நேச முரண்கள் – 4

நேச முரண்கள் – 4

நேச முரண்கள் – 4.

 
காதலின் வலி 
உள்ளம் வதைக்க …
தாய்மையின் குரல் 
உயிர் வரை வதைக்குதடா…
மீண்டு வருவேனா…
உன்னை 
மீட்டு வாழ்வேனா..?
 
கடந்த ஒரு வாரமாக பெரியவர்கள் இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை, தீபனின் வார்த்தைகள்  ஏற்படுத்திய வடுவை  எளிதாக கடந்து வர தெரியாமல் தண்ணீரில் தத்தளிக்கும் படகென ஒரு நிலையில் இல்லாமல் இருவரின் மனமும் அலைபாய்ந்துக் கொண்டிருந்தது.
 
பிரிவு என்பது கணவன், மனைவி இருவருக்கும் நேரும் போது அதன் மூலம் ஏற்படும் பாதிப்பை விட, அவர்கள்  தாய், தந்தையாக மாறிய பிறகு நிகழ்வது கொடுமையிலும் கொடுமை, அதன் மூலம் ஏற்படும்  தாக்கமும் அதிகம்.
 
அது அவர்களை விட அந்த இளம் மொட்டுகளையே அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் என்பது மறுக்கமுடியாத  ஆணித்தனமான ஒரு உளவியல் உண்மை.
 
வாழை பழத்தில்  ஊசி ஏற்றுவது போல் எந்தவித உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல், அவர்களை  வெறும் அமைதியான வார்த்தைகளைக் கொண்டே அலுங்காமல் குலுங்காமல் சிதறடித்திருந்தான் அவர்களின்  சீமந்த புத்திரன் விஜய தீபன்.
 
விதியின் துணைகொண்டு மௌனம் கூட இறுக்க முகமூடி அணிந்து  இருவருக்குமிடையே அழகாய் விளையாண்டது.
 
அவர்களோ! அப்படி இருக்க…. ஆனால் சிறுவர்களுக்கு அந்த வாரம் முழுவதும் கொண்டாட்டம் தான்.
 
வீட்டின் முன்புற தோட்டத்தில் சிறிய வகை செடிகளையும், காய்கறி விதைகளையும் கொண்டு  அவர்கள் விருப்பம்போல், தோட்ட வேலை செய்யும் பரசுவின் உதவியுடன் சிறு காய்கறி, மலர்தோட்டம் உருவாக்க முயன்றனர்.
 
இப்போது உள்ள தலைமுறையினர் இடையே செல்போன் பயன்பாடு  அதிகரித்த நிலையில், சில நல்லவைகளும் அவற்றின் மூலம் அந்தப் பிஞ்சுகளுக்கு இன்றைய காலகட்டத்தில் பதியத்தான் செய்கிறது.
 
பல  யூடியூபர்ஸ் அவர்களின் தோட்டத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகளை அழகாக  காணொளியாக எடுத்து இணையத்தில் பகிர விட்டிருந்தனர்.
 
 
 அது இளைய தலைமுறையை மட்டுமில்லாமல், குழந்தைகளின்  நெஞ்சத்தை கூட செம்மை படுத்தத்தான் முயல்கிறது.
 
கார்ட்டூன் வீடியோக்களில் மூழ்கியிருந்த ரஷ்மியின் விழிகளில் ‘என் வீட்டு தோட்டத்தில்’ என்ற காணொளி தப்பிதவறி பட்டுவிட,  ஆர்வமாக அதை பார்த்த கண்களுக்கு பரிசாக அமைந்தது அதில் கொத்து கொத்தாக  காய்த்த பழங்களும், பூக்களும்.
 
இயற்கையின் அழகு பார்ப்பவர்  மனதை மயக்கும், அதில்  ஆழ்ந்து போக செய்யும், இன்றளவும்  அவர்களே உணராத வகையில் மனிதனை உயிர்ப்புடன் வைத்திருப்பது  இயற்கை  தான்.
 
அதை தன் அண்ணனிடம் காட்ட சென்றவள்  “ இதை பாருங்கள் அண்ணா”  செல்லை அவன்  கரங்களில் தராமல் குதிக்கவும்.
 
“பேபி…   முதல்ல அமைதியா நின்னு என்னனு சொல்லுங்க… செல்லை தராமல் பாருங்கண்ணு சொன்னா, எப்படி பார்க்க முடியும்?”  என்று அழகாக புருவத்தை உயர்த்தி கேலியாக மெல்லிய சிரிப்புடன் வினவியவன்.
 
சிறிய அதே சமயத்தில் அழகிய பூங்கொத்து போல் தன் முன்னே துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த தங்கையின் தோள்களில் கரத்தை போட்டு தன்னை நோக்கி இழுத்துக் கொண்டு, “அதிகமாக செல்போன் யூஸ் பண்ண கூடாது பட்டு, இட்ஸ் நாட் ஹெல்தி ஃபார் யுவர் மைண்ட் டா…  சரியா..?” என்று அவளுக்கு அறிவுறுத்தியவன், அவளின் சம்மதமான  தலை அசைவை பெற்ற  பின்னே,  அவளின் மெல்லிய கரங்களில் தன்னை புதைத்துக் கொண்டிருந்த அந்த  செல்போனை பார்த்தான்.
 
 
 
“செல்லக் குட்டி இல்ல என்ன பார்த்தீங்க இதுல…  கார்ட்டூன்னா?  அதை காட்ட தான்  இவ்வளவு வேகமா ஓடி வந்தீங்களா?”.
 
“இல்லனா, இதுல ஒரு ஆன்ட்டி பெரிய தோட்டம் வச்சு  இருந்தாங்க, அதுல நிறைய செடி இருந்துச்சு, அழகழகா ஃப்ரூட்ஸ், வெஜிடபிள்ஸ்  எல்லாம் இருந்துச்சு சோ ப்யூடிஃபுள்…”  மலர்விழிகளை விரித்து அழகாக கூறியவள்.
 
“இங்க கூட பெரிய தோட்டம் இருக்கு இல்ல… அதில நாமும் அவுங்க மாதிரி வைக்கலாமா..?” என்று தன் சிறிய குரலில் சொல்லி கொண்டு இருந்தவள் கண்களில், மண்ணைத் தோண்டி அதில் விதை முத்துக்களை பதிக்கும் ஆசை மின்னியது.
 
 
சென்ற  தலைமுறை வெயிலோடு விளையாடி,  இயற்கையோடு உறவாடி, மண்ணில் புரண்டு, மழையில் நனைந்து, கூட்டான் சோறு செய்து நட்புடன் சுற்றி திரிந்த காலம் மெல்ல அழிந்து.
 
குட்டி குட்டி மண் பானைகள் வைத்து விளையாண்ட விளையாட்டுகள் அழிந்து.
 
வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர், செல்போன் என்னும் நவீன சிறை சாலையில் இன்றைய தலைமுறையினர்  விரும்பியே அடைப்பட்டு வெகு நாட்கள் கழித்து விட்டன.
 
கெட்டதில் நல்லதாய் இப்போது பரவி வரும் பசுமை மீட்சி தொடர்பான காட்சிகள்  அதிகமாக, செல்லின் மூலம் பரவ, அதனால் ஏற்படும் சிறிய அளவு மாற்றம் கூட  மனதிற்கு இனிமையாய் தான் தோன்றுகிறது.
 
தங்கையின்  குதூகலத்தை சிரித்தவன் “உனக்கு என்ன பிடிக்குதோ அதையே பண்ணலாம்டா…  செடிவைக்கிறது நல்லதுதான், வாடா” என்றவன் தங்கையை அழைத்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்றான்.
 
பரசுவிடம் சொல்லி தேவையான விதைகளை வாங்கிவர சொல்ல…
 
“தம்பி, விதை கூட, மண்புழு உரம் இன்னும் கொஞ்ச பொருட்களும் வேணும், நாளைக்கு எல்லாம் வாங்கி  வந்துடுறேன், பாப்பாக்கு எப்படி ஆசையோ அப்படியே வைக்கட்டும்”  என்றவன் முகத்தில் உண்மையான மலர்ச்சி இருந்தது.
 
இரண்டு தலைமுறையாக அவர்களிடம் வேலை செய்யும் நபர் பரசு, வர்மனின் சொந்த ஊரான காரைக்குடியை சேர்ந்தவன்.
 
சென்னையில் வர்மன்  தன்னை நிலைப்படுத்திக் கொள்ள,அவனுக்கு வேண்டியதை செய்ய, நம்பிக்கைக்கு உரிய காவல்காரனாக, பொன்னரசும், தோட்டம் மற்றும் வெளி வேலைக்கு பரசுவும்  பெரியவர்களின் அறிவுரையின் பேரில் வந்து விட்டனர் தங்களுக்கு விருப்பமான முதலாளியிடம்.
 
பிள்ளைகள் பிறந்தது முதல் இவர்களின் கண்பார்வையில் தான்  வளர்ந்தார்கள், சிறுவர்கள் மீது மிகுந்த பாசம் கொண்ட பரசுவிற்கு அவர்களின் வரவு அதனை மகிழ்ச்சியை தந்தது.
 
அதன் பின் நேரம் அந்த சிட்டுக்கள் இருவருக்கும் இறக்கை கட்டி கொண்டு பறந்தது  பசுமை தாயின் மடியில்.
 
******************************   
 
 அன்றைய தினத்தில் நட்சத்திரங்கள் விடுமுறை எடுத்துவிட,  உலகிற்கு தன் ஒளியை கொண்டு வண்ணம் தீட்ட வெண்ணிலவு எத்தனை முயன்றும், மேக மன்னன் தன் கரும் உடல் கொண்டு அவளை அணைத்து யாருக்கும் தெரியாமல் தனக்குள் புதைத்து புன்னகை சிந்த,  சிரிப்பில் சிதறிய முத்துக்கள்  தூறல்களாக  நிலமங்கையின் மீது பரவி படர்ந்து, அந்த ஏகாந்த இரவை ரம்யமாக்கி கொண்டிருந்தன.
 
மெல்லிய மழை பெய்து இரவின் குளுமையை சற்றே  அதிகரிக்க,  சில் வண்டின் சத்தம்  அந்த பகுதியில் தாள லயத்துடன் மென்மையாக ஒலி எழுப்பி,   மனதை மயக்கும் வண்ணம் சூழ்நிலையை மெல்ல மாற்றியது.
 
 
 
 பிள்ளைகள் இருவரும் அருகிலிருந்த மற்றொரு அறையில்  தூங்கி கொண்டு இருக்க… தனது  அறையில் உள்ள மெத்தையில் படுத்திருந்த வினோதாவை  அரவணைக்க இன்று நித்ரா தேவிக்கு துளிகூட விருப்பம் இல்லை போல.
 
எத்தனை முயன்றும், தூக்கம் என்பது துளி கூட வரவில்லை அவளுக்கு, ஏதேதோ நினைவுகள் மனதிற்குள் முட்டி மோத படுக்க முற்பட்டு முடியாமல் திணறியவள், அந்த  இடத்தின் நிசப்தம் மனதை உறுத்த அறையை விட்டு வெளியேறினாள்.
 
பழைய நினைவுகள் மனதில் நிழல்போல் படிந்திருக்க,  வர்மனின்  கைக்குள் இதுபோன்ற மழைநாளில் குளிருக்கு இதமாக அவனின் சூட்டு உடம்பின் கதகதப்பை உணர்ந்தவாறு கொஞ்சி களித்த இரவுகளின் களியாட்டங்கள்  அனைத்தும் மனதில் முட்டி மோதின. ஏறக்குறைய இரண்டு வருடங்கள் அடக்கிக் கொண்டு இருந்த உணர்வுகள் அனைத்தும் அவளினுள் ஆட்டம் போட்டதை கண்டு மனம் அதிர்ந்து போனவள்.
 
“ அடச்சே… கொஞ்சம் கூட நிம்மதியா இருக்க விட மாட்டான் போல, இருக்கு. நேரில் பார்க்கும் போதுதான் எதையாவது சொல்லி கடுப்பாக்குறான்னு பார்த்தா… அமைதியா தூங்க கூட விட மாட்டேன்னு கண்ணு முன்னாடி கனவா வந்து  படுத்துறான், இந்த வக்கில் வண்டு வர்மனின் தொல்லை தாங்க முடியலை, கடவுளே இதுக்கு ஒரு முடிவே இல்லையா” என்று மெல்லிய குரலில் அவனை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தாள்.
 
வினோவை போலவே அன்று வர்மனிற்கும் தூக்கம் பகையாகி விட, இப்போதே தன்னவள் தன்னுடன் இப்போதே வேண்டும் என்று  துடித்த ஹார்மோனை அடக்க தெரியாதவன் இருவரும் வாழ்ந்து  வீழ்ந்த அந்த நான்கு சுவர்களுக்குள் இருக்க முடியாமல்  ஹாலிற்கு வந்தான்.
 
 
 வந்தவன் அமைதியாக  அங்கு கண்மூடி சாய்ந்து உக்கார்ந்து விட, அவன்   அத்தனை நேரம் அனுபவித்து வந்த வெறுமையை விரட்டுவது போல மெல்லிய   ஓசை கேட்டது.
 
அதில் தன்  மோன நிலை களைந்து பார்க்க இரவின் நிலவாய், பெண்மையின் மொத்த உருவமாய், அவளுக்கே உரிய சுகந்தமான மணமுடன் அருகே வர, எந்த வித ஓசையும் செய்யாமல் தன்னை சோபாவினுள் புதைத்து கொண்டு அவளின் ஒவ்வொரு செய்கையையும் அமைதியாக ரசித்துக் கொண்டிருந்தான்.
 
 
தனிமையின் கொடுமையை விரட்ட வந்த தேவதை போல் தெரிந்தாள் அப்போது தான் மலர்ந்த தாமரை போல இருந்த  அவனின் செல்ல ராட்சசி.
 
நல்ல நல்ல வார்த்தைகளை கொண்டு அவனுக்கு புது புது பெயர்களை சூட்டி தன் மனதில் உள்ள சலனத்தை துரத்தி கொண்டிருந்தாள் வினோதா.
 
‘என்னது வக்கீல் வண்டு வர்மனா!  படுபாவி…  எப்படி எல்லாம் சும்மா இருக்குற என்னைய  மனசாட்சியே இல்லாம… இந்த திட்டு திட்டுறா’ என்று  முகம் மலர  தன்னவள் புலம்பல்கள் அத்தனையையும் இருட்டில் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து இருந்தவாறு கேட்டுக் கொண்டிருந்தவனின் மனதில் சாரல் அடித்தது போல இருந்தது.
 
 
தான் இன்றும்… இத்தனை நாள் பிரிவுக்கு பிறகும்  அவளின் மனதில்  சலனத்தை  ஏற்படுத்துவதை கண்டு, அவளிடம் பலமுறை மண்ணை கவ்விய  அவனின் இருக்கும் ஆண் என்ற கர்வம் சிறு  ஆறுதல் அடைந்தது.
 
 
எதிரே இருந்த அவனின் மனதை கவர்ந்த ராட்சசியின் வரிவடிவம் அவனின் உணர்வுகளை  தாறு மாறாக துடிக்க வைக்க, மெல்ல எழுந்து அந்த இருளில் அவள் அறியா வண்ணம் வினோ வை நெருங்கியவன் மெல்ல அவளின் பின்னங்கழுத்தில்  மெதுவாக ஊத, திடுக்கிட்டு போனாள் மங்கையவள்.
 
அந்தோ பரிதாபம்… கணவன் அவளுக்கு ஏற்படுத்த நினைத்த தாப உணர்வு தோன்றாமல், இருளில் கண்ட உருவத்தை கண்டு பயந்துபோய் தடுமாறி குதித்தவள் கால்களுக்கு இடையில் மாட்டி கொண்டு நசுங்கியது என்னவோ அப்பாவி (அடப்பாவி)  வர்மனின் பாதங்கள் தான்.
 
 
 
“அய்யோ!  அம்மா…”  என்று  அலறியவனின் குரலை கேட்டு தன் அச்சம் தெளிந்தவள், வேகமாக சென்று விளக்குகளை ஒளிர செய்ய, அவள் கண்டது கால்களை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்த வர்மனை தான்.
 
“அறிவு  கெட்டவளே!  இப்படியா ஒரு மனுஷன் காலை  மிதிப்ப?  பார்க்க தான்  ஓணான் போல  இருக்க, ஆனா கழுதை மாதிரி  உதைக்கிற” என்றான்  கால்களில் உண்டான வலியின் காரணமாக கடுப்புடன்.
 
“ ஹ்ம்ம்… இப்படி பேய்,  பிசாசு மாதிரி புசுபுசுன்னு மூச்சு  விட்டுக்கிட்டு அலைஞ்சா… கால்ல மட்டும் இல்ல, கழுத்துல கூட மிதிக்கலாம் மிஸ்டர் வர்மன்”.
 
 
“இரத்த காட்டேரி, கொள்ளிவாய் பிசாசு மாதிரி,  நைட் டைம் ல சுத்துற நீ! என்னைய  இப்படி பேசுறது எல்லாம் ரொம்ப ஓவர் வினு”  என்று  கிண்டலாக சிரித்தபடியே சொன்னவன், மனமோ!  ‘ஆமாம் இவ பிசாசே தான்… ‘என் உசிரையே உறிஞ்சிடுவா இந்த அழகான  பிசாசு’ என்று தாபமாக முணுமுணுத்தது. 
 
தன்னை முறைத்து கொண்டிருந்த வினோவினை பார்த்து “என்னால எழுந்துக்க முடியலை கொஞ்சம் தூக்கிவிட்டு வினு”  என்று முகத்தை பாவமாக வைத்து கொண்டு கேட்டவனை சந்தேகமாக பார்த்தவள்.
 
‘நம்ம மிதிச்சதுக்கு, இந்த மலைமாடு போடுற சீன் நம்புற மாதிரி இல்லையே!” என்று நினைத்துக் கொண்டவள், ஒரு மாதிரி நம்பாத பார்வையினை அவன் மீது செலுத்தியவள்.
 
 பின் அவனின்  பாவப்பட்ட முகத்தை கண்டு,  சற்றே மனமிறங்கி “சரி சரி… ரொம்ப பண்ணாம எழுந்திருக்க பாருங்க” என்று அவனின் வலிமையான கரங்களை பற்றி தூக்கி விட கடுமையாக  முயற்சி செய்து பார்த்தாள்.
 
 
தன்னில் பாதி அளவு கூட இல்லாமல் மெல்லிய உடல் வாகுடன் இருந்தவள், தன்னை எளிதில் தூக்கி விட முடியும் என்ற அசாத்திய மன தைரியத்துடன் செயல் பட்டு கொண்டிருப்பது கண்டு வந்த புன்னகையை மறைத்தவன்.
 
தட்டு தடுமாறி எழுவது போல, அவளின் மீது தன் பலத்தில் பாதியை  போட்டு விட்டு வினோ வை பற்றி கொண்டு வேதனையில் முகம் சுருங்க நிற்பது போல் அவளை பார்த்தவாறு நிற்க.
 
அவனின் கோலம் கண்டவள் உண்மையா வலிக்குது போல என்று நினைத்து அவனை தாங்கியவாறு  அருகில் இருந்த இருக்கையில் அமர்த்த முயல…
 
“இல்ல வினோ இங்க வேண்டாம், எனக்கு பெயின் அதிகமா தெரியுது, சோ பிளீஸ்…  என்னை ரூம்ல விட முடியுமா? என்றான் வலி சுமந்த குரலில்.
 
கணவனின் வேண்டுகோள் அதுவரை இளகி இருந்த மனைவியின் மனதை இரும்பாய் இறுக்கி விட்டது.
 
அவள் மீது பாதி அளவு படந்திருந்தவனின்  ஓவ்வொரு அணுவும் அவளின் மாற்றத்தை உணர, குனிந்து அவள் வதனத்தை கண்டவன் எதுவும் பேசாமல் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்து,   தன் மனதை நிலை படுத்தி கொண்டவன்.
 
‘வினோ’ வென்று அழைக்க அது வரை இறுகி  போய் இருந்தவள். அவனின் குரலில் தன்னிலை உணர்ந்து அவனை நோக்கி தன் வலி சுமந்த குரலில் “என்னால முடியல விஜய், ஆனால் நீ ரொம்ப சாதாரணமா என்னைய அந்த அறைக்கு…” என்று சொல்லிய படியே வந்த வார்த்தைகள்  தடுமாற ஒரு நொடி விழிகளை மூடி தன்னை நிலைப்படுத்த முயற்சி செய்தவள்.
 
 
பின் அது முடியாமல், கண்களை திறந்து “உங்களுக்கு எல்லாமே  ஈசி தான் இல்ல… என்றவள் வெளியில் வரத் துடித்த விழி நீரை இயன்ற அளவு கட்டுப்படுத்திக்கொண்டு “ பட்…” என்றவளுக்கு அதற்குமேல் ஒருவார்த்தை கூட பேச முடியாத அளவுக்கு  வேதனை தொண்டையை அடைத்தது.
 
 அவளையே விழி எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்த, வர்மனிற்கு யாரோ தன் உடலில் உள்ள மொத்த  உயிரையும்  உருவி எடுத்தது போல வலித்தது.
 
எதுவும் பேச முடியாதவாறு இருந்தவள்,  தன் நீண்ட நயனங்களை கொண்டு அவனின் முகத்தினை ஆழ்ந்து பார்த்தபோது, கண்களில் கண்ணீர் தோன்றி காட்சி களை மெதுவாக மறைப்பது உணர்ந்து திரும்பி அவளின் அறையை நோக்கி சென்றாள்.
 
 
விஜய வர்மனுக்கு சற்று நேரத்திற்கு முன் இருந்த வெறுமையான பொழுதே வரம் போல தோன்றியது.
 
 இந்த நொடி அனுபவிக்கும் வேதனையை நினைத்த போது. அவனை அறியாமலே “ஐ அம் சாரி பேபி” என்று உதடுகள்  மெல்ல உச்சரித்தன.
 
 
 
இந்தக காதல் என்ன ஒரு நடை வண்டியா?
நான் விழுந்தாலும் மீண்டும் எழ? 
இரு கண்ணை கட்டி  ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே எங்கே செல்ல? 
ஆண் நெஞ்சம் எப்போதும் ஊமை தானடி…
அது தெருவின் ஓரம் நிறுத்திவைக்கும் 
பழுதானால் தேரடி…
 
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி… 
உனக்கென வாழ்கிறேன் நானடி…
 
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!