொறுப்பான கணவன்.
 
 
அரவிந்தனின் அழைப்பில் ஆதவனும், சேர்மக்கனியும் விழுந்தடித்துக் கொண்டு மகளை பார்க்க வந்துவிட… அருளாசினிக்கு தான் அத்தனை சங்கடமாக இருந்தது.
 
 
திருமணம் முடிந்து நேற்று தான் முதன் முதலில் இந்த வீட்டுக்கு வந்த மருமகள் இப்படி முடியாமல் படுத்து இருப்பதை நினைத்து வருத்தம் மேலோங்கியது. 
 
 
என்னதான் டாக்டர் பலவித காரணங்கள் கூறியிருந்தாலும்,  மகன் மீதும் சின்னதாக சந்தேகம் இருக்கத்தான் செய்தது.
 ‘தாய் அறியாத சூல் இல்லை’ என்பது உண்மைதானே!
 
 
பெற்றவளின் கண்கள் மகளை கண்டு கலங்குவது பொறுக்காமல் அருளாசினி தான் “ஒன்னும் இல்ல அண்ணி, பிள்ளைகளுக்கு கண்ணு பட்டு போச்சு…  அதுவுமில்லாம தூக்கமும் இல்லாம நல்ல அலைச்சல் வேறயா… அதான் மேலுக்கு ஒத்துக்கல.
சீக்கிரம் எல்லாம் சரியா போயிடும் பாருங்க… டாக்டர் கூட இப்பதான் வந்து பார்த்துட்டு ஒருவாரம் ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டு போனாக” என்று ஆறுதலாக பேச, 
 
 
கண்களை துடைத்துக் கொண்ட சேர்மக்கனி, “சரியா சொன்னீங்க அண்ணி. ‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது’  சொல்லுவாங்க. பிள்ளைகளுக்கு இன்னைக்கு பொழுது போனபிறகு சுத்தி போடணும் முதல் வேலையா” என்றவர் மகளின் அருகிலேயே இருந்து அக்கறையாக பார்த்துக்கொள்ள வினோதாவிற்கு அது பிடித்தமானதாக இருந்தாலும் கண்கள் என்னவோ கொண்டவனை தேடியது.
 
 
வர்மனின் வீட்டிற்கு வந்த கொஞ்ச நேரத்திலே தங்கள் பெண் மீது அவளின் புகுந்த வீட்டினர் காட்டும் பாசம், அக்கறை எல்லாம் கண்கூட தெரிந்துகொள்ள முடிந்தது.
 
 
பெரும்பாலும் இது போல் ஏற்படும் சூழ்நிலைகளில் பெண்களையே குறை சொல்வார்கள்.
 “ஏதோ சீக்கு இருந்திருக்கும் போல… தெரியாத்தனமா நம்ம தலையில எல்லாத்தையும் மறச்சு கட்டிட்டாங்க” என்று சாதாரணமாக பேசக்கூடிய மாப்பிள்ளை வீட்டார்கள் பலர்.
 
 
அந்த இடத்தில் முற்றிலும் வேறுபட்டு தங்கள்  வீட்டு பெண் போல அக்கறையாக கவனித்துக் கொண்ட விஜயேந்திரன், அருளாசினியை கண்டு பெருமையாக இருந்தது அவர்களுக்கு.
 
 
வினோதாவின் விழிகளில் தென்பட்ட கணவனுக்கான தேடலும், தவிப்பும் வருணியால் புரிந்து கொள்ள முடிந்தது. 
 அது அவளின் மனதில் பல கேள்விகளை விதைத்தாளும் மெதுவாக தோழியிடம் பேசிகொள்ளலாம் என்று அமைதியாக அவளை கவனித்து  கொண்டாள்.
 
 
ஆதவன் பிள்ளைகளை அழைத்து செல்ல கேட்க, விஜயேந்திரன் தயங்கினாலும் சம்மதித்து விட்டார்.  அருளாசினிக்கு தான் மருமகளை இந்த நிலையில் எங்கும் அனுப்ப விருப்பம் இல்லை.
 
 
 
சேர்மக்கனியிடம் அதை சொல்ல, மறுவீட்டுக்கு பொண்ணு, மாப்பிள்ளை இருவரும் வரவில்லை என்றால் ஊர் பலவிதமாக பேசி விடும் என்ற காரணத்தினால் தாங்கள் மிகவும் பத்திரமாகப் பார்த்துக் கொள்வதாக அருளாசினியிடம் அத்தனை சமாதானம் சொல்லி  அழைத்து சென்றனர் வினோதாவின் வீட்டினர்.
 
 
 
வர்மனிற்கு அங்கு செல்வத்திற்கு உடன்பாடு இல்லை என்றாலும் வழக்கத்தை மாற்ற வேண்டாம் என்ற அன்னையின் வார்த்தையில் மாமனார் வீட்டு விருந்துக்கு கிளம்பிவிட்டான் மனைவியுடன்.
 
 
 
அரவிந்தன் காரை ஓட்ட அவன் அருகில் வருணிகாவும் பின் இருக்கையில் விஜய், வினோ ஜோடியும் அமர்ந்தனர்.
 
 
முதலில் மனைவியிடம் பேச தயங்கினாலும், அவளின் சோர்ந்த விழிகளில் தெரிந்த தவிப்பில் பிடிவாதத்தை விட்டு கொஞ்சம் இறங்கி வந்தவன் அவளின் விரல்களை மென்மையாக பற்ற… யாரையும் பற்றி நினைக்காமல் அவனது தோள்களில் சாய்ந்து கொண்டவளின் விழிநீர் வர்மனை சுட்டது.
 
 
 
***********************************
 
காலை பொழுது அரவிந்தனும், வர்மனும் கம்மா தண்ணீரில் நீந்தி கொண்டிருக்க, அவர்களுக்கு சற்று தொலைவில் மீன்களும் நீரோடு கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தது.
அதனை கண்ட அரவிந்தனோ, 
 
 
“என்ன மச்சான் பொண்ணுங்க கண்ணுல படாம மீனுங்க சிக்குது விழியில?” என்று புன்னகையுடன் வினவ, 
 
 
“தங்கச்சி கிட்ட சொல்லி என்னனு பாக்க சொல்லுறேன். நீ கவலையை விடு அரவி” என்ற வர்மனின் குறும்பில் “அய்யோ! எதுக்கு இந்த கொலைவெறிடா உனக்கு? பாக்க தான் எலி பாஞ்சா அவ ஒரு புலி” என்று பாவமாக சொன்னவன், தொடர்ந்து, 
 
 
“மீனை புடிச்சிட்டு போலாம் மனு. நம்ம ஊரு கம்மா மீனு கொழம்பு வச்சா…  சும்மா  ஒரு படி சோறு கூட அசால்ட்டா உள்ள போகும்” ருசி நாவை தீண்டிவிட்டது போல ரசித்து கூறினான். 
 
 
கட்டிருந்த வேட்டிய  விரித்தவன்,  அதன் ஒரு மூலையை தான் பிடித்தபடி  மற்றொன்றை வர்மனிடம் கொடுத்து விட்டு  நீரினுள் மூழ்கியபடி காத்திருந்தனர். 
சற்று நேரம் கழித்து இருவரும் மேலெழும்பி பார்த்த போது கெளுத்தி மீன்கள் இரண்டு வேட்டியில் துள்ளி கொண்டிருந்தது.
 
 
 
இங்கு வந்த சில மணி நேரங்களில் இருவரும் செல்ல பெயர் வைத்துக்கொள்ளும் அளவிற்கு நெருக்கமாக மாறிவிட… அதன் பிறகு அங்கு தங்குவதில் எந்த எதிர்மறை எண்ணமும் தோன்றவில்லை வர்மனிற்கு.
 
 
 
இந்த ஒரு வாரம் எப்படி சென்றது என்று கேட்டால் வினோதாவிற்கு காய்ச்சலும், வர்மனிற்கு  சாப்பிடுவதிலும் வெகு சிறப்பாக கழிந்தது.
 
 
 
கணவன் மனைவி இருவருக்குள்ளும் சிறிது அன்பு இந்த இடைப்பட்ட காலத்தில் தோன்றினாலும்,  மனைவியாய் அவளை நாட வில்லை வர்மன்.
 
 
வயதிற்கே  உரிய ஆசைகள் அதிகமாக இருந்தாலும் முந்தைய அனுபவம் அவனை அவளிடமிருந்து தள்ளி நிறுத்தியது.
 
 
மகள் உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும் மாமியார் வீட்டில் விஜயவர்மனுக்கு விருந்து தடபுடல் பட்டது.
 
 
விருந்தில் வகை வகையாக சமைத்து அத்தனை சிறப்பாக செய்து அசத்திருந்தார் வினோதாவின் தாய்.
 
 
உடல் நலம் சற்றே குன்றி இருந்த அப்பத்தாவையும் வைத்து கொண்டு மேல் வேலைகளை வருணிகா கவனித்துக்கொள்ள நாட்கள் எல்லாருக்கும் ஓரளவிற்கு  நல்ல முறையிலே சென்றது.
மற்றபடி வினோதாவின் அன்னையை  பொறுத்த வரை மகளது பூஞ்சை உடம்பு மட்டுமே ஒரே குறையாக நின்றது. 
 
 
வீட்டிற்கு வந்த மறுநாளே சற்று தேறியிருந்த தோழியிடம் வந்த வருணி “என்னடி பண்ணி வச்ச?  அலுப்பு சலிப்புக்கு அஞ்சிற ஆளா நீ? எதை பாத்து பயந்து மேலுக்கு இழுத்துகிட்ட?” என்று அவள் குணம் தெரிந்து கேட்டுவிட, 
 
 
 
அனைவரிடமும் 
பேசினாலும் கணவனிடம் வெளிப்பட்ட விலகளில் மனம்  கணக்க இருந்தவள்,  தோழியின் பேச்சில் சில அந்தரங்க விடயங்களையும், கணவனின் வன்செயல்களையும் தவிர்த்து மனதில் இருந்த உறவு தொடர்பான கலக்கத்தை சொல்லி விடவைத்தது. 
 
 
 
 
வினோவின் வார்த்தைகளை கேட்டவள், எதுவும் பேசாமல் தலையில்  கை வைத்து அமர்ந்து விட, அதை பார்த்த பெண்ணவளின் விழிகளில் நீர் முத்துக்கள்.
 
 
 
 
மிகவும் சின்னதனமாக தோன்றும் இந்த விடயம் எத்தனை பெரிய பிரச்சினையை  மணவாழ்க்கையில் தோற்றுவிக்கும் என்பதை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்த அவளால் நன்கு உணர முடிந்தது.
 
 
 
பார்ப்பதற்கும், பழகுவதற்கும் அத்தனை இனிமையாக இருந்த அரவிந்தன் கூட இது போன்ற சில சமயங்களில் கடினமாக தான் நடந்து கொள்வான். 
 
 
 
வாழ்க்கையின் சூட்சமங்கள் பிடிபட  காதல் கடி மணம் புரிந்த அவளுக்கே சில மாதங்கள் எடுத்தது என்றால்,  இப்போது தான் வீட்டினர் பார்த்து திருமணம் செய்த தோழிக்கு விளங்க நாள்கள் பல செல்லும் என்று எண்ணியவள், அதற்குள் விஜய்யின் பொறுமை காற்றில் பறக்காமல் இருக்க வேண்டும் என்று வேண்டி கொண்டாள் இறைவனிடம்.
 
 
 
அத்தையிடம் சொல்லி ஒரு அளவுக்கு வினோதாவிற்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும் என்று மனதில் எண்ணிய அதே சமயத்தில்,  அந்நேர  மனைவியின் விலகல் ஏற்படுத்தும் தாக்கத்தையும், மறுநாளே படுக்கையில் கணவனை  தள்ளி நிறுத்திய சூழ்நிலையையும் கண்டவளுக்கு வர்மன் மீது சிறிது பரிதாபம் கூட வந்தது.
 
 
வினோதாவிடம்  தரையை பார்த்த படி “இது எல்லாம் சாதாரணம் தான்டா. போக போக உனக்கே புரியும்.  பெண்கள் கடந்து வர வேண்டிய  முக்கியமான நிலை இது. உங்கிட்ட சொல்றதுக்கு என்ன, உங்க அண்ணன் கூட கொஞ்சம் முரடுதான்” என்றபோது சலிப்பாக வந்த வார்த்தைகளுக்கு நேர் மாறாக முகம் சிவந்தது வருணிகாவிற்கு.
 
 
 
வினோதாவிற்கு  அனைத்தும் விநோதமாக இருக்க உடல் அயர்வில் கண்ணுறங்கி விட்டாள். அதை கண்ட வருணி “இவ எப்ப தூங்கினாள்? இவ்வளவு நேரமும் தனியா தான் பேசினேனா?” என்று தலையில் அடித்து கொண்டவள் நேராக மாமியாரிடம் வந்து அனைத்தையும் ஒப்பித்திருந்தாள். 
 
 
 
அனைத்தையும் மருமகளின் வாயிலாக தெரிந்துகொண்ட சேர்மக்கனி முதலில் திகைத்தாலும், பதமாக மகளுக்கு சிலவற்றை சொல்லியதோடு, உடலின் பலத்திற்கு ஏற்றவாறு உணவுகளை செய்து மகளை கண்ணின் மணி போல அந்த ஒரு வாரமும் தாங்கத்தான் செய்தார்.
 
 
 
அந்த ஒரு வாரத்தில் வினோவின் மனதிலும்  மாற்றம்  ஏற்பட, இந்த நிலையில் தன்னை எந்த விதத்திலும் தொந்திரவு செய்யாமல் இருக்கும் கணவன் மீது சிறிது நம்பிக்கை கூட தோன்றி இருந்தது. 
 
 
 
இரவில் அவளின் அருகே அமைதியாக உறங்கும் கணவனை கண்டு ‘இவனா அத்தனை வன்மையாக என்னிடம் நடந்து கொண்டான்’  ஆச்சர்யமாக இருந்தது அவளுக்கு. 
 
 
 
ஒற்றை பிள்ளையாய் வளர்ந்தவனுக்கு  வினோதாவின் அண்ணன் அரவிந்தனை இங்கு வந்து பழகிய ஒரே நாளில்  பிடித்து விட,
 
 
பகல் பொழுதை ஒத்த வயதுடைய அரவிந்தனுடன் தோப்பு, கம்மாய் என்று ஆட்டம் போட்டு கழித்தவன், இரவில் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நித்திராதேவியுடன் கொண்டாடினான்.
 
 
 
விஜயவர்மனை தோழியின் அறிவுரை, இடையில் பேசிய தாயின் மறைமுக எச்சரிக்கை, மனைவியின் வாடிய வதனம் எல்லாம் சேர்ந்து  சற்று யோசிக்க வைத்திருந்தது என்றால் மிகையல்ல.
 
 
அதுவே அவனது நடவடிக்கைகளிலும் பிரதிபலித்தது.
 
 
*******************
 
தஞ்சையின் மிகப்பெரிய மருத்துவமனை வரவேற்பில் அமர்ந்திருந்தனர், கணவன் மனைவி இருவரும்.
 
 
தாய் வீட்டில் இருந்து இந்த முறை புகுந்த வீட்டுக்கு மலர்ந்த முகத்துடன் கிழம்பியவளை நேராக அழைத்துக்கொண்டு தனது தோழி வேலை செய்யும் மருத்துவமனைக்கு வந்திருந்தான்,  விஜயவர்மன். 
 
 
‘எதற்கு அழைத்து வந்திருக்கிறான் இங்கே? எனக்கு தான் உடல் நல்லாகிவிட்டதே!’ என்று பல கேள்விகள் மனதில் முளைவிட்ட போதிலும் முகத்தில் புன்னகை வாடாமல் தான் அமர்ந்திருந்தாள்,  வினோதா.
 
 
எண்ணம் போல வாழ்க்கையே எவருக்கும் வாய்ப்பதில்லை…
 
வாழ்க்கை போல எண்ணம் கொள் வாழ்வது துயரமில்லை.
 
 
ரோஜாவின் கண்ணீர் தானே அத்தராய் வாசம் கொள்ளும்…
 
கண்ணோடு பொறுமை காத்தால் காலம் பதில் சொல்லும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!