நேச முரண்கள் – 2

முரண் – 2.

 
விலகி செல்லடா…
நெருப்பை விட தகிக்கிறது 
உன் அருகாமை…
மனதை கொள்ளை கொண்டவன்
என்றாலும்…
என் மனதை கொன்றவனும் நீ…
நெருங்காதே…
என்னை…
என் மனதை…
 
 
வருடம்   முழுவதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல், இருபத்தி நான்கு மணி நேரமும், சர்வ சாதாரணமாக… பல லட்சம் வாகனங்கள் சாலையில் பயணிக்க… கோடிக்கணக்கில் மக்கள் வசிக்கும் நமது சிங்காரச் சென்னை.
 
 
இன்று… அமைதி கடலை போல் எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி, ஆங்காங்கே சில மனிதர்களுடன், விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் மட்டும் வாகனங்கள் பயணிக்க…  தன் இயல்பை தொலைத்து, மயான அமைதியுடன்  விசித்திரமாக காட்சியளித்தது.
 
 
செங்கதிரோன் தன் துயில் கலைந்து, மெல்ல வெளியே வர… அந்த அழகிய காலைப் பொழுதை எப்பவும் போல் உடற்பயிற்சி செய்தவாறு ஆங்காங்கே ரசிக்கும் கூட்டம்,  எதுவும் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது, சென்னையின் அடையாளமாக விளங்கும் பார்ப்பவர் மனதை மயக்கும் வகையில் இருக்கும், உலகப் புகழ்பெற்ற எழில் கொஞ்சும் மெரினா கடற்கரை.
 
 
யாரும் எங்கும் செல்ல முடியாத சூழல். பரபரப்பு வாழ்க்கைக்கு பழகிப்போன நடமாடும் இயந்திரமாய் சுற்றித்திரியும் இன்றைய சமுதாயத்தைச் சேர்ந்த எல்லாருக்குமே எரிச்சலை வாரி வழங்க…  ஆனால் அது  நம் சண்டை கோழிகளின் குழந்தைகள் இருவருக்கும் மிகுந்த கொண்டாட்டமாக இருந்தது.
 
 
 இந்த சூழல் என்றும் இல்லாத திருநாளாக விசித்திரமாக… வர்மனுக்கு கூட மனதில் சிறு ஆறுதல் தோன்றியது  என்றால் மிகையல்ல.
 
 
வர்மனின் முகத்தில் இருந்த மெல்லிய புன்னகை கண்ட, வினோதாவிற்கு அத்தனை வெறுப்பாக இருந்தது… வந்த இரண்டு நாட்கள் கிளம்பி விடலாம் என்று இருந்தவளுக்கு… அரசாங்கத்தின் 144 தடை சட்டத்தின் கீழ் அனைத்து  போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு, எங்கும் யாரும் செல்ல முடியாத அளவுக்கு தடை ஏற்பட்டிருக்க.
 
 
பிரிவுக்குப் பின் சாதாரணமாகவே, அவனின் அருகாமையை ஏற்க முடியாது தவிப்பவள் அவள்.
 
 
இந்த நிமிடம் வரை, அந்த வீட்டில் கொட்டி கிடக்கும் அவளின் நினைவுகளில்… அதன் மூலம் உள்ளத்தில் தோன்றும் வலியில்…  நீரில் இருந்து தரையில் விழுந்த மீனை போல மூச்சு விட முடியாமல் தடுமாற… பாவையவளின் நிலையோ… சொல்ல முடியாத  அளவுக்கு அதிகமாக வேதனையில் துடிக்க ஆரம்பித்தது.
 
 
அவள் இதை கொஞ்சமும் எதிர்ப்பார்க்க வில்லை .
 
 
கொரானாவின் கோர தாண்டவம் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பரவ  ஆரம்பிக்க, அரசு அனைத்தையும் முடக்கி விட… இயற்கையின் கை ஓங்கியும், மனிதனின் அலட்சிய, பொறுப்பற்ற,நடவடிக்கைகள் ஒடுங்கியும்… எல்லா  நாட்டில் உள்ள அனைவரின் காலையும் கட்டி போட்டு விட்ட அந்த கொள்ளை நோய். வினோதாவின் பயணத்தையும் அழகாக தடை செய்தது.
 
 
*************************
 
 
இரண்டு நாட்கள் மிகவும் அழகாக விஜய வர்மனுக்கு நகர… எப்போதும் போல் எழுந்தவுடன் குழந்தைகளை சென்று பார்க்க,  அவர்கள் இருவரும் ஓவியம் போல் அழகாக உறங்கிக் கொண்டிருந்தனர்.
 
 
அந்த நிலை கண்டு மனம் மயங்கியவன், அவர்களின் அந்த ஆழ்நிலை தியானம் கலையாத வகையில், இருவரின் நெற்றியிலும் மென்மையாக முத்தமிட்டு எந்த வித சப்தமும் செய்யாமல் வெளியே வந்த போது,
 
 
அழகிய பூந்தோட்டத்தில் நடுவில் அமைந்த மேடையில் அன்றுதான் மொட்டு விட்ட சிறு மலரை போல் இளம் நீல நிறத்தில் நீண்ட பாவாடை அணிந்து அதற்கு ஏற்ற சிறிய மேல் சட்டையுடன்  அழகிய முகத்தில்  சற்றே கவலை மிக சோக சித்திரம் போல் அமர்ந்திருந்த வினோதாவை பார்த்தவன், அதற்கான காரணம் புரிந்து தனக்குள் தோன்றிய மென்னகை அவள் அறியாமல் மறைத்தவன்.
 
பெண்ணவளின் அருகே சென்று “ஹாய் வினு… குட் மார்னிங்… என்ன அதுக்குள்ள எழுந்துட்ட..?” என்றான் புன்னகையுடன்.
 
 
அவனின் கேள்வியில்  முக சுளிப்புடன் வர்மன் புறம் திரும்பியவள்.
 
 
“காலையில இழுத்து போத்தி தூங்குற சோம்பேறிகளுக்கு இந்த வீட்டில் இடமில்லை அப்படினு யாரோ  ஒருவர் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி சொன்னாங்க மிஸ்டர்,  அது யாருன்னு உங்களுக்கு தெரியுமா…?” என்றாள் நக்கலாக.
 
 
அவளது கேள்வியில் சிறு குற்ற உணர்வு வர…  
“இன்னும் பழசு பற்றி அதிகம் பேசணுமா..?  நடந்து எல்லாத்துக்கும் நான் மட்டும் பொறுப்பு இல்ல வினோ… பிரிவ முதல்ல தேர்ந்தெடுத்தது நீதான். கொஞ்ச நீயும் விட்டுக்கொடுத்து போயிருக்கலாம்… அதிகம் பேசிட்ட.” என்றவன் குரல் ஆரம்பத்தில் சற்றே தளர்வாக வந்தாலும் பின்பு சிறு கடுமையுடன் தான் முடிந்தது.
 
 
“ஆஹா! நா மட்டும் தான் பேசினேன்… அய்யா அப்படியே வாயை மூடிக்கிட்டு… வட பாவ் சாப்பிட்டு இருந்தீங்க பாருங்க. தாராள வள்ளல் மாதிரி நீங்களும்  கொஞ்சமும் குறைவில்லாமல் தான்  பேசினீங்க.”என்று அவனுக்கு குறையாத கடுமையுடன் கூறியவள்.
 
 
“இப்ப எதுக்கு இந்த பேச்சு செத்த குழந்தைக்கு ஜாதகம் பார்க்கிற மாதிரி… கடுப்பா இருக்கு,  சும்மா வாய மூடிக்கிட்டு போறீங்களா.” என்றாள் துடுக்காக.
 
“நான் சாதாரணமா தான் உன்கிட்ட பேச வந்தேன். நீதான் பழசை எடுத்து பேசின… நான் கிடையாது, எப்பவுமே சண்டைய  நீ ஸ்டார்ட் பண்ணிட்டு, என்னமோ நான்தான் எல்லா தப்பு செஞ்ச மாதிரி பேசுவ… உனக்கு இதுதானே பழக்கம்.” என்றவன் வார்த்தையில் கொதித்தவள்.
 
“என் பழக்கத்தை பத்தி இப்ப நீங்க பேசணும்னு எந்தவித அவசியமும் கிடையாது… இப்போ என்  பசங்களுக்கு, நீங்க அப்பா அவ்வளவு தான்.உங்களுக்கு எனக்கு இருக்க சம்பந்தம்” என்றவளிடம்.
 
“ஆமா இப்படி கடுகடுன்னு பேசுற, உன் மூஞ்சி கூட சம்பந்தம் வச்சுக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை பாரு…  என்னைய பொறுத்த வரையும் கூட… என் குழந்தைகளோட அம்மா  நீ அவ்வளவு தான்,   இப்போ என் வீட்டுக்கு, மகாராணி நீங்க…  விருந்தாளியா வந்துருக்கிங்க… அதனால தான் உன்னை மாதிரி எந்நேரமும், மூஞ்சிய குரங்கு மாதிரி தூக்கி வச்சுக்கிட்டு,  யாரோ எவரோன்னு இல்லாம உன்கிட்ட ரெண்டு வார்த்தை பேசலாம்னு வந்தேன் பாரு… என்னை சொல்லணும்” என்று பொறிந்து தள்ளியவன்,  பட்டென திரும்பி நடக்க ஆரம்பிக்கும் போது…
 
கல்யாணமான புதிதில் தன் முகத்தை அங்குலம் அங்குலமாக ரசித்து, ருசித்து, புசித்தவனின் வாயிலிருந்து விழுந்த முத்துக்கள் மனதில் சுருக்கென வலியை ஏற்படுத்த… “அடச்சே!  உங்க மூஞ்சில முழிக்காம இவ்வளவு நாள் நிம்மதியா இருந்தேன்…  இந்த சனியன் புடிச்ச கொரோனா  வந்து, என் நிம்மதிய, ஸ்பாயில் பண்ணிடுச்சு, என்னால இங்க  இதுக்கு மேல ஒரு நிமிஷம்  இருக்க முடியாது… என்னோட கார்ல யாவது  கிளம்பி போறேன்.” என்று அவள் அவனிடம் எரிந்து விழுந்து முகத்தை திருப்பிக் கொண்டாள்.
 
“எனக்கும் ஒன்னும் உன் மூஞ்சில பாக்கனும்னு அவசியம் கிடையாது… என்னமோ, நான்தான் கைய புடிச்சு…  உன்னை போக விடாமல் தடுத்த மாதிரி மூஞ்சிய தூக்கி வச்சு இருக்க… படிச்சவ தானே நீ… அடிப்படை அறிவு கூடவா இல்லை.” என்று  அவளுக்கு குறையாத எரிச்சலுடன் வர்மனும் பேச.
 
 
“’என் அறிவை பத்தி எனக்கு தெரியும், நீங்க ஒன்னும் அதை பத்தி கவலை பட வேண்டாம்.” என்று காரமாக பதில் அளித்தவள் மனமோ, ‘கொஞ்சமாவது எனக்கு அறிவு இருந்திருந்தா உன்னை மாதிரி ஒருத்தன் மேல அளவிட முடியாத அன்பு வச்சிருந்திருப்பேனா..? இப்பவும் இந்த இடம் என்னைய பாதிக்கிற அளவுக்கு பலகினமா இருக்குறத நினைக்கும் போது ரொம்ப அசிங்கமா இருக்கு.. எல்லாமே என்னோட முட்டாள்தனம்’ என்று வருந்தியவள் முகத்தை கடுப்பாக வைத்துக்கொண்டு அவனிடம் பேச வாயை திறக்கும் போது… 
 
 
 அவளின் செல்ல மகள் “அம்மா” என்று அவளிடம் ஓடி வர…
 
 பெற்றவர்கள் இருவரும் தற்காலிகமாக தங்கள் சண்டையை  நிறுத்தி வைத்தனர்.
 
 
அவர்களின் சென்ற பத்து வருட வாழ்க்கையில் எத்தனையோ மனஸ்தாபம் வந்தபோதும் சரி… மனதினை மடிய செய்து, நிம்மதியை தொலைத்து, உணர்வுகளை இழந்து…  பின்பு பிரிவையே முடிவெடுத்து சட்டப்படி பிரிந்த பின்பும் கூட, தங்களின் வாழ்வில் காதலின் பரிசாக கிடைத்த குழந்தைகளின் முன்பு எந்தவித வாக்குவாதத்தையும் இருவரும் இதுநாள் வரை போட்டதில்லை.
 
பெரும்பாலான பெற்றவர்கள் செய்யும் தவறான, ஒருவரைப் பற்றி தவறாக மற்றொருவர் அந்தப் பிஞ்சுககளிடம் எந்தவித கருத்தையும் விதைக்கவும் இல்லை.
 
சிறந்த கணவன் மனைவியாக இருக்க முடியாது போனவர்கள், ஓரளவு நல்ல தாய் தந்தையாக இருக்க முயன்றார்கள் என்றால் மிகையல்ல.
 
முகத்தில் உள்ள கடுமையை நொடியில் மறைத்தவள், மலர்ச்சியுடன் “சொல்லுங்க மை லிட்டில் ஏஞ்சல், என்ன அதுக்குள்ள தூங்கி எழுந்திடிங்க..? உங்க செல்ல  அண்ணா எங்க..? நீங்க மட்டும் தனியா ஓடி வரீங்க”  என்றாள்  மென்மையான குரலில்.
 
 
“அம்மா” என்று குழந்தை தூக்க கலக்கத்தில் சினிங்கிய படி “அண்ணா ஃப்ரெஷ் ஆகிட்டு இருக்காங்க… என்ற மகளை ஆசையுடன் நோக்கிய வர்மன் அவளை தூக்கிக் கொள்ள, அவனின் தோளில் சுகமாய் சாய்ந்து கொண்டது அந்த படபட பட்டாம்பூச்சி.
 
இத்தனை நாள் தன்னிடம் மட்டுமே செல்லம் கொஞ்சும் தன் மகள் அவளில் தந்தையின் மீது கட்டி கொண்டு கொஞ்சுவதை கண்டு வினோதா மனது ஆறுதல் அடைந்தாலும் சிறு பொறாமை கொண்டது.
 
“என் செல்ல குட்டி பிரஷ் பண்ணிட்டீங்களா..?” என்ற தந்தையின் கேள்விக்கு எல்லா பக்கமும் தலையாட்டியது அந்த குட்டி தேவதை, அவன் செயலில் மனம் கரைய மகளை தூக்கிப்போட்டு பிடித்தவன் “வாங்க… நான் உங்களை ரெடி பண்ணி விடுறேன்’ என்றவன் அவளை தூக்கி கொண்டு அவனின் அறைக்குள் நுழைய…
 
காலை உணவு பிள்ளைகளுக்கு தயார் செய்ய சமையலறையை நோக்கி சென்றாள் வினோதா.
 
 
கொரோனா வின் காரணமாக பிள்ளைகளின் பாதுகாப்பு வேண்டி, இங்கேயே தங்கி இருக்கும் வீட்டு காவலாளி, தோட்டக்காரனை தவிர மற்ற அனைவரையும் தற்காலிகமாக விடுமுறையில் அனுப்பியிருந்தான் வர்மன்.
 
பிள்ளைகளின் விடையத்தில் எந்தவித அலட்சியமும் காட்ட அவன் துளிகூட விரும்பவில்லை. எனவே கணவன் மனைவி முதல் முறையாக வீட்டின் வேலைகளை பகிர்ந்து கொண்டு செய்தனர்.
 
 
ஒன்றாக இருந்த காலத்தில் நிகழாத இந்த விசித்திர நிகழ்வு அந்த வீட்டில் முதல் முறையாக நடந்து கொண்டிருந்தது.
 
 
அது வரை தனது வேலையை தவிர்த்து வேறு எதையும் செய்யாத வர்மன் கூட எல்லா வேலைகளையும் பகிர்ந்து செய்வது கண்டு வினோவிற்கு  கூட வியப்பாகத் தான் இருந்தது.
 
 
தனக்கும் வர்மனுக்கும் காபி கலக்கியவள், பிள்ளைகள் இருவருக்கும் அவர்களுக்கு பிடித்த விதத்தில்  பூஸ்ட் கலக்கி ரெடி பண்ணிக்கொண்டு, இரண்டு பிரெட் துண்டுகளை டோஸ்ட் செய்து எடுத்துக்கொண்டு டைனிங் ஹாலுக்கு வரவும் வர்மன் ரஸ்மியை தூக்கிக் கொண்டு வருவதற்கும் சரியாக இருந்தது.
 
 
 
ஏனோ அந்தச் சின்ன குட்டிக்கு தந்தையை விட்டு இறங்கி செல்ல மனமில்லாமல் அவனின் தோளில் தொங்கிக்கொண்டே இருந்தது.
 
“செல்லக்குட்டி இறங்கி வாங்க”,  என்று  சொல்லியவளை நிமிர்ந்து பார்த்து விட்டு “பிளீஸ் மா.. இப்படியே பிரெட் ஊட்டுங்க” என்றாள் முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டு.
 
அவளின் பாவனையில் மெல்ல புன்னகைத்த உதடுகள் “எப்பவும் நினைத்ததை சாதிக்கும் பிடிவாதம், அப்படியே அவ அப்பா போல” என்று முணுமுணுத்தது.
 
 
மகளை ஏந்தி நின்றாலும் அவனின் விழிகள் இரண்டும் இதுவரை ரகசியமாக அவளைப் பெற்றவளையும் ரசிக்க, எதிரே இருந்த அந்த பிடிவாதகாரியின்  உதடுகள் மெல்ல உச்சரித்த வார்த்தைகள் அவனை தப்பாமல் சென்றடைய… அதுவரை அவள் மீது கொதித்து கொண்டிருந்த கோபம் மெல்ல வடிந்தது.
 
 
‘யாரு எதை சொல்றது, கடவுளே…  இவள் பேசுற பொய்யுக்கு ஒரு அளவே இல்ல’ என்று நினைத்து கொண்டவன்.
 
மகள் சாப்பிடுவதற்கு ஏதுவாக வினோவின் அருகே அமர்ந்தவனின் கரங்களில் மெலிதாக அவளின் தேகத்தை உரச, பட்டென அவனை நிமிர்ந்து கண்களால் பொசுக்க.
 
 
முதலில் அவள் முறைப்புக்கு காரணம் தெரியாமல் முழித்தவன், அவளை கேள்வியாக பார்க்க… அவனின் கைகளை பார்க்கும் படி விழிகளில் கதை பேசியவளின் மொழியை புரிந்து கொண்டவன் சட்டென கைகளை எடுத்துக்கொண்டு ரஷ்மி அறியாத படி மெல்லிய குரலில்…
 
 “இப்ப எதுக்கு கண்ணுல அடுப்பை பத்த வைக்கிற?  லைட் ஆ தெரியாம பட்டதுக்கு எல்லாம் இது கொஞ்சம் அதிகம் தான்” என்றவன், இன்னும் குரலை தளர்த்தி கிசுகிசுப்பாக “ரொம்ப ,பண்ணாதடி நான் தொடாத இடம்…” என்று சரசமாக தொடங்கியவன் தனது வார்த்தையை முடிப்பதற்கு முன்பே அவனின் ராட்சசி பலமாக கிள்ளிவிட அடுத்த வார்த்தை “அம்மா” என்று கத்தலாக தான் வந்து விழுந்தது வர்மனிற்கு.
 
அவனின் குரலில் பயந்து போன செல்ல மகளோ “அப்பா என்ன ஆச்சு உங்களுக்கு ஏன் இப்படி சத்தம் போடுறீங்க?” என்று பதற…  
 
“ஒன்னும் இல்ல பேபி கொசுக்கடி தான்” என்று சமாளித்தவன்  “ஒருநாள் இல்ல ஒருநாள் மொத்தமா  அதை நசுக்கிடுறேன்” என்று நமட்டு சிரிப்புடன் கூறிய படி, மகளை மடியில் அமர்த்தி கொண்டு மெல்ல காலை பானத்தை புகட்டினான்.
 
 
அதை கேட்டவளுக்கு பத்திக்கொண்டு வந்தது, இருந்தும் ஒன்றும் சொல்ல முடியாது தடுமாறியவள், வர்மனுக்காக கலந்த காபியை  பேசாமல் அவனின் அருகில் வைத்து விட்டு, மகளினை நடுவில்  வைத்துக்கொண்டு அவனுடன் வாதாட விரும்பாதவள்,  மகனுக்கானதை எடுத்துக்கொண்டு  அந்த இடத்தில் இருந்து நகர்ந்து விட.
 
தன் முகம் பார்க்க விரும்பாமல், வேண்டா வெறுப்பா தனக்கான தேவைகளை செய்பவளை கண்டு மனம் நொந்து விட… இப்போதைக்கு அவனின் உலகத்தை அழகாக மாற்றி, நேரத்தை களவாடி கொண்டிருக்கும் தன் மகள் மீது மனதை திசை திருப்ப, அவனின் பொழுதுகளை அந்த குட்டி வண்ணமயமாக்கியது தனது பிள்ளை மொழியில்.
 
 
என் மேனி நீ மீட்டும் பொன் வீணை என்று
அந்நாளில் நீதான் சொன்னது…
 
கையேந்தி நான் வாங்கும் பொன் வீணை இன்று 
கைமாறி ஏனோ சென்றது…
 
என் போல ஏழை முடி விழும் வாழை 
உண்டான காயம் ஆற கூடுமோ…
 
காதல் ரோஜாவே கனலை மூட்டாதே! 
நீ கொண்ட என்  நெஞ்சம்  தந்தால் வாழ்த்துவேன்…