பல்லவன் கவிதை 23

பல்லவன் கவிதை 23

பல்லவன் கவிதை 23
 
குடிசைக்குள் சென்ற மைத்ரேயியை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்த சக்கரவர்த்தியைக் கவலையாக பார்த்தான் மார்த்தாண்டன். தன் முதல் குழந்தையின் பதினெட்டு வருடங்களைத் தொலைத்து விட்ட கவலை அந்த கண்களில் அப்பட்டமாக தெரிந்தது.
 
“சக்கரவர்த்தி பெருமானே!”
 
“ஷ்… அந்த பேச்சுக்கே இங்கு இடமில்லை, என் பெண்ணோடு நான் செலவழிக்கும் சில நொடிகளையும் பறித்து விடாதே மார்த்தாண்டா.” தன்னை மிக மரியாதையாக அழைத்த இளையவனைச் சட்டென்று அடக்கினார் மகேந்திரர்.
 
“ஆகட்டும் அடிகளே, உங்கள் ஆசையை நான் கெடுக்கவில்லை.”
 
“அது போகட்டும், என் பெண் கேட்ட கேள்வியையே நானும் கேட்கட்டுமா அப்பனே?”
 
“உங்கள் பெண் அப்படி என்ன கேள்வி கேட்டாள் அடிகளே?”
 
“சக்கரவர்த்தி மேல் அப்படியென்ன திடீர் அக்கறை என்று கேட்டாளே?” குறும்பாக கேட்டார் சக்கரவர்த்தி.
 
“ஓ… அதுவா? அதற்குப் பதில் அப்போதே நான் சொல்லிவிட்டேனே!” 
 
“அதை என் பெண் நம்பி இருக்கலாம், ஆனால் நான் நம்ப மாட்டேன்.” மகேந்திர வர்மர் சொல்ல, இப்போது மார்த்தாண்டனின் முகம் மிகவும் கலங்கி போனது!
 
“மார்த்தாண்டா… எதை நினைத்து இப்படி வருந்துகிறாய்?”
 
“அடிகளே… பதினெட்டு வருடங்களுக்கு முன்பு உங்களுக்கு நிகழ்ந்த அநியாயத்தை நினைத்து வருந்துகிறேன்.”
 
“புரியவில்லையே, தெளிவாக சொல்.” மார்த்தாண்டனுக்கு எந்த அளவிற்கு உண்மைத் தெரியும் என்று அறிந்துகொள்ள பேச்சு கொடுத்தார் சக்கரவர்த்தி.
 
“உங்கள் பெண்ணை என்னை நம்பி ஒப்படைக்கும் போது அத்தை அனைத்தையும் என்னிடம் சொல்லிவிட்டார்கள்.”
 
“அத்தையா? எந்த அத்தை?”
 
“மகிழினி அத்தை.” மார்த்தாண்டன் அந்த பெயரை உச்சரித்த போது சக்கரவர்த்தியின் முகம் கனிந்து போனது.
 
“மார்த்தாண்டா… இந்த உலகத்தில் மழை இன்னும் பெய்கின்றது என்றால்… அது மகிழினி போன்ற மனிதர்களும் வாழ்வதால்தான்.” மகேந்திரரின் குரல் நெகிழ்ந்தது.
 
“நிச்சயமாக!”
 
“என் வாழ்க்கைப் புத்தகத்தின் மறக்க முடியாத பக்கங்களில் மகிழினிக்குப் பெரும் பங்கு உண்டு.”
 
“அப்படியா?”
 
“ஆமாம்…” சொல்லிவிட்டு சற்று நேரம் அமைதியாக இருந்தார் மகேந்திர வர்மர். அந்த அமைதியை மார்த்தாண்டனும் கலைக்கவில்லை.
 
“ஆனால் நீ பரிவாதனியை குறைச் சொல்லாதே, அவள் சூழ்நிலைக் கைதி.”
 
“இருந்தாலும்… உங்களிடம் மைத்ரேயியை பற்றி மறைத்தது உங்களுக்கு வருத்தமாக இல்லையா?”
 
“இருந்தது… நிறையவே இருந்தது, ஆனால் என்றைக்கு அவளைப் பற்றிய உண்மைகள் அனைத்தும் கொற்கையில் வைத்து தெரிய வந்ததோ, அதற்கு மேல் அவளைக் கோபிக்க என்னால் இயலவில்லை.”
 
“பரவாயில்லை… நீங்கள் நல்ல கணவரும்தான்!” சொல்லிவிட்டு இடிஇடியென்று சிரித்தான் மார்த்தாண்டன். அந்த சிரிப்பொலியில் குடிசையை விட்டு வெளியே வந்தாள் மைத்ரேயி.
 
“உபாத்தியாயரே! என்ன தனியாக சிரிக்கிறீர்கள்?”
 
“தனியாக இல்லை மைத்ரேயி, அடிகளோடுதான் உரையாடி கொண்டிருக்கிறேன்.”
 
“என்ன?! அடிகள் இன்னும் இங்கேதான் இருக்கிறாரா?” 
 
“ஆமாம், கோட்டைக்குள் போக வேண்டும் என்று ஆசைப்பட்டாய் அல்லவா? அதற்கு ஏதாவது வழி உண்டா என்று அடிகளைக் கேட்டு கொண்டிருந்தேன்.” மார்த்தாண்டனின் பதிலில்  மைத்ரேயியின் கண்களில் ஆசைத் தெரிந்தது. 
 
ஆனால் இதை மகேந்திர வர்மர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவர் முகமே காட்டி கொடுத்தது. திரியைக் கொளுத்தி போட்டுவிட்டு எதுவும் தெரியாத அப்பாவி போல நின்றிருந்தான் மார்த்தாண்டன்.
 
“அடிகளே, கோட்டைக்குள் போக உங்களுக்கு ஏதாவது வழி தெரியுமா?” ஆசையோடு கேட்டாள் மைத்ரேயி.
 
“எல்லா கோட்டைகளையும் போல சாதாரண கோட்டை அது, அதைப் பார்க்க ஏன் இத்தனை ஆவல் அம்மா?” ஆவலோடு கேட்டார் சக்கரவர்த்தி. இப்போது மைத்ரேயியின் கண்கள் கலங்கின.
 
“உங்களுக்கு வேண்டுமானால் அது சாதாரண கோட்டையாக இருக்கலாம் அடிகளே, ஆனால் என்னைப் பொறுத்தவரை அது சாதாரண கோட்டை அல்ல!”
 
“ஓஹோ! அப்படி என்ன அதிசயம் அதில் இருக்கிறது?”
 
“என்ன இப்படி சொல்லி வீட்டீர்கள் அடிகளே! நகரேஷு காஞ்சி என்று எல்லோராலும் போற்றி பாடப்பெற்ற காஞ்சி மாநகரின் கோட்டையை யார்தான் பார்க்க ஆசைப்பட மாட்டார்கள்?” மைத்ரேயி சட்டென்று தன்னைச் சமாளித்து கொள்ள, இப்போது மகேந்திர வர்மர் மார்த்தாண்டனை திரும்பி பார்த்தார். இளையவன் முகத்திலும் புன்னகை அரும்பியது.
 
“என் பசியைத் தீர்த்தவள் அல்லவா அம்மா நீ? நீ கேட்டு நான் இல்லையென்று சொல்வேனா?”
 
“அடிகளே! உண்மையாகத்தான் சொல்கிறீர்களா? இந்த போர் காலத்தில் கோட்டைக்குள் செல்வது முடியாத காரியம் அல்லவா?”
 
“முடியும் அம்மா, என் தலையைக் கொடுத்தாவது உன் ஆசையை நான் நிறைவேற்றுகிறேன்… ஆனால் ஒரு நிபந்தனை.”
 
“என்ன அடிகளே?”
 
“உனக்கு மட்டுந்தான் அனுமதி உண்டு.” சக்கரவர்த்தி சொல்லி முடிக்க மார்த்தாண்டன் சத்தமாக சிரித்தான். மைத்ரேயி தன் உபாத்தியாயரை சங்கடமாக பார்த்தாள்.
 
“இது முன்னமே தெரிந்திருந்தால் அடிகளாரின் பசியை நான் போக்கி இருப்பேனே! பரவாயில்லை மைத்ரேயி, நீ போய் வா… கோட்டையைப் பார்க்க எனக்கும் ஒரு காலம் வரும்.” போரில் வெற்றி பெற்ற பின்பு கோட்டையைக் கைப்பற்றுவதைப் பற்றித்தான் மார்த்தாண்டன் கூறுகிறான் என்று புரிந்த போது மகேந்திர வர்மரின் முகத்தில் இறுமாப்பான ஒரு புன்னகைத் தோன்றியது.
 
“அது என்றைக்கும் நடக்காது அப்பனே!” கம்பீரமாக சொன்னவர் மைத்ரேயியிடம் திரும்பினார்.
 
“நாளை நான் வந்து உன்னை அழைத்து செல்கிறேன் அம்மா, என்னை நம்பி என்னோடு நீ தனியாக வருவாய் அல்லவா?” இப்போது மைத்ரேயி தன் உபாத்தியாயரைத் திரும்பி பார்க்க அவன் ‘போ’ என்பது போல தலையை ஆட்டினான். 
 
அனுமதி கொடுத்துவிட்டு மார்த்தாண்டன் வேண்டுமென்றே தன் மீசையை முறுக்கிக்கொண்டு மகேந்திர வர்மரைப் பார்த்து இளநகைப் புரிந்தான்.
 
“எல்லாம் என் நேரம் அப்பனே!” வாய்க்குள் முணுமுணுத்தார் சக்கரவர்த்தி.
 
“நான் உங்களோடு வருகிறேன் அடிகளே! நாளை உங்கள் வருகைக்காக ஆவலோடு காத்திருப்பேன்!”
 
“என்னால் இயன்ற ஏற்பாடுகளைச் செய்துவிட்டு கண்டிப்பாக வருவேன் அம்மா.” சொல்லிவிட்டு பெண்ணின் தலையை லேசாக வருடி கொடுத்தவர் அங்கிருந்து போய் விட்டார்.
 
***
 
அந்தப்புரத்திற்குள் நுழைந்த மகேந்திர பல்லவரின் நடையில் ஒரு துள்ளல் தெரிந்தது. என்றுமில்லாத தேஜஸ் அவர் முகத்தை அலங்கரிக்க தனது பட்டமகிஷியின் மாளிகைக்குள் நுழைந்தார் சக்கரவர்த்தி.
 
“வாருங்கள் ஸ்வாமி!” ஆவலே வடிவாக அவரை வரவேற்றார் புவன மகாதேவி. முகம் மலர்ந்து மகிழ்ச்சியாக புன்னகைத்தார் மகேந்திர வர்மர்.
 
“எதிரிப்படைக் கோட்டையைச் சூழ்ந்து நிற்கிறது, ஆனால் சக்கரவர்த்தி முகம் மலர்ந்து பிரகாசிக்கிறதே!” மனைவியின் கேலியில் மனம்விட்டு சிரித்தார் பல்லவேந்திரர்.
 
“தேவி! இன்று உன்னிடம் சொல்லாமல் ஒரு காரியம் செய்தேன்.”
 
“ஓ… தங்கள் மகிழ்ச்சிக்கும் அந்த காரியத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா ஸ்வாமி?”
 
“ஆமாம்.”
 
“அப்படியென்றால் பாதகமில்லை, உங்களுக்கு மகிழ்ச்சி தரும் எந்த காரியமானாலும் அதை நீங்கள் தாராளமாக செய்யலாம்.” கனிவோடும் காதலோடும் சொன்ன மனைவியின் தோளைப் பற்றி தன் எதிரில் நிறுத்தினார் மகேந்திரர்.
 
“புவனா!” அழைத்த சக்கரவர்த்தியின் குரல் குழைந்து போய் கிடந்தது. தான் மணம் முடித்து இந்த அரண்மனைக்கு வந்த இதுகால வரையில் தன் கணவர் தன்னைப் பெயர் சொல்லி அழைத்த தருணங்கள் சொற்பம் என்பதால் அவரை ஆர்வமாக பார்த்தார் புவன மகாதேவி.
 
“ஸ்வாமி, தாங்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பது போல தெரிகிறதே?!”
 
“ஆமாம் தேவி, இன்றைக்கு நான் நம் பெண்ணைப் பார்த்தேன்!”
 
“என்ன? மைத்ரேயியை பார்த்தீர்களா?”
 
“ஆமாம்!”
 
“ஸ்வாமி! இது எப்போது? எப்படி? கோட்டைக்கு வெளியே பகைவர் சூழ்ந்து நிற்கும் போது நீங்கள் இப்படியொரு காரியத்தில் இறங்கலாமா?”
 
“நீ இப்படி பதறுவாய் என்று தெரிந்துதான் உன்னிடம் சொல்லாமல் போனேன்.” 
 
“அதுசரி, மைத்ரேயி எப்படி இருக்கிறாள்? உங்களிடம் நன்றாக பேசினாளா? நீங்கள் யாரென்று தெரிந்து கொண்டாளா?”
 
“பொறு பொறு, அடடா! இத்தனைக் கேள்விகளைக் கேட்டால் நான் எப்படி பதில் சொல்வது?” எந்த கள்ளம் கபடமும் கோப தாபமும் இல்லாமல் ஆசையோடு கேள்வி கேட்ட தன் பட்டமகிஷியைத் தன்னோடு அணைத்து கொண்டார் சக்கரவர்த்தி.
 
இதுவரை உற்சாகமாக பேசியவர் தான் இத்தனைக் கேள்வி கேட்ட பிறகு அமைதியாக நின்றிருக்கவும் அவரை அண்ணார்ந்து பார்த்தார் பெண்.
 
“ஸ்வாமி, ஏன் சட்டென்று அமைதியாகிவிட்டீர்கள்?”
 
“புவனா… நான் உன்னைக் காயப்படுத்துகின்றேனா?” சக்கரவர்த்தி கேட்கவும் சட்டென்று அவரிடமிருந்து விலகினார் புவன மகாதேவி.
 
“ஸ்வாமி! இது என்ன பேச்சு?” 
 
“………….” 
 
“உங்களுக்கு எந்த குற்ற உணர்ச்சியும் தேவையில்லை ஸ்வாமி, நீங்கள் அன்றைக்கும் இன்றைக்கும் எதை என்னிடம் மறைத்தீர்கள்? எதையுமே இல்லை, உங்கள் மனது எனக்குத் தெரியும், அதிலிருந்த ஆசை, வேதனை அனைத்தையும் நான் அறிவேன், அவை எல்லாவற்றையும் அறிந்த பிறகும் நீங்கள் தெளிவாக சொல்லிய பிறகும் உங்களைப் பதியாக அடைய ஆசைப்பட்டது நான்தானே? இதில் நீங்கள் எங்கே என்ன தவறு செய்தீர்கள் ஸ்வாமி?”
 
“புவனா…”
 
“போதும் நம் பழங்கதை, என் பெண்ணைப் பற்றி நீங்கள் இன்னும் எதுவுமே சொல்லவில்லையே!” இப்போது மீண்டும் மகேந்திர வர்மரின் முகம் மலர்ந்து போனது.
 
“புவனா, நீ இந்த அரண்மனைக்கு முதல் முதலாக வந்த போது அமராவை பார்த்திருக்கிறாய் அல்லவா?”
 
“ஆமாம்!”
 
“இப்போது அதே அமராவை மீண்டும் பார்க்க வேண்டும் என்றால் மைத்ரேயியை பார்.”
 
“அப்படியா? ஆச்சரியமாக இருக்கிறதே!”
 
“நான் பார்த்த நொடி அசந்து போய் நின்று விட்டேன்.”
 
“உண்மையாகத்தான் சொல்கிறீர்களா பிரபு?”
 
“ஆமாம் தேவி, அச்சு அசல் நம் அமராவை போலவே இருக்கிறாள் மைத்ரேயி!”
 
“குழந்தையோடு பேசினீர்களா?”
 
“பேசினேனா! இது என்ன இப்படி கேட்டுவிட்டாய் புவனா? பேசியது மட்டுமல்ல, என் பெண் பரிமாற வயிராற உண்டுவிட்டு வந்திருக்கிறேன்!”
 
“என்ன சொல்கிறீர்கள் ஸ்வாமி?! அதிசயமாக இருக்கிறதே?! குழந்தை உங்களோடு அத்தனை ஸ்நேகமாக நடந்து கொண்டாளா?” இதை மகாராணி கேட்ட போது பல்லவேந்திரரின் முகம் வாடிப்போனது. 
 
“ஸ்வாமி! ஏன் உங்கள் முகத்தில் வாட்டம் தெரிகிறது? நான் ஏதும் தவறாக கேட்டுவிட்டேனா?”
 
“இல்லை புவனா, நான் இன்றைக்கு மாறுவேடத்தில்தான் மைத்ரேயியை பார்க்க போயிருந்தேன்.”
 
“ஓ… அப்படியென்றால்…”
 
“மைத்ரேயிக்கு நான் யாரென்று தெரியாது.”
 
“……………”
 
“ஆனால் என்னைப் பார்த்ததும் குழந்தை ஆவலாக வரவேற்றாள், நான் பசிக்கிறது என்று சொன்னதும் சட்டென்று உணவு பரிமாறினாள்!” படபடப்புடன் சக்கரவர்த்தி சொல்ல புவன மகாதேவி லேசாக புன்முறுவல் பூத்தார்.
 
பார் போற்றும் பல்லவ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி பிச்சைக்காரர் வேஷத்தில் போய் தன் மகளைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறார் என்று அவருக்குச் சொல்லாமலேயே புரிந்தது.
 
“நீ நினைப்பது சரிதான் தேவி, எனக்கு வேறு வழி இருக்கவில்லை, இத்தனை அருகில் நம் பெண் இருக்கிறாள் என்று தெரிந்த பிறகு என்னால் அவளைப் பாராமல் இருக்க முடியவில்லை.”
 
“எனக்கு அந்த பாக்கியம் கூட கிடைக்கவில்லையே ஸ்வாமி!”
 
“கவலைப்படாதே, மைத்ரேயியை நான் கோட்டைக்குள் அழைத்து வருகிறேன்.”
 
“என்ன சொல்கிறீர்கள்? மைத்ரேயி கோட்டைக்கு வருகிறாளா? இது சாத்தியம்தானா?” 
 
“ஆமாம் தேவி, குழந்தைக்கு இந்த கோட்டையைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையாம், அதை என்னிடம் சொன்னாள், நானும் அழைத்துக்கொண்டு போகிறேன் என்று வாக்குக் கொடுத்துவிட்டேன்.”
 
“நல்லது, எப்போது அழைத்துக்கொண்டு வருகிறீர்கள்?”
 
“நாளைக்கே அழைத்துக்கொண்டு வருகிறேன், அழைத்து வந்து உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன், சரிதானா?”
 
“அப்படியே செய்யுங்கள் ஸ்வாமி, ஆனால்…” தன் பட்டமகிஷி பேச்சை அரைகுறையாக நிறுத்த அவரைக் கேள்வியாக பார்த்தார் சக்கரவர்த்தி.
 
“என்ன தேவி? எதைக் கேட்க நினைத்து பாதியிலேயே நிறுத்திவிட்டாய்?”
 
“மகளின் ஆசையை நிறைவேற்ற நினைக்கிறீர்கள்… அவள் தாயின் ஆசையை…” இப்போதும் பேச்சைப் பாதியிலேயே நிறுத்தினார் மகாராணி.
 
“தாயின் ஆசையா? நீ யாரைச் சொல்கிறாய்? பரிவாதனியையா?”
 
“ஆமாம்.”
 
“பரிவாதனிக்கு என்ன ஆசை?!”
 
“நான் போரைப் பற்றி சொல்கிறேன்.”
 
“போருக்கும் பரிவாதனிக்கும் என்ன சம்பந்தம் தேவி?”
 
“இந்த போரைத் தடுக்கத்தானே அவர்கள் இத்தனைத் தியாகமும் செய்தார்கள்?”
 
“எத்தனைத் தியாகம் செய்து என்ன பலன்? கடைசியாக அவள் எது நடக்கக்கூடாது என்று நினைத்தாளோ அதுதானே நடக்கிறது?” கோபமாக சொன்னார் சக்கரவர்த்தி.
 
“ஒரு பெண்ணின் அளப்பரிய தியாகத்தை அத்தனைச் சுலபமாக எடைப் போடாதீர்கள் ஸ்வாமி.”
 
“அந்த தியாகத்தால் யாருக்கு என்ன லாபம் தேவி? அன்றைக்கு அவளால் பல்லவ வீரர்களின் இரத்தம் சிந்தக்கூடாது என்று நினைத்தாள், ஆனால் இன்றைக்கு அதே இரத்தம் சிந்தத்தானே போகிறது?”
 
“நீங்கள் மனது வைத்தால் அதைத் தடுக்கலாம்.” நிதானமாக பேசியது பெண்.
 
“நீ என்ன சொல்கிறாய்?”
 
“அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் அவர்கள் வேண்டுவது உங்கள் ஒருவர் நலன் ஒன்றை மட்டும்தான்.”
 
“அதற்காக?”
 
“அவர்கள் ஆசையை நிறைவேற்றுங்கள் ஸ்வாமி.”
 
“கோட்டைக்கு எதிரே எதிரி சைனியம் தண்டு இறங்கி இருக்கிறது, இப்போது என்னை என்ன செய்ய சொல்கிறாய் தேவி?” 
 
“இந்த போரை நீங்கள் நினைத்தால் தவிர்க்கலாம் ஸ்வாமி.”
 
“என்ன? போரைத் தவிர்ப்பதா? என்னை என்ன கோழை என்று எண்ணிக்கொண்டாயா?”
 
“ஒருக்காலும் இல்லை, போர் எக்காரணத்திற்காக நடந்தாலும் உங்களுக்கு எதிரியாக நிற்பவர் அவர்களின் அண்ணன்.”
 
“ஆமாம், அந்த மூடன் புலிகேசிதான்.”
 
“ராஜ்ஜிய விஸ்தரிப்பிற்காக போர் நடந்தாலும் உங்களை எதிர்ப்பது அவர்களின் சகோதரர் என்பது அவர்களைப் பாதிக்கும் அல்லவா? புண்படுத்தும் அல்லவா? தன் சகோதரனால் பல்லவ ராஜ்ஜியத்திற்கும் உங்களுக்கும் தீங்கு என்பது அவர்களுக்கு வலியைக் கொடுக்கும் அல்லவா? அந்த வலியை அவர்களுக்குக் கொடுக்காதீர்கள் ஸ்வாமி!”
 
“அதற்காக? வாசல் தேடி வந்து நிற்கும் எதிரியைக் கையைக் கட்டிக்கொண்டு பார்க்க சொல்கிறாயா?”
 
“உங்களுக்காகவென்றே உயிர் வாழும் ஒரு ஜீவனுக்காக கொஞ்சம் பொறுமையைக் கையாள சொல்கிறேன் ஸ்வாமி.”
 
“இது எத்தனைப் பெரிய இழுக்கை எனக்குக் கொண்டு வந்து சேர்க்கும் தெரியுமா? காஞ்சி கோட்டையை எதிரிகள் சூழ்ந்தார்கள், அவர்களை எதிர்த்து போரிடாமல் மகேந்திர பல்லவன் கோட்டைக்குள் ஒளிந்து கொண்டான் என்று மக்கள் என்னைப் பழிப்பார்கள்.”
 
“நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை ஸ்வாமி, எதற்காக ஒரு பெண் உங்களை, உங்கள் உன்னதமான காதலை, இவ்வளவு மகோன்னதமான வாழ்க்கையைத் தியாகம் செய்தாளோ…‌ அந்த தியாகம் வீண் போக கூடாது.”
 
“அதற்கு இப்போது என்னை என்ன செய்ய சொல்கிறாய்?” கோபமாக வந்தது மகேந்திரரின் வார்த்தைகள்.
 
“போரை நீங்களாக ஆரம்பிக்க கூடாது.”
 
“சரி, நானாக போரை ஆரம்பிக்கவில்லை என்றே வைத்துக்கொள்வோம், எதிரி சும்மா கையைக் கட்டிக்கொண்டு நிற்பான் என்றா நினைக்கிறாய்?”
 
“இல்லை… நிச்சயம் தாக்குவார்கள், அவர்களை முறையடிப்பதோடு நிறுத்திவிடுங்கள், போரை மேற்கொண்டு நீங்கள் நடத்த வேண்டாம்.”
 
“நான் போரை நடத்தாவிட்டால் மேற்கொண்டு என்ன நடக்கும்?” சக்கரவர்த்தி குழப்பமாக கேட்க, என்ன நடக்கும் என்று விவரித்தார் புவன மகாதேவி. 
 
அந்த திட்டத்தைக் கேட்ட சக்கரவர்த்தி அதிசயித்து போனார். அவர் முகத்தில் சிந்தனை ரேகைகள் துளிர்த்தன. ரத்தமின்றி யுத்தமின்றி எதிரியைச் சமாளிக்கும் திட்டத்தைச் சொன்னார் மகாராணி!
 
***
வராக கொடி வானளாவ பறந்த அந்த கூடாரத்தில் பதட்டம் குடிகொண்டிருந்தது. அங்கே பட்டு கம்பளங்களில் அமர்ந்திருந்த மந்திரி பிரதானிகள் எதுவும் பேசாமல் அமைதி காத்தார்கள்.
 
அதற்குக் காரணமும் இருக்கத்தான் செய்தது. படைகள் வந்து காஞ்சி கோட்டைக்கு எதிரில் கூடாரமடித்து இன்றோடு பத்து நாட்கள் கடந்துவிட்டன.
 
இரண்டு முறை வாதாபி வீரர்கள் கோட்டையைத் தாக்க முயற்சியும் செய்தார்கள். ஆனால் அந்த முயற்சிகள் முறையடிக்க பட்டனவேயொழிய பல்லவ வீரர்கள் போரில் இறங்கவில்லை.
 
சாளுக்கிய சக்கரவர்த்தி மிகவும் கோபத்தில் இருந்தார். மகேந்திர வர்மரின் திட்டம் என்னவென்று அவருக்குக் கிஞ்சித்தும் புரியவில்லை.
 
கூடாரத்தில் அங்கும் இங்கும் நடந்தபடி இருந்த சத்யாச்ரயரின் நடையே அவரின் கோபத்தின் அளவைச் சொன்னது.
 
“இந்த மகேந்திர பல்லவர் மனதில் என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறார்? கோட்டையை மூடி வைத்துக்கொண்டு இன்னும் எத்தனை நாட்களுக்கு அடைகாக்க போகிறாராம்?”
 
“நம் படைபலத்தைப் பார்த்து பயந்து போனாரோ என்னவோ?” படைத்தலைவர் ஒருவர் கூற அங்கிருந்த அனைவரும் சிரித்தார்கள்.
 
“எதிரியை அத்தனை எளிதாக நினைக்க வேண்டாம் சத்யாச்ரயா.” மார்த்தாண்டன் சொல்ல அனைவரும் சட்டென்று அமைதியாகிவிட்டார்கள்.
 
“மார்த்தாண்டன் சொல்வதும் ஒருவகையில் சரிதான், ஆனால் கோட்டைக்குள் ஒளிந்து கொண்டு இந்த மகேந்திர வர்மர் அப்படி என்னதான் செய்கிறார்? போர் செய்யும் எண்ணமே அவருக்கு இல்லையா?”
 
“சத்யாச்ரயா, மகேந்திர பல்லவரின் நிதானத்தைப் பார்க்கும்போது அவர் வேறு ஏதோ திட்டத்திற்கு அடிப்போடுவது போல எனக்குத் தெரிகிறது.”
 
“என்ன?! வேறு திட்டமா?”
 
“ஆமாம் சத்யாச்ரயா.”
 
“அப்படி என்ன பெரிய திட்டமாக இருக்க முடியும் மார்த்தாண்டா?”
 
“அதுதான் எனக்கும் புரியவில்லை, ஆனால் கூடிய சீக்கிரமே அதை நமக்கு மகேந்திர வர்மர் தெரியப்படுத்துவார் என்று நான் நினைக்கிறேன்.” 
 
“அப்படியா சொல்கிறாய்?” புலிகேசி சக்கரவர்த்தி இப்போது தனது நெற்றியைக் கையால் தேய்த்து கொண்டார்.
 
“ஒருவேளை நம்மை எதிர்க்க போதிய படைபலம் இல்லாததால் முற்றுகை நீடிக்கட்டும் என்று நினைக்கிறாரோ?” இன்னொரு படைத்தலைவர் சொல்ல புலிகேசி சக்கரவர்த்தி இப்போது மார்த்தாண்டனை பார்த்தார்.
 
“இதற்கு என்ன சொல்கிறாய் மார்த்தாண்டா?”
 
“ஒருவேளை அப்படியும் இருக்கலாம் சத்யாச்ரயா, காரணம் எதுவாக இருந்த போதிலும் கோட்டைக் கதவைத் திறக்கும் எண்ணம் அவர்களுக்கு‌ இல்லை என்றே தெரிகிறது.”
 
“அதன் மர்மம்தான் எனக்கும் புரியவில்லை! கோட்டைக்குள் காவல் பலமாக இருப்பதைக் கோட்டைச் சுவரில் சதா இருக்கும் வீரர்களை வைத்தே புரிந்துகொள்ள முடிகிறது.”
 
“ஆமாம் சத்யாச்ரயா, கோட்டைக்குள்ளிருந்து வரும் யானைகளின் பிளிறலும் குதிரைகளின் கனைப்பும் உள்ளே பெரும் படைகள் இருப்பதைத் தெள்ள தெளிவாக காட்டுகிறது.”
 
“அதுமட்டுமல்ல சத்யாச்ரயா, காலாட்படையின் அணிவகுப்பு சத்தமும் பலமாகவே கேட்கிறது.” ஆளுக்கு ஒன்றாக பல கதைகளைப் படைத்தலைவர்கள் சொல்ல புலிகேசி மகாராஜா தலையைப் பிடித்து கொள்ளாத குறையாக தனது தந்த சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டார்.
 
“இத்தனையும் இருந்தும் மகேந்திர வர்மர் எதற்காக போரைத் தவிர்க்கிறார்?” அவர் உறுமலாக கேட்டு கொண்டிருக்கும் போதே காவலாளிகள் இருவர் ஒரு மனிதனை இழுத்துக்கொண்டு வந்தார்கள்.
 
இழுத்து வரப்பட்ட மனிதர் சற்று வயதான கிழவர் போல தெரியவே சக்கரவர்த்தி அவரைக் கூர்ந்து பார்த்தார். கிழவரை அப்போதுதான் கவனித்த மார்த்தாண்டனுக்கும் தூக்கிவாரி போட்டது!
 
“யாரிவர்? எதற்காக இவரை இங்கே இப்படி இழுத்து வருகிறீர்கள்?” சக்கரவர்த்தியின் கோப குரலில் காவலாளிகள் மட்டுமல்ல, இழுத்து வரப்பட்ட சேந்தன் கூட நடுங்கினார்.
 
“சத்யாச்ரயா, இவன் பல்லவ ஒற்றன் போல தெரிகிறது.”
 
“என்ன?! இழுத்து வாருங்கள் அவனை!” சக்கரவர்த்தியின் ஆணைப் பிறக்கவே அதுவரை கூடாரத்தின் வாசலில் நின்ற காவலாளிகள் அந்த மனிதனைச் சக்கரவர்த்தியிடம் இழுத்து சென்றார்கள்.
 
அந்த கிழட்டு மனிதரை ஊன்றி கவனித்த புலிகேசி சக்கரவர்த்தியின் கண்கள் லேசாக இடுங்கின. கொண்டு வரப்பட்டிருந்த மனிதரின் முகம் அவருக்கு வெகு பரிட்சயமாக இருந்தது.
 
“நீர்…” பேச்சை முடிக்காமல் பாதியிலேயே நிறுத்தினார் சக்கரவர்த்தி.
 
“சத்யாச்ரயா… என்னை உங்களுக்கு ஞாபகம் இல்லையா?” தடுமாறியபடி கூறினார் சேந்தன்.
 
“முகம் எங்கேயோ பார்த்த மாதிரித்தான் இருக்கிறது… ஆனால் எங்கே என்றுதான் ஞாபகம் வரமாட்டேன் என்கிறது! யார் நீ?” உக்கிரமாக வந்தது சாளுக்கிய மன்னனின் குரல்.
 
“நான் உங்கள் உபாத்தியாயன்… வாதாபி அரண்மனையில் உங்களுக்கும் உங்கள் சகோதரருக்கும் பாடம் சொல்லி தந்திருக்கிறேன்.” தட்டுத்தடுமாறினார் உபாத்தியாயர்.
 
“ஆஹா! ஆமாம் ஆமாம்… இப்போது ஞாபகத்துக்கு வருகிறது! எனது பால்ய வயது உபாத்தி…” குதூகலமாக பேசிக்கொண்டு போன மன்னரின் குரல் சட்டென்று பாதியிலேயே நின்று போனது.
 
இப்போது மார்த்தாண்டனுக்கு பீதி கிளம்பியது. உபாத்தியாயரை அவன் கொற்கையிலேயே பார்த்திருந்ததால் அது மைத்ரேயியின் தாத்தா என்று அவன் எளிதாக அடையாளம் கண்டு கொண்டான்.
 
ஆனால் இந்த மனிதர் இப்போது எதற்காக இங்கே வந்து சாளுக்கிய வீரர்களிடம் அகப்பட்டிருக்கிறார்?
 
அதுதான் போதாதென்று தனது பூர்வீகத்தை எதற்காக இப்போது சத்யாச்ரயரிடம் அட்சரம் பிசகாமல் ஒப்புவிக்கிறார்?! 
 
மார்த்தாண்டனுக்கு நடப்பது எல்லாமே விசித்திரமாக இருந்தது. போர் மேகம் சூழ்ந்திருக்கும் இந்த காலத்தில் இந்த கிழவர் கோட்டையை விட்டு வெளியேறுவது என்பது இயலாத காரியம். 
 
அப்படி இருக்கும் போது இது சாத்தியமாகிறது என்றால்… இதன் பின்னால் ஏதும் சூழ்ச்சி இருக்கிறதா?!
 
இல்லாவிட்டால் இவை அனைத்திற்கும் சூத்திரதாரி மகேந்திர வர்மரா?! எதை மனதில் கொண்டு இப்போது இந்த கிழவரை இங்கே அனுப்பி வைத்திருக்கிறார் மகேந்திர வர்மர்?!
 
சிந்தனைகள் நாலாபுறமும் ஓட அமைதியாக நின்றிருந்தான் மார்த்தாண்டன்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!