நேச முரண்கள் – 3
நேச முரண்கள் – 3
நேச முரண்கள் – 3
இறந்த காலத்தின்
சுவடுகள் கண்ணில்
நிழலாட…
நிகழ் காலத்தில்
ஸ்வரமாய்
வரும்
உன் அக்கறை
ஏற்க வா…
ஏமாற்ற வா…
பௌர்ணமி நாளில் சீற்றத்துடன் காணப்படும் கடலின் அலை போல ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது வினோவின் இதயம்.
அவள் எதிர்பார்த்த நேரங்களிலெல்லாம் ஏமாற்றத்தை மட்டுமே பெரும்பாலும் பரிசளித்தவனின் இப்போதைய நடவடிக்கைகள் விசித்திரமாக தோன்றியது வினோதாவிற்கு.
கடந்த காலத்தின் கசடுகளை அத்தனை எளிதில் தன் உள்ளத்தில் இருந்து வெளியே கொண்டு வர பேதையவளால் முடியவில்லை.
தீபன் தனது காலை வேலைகளை அழகாக முடித்து, அதற்குள் குளித்து விட்டு தன் அடர்ந்த கேசத்தை துடைத்துக் கொண்டு வெளியே வந்தவன், தன் அன்னையை கண்டு புன்னகைத்தவாறே, “நானே வருவேன் இல்ல மாம், குட்டிமா சாப்பிட்டாளா?” என்றவாறே தனக்கான பூஸ்ட்டை குடித்தவன் பின், மெல்ல அன்னையின் மடியில் சாய்ந்து கொள்ள…
வினோவின் கரங்கள் துண்டை எடுத்து மகனின் முடியை நன்றாக துவட்டி விட்டது, அவளை திரும்பி பார்த்த தீபனின் விழிகள் ஒரு வித ஏக்கத்துடன் அவனின் தாயின் மீது படிந்தது.
மகனின் முகத்தை பார்த்து மனதிற்குள் அதிர்ந்து தான் போனாள் வினோதா, ஓரளவு நல்ல விவரம் உணரும் நிலையில் அவன் இருக்கும் போதுதான் வர்மனிற்கும் அவளுக்குமான பிரிவு நிகழ்ந்தது.
எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி அதிசயமாக மற்றவர் வியக்கும் வண்ணம் அமைதியாக அனைத்தையும் ஒரு பெரிய மனிதனை போல் ஏற்று கொண்டவனின் உள்ளத்து உணர்வுகள் இத்தனை நாட்கள் கழித்து அவனின் ஒரு பார்வையின் மூலம் வெளிப்பட்டு விட, பெற்றவளின் மனமோ எதையும் மகனிடம் சமாதானம் சொல்லும் நிலையில் இல்லை.
அன்னையின் கலங்கிய முகம் கண்டு அதை தாங்க முடியாதவன் “அம்மா… பேபி எங்க? என்னைய தேடுவா விளையாட…” என்றவன் சட்டென புன்னகையை முகத்தில் வரவழைத்துக் கொண்டு தங்கையை பார்க்க சென்று விட்டான்.
வினோவிற்கு தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முழுதாக பத்து நிமிடம் பிடித்தது.
இந்த பத்து வயதிலேயே தன் வயதிற்கு மீறிய அளவு புரிதலுடன், அதே நேரத்தில் தனியாக இருக்கும் அன்னையிடம் வளரும் குழந்தைகளுக்கே உரிய பாதுகாப்பு உணர்வு மிகுந்திருக்க, சிலசமயம் அம்மாவிற்கு அரண் போல காட்சி தரும், விஜய தீபனை புரிந்து கொள்வது வினோவிற்கே முடியாத காரியம்.
தற்போது அவனின் பார்வையும் செயலும் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் முன்னுக்குப்பின் முரணாக இருக்க, மகனின் உள்ளத்தை அத்தனை எளிதாக கணிக்க முடியவில்லை பெற்றவளால்.
இருப்பினும் அவனின் பார்வையில் தோன்றிய ஏக்கம் அவளின் மனதில் சுருக்கென்று முள் குத்தியது போல் வலியை ஏற்படுத்தியது என்பது மறுக்கமுடியாத உண்மை.
தனது தவிப்பை யாருக்கும் காட்ட விருப்பம் இல்லாதவள், பால்கனி அருகே சென்று பார்த்த போது பறந்து விரிந்த அந்த பெரிய தோட்டத்தில் தீபன், ரஸ்மி இருவரும் அழகாக பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை பார்த்தவாறே அருகிலிருந்த ஊஞ்சலில் அமர்ந்து விட்டாள் வினோ.
***********************
வேகமாக பரவி வரும் கொள்ளை நோயின் காரணமாக பெரும்பாலான நீதிமன்ற விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், மிகவும் அத்தியாவசியமான வழக்குகள் மட்டும் நவீன தொழில் நுட்ப முறைகளை பயன்படுத்தி, தொலை தொடர்பு சாதனங்கள் மூலம் நடைபெற, இத்தனை வருடங்கள் காலில் சக்கரம் கட்டியது போல் சுற்றிக் கொண்டிருந்த, விஜய வர்மனிற்கு வேலை பளு குறைந்து, மனது அமைதியுடன் இருந்தது சில நாட்களாக.
மனிதர்கள் தங்கள் நடவடிக்கைகளை குறைத்து கொள்ள, இயற்கை அதன் தாக்கத்தை அதிகப்படுத்தியது.
பெரும் அளவில் கிராமங்களில் மட்டுமே அரிதாக காணப்படும், மற்றும் வேகமாக அழிந்து வரும் அதிசயமாக பறவை இனங்கள் தங்களுக்கான இந்த உலகத்தை சுதந்திரமாக சுற்றி வர…
வர்மன் வீட்டில் அவனின் ஜன்னல் அருகே இருந்த மாமரத்தின் கிளையில் சிட்டுக்குருவிகள் தங்களுக்குள் அழகாக விளையாடிக் கொண்டு அதன் மெல்லிய குரலில் அந்த இடத்தில் இசை கச்சேரி செய்ய… அந்த ஓசையில் கவரப்பட்டு.
தனது அறையில் நிதானமாக வழக்குகளை பற்றி படித்துக் கொண்டிருந்த சட்ட புத்தகத்தை மேஜையில் வைத்து விட்டு… பல முன்னணி தொழில் நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராகவும், வெற்றிகரமான கிரிமினல் வழக்கறிஞராகவும் இருக்கும் விஜய வர்மன் M.A.LLM. ( master of Legislative law) ஜன்னல் அருகே வந்தான்.
அங்கே அவனிற்கு கிடைத்த பொக்கிஷமான பிள்ளைகளின் மீது படிந்து, உறைந்தது அவனின் பார்வை.
எத்தனை இனிமையாக கழிந்தது அவனின் மண வாழ்க்கை, அழகான, அதே சமயம் மனதில் ஒன்றை வைத்து வெளியில் வேறு பேச தெரியாத மனைவி, தந்தையின் சாயலில் தாயை போல நிறத்தில் அன்பின் மொத்தமாய் கிடைத்த மகன்.
குறும்பில் மிதக்கும் அழகிய விழிகளுடன் மனதை மயக்கும் தேவதையாய் சுற்றி வரும் மகள் என அந்த வீட்டில் குடும்பமாய் அவன் வாழ்ந்த காலத்தில் அதனை நின்று முழுமையாக அனுபவிக்க வில்லை என்றாலும் அவர்களை … அவர்களின் மூலம் இந்த வீட்டில் தோன்றும் உயிர்ப்பையும் அணு அணுவாய் உணர்ந்தவன் தான் வர்மன்.
வெளிப்படையாக காட்டிக் கொள்ளவில்லை என்றாலும், அவனின் பார்வை வீட்டில் இருக்கும் பெரும்பாலான நேரத்தில் மனைவியின் மீது தான் இருக்கும்.
சிறிய சண்டைகள் அடிக்கடி நடந்தாலும் இத்தனை சுலபமாக பிரிவு வந்து விடும் என்று அவன் கனவில் கூட நினைக்கவே இல்லை, சாதாரணமாக தொடங்கிய சண்டையில் அவன் வார்த்தைகளை சிதற விட்டான்.
அதிகமாக தன்மானம் பார்க்கும் மனைவியின் மனதில் அவை அம்புகளாக தைத்தது.
அவனுக்கும் குறைவு இல்லாமல் அவளின் வாயில் இருந்தும் கடுமையான முத்துக்கள் உதிர… அவற்றின் மூலம் அன்பு என்னும் மாலை உருவாகாமல், பிரிவின் மூலம் வேதனை எனும் விலங்குகள் தான் தோன்றியது.
அனைவரின் மனதில் ஓடும் எண்ணங்களை எளிதாக புரிந்து கொண்டு நேரத்திற்கு ஏற்றாற்போல் அறிவுரை வழங்கும், அதே சமயத்தில் தோல்வி என்பதையே அறியாத, ஒரு தேர்ந்த, புகழ்பெற்ற வழக்கறிஞரான அவனால்.
தனது வாழ்க்கைப் பாதையில் நிகழும் சம்பவங்களை இலகுவாக அறிவைக் கொண்டு முன்னெடுத்துச் செல்லாமல் மனதில் உள்ள கர்வத்தின் காரணமாக நடந்து கொள்ள தான் முடிந்தது.
அவனிற்கு… அவனின் மனதில் உள்ள தான் என்னும் அகந்தையின் காரணமாக பிரிவு தோன்றிய பிறகு, தனிமையை பரிசாக பெற்ற பின், இப்போது ஒன்றும் செய்ய முடியவில்லை அவனால்.
எதுவும் செய்யாது அமைதியாக அவர்களை பார்த்த வண்ணம் அவனும் நின்று விட… அவனை போலவே ஆர்ப்பரிக்கும் மனதை அடக்க முடியாமல் அவன் அறைக்கு நேர் மேலே இருந்த அறையின் பால்கனியில் வினோவும் நின்றிருந்தாள்.
அழகான வாழ்க்கையை ஆணவம் கொண்டு வாழ தெரியாதவர்களுக்கு, இனி தான் வாழ்க்கை என்றால் என்ன வென்று அறியப்போகும் இளம் குருத்துகள் தான் அந்த மெத்த படித்த மேதாவிகளுக்கு கற்பிக்க வேண்டும் என்பதே விதியின் கணக்கோ..!
********************************
வினோதா மாடியில் இருந்து கீழே இறங்கி வரவும், தனது அறையில் இருந்து வர்மன் வரவும் சரியாக இருந்தது.
அருகருகே நின்றிருந்த, இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று வெட்டி நின்றது.
‘திமிரு பிடிச்சவ என்ன தான் இப்ப தனித்தனியா இருந்தாலும், என்னை பார்க்கும் போது இவளுக்கு எதுவுமே தோணலையா..? எனக்கு மட்டும் தான் ஹார்மோன் எல்லாம் இந்த ராட்சசிய பார்க்கும் போது ஐட்டம் சாங் கேட்ட மாதிரி குத்து ஆட்டம் போடுது போல’ என்று கடுப்புடன் நினைத்து கொண்டவன் பார்வை சற்று கோபமாக வினோவின் மீது படிந்தது.
அவனின் கோப முகம் கண்டு எரிச்சல் வந்தது பெண்ணிற்கு.
‘நான் இந்த வீட்டில இருக்க ஒவ்வொரு வினாடியும் தவியாய் தவிக்க, கொஞ்சம் கூட எந்தவித உணர்வும் இல்லாமல் கல்லு மாதிரி நிக்கிறத பாரு… ஜடம் ஜடம்…. ஆகா..! இதை விட சரியான வார்த்தை எருமை தான். அது மாதிரி தான் இவனும் நிக்கிறான்’ என்று அவனை மனதிற்குள் வசைபாடி தனது கோபத்தை தீர்த்துக் கொண்டாள்,
நிர்வாக மேலாண்மை (M.B.A) படித்து விட்டு பெரிய நிறுவனத்தில் முக்கிய பொறுப்பை ஏற்று, எளிதாக அதே நேரத்தில் திறன் பட அதை முன்னெடுத்து செல்லும், அந்த விட்டு கொடுத்து வாழ தெரியாத அறிவாளி.
இவர்கள் இப்படி ஒருவரை ஒருவர் மனதிற்குள் புகழ்ந்து கொண்டிருக்க அவர்களின் அருகே வந்தது அழகிய சின்ன சிட்டு.
“அம்மா… அப்பா சீக்கிரம் வாங்க… அண்ணா கூட நாம சேர்ந்து விளையாடலாம், ரொம்ப நேரமா அண்ணா கூட மட்டும் விளையாட எனக்கு போர் அடிக்குது… சோ… இப்போ நீங்களும் வரீங்க” என்று தலை முடியை கோதி பின்னால் தள்ளியவாறு அதிகாரம் செய்த அந்த குட்டி மலரிடம் அடங்கிப் போகவே விரும்பியது பெரியவர்கள் இருவரின் உள்ளமும்.
தனது செய்கையில் மூலம் பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும், தன் மகளை கையில் ஏந்திக் கொண்ட வர்மன் “என் செல்ல குட்டிக்கு போரடிக்குதா…? கூடாதே… நம்ம அதை ஓட ஓட விரட்டி விடுவோம்… வா பார்பி” என்றவன்.
மகளுடன் துள்ளல் நடையுடன் முகம் முழுவதும் சந்தோசம் பொங்க விளையாட செல்ல, மகளின் விருப்பத்திற்கு ஏற்ப வினோவும் அவனை பின்தொடர்ந்து வந்த போது தீபன் அதற்குள்.
கேரம் போர்டு விளையாட ஏதுவாக தரையில் விரிக்கும் மெத்தையை போட்டு சிறு சிறு தலையணைகளை ஆங்காங்கே ரசிக்கும் வகையில் அடுக்கிக் கொண்டே சிறு புன்னகையுடன் மெலிதாக ஏதோ ஒரு பாடலை ஹம் செய்வது கண்டு அவனின் அருகில் சென்ற வினோ … “மிஸ்டர் பர்ஃபெக்ட் அதுக்குள்ள எல்லா ஏற்பாடும் செஞ்சாச்சு போல…” என்று அவனின் கேசத்தை அவள் கலைத்து விட்டாள்.
அன்னையின் செயலில் “ ஓ… நோ மாம்” என்று சிறிதாக அலறியவன் கரங்கள் தன்னியல்பாய் முடியை வேகமாக சரி செய்தது.
என்ன தடுத்தும் வினோதாவின் விழிகள் இரண்டும் அவளின் அனுமதி இல்லாமலே அருகில் தன்னை ஆழ்ந்து கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தவனின் அடர்ந்த கரும் கேசத்தின் மீது ஒரு நொடி பொழுதில் பதிந்து விலகியது.
அந்த வினாடி சலனத்தில் அவளின் கண்களில் தோன்றிய மயக்கத்தை கண்டு திகைத்தவனின் மனதில், தங்கள் இனிய பொழுதுகளில் அழகிய தருணங்கள் எழுந்து நர்த்தனம் ஆடியது.
அந்த பொழுதுகளில் நினைவு மனதில் பசுமையாய் தோன்ற… தற்போது தன்னை நிலைப்படுத்திக் கொண்டு விழிகளில் வெறுமையாய் எங்கோ பார்த்துக்கொண்டு இருக்கும் மனைவியை மயக்கத்தோடு பார்ப்பது இப்போது வர்மனின் முறை ஆயிற்று.
தனது மயக்கத்தை அவள் அறியாமல் மறைத்தவன், பிள்ளைகளுக்கு தோதாக விளையாட துவங்க காலை வேளை, அழகாக குழந்தைகளின் ஆர்ப்பாட்டத்துடன் இனிமையாக கழிந்தது.
*************************************
மதிய உணவிற்கு மிகவும் இலகுவான, அதே நேரத்தில் பிள்ளைகள் விரும்பி உண்ணும் உணவுகளை சமைத்து விட்டு, தந்தையுடன் இணைந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தவர்களை வினோதா அழைக்க…
வர்மன் தன் மக்களுடன் சேர்ந்து சாப்பாட்டு மேஜையில் அருகே வந்து நாற்காலியில் அமர்ந்தான்.
ரஸ்மி அவளின் தந்தையின் மடியில் ஒய்யாரமாக ஏறி அமர்ந்துக் கொண்டாள்.
காலையில் செய்த சேட்டையை தற்போதும் தொடர நினைக்கும் மகளை எண்ணி கடுப்பானவள் “ரஸ்மி” என்று அழுத்தமாக அழைக்க.
அந்த குட்டி தங்கமோ “அம்மா பிளீஸ்” என்றது மெல்லிய குரலில். தன் கோபத்தை மெல்லிய பெருமூச்சு விட்டு அடக்கிக் கொண்டு “அப்ப நீயா… சாப்பிடு பேபி” என்றாள் பொறுமையாக.
அதை கேட்டவுடன் கண்கள் கலங்கி விட்டது ரஸ்மிக்கு, பள்ளிக்கு செல்லும் நேரம் தவிர மற்ற எல்லா சமயங்களிலும் அவளுக்கு அன்னை வேண்டும் ஊட்டி விட…
வினோ வேலை செல்லும் நேரங்களில் அழகாக அள்ளி சாப்பிடும் அவள், அன்னையை கண்டால் மட்டும் அனைத்திற்கும் செல்லம் தான்.
அவளின் முகத்தை கண்ட பெற்றவனுக்கு தாங்கவில்லை “நானே ஊட்டி விடுறேன் பேபி” என்ற வர்மனின் சொல்லுக்கு மறுப்பாக தலையை ஆட்டியவள், “நோ ப்பா.. அம்மா தான் ஊட்டணும்.” என்று பிடிவாதமாக அழும் குரலில் கூறியவள், அவனின் மடியை விட்டு சிறிதும் அசையவில்லை.
எப்போதும் அவளை எளிதாக அடைக்கி விடும் தீபன் கூட, ஏதும் சொல்லாமல் தனக்கு தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டு அமைதியாக உண்ண தொடங்க…
பிள்ளையின் கலக்கத்தை காண முடியாதவள், வேண்டா வெறுப்பாக வர்மனின் அருகே அமர்ந்து ஊட்ட ஆரம்பிக்க. முதலில் விருப்பமே இல்லாமல் ஊட்டிக்கொண்டி இருந்தவளில் முகம் மெல்ல இளகி பின் சிரிப்பை சுமந்து கொண்டது.
பிரிவுக்கு முந்தைய நாள்களில் அடிக்கடி இது போல அவள் பிடிவாதம் செய்வதும் அதை பெற்றவர்கள் நிறைவேற்றுவதும்.
அந்த வேளைகளில் தந்தையின் கழுத்தை சுற்றி கொண்டு தீபனும் தங்கைக்கு போட்டியாக, தனது வாயை திறந்து உணவை அவளுக்கு ஊட்ட விடாமல் வாங்கி கொள்வதும் என்று அழகிய கவிதையாய் கழிந்த தருணங்கள் அவளின் மனதில் நிழலாடியது.
அதை நினைத்தவள் புன்னகையுடன் நிமிர்ந்து வர்மனை பார்க்க அவளின் நயனங்களை சந்தித்த அவனின் விழிகளும் அவள் நினைத்த நினைவுகளையே பறைசாற்ற…
மகனின் புறம் திரும்பியவள் “வா தீபா… நீயும் வந்து வாங்கிக்கோ” என்று வினோ சிரிப்புடன் அழைத்தாள்.
எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாதவன், “வேண்டாம் ம்மா… இப்ப இரண்டு பேரும் சேர்ந்து ஊட்டி விடுவீங்க… பட் எப்பவும் முடியுமா? அது இம்பாசிபிள், சோ எனக்கு வேண்டாம்” என்று சாதாரண குரலில் சொன்னவன் பாதி சாப்பாட்டில் கைகளை கழுவிக்கொண்டு எழுந்து சென்று விட்டான்.
அதுவரை அந்த உணவு வேளையில் தோன்றியிருந்த உயிர்ப்பு மறைந்து விட, பெற்றவர்கள் இருவரும் அதிர்ந்து போனார்கள் அவர்களின் உதிரத்தின் வார்த்தைகளில்.
தொலைவினிலே வானம் தரைமேல் நானும்
தொடும் ஆசைகள் சிறகினை விரிக்குதே…
மணி மணியாய் தூரல் மழைநாள் சாரல்
பட்டுப் பூச்சிகள் பார்வையில் பறக்குதே..
நீ நடந்து போ… கூட என் நிழல் வரும்…
நீயின்றி நானிருந்தால் நிலவும் இருட்டு…
என்னோடு நீ இருந்தால் இருட்டும் நிலவு…
ஒரு துணை விரும்பாது உலகில் வாழ்வதா?
அடடா பாவம் வாலிபம் வாடிடும்…