பல்லவன் கவிதை

பல்லவன் கவிதை

பல்லவன் கவிதை 25

அந்த விசாலமான கூடாரத்தில் புலிகேசி மகாராஜா நடுநாயகமாக வீற்றிருக்க அவருக்கு அண்மையில் மன்னர் விஷ்ணுவர்த்தன‌ன் அமர்ந்திருந்தார். 

இன்னொரு புறத்தில் மார்த்தாண்டன் சிந்தனை வயப்பட்டவனாக அமர்ந்திருந்தான்.

பெரிய தந்தை உத்தரவு பிறப்பிக்கவே அவசர ஓலை ஒன்றைத் தனது தந்தைக்கு அனுப்பி இருந்தான் மார்த்தாண்டன். அதன் பேரில் விஷ்ணுவர்த்தன மன்னரும் துரித கதியில் பயணப்பட்டு காஞ்சிக்கு வந்திருந்தார்.

“விஷ்ணுவர்த்தனா! சேதியைக் கேட்டாயா?” புலிகேசி மகாராஜாவின் முகம் கோபத்தால் சிவந்து போயிருந்தது.

“மார்த்தாண்டன் ஓலையில் விஷயத்தைக் குறிப்பிட்டிருந்தான், அதனால்தான் வழியில் எந்த தாமதமும் செய்யாமல் விரைந்து வந்தேன் அண்ணா.”

“தம்பி, எதிரி அழிந்தான் என்று எத்தனை இறுமாப்போடு இத்தனை நாள் இருந்துவிட்டோம், அந்த பாழாய்ப்போன சிற்றப்பன் நம்மை இலேசில் விடுவதாக இல்லை.”

“எனக்கும் பேரதிர்ச்சியாகத்தான் இருக்கிறது அண்ணா!”

“இந்த மகேந்திர வர்மன் எத்தனைக் குள்ள நரியாக வேலைப் பார்த்திருக்கிறான் பார்த்தாயா?” 

முதன்முதலாக மகேந்திர வர்மரை ஒருமையில் குறிப்பிட்டு பேசினார் புலிகேசி மன்னர். அந்த குற்றச்சாட்டில் இணைந்து கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் போல விஷ்ணுவர்த்தனரும் மார்த்தாண்டனும் அமைதியாக இருந்தார்கள்.

“இத்தனை நாளும் நம் எதிரியை அவன் கூடவே வைத்திருந்து விட்டு இப்போது சமயம் பார்த்து காய் நகர்த்துகிறான்.” ஆக்ரோஷமாக இருந்தது சக்கரவர்த்தியின் பேச்சு.

“பெரிய தந்தையே, இதில் ஏதோ சதி இருப்பது போல எனக்குத் தோன்றுகிறது!” சிந்தனை வயப்பட்டிருந்த மார்த்தாண்டன் சட்டென்று பேசினான்.

“மார்த்தாண்டா, நீ என்ன சொல்கிறாய்?!” வியப்போடு கேட்டார் புலிகேசி மகாராஜா.

“ஆமாம் பெரிய தந்தையே, இத்தனை நாளும் அமைதியாக இருந்துவிட்டு இப்போது இந்த ரகசியத்தை பல்லவ சக்கரவர்த்தி வெளியிடுவதன் மர்மம் என்ன?”

“அதுதானே எனக்கும் விளங்கவில்லை!”

“அதனால்தான் சொல்கிறேன் பெரிய தந்தையே, பல்லவ மகாராஜா ஏதோ திட்டத்தோடுதான் காய் நகர்த்துவது போல எனக்குத் தெரிகிறது.”

“…………..” எதுவுமே பேசாமல் தன் ஆசனத்தை விட்டு எழுந்த சத்யாச்ரயர் இப்போது அங்கும் இங்குமாக சிறிது நடைப் பயின்றார்.

“இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் தீவிரமாக விசாரிப்பது நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது பெரிய தந்தையே.” இதுவரைத் தன் மகனின் பேச்சையே கவனித்து கொண்டிருந்த விஷ்ணுவர்த்தன மகாராஜா அவனை ஊன்றி கவனித்தார்.

மார்த்தாண்டனும் தன் தந்தையைக் கவனித்ததவன் அவருக்குக் கண்களால் ஜாடைச் செய்தான். அந்த பார்வையில் ‘எனக்கு ஆதரவாக பேசு’ என்ற ஆணை இருக்கவே,

“அண்ணா, மார்த்தாண்டன் சொல்வதிலும் ஏதோ உண்மை இருக்கிறது என்றுதான் எனக்கும் தோன்றுகிறது, எதிரியை அத்தனைச் சுலபமாக நாம் எடைபோட்டு விட கூடாது.”

“ம்…” சிந்தித்தபடியே உறுமினார் புலிகேசி மகாராஜா.

“தென்னகத்தின் மிகவும் செல்வாக்கான ஒரு சக்கரவர்த்தியை நாம் எதிர்க்கிறோம், மிகவும் கவனமாக நம் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும்.” 

“புரிகிறது விஷ்ணுவர்த்தனா.”

“அவசரப்பட்டு எந்த முடிவையும் இப்போது எடுக்க வேண்டாம் அண்ணா.”

“அப்படியா சொல்கிறாய்?”

“ஆமாம், இதில் ஏதோ விஷமம் இருக்கிறது என்றுதான் நானும் நினைக்கிறேன், அத்தோடு…”

“அத்தோடு என்ன?” அவசரமாக கேட்டார் 

புலிகேசி மகாராஜா.

“பாண்டியன் பல்லவ மகாராஜாவிற்குப் பெரும் படைகளை அனுப்பி உதவி புரிய கோரியதாகவும், அதை மகேந்திர பல்லவர் மறுத்து விட்டதாகவும் 

வதந்திகள் உலவுகின்றன.”

“ஆமாம் ஆமாம், அதை நானும் கேள்விப்பட்டேன்.”

“பாண்டியர்களின் உதவியும் கிடைக்கும் பட்சத்தில் நம்மை எளிதாக முறியடிக்க பல்லவேந்தருக்கு இயலும், அப்படியிருக்க எதற்காக அவர் அந்த உதவியை மறுத்தார்?!”

“விசித்திர சித்தர் என்று அந்த மகேந்திர வர்மனுக்கு பெயர் வைத்தாலும் வைத்தார்கள், அவன் செய்கைகள் அனைத்தும் விசித்திரமாகவே இருக்கின்றன!” புலிகேசி மகாராஜா சற்றே ஆத்திரத்தோடு கூற மார்த்தாண்டன் இப்போது பேசினான்.

“பெரிய தந்தையே, ஏதோ ஓர் கிராமத்தின் கடற்கரை ஓரமாக சிற்ப வேலைகளில் மகேந்திர வர்மர் ஈடுபட்டிருக்கிறாராம், வடக்கே கன்யா குப்ஜத்தில் ஹர்ஷவர்த்தனர் கட்டியிருக்கும் கோயில்களுக்கு ஈடாக, சொல்லப்போனால் அதைவிட மேலான கோயில்களை இந்த கடற்கரை ஓர கிராமத்தில் அமைக்க மகேந்திர வர்மர் முடிவெடுத்திருக்கிறாராம்!”

“ஹா… ஹா… மார்த்தாண்டா, நீ என்ன விளையாடுகிறாயா? ஹர்ஷவர்த்தனரை விட மேலான கோயில்களை இந்த மகேந்திர வர்மன் கட்டுவதா? இது சாத்தியமா?”

“இல்லை பெரிய தந்தையே, அதில் உண்மை இருப்பது போலத்தான் நான் விசாரித்தவரைத் தெரிகிறது.”

“உண்மையா? என்ன உண்மையைக் கண்டுவிட்டாய் மார்த்தாண்டா?” அலட்சியமாக கேட்டார் சக்கரவர்த்தி.

“ஹர்ஷவர்த்தனரின் கோயில்கள் செங்கல்லாலும் மரத்தாலும் கட்டப்பட்டவை, காலப்போக்கில் அழிந்து போகும் சாத்தியம் இருக்கிறது, ஆனால் இவை அப்படியல்ல! கற்பாறைகளைக் குடைந்து அமைக்கும் கோயில்கள், இவை அத்தனை எளிதில் அழிவுறா!”

“ம்…” புலிகேசி மீண்டும் உறுமினார்.

“இவை எல்லாவற்றையும் பார்க்கும் போது… மகேந்திர வர்மர் போரைத் தவிர்க்கின்றாரோ என்று எனக்கு 

சந்தேகமாக இருக்கிறது.”

“மார்த்தாண்டன் சொல்வதிலும் உண்மை இருக்கிறது அண்ணா, மகேந்திர வர்மர் பெரிய கலைப்பித்தர் என்று நானும் கேள்வி பட்டிருக்கிறேன், எதையோ முன்னிட்டுத்தான் பல்லவேந்திரர் காய் நகர்த்துகிறார் போல தெரிகிறது.” அப்பாவும் பிள்ளையும் சொல்லி வைத்தாற்போல ஒன்றையே பேச புலிகேசி மன்னர் இப்போது வெகுவாக குழம்பி போனார்.

மார்த்தாண்டனும் அவன் தந்தையும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் கூடாரத்தை விட்டு வெளியே வந்துவிட்டார்கள். அவர்களுக்குள் பேச நிறைய விஷயங்கள் இருந்தது.

வீரர்களின் நடமாட்டம் இல்லாத அமைதியான ஓரிடத்திற்கு வந்தார்கள் தந்தையும் மகனும். விஷ்ணுவர்த்தன மகாராஜா மகனை உற்று நோக்கினார்.

“மார்த்தாண்டா, நம்மைச் சுற்றி என்னதான் நடக்கிறது? நீ ஏதோ ஜாடைக் காட்டவும்தான் நானும் உன்னோடு சேர்ந்து பேசினேன், நிஜமாக சொல்! நீ ஓலையில் எழுதியது உண்மைதானா?”

“ஓலையில் எழுதியது உண்மைக் கதையின் பாதிதான் தந்தையே, மீதிக்கதையும் இருக்கிறது, அதைப் பெரிய தந்தையிடம் சொல்வதில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை, அதனால்தான் ஓலையிலும் அதை நான் குறிப்பிடவில்லை.”

“பாதி கதையா? நீ என்ன சொல்கிறாய்?”

“உங்கள் சிற்றப்பனின் மகள் பரிவாதனி யார் தெரியுமா?”

“அதுதான் சிற்றப்பனின் மகள் என்று சொல்லிவிட்டாயே? பிறகு இது என்ன கேள்வி?”

“என் அத்தை வெறும் மங்களேசரின் மகள் மட்டுமல்ல, இந்த பல்லவ சாம்ராஜ்யத்திற்கே பட்ட மகிஷியாக அமர்ந்திருக்க வேண்டியவர்!”

“என்ன?! என்ன சொல்கிறாய் நீ?!” திடுக்கிட்டு கேட்ட தன் தந்தைக்கு பரிவாதனி பற்றி தான் மகிழினி வாய்மூலமாக அறிந்த அனைத்து உண்மைகளையும் சொன்னான் மார்த்தாண்டன்.

விஷ்ணுவர்த்தனர் ஒரு நொடி ஆடாமல் அசையாமல் திக்பிரமைப் பிடித்து நின்றுவிட்டார்!

“அந்த குழந்தை எங்கோ உயிரோடு இருக்கிறது என்று என் உள்மனது சதா சொல்லி கொண்டிருந்தது மார்த்தாண்டா!”

“ஆம் தந்தையே, அதை என் அன்னை மூலமாக நானும் அறிந்திருக்கிறேன், ஆனால் கொற்கையில் அந்த உண்மையை நான் அறிந்து கொள்வேன் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை!”

“ம்…”

“அந்த கனக புஷ்பராக கல்லைப் பார்த்த போது நான் அடைந்த ஆச்சரியத்தைச் சொல்லில் வடிக்க இயலாது! புரட்சியைக் கிளப்பி போருக்கு வழிகோல வந்த இடத்தில்… போரே என் அத்தைக்கு எதிராக என்று அறியும் போது என் மனம் என்ன பாடு பட்டிருக்கும்?”

“இதையெல்லாம் ஏன் என்னிடம் முன்னமே நீ அறிவிக்கவில்லை?”

“இந்த ரகசியங்களை ஓலையில் எழுதி அனுப்ப எனக்கு விருப்பமில்லை தந்தையே, நேரில் நானே வந்து உங்களிடம் இந்த உண்மைகளைச் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன்.”

“அதுவும் சரிதான்.”

“அதற்கிடையில் போரை ஆரம்பிக்க பெரிய தந்தை திட்டமிட்டு விட்டார், அவருக்கு சந்தேகம் வராதபடி அனைத்திலும் ஈடுபட்டாலும்… போரைத் தவிர்க்கவே முயன்று கொண்டிருந்தேன்.”

“அது சரி, பரிவாதனியின் பெண் இப்போது எங்கே?” தந்தையின் குரலில் குறும்பு கொப்பளிக்க, மார்த்தாண்டனின் முகம் லேசாக சிவந்து போனது. வாய்விட்டு சிரித்த விஷ்ணுவர்த்தனர் மகனைத் தோளோடு அணைத்து கொண்டார்.

“உன் அன்னை இப்போது உன்னைப் பார்த்திருக்க வேண்டுமே! மகிழ்ந்து போயிருப்பாள்! அது போகட்டும், மைத்ரேயி எங்கே மார்த்தாண்டா?”

“கோட்டைக்குள் போயிருக்கிறாள்.”

“கோட்டைக்குள்ளா? அங்கே எதற்கு இப்போது போயிருக்கிறாள்?!”

“அவளுக்கு இதுவரைப் பார்க்காத தன் தந்தையை இப்போது பார்க்க வேண்டும் என்று ஆசைப் பிறந்திருக்கிறது, அதை என்னிடம் கூட சொல்ல சங்கடப்பட்டுக்கொண்டு கோட்டையைச் பார்க்க போகிறேன் என்று போயிருக்கிறாள்.”

“பாதுகாப்பான கைகளில்தான் அவளை 

ஒப்படைத்திருக்கிறாயா?”

“அவள் தந்தையின் கைகளில்தான் அவளை ஒப்படைத்திருக்கிறேன்.”

“ஓஹோ! இது வேறா!‌ அண்ணன் சொன்னதைப் போல உண்மையிலேயே மகேந்திர வர்மர் விசித்திர சித்தர்தான் போலிருக்கிறது?!”

“ஆமாம் தந்தையே, ஆனால் அந்த மகா சக்கரவர்த்தியை இப்படியொரு சூழ்நிலையில் சந்திப்பதுதான் மனதிற்குக் கஷ்டமாக இருக்கிறது.”

“ம்… உண்மைதான் மார்த்தாண்டா, பரிவாதனியை நினைக்கும் போது மனது கிடந்து அடித்து கொள்கிறது, தன் அண்ணன்மார்களால் அந்த பெண் நிறையவே இழந்திருக்கிறாள்.” 

“போனதை நினைத்து வருந்துவதில் எந்த அர்த்தமும் இல்லை தந்தையே, இனி ஆவதைக் கவனிப்போம்.”

“ஆமாம் குமாரா, இனியாவது அந்த பெண் நிம்மதியாக இருக்க வேண்டும், அதற்காக எனது ராஜ்ஜியத்தை இழக்கவும் நான் தயார்! நீ என்ன சொல்கிறாய்?”

“மாற்று கருத்திற்கு இடமே இல்லை தந்தையே!”

“நல்லது! இப்போது நம் முன் இருக்கும் பெரிய சவால் உன் பெரிய தந்தையைச் சமாளிப்பது.”

“ஆமாம், அதற்குப் பூர்வாங்கமாக முதலில் நாம் மகேந்திர சக்கரவர்த்தியை உத்தியோகபூர்வமாக சந்திக்க வேண்டும்.”

“திட்டமாக சொல்கிறாயா மார்த்தாண்டா?”

“பொறுப்பை என் வசம் ஒப்படையுங்கள் தந்தையே! இந்த சிக்கலை யாருக்கும் பாதகம் இல்லாமல் நான் தீர்த்து வைக்கிறேன்!” உறுதியோடு சொன்ன மகனை ஆரத்தழுவி கொண்டார் விஷ்ணுவர்த்தன மகாராஜா.

***

கோட்டையின் திட்டி வாசல் திறக்க அதற்குள் தன் ஒற்றை உயர்ஜாதி வெண் புரவியைச் செலுத்தினான் மார்த்தாண்டன். காஞ்சி கோட்டைக்குள் நுழைந்து, அதனைப் பார்க்க வேண்டும் என்பது அவனது நீண்ட நாள் அவா.

ஆனா… இன்று அது, இப்படியொரு சூழ்நிலையில் நிறைவேறும் என்று அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை. 

கோட்டைச் சுவர்களில் காவல் பலப்படுத்த பட்டிருந்தது. இருந்தாலும், மக்கள் இயல்பு வாழ்க்கையில் தங்களை ஈடுபடுத்தி கொண்டிருந்தார்கள். 

வானளாவ உயர்ந்திருந்த மாளிகைகளை லேசாக நோட்டமிட்ட படி தனது புரவியைச் செலுத்தி கொண்டிருந்தான் மார்த்தாண்டன்.

இதே போல நெடிதுயர்ந்த மாளிகைகளை வாதாபியிலும் வேங்கியிலும் கூட பார்க்கலாம். ஆனால் என்ன, இது போன்ற நுண்ணிய வேலைப்பாடுகளை அங்கே காண இயலாது.

கோட்டைக்குள் அவன் புரவி நுழைந்தது முதல் நான்கு பல்லவ வீரர்கள் அவனைச் சூழ்ந்து பின் தொடர்வதை மார்த்தாண்டன் கடைக் கண்ணால் கவனித்திருந்தான். இருந்தாலும் கண்டு கொள்ளவில்லை.

புரவியை ராஜ பாட்டையில் நேராக செலுத்தியவன் அங்கே அரண்மனைப் போல இருந்த பெரிய மாளிகையின் பிரதான வாயிலின் முன்பு போய் நின்றான்.

வீரன் ஒருவன் ஓடிவந்து இவன் புரவியை வாங்கி கொள்ள சுற்று முற்றும் ஒரு முறைக் கண்களை ஓட்டினான் மார்த்தாண்டன்.

“வாருங்கள் மார்த்தாண்டரே!” முழு போர் கோலம் தரித்து தனது உடைவாளை இடைக் கச்சையில் சொருகி கம்பீரமாக மாளிகை வாசலிலேயே நின்றிருந்தார் பொதிகை மாறன்.

அவரைக் கண்ட மாத்திரத்திலேயே மார்த்தாண்டனின் தலைத் தானாக குனிந்தது. அந்த பணிவில் உப சேனாதிபதியின் உள்ளம் மகிழ்ந்து போயிருக்க வேண்டும்! அவர் இதழ்களில் ஒரு இளநகைப் பூத்தது.

“மன்னர் உங்களைக் காண ஆவலோடு காத்திருக்கிறார்.” என்றார் வாஞ்சையாக.

“அது அடியேனின் பாக்கியம்!” மார்த்தாண்டனும் மிகவும் பணிவாக பதிலுரைத்தான்.

“உள்ளே வாருங்கள்.” சொல்லியபடியே இளையவனை அந்த மாளிகையின் விசாலமான மண்டபம் ஒன்றினுள் அழைத்து போனார் பொதிகை மாறன்.

மன்னர் ஏனைய நாட்டு தூதுவர்களுக்குப் பேட்டி அளிக்கும் இடம் போல இருந்தது அந்த மண்டபம். அங்கிருந்த பொன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த பல்லவ சக்கரவர்த்தி, மார்த்தாண்டனை காணவும் எழுந்து அவனை நோக்கி நடந்து வந்தார்.

அந்த செய்கையில் மார்த்தாண்டன் திக்குமுக்காடி போனான்! அவன் தலை இடை வரைக் குனிந்து பல்லவ சக்கரவர்த்தியை கௌரவித்தது! 

மார்த்தாண்டன் அருகில் வந்த மகேந்திர பல்லவர் அவனை ஆரத்தழுவி கொண்டார்! உள்ளம் நெகிழ்ந்தாலும்… ஏனோ அந்த கணம் மார்த்தாண்டனின் மனம் தன் பெரிய தந்தையை நினைத்து கொண்டது.

“வரவேண்டும் வேங்கி நாட்டு இளவரசரே!”

“பல்லவேந்திரா, தங்கள் முன் இப்போது நிற்பது வேங்கி நாட்டு இளவரசன் அல்ல, வாதாபியின் தூதுவன்!”

“வாதாபியின் தூதுவருக்கு மகேந்திர சக்கரவர்த்தி இத்தனைப் பெரிய மரியாதைச் செய்ய வேண்டியதில்லையே மார்த்தாண்டரே!” புன்னகையோடு கேட்டார் பொதிகை மாறன்.

“அது பல்லவர்களின் பரந்த மனது!” 

“உண்மைதான் உண்மைதான்… கொற்கையில் புரட்சி கொடியை உயர்த்த நினைத்தவர்களின் தலையைச் சீவி கோட்டை வாசலில் சொருகாமல் விட்டது… பல்லவ மன்னரின் தயாள குணம்தான்.” உன் பூர்வீகம் அனைத்தும் எனக்குத் தெரியும் என்பது போல சிரித்தார் பொதிகை மாறன்.

“அதைத்தான் நானும் சொல்கிறேன் உப சேனாதிபதி அவர்களே! கொற்கையில் கலகம் செய்தது வேங்கி இளவரசன், அவன் தலையைக் கொய்து நீங்கள் கழுகிற்கு விருந்தாக்கலாம்! ஆனால் இப்போது உங்கள் முன் நிற்பது வாதாபியின் தூதுவன், எனக்கு எந்த தீங்கும் நீங்கள் செய்ய மாட்டீர்கள் என்பதை நான் நன்கறிவேன்! தூதுவரை இம்சிப்பது பல்லவர் மரபல்ல!” சொல்லிவிட்டு மார்த்தாண்டனும் நமுட்டு சிரிப்பொன்றை உதிர்த்தான்.

“தலைப் பத்திரமாக இருக்கும் என்று நன்றாக உறுதி படுத்தி கொண்டுதான் வந்திருக்கிறீர்கள் போல தெரிகிறது?” மாறனின் கேள்வியில் கேலி இருந்தது. ஆனால் மார்த்தாண்டனின் பதலில் அளவுக்கு மீறிய நிதானம் இருந்தது.

“இல்லை உப சேனாதிபதி அவர்களே! என்றைக்குமே இந்த தலையைப் பற்றி நான் கவலைப் பட்டதில்லை! என்றோ ஒரு நாள் போரிலோ அல்லது எதிரியாலோ வெட்டி வீசப்பட இருப்பதைப் பற்றி எதற்காக நான் கவலைக் கொள்ள வேண்டும்? அப்படி நான் கவலைப்பட்டு ஒதுங்கி இருந்தால் எத்தனைப் பெரிய உண்மைக் 

காலத்தோடு கரைந்து போயிருக்கும்?! ஒரு பெண்ணின் தியாகம் அர்த்தமற்றதாகவே ஆகிப்போயிருக்குமே?” 

இளையவன் பேச்சிலிருந்த உண்மையை அங்கிருந்த பெரியவர்கள் இருவரும் ஏற்றுக்கொண்டாற்போல அமைதியாக நின்றிருந்தார்கள். இறுதியாக பல்லவேந்திரரே அமைதியைக் கலைத்தார்.

“தேவையில்லாத தியாகம்!” என்றார் சலிப்போடு.

“அவரவர்க்கு அவரவர் நியாயம்!” பரிவாதனிக்கு சார்ந்து பேசினார் பொதிகை மாறன்.

“சரி சரி, அது போகட்டும்… மார்த்தாண்டரே, இப்படி வந்து அமரும், வாதாபி சக்கரவர்த்தி என்ன சொல்கிறார்?” போனது போகட்டும், இனி நடக்க இப்பது நல்லதாக அமையட்டும் என்று பேச்சை ஆரம்பித்தார் மகேந்திர வர்மர்.

“எல்லாம் உங்கள் திட்டம் போல்தான் நடக்கிறது மன்னவா!”

“என் திட்டமா? நான் என்ன திட்டம் போட்டேன்? புயியவில்லையே மார்த்தாண்டா?!”

“பல்லவேந்திரா! உங்கள் திட்டம் உங்களைச் சரிவர அறியாத புலிகேசி மன்னரிடம் வேண்டுமென்றால் பலிக்கலாம்! ஆனால் உங்களை நன்கறிந்த இந்த மார்த்தாண்டனிடம் பலிக்காது!” இதை மார்த்தாண்டன் சொல்லும் போது அகப்பட்டு கொண்டவர் போல புன்னகைத்தார் மகேந்திர பல்லவர்.

“கோட்டைக்குள் இருக்க வேண்டிய அந்த வயது போன உபாத்தியாயர் கோட்டைக்கு வெளியே… அதுவும் யுத்தம் மூண்டுள்ள இந்த காலத்தில் கோட்டைக்கு வெளியே வந்து, சரியாக எதிரி வீரர்களிடம் சிக்கிக்கொண்டதன் நோக்கம் என்ன?”

“இத்தனையும் புரிந்த மார்த்தாண்டனுக்கு மீதி புரியவில்லையா?”

“நிச்சயமாக புரியவில்லை பல்லவேந்திரா! போரைத் தவிர்க்க நினைக்கிறீர்கள், அதற்கும் உங்கள் கடலோர கிராமத்தில் நடக்கும் சிற்ப வேலைகளுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்று மட்டும் புரிகிறது, சரிதானா?” அத்தனைச் சிறிய வயதில் இத்தனைப் புத்தி கூர்மையோடு இருக்கும் அந்த வாலிபனை வாஞ்சையோடு பார்த்தார் மகேந்திர வர்மர்.

“உம் எண்ணம் சரிதான் மார்த்தாண்டரே! வைஜெயந்தி பட்டணத்திற்கு நடந்த கதியை நான் நன்கறிவேன், அது காஞ்சிக்கு நடக்க கூடாது! அதைத் தவிர்ப்பதற்காக நான் என் உயிரைக் கூட கொடுப்பேன்.”

“வேண்டாம் வேண்டாம், உத்தமர்களது உயிர் மக்களுக்கு அவசியம் வேண்டும், அதைத் தவிர்த்து இப்போது எதைக் கொடுத்து இந்த போரைத் தவிர்க்க நினைக்கிறீர்கள்?”

“போருக்கு நான் அஞ்சவில்லை மார்த்தாண்டா!”

“இதை நீங்கள் சொல்லவும் வேண்டுமா? அதைத்தான் குழந்தைக் கூட அறியுமே!”

“பாண்டியன் பெரும்படையுடன் பல்லவர்ளோடு கைக்கோர்க்க சித்தமாக இருக்கிறான், பாண்டவர்களும் பல்லவர்களும் கைக்கோர்க்கும் பட்சத்தில் எத்தனைப் பெரிய நாசம் விளையும் என்று நான் சொல்ல தேவையில்லை மார்த்தாண்டா!”

“வாதாபியின் படை பலமும் அத்தனைச் சாமான்யமானதல்ல பல்லவேந்திரா!”

“அதையும் நான் நன்கறிவேன்! இத்தனைக் காலமும் இடைவிடாது பல்லவ சிற்பிகள் செய்த அரும்பெரும் சாதனை… இந்த போரினால் அத்தனைச் சுலபத்தில் அழிந்து போக நான் ஒருபோதும் விடமாட்டேன்!”

“புரிகிறது மன்னவா.” இவர்கள் பேச்சு இப்படியே நடக்க மாறன் அமைதியாக அமர்ந்திருந்தார். மார்த்தாண்டனே இப்போது மீண்டும் ஆரம்பித்தான்.

“போர் என்ற ஒன்று மூண்ட போதே உங்கள் சிற்பங்களைக் காக்க ஏதாவது ஏற்பாடு செய்துதான் இருப்பீர்கள்! விசித்திர சித்தரின் மனதிற்குள் இன்னும் ஏதோவொன்று இருப்பது போல்தான் எனக்குத் தோன்றுகிறது.”

“ஆமாம் மார்த்தாண்டா, வயதில் மூத்தவன், அனுபவஸ்தன் என்ற முறையில் சொல்கின்றேன்… இந்த பெண்கள் வலையில் மட்டும் கண்டிப்பாக சிக்கிக்கொள்ளாதே!” சம்பந்தமே இல்லாமல் மகேந்திர வர்மர் பேச இப்போது மார்த்தாண்டன் பொதிகை மாறனை திரும்பி பார்த்தான். அவர் ஒரு சிரிப்போடு அப்போதும் 

அமைதியாகவே அமர்ந்திருந்தார்.

“பல்லவேந்திரா!”

“ஆமாம் மார்த்தாண்டா! ஒருத்தி என்னவென்றால் என்னையே தியாகம் செய்து என்னை வதைத்தாள்! இன்னொருத்தி என்னவென்றால், அந்த தியாகத்திற்கு நீங்கள் என்ன கைம்மாறு செய்ய போகிறீர்கள் என்று என்னை வதைக்கிறாள்!”

“ஓஹோ! தியாகம் செய்தவரை நானறிவேன், கைம்மாறு செய்ய சொல்பவர் யார் பல்லவேந்திரா? அதை நான் அறிந்து கொள்ளலாமா?”

“வேறு யார்?! என் பட்டமகிஷிதான்!” 

“அப்படியா?!” மார்த்தாண்டன் ஆச்சரியப்பட்டான்.

“ஆமாம், போர்க்களத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் இல்லையா? எதிரியாக எனக்கெதிரே நிற்பது என் மைத்துனர்கள், அவர்களால் என் ராஜ்ஜியத்திற்கு எதுவும் நடக்காது என்பது அவர்களுக்கு உறுதி! ஆனால்… எனக்கேதாவது நடந்தால் பட்டமகிஷி உறுதியான மனதோடு அதை ஏற்றுக்கொள்வாள், இன்னொருத்தி தாங்கமாட்டாள்!”

“அதற்காக?”

“அவள் உரிமைகள் அனைத்தையும் விட்டுக்கொடுக்க அவள் தயாராக இருக்கிறாள்.”

“இது நியாயமில்லை பல்லவேந்திரா!” மார்த்தாண்டனின் குரலில் அளவுக்கு மீறிய ஆட்சேபனை இருந்தது.

“அது எனக்கும் புரிகிறது! ஆனால் சம்பந்தப்பட்டவள் இதைத்தானே விரும்புகிறாள், நான் என்ன செய்யட்டும்?” 

“உங்களுக்காக உங்கள் தேவி அனைத்தையும் தியாகம் செய்யலாம், ஆனால் மைத்ரேயி! அவள் அபிப்பிராயம் என்னவாக இருக்கும்? நாளை தனது தாயைப் பற்றிய உண்மைகள் அனைத்தும் தெரியும் போது அவள் உங்கள் மீது குற்றம் சுமத்துவாள் அல்லவா?”

“உண்மைகள் அனைத்தும் மைத்ரேயிக்கு இப்போது தெரியும் மார்த்தாண்டா!”

“ஓ… சொல்லிவிட்டீர்களா?”

“அவள் தாயைப்பற்றி அவள் கொண்டிருந்த தவறான அபிப்ராயத்தை மாற்ற சொல்லப்பட்டிருக்கிறது!”

“அப்படியென்றால்… நீங்கள் இன்னும்…”

“அடிகளுக்குக் கிடைத்த பாக்கியம் இன்னும் அடியேனுக்குக் கிடைக்கவில்லை!”

“ஓ…” 

“மார்த்தாண்டா! வாதாபி தூதரிடம் நான் சொல்லுவதெல்லாம் ஒன்றுதான்! பல்லவ எல்லைக்குள் இருக்கும் எந்தவொரு கிராமத்திற்கும் எந்த தீங்கும் விளைவிக்காமல் வாதாபி சைனியங்கள் பின்வாங்கும் பட்சத்தில், மங்களேசரின் மகளான பரிவாதனி… தன் தாயாதிகளோடு எந்த உரிமைப் போராட்டத்திலும் இறங்க மாட்டாள்!”

“இதுதான் உங்கள் உறுதியான முடிவா பல்லவேந்திரா?”

“சம்பந்தப்பட்டவர்கள், அவர்களது நலத்தில் தீராத அக்கறைக் கொண்டவர்கள் என சகலரும் கலந்தாலோசித்து எடுத்த முடிவு இது மார்த்தாண்டா!”

“ம்…” சிறிது நேரம் சிந்தனை வசப்பட்ட மார்த்தாண்டன் பல்லவேந்திரரை நிமிர்ந்து பார்த்தான்.

“பல்லவேந்திரரே! தியாகம் உங்கள் தேவி பரிவாதனியோடு நிற்கட்டும்! அது மைத்ரேயியை தீண்ட வேண்டாம்! உங்கள் தூதை வாதாபி மன்னரிடம் ஒப்புவித்துவிட்டு நல்ல பதிலோடு வருகிறேன்.” சொல்லிவிட்டு விடுவிடுவென நடந்துவிட்டான் மார்த்தாண்டன். அவன் பேச்சிலும் நடையிலும் கோபம் தெரிந்தது.

அதிர்ந்த பார்வையோடு பொதிகை மாறனை பார்த்தார் மகேந்திர பல்லவர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!