நேச முரண்கள்

முரண் – 6.

           
நிஜமாய் நீ இருக்க
நிழலாய் தோன்றியது 
அப்போது…
எனது நிழல் கூட 
எனக்கு
பகையாய் மாறியது 
இப்போது…
காதலை நம்பவில்லையடி 
என் மனம்
என்னுள் புதைந்திருந்த 
உன்மீதான காதலை 
உணரும்  
நிமிடம் வரை…
 
 
மனமெல்லாம் முள் நிறைந்த புதர்காடாய் மண்டிக்கிடந்தது விஜயவர்மனின் உள்ளம். 
 
 
அவனது அகமும் புறமும் மனைவியின் ஸ்பரிசமே வேண்டுமென்று அடங்கா மிருகமென அடம்பிடிக்க, இதற்கு முன் இப்படியான அவஸ்தைகளை அவன் அனுபவித்ததில்லை.
 
 
கணவனாக கடமை, ஆசை  என்ற பொய் முகமூடியில் மட்டுமே மனைவியை கையாண்டவனுக்கு, அவள் மீதான காதலை அறிந்து கொள்ளும் சூழ்நிலைகள் பல அமைந்தும், இதுவரையில் அறிந்து கொள்ளாதது இவர்களின் இல்லற வாழ்க்கைக்கே உரிய சாபம். பெரும்பாலான குடும்பங்களின் வரமாக வந்த சாபமும் இது தான்.
 
 
 
 
இப்போது அவனுக்குள் பேய் ஆட்டம் போடும் உணர்வு நிச்சயமாக அது இதற்கு முன் அவனிடம் காணப்பட்ட தேவை போல் அல்லாமல் ஆத்மார்த்தமான ஒன்றாகத்தான் இருந்தது.
 
 
அதைக்கூட அத்தனை பெரிய வழக்கறிஞர் என  எல்லோராலும் சொல்லப்பட்ட  அந்த முட்டாள் கணவனால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.
 
 
தொழில்…  வேலை என்று வெளியில் சாம்ராஜ்யத்தில் மன்னனாக இருக்கும் பலர் கோட்டை விடுவது அவர்களின் குடும்பத்தில் தான்.
 
 
எவ்வளவு சிக்கலான வழக்குகளையும் லாவகமாக கையாண்டு, வெற்றி என்னும் இலக்கை எளிதில் பெற்றவனுக்கு, காதல் களத்தில் நிற்க கூட முடியவில்லை.
 
 
விடிய விடிய அவள் விட்டுச் சென்ற இடத்தில் கண்மூடி அமர்ந்து இருந்தவன் அப்படியே உறங்கி விட… அவன் விழியோரம் சிறு கண்ணீர் கறை கூட படிந்திருந்தது.
 
 
இது வரை அவனே கூட உணராத ஆழ்மன காதலை அழகாக பறைசாற்றிக் கொண்டு.
 
 
எழ முடியாமல் கண்கள் மூடி ஆழ்ந்த நித்திரையில் இருந்தவனை அழகான சிரிப்பொலி உறக்கம் கலைந்து அதனுடன் அவனையும் சேர்ந்து கொள்ள வேண்டி ஒலி எழுப்ப… அதன் இசையில் கவர்ந்து எழுந்தவனின் அருகே தன் அண்ணனுடன்  விளையாண்டு கொண்டிருந்த அவனின் சின்ன தேவதை வர்மனின் விழிகளை நிறைத்தாள்.
 
 
இரவு முழுவதும்  பல பழைய நினைவுகளில் கடினமான மனம் மீண்டும் இளகிவிட, கைகளில் அந்த பூங்கொத்தை ஏந்திக்கொள்ள பரபரக்க… வேகமாக எழுந்தவன் விரைந்து சென்று தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வெளியே வந்த போது…  நேற்றைய இரவு நடந்தது எதுவும் இல்லை என்பது போல் குழந்தைகளுடன் உணவு உண்டு கொண்டிருந்தாள் வினோதா.
 
 
 
   
வர்மனின் பார்வை தன் முதுகை துளைப்பது அறிந்தாலும் தன் போக்கில் பேசி சிரித்துக்கொண்டு அவனை கண்டுகொள்ளாதது போல இயல்பாக இருக்க பெரிதும் முயற்சி செய்து கொண்டிருந்தாள் பெண்ணவள்.
 
 
 
“ராட்சசி! இவ என்னை நைட்  முழுக்கப் பொட்டு கூட தூங்க விடலை… இவ மட்டும்  தூங்கி எழுந்து ப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் மாதிரி சும்மா கும்முன்னு இருக்குறா…” என்று யாருக்கும் கேட்காதபடி வாய்விட்டு புலம்பியவன் பின் சுற்றுப்புறம் உணர்ந்து, உணவு மேஜை அருகில் இருந்த நாற்காலி  மேல் வந்து  அமர்ந்தான்.
 
 
 
“ஹாய் பா… குட் மார்னிங்” என்ற மகளின் குரலில், அருகில் அமர்ந்து கொண்டு அன்னையின் கைகளில் உணவு உண்டு கொண்டிருந்த ரஸ்மியை தூக்கி தன் மடியில் அமர்த்தி கொண்டவன்.
 
 
 “குட் மார்னிங் டா செல்லம்…  யூ லுக் வெரி பிரிட்டி இன் திஸ் சூட்” என்று சொன்னவன் அவளின் குண்டு கண்ணங்களில் முத்தமிட்ட படியே “நான் ஊட்டி விடவா என் பட்டு குட்டிக்கு?” என்று கேட்ட உடனே அந்த சின்ன மொட்டு  பூவாகி மலர… “ஓ சூர் டாடி” என்று அழகாக தலையாட்டியது.
 
 
 
தீபன் இதை எல்லாம் பார்த்தாலும் எதையும் கண்டு கொள்ளாமல் அமைதியாக அவனின் தட்டை காலி செய்து கொண்டிருந்தான் கண காரியமாக.
 
 
வினோதாவிற்கு தான் காதில் புகை வராத குறையாக இருந்தது, ‘நேத்து நைட்டு முழுக்க என்னை அழுக விட்டு இவன் மட்டும் சாதாரணமா இருக்கிறான் ஜடம் ஜடம் உணர்ச்சியே இல்லாத ஜடம்’ என்று மனதிற்குள் அவளவனை வறுத்து கொண்டிருந்தாள்.
 
 
இருவரும் ஒருவரை  அறியாமல் மற்றொருவர் திட்டுவதற்காக வேணும் மனதிற்குள் நினைத்து கொண்டே இருந்தார்கள்.
 
 
 
உரிமை உள்ள இடத்தில் தான் கோபம் கலந்த காதல், தாபம், தவிப்பு  என்று அனைத்து உணர்வுகளும் ஒருங்கே தோன்றும் என்பதை அறிய நாட்கள் பல  கடக்க வேண்டும் இந்த சண்டை குரங்குகள் இரண்டும்… (எத்தனை காலம் தான்   கோழியையே உதாரணம் சொல்றது, இதுங்க பண்றது எல்லாம் குரங்கு தனமா தான் இருக்கு).
 
 
 
“பா… எங்கியாவது வெளியில போலாமா, வீட்டுக்குள்ள இருக்க ஒரே போர் நோ ஸ்கூல், கிளாசஸ்… அண்ட் நோ மோர் ஃப்ரெண்ட்ஸ் அல்சோ…” என்று சொன்னவள் “ரொம்ப கடுப்பா இருக்கு டாடி” என்றாள் அவனின்  குட்டி தேவதை சலிப்பாக.
 
 
 
அவளின் தோரணையை கண்டு சிரிப்பாக வந்தாலும் இந்த விடயத்தில் அவனால் சிறிதும் கூட  சின்னவளுக்கு விட்டுக் கொடுக்கவும் முடியவில்லை.
 
 
“நோ பேபி தட்ஸ் நாட் சேஃப்… நான் மட்டும் வெளிய போய் வரதே எனக்கு கொஞ்சம் உங்களை நினைச்சு பயம் தான்  பேண்டம்மிக்  டைம் டா… வெளியில போக கூடாது… சோ பிளீஸ் இது மட்டும் கேட்காதீங்க…” என்று பிள்ளை மொழி பேசும் மகளிடன் சொன்னவன்.
 
 
‘உங்களுக்கு பிடித்த கேம்ஸ் எல்லாம் அப்பா  வீட்டுக்கே வர வைக்கிறேன் டா” என்றவன், தன் மகன் புறம் திரும்பி “தீபா,  என் செல்ல குட்டி கூட சேந்து , என்ன வேணு்னாலும் முடிவு பண்ணி லிஸ்ட் கொடு  கண்ணா… நான் வாங்கி வரேன்” என்றவன் மகனிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து,  பின்  “ இன்னைக்கு நான் கோர்ட்  போகணும்… ஈவ்னிங் சீக்கிரம் வந்துடுறேன்” என்று சொன்னவன் உண்டு விட்டு பொதுவான ஒரு தலை அசைவுடன்  சென்று விட்டான்.
 
 
வினோதாவிற்கு தான் முகத்தில் அடித்தது போல் இருந்தது.
 
 
 
சாப்பிட வந்து அமர்ந்தது முதல் தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை… ஏன் அங்கே ஒருத்தி இருக்கிறாள் என்று ஒரு சிறு பார்வை கூட அவளின் மேல்  செலுத்தாமல் தன் பிள்ளைகளிடம் மட்டுமே பேசி சிரித்துக்கொண்டு சென்று விட்ட அவனை கண்டு கண்களில் கண்ணீர் எட்டி பார்த்து வினோவிற்கு.
 
 
 
அவள் என்ன நினைக்கிறாள் என்று அவளுக்கே புரியவில்லை…
 
 
நேற்று நெருங்கி வந்தவனை தன் வார்த்தையால் கண்கலங்கிய கண்ணீரால் தள்ளி நிறுத்தியதும் அவள்தான்.
 
 
இன்று விட்டு விலகி செல்பவனை தன்னைப் பார்க்க வில்லை என தவித்துத் தடுமாறுவதும் அவள்தான்.
 
 
அவள் மனம் இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் ஊஞ்சல் ஆடியது.
 
 
‘என்ன வினோ… அவன் தான் இப்படி உனக்கு தெரியுமில்ல, அப்புறம் எதுக்கு அவன் கிட்ட எல்லாத்தையும் எதிர்பார்க்கிற… இங்க வந்து நீ ரொம்ப பலவீனமா கிட்ட அவன் உனக்கு வேணாம்… சந்தோசமா இல்லைனாலும் நிம்மதியா இருந்த உன்னோட மனச  கலைக்க  பாக்குறான் கவனமா இரு’ என்று அவளினை கடிந்த அறிவினை ஏற்க முடியாமல் போகவே, பிள்ளைகள் மீது தன் கவனத்தை திருப்பி அதை சமன் செய்ய முயற்சித்தாள் வினோதா.  
 
 
எந்த ஒரு கவலையையும் மறக்கச் செய்யும் பிள்ளை மொழிகள் அவளின் உலகத்தை சிறிது நேரத்திலேயே வண்ணமயமாக மாற்றியது என்றால் மிகையில்லை.
 
 
 
நீதிமன்றத்தை நோக்கி காரில் விரைந்து சென்று கொண்டிருந்தவனின் உள்ளமும் அவனவளுக்கு சற்றும் குறையாமல் இருக்க…
 
 
என்ன வாழ்க்கை இது என்ற சலிப்பு மேலோங்கி நின்றது.
 
 
கையெட்டும் தூரத்தில் அழகிய இளமை ததும்பும் சுவர்க்கம் ஆனால் அதை நெருங்கக்கூட அவனால் முடியவில்லை.
 
 
முன்பு ஆசையாக அவனை நெருங்கி வந்தவளை அலட்சியப்படுத்திய அவனுக்கு காலத்தின் பதிலடி தான் இந்த நிலையோ என்று இருந்தது வர்மனிற்கு.
 
 
 
தனது மனதை ஒரு முடிவுக்கு கொண்டுவர முடியாத நிலையை வெறுத்தவன், ஒரு பெருமூச்சுடன் அன்றைய வழக்கின் மீது கவனத்தை திசை திருப்பவும் அன்றாட தினம் இறக்கை கட்டி கொண்டு விஜய வர்மனுக்கு.
 
 
 
அந்த இறக்கையை வலிக்காமல் உடைத்தெறிந்தது வர்மனின் அன்னையிடமிருந்து வந்த அலைபேசி அழைப்பு.
 
 
பொதுவாக அவனின் அன்னை பெரும்பாலும் அவனின் திருமண முறிவுக்கு பிறகு அழைப்பதில்லை…  அவசியம் ஏற்பட்டால் இரண்டொரு  வார்த்தைகள் பேச வேண்டியதை   மட்டுமே அவனிடம் பேசுபவர் பின் எந்த ஒரு நல விசாரிப்புகள்  இன்றி வைத்துவிடுவார் தொலைபேசியை.
 
 
இதற்காக இங்கு நடப்பது அனைத்தும் அறியாதவராக என்றுமே  இருந்ததில்லை, விஜய வர்மனின் தாய் அருளாசினி.
 
 
 
பரசும், பொன்னரசு இருவரும் இங்கு உள்ள நிலவரம் அனைத்தையும் அவர்களின் முதலாளி அம்மாவிடம் சொல்லி விட்டு தான் மறு வேலை பார்ப்பார்கள்.
 
 
அதற்காக அவனின் தனிப்பட்ட விடயங்களில் மூக்கை நுழைத்து பார்ப்பது இல்லை அதற்கு அருளாசினி அவர்களை விட்டதும் இல்லை.
 
 
அவரின் விசாரிப்பு எல்லாம் தனது செயலின் மூலம் தாயை, அதே சமயம் தனது முட்டாள் தனதினால் அழகிய  வாழ்க்கையை இழந்து நிற்கும் மகனின் மீது உள்ள அக்கறையே அன்றி உளவு இல்லை.
 
 
அதேநேரம் தனது மனதில் உள்ள பரிவை மகனிடம் காட்ட அவருக்கு விருப்பமில்லை, தனிமையையும் அதன் கொடுமையையும் அவன் நன்கு உணரட்டும் என்பதே அவரின் எண்ணம்.
 
 
அப்பொழுதுதான் ஆண் என்ற  அகந்தையிலிருந்து  இறங்கி வருவான் என்பது அவருக்கு தெரியும்.
 
 
இது எல்லாம் வர்மனிற்கு நன்றாக தெரியும், அதோடு இப்போது வரும் அன்னையின் அழைப்பு எதற்கு என்ற யூகமும் அவனுக்கு உண்டு.
 
 
கைபேசியை எடுப்பதா வேண்டாமா என்ற அவனின் ஆராய்ச்சி முடிவதற்குள் அன்னையின் அழைப்பை முடிந்துவிட்டது.
 
 
ஒரு பெருமூச்சுடன் அந்த விநாடிகளை அவன் கடந்து செல்ல அதன்பின் அவனின் தாய் அவனுக்கு  அழைக்கவில்லை.
 
 
 
தனது வேலைகளை முடித்துவிட்டு பின் மாலைப் பொழுதில் வீட்டுக்கு வந்தவனை வரவேற்றது என்னமோ சத்தமில்லா வீட்டில் அமைதி மட்டுமே!
 
 
அவனின் செல்வங்கள் இரண்டும் வீட்டில் இருக்கும் நேரங்களில் அந்த பேரமைதிக்கு அந்த வீட்டில் துளிகூட இடம் இல்லை.
 
 
மகளின் குறும்புகளும்… மகனின் சிரிப்பொலியும்… மனைவியின் சிறு அதட்டல் என இனிமையான சப்தங்கள் அழகாக நிறைந்திருந்தது அவர்கள் வந்ததிலிருந்து வர்மனின் இல்லம்.
 
 
 
அதற்கு மாறாக இன்றைய நாள், இரண்டு வருடங்களாக அவன் அனுபவித்து வந்த யாருமில்லா இல்லத்தின் வெறுமையான அமைதி போல் இருக்க… ஒருவித பதைப்புடன் வேகமாக பிள்ளைகளின் விளையாட்டு அறையை நோக்கி சென்றவனின் விழிகளில் விழுந்தது அவனின் செல்லப் பிள்ளைகள் இரண்டு பேரும் எந்தவித சேட்டையும் செய்யாமல் படம் வரைந்து கொண்டிருந்ததுதான்.
 
 
 
மனதில் ஒரு ஆசுவாசம் பிறக்க அங்கிருந்த சோபாவில் பொத்தென்று அமர்ந்தவன்.
 
 
“தீபா” என்று மகனை அழைக்க.
 
 
“என்னப்பா?” என்று தந்தையின் அருகில் வந்து அமர்ந்தான் அவன்.
 
 
“என்ன எப்பவும் ஒரே சேட்ட, விளையாட்டு அப்படின்னு கலகலப்பா இருப்பீங்க இன்னைக்கு என்னடா இவ்வளவு அமைதி?” என்றான் புரியாத குரலில்.
 
 
“அம்மாதான் என் கிட்ட சத்தம் போட வேண்டாம் என்று சொன்னாங்க… பேஸ் டல்லா இருந்தது, அண்ட் கொஞ்சம் மூட் அவுட் போல, சோ… குட்டிமாவ கூட்டிட்டு இங்க வந்துட்டேன்” என்றால் பெரிய மனிதனைப் போல.
 
 
 
அதற்குமேல் மகனிடம் எந்த கேள்வியையும் அவன் கேட்கவில்லை.
 
 
“சரி, நீங்க விளையாடுங்க அப்பா இப்ப வந்துடறேன்” என்று எழுந்தவன் அருகில் வந்த அவனின் செல்ல மகள் தந்தையின் காதில் “அப்பா… பாட்டி  அம்மாவுக்கு ஃபோன் பண்ணாங்க…  அதுதான்  இப்படி…”  என்று வினோதா போல் டல்லாக  முகத்தை வைத்துக் கொண்டு அழகாக தந்தையிடம் ரகசியம் பேசினாள் சின்ன சிட்டு.
 
 
 
மகளின் பாவனையில் ரசிப்பான ஒரு புன்னகை முகத்தில் தோன்றினாலும் மனதுக்குள் திக் என்று தான் இருந்தது வர்மனுக்கு.
 
 
‘அன்னையின் அழைப்பை தான் ஏற்று இருக்க வேண்டுமோ? அப்படி செய்திருந்தால் இத்தகைய இக்கட்டான ஒரு சூழ்நிலையில் தவிர்த்திருக்கலாம், இனி தானாக அழைக்காமல் அவனின் அம்மா கூப்பிடுவது கனவிலும் நடக்காத ஒன்று’ என்று தோன்றியது அவன் மனதில்.
 
 
 
அவரின் ஆசை மகன் தான் பல வருடங்கள் கழித்து கிடைத்த ஒற்றைப் பிள்ளை தான் என்றாலும் கூட பாசத்திற்கு அடிமையாகி மற்ற தாய்போல் இல்லாமல் அவருக்கு என்று சில கோட்பாடுகள் இருந்தது.
 
 
‘இப்படிதான் வாழ வேண்டும்’ என்று அதை மீறிய மருமகள் மீது வருத்தமும் அதைவிட அதிகமாக மகன் மீது கோபமும் அவருக்கு உண்டு என அவனுக்கு நன்றாக தெரியும்.
 
 
அருளாசினியின் அன்பு கூட அதிகாரமாய் தான் வெளிப்படும்.
 
 
ஏதேதோ எண்ணம் மனதில் முட்டிமோத அவனின் அறைக்கு சென்று குளித்து விட்டு வந்தவன் கால்கள் அவனையும் அறியாமல் வினோதாவின் அறையை நோக்கி சென்றது.
 
 
தாளிடப்படாதா கதவு அவன் கை பட்டதும் திறந்து விட… 
 
 
அவன்  பார்வையில் பட்டது கண்களில் நீர் வழிந்தோட விழி மூடி கட்டிலில் சாய்ந்து கொண்டு இருந்த தன்னவளின் வாடிய வதனம் தான்.
 
 
 
 
நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு
நினைவினை கடந்துவிடு
நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு
நிஜங்களை துறந்துவிடு
 
கண்களை விற்றுத்தான் ஓவியமாஆஆ
வெண்ணீரில் மீன்கள் தூங்குமாஆஆ
கண்ணீரில் காதல் வாழுமா...
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!