பல்லவன் கவிதை
பல்லவன் கவிதை
பல்லவன் கவிதை 24
திகைத்து நின்றிருந்த தங்கள் சக்கரவர்த்தியைப் பார்த்து கூடாரத்தில் இருந்த
அத்தனைப் பேரும் அமைதி காத்தார்கள். மார்த்தாண்டனும் என்ன வில்லங்கம் வரப்போகிறதோ என்று வாளாவிருந்தான்.
“உபாத்தியாயரே! உண்மையைச் சொல்லும்! இத்தனை நாளும் இந்த பல்லவ ராஜ்ஜியத்திலா நீர் இருந்தீர்?” மன்னரின் கர்ஜனையில் லேசாக நடுங்கினார் சேந்தன்.
“ஆமாம் சத்யாச்ரயா.” அந்த கிழவர் தான் இதுவரைக் காலமும் காஞ்சியில் இருந்ததை மறுப்பார் என்று சக்கரவர்த்தி எதிர்பார்த்திருக்க, சட்டென்று அவர் உண்மையை ஒப்புக்கொண்டது அனைவருக்கும் வியப்பாகவே இருந்தது.
“ஏன்? வாதாபி அரண்மனை எப்போது உம்மை விரட்டி அடித்தது?”
“வாதாபி விரட்டவில்லை சத்யாச்ரயா! காஞ்சி துணைக்கழைத்தது.”
“என்ன? காஞ்சி துணைக்கழைத்ததா? உம்மையா?”
“ஆமாம்.”
“யார் துணைக்கு?” புலிகேசி மன்னரின் குரல் கிறீச்சிட்டது. இப்போது
உபாத்தியாயர் அமைதி காத்தார்.
“உபாத்தியாயரே! எனது பொறுமையைச் சோதிக்க வேண்டாம், நீர் உண்மையைச் சொல்லும் பட்சத்தில் உமக்கு எந்த தீங்கும் வராமல் மீண்டும் உம்மை வாதாபிக்கே அனுப்பி வைக்கிறேன்!”
“சத்யாச்ரயா… சிம்ம விஷ்ணு மகாராஜா வாதாபிக்கு வந்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா?”
“ஹா… ஹா…” பெருங்குரலெடுத்து இப்போது சிரித்தார் சக்கரவர்த்தி. கூடியிருந்த அனைவருக்கும் மயிர் கூச்செறிய, நடக்கும் நாடகத்தை ஒரு நிதானத்துடன் பார்த்தபடி நின்றிருந்தான் மார்த்தாண்டன்.
“அந்த நாளை மறக்க முடியுமா உபாத்தியாயரே! எனக்கும் என் தம்பிகளுக்கும் விமோசனம் கிடைத்த நாளல்லவா அது! அவர் வருகை மூலம் எங்களுக்கு எத்தனை அழகான வாய்ப்பை அவரே அறியாமல் ஏற்படுத்தி கொடுத்தார். எங்கள் விமோசனத்தைக் கொண்டு வந்த தேவ தூதர் என்பதால்தான் அந்த சிம்ம விஷ்ணு மகாராஜாவை நானும் என் தம்பிகளும் எந்த தீங்கும் செய்யாமல் விட்டு வைத்தோம்!” சொல்லிவிட்டு இப்போது மீண்டும் கடகடவென்று சிரித்தார் சக்கரவர்த்தி.
அந்த கொடூரமான சிரிப்பைச் சிறு அச்சத்தோடு பார்த்தார் சேந்தன்.
“சிம்ம விஷ்ணு மகாராஜா காஞ்சிக்குத் திரும்பும் போது அவரோடு என்னையும் அழைத்துக்கொண்டு வந்தார்.”
“ஏன்? உம்மிடம் பாடம் கற்கவா?” எகத்தாளமாக வந்து வீழ்ந்தது கேள்வி.
“அது… அது…”
“எதை மென்று முழுங்குகிறீர்? உண்மையைச் சொல்லும்!”
“உங்கள் சிற்றப்பாவின்…”
“அந்த பாழாய் போன சிற்றப்பனுக்கு என்ன வந்தது? அவன் கதைதான் அன்றோடு
முடிந்து போனதே?”
“அவர் கதை முடிந்து போனது… ஆனால்…”
“ஆனால் என்ன?!” சீறினார் சக்கரவர்த்தி.
“அவர் குழந்தை…”
“என்ன சொல்கிறீர் உபாத்தியாயரே?! அந்த குழந்தைதான் அப்போதே இறந்து போனதே?!”
“இல்லை மகாராஜா!” உபாத்தியாயர் சொன்னதுதான் தாமதம், புலிகேசி சக்கரவர்த்தி பாய்ந்து சேந்தனின் அருகில் வந்தார்.
“என்ன சொன்னீர்?! நீர் இப்போது என்ன சொன்னீர் உபாத்தியாயரே?! திரும்ப சொல்லும்!”
“அந்த குழந்தை இன்னும் உயிரோடுதான் இருக்கிறது மகாராஜா!”
“இல்லை! வாய்ப்பே இல்லை!” கோபத்தில் சீறிய சக்கரவர்த்தி சட்டென்று போய் தனது சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டார். அவர் உலகம் சுழல்வது போல இருந்தது. சிந்தை பழைய நாட்களை நோக்கி வேகமாக பறந்து கணக்கு வழக்குகளில் இறங்கியது.
“உபாத்தியாயரே! நீர் சொன்னது நடப்பதற்கு வாய்ப்பே இல்லையே! காஞ்சி வரை என் ஒற்றர்கள் வந்து அந்த குழந்தை இங்கே இல்லை என்று உறுதிப்படுத்தினார்களே?!”
“உங்கள் ஒற்றர்கள் நிச்சயம் காஞ்சிக்கு வருவார்கள் என்று முன்னமே சிம்ம விஷ்ணு மகாராஜாவிற்குத் தெரிந்திருந்தது, அதனால் குழந்தையை மறைத்து வைத்து வளர்த்தார்கள்.”
“ஓஹோ!” உறுமலாக வந்த வார்த்தைக்குப் பிறகு புலிகேசி மன்னர் வெகுநேரம் பேசாமல் சிந்தனையில் ஆழ்ந்தார். அவர் கண்கள் இரண்டும் இப்போது செந்தணல் போல பளிச்சிட்டன.
தன் இரையைத் தேடும் புலியின் கண்கள் போல ஜொலித்த அந்த கண்களை மார்த்தாண்டன் கூட பார்க்க சிறிது அச்சப்பட்டான்.
“உபாத்தியாயரே! இந்த பழங்கதை எல்லாம் மகேந்திர பல்லவருக்கு தெரியுமா?”
“தெரியும் மன்னவா.”
“என்ன? தெரிந்துமா இத்தனைக் காலமும் வாளாவிருந்தான்?! நம்பமுடியவில்லையே!”
புலிகேசி மன்னரால் நம்ப முடியாமல் போன விஷயம் இப்போது மார்த்தாண்டனுக்கு லேசாக பிடிபட்டது. கொஞ்சம் நிதானமாக சிந்தித்திருந்தால் சத்யாச்ரயருக்கும் அது புரிந்திருக்கும். ஆனால் உணர்ச்சிகளோடு போராடிக்கொண்டிருந்த புலிகேசி மன்னர் அதைக் கவனிக்க தவறியிருந்தார்.
யுத்த மேகம் மூண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் கோட்டையை விட்டு உபாத்தியாயர் எப்படி வெளியேறினார்? அப்படியே வெளியேறி இருந்தாலும், சரியாக வாதாபி வீரர்களின் கையில் அவர் எப்படி அகப்பட்டார்?
அகப்பட்டவர் அத்தனை உண்மைகளையும் மறைக்க சிறிதும் பிரயத்தனப்படாமல் புலிகேசி மன்னர் முன்பு ஒப்புக்கொள்வதன் ரகசியம் என்ன?
மார்த்தாண்டனின் சிந்தனை இப்போது மகேந்திர வர்மரையே இலக்காக வைத்து பாய்ந்தது. இந்த சூழ்ச்சிக்குப் பின்னால் அந்த விசித்திர சித்தரே இருக்க வேண்டும் என்பதில் அவனுக்கு ஐயமில்லை! ஆனால் எதற்காக இப்போது தனது முதல் மனைவியின் ரகசியத்தை விசித்திர சித்தர் வெளியிடுகிறார் என்பதுதான் இளையவனுக்குப் புரியவில்லை.
“மார்த்தாண்டா! உடனேயே உன் தந்தைக்கு ஓர் ஓலை அனுப்பு.”
“ஆகட்டும் சத்யாச்ரயா.”
“ஓலைக் கிடைத்த உடனேயே எந்த தாமதமும் இன்றி காஞ்சியை நோக்கி புறப்பட்டு வரச்சொல்.”
“அப்படியே எழுதுகிறேன் சத்யாச்ரயா.”
“எதிரி அழிந்தான் என்று நினைத்திருந்தேன், ஆனால் எச்சத்தைக் கட்டு காவலோடு விட்டுவிட்டுத்தான் போயிருக்கிறான் என்பதைக் கனவிலும் நான் நினைத்திருக்கவில்லை!” கோபத்தில் குரல் நடுங்க பேசிய தன் பெரிய தந்தையின் அருகில் போனான் மார்த்தாண்டன்.
“சத்யாச்ரயா, சற்று அமைதியாக இருங்கள்.” சூழ இருந்த அனைவரும் மன்னரைப் பார்க்கவே அச்சப்பட, அது எதையும் பொருட்படுத்தாமல் தன் பெரிய தந்தையைச் சமாதான படுத்தினான் இளையவன்.
“அமைதியாக இருப்பதா? மார்த்தாண்டா! புரிந்துதான் பேசுகிறாயா? எதிரி ஒருவன் இருப்பதை அறியாமலேயே இத்தனைக் காலமும் வாழ்ந்திருக்கிறோம்.”
“சத்யாச்ரயா, உணர்ச்சிகள் கொந்தளிக்கும் போது எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்காது என்று பலமுறை நீங்களே எனக்கு அறிவுறுத்தி இருக்கிறீர்கள், சற்று நிதானமாக யோசித்து முடிவெடுக்கலாமே.” சொல்லிவிட்டு சூழ இருந்த மந்திரி பிரதானிகளை ஒரு முறைக் கண்களால் அளந்தான் மார்த்தாண்டன்.
‘நாம் இந்த விஷயத்தைத் தனிமையில் பேசுவதே நல்லது.’ என்ற சேதி அந்த பார்வையில் இருக்க இப்போது புலிகேசி மன்னர் லேசாக நிதானித்தார். அத்தோடு அனைவரும் அமைதியாக கலைந்து சென்றுவிட்டார்கள்.
***
அடுத்த நாள் அடிகளாரின் வருகைக்காக அதிகாலையிலேயே ஆவலோடு காத்திருந்தாள் மைத்ரேயி. அவளை அதிக நேரம் காக்க வைக்காமல் பொழுது புலர்ந்த சிறிது நேரத்திலேயே அடிகளாரும் வந்து சேர்ந்தார்.
“கிளம்பலாமா அம்மா.”
“கிளம்பலாம், ஆனால் உபாத்தியாயர் இன்னும் வரவில்லையே அடிகளாரே!”
“பாதகமில்லை அம்மா, அதுதான் நேற்றே அவர் சம்மதம் சொல்லிவிட்டாரே.”
“இருந்தாலும்…” மைத்ரேயி தயங்கவும் புன்னகைத்த அடிகளார் அவள் அருகே வந்து ரகசியமாக பேச ஆரம்பித்தார்.
“பாரம்மா, கோட்டைக்குள் இப்போது ராஜபாட்டை வழியாக போக முடியாது, உன்னை ரகசிய சுரங்க வழியாகத்தான் அழைத்துப்போக வேண்டும், மக்கள் சஞ்சாரம் ஆரம்பிப்பதற்கு முன்பாக கிளம்பிவிட்டால் நல்லது.”
அடிகளாரின் வார்த்தைகளில் இருந்த நியாயம் புரிந்ததால் அதற்கு மேல் தர்க்கம் செய்யாமல் அவரோடு புறப்பட்டு சென்றாள் மைத்ரேயி.
காட்டுக்கு அப்பால் இன்னும் கொஞ்ச தூரம் கால்நடையாக சென்ற அடிகள் அதற்கு மேல் மைத்ரேயியின் கண்களைத் தன் அங்கவஸ்திரத்தால் கட்டினார்.
“மன்னித்துக்கொள் அம்மா, இது காஞ்சி கோட்டையின் ரகசியம், இதை வெளியிட எனக்கு அனுமதி இல்லை.”
“புரிகிறது அடிகளே!”
அதற்கு மேலும் தாமதிக்காமல் தனது பயணத்தைத் தொடர்ந்தார் அடிகள். மைத்ரேயியின் கையைப் பிடித்தடி அழைத்துக்கொண்டு சென்றவர் ஒரு பழைய கோயிலை அடைந்தார்.
கோயிலில் ஆள் நடமாட்டம் இல்லை என்பதை உறுதிப்படுத்தி கொண்டவர் அங்கிருந்த அம்மன் சிலையின் கையைத் திருகினார். சிலைக்குப் பக்கத்தில் இருந்த தரை மெதுவாக நகர்ந்தது.
நிலத்தின் உள்ளே படிகள் இறங்க பெண்ணின் கையைப் பற்றிக்கொண்டு படிகளில் இறங்கினார் அடிகள். சுரங்கத்தின் வழியை மூடிவிட்டு அங்கிருந்த தீப்பந்தம் ஒன்றையும் கொளுத்தி கொண்டார்.
“சுரங்க வழி ஆரம்பிக்கிறது அம்மா, இனி கொஞ்சம் கவனமாக நடக்க வேண்டும்.”
“ஆகட்டும் அடிகளே!” சொல்லிய படியே அமைதியாக அடிகளைத் தொடர்ந்தாள் பெண். பாதை நடப்பதற்குச் சற்று சிரமமாக இருந்தாலும் இளையவள் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. அடிகளும் பயணம் சலிக்காமல் இருக்க பெண்ணோடு பேசிய வண்ணமே நடந்தார்.
“ஏன் மைத்ரேயி!”
“சொல்லுங்கள் அடிகளே!”
“காவி வஸ்திரத்திற்குள் இருக்கும் இந்த அடிகளுக்கு கோட்டையின் ரகசிய வழி எப்படி தெரிந்தது என்று உனக்குத் தோன்றவில்லையா?”
“தோன்றியது அடிகளே.”
“பிறகு ஏன் அதை என்னிடம் கேட்கவில்லை?” சொல்லிவிட்டு சிரித்தார் அடிகள். மைத்ரேயியும் சிரித்தாள்.
“இருந்திருந்து கோட்டையைப் பார்க்க ஒரு வழி பிறந்திருக்கிறது, அதிக பிரசங்கித்தனத்தால் அதைக் கெடுத்து கொள்ள வேண்டாம் என்று கேட்காமல் விட்டுவிட்டேன்.”
“ஹா… ஹா… கெட்டிக்காரிதான்.”
“நீங்கள் நினைக்கும் அளவிற்கு எனக்குச் சாமர்த்தியம் இல்லை அடிகளே!” அந்த குரலில் தொனித்த கவலை மகேந்திர வர்மரை என்னவோ செய்தது.
“ஏனம்மா? ஏனப்படி சொல்கிறாய்?”
“நான் பிறந்த நேரம் அப்படி.”
“காலத்தைக் குறைக் கூறாதே மைத்ரேயி, ஆண்டவன் படைத்த எல்லா நேரமும் நல்ல நேரம்தான்.”
“இன்றைக்கு என் உபாத்தியாயரைத் தவிர உறவென்று சொல்லிக்கொள்ள எனக்கு யாரும் இல்லை அடிகளே.”
“ஏன்? என்னவானது? உன் தாய் தந்தை எங்கே?”
“தாய்க்கு இப்போது நான் வேண்டாதவளாகி போனேன், தந்தைக்கு நானொருத்தி இருப்பதே தெரியாது.”
“என்ன? உன் தந்தைக்கு நீ இருப்பதே தெரியாதா? அப்படியென்றால் உன் தந்தையை நீ இதுவரைப் பார்த்ததில்லையா?”
“இல்லை அடிகளே.”
“போய் பார்ப்பதுதானே! யார் உன்னைத் தடுப்பது?”
“என்னை யாரும் தடுக்க முடியாது, ஆனால் எதற்கு?”
“என்ன மகளே இப்படி கேட்டுவிட்டாய்? உன் தந்தை உன் உரிமை அல்லவா?
உரிமையை விட்டு கொடுக்கலாமா?”
“……………”
“ஏன் மகளே அமைதியாகிவிட்டாய்?”
“நீங்கள் சொன்னதை யோசித்தேன்.” இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே சுரங்க வழிக்குள் இதுவரை இருந்த வெம்மைத் தணிந்து குளிர்ச்சி ஊடுருவியது.
“கோட்டையைச் சுற்றியுள்ள அகழியை இப்போது நாம் கடக்கிறோம் அம்மா.”
“ஓ… அதுதான் சில்லென்று இருக்கிறதா அடிகளே?”
“ஆமாம்.”
“அப்படியென்றால் கோட்டையை நெருங்கிவிட்டோமா?”
“ஆமாம், இன்னும் சிறிது நேரத்தில் கோட்டையை அடைந்துவிடலாம்.” சொல்லிவிட்டு அமைதியாக இன்னும் கொஞ்ச தூரம் நடந்தார் அடிகளார்.
அதன் பிறகு ஓரிடத்தில் நின்று அவர் ஏதோவொரு மணியை அடிப்பது போல மைத்ரேயிக்கு கேட்டது. அதைத்தொடர்ந்து கதவொன்று திறக்கும் ஒலி கேட்க, அவள் கண்களைக் கட்டியிருந்த துணியையும் தாண்டி வெளிச்சம் பரவியது.
“படிக்கட்டு இருக்கிறது, கவனமாக ஏறி மேலே வா மைத்ரேயி.” பெண்ணின் கையைப் பிடித்த படியே படிக்கட்டுகளில் ஏறி அவளை மேலே அழைத்து வந்தார் அடிகளார்.
பூக்களின் இனிய நறுமணம் இளையவளின் நாசியை வருடி சென்றது. அது கோட்டையின் நந்தவனமா அல்லது ஏதாவது கோயிலா என்று பிரித்தறிய முடியாமல் அடிகளாரைத் தொடர்த்தாள் பெண்.
மக்களின் பேச்சுக்குரலும் தொலைவில் கேட்பது போல இருந்தது. சற்று தூரம் மேலும் நடந்த பிறகு ஓரிடத்தில் நின்ற அடிகளார் மைத்ரேயியின் கண்ணிலிருந்த துணியை அவிழ்த்தார்.
“வந்து விட்டோம் அம்மா.” அடிகளார் துணியை அவிழ்க்க கண்களை லேசாக கரங்களால் தேய்த்து விட்டுக்கொண்டாள் மைத்ரேயி. எதிரே தெரிந்த காட்சி மிகவும் ரம்மியமாக இருந்தது.
தான் இது வரைத் தூரத்திலிருந்து பார்த்த அரண்மனை அவள் கண்ணுக்கு எதிரே காட்சி அளித்தது. காலை வெயிலில் அந்த மாளிகைத் தங்கம் போல ஜொலிக்க அதை வைத்த கண் வாங்காமல் பார்த்து நின்றாள்.
‘என்னைப் பெற்றவர் அங்கேதான் இருப்பாரோ?!’ அவள் சிந்தனை எங்கெங்கோ பறந்து சென்றது. கோட்டை வாசிகள் போரின் எந்தவித பரபரப்பும் இன்றி நிம்மதியாக தங்கள் இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தார்கள்.
“மைத்ரேயி, இங்கே யார் வீட்டிற்குப் போவதாக உத்தேசம்?” அடிகளார் கேட்க அவரை வியப்புடன் பார்த்தது பெண்.
“எனக்கென்று இங்கு யாருமே இல்லையே அடிகளே!”
“ஏன் அப்படி சொல்கிறாய் அம்மா? தாய்க்குத்தான் நீ வேண்டாதவள், உன் தந்தை இங்குதானே இருக்கிறார்? அவரிடம் போகலாமே?”
“தந்தை தனியாக இல்லையே ஸ்வாமி, அவருக்கென்று மனைவி குழந்தை எல்லாம் இருக்கிறதே!”
“இருந்தால் என்ன? அவர்கள் எல்லாம் இருப்பதால் நீ அவர் மகள் இல்லை என்று ஆகிவிடுமா?”
“அவர்களுக்கு என் வருகைப் பிடிக்காது போய்விட்டால்… நான்…” மைத்ரேயியின் நா இப்போது தடுமாறியது.
“குழந்தாய், உன் தந்தை அத்தனைக் கெட்டவரா?”
“இல்லையில்லை… இல்லை அடிகளே, அப்படி சொல்லாதீர்கள்… நான் விசாரித்த வரையில் அரை மிகவும் நல்லவர் என்றுதான் மக்கள் சொல்கிறார்கள்.”
“மக்கள் சொல்கிறார்களா? உன் தந்தை யார் அம்மா? எனக்குத் தெரிந்தவரா?” அடிகளின் அந்த கேள்வியில் மைத்ரேயி மிரண்டு போனாள்.
“அவரைத் தெரிந்த மக்களை விசாரித்தேன், அதைச் சொன்னேன் அடிகளே.”
“ஓஹோ… அப்படியென்றால் அரண்மனைக்குள் எனக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள், அங்கு போகிறாயா அம்மா?”
“நீங்களும் வரவில்லையா ஸ்வாமி?”
“நான் கூட வருகிறேன், ஆனால் என்னால் அங்கு தங்க முடியாது அம்மா, சந்நியாசிக்கு அங்கென்ன வேலை?” அடிகளார் சொல்லிவிட்டு பெண்ணை அழைத்துக்கொண்டு அரண்மனையின் பிரதான வாயிலுக்குச் சென்றார்.
அங்கிருந்த காவலர்கள் அனைவரும் அவருக்குத் தலை வணங்கவே அவர்களை ஏறிட்டு பார்த்தவர்,
“பணிப்பெண் யாரையாவது வரச்சொல்.” என்றார் அதிகாரமாக.
“ஆகட்டும் அடிகளே.” காவலாளி உள்ளே விரைந்து செல்ல சிறிது நேரத்திலெல்லாம் பணிப்பெண் ஒருத்தி விரைந்து வந்தாள்.
“வணக்கம் அடிகளே!”
“ம்… இந்த பெண்ணை உள்ளே அழைத்து செல்.” மிகவும் தோரணையாக சொல்லிவிட்டு மைத்ரேயியிடம் திரும்பினார் அடிகளார். அவரின் செய்கைகள் அனைத்தும் பெண்ணிற்கு வினோதமாக இருந்தது.
“மைத்ரேயி, உள்ளே போ அம்மா.”
“அடிகளே… தாங்கள்?”
“உனக்கு இங்கு எந்த பயமும் வேண்டாம், முன்னேற்பாடுகள் அனைத்தையும் செய்து விட்டுத்தான் உன்னை அழைக்கவே வந்தேன், பிற்பாடு உன்னை வந்து சந்திக்கிறேன் அம்மா.” சொல்லிவிட்டு அடிகளார் போய்விட்டார்.
“வாருங்கள் தேவி.” என்றழைத்தாள் அந்த பணிப்பெண்.
“எங்கே?”
“அரண்மனைக்குத்தான்.”
“அடிகளார் ஏன் உள்ளே வராமல் போகிறார்?”
“அடிகள் எப்போதும் அரண்மனைக்குள் வருவதில்லை, ஆனால் இங்கு அடிகளின் வார்த்தைக்கு மன்னர், மகாராணி யாருமே மறுப்பு சொல்வதில்லை.”
“ஓ… அடிகளின் வார்த்தைக்கு அத்தனை மரியாதையா?”
“ஆமாம் தேவி.” பேசியபடியே அந்த பெண் அரண்மனைக்குள் மைத்ரேயியை அழைத்து சென்றாள்.
அரண்மனையின் விஸ்தாரணத்தைப் பார்த்த மைத்ரேயி அதிசயத்தில் சில நொடிகள் அங்கேயே நின்றுவிட்டாள். பரந்து விரிந்திருந்த அதன் அமைப்பு பல்லவ மரபின் தாராளத்தை எடுத்து காட்டுகிறதோ!
பல்லவ வம்சம் என்று நினைத்த மாத்திரத்தில் அவளது உடம்பில் சிலிர்ப்பொன்று ஓடி மறைந்தது. இந்த அரண்மனையைக் கட்டியவர்கள் அவளது மூதாதையர்கள் அல்லவா?!
பணிப்பெண் பிரதான மாளிகையைத் தாண்டி இருந்த நந்தவனத்திற்குள் நுழைந்தாள். நந்தவனத்தின் நடுவில் இருந்த பெரிய தடாகத்தில் தாமரை மலர்ந்து கிடந்தது. ஒன்றிரண்டு அன்னப்பட்சிகளும் அசைந்தாடி நடைபழகி கொண்டிருந்தன.
நந்தவனத்தைத் தாண்டி இருந்த அந்த வெண்பளிங்கு மாளிகையினுள் பணிப்பெண் நுழையவும் மைத்ரேயியும் அவளைத் தொடர்ந்தாள். பொழுது புலர்ந்து சொற்ப நேரமே கழிந்திருந்ததால் அந்த மாளிகையின் இன்னும் காலை நேரத்து இன்னிசை இனிதாக தவழ்ந்து வந்து கொண்டிருந்தது.
மாளிகையின் தாழ்வாரத்தில் இருந்த வளைவுகளில் மல்லிகையும் முல்லையும் படர்ந்து கிடந்து தன் நறுமணத்தால் நாசியை நிரப்பியது.
ஒரு பெரிய அறையின் முன்பாக போய் நின்ற பணிப்பெண் அதன் கதவை மிகவும் நாசூக்காக தட்டினாள்.
“இங்கு யார் இருக்கிறார்கள்?” மைத்ரேயி கேட்ட கேள்விக்கு ஒரு புன்னகையை மட்டும் பதிலாக தந்தவள் மீண்டுமொரு முறைக் கதவைத் தட்டிவிட்டு அமைதியாக நின்றிருந்தாள்.
கதவு இப்போது லேசாக திறக்க உள்ளே அப்படி யார்தான் இருக்கிறார்கள் என்ற ஆவலில் மைத்ரேயியும் அந்த ககதவையே பார்த்திருந்தாள்.
திறந்த கதவின் பின்னால் ஒரு நடுத்தர வயது மாது நின்றிருந்தார். அந்த முகத்தில் தெரிந்த மென்மையையும் பொலிவையும் பார்த்த மைத்ரேயிக்கு கண்களை அங்கே இங்கே அகற்ற முடியவில்லை.
அப்போதுதான் ஸ்நானம் செய்திருப்பார் போலும், அணிந்திருந்த பட்டுப்புடவை அங்கங்கே நனைந்திருந்தது. ஆபரணங்கள் எதுவும் அணிந்திராவிட்டாலும் கழுத்தில் கிடந்த கனமான சங்கிலி எந்த கணத்திலும் அவர் தனது திருமாங்கல்யத்தைப் பிரியமாட்டார் என்று காட்டியது.
“மன்னிக்க வேண்டும் தேவி, அடிகளார் ஏற்கனவே வந்துவிட்டார்.” பணிப்பெண் சொன்னதும் அந்த மாதின் முகம் மலர்ந்து போனது.
“மைத்ரேயி!” பணிப்பெண்ணை விடுத்து அந்த மாது தன்னை நெருங்கவும் மைத்ரேயி திகைத்து போனாள். இவர் யாராக இருக்கக்கூடும்?!
“அதற்குள் அந்த பொல்லாத அடிகள் உன்னைப் பார்க்க வந்துவிட்டாரா?” உரிமையாக அந்த மாது கடிந்து கொள்ள சிரித்தபடி பணிப்பெண் போய்விட்டாள்.
“உள்ளே வா மைத்ரேயி.” மைத்ரேயியின் கையைப் பிடித்து அந்த அறைக்குள் அழைத்து போனார் அந்த பெண்.
அடேயப்பா! அறையா அது! ஏதோ பெரிய மண்டபம் போல இருந்தது. ஆனால் அது ஒரு பள்ளியறை என்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே புரிந்து கொண்டாள் இளையவள்.
அந்த அறையின் அலங்காரமும் அங்கிருந்த அலங்கார பொருட்களின் அழகும் சொல்லில் வடிக்க இயலாத அளவிற்கு இருந்தது. அப்போதுதான் போடப்பட்டிருந்த அகில் புகையின் வாசனை சிந்தையை மயக்கியது.
இவை எல்லாவற்றையும் விட சுவரில் வரையப்பட்டிருந்த சித்திரங்கள் வெகு அழகாக இருந்தன. ஏதேதோ போர் காட்சிகள், வீணை மீட்டும் ஓர் இளைஞன், குன்றுகளைக் குடைந்த கோயில்கள் என பல சித்திரங்கள் தத்ரூபமாக வரையப்பட்டிருந்தன.
கடைசியாக ஒரு மகாராஜாவின் சித்திரம் பெரிதாக தீட்டப்பட்டிருந்தது. நேரிலேயே அந்த மகாராஜா தன் முன் நிற்பது போல உணர்ந்தாள் மைத்ரேயி.
“அவர் என் கணவர்.” இளையவளின் பார்வைப் போன இடங்களை இதுவரைப் பார்த்திருந்தால் அந்த பெண் தானாகவே விளக்கம் சொன்னார்.
மைத்ரேயிக்கு குழப்பமாக இருந்தது. சித்திரத்தில் இருப்பவர் மகாராஜா போல இருக்கிறார், இந்த பெண் என்னவென்றால் அவரைக் கணவர் என்று சொல்கிறாரே! அப்போது கூட மைத்ரேயிக்கு தான் யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று பிடிபடவில்லை.
“ஓ… தாங்கள் யாரென்று நான் தெரிந்து கொள்ளலாமா?” இப்போதும் எதுவும் புரியாமல் அவள் கேள்வி கேட்க அந்த பெண் வாஞ்சையோடு புன்னகைத்தார்.
“தாராளமாக தெரிந்து கொள்ளலாம், ஆனால்…”
“ஆனால் என்ன?”
“தெரிந்த பிற்பாடும் இதேபோல இனிமையாக மைத்ரேயி என்னோடு பேசுவாளா?”
“ஏன் அப்படி சொல்கிறீர்கள்? உங்களோடு நான் பேசுவதில் அப்படியென்ன தடை வந்துவிடப்போகிறது?”
“என் பெயர் புவனா, மக்கள் என்னை புவன மகாதேவி என்று அழைப்பார்கள்.” மிகவும் அமைதியாக அந்த பெண்மணி சொல்ல மைத்ரேயியின் உலகம் சுழன்றது.
தன் எதிரே நிற்பது பல்லவ சாம்ராஜ்யத்தின் பட்டமகிஷியா?! கருணையே வடிவாக என்னோடு உறவாடுவது பல்லவேந்திரரின் மனைவியா? அப்படியென்றால்… இந்த சுவரில் இருக்கும் சித்திரம் யாருடையது?!
பட்டமகிஷியின் அறையில் அவர் கணவரது ஓவியத்தைத் தவிர வேறு யார் ஓவியம் இருக்கப்போகிறது?! ஆமாம் ஆமாம்… அந்த பெண் கூட அப்படித்தானே சொன்னார்! அது என் கணவர் என்றுதானே சற்று முன்பு சொன்னார்!
“மத்தவிலாசன், சித்திரகார புலி, சத்ருமல்லன்… இப்படி எத்தனையோ பட்டப்பெயர்கள் இருந்தாலும், நான் மைத்ரேயியின் தந்தை என்று சொல்வதில் அளவிலா ஆனந்தப்படும் மகேந்திர வர்மர் இவர்தான்!” புவனமகா தேவி சொல்லவும் மைத்ரேயியின் கண்கள் கரகரவென கண்ணீரை உகுத்தன.
அந்த சித்திரத்தைப் பார்க்க விடாமல் கண்களில் கண்ணீர் சேர்ந்து கொள்ளவும் அதைப் புறங்கையால் துடைத்தெறிந்துவிட்டு சித்திரத்தை நோக்கி நடந்தாள். புவனமகா தேவி எதுவும் சொல்லாமல், அவள் மோன நிலையைக் கலைக்காமல் அமைதியாகவே நின்றிருந்தார்.
சித்திரத்தைச் சிறிது நேரம் கண் கொட்டாமல் பார்த்து நின்றவள் அங்கிருந்த படியே புவனமகா தேவியை திரும்பி பார்த்தாள். உண்மைத் தெரிந்தவுடன் அந்த கண்களில் குரோதத்தை எதிர்பார்த்திருந்த புவனமகா தேவி அங்கு அது தென்படாமல் போகவும் நிம்மதி பெருமூச்சு விட்டார்.
“நான்… நான் யாரென்பது… உங்களுக்கு எப்படி தெரியும்?”
“உன் தந்தைதான் சொன்னார்.”
“அவருக்கு எப்படி…”
“என்றைக்கு கொற்கைக்கு வந்து நீ இருப்பதை அறிந்து கொண்டாரோ, அன்றிலிருந்து நீ எங்கே, என்ன செய்கின்றாய் என்பது யாவும் அவருக்குத் தெரியும்.”
“ஓ… உங்களுக்கு…”
“அவர் என்னிடம் எதையுமே மறைத்ததில்லை.”
“இப்போது…”
“அவர்தான் உன்னை என்னிடம் அனுப்பி வைத்தார்.”
“நான் வரப்போவது முன்னமே உங்களுக்குத் தெரியுமா? அடிகளார் உங்களிடம் சொல்லி இருந்தாரா?”
“ஹா… ஹா… ஆமாம் ஆமாம்… அந்த அடிகளார் என்னிடம் ஏற்கனவே சொல்லிவிட்டார்.” அடிகளாரைப் பற்றி பேசும் போதெல்லாம் இவர்கள் ஏன் சிரிக்கிறார்கள்?! சிந்தனைத் தோன்றினாலும் அதைக் கவனிக்கும் நிலையில்
மைத்ரேயி இல்லை.
“உங்களுக்கு… என் மேல் கோபம் வரவில்லையா?” தயங்கிய படியே இளையவள் கேட்கவும் அவள் அருகில் வந்த புவனமகா தேவி அவளைத் தோளோடு அணைத்து கொண்டார்.
“இதே கேள்வியை நானும் கேட்கலாம் அல்லவா மைத்ரேயி?”
“நீங்கள் ஏன் கேட்க வேண்டும்?”
“உன் தாயார் இருக்க வேண்டிய இடத்தைத் தட்டிப்பறித்தது நான்தானே?”
“அது எனக்குத் தெரியாது.”
“எதையுமே இப்படி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் உனது தாயாரை வெறுப்பது நியாயமா மைத்ரேயி?”
“அவர்கள் செய்தது எதுவும் உங்களுக்குத் தெரியாது, எனக்குக் கிடைக்க வேண்டிய எதையுமே கிடைக்காமல் செய்தவர்கள் அவர்கள்!”
“உனக்குக் கிடைக்க வேண்டியது மட்டுமல்ல, அவர்களுக்குக் கிடைக்க வேண்டியதையும் கூட கிடைக்காமல் பண்ணி கொண்டவர்கள்.”
“அதுதான் ஏன் என்கிறேன்? இது முட்டாள்தனம் இல்லையா?”
“ஒரு பெண் தன்னைத்தானே இவ்வளவு தூரம் வருத்தி கொள்கிறாள் என்றால் அதற்குப் பின்னால் வலுவான ஒரு காரணம் நிச்சயமாக இருக்கும் மைத்ரேயி.”
“அது எப்பேர்ப்பட்ட காரணமாக இருந்தாலும் என் தந்தையை என்னிடமிருந்து பிரிக்கும் உரிமையை அவர்களுக்கு யார் கொடுத்தது?” இதை ஆவேசமாக மைத்ரேயி கேட்கும் போது அவள் முகம் கோபத்தில் சிவந்தது. நாசி விடைத்து கண்ணீர் மீண்டும் பெருகியது.
“உன் தந்தையை உன்னிடமிருந்து பிரித்தது மட்டுமல்ல, மகாராணி என்ற பட்டத்தை… ஒரு ராஜ வாழ்க்கையைத் தூக்கி தூரப்போட்டிருக்கிறார்! இது அத்தனையும் உன் தந்தைக்காக அவர் செய்த தியாகம்!”
“எதற்காக? தன்னையும் வருத்தி, தன்னைச் சுற்றி இருந்தவர்களையும் வருத்தி…”
“எல்லாம் உன் தந்தையின் நலனுக்காக, இந்த பல்லவ சாம்ராஜ்யத்தின் அமைதிக்காக, உன் தாய் யாரென்று உனக்குத் தெரியுமா மைத்ரேயி?”
பரிவாதனி பற்றிய உண்மைகளை புவனமகா தேவி சொல்ல ஆரம்பித்த அதே வேளை… அந்த மாளிகைக்குள் நுழைந்தார் அடிகளார். நேராக இரண்டாம் கட்டின் ஒரு அறைக்குள் நுழைந்தவர் தன் முகத்தில் இருந்த தாடி, மீசையைக் கழட்டி வீசிவிட்டு வெளியே வந்தார்.
அடிகளாரின் வருகையை ஆவலோடு பார்த்தபடி காத்திருந்தார் மகிழினி. சற்று அப்பால் பரிவாதனியும் அமைதியாக நின்றிருந்தார்.
“பல்லவேந்திரா, குழந்தை நன்றாக இருக்கிறாளா? கோட்டைக்குள் அவளை அழைத்து வந்துவிட்டீர்களா?”
“ஆம் மகிழினி, மைத்ரேயியை நேராக அரண்மனையில் விட்டு விட்டுத்தான் நான் இங்கே வருகிறேன்.”
“நல்லது நல்லது.” மகிழினி வெகுவாக திருப்திப்பட்டு கொள்ள மகேந்திர வர்மர் சிரித்தார். பரிவாதனி எதுவுமே பேசவில்லை.
“ஏன் சிரிக்கிறீர்கள் சக்கரவர்த்தி?”
“இல்லை, கோட்டைக்குள் நுழைந்ததும் யார் வீட்டுக்குப் போக போகிறாய் என்று கேட்கிறேன், அப்போது மைத்ரேயி உன் பெயரைக் கூட சொல்லவில்லையே
மகிழினி! அதை நினைத்து சிரித்தேன்.”
“இங்கே வந்தால் என்னை மட்டுமா பார்க்க வேண்டி வரும், இன்னும் யார் யாரையோ எல்லாம் பார்க்க வேண்டி வரும், அதனால்தான் குழந்தை இங்கே வருவதைத் தவிர்த்திருப்பாள்.” தன் தோழியைக் கடைக் கண்ணால் முறைத்தபடி சொன்ன மகிழினி அவர்களுக்குத் தனிமைக் கொடுத்துவிட்டு நகர்ந்து விட்டார். சக்கரவர்த்தியின் முகத்தில் புன்னகை அரும்பியது.
“நீ எதுவுமே கேட்கவில்லையே பரிவாதனி!” என்றார் பெண்ணை நோக்கி.
“தந்தை என்ன ஆனார்?” பரிவாதனி கேட்க மர்மமாக புன்னகைத்தார் மகேந்திர வர்மர்.
“கவலைப்படாதே, எல்லாம் திட்டமிட்ட படிதான் நடக்கின்றன, அநேகமாக இன்னும் இரண்டொரு நாட்களில் எதிரிகளிடமிருந்து ஏதாவது தகவல் வரும்.”
“நிஜமாகத்தான் சொல்கிறீர்களா?” ஆவலே வடிவாக கேட்ட பரிவாதனியை பரிவோடு பார்த்தார் மகேந்திர வர்மர். தானாகவே அவர் கால்கள் அவரைப் பெண்ணை நோக்கி இழுத்து வந்தன. அவர் கைகள் பெண்ணின் முகத்தை ஆதரவோடு வருடிக்கொடுத்தது.
“இப்போது கூட என்மேல் உனக்கு வருத்தமில்லையா பரிவாதனி?”
“இல்லை அன்பரே! இந்த போர் நடக்கக்கூடாது, அதற்காக என் உயிரை நீங்…” அதற்கு மேல் பரிவாதனியை பேச சக்கரவர்த்தி அனுமதிக்கவில்லை.
“போதும் பரிவாதனி! முட்டாள்தனமாக பேசாதே! இதுவரை உனக்கு நான் செய்த அநியாயங்களே என் கழுத்தை நெரிக்கின்றன.”
“இல்லை அன்பரே, நீங்களாக ஏதேதோ கற்பனைச் செய்கிறீர்கள், இந்த யுத்தம் மட்டும் நின்றுவிட்டால் என்னைப் போல மகிழ்பவர் வேறு யாரும் இருக்க மாட்டார்கள்!” முகத்தில் பெரும் பரபரப்போடு சொன்ன பெண்ணை உணர்ச்சிகள் எதுவுமின்றி பார்த்தார் சக்கரவர்த்தி.
“நீ இழக்க இனி ஏதுமில்லை பரிவாதனி.”
“அன்பரே, என் வாழ்க்கையில் நான் உங்களை இழந்த போது மாத்திரம்தான் வேதனைப்பட்டேன், நீங்களே இப்போது எனக்கு மீண்டும் கிடைத்திருக்கிறீர்கள், இதைவிட எனக்கு என்ன பாக்கியம் வேண்டும்?!”
“அரண்மனைக்குள் வரவே போவதில்லையா பரிவாதனி?” அந்த குரலில் அவ்வளவு ஏக்கம்.
“அந்த ஒரு விஷயத்தில் மாத்திரம் என்னை வற்புறுத்தாதீர்கள் ஸ்வாமி, நான் இங்கேயே இருக்கிறேன்.”
“உன் இடம் இதுவல்ல பரிவாதனி.”
“அன்பரே, என் இடம் அதுவுமல்ல.” சொன்ன பெண் சக்கரவர்த்தியின் மார்பில் சாய்ந்து கொண்டது, எப்போதைக்கும் தன் இடம் அதுதான் என்பது போல.