புன்னகை பூக்கும் பூ(என்) வனம்- முழு நாவல்

பூவனம்-1

திருநெல்வேலி மாவட்டம் மாங்குடி கிராமத்தில் விடியலை ஆராவாரமாய் வரவேற்று அன்றைய தினத்தை தொடங்கி வைத்தது அந்த பெரிய கிராமத்து வீடு. பல தலைமுறைகளாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தவர்களின் பாரம்பரிய வீடு அது.

பெரிய வரவேற்பறையுடன் கூடிய நடு முற்றமும் அதன் இரு பக்கங்களிலும் முறையே மூன்று அறைகளும், அதனை தாண்டிய பெரிய சமையலறையும் பின்புறம் துளசி மாடத்துடன் தொடங்கி அழகிய தோட்டமும் விரிவடைய அங்குள்ள பெரிய கிணறு பழமையை பறை சாற்ற வீட்டின் முன்புறம் பெரிய திண்ணையும் அதனை ஒட்டியே விருந்தினர் அமர்வதற்காக மரப்பலகைகளால் ஆன இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது…

வீட்டின் உள்கட்டமைப்பு பாரம்பரியம் மாறாமல் பிரம்மாண்டமாய் அமைந்திருப்பது அந்த வீட்டின் சிறப்பு. ஜன்னல்களும் கதவுகளும் தேக்கு மரப்பலகைகளால் உருவாக்கப் பட்டிருந்தன.

அந்த பெரிய வீட்டின் சமையற்கட்டில் இருந்து மீனாட்சி அம்மாள் குரல் கொடுத்து கொண்டிருந்தார். “இன்னும் எவ்ளோ நேரம் ஆகும். எல்லா வேலையும் முடிக்க. சீக்கிரம் ஆகட்டும்..

“ஏலே முத்து… என்னடா பண்ற? உன்னை ஒரு வேலை செய்ய சொன்னா அத செஞ்சு முடிக்கிற வரைக்கும் பின்னாடி சாவி குடுத்துகிட்டே இருக்கணுமா என்ன? மச்சுல{மாடியில} கிழக்கால இருக்குற அறையில எல்லா மெசினும் வேலை பாக்குதாணு இன்னொரு தடவ ஓட விட்டு பாரு.

சின்ன தம்பி கிளம்பிட்டனா?” என்று அவர் ஓங்கிய குரலில் அந்த வீடே அதிர்ந்தது.

மாநிறம், கூர்மையான நாசியின் இடது பக்கம் பளபளக்கும் வைரங்கள் பதித்த மூக்குத்தியில் களையான முகம், பச்சை நிற சிறு பார்டருடன், மஞ்சள் நிற ஆரணி காட்டன் புடவையில் மீனாட்சி அம்மாள், அந்த பெரிய வீட்டின் தலைவி. அவரின் கம்பிர குரலும், மிடுக்கான தோற்றமும் அனைவரையும் தன் கண் அசைவிலே ஆட்டிப்படைக்கும் பார்வையும் அவரின் ஆளுமையை சொல்லியது.

“போதும் மீனா. இன்னும் எத்தன தடவ தான் அவனுக்கு அந்த வேலைய செய்ய சொல்லுவ. எல்லாம் சரியா தான் இருக்கு நானே நேத்து பார்த்துட்டேன்” என்று கூறியபடியே தும்பை பூ நிறத்தில் காட்டன் வேஷ்டி மற்றும் சட்டையில் வந்தவர் அந்த வீட்டின் தலைவர் சுப்பையா. மிகவும் அமைதி. தோற்றம் மட்டுமல்ல, சொல்லும் செயலும் அப்படியே. ஊரின் பெரிய தனக்காரர்களில் ஒருவர். விவசாயத்திலேயே வளர்ந்து, அதனுடன் வாழ்ந்து இப்பொழுது அதனை வாழ வைக்க போராடி வெற்றி காண்பவர்களில் ஒருவர். தொட்டதெல்லாம் பொன்னாகும் கைராசிக்காரர்.

தன் பெரிய மகன் தங்கும் அறையில் புதிதாய் மாட்டப்பட்டிருந்த குளிர்பதனி கருவி(Air-conditioner) பற்றித் தான் தன் மனைவியின் கேள்விக்கு பதிலாக அவர் சொன்னது.

“அந்த சுடு தண்ணி மெசினும்(ஹீட்டர்) சரியா தான் வேலை செய்யுது. நீ அடுத்து அத பத்தி தான் விசாரிப்ப. படுக்கை எல்லாம் தட்டி போட்டாச்சு. காத்தாடி ஓட வைச்சு பார்த்தாச்சு போதுமா உன் சந்தேகம் தீர்ந்ததா? செத்த நேரம் அமைதியா உக்காரு. இப்ப தான் நடக்க கத்துகிட்ட புள்ள கணக்கா ஓயாம இங்கிட்டும் அங்கிட்டும் வீட்டை அளந்துகிட்டு இருக்காதே” என்று தன் தலைவர் பதவியை வீட்டினில் நிலை நாட்டினார்…

“இந்த அதிகாரத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. ஆக வேண்டிய காரியத்த நீங்களும் பாக்க மாட்டிங்க. என்னையும் பாக்க விடமாட்டிங்க.

கோவில்ல புள்ளங்க பேருக்கு அபிஷேகமும் அர்ச்சனையும் சொல்லி வச்சிருந்தேன் அது நல்ல படியா முடிச்சுட்டு வர்றது தானே உங்களுக்கு நான் சொல்லிருந்த வேலை அதுக்குள்ள வீட்டுக்கு வந்தா என்ன அர்த்தம்? நின்னு சாமிய நிதானமா கும்பிட்டு வர வேண்டியது தானே.

இங்கே சீக்கிரம் வந்து என்ன காரியம் ஆக வேண்டியிருக்கு உங்களுக்கு? இன்னும் சின்னதம்பிய காணோம். நேரத்துக்கு ஒரு வேலைய செஞ்சு முடிக்க யாருக்கும் தெரிய மாட்டேங்குது. எல்லாத்தையும் நாம தான் ஞாபகப்படுத்த வேண்டியிருக்கு.

வீட்டுக்கு வந்த மருமகளாச்சும் பொறுப்ப கைல எடுத்துகிராளா? அதுவும் இல்ல. ஒண்ணுமண்ணா இருக்குறோம்னு தான் பேரு. மாசத்துல பாதி நாள் தோப்பு வீட்டுல போய் உக்கார்ந்துகிட்டு சாப்பாட்டுல இருந்து சகலத்தையும் குடுத்தனுப்ப சொல்லி நம்மளையே ஏவுறது.

எனக்கு ஒத்தாசையா இருக்கும்ன்னு நினைச்சு என் அண்ணன் பொண்ணையே மருமகளாக்கி அழகு பார்த்ததுக்கு அவள நான் ஊஞ்சல்ல வச்சு ஆட்டாம இருக்குறது ஒண்ணு தான் குறைச்சல். எல்லாம் என் கைவேலைய வாங்குவேன்னு கங்கணம் கட்டிகிட்டு அலையுது. நான் வாங்கி வந்த வரம் அப்படி. யாரையும் ஒண்ணும் சொல்றதுகில்ல” என்று தன் சிக்கன உரையை சீக்கிரமாய் முடித்து பெரு மூச்சை விட்டபடியே வீட்டின் வரவேற்பறையை நோக்கி வந்தார்.

“இவ்ளோ நீளத்துக்கு நீ பேசலன்னு யார் அழுதா இங்கே? உன் பேச்ச கேக்க இங்கே நான் மட்டுந்தான் இருக்கேன். கோவில்ல பூஜை எல்லாம் நல்ல படியா முடிஞ்சுருச்சு. நிதானமா சாமிய கும்பிட்டு தான் வந்தேன். உன் சின்ன புள்ள தோப்பு வீட்டுல இருந்தே பெரியவன கூட்டிகிட்டு வர்றதுக்கு கிளம்பிட்டான். உன்ற மருமகபொண்ணு இன்னும் செத்த நேரத்துல வந்துருவா. அவளுக்கும் வண்டி அனுப்பிச்சாச்சு. உன் பேரபயலுக்கு பின்னாடியே போய் இட்லி ஊட்டி விட தயாராயிரு” என்று சலித்துக்கொண்டே பின்னே வந்தவரை முறைத்துப் பார்த்தார் மனைவி.

“இப்படியே எனக்கு ஏட்டிக்கு போட்டியா பேசிகிட்டு இருக்காம வண்டி சீக்கிரமா வந்துருச்சான்னு சின்னவன் கிட்ட செல்போனுல கேளுங்க. நான் கேக்கலாம்ன்னா என் கைக்கு நின்னு தொலைய மாட்டேங்குது. ஒரு இடத்த அமுக்குனா எங்கேயோ போய் நிக்குது. என்னமோ ஓட்டப்பந்தயத்துல நம்மள முந்திகிட்டு ஓடுற மாதிரியே இருக்கு. நமக்கு இதெல்லாம் சரி வராது. அந்த பெரிய போனுல தான் நமக்கு பேச வரும்” என்றவரிடம்

“ஆமா அதுல கூட நீயா நம்பர போடமாட்ட. யாரவது போட்டுகுடுத்தா தான் பேசத் தெரியும்… அத சொல்ல மறந்திட்டியே மீனாட்சி” என்று மனைவியை வாரிக்கொண்டே பெருங்குரலெடுத்து சிரித்தார்.

அந்த சிரிப்பிற்கு முறைப்பான பார்வையையே மனைவி பதிலாக தர அப்பொழுது தான் சுப்பையாவிற்கு செய்த தவறு புரிந்தது. இந்த முறைப்பினை சமாதனம் செய்வது எப்படி என்று சற்றே திண்டாடித் தான் போனார். இன்று சமாதானம் செய்யாமல் போனால் நஷ்டம் அவருக்கு தான். ஏனென்றால் இன்றைய நளபாகம் அப்படி.

எப்பொழுதும் தாராளமாய் தான் அவர் வீட்டில் உணவுவகைகள் வரிசை கட்டும் இன்று அது சற்று அதிகப்படி என்றே சொல்ல வேண்டும். ஐந்து வருடத்திற்கு பிறகு வருகை தரும் தன் பெரிய மகனிற்கு பிடித்த வகை உணவுகளே கூடுதலாக இடம் பெற்றிறுக்க அதில் குறிப்பாக இனிப்பு வகை பதார்த்தங்களே அந்த பெரியவரின் பார்வையை மையம் கொண்டிருந்தது.

இரண்டு வருடங்களாக தனக்கு இல்லை என்று அவர் நினைக்கும் சர்க்கரை வியாதியை இருக்கின்றது என்று கூறி அவர் மனைவி அவருக்கு செய்யும் பணிவிடை கொஞ்ச நஞ்சமல்ல. மூன்று வேளையும் கஞ்சியும், கசாயங்களும் உணவில் நீங்கா இடம்பெற இனிப்பு என்ற சொல்லிற்க்கு கூட தடா சட்டம் போட்டு வைத்தார் அவரின் சகதர்மினி.

அவருக்கு மட்டும் எப்பொழுதும் பத்தியச் சாப்பாடு செய்வதில் தன் முழுத் திறமையையும் காட்டி அதில் வெற்றிகொடி நாட்டிக் கொண்டிருந்தார். அவரை ஏமாற்றி தனக்கு வேண்டியதை உண்பதற்கு சுப்பையாவும் தலையால் தண்ணிர் குடிக்காத குறை தான். ஆனாலும் அவரை தழுவியதென்னவோ தோல்வி மட்டுமே…

இன்று மகனிடம் பேசும்போது சற்று கண்ணசந்த நேரத்தில் இனிப்பை சாப்பிட்டு விட வேண்டும் என்று திட்டம் போட்டவருக்கு இப்பொழுது மனைவி பார்க்கும் முறைப்பு எங்கே தனக்கு இன்றும் கஞ்சியும் கசாயமும் கொடுத்து உணவு மேஜையில் அமர விடாமல் செய்து விடுவாரோ என்ற பயம் எட்டி பார்த்தது.

“அது மீனா. நீ நம்பர போட்ரதுகுள்ள அடுத்த வேலை வந்துடுதா அப்போ வேற யாரவது தானே போட்டு குடுக்கவேண்டியிருக்கு.. அத சொன்னேன்.. வேற ஒண்ணும் தப்பா சொல்லல” என்று கூறி பெரு மூச்சு விடுவது இவரின் வேலையாகிப் போயிற்று.

அவரின் சமாதான பேச்சிற்கு செவி சாய்க்காமல் “ஆரத்தி கரைச்சு வைக்க சொன்னேன் இந்த செவ்வந்தி பிள்ள என்ன பண்னுதோ. சமயகட்டுல ஒரு வேலை தூங்கிட்டாளோ நான் போய் பாக்கறேன். நீங்க வாசல்ல போய் நில்லுங்க. புள்ளைங்க வந்ததும் கொஞ்சம் நிக்க வைச்சுட்டு ஒரு குரல் குடுங்க” என்று ஆணையிட்டவாறே கிளம்பி விட்டார் தனது ஜாகைக்கு.

“இப்போ இவ சமாதானமா போறாளா இல்ல கோபமா போறாளா தெரியலையே. வரவர இவ கிட்ட எப்படி பேசனும்னே எனக்கு மறந்து போயிருது. இத தான் வயசாயிருச்சுன்னு சொல்லிக்கிறாங்களோ?” என்று முணுமுணுத்தவாறே சுப்பையா முன்வாசலுக்கு வருவதற்கும் வெள்ளை நிற டவேரா வந்து நிற்பதர்க்கும் சரியாக இருந்தது.

“மீனாட்சி புள்ளைங்க வந்துட்டாங்க வெரசா வா” என்று கூறியபடியே முன்னே சென்று பிள்ளைகளின் அழகு முகத்தை பார்க்க நின்று கொண்டார்.

இரண்டு இளைஞர்கள் அளவான உயரத்துடன் கூடிய கம்பீரமான தோற்றத்துடனும், மிடுக்கான நடையுடனும் இறங்கி வர அவர்களை வரவேற்கும் விதமாய் “வாடா பெரியதம்பி. நல்லா இருக்கியா?” என்று கேட்டவாறே ரிங்கிள் ஃப்ரீ செக்குடு சர்ட், ப்ளூ காட்டன் ஜீன்ஸில் இருந்த தன் பிள்ளையை மேலிருந்து கீழாக பார்த்து கண்களில் நிறைத்துக் கொண்டார்.

அவரின் கேள்விக்கு பதிலாக தன் தலையை மட்டும் அசைத்தான் பெரியதம்பி.

“அம்மா எங்கேப்பா?” என்று வினவிய, பிளாக் ஜீன்ஸ், டீ சர்ட்டில் இருந்த சின்ன தம்பியை பார்த்து

“ஆரத்தி கரைச்சிட்டு வர்றேன்னு உள்ளார போனா இப்போ வந்துருவா கொஞ்சம் நேரம் நில்லுங்கப்பா” என்று திரும்பவும் அவர் மனைவி ஆரத்தி தட்டுடன் வருவதற்கும்

மறுபக்கம் மெரூன் நிற ஃப்லோரல் எம்பிராய்டரி சில்க் ஷிஃபான் சேலையில் இருந்த அவர்களின் சின்ன மருமகளும் சின்ன தம்பியின் மனைவியுமான செந்தாமரை தன் பிள்ளையுடன் வந்து இறங்குவதற்கும் சரியாய் இருந்தது. மாநிறத்தில் கிராமத்து களையுடன் மஞ்சள் பூசிய முகமும், எடுப்பான மூக்குத்தியும் தனி அழகை கொடுக்க சின்ன தம்பிக்கு பொருத்தமாய் இருந்தாள் அவன் மனைவி செந்தாமரை.

ஆரத்தி எடுக்க முன் வந்த அன்னையின் கையை தன் கை கொண்டு தடுத்த பெரியதம்பி “எனக்கு எதுக்கு ஆரத்தி? இவங்களுக்கு எடுங்க. குடும்ப சகிதமா நிக்கிறாங்க, சுத்தி போடுங்க”. என்று கூறியபடியே அவர்களை தாண்டி உள்ளே நுழைந்தவன்

“முத்து வண்டியில இருக்குற சூட்கேஸ் எல்லாத்தையும் என் ரூமுக்கு கொண்டு வந்து வை” என்று தன்னறைக்கு விரைந்து விட்டான்.

வினாடி நேரத்தில் தான் செய்ய வந்த வேலையை தலைகீழாய் மாற்றி விட்டவனை பார்த்து “என்ன காரியம் செய்து விட்டான்” என்று எண்ணவும் வழி விடாது, “ஆள் மாற்றி செய்ய வைத்து விட்டானே” என்ற ஆதங்கத்தில் ஆரத்தி எடுத்து முடித்த கையுடன் முகம் சுளித்துக் கொண்டே கோபமாக உள்ளே சென்று விட்டார்.

மாமியாரின் கோபமான முகம் மருமகளை உரசிவிட்டுத் தான் சென்றது. “இப்போ இவங்க வந்து ஆரத்தி எடுக்கலைன்னு யார் அழுதா? இப்படி முகத்தை சுளிக்கிட்டு எடுக்குறத்துக்கு பதிலா அத சும்மாவே கீழே ஊத்தி இருக்கலாம். என்னென்ன சொல்லி திட்டிகிட்டே எங்களுக்கு ஆரத்தி எடுத்தாங்களோ தெரியலையே. இதுக்கு என்ன வந்து சேரபோகுதோ? கடவுளே எங்கள காப்பாத்துப்பா” என்று பாதி முறைப்பாகவும் மீதியை நக்கலுடனும் பேசியவளை பார்த்த சின்னத்தம்பி

“ஏண்டி எங்கம்மா நல்ல எண்ணத்தோட எதுவும் செஞ்சதில்லையா? இப்படி அழுத்துகிறே… பெத்தவங்க எந்த காரியம் செஞ்சாலும் அது நல்லதுல தான் முடியும். அத நினைப்புல வச்சுக்கோ. எதுகெடுத்தாலும் எதிர்த்து பேசிக்கிட்டு திரியாதே. ஏற்கனவே அண்ணன் பேசாம போயிருச்சுன்னு கவலை பட்டுகிட்டு இருக்காங்க கூட நீயும் போய் பேசி ஏதாச்சும் இழுத்து வைக்காதே” என்று சீறியவனை முறைத்து பார்த்தவள்

“ஆமாமா…இங்கே நான்தான் இல்லாததும் பொல்லாததும் சொல்லி இழுத்து வைச்சுகிட்டு இருக்கேன். உங்கம்மாவுக்கு ஒண்ணுமே பேச தெரியாது. பச்ச புள்ள பாருங்க, இங்கே உங்ககிட்டயும் உங்கம்மாகிட்டேயும் பேச்சு வாங்கியே என் பாதி ஜீவனம் இப்பவே போயிருச்சு. மீதிக்கு இன்னும் எத்தன நாள் தாங்குமோ தெரியல” என்று கணவனை சீண்டியவாறே

“சும்மாவா சொன்னாங்க நினைப்பு இருந்தா மட்டும் பாத்தாது, அதததுக்கும் கொடுப்பினை வேணும்”…” என்று தன் மாமியாரின் இன்றைய இயலாமையை எண்ணி முணுமுணுத்தபடியே அங்கிருந்து நகர்ந்தாள்…

பூவனம்—2

ஆரத்தி எடுத்து விட்டு உள்ளே வந்த மீனாட்சி அம்மாளுக்கு மனம் ஆறவில்லை.

“இப்போ நான் என்ன பண்ணிட்டேனு என்கிட்ட முகங்குடுத்து ஒரு வார்த்தை கூட பேசாம போறான்… பெத்த பிள்ளைக்கு ஒரு ஆரத்தி எடுக்குற பாக்கியமும் இல்லாம போயிருச்சா எனக்கு. எத்தன ஆசையா வந்தேன். கொஞ்சமாச்சும் ஏறெடுத்து பார்த்தானா அவன்?” என்று புலம்ப

“விடு மீனாட்சி. ரொம்ப தொலவுல இருந்து வந்துருக்கான், அந்த அசதியா இருக்கும். அவனுக்கு காபித்தண்ணிய குடுத்தனுப்பிட்டு சாப்பாடு தயாராயிருச்சானு பாரு.” மனைவி வருந்துவதை தடை செய்தவாறே சுப்பையாவின் சிந்தனை மகனின் நடவடிக்கையில் நிலைத்தது.

“நான் மேல தான் போறேன் குடுங்கம்மா” என்று தன் அண்ணனுக்கு பிரியமாய் வைத்த கருப்பட்டி காபியை கொண்டு சென்ற சின்னத்தம்பியை

தன் அறையின் ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்துகொண்டிருந்த பெரியதம்பி வரவேற்றான். “என்னடா நீயே கொண்டு வந்துட்ட, யார்கிட்டயாவது குடுத்து விட்ருக்கலாமே”

“இதுல என்னண்ணா இருக்கு. மேல வரும்போது அப்படியே எடுத்துட்டு வந்துட்டேன்.” என்றவனிடம் இருந்து காபியை வாங்கி பருகியவன் ஒரு மிடறு முழுங்கிக்கொண்டே

“இந்த டேஸ்ட் எங்கே போனாலும் கிடைக்கதுடா” என்று சிலாகித்தவாறே மீதியை உள்ளே அனுப்பினான்.

“அதே மாதிரி தானே வீட்டுல உள்ளவங்ககிட்ட பேசுறதும். ஏன் நீ யார்கூடயும் பேசாம வந்துட்டே? அம்மா ரொம்ப கவலப்படுறாங்க” என்று தன் அண்ணன் செய்ததில் தனது பிடித்தமின்மையை காட்டியவனிடம்

“நான் பேசினா இன்னும் கொஞ்சம் கவலப்படுவாங்க, அதான் வாய இறுக்க மூடிகிட்டு இருக்கேன். கொஞ்ச நாள் நான் மௌனச் சாமியாரா இருக்குறதுனு முடிவு பண்ணிட்டேன்” பெருமூச்செரிந்தவாறே சொன்னவன்

“நீ எப்படி இருக்கே? சொல்லு” என்று நலம் விசாரித்தான்..

“உன்முன்னாடி தானே நிக்கிறேன். நீயே பார்த்துக்கோ எப்படி இருக்கேன்னு” என்றவனை கண்களால் அளந்தான் பெரியவன்.

மாநிறத்தை எட்டி பார்க்கும் நிறத்துடன் உழைத்து உரமேறிய தேகமும், புன்னைகை முகமும், கம்பீரத்தை கூட்டிட அவன் கண்களின் மின்னிய ஒளி மகிழ்ச்சியான வாழ்க்கையின் அளவினை காட்டியது…

“எத்தன மார்க் போட்டே? தேறுவேனா நான்.. சொல்லுண்ணா”..”

“உனக்கு என்னடா? பர்ஸ்ட் கிளாஸ் தான் நீ. உன்ன இப்படி பாக்குறதுல ரொம்ப சந்தோசம் எனக்கு”

“ஆனா எனக்கு சந்தோசம் இல்லன்னா. நீ இப்படி இருக்குறது எனக்கு பிடிக்கல. என்னதான் முடிவு பண்ணிருக்கே?” அங்கலாய்த்தவனிடம்

“எல்லாம் நல்லதா தான் யோசிச்சு வச்சுருக்கேன். கொஞ்ச நாள் ஆகும் அத செஞ்சு முடிக்க. இங்கிருந்து போய் ரொம்ப கஷ்டபப்ட்டு. இப்ப அத விட பெரிய கஷ்டத்தோட தான் வந்திருக்கேன். இங்கே வர்றதுக்கு நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்”

“வெள்ளைக்காரனுக்கு எவ்ளோ வேலை செஞ்சு குடுத்தாலும் பத்தாது, பணத்த காட்டியே நம்மள எல்லாம் அடிமையாக்கி வச்சுருக்கான். இப்பவும் விடுவேனான்னு நோக வச்சுட்டான். மாசத்துக்கு அரைகோடி குடுக்குறேன் ஒரு கோடி குடுக்கறேன்னு எங்க உடம்புல கொடிபோர்த்துற வரைக்கும் ஆசைகாட்டியே சக்கையா பிளிஞ்செடுத்துடுவான்”.

“இப்போதைக்கு பழைய கம்பெனில தான் வேலைக்கு போகப்போறேன். என்ன? சம்பளத்தை வாரிகுடுக்குற வேலைய விட்டுட்டு வந்துட்டான் மடபயனு எல்லோரும் பின்னாடி பேசுவாங்க. அப்ப மட்டும் காது கேட்காது மாதிரி இருந்துட்டா பழகிரும். உன்ன மாதிரி விவசாயத்தையே படிச்சுட்டு இங்கேயே இருந்திருந்தா இவ்ளோ கஷ்டம் எனக்கு வந்துருக்காது…” என்று சிரித்தபடியே சொன்னவன்

“எங்கேடா நண்டுபயல காணோம்… ஸ்கைப்ல(video call) பேசுறப்ப எல்லாம் துள்ளிக்கிட்டு வருவான் எங்கேடா போனான்”…?”

“இப்போ அவனுக்கு தூங்குற நேரம். நீ குளிச்சுட்டு சாப்பாட்டுக்கு கீழே வா. துரைக்கு அப்போ முழிப்பு வந்துருக்கும். ஒரு ஓட்டப்பந்தயமே நடக்கும் வீட்டுக்குள்ளே பாக்கலாம்” தன் பிள்ளையின் பெருமை பேசினான் சின்னதம்பி…

“வர்றேன் சின்னா. போகும்போது இந்த ரெண்டு பெட்டியும் கொண்டு போ, எல்லோருக்கும் கிப்ட்ஸ் இருக்கு. நீயே பார்த்து பிரிச்சு குடுத்திடு. அப்பறோம் இந்த பெரிய பெட்டியில இருக்கறதெல்லாம் நண்டு பயலுக்கு தான். இத யாருக்கும் குடுத்திடாதே” என்று மற்றொரு பெட்டியை சுட்டிக்காட்டியவனின் கண்களில் பிள்ளைக்கான பாசம் அப்பட்டமாய் தெரிந்தது.

உணவு உண்ண கீழே வந்தவனை அந்த வீட்டு இரண்டு வயது நண்டுப்பயலின் அமளி துமளியான குரல் வரவேற்றது.

சோட்டா பீம் டீ-சர்ட்டும் அதற்குரிய சார்ட்சுடன் கால்களில் தண்டைச்சலங்கை சத்தமிட, கண்களில் விழும் சுருட்டை முடியும் பளபளக்கும் பளிங்குக் கண்களும் பார்ப்பவர்களை எல்லாம் வசீகரிக்க, பால் பற்களை காட்டிய வண்ணம் அவன் சிரித்துகொண்டு இருந்ததை நாள் முழுவதும் பார்த்தாலும் அலுக்காது.

சாப்பாடு ஒரு வாய் வாங்காமால் தன் தாய்க்கு வீட்டை சுற்றிக் காண்பித்துகொண்டிருந்தவன் பெரியப்பனின் கைகளில் வகையாய் மாட்டிகொண்டான்…

“வாடா என் சிங்ககுட்டி உங்கப்பன் சொன்ன மாதிரியே எல்லோரையும் ஓட வைக்குற போல. சித்த நேரம் ஒழுங்கா உக்காருடா” என்றவனிடம்

“அவனை கீழே விட்ராதீங்க பெரியத்தான். ஒரு வாய் உள்ளே திணிச்சுட்டு இறங்கட்டும்” என்று கூறிய படியே வந்த செந்தாமரை சாதாரண காட்டன் சேலைக்கு மாறியிருந்தாள்.

ஒரு கவளம் உணவை திணிக்க “வே…ணாம்..னாம்” என்று மழலையில் மிளிற்றியவாறே தட்டி விட்டவன் கீழே இறங்க முயற்சிக்க இந்த கால சொக்குப்பொடியான கைபேசியை அவன் கைகளில் பெரியப்பன் திணிக்கவும் அமைதியாய் அவன் மடியில் அமர்ந்து ஆராயத் தொடங்கி விட்டான்…

பெரிய தந்தை பேச வைக்க இடையிடையே அவனின் உணவும் உள்ளே போனது…

“உன் பேர் சொல்லுடா குட்டி”

“ச..தி..தர்”…(சசிதரன்)”

“அப்பா பேரு சொல்லுங்க..”

“ப்பா… பே..ரு… சி..த…ம்பி”…” என்று கூற

செந்தாமரையோ “டேய்.. நான் என்ன சொல்லி குடுத்தேன்?” என்று குரலுயர்த்த

“மு…ல..லி த..ர்..(முரளிதரன்)” என்று சரியாய் சொன்னான்

“அம்மா பேரு என்ன தங்கம்”..?”.

“ம்மா….பே”…” என்று யோசித்தவன் தன் தந்தையை பார்க்க

“அப்பா சொல்லிருக்கேனேடா… சொல்லு… காலையிலே பிஸ்கி (பிஸ்கட்) சாப்பிடும்போதும் சொன்னியே செல்லம்”…”

“ஹான்” என்ற குரலில் தெரியும் என்று தலையாட்டிவிட்டு

“லோ…த..த..ஸ் (லோட்டஸ்)” என்று முடிக்க அங்கே உள்ளவர்களின் சிரிப்பால் அந்த வீடே நிறைந்தது.

ஒரு மணிநேரத்திற்கும் முன்னால் இதே வரவேற்பறையில் ஒருவரையொருவர் முகம் திருப்பி சென்ற பெரியவர்களை தன் மழலைப் பேச்சால் ஒன்றிணைத்து விட்டான் அந்த வீட்டின் சின்ன கண்ணன்.

“புள்ள முன்னாடி கூப்பிட்றதும் இல்லாம அவனுக்கும் சொல்லிக்கொடுத்து இப்ப என் மானமே போகுது” என்று முணுமுணுத்த செந்தாமரையை கண்ட கணவன் சிரித்தவாறே “என்னமோ வெளியே கூட்டிகிட்டு போய் ஏலம் விட்டது மாதிரியே அலுத்துக்குரே!!” என்ற இவர்களின் சம்பாஷனை யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை…

“எல்லோர் பேரும் தெரியுமா? எங்கே பாட்டி பேர் சொல்லு” என்று மீண்டும் தன் நேர்காணலை மகனிடம் தொடர்ந்தான் பெரிய தந்தை…

“பாத்தி… பாத்..தி… மீ…னா..த்…தி” இழுத்தபடியே கூற அந்த பாட்டிக்கு பெருமை பிடிபடவில்லை..

“என் ராசா… என் பேர எவ்ளோ அழகா சொல்லரடா தங்கம். பிள்ளைக்கு சுத்தி போடனும். ஒரு ஒரு வார்த்தையும் எப்படி சிதறாம பேசுது பாரு” என்று சிலாகித்தவாறே…

“உங்க பெரியப்பன் பேரு சொல்லு ராசா” பேரனிடம் பாட்டி கேட்க

“ஏன்மா… தாத்தா பேர் சொல்லிக் குடுக்கலையா? அத கேக்க மாட்டேங்குற” என்று பெரியதம்பி தன் தாயுடன் சகஜமாய் பேசிக்கொண்டே

“ராஜா… தாத்தா பேர் சொல்விங்களாம் இப்போ” என்று சொல்ல பிள்ளையோ தெரியாது என்று தலையை இருபுறமும் ஆட்டி வைத்தான்.

“எங்கப்பாவுக்கு இருக்குற பொறுப்பு உங்களுக்கு இல்லமா, உங்க பேர எப்படி அப்பா சொல்லிக் குடுத்திருக்கார்… அதே மாதிரி நீங்களும் சொல்லிக்குடுக்க வேண்டியது தானே” என்று கேலி பேச

“போடா போக்கிரி… எந்த காலத்துல உங்கப்பா பேர நான் சொல்லிருக்கேன்?”

“உன்ற பேரன் நீ சொல்லிகுடுத்தா தான் தாத்தா பேர் சொல்லுவானாம்” என்று தன் சீண்டலை தொடர்ந்து கொண்டிருக்க

“சு…ப்…யா” என்று கத்தி விட்டான்…

“அட சீனித்தங்கம்… சரியா சொல்லிட்ட ராசா” தாத்தனும் மகிழ நண்டுபயலின் தந்தையோ

“இப்ப பெரியப்பா பேர் சொல்லணும் சரியா” என்று குழந்தையின் காதில் ஏதோ சொல்ல அந்த தளிரும்

“கி..ளி.. த..ல..ன்”(கிரிதரன்)” என்று அழகாய் சொல்லியது…

இனி மீனாட்சியும் சுப்பையாவும் தவிர்த்து நாம் அனைவரும் சின்னதம்பியை முரளிதரன் என்றும் பெரியதம்பியை கிரிதரன் என்றே அழைப்போம்…

அந்த சின்ன சிட்டின் பேச்சிலும், செய்கையிலும் அனைவரும் ஒன்று சேர்ந்து உணவு மேஜைக்கு வந்தமர மருமகள் பரிமாற வந்தாலும் மாமியார் விடவில்லை.

“நீ உள்ள இருக்குறத எல்லாம் இங்கே கொண்டு வந்தச்சானு ஒரு பார்வை பாரு” என்று பரிமாறலை தொடர்ந்தார்.

“வரவர இந்த அத்தைக்கு ஏன்தான் புத்தி இப்படி போகுதோ தெரியல. எனக்கு சொன்ன இந்த வேலைய வேலைக்காரங்களுக்கு சொல்லிட்டு உக்காந்து வேடிக்கை பாக்கலாம். அத விட்டுட்டு எப்பபாரு இவங்களே எல்லாத்துக்கும் முன்னாடி போய் நிக்கிறது.” என்று செந்தாமரை முகத்தை தூக்கி வைத்து கொள்ள அதை கவனித்த சின்னத்தம்பியும்

“நீயும் உக்காரேன்மா. தாமரை பரிமாறட்டும், உனக்கும் சாப்பாடு நேரம் தாண்டிப் போச்சுல்ல” என்று கூற

“ஒரு நாள் நேரம் தவறுனா ஒண்ணும் ஆகாது. நான் என் பிள்ளைக்கு பரிமாறிட்டு சாப்பிடுறேன்” என்று மகனின் வாயடைக்க, அன்றைய உணவு விழாவின் நாயகனோ தனக்கு பிடித்த உணவினை சாப்பிடாமல் அனைத்தையும் ஒரு பார்வை பார்த்தவாறே

“எனக்கு இதெல்லாம் வேணாம்.. இட்லி தேங்கா சட்னி பொடி இருந்தா கொண்டு வரச் சொல்லு” என்று மெதுவாய் ஒரு குண்டை தூக்கி போட

“ஏன் தம்பி? உனக்கு பிடிக்கும்னு தானேப்பா எல்லாமே செஞ்சு வச்சுருக்கேன். அத எல்லாம் பார்த்தும் கூட இப்படி கேக்குறியே” தாயும் பதற

“எனக்கு இப்போ பசியில்லம்மா. வேணாம்” என்று தன் பல்லவியை மாற்றவில்லை கிரிதரன்.

அங்கே உணவு மேஜையில் பதார்த்தங்கள் வரிசை கட்டி நின்றது. இடியாப்பத்துடன் தேங்காய்பாலும் பாயாவும் சேர, கேசரியும் வடையும் வெண்பொங்கலுக்கு சாம்பாருடன் ஜோடி சேர்ந்திருந்தது. பூரியும் கிழங்கு மசாலும் மணக்க அதற்கு இணையாக கோழி பல வண்ணங்கள் கொண்டு எண்ணெயில் மூழ்கடிக்கப்பட்டும், மாசலாவில் மிதந்தபடியும் மேஜையை நிறைத்திருந்தது.

சுப்பையாவின் மையம்மான லட்டுவும், ஜாங்கிரியும், பருப்பு பாயசத்தோடு கடை பரப்பி இருக்க, இவையனைத்தையும் வேண்டாம் என்று சொல்பவனை வேண்டுமட்டும் முறைக்க தோன்றினாலும் சற்று குரலைத் தணித்து

“ஒருவாய் சாப்பிட்டாச்சும் பாக்கலாமே” என்று தாயும் தன் சரணத்தை ஆரம்பித்தார்”

“சாப்பிட்டா பசிக்க ஆரம்பிச்சுரும். எல்லாத்துலேயும் கொஞ்சமா எடுத்துக்கோ” என்று மீண்டும் வலியுறுத்த

“பசிக்கலன்னு சொல்றேனே கேக்கலையா உனக்கு. உன்னோட விருப்படிதான் எல்லோரும் இருக்கணும்னு நினைக்கிற பழக்கத்த இன்னும் விடலையாம்மா நீ. ஒரு சாப்பாட்டு விசயத்துல கூட உன்னோட தலையீடு இருந்தா யார் தான் இங்கே இருக்க ஆசைப்படுவா?” என்று சற்றே பூடகமாய் பேசினான்…

“பெரிய தம்பி இந்த சின்ன விசயத்துக்கு நீ ஏன் வேற ஏதோ அர்த்தம் பண்ணிக்கிட்டு பேசுறே. பையன் விரும்பி சாப்பிடறத கண் குளிர பாக்கணும்னு ஆசைப்பட்டு தானே இதெல்லாம் செஞ்சுருக்கா. அதையாவது நினைச்சு பாக்கலாமே. ஏன் இப்படி ஒரேடியா வேண்டாம்னு சொல்லி அவ மனச கஷ்டப்படுத்துற” என்று மனைவியை பரிந்து கொண்டு சுப்பையா சற்றே குரலுயர்த்த…

“நீங்க ஏன் சொல்ல மாட்டிங்க? உங்க பொண்டாட்டி செய்றத என்னைக்கு தப்புனு சொல்லிருக்கீங்க? எல்லாத்துக்கும் அமைதியாவே இருந்து சாதிக்கிறவராச்சே எங்கப்பா” என்று பல்லைக் கடித்தவாறே கோபத்துடன் மேல செல்ல விரைந்தவனை

“பெரியத்தான்… சாப்பிட வந்துட்டு சும்மா போககூடாது, உக்காருங்க. உங்களுக்கு என்ன வேணுமோ என்கிட்டே சொல்லுங்க. நான் தயார் பண்ணி குடுக்குறேன். பேச்ச வளர்த்து பெரியவங்க மனச சங்கடப்படுத்த வேணாம்” நிமிடத்தில் சூழ்நிலையை கையில் எடுத்துகொண்டு அனைவரையும் சகஜமாக்கினாள்.

இதுதான் செந்தாமரையின் குணம் மாமியாரிடம் என்னதான் முறைத்துக் கொண்டாலும் அவரை எந்த இடத்திலும் விட்டுகொடுக்காமல் பேசுவதால் தான் மீனாட்சியின் மனதில் அசையா நம்பிக்கையாய் இடம் பிடித்துள்ளாள்.

அனைவரும் அமைதியாய் உண்டு முடிக்க இனிப்பு அந்த மேஜையில் “நான் இன்னும் இருக்கிறேன்” என்று சிரித்து வைத்தது..

பூவனம்-3

காலை உணவை முடித்த கிரிதரனுக்கு அங்கே முள் மேல் நிற்கும் நிலை தான். தன் தம்பியை போல் ஏன் தன்னால் மகிழ்ச்சியாய் வாழ்க்கையை எதிர்கொள்ள முடியவில்லை என்ற எண்ணம் மனதினை அழுத்த ஏதோ ஒரு பாரம் வந்தமர்ந்து கொண்டது. இருதலை கொல்லி எறும்பாய் தன்னை தவிக்க வைத்த நினைவை அறவே வெறுக்க நினைத்தவனுக்கு அங்கு இருக்க மனம் இடம் தரவில்லை.

மதியத்தில் இரண்டு வீட்டு சாவிகளுடன் கிரிதரனை எதிர்கொண்டான் முரளிதரன்.

“அண்ணா நீ சொன்ன மாதிரி சென்னை வீட்டுல எல்லாத்தையும் மாத்தி வச்சுட்டேன். பக்கத்து போர்ஷன் விலைக்கு வந்தது அதையும் பேசி வாங்கியாச்சு. நான் வரும்போது இருக்க சௌரியமா இருக்கும்.”

“ஏன் சின்னா, என் வீட்டுல இருக்க மாட்டியா? உனக்கு இல்லாத இடமாடா அங்கே” என்று மனம்வலிக்க பேச

“ஐயோ அப்படீல்லாம் இல்லன்னா. இன்னும் ரெண்டு வருசத்துல தாமரையும் அங்கே தான் வரணும்னு ஆசைப்படுறா. புள்ளைய சென்னைல தான் படிக்க வைப்பேன்னு இப்போ இருந்தே சட்டமா பேசிகிட்டு இருக்கா. இதுலே என்னோட அபிப்பிராயம்னு எதுவும் இல்ல. நான் இங்கே இருப்பேன், அங்கே வாரத்துல ஒரு தடவை வந்துட்டு போவேன்னு நினைக்கிறேன். அதான் இப்பவே வீடு பேசி முடிச்சுட்டேன். பார்த்துக்குற ஆள் பக்கத்துல இருந்தா நானும் தைரியமா இருப்பேன்” என்று தன் நிலையை விளக்க சரி என்று தலையாட்டியவன்

“நான் நாளைக்கு கிளம்பலாம்னு இருக்கேன்டா, கொஞ்சம் வேலை இருக்கு வீட்டுல சொல்லாதே, அப்பறம் எதையாவது சொல்லி போக விட மாட்டாங்க” என்று கூற முரளியும் சம்மதித்தான்.

யாருடனும் பேசாமல் குழந்தையுடன் பொழுதைக் கழித்தவனை பார்க்க உறவினர் ஒருவர் வருகை தர சலசலத்தது வீடு.

“தம்பி சுகமா இருக்கீகளா?” என்று கேட்டவருக்கு வேண்டா வெறுப்பாய் பதில் சொல்லி வைத்தான்..

“நான் உங்க அம்மாக்கு தம்பி முறை வேணும். உங்க அம்மாவோட சின்ன தாத்தாவும், எங்க சின்ன தாத்தாவும் ஒண்ணு விட்ட அண்ணன் தம்பிங்க. அந்த முறையில நான் உனக்கு மாமன் முறை ஆகணும் மாப்ளே.” என்று உறவுமுறை பாடம் நடத்திட ஆபத்பாந்தவனாய் வந்தமர்ந்தார் சுப்பையா.

“என்ன மாப்ளே இந்த பக்கம் காத்து பலமா வீசுது… என்ன விஷயம்?”

“எல்லாம் நல்ல விஷயம் தான் மாமா. அக்கா தான் தம்பி இன்னைக்கு வர்றான்னு சொன்னாப்புல.. அதான் வந்து ஒரு எட்டு பார்த்து பேசிட்டோம்னா அடுத்து நடக்க வேண்டியதுக்கு ஏற்பாடு பண்ண வசதியா இருக்கும்னுதான் வந்தேன்” என்று பொடி வைத்து கூற…

தன் மனைவியின் அவசரபுத்தியை நினைத்து சலித்தவாறே “இன்னைக்கு தான் வந்திருக்கான் அதுக்குள்ள உமக்கு என்னய்யா அவசரம்… காலுல சூடு தண்ணிய ஊத்திட்டு வந்து நிக்கிறீரு” என்று அலுத்தவர்

“நான் ரெண்டு நாள் கழிச்சு சொல்லி அனுப்புறேன் அப்ப வந்தா போதும்” என்று கூறி இருந்தது போதும் இடத்தை காலி பண்ணு என்னும் ரீதியில் பேச

“என்ன மாமா… நீங்க இப்படி பேசுறீரு. அக்கா என்னமோ சீக்கிரமே முடிக்கணும்னு துடிச்சுகிட்டு இருக்கா. நீங்க ஆறப்போடச் சொல்லறீங்க பையனுக்கும் வயசாயிட்டே போகுது அது நினப்புல இருக்கா” என்று ரகசிய மூட்டையை அவிழ்த்து விட சுதாரித்து விட்டான் கிரிதரன்.

“நீங்க எதுக்காக வந்துருக்கீங்க?”

“என்ன மாப்ளே ஒண்ணுமே தெரியாத மாதிரியே பேசுறீங்க. உங்களுக்கு என்னோட ரெண்டாவது பொண்ணத்தான் பேசியிருக்கு. அதான் உங்கள ஒரு தடவை நேர்ல பார்த்து உங்க வாயார சம்மதம் வாங்கிட்டா நிம்மதியா நானும் கல்யாண வேலைய ஆரம்பிக்கலாம்னு தான் வந்தேன். தெரியாத மாதிரியே பேசுறீங்களே.” என்று மிச்ச கதையையும் கூற

தன் தந்தையை முறைத்துப் பார்த்துக் கொண்டே “என் மனசுல கல்யாணங்கிற பேச்சுக்கே இடமில்ல, இன்னொரு தடவ இந்த பேச்சு பேசிக்கிட்டு இங்கே வந்துராதீங்க” என்று கோபமுடன் கூற

வந்தவரோ சுப்பையாவைப் பார்த்து “என்ன மாமா… மாப்ளே இப்படி சொல்றாரு. நீங்க இன்னும் பேசலையா அக்கா கிட்ட கேட்டப்போ எல்லாம் சொல்லி வச்சாச்சுனு சொன்னா.. என்ன நம்ப வச்சு கழுத்தறுக்கிரீங்களா” என்று எகிற

“நீ இப்போதைக்கு போய்யா பொறவு நான் வாரேன்” என்று தர்ம சங்கடத்துடன் சுப்பையா சொல்லும் போதே மீனாட்சி அம்மாளும் வெளியே வர, வந்த உறவுக்காரர் சற்று குரலுயர்த்தி

“என்னக்கா விளையாடுறீங்களா? புருசனும் பொண்டாட்டியும் சேர்ந்து ரொம்ப பவ்யமா வந்து பொண்ணு கேக்கும் போதே நான் யோசனை பண்ணிருக்கணும்… பெரிய இடத்து சம்மந்தம் தானா வருதேனு சந்தோசப் பட்டுட்டேன்… இப்போ தெரியுது” என்று மேலே பேசுவதற்குள்

“அதான் அப்பறோமா சொல்லி அனுப்புரோம்னு சொல்றோமில்ல, இன்னும் என்ன தம்பி பேசிகிட்டு” என்று மீனாட்சி அம்மாளும் தன் பங்கிற்கு குரலுயர்த்தி பேசிட

“எனக்கு இது வேணுந்தான். என் வீட்டுக்காரி அப்பவே சொன்னா. சொந்தமா இருந்தாலும் பெரிய இடம் கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்கன்னு சொன்னா, நாந்தான் அக்கா அப்படி எல்லாம் கிடையாதுன்னு சொல்லிவச்சேன்.

இப்போவே இந்த மரியாதை எனக்கு கிடைச்சா பொண்ணு குடுத்த பிறகு எனக்கு என்ன மதிப்பிருக்கும்னு இப்போவே தெரிஞ்சு போச்சு.. போதுஞ்சாமி உங்க சங்காத்தமே வேணாம்” என்று பெரிய கும்பிடு போட்ட வாறே வெறுப்பாய் முணுமுணுத்துக்கொண்டே வெளியேறினார்…

“என்னப்பா நடக்குது இங்கே? என்னோட வாழ்க்கை என்ன நீங்க கைல வச்சுகிட்டு விளையாடுற பொம்மைன்னு நினைச்சுகிட்டு இருக்கீங்களா? எந்த நம்பிக்கையில நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு நினைச்சிங்க? அந்த மாதிரி ஏதாவது ஆசை இருந்தா அத இப்பவே அழிச்சுருங்க” என்று கிரிதரன் காட்டமாய் கத்த,

மீனாட்சி அம்மாள் “அப்ப எப்படி தான் இருக்கபோற? உனக்கு ஒரு நல்லது செஞ்சு பாக்க நினைக்கிறது தப்பா தம்பி. மனசுல எதையாவது நினைச்சு உரு போட்டுக்கிட்டு நீ நிம்மதி இல்லாம இருக்குறத பாக்குற சக்தி எங்களுக்கு இல்ல. ஒரு கல்யாணம் பண்ணிகிட்டா காலபோக்குல எல்லாம் மறந்து போயிரும். இப்படி ஒத்தையா நிக்குறத பாக்க எங்களுக்கு தெம்பில்ல” என்று கண்ணீருடன் புலம்பியவருக்கு

“உங்க ஆசைக்கு எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க முடியாது. உங்க சந்தோசத்துக்கு நான் தான் பலியாகணுமா? எனக்கும் ஒரு மனசிருக்குனு என்னைக்காவது நினைச்சு பார்த்துருக்கீங்களா? நீங்க கல்யாணம் பண்ண சொன்னா பண்ணனும். அதையே நீங்க தள்ளி வைனு சொன்னா அதையும் செய்யணும் அப்படிதானே. நீங்க ஆசைபடறதெல்லாம் செய்றதுக்கு நான் மனுசத்தன்மை இல்லாம இருக்கணும் அப்பதான் அது நடக்கும்” என்று குரலுயர்த்த அனைவரின் முகமும் சற்றே கலக்கம் கொண்டது..

“நான் இங்கே வந்துருக்கவே கூடாது. அது தப்பா போச்சு” என்று கோபத்துடன் மேலே சென்றவன் தன் உடமைகளை எடுத்துகொண்டு கீழே வந்து விட்டான்.

“நான் சென்னைக்கு போறேன், அங்கேயும் வந்து எனக்கு இடைஞ்சல் குடுக்கனும்னு நினைச்சா கண் காணாத இடத்துக்கு போகவும் தயங்க மாட்டேன்” என்று கோபத்துடன் கூற

“ஒரு நாள் கூட இங்கே தாங்காம போறியேன்னா. ராத்திரி நேரம் போகாதே நாளைக்கு காலையிலே கிளம்பலாம்” என்று சின்னதம்பி அவனை தடுத்தாலும் கேட்காமல் வெளியேற எத்தனிக்க

“எதுக்காக இவ்வளவு கோபம் பெரியதம்பி. உன் நல்லதுக்கு நாங்க யோசிக்கிறது தப்பா” என்று சுப்பையா கேட்க

“போதும், எனக்கு செஞ்சதெல்லாம் போதும். இதுக்கும் மேல நல்லது செய்யணும்னு தோணிச்சுனா என் பிணத்துக்கு மாலை போட்டு செய்ங்க” என்று கோபத்துடன் வெளியே வந்தவன் அங்கிருந்த டஸ்டர் காரில் தொலைத்த தன் வாழ்க்கையை தேடி சென்னையை நோக்கி பயணமானான்…

வாழ்க்கை ஒரு விசித்திரமானது. ஏதோ ஒரு கணத்தில் மாறுதல் ஏற்பட்டு மொத்த வாழ்க்கையும் வேறு பக்கம் வேறு திசையை நோக்கித் திரும்பி விடுகிறது.

அப்படி திரும்பிய வாழ்க்கையை, தன் பக்கம் பயணிக்க வைக்க கிளம்பி விட்டான். அவன் பயணம் கை கூடி விரும்பிய வாழ்க்கை அவன் பக்கம் திரும்புமா?

பூவனம்-4

சென்னை… காலை தூக்கத்தின் சுகத்தை அனுபவித்த படி போர்வைக்குள் தன்னை புதைத்துக் கொண்டிருந்தவனை, கைபேசி மணி 7 என்று ராகமிசைத்து நேரத்தை சொல்லி அடங்கியது. சோம்பலுடன் உச்… கொட்டி அதனை பார்த்து விட்டு மீண்டும் கண்ணை மூடி தூங்க முயன்றவனின் மனக்கண்ணில் தோன்றி அவனை எழுப்பி விட்டாள் அவனின் தேவதை.

“இன்னைக்கும் லேட்டா… ஆறரைல இருந்து ஏழு வரைக்கும் மூணு தடவை அலாரம் வச்சாலும் இந்த பாழாப்போன தூக்கம் கண்ண விட்டு நகல மாட்டேங்குது. எப்போதான் கரெக்ட் டைம்க்கு எந்திரிக்கப் போறேனோ தெரியலையே?”

“இன்னைக்கும் அழுக்குமூட்டையா என் பேபிம்மா முன்னாடி போய் நிக்க வேண்டியது தான்.” என்று மனதுக்குள் பேசியவன் அவசரகதியில் தன் தேவைகளை முடித்துகொண்டான்.

குளிக்க அவகாசம் இல்லாமால் கைக்கு அகப்பட்ட டீ-ஷர்ட்யும், ட்ராக் பாயிண்டையும் மாட்டிகொண்டவனுக்கு அடங்காத சிகையை அடக்கவும் நேரமில்லை. தன்னுடைய சிவப்பு நிற ரெனால்ட் டஸ்டர் காரை எடுத்தவன் தன் தேவதையை காண விரைந்தான் பெரியதம்பி என்ற கிரிதரன்…

கிரிதரன் M.Tech… கணினி முதுநிலை பட்டதாரி. சென்னை சோளிங்கநல்லூரில் இயங்கி கொண்டிருக்கும் ஒரு புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தின் மேலாளர். ஆறடி உயரம், அழகான தோற்றம். கோதுமை நிறம் சமீபத்திய வெளிநாட்டு வாசம் அவன் நிறத்தில் சிவப்பை சற்றே சேர்த்துக் காட்டியது. கண்களின் ஆராய்ச்சி பார்வை அவனை தேர்ந்த அனுபவசாலி என்று சொல்லியது..

காலை பத்து மணிக்கு கணினி கூண்டுக்குள் தன் தலையை விட்டால், பின்பு வெளியே வரும் நேரம் அவனே அறியாதது. தன் கீழே பணிபுரிபவர்களின் வேலை திறனை கண்ணுற்று தவறை சரி செய்பவன். தன் தேவதையின் தரிசனம் காண கரிசனமில்லாமல் காரை விரைந்து செலுத்தினான் கிரிதரன்.

இருபது நிமிட பயணத்தை மிகவும் விரைந்தே கடந்து தன் தேவதை வரும் பேருந்து நிறுத்தத்தை அடைந்தவன், காரினை விட்டு இறங்காமல் கண்களில் கூலர்ஸ் அணிந்துகொண்டு காத்திருந்தான்.

சரியாய் அவன் வந்து நின்ற ஐந்தே நிமிடங்களில் கருப்பு நிற ஹோண்டா ஆக்டிவாவில் அவன் தேவதை வரவும், அதற்கடுத்த இரண்டு நிமிடங்களில் பள்ளி பேருந்து வரவும் சரியாய் இருந்தது.

ஆகாய நீலமும் கருநீலமும் கலந்த பள்ளிச் சீருடையும், கருப்பு நிற கேன்வாஷும் அணிந்த நாலரை வயது அழகான தேவதை அடங்காத கருங்கூந்தலை இரு பக்கமும் ஹேர் பண்டில் அடக்கிவிட்டு, தன் தாயுடன் ஏதேதோ பேசியபடியே பேருந்தில் ஏறிச் செல்வதை தன் கண்ணகலாது பார்த்தவனை மனதில் நல்ல பல வார்த்தைகளை சொல்லி அர்ச்சித்துக்(திட்டி) கொண்டிருந்தாள் தேவதையுடன் வந்த இளம்பெண்.

ஆரஞ்சு நிற குர்தியும் கருப்பு நிற பட்டியாலாவும் அணிந்து காலை நேர புத்துணர்ச்சி கண்களில் தவழ, மலர்ந்த சிரிப்புடன் குழந்தைக்கு கையசைத்து வழியனுப்பியவள் கண்களை சிமிட்டாமல் தங்களையே பார்த்துக் கொண்டிருப்பவனை முறைத்துபடியே,

“இவருக்கு தினமும் இதே வேலையா போச்சு, சொன்னாலும் கேக்கிறதில்ல,.சோம்பேறி சோம்பேறி… எந்திருச்சு அப்படியே வந்துருச்சு. ஒரு தல சீவ கூடவா நேரமிருக்காது? கார்ல கண்ணாடி இருக்குறது கண்ணுக்கு தெரியல போல, வந்து சேர்ந்திருக்கு பாரு, பால் பணியாரத்துக்கு கை கால் முளைச்ச மாதிரி. எல்லாம் என் கண்ணுல தான் பட்டுத் தொலைக்குது.” மனதிற்குள் திட்டிக்கொண்டே திரும்பிப் போக எத்தனித்தவளை நோக்கி வந்தவன்… அவளை பார்த்து

“நல்லா இருக்கியா?” மென்மையாய் கேட்க

“ஏன்? தெரிஞ்சுகிட்டு என்ன செய்றதா உத்தேசம்” முறைப்பாய் பதில் வர

“ஏம்மா ஒரு பார்மாலிட்டிக்கு கூட கேட்க கூடாதா?”

“ஓஓ… அப்படியா, நான் நல்லா இல்ல போதுமா” என்று வெறுப்புடன் தான் பதில் வந்தது

“ஏன்? என்ன ஆகுது? ஹாஸ்பிடல் போனியா? நான் கூட்டிட்டு போகவா?”

“உங்கள பார்த்த பிறகு நான் எப்படி நல்ல இருப்பேன். இதுல உங்ககூட சேர்ந்து ஹாஸ்பிடல் வேற வரணுமா நான்” என்று சிடுசிடுத்துகொண்டே பதிலுரைத்தாள்.

“ஷ்ஷ்ப்பா… காலையிலேயே இவ்ளோ ஹாட்டாவா பேசுறது. முடியலேடி… உன் பேச்சை கேட்டு எனக்கு தான் பீபி ஏறும் போல” என்று சலித்துக் கொண்டவனிடம்

“இப்போ யாரு உங்கள இங்கே கூப்பிட்டா? வந்ததும் இல்லாமா முடியலன்னு ஒரு கதை கட்டிக்கிட்டு, வழிவிடுங்க, நான் கிளம்பனும்” என்று புறப்பட்டவளின் வழி மறைத்து

“என்ன யோசனை பண்ணே? நான் சொன்னத பத்தி” என்றவன் கேட்க

“என்ன யோசனை பண்ணனும்? நீங்க என்ன கேட்டீங்க?” என்று ஏதும் அறியாதவள் போல் பதில் சொல்ல

“அன்னைக்கு அவ்ளோ நேரம் உன்னோட ஆபிஸ்க்கு வந்து பேசினேனே? அத பத்தி கேக்குறேன் என்ன முடிவு பண்ணிருக்கேனு” என்று பேசியவனை முறைத்துக்கொண்டே….

“என்னோட முடிவ நான் எப்போவோ சொல்லியாச்சு. திரும்ப திரும்ப வந்து கேட்டுகிட்டே இருந்தா மாறிடுவேன்ங்கிற நினைப்ப அழிச்சுறுங்க. இப்படி ஓடி வந்து ஷோ காமிக்குற வேலை எல்லாம் இங்கே வச்சுக்க வேணாம்னு எத்தன தடவ தான் சொல்லறது. நீங்க என்ன சொன்னாலும் சரி என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல. இதுக்கும் மேல எங்கள டிஸ்டர்ப் பண்ணனும்னு நினைச்சா அப்பறம் நான் வேற மாதிரி நடந்துக்க வேண்டி வரும் ஞாபகத்துல வச்சுக்கோங்க” என்று கடுப்புடன் பேசிவிட்டு தன் இருசக்கர வாகனத்தில் சென்று விட்டாள்.

அவனின் பதிலை கூட கேட்க முடியாத வெறுப்புடன் போனவளை முறைப்புடன் தான் பார்த்தான். எப்பொழுது அவளைப் பார்த்தாலும் அவனுக்குள் ஏற்படும் ஒரு வித மென்மையான உணர்வை அப்பொழுதும் உணர்ந்தாலும் அவளின் விட்டேத்தியான பேச்சில் சூடானவன்

“போடி போ… நீ எவ்ளோ தூரம் போறேன்னு நானும் தான் பாக்குறேன். நீ ரொம்ப மாறிட்டே. ஆனா நான் மாறல. என்ன நடந்தாலும் என்னோட முடிவுல இருந்து நான் பின் வாங்கப்போறதும் இல்ல. பாப்போம்டி. நீயா நானான்னு? உனக்கு பேச மட்டும் தான் தெரியும். நான் அத நடத்தியே காமிக்கிறேன். காட்றேண்டி நான் யாருன்னு” என்று மனதிற்குள் அவளை கடிந்தபடியே தன் வேலைகளை கவனிக்க சென்று விட்டான்.

மேலும் இரண்டு நாட்கள் வழமை போலவே செல்ல, அதாவது அவனது தரிசனமும், அவளது அர்ச்சனைகளும் ஒழுங்கே நடக்க மூன்றாம் நாள் மதிய வேளையில் விரைவுத் தபாலில் நீதிமன்ற முத்திரையுடன் கூடிய அறிவிப்பு வந்தது அவளுக்கு. கிரிதரனுக்கு அர்ச்சனை நடத்தியதின் சன்மானமாய் மிசஸ்.ரம்யா கிரிதரன் என்று அவள் பெயர் தாங்கி வந்திருந்தது.

மிசஸ்ரம்யா கிரிதரன் B.Tech. பார்ப்பவரை மீண்டும் பார்க்கத் தூண்டும் சிவந்த நிறம். இடை தாண்டிய கூந்தலும், வட்ட முகத்தினில் மலர்ச்சியை காட்டும் மான்விழிகளும், கூரான நாசியும் முகத்தின் அழகை கூட்டிட, ஐந்தரை அடி உயரத்துடன் அமைதியாய் இருந்தாலும், அவளின் நேர் கொண்ட பார்வை யாரையும் சற்று தள்ளி நின்றே பேச சொல்லியது.

OMR இல் உள்ள ஒரு தகவல் தொழில் நுட்ப அலுவலகத்தில் டீம் லீட் வேலை. அவளின் பொறுமையை சோதிக்கவென்றே நான்கு பேர் அவளுக்கு கீழே குழு உறுப்பினர்களாய்(டீம் மெம்பெர்ஸ்) வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அவசர கதியில் கணினியில் தட்டிக் கொண்டிருந்தவளின் மனதை தடம் புரளச் செய்தது அந்த நோட்டீஸ். வரும் சனிக்கிழமையன்று குடும்ப நல நீதிமன்றத்தில் ஆலோசனைக்காக (கவுன்சிலிங்) அவளது கணவன் கிரிதரனின் சார்பாக அவனின் வழக்கறிஞர் அனுப்பிருந்தார்.

முற்றுபெற்ற அத்தியாயத்தை தொடர நினைக்கும் கணவனை நினைக்கையில் ஆத்திரமும், கோபமும் ஒரு சேர வந்து அவளின் வேலை மீதான கவனத்தை சிதறச் செய்தது….

பதட்டத்தை வெளியே காட்டிகொள்ளாமல் மின்னஞ்சலில் அரை நாள் விடுப்பை மேலதிகாரிக்கு தெரிவித்தவள், தன் குழு உறுப்பினர்களிடம் விடைபெற்று அலுவகத்தை விட்டு வெளியே வந்தவளின் மனம் ஒரு நிலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது.

தழும்பாய் மாறிப்போன காயத்தை மீண்டும் கீறிவிட்டு மருத்துவம் பார்க்க நினைப்பவனை பெண்ணவள் நினைக்கவும், கைப்பேசியில் அவன் அழைக்கவும் சரியாக இருந்தது. கைப்பேசியின் பச்சை நிறத்தை இழுத்து விடவும் அவன் பாட ஆரம்பித்து விட்டான்.

“என்ன மேடம் நோட்டீஸ் கைல கிடைச்சதா? கரெக்டா வந்து சேரு கவுன்சிலிங்க்கு. எதாவது சாக்குபோக்கு சொல்லிட்டு தப்பிக்க கூடாதுன்னு தான், ரொம்ப கெஞ்சி கூத்தாடி அந்த ஜட்ஜ் மேடம்கிட்ட சனிக்கிழமைக்கு அப்பாயின்மென்ட் வாங்கிருக்கேன். உனக்கு இந்த வீக் லீவ்னு எனக்கு நல்லா தெரியும். என்னை ஏமாத்த நினைக்காதே. வரும்போது மறக்காம, என் பொண்ணை கூட்டிகிட்டு வர்ற. அப்படி மட்டும் செய்யல” என்று கோபத்தில் இழுத்து சொல்லியவனை தடுத்து நிறுத்தினாள் ரம்யா.

“போதும்… கொஞ்சம் நிறுத்துறீங்களா உங்க பாட்ட? எப்படித்தான் உங்களுக்கு இப்படியெல்லாம் பேச மனசு வருதோ தெரியல. உங்க இஷ்டத்துக்கு எல்லாம் செஞ்சுட்டு, இப்போ திரும்பவும் வந்து பிள்ளை வேணும்னு கேக்க உங்களுக்கு வெக்கமா இல்ல? நானும் என் பொண்ணும் நிம்மதியா இருக்குறது உங்களுக்கு பிடிக்கல அப்படித்தானே. இவ்ளோ நாள் எங்கே குப்பைக் கொட்டினிங்களோ அங்கேயே இருந்து தொலைக்க வேண்டியது தானே. இப்ப யாரு மந்திரிச்சு அனுப்பி விட்டா? இத ஆரம்பிச்சு வைக்க” என்ற அவளின் பேச்சில் சூடானவன் தான் என்ன பேச்சு பேசுகிறோம் என்ற நிதானத்தை இழந்து

“ம்ம்ம்.. நான் வேலை பாக்கற இடத்துல இருந்து நிறைய குப்பைய அள்ளிட்டு வந்து சேருன்னு பத்தி விட்டுடாங்க. சும்மா என் பொண்ணுன்னு ஏலம் விட்டுகிட்டு இருக்காதேடி. நான் இல்லாம உனக்கு எங்கிட்டு இருந்து பொண்ணு வந்தா. நான் கேக்க கூடாதுன்னு சொல்றியே, வேற யார் வரப்போறா கேக்குறதுக்கு சொல்லுடி” என்று சொல்பவனை கடித்து குதறிவிடும் கோபம் தான் பெண்ணவளுக்கு…

“அடச் சீ, அசிங்கமா பேசாதே? உன்னை எல்லாம் ஒரு மனுசனா நினைச்சு பேசுறேன் பாரு, என்னைய சொல்லணும். இப்ப என்ன கவுன்சிலிங்க்கு வரணும் அவ்ளோதானே? வர்றேன், வந்து உன்னோட மானத்தை கப்பல்ல இல்ல அந்த கூவத்துல ஏத்துறேன். அப்பறோம் பொண்ணு, புள்ளனு சொல்லிட்டு நீ வர்றதா நானும் பாக்குறேன்” என்று கோபத்தில் அவனை ஒருமையில் அழைத்ததையும் அறியாது மூச்சு வாங்க பேசிவிட்டு இணைப்பை துண்டித்தாள்…

கோபமும், ஆற்றாமையும் போட்டிபோட வீடு வந்து சேர்ந்தவளின் உள்ளக்குமுறல், தான் எந்த இடத்தில் அவனுக்கு எதிரியாகிப் போனோம் என்ற கேள்வி தான் மீண்டும் மீண்டும் வந்து அவள் மனக்கதவை தட்டியது….

சோர்வுடன் வீட்டிற்க்கு வந்த மகளை எதிர்கொண்டார் அவளது அன்னை செல்வி… தான் ரம்யாவின் தாய் என்று சொல்லாமல் சொல்லிய அவரது முகஜாடையும், நடுத்தர குடும்பத் தலைவியின் அடையாளங்களும் எளிமையான பருத்தி புடவையில் அவரின் அமைதியும் கண்களின் கண்டிப்பும் அவரின் குடும்பப் பாங்கை அழகாய் எடுத்துக் காட்டியது.

“என்ன ரம்யா சீக்கிரம் வந்துட்டே உடம்பு சரியில்லையா?” என்று கேட்டவரிடம் சோர்வாக

“அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா மனசு தான் சரியில்ல, கோர்ட் சம்மன் வந்துருக்கு. சனிக்கிழமை கவுன்சிலிங் போகணும்”

“ஆமா ரம்யா, காலையிலேயே வீட்டுக்கும் அந்த நோட்டீஸ் வந்துருச்சு. உங்க அப்பாக்கும் அண்ணணுக்கும் சொல்லிட்டேன். கொஞ்ச நேரத்துல வந்தாலும் வந்துருவாங்க”

“கடவுளே இதுக்கு முடிவே இல்லையா? கொஞ்சம் நாள் நிம்மதியா பொழுது போச்சுன்னு நினைச்சிட்டு இருந்தா மறுபடியும் ஆரம்பிக்குதா?” என்று செல்வி ஆற்றாமையில் புலம்பலை ஆரம்பிக்க

“அம்மா கொஞ்சம் அமைதியா இருக்கியா? நானே டென்ஷன்ல இருக்கேன். நீயும் உன் புலம்பலை ஆரம்பிக்காதே. நான் ரூம்க்கு போறேன். பாப்பா வந்ததும் எழுப்பு” என்று தன் அறையில் வந்து அடைந்து கொண்டவளுக்கு அமைதி தான் கிட்டவில்லை. தீர்வு காண முடியாமல் நீளும் தன் வாழ்வை நினைத்து மனபாரம் அதிகரிக்க ஒரு வித குழப்ப நிலையில் மனம் சஞ்சரிக்க தொடங்கியது.

பூவனம்-5

ரம்யாவின் மனதில் பல்வேறு நினைவுகள் தறிகெட்டு ஓட ஐந்து வருட பிரிவிற்கு பிறகு கணவன் தன்னை வந்து சந்தித்த நாளிற்கு சென்றது.

இரண்டு வாரத்திற்கு முன்பு முன்னிரவு பொழுதில் வேலை முடிந்து சற்று ஓய்வாக அனைவரும் இருந்த நேரத்தில் அழைப்பு மணி அழுத்திய கிரிதரனை பார்த்த அவள் தந்தை சண்முகம் வெளியே நின்றவனிடம்

“எங்கே வந்தீங்க? என்ன வேணும் உங்களுக்கு? என்று உள்ளே அழைத்து பேச விரும்பாவிட்டாலும் மரியாதையுடன் தான் கேள்வி கேட்டார்.

“உள்ளே போய் பேசலாமா?” கிரிதரன் குரலோ ஏகத்திற்கும் மெலிந்தே வந்தது.

தன்னை உள்ளே அழைக்காமல் வெளியே நிற்க வைத்து கேள்வி கேட்டவரிடம் கோபம் வந்தாலும், சூழ்நிலையும் காலமும் தனக்கு எதிராக இருந்ததால் சற்று தணிந்தே பேசினான்.

“என்ன வேணுமாம் அவருக்கு? உறவே இல்லனு அத்து விட்டவராச்சே? இப்ப யார தேடி வந்துருக்காரு” என்று பிளாக் சார்ட்ஸ் மற்றும் டீ சர்ட்டில் இருபாலரையும் திரும்பிப் பார்க்கத் தூண்டும் கம்பீரத்தில் இருந்த ரம்யாவின் அண்ணன் சிவகுமார், சீண்டலை தொடர

“சிவா இதென்ன பழக்கம்? வீட்டுக்கு வந்தவர் யாராயிருந்தாலும் உள்ளே கூப்பிட்டு பேச பழகு. உங்க அப்பா தான் கோபத்துல வெளிய நிக்க வச்சே பேசுராருன்னா, நீயும் அவருக்கு சரியா நின்னு பேசிகிட்டு இருக்க” என்று கணவர் செய்த செயலை மறைமுகமாக கண்டித்தார் செல்வி.

“இவ ஒருத்தி என்ன எதுன்னு கூட கேக்க விட மாட்டா, நம்மள குத்தம் சொல்ல மட்டும் முன்னாடி வருவா. இவ்வளவு பேசுறவ நான் வந்து பேசும் போதே முன்னாடி வந்து வெத்தல பாக்கு வச்சு கூப்பிட வேண்டியது தானே. உறவே வேணாம்னு போறவனுக்கு குடுக்கிற மரியாதை கூட இங்கே வீட்டுல இருக்குறவனுக்கு கிடைக்க மாட்டேங்குது” என மனதுக்குள் அலுத்துக்கொண்டவர் சாட்சாத் ரம்யாவின் தந்தை சண்முகம் தான். கண்டிப்பானவர், அன்பையும் அதட்டலாய் காண்பிக்கும் மென்மையான மனம் கொண்டவர்.

மனைவியின் பேச்சில் மனதிற்க்குள் நொடித்துக் கொண்டாலும் மனையாளின் மனதை வருத்தமடைய செய்யாது “உள்ளே வாங்க” என்று வரவேற்று விட்டு தனக்கும் அவனுக்கும் எந்த வித சம்மந்தமும்மில்லை என்பது போல் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டார்.

“இவருக்கு எல்லாமே பொண்டாட்டி வந்து ஞாபகப்படுத்தணும் போல, வந்தவனை உக்காருன்னு சொல்ல வாய் வரல இவருக்கு” மனதோடு கிரிதரன் பேசிக்கொண்டிருந்த நேரத்தில்

“உக்காருங்க தம்பி” என்று வழக்கம் போல் உபசரித்து விட்டார் அவனின் மாமியார்.

மனைவியை முறைத்துக்கொண்டே “என்னடி உபசரிப்பு எல்லாம் பலமா இருக்கு. வந்தவருக்கு தலை வாழை இலை போட்டு விருந்து வைக்க வேண்டியது தானே. கொஞ்சநஞ்சம் ஓட்டிகிட்டு இருக்குற என் பொண்ணோட நிம்மதிய மொத்தமா எடுத்துகிட்டு போகட்டும். ஒரு வார்த்தை அவன் கூட பேசுனே அப்பறோம் நடக்கிறதே வேற.” என்று சண்முகம் சீற

“நீங்க இந்த வேலைய செஞ்சுருந்தா நான் ஏன் பேசியிருக்கப் போறேன்? இப்ப இல்லைன்னாலும் ஒரு காலத்துல இந்த வீட்டுக்கு மாப்பிள்ளை இவர் தானே அத மறந்துட்டு பேசாதீங்க” என அவர் மனைவி தொடர்ந்திட

‘”இது என்னடா வம்பா போச்சு? நான் என்னோட பிரச்சனைய பேசி தீர்க்கலாமுனு வந்தா இவங்க என்னை வச்சே பிரச்சனை பண்ணிக்குவாங்க போலேயே? ம்ஹும் நாம கொஞ்சம் அமைதியா இருந்தாலும் எதுக்கு வந்தோம்னு மறக்க வச்சுருவாங்க. பந்திக்கு முந்துறத விட இப்ப பேச்சுல முந்தணும். இவங்க பேச்சுல ஊடால போய் நான் பேசுறதுல தப்பே இல்ல’ என்று மனதிற்குள் எண்ணியவனாய்

“நான் ரம்யாவையும் குழந்தையையும் கூட்டிட்டு போக வந்துருக்கேன்” தன் வந்த காரணத்தை ஒரே மூச்சில் சொல்லி முடித்தான்.

“என்ன சொன்னீங்க? கூட்டிட்டு போகவா? நீங்க யார் சார்? அதைச் செய்ய? அதான் எல்லாம் முடிஞ்சு ஓய்ஞ்சு போச்சே. என் தங்கச்சிய எவ்வளவுக்கு அழ வைக்கனுமோ கஷ்டப்படுத்தனுமோ அதையெல்லாம் அழகா செஞ்சு முடிச்சுட்டு இப்போ தான் பழைய படி எழுந்து நடமாட ஆரம்பிச்சுருக்கா… அது பொறுக்காமா திரும்பவும் அவ உசுர வாங்க வந்துடீங்களா?” என்று சிவா கோபத்துடன் மூச்சு விடாமல் பேசியதில் அவனின் பாசமே நிறைந்து இருந்தது…

தங்கையின் துயரை அருகில் இருந்தே கண்டவன். அவளின் உடலும் மனதும் உருக்குலைவதை தடுக்கும் வகை அறியாது பித்து பிடித்தவனைப் போல் மனதிற்குள் அழுதவன். பிறந்ததில் இருந்தே தந்தையின் பாசத்தை உணர முடியாத சின்னசிறு சிட்டை கைககளில் ஏந்தும் போதெல்லாம் தகப்பனுக்கு நிகரான அன்பை பொழிந்தவன். பெண்ணின் நிலையை பார்த்து தன் பெற்றோர் மனமொடிந்த நேரத்தில் அந்த குடும்பத்தை தன் தோள்களில் சுமந்தவன்.

அவனின் பேச்சிற்கு என்னவென்று பதிலுரைக்க. “இவன் கேள்விக்கே என்னால பதில் சொல்ல முடியலயே; பொண்டாட்டி கேக்கப்போற கேள்விக்கெல்லாம் எப்படி பதில் சொல்லப் போறேன்” மனதிற்குள் நொந்தபடியே தன்னை கொட்டிக்கொண்டான் கிரிதரன்.

“போதும் சிவா உன் பேச்ச நிறுத்து.. நம்மள மதிச்சு ஒருத்தர் வந்தா இப்படி தான் நிக்க வச்சு கேள்வி கேப்பியா? மொதல்ல அவர உக்கார சொல்லு. அவரையும் கொஞ்சம் பேச விடு. என்ன சொல்ல வந்துருக்கார்னு கேட்டுட்டு அப்புறம் அப்பாவும் பிள்ளையும் மாறி மாறி அவர கேள்வி கேக்கலாம்” என்று செல்வி கூறிவிட

கிரிதரன் நிம்மதி பெருமூச்சு விட்டபடி தன் நன்றியை அவருக்கு மானசீகமாய் தெரிவித்துக் கொண்டான்….

“இப்படி சொல்லியே எங்கள கட்டிப் போடுறீங்கம்மா” சொல்லியபடியே

“உக்காருங்க, என்ன பேசணும்? இந்த மன்னிப்பு புண்ணாக்குனு சொல்லி ஆரம்பிக்க வேணாம்; அத எல்லாத்தையும் ஒரு ஓரமா ஒதுக்கி வச்சுருங்க. இல்லனா அதுக்கும் எங்க அம்மாகிட்ட நான் பேச்சு வாங்க வேண்டியிருக்கும். சொல்ல வந்தத சுருக்கமா சொல்லிட்டு கிளம்புங்க” என்று வேண்டா வெறுப்பாக சொல்ல

எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமால் “நான்… நான்… எனக்கு… இல்ல… என்னென்னமோ நடந்து போயிருச்சு, இப்படி ஆகும்னு யாரும் எதிர் பாக்கல; ஏதோ ஒரு வேகம்.. எல்லோருக்கும்” பேசத் தெரியாதவன் திக்கித் திணறி பேசக் கற்றுக் கொள்பவன் போல வார்த்தைகள் தடுமாறி தொண்டையில் சிக்கிக்கொள்ள…

“கொஞ்சம் தண்ணி கொண்டு வந்து குடு செல்வி” என சண்முகம் கூறியவுடன் விரைந்தே கொடுத்தார்.

எங்கே தான் முந்திக்கொண்டு கொடுத்தால் அதற்கும் ஏதாவது சொல்லிவிடுவாரோ என்று யோசிக்கையில் கணவரின் இந்த பேச்சு நிம்மதி அளித்ததோடு அவரின் மேல் மதிப்பும் கூடியது.

கிரிதரனுக்கும் ஆச்சரியமே. உள்ளே வர விடாமால் தடுத்தவர், இப்பொழுது தனக்கு உபசரிப்பதை கண்டு, மிச்சம் வைக்காமல் குடித்தவனுக்கு சற்றே தெம்பு வர தெளிவாக பேச தொடங்கினான்.

“நடந்த எதுவும் இல்லைன்னு ஆகிடாது; நான் அதை மாத்த நினைக்கிறேன்.. சத்தியமா சொல்றேன் இனிமே உங்க மனசு கஷ்டப்படுற மாதிரி எதுவும் நடக்காது. நடந்ததுக்கெல்லாம் நானே பொறுப்பெடுத்து உங்ககிட்ட மன்னிப்பு கேக்குறேன்…

நான் என்னோட வாழ்க்கைய திரும்ப வாழறதுக்கு நீங்க தான் ஒரு வழி காட்டனும். என் குடும்பத்த என் கூட நீங்க அனுப்பி வைக்கணும். அவங்கள கண் கலங்காம காப்பத்துறது என்னோட பொறுப்பு” என்று கூறி அனைவரின் முகத்தை பார்க்கும் நேரத்தில்

தட தடவென யாரோ ஓடி வரும் சத்தம் கேட்க வாசல் பக்கம் திருப்பியவனின் பார்வையில் அழகான பெண் குழந்தை வந்து நின்றது.

சிவப்பு நிறத்தில் வெள்ளை பூக்கள் போட்ட டாப்சும், சாம்பல் நிற ஸ்கர்ட்டும், அணிந்து ரோஜா நிற பூக்களால் பிரிண்ட் செய்யப்பட்ட கான்வாஸ் (ஷு)பாதங்களை அலங்கரிக்க ரோஜாப்பூவை அசரடிக்கும் சிவந்த நிறத்தில் கண்களும் முகமும் ஒரே நேரத்தில் பல கதைகள் பேசிய படியே வந்த குழந்தையை பார்க்க பார்க்க ஏதோ ஒரு இன்ப உணர்ச்சி உடலெங்கும் பரவ கண்களில் குளம் கட்டியது கிரிதரனுக்கு.

தன் குழந்தை; தன் ரத்தம்; தன் வாரிசு; தன் சந்தோசம்; என்று அனைத்திற்கும் அடையாளமாய் நின்ற குழந்தையின் கண்களும், முகபாவனைகளும் அவனையே பிரதிபலிக்க பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு..

குழந்தையை பார்த்த அந்த நொடி மூடுபனியாய் தன் மனதை சூழ்ந்திருந்த துன்பமேகங்கள் யாவும் களைந்து தெளிவான தோற்றமாய் அமைதியின் இருப்பிடமாய் மனது ஆனந்தித்தது…

“பாட்டி நான் எந்த சேட்டையும் பண்ணல… குட் கேர்ளாத்தான் இருந்தேன். ஆனாலும் மம்மி நான் கேட்டத வாங்கியே குடுக்கல” என்று குற்றப்பத்திரிகை வாசிக்க “ஆரம்பிச்சிட்டியா என்ன அவசரம்?” என்று கூறியபடியே ரம்யா வர பரவச நிலையின் உச்சம் தான் கிரிதரனுக்கு,

இப்படி ஆனந்த பரவசநிலை அடைபவன் தான் விவாகரத்து என்னும் நல்ல செயலை செய்தவன் என்பதை சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்..

ஆனால் என்ன செய்ய விதி தன் விளையாட்டை அவனை வைத்து சற்று நன்றாக ஆடி விட்டது.

ரம்யாவிற்கும் வீட்டில் அமர்ந்திருப்பவனை பார்த்ததும் முகம் மலர்ந்தாலும், நொடி நேரத்தில் கடினத்தன்மை கொண்டது. அதையும் அவன் கவனிக்க தவறவில்லை. தான் நினைத்த காரியம் சீக்கிரம் நிறைவேறும் என்று எண்ணமும் உருவாக கவனத்தை தன் குழந்தையின் மீது திருப்பி

“பேபிம்மா… என் கூட பேசுவீங்களா?” குழந்தையின் முன் மண்டியிட்டு தொட்டு பேசிட முயல, அந்த பிஞ்சுவோ அவசரமாக அருகில் அமர்ந்திருந்த தன் மாமனின் மடியில் தஞ்சமடைய அக்கணம் மனதளவில் மொத்தமாய் அடி வாங்கினான் கிரிதரன்.

அதனை பார்த்துக்கொண்டே தந்தையின் அருகில் வந்த ரம்யாவின் குரலும் கைகளும் சற்றே நடுங்க “அப்பா” என்றழைக்க

“ஒண்ணுமில்லம்மா பதட்டப்படாதே… ஏதோ பேசணும்னு வந்துருக்காரு என்னனு கேட்டு அனுப்பி வச்சிறேன். நீ பாப்பாவ கூட்டிட்டு உள்ளே போய் ரெஸ்ட் எடு” அவளை உள்ளே அனுப்ப முயல

செல்வியோ “இப்போ ஏன் அவளை உள்ளே அனுப்பிறீங்க? எதுவா இருந்தாலும் அவளும் தெரிஞ்சுக்கணும்; அவ விருப்பம் இல்லாம இங்கே எதுவும் நடக்க போறது இல்ல. கொஞ்ச நேரம் அவ இங்கேயே இருக்கட்டும்” என்று பேச

சுயத்தை அடைந்த கிரிதரன் “எப்படி இருக்கே ரம்யா? நான் உங்கள பாக்கத்தான் வந்துருக்கேன். என்னை மன்னிச்சிரு; நடந்ததெல்லாம் மறந்துரு; இனிமே எந்த குழப்பமும் வராம நான் பார்த்துக்குறேன் நாம சேர்ந்து இருக்கலாம்” என்று கூற

அதைக் கேட்ட பெரிய பெண் தன் தந்தையை பார்த்து “வேண்டாம்” என்று தலையசைக்க. சிறிய பெண் தன் தந்தையை பார்த்து முறைத்தது.

ஏற்கனவே வெறுப்பில் மனம் உழன்று கொண்டிருந்த சண்முகம் மகளின் கையை அழுத்தமாய் பிடித்துக்கொண்டே “என் பொண்ணுக்கு பிடித்தம் இல்லாத எதையும் செய்ற உத்தேசம் எனக்கு இல்ல. நீங்க கிளம்பலாம்” என்று இரத்தின சுருக்கமாய் கூறி பெண்ணையும் பேத்தியையும் அழைத்துக்கொண்டு உள்ளறைக்கு சென்று விட்டார்.

“இதுக்கும் மேல எதுவும் சொல்ல வேண்டாம்னு நினைக்கிறேன்; வந்த மாப்பிளைக்கு உங்க மனசு கோணாம டிபன் குடுத்துட்டு அனுப்பி வைச்சுருங்க. அதோட இந்த பக்கம் தலைகாட்டமா இருக்க சொல்லுங்கம்மா. அது தான் அவருக்கு நல்லது” என சிவாவும் கூறிச் சென்று விட, மிகுந்த ஏமாற்றம் அடைந்தான் கிரிதரன்.

யாரிடமும் எதுவும் பேசாமல் தன் எதிர்காலம் மீண்டும் ஆழமான பள்ளத்தில் விழுந்து விட்டதோ என்ற கழிவிரக்கத்துடன் அங்கிருந்து வெளியேறினான்.

பூவனம்-6

தான் வீட்டிற்கு வருவதற்கு முன்பே கணவன் வந்த விபரத்தை தாயிடம் கேட்டறிந்த ரம்யாவிற்கு இப்பொழுது என்ன குழப்பம் வரக் காத்திருக்கிறதோ என்ற கவலை தான்.

வந்தவர் யார் என்று கேட்ட குழந்தையிடம் கூட தெரிந்தவர் என்றே சொல்லி வைத்தனர் பெரியவர்கள்.

அடுத்து வந்த இரண்டு நாட்களும் அமைதியாய் கழிய, மீண்டும் ரம்யாவின் அலுவலகத்திற்க்கே வந்து கிரிதரன் பேச, அப்பொழுதும் அவளுக்கு சந்திக்கும் எண்ணமில்லை தான்.

ஆனாலும் தன் நிலையை உறுதியாக கூறி முற்றுப்புள்ளி வைக்கவே அவனுடன் பேச சம்மதித்தாள்.

ப்ளு ஸ்லிம்ஷர்டுடன் ப்ளாக் ஜீன்சும் அணிந்து கம்பீரமாய், தனக்காக காத்திருந்தவனை கண்டதும் மனதிற்குள் கிளர்ச்சி எழுந்தாலும், அதனை வெளிக்காட்டமால் பேச வந்தமர்ந்த மனைவியை கண்டதும் அவளின் தோற்றப்பொலிவில் மனம் லயிக்க மனைவியின் மாற்றத்தை எடை போட ஆரம்பித்தான்.

பிங்க் ஆர்ட் கிரேப் சுரிதாரில் அமைதியான அழகும், குழந்தைத்தனமும் குடிகொண்டிருந்த முகத்தில் தற்போது தாய்மையின் பொலிவும், சற்றே கடினத்தன்மையுடன் மெருகேறிய அழகும், புதுப் பொலிவை கூட்டிட ஏற்கனவே மெலிந்த தேகத்தை உடையவள் இன்னும் மெலிந்தவளாய் மாறியிருந்தாள்.

அதை அவளிடம் சொல்லவும் செய்தான். எதையாவது சொல்லி பேச்சை ஆரம்பிக்க வேண்டுமே. அதற்கு இது தொடக்கமாக இருக்கட்டுமே என்று நினைத்து தான் அவன் ஆரம்பித்தது…

“ரொம்ப மெலிஞ்சு போயிருக்கியே ரம்யா, இன்னும் சாப்பாடு விசயத்துல தகராறு தானா?” என்றவனிடம் கோபமாய்

“ரொம்ப அவசியமா தெரிஞ்சுகிட்டே தான் ஆகணுமா? இப்படி உத்து உத்து பாக்கத்தான் வந்துருக்கீங்கன்னா அதுக்கு ஆள் நான் இல்ல, வந்த விஷயத்தை சொல்லிட்டு கிளம்புங்க”

“உன் கோபத்துல அர்த்தம் இருக்கு, நான் எல்லா தப்பையும் சரி பண்ணறேன். போதும் தனித்தனியா இருந்தது; நீயும் பேபியும் எனக்கு வேணும்” என்று கூற அவனை இடைமறித்து

“நாங்க என்ன கடையில வாங்குற பொருளா? சின்ன குழந்த மிட்டாய் வேணும்னு அடம்பிடிக்கிற மாதிரி எனக்கு நீங்க வேணும்ன்னு வந்து நிக்கிறீங்க; மனுசங்கள மனுசனா பாக்க எப்போதான் பழகுவீங்களோ தெரியல. இந்த லட்சனத்துல திரும்பவும் உங்க கூட வந்து சந்தோசமா இருக்கணும்னு சொல்லறத நம்ப எனக்கு ஒண்ணும் பைத்தியம் பிடிக்கல. நான் தெளிவா தான் இருக்கேன்” என்று பைத்தியம் என்னும் வார்த்தையை அழுத்திப் பேச;

“ம்ப்ச்… அத எல்லாம் மறந்துரு, தயவு செய்து இந்த ஒரு தடவை எனக்காக வேண்டாம் நமக்காக, நம்ம குழந்தைக்காக கொஞ்சம் யோசி ரம்யா”

“அந்த நமக்காக, நானும் என் குழந்தையும் மட்டும் தான் இருக்கோம். நீங்க இல்ல; உங்க கூட எங்களையும் இணைச்சு வீணா ஆசைய வளர்த்துக்காதீங்க. எங்கள நிம்மதியா இருக்க விடுங்க உங்களுக்கு புண்ணியமா போகும்.

இவ்வளவு நாளா இல்லாத அக்கறை, அஞ்சு வருசமா வராத பாசம் இப்போ மட்டும் எப்படி வந்தது?” என்று கேள்வி கேட்டவளை கண்களை விரித்து மெச்சும் பார்வையுடனே பார்த்தவன்

“இப்போ கேட்டியே இது கேள்வி, உங்க மேல இருக்குற என்னோட பாசமும் அக்கறையும் என்கிட்டே தான் பத்திரமா இருக்கு. என்னோட இடத்துல இருந்து கொஞ்சம் யோசிச்சி பாரு.

என்னோட அம்மாவும், அப்பாவும் எந்த காலத்திலேயும் நாம சேர்ந்து வாழறதுக்கு தடை சொன்னதில்ல. அவங்கள நான் விட்டு கொடுக்காம இருக்கணும்னு நினைச்சுருக்காங்க.

பெத்தவங்க சொல்லை மீறி நாம ஒரு காரியம் செய்யும்போது நம்ம மேல உள்ள நம்பிக்கை குறைஞ்சு போயிருது..

நம்ம மேல நம்பிக்கை இல்லாத பட்சத்தில, எங்கே அவங்களோட மதிப்பும் மரியாதையும் குறைஞ்சு போயிடுமோனு நினைச்சு தான் கொஞ்சம் இல்ல அதிகமாவே உரிமை எடுத்துகிறாங்க. அது தான் உண்மை.

பெத்தவங்களுக்கு மனசுல கோவில் கட்டி கும்பிட்டாலும் வெளியே காமிச்சுக்காத என்னை மாதிரி பசங்களுக்கு அது தான் வினையா முடியுது. நம்ம கல்யாண விசயத்திலேயும் சரி; அதுக்குப் பிறகும் சரி இது தான் நடந்தது.

வீணான பேச்சுக்கள் வளர்ந்த நேரத்துல அத விலக்கி வைக்க முடியாத படி சூழ்நிலையும் காலமும் அதுக்கு தோதா அமைஞ்சுருச்சு. நான் வெளிநாடு போனதும் அங்கே வேலையும் இழுத்து என்னை கட்டி போட்டத என்னனு சொல்ல.

எல்லாம் விதின்னு சொல்லி தப்பிக்க நான் விரும்பல. தப்புன்னு பார்த்த எல்லாமே தப்பு தான்; எல்லோர் மேலயும் தப்பு இருக்கு, அத இப்போ அலசி ஆராய வேணாமே… போனதெல்லாம் போகட்டும் இனிமே புதுசா நமக்கான வாழ்க்கைய நாம ஆரம்பிப்போம்.

எனக்கு நீதான் வேணும்னு யார்கிட்டயும் போய் கேட்கவும் முடியல… நான் உனக்காக மட்டுந்தான் தவிச்சுக்கிட்டிருக்கேன்னு யார்கிட்டயும் சொல்லவும் முடியல ரம்யா?” மென்மையாய் தன் நீண்ட விளக்கத்தை கூறியவனிடம்

முடிஞ்சுருச்சா?அவ்வளவு தானா” ? ரொம்ப ஈசியா உங்க மேல எந்த தப்பும் இல்லன்னு சொல்லிடீங்க; ஆனா நான் பட்ட கஷ்டம்; அவ்ளோ ஈஸியா என்னால மறக்க முடியாது இத தான் பேச வந்தீங்கன்னா நான் கிளம்புறேன்” வெடுக்கென்று கூறி கிளம்பி விட

“கொஞ்சம் யோசிச்சு பாரு, வீண் பேச்சையும், கோபத்தையும் இன்னும் இழுத்து பிடிக்க வேணாம். போதும் நாம பட்ட கஷ்டம்; என்ன பேச்சு வந்தாலும் நான் பொறுப்பு” அவனின் வார்த்தைகள் காற்றோடு தான் போனது.

அதற்கடுத்த நாளில் இருந்து அவளையும் குழந்தையையும் காலை நேரத்தில் பார்க்க தவறுவதில்லை. குழந்தையை அனுப்பிவிட்டு நிற்கும் அவளிடம் மீண்டும் இணைந்து வாழ்வதைப் பற்றி ஓரிரண்டு வார்த்தைகள் பேசுபவன் எக்காரணத்தைக் கொண்டும் தானாகச் சென்று குழந்தையுடன் பேசுவதை தவிர்த்து வந்தான்.

அவனது பொறுமையின் உச்சகட்டமாக தானோ இப்பொழுது ஆலோசனைக்கு(கவுன்சிலிங்) அழைத்திருப்பதும் என்றே ரம்யாவிற்கு தோன்றியது…

இடைவிடாத கீச்சுக்குரலும் அதனை தொடர்ந்து தொலைக்காட்சியின் ஒலியும் ரம்யாவை நிகழ் காலத்திற்கு அழைத்து வர தன்னறையிலிருந்து வெளியே வந்தவள்

“இவ்ளோ சவுண்ட் வைச்சுக்காதே இந்தும்மா, வீடே அதிருது என்னால உள்ளே இருக்க முடியலடி” தன் மகளிடம் கூற

“மாட்டேன் போ, நான் இப்போ தான் ஸ்கூல்ல இருந்து வந்திருக்கேன், டிஸ்டர்ப் பண்ணாதே” என்று பெரிய மனுசியாய் ஆணையிட்டதோடு, தன் தலைவன் சின்சானை பார்க்க ஆரம்பித்தாள்.

“எல்லாம் உங்க பாட்டியும் மாமாவும் சேர்ந்து குடுக்குற செல்லத்துல தாண்டி இப்படி ஆடிகிட்டு இருக்க. உனக்கு அடுத்த வருஷம் நிறைய ஹோம்வோர்க் குடுக்குற ஸ்கூலா பார்த்து சேர்த்து விடறேன் அப்போதான் அடங்குவ” என்று கூற அங்கே ஆரம்பமாகியது ஓரு கச்சேரி. அதை கேட்டு சமையல் அறையில் இருந்து எட்டி பார்த்த செல்வி

“ஏண்டி? இப்ப குழந்தயா அழ வைக்கிற, அவ சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும் பேசாம ரூம்லேயே இருக்க வேண்டியது தானே, அதுக்குள்ள வந்து அவகிட்ட வம்பு வளக்கனுமா?” என்றவாறே வெளியே வந்தவர்

“நீ வாடி செல்லம். அம்மா என்ன சொன்னா?” அவளை மடியில் இருத்திக்கொண்டே உணவை ஊட்டி விட ஆரம்பித்தார்.

“ஒண்ணும் சொல்லிடக்கூடாது, உடனே மூக்கு வேர்த்து போய் வரிஞ்சு கட்டிக்கிட்டு வந்துருவாங்க என்னமோ செஞ்சுக்கொங்க” முணுமுணுத்தவாறே அலுத்துக்கொண்டே ரம்யாவும் உள்ள சென்று விட

“எனக்கு நிறைய ஹோம்வோர்க் குடுக்குற ஸ்கூல்ல சேர்த்துருவேன்னு அம்மா சொல்றா? நெஜமாவா பாட்டி” விசும்பிக்கொண்டே பேத்தி கேட்க

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல தங்கம், அப்படி செஞ்சா அவளுக்கு சாப்பாடு குடுக்காமா பட்டினி போட்ருவோம். சரியா இப்போ இந்த தோசைய சாப்பிடுவியாம். பாப்பாக்கு பிடிச்ச மாதிரி முறுவலா இருக்கு”

“மாமா எனக்கு ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வரும். அத தான் சாப்பிட்ட போறேன் இது வேணாம்” பேத்தி ஒதுக்க

“உங்க மாமா வர லேட் ஆகும்டி ராஜாத்தி. இப்போ இதை சாப்பிடுவியாம். கொஞ்ச நேரம் கழிச்சு அதையும் சாப்பிடுவியாம்” என்று தொடர்ந்தார்.

பேத்தியை சீராட்டுவதில் செல்விக்கு அலாதி பிரியம், ஒரு சுடு சொல்லோ அடியோ பேத்தியின் மீது விழுந்து விடாமால் பொத்தி பொத்தி தன்னோடு வைத்துக்கொள்வார். பாட்டிக்கும் பேத்திக்கும் இடையே யார் வந்தாலும் அவர்கள் எல்லாம் கால் தூசி தான் செல்வி பாட்டிக்கு.

இதை விட ஓரு படி மேல் தன் மாமனிடம் செல்லம் கொஞ்சுவாள் அந்த சின்ன சிட்டு. அவனை பார்க்காமல் இந்த செல்ல ராட்சசிக்கு பொழுது விடியாது, இரவும் முடியாது.

மாமனை தவிர்த்து வேறு யாரும் இவளை செல்ல ராட்சசி என்று கூப்பிட்டு விடவும் முடியாது. அவ்வளவு ஒட்டுதல் இருவருக்கும்.

இவர்களின் மூவர் கூட்டணியில் கலந்து கொள்ளாமல் தனியே நின்று வேடிக்கை பார்க்கும் வேலையை மட்டுமே பார்ப்பவர்கள் ரம்யாவும் அவள் தந்தை சண்முகமும் தான்.

அவருக்கும் பேத்தி மீது அதீத பாசம் தான்; ஆனாலும் அதை விட பெண்ணின் நலனே அவர் கருத்தில் நிலைத்து நிற்கும். எப்பொழுதும் போல் நடப்பதை பார்த்துகொண்டு இருந்த ரம்யாவிற்கு கோபம் அளவில்லாமல் வந்தது..

“ஆபிஸ் முடிஞ்சு வந்ததும் நான் சொன்னத பத்தி கொஞ்சம் கூட கவலைப்படாம இந்த அம்மா பேத்திக்கு ஊட்டி விடுறது தான் முக்கியமான வேலையா செஞ்சுகிட்டு இருக்காங்க. இவங்கள என்ன பண்ணலாம்? (அதைப்பற்றி கேட்க வேண்டாம் என்று தன் அன்னையிடம் சொன்னதை அந்த சமயத்தில் ரம்யா ஏனோ மறந்து போனாள்)” மனதில் இருவரையும் கடிந்து கொண்டிருக்கும் வேளையில் சிவா வந்து விட்டான்.

ரம்யாவின் அண்ணன் சிவகுமார் CA முடித்து விட்டு தற்போது ஒரு புகழ் பெற்ற நிறுவனத்தில் ஆடிட்டிங் சம்மந்தமான அலுவல்களை கவனித்து கொள்பவன். மிகுந்த திறமைசாலி, தன் பொறுப்பினை நன்றாய் அறிந்தவன். குடும்பத்தின் மீது அதீத பாசம் வைத்திருப்பவன்.

தன் தங்கையின் நலமே தன்னலமாய் நினைத்து திருமண வாழ்க்கையை தள்ளிபோடும் முப்பது வயது இளைஞன். அவர்கள் வீட்டு சின்ன சிட்டின் மனம் கவர்ந்த தாய்மாமன்.

“என்னோட செல்ல ராட்சசி என்ன பண்ணறாங்க” சீண்டிக்கொண்டே வந்த சிவாவைப் பார்த்து

“ஏன்டா… உனக்கு கூப்பிடுறதுக்கு வேற பேரே கிடைக்கலையா? என் தங்கத்தோட அழகான பேர இப்படி கொலை பண்றீயே?” என்று செல்வி மகனிடம் காய ஆரம்பித்தார்.

“நானா கொலை பண்ணறேன்? உன் பேத்தி தான் அப்படி சொல்லிக்கிட்டு இருக்கா எங்கே சொல்ல சொல்லுங்க அவளோட பேர” என்றவன் குழந்தையிடம் திரும்பி “குட்டிம்மா உங்க பேர் சொல்லுங்க; பாட்டி காது குளிர கேக்கட்டும்.”

“மை நேம் இஸ் இந்திரட்சஷி” என்று அந்த சின்ன சிட்டும் கூற

“நல்லா கேட்டியா “இந்திராக்ஷி” ங்கிற அழகான பேர எப்படி சொல்றா உன்னோட பேத்தி” என்று வாரினான்.

“எனக்கு என்ன வாங்கிட்டு வந்தே மாமா?”

“உனக்கா ஒண்ணுமே வாங்கலையே..”

“இல்ல இருக்கு எனக்கு குடு” ஏற்கனவே ரம்யாவின் அதட்டலில் விசும்பலை தொடங்கி இருந்தவள் மாமனின் பேச்சில் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பிக்க

“நெஜமாவே ஒண்ணும் கொண்டு வரலடா இந்தும்மா… இப்போ வெளிய போயிட்டு வரும்போது கொண்டு வர்றேன் செல்லம்” என்று சமாதானம் கூறினாலும் ஏற்கவில்லை.

சோபாவில் அமர்திருந்தவள் அப்படியே மாமனின் முதுகில் தொற்றிக்கொண்டு தன் விருப்ப பொருளை ஆராய ஆரம்பித்தாள், தேடியது கிடைக்காமல் போக கச்சேரி உச்சஸ்தாயில் வளர்ந்தது.

“என்னடா நீ? புள்ளைக்கு ஆச காட்டிட்டு ஒண்ணும் கொண்டு வராமா வரலாமா?” அதட்டலுடன் செல்வி கேட்க

“அப்பா போன் பண்ணி கோர்ட் நோட்டீஸ் வந்துருக்கு; வீட்டுக்கு வா பேசணும்னு சொன்னதால ஆபிஸ்ல சொல்லிட்டு அப்படியே வந்துட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்துல அப்பாவும் வந்துருவாரு. அதுக்குள்ள இந்த ராட்சசிய வெளியே கூட்டிட்டு போய் லஞ்சம் கட்டிட்டு வரேன்” என்று நகர்ந்தான்…

பிள்ளைக்கு பிடித்த நொறுக்கு தீனியை வரிசையாய் வாங்கி கொடுத்துவிட்டு வந்தவனிடம் “இப்போ என்ன செய்யலாம் சிவா? எனக்கே குழப்பமா இருக்கு அது எப்படி திரும்பவும் கவுன்சிலிங் கூப்பிட்டு விட்ருக்காங்க என்ன விவரம்னு தெரியலையே?” என்று சண்முகம் கவலை கொள்ள

“நான் போய் விசாரிச்சிட்டு வரேன்ப்பா. நீங்க கவலை படாதீங்க. தங்கச்சிக்கு தைரியம் சொல்லுங்கப்பா. ஏற்கனவே குழப்பத்துல இருக்கா; இப்போ இதையும் சேர்த்து கஷ்டப்படுத்திக்கப் போறா” என்று சொல்லிக் கிளம்பியவன் போய் நின்ற இடம் கிரிதரனின் இல்லம்.

பூவனம்-7

பெருங்கோபத்துடன் வந்தவனை மிகவும் அமைதியாகவே வரவேற்றான் கிரிதரன்.

“வாங்க சிவா நீங்க வருவீங்கன்னு எதிர் பார்த்தேன்”

“அப்போ நான் உன்னை கொலை பண்ண போறதையும் நீ எதிர்பார்த்துருப்பே தானே” என்று கர்ஜித்தவனிடம்

“ஹாஹா… நல்ல ஜோக் சிவா”

“என்னோட கோபம் உனக்கு ஜோக்கா இருக்கா கிரி?”

“இல்ல சிவா இப்போ என்னோட டர்ன்”

“அன்னைக்கும் சரி, உங்க தங்கச்சிய தனியா பார்த்து பேசினப்பவும் சரி இதே கோபம் தான் எனக்கும் வந்தது.”

“இப்ப எதுக்காக கவுன்சிலிங்னு ஆரம்பிக்கிறீங்க கிரிதரன்?”

“அதான் அன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்து சொன்னேனே, அதுக்குள்ள மறந்து போச்சா? நீங்க முடிஞ்சுருச்சுன்னு சொன்னத திரும்பவும் ஆரம்பிக்க தான் இந்த கவுன்சிலிங்.”

“வேண்டாம் கிரி… இன்னொரு தடவை என் தங்கச்சி வாழ்க்கையில வராதீங்க, திரும்பவும் அவ உடைஞ்சு போறத பாக்குற சக்தி எங்களுக்கு இல்ல”

“இப்படியே அவளை பொத்தி வச்சு தான் தனக்கு தேவையானதா கூட வாய தொறந்து கேக்காம இன்னைக்கு இந்த நிலமையில இருக்கா. அத மாத்தணும்னு ஏன் நீங்க நினைக்க மாட்டேங்குறீங்க சிவா?”

“அவ உருக்குலைஞ்சு போனதுக்கு காரணமே நீங்க தான். உங்களால ஆரம்பிச்ச வினை அவளோட சுயத்தையே தொலைச்சு பார்த்துருச்சு.அவபட்ட கஷ்டத்த நேர்ல பாத்திருந்தா இப்படி பேச மாட்டிங்க கிரி”

“என்னோட விரோதிக்கு கூட இந்த கஷ்டம் வரகூடாது கிரி. வெளியே இருந்து பாக்குறவங்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமா படாது. ஆனா அனுபவிச்சவங்களுக்கு தானே தெரியும் அதோட வலி”

தங்கை அனுபவித்த துயரை நினைத்தவனின் மனதின் பாரம் கண்களில் தெரிய துக்கத்தில் பிதற்றியவனை தேற்றும் வழி அறியாது

“உங்க கஷ்டம் எனக்கு நல்லாவே புரியுது சிவா. என்னை மன்னிச்சிருனு சொல்ல மாட்டேன். என்னோட பொறுப்பை தட்டிக் கழிச்சதால வந்த வினை தான் இது.

நானும் அந்த நேரத்துல ஏதோ ஒரு கோபத்துல வீட்டுல சொல்ற பேச்ச கேக்க வேண்டிய சூழ்நிலை. மீற முடியலை என்னால.

இவ்வளவு கஷ்டம் அவளுக்கு வந்திருக்கும்னு நான் நினைச்சு பாக்கல சிவா. எனக்கு இன்னொரு சந்தர்ப்பம் குடுங்க”

“எதுக்கு மறுபடியும் அவ மனசு உடைஞ்சு போறத பாக்கவா? போதும் கிரி, நீங்க உங்க வழிய பார்த்து போங்க. எங்க பொண்ணை நாங்க பாத்துக்குறோம்” என்று சிவா சீற

“அப்போ என் பொண்ணை நான்தானே பாத்துக்கணும். என் குழந்தைய என்கிட்டே குடுத்துருங்க, அவ அம்மா இல்லாம வளரக்கூடாது. அவ அம்மாவையும் என்னோட அனுப்பி வைங்க. மொத்தத்துல என்னோட குடும்பத்த எனக்கு திருப்பி குடுங்க சிவா” என்று கிரி மன்றாட

“வேண்டாம் கிரி… இந்த ரெண்டு வருசமா தான் ரம்யா கொஞ்சம் சகஜமா நடமாடிக்கிட்டு இருக்கா. வெளியே அவ தைரியமா நடமாடனும், எல்லோரையும் போல சாதாரண வாழ்க்கை முறைக்கு திரும்பனும்னு தான் வேலைக்கு அனுப்புறது

உங்கள மறுபடியும் பார்த்த அன்னிக்கே பழைய வாழ்க்கை வேணாம்னு புலம்ப ஆரம்பிச்சுட்டா, அவளோட கண்ணீரை பாக்குற சக்தி எங்க வீட்டுல யாருக்கும் இல்ல.

என்னோட வாழ்க்கையே ரம்யாவும் பாப்பாவும் தான். இடையில நீங்க வராதீங்க. ரம்யாவை மறந்துட்டு வேற புது வாழ்க்கைய அமைச்சுக்கோங்க கிரி”

“என்னாடா சொன்ன… அவள மறக்கணுமா நான்? மொத உனக்குனு ஒரு வாழ்க்கை அமைச்சுகுற வழிய பாரு சிவா, அப்புறமா எனக்கு அட்வைஸ் பண்ணலாம். எந்த காலத்துலயும் என் பொண்ணையும், பொண்டாட்டியையும் விட்டு கொடுக்க முடியாது.” சீறிவிட்டான்.

“இப்ப கோபப்பட்டு ஒண்ணும் பிரயோசனம் இல்ல கிரிதரன், இன்னைக்கு இந்த அளவுக்கு யோசிக்கிறவங்க ஐஞ்சு வருசத்துக்கு முன்னாடி என்ன செஞ்சீங்கனு ஞாபகம் இருக்கா?

என் தங்கச்சி கூட ஒண்ணா சேர்ந்து வாழ முடியாதுன்னு வாய் வார்த்தையா இல்லாம சட்டப்பூர்வமா விவாகரத்து பண்ணிருக்கீங்க, அது மறந்து போச்சா உங்களுக்கு?” எள்ளளுடன் சிவா கூற

“யார் மறந்து போனது? எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு, அது தற்காலிக விவாகரத்து தான். வீட்டுல போய் அந்த பத்திரத்த நல்லா படிச்சு பாருங்க; மறுபடியும் நாங்க ஒண்ணா சேர்ந்து வாழ சட்டத்துல இடம் இருக்கு.

அதோட நான் குடுக்குற இன்னொரு பைலையும் சேர்த்து படிங்க சிவா. அப்ப புரியும், நான் எந்த அடிப்படையில மறுபடியும் கோர்ட்க்கு போயிருக்கேன்னு தெரியும்” என்று அந்த கோப்பினை அவன் கைகளில் திணித்தான் கிரிதரன்.

அதனை படித்து பார்த்தவனுக்கு கோபம் ஏகத்துக்கும் ஏறியது.

“எல்லாத்துக்கும் சட்டம் இருக்குன்னு தெரிஞ்சு தான் அன்னைக்கு அந்த வேலைய பார்த்தீங்களா? என் தங்கச்சி என்ன நீங்க விளையாடுற பந்தா? வேணும் போது விளையாட்டிடு தூக்கிபோட?” என்று சீறியவனிடம்

“அப்படி எல்லாம் இல்ல சிவா… அந்த நேரத்துல என்னோட நிலைமை அப்படி.” என்று தன் நிலையை எடுத்துக் கூறியும் சமாதானமடையாமல் கோபத்துடன் தான் அவனிடம் விடை பெற்றான் சிவா…

“இப்படி ஒரு சட்டம் இருக்குறதே எனக்கு தெரியாதுப்பா. கரெக்டா லாக் பண்ணிருக்கான். அது போக அன்னைக்கு விவாகரத்து ஆனது கூட தற்காலிகம்னு சொல்லிக்கிட்டு இருக்கான், உண்மையாப்பா?” தந்தையிடம் சிவா கேட்க

“தெரியலையே சிவா, நானும் கவனிக்கலையே… உன் தங்கச்சிய பாக்கவே நமக்கு அப்போ நேரம் சரியா இருந்தது. இதுல அந்த பத்திரத்துல என்ன இருக்குனு கூட நல்லா படிச்சு பாக்கலையே” என்று சண்முகம் கவலையுடன் கூற

“நான் படிச்சு பார்த்திருக்கேன், அதுல மாப்பிள்ளை சொல்ற மாதிரி தான் இருக்கு” அமைதியாய் செல்வி தொடங்க

“அம்மா என்ன சொல்றே நீ? இத அன்னைக்கே சொல்றதுக்கென்ன?”

“என்னைக்கு சொல்லியிருக்கனும்னு நீ நினைக்கிற சிவா? விவாகரத்து பத்திரம் கைக்கு வந்த நாள்ல சொல்லிருந்தா இன்னும் கொஞ்சம் டென்சன் கூடி போயிருக்கும்.

அதுமட்டுமில்ல, அந்த சமயத்துல உங்க அப்பாவும் தானே குதிச்சுகிட்டு அந்த வீட்டு மனுசங்க கூட சண்டை போட்டுக்கிட்டு இருந்தாரு.

இத சொன்னா, கூட கொஞ்சம் சண்டை போட்டு நிரந்தரமா பிரிச்சு வைக்க என்ன செய்யணுமோ அத செஞ்சுட்டு தான் மறுவேலை பார்த்துருப்பாரு” என்று செல்வி நொடித்துக்கொள்ள

“இருக்கட்டுமேம்மா, ஒரேடியா முடிஞ்சுருக்குமே. இப்போ பாரு திரும்பவும் ஆரம்பிக்குது” சிவா சலித்துக்கொள்ள

“ஆரம்பிக்கட்டும் சிவா… எல்லாம் நல்லதுக்குனு நினைச்சுப்போம்” என்று செல்வி கூறி விட, ஒரு வித தர்ம சங்கடத்துடன் ரம்யாவை எதிர் கொண்டான்.

“நீ ஸ்டராங்கா கிரி கூட வாழ முடியாதுன்னு சொல்லிடும்மா அது போதும். நாம பேசுறதுல தான் எல்லாமே அடங்கியிருக்கு. உன்னோட முடிவு தான் இங்கே முக்கியம்.

குழந்தைய மட்டும் கேட்டா கூட வாரத்துல ஒரு தடவ வந்து பார்த்துட்டு போக சொல்லலாம். ஆனா இவன் மறுபடியும் உன் கூட சேர்ந்து வாழணும்னு சொல்றான் அதான் இங்கே சிக்கல்” யோசித்தப்படியே அமர்ந்திருக்க

“இப்படியே இன்னும் எவ்வளவு நேரம் உக்கார போறீங்க, எல்லோரும் வந்து சாப்பிட்டு முடிச்சா எனக்கு வேலை முடியும். டேய் சிவா! பாப்பாவ கூட்டிட்டு வா… உன்கூடன்னா உக்கார்ந்த இடத்துலேயே அவளுக்கு சாப்பாடு இறங்கிரும். என்னால திரும்பவும் அவ பின்னாடி அலைய முடியாது” என்று சகஜமாய் பேசிக்கொண்டே செல்வி தன் வேலையை தொடர்ந்தார்.

ரம்யாவிற்கு ஆத்திரமும் ஆச்சரியமும் ஒன்றாய் வந்தது தன் அன்னையின் மீது. நீதிமன்ற முடிவினை தனக்கு தெரிவிக்காமல் இருந்ததும் அல்லாமல், அடுத்து என்ன செய்வது என்ற மனநிலையில் எல்லோரும் இருக்க, அவர் மிக இயல்பாய் நடமாடியது சற்றே மனதை நெருடவும் செய்தது. அதை தன் அண்ணனிடம் சொல்லவும் செய்தாள்.

“பார்த்தியான்னா… நாங்க எல்லோரும் இங்கே தவிச்சிக்கிட்டு இருக்கோம், ஆனா அம்மாக்கு அவங்க வேலை முடியலைங்கிற வருத்தம் மட்டும் தான் போல.”

“அப்படி இல்லை ரம்யா… அந்தந்த நேரத்துக்கு என்ன நடக்கணுமோ அது ஒழுங்கா நடந்தா தானே, அடுத்து நாம என்ன செய்யலாம்னு யோசிக்க முடியும். அதை தான் அம்மா செய்றாங்க” என்று தங்கைக்கு விளக்கம் அளித்தபடியே தன் செல்லக்குட்டியுடன் உணவு மேஜைக்கு வந்தான்.

“எனக்கு கலரிங் புக் வேணும் சிவா மாமா. அம்மா கிட்ட கேட்டா “நோ” சொல்லிட்டா” குழந்தை தன் பஞ்சாயத்தை ஆரம்பிக்க

“அடிக்கழுத… மாமாவ பேர் சொல்லி கூப்பிட்ரே… உதை படுவே ராஸ்கல்” என்று ரம்யா அதட்ட

“என்ன பாப்பா… சாப்பிடற நேரத்துல குழந்தைய திட்டறே” என்று சண்முகம் ரம்யாவை கடிந்து கொண்டிருக்கும் போதே

“இங்க நான் மட்டும் தான் பாப்பா… நீ ஒண்ணும் பாப்பா கிடையாது. தாத்தா நீ என்னை மட்டும் தான் பாப்பா சொல்லணும் சரியா” சின்னவள் கட்டளையிட

“போடி… அவர் எங்க அப்பா, என்னை மட்டும் தான் அப்படி கூப்பிடுவாரு” வம்பை வளர்த்து தன் தந்தையிடம் செல்லம் கொஞ்சினாள் ரம்யா.

“மாமா… என் பேச்சை கேக்காமா நிறைய சேட்டை பண்ணிகிட்டே இருக்கா இந்த அம்மா… எனக்கு இந்த மம்மி வேணாம், வேற அம்மா வாங்கித் குடு” என்று புது விதமாய் பேச்சை ஆரம்பித்தது அந்த வாண்டு.

குழந்தையின் பேச்சில் எல்லோரும் சிரித்திட “இப்படி எல்லாம் சொல்ல கூடாது குட்டிம்மா… இது என்ன புதுப்பழக்கம்” சிவா கடிந்து கொள்ள,

“நீதானே சொன்னே அந்த கடையில இந்த பிஸ்கட் பிடிக்கலனா வேற பிஸ்கட் வாங்கிக்கோனு, அது மாதிரி எனக்கு இந்த அம்மா பிடிக்கல… அதனாலே வேற அம்மா வாங்கி குடு” என்று தெளிவாய் விளக்கினாள் அந்த சின்ன சிட்டு

“சும்மாவாடி உன்ன ராட்சசினு சொல்றேன்… என்னாமா வாய் பேசுற, சாப்பிட சொன்னா மட்டும் வாய பசை போட்டு மூடி வச்சுக்குறே, இப்படியெல்லாம் பேசக்கூடாது செல்லம்… எல்லோருக்கும் எப்போவும் ஒரு அம்மாதான் சரியா?” என்று பிள்ளையின் நெற்றியில் முட்டிகொண்டே சொன்னவனிடம்

“ஏன்டா என் பேத்தி பேச்சுக்கு என்ன குறைச்சல்? எவ்வளவு அழகா பேசுறா, அறிவுகுட்டிடா. இப்படி பேசினா தான் வெளியே நாளைக்கு பழகும்போது தைரியாமா பேச வரும்.

சும்மா எப்பபாரு மனசுக்குள்ளயே அடைச்சுப் போட்டுகிட்டும், பயந்துகிட்டும் இருந்தா ஒண்ணுக்கும் உதவாம போயிருவோம்” செல்வி எதேச்சையாக பேச

“அப்போ நான் அப்படி தான் இருக்கேனாம்மா?” ரம்யா பொரிந்தாள்

தான் பேசியதன் அர்த்தம் முழுதாய் அப்போது தான் செல்விக்கு புரிய “அப்படியேல்லாம் இல்லடி, ஏதோ பேச்சு வாக்குல வந்துருச்சு. கோபப்படாதே” என்று சொல்லிக் கொண்டுடிருக்கும் போதே விருட்டென்று தன்னறைக்கு சென்று விட்டாள் ரம்யா..

“உனக்கு கொஞ்சம் கூட அறிவில்ல, அவள பக்கத்துல வச்சுகிட்டே இப்படி பேசினா தாங்குவாளா அவ?” கோபத்துடன் சண்முகமும் சாப்பிடாமல் எழுந்து விட,

“இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி ஆளாளுக்கு சாப்பிடாம போறீங்க. மனசுல பட்டத பேச கூடாதா? இந்த அளவுக்கு பேச கூட இந்த வீட்டுல உரிமையில்லையா” என்று அழுதபடியே செல்வியும் உள்ள சென்று விட

“என்னாச்சு மாமா? எதுக்காக எல்லோரும் போய்ட்டாங்க? நான் பேட் கேர்ள் மாதிரி பேசிட்டேனா? அதான் என்னை பாக்க பிடிக்காம எல்லோரும் போயிட்டாங்களா?” பிள்ளை தன் பங்கு விசும்பலை மாமனிடம் ஆரம்பிக்க

“அடடா என்னாச்சு என் குட்டிம்மாக்கு? உன்னை யாருக்குடா பிடிக்காமா போகும்? எல்லோருக்கும் தலவலிக்குதாம் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுறாங்களாம்.. இப்போ நீயும் நானும் சாப்பிடுவோமா”

“எனக்கு வேண்டாம்” என்று ஒரேடியாய் மறுத்து விட்டு அவள் அன்னையிடம் சென்று விட்டாள்..

தாயின் பேச்சில் மனமுடைந்து அழுது கொண்டிருந்தவளின் அருகே வந்த குழந்தை “அழுகாதேம்மா… எனக்கு நீதான் வேணும்… வேற அம்மா வேணாம், நீ மட்டும் தான் குட் மம்மி, இனிமே மாமாவ பேர் சொல்லி கூப்பிடமாட்டேன்” உதட்டை பிதுக்கிக்கொண்டே கண்களில் கண்ணீரோடு சொல்ல மகளை வாரி எடுத்துக்கொண்டவள்

“அச்சோ! உன் மேல எந்த கோபமும் இல்லடா கண்ணா… அம்மாக்கு ரொம்ப தலைவலிச்சுச்சா அதான் வந்து படுத்துட்டேன். வாடா… உனக்கு ஊட்டி விடறேன்”

“நான் எல்லோரையும் கூட்டிட்டி வர்றேன்” என்று நகர்ந்தாள் சிட்டு.

சமையலறையில் அமர்ந்து கொண்டு கண்ணை கசக்கி கொண்டிருந்தவரின் கண்ணீரை தன் பிஞ்சுக் கைகளால் துடைத்துக் கொண்டே “தலை ரொம்ப வலிக்குதா பாட்டி. நான் தைலம் கொண்டு வரவா? அம்மாகிட்ட டைகர் போட்டது இருக்கு”

“ஒண்ணும் வேண்டாம் உங்கம்மாவே அத வச்சுக்கட்டும்”

“அப்போ நீ தாத்தாக்கு செய்ற மாதிரி கசாயம் செய்யவா, நீ சொல்றியா? என்று கேட்டுகொண்டே அங்கிருந்த ஸ்டுலை இழுத்துக்கொண்டு வர அதை தடுத்த வண்ணமே

“சும்மா இருக்க மாட்டியா நீ. இப்ப உன்னை யாரு இங்கே வரச் சொன்னது?”

“தலைவலி போனா தானே நீ சாப்பிட வருவே, அதான் நான் செஞ்சு குடுக்குறேன்”

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம், நீங்க போய் சாப்பிட்டு முடிங்க. நான் அப்புறமா சாப்பிட்டுக்குறேன்” என்ற பாட்டியின் சொல்லை கேட்காமல்

“நாம ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடுவோம் சரியா?” என்ற பேத்தியை தூக்கிக்கொண்ட சண்முகம்

“அப்படியே பாட்டிய இழுத்துட்டு வாடா தங்கம். பச்ச புள்ளைய கெஞ்ச வைச்சுகிட்டு இருக்குறவளை எல்லாம் வாயால கூப்பிடக் கூடாது”

“ஆமாம்மா என்னை இழுத்துட்டு போ, உங்க தாத்தாவுக்கு சந்தோசம் பொத்துக்கிட்டு வந்துரும்” என்று முகத்தை சுளுக்கியவாறே உணவு மேஜைக்கு வர அதற்கு மேலும் தாக்கு பிடிக்க முடியவில்லை பிள்ளையால்

“எனக்கு தூக்கம் வருது மாமா… என்னை ரூமுக்கு கூட்டிட்டு போ… நான் தூங்கணும்” என்று மாமனின் தோள் தேட ஆரம்பித்து விட்டாள். நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன்

“குட்டிம்மா ரெண்டு வாய் சாப்பிட்டு அப்புறம் தூங்குவோம் சரியா? இன்னைக்கு புது ஸ்டாரி புக் கொண்டு வந்துருக்கேன், என்னோட செல்ல ராட்சசி குட் கேர்ளா கதை படிச்சுட்டு தூங்குவியாம்” என்று கொஞ்சியவனின் மந்திரம் நன்றாய் வேலை செய்தது.

என்னதான் தாய் சமாதானப்படுத்தினாலும் ரம்யாவின் குழப்பம் கொண்ட மனது அவ்வளவு எளிதில் சமாதானம் ஆகவில்லை. தாய் சொன்னவற்றை மீண்டும் மீண்டும் அலச தொடங்கியது.

மனக்குழப்பம் ஏற்கனவே அதிகரித்திருந்த வேளையில் தாயின் பேச்சு மேலும் அழுத்தத்தை கூட்டிட உணர்ச்சிகளை கட்டுபடுத்தும் வழி அறியாது தன் நிலையை மாற்றி அமைத்த கடந்த காலத்தை எண்ணி அவள் மனது பயணித்தது.

கிரிதரன் கொடுத்த கோப்பில் உள்ள விவரங்களின் சுருக்கமான சாராம்சம் இதுவே…

மணவாழ்வு மீட்புரிமை சட்டம் (Restitution of Conjugal Rights) எனப்படும் இந்த சட்டம், சிறப்புத் திருமணச்சட்டம், இந்துத் திருமணச்சட்டம், கிறிஸ்தவ திருமணச்சட்டம் ஆகிய சட்டங்களின்கீழ் திருமணம் செய்தவர்களுக்கு பயனளிக்கிறது.

மணவாழ்வில் ஈடுபட்டுள்ள தம்பதிகளில் ஒருவர், ஏற்கக்கூடிய காரணம் இன்றி வாழ்க்கைத்துணையைவிட்டு பிரிந்து சென்றுவிட்டால், பாதிக்கப்பட்டவர் தமது தாம்பத்திய வாழ்க்கையை மீட்டுத்தருமாறு கோரி உரிய குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடரமுடியும்.

மீண்டும் இணைந்து வாழ விரும்பாத நிலையில் எதிர்தரப்பினர் இருந்தால் அதற்கான காரணங்களை நீதிமன்றத்தில் தெரிவித்து உரிய சான்றாதாரங்களுடன் நிரூபிக்க வேண்டியது, பிரிந்து வாழும் எதிர்தரப்பினரின் கடமையாகவே கருதப்படும்.

சின்னஞ்சிறு அற்பக் காரணங்கள் காரணமாக வாழ்க்கைத்துணையை பிரிந்து தனிமையில் தவிக்கும் தம்பதிகளுக்கு தேவையான ஒரு சட்டமாகவே இந்த மணவாழ்வை மீட்டளிக்கும் இந்த சட்டம் செயல்படுகிறது. பிரிந்து சென்ற இணையர்கள் இருவரும் மீண்டும் சந்திக்கவும், மனம் விட்டு பேசி தங்கள் கருத்து வேறுபாடுகளை களைந்து கொள்ளவும் இந்த வழக்கின்போது தேவையான வாய்ப்புகள் உள்ளன.

பூவனம்-8

அரசாங்க அலுவலகத்தில் கிளார்க்காக பணிபுரியும் சண்முகம், அவரின் மனைவி செல்விக்கு சென்னை நகரில் வாசம். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த அந்த குடும்பத்தில் ரம்யா கடைக்குட்டியாய், தன் அண்ணன் சிவக்குமாருக்கு தங்கையாய் பிறந்தவள்.

அன்பான குடும்பத்தில் அறிவான, அமைதியான குழந்தையாய் வளர்ந்தவள். தனக்கான உலகில் பட்டாம்பூச்சியாய் சிறகடிப்பவள்.

பெண் பிள்ளைகள் வார்த்தைக்கு வார்த்தை பேசிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் மிகவும் அமைதியாய் தான் இருக்குமிடம் தெரியாமல் இருப்பவள்.

பள்ளி இறுதியாண்டில் எடுத்த நன்மதிப்பெண்களால் நல்லதொரு பொறியியல் கல்லூரியில் கணினி துறையில் படிக்கும் வாய்ப்பு தானாய் கிட்டியது.

நல்ல முறையில் படிப்பவள், மேலும் கண்ணும் கருத்துமாய் படிக்க ஆரம்பித்தாள். கல்லூரி வாழ்க்கை அவளின் வாய்பூட்டை சற்றே அகற்றினாலும், புதிய மனிதர்களை கண்டால் தனக்குள்ளே ஒடுங்கும் சுபாவத்தை மாற்றவில்லை.

ரம்யாவின் மூன்றாம் வருட தொடக்கத்தில் முதுநிலை பொறியியல் படிக்க அதே கல்லூரிக்கு வந்து சேர்ந்தான் கிரிதரன்.

திருநெல்வேலியில் உள்ள மாங்குடி கிராமத்தில் பாரம்பரியமிக்க வசதியான விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். வேகத்தோடு விவேகமும் சேர எதையும் சாதிக்கும் மனஉறுதி கொண்டவன்.

தந்தை சுப்பையாவும், தாய் மீனாட்சியும் விவசாயத்தை கவனித்திட, கிரிதரன் முதுநிலை கணிணிப் பொறியியலும், அவன் தம்பி முரளிதரன் வேளாண்மையையும் விடுதியில் தங்கி படித்து வந்தனர்.

அந்த கல்லூரியில் சேர்ந்த முதல் நாளிலேயே கிரிதரனின் கண்ணில் விழுந்தவள் தான் ரம்யா. கண்களில் விழுந்தவள் அவனின் கருத்தையும் கவர்ந்தாள்.

தன் துறை சார்ந்த வகுப்பை தேடி கொண்டிருந்தவன் அவளிடம் வழி கேட்க, பெண்ணவளின் முதற்பார்வையில் வீழ்ந்தே போனான் என்று தான் சொல்ல வேண்டும்.

அவள் சொன்ன வழித்தடத்தை கருத்தில் கொள்ளாது இமைக்காமல் பார்த்தவனை கண்டு அந்த பெண் தான் அஞ்சி ஓட வேண்டியதாய் போயிற்று.

‘என்னை பார்த்து ஏன் இப்படி பே… பே…. பே..ன்னு முழிக்கிராங்கனு தெரியலையே, அவ்ளோ பயங்கரமாவ இருக்கு என்னோட முஞ்சி.

ரம்யாகுட்டி உன்னை பார்த்தும் பயப்பட ஒரு ஆள் இருக்கு. எதுக்கும் கன்போர்ம் பண்ணிக்குவோம். இவர் என்னை பார்த்து ஏன் இப்படி நிக்கிறாருன்னு கேட்ருவோம்’ என்று மனதிற்குள் பேசியபடியே

“அண்ணா ஏன் இப்படி நிக்கிறீங்க? நான் சொன்னது உங்களுக்கு புரியலையா? நீங்க தமிழ் தானே?” என்றவளை மனதிற்குள் முறைத்துகொண்டே

“என்ன? என்ன சொல்லி கூப்பிட்டே? அண்ணாவா? நான் என்ன உனக்கு அண்ணாவா? நா என்ன வயசானவனாவா தெரியுறேன்…

இத பாரும்மா… இங்கே நான் படிக்க வந்துருக்கேன், அண்ணா, தங்கச்சின்னு பாசபயிர் வளர்க்க வரலே புரியுதா? சோ நாம பிரெண்ட்ஸ். எப்போ கூப்பிடனும்னாலும் கிரினு கூப்பிடு, இல்லை உன்னோட பிரெண்ட்ஸ எப்படி கூப்பிடுவியோ அப்படியே கூப்பிடு.

ஆனா இந்த அண்ணா… சன்னா… எல்லாம் வேணாம் சரியா. எங்கே இப்ப பேர் சொல்லி கூப்பிடு பார்ப்போம்.” என்றவனை ஒரு மார்க்கமாய் பார்த்தவள்

‘அடியாத்தீ! இது நட் போல்ட் எல்லாம் கழன்ட கேசு போல, சும்மா ஒரு பேச்சுக்கு அண்ணானு கூப்பிட்டா, அத வச்சே பாடம் நடத்திகிட்டு இருக்கு. இன்னிக்கு காலண்டர் ராசி பலன்ல தொல்லைன்னு போட்டிருந்தப்பவே நெனச்சேன்… இப்பிடி எங்கயாச்சும் சிக்குவோம்னு. தனியா வேற வந்து மாட்டிகிட்டேனே நான். ஐயோ இப்போ என்ன பண்ண? பேசாம இவன் பேர் சொல்லிட்டு எஸ் ஆகவேண்டியதுதான்’

“சரி கிரிண்ணா” சொல்லி ஓடி விட்டாள்…

“என்னாது.. அண்ணா திரும்பவுமா?” என்று வாய் திறக்க வந்தவன், அவளின் ஓட்டத்தை பார்த்து “கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ? அது சரி பர்ஸ்ட் டைம் பாக்குறப்பவே இப்படி பேசினா அவ வேற எப்படி நினைப்பா?

இங்க தானே இருக்கா பார்த்துக்குறேன்” என்றவனை அவன் மனசாட்சி “என்னடா ஆச்சு உனக்கு? இவள பார்த்து இப்படி வழிய ஆரம்பிச்சிட்டியே?” என்ற எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல் வகுப்பை அடைந்தான்.

முதல் சந்திப்பிலேயே ஏதோ ஓர் இனம்புரியாத சந்தோச உணர்வும், தன் மனதை தாக்க, உடலெங்கும் ஒரு உற்சாக அலை பரவ, அந்த உணர்வு ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் கூடியதே தவிர குறையவில்லை,

மனங்கவர்ந்தவளின் அழகும் பேச்சும் அவன் இதயத்தையும், கண்களையும் உறங்க விடவில்லை.

நாளுக்குநாள் அவளின் நினைவு விருட்சமாய் வளர்ந்து அவன் மனதை கொள்ளை கொண்டு போக, தன் மனதில் அவளுக்கு தனியிடம் கொடுத்து,தன் வாழ்க்கையின் சரிபாதி அவள் தான் என்று முடிவே செய்து விட்டான்.

நாட்கள் அதன் போக்கில் நகர, இருவரும் பேசிக்கொள்ளா விட்டாலும், பார்க்கும் பார்வையில் ஒரு வித வித்தியாசம் இருவரிடையே வந்திருந்தது.

அவன் கனிவுடன் பார்க்கும் பார்வைக்கு பரிசாய், அவளின் முறைக்கும் பார்வையே கிடைக்கும். அவனின் நேசப்பர்வைக்கு இன்னும் அவளுக்கு வித்தியாசம் தெரியவில்லை.

அன்று ரம்யாவின் செய்முறை வகுப்பில் கணினியுடன் போராடிக் கொண்டிருந்தாள். எங்கே தவறு என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

அனைவருக்கும் கொடுத்த நேரம் முடிந்து விடவே, அதிகப்படியாய் ஐந்து நிமிடம் எடுத்துகொண்டு, முடிப்பதற்காய் திணறிக் கொண்டிருந்தவளின் முன்பு கிரிதரன் வந்து நின்றான்.

“இன்னும் என்ன பண்ணிகிட்ருக்கே? நெக்ஸ்ட் கிளாஸ் வர ஆரம்பிச்சுட்டாங்க, எங்க டீம் தான் செய்யப்போறோம். அங்கே உனக்காக உன்னோட பிரின்ட்ஸ் வெயிட்டிங்… சீக்கிரம் முடி” என்று துரிதப்படுத்தியவனிடம்..

“எங்கே மிஸ்டேக்னு தெரிய மாட்டேங்குதுண்ணா… ரொம்ப நேரமா மண்டைய போட்டு குடைஞ்சுகிட்டு இருக்கேன், ப்ரோக்ராம் ரன் ஆக மாட்டேங்குது, கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களாண்ணா ப்ளீஸ்…”

வார்த்தைக்கு வார்த்தை அவளின் “அண்ணா” அழைப்பில் உஷ்ணமானவன் “இந்த ஜென்மத்தில உனக்கு இந்த ப்ரோக்ராம் சரியாகாது”..” கடுப்புடன் சாபமிட்டான்.

“அய்யோயோ! இவன் தான் மண்ட கழன்ட கேசு, அரலூசேச்சே, “அண்ணா”ன்னு கூப்பிட்டா ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதிப்பானே! தெரியாத்தனமா இவன் கிட்டேயே ஹெல்ப் கேட்ருக்கியே, உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லடி ரம்யா… ஆனா இப்போ இத முடிச்சாகனுமே என்ன செய்ய?” என நினைத்தவாறு தன்னை முறைத்தவனை பார்த்து

“இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி எல்லாம் சொல்றீங்க… உங்களுக்கு தெரியாதுன்னு சொல்லிட்டு போக வேண்டியது தானே.

எனக்கு சரியாகாதுன்னு எப்படி சொல்லலாம்? உங்கள போய் அண்ணானு கூப்பிட்டேன் பாருங்க, என்னை சொல்லணும்” சண்டைக்கோழியாய் சிலிர்த்துக்கொண்டவள் தொடர்ச்சியாக

“டவுட் இல்ல… அரலூசு, பைத்தியமா மாறிகிட்டே வருது போல” என்று மனதிற்குள் சொல்லிக்கொள்வதாய் நினைத்து வெளியே முணுமுணுத்து விட்டாள்.

“என்னது…? என்ன சொன்ன? நான் அரலூசா? பைத்தியமா?”

“பயபுள்ள எப்படியெல்லாம் உண்மை பேசுது” இதை மனதில் மட்டுமே சொல்லிக் கொண்டாள்.

“இல்ல என் கொலுசு லூசா இருக்குனு சொன்னேன், அதனால எனக்கு பைத்தியம் பிடிச்சிரும்னு சொன்னேன்”

“நல்லா மாத்துறம்மா பேச்ச…”

“உங்களுக்கு இப்ப என்ன வேணும்?”

“நான் உன்கிட்ட என்ன சொல்லி கூப்பிட சொன்னேன்? அத விட்டுட்டு வேற எல்லா பேரும் சொல்லி கூப்பிட்றே.

உனக்கெல்லாம் எந்த காலத்திலேயும் ஹெல்ப் பண்ண கூடாது. என்னைய பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டே… உன்னை எல்லாம் திருத்த முடியாது” சொல்லி திரும்பிச் சென்றவனை கைபிடித்து இழுத்து நிற்க வைத்து விட்டாள்…

“ப்ளீஸ்… ப்ளீஸ்… சாரி கிரி… இனிமே உங்கள சேச்சே… உன்ன பேர் சொல்லியே கூப்பிட்றேன்… இந்த ஒரு தடவை மட்டும் மன்னிச்சிரு, இத மட்டும் சரி பண்ணி குடு, ப்ளீஸ்” கண்களை சுருக்கி கெஞ்சிக் கேட்டவளை தவிர்த்திடவும் அவனுக்கு மனம் வரவில்லை.

அவள் கெஞ்சல் பார்வையில் மனம் சொக்கிப் போனாலும், வெளியே காட்டாமால் “ம்ம்ம்ம்… போதும் ரொம்பவும் கெஞ்சாதே, பாக்க கொஞ்சங்கூட சகிக்கல” வேண்டுமென்றே முகத்தை சுருக்கி வைத்துகொண்டு

“நான் சரி செஞ்சு குடுக்குறேன், அதுக்கு பதிலா நீ இன்னைக்கு ஈவினிங் என்கூட காபி சாப்பிட வர்ற ஓகே!” அவளுக்கு உத்தரவிட்டபடியே கோடிங்கை சரிசெய்ய அமர்ந்தான்.

‘அடப்பாவி! இந்த சின்ன ஹெல்ப்க்கு பின்னாடி எவ்ளோ பெரிய ஆப்பு வைக்கிற, உன்கூட கடலை போட வேற பொண்ணுங்களே கிடைக்கலையா?

நான் உன்கூட உக்காந்து காபி சாப்பிடறத யாராச்சும் பார்த்தா வேற வெனையே வேணாம்… சும்மாவே நம்மள ஓட்டறதுக்குனு ஒரு குரூப் அலையுது,

அவங்க கிட்ட என்னை வாலாண்டியரா மாட்டி விட பிளான் பண்ணறியே, படுபாவி! நான் வந்தாதானே? வரமாட்டேனே…. நீ என்னா பண்ணுவ?’ என்று ரம்யா மனதிற்குள் பேச்சு நடத்தி கொண்டிருந்த வேளையில்

கிரிதரன் கணினியில் காண்பித்த தவறை சரி செய்து அவளை நோக்கி..

“இப்போ ரன் ஆகுதா உன்னோட ப்ரோக்ராம், கரெக்டா கவனிச்சியா, நான் என்ன சரி செஞ்சேன்னு. இனிமே இந்த மிஸ்டேக் வராம பார்த்துக்கோ. அப்பறோம் ஈவினிங் கேண்டீன்ல மீட் பண்ணுவோம் ஷார்ப் 5 o clock ஓகே”

“இல்ல நான் வரமாட்டேன்… என்னால முடியாது இப்படியெல்லாம் பாய்ஸ் கூட தனியா போய் பழக்கம் இல்ல”

“ஏன் முடியாது? அப்போ நானும் ப்ரோக்ராம் சரி பண்ணினத திரும்பவும் மாத்தி(எரர்) வச்சுருவேன். உன்னோட ஐ.டி உள்ளே போய் செய்ய தெரியாதுன்னு நினைக்கிறியா, எப்படி வசதி?” சிரித்துக் கொண்டே மிரட்டி வைத்தான்.

“எவ்ளோ தைரியம் இருந்தா எனக்கே ஆப்பு வைப்பே… உனக்கு நான் யாருன்னு காட்றேண்டா காஃபீ மண்டையா…” மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டவள்,

“ஏய்… கிரி… ஏன் இப்படி எல்லாம் ப்ளாக்மெயில் பண்ற? இப்போ என்ன கேன்டீன் அண்ட் காபி வித்(with) மீ அவ்ளோ தானே, வந்துட்டா போச்சு.

ஆனா இந்த ப்ரோக்ராம் மாத்தி வைக்குற வேலை எல்லாம் நோ… நோ… நோ… மறந்துறணும் சரியா, ஷார்ப் 5 ‘o கிளாக்… மீட் பண்ணுவோம், பாய்ய்ய்ய்…” என்று இளித்தவாறே சென்று விட்டாள்.

மாலை ஐந்து மணி தன் தேவைதையை காணும் கனவுடன் கேண்டீனில் அமர்ந்திருந்தவனை தன் பரிவாரங்களுடன் எதிர் கொண்டாள் பெண்…

“ஹாய் கிரி… இவங்க எல்லாம் என்னோட பிரின்ட்ஸ், இவ சுஜா, அவ மேகா, ரோஷினி, பவித்ரா அண்ட் இவ ஹரிணி, எங்க போனாலும் எல்லோரும் சேர்ந்தே தான் போவோம். ஈஈஈ…”

‘எப்படி எங்ககிட்ட நீ மாட்டிருக்கேன்னு பார்த்தியா, தனியா ஒரு பொண்ணு சிக்குனா இனிமே காபி சாப்பிட கூப்பிடுவே… மகனே! இதோட என் பக்கம் தலை வச்சு படுக்கவே நீ யோசிக்கணும்’ என்று மனதிற்குள் கும்மாளமிட்டபடியே

“பிரன்ட்ஸ், இன்னைக்கி நம்ம கிரி சார் தான் ட்ரீட் குடுக்க போறாரு, சோ என்ஜாய், கேன்டீன்ல என்னென்ன வேணுமோ சாப்பிடுங்க, கூச்சப்பட வேண்டாம். அப்படிதானே கிரி, கரெக்டா உங்கள கூப்பிட்டேனா?”

“ம்ம்ம் சூப்பர், பிரன்ட்ஸ் வந்த வேலைய பாக்கலாமே, இன்னும் ஏன் தயங்குறீங்க? உங்க பிரன்ட் தான் சொல்லிட்டாங்களே” சிரித்துக்கொண்டே அவர்களை விரட்டி விட்டு, அழுத்தமான குரலில்

“சோ என் மேல நம்பிக்கை இல்லாம தான் நீ இவங்கள கூட்டிகிட்டு வந்துருக்கே, அப்படித்தானே

அது சரி என்னை பத்தி நான் சொன்னா தானே என்மேல உனக்கு நம்பிக்கை வரும்.

ஒண்ணுமே செய்யாம உன்ன மட்டும் குத்தம் சொல்லக்கூடாது. இனிமே உன்னை நான் இப்படி வர சொல்லமாட்டேன்” என்றவன் கண்களை அழுந்த மூடி தன்னை சமன் செய்தபடி உள்ளார்ந்த குரலில்

“எனக்கு மட்டும் உரிமையா… சொந்தமா… என்னோட வாழ்க்கையா நீ தான் வரணும்னு விரும்பறேன் ரம்யா. எப்ப உன்ன பாத்தேனோ அப்போ இருந்தே நீ என் மனசுல பதிஞ்சு போயிட்டே

நம்ம படிப்பு முடியுற வரைக்கும் வெளியே சொல்லாம இருக்கணும்னுன்னு நினைச்சேன். ஆனா உன்னை பாக்காம, உன்கூட பேசாமா, என்னால இருக்க முடியல.

இன்னைக்கு லேப்ல நடந்தத ஒரு சாக்கா வச்சு உன்கிட்ட பேசி பழகனும்னு நினைச்சேன்.

ஆனா அது எவ்ளோ தப்புன்னு நீ எனக்கு புரிய வச்சுட்டே, சாரி… சாரி… இனிமே இப்படி நடக்காது… ஐ லவ் யூ ரமி… இதுக்கும் மேல எனக்கு எப்படி சொல்லி உனக்கு புரிய வைக்கிறதுனு தெரியலே” என்று மென்மையாய் சொல்லி முடிக்க பெண்ணவளோ அவனையே கண்ணேடுக்காது அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

மொத்தமாய் வீழ்ந்தேன் விழி வீச்சில்

சத்தமின்றி சுருட்டினாய் பேரலையாய்

மிச்சச் சொச்சமாய் நான் இருந்தால்

முத்தத்தால் உயிர்த்து விடு என்னை…

பூவனம்-9

தான் கேட்டது கனவா? இல்லை நிஜமா? என்று தலையை உலுக்கிக் கொண்டவள், “இதென்னடா வம்பா போச்சு? ஒரு மூணு தடவ பார்த்து பேசியிருப்போமோ? அதுக்குள்ள இப்படி லவ் சொல்லி வால் பிடிச்சிட்டு வர்றானே? நெஜமாவே அரலூசு தானோ?” என மனதோடு நினைத்து, அதை மறுப்பதற்க்காய் கிரிதரன் முகம் பார்க்க, அவனோ அவளை இமைக்காமல் பார்த்த பார்வையில் வீழ்வது இவளின் முறையாயிற்று.

கிரிதரனின் பார்வையும், வார்த்தையும் ஜாலம் செய்ய, பேச்சு வரவில்லை ரம்யாவிற்கு. அமைதியாய் கடந்த அந்த சில மணித்துளிகளை இருவரின் மௌனம் தான் ஆட்சி செய்தது.

காண்டீனை காலி செய்ய சென்ற கூட்டமும் ஒரு வழியாய் வந்து சேர்ந்தும் தன்னிலைக்கு வரவில்லை ரம்யா.

“ஏண்டி ரம்யா, என்ன ஒரு ரம்யமா இருக்க?”

“ம்… என்ன?” தோழியின் கேலி புரியாமல் பார்க்க

“என்னடி இப்படி ஷாக்காயி உக்காந்துருக்கே?”

“நத்திங்க்”

“அப்ப சம்திங்க்னு சொல்லு”

“இல்லடி”

“உனக்கு ஒண்ணும் வேணாமா? ஏன் எங்க கூட வரல?”

என்ன சொல்வது என அறியாமல் விழிக்க…

“உங்களுக்கு சீனியர், நீங்களும் ஏதும் எடுத்துக்கலையா?” என கிரிதரனையும் பார்த்து கேட்க

“அது ஒண்ணும் இல்ல சிஸ்டர்ஸ். உங்க பிரின்ட்க்கு கொஞ்சம் உடம்பு சரியில்லையாம், அதான் எதுவும் வேண்டாம்னு என்கிட்டே சொல்லிட்டு இருந்தாங்க.

நீங்க போகும் போது அவங்கள பத்திரமா கூட்டிட்டு போயிருங்க, ரம்யா… இவங்க சாப்பிட்டதுக்கு பில் கட்டிடும்மா, பாய்ய்ய்ய்யய்…” அவளைப் போலவே இழுத்துக் கூறினான்.

அவனின் இந்த வார்த்தை தோழிகளை உசுப்பி விட்டது…

“என்ன ப்ரோ… நீங்க தானே ட்ரீட் குடுக்கப்போறதா ரம்யா சொன்னா, ஆனா இப்ப பில்ல அவ தலையில கட்டிறீங்க, என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க? ஏதும் கலாட்டா பண்ணற ஐடியா இருந்தா மறந்துருங்க”

“கலாட்டாவா? எனக்கா? உங்க குட்டையில விழுந்து மட்டையாகுற மாஸ்டர் பீஸ் நான் கிடையாது? நானா வந்து உங்கள கூப்பிட்டேன்?

உங்கள யார் கூப்பிட்டாங்களோ அவங்களுக்கு மட்டும் தான் நான் ட்ரீட் குடுக்கறேன்னு சொல்லிருந்தேன். யாரு கூப்பிடுறானு கூட தெரியாம கூட்டமா வந்தா, அதுக்கு நான் ஆளில்ல” என்று சிரித்தபடி கூறியவனை கோரஸாக

“ஏய்!” என்று கத்திவிட்டு ஒவ்வொருவராக பேச தொடங்கினர்….

“ரம்யா சொல்லி வந்தோம்னு பாக்குறோம்”

“என்னடி சீனியர் பேசிகிட்டே இருக்கார், நீயும் கேட்டுகிட்டே இருக்கே?”

“எங்கள இப்படி கோர்த்து விடத்தான் பிளான் பண்ணி கூட்டிகிட்டு வந்தியாடி” என்று மாறிமாறி கேட்ட தோழிகளிடம்

“ஐயோ… கொஞ்சம் சும்மா இருங்களேன்டி… நானே இத டீல் பண்ணிக்கிறேன், கொஞ்சம் அமைதியா இருங்க”

“என்னடி வரும்போது நல்லா தான வந்த?”

“இப்பவும் அப்டியே தாண்டி இருக்கேன், நீங்க கிளம்புங்க?”

“என்னடி, கழட்டி விடுற?”

“கழட்டலடி, நானே மர கழண்ட மாதிரி இருக்கேன்”

“இப்போ சொன்னியே… அது நூத்துல ஒரு வார்த்தை”

“நா… நா… நான்… இவர் கூட பேசிட்டு வர்றேன்”

“அப்டி சொல்லு… எலி ஏன் அன்ராயர் போடனும்னு என் மனசு கேட்டிச்சு.. நீ சொல்லிட்ட”

“வாங்கடி நாம கிளம்புவோம்” எனத் தோழிகள் அவளின் மனநிலையை யூகித்தவாறு சிரித்தபடி கிளம்ப

“கிரி சார்… உங்க மேல நம்பிக்கை இல்லாம அவங்களோட வந்தது உங்களுக்கு தப்பா தெரியலாம்… ஆனா எனக்கு இப்படியெல்லாம் தனியா யார்கூடயும் வந்து பேசி பழக்கம் இல்ல.”

“என்னோட பேரண்ட்ஸ் என்ன சொல்றாங்களோ அதுப்படி தான் நான் கேப்பேன், உங்க விசயத்துலேயும் அப்படித்தான். என் வீட்டுல உள்ளவங்களுக்கு எதிரா எதுவும் செய்ய எனக்கு இஷ்டமில்ல. எனக்கு அதுல பிடித்தமும் இல்ல.

அதனாலே உங்க மனசுல வீணா ஆசைய வளத்துகிட்டு ஏமாந்துராதீங்க, இதான் என்னோட முடிவு” வார்த்தைகள் திக்கினாலும் தெளிவாய் தன் நிலையைச் சொல்லி, பணம் கட்ட விரைந்தாள்…

அவளின் பின்னே வந்தவன் “நான் பில் பே பண்ணறேன் ரமி… எவ்ளோ ஷார்ப்பா பேசிட்டே, உன் மனசு இதுதான்னு தெளிவா சொல்லிட்டே, உனக்கு என்னை பிடிக்க வைக்குறதுக்கு நான் ரொம்பவே கஷ்டப்படனும் போல, அத நான் பார்த்துக்குறேன்.”

“எனிவே தேங்க்ஸ்… நீ வந்ததுக்கும் உன்னோட முடிவ சொன்னதுக்கும். நல்லா படி… முறைப்படி உங்க வீட்டுல உள்ளவங்களோட சம்மதத்தோட தான் நம்ம கல்யாணம் நடக்கும். அதுல ஒரு சந்தேகமும் வேணாம். அது வரைக்கும் நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன், வர்றேன்” என்று மென்மையாய் கூறி விடை பெற்றான்….

கிரிதரனின் பக்குவப்பட்ட பேச்சு ரம்யாவின் மனதை குழப்பத்தில் ஆழ்த்தியது. ”என்னடா இவன் இப்படி இருக்கான். எல்லோரும் லவ் பண்ணற பொண்ணுகிட்ட சம்மதம் வாங்குற வரைக்கும் அவ பின்னாடி சுத்தி திரிவாங்க.

இவன் என்னடான்னா நான் முடியாதுன்னு சொல்லவும் உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்னு போயிட்டான், நிஜமாவே அரலூசோ?” என்று அவனைப் பற்றி தினமும் நினைக்காமல் அவளால் இருக்க முடியவில்லை.

“இவன் நல்லவனா? கெட்டவனா? ஒருவேள என்னை, அவன் பக்கம் இழுக்க இப்படி எல்லாம் சீன் போட்றானோ?

“சேச்சே! அப்படி எல்லாம் இருக்காது. அவன் முகம் அப்படி ஏமாத்துற மாதிரியா இருக்கு?”

“நல்லா மூக்கும் முழியுமா அழகா… பளிச்சுன்னு சிரிச்சாலே அவ்ளோ ப்ரைட் ஆகுது அவனோட முகம். கண்ணு மட்டும் என்ன சும்மாவா? சதா எப்போ பாரு உத்து உத்து பார்த்து, அப்படியே அவன் பக்கம் இழுக்க வைக்குது. செம்ம ஹன்ட்சம் பிகர்னு அவனை சொல்லலாம், தலை முடிய சிலிர்த்துகிட்டு அவன் பேசுற ஸ்டைல் இருக்கே” என்ற அவளின் நினைவை தடை செய்ய அவள் மனசாட்சி அவள் முன் வந்து நின்றது.

“ஏய் நிறுத்து! நிறுத்து! போற போக்க பார்த்தா… நீயே அவன்கிட்ட போய் லவ் பண்ணறேன்னு சொல்லிடுவ போலேயே? கொஞ்சம் மிச்சம் மீதி வை மா. பிடிக்காதுன்னு சொல்லிட்டே இவ்ளோ கவனிச்சிருக்கியே, இன்னும் பிடிச்சு பார்த்திருந்தா எப்படி எல்லாம் சொல்லுவே? எம்மாடி.. இதத்தான் உலகமகா நடிப்புன்னு சொல்றாங்களா?” கேலி பேசியதை தலை தட்டி உட்கார வைத்தாள்…

பக்கம் வந்து பேசாமல், பார்வையாலேயே எப்பொழுதும் போல் பேசி சென்றான் கிரிதரன். பெண்ணவளின் முறைக்கும் பார்வை தான் சற்றே மாறி விளங்காத பார்வையும், ஆராய்ச்சி பார்வையுமாய் பார்த்து அவனை பற்றி நினைத்துக் கொண்டே இருந்தது…

காலமும் நேரமும் யாருக்கும் காத்திருக்காமல் விரைந்து செல்ல இருவரின் படிப்பும் முடிந்ததும், இருவருக்கும் வெவ்வேறு நல்லதொரு கம்பெனியில் உத்தியோகமும் அமைந்தது.

கணிசமான சம்பளத்துடன் வேலையில் அமர்ந்தவன், தன் மனம் கவர்ந்தவளை இனியும் தள்ளி நின்று பார்க்கும் எண்ணமின்றி ரம்யாவின் தந்தையை சந்தித்து தன் விருப்பத்தை வெளியிட்டு அவரின் உத்தரவிற்காக காத்திருந்தான்.

“உங்க பொண்ணு மேல விருப்பப்பட்டது நாந்தான் சார்… இப்போ நான் சொல்றதுக்கும், அவங்களுக்கும் எந்த சமந்தமுமில்லை. உங்க சம்மதத்தோட என்னோட ஆசைய அவங்ககிட்ட சொல்ல வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன், நீங்க தான் சொல்லணும்” என்று கூறியவனை சற்றே ஆச்சரியத்துடன் பார்த்து வைத்தார் பெண்ணை பெற்றவர்.

கிரிதரனின் பேச்சும், அவனைப் பற்றி விசாரித்து அறிந்தவையும் திருப்தியளிக்க, முழு மனதுடன் தன் சம்மத்தைதை தெரிவித்து விட்டார் ரம்யாவின் தந்தை சண்முகம்.

“காலேஜ்ல இருந்தே உன்மேல விருப்பமாம் பாப்பா, அத உன்கிட்ட கூட சொல்லாம என்கிட்டே வந்து நின்னுட்டார். உங்க பொண்ண கட்டிக்குடுங்கனு,

இந்த காலத்தில இப்படி ஒரு பிள்ளைய பாக்குறது சந்தோசமாத்தான் இருக்கு. எனக்கு சாதி பத்தின கவலை எல்லாம் கிடையாது பாப்பா, உனக்கு சம்மதம்னா பேசி முடிக்கலாம்டா” தந்தையின் பேச்சில் பெண்ணவளின் மனம் துள்ளிக் குதிக்கத் தான் செய்தது.

ஏற்கனவே அவனை நினைத்து தத்தளித்துக் கொண்டிருப்பவளின் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்து விட்டான் அவன் காதலன்.

தன்னை தெரியும் என்று எந்த இடத்திலும் காண்பித்து கொள்ளாதவனின் பேச்சு இன்னும் அவனை உயரத்தில் வைத்து பார்த்தது, ஆனாலும் மனதில் ஒரு குழப்பம் நீடிக்க

“அவங்க வீட்டுல சம்மதம் வாங்கிட்டாராப்பா, கேட்டீங்களா?” சந்தேகத்துடன் கேட்ட மகளிடம் “அதத்தான்ம்மா நானும் கேட்டேன், அவங்க வீட்டுல இவர் பேச்சுக்கு மறு பேச்சு இல்லையாம். அவங்கிட்ட சம்மதம் வாங்குறது என் பொறுப்புனு சொல்லி பேச்சை முடிச்சாட்டார்.

எங்ககிட்ட பேசி சம்மதம் வாங்குறவர் அவங்க வீட்டுல பேசாம இருப்பாரா என்ன? நீ சரின்னு சொன்னா பெத்தவங்களோட அவர வரச் சொல்லுவேன்” என்று தீர்வை அவளிடம் நிறுத்தி வைத்தார்.

அங்கே கிரிதரனின் வீட்டில் சில பல சலசலப்புகள். ஊரிலிருந்த நாலைந்து பெரிய தனக்காரார் குடும்பங்களில் ஒன்று அவர்களுடையது, பசி பட்டினியாய் கிடந்தாலும் கௌரவத்தை உயிர் மூச்சாய் கொண்டவர்கள்.

தங்களுக்குரிய மதிப்பையும் மரியாதையும் எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்க தயங்காதவர்கள். தங்கள் இனத்தின் மீதான பற்று அவர்களின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படும்.

இப்பேற்பட்டவர்களிடம் தன் மன விருப்பத்தை சொல்லி சம்மதம் கேட்டவனை பார்த்து சற்றே கண்டிப்பான குரலில்

“என்ன பெரியதம்பி விளையாடுறியா? இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி படிக்கட்டும், ரொம்ப இழுத்து பிடிச்சு வைச்சுக்க வேணாமேன்னு கொஞ்சம் உங்க இஷ்டப்படி இருக்கட்டும்னு விட்டா, இப்படி காதல் கருமாதி சொல்லிட்டு வந்து நிக்குற. நீ விரும்புன படிப்ப படிக்க வைச்ச மாதிரி பிடிச்ச பொண்ணையும் கட்டி வச்சுர முடியுமா? முடியாது… முடியாது… இதென்ன பழக்கம்… நம்ம இனத்துல யாரும் இப்படி காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டதில்ல” என்று மகனிடம் பொரிந்து கொண்டிருந்தார் மீனாட்சி அம்மாள் கிரிதரனின் தாயார்.

“எந்த காலத்திலம்மா இருக்கீங்க? இப்ப எல்லாம் யாரும் சாதி பாக்குறதில்ல, அந்த பொண்ணு பார்த்தா இப்படியெல்லாம் பேச மாட்டீங்கம்மா, நிச்சயமா உங்களுக்கு பிடிக்கும்” என மகன் சொல்ல

“பிடிக்கும்… பிடிக்காது… இதெல்லாம் முக்கியம் இல்ல இங்கே, நம்ம கௌரவம் என்ன? நம்ம மதிப்பென்ன? உங்க அப்பாருக்கு வெளியே குடுக்குற மரியாதை என்ன? இதெல்லாம் கொஞ்சம் யோசிச்சு பார்த்திருந்தா இப்படி சொல்லமாட்டே.

நம்ம குடும்பத்துக்குனு ஒரு பாரம்பரியம் இருக்கு, அதுப்படி தான் இங்கே எல்லோரும் வாழ்ந்துகிட்டு இருக்கோம். இத மாத்த நினைக்காதே. நீங்க நினைக்கிறது எந்த காலத்துலயும் நடக்காது. இந்த பேச்ச இத்தோட விட்டரு பெரியதம்பி” என்று தன் மறுப்பை சொன்னவரிடம்

“அப்போ நானும் ஒண்ணு சொல்றேன் நல்லா கேட்டுகோங்க, இந்த ஜென்மத்துல கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது என் ரம்யா கூட தான், எந்த காலத்திலேயும் என் முடிவுல மாற்றம் இல்ல.

எனக்கு சொத்து பத்து முக்கியம் இல்ல, என் மனசுக்கு ஆசைப்பட்ட வாழ்க்கையை தான் வாழ ஆசைப்படறேன். இந்த வீட்டுப் பெரியவங்க சம்மதிக்காம அவங்க வீட்டுலேயும் சரி, அந்த பொண்ணும் சரி, எந்த காலத்திலேயும் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாங்க. நான் வாழ்றதும், வீணாப்போறதும் உங்க கைல தான் இருக்கு” என்று ஆணித்தரமாய் தன் நிலையை விளக்கி விட்டான்.

“என்னடா? என்ன வார்த்தை பேசுறோம்னு தெரிஞ்சுகிட்டு தான் பேசுறியா, போனபோகுது சின்ன பையனாச்சே, பேசட்டும்னு விட்டா ரொம்பத்தான் ஆட்றே” என்று ஆதங்கத்துடன் பேசிய மீனாட்சி அம்மாளை தடுத்து நிறுத்திய அவனின் தந்தை சுப்பையா…

“அவன ஒண்ணும் சொல்லாதே மீனா… துரை சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டார்ல… அந்த தைரியம் தான் பேச வைக்குது, பேசட்டும். அப்ப தானே என் பசங்களும் வளர்ந்துட்டாங்கனு எனக்கும் தெரியும்.

எப்போ நீ எங்ககிட்ட அனுமதி கேக்காம உன்னோட முடிவ சொல்ல வந்தியோ, அப்பவே நீ எங்க கைமீறி போயிட்டே. இப்போ நாங்க என்ன சொன்னாலும் அது உனக்கு கெட்டதா தான் தெரியும்”

“நாங்க சாதிய பாக்குற ஆளுங்க இல்லைய்யா, குடும்ப பாரம்பர்யத்தை காப்பத்த வேண்டிய காட்டயம் இந்த கிராமத்தானுக்கு இருக்கு. எங்கே அது தப்பிப் போயிருமோன்னு தான் நானும் உங்க அம்மாவும் நினைக்கிறோம்.

வேற எந்த உள்நோக்கமும் இல்ல. உங்க கல்யாணத்துக்கு சம்மதிக்கிறோம். நீங்க சந்தோசமா இருந்தா தான், இங்கே எங்களுக்கு ஒரு வாய் கஞ்சி நிம்மதியா இறங்கும்” மனைவியிடம் ஆரம்பித்து மகனிடம் தன் சம்மதத்தை கூற

“தேங்க்ஸ்ப்பா… நீங்களாவது என்னை புரிஞ்சுகிட்டு சம்மதம் சொன்னீங்களே! ரொம்ப சந்தோசம். அம்மாவை எப்படியாவது பேசி வழிக்கு கொண்டு வந்துருங்கப்பா. நான் இந்த விஷயத்தை ரம்யா அப்பாகிட்ட சொல்லிட்டு வர்றேன்” மகிழ்ச்சியுடன் தன் காரியமே கண்ணாய் சென்று விட்டான்.

“ஏன் இப்படி சொன்னீங்க… நாளபின்னே இதே மாதிரி தானே எந்த ஒரு விசயத்தையும் அலசி ஆராயாம இஷ்டத்துக்கு முடிவெடுக்க ஆரம்பிச்சுருவாங்க” ஆதங்கப்பட்ட மனைவியிடம்

“அது அப்படி இல்ல மீனாட்சி… இன்னும் கொஞ்சம் பொறுப்பு வரும் அவங்களுக்கு. எதையும் மேலோட்டமா மட்டுமே பாக்குற ஆள் கிடையாது நம்ம பையன், நல்லா யோசிச்சு தான் முடிவேடுத்துருக்கான்னு தோணுது.

ஒரு விஷயம் நல்லா கவனிச்சியா, நம்ம சம்மதம் இல்லாம அந்த பக்கமும் சம்மதம் கிடைக்காதுன்னு தானே சொன்னான். அதுலேயே தெரியலையா அவங்களோட நல்ல குணம். எனக்கு என்னமோ அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு பொருந்தி வருவான்னு தோணுது, பாக்கத்தானே போறோம்.

இனிமே கல்யாண வேலைய ஆரம்பிப்போம். இல்லேன்னா உன் பையன் அந்த வேலைய கூட நமக்கு வைக்காம தானா செஞ்சாலும் ஆச்சரியபப்பட்றதுகில்லை” என்று அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இப்படியாய் பல பேச்சிற்கு நடுவில், மகனின் ஆசைக்கு செவி சாய்த்து திருமணத்திற்கு சம்மத்தித்தனர். எளிமையான முறையில் மணமகனின் கிராமத்திலே திருமணம் நடைபெற வரவேற்பு சென்னையில் நடத்திட முன்வந்தனர்.

பூவனம்—10

எளிமையான முறையில் மணமகன் குலதெய்வக் கோவிலில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெண்பட்டில் மாப்பிள்ளை மிடுக்குடன், அம்சமாய் கிரிதரன் அமர்ந்திருந்திருக்க, அவனை ஏறிட்டு பார்க்க முடியா வண்ணம் அரக்கு பாட்டில் மணமகளாய் நாணத்துடன், முகம் சிவக்க தலை குனிந்திருந்தவளின் கழுத்தில் மங்கலநாண் பூட்டி, காலில் மெட்டி அணிவித்து தன்னுடையவளாய் ஆக்கிக் கொண்டான்…

திருமணம் சிறப்பாக நடந்தாலும் தன் பிள்ளை, தங்கள் கை மீறி போய் விட்டது போன்ற உணர்வு மணமகனின் பெற்றோர்க்கு.

அந்த எண்ணத்தை மறைத்து, வந்தவர்களை இன்முகத்துடன் வரவேற்று, எந்த குறையும் இல்லாமல் சிறப்பான முறையில் திருமணத்தை நடத்தி வைத்தனர்…

அதிகாலை திருமணம் முடிந்த கையோடு, பெண்ணை புகுந்த வீட்டில் அனுப்பி விட்டு ரம்யாவின் பெற்றோர் விடைபெற்றனர்.

திருமணம் முடிந்து வீட்டிற்க்கு வந்தவர்களை ஆரத்தி எடுத்த கையுடன் உறவினரின் பேச்சு ஆரம்பமாகியது. சற்றே மெலிந்த உடல்வாகு கொண்டவள், புதிய உறவுகள், புது இடம், புது விதமான பேச்சுக்கள் எல்லாம் சேர தனக்குள்ளே சுருங்கிக் கொண்டாள்.

“ஏன் பெரியதம்பி, நீ கட்டுன பொண்ணு வீட்டுல ரொம்ப கை சுருக்கமோ? பொண்ணுக்கு நல்ல விதமா ஆக்கிபோட்டு உடம்ப தேத்து விடாம இப்படி பஞ்சத்துல அடிபட்டவ மாதிரில்ல இருக்கா கல்யாணப் பொண்ணு” என உறவினர்கள் விசாரணையை ஆரம்பிக்க

“அப்படி எல்லாம் இல்ல அத்த! அவ உடம்பு அப்படி, எல்லோரும் ஒண்ணு போலவே இருக்குறோமா என்ன?” மாப்பிள்ளை பதிலுரைக்க

“இதப்பாருடா… பொஞ்சாதிய விட்டுக்குடுக்காம இருக்கான், பேசவாவது செய்யலாமே, உன்ர பொஞ்சாதி… நாங்க பத்து கேள்வி கேட்ட மூணுக்கு தான் பதில் வருது, சொல்லி வை தம்பி நம்ம உறவுகாரவுகள பத்தி…” என பட்டியல் இடுவோர் நீள…

“சரி அத்த சொல்லி வைக்குறேன், புது இடம், கொஞ்சம் சங்கோஜம் இருக்கத்தானே செய்யும்…” மாப்பிள்ளையும் நெளிய

“எப்ப தம்பி சொல்ல போற? நீ சொல்லி, அவ இந்த வீட்டு பழக்கத்தை எல்லாம் கத்துக்குறது எப்போ?” இது அடுத்தவரின் வாதம்

“இப்ப ஒரு வாரந்தான் இங்கே இருப்பீங்க. அப்பறம் வேலைன்னு சாக்கு சொல்லிட்டு பட்டணத்துக்கு ஓடவே உங்களுக்கு சரியா வரும்” என்று கணித்தவர்கள்

“வேற நான் என்னதான் பண்ணணும்னு எதிர்பாக்குறீங்க அத்த?” கிரி ஆதங்கத்துடன் கேட்க

“அவள ஒரு மாசம் இங்கே விட்டுட்டு போ பெரியதம்பி, எல்லா சொந்தக்காரங்க வீட்டுக்கும் போய் பழகிகட்டும்” குடும்பத்து மூத்த மருமக நம்ம சனங்களை எல்லாம் தெரிஞ்சு, நம்ம பழக்க வழக்கத்தை எல்லாம் கத்துக்கணும்” பட்டியலிட்டார் மீனாட்சி அம்மாள்.

“இப்போ தான் வேலைக்கு சேர்ந்து இருக்கோம், லீவெல்லாம் எடுக்க முடியாதும்மா… இந்த பதினைஞ்சு நாள் லீவுக்கே கொஞ்சம் கஷ்டமாப் போச்சு, நிச்சயமா கொஞ்ச நாள் கழிச்சு கூட்டிட்டு வர்றேன், அப்போ எல்லோரோட வீட்டுக்கும் போயிட்டு வரட்டும்” சிரித்துக்கொண்டே சொன்னாலும் ஒரு வித சங்கடம் கிரிதரனுக்கு.

மீனாட்சி அம்மாவிற்க்கோ பொல்லாத கோபம் மனதில். அனைவரின் முன்பும் மகன் தன் பேச்சை தட்டி விட்டானே என்று அதை பேச்சில் காட்டத் தொடங்கினார்…

“இதுக்கு தான் பட்டணத்து பொண்ணு வேணாம்னு சொன்னது. நம்ம உறவுக்குள்ள கட்டியிருந்தா இந்நேரம் இவ்ளோ பேச்சு இருக்குமா?” அங்கலாய்த்தவர்

“நமக்குன்னு ஒரு மரியாதை இருக்கு, அத எல்லாம் இந்த காலத்து புள்ளங்களுக்கு எங்கே தெரியுது? வந்த மருமக தான் இதயெல்லாம் தெரிஞ்சு குடும்பத்த நடத்தணும்.

இப்போவே பொண்டாட்டிய விட்டுட்டு போக மாட்டேன்னு சொல்றவன் எங்கே? எப்போ? தனியா இங்கே விடப் போறான்?” என நீட்டிமுழக்கி விட்டார் கிரியின் தாயார்.

இத்தனை பேச்சுகளிலும் ரம்யா சிறிதும் கலந்து கொள்ளவில்லை. அவள் மனதில் பயம் வந்து உட்கார்ந்து கொண்டது.

துணையாய் வந்த பெற்றவர்களும் இல்லாமல், ஏதோ ஒரு காட்டுக்குள் வழி தெரியாத அபலை பெண்ணாய் தான் அமர்ந்திருந்தாள். பட்டணத்தில் பிறந்து வளர்ந்தவளுக்கு சபை நாகரிகம் வாய்பூட்டை போட்டிருந்தது.

பொதுவாகவே புதிய மனிதர்களை பார்த்தால் ஒதுங்கிக் கொள்பவள்.. தன்னையே எல்லோரும் உற்று உற்று பார்க்க, ஏதோ ஓர் தனிமை உணர்வு வந்து ஆட்கொண்டது.

அவள் வயதை ஒத்த செந்தாமரையிடமும் பேச்சு சற்று குறைவே, கணவனின் தம்பியிடம் மிக சுத்தமாய் ஒதுங்கிக் கொண்டாள்.

மனம் மயக்கும் திருமண இரவில் மெல்லிய அலங்காரத்தோடு அறைக்கு வந்தவளின் குழப்ப முகத்தை கண்டு கொண்டவனுக்கு சகஜமாய் மனைவியை தன் வீட்டில் எப்படி பொருத்துவது என்ற கவலை சூழ்ந்து கொண்டது.

தோள்களில் அணைவாய் பக்கத்தில் அவளை அமர வைத்துகொண்டு மெதுவாய் பேச்சை ஆரம்பித்தான்.

“இங்கே எல்லாம் பிடிச்சிருக்கா ரம்யா?”

“ஓ பிடிச்சிருக்கு”

“எங்க அப்பா அம்மா?”

“பிடிச்சிருக்கு”

“இது நம்ம ரூம், உனக்கு பிடிச்ச மாதிரி மாத்திக்கலாம், என்ன வேணும்னு சொல்லு செஞ்சிருவோம்,”

“ஏன் சென்னைக்கு போகப் போறதில்லையா கிரி?” என கண்களை விரித்து கேட்டவளிடம்

“ஏய்! சென்னையில தான் இருக்க போறோம், நாம இங்கே அடிக்கடி வந்துட்டு இருக்கணும் ரம்யா.. மொத்தமா அங்கேயே இருக்க முடியாது? சரியா?” என்றவனின் பேச்சிற்க்கு நன்றாகவே ஆட்டியவளின் தலையை தன் இரு கைகொண்டு நிறுத்தி

“இப்படி எல்லாத்துக்கும் பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டிட்டு இருக்காதே! உனக்கு என்ன தோணுதோ சொல்லு” சற்றே சீண்டி விட அது நன்றாய் வேலை செய்தது.

“யாரு நானாடா மாடு? நானா தலையாட்டிட்டு இருக்கேன்? நீதான்டா மாடு! யாரு என்ன சொன்னாலும் “சரி அத்த” “சரி மாமா”னு ஆட்டிகிட்டே இருக்கே, ஒரு உரலை தலையில கட்டி வச்சிருந்தா இந்நேரம் கல்யாணத்துக்கு மாவாட்டி இருக்கலாம்”

“அடிப்பாவி! பாவமா மூஞ்சிய வச்சுகிட்டு என்ன பேச்சு பேசுற? இந்த பேச்ச கீழே சொந்தக்காரங்க கிட்ட பேசினா எல்லோரும் சந்தோசப்படுவாங்கடி, எனக்கும் மாவாட்டற வேலை குறைஞ்சுருக்குமே?”

“அப்படி சட்டுன்னு பேசி பழக்கம் இல்ல கிரி… எனக்கு கூச்சமா இருக்கு, எங்கேயும் போய் இருந்ததும் இல்ல” தனக்கு இந்த வீடு பொருந்தவில்லை என்பதை கோடிட்டு காட்டி விட்டாள் கணவனிடம்.

“இனிமே பழக்கப்படுத்திக்கோ ரமி… கிராமத்து ஜனங்க, இங்கே இருக்குற பழக்க வழக்கம் எல்லாமே உனக்கு புதுசு தான். அவங்க வெளிப்படையா பேசுறாங்க, மனசுல எதையும் வச்சுக்க தெரியாதவங்க, நீ ரெண்டு நாள் பேசி, பழகினாலே உனக்கு தெரிஞ்சுரும்” நெற்றியில் முத்தமிட்டவாறே சொல்ல நெளிய ஆரம்பித்து விட்டாள்.

அவள் நெளிவு, மனதில் உள்ள பயம் அனைத்தும் சேர்ந்து முகத்தில் பல வித பாவங்களாய் சுருங்கியும் விரிந்தும் மாற

“இப்படியெல்லாம் மூஞ்சிய வச்சுக்காதேடி, பாக்க புடிக்கலே எனக்கு”

“நீ இப்படி ஓட்டிகிட்டு இருந்தா இன்னும் மோசமா கூட என் மூஞ்சி போகும் கிரி, கொஞ்சம் இடம் விடேன்… ஏன் இப்படி பசையா ஓட்டிகிட்டு இருக்கே?”

“அது முடியாது, இப்போதைக்கு என்னால முடிஞ்சா வேலை இது மட்டும்தான், நம்ம வீட்டுல தான் நம்ம வாழ்க்கைய ஆரம்பிக்கணும்னு முடிவு பண்ணிருக்கேன். அது வரைக்கும் இப்படி பக்கத்துல உக்காந்து சமாதானம் பண்ணிக்கிறேன்”

“தள்ளியிருக்கேன்னு கொஞ்சம் தள்ளி உக்காந்தே சொல்லலாம் கிரி, எனக்கு இப்படி.. பிடிக்கல…” மீண்டும் முகத்தை சுருக்க

“போடி பச்சமிளகா! கொஞ்சம் கூட பீலிங்க்ஸ் இல்லாத ஜடம் நீ”

“நீதான்டா அது, பக்கத்துல ஓட்டிகிட்டு, தள்ளி நிக்கிறேன்னு ஜடம் மாதிரி சொல்றே, அரலூசு மாதிரி பேசுறே…” கடிந்து கூற

கோபமாய் தள்ளி அமர்ந்து கொண்டான். சட்டென்று அவனின் விலகலில் மனம் பதற “கோபப்படாதே! கிரி சாரி… நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது, நீ என்னோட நல்லதுக்கு தான் பாக்குறேனு தெரியுதுடா, கொஞ்சம் கூச்சமா பீல் பண்ணினேனா, அதான் அப்படி பேசிட்டேன்” என்று சமாதனப்படுத்த இன்னும் ஒட்டி அமர, கிடைத்த வாய்ப்பை விட்டு விடாமால் அவளைத் தன் தோளில் போட்டுகொண்டு உறங்க ஆரம்பித்தான்.

திருமணம் முடிந்து ஒரு வாரம் அங்கு தங்கிருந்த காலத்தில் ரம்யாவிற்கு முள் மேல் நடக்கும் நிலை தான். குடும்ப பாரம்பரியத்தை சொல்லிச்சொல்லி அதன் படி நடக்கச் சொன்னவர்கள் அவள் நின்றாலும், நடந்தாலும் குற்றப்பத்திரிகை வாசித்து மறைமுக எதிர்ப்பைக் காட்டத்தொடங்கினர்…

அந்த குற்றச்சாட்டின் தீர்ப்பு “நம்ம இனத்துல பொண்ணு கட்டியிருந்தா இவ்ளோ கஷ்டம் நமக்கு இல்ல, இப்படி ஒண்ணொண்ணா சொல்லிக்குடுத்து வேண்டியிருக்கு” என்பதே….

வீடெங்கும் உறவினர் சூழ்ந்திருக்க சதா மணப்பெண்ணை சுற்றி கண்கொத்தி பாம்பாக பார்த்து வைத்து குத்திக் காட்டி பேசியதை கணவனிடம் சொல்வதற்க்கும் வாய் வரவில்லை மணப்பெண்ணிற்க்கு.

கணவனை அழைக்கும் முறையையும் ஆட்சேபித்தவர்கள் “இது என்ன பேச்சு கொஞ்சம்கூட மாரியாதை இல்லாம பேர் சொல்லி கூப்பிட்டுகிட்டு?

அழகா “மாமா” “மச்சான்” அதுவும் இல்லனா “அத்தான்”னு கூப்பிட்டு பழகு. இது கிராமம், எல்லா விசயத்துலயும் ரொம்பவே அனுசரிக்கணும், உன் இஷ்டத்துக்கு இங்கே இருக்கலாங்கிறத மறந்துரு” போன்ற பல சட்டதிட்டங்களை மருமகளுக்கு சொல்லி, அவளுக்கு தான் என்றுமே எதிரி என்னும் மேல்பூச்சை பூசிக்கொண்டார் மீனாட்சி அம்மாள்….

கணவனின் அருகாமையில் மட்டுமே நிம்மதியாக முச்சு விட முடிந்தது…

எங்கே தான் சொல்வது தவறான புரிதலுக்கு வழிவகுத்து விடுமோ என்ற அச்ச உணர்வு, உறவினர்களின் பேச்சை கணவனிடம் பகிர்ந்துகொள்ள விடாமல் தடுத்தது.

சென்னையில் வரவேற்பு முடிந்து தனிக்குடித்தனம் ஆரம்பித்து வைக்க வந்த இடத்திலும் இந்த குத்தல் பேச்சு தொடர, தகுதிக்கு மீறிய இடத்தில் பெண்ணை கொடுத்தது தவறோ என்ற எண்ணம் பெண்ணை பெற்றவர்களின் மனதை பதம் பார்த்தது.

கிரிதரனின் சென்னை வீடு கொஞ்சம் பெரிய வீடாகத் தான் இருந்தது.. ஊரிலிருந்து அடிக்கடி பெற்றோரின் போக்குவரத்தும், சிறிது நாட்கள் கழித்து தன் தம்பி முரளிதரனின் ஜாகையையும், இங்கே மாற்றிக்கொள்வதாக சொன்னதால் பெரிய வீடாக பார்த்து முடித்திருந்தான்…

முன்பக்கம் பெரிய ஹாலும் அதனை ஒட்டிய மூன்று அறைகளும் அதற்கடுத்து இருந்த சமையல் அறையும் கொண்ட தனிக்குடித்தனத்திற்கு தேவையான அனைத்து பொருள்களையும், தன் தகுதிக்கு மீறியே சீர் செய்திருந்தார் ரம்யாவின் தந்தை சண்முகம். “எதற்கு இவ்ளோ செய்றீங்க மாமா வேண்டாம்” என்று தடுத்த மாப்பிள்ளையிடம்

“என்னை தடுக்காதீங்க மாப்ளே! இது என்னோட கடமை மட்டுமில்ல, என் பொண்ணு மேல வச்சுருக்கிற பாசத்தை காட்ட எனக்கு ஒரு சந்தர்ப்பம்.

அவ எங்கவீட்டு இளவரசி, அவ கஷட்டப்பட்டா அத பாக்குற சக்தி எங்களுக்கு இல்ல. இது ஒரு சுயநலம்னு கூட நீங்க எடுத்துக்கலாம். நாங்களும் சந்தோசமா இருக்க தான் இத செய்றேன்” என்று நெகிழ வைத்து விட்டார்…

கிரிதரனுக்கு பெருமை தாங்கவில்லை… அனைவரின் அன்புக்கும் பாத்திரமானவள், அன்று ஏன் தன் காதலை ஏற்க மறுத்தாள் என்பது தெளிவாக விளங்கியது… திருமண ஆராவாரங்கள் அடங்கி அமைதியான, மகிழ்ச்சியான நல்லதொரு நாளில், தங்களின் இல்லறத்திற்க்கான அடுத்த அடியை எடுத்து வைத்தான்.

பூவனம்-11

பலநாள் எதிர்பார்த்த அமுதம், இன்று தன் கண்முன்னே பெண்ணாய் நின்றிருக்க, ஆசையாய் தன் விழிகளில் நிரப்பிகொண்டான் கிரிதரன்.

மேலிருந்து கீழிறங்கிய பார்வை சில இடங்களில் அதிகமாய் தேங்கி நிற்க, அந்த பார்வையின் வீச்சை தாங்க முடியாமல், சிவந்த முகத்தில் கூச்சத்துடன் தலை குனிந்து அமர்ந்திருந்த மனைவியின் அழகில் நெகிழ்ந்து மனதை தன் வசம் இழந்தான்.

அவளின் குழந்தைத்தனமான அழகில் சொக்கியவன், நெற்றியில் முதல் அச்சாரத்தை பதித்தபடியே

“நான் உன் மேல வச்சுருக்குற அன்பும் ஆசையும் இன்னும் வளர்ந்துகிட்டே இருக்குறதுக்கு காரணம், உன்னோட குழந்தைதனமான பேச்சும் அழகும் தான் ரமி”

“அப்போ நான் குழந்தையா கிரி உனக்கு?” காதலுடன் சொன்ன மனைவியின் கரம் பற்றி முத்தமிட்டவன்

“சந்தேகமே வேணாம்… நீ எனக்கு குழந்தையே தான்” அவளின் உள்குத்தை அறியாமல் பதில் சொல்லி பரவசப்பட்டான்..

“அப்போ ஒரு குழந்தைய எப்படி பார்த்துபீங்களோ, அப்படியே எல்லா விஷயத்துலயும் என்னை பார்த்துக்கோங்க கிரி, இப்போ இந்த குழந்தைக்கு தூக்கம் வருது… நான் போய் தூங்குறேன்”

“நான் சொல்ல வர்றதை நீ முழுசா புரிஞ்சுக்காம பேசுறேயே செல்லம். எல்லா நேரத்தையும் விட இந்த நேரத்துல, இப்போ நீ ரொம்பவே ஸ்பெஷல் எனக்கு.

ஒரு குழந்தைக்கு எப்படி சொல்லி குடுக்கணுமோ, அப்படி மெதுவா சொல்லி குடுத்து உன்னை என்னோட அக்மார்க் பொண்டாட்டியா மாத்துறது தான் என்னோட முக்கிய வேலையே” என்று சொன்னவன்

அவன் சேர்த்து வைத்திருந்த அத்தனை ஆசையையும், முத்தத்தில் மெதுவாய் ஆரம்பித்து வைக்க, வேகம் கூடிய அவன் இதழ்கள் ரங்க ராட்டினமாய் சுற்றி, அவளின் அரை வட்ட சந்திரனை சென்றடைந்தன.

மூச்சுக்கு தவித்தவளை சற்றே ஆசுவாசப்படுத்தி வாஞ்சையாய் அணைத்து கொண்டான்.

உடல் சிலிர்த்திருந்தவளை படுக்கையில் தவழ விட்டவன் “நீ எவ்ளோ அழகா இருக்கே தெரியுமா?” போதையில் பிதற்றுபவனைபோல் கைகளால் அவளை அளந்துகொண்டே, அவள் மேனியின் ஒவ்வொரு அழகையும் சொல்லி கொண்டிருந்தவனின் பேச்சை கேட்க கூச்சப்பட்டு, அவன் வாயை அடைக்கும் முயற்சியாய் சட்டென்று அவன் கன்னத்தில் ரம்யா முத்தத்தை வைக்க, கிரிதரனின் கைகள் செய்யும் செயலை, இதழால் தொடங்கி விட்டாலும் பேச்சை விடவில்லை அவன்

“இப்படியே பேசிட்டு இருந்தா நான் தூங்கிருவேன் கிரி, அப்பறம் காலையில என்னை திட்டக்கூடாது…”

“சரி என்ன செய்யணும்னு நீயே சொல்லு செஞ்சிருவோம்” கள்ளத்தனமாய் கண்ணடித்தவனின் தலையில் கொட்டியவள், “எனக்கு தெரியாது… போடா” என்று சிவந்த முகத்தை அவன் மார்பில் புதைக்க,

“நான் சொல்லி தரேன் நல்ல பிள்ளையா கத்துக்கோ” என சொன்னவன் பாடத்தை சிரத்தையாய் நடத்த, சம்சார சாகரத்தின் கற்றலும், கேட்டலும் அற்புதமாய் அரங்கேறியது…

காதலனாய் அன்பை அமைதியாய் காட்டியவன், கணவனாய் அணைப்பில் அதிரடியை காட்டினான்… உறவாய் வந்தவன் புதியதொரு உலகத்தை அறிமுகப்படுத்த… முதலில் பாவையவள் பயந்தாலும் கணவனின் அருகாமையும், பேச்சும் அவளுக்கு நம்பிக்கை தர, இறுதியில் நாணத்தை உடைத்தெறிந்து கணவனுடன் கை கோர்க்க… இருவரும் சேர்ந்தே காதலின் கரை கடந்தனர்….

ரம்யாவின் நளபாக சாகசங்களும் பிரமாதமாய் ஆரம்பமாக, ஒரு நல்ல நாளில் கைபேசியில் தன் அன்னையிடம் செய்முறையை கேட்டுகொண்டே அலப்பறை செய்து கொண்டிருந்தாள்…

முதல் சமையலை இனிப்போடு ஆரம்பிக்க, தடபுடலாக செய்ய ஆரம்பித்தாள், துணைக்கு வந்த கணவனையும் வேண்டாம் என ஒதுக்கி விட்டு, அனைத்தையும் தன் போக்கில் செய்து அசத்தி விட, உணவு மேஜையில் அட்டக்காசமாய் சிரித்து வைத்தது அவளின் நளபாகம்.

பசியோடு வந்தவனை அமர வைத்து கேசரி பரிமாற எத்தனிக்க, அந்த கரண்டியும், இனிப்பு பாத்திரமும் ஓட்டிப் பிறந்த உடன்பிறப்பாய் பிரிய மாட்டேன் என சதி செய்தது…

“என்னடி செஞ்ச… இப்படி ஓட்டிட்டு இருக்கு? நாமா ரெண்டு பேர் கூட இப்படி இருந்ததில்லையே ரமி? என்ன மேஜிக் செஞ்சே சொல்லு? நானும் ட்ரை பண்ணறேன், இப்படி ஓட்டிட்டு இருக்க…” என கிண்டலுடன் கண்ணடித்து சொன்னவனை முறைத்து கொண்டே

“புத்தி போகுது பாரு… நானே இத எப்படி எடுக்குறதுனு முழிச்சுட்டு இருக்கேன், உனக்கு இப்பவும் ரோமான்ஸ் கேக்குதாடா? கடுப்பேத்தாத கிரி… எப்படியாவது இத பிரிக்க பாரு”

“என்னத்த போட்டு கேசரி செஞ்சே செல்லம்?”

“ரவை தான் போட்டது… கிராஸ் கொஸ்டீன் கேக்காதே?”

“ரவை எங்கே இருந்து எடுத்தே?”

“ரொம்ப ஓட்டாதடா! அங்கே வெள்ளை கலர்ல இருக்குறத தான் போட்டேன், அம்மாகிட்டே கேட்டு தான் செஞ்சேன்…”

“என்னனு கேட்டு செஞ்சே?”

“ரவை எப்படி இருக்கும்னு கேட்டேன்”

“எப்படி இருக்கும்னு அவங்க கிட்ட கேட்டே சரி, எங்கே இருக்குனு எங்கிட்ட கேக்க மாட்டியாடி பச்சமிளகா?”

“நீ சொன்ன இடத்துல, நான் மைதாவும் கோதுமையும் தானே வச்சுருக்கேன்… எனக்கே குழப்புதுனு ரவை கீழே வச்சுருக்கேன்டி…”

“அப்போ நான் செஞ்சது மைதா கேசரியா கிரி?”

“ஆமா ரமி செல்லம்… முதல் நாள் சமையல்ல ஒரு புது அயிட்டம் கண்டுபிடிச்ச கிச்சன் கில்லாடி நீதாண்டி…”

“ரவையோ, மைதாவோ இனிப்பு தானே, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடுவோம் கிரி ப்ளீஸ்…” கொஞ்சலாய் கேட்க

“ம்ம்ம்… விதி யாரை விட்டது… கொஞ்சம் இரு, பிரிச்சு சாப்பிடுவோம்” என உள்ளே சென்றவன் கத்தியையும், சுத்தியையும் உணவு மேஜைக்கு கொண்டு வந்தான்.

“என்னடா பண்ற? எங்கேயும் சண்டைக்கு போறியா என்ன? இதெல்லாம் கொண்டு வந்துருக்கே”

“எல்லாம் உன் கேசரி உடைச்சு சாப்பிட தான்டி, நீ சொன்ன பிறகு அத நான் கேக்கமா இருப்பேனா?”

“கற்களும் கற்கண்டாய் இனிக்கும், என் ஆசை கண்மணி கை பட்டா” என்று பாட்டாய் பாடிகொண்டே பிரிக்கும் வேலையை ஆரம்பிக்க அதுவோ வருவேனா என்று அடம்பிடித்தது.

“விடு கிரி சாதம் சாப்பிடுவோம், இது போகட்டும்” என்று பெரிய மனதுடன் இனிப்பை விட்டுக்கொடுக்க, மற்ற வகைகளும் அவளை பார்த்து “நாங்களும் நீ செய்த இனிப்பின் உடன்பிறப்புகளே” என்று இளித்தது.

“என்ன ரம்யா இது? சாதம் சின்ன பிள்ள வாந்தி எடுத்த மாதிரி குழைஞ்சு போய் இருக்கு?”

“குக்கர் ஆப் பண்ண மறந்துட்டேன் கிரி”

“சாம்பார்ல எல்லாம் தனித்தனியா தெரியுதுடி!!! தண்ணி தனியா, பருப்பு தனியா, காய் தனியா மிதக்குது, இதுக்கு வேற புது பேர் தான் வைக்கணும், சாம்பார் கேட்டகிரில வாராதுடி”

“பாட்டு கேட்டுகிட்டே ஒரு டம்ளர் தண்ணி அதிகமா ஊத்திட்டேன், வேற ஒண்ணும் இல்ல கிரி…” பல்லை கடித்துக்கொண்டு கூற, அவளை பார்த்து பெருமூச்சு விட்டவாறே

“இதென்ன கூட்டு மாதிரி இருக்கு? ஆனா கருப்பா தெரியுது!! அப்பறம் பொரியல்… இதுவும் அப்படியே ரெட் கலர்!!! என்னடி நினைச்சுகிட்டு இருக்க? மனுஷன் சாப்பிட்டு ஒரேடியா போய் சேர பிளான் போட்டியா என்ன?”

“வாய கழுவுடா மடையா!!! கூட்டுல ஊத்த வேண்டிய தண்ணிய தான் சாம்பார்ல ஊத்திட்டேன், அப்பறம் பொரியல் கொஞ்சம் கலரா இருந்தா நல்லா இருக்குமேன்னு தோணிச்சு, அதான் கொஞ்சமே கொஞ்சம் கேசரி பவுடர் சேர்த்தேன்… என்னமோ விஷத்தை போட்டு சமைச்ச மாதிரி அலராதே!!!”

“என்னாது? நானாடி அலர்றேன்? நீதாண்டி என்னை அழ வைக்கிற… ஹாச்டல்ல கொஞ்சநாள் நானா சமைச்சு சாப்பிட்டவன்டி, எனக்கே நீ கிளாஸ் எடுக்குரியா? போதும் தாயே போதும்…

எங்க அம்மாக்கு இருக்குற ஒரேஒரு மூத்த பிள்ளையும் நான்தான், என் மாமனாருக்கு இருக்குற ஒரேஒரு இளிச்சவாய் மாப்பிள்ளையும் நான்தான்… இனிமே நான் சொல்லறத மட்டும் நீ செய், அதுக்கு மேல மூச்சு விடக்கூடாது” கடிக்காத குறையாய் சொல்லிவிட்டு, வெளியே சென்று தான் மனைவியின் நளபாகத்தை கொண்டாடினான்.

சின்னச்சின்ன சீண்டல்களுடனும், தீண்டல்களுடனும் புலரும் காலைப் பொழுதை இருவரும் இணைந்தே வரவேற்று, வேலைகள் அனைத்தையும் ரசித்து, சேர்ந்தே செய்தனர். வராத சமையலையும் மிக சீக்கிரமே மனைவிக்கு கற்றுக் கொடுத்தான் அவளின் மணவாளன்.

“நான் காபி போடறேன்… நீ காய் கட் பண்ணிடு ரமி…”

“வேணாம் கிரி… நீ இங்கேருந்து போனாலே எனக்கு நிமிசத்துல முடிஞ்சுரும்… நீ ஆபீஸ் போக ரெடியாகு செல்லம்..” என அவனை விரட்டி விடுபவளின் இடையை அணைத்து தன்முன்னே திருப்பி…

“இது தான் நல்லதுக்கு காலம் இல்லன்னு சொல்லறது, அப்படியென்ன டிஸ்டர்ப் பண்றேனாம் நான் சொல்லு…” என்றே இறுக்கி அணைக்க ஆரம்பித்தான்…

“இதுதான் வேணாம்னு சொல்லறேன்… தள்ளு… வேலை செய்ய விடுடா.. லேட் ஆகுது…”

“அடிப்பாவி புருஷன் ஆசையா பக்கத்துல வந்தா தள்ளியா விடறே… உன்ன பார்த்தாலே கிக் ஏறுது ரம்… இந்த கிரி கிறுகிறுத்துத் தான் போறேன்டி, உன்ன பார்த்தா என்னோட கையும், வாயும் என் பேச்சை கேக்க மாட்டேங்குது ரம்…”

“ஆமாடா… இப்படி ரம், பீர், ஒயின்னு எல்லா அயிட்டத்தையும் சொல்லிகிட்டே திரி… யாராவது கேட்டா என்ன நினைப்பாங்கன்னு கொஞ்சமாவது யோசிச்சு பாக்குறீயா?”

“ஏன் ரம்? யார் இருக்கா இப்ப கேக்கறதுக்கு? அப்படி கேட்டாதான் என்ன? நான் என்னோட பொண்டாட்டிய செல்லமா கூப்பிட்றேன், மத்தவங்களுக்கு அத செய்ய முடியலன்னு பொறமை செல்லம்…”

“வெறுப்பேத்தாதடா… ரெண்டு நாளைக்கு முன்னாடி இப்படி தான், நீ ரம்… ரம்னு உளறிகிட்டே வந்தத கேட்டுட்டு எங்க அப்பா என்னம்மா!!! மாப்பிளைக்கு தண்ணியடிக்கிற பழக்கம் இருக்கா? அப்படி இருந்தா கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுக்க சொல்லு… உடம்புக்கு நல்லதில்லனு அட்வைஸ் பண்ணிட்டு போறாரு…” என அலுத்துக்கொண்டவள்

“நீ என்னை செல்லப்பேர் வச்சு கூப்பிடறேன்னு என்னால தண்டோரா போட முடியாது, கன்றாவியா இருக்கு, அப்படி நீ கூப்பிட்றத கேக்க சகிக்கல… இருக்குற என்னோட சின்ன பேர சின்னாபின்னாமாக்காம ஒழுங்கா கூப்பிட கத்துக்கோ…” கொஞ்சலும் கெஞ்சலுமாய் கூறி முடித்தாள்…

“முடியாது ரம்… என் பொண்டாட்டி பேர எப்படினாலும் சுருக்கி கூப்பிட எனக்கு ரைட்ஸ் இருக்கு… நீ யாரு அத கேக்க?”

“அடேய்… நீ இருக்கியே… திருத்த முடியாதுடா உன்னை…”

“சரி கோவிச்சுக்காதே… இப்படி வேணா கூப்பிடவா… ரம்மியாவ்வ்வ்வ்… குட்டி… எப்படி இருக்கு?” பூனை ஓசையுடன் கூறி முடித்தவனை துரத்த ஆரம்பித்ததாள்…

“இன்னைக்கு என் கைல சிக்கினே… கைமா பண்ணிடுவேன்டா…” என்று துரத்தியவளின் கைகளில் விரும்பியே அகப்பட்டு, சோபாவில் அவளுடன் சரிந்தான்.

“ஏண்டி… பேர்ல என்ன வரபோகுது, இப்படி ஹாங்கரி பேர்ட் மாதிரி சிலிர்த்துக்குரே…” சொல்லியபடியே அவளை இறுக்கி அணைத்தவனிடம்

“நீ ஏன் சொல்லமாட்ட! இப்படி நேரத்துக்கு ஒரு பேச்சு பேசியே ஆளைக் கவுத்துடு…” என்றே தன் கைகளை மாலையாக்கி அவன் கழுத்தினில் கோர்த்தாள்….

“ரமிசெல்லம்… இன்னைக்கு ஆபிஷ்க்கு லீவ் சொல்லவாடா? ரெண்டு பேரும் சேர்ந்து வேற நல்ல பேர் உனக்கு கண்டுபிடிப்போம்”

“யாரு நீ தானே? செஞ்சாலும் செய்வடா… இன்னைக்கு சுனாமியே வந்தாலும் நான் ஆபீஸ் போயே ஆகணும். நேத்து வேலை முடிக்காம வச்சுட்டு வந்திருக்கேன், சும்மாவே அந்த டீம் லீடர் முறைச்சு பார்க்கும் முள்ளம்பன்றி… லீவ் எடுத்தேன்னு தெரிஞ்சா என்னை காலி பண்ணிடும்…”

“உன்னைய யாருடி பெண்டிங் வைக்க சொன்னது? முடிச்சிட்டு வர வேண்டியது தானே”

“நானா பெண்டிங் வச்சேன்? உன்னோட போன் கால் தான் அத செய்ய வச்சது. வரவர உனக்கு பொறுமை பேருக்கு கூட இல்லாம போகுது. நீ வந்து நின்னவுடனே நான் வந்துரனுமா?

சார் கொஞ்சம் வெயிட் பண்ண மாட்டிங்களோ? போன் அடிச்சிகிட்டே இருக்குறது… கவனிக்காம இருந்தா, செக்யூரிட்டி கிட்ட சொல்லி அனுப்பி விடறது… இந்த தொல்லை தாங்க முடியாம தான் நேத்து என்னை விட்டுச்சு அந்த முள்ளம் பன்றி, இல்லேன்னா எப்படி நான் சீக்கிரம் வர்றது?”

“கொஞ்சமாச்சும் மூளைய யூஸ் பண்ண கத்துக்கோடி, அப்போதான் சீக்கிரம் வேலைய முடிக்க முடியும்…”

“ஒஹ்ஹ்! அப்படிங்களா சார்… அப்போ என்னோட வொர்க் எல்லாத்தையும் வீட்டுக்கு கொண்டு வந்துர்றேன், மூளை உள்ள நீங்க எனக்கு முடிச்சு குடுங்க” என்று கடுப்பத்தபடி அவனின் தலையை கலைத்து வைத்தாள்….

“நீ இப்படியே ஒட்டிட்டு இருக்கேன்னு சொல்லு, ரெண்டு பேரும் சேர்ந்தே வீட்டுல வேலை பாப்போம்” என கூறி கண் சிமிட்டியவனைபார்த்து

“கேடி… கேடி… உன் புத்தி தெரியாம நானும் உன்கிட்டே வாய குடுத்து மாட்டிக்கிறேன் பாரு, என்னைச் சொல்லணும். நீ இப்படியே இரு, நான் கிளம்புறேன்” என்று பேச்சை முடித்து வைத்தாள்.

பூவனம்—12

மாதத்தில் இருமுறை கிராமத்திற்க்கு வந்து செல்ல வேண்டும் என்பது கிரிதரனின் தந்தை சுப்பையாவின் உத்தரவு. அதன் படி இருவரும் சென்றாலும் மனதில் ஒரு வித ஒட்டாதன்மையுடன் மீனாட்சி அம்மாள் நடமாட, மருமகளை சிறிது சிறிதாக ஒதுக்கத் தொடங்கினார்.

சமையலில் மருமகளுக்கு இருக்கும் பரிச்சயமற்ற தன்மை மாமியாருக்கு கற்கண்டாய் இனித்தது… குறை சொல்ல நல்லதொரு விஷயமல்லவா…

“இப்படி வெந்ததும் வேகாததும் சாப்பிட்டு சம்பாதிச்சே ஆகணும்னு என்ன பிடிவாதம்? ஒழுங்கா லட்சணமா எல்லாத்தையும் கத்துகிட்டு புருசனுக்கு வாய்க்கு ருசியா ஆக்கிப்போட்ற வழியப் பாரு” என்று ரம்யாவை சாட வெறுப்பின் உச்ச நிலையை எட்டி விட்டாள் அப்பெண்…

அங்கிருக்கும் நாட்களில் பேச்சும், செயலும் வெகுவாய் குறைந்து விடும், அந்த குறைவு கணவனிடமும் தொடர…

“எங்க அம்மா ஏதாவது சொன்னா என்னை ஏண்டி முறைக்கிற? உன் நல்லத்துக்கு சொல்றாங்கனு நினைச்சுக்கோ, எப்போ இருந்தாலும் இதெல்லாம் தெரிஞ்சுக்கதானே வேணும்” என்று சமாதானபடுத்த

“அவங்க வேலைக்கு போக வேணாம்னு சொல்றாங்க கிரி!! நான் படிச்ச படிப்பு வீணா போறத நான் விரும்பல, அது மட்டுமா இங்கேயே வந்து இருக்க சொல்றாங்க, என்னால அதெல்லாம் செய்ய முடியாது” கோபமாய் சொன்னவள்

“இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லி சம்மதம் வாங்கி இருக்கணும் கிரி, நீ சொன்னியா? சென்னைல தான் குடும்பம் நடத்தப்போறோம்னு” கேள்வி கேட்பவளை முறைக்க மட்டும் தான் முடிந்தது அவனால்…

திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க பெற்றோரிடம் அவன் பட்ட பாட்டை மனைவியிடம் தெரிவிக்கவில்லை இன்னமும். கோபமும் முறைப்புமாய் சண்டைகோழிகளாய் சிலிர்த்துக் கொண்டும் திரிவர் அங்கு இருக்கும் சமயத்தில்…

சண்டையிட்டு சமாதானம் அடையும் பொழுதுகள் மேலும் இனிமையை சேர்க்க, ஊடலும், கூடலும் இணைந்த அழகிய இல்லறத்தில் மேலும் ஆனந்தம் சேர்த்திடும் விதமாய் ரம்யா கருவுற்றாள். மகிழ்ச்சி தம்பதியருக்கு மட்டுமின்றி இருதரப்பு பெற்றோர்களுக்கும்…

வீட்டின் முதல் வாரிசு என்னும் சந்தோசம் மருமகளின் மீது உள்ள மனத்தாங்கலை மறக்கடித்து சகஜமாய் உரையாடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் கிரிதரனின் பெற்றோர்.

மருமகளை சீராட்ட கிரிதரனின் பெற்றோர்கள் வருகை புரிய, வேலைக்கு விடுப்பு எடுக்க சொல்லி கிரி அறிவுறுத்த, ரம்யாவின் மனம் ஒப்பவில்லை.

“எனக்கு இப்போ ஒண்ணும் கஷ்டம் இல்லை கிரி, நான் நார்மலாத்தான் இருக்கேன். இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும், மொத்தமா சேர்த்து எடுக்குறேன்.

பேபி பொறந்தப்புறம் தான் ரொம்ப கவனமா இருக்கணும். அப்போ சேர்த்து எடுத்துக்குறேனே” என்று சொல்பவளை தடுக்கவும் முடியவில்லை. ஆனால் இதுவே ஒரு விரிசலை உண்டாக்க வழி காட்டியது…

நாள் முழுவதும் தனியாய் அமர்ந்திருக்கும் மாமியாருக்கும், மருமகள் தன் பேச்சினை கேட்கவில்லை என்ற ஆதங்கம் மனதில் முளை விட, ஆரம்பித்து விட்டார் தன் பிரசங்கத்தை…

“இப்படி கொஞ்சங்கூட சூதானமில்லாம வரதும் போறதுமா இருந்தா சரி வராது, வெளியே காத்து கருப்பு பட்டா பிள்ளைக்கு நல்லதில்ல. நாங்கெல்லாம் இப்படியா வெளியே சுத்திகிட்டு இருந்தோம், இப்ப இருக்கிற பிள்ளைங்க சொல் பேச்சு கேக்குறதில்ல, பட்டாத்தான் புத்தி வரும் போல” என அங்கலாய்த்தவரிடம்

“அம்மா!!! இது கிராமம் இல்ல, நீ சொல்ற காத்து கருப்புக்கெல்லாம் இங்கே இடம் இல்லம்மா. உன் பேச்ச கேக்காம யார் இருக்கா சொல்லு? ரம்யா இப்பதானேம்மா வேலைக்கு சேர்ந்திருக்கா.. பிரசவத்துக்கும் சேர்த்து லீவ் எடுக்கலாம்னு நாங்க தான் முடிவு பண்ணிருக்கோம்” என சமாதானப் படுத்தியவனிடம்…

“அப்படியா பெரியதம்பி? இப்ப எல்லாமே நீங்க தானே முடிவெடுக்கீறீங்க? ரொம்ப பெரிய மனுசனாயிடீங்க!!! கல்யாணம் தான் உங்க இஷ்ட்டபடி முடிவேடுத்தீங்க, இந்த விசயத்துல கூட உங்க விருப்பம்ன்னா நாங்க எதுக்கு? பிள்ளை பேறுங்கிறது சும்மா இல்ல…

நாலு பக்கமும் சுதாரிச்சு கவனமா இருந்தா தான், பொறக்க போற உசிருக்கும் நல்லது. பிள்ளைத்தாச்சி பொண்ணுக்கு வாய்க்கு ருசியா செஞ்சு குடுக்கனும்னு பாக்குறேன். அது முடியுதா இங்கே? என்னமோ நான் தான் மசக்கைக்காரி மாதிரி வீட்டுக்குள்ள பத்திரமா இருக்கேன்” என்று தன் பல்லவியை விடாமல் பாடிகொண்டிருந்தார்…

திருமண விசயத்தில் பெற்றோரின் நிலையை மனைவிக்கு தெரிய வைக்காமல் இருந்தவனுக்கு தர்மசங்கடமான நிலை இப்போது…

“அதான் உங்க அம்மா நான் என்ன செஞ்சாலும் குத்தம் கண்டுபிடிக்கிறாங்களா கிரி? இப்போ என்ன அவசரம்னு அவங்க சம்மதம் இல்லாம என்னை கல்யாணம் பண்ணிகிட்டீங்க? பிடிக்காத மருமகளா இருக்குறது எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா? உங்களுக்கு எல்லாமே ஈஸியா போச்சு”

“அப்படியெல்லாம் இல்ல ரமி… வீட்டுல எல்லோர் சம்மதத்தோட தான் நம்ம கல்யாணம் நடந்திருக்கு. நீ எதையாவது நினைச்சு மனசை போட்டு குழப்பிக்காதே…

ஒரு வாரம் லீவ் எடுத்துட்டு வீட்டுல இருந்தா அவங்க அமைதியாகிடுவாங்க, செய்றியா செல்லம்!!” என கேட்டு, அதை செய்ய வைத்தான்.

கிரிதரனின் தாய் மீனாட்சி அம்மாள்… கிராமத்துப் பெண்மணி, கொஞ்சம் அல்ல, நிரம்பவே பழமைவாதி… குடும்பப் பாரம்பரியம் வேறு சேர்ந்து கொள்ள அவரின் பேச்சில் கம்பீரமும், மற்றவர்களை துச்சமென பார்க்கும் பார்வையும் நிரம்பவே இருக்கும். அப்படிப்பட்டவரிடம் மாமியார் மிடுக்கு சற்று தோரணையாகவே இருந்தது.

பொறிக்குள் அகப்பட்ட எலியின் நிலைமை தான் ரம்யாவிற்கு. ஏற்கனவே திருமணப் பேச்சில் அவரை மீறியதால் கொஞ்சம் சமாதனப்படுத்தும் பொருட்டு கிரிதரன் பொறுத்து போகும் படி சொல்ல, சரியென்று பட மௌனியாகிப் போனாள்.

இயல்பிலேயே அமைதியானவள், மேலும் அமைதியாக தன் பொழுதினை கழிக்க ஆரம்பித்தாள். மாமியாரின் அதிகாரத்துடன் கூடிய சீராட்டலும், மசக்கையும் சேர்ந்து ரம்யாவை பாடாய் படுத்தி வைத்தது….

கஷாயங்கள், கிராமத்து பக்குவத்தில் உணவு முறைகள் பழக்கமில்லை அவளுக்கு… இவைகளையே மீண்டும் மீண்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப் பட மனதில் நொந்தே போனாள்.

தாய் மடி சாய ஆசை வந்தாலும், சட்டமாய் வீட்டில் அமர்ந்திருக்கும் மாமியாரை தனியே விட்டுச் செல்ல மனம் வரவில்லை. எங்கே தன்னை மதிக்கவில்லை என்ற போர்க்கொடியை தூக்கி விட்டால் என்ன செய்வது? என்ற ஒரு வித பயம் மனதில் வந்தமர்ந்து கொண்டது.

தாயின் கவனிப்பில் மனைவியை விட்டாலும், தனிமையில் அவளை மகிழ்விக்க தவறுவதில்லை கிரிதரன். “உன் மனசுல எந்த குறையும் இருக்க கூடாது ரமி!!! என் பொண்டாட்டிக்கு பிடிச்ச விஷயத்தை செஞ்சாதான் என் பிள்ள சமத்தா புத்திசாலியா வெளியே வந்து, அவ அம்மாகிட்ட மாட்டிகிட்டு முழிக்கிற அப்பாவுக்கு சப்போர்ட் பண்ணுவா” என்று சிரித்துக் கொண்டே…

“என் செல்லம் நீங்க வந்து தான் இந்த அப்பாவி அப்பாவ காப்பாத்தணும்… எப்ப பார்த்தாலும் உருட்டி மிரட்டி என்னை பயமுறுத்தி வச்சுருக்காங்க உங்க அம்மா… செய்வீங்களா குட்டிம்மா” என தாயிடம் ஆரம்பிக்கும் அவனின் கொஞ்சல் குழந்தையிடம் முடியும்.

“அடப்பாவி!! நான் மிரட்டுறேனா? இப்படி சொல்றது உனக்கே ஓவரா தெரியல, ஏன்டா அம்மாவும், பிள்ளையும் என்னை மட்டுமே டார்கெட் பண்ணி பேசுறீங்க… பொழுதுக்கும் உங்க அம்மா பேச்ச கேட்டு வெறுப்புல இருக்கேன்… இப்போ நீயும் ஆரம்பிக்கிறீயா?” மூச்சு விடாமல் பேசுபவளை தோள் வளைவில் வைத்துக்கொண்டே…

“அம்மாக்கு தெரிஞ்சதெல்லாம் கிராமத்து பழக்கம் மட்டும் தான்… அத நாம குத்தம் சொல்ல கூடாது ரமி. இன்னும் கொஞ்ச நாள் தானே, அப்பறோம் அம்மா ஊருக்கு போயிருவாங்க, கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ…” என கெஞ்ச

“ஏன் கிரி இப்படி பேசுற, நீ சொல்லி தான் நான் தெரிஞ்சுக்கணுமா? எனக்கு இதெல்லாம் பழகி போயிருச்சு, நீ பீல் பண்ணற அளவுக்கெல்லாம் இல்ல, நான் சந்தோசமா இருக்கேன், விளையாட்டுக் சொன்னேன், அதுக்கு நீ இப்படி அழுக வேணாம், பாக்க சகிக்கல!!!”

“அது என்ன குட்டிம்மானு சொல்றே, பையன் வந்தா என்னவாம், உனக்கு பிடிக்காதோ?”

அவள் கையை தன் கைகளில் வைத்துக்கொண்டே… “எங்க வீட்டுல பெண் குழந்தைகளுக்கு ரொம்ப பஞ்சம். எனக்கு தெரிஞ்சு மூணு நாலு தலைமுறையா ஆண் குழந்தை மட்டும் தான் பொறக்குது…

இது ஒரு பெருமையா கூட பேசுவாங்க பெரியவங்க… அத என் பொண்ணு வந்து மாத்தணும், மத்தவங்க கண்ணுக்கு எப்படியோ எனக்கு பெண்குழந்தை தான் வேணும்.

இப்போவே சொல்லிட்டேன், நமக்கு எத்தன குழந்தை பொறந்தாலும் பொண்ணாத்தான் பொறக்கணும்” என்ற தன் அதி முக்கிய ஆசைக்கனவை பெருமையாய் கூறினான்.

“இவ்ளோ ஆசையா உனக்கு!!! உண்மையிலேயே உன்னை நினைச்சா எனக்கு பெருமையா இருக்குடா, உன் ஆசையே என்னோட ஆசை போதுமா? இனிமே நமக்கு பொண்ணு மட்டும்தான் சரியா.

ஆனா எனக்கு உன்ன மாதிரியே ஒரு பையன் வேணுமே செல்லம்!!! அதுக்கு கொஞ்சமே கொஞ்சம் கருணை காட்டலாமே கிரி” என்ற அவளின் கேள்விக்கு தன் தாடையில் விரலை வைத்துக்கொண்டே அதி தீவிரமாய் யோசித்தவன்…

“இது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான் ரம்… நீ எப்போ என்ன மாமா… அத்தான்னு கூப்பிட்றியோ அப்போதான் அது நடக்குமாம், என்னம்மா ட்ரை பண்றீயா?” சீண்டலுடன் முடித்தான்…

“அதானே பாத்தேன்… என்னடா இன்னும் நீ உன்னோட கச்சேரிய ஆரம்பிக்கலையேனு நினைச்சேன். ஏன்டா இத சொல்லலேன்னா தூக்கம் வராதா உனக்கு? இப்படி கூப்பிட்டு தான் நீ என் புருசன்னு ஊருக்கெல்லாம் காட்டிக்கனுமா?

பிடிக்காத விசயத்த செய்யச் சொல்லி என்னை கம்பெல் பண்ணாதே கிரி, குழந்தை எல்லாம் சாமி குடுக்குற வரம். எனக்கு பையன் பொறக்கணும்னு இருந்தா, என் சிங்கக்குட்டி தானா வரப்போறான்… உன் பேச்ச கேக்க வேற ஆளப்பாரு” என சிலிர்த்துக்கொண்டே, சிரிப்புடன் அவனை பதிலுக்கு சீண்டி முடித்தாள்…

இந்நிலையில் ஆன்சைட் வேலைக்கான வாய்ப்பாய் கிரிதரனுக்கு இரண்டு வருட ஒப்பந்தத்தில் அமெரிக்கா செல்லும் வாய்ப்பு வந்தது… இந்த இரண்டு வருட ஒப்பந்தம் ஐந்து வருடமாய், தன் கழுத்தை இறுக்கப் போவதை அறியாமால் மிகுந்த மகிழ்ச்சியுடன் பயணத்துக்கு தயாரானான் கிரிதரன்…

ரம்யாவிற்கும் மகிழ்ச்சியே, ஆனாலும் சிறு பதட்டம் மனதில் வர அதையும் மறைத்து வைத்தாள். ஆயிரம் பத்திரங்கள் சொல்லி கணவன் விடை பெற்றாலும் மனைவியின் ஏக்கப்பார்வையை கண்டு கொண்டான்.

“இப்படி திருதிருன்னு ஒண்ணுமே தெரியாத மாதிரி நிக்குற ரம்யா எனக்கு வேணாம், அப்பறம் கனவுல கூட இப்படியே வந்து பயமுறுத்துவ, அதுலயே எனக்கு ஜன்னி வந்துரும்மா, கொஞ்சம் நல்லா சிரி தங்கம்…” என்று சீண்டியவனை

“நல்ல விதமா உன்னை வழியனுப்பி வைக்கணும்னு நினைக்கிறேன்… அத நீயே கெடுத்துக்குறே கிரி!!! கிளம்புறப்பவே இப்படி பேசி பயமுறுத்தி வைக்குறியேடா… நானே, நீ இல்லாம எப்படி இருக்கபோறேங்கற கவலையில இருக்கேன். இதுல ஏடாகூடமா எதையாவது பேசி என்னை கடுப்பேத்தாதே.

உடம்ப நல்லா பாத்துக்கோ, ரொம்ப கஷ்டப்பட்டு ஒண்ணும் நீ வேலை பாக்க வேணாம். எவ்ளோ சீக்கிரம் இங்கே வர முடியுமோ வந்து சேரு. என்னால ரொம்பநாள் எல்லாம் உன்ன பிரிஞ்சு இருக்க முடியாது, என்ன சொல்றது புரியுதா?” முறைப்புடன் ஆரம்பித்து அமைதியுடன் முடித்தாள்…

“அப்போ நான் அங்கே போய் ஒழுங்கா வேலை பாக்க வேணாமா? கெட்டபேர் வாங்கச் சொல்றியாடி, சரியான கேடி நீ! புருசனுக்கு ஒரு நல்லது நடக்க விடமாட்டேங்குற, என்னா ஒரு நல்ல எண்ணம்மா உனக்கு” என்று கூறியவனின் சட்டையை கொத்தாக பிடித்தவள்…

“யாரு நானடா கேடி… நீதான் கேடி… உன்னை நினைச்சு கவலை பட்டேன் பாரு என்னை சொல்லணும்.. உனக்கு என்ன நீ போய்டுவே… எனக்கு தான், நான் எப்படி சமாளிச்சுக்க போறேன்னு தெரியல…” என்றவளின் கண்களில் கண்ணீர் கீழே இறங்க தயாராய் இருந்தது…

“ஏண்டா செல்லம் இப்படி சொல்றே? உனக்கு என்ன குறை, நம்ம சுத்தி பெரியவங்க எப்போவும் இருக்காங்க. உனக்கு இங்கே இருக்க கஷ்டமா இருந்தா உங்க அம்மா வீட்டுக்கு போயிரு.

எப்பிடியும் அம்மா இந்த வாரம் ஊருக்கு போயிருவாங்கனு நினைக்கிறேன், அதுக்கப்பறம் என்ன? உனக்கு எங்கே பிடிக்குதோ, எப்படி இருக்கணும்னு நினைக்கிறயோ, அப்படி இருந்துக்கோ.

இப்படி எல்லாம் மனச போட்டு குழப்பிக்க கூடாதுன்னு எத்தன தடவ சொல்லறது. உனக்கு மட்டும் இல்ல, பேபிக்கும் நல்லதில்லடா” என்று கூறி நெற்றியில் முத்தமிட்டவனின் தோள் சாய்ந்து கண்ணீரில் கரைய ஆரம்பித்து விட்டாள்… மனைவியின் அழுகையை காண அவனுக்கும் மனமில்லை.

“பேசாம இந்த ட்ரிப் கான்செல் பண்ணிரலாம் ரமி… உனக்கு டெலிவரி முடிஞ்சதுக்கப்றம் வேணா பிளான் பண்ணிக்குறேன்”

“என்ன பேச்சு இது கிரி!!! ஒரு நல்ல வாய்ப்பு வரும்போது, நாம தான் யூஸ் பண்ணிக்கணும், தட்டிக் கழிக்கக் கூடாது. நான் சந்தோசமா தான் இருக்கேன்,

நான் ஒண்ணும் கவலைப்படல சரியா? நீ சொல்ற மாதிரி பெரியவங்க இருக்குற வரை எனக்கு என்ன கவலை? நீ என்னை பத்தி யோசிக்காம உன் வேலைய ஒழுங்கா பாரு சரியா, கிளம்பு நேரமாச்சு” என்று சகஜநிலைக்கு திரும்பினாள்…

“இத… இதத்தான்டி நான் எதிர்பார்த்தேன்… லவ் யூ ரம்!” கண்சிமிட்டியவனை…

“போகும் போதும் அடி வாங்கிட்டுதான் போவேன்னு அடம்பிடிக்கிறியேடா…” என்று அவனை வெளியே தள்ளிக்கொண்டு வந்தாள்…

தன் தாயிடம் ஆசி வாங்கிக்கொண்டு நிமிர்ந்தவனிடம் “நீ ஒண்ணும் கவலைப்படாதே தம்பி! ரம்யா பிள்ளை பெத்து என் கையில வாங்குற வரைக்கும் அவ கூட இருக்குறதா முடிவு பண்ணிட்டேன். அதனால போற இடத்துல உன் வேலைய மட்டும் கவனத்துல வச்சுக்கோ, என் மருமக பத்தின கவலைய நீ விட்ரு” என்று அலுங்காமல் சொன்னவரிடம் மறுத்து பேசும் தைரியம் வரவில்லை இருவருக்கும்.

பூவனம்—13

மனம் நிறைந்த காதலோடு, கண்களில் ஏக்கத்தை மறைத்துக் கொண்டு கணவனை வழியனுப்பிய ரம்யாவிற்கு தனிமை மட்டுமே துணையாகிப் போனது.

வெளிநாடு சென்றவுடன் தினமும் ஒருமுறை கைபேசியில் அழைத்தவன், பின்பு வேலை அதிகம் என்று இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என அழைத்தான்.

தனிமை அவளை கொத்தித் தின்றது. கணவனிடம் உரையாடும் சொற்ப நேரங்களில், அவனுடன் மகிழ்ச்சியாய் பேசி, தன் அசௌகரியத்தை மறைத்து வைத்தாள். மீண்டும் வேலைக்கு செல்ல கிரியின் தாயார் ஒப்பவில்லை.

எந்நேரமும் மாமியாரின் பேச்சை கேட்பவளுக்கு, ஒருவித வெறுமை வந்தமர்ந்து கொண்டது. அதற்கு காரணம் மீனாட்சி அம்மாளின் நடவடிக்கையே என்றும் சொல்லலாம்,

அவர் ரம்யாவின் பெற்றோரை சற்று தள்ளியே நிறுத்தி வைத்தார். மருமகளை தாய் வீட்டிற்கும் செல்ல தடை விதித்தார்.

“அங்கே போயிட்டு வர ரொம்ப நேரமாகும். வண்டியில, அதுவும் இந்த ஊர்ல போறத நினைச்சாலே மனசு பதறுது. அதான் ரெண்டு நாளைக்கு ஒரு தடவை வந்து பார்த்துட்டு போறாங்களே அது போதும். இங்கே நான் உனக்கு என்ன குறை வச்சுட்டேன்?” என்று முடித்தார்.

தனது சம்பந்தி வீட்டினரின் அந்தஸ்து பேதம், மற்றும் மனதில் தான் என்ற அகந்தையில், யாரையும் ஒதுக்கி வைக்கும் மனோபாவமே அவரின் இந்த எண்ணத்திற்கு காரணமாகிப் போனது.

மருமகளை ஏற்றுக்கொண்ட அவரால், அவளின் பெற்றோர்களை ஏற்றுகொள்ள முடியவில்லை. அதன் பலன் ஐந்தாம் மாத முடிவில் கிராமத்திற்கு செல்லும் போது கையோடு மருமகளை அழைத்துச் சென்று விட்டார்.

‘அங்கே வேலை எல்லாம் எடுத்து செய்றதுக்கு ஆள் இல்லை, இங்கேயே நான் இருந்தா சரி வராது. சின்ன தம்பியும் படிப்பு முடிச்சுட்டு வந்துட்டான் அவனையும் பாக்கணும்.

ஊருக்கு கூட்டிட்டு போனா, இன்னும் கொஞ்சம் நல்லா சத்தான ஆகாரமா செஞ்சு குடுக்க முடியும். இங்கே செஞ்சு குடுக்கறத ஒண்ணும் எடுத்துக்க மாட்டேங்குறா, அங்கே போனா மாறிடும்.

கிராமத்து காத்து மனச லேசாக்கும், நிறைய பசிக்கவும் செய்யும். நீங்க அங்க வந்து பார்த்துட்டு போங்க” என பல கதைகளை சொல்லி சம்மந்தி வீட்டாரின் வாயையும் அடைத்து விட்டார்.

“மாசாமாசம் செக்கப்புக்கு போகணும்மா, அடிக்கடி இங்கேயும், அங்கேயும் அலைய முடியாதும்மா” என்று மறுத்த மகனையும் தன் பேச்சால் அடக்கி வைத்தார்.

“நான் ஒண்ணும் காட்டுக்கு கூட்டிட்டு போகலே பெரியதம்பி… பக்கத்துல இருக்குற திருநெல்வேலி உனக்கு ஊரா தெரியலையா? இங்கிருந்து படிச்சுட்டு வந்தவங்க தானே அங்கே பாக்குறாங்க. எல்லாம் எனக்குத் தெரியும், நீ உன்னோட வேலை என்னவோ அதப்பாரு” என்று சொல்பவரிடம் என்னவென்று சொல்லி புரிய வைப்பது.

கிராமத்து சூழ்நிலை மனதிற்கு இதம் அளித்தாலும் நிம்மதியை அளிக்கவில்லை கர்ப்பிணிப் பெண்ணிற்கு. சகல வசதிகளுடன் இருந்தாலும், கிராமத்து பழக்க வழக்கம் அவளுக்கு கை வரவில்லை.

நலம் விசாரிக்கவென வந்த உறவுக்கூட்டமும் பழைய பல்லவியாய், அவர்களின் சட்ட திட்டங்களை கூறி வெறுப்பை ஏற்றி வைக்க, மனதளவில் தளர்ந்து போனாள்.

வேலை செய்தால் பிரசவம் சுலபம் ஆகும் என்று சில இலகுவாய் செய்யும் வேலைகள் அவளை வந்து சேர்ந்தன. ஏற்கனவே மனம் முழுவதும் ஏக்கத்தை தேக்கி வைத்து, வெளியில் சிரிப்பவளுக்கு இந்த வேலைகள் கடுப்பைக் கொடுத்தது.

வேலை செய்யாதவள் என்றில்லை. கரு சுமக்கும் அவளின் உடலிலும், மனதிலும் ஏற்படும் மாற்றங்களை பகிர்ந்திட, சரி வர பேச்சுத் துணை கிடைக்காததன் காரணம் வெறுமையை அவளுக்கு பரிசாய் கொடுத்தன…

கிராமத்தில் அலைவரிசை சரியாக கிடைக்காத காரணத்தினால், கிரிதரன் வீட்டுபேசியில் தொடர்பு கொள்ள ஆரம்பிக்க, கணவனுடன் பேசும் தனிமை பேச்சும் குறைந்து போனது. அவளின் பேச்சு குழந்தையுடன் மட்டுமாய் இருக்க, தனது அறைக்குள் எந்நேரமும் அடைந்து கிடந்தாள்…

கர்ப்பகாலம் என்பது ஒரு மகிழ்ச்சிகரமான இனிய அனுபவம். அதில் மன உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கும், துன்புறுத்தல்களுக்கும் பெண்களை ஆளாக்காது கொண்டு செல்ல வேண்டியது கணவன் மற்றும் குடும்ப உறுப்பினர்களது கடமை. இதனை புரிந்து கொண்டால் கர்ப்பகாலம் ஒரு பொற்காலமே…

வளைகாப்பிற்க்கு வந்த அவளது பெற்றோர்களுடனும், தன் மருமகளை அனுப்பவில்லை அந்த அம்மையார். பிரசவத்திற்க்கு நாள் இன்னும் இருக்க இப்போதே ஏன் செல்ல வேண்டும் என்று தடுத்து விட்டார்.

கணவனின் அனுசரணையான பேச்சும், வாரத்தில் ஒரு முறை என்று மாறி விட, பல பின்னடைவுகள் அவளுக்கு.

அதன் பலன் ரத்த அழுத்தம் அதிகமாகி, முச்சுதிணறல் ஏற்பட மிகவும் சிக்கலாகிப்போனது பிள்ளைபேறு.

எட்டாம் மாதமுடிவில், கருவில் இருக்கும் பிள்ளையை வெளியே எடுக்கா விட்டால், இரு உயிர்களுக்கும் ஆபத்து என்ற நிலையில் அறுவைச் சிகிச்சை மூலம் பிள்ளையை வெளியே எடுத்தனர்…

அழகான பெண் குழந்தை, ரோஜாப்பூவை தோற்கடிக்கும் நிறத்தில் இருந்த பேத்தியை பார்த்து மனம் சமாதானம் அடையவில்லை கிரியின் தாயாருக்கு…

வழிவழியாய் ஆண்மகவை மூத்த குழந்தையாய் வரவேற்ற குடும்பம், முதல் குழந்தை பெண்ணாய் பிறந்ததில் சற்றே மனச்சுணக்கம் அவருக்கு. புது வரவை பார்க்க வந்த உறவுகளிடம் தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து விட்டார்.

“எங்க பரம்பரையில எப்போவும் ஆம்பள பிள்ள தான் மூத்தபிள்ளையா பொறக்கும், ஆனா இப்ப அப்படியே மாறிடுச்சு, இது தெய்வ குத்தமா? இல்ல யார் விட்ட சாபமோ தெரியலையே?” என்று அங்கலாய்த்தவரிடம்

“இதுக்கு தான் நம்ம இனம், சனம் பார்த்து பொண்ணு எடுக்கனும்னு சொல்லறது அத்தை… நீ உன் பையன் பேச்ச கேட்டு ஊர்ல இல்லாத அழகியா பார்த்து கல்யாணம் முடிச்சு வைச்சே…

நீ பழக்கத்தை மாத்தின, இப்போ பாத்தியா வழக்கம் கூட மாறி புதுசா பொம்பள பிள்ள மூத்ததா வந்திருக்கு” என ஒத்து ஓதினார் பிள்ளையை பார்க்கவென வந்திருந்த உறவுக்கார பெண்மணி…

இந்த பேச்சை கேட்டு பொங்கி விட்டார் ரம்யாவின் தாய்… “ஏன்மா இப்படி ஈவிரக்கம் இல்லாம பேசுறீங்க? நீங்க பொம்பள பிள்ளைய பெத்ததில்லையா? அந்த கடவுளா பார்த்து குடுக்குற வரம்மா இது. இதுலேயும் குத்தம் குறை கண்டுபிடிக்கிறீங்களே… உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?” என கூறியவருடன் வாய் தகராறு ஆரம்பித்தது.

“என்னம்மா சொல்லிட்டோம் இப்போ நாங்க? எங்க வம்ச பெருமை எங்களுக்கு தான் தெரியும்… உங்களுக்கெங்கே அதெல்லாம் புரியப்போகுது?

வந்தோமா? பொண்ணை கவனிச்சோமா? புள்ளைய பார்த்தோமானு இல்லாம, எங்க வீட்டைபத்தி பேச உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

பொண்ண கட்டி குடுத்த இடம்னு கொஞ்சமாச்சும் மனசுல பயம் இருக்கா? வாய்ல வந்தத பேசுறீயே, சுத்த மரியாதை தெரியாத குடும்பம்…” என்று உறவுக்கார பெண்மணி பேச, மீனாட்சி அம்மாள் பின்பாட்டு பாடினார்…

“அப்படி நல்லா கேளு கமலம்! இவங்களுக்கு அப்படியாவது உறைக்குதானு பாக்கலாம். பிள்ள உண்டான நாள்ல இருந்து கண்ணுல வச்சு பார்த்துக்கிட்டு இருக்கேன், எங்களுக்கு ஆதங்கம் இருக்காதா? ஒரு வார்த்தை சொன்னேன் நான் பார்த்துக்குறேன்னு, அதையே பிடிச்சிட்டு இந்த பொண்ணும் பதுமையா எங்ககிட்டயே தங்கிருச்சு.

ஒரு நாள் கூட நாங்க பார்துக்குரோம்னு ஒரு பேச்சு இல்ல, விருந்தாளியா வந்து பொண்ணை பார்த்துட்டு போயாச்சு” என்று சீறினார்…

இது ஒருவிதமான மனோபாவம்… தம்முடைய எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் வரை உரிமையாய் அனைத்தையும் செய்வர். அது பொய்த்து போகும் போது எதிராளியின் மனதை புண்படுத்தி கடினமான வார்த்தைகளை பிரயோகித்து விடுவர்.

மீனாட்சி அம்மாளின் மனமும், குணமும் அப்படியே… அவர் பெண் குழந்தைக்கு எதிரி இல்லை, ஆனாலும் குடும்ப கௌரவம், பாரம்பரியம் என ஏதோ ஒன்று அவர்களை இப்படி பேச வைத்து விட்டது.

தன் வீட்டு வாரிசு என்ற உரிமையில் தான் மருமகளுக்கு செய்தது, மேலும் கிராமத்தில் முதல் குழந்தை ஆண் என்றால் தனி கௌரவம்.

இன்று வரை அது நடைமுறையில் இருக்கும் விஷயம். அது கை நழுவிப்போனதால் அவரின் ஆதங்கமான பேச்சு குற்றச்சாட்டாய் வெளிப்பட்டது…

“ஏன் சம்மந்தியம்மா இப்படி மாத்திப் பேசுறீங்க.. நாங்க கேக்காமலா இருந்தோம்?

நீங்கதானே எல்லோருக்கும் வாய்பூட்டு போட்டு எங்க வீட்டு வாரிசு, நாங்க கவனிச்சுக்குரோம்னு சொல்லி, என் பொண்ணை இங்கே கூட்டிட்டு வந்தீங்க…

அது மட்டுமா? என் பொண்ணு விரும்பினத சாப்பிட விடாம, செய்ய விடாம, உங்க இஷ்டத்துக்கு தானே அவளை ஆட்டி வைச்சீங்க… சந்தோசமா இருக்க வேண்டிய நேரத்துல, என் பொண்ண தவியா தவிக்க விட்டு, இப்போ பிரசவம் சிக்கலாகிருச்சு… இதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?

வலி அனுபவிச்சதேல்லாம் என் பொண்ணு தான், நீங்க இல்ல…” என தன் பக்க நியாயத்தை ஆற்றாமையுடனே கூறி முடித்தார் செல்வி.

இவையனைத்தும் நடந்தது மருத்துவமனையில், பிள்ளை பிறந்து மூன்றாம் நாளில் இவ்வையான பேச்சு. உடம்பில் வலி, மனதில் அதைவிட பெரிய வலி பிள்ளை பெற்றவளுக்கு…

மருத்துவத்தின் மூலம் உடம்பின் ரணத்தை குறைக்க வழி கண்டுபிடித்தவர்கள், மனதின் ரணத்தை குறைக்க மருந்தை கண்டுபிடிக்காதது ஏனோ?

தானும், தன் மகவும் புறக்கணிக்கப்படும் விதமான பேச்சும், தன்னால், தன் அன்னை சொல்லடிபடுவதை பார்த்தும், கேட்டும் மனம் வெடித்து விட்டது ரம்யாவிற்கு…

என்னவென்று சொல்ல? எப்படி ஆறுதல் மொழி கூறி தன் அன்னையை சமாதானப்படுத்தப் போகிறோம் என்ற நினைவே அவளுக்கு கசந்தது…

பொதுவாக பிர¬சவ முறைகள் குடும்¬பத்¬தினர், கண¬வர்மார் சொல்¬வ-தனை விட கர்ப்¬பிணி பெண்ணின் தனிப்¬பட்ட விருப்பு வெறுப்¬பு¬க¬ளுக்-குதான் கூடுதல் முக்கி¬யத்துவம் கொடுக்¬கப்¬ப¬ட¬வேண்டும்.

ஏனெனில் கர்ப்¬ப¬கா¬லத்¬திலும் சரி, பிர¬சவ நேரத்¬திலும் சரி, பிர¬ச¬வத்-திற்கு பின்னரும் சரி, உடல் ரீதியாகவும், மன உளவியல் ரீதியாகவும் சரி, பாதிப்புகளுக்கு உள்ளாவது பெண்கள் தான். எனவே முடிவுகளை எடுக்கக்கூடிய அதிகாரம் கொடுக்கப்பட வேண்டியது கர்ப்பிணி பெண்களுக்குத்தான்.

ஆனால் இங்கே அப்படியான எந்த நடைமுறையும் கையாளப் படவில்லை… தன்னை ஒரு பொம்மையாய் ஆட்டி வைக்கும் இந்த வாழ்க்கை முறையை அறவே வெறுத்தாள் ரம்யா.

உயிர் கொடுத்தவன் எங்கோ அமர்ந்திருக்க, ரத்தமும் சதையும் கொடுத்து தன்னில் உருவான இளங்குருத்தின் அழுகுரலும், பிள்ளை பெற்றவளின் காதில் நாராசமாய் ஒலித்தது.

குழந்தையின் அழுகுரலில் தன் கவனத்தை திசை திருப்பி, அதன் பசியை போக்கிட, சிசுவை ரம்யாவின் பக்கத்தில் படுக்க வைக்க, அவள் தாய் எத்தனித்த நேரத்தில்…

”வேணாம்… இந்த பிள்ள எனக்கு வேண்டாம். என் பக்கத்துல படுக்க வைக்காதம்மா, இது வந்ததிலருந்து நான் படுற கஷ்டம் கொஞ்சம் நஞ்சமில்ல.

அவங்க தானே வார்த்தைக்கு வார்த்தை, எங்க வீட்டு வாரிசுனு சொல்லிட்டு இருந்தாங்க… அவங்க கைல குடுத்துருங்க, இனிமேலாவது நான் நிம்மதியா இருக்குறேன்…

இந்த பிள்ள தங்குன நாள்ல இருந்து என்னோட சந்தோசம், பசி, தூக்கம் எல்லாமே போச்சு… எனக்கு இந்த குழந்தைய பாக்கவே பிடிக்கலே” என பித்து பிடித்தவள் போல கத்திக்கொண்டு பிள்ளையை தன்னிலிருந்து தள்ளிவிட முயன்றாள்…

“பாப்பா இப்படி எல்லாம் பேசக்கூடாதுடா” என செல்வி அரற்ற….

“இத பாத்தியா? எங்கேயாவது நடக்குமா இந்த கொடுமை? பெத்த பிள்ளைய வேணாம்னு சொல்லி தள்ளி விட்றத? புத்தி பேதலிச்சு போச்சு உன் மருமவளுக்கு” என்று தன்னால் முடிந்த வரை புது புரளி ஒன்றை கிளப்பி விட ஆயுத்தமானார் வந்திருந்த உறவுக்கார பெண்மணி.

“ஆமா!!! எனக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு… இப்போ உங்களுக்கு சந்தோசம் தானே, இது தானே நடக்கனும்னு எதிர்பாத்தீங்க. இதுக்கு தானே என்னை எங்கேயும் அனுப்பாம ஜெயில்ல அடைச்சு போட்ட மாதிரி வீட்டுக்குள்ளேயே வச்சுருந்தீங்க.

போதுமா! சந்தோசமா உங்களுக்கு?” என்று அவளின் கத்தலை கேட்டு செவலியர் அறைக்கு வந்து அவளை கட்டுபடுத்த முயன்றனர்…

குழந்தையின் அழுகுரல், பிள்ளை பெற்றவளின் அரற்றல், பெரியவர்களின் ஓங்கிய பேச்சு எல்லாம் சேர்ந்து அந்த இடம் பெரும் ரணகளமாய் தான் காட்சியளித்தது…

பின் மகப்பேற்று இறுக்கம் (Postpartum depression) என்பது பிரசவத்திற்க்குப் பிந்தைய மனச்சோர்வு நோய் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. குழந்தை பிறத்தலுடன் தொடர்புடைய ஒருவகையான மனநிலை கோளாறை இந்நோய் குறிக்கிறது.

தீவிர துயரங்கள், உடம்புக் களைப்பு, கவலை, உணர்ச்சி மேலீட்டால் அழுகை, எரிச்சல், நித்திரையின்மை அல்லது சாப்பிடும் பழக்கத்தில் ஏற்ப்படும் மாற்றங்கள் ஆகியவை இதற்கான அறிகுறிகள் ஆகும்.

குறிப்பாக குழந்தை பிறந்து ஒரு வாரம் மற்றும் ஒரு மாத கால இடைவெளியில் இந்நோயின் தொடக்க கால அறிகுறிகள் தென்படும். புதிதாய் பிறந்த குழந்தையையும் இந்நோய் பாதிக்க வாய்ப்புள்ளது.

மகப்பேற்றுக்கு பிந்தைய மனச்சோர்வுக்கு முன்பாக எதிர்கொண்ட சிக்கல்கள், இருமுனையப் பிறழ்வு, மனச்சோர்வின் குடும்பபின்னணி, மன அழுத்தம், குழந்தை பிறப்புச் சிக்கல்கள், ஆதரவின்மை, மருந்துப் பயன்பாட்டு பிறழ்வுகள் போன்ற சிக்கல்களும் இந்நோயின் அபாயக் காரணிகளில் அடங்குகின்றன.

ஆயிரம் பெண்களில் ஒன்று அல்லது இரண்டு பெண்கள் குழந்தைப் பேற்றுக்குப் பின்னர் இந்நோயால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

பூவனம்-14

தன்னிலை மறந்து பிதற்றும் ரம்யாவை கட்டுப்படுத்தும் பொருட்டு முதலில் தூக்க மருந்தை செலுத்தி அவளை உறங்கவைத்த பின்னரே, மற்றவர்களை பார்த்து நிலைமையை கேட்டு அறிந்து கொண்டனர் மருத்துவர்கள்.

“ஏம்மா… பொம்பளைங்க எங்கே ஒண்ணு கூடினாலும் ஏதாவது சண்டை போட தான் செய்வீங்களா? இங்கே எங்களுக்கு வைத்தியம் பாக்க வந்தவங்க ஆரோக்கியம் தான் முக்கியம். அவங்கள அமைதியா இருக்க விடாம செய்ற எந்த ஒரு காரியத்துக்கும் இங்கே அனுமதி கிடையாது.

அப்படி மீறி ஏதாவது நடந்தா, நாங்களே உங்கள வெளியே போக சொல்லிருவோம், அத மனசுல வைச்சுகிட்டு நடந்துக்கோங்க” என்று மருத்துவர் கடுமையாய் எச்சரித்து வெளியேறி விட்டார்.

மீனாட்சி அம்மாளுக்கு இது பெருத்த அவமானமாய் போய் விட்டது. பார்ப்பவர்கள் எல்லாம் கும்பிடு போட இது என்ன அவரின் கிராமத்து மருத்துவமனையா? யார் அவருக்கு இந்த அரிய பெரிய விஷயத்தை புரிய வைப்பது.

“பார்த்தியா கமலம்… இந்த டாக்டர் சொல்லிட்டு போறத… என்னமோ நாங்க தான் இங்கே வேலையத்து போய் வம்ப இழுத்துகிட்டு அலையுற மாதிரில்ல பேசிட்டு போறாரு. வர வர எங்கேயும் நமக்கு மரியாதை இல்லாம போயிருச்சு. இன்னும் நான் என்னனென்ன பேச்சு வாங்க வேண்டி இருக்கோ?

“வேலியில போற ஓணான வேட்டிக்குள்ள விட்ட கதை”யா இவளுக்கு ஒரு நல்லது செய்ய போயி, இப்போ நானுல்ல பேச்சு வாங்கிட்டு நிக்கிறேன்…

போதும் இதுங்களோட சங்காத்தம் வச்சுகிட்டதுக்கு ரொம்ப நல்ல பேரு எனக்கு கிடைச்சு போச்சு… இனிமே ஒரு நிமிஷம் கூட இங்க நிக்க கூடாது வா போவோம்” என சிலிர்த்துக்கொண்டு கிளம்பிவிட்டார்…

மருந்தின் வீரியத்தில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை பார்க்க பார்க்க, பெற்றவளின் மனவேதனை அதிகரித்தது. கணவரிடம் நடந்தவை அனைத்தையும் ஒப்பித்து விட்டார் செல்வி.

“போதும்ங்க. நம்ம பொண்ணு இவங்க வீட்டுல இருந்தது போதும். பச்ச பிள்ளனு கூட பாக்காம, என்னென்ன பேச்சு எல்லாம் பேசிட்டா அந்த பொம்பள… ஊருக்கு பெரிய மனுஷின்னு தான் பேச்சு,

மனசுல ஈவு இரக்கங்கிறது கொஞ்சம் கூட இல்ல? இன்னும் ரெண்டு நாள் இங்க இருந்தா, என் பொண்ணு எனக்கு இல்லாம போய்டுவா போல? நம்ம மாப்பிள்ளை வந்த பிறகு நாம இவள அனுப்பலாம். அது வரைக்கும் எங்ககூடவே இருக்கட்டும்ங்க…” என்று அழுகையில் கரைந்தவரிடம்.

“அப்பிடியே செய்வோம் செல்வி, நம்ம பொண்ண விட நமக்கு எதுவும் முக்கியமில்ல” என்றவர் உடனடியாய் சென்னைக்கு அழைத்து சென்று விட்டார்.

தம் வீட்டுப் பெண்களின் மனவேதனை, அவரை மிகவும் வேகமாய் செயல்பட வைத்தது. தன் வீட்டில் இளவரசியாய் வலம் வந்தவள், தன்னிலை மறந்து புலம்புவதைப் பார்க்க சண்முகத்தின் மனதில் பாரம் ஏறிக் கொண்டது.

நெஞ்சம் முழுவதும் ஆற்றாமையுடன், கோபமும் ஒருங்கே சேர, பெண்ணை அழைத்து செல்லும் விஷயத்தை கிரிதரனின் வீட்டில் அறிவிக்கவில்லை.

“சொன்னால் மட்டும் சந்தோசமாய் அனுப்பிட போறாங்களா என்ன? அதுக்கும் என்ன குத்தம் கண்டுபிடிப்பாங்களோ? வர்றது வரட்டும் பேசிக்கலாம்” என்ற திடமான முடிவில் தான் சென்றது. ஆனால் அதுவே பெரிய முடிவை கையில் எடுக்க ஆரம்ப புள்ளியாய் மாறியது.

மனவேதனையுடன் பெண்ணை அழைத்துக்கொண்டு ரம்யா குடும்பம் அந்த பக்கம் போக, இங்கே கிராமத்தில் மீனாட்சி அம்மாள் ஆரம்பித்து விட்டார் தன் புலம்பலை.

“நம்மகிட்ட ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாம கூட்டிட்டு போயிருக்காங்கன்னா எவ்ளோ திமிர் இருக்கணும்? அந்த பொண்ணுக்கும் என்ன நெஞ்சழுத்தம் இருக்கணும்? இது எல்லாம் புருஷன் என்ன சொன்னாலும் தலையாட்டுவான்னு நினைச்சு செஞ்சுகிட்டு இருக்காங்களா? நாங்க என்ன செத்தா போய்ட்டோம்? நாலு பேச்சு வரத்தான் செய்யும், அத தாங்கித்தான் ஆகணும். அத விட்டுட்டு எதிர் பேச்சு பேசுறது என்ன பழக்கம்?

பைத்தியம் பிடிச்ச மாதிரி அந்த பொண்ணு கத்துனத நினைச்சாலே எனக்கு இப்போவும் ஈரக்குலை நடுங்குது. இப்படிப்பட்டவ நாளைக்கு குடும்பத்த எப்படி நல்ல நிலைமைக்கு கொண்டு போவா?”

“அப்படியெல்லாம் சொல்லாதே மீனாட்சி. என்ன இருந்தாலும் அவ நம்ம வீட்டு மருமக, வாழ வந்த பொண்ண வாய்க்கு வந்த படி பேசக்கூடாது” என்று கிரிதரனின் தந்தை சுப்பையா மனைவியின் பேச்சை கட்டுபடுத்த முயல, அசரவில்லை மீனாட்சி அம்மாள்.

“வேணாம், நமக்கு இந்த பொண்ணு வேணாம், போதும் இவ கூட என் பையன் வாழ்ந்தது. இங்கே இவ வந்து தான் விடியணும்னு எதுவும் இல்ல, இவளை தள்ளி வைக்குறது தான் சரின்னு படுது, பஞ்சாயத்துலயும் அவங்க ஊர் பக்கமும் தள்ளி வைக்க என்ன செய்யணுமோ அத முறையா செஞ்சு வேலைய முடிங்க” என்று மனதிற்குள் பூத்த வன்மத்தை வெளிப்படுத்தி செயல்படுத்த முனைந்தார்.

கடையில் பணம் கட்டி, கைக்கு வந்த பொருளை வேண்டாம் என்று தள்ளி வைப்பது போல், எளிதாய் தன் முடிவை கூறினார் அந்த மாமியார்.

அவரின் முடிவு அனைவருக்கும் தூக்கி வாரிபோட்டது… இது வரை தன் அண்ணியிடம் நேரில் பேச கூட தயங்கும் கிரியின் தம்பி முரளிதரனும் கூட கதி கலங்கி விட்டான்.

“என்னம்மா சொல்லறீங்க? கொஞ்சம் நிதானமா யோசிச்சு பேசுங்கம்மா. அண்ணி என்ன கெடுதல் செஞ்சாங்கம்மா? ஏன் இவ்வளவு வெறுப்பு அவங்க மேல உங்களுக்கு? கொஞ்சங்கூட நல்லதில்ல, நீங்க சொல்லறதும், செய்ய நினைக்கிறதும்” என்றவன் தொடர்ந்து

“அவங்க வந்து நின்னா தான் பஞ்சாயத்து நடக்கும், எதிராளி இல்லமா எப்படிம்மா இதை செய்ய முடியும்? கொஞ்சமும் யோசனை இல்லமா பேசுறதை இனிமேயாவது குறைச்சுக்கோங்க” என்று தடுத்து நிறுத்த நினைத்தவனின் முயற்சியும் வீணாய் போனது.

“எப்ப இருந்து நாட்டமையானீங்க சின்னதம்பி, அந்த பொண்ணே சொல்லிட்டா, இங்கே வந்ததில இருந்து அவளோட சந்தோசம், தூக்கம் எல்லாம் போச்சுன்னு. நான் பொய் சொல்லலே… உங்க கமலம் அத்தை கிட்ட கேட்டு பாரு.

அது மட்டுமா? அவ பேய் வந்த மாதிரி கத்துனத பார்த்துட்டு எப்பிடி இவள என் பையன் கூட சேர்ந்து வாழ அனுமதிக்க முடியும் சொல்லு? நான் சொன்னா சொன்னது தான்… இத மாத்த நினைக்காதீங்க” என்று தன்னுடைய பேச்சே இறுதி முடிவாய் இருக்க வேண்டும் என்று ஆணையிட்டவர்,

“எல்லா விசயத்தையும் இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுட்டுப் போறதுக்கு இது பட்டணம் கிடையாது தம்பி…

ஒரு விசயத்தை கேட்டா கண்ணு காது வச்சு, நாலா திரிச்சு பேசுற, பொல்லாத சனங்க இருக்குற இடம் இது. ஒரு நாள் இங்கே இருந்தாலும் அவங்க பேசுறத தடுக்க முடியாது….

இதுக்காக தான் வேணாம்னு சொல்றோம், அவ்ளோ லேசா எல்லாத்தையும் எடுத்துக்க மாட்டாங்க” என்று பொங்கி விட்டார்.

எவ்வளவு படித்தால் என்ன? அனுபவப்பட்டால் என்ன? சமயங்களில் மனிதர்கள் உணர்ச்சிகளின் கைப்பாவையாகி விடுகின்றனர்.

அப்படி ஒரு உணர்வுப்பூர்வமான பொங்கலில், அனைவரிடமும் தன்பக்க நியாயத்தை சொல்லி, தன் வாதத்தை பிரதானமாக்கினார் மீனாட்சி அம்மாள்.

கிரிதரனின் தந்தைக்கும் இந்த விசயத்தில் தன் கருத்தை சொல்ல அனுமதி கிடைக்கவில்லை.

தான் நினைப்பதையே நடத்திக் கொள்ளும் மனநிலை, யாரைப் பற்றியும் யோசிக்காது, ஒரு அழகான சிறிய குடும்பத்தை சிதற வைத்த பெருமையை பெற்று விட துடித்தார் மீனாட்சி அம்மாள்.

மகனிடம் இங்குள்ள நிலைமையை சொன்னதை விட, தன் பக்க நியாயத்தையே சொல்லி, நினைத்ததை நடத்தி விட முனைந்தார்.

“என்னம்மா விளையாடுறீங்களா? உங்க இஷ்டத்துக்கு பேசிகிட்டே போறீங்க? ரம்யா வீட்ல விசாரிக்கிறேன், என்னோட வாழ்க்கைம்மா இது, நீங்க கோபப்படாதீங்க” என்ற மகனின் சமாதான பேச்சு எடுபடவில்லை.

“அப்போ நாங்க சொல்லறதுல உனக்கு நம்பிக்கை இல்ல அப்படித்தானே? எனக்கு அவமானமா இருக்குடா, என் வீட்டுல இருந்து, என் கையாள சோறு சாப்பிட்டவ. அந்த நன்றி கொஞ்சம்கூட இல்லாம என் மூஞ்சியில காறித்துப்பாத குறையா அவளுக்கு இங்கே நிம்மதி கிடைக்கலனு சொல்லிட்டு போறா. அவ அம்மாகாரி பொண்ண நான் கட்டிவச்சு கொடுமைபடுத்தின மாதிரி என்னையவே ஏசிப் பேசுறா, அப்பன்காரன் ஒரு படி மேல போய் எங்ககிட்ட கூட சொல்லமா பொண்ணை கூட்டிட்டு போறான்னா என்ன அர்த்தம்?”

“இன்னுமா உனக்கு விளங்கல? வெளிநாட்டுக்கு போயி உனக்கும் அவள மாதிரி புத்தி பிசகிபோச்சா என்ன?” என்றவரிடம்

“அதையெல்லாம் என்ன ஏதுனு கேப்போம்மா… அவசரப்படாதீங்க, கொஞ்சம் நிதானமா இருங்க, உங்ககிட்ட வந்து அவங்கள பேச சொல்றேன்” என மகன் சமாதானப்படுத்த

“நான் எந்தவொரு சமாதானத்தையும் அவங்ககிட்ட இருந்து எதிர்பாக்கல… யாரையும் மன்னிக்கற நினைப்பும் எனக்கும் இல்ல, ஊர்ல கேக்கறவங்களுக்கு பதில் சொல்லி முடியல…

வகைதொகையா மகளுக்கு செய்ற மாதிரி ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து செஞ்சியே? இப்போ அவ எங்கே போனா? அப்படி போற அளவுக்கு நீ என்ன கஷ்டம் குடுத்தேனு பாக்குறவங்க எல்லாம் நாக்க பிடுங்கிக்கிற மாதிரி கேக்குறத காது குடுத்து கேக்க முடியல”

“நானும் உங்க அப்பாவும் தலை குனிஞ்சி நிக்கிறோம், நீ என்னடான்னா சாவகாசமா கேட்டு விசாரிப்போம்னு சொல்றே? பெத்தவங்களுக்கு மாரியாதை குடுக்க பழகிக்கோங்க தம்பி, எங்க சுத்துனாலும் இன்னோரடா பையன்னு எங்க பேர தான் நீங்க சொல்லணும். அப்படி சொல்லும் போது நாம எப்பேர்ப்பட்டவங்க, நம்ம கௌரவம் என்னனு கேக்குறவங்களுக்கு சொல்லாமலேயே தெரியணும். அது தான் உனக்கும் மதிப்பு குடுக்கும்” என்றே தன் வாதத்தை தொடர்ந்தார்.

“ஏன்மா இப்படி ஒண்ணுமில்லாத விசயத்த, பேசிப்பேசியே பெருசாக்குறீங்க? கொஞ்சம் பொறுமையா யோசிங்க” என கிரிதரன் கெஞ்ச மசியவில்லை மீனாட்சி அம்மாள்.

“எது ஒண்ணுமில்லாத விஷயம் பெரியதம்பி? நம்ம வீட்டை பார்த்து நாலு பேர் சிரிக்கிற மாதிரியான காரியத்தை அவங்க செஞ்சுட்டு போயிருக்காங்க. இத நாங்க சும்மா விடணுமா? முடியாது…

நம்ம கெளரவத்த அசைச்சு பாக்குற மாதிரி மத்தவங்க நடந்தா, அவங்க சாவகாசத்த முளையிலேயே கிள்ளி எரிஞ்சுடனும், பக்கத்துல வச்சு வேடிக்கை பாக்கக்கூடாது.

இதுக்கும் மேல உனக்கு அந்த பொண்ணு தான் வேணும்னு நீ நினைச்சா எங்கள மறந்துரு, ஒரு பஞ்சாயத்து கட்டாயமா நடந்தே ஆகணும்…. அது உன் பொஞ்சாதிய தள்ளி வைக்கிறதுக்கா நடத்துனாலும் சரி, இல்ல நீ எங்களுக்கு புள்ள இல்லன்னு உன்ன நாங்க தள்ளி வைக்கிறத்துக்கா நடந்தாலும் சரி.

எது உனக்கு சௌகரியம்னு முடிவு பண்ணிக்கோ… இதுக்கும் மேல நான் பேசமாட்டேன்… அவ்ளோ தான்” என்று தன் வாதத்தை நீளமாய் முடித்து கிரிதரனை வாயடைக்க செய்து விட்டார் அவனின் தாய்…

“ஒண்ணு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ பெரியதம்பி. எல்லோருக்கும் அவங்க ஆசைப்பட்டது போலவே வாழ்க்கை அமைஞ்சுடாது. நம்மளை மீறியும் இது நடக்கணும்னு இருந்தா அது நடந்தே தான் தீரும். அதனாலே எனக்கு புத்திமதி சொல்லறத விட்டுட்டு என்ன செய்ய? ஏது செய்யனும்னு முடிவு பண்ணிக்கோ”… என்று ஆங்காரமாய் சொல்லி முழங்கி விட்டார்…

இப்படியாய் கிரிதரனுக்கு கழுத்தில் கத்தியை லாவகமாய் வைத்து விட்டு, தன் வாதத்தை, பிரிதிவாதியும் தப்பென்று சொல்ல முடியாத படி பேசி, தன் தரப்பு நியாயத்தை விளக்கி விட்டார் மீனாட்சி அம்மாள்.

பூவனம்—15

தாயாரின் மூளைச்சலவையில் சற்றே மனம் தடுமாறத் தான் செய்தது தனயனுக்கு. என்னதான் இருந்தாலும் தாய் என்று வரும்போது மனிதன் பகுத்து அறியும் உணர்வை சற்று மறந்து தான் போகிறான்.

விதி தனது பங்கை சிறப்பாக அரங்கேற்றியது. அன்னையின் பேச்சில், நெருப்பின் மீது நின்று கொண்டிருக்கும் பாவனையில், கிரிதரனின் உள்ளமும் கொதிநிலையை அடைய, அழைத்து விட்டான் தன் மாமனாரை அலைபேசியில்.

“அங்கே என்ன நடக்குது மாமா? எல்லோரும் சேர்ந்து என்ன குளறுபடி பண்ணி வச்சுருக்கீங்க? உங்க பொண்ணு என்ன பண்றா? நான் போன் பண்ணினாலும் எடுக்குறதே இல்ல? உங்க மனசுல என்னதான் நினைச்சுகிட்டு இருக்கீங்க?” என்று பொங்கியவனிடம்

“கொஞ்சம் அமைதியா பேசுங்க மாப்ளே… மொதல்ல என்ன நடந்ததுன்னு கேளுங்க, அப்புறமா உங்க கோபத்த எங்க மேல காட்டலாம்” என கோபத்தை அடக்கிக்கொண்டு அமைதியுடன் கூற

“என்ன நடந்தாலும் நீங்க செஞ்சது சரியில்ல, எப்படி எங்க வீட்டுல சொல்லாம ரம்யாவை உங்க கூட கூட்டிகிட்டு போகலாம்? இது எவ்ளோ பெரிய தலைகுனிவு தெரியுமா எங்க வீட்டுக்கு” என்றே கோபப்பட்டவனிடம்

“அப்போ அங்கே என்ன நடந்தாலும் வேடிக்கை பார்த்துகிட்டு சும்மா இருக்கணுமா? உங்க பொண்டாட்டி புள்ள எப்படி இருக்காங்கனு தெரிஞ்சுகிட்டிங்களா மொதல்ல? என் பொண்ணு என்ன நிலமையில நான் கூட்டிட்டு வந்தேன்னு உங்களுக்கு தெரியுமா?” என சீற ஆரம்பித்தார் பெண்ணை பெற்றவர்.

“அது தெரிஞ்சதால தான் சொல்றேன். அந்த நிலைமையில எதுக்கு கூட்டிட்டு போகணும், அவள ஏன் கஷ்டபடுத்தனும்? அங்கேயே வச்சு பார்த்துருந்தா இவ்ளோ பேச்சு இல்லையே?” என்றவனிடம் கோபம் குறையாமல்

“எப்படி இன்னும் நாலு பேர் வந்து பொல்லாப்பு பேசுவாங்க, அத எல்லாம் கேட்டுகிட்டு இருக்க சொல்றீங்களா? என் பொண்ணுக்கு வேண்டிய அமைதி அங்கே இருக்குற வரைக்கும் கிடைக்காது, அதனாலே தான் கூட்டிட்டு வந்தேன். இதுக்கு மேல என்கிட்ட விளக்கம் கேக்காதீங்க. உங்க வீட்டுல எப்படி சொன்னாங்களோ அது எனக்கு தெரியாது, ஆனா அங்கே இருந்திருந்தா, என் பொண்ண அவங்க நிம்மதியா இருக்க விட்ருக்க மாட்டாங்கனு தான் நான் சொல்வேன்… அவ உடம்பும் மனசும் தேறி வரணும், அதுக்கு என்ன செய்யணுமோ அத தான் செஞ்சேன்”

“உங்க அம்மாகிட்ட கேட்டிருந்தா, ஒரெடியா வேணாம்னு சொல்லி எல்ரோரையும் கட்டி போட்ருவாங்க. போதும் ஒரு தடவை அவங்க சொல் பேச்சு கேட்டு நாங்க பட்டது. இனிமேலயும் சொல்லடி பட்றதுக்கு நாங்க தயார இல்ல” என்று பொரிந்து தள்ளி விட்டார்… அவர் வலி அவருக்கு…

மத்தளத்தின் இரண்டு பக்கமும் அடி வாங்குவது போல் தான் கிரியின் நிலைமை. ஒரு பக்கம் தன் அன்னையின் பேச்சை வாங்கிக் கட்டிகொண்டவன், இப்பொழுது தன் மாமனாரின் முறையாய் கேட்டுக் கொண்டான்.

“அப்போ எல்லா தப்பும் எங்க அம்மா மேல தான்னு சொல்றீங்களா? நீங்க செஞ்சது சரியா?” தன் அன்னையை பற்றி குறை கூறியதும் கிரிதரன் கோபத்துடன் எகிறிட

“நான் யார் மேலயும் தப்பு சொல்லலே, அதே போல எனக்கு சரின்னு பட்டத தான் நான் செஞ்சுருக்கேன். நீங்க எப்போ இங்கே வர்றீங்களோ, அப்போ என் பொண்ண கொண்டு வந்து விட்றேன், அது வரைக்கும் என்கூடயே இருக்கட்டும்” என்று பேச்சை முடித்து வைத்தார்.

ஏற்கனவே கோபத்துடன் இருந்தவனுக்கு தூபம் போட்டது அவரின் பேச்சு.

“அப்போ நான் மட்டும் தான் வேணும், என்னை சேர்ந்தவங்க வேண்டாம் அப்படித்தானே? நான் என்ன ஆகாசத்துல இருந்து குதிச்சவனா? யாருமே இல்லாம தனியா வந்து உங்க பொண்ணு கூட குடும்பம் நடத்த. அதெப்படி அவ்ளோ ஈஸியா நீங்க சொல்லறீங்க? எந்த காலத்திலேயும் எங்க வீட்ட விட்டு, நான் வருவேன்னு மட்டும் கனவு காணாதீங்க. நீங்க ஆரம்பிச்ச இந்த பிரச்சனைய நீங்களே பேசி சுமூகமாக முடிக்க பாருங்க, நான் இடையிலே வந்து பேச முடியாது.”

“யாரையும் விட்டுக் கொடுத்தெல்லாம் என்னால இருக்க முடியாது, இந்த பிரச்சனையால வேற எதாவது நடந்தா அதுக்கு நான் பொறுப்பாக மாட்டேன்” என்று பொங்கியவன், சற்றே பூடகமாக பேசி முடித்தான்…

ஒரு புரியாத குழப்பம் சண்முகம் மனதில் வந்தமர, அடுத்து என்ன செய்வது என்று தெரியாத அந்த நேரத்தில் தான், கிராமத்தில் இருந்து பஞ்சாயத்தார் அவர் வீட்டினில் வந்தமர்ந்தனர்.

பிரச்சனையின் தீவிரத்தை அப்போது தான் உணர்ந்தார் சண்முகம். விஷயம் இந்த அளவிற்கு முற்றிவிட்டது என்று அவர் எதிர் பார்த்திருக்கவில்லை.

வந்தவர்கள் படித்ததை ஒப்புவிக்கும் மாணவர்களை போல, கணவன் மனைவியை நிரந்தமாய் பிரித்து விட பேசினர். வந்திருந்த நால்வரில், ஒருவர் மாற்றி ஒருவர் பேச ஆரம்பித்தனர்.

“இங்கே பாருங்க சண்முகம். ஊர்லயே பெரிய குடும்பம் எங்க ஐயா சுப்பையா குடும்பம் தான், அவங்க வீட்டுக்கே வாழ வந்த பொண்ணு, இப்படி அவங்கள மதிக்காம பேசினது அவ்ளோ சரியா படல”

“இங்கே எப்படியோ, எங்க கிராமத்துல பெரியவங்கள மதிக்காம இப்படி பேசினதுக்கு ஊர்கூடி மன்னிப்பு கேக்க சொல்லுவோம். உங்க சம்மந்தி அம்மா அந்த பேச்ச கூட மறந்திட்டாங்க, அவங்களுக்கு இப்போ நினைப்பெல்லாம் இப்படி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி, பைத்தியம் பிடிச்ச மாதிரி நடந்துக்குற பொண்ணு நாளைக்கு எப்படி குடும்பத்த நடத்தும்?”

“இப்பவே இவ்ளோ கோபமும், ஆவேசமும் உங்க பொண்ணுக்கு இருக்கே? பின்னாடி போகப்போக அதிகமாகாதுங்கிறது என்ன நிச்சயம்?

அதனாலே இந்த பொண்ணு மேலும், மேலும் இந்த குடும்பத்துல இருந்து தன்னை கஷ்டபடுத்திக்க வேணாம்ன்னு நினைச்சு தான் தள்ளி வைக்குறதா முடிவு பண்ணிருக்கோம்… அது தான் உங்க பொண்ணுக்கும், எங்க ஐயா அவுக குடும்பத்துக்கும் நல்லது.”

“மனசு ஒப்பாம குடும்பத்துல ஒட்டிகிட்டு இருக்குறது எவ்ளோ கஷ்டம்னு எங்களுக்கும் தெரியும், அத எல்லாம் மனசுல வச்சுகிட்டு தான் இந்த முடிவு எடுத்துருக்கோம்.

அடுத்த வாரம் எங்க ஊர்ல இருந்து பத்திரம் கொண்டு வருவாங்க, படிச்சு பார்த்துட்டு கையெழுத்து போட்டு குடுங்க” என்று தங்களது பொன்னான தீர்ப்பை உரைத்தனர்.

அடங்காத கோபத்தில் வெகுண்டெழுந்து விட்டார் சண்முகம்.

“ஏன்யா இப்படி எல்லோரும் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம நடந்துகிறீங்க? யாருய்யா நீங்க எல்லாம்? என்ன நடந்துச்சுன்னு விசாரிக்காம அங்கே என்ன சொன்னாங்களோ, அப்படியே இங்கே வந்து ஒப்பிக்கிற நீங்க எல்லாம் பெரிய மனுசங்களா?”

“இதுக்கு சம்மதிக்கலன்னா என்னய்யா பண்ணுவீங்க? எங்களுக்கும் சட்டம் தெரியும். புருஷன் பொண்டாட்டி நடுவுல நீங்க ஏன் வர்றீங்க? என் மாப்பிள்ளை வந்து சொல்லட்டும், அப்ப நான் பதில் சொல்றேன். உங்க கிட்ட எந்த விதமான பேச்சும் எனக்கு தேவையில்ல. ஒழுங்கா இடத்த காலி பண்ணிடுங்க” என்று கோபமும் ஆக்ரோஷமும் சேர்ந்து வந்தர்வர்களை விரட்டி விட, அதுவும் சேர்ந்து தூபம் போட்டது கிராமத்து மனிதர்களுக்கு.

இந்த அவமதிப்பை அவ்வளவு லேசில் விடுவதாய் இல்லை கிரியின் குடும்பத்தார். இப்பொழுது கிரியின் தந்தையும் சேர்ந்து கொண்டார்,

அப்படி என்ன வீராப்பு? பெண்ணை பெற்றவர் ஒரு முறை வந்து சமாதனம் பேசி, மகளின் நல்வாழ்விற்கு வழிவகை செய்யாமல், பேச சென்ற ஊர் பெரியவர்களையும் விரட்டி அடித்தது, கிராமத்து பெரிய மனிதருக்கு சற்றும் பிடிக்கவில்லை. மனைவியின் ஏச்சுபாச்சான பேச்சும் சேர்ந்து கடுப்பினை கிளப்ப, தீர்மானித்து விட்டார் அவர்களின் விவாகரத்திற்கு.

மகனின் மறுப்பு, தந்தையிடம் செல்லாக்காசாகியது. “உன் பொஞ்சாதிக்கு உடம்பு, மனசும் சுகமில்ல, அதான் அப்படி பேசிட்டானு சொன்னே சரி. இப்போ போனவங்களுக்கு என்ன மரியாதை குடுத்தாங்க சொல்லுப்பா? இவங்க செஞ்ச காரியம் ஊர் முன்னாடி தலைகுனிஞ்சதுக்கு சமானாமாகிப் போச்சு”

“எங்கள மனசாட்சி இல்லாம பேசுறோம்னு சொல்லற இவங்க என்ன பண்ணறாங்க? இவங்க பொண்ணு வாழ்க்கை மேல அக்கறை இருந்தா வந்து பேசி இருக்கனுமா இல்லையா?”

“அத விட்டுட்டு என் மாப்ளே வரட்டும், அவர்கிட்டே பேசுறேன்னு சொல்லறாருன்னா என்ன அர்த்தம்? உன்னை பெத்தவங்கள என்ன மதிப்பில அவங்க வச்சுருக்காங்க? அப்போ நாம எல்லாம் தேவை இல்லையா? அவங்களுக்கு, மாப்பிள்ளை நீ மட்டும் இருந்தா போதுமா? உங்க அம்மா சொன்னத தான் நானும் சொல்றேன் அந்த பொண்ணா? இல்ல நாங்களா? முடிவு உன் கையில” என்று தன் பிடித்தமின்மையாய் விளக்கினார்.

ஒரு தடவை நேரடியாய் மனைவியுடன் பேசிவிட்டால் இந்த குழப்பத்திற்கு விடை கிடைத்துவிடும் என்று பேச முயற்சி செய்ய அதன் பலன் என்னமோ பூஜ்யம் தான்.

பிள்ளை பிறந்த பதினைந்து நாட்கள் கழிந்த நிலையில் வந்த கணவனின் அழைப்பு, ரம்யாவின் மனவாட்டத்தை போக்குவதற்க்கு பதிலாக பலவிதசங்கடமான பேச்சுக்களுக்கு வலி வகுத்தது. ஏற்கனவே மனஅழுத்தத்தில் இருந்தவள். குழப்பமான மனநிலையுடன் தான் பேச ஆரம்பித்தாள்.

“ஹலோ ரம்யா, எப்படி இருக்கே?”

“இருக்கேன்”

“ஏன் இப்டி சொல்றே?… பேபி எப்படி இருக்கா?

“நல்லா இருக்கா”…

“இப்ப மூளிச்சுருக்காளா?”

“இல்ல தூங்குறா”

“ஒரு போட்டோ எடுத்து அனுப்புறியா? பொறந்ததும் பார்த்தது, அதுக்கப்புறம் பாக்க முடியல…”

“இத்தன நாள் வரைக்கும் என்ன பண்ணின கிரி? இப்ப மட்டும் என்ன குழந்தய பத்தி விசாரிக்கிற”

“நான் போன் பண்ணினேன்… நீ ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கிறேன்னு சொன்னாங்க… அதான் உன்ன டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு தான்டி அமைதியா இருந்தேன்”

“ஒஹ்… அந்த அளவுக்கு எங்க மேல அக்கறை இருக்கா உனக்கு?”

“ஏன் ரம்யா இவ்ளோ விரக்தியா பேசுறா? நான் அக்கறை படாம வேற யார் படுவா?”

“இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ ரம்யா… நான் சீக்கிரம் திரும்பி வர ட்ரை பண்றேன்… நிச்சயமா நாம சந்தோஷமா இருப்போம்… கவலைப்படாதே”

“எப்படி உங்க அம்மா பேச்ச கேட்டுகிட்டு சந்தோஷமா இருந்துறலாமா கிரி? அது முடியுமா?”

“கொஞ்சம் விட்டு குடுத்து போ ரம்யா, உன்கிட்ட நான் முன்னாடியே சொல்லிருக்கேன், அவங்க கிராமத்து மனுசங்க, அவங்க பழக்க வழக்கம் வேற, நாம தான் அனுசரிச்சு போகணும்னு, சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா” என பற்ற வைக்க, தீ மூண்டது தானாய்.

“நம்ம குழந்தைய பத்தி பேசுறாங்க கிரி… அத கேட்டுகிட்டு சும்மா இருக்க சொல்றியா? இல்ல எங்க அம்மாக்கு கொஞ்சமும் மரியாதை குடுக்கமா எடுத்தெறிஞ்சு பேசுறதயும், எனக்கு செஞ்சத எல்லாம் குத்திக்காட்டி பேசுறதையும் கேட்டுட்டு, பதில் சொல்லாம இருக்க சொல்றியா? எத நான் விட்டுக்குடுக்கணும்னு சொல்ற கிரி” என்று பொங்கியவள்.

“உங்க அம்மாக்கு நீ எப்படியோ? அப்படி தான் எனக்கு என் பிள்ளை”

“உனக்கு, உன் அம்மா மேல எவ்ளோ பாசம் இருக்கோ… அதே மாதிரி தான் எனக்கும் எங்க அம்மா மேல இருக்கு”

“உங்க அம்மா தான் என்னை கூட்டிட்டு போனாங்களே, தவிர நானா அந்த வீட்டு வாசப்படிய மிதிக்கல, எங்க வீட்டுல வந்து கேட்டப்போ கூட என்னை அனுப்ப சம்மதிக்கல. இதுக்கெல்லாம் ஒரு பதில் சொல்லு கிரி… தூரமா நீ இருக்குறதால உனக்கும் இதுக்கும் சம்மந்தமில்லனு சொன்னா நான் ஏத்துக்க மாட்டேன்”

படபடப்புடன் மனைவி பேசிட, அதே படபடப்பு குறையாமல் கணவனும் தன் பங்கை வார்த்தையால் கொட்டினான்.

“இப்படியே ஆளாளுக்கு உங்க இஷ்டத்துக்கு பேசிட்டு, இப்போ என் தலைய உருட்டுங்க… இவ்ளோ சொல்ற நீ அன்னைக்கே எங்க வீட்டுக்கு வரலனு தைரியமா சொல்ல வேண்டியது தானே”

“சாப்பாடு சரியில்லனா, நீயா கூட செஞ்சு சாப்பிடுருக்கலாமே ரமி, உன்னை யாரு அங்கே என்ன சொல்ல போறா? உன்னோட வீடா இருந்தா நீ செஞ்சுறுக்க மாட்டியா?”

“எல்லாத்தையும் மனசுல போட்டு அடைச்சுக்கிட்டு இருந்ததால தானே உனக்கு இன்னைக்கி இந்த நிலைமை. எத்தனயோ தடவ சொல்லிட்டேன் உன்கிட்ட, எதுவா இருந்தாலும் மனசு விட்டு பேசக் கத்துக்கனு… கேட்டியாடி நீ?

நான் சொன்னத கேட்டிருந்தா இன்னைக்கு இத்தன பிரச்சனை வந்திருக்காது ரம்யா” என்று அவனும் பல்லைக் கடித்திட

“அப்போ நான் தான் சரியில்லைனு சொல்றியா? எங்க வீட்டுல பேசுனது தான் தப்புனு சொல்றியா? நீதானே… அம்மா என்ன சொன்னாலும் கொஞ்சம் அனுசரிச்சு போக சொன்னே, இப்போ என்ன புதுசா நான் பேசிருக்கணும்னு சொல்றே… வேலைக்கு ஒரு பேச்சு பேசுற கிரி” என்றவளிடம்

“கொஞ்சம் பொறு ரம்யா… நான் யாரையும் தப்பு சொல்லல… அம்மாவ கொஞ்சம் அனுசரிச்சு நடக்க தான் சொன்னேன் தான், அதுக்காக உன்னோட விருப்பத்தை ஒதுக்கி வச்சு செய்ய சொல்லலம்மா.

“உன்னோட பேச்சு எப்போவும், என்கிட்ட கூட ஒரு அளவோட தானேடி இருந்துருக்கு… நான் அத சொன்னேன். உனக்கு பேச தெரியலனு சொல்லல.. எந்த இடத்துல பேசனுமோ அங்கே பேச மாட்டேங்குற நீ, நான் அத தான் சொல்றேன். இப்போவும் ஒண்ணும் கெட்டுப் போகல… ஒரு தடவை போன் பண்ணி எங்க வீட்டுல பேசு ரம்யா. நான் சொல்லி வைக்குறேன்” என அவன் பழைய பல்லவியை ஆரம்பிக்கவும்,

“திருந்த மாட்டடா நீ, எனக்கு என்ன ஆனாலும் உன்னோட வீடு, உன்னோட சொந்த பந்தம் தான் முக்கியம். எங்க மேல எல்லாம் கொஞ்சம் கூட பாசம் இல்ல, நீ சொன்னத என்னால செய்ய முடியாது, இனிமே என்கிட்ட பேசாதே” என்று வார்த்தைகளில் கோபம் கொப்பளிக்க ஆக்ரோஷம் வந்தவளாய் கைபேசியிலேயே கத்த ஆரம்பித்தாள்.

பின்பு அவளை சமாதானப்படுத்த முயல அது முடியாமல், அவளும் மூர்ச்சையாகி விட, அவள் தந்தையிடம் நன்றாய் வாங்கி கட்டிகொண்டான்..

“என்னையா பாவம் பண்ணினோம் நாங்க, இப்படி என் பொண்ண கொஞ்சம் கூட நிம்மதியா இருக்க விடாம பேசியே கொல்றீங்க… உங்களுக்கு வேண்டியது அந்த விவாகரத்து தானே, அந்த கருமத்துக்கு ஒத்துக்குறோம்”

“அப்புறம் எங்க முன்னாடி வந்து நின்னா, நான் மனுசனா இருக்க மாட்டேன். இதுவே கடைசியா இருக்கட்டும், நீ என் பொண்ணு கூட பேசுறது” என்று அவருக்கு தெரிந்த வகையில் பேசிவிட்டு, கைபேசியில் தன் பெண்ணின் வாழ்கை திசையை மாற்றி விட்டார்…

அதன் பின்பு வேலைகள் வேகமாக தான் நடந்தன என்று சொல்ல வேண்டும்… ஆள் நேரில் வரத் தோது இல்லை என்றாலும், காணொளி கலந்தாய்வு (வீடியோ கான்ப்ரென்சிங்க்) மூலம் வழக்கு நடக்க, கையெழுத்திற்க்காக இருவரின் இருப்பிடம் தேடியே வழக்கு பத்திரங்கள் வர, இருந்த இடத்தில் இருந்து கொண்டே விவாகரத்து பெறுவது சாத்தியமானது….

ஒருமித்த கருத்துடன் கூடிய விவாகரத்து தற்காலிக நீதிமன்ற பிரிவின் கீழ் மிக விரைவில் பெறப்பட்டது….

வீணானா பேச்சும், சந்தர்ப்ப சூழ்நிலைகளும், குடும்பத்தாரின் தலையீடுகளும், தம்பதிகளுக்கிடையே நுழைந்து, அழகான சிறிய குடும்பத்தை பிரித்து பார்த்து புண்ணியம் தேடிக்கொண்டது…

ஒருமித்த விவாகரத்து :

கணவனும் மனைவியும் தொடர்ந்து வாழமுடியாமல் விவாகரத்து செய்ய ஒருமித்து முடிவெடுத்தால் விரைவாக விவாகரத்து பெறலாம்.

ஒருமித்த விவாகரத்து முறையில் இருவரும் ஒரே வக்கீலை வைக்கலாம்..

வக்கீல் கணவன், மனைவி இருவரையும் சந்தித்து அவர்களின் சொத்து, வங்கி கடன், குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய தொகை, அவர்களை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு போன்றவற்றை பற்றி கலந்தாலோசித்து ஒப்பந்தம் தயார் செய்வார். இந்த ஒப்பந்தத்தில் கணவன் மனைவி இருவரும் கையெழுத்திட்ட பின் வக்கீல், ஒப்பந்தத்தை நீதிமன்றத்திற்க்கு அனுப்புவார்.

தற்காலிக நீதிமன்ற பிரிவு (Judicia Separation)

நமக்கு முந்தைய தலைமுறையினருக்கு குடும்ப சிக்கல்கள் தலைதூக்கும் போது, ‘கொஞ்ச நாள் விலகியிருந்தால் எல்லாம் சரியாயிடும்’ என்று கூறுவதைக் கேட்டிருக்கிறோம்.

திருமண உறவு முறையை முறித்துக் கொள்ளும் எண்ணமில்லாமலும், அதே நேரத்தில் சேர்ந்து வாழ்வதும் சரிவராது என்ற நிலை இருக்கும் பட்சத்தில் Judicia Separation என்று சொல்லக்கூடிய தற்காலிக நீதிமன்ற பிரிவு கோரி மனு தாக்கல் செய்ய சட்டம் வழிவகை செய்துள்ளது..

திருமண உறவுகளில் சில நேரங்களில் மனம் கசந்து விட வாய்ப்பு ஏற்படுகிறபோது, அந்த உறவை உதறித்தள்ள எத்தனிக்காமல் சிறிது காலம் சட்டப்படி பிரிந்திருக்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டால் பிரச்னைகள் சுமுகமாக முடியலாம்.

திருமண உறவை எந்தவித சிக்கலும் இல்லாமல் மீட்டெடுக்கக்கூடிய வாய்ப்பு, மேற்கூறிய தற்காலிக நீதிமன்ற பிரிவு மனு தாக்கல் செய்வதன் மூலம் ஏற்படுகிறது.

எந்தெந்த காரணங்களுக்காக சட்டப்படி விவாகரத்து கோருகிறோமோ, அதே காரணங்களுக்காக தற்காலிக நீதிமன்ற பிரிவு கோருவதற்கும் அனைத்துச் சட்டங்களும் வழிவகை செய்துள்ளன.

குடும்ப உறவில் ஏற்படக்கூடிய பிரச்னைகளுக்கு விவாகரத்துதான் ஒரே தீர்வு என்று எண்ணாமல் தற்காலிக நீதிமன்ற பிரிவு கோரி மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் திருமண உறவு நிலைக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.

விவாகரத்து என்பது பல பிரச்னைகளுக்கு முடிவு என்று எண்ணுவது அறியாமை. விவாகரத்து என்பது பாதிக்கப்பட்ட நபரை மட்டுமின்றி அவர்களது குழந்தைகள், அவரைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என்ற பெரிய வட்டத்தையே பாதிக்கக்கூடிய ஒன்று.

அதனால் குடும்ப உறவினை பலப்படுத்த என்னென்ன வழிவகைகள் உள்ளனவோ, அவற்றை சட்டப்படியும் தர்மப்படியும் கையாண்டு, அவை தோல்வியடையும் பட்சத்தில் தான், விவாகரத்து பற்றி யோசிக்க வேண்டும்.

எப்போதுமே வேகத்திலும், கோபத்திலும் எடுக்கப்படுகின்ற முடிவுகள் தவறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

குடும்ப உறவை கட்டிக்காக்க விரும்புபவர்களுக்கு நிதானம் அவசியம். குடும்ப நல நீதிமன்றங்கள் வெறும் விவாகரத்து நீதிமன்றங்கள் மட்டும் அல்ல என்பதை அனைவரும் புரிந்து செயல்படுவது அவசியம். உறவுகளைக் கட்டிக் காக்கவும் சட்டம் நமக்கு உதவக் காத்திருக்கிறது.

மேற்கூறிய கருத்துக்கள் யாவும் இணையத்தில் இருந்து பெறப்பட்டவை… இப்படிபட்ட பல வழக்குகள் நடைபெற்றதற்க்கான சான்றுகள் இன்றும் இணையத்தில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

பூவனம்-16

விவாகரத்திற்கு பிறகு ரம்யாவின் மனநிலை மிகவும் பின்னோக்கி தள்ளப்பட, முன்னை விட ஆக்ரோஷமும், அழுகைகளும் அதிகமானதே தவிர குறையவில்லை.

யாரிடமும் மனம் விட்டு பேசாமல், எல்லாவற்றையும் தனக்குள்ளே மூடி மறைத்ததின் விளைவு, அவளுடைய நடவடிக்கையும், உடல்நிலையும் ஒரு கட்டுப்பாடில்லாமல் தறிகெட்டுப் போனது

அவளுக்கே தெரியாமல் தன்னைச் சுற்றியுள்ளவர்களை காயப்படுத்தியும், தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டும், மிகுந்த மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டாள்.

சமயத்தில் யாரிடம் பேசுகிறோம் என்னும் நினைவு கூட அவளுக்கு இல்லாமல் போயிற்று.

இவை எல்லாவற்றையும் விட, தன் குழந்தையை தொட்டுத் தூக்காமல் தள்ளி வைக்க ஆரம்பிக்க, பிள்ளைக்கு பசியாற்றும் நேரம் ரம்யாவின் தாய் அவளிடம் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல.

கடந்து வந்த பாதைகளும், கசந்து போன அனுபவங்களும் ஏற்படுத்திய மன அழுத்தங்களையும், உடல் பாதிப்புகளையும் வென்று சரியான நேர் கோட்டில் தன் பயணத்தை அமைத்துக்கொள்ள மிகவும் பிரயதனப்பட வேண்டியிருந்தது ரம்யாவிற்கு.

நொடிப்பொழுதும் கண் அயராமல் பெற்றோரும், உடன்பிறந்தோனும் இமையாய் காக்க, புதிய வரவாய் வந்த பூஞ்சிட்டும், தாயின் முகத்தை பார்த்து புன்னகை பூத்திட, ரம்யாவின் மனமும், உடலும் மெல்ல மெல்ல பழைய நிலைக்கு திரும்பியது.

மன அழுத்தத்திலிருந்து விடுபட யோகாவும், தியானமும் கைகொடுக்க, அவள் மனதில் ஏற்பட்ட பயமும், குழப்பங்களும் நீங்கி தன்னம்பிக்கையோடு வாழ்வில் மேற்கொண்டு பயணித்திட, சரியான முறையில் ஆலோசனைகளும் மருந்துகளும் துணை புரிந்திட புதியதொரு பெண்ணாய் மறுபிறவி எடுத்தாள் ரம்யா.

மன நல ஆலோசனைகள் பல கட்டங்களில் மெதுமெதுவாய், பல யதார்த்தங்களை புரிய வைத்தது.

அவளுக்கு ஆலோசனை அளித்த பெண் மருத்துவர் பெண்களின் மனபோக்கையும், அவர்களின் வாழ்க்கை நடைமுறையையும் தெளிவாய் விளக்கிட தெளிந்து கொண்டாள்.

“மிசஸ் ரம்யா… உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது ரொம்ப சின்ன பிரச்சனை தான், பொதுவா பெண்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள் வருது. எல்லா பிரச்சினைகளையும், எல்லோரிடமும் பெண்களால் பகிர்ந்துக்க முடியாது.

குடும்ப பிரச்சினைகள், நிம்மதியை குலைத்து கொண்டிருக்கும், கணவனின் செயல்பாடுகள் அதிருப்தியை அதிகப்படுத்தும்.

குழந்தைகளின் போக்கு, அவர்களிடம் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள், கடுமையான மன உளைச்சலை உருவாக்கும்.

அதையெல்லாம் வெளியே சொல்லாம, நிறைய பெண்கள் மனதிற்குள்ளேயே பூட்டி வைச்சு, தனிமையில் இருக்கும்போது அதை நினைச்சுப் பார்த்து மனசு வருத்திப்பாங்க.

அந்த நிலைமைல தான் நீங்களும் இப்போ இருக்கீங்க. இப்படி யாரிடமும் கலந்து பேசாமல், தீர்வு காணவும் வழி தெரியாமல் மனதை குழப்பிக்கொண்டிருப்பது, மன அழுத்தத்தை அதிகப்படுத்திவிடும்.

உங்க ரகசியம் வெளியே போககூடாதுனு நினைச்சு, நீங்க மனசு விட்டு பேசாம இருக்குறது தான், சில சமயங்களில் தீர்வு காண முடியாத அளவுக்கு அடுக்கடுக்காக பிரச்சினைகள் பின்தொடர காரணமாக அமைந்துவிடும்.

நீங்க, உங்க நம்பிக்கைக்கு பாத்திரமான தோழியிடமோ, அல்லது உங்க மேல அக்கறை காட்டும் உறவுக்காரர்களிடமோ மனம் விட்டு பேசணும்.

அது தான் மன பாரங்களை இறக்கி வைக்க வடிகாலாக அமையும். நெருக்கடியான நேரங்களில் மனதுக்கு நெருக்கமானவர்கள் கூறும் ஆலோசனை, உங்களுக்கு ஆறுதல் தரும்.

மனம்விட்டு பேசுவது என்பது கூட ஒருவகை மருந்துதான்.

மன அழுத்தம் நீங்க, மனதை கலக்கமில்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் வாழும் சூழலில் அது சாத்தியமில்லாதது.

மகிழ்ச்சியான சூழல் உருவானால் மட்டுமே பெண்கள் நீண்ட ஆயுளுடன் வாழ முடியும்.

கடமைகளை செய்துகொண்டே இருப்பது மட்டும் வாழ்க்கையல்ல, வாழ்க்கை என்பது ஒரு கலை. அது அழகாக அமைய மனம் மிகவும் அவசியமாகிறது.

நீங்க உங்க கடமையை மகிழ்ச்சியான மனநிலையோடு செய்யும் போது, மன அழுத்தம் உங்கள விட்டு தூரமா போயிரும். எது வந்தாலும் கடந்து போக சொல்லும், எதையும் எதிர்கொள்ள மன தைரியத்தையும் கொடுக்கும்.

இப்போ உங்க கடமை, உங்க குழந்தையை நல்ல படியா வளர்த்து, அவங்க எதிர் காலத்தை சிறப்பா அமைச்சுக்க உறுதுணையா இருக்குறது தான்.

அதை நீங்க சந்தோசமா செய்யும் போது, அதுவே உங்கள் உலகத்தையும், உங்களை சார்ந்தவர்களையும் சந்தோசமா வச்சுக்க உதவும்.

உங்ககிட்ட இருக்கும் பலவீனம் என்னனு, நீங்களே மனதளவில் தெரிஞ்சுக்கோங்க.

அது உங்கள் செயல்களில், அணுகுமுறைகளில் அந்த பலவீனம் வெளிப்படாமல் பார்த்துக்கொண்டால், அதுவே உங்களின் வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழிகாட்டும்.

இடையறாத இன்னல்களையும், துன்பதையும் தந்த தன் பலவீனம் மரணத்திற்கு ஒப்பானது; வலிமையே மகிழ்ச்சிகரமான வாழ்க்கை, என்பதை நல்ல முறையில் புரிந்து கொண்டாலே போதும், உங்கள் வாழ்க்கைக்கு தடைக்கற்கள் எது வந்தாலும், அதை தாண்டி நீங்க முன்னேறலாம்” போன்ற ஆலோசனைகளை பல கட்டங்களில், மிகவும் பக்குவமாய் பேசி ரம்யாவை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தார்.

அவரின் ஆலோசனைகள், மனதிற்குள் நன்கு பதிய, ரம்யாவிற்கு தன் சுயத்தை அறியச் செய்தது. அவள் சகஜநிலைக்கு மாறிட, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் பிடித்தன.

அதன் பிறகு வந்த காலகட்டங்களில் அவள் சென்ற பாதைகள் யாவும் வெற்றிபடிகளே. தனக்கென ஒரு உத்தியோகத்தை தேடிக்கொண்டு, தன் பெண்ணையும் கண்ணும் கருத்துமாய் வளர்த்திட முன் வந்தாள்.

துக்கத்தால் தற்கொலை செய்து கொள்பவன் தைரியசாலி என்றால், அந்தத் துக்கத்தைத் தாங்கிக் கொள்கிறவனோ பெரும் வீரனல்லவா.

அந்த நிலையில் தான், தன் வாழ்க்கையில் நடந்து முடிந்த நிகழ்வுகளை புதைகுழியில் புதைத்து விட்டு, நிமிர்ந்து நடமாடிட பழக்கப் படுத்திக்கொண்டாள்.

அதனால் தான் கணவன் ஐந்து வருடத்திற்கு பிறகு வந்த போது முதலில் பதட்டமடைந்தாலும், அதன் பின்பு தைரியத்துடனே. பேருந்து நிறுத்தத்திலும் அவளது அலுவலகத்திலும் சந்தித்து வந்தாள்.

“ஆனாலும் விட்டேனா பார் உன்னை” என்னும் ரீதியில் மீண்டும் குடும்பமாய் வாழ அழைத்த கணவனை நிராகரித்து ஒதுங்கினாலும், அவன் பிடித்த பிடியினை விடாமல் மீண்டும் நீதி மன்றம், ஆலோசனை கூட்டம் என்று தன்னை இழுத்தது சற்றும் மனதிற்கு பிடிக்கவில்லை.

தன் வாழ்க்கை மற்றவர் பார்வைக்கு காட்சிப்பொருளாய் இருந்தால் எந்த பெண்ணிற்கு தான் மகிழ்ச்சி அளிக்கும். அது மட்டமல்ல எந்தொவொரு தவறும் செய்யாமல், குற்றவாளி மனோபாவத்துடன் நீதமன்ற வாசலை மீண்டும் ஒரு முறை மிதிக்க சற்றும் விருப்பமில்லை அவளுக்கு.

உறவுக்கு அஸ்திவாரமான அன்பை இழந்து விட்டு, ஊருக்காகவும், உறவுகளின் பார்வைக்காகவும், மறுபடியும் அன்பு செலுத்த எவராலும் முடியாது, அப்படி நடிப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயம்.

இழந்ததை திரும்ப பெற்றிட வாழ்க்கை என்பது இலாப நஷ்ட கணக்கு பார்க்கும் வியாபாரம் அல்லவே. ஒருமுறை காதலாகி, கனிந்து, கசந்த நேசம் மீண்டும் அதே இடத்தில் துளிர்க்காது என்பது ரம்யாவின் திடமான எண்ணமாக இருந்தது.

அதே சமயத்தில் பிறந்த வீட்டின் சூழ்நிலையும் கருத்தில் கொள்ள தவறவில்லை அவள். முக்கியமாய் தன் அண்ணனின் திருமண வாழ்க்கைக்கு தடையாய் தானும், தன் குழந்தையும் இருப்பதை வெறுக்கத் தொடங்கினாள்.

எங்கே தான் தனியே வசிக்க தொடங்கினால் அவர்களின் மனம் காயமடையுமோ என்ற எண்ணமும் அவளை அலைகழித்தது.

அதுவே தாயின் சாதாரண பேச்சும் கூட இல்லாத, பொல்லாத எண்ணங்களையும் கட்டவிழ்க்க காரணமாய் அமைந்தது.

இங்கே இவளின் நிலை கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் எண்ணி மனதில் உரு போட்டுகொண்டிருக்க, அவள் கணவனுக்கும் அதே நிலை தான்…

எவ்வளவு வேலையில் மூழ்கிப் போனாலும் பிடித்தவர்களின் நினைவு ஒரு தென்றல் காற்றாய் வீசிவீட்டு தான் செல்கிறது. நம் அவசர வாழ்க்கையில் சுவாசமாய் அவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் நம் பயணத்தை தொடர்ந்து செய்கிறோம்.

அப்பேர்ப்பட்ட நிலையில் தான் கிரிதரனும் தூர தேசம் வந்தாலும், மனம் முழுவதும் தன் வாரிசை சுமந்த மனைவியிடம் இருக்க, தன் வேலையை நேரம், காலம் பார்க்காமல் செய்து கொண்டிருந்தான்.

மனைவியிடம் பேசும் நேரம் குறைந்து போனாலும், அவன் நினைவோ எப்பொழுதும் அவளிடமே லயித்திருக்க, சந்தோஷமான மனநிலையில் தான், தன் தினப்படி வேலைகைளை தொடர்ந்தான்.

பிரசவ நேரத்தில் தான், மனைவியின் நிலை சற்றே அவனுக்கு புரிய, கதி கலங்கி போனாலும், தன் மகளின் வரவில் மனதை தைரியப்படுத்திக் கொண்டு, இளந்தளிரின் முகத்தை காணொளி மூலம் கண்டு மகிழ்ந்தான்.

அந்த நேரத்தில் தன் நிலையினை நினைத்து நொந்தவன், இனிமேல் வெளிநாட்டு வாய்ப்பை ஏற்கக் கூடாது என்ற பெரிய சபதத்தையே எடுத்திருந்தான்.

குழந்தை பிறந்த தினத்தை தவிர்த்து, அடுத்து வந்த நாட்களில் வேலை அவனை இழுத்துக் கொள்ள, ஒரு வாரம் கழித்து, அவன் தன் அன்னையிடம் பேசும் போது தான், வீண் பேச்சுக்கள் மூலம் பிரச்சனைகள் முளைத்ததை அறிந்து கோபம் கொள்ள மட்டுமே முடிந்தது.

மனைவியின் நிலையை அப்போது தான் அரைகுறையாக அறிந்தவன், தன் தாய் பேசிய பேச்சினை மனதில் வைத்துக்கொண்டு மாமனாரிடம் கோபமாய் பேசி, அப்பொழுதும் மனைவியின் நிலையை சரிவர கேட்டுக்கொள்ளவில்லை.

மீண்டும் மீண்டும் தன் பெற்றோரின் பேச்சும், தன் மாமனாரின் பேச்சும் கோபத்தை கிளப்பிட, தீர்வு காண வழிகள் அறிய முற்பட, அது விவாகரத்து என்னும் விசயத்தில், தன் குடும்பத்தார் நிலையாய் நிற்பதை அறிந்தவனுக்கு முள் மேல் நிற்கும் நிலை தான்.

யாரையும் விட்டுக்கொடுக்காமால் எல்லோரையும் அன்பால் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதே அவன் குறிக்கோள்.

தன் அன்னையின் பிடிவாதம் எப்பேற்பட்டது என்பதையும் அறிந்தவனால், தற்காலிகமாய் நிலைமையை சமாளிக்க மட்டுமே, தன் தம்பியின் உதவியுடன், தன் வழக்கறிஞர் கூறிய சட்ட நுணுக்ககங்களையும், அதற்குள் உள்ள சாதகங்களையும் அறிந்தே பிரிவிற்க்கான அஸ்திவாரத்திருக்கு சம்மதித்தான்.

அவன் நினைத்தது இரண்டு வருடம் கழித்து செல்லும்போது, தன் மனைவியை எளிதில் சமாளித்து விடலாம் என்று தான். ஆனால் காலம் செய்த சதி, அவனை ஐந்து வருடம் வரை வெளிநாட்டிலேயே கட்டி போட, நீதிமன்றமும் அவர்கள் கோரிய பிரிவினை உறுதிப்படுத்திய காரணத்ததால், பேசவும் வழியில்லாமல் போக மிகவும் தவித்து போனான்.

தன் தம்பியின் மூலம், மனைவியின் நிலையினை கொஞ்சம் கொஞ்சமாக அறிந்தவனுக்கு, தன் மேல் தனக்கே கோபம் வர, வாழ்க்கை என்னும் சக்கரத்தில், தான் மிகவும் கீழே தொங்கிகொண்டிருப்பதை அறிந்து துக்கத்தில் கரைய மட்டுமே முடிந்தது…

பெற்றோரிடம் அடங்காத கோபம் கொண்டு தான் கிராமத்திற்கு திரும்பி வந்தது. ஆனால் அவர்களின் ஆட்டம் அடங்காமல், மறுமணத்தை பற்றி பேசவும், சற்றும் தாமதியாமல் தன் வாழ்க்கை பயணத்தை சீர் படுத்திட விரைந்து விட்டான்.

எதிர்ப்புகளையும், கோப பேச்சுக்களையும் எதிர் பார்த்தே வந்தவனுக்கு, கிடைத்த வரவேற்ப்பே, அனைவருக்கும் தன் மேல் உள்ள கோபத்தை அவனுக்கு புரிய வைத்திட, மிகவும் சங்கடமான மனநிலையுடன் தான் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு முயன்றான்.

அவன் மிகவும் அதிர்ந்து போனது தனது மனைவியின் பாராமுகமும், கோப பேச்சுக்களையும் பார்த்து தான்.

சேர்ந்து வாழ்ந்த சொற்ப காலத்தில் அவளின் சிணுங்கல்களையும், குழந்தை முகத்தையும் பார்த்து பழகியவனுக்கு, அவளின் புதிய அவதாரம் சற்றே மிரள செய்தது.

சமாதான பேச்சுக்களும், கெஞ்சல்களும் அவளிடம் எடுபடாமல் போக, வேறு வழியின்றி சட்டத்தின் உதவியை நாடினான்.

பறிபோன உரிமைகளை, பிச்சையாகப் பெற முடியாது. சட்டத்தின் மூலம் இழந்ததை, மீண்டும் அதே சட்டத்தின் மூலம் பெற்றிடவே மீண்டும் அவளை ஆலோசனைக்கு அழைத்தது.

அவன் தன் மனைவியிடம் உரைத்த உறுதிமொழிகளும், மன்றாடல்களும், அவனுக்கு நியாயத்தை வழங்காத போது, அவனும் வேறென்ன தான் செய்வான்?

எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது, அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை என்ற எண்ணம் தான் அவனை அந்த முடிவுக்கு தள்ளியது.

இவனது நிலைமை இப்படி இருக்க, இன்னும் ஒரு நாள் இடைவெளியில், தன் வருங்காலத்தை நிர்ணயிக்கப் போகும் ஆலோசனைக்கான நாளினை எதிர் பார்த்து ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் வேளையில், அவனுக்கு கிராமத்தில் இருந்து அவசர அழைப்பு வந்தது.

பூவனம்-17

கிரிதரனும், சிவாவும் பேசிய நாளின் பின்னிரவில், கிராமத்து பெரிய வீட்டிலிருந்து, தாய்க்கு உடல்நலமில்லை என்று சின்னத்தம்பி தன் அண்ணனிற்கு அழைத்திருக்க, அந்த இரவுநேரத்தில் தன் டஸ்டரில் கிராமத்திற்க்கு விரைந்தான் கிரிதரன்.

அவசரகோலத்தில், கலைந்த தோற்றத்தில் தன் கிராமத்து வீட்டிற்கு வந்தவனை, வரவேற்றது ரம்யாவின் அண்ணன் சிவகுமார்.

“இவன் ஏன் இங்கே வந்தான்?” என்று மனதுக்குள் அதிர்ந்தாலும், பின் சமாளித்துக்கொண்டு தன் தம்பியை நோக்கியவன்,

“என்ன விஷயம் சின்னா!? ஏதோ அம்மாக்கு உடம்பு சரியில்லனு உடனே வர சொல்லிட்டு, இங்கே சவாகாசமா இவர் கூட உக்காந்திருக்க? பொய் சொல்லி என்னை வரவச்சுருக்கியா?”

“ஆமா… பொய் தான் சொன்னேன்”

“பொய் சொல்ல உனக்கு வேற காரணமே கிடைக்கலையா? ஒரே டென்சன் எனக்கு, அம்மா எங்க?”

“அம்மா உடம்புக்கு ஒண்ணும் இல்ல, நல்லா இருக்காங்க, ஆனா நீ செய்ற வேலை தான் இங்கே புரியாத புதிரா இருக்கு”

“புதிரா?” என தம்பியின் முகத்தைப் பார்க்க

“வேலையை சாக்கா வச்சுட்டு, சென்னை போய் என்ன செஞ்சுகிட்டு இருக்கண்ணா?”

“வேல தான் பாக்குறேன், வேற என்ன பண்ணேன்?” என்றவாறு அருகில் நின்றிருந்த சிவாவை முறைத்தவன்,

“எல்லாம் உன்னால தானா? முளச்சு மூனு இல விடாததெல்லாம் வெளியிலயே நிக்க வச்சு கேள்வி கேக்குதுக” என மனதுக்குள் நினைத்தவாறு இளக்கமில்லா முகத்துடன் பார்க்க

“வீட்ல பெரியவங்க இருக்குறது உனக்கு ஞாபகம் இருக்கா, இல்லையா?” என அவன் தம்பி கடுப்புடன் கேட்க

‘பெரியவங்க, பெரியவங்களா நடந்துகிட்டா, நான் ஏன் வயசு பையன் மாதிரி பொண்டாட்டி பின்ன திரிய போறேன்’ என நினைத்தவாறு

“நிறுத்து சின்னா! இப்போ எதுக்காக என்னை வர சொன்னே சொல்லு? எனக்கு நேரம் இல்ல… நான் போய் ஆகணும்”

“அப்படி என்ன அவசர வேலைனு சொல்லு, நானும் கூட வர்றேன். எல்லா வேலையும் இழுத்து போட்டுட்டு செய்யாதே! ரெண்டு பேரும் சேர்ந்தே செய்வோம்”.

“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா? அதிகபிரசங்கியாட்டம் பேசாதே!”

“நீ செய்யற வேலை தான் அப்படி இருக்குண்ணா, இதோ இங்கே நிக்கிறாரே, அவர் எதுக்கு வந்திருக்கார்னு சத்தியமா உனக்கு தெரியாது? எந்த முடிவு எடுத்தாலும் நீ பெரியவங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு செஞ்சுருக்கலாமேண்ணா!”

“என்னனு சொல்ல சொல்ற சின்னா?, அதுக்கு தான் வாய்ப்பு குடுக்காம வேற பொண்ணைக் கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்றவங்ககிட்ட, என்னத்த சொல்லனும்னு எதிர்பார்க்குற?”

“அண்ணியோட வாழ நினைக்கிறத வீட்ல ஒரு வார்த்தை சொல்லிட்டு, நீ செய்ய நினைச்சத செஞ்சுருக்கலாம், இப்போ பாரு நம்ம குடும்பத்து மேல மொத்த தப்பையும் சொல்லி, எங்கள குற்றவாளியா நிக்க வச்சு கேள்வி கேக்குற மாதிரி கொண்டு வந்து விட்டுட்டியே? இதுக்கு என்ன பதில் சொல்ல போறே?”

“நான் யாருக்கு என்னடா செஞ்சேன்? என் பொண்டாட்டி, பிள்ள வேணும்னு சொன்னேன், என் குடும்பத்த என் கூட அனுப்பிவைங்கனு அவங்க வீட்ல கெஞ்சி கேட்டேன்”

“அத தான், நம்ம வீட்டு பெரியவங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்திருக்கலாம், சரி அதுக்குமேல கவுன்சிலிங் வர ஏன் போன?”

“அவங்க வீட்ல யாரும் என் பக்க நியாயத்த கேக்கல சின்னா!!, அதான் சட்டப்படி போயிட்டேன் இதுல என்ன தப்பு சொல்லு” என்று தம்பியிடம் பதில் சொல்லியவாறே, சிவாவை முறைக்கும் பார்வையை தொடர,

பதிலுக்கு அவனும் சளைக்காமல் முறைத்து விட்டு சின்னத்தம்பியிடம் “பஞ்சாயத்துக்கு இன்னும் எவ்ளோ நேரம் ஆகும் முரளி?” என கேட்டு வைக்க

“அரைமணி நேரத்துல எல்லோரும் வந்துருவாங்க சிவா… நீங்க உள்ளே வந்து உக்காருங்க”

“இல்ல, எல்லோரும் எப்போ வர்றாங்களோ அப்போ நான் வர்றேன் முரளி”

“நேத்து நைட் வந்ததுல இருந்து, நீங்க இந்த திண்ணையில உக்காந்து இருக்குறது, எங்க குடும்பத்த வேணும்னே அவமானபடுத்துற மாதிரி இருக்கு, தோப்பு வீட்டுக்கு வர சொன்னாலும் கேக்காம இதென்ன பிடிவாதம் சிவா?”

“இது பிடிவாதம் இல்ல முரளி, உங்க குடும்பத்து மேல அவ்வளவு வெறுப்பு. இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம், போய் ஆக வேண்டிய வேலைய பாருங்க” என சட்டமாய் மீண்டும் அந்த திண்ணையில் அமர்ந்து கொண்டு இருவரையும் உள்ளே அனுப்பினான்.

“படுபாவி எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு பழி வாங்குறானா இவன்? வெளியே உக்காந்து எங்க குடும்ப மானத்த கப்பலேத்தணும்னு கங்கணம் கட்டிட்டு உக்காந்துருக்கான்” என மனதுக்குள் புகைந்து கொண்டே உள்ளே சென்றவன்,

“சிவா எப்படா வந்தாரு? இப்போ எதுக்காக வெளியே நின்னுட்டு இருக்காரு? பஞ்சாயத்துக்கு என்ன அவசியம்?” என மூச்சு விடாமல் கிரிதரன் கேட்க அவனை வெட்டவா, குத்தவா பார்வையை பார்த்து வைத்தான் சின்னத்தம்பி…

“செய்றதெல்லாம் செஞ்சுட்டு நல்லா கேக்குறண்ணா டீடைய்லு? நீ செஞ்ச வேலைக்கு உன்னை இன்னும் உசிரோட விட்டு வச்சுருக்காங்க பாரு, நெஜமாவே அவங்க பெரிய மனுசங்க தான்.”

“போதும்டா அவங்க புராணம், எப்ப வந்தான் என் மச்சான்காரன்?”

“நைட் 2 மணிக்கு வந்தாரு, ஏன் இவ்ளோ அவசரம்னு கேட்டதும் தான் அவருக்கிருந்த கோபத்தை எல்லாம் வார்த்தையாலயே, வஞ்சகம் இல்லாம வாளி, வாளியா எடுத்து ஊத்திட்டாரு”

“நல்ல அண்ணண்டா, என் பொண்டாட்டிக்கு”

“ஆமாண்ணா… நெஜமாவே அண்ணி குடுத்து வைச்சவங்க தான்”

“அப்போ நீ குடுத்து வைக்கலயாடா? அடேய் வெறுப்பேத்தாதே, மேட்டர் என்னனு சொல்லுடா”

“ம்ப்ச்… என்னத்த சொல்லச் சொல்ற? நீ செஞ்ச எல்லா விசயத்தையும் சொல்லி இப்போ பஞ்சாயத்த கூட்டுங்க, அதுக்கு அப்பறம் கவுன்சிலிங் போகலாம், உங்க பிள்ளைய வரச் சொல்லுங்கனு பிடிவாதமா நின்னுட்டார்”

“சரிடா, அதுக்காக அம்மாவுக்கு முடியலனாடா கால் பண்ணுவ? வேற ஐடியா எதுவுமே தோணலையா உனக்கு? பதறி அடிச்சு ஓடி வந்த எனக்கு தெரியும்டா, என்னோட கஷ்டம்”

“சாரிண்ணா நானும் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன், இவர் பேசின பேச்சு அப்படி, எங்கள யோசிக்க விடல, இப்படி சொன்னா தான் நீ வருவேன்னு எனக்கு ஐடியா குடுத்ததே அவர் தான்”

“ஏன்டா அவர் வந்து ரெண்டு சத்தம் போட்டா, கூட நாலு சத்தம் போட்டு அனுப்பி வைக்காம இப்படி உக்கார வைப்பியா? அப்பா என்ன ஒண்ணும் சொல்லலையா?”

“என்ன சொல்லியிருக்கனும்னு சொல்ற? நாங்க எதாவது சொன்ன எங்க மேல தான் அது திரும்பும், அந்த நிலைமையில தான் இப்போ நாம இருக்கோம் சும்மா பேசி, கடுப்ப கிளப்பாதே”

“எல்லாம் என் நேரம்டா, விஷயத்தை சொல்லு, எதுக்கு வெளியே உக்காந்திருக்காரு”

“நம்ம நேரம்னு சொல்லுண்ணா, பஞ்சாயத்து மூலமா தள்ளி வைச்சுருக்குனு பத்திரத்துல எழுதி குடுத்திருக்கோம்”

“நான் எங்கடா குடுத்தேன், நீ சொல்ற, நம்ம வீட்டு பெரியவங்க செஞ்ச வேல அது”

“முடிஞ்சதா பத்தி ஏன் இப்ப பேசுற? இனி நடக்க வேண்டியத பேசுண்ணா, பத்திரத்த வச்சு தான் உன் மச்சான் பேசுறாரு,

என்னதான் சட்டத்துல இடம் இருந்தாலும், பஞ்சாயத்துல சொல்லி முடிச்ச தீர்ப்பு இது,

நாளைக்கு இத வச்சு திரும்பவும் பிரச்சனை வராதுனு என்ன நிச்சயம்?

திரும்பவும் கோர்ட்டு, பஞ்சாயத்துன்னு சொல்லி தள்ளி வைக்க உங்களுக்கு என்ன சொல்லியா தரணும்? இப்படி ஏகப்பட்ட கேள்வி கேட்டு, இப்ப அவர் முன்னாடி நாம தான் குற்றவாளியா நிக்கிறோம்…

அம்மா பயங்கர கோபத்துல இருக்காங்க, அப்பாக்கு பஞ்சாயத்துல என்ன பதில் சொல்றதுன்னு முழிச்சுகிட்டு உக்காந்திருக்காரு? இன்னைக்கு என்ன நடக்க போகுதோ தெரியல…

சிவா ரொம்ப தீவிரமா இருக்காரு, என்ன பண்ண போறோம்னு தெரியல” என்று அவன் புலம்பலை முடிக்க, கிரிதரனை அடுத்து எதிர்கொண்டது மீனாட்சி அம்மாள்

“வா பெரிய தம்பி, ரொம்ப பெரிய வேலையெல்லாம் செய்ற போல? இங்கே உன்ன பெத்தவங்க உசுரோட தான் இருக்கோம்னு இப்போ தான் ஞாபகம் வந்துச்சா?”

“அம்மா கொஞ்சம் நிதானமா பேசும்மா, அண்ணன் இப்போ தான் வந்திருக்கு, நான் விவரம் சொல்லிட்டு இருக்கேன், நீ சாப்பிட ஏற்பாடு பண்ணும்மா” என்று சின்னத்தம்பி கூற

“நாங்க நிதானமா இருக்குற மாதிரியா இவன் காரியம் பண்ணிருக்கான்? போயும், போயும் ஒண்ணும் தெரியாத சின்ன பையனுக்கு பதில் சொல்ல முடியாத படி தலை குனிய வச்சுட்டானே?” என்று சிறியவனிடம் பேசியவர்

“போதுமா பெரிய தம்பி? நீ எங்களுக்கு எவ்ளோ நல்ல பேர் வாங்கி குடுத்துருக்கேனு உனக்கு தெரியுதா?

“உள்ளூருல ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானாம்” அந்த கதையா தான் இருக்கு, நீ இப்போ செஞ்சு வச்சுருக்குற காரியம்.

எதுவா இருந்தாலும் இங்கே இருந்தே செஞ்சுருக்கணும்” என பெரியவனிடம் கேள்வி கேட்டு முடிக்க

“போதும்மா இனிமே என்னோட வாழ்க்கைக்கு யாரும் பேச வேணாம், நானே பேசிக்கிறேன்…” என தனது கோபத்தை அடக்கியபடியே, தாயின் மேலுள்ள தன் மனக்குறையை வார்த்தையால் காட்டாமல், செயலால் காட்ட எண்ணி தன் அறைக்குள் விரைந்தான்.

“ஒரு வார்த்தை நின்னு பேசுறது இல்ல, பதில் சொல்லாம போறதே இவனுக்கு பழக்கமாயிருச்சு, கொஞ்சமாவது காது கொடுத்தாச்சும் கேக்குறானா?” என்ற மீனாட்சியம்மாளின் அதட்டல் காற்றோடு போனது…

அறைக்குள் சென்றவனை தந்தை அழைக்க, தாயிடம் தான் சொன்ன பதிலையே அவருக்கும் கொடுத்து, வரவிருக்கும் பஞ்சாயத்தை எதிர்கொள்ள காத்திருந்தான் கிரிதரன்.

பூவனம்-18

ஊரில் அனைவரின் முன்னிலையில் நடக்கும் பஞ்சாயத்து, கிரிதரனின் தந்தை சுப்பையா ஊரின் பெரிய மனிதர் என்னும் முறையில் அன்று அவர்கள் வீட்டிலேயே பஞ்சாயத்து நடத்தி, அவர்களின் குடும்ப பிரச்சனையை தீர்க்க கூடி இருந்தனர்.

ஊர் மக்களை சேர்க்காமல் மத்தியஸ்தம் சொல்லும் பெரிய மனிதர்கள் ஏழு பேர் ஒருபுறம் அமர்ந்திருக்க, அவர்களை ஒட்டியே கிரிதரனின் குடும்பமும் அமர்திருந்தனர்.

எதிர் திசையில் சிவா அமைதியாய், தன் எதிரில் உள்ளவர்களை பார்வையாலேயே சுட்டு பொசுக்கி கொண்டிருந்தான்.

சிவாவின் பக்கம் யாரும் இல்லையென்ற எண்ணத்தில், எளிதில் அவனை திசை திருப்பி அனுப்பி விடலாம் என்ற நினைப்புடன் தான், சுப்பையா உட்பட மற்ற பெரிய மனிதர்களும் பேசத் தொடங்கியது.

“சொல்லுப்பா தம்பி! பட்டணத்துல இருந்து வந்து, எங்க ஊர் பெரிய மனுஷன் மேல பிராது சொல்யிருக்கே… என்ன விஷயம் சொல்லு? சொல்றதுக்கு முன்னாடி நல்லா யோசனை பண்ணிக்கோ, நீ ஒரு பெரிய மனுஷன் குடும்பத்து மேல சொல்ல போற பிராது தப்பா போச்சுனா, அப்பறம் நீ தான் ஊர்க்காரங்க முன்னாடி நின்னு மன்னிப்பு கேக்கணும். ஊர்க்காரங்க சும்மா விட மாட்டோம், அத மனசுல வச்சுக்கோ தம்பி, இப்படி தேடி வந்து அவமானப் படணுமா?” என சிவாவை சலனப்படுத்தும் வகையில் பேச்சை ஆரம்பிக்க,

அதை கொஞ்சமும் மனதில் கொள்ளாமல் அவர்கள் பேச்சை தவிடுபொடியாக்கி, அவன் பேசிய பேச்சு, ஒருவரையும் அசைய விடவில்லை, தன் பக்க நியாயத்தை அவன் உரைத்த விதம் அனைவரின் மனசாட்சியையும் பதம் பார்த்தது என்று தான் சொல்ல வேண்டும்.

“பெரிய மனுசங்களுக்கு என்னோட வணக்கத்தையும், நன்றியையும் இந்த பஞ்சாயத்துக்கு தெரிவிச்சுக்குறேன். இந்த சின்ன பையன் பேச்சையும் மதிச்சு பஞ்சாயத்த கூடுனதுக்கு, எனக்கு இங்கே வந்து பஞ்சாயத்து கூட்டுனதுல விருப்பமில்ல தான்”

“விருப்பமில்லாதவங்க எதுக்கு தம்பி இங்கே வரனும்? பிராது சொல்லணும்?” ஊரின் பெரிய தலை இடையில் பேசிட,

“என்ன பண்ணறது பெரியவரே! எங்க வீட்டு நிம்மதிய இங்கே தான் தொலைச்சோம், அதான் பிடிக்கலனா கூட இங்க வந்து தேட வந்துருக்கேன்” பதிலடி கொடுத்தான் சிவா.

“உன் தங்கச்சி வாழ்க்கைக்கு அவ தானே வந்து பேசணும்? நீ எதுக்கு வந்த தம்பி?”

“அஞ்சு வருசத்துக்கு முன்னாடி இதே பஞ்சாயத்து, அவ சொல்றதையும் கேட்டு முடிவெடுத்துருந்தா, நானும் இப்ப அவள கூட்டிட்டு வந்துருப்பேன், இப்போ நான் அந்த பிரச்சினைய இழுக்க விரும்பல…

“இதோ இங்கே உக்காந்துருக்குற பெரிய மனுஷன் குடும்பத்துல தான் அஞ்சு வருசத்துக்கு முன்னாடி, என் தங்கச்சிய கட்டி குடுத்தது, அது உங்க எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான்” என்று சொல்ல ஆரம்பித்து, திருமணம் நடந்ததிலிருந்து இன்றைய தன் தங்கையின் நிலைமை வரை பேசி முடித்தான்

“சரிப்பா இப்போ அதுக்கு என்ன? அதான் எல்லாம் முடிஞ்சுருச்சே…” எதிர் கேள்வி கேட்க,

“எங்க பொண்ணு நிம்மதியா நடமாடுறது பொறுக்கலய்யா அவங்க வீட்டு பையனுக்கு. இப்போ குடும்பம் வேணும், பிள்ளை வேணும்னு வந்து நிக்குறாரு இவரோட பையன், இதுக்கு என்ன பதில் சொல்லறீங்க?” என அனைவரையும் பார்த்து காட்டமாய் சிவா கேட்க

“இது என்ன புது கதை, அது எப்படி முடியும்?” என்று பஞ்சாயத்து தலைகட்டு ஒன்று சத்தமிட

“இப்படி தான்யா நாங்களும் கேட்டோம், அதுக்கு சட்டத்துல இடம் இருக்கு, வரைமுறை இருக்கு, புது சட்டம் வந்திருக்குன்னு சொல்லி எங்கள திசை திருப்புறாரு? உங்க பெரியதம்பி. அப்படி அந்த சட்டத்துல இடம் இருக்குன்னே ஒத்துக்குவோம், ஆனா நீங்க சொன்ன தீர்ப்புக்கு என்ன மதிப்பு இருக்கு? அப்பறம் இந்த ஊர் எதுக்கு? இந்த பஞ்சாயத்து எதுக்கு?” என்று மெதுவாய் பஞ்சாயத்தாரை சீண்டு முடித்தான் சிவா,

“நீங்க இத்தன பேரும் அலசி ஆராய்ஞ்சு சொன்ன தீர்ப்பு என்ன பொய்யா போகவா? அதுக்கா பெரிய மனுசங்கனு சொல்லி உங்க வேலை வெட்டிய விட்டுட்டு இங்கே உக்காந்திருக்கீங்க?” என முடிச்சை இறுக்கவும் செய்தான்.

அவன் இத்தனை நேரம் பேசிய பேச்சிற்கே என்ன பதில் சொல்வது என்ற எண்ணத்தில் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்த வண்ணம் இருக்க

“என்ன சுப்பையா இந்த தம்பி சொல்றதெல்லாம் உண்மையா?” என்று அவரிடம் பஞ்சாயத்தார் கேட்க

“கொஞ்சம் பொறுங்கய்யா! நான் இன்னும் பேசி முடிக்கல, முழுசா சொல்லி முடிச்சதுக்கப்பறம் நீங்க அவர கேள்வி கேளுங்க” என்று மேலும் தன் தரப்பு வாதத்தை சொல்ல ஆரம்பித்தான்

“இவங்க வேணும்னா வச்சு வாழவும், வேணாம்னா தள்ளி வைக்கவும் என் தங்கச்சி என்ன பொம்மலாட்டத்துல பிடிச்சு இழுக்குற நூலா சொல்லுங்க?

இப்போ வந்து இவ்ளோ கெஞ்சுறவர் அன்னைக்கே தடுக்க பார்த்துருக்கலாம்.

அப்போ அத செய்யாமா, அவங்க அம்மா பேச்ச மட்டுமே கேட்டுட்டு, இப்போ வந்து நிக்கிறதுல எந்த அர்த்தமும் இல்ல.

இந்த பிரச்சனைக்கு, இந்த பஞ்சாயத்து என்ன தீர்ப்பு சொல்ல போகுது?”

“இன்னைக்கு கவுன்சிலிங் போனா நிச்சமயமா இவருக்கு சாதகமா தான், ஆறு மாசம் சேர்ந்து இருங்கனு கோர்ட்டுல சொல்வாங்க… ஆனா அதுக்கு மறுநாளே இந்த பெரிய வீட்டம்மா திரும்பவும் பஞ்சாயத்த கூட்டி பிரச்சனை பண்ணமாட்டங்கன்னு எப்படி நிச்சயமா நம்புறது? இவங்களா ஒரு முடிவு எடுத்திட்டு, எங்க வீட்டு பொண்ண கோர்ட் படி ஏற வைப்பாங்காளா?

இவரோட நினைப்பு எல்லாம் ரொம்ப நல்லா தான் இருக்கு, பொண்டாட்டி, பிள்ள வேணும், குடும்பமா இருக்கணும்னு சொல்றது எல்லாமே கேக்க சந்தோசம் தான் எங்களுக்கும்.

ஆனா அதுக்கு இவர் என்ன பண்ணிருக்கணும் சொல்லுங்க? அவங்க வீட்டுல உள்ளவங்க சம்மதத்தை வாங்கி இருக்கணுமா, இல்லையா? அத செஞ்சாரா? இல்ல வாய் வார்த்தையா இனிமே எனக்கு என் குடும்பம் மட்டும்தான், என்னோட அம்மா, அப்பா, தம்பி எல்லோரையும் மறந்துட்டு உங்க கூட இருக்கேன்னு சொன்னாரா?

இவருக்கு வேண்டியது இவரோட சந்தோசம் மட்டுமே, அதனால தான் பின்விளைவுகள் எப்படி, என்ன வரும்னு கொஞ்சகூட யோசிக்காம இப்படி ஒரு காரியத்தை ஆரம்பிச்சு வச்சுருக்கார்?

என்னோட இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லிட்டு, அந்த கவுன்சிலிங் கருமத்தை பாக்க சொல்லுங்க…

அதுக்கு முன்னாடி எங்க வீட்டு பொண்ணை பார்த்து பேசி இம்சை பண்றத அடியோடு நிறுத்த சொல்லுங்க” என்று அடுக்கடுக்காய் அவர்கள் மீதுள்ள குற்றங்களை ஆணித்தரமாக சொல்லி, தன் தரப்பு வாதத்தை நிறைவு செய்தான்.

ஊர் பெரிய மனிதர், பெரிய குடும்பம், இன்றும் விவசாயத்தை உயிர் மூச்சாய் கொண்டு, அந்த ஊருக்கே வழிகாட்டிக் கொண்டிருக்கும் சுப்பையாவை குற்றம் சொல்ல அவ்வளவு எளிதில் யாருக்கும் தைரியம் வரவில்லை.

இவ்வளவு நேரம் சிவாவின் விளக்கத்தை கேட்ட கிரிதரனுக்கும் பிரச்சனையை, திசை மாற்றிய விதத்தை பார்த்து மனதிற்குள் சிவாவை மனதிற்குள் மெச்சிக்கொண்டான்.

இப்பொழுது அடங்காத கோபம் சுப்பையாவிற்கு, தன் மகன் செய்த செயலை நினைத்து, தன் மனைவியின் சொல்லுக்கு, நியாய தர்மம் பார்க்காமல் தலையாட்டியதன் பலனை இன்று அனுபவித்து கொண்டிருந்தார். தன் மனைவியை பார்த்து மெதுவாய் கடினகுரலில்

“போதுமாடி!! நீ ஆடின ஆட்டத்துக்கு, இப்போ இந்த சின்ன பையன்கிட்ட தலை குனிஞ்சு நிக்கிறோம், இதுக்கு பதில் என்ன சொல்ல யோசிச்சு வச்சியா?

அன்னைக்கே இந்த பொண்ணு வேண்டாம்னு நாம இழுத்து பிடிக்காம விட்டது இப்போ வினையா வந்து நிக்குது. கல்யாணம் முடிஞ்சதும் நீயாச்சு, உன் பொண்டாட்டியாச்சுனு நீயாவது ஒதுங்கி இருந்துருக்கனும், அதுவும் செய்யாம நீங்க ரெண்டு பேரும் செஞ்சு வச்சுருக்குற வேலைக்கு, இப்போ நான் பதில் சொல்ல முடியாம நிக்கிறேன்டி” என்று தன் மனக்குமுறல்களை கோபமாய் தன் மனைவியிடம் கொட்டிக் கொண்டிருந்தார்.

இவர்களின் பேச்சை கேட்ட கிரிதரன் “இது நானா தேடிகிட்ட பிரச்சனை, நானே முடிச்சு வைக்குறேன். கொஞ்சம் பொறுமையா இருங்கப்பா…”

“என்னத்த பேசி முடிக்க போற? எங்களை இன்னும் தலை குனிய வைக்க போறியா? கொஞ்சமாச்சும் மனசுல உங்க அப்பாவோட மதிப்பு மரியாதைய நினைச்சு பார்த்திருந்தா, இந்த மாதிரி ஒரு காரியத்தை செஞ்சுருப்பியா பெரிய தம்பி?” என மீனாட்சி அம்மாளும் சீற

“இப்படி நீங்க மட்டும் பேசிப்பேசியே, என்னோட வாழ்க்கைய குட்டிசுவராக்கி வச்சுருக்கீங்க… இத எப்போ தான் மாத்திக்க போறீங்கனு தெரியல? என்னை கொஞ்சம் பேச விடுங்க” என தன் பெற்றோகளிடம் பல்லை கடித்தவன். அங்குள்ளவர்களை பார்த்துக் கொண்டே,

“சிவா உங்க கேள்விக்கு நான் பதில் சொல்றேன்… இங்கே பஞ்சாயத்துக்கு வந்த பெரிய மனுசங்களுக்கும் என்னோட விளக்கத்தை சொல்றேன்… எனக்கும் இந்த பிரச்சினைய இழுத்து பிடிக்கிறது பிடிக்கல. எனக்கும் நிம்மதியே போயிருச்சு…

நான் இல்லாத சமயத்தில நடந்த சில வீணான, வரைமுறையில்லா பேச்சுக்களும், அதுக்கு தோதான சூழ்நிலையும் தான், இத்தனை தப்புக்களும் நடக்க காரணம்… நிச்சயமா சொல்றேன் நான் இங்கே இருந்திருந்தா இவ்ளோ தூரம் போக விட்ருக்க மாட்டேன். என் மேல இருக்குற பாசமும் அக்கறையும் கொஞ்சம் அதிகமா போய், என்னை சேர்ந்தவங்க எடுத்த முடிவு தான் இது..

எப்பவும் தன் பிள்ளையோட எதிர்காலம் மனசுல நிக்கும் போது, மத்தவங்களுக்கு பண்ணற அநியாயமும், அங்கே நியாயமா போய்டுது. இது தான் என்னோட விசயத்துல நடந்த உண்மை… இதுல யார் மேலயும் குற்றம் சொல்ல விரும்பல…

தப்பு நடக்குதுன்னு தெரிஞ்சே, நான் தூரமா இருந்து வேடிக்கை பார்த்திருக்கேன்… நான் இருந்த இடம், என் நிலைமை அப்படி இருக்க வச்சுருச்சு” என்று தன் இயலாமையை கூறிட

“இப்போ இவ்வளவு சொல்றவன் அந்த சமயத்துல வந்து எல்லாத்தையும் தடுத்திருக்கலாமே? ஏன் செய்யல பெரிய தம்பி” பஞ்சாயத்து பெரியவர் கேட்க

“என்ன பண்றது எல்லாம் என் நேரம், ஒரு நம்பிக்கை யாரவது இருக்குற சூழ்நிலைய புரிஞ்சு தடுத்து நிறுத்துவாங்கனு நினைச்சேன்… ஆனா அப்படி நினைக்கிறவங்களையும், இங்கே வாயடைக்க வச்சுருக்காங்கனு, எனக்கு எல்லாம் முடிஞ்சா பிறகு தான் தெரிஞ்சது” என்று தன் தாயை முறைத்தவாறே கூறினான்.

“என்ன நடந்தாலும் பெத்தவங்கள விட்டுக் குடுக்க கூடாதுன்னு என்னை பெத்தவங்க நினைக்கிற மாதிரி தான், என் பொண்டாட்டி, பிள்ளையையும் விட்டுகொடுக்க கூடாதுன்னு அவங்க நினைக்கல, நான் அப்படி இருக்கப் போறதில்ல… என்னாலே அவங்கள விட்டுகொடுக்க முடியாது…”

எல்லாமே என்னோட கெட்ட நேரம்னு நான் நினைச்சுக்குறேன்… நடந்த எல்லாத்துக்கும் உங்க தங்கை மட்டுமே பாதிக்கப்பட்டது துரதிஷ்டம் தான் சிவா… இந்த விளக்கத்தை எல்லாம் உங்களுக்கு முன்னாடியே சொல்லிட்டேன்…

எனக்கு ஒரு வாய்ப்பு குடுங்க… உங்க தங்கச்சிய பிரிஞ்சு, நானும் சந்தோசமா வாழ்ந்துடல, அப்படி வாழ்றதுக்கும் எனக்கு தெரியாது… என்னோட தப்புகளை திருத்தி, நானே எல்லாத்தையும் நேர் பண்ணறேன்…

இந்த பஞ்சாயத்து மூலமா நாங்க பிரிஞ்சத மறுத்து, திரும்பவும் ஒண்ணு சேர்ந்து குடும்பமா வாழப்போறோம்னு நானே பஞ்சாயத்துல சொல்லி மன்னிப்பு கேக்குறேன்,

அந்த கவுன்சிலிங் கூட வேண்டாம்னு ரத்து பண்ணிடறேன்… ஆனா என் பூர்வீகத்தையோ, என்னை பெத்தவங்களையோ ஒருநாளும் விட்டுக் கொடுத்தோ, மறந்தோ இருக்க என்னால முடியாது. அப்படி இருக்க நானும் விருப்பபடல…

உங்க தங்கச்சி இந்த வீட்டுல வந்து என்னோட வாழணும், என் குடும்பத்து மனுஷங்களோட ஒண்ணா இருக்கணும், அவ மேல ஒரு தூசு துரும்பு படாம, கண்ணுல வச்சு காப்பாத்த வேண்டியது என்னோட பொறுப்பு.

இதுக்கு சம்மதிச்சு என்கூட வந்து இருக்க சொல்லுங்க,, அப்படி இல்ல… உங்க தங்கைக்கு என்னோட சேர்ந்து வாழ விருப்பம் இல்லனா, என் குழந்தைய மட்டுமாவது என்கிட்டே குடுக்கச் சொல்லுங்க….

ரம்யாவுக்கு வேற வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கறதா இருந்தாலும் அதுக்கு ஒத்துகிட்டு என்ன நடைமுறையோ, அத செய்ய நான் தயாரா இருக்கேன்.

ஆனா என் குழந்தைய யாருக்கும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன், அது ஒரு நாளும் முடியாது. அவள வளர்த்து ஆளாக்கிறதுல என் மிச்ச நாட்களை கழிச்சிருவேன்” என தன் பேச்சினை முடித்தவன், தன் தம்பி வைத்திருந்த பத்திரத்தை, கைகளில் வாங்கி அந்த இடத்துலேயே கிழித்து எரித்து விட்டான்…

“என்ன காரியம் பண்ணறே பெரிய தம்பி?” என சுப்பையா கேட்டக

“ம்ம்… நீங்க எனக்கு வாங்கி கொடுத்த விடுதலை பத்திரத்தை எரிச்சுக்கிட்டு இருக்கேன்”

“பஞ்சாயத்து நடந்துகிட்டு இருக்கும் போது, உன் இஷ்டத்துக்கு இப்படி செஞ்சா என்ன அர்த்தம்?”

“எனக்கு எதுலயும் உடன்பாடு இல்லன்னு அர்த்தம்… இந்த பத்திரம் இருக்க போய் தானே, என் வாழ்க்கைய எல்லோரும் வாய்க்கு கிடைச்ச அவலா நினைச்சு மென்னு துப்பிகிட்டு இருக்கீங்க?

இனிமே அது நடக்காது… நான் இப்போ செய்றது தப்பு தான்… இதுக்கு தண்டனையா நீங்க என்ன சொன்னாலும் ஏத்துக்க தயார இருக்கேன்… ஆனா என் குடும்ப வாழ்க்கைய இதுக்கு மேல மேடை போட்டு பேசுறத நான் ஒத்துக்க மாட்டேன்…

இது எங்க வீட்டு பிரச்சனை, நாங்க வீட்டுல பேசி சரி பண்ணிக்கிறோம்… என்னை எல்லோரும் மன்னிச்சுருங்க… இப்போ நீங்க எல்லோரும் கிளம்பலாம்” என்று அதிரடி காட்ட

“அதெப்படி பெரிய தம்பி… இப்ப மட்டும் வீட்டுலையே பேசி தீர்த்துக்குறேன்னு சொல்லறீங்க? உங்களுக்கு வேணும்னா கூப்பிடவும், வேண்டாம்னா வெளியே போக சொல்லவும் நாங்க என்ன உங்க வீட்டு வேலைக்காரங்களா? கிராமத்து பஞ்சாயத்த அவ்வளவு சுலபமா நினைச்சுடீங்களா?” என ஒருவர் சட்டமாய் பேச

“வீட்டுல பேசி எங்க பிரச்சினைய முடிக்க முடியும்னு நம்புறேன்” என்று சிவாவை ஓரக்கண்ணால் பார்த்தபடியே “உன்மேல இருக்குற நம்பிக்கையில சொல்றேன்” என மனதில் நினைத்துக்கொண்டே கிரி பேசிட,

“நான் அப்பவே சொல்லிட்டேன் நான் செய்றது தப்பு தான், அதுக்கு தண்டனை ஏத்துக்க தயாரா இருக்கேன்னு ஏற்கனவே சொல்லிட்டேன், அதனால தயவு செய்து உங்கள கெஞ்சி கேக்குறேன், நீங்க கிளம்புங்க… ஒரு நல்ல நாள் பார்த்து உங்க தண்டனைய சொல்லுங்க நான் அப்போ வர்றேன்” என்று கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக அவர்களை அனுப்பி விட ஒரு வழியாய் பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது…

மழை விட்டாலும் தூறல் விடவில்லை அங்கே… இப்பொழுது சிவா பிடித்துகொண்டான்…

“என்ன கிரி விளையாடுறீங்களா? இப்போ இங்கே இவ்ளோ பேசுற நீங்க, வெளிநாட்டுல இருந்து வந்ததும் இதே பஞ்சாயத்து மனுசங்களை கூட்டி வச்சு, இந்த காரியத்த செஞ்சு முடிச்சு எங்க வீட்டுல வந்து பேசி இருக்கலாமே? ஏன் அத செய்யல? உங்களுக்கு எல்லாமே ஈஸியா போச்சா? சட்டத்தோட விளையாட ஆரம்பிச்சுரிக்கீங்க கிரி!! இது நல்லதுக்கு இல்ல” என்று எச்சரிக்கும் பாவனையில் பேசிட

“நான் என் பொண்டாட்டி பிள்ளையோட வந்து இந்த பாத்திரத்துக்கு இனி வேலை இல்லன்னு நிரூபிக்க நினைச்சேன், அதான் அப்போ செய்யல… என் பொண்டாட்டி மேல நம்பிக்கை வச்சுருந்தேன், நான் சமாதானப்படுத்துனா என்கூட வருவா, என்னை மன்னிச்சு ஏத்துப்பானு ஈஸியா நினைச்சுட்டேன். ஆனா என்னோட நினைப்ப பொய்யாக்கிட்டா.

இந்த புது ரம்யாவை எப்படி சமாதானப் படுத்துறதுன்னு எனக்கு தெரியல. அவ என் கூட இருந்தா தான், என்னை அவளுக்கு புரிய வைக்க முடியும்… அதுக்கு இந்த கவுன்சிலிங் தான் சரின்னு முடிவு பண்ணினேன்… உங்க வீட்டுக்கு வந்து நான் பேசும் போது, நான் என்ன சொல்ல வந்தேன்னு கொஞ்சமாவது கேட்டிருந்தா, என்னோட நிலைமை தெரிஞ்சுருக்கும். எங்கே நான் வந்தாலே ஏதோ வெளியே நிக்குற பிச்சைக்காரன், வீட்டுக்கு வந்த மாதிரி என்னை பார்த்த, நானும் என்னதான் பண்ணுவேன்… அதான் வேற வழியில்லாம இந்த முடிவு எடுத்தேன்” என்று மனம் வலிக்க பேச

“அடுத்து என்ன செய்றதா உத்தேசம்? பஞ்சாயத்த கலைச்சாச்சு, கோர்ட்க்கும் போக மாட்டேன்னு சொல்லியாச்சு, இத்தனைக்கும் மேல எங்க பொண்ணு உங்க கூட வாழ வரமாட்டேன்னு சொன்னா அதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க?” சிவா விடாமல் கேட்க

“அவ வந்தா என்னோட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கும், அவ இல்லைனா, எனக்கு என் குழந்தை போதும் சிவா… என் வழிய பார்த்து நான் போய்கிட்டே இருப்பேன்… அதுக்கும் இடைஞ்சல் பண்ணி என் குழந்தைய என்கிட்டே குடுக்க மறுத்தா, என் உசிர குடுத்தாவது நான் சாதிச்சுருவேன்.. இத அவ கிட்ட சொல்லி வைங்க… நான் நாளைக்கு உங்க வீட்டுக்கு வந்து பேசுறேன். எங்க காதல் மேல, எனக்கு நம்பிக்கை இருக்கு. அது எங்கள சேர்த்து வைக்கும்” என்று தன் பேச்சினை முடித்தான்.

“எங்க நினைப்பு கொஞ்சம் கூட இல்லாம, நீயா எல்லாத்தையும் பேசிகிட்டே இருந்தா என்ன அர்த்தம் பெரிய தம்பி?” என்று சுப்பையா தன் இருப்பை காட்டிட

“அப்பா போதும்… இன்னும் வீம்பு பேசி என்னை கொல்லாதீங்க… நான்தான் தெளிவா சொல்லிட்டேனே… எந்த காலத்திலேயும் யாரையும் விட்டு குடுக்கப் போறதில்லன்னு. என் குடும்பத்தோட நான் இங்கே தான் வருவேன், என் குடும்பத்த நீங்க ஏத்துகிட்டு தான் ஆகணும். அப்படி எல்லாம் இருக்க முடியாதுனா, இந்த வாசலோட நின்னு உங்க எல்லோரையும் பார்த்துட்டு போறதுக்கு அனுமதி குடுங்க… அது போதும்…” ஆற்றாமையில் வார்த்தைகளை விட

“என்னண்ணா இப்படி எல்லாம் பேசுற? உனக்கில்லாத உரிமை இங்கே யாருக்கும் இல்லை… நீ உன் குடும்பத்தோட சந்தோசமா வாழத்தான் போற… நாங்க எல்லாரும் ஒண்ணா சேர்ந்து இங்கே இருக்கத்தான் போறோம்.. எனக்கு அதுல நம்பிக்கை இருக்கு.. நீ போய் அண்ணிய சமாதனப்படுத்துற வேலைய பாரு…” என்று அவன் தம்பியும், தன் பங்கிற்கு அவனுக்கு பலத்தை கொடுத்திட, மீண்டும் தன் பயணத்தை சென்னையை நோக்கி தொடர்ந்தான்.

பூவனம்-19

ரம்யாவின் வீடு, சண்முகம் முன்பு கிரி அமர்ந்திருக்க, அவனை பார்த்தவாறே சிவாவும் செல்வியும் இருந்தனர், ரம்யா எப்பொழுதும் போல் வேலைக்கு சென்றது கோபத்தை வரவைத்தது கிரிக்கு.

அந்த புண்ணியத்தை கட்டி கொண்டது சண்முகம் மட்டுமே… முன்தினம் இரவே சிவா, அவரின் அனுமதி இல்லாமல் கிராமத்திற்கு சென்று, பஞ்சாயத்து பேசி, நடந்தவைகளை கூறி, நன்றாய் அவரிடம் வாங்கி கட்டிக் கொண்டிருந்தான்.

அந்த கோபமும், தான் நினைத்ததை மட்டுமே செயல் படுத்திக் கொண்டிருக்கும் கிரியின் செய்கைகளும், சேர்ந்து அவரை கோபத்தின் உச்ச நிலையை அடையச் செய்திருந்தது.

அதன் பலனே அவன் இன்று மறுபடியும் பேச்சு வார்த்தைக்கு வருகிறான் என்று தெரிந்தும், எப்பொழுதும் போல் மகளை அலுவலகத்திற்கு அனுப்பி விட்டார்.

அவளும் “தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்பது போல் தன் அன்னை தடுத்தும் கேளாமல் சென்று விட்டாள்… இதையெல்லாம் சொல்லி எங்கே போய் முட்டிக்கொள்ள என்னும் நிலையில் தான் சிவாவும், செல்வியும் முளித்துகொண்டிருந்தனர்.

“இந்த பெண்ணிற்கு எப்பொழுது தான் புத்தி வரப்போகிறதோ? தன் வாழ்க்கை பற்றிய கணிப்பை இன்னும் எத்தனை நாளைக்கு தான் மற்றவர்கள் கையில் ஒப்படைப்பாள்? இவள் சுயாமாய் சிந்தித்து செயல் படுவது எப்போது?” என்ற ஆதங்கமும் சேர்ந்து செல்வியை சோர்வடையச் செய்தது.

குழந்தையும் பள்ளிக்கு சென்றிருக்க இடையூறு இல்லமால் கிரியை முறைக்கும் வேலையை செவ்வென செய்து கொண்டிருந்தார் சண்முகம்.

“கடவுளே என்னை இப்போ தான் இவர் மாப்பிள்ளை பாக்குறாரா? இன்னும் எவ்வளவு நேரம் தான், இப்படி இவர் முறைச்சு பாக்குறது? எனக்கு தலைய இந்த பக்கமும், அந்த பக்கமும் மாத்தி பார்த்து, திருகுவலி வந்துறும் போலேயே? யாரயும் வாய தொறக்க விடாம கட்டி போட்டுட்டார் போல? நேத்து என் வீட்டுக்கு வந்து எகிற குதிச்ச என் மச்சன்காரனும் பெட்டிப்பாம்பா அடங்கி இருக்கான்… தெய்வமே இதுக்கு விடிவு காலம் இல்லையா?” என மனதோடு பேசிக்கொண்டே, சிவாவின் முகத்தை ஆராய, அவனோ தனக்கும், இதற்கும் சம்மந்தம் இல்லை எனும் ரீதியில் கிரியை பார்த்து வைத்தான்.

“சே! எந்த பக்கம் போனாலும் அவுட் ஆக்க, பாத்தி கட்டிட்டு நிக்கிறாங்கயா!!” என்று தனது அடுத்த விக்கெட் கீப்பராய் நின்றிந்த செல்வியை நோக்க, அவரும் அதே நிலையில் அவனை பார்த்து வைக்க,

“டேய் கிரி! எல்லோருக்கும் ஏழரை நாட்டு சனி நடந்து போகும்னா, உனக்கு அது டெண்ட் போட்டு, உன் தலையில உக்காந்துருச்சு…. வேற வழியில்ல, இனிமே நமக்கு நாமே முடிவ சொல்லி, இவங்க பதில எதிர் பாக்காம பொண்டாட்டி பிள்ளைய கடத்திட்டு போய் தான் பேசணும் போல” என மனதிற்குள் முடிவெடுத்தவனாய்

“நான் ரம்யாவ ஆபீஸ்ல பார்த்து பேசுறேன், இப்போ நான் கிளம்புறேன்” என விடை பெற,

“என் பொண்ணு அங்கே நிம்மதியா வேலை பாக்குறது பிடிக்கலையா உங்களுக்கு?” என்று பேச்சை ஆரம்பித்தார் சண்முகம்.

“நிம்மதியா? உங்க பொண்ணு அங்கே வேலை பார்ப்பாளா? நான் நம்ப மாட்டேன்… எனக்கு என்னமோ அவ இன்னைக்கு தானா போயிருக்க மாட்டா? நீங்க தான் வற்புறுத்தி அனுப்பி வச்சுருக்கீங்களோனு தோணுது. அத நான் அங்கே போய் கேட்டு தெரிஞ்சுக்குறேன்” உண்மையை உரக்க சொல்லி, வெளியே செல்ல முற்பட

“வந்த விஷயத்தை சொல்லாம போனா எப்படி கிரிதரன்?” சிவா தூண்டிலை போட

“நான் பேச வந்த ஆள் இங்கே இல்லாதப்போ எப்படி, யார் கிட்ட பேச முடியும் சிவா? நான் வந்ததில இருந்து முறைக்கிற வேலைய மட்டுமே நீங்க எல்லோரும் செஞ்சுட்டு இருந்தா நான் என்ன செய்ய?”

“நேத்து எங்க வீட்டுல வச்சு என்னோட நிலைமைய விளக்கியாச்சு, அதுக்கு நீங்களே சாட்சி, இன்னும் நான் என்ன பண்ணனும்… ஒரு குடும்பமா நான் வாழ நினைக்கிறது தப்பா?

ஏன் எல்லோரும் சேர்ந்து என்னை பழி வாங்குறீங்க? நேத்து அவ்வளவு கோபப்பட்டு பேசின நீங்க தான், இங்கே அமைதியா இருக்கீங்கனு நினைச்சா எனக்கே சந்தேகமா இருக்கு?

அங்கே இருக்குற எல்லா பெரியவங்க முன்னாடியும் உங்க நியாயத்தை சொன்ன நீங்க தான், இன்னைக்கு உங்க அப்பா முன்னாடி, அவங்க சொல்லுக்கு கட்டுப்பட்டு, அமைதியா இருக்கீங்க.

அஞ்சு வருசத்துக்கு முன்னாடி, என்னோட நிலைமையும் இப்படிதானே இருந்தது. ஆனா நான் செஞ்ச காரியம் பெரிசு… கொஞ்சம் சுதாரிச்சு நான் உடனே இங்கே வந்திருந்தா, எல்லாத்தையும் மாத்திருப்பேன்… இனியும் நடந்து முடிஞ்சத பேச நான் தயாரா இல்லை. இனிமே நடக்க இருக்குறத பேச மட்டுமே வந்துருக்கேன்” என்று ஆற்றாமையுடன் கூறினாலும் சண்முகம் அசைந்தாரில்லை.

இப்பொழுது பொல்லாத கோபம் செல்விக்கு வந்தமர்ந்திட “இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு வாங்க, ரம்யா இங்கே இருப்பா” என கூறிக்கொண்டே கைபேசியில் அழைத்து விட்டார் பெண்ணை.

“ரம்யா இன்னைக்கு நீ வேலை பார்த்து கிழிச்சது போதும்… உடனே வீட்டுக்கு வந்து சேரு, உங்க அப்பா தான் கோபத்துல சொல்றாருன்னா, உனக்கு தெரிய வேணாம்… உன்னை மதிச்சு, உன்கூட பேச ஒருத்தர் வந்தா இப்படி தான் போவியா நீ? உனக்கும், மத்தவங்களுக்கும் என்ன வித்தியாசம்” என்று கண்டித்து வைத்தவர், அதே குரலில் கிரியிடம்

“இவர் மேல ஒரு தப்பும் இல்ல தம்பி, ஒரு பொண்ணை பெத்தவருக்கு இருக்குற வருத்தம் தான், இப்படி இவர் உங்ககிட்ட நடந்துக்க காரணம். இந்த வலியெல்லாம் அனுபவிக்கிறது அவ்வளவு சுலபமில்ல… கண்ணுக்குள்ளயே வச்சு வளர்த்த பொண்ணு, இப்படி ஒண்ணு மாத்தி ஒண்ணு வந்து அலைகழிச்சு, அவளை முடக்கி போட்டா, அத கண்ணாலே பார்த்துட்டு, நாங்க அனுபவிச்ச வலிய சொல்லி முடியாது.

பிரசவ வலிக்கு பிறகு சந்தோசம் தான், ஆனா என் பொண்ணுக்கு அந்த சந்தோசத்த கூட அனுபவிக்க வழி இல்லமா போயிருச்சு. என்ன பாவம் செஞ்சா என் பொண்ணு? அமைதியா இருந்தது ஒரு குத்தமா? யாரையும் எதிர்த்து பேசாம, பெரியவங்கள மதிச்சு நடக்க கத்துகொடுத்த எங்களுக்கு கிடைக்க வேண்டிய தண்டனை, அவளுக்கு கிடைச்சா எந்த தகப்பனால தான் தாங்கிக்க முடியும்… வேண்டாம் தம்பி… எந்த காலத்திலயும் நீங்க செஞ்சத நியாயப்படுத்தி பேசி, எங்க வயித்தெரிச்சல கொட்டிக்காதீங்க. நீங்க ரொம்ப காலம் நல்ல இருக்கணும்னு, இன்னைக்கு மட்டுமில்ல, என்னைக்கும் நினைக்கிறவங்க நாங்க, உங்களுக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கு… அதையும் ஞாபகத்துல வச்சுக்கோங்க…

இனிமேலாவது நியாய தர்மத்தை ஆராயமா, உங்க பக்கத்துல இருக்குறவங்கள மட்டுமே பாக்குற பார்வைய மாத்திக்கோங்க… அது தான் இனிமே நீங்க வாழப்போற வாழ்க்கைக்கு நல்லது… நல்லதொரு அஸ்திவாரம் கட்டுற வீட்டுக்கு மட்டும் இல்ல, வாழப்போற வாழ்க்கைக்கும் தேவை” என்று தன் மனக்குமுறல்களை எல்லாம் கொட்டி தீர்த்து விட்டார்…

“போதும் செல்வி! இவருக்கு புத்தி சொல்லறேன்னு, முடிஞ்ச கஷ்டங்களை பேசி, நீ உன் உடம்ப கெடுத்துக்காதே” என்று சண்முகம் ஆறுதல் கூற, சிவா தண்ணீர் கொடுத்து தன் அன்னையை ஆசுவாசப் படுத்த, தான் எவ்வளவு தூரம் அவர்களின் மனதை காயப்படுத்தி இருக்கிறோம் என்பதை கண்கூடாக கண்டு கொண்டான்.

எப்பேர்பட்ட வார்த்தைகள் இவை? கடினமாய் நான்கு வார்த்தை திட்டி, சாபமிட்டு, தங்கள் துயரத்தை வெளிப்படுத்தாமல், மேலும் மேலும் தன் நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு, வலிகள் எல்லாவற்றையும் தங்களுக்குள்ளேயே போட்டு புதைத்துக் கொள்ளும் இவர்களைப் போன்ற மனிதர்களை உறவு முறைகளாக பெற தனக்கு என்ன தகுதி இருக்கிறது?

முதலில் “மனிதன்” என்ற தகுதி கூட தனக்கு இருக்கிறதா? என்ற சந்தேகம் கிரியின் மனதில் வந்தமர, தன்னை பற்றிய சுய அலசலில், தன் நிலை மிகவும் தாழ்ந்து இருப்பதை அறிந்து, நெஞ்சமெங்கும் பாரமேரிய உணர்வை அனுபவித்து கொண்டிருந்தான்.

செல்வி பேசிய பேச்சுக்கள், ஆழ்ந்த அமைதியை ஏற்படுத்திட, அந்த நிமிடங்கள் மணி நேரங்களாய் கடந்து, ரம்யாவும் வீட்டிற்க்கு வந்து சேர்ந்தாள்.

“நீ இவர் கூட இங்கே உக்காந்து பேசினாலும் சரி, வெளியே போய் பேசினாலும் சரி, ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு முடிவு எடுக்க பாருங்க. இன்னையோட இந்த கண்ணாமூச்சி விளையாட்டு ஒரு முடிவுக்கு வரட்டும்” செல்வி கட்டளையிட, சண்முகமும் தலையசைத்து அதற்கு சம்மதம் கொடுத்தார்.

“நான் இங்கே மாடி ரூம்ல போய் பேசுறேன்” என்று ரம்யா தன் முடிவினை அறிவித்து செல்ல தயாராக, கிரிதரனும் பின் தொடர்ந்தான்.

வெயிலடிக்கும் வெட்ட வெளியினை சுற்றிலும் பல வகையான பூந்தொட்டிகள் அந்த இடத்தை குளிர்ச்சிப்படுத்த, அங்கே சிறியதாய் ஒரு ஓய்வறை உபயோகத்தில் இருக்க அங்கே தான் வந்தமர்ந்தனர் இருவரும்…

மனைவியிடம் பேசவென முடிவு செய்து வைத்த பேச்சுக்கள் எல்லாம் செல்வியின் பேச்சால் கிரிக்கு மறக்கடிக்கப்பட்டு இருக்க, சொல்லாத மோனநிலையில் இருவரும் சிறிது நேரம் அமைதியாய் இருந்தனர்.

“எதுவும் பேசாம அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?” என்று ரம்யாவே பேச்சை எடுத்து கொடுக்க, பெருமூச்சுடனே தன் எண்ணங்களை கூற ஆரம்பித்தான்.

“என்னனென்னவோ பேசணும், என்னோட நியாயத்தை எல்லாம் சொல்லனும்னு நினைச்சு வந்தேன் ரம்யா. ஆனா உங்க அம்மா எல்லாத்தையும் மறக்க வச்சுட்டாங்க.

நான் ரொம்ப சுயநலக்காரன், ஏன் ஒரு சராசரி மனுசனா கூட என்னை நினைக்க முடியல? தன்னோட குடும்பத்த, எந்த நிலையிலேயும் விட்டுக் குடுக்காம இருக்குறவன் மட்டுமே மனுசன்னு நினைச்சுட்டு இருந்தேன், ஆனா அதையும் தாண்டிய மனுசத்தன்மை இருக்குனு உங்கம்மா எனக்கு புரிய வச்சுட்டாங்க. எவ்ளோ கோழையா இருந்திருக்கேன். உங்க அப்பா பட்ட வலிகளை விட நான் எந்த கஷ்டத்தையும் அனுபவிச்சுடலே. யாரோ ஒருத்தன், தன் பொண்ண கட்டிகிட்டான்ங்கிற ஒரே காரணத்துக்காக, இப்போவும் அவனை ஒரு சொல் சொல்லாம, எல்லாத்தையும் அடக்கி வச்சு, மனசுக்குள்ளேயே குமைஞ்சு, இன்னமும் நான் நல்ல இருக்கணும்னு நினச்சுகிட்டு இருக்காங்களே, அவங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய போறேன்? சத்தியமா எனக்கு தெரியல ரம்யா?” என்று பேசியபடியே அவள் முன்பு மண்டியிட்டு

“எனக்கு என்ன தண்டனை குடுக்கனும்னு தோணுதோ, அத இப்போவே குடுத்துரு.. நீயும் ஒண்ணுமே சொல்லாமா இன்னும் என்னை குற்றவாளி ஆக்காதே, போதும் இனிமே நான் யார் கிட்டயும் மன்னிப்பு கேட்கப் போறதில்ல…

உன்னை தூரத்துல வச்சு பாக்குற பக்குவம் எனக்கு இல்ல, உன்னோட வலிகளை என்னோட தோள்ல சுமக்க தயாரா இருக்கேன், ஆனா அதுக்கும் கூட எனக்கு குடுப்பினை இல்ல. குழந்தைய வச்சு மட்டுமே நான் உன்னை என்கிட்டே கூப்புட்டுக்கனும்னு நினைச்சேன். இப்போ அதுவும் வேணாம் எனக்கு. சுயநலமா இருக்குற என்கிட்ட என் பொண்ணு வளர்றத விட, உன்கூட உங்க அப்பா, அம்மா நிழல்ல வளர்றது தான் நல்லது. அது தான் சரி. நான் தூரமா நின்னு அவளை பாக்குறதுக்கு மட்டும் அனுமதி குடு ரம்யா அது போதும்” என்று கரகரத்த குரலில் சொல்ல, ஏற்கனவே அவள் முன்பு மண்டியிட்டவன், மேலும் தலை குனிந்து கொள்ள அவன் கண்ணீர் துளிகள் ரம்யாவின் பாதத்தில் தெறித்தன.

நெஞ்சம் கனக்க, கண்கள் பணிக்க தன் முன்னே இருந்த கணவனை பார்த்தவளுக்கு மூளை மரத்து போன நிலை தான்… நேற்றைய தினம் நடந்தவைகளை தன் அண்ணன் மூலம் அறிந்து, கணவனின் அடாவடியில், எக்காரணம் கொண்டும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவிக்காமல் இருக்க வேண்டும் என்ற முடிவை எடுத்திருந்தவளுக்கு, இப்பொழுது தர்ம சங்கடமான நிலை.

எந்த சூழ்நிலையிலும் தன் கண்ணியத்தை தவற விடாமல், கம்பீரமாய் பதில் அளித்து அனைவரையும் வாயடைக்க செய்பவன், இன்று தன் முன்னே மண்டியிட்டு மன்னிப்பும் வேண்டாமால், தண்டனையை அளிக்கும் படி மன்றாட, அவளே அறியாமல் நொடி நேரம் தன் நிலையை மறந்து அவனிடம் சாய ஆரம்பித்த மனதை மிகவும் கட்டுப்படுத்தி, வார்த்தைகளை உதிர்க்க ஆரம்பித்து விட்டாள்.

“இப்போதான் புரிஞ்சதா எங்க வீட்டுல உள்ளவங்கள பத்தி?, எப்படி கிரிதரன் உங்களால இப்படி பேச முடியுது? நீங்க வந்து நின்னதும் ஒரு மறுப்பும் சொல்லாம, எந்த வித கஷ்டமும் உங்களுக்கு குடுக்கமா, தன் பொண்ணை உங்களுக்கு தூக்கி குடுத்தாரே அவருக்கு நீங்க என்ன கைம்மாறு பண்ணிருக்கீங்க?

உங்களுக்கு, உங்க கௌரவம் பெருசா போச்சு, பெத்தவங்களையும், பொண்டாட்டி புள்ளையையும், எப்படி காப்பாத்துறேன் பாருன்னு ஊர் உலகத்துக்கு தம்பட்டம் அடிச்சுக்க தான், நீங்க எல்லாம் கல்யாணம், கருமாதி எல்லாத்தையும் பண்ணி ஷோ காமீக்கிறீங்க. உங்களுக்கு கௌரவமா இருக்க ஒரு குடும்பம் தேவை அவ்வளவு தான். மத்தபடி அவங்க மனசு உங்களுக்கு தேவை இல்லை.

என்ன சொன்னீங்க? குழந்தைய காட்டி என்னை உங்க பக்கம் இழுக்க நினைச்சீங்களா? உண்மையாவே நீங்க என்னை லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிகிடீங்களா? நாம வாழ்ந்த வாழ்க்கை இவ்ளோ தானா? அப்போ உங்களுக்கும், எனக்கும் நடுவுல எதுவுமே இல்லையா? என்னை கஷ்டப்படுத்தின பாழாப்போன காதல் உங்களுக்கு வரலையா? ச்சே… இப்போ இந்த நிமிஷம் உங்கள நினைச்சா எனக்கு அருவெறுப்பா இருக்கு” என்று கடுப்பினை காட்டி முகத்தினை சுளிக்க

“ஐயோ அப்படியெல்லாம் நினைக்காதே ரம்யா… நான் உன் மேல உசுரா இருக்கேன். நம்ம காதல தயவு செய்து உன் வாயால கொச்சை படுத்தாதே! உன்னோட வலிகளை மறந்து, நீ என்கூட, வாழறதுக்கு ரொம்ப காலம் எடுக்கும், அது வரைக்கும் கூட உன்னை என்னால பிரிஞ்சுருக்க முடியாதுங்குற ஒரே காரணம் தான், நான் குழந்தைய முன்னிறுத்தி உன்னையும் கூப்பிட்டது” என உருக

“எப்படி குற்றவாளிய, நிபந்தனை ஜாமின்ல வெளியே கூட்டிட்டு போற மாதிரி, கவுன்சிலிங்குற பேர்ல என்னை, உங்க கூட வந்து தங்க வைக்க திட்டம் போட்டீங்க அப்படி தானே?”

“ஏன் அதுக்கு முன்னாடியும் நான் வந்து உன்னை கூப்பிட்டேனே அது ஞாபகம் இல்லையா உனக்கு?” என்றவன் கோபமாய் எழுந்து பதில் சொல்ல,

“அதெப்படி உங்களுக்காக பேசும் போது மட்டும் நியாயத்தை பாக்குறீங்க கிரி?, அந்த சமயத்துல கூட உங்க மேல இருக்குற தப்பை நீங்க தெரிஞ்சுக்கல அப்படிதானே? நீங்க கூப்பிட்டதும் உடனே வந்திருந்தா உங்க சுயநலத்துக்காக என்னையும், என் பிள்ளையையும் பழைய படி உங்க குடும்பத்துக்காக, விட்டு கொடுத்துருக்க மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்? அவ்வளவு ஏன் உங்க அம்மாக்கிட்ட, பெண் குழந்தை மேலஇருக்குற வெறுப்பையும் சேர்த்து தானே அனுபவிக்க விட்றுப்பீங்க? இதையெல்லாம் பார்த்து திரும்பவும் என் மனசு கஷ்ட்டப்பட்டு பைத்தியகாரி மாதிரி அலையணும், அது தானே உங்க எண்ணம்.”

“போதும் நிறுத்து ரம்யா… நடந்தத திரும்பத் திரும்ப பேசி என்னை கொல்லாதே, கொஞ்சம் விஷம் இருந்தா குடுத்துரு சாப்பிட்டு செத்து போயிர்றேன். உன் வாயால இந்த மாதிரி பேச்சை கேக்கவா நான் அவ்வளவு சிரமப்பட்டு நடந்த எல்லாத்துக்கும், எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டு, ஒண்ணுமில்லாம ஆக்கிட்டு வந்தேன். உனக்கு என்ன தண்டனை குடுக்கனும்னு தோணுதோ அத குடுக்கவும் சொல்லிட்டேன். இப்படியே பேசிக் கொல்லாதே என்னால தாங்க முடியல”

“ரொம்ப பீல் பண்ணாதீங்க. உங்களுக்கு தண்டனை குடுக்க நான் என்ன ஜெயிலரா? இல்ல வக்கீல தேடி போக உங்கள மாதிரி நான் என்ன சுயநலவதியா? உங்களுக்கு உங்க பொண்ண தூரமா இருந்து பாக்க கூட அனுமதி தரக்கூடாதுன்னு தான் முடிவெடுத்து இருந்தேன், இப்போ அந்த நினைப்ப மாத்திட்டேன்,

என்னை இதுவரைக்கும் கண்ணுக்குள்ள வச்சு காப்பத்துன பெத்தவங்களுக்கு, நானும் கைம்மாறு செய்ய நினைக்கிறேன், எங்க அண்ணன் எனக்காவே இன்னும் தன் வாழ்க்கையை அமைச்சுக்காம இருக்கான். எத்தன நாள் தான் நானும் அவங்களுக்கு பாரமா இருக்குறது, அவங்களுக்கு ஒய்வு குடுக்கனும், அவங்களும் சந்தோசமா இருக்கணும்.

எங்கள தூரமா பார்த்து நீங்க தண்டனைய அனுபவிக்க வேணாம், உங்க பக்கத்துலயே வச்சு, உங்க பொண்ணோட அம்மாவா மட்டுமே என்னை பார்க்கணும், அந்த தண்டனை தான் உங்களுக்கு, நான் உங்க கூட வந்து தங்கபோறேன். நல்ல ஞாபகத்துல வச்சுக்கோங்க வாழப்போறதில்ல… ஒரு ரயில் சினேகிதமா கூட அங்கே நான் பேசப்போறதில்ல…

நாம இருக்குற வீட்டுல நீங்க யாரோ? நான் யாரோ தான்? எக்காரணம் கொண்டும் உங்க ஊருக்கோ, உங்க வீட்டு மனுசங்களுக்கோ என்னால மரியாதை குடுக்க முடியாது… என் பொண்ண உங்க பக்கத்துல கூட விடமாட்டேன். அப்போ தான் உங்களுக்கும் ஒரு அப்பாவோட வலி புரியும், இதுல உங்களுக்கும் குடும்பத்தோட இருக்கேங்கிற கௌரவம் கிடைக்கும், என்னை பெத்தவங்களுக்கும் அவங்க பாரம் குறைஞ்ச நிம்மதி கொஞ்சமாவது வரும். இதுக்கு சம்மதம் இல்லன்னா கண் காணாத இடத்துக்கு போயிருங்க… தயவு செய்து தூரமா இருந்து பாக்குறேன்னு சீன் போடாதீங்க… எப்படியும் இன்னும் கொஞ்ச நாள்ல வேலைய காரணம் காட்டி வேற ஊருக்கு போற ஐடியா இருக்கு எனக்கு. அதனால இதுக்கு சம்மதிச்சே ஆகணுங்கிற கட்டாயம் எதுவும் உங்களுக்கு இல்ல” என்று தன் பேச்சை முடித்துக்கொண்டு, கீழே வந்து விட்டாள்.

ஆக மொத்தத்தில் ரம்யாவின் பாழாய்ப்போன காதலும், கிரிக்கு நம்பிக்கை தந்த காதலும் ஒன்று சேருமா என்ற பெரிய கேள்விக்குறி அங்கே எழ, புன்னகைகள் மட்டுமே தன் வனத்தில் பூக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட கிரியின் மனம், வறண்ட பாலைவனத்தில் கண்ணீருக்கும் பஞ்சமாய் தத்தளித்துக் கொண்டிருந்தான்.

அழுவதும் தவறில்லை, விழுவதும் தவறில்லை. ஆனால் அழுதபின் சிரிக்காமாலும், விழுந்த பின் எழாமலும் இருப்பது தான் தவறு என்ற கூற்றினை மனதில் பதித்துக் கொண்டு ரம்யா தன் பாதையை விஸ்தரித்துக் கொண்டாள்.

பூவனம்—20

மனைவியின் சம்மதம் கிடைத்த அந்த நிமிடமே சற்றும் தாமதிக்காமல் தன்னோடு அழைத்து வந்து விட்டான் கிரிதரன்…. எங்கே வேறு பல யோசனைகள் தோன்றி அவள் முடிவை மாற்றிக்கொண்டால் என்ன செய்வது என்ற சிறு பயம் வேகமாய் அவனை செயல் பட வைத்தது.

மனைவியை அழைத்து வந்ததை விட, மகளை தன் வீட்டில் இருத்திக்கொள்ள படாதபாடு பட்டான்…

“மாமாவை விட்டு வர மாட்டேன், இங்கே இருக்க மாட்டேன்” என்று அடம் பிடித்தவளை, அவள் மாமன் சமாதான வார்த்தைகளை பேசி கெஞ்ச, அப்பொழுதும் பிடிவாதமாய் மறுத்தவளிடம், பல எழுதப்படாத லஞ்சலாவண்ய உடன்படிக்கைகள் ஒப்பந்தமாக இங்கே இருக்க சம்மதித்தாள்.

வந்த நாளிலேயே பிள்ளைபூச்சியைப் போல் தன்னை பார்த்து வைக்கும் குழந்தையை பார்க்கும் பொழுது, சொல்லாத துயரங்களும் ஒட்டு மொத்தமாய் வந்தமர, ஒரு தந்தையின் வலியை முதன் முதலாய் அனுபவித்தான் கிரிதரன்.

ஐந்து வருடத்திற்கு முன் இருந்த அதே வீடு தான் தற்போதும் இருப்பது, முன்பு வாடகையாய் இருந்ததை சொந்தமாய் மாற்றி, பக்கத்தில் உள்ள வீட்டையும் சேர்த்து வாங்கி இருந்தான்.

ரம்யாவிற்கு ஏற்கனவே பழக்கமான வீடு, ஆகையால் எந்தவொரு தடுமாற்றமும் இல்லாமல் அங்கே, அவளுக்கென்று தனி அறையை எடுத்துகொண்டு, குழந்தையுடன் உறங்கச் சென்று விட்டாள். அவள் சொன்னதை செயல்படுத்த தொடங்கி இருந்தாள்.

காலை உணவை தயாரிக்க சமையலறைக்கு வந்தவளை, கணவன் வரவேற்க “நானும் பாப்பாவும் சீக்கிரம் போகணும், என் வேலைய முடிச்சதும் நீங்க உள்ளே வரலாம்”

“ஏன் அவ்ளோ இடப்பற்றாக்குறை இருக்கா இந்த கிட்சன்ல?, நாம ரெண்டு பேரும் ஒண்ணா நின்னு இங்கே வேலை செஞ்சதில்லையா?”

“நான் நேத்தே தெளிவா சொன்னதா ஞாபகம்… உங்க கூட பேசவும் செய்யமாட்டேன்னு… திரும்பவும் இப்படி வந்து என் வேலைக்கு இடையில நின்னா என்ன அர்த்தம்?”

“ஒரு அர்த்தமும் இல்ல, நீ உன்னோட முடிவ சொல்லிட்டே… நான் என்னோட முடிவுல நிக்கிறேன்னு அர்த்தம்… உனக்கு எப்படி பிடிக்குதோ அப்படி இருந்துக்கோ, எனக்கு என் பொண்டாட்டி கூட பேசிகிட்டே இருந்தா தான் பிடிக்கும், நான் அத செய்யப்போறேன்.”

“என்ன கொழுப்பா? நேத்து ரொம்ப நல்லபிள்ளையா, இல்லாத டயலாக் எல்லாம் அவ்ளோ உருகிப் பேசி, இன்னைக்கு உங்க புத்திய காமிச்சாச்சு”

“அது என்ன ரம்யா என் புத்தி, கொஞ்சம் சொல்லேன் நானும் தெரிஞ்சுக்குறேன்”

“ம்ம்ம்… சொல்றேன்… அம்மா பேச்ச கேட்டு பொண்டாட்டிய ஓரங்கட்டுன நல்லவரு, நாலும் தெரிஞ்சவருனு மேடை போட்டு சொல்றேன்… உன் புத்தி உன்னை விட்டு போகுதா பாரு? நீயாவது திருந்துறதாவது”

“ஹஹாஹ் இப்படி நீ என்கிட்டே பேசி எத்தன நாள் ஆச்சு ரமி, உன்னோட இந்த திட்டு வாங்காம நானும் ரொம்ப ஏங்கிப்போயிட்டேன்டி”

“இப்படியே பேசிட்டு இருந்தா, இங்கே இருந்து நான் போயிருவேன்… மறுபடியும் அலைஞ்சு திரியட்டும்னு விட்ருவேன்” என்று பல்லை கடிக்க

“நான் ஏண்டி அலைஞ்சு திரியப்போறேன்? நீ எங்கே போறியோ அங்கேயே நானும் வரப்போறேன், சோ சிம்பிள் ரம்” அவளின் கடுப்பான பேச்சிற்கு, சிரிப்புடனே பதில் சொல்லி கொண்டிருந்தான்.

“பிராடு, ஏமாத்துகாரன்டா நீ, உன்னோட பேசிகிட்டே இருக்க எனக்கு நேரம் இல்ல… தள்ளு சமைக்கணும்”

“என்ன செய்யலாம் ரம், இனிப்புல இருந்து ஆரம்பிப்போமா?” கண்சிமிட்ட

“உனக்கு என்ன வேணுமோ அத நீயே செஞ்சுக்கோ… நான், எனக்கும் பாப்பாக்கும் மட்டும் தான் செய்ய போறேன்”

“என்னாது? எனக்கு நீ செய்ய மாட்டியா? உன் சமையல சாப்பிடற கொடுமையில இருந்து அப்பாடி தப்பிச்சேன்டா சாமி, எப்போவும் போல நான் உனக்கு சமைச்சு போடறேன் ரமி. நிச்சயமா உன்னை விட நல்லா சமைக்க வரும்டி எனக்கு…

என் பொண்டாட்டிக்கு சொல்லிக்குடுத்து, தனியா அஞ்சு வருஷம் நானே என் கையால செஞ்சு, சாப்பிட்டு நல்லா பயில்வான் மாதிரி தாண்டி இருக்கேன்… நீயும் என்னோட சமையல் சாப்பிட்டு குண்டாயிரலாம் ரம்” அவளை சீண்டிக்கொண்டே அருகே வரவும், குழந்தையின் அழுகுரல் கேட்கவும் சரியாக இருந்தது.

“எல்லாம் என் தலையெழுத்து. ஒரு காபி போட்டு குடிக்கிறதுக்குள்ள ஓராயிரம் பேச்சு பேச வைக்கிறே… உன்னை வந்து கவனிச்சுக்குறேன்” என்று பிள்ளையை பார்க்க ஓடிவிட்டாள்.

ரம்யாவிற்கு ஆயாசமாய் இருந்தது அந்த காலை வேலை… எந்தவொரு மனசுணக்கமும் இல்லாமல், கணவன் தன்னிடம் பேசுவது அந்த சமயம் மனம் விரும்பினாலும், ஆறாத காயமாக அவன் செய்த செயல்கள் மனதில் விஸ்வரூபம் எடுத்து வெறுப்பின் உச்ச நிலையை அடையச் செய்தன.

அவள் மன உணவுர்களுக்கு சிறுதும் மதிப்பு கொடுக்காமல், தன் நிலைப்பாட்டை மட்டுமே செயல்படுத்திக் கொண்டிருக்கும் கணவனை நினைக்கையில் கண்முடித்தனமான கோபம் வந்தது அவளுக்கு.

மகளுக்கு பாலும், மனைவிக்கு காபியும் எடுத்துக் கொண்டு அவர்கள் அறைக்கே வந்தவன், பிள்ளையை தூக்க அவள் வரமாட்டேன் என்று தன் தாயிடம் ஒட்டிகொண்டாள்.

“நான் உன் அப்பாடா குட்டி, இப்படி எல்லாம் தூரம் போககூடாது சரியா? நானும் அம்மா மாதிரி உன்ன நல்ல பார்த்துப்பேன்டா” அப்பொழுதும் அவனிடம் வராமல் போக்குகாட்டியவளை என்ன செய்து தன்னிடம் வர வைப்பது என்று யோசிக்க

“ரம்யா கொஞ்சம் சொல்லேன் என்கிட்டே வர சொல்லி”…

“நீங்களாச்சு உங்க பொண்ணாச்சு… இடையில நான் வர மாட்டேன், என்கிட்டே மட்டும் வாய் கிழிய பேசுற புத்திசாலித்தனத்தை, உங்க பொண்ணு கிட்ட காமிங்க” என்று பேச்சோடு பேச்சாக மகளுக்கு மட்டும் பாலை கொடுத்து விட்டு, அவளுக்கு கொண்டு வந்தததை தவிர்க்கவும்,

“ரொம்ப பண்ணாதேடி அப்பறம் நீ என்ன செஞ்சாலும் நான் அப்படியே சாப்பிட்டு உனக்கு இல்லாம செஞ்சுருவேன். ஒழுங்கா இப்ப காப்பிய குடிக்கப் போறியா இல்லையா?” மெதுவாய் கண்டிப்பான குரலில் சொன்னாலும் அவள் கேட்காமல் இருக்க, அவளை தன் முன் இழுத்து அவன் மடியினில் உட்கார வைத்து, தன் ஒரு கையாலேயே அவள் கைகள் இரண்டையும் கெட்டியாக பிடித்துகொண்டு, அவள் அசையா வண்ணம் அவள் கால்களையும், தன் கால்களுக்குள் கொண்டு வந்தவன், அவன் மற்றொரு கையினால் அந்த காபியை குடிக்க வைத்தே அவளை விடுவித்தான்.

“குழந்தைய முன்னாடி வச்சுட்டு என்ன வேலைடா செஞ்சு வைக்கிறே, கொஞ்சங்கூட விவஸ்தை இல்லமா”…

“நானும் கேக்குறேன் குழந்தை முன்னாடி, ஏண்டி என் பேச்சை கேக்க மாட்டேங்குற?”

“அடேய் உன்னை… என் பொறுமையா ரொம்பத்தாண்டா சோதிக்கிற” என்று அவன் மடியில் அமர்ந்த வண்ணமே அவனை மொத்தத் தொடங்க, இவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சின்ன சிட்டுவும் தன் தாய் செய்யும் செயலை அவளும் செய்யத் தொடங்கினாள்.

தாயும் மகளும் ஒன்றாய் சேர்ந்து அவனை மல்லாக்க தள்ளிவிட்டு தாக்குதல் நடத்த, சுகமான அவஸ்தைகளை கண் மூடி ரசித்தவாறே, சிரித்துக்கொண்டே

“போதும் ரமி விடுடி… டைம் ஆச்சு பாரு… பாப்பவ ரெடி பண்ணு, நான் டிபன் ரெடி பண்ணறேன்” என்று அவர்களை விலக்கி நிறுத்த,

“அம்மா இன்னும் டூ டைம்ஸ் இந்த பில்லோ வச்சு அடிம்மா” என்று பிள்ளையும் எடுத்துக் கொடுக்க

“அடேய் சோட்டாபீம்… இப்போ வேண்டாம்டா, ஸ்கூல் போயிட்டு வந்து, என்னை வச்சு செய்யலாம், ஐயாம் வெயிடிங், இப்போ ரெடியாகுங்க”

“நீ வெளியே போனா தான், நான் உள்ளே போக முடியும்… நீ போ மொதல்ல” ரம்யா சொல்ல

“ஏண்டி நான் நல்ல பிள்ளையா தானே இங்கே உக்காந்திருக்கேன்… நீ உன் வேலைய பாரு, நான் உன்னை பாக்குறேன்.”

“இது சரி வராது… குட்டி உன்னோட ஸ்டைல்ல பஞ்ச் குடுத்து, பத்து தடவ குத்து, உள்ளே இருக்குரதெல்லாம் வெளியே வரட்டும்” ரம்யா பிள்ளையை ஏற்றி விட

“ஹஹா… பார் மகளே பார்… கொஞ்சம் கொஞ்சமாக ரௌடிரம்யாவாக மாறும் என் மனைவியை பார்” விடாமல் அவனும் சீண்ட,

“இன்னைக்கு அடி கன்பார்ம்டா உனக்கு”

“அடிப்பாவி துரத்தி துரத்தி அடிக்க வர்றாளே” என்று அலறிக்கொண்டே வெளியேற அன்றாட வேலைகள் தொடங்கியது அங்கே.

ஒருவழியாய் தயாராகி வந்து கணவன் செய்த இட்லியை ரம்யா குழந்தைக்கு ஊட்டி விட,

“எனக்கு இந்த இட்லி வேணாம். பாட்டி செய்ற முறுவல் தோசை செஞ்சு குடு”

“இந்தும்மா இப்போ இத சாப்பிடுக்கோ, சாயந்தரம் அம்மா வந்து உனக்கு வேணுங்கிறத செஞ்சு தர்றேன். இப்போ ஸ்கூலுக்கு லேட் ஆகுது செல்லம், இங்கே இருந்து தூரமா போகணும், ஸ்கூல் பஸ் வந்துரும்டி… நல்ல பொண்ணு தானே என் இந்திராக்ஷி” என்று செல்லம் கொஞ்சினாலும் அசையவில்லை.

“பாட்டி வீட்டுல இருந்தா எனக்கு தோசை ஊத்தி குடுப்பாங்க… இந்த அப்பா வீட்ல பாட்டி இல்ல, வாம்மா அங்கே போவோம், இந்த வீடு வேணாம்…”

மகளுக்கு என்ன பதில் சொல்வது என்று யோசிக்க வேண்டியதாயிற்று அவளுக்கு. சமாதானம் சொல்லவும் தற்சமயம் நேரம் இல்லை. இப்பொழுது கிளம்பினால் தான், இவளை பள்ளி வாகனத்தில் ஏற்றி விட்டு, அவளும் தன் அலுவலகத்தை காலை ஒன்பது மணிக்குள் அடைய முடியும். தாயின் அவசரம் பிள்ளைக்கு தெரிய வாய்ப்பில்லை.

“சரிடா இன்னைக்கு மட்டும் இங்கே இருந்து ஸ்கூல் போயிட்டு நாளைக்கு பாட்டி வீட்டுக்கு போய் இருக்கலாம்” என்று சமாதானம் பேசியவாறே குழந்தையை கிளப்ப, அந்த குட்டியோ சமதானம் ஆகாமால், “தோசை வேணும், பாட்டி வீடு போலாம்” கூப்பாடு போட, அந்த வீடே அதிர்ந்தது என்றே சொல்லலாம்.

ரம்யாவும் கத்தலை கேட்க சகிக்காமல், அவளை அறைந்து விட, அழுகை ஆரம்பமாகியது. மகளின் அட்டகாசத்தை சத்தமில்லாமல் பார்த்து கொண்டிருந்தவன், அழுது கொண்டிருப்பவளை சமாதானம் செய்ய பக்கம் வர, அவனை தடுத்தவாறே ரம்யாவே பிள்ளையை அணைத்துக் கொள்ள, சமயலறையில் நுழைந்தவன் மகளுக்கு முறுவல் தோசை வார்க்க ஆரம்பித்தான்.

கையில் உணவுடன் வெளியே வரும் நேரத்தில், அவசர கதியில் ரம்யா கிளம்பி நிற்க, அடி வாங்கிய சிட்டும், விசும்பிக்கொண்டே தங்கள் அறையை விட்டு வெளியே வந்தது.

“பாப்பாவ சாப்பிட வச்சு கூட்டிட்டு போ ரம்யா”

“வேணாம் லேட் ஆயிருச்சு”

“அவளுக்கு பசிக்கும், சாப்பாட்டு விசயத்துல உன் கோபத்தை காட்டாதே ரம்யா, நீ குடுக்கிறியா? இல்ல நானே அவளுக்கு ஊட்டி விடவா?”

“எங்க ரெண்டு பேருக்கும் லேட் ஆயிருச்சு… ஒரு வேலை தானே சாப்பிடாம இருக்கட்டும்” பிடிவாதத்தில் இவளும் கிளம்பி நிற்க

“உனக்கு லேட் ஆச்சுன்னா நீ போ, நான் அவளை கொண்டு போய் விடறேன்” என்றவன் மகளை பார்த்து

“குட்டிம்மா!! அப்பா கார்ல ஸ்கூல் போவோமா?” என்ற கேள்வியில் அவள் முகம் மலர்ந்தாலும், இதுவரை தந்தையுடன் எங்கேயும் செல்லாததால் தாய் முகத்தை பார்த்து அனுமதி வேண்டி நிற்க, “அய்யோ” என்றானது கிரிதரனுக்கு.

மனைவியின் ஒரு நிமிட தடுமாற்றத்தில், “சரி இப்படி செய்வோமா? ரெண்டு பேரையும் நான் கொண்டு போய் விடறேன், எல்லோரும் சாப்பிட்டு போகலாம்” மகளைப் பார்த்துக்கொண்டே தாயிடம் அனுமதி வாங்குவது இவனின் முறையானது.

“ஒண்ணும் வேண்டாம், சாயந்திரம் நான் வர்றதுக்கு எனக்கு பஸ் கிடைக்காது. எனக்கு வண்டி தான் சரி” என்றவள் கடுப்புடன் மகளை பார்த்து

“இப்போ கிளம்பினாலும், ஸ்கூல் பஸ்சும் பிடிக்க முடியாது, நீ சமத்தா சாப்பிட்டு, அப்பா கூட ஸ்கூல் போடா குட்டி, எனக்கு லேட் ஆயிடுச்சு” என வேண்டாவெறுப்பாய் சொல்லிக்கொண்டே கிளம்பி விட்டாள்.

எங்கே இன்னும் கொஞ்ச நேரம் அங்கே நின்றால் பேச்சுகள் நீண்டு, தன் பயணமும் அவனுடன் அமைந்து விடுமோ என்ற சிறு அச்சமும் வந்து அவளை அங்கிருந்து துரத்தி விட்டது.

முதல் முதலாய் மகளுடனான தனிமையை சந்தோசத்துடன் அனுபவித்தபடியே, அவளுக்கு உணவு கொடுத்து விட்டு, பள்ளிக்கு கிளம்ப ஆயத்தமாக, அவனுடன் பயணித்தபடியே தன் கேள்விகளை கேட்க ஆரம்பித்திருந்தாள். இப்பொழுது சற்றே சகஜ நிலை இருவருக்கும்.

“நீ ஏன் டெய்லியும் என்னை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்ல மாட்றாப்பா?”

“இவ்ளோ நாள் எங்கே போயிருந்தேப்பா?”

“எதுக்குப்பா என்னை கூட்டிட்டு போக வரல?”

“என் பிரண்ட் சஞ்சு அழுதுட்டே ஸ்கூல் வந்தா, அவங்க டாடி சாக்கி வாங்கி குடுப்பாங்களாம், அப்படி நீ எனக்கு வாங்கி தருவியா?” கேள்விகள் மூச்சு விடாமல் கேட்க, பதில் சொல்ல முடியாமல் திணறிப்போனான்.

“நீ அழாம இருந்தா, டாடி எல்லாமே வாங்கி தருவேன்”

“நான் அம்மா அடிச்சதால தான் அழுதேன், நான் ரொம்ப குட்(good) கேர்ள், அம்மா தான் பேட்(bad) கேர்ள்னு பாட்டி சொல்வாங்க நீயும் அப்படி சொல்வியா?”

மகளின் கேள்வியில் வெடித்து சிரித்தவனுக்கு, “உங்க அம்மா சும்மாவே என்னை பொறிச்சு எடுத்துட்டு இருக்கா? இதுல பேட் கேர்ள்னு சொன்னா, உனக்கு கையால குடுத்த அடிய, எனக்கு கட்டையால குடுப்பா… இனிமே அப்படி எல்லாம் சொல்ல கூடாது சரியா? அம்மாவும் குட் கேர்ள் தான்”

“அப்போ ஏன் என் பேச்ச கேக்காம அப்பா வீட்டுலயே இருக்கோம்? எனக்கு பாட்டி வீட்ல தான் இருக்கணும், இங்கே எனக்கு பிடிக்கல” அவன் வீட்டை பிடிக்கவில்லை என்று அவனிடமே புகார் வாசிக்க, அவனுக்கு யாரோ முகத்தில் அறைந்த உணர்வு, அதற்குள் பள்ளியும் வந்து விட

“நாளைக்கும் என்னை இப்படி கூட்டிட்டு வர்றியாப்பா?”

“கட்டாயமாடா குட்டி, நீ அப்பா வீட்டுல இருந்தா என்கூட வரலாம், ஈவினிங் அப்பா வந்து கூட்டிட்டு போறேன். அப்பறம் வெளியே போவோம். சரியா!! இப்போ எந்த கிளாஸ் சொல்லு உன் கூட வர்றேன்” என்று அவளிடம் கேட்டு, வகுப்பில் அவளை அமர வைத்து விட்டு வந்தான். வரும் வழியெங்கும் யோசனைகள் மனதிற்குள் படை எடுக்க அதன் பதில்கள் அவனுக்கு தெரியவில்லை.

மனைவியின் சொல்லை கேட்டு, அவளின் மனப்புண் ஆறும் வரை தூரமாய் நின்று பார்க்க அவன் மனம் சொன்னாலும், மறுபுறம் இந்த காத்திருப்பு, மீள முடியா தூரத்தை இருவருக்குமிடையில் உருவாக்கி விடும் என்று அஞ்சியவன், நல்லவனாய் இருந்து விலகி இருப்பதை விட, கெட்டவனாய், மனைவி பேச்சை கேட்காமல், அருகில் இருந்து தன்னை புரிய வைக்க முடிவெடுத்து விட்டான்.

மகளிடம் சொல்லியவாறே பள்ளியிலிருந்து அவளை அழைத்து வந்தவன், அவளுக்கு பிடித்தமான உணவுகளை வீட்டிலிருந்தே தாயாரித்துக் கொடுத்து, அவளை தன்னருகில் இழுக்கும் வேலையை கண்ணும் கருத்துமாய் செய்யத் தொடங்கினான்.

வேலை முடிந்து வந்த ரம்யாவும் அவன் செயல்களை பார்த்து, “இப்படியே இன்னும் எத்தன நாளைக்கு லீவ் போட்டுட்டு, பொண்ணு பின்னாடி கூஜா தூக்குறதா உத்தேசம்? நாங்க வந்து சேர்ந்த பின்னாடி வேலையும் சேர்ந்து போச்சுன்னு எங்க மேல பழி போட இந்த பிளான் போல?”

“வாய்க்கு வந்தத பேசாதே ரம்யா”..

“உங்கள யாரு ஸ்கூலுக்கு போய் கூட்டிட்டு வரசொன்னது?”

“என் குழந்தைய போய் கூப்பிட யார் சொல்லணும் எனக்கு?, நீ சொன்ன மாதிரியே நானா அவகூட பேசுறதில்ல, குழந்தையா வந்தா நானும் விட்றதில்ல… அவள என் பக்கத்துல வராம நீயே வச்சுக்கோ, நான் ஒண்ணும் பங்குக்கு வரமாட்டேன். அவளா வந்தா ஒதுக்கவும் மாட்டேன்” என்று தன் பங்கிற்கு அவளை சீண்டி விட்டு சென்று விட்டான்.

“நீயா அங்கே போய் நின்னதும் இல்லாம, உன்னோட நியாயத்தை வேற சொல்வியாடா” என்று ரம்யாவால் மனதிற்குள் குமையத் தான் முடிந்தது.

அடுத்து வந்த நாட்களில் அரை நாள் மட்டுமே அலுவலகம் சென்று விட்டு, மீதி வேலைகளை வீட்டிருந்த படியே பார்த்து, மகளை கவனித்துகொள்வதை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டான்.

அதனுடன் மனைவியை சீண்டும் வேலையை சரியாய் செய்து அவளிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளவும் தவறவில்லை அவன்.

நாள் முழுதும் சமையலை தன் பொறுப்பில் எடுத்துக் கொள்பவன், சுத்தப்படுத்தும் வேலையை அவள் தலையில் கட்டி இடையே சென்று அவளிடம் வம்பிழுக்கவும் செய்தான்

“கிளீன் பண்ணறப்போ ஏன் இடையில வர்றீங்க”

“தேவை இருக்கு வர்றேன்

“இப்போ பாத்திரம் தேய்ச்சு முடிக்கிற வரை வராதேடா”

“ஒரு முறை வச்சு கூப்பிடேண்டி, வாராதீங்கனு எனக்கு மரியாதை குடுக்கிற அடுத்த நிமிஷம், போடா சொல்லி அசிங்கப்படுத்துற, என் பேர் சொல்லி கூப்பிட மாட்டியா ரம்யா”

“பேர் சொல்லி கூப்பிடற அளவுக்கு என்ன இருக்கு நமக்குள்ள?”

“போதும்டி இனிமே நான் வாய தொறக்கல”

“இப்படி மூஞ்சில அடிச்ச மாதிரி பேசினாதான் அடங்க முடியுது”

பேசிசென்ற இரண்டாவது நிமிடத்தில் மீண்டும் அவளுக்கு பின்னே வந்து நின்று கைகளை காட்ட, அதற்கும் அவள் முறைத்து வைக்க

“கை கழுவ வந்தேன் ரமி”

“ஏன் வேற எங்கேயும் தண்ணி வராதா? அங்கே போய் வாஷ் பண்ண முடியாதா?”

“அது… தனியா விட்டுட்டு போனா பாப்பா அழ ஆரம்பிச்சுருவா அதான் இங்கே ஹிஹி…”

“இங்கே வந்து நிக்க ஒரு சாக்கு…”

“சரி என் பக்கத்துல நின்னு கழுவித் தொலைக்க வேண்டியது தானே? ஏன் என் பின்னாடி நிக்கணும்…”

“அப்படி வந்தா நீ கழுவுற தண்ணி எல்லாம் என் சட்டை மேல படும் ஈரமாயிடும் அதான் உன் பின்னாடி வந்து நின்னுட்டேன்” என்று அவளை உரசியவாறே நின்று கொண்டு, அவளை சூடேற்றும் வேலையை செய்து கொண்டிருந்தான்.

ஒரு வாரம் கழிந்த நிலையில் தாராள புழக்கம் இந்திராக்ஷிக்கு… இருவரின் அறையிலும் மாறி மாறி இருந்ததும் அல்லாமல், ஒருவர் அறையில் மற்றவரை கூட்டு சேர்த்துக் கொண்டாள்.

இதில் மிகவும் நொந்து போனது ரம்யா தான். அவள் அறையில் இருக்கும் பொழுது கிரியையும் உள்ளே அழைத்து கதை சொல்ல வைத்தாள். சிவாவிடம் கதை படித்த பழக்கத்தை, இங்கே கிரியிடம் தொடங்கினாள்.

எல்லா செயல்களிலும் தந்தையை கூட்டு சேர்க்கும் அளவிற்கு அவளை சுற்றியே கிரி தன் செயல்களை செய்து வந்தான்.

ரம்யாவிற்கும் மகளை இழுத்து பிடிக்க முடியவில்லை. ஏதோ ஒன்றை மறுத்து சொன்னால், மீண்டும் பிடிவாதத்தை கையில் எடுத்துகொண்டு மகள் தன் மீதான புகாரை செல்வியிடம் சொல்லி, அதற்கும் ஒரு கண்டன பார்வையை பரிசாக தாயிடம் கிடைத்துக் கொண்டிருந்தது அவளுக்கு.

எக்காரணம் கொண்டும் இதுவரை அவனுடன் இவள் எங்கேயும் செல்வதில்லை. வேலை முடிந்து வர நேரம் அதிகமானாலும், இவனை அழைப்பதில்லை, தகவலும் தெரிவிப்பதில்லை. அந்த நேரங்களில் கிரி தான் தவித்துப் போவான்.

“நீ என்கூட பேச வேணாம், ஒரு மெசேஜ் பண்ணலாமே அந்த அளவுக்கா நான் உனக்கு பிடிக்காம போயிட்டேன். பாப்பா உன்ன தேட ஆரம்பிச்சு, சமாதானம் பண்ண முடியல என்னாலே… இனிமே நானே உன்னை கூட்டிட்டு போக வர்றேன். நீ தனியா வராதே”

“அப்பவும் நீங்களா வர்றேன்னு சொல்ல மாட்டிங்க, உங்க பொண்ணு அழுகைய சமாதானம் பண்ண தான், என்னை வந்து கூட்டிட்டு போறேன்னு சொல்றீங்க?”

“ஏண்டி நானா கூப்பிட்டாலும் வரமாட்டேன்னு சொல்ற, பிள்ளை அழுது சீக்கிரம் வர சொன்னா, அப்போவும் உன்மேல அக்கறையா இல்லன்னு கேக்குற? இப்படி ஏட்டிக்கு போட்டியா பேசினா என்னதான் செய்றது ரம்யா?”

இவன் ஒரு அடி அவளை நோக்கி எடுத்து வைத்தால், அவள் பத்து அடி பின்னோக்கி செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள்.

இப்படியாய் பள்ளிக்கு கொண்டு போய் விடும் வேலையை செய்து கொண்டு, மகளை தன் வசப்படுத்தியவன் அடுத்த அடியை எப்படி எடுத்து வைப்பது என்று யோசித்துக்கொண்டு இருக்கும் வேளையில், மீனாட்சி அம்மாள் கிராமத்திலிருந்து கிரியின் வீட்டிற்க்கு வந்து சேர்ந்தார்.

பூவனம்-21

அன்று இந்திராக்ஷியின் பிறந்த நாள்… அன்றைய தினம் பிள்ளையின் பெயரில் எளிமையான முறையில் ஆயுஸுய ஹோமம், செல்வி ஏற்பாடு செய்ய, பிள்ளையை மடியில் வைத்துக்கொண்டு, தம்பதி சமேதராய் மனையில் அமர்ந்து, பிள்ளைக்காக மந்திரங்கள் சொன்னதை, அனைத்தையும் பார்த்த ரம்யாவின் பெற்றோருக்கு மனம் நிறைந்து விட்டது.

பட்டுப் பாவாடை சட்டையுடன் அங்கும், இங்கும் அசைந்தாடி, அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட மகளை பார்த்து, நொடிக்கொரு முறை சிலிர்த்துக் கொண்டான் கிரிதரன், அன்றைய நாள் முழுவதும் மகளை தன் கைகளிலேயே தூக்கி வைத்து கொஞ்சி மகிழ்ந்தான்.

ரம்யாவும் அன்றைய தினம் எந்த வித முகச்சுளிப்பும் இல்லாமல், தன் பெற்றோரின் முன் அவனுடன் பேசி மகிழ்ந்தாள். அழகிய பட்டுப்புடவையில் ஒப்பனையை முற்றிலும் தவிர்ப்பவளின் எழில் முகத்தில் இருந்த பொலிவில் கிரிதரன் மீண்டும் ஒரு முறை வீழ்ந்தே போனான்.

அவனுக்கு அவளோடு சேர்ந்து இருந்த நினைவுகள் அந்த நிலையில் ஆக்கிரமித்து, ஆசையாய் அவள் மேல் பதிந்த பார்வையை மாற்ற முடியவில்லை அவனால்.

மாலையில் ஒரு ஹோட்டலில் எளிமையான முறையில் நண்பர்களுக்கு விருந்தும் ஏற்பாடு செய்திருந்தான். “வரமாட்டேன்” என்று வீம்பு பிடித்தவளை, மகளை முன்னிறுத்தியே வரச் செய்தான்.

பிறந்த நாள் விழாவை சிறப்பாக நிறைவு செய்து, மனம் நிறைய சந்தோசத்துடன் வீட்டிற்கு வந்தர்வர்களை எதிர் கொண்டது மீனாட்சி அம்மாவே தான்.

தம்பி முரளியின் வசம் இரு வீட்டுச் சாவியின் ஒரு செட் கொடுத்து வைத்திருந்தான் கிரி. அதனால் அவனுக்காக காத்திராமல் உள்ளே வந்து அமர்ந்திருந்தனர் கிரியின் பெற்றோர்.

“எப்ப வந்தீங்கம்மா? ஏன் எனக்கு போன் பண்ணல? முன் கூட்டி சொல்லி இருந்தா இங்கே இருந்திருப்பேனே?”

“உன்னோட போன் எங்கே போச்சு பெரிய தம்பி? எத்தன தடவ உனக்கு போன் போடறது? நீ எடுக்க மாட்டேங்குற?” சுப்பையா கேட்க.

அப்போது தான் அவனுக்கு நினைவு வந்தது. காலையில் கோவிலில் இடையூறு ஏற்படாமல் இருக்க, அமைதியான பயன்பாட்டில் (சைலென்ட்மோட்) போட்டதை மறந்தே போய் இருந்தான். இப்பொழுது அதை எடுத்து பார்க்க, தம்பியும், தந்தையும் வரிசையாய் அழைத்தது பதிவாகி இருந்தது.

“சாரிம்மா… நான் தான் மறந்து போயிட்டேன்” என தாயின் முகத்தை பார்க்க, அவரோ மருமகளையும், பேத்தியையும் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார். பாசமாய் பார்க்கவில்லை, துவேசமாய் பார்த்து வைத்தார்.

“நினைப்பு இருந்தா மட்டும் நீ வந்திருப்பியா? அவ்ளோ பிரச்சனை பண்ணி எல்லோரையும் எடுத்தெறிஞ்சு பேசிட்டு வந்தியே, அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க? ஏது செஞ்சாங்கன்னு ஒரு தடவையாவது கேக்கனும்னு தோணுச்சா உனக்கு? அங்கே நாங்க இல்லாத பேச்செல்லாம் வாங்கி கட்டிட்டு இருக்கோம், நீ என்னடான்னா, இங்கே இதுங்க கூட சந்தோசமா ஊர் சுத்திட்டு இருக்கே? வயித்தெரிச்சலா இருக்குடா எனக்கு?” என்று சொன்னது தான் தாமதம், ரம்யா கிரியுடன் பேச ஆரம்பித்தாள்.

“பெத்த புள்ள சந்தோசமா இருக்குறத பார்த்து, வயித்தெரிச்சலா இருக்குனு சொல்ற பெத்தவங்கள இப்போ தான் பாக்குறேன் கிரி!! நீங்க ஒண்ணும் ஊரான் வீட்டு பொண்ண கூட்டிட்டு சுத்தலையே? என்னை திட்றதா நினைச்சு, உங்கள அசிங்கப்படுத்தி பேசுறாங்க, “என் பொண்டாட்டி புள்ள கூட தான் ஊர் சுத்துனுனேன்”னு, பொறுமையா, அவங்களுக்கு புரியுற மாதிரி, தெளிவா எடுத்து சொல்லிட்டு வாங்க, நான் உள்ளே போறேன்.” சொல்லி, குழந்தையுடன் தன்னறைக்கு சென்று விட்டாள்.

“பாத்தியாடா!! எவ்ளோ திமிரு அவளுக்கு, வந்தவங்கள “வா”னு சொல்ல வாய் வருதா பாரு? மாமனார் மாமியார் வந்துருக்கோமேனு மரியாதை குடுக்குராளா இவ? எல்லாம் நீயா போய் கூட்டிட்டு வந்தே இல்ல? அதான் இப்படி ஆட்றா?”

“போதும்மா!!! இதோட நிறுத்தப் பாரு… சாப்பாடு ஆச்சா? இல்ல ரெடி பண்ணவா? சின்னா எங்கே? என்ன விஷயம் இந்த நேரத்தில இங்கே வந்துருகீங்கப்பா?”

“ஏண்டா எதுக்கு வந்தீங்கன்னு கூட கேளு? நாங்க தான் உனக்கு வேண்டாதவங்களா ஆயிட்டோமே?” மீனாட்சி அம்மாள் எகிற

“கொஞ்சம் சும்மா இரும்மா… நீங்க சொல்லுங்கப்பா”

“அது ஒண்ணுமில்ல பெரிய தம்பி, அன்னைக்கு வீட்டுல நடந்த பஞ்சாயத்த பத்தி தான் பலர் பல விதமா பேசிட்டாங்க… ஊர் பஞ்சாயத்த மதிக்காம, ஊருக்கு கட்டுப்படாம, பஞ்சாயத்து தீர்ப்ப எதிர்த்து, நீ அந்த பத்திரத்தை எரிச்சதுன்னு, ஊர் சனங்க அரசல்புரசலா சொல்லபோக, அதுக்கு ஒரு பஞ்சாயத்து வச்சு, ஒரு வருஷம் எங்க எல்லாரையும் அந்த ஊர விட்டு ஒதுக்கி வச்சுட்டாங்கப்பா” சற்றே சங்கடத்துடன் சொல்ல

“என்னப்பா சொல்றீங்க? யார் செஞ்சது இந்த வேலைய? ஒரு பெரிய மனுஷனுக்கு குடுக்குற மரியாதை இதுதானா?” கோபமும், திகைப்பும் ஒருங்கே சேர கேட்டு வைத்தான்.

“கிராமத்துல ஒரு வீட்டுல தும்மினா கூட வெளியே தெரிஞ்சுரும் பெரிய தம்பி. அங்கே பெரிய மனுஷன், சின்ன மனுசன் பாகுபாடு எல்லாம் இல்ல. நம்மோட தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பு குடுக்குறத விட, ஊர் பேசின பேச்சுக்கு தான் அதிக மதிப்பு குடுப்பாங்க… அப்படி இருக்குறப்போ நீ செஞ்சது லேசு பட்ட காரியமா என்ன?”

“சரிப்பா நான்தான் சொன்னேனே… வந்து மன்னிப்பு கேக்குறேன்னு, அத அங்கே சொல்லி என்னை வர வச்சுருக்கலாமே, ஏன் நீங்க இப்படி ஊரவிட்டு ஒரு வருஷம் ஒதுங்கணும்.”

“அப்போ மட்டும் என்ன அமைதியாவா இருக்க போறாங்க? ஊர் நடைமுறைய பெரிய மனுஷன் நானே மீறினா, அப்பறம் அங்கே எனக்கு என்ன மதிப்பு இருக்கு சொல்லு? நாளைக்கு மத்தவங்க பாதை தவறி போக நம்ம குடும்பமே வழிகாட்டுன மாதிரி போயிரும்… அப்படி செய்ய கூடாது பெரிய தம்பி, அவசரப்பட்டு ஒருத்தர பத்தி தப்பா பேசி, தப்பான முடிவெடுத்தா, என்ன பாதிப்பு எல்லாம் வரும்னு, உன்னோட இந்த விவகாரம் மூலாம ஊருக்கும் தெரியட்டும், நாளபின்னே நீயும் ஊருக்கு வரும் போது, உன்னை எல்லாரும் மாரியாதையா பாக்கணும் பெரிய தம்பி, அதுக்கு தான் இந்த ஒரு வருச வன வாசம்”

“அப்போ தம்பி எங்கேப்பா?”

“அவனும், செந்தாமரையும் கொஞ்சம் சாமான் வாங்க நம்ம கார்ல தான் போயிருக்காங்க., அப்படியே சாப்பாடும் வாங்கிட்டு வந்துருவாங்க, நீ போய் தூங்கு, மிச்சத்த காலையில பேசிக்கலாம்”

“அப்பா வந்து கதை சொல்லுப்பா” என்று அவர்களின் பேச்சிற்க்கிடையில் வந்தாள் இந்திராக்ஷி.

“இங்கே வாடா பேபிம்மா… இவங்க யாருன்னு தெரியுமா? தத்தா, பாட்டிடா வாங்கனு கூப்பிடு” என அறிமுகப்படுத்த, பேத்தியை பார்த்த அந்த நொடியிலேயே சுப்பையாவிற்கு ஆசை வந்திருந்தது, இப்பொழுது அதன் வெளிப்பாடாக அவளை நோக்கி “வாடா ராசாத்தி” என கை விரிக்க

அவள் செல்லாமல் கிரியிடம் “தாத்தா பாட்டி அங்கே பாட்டி வீட்டுல தானே இருக்காங்க இவங்க யாரு?”

“அங்கே இருக்குறவங்க அம்மா தாத்தா, பாட்டி… இவங்க அப்பா தத்தா பாட்டி”

“அப்போ இவங்க தான் உன் அம்மாவாப்பா? எதுக்கு கத்துறாங்க? பேட் மம்மியா இவங்க?”

“அச்சோ!!! இப்படியெல்லாம் பேசக்கூடாது… எல்லோரும் குட் மம்மி தான், இப்போ தாத்தா கூப்பிடறாங்க பாரு நீ போ”

“இந்தும்மா தூங்க வா… நாளைக்கு ஸ்கூல் போகணும்” அறை வாசலில் நின்று ரம்யா அழைக்க,

“இதப்பாரு பெரிய தம்பி… நான் இங்கே இருக்குற வரைக்கும், இவங்க ரெண்டு பேரையும், அவங்க அம்மா வீட்டுக்கு போய் இருக்க சொல்லு, என்னால இவ கூட ஒண்ணா, ஒரே வீட்டுல இருக்க முடியாது” இந்த பேச்சு ரம்யாவிற்கு கேட்டு விட,கோபத்துடன் அங்கே வந்தவள்

“யாரையும் இங்கே இருக்க சொல்லி கட்டாயப்படுத்தல, அதே மாதிரி நாங்க இல்லாத இந்த வீட்டுல, வேற யாரும் இருக்க வேண்டிய அவசியமும் இல்லனு சொல்லுங்க கிரி”

“ரம்யா… ஏன் இப்படி பேசுறே”

“வேற எப்படி பேச சொல்றீங்க?, இவங்க இஷ்டத்துக்கு பேசும் போது, நான் பேசக்கூடாதா? இவங்க முகத்தை பாக்க கூட பிடிக்கல எனக்கு, வயசுக்கு மரியாதை குடுத்து பொறுமையா இருக்கேன். அதையும் கெடுத்துக்க வேணாம்னு சொல்லி வைங்க உங்க அம்மாகிட்ட… இவங்க கிட்ட பேச்சு வாங்கி கட்டணும்னு எனக்கு ஒண்ணும் வேண்டுதல் கிடையாது, பதிலுக்கு பதில் என்னை பேச வச்சா கெட்ட பேர் எனக்கு மட்டும் இல்ல, கேள்வி கேக்குற அவங்களுக்கும் தான். பேசாம இருந்து நான் பட்ட வேதனை எல்லாத்தையும் மறக்க நினைக்கிறேன், திரும்பவும் அத ஞாபகப்படுத்துற மாதிரி பேசினா கேட்டுட்டு சும்மா இருக்க மாட்டேன்… என் குடும்பத்தை எங்கேயும் அனுப்ப முடியாதுன்னு வாய் தொறந்து சொல்ல வேண்டியது தானே? அம்மாவை பார்த்ததும் வாயடிச்சு போய் நின்னாச்சு…”

“நானும், என் பொண்ணும் இங்கே தான் இருப்போம், இவங்க வழிக்கு நான் போக மாட்டேன், அதே மாதிரி அவங்களும், எங்க வழிக்கு வராம ஓரமா ஒதுங்கி இருக்க சொல்லுங்க… இது என் வீடு, நான் இங்கே தான் இருப்பேன்” ஏதோ ஒரு வேகம் ரம்யாவை உந்தித்தள்ள, அவள் உரிமையை அங்கே நிலைநாட்டி விட்டாள்.

“இந்த பேச்சை எல்லாம் இவ எங்கே வச்சுருந்தா இவ்ளோ நாளா?” என்றே அனைவரும் ஒரு சேர நினைத்தனர்

சுப்பையா ஒரு படி மேல போய் “இப்போதான் என் மருமக பேசி நான் கேக்குறேன்” என்று மனதிற்குள் சிலாகித்து விட்டார்.

“அநியாயத்துக்கு பேசுறாடா இவ? அம்புட்டும் கொழுப்பு… ஏகத்துக்கும் ஏறிப்போய் கிடக்கு… எவ்ளோ தெனாவெட்டா அவளோட வீடுன்னு சொல்றா? நாங்க சொன்ன பொண்ண இந்நேரம் கட்டியிருந்தா, எங்க பேச்சுக்கு மறுபேச்சு இருந்திருக்குமா? எங்களுக்கும் மரியாதை கிடைச்சிருக்கும், கேட்டியாடா என் பேச்ச?” என்று கிரியை பார்த்து கேட்க, இந்த தகவல் ரம்யாவிற்கு புதிது

“ஒஹோ… ரெண்டாம் கல்யாணம் வரைக்கும் போயாச்சா?” கிரியை முறைக்க ஆரம்பிக்க

“இல்ல ரம்யா? அந்த பேச்சு பிடிக்காம தான் கிளம்பி வந்துட்டேன், நான் ஒத்துக்கலடி, என்னை நம்பு…” என பாவமாய் பார்த்து வைக்க

ரம்யாவின் மனம் சமாதானம் அடையவில்லை, அப்பாவை அழைக்க வந்த பெண்ணையும் தன்னுடன் இழுத்துக் கொண்டு, தன்னறைக்கு சென்று கதவை அடைத்து விட்டாள்.

இங்கே கிரியும் தலையில் கை வைத்து உட்கர்ந்து விட, சுப்பையாவிற்கு மகனின் நிலையை பார்த்து பரிதாப்படத் தான் முடிந்தது.

“ஊர் வாய கூட மூடிரலாம்… உங்கம்மா வாய் இருக்கே அது என்ன செஞ்சாலும் மூட முடியாதுடா பெரியதம்பி, ஊர்ல சொல்லடிபட்டும் புத்தி வரல பாரு,… டிவில காட்டுற சட்டசபை பேச்சு கூட இவ்ளோ காட்டாமா இருக்காது, இன்னைக்கு மருமக பொண்ணு பேசின பேச்சுல அவ்ளோ காட்டம். இந்த பேச்ச ஆரம்பத்துலயே அவ பேசியிருந்தா, நீயும் இந்நேரம் நிம்மதியா இருந்திருப்பேடா மகனே!!” மனைவியின் மேல் கோபத்துடன் ஆரம்பித்து, மகனின் மேல் ஆதங்கத்துடன் முடித்தார்.

உள்ளறையில் குழந்தைக்கு ஒரு அடியை கொடுத்து அவளை தூங்க வைக்க ரம்யா முயல, அது முடியாமல் அவள் அழுகையை கேட்டு, உள்ளே சென்றவனின் நெஞ்சில், சரமாரியாக தாக்குதல் நடத்தி விட்டாள் அவள் அன்பு மகள்.

“பேட் டாடி நீ… எனக்கு கதை சொல்ல நீ வரலே, அம்மா சொல்லமாட்டேன்னு என்னை அடிச்சுட்டா, என்கூட பேசாதே”

“அப்பா, தத்தா-பாட்டி கூட பேசிட்டு இருந்தேன்டா”

“எனக்கு அவங்க வேணாம்… இங்கே இருந்து போக சொல்லுப்பா…”

“அப்படி சொல்லகூடாது… நீ இப்போ நல்லா பிள்ளையா தூங்குவியாம், அப்பா நாளைக்கு நீ கேட்ட கிரீம் பிஸ்கி வாங்கி தர்றேன்”

“எனக்கு பிஸ்கி வேணாம்”

“அட என் குட்டி பொண்ணு குட் கேர்ள் ஆகிட்டாளா?”

“எனக்கு பெரிய டைரி மில்க் வேணும், அது வாங்கி குடு… இல்லனா திரும்பவும் அழுவேன்”

கிரிதரனுக்கு அந்த சூழ்நிலையின் இறுக்கம் மறைந்து, மகளின் பேச்சில் சிரித்து விட்டான்.

மழலைச் செல்வங்கள் அருகில் இருக்கும் வரை கனமான சூழ்நிலைகளும், சருகாய் சலசலத்து விடுகிறது.

“பர்த்டே பேபி அழுதா அப்பறம் ஒண்ணுமே கிடைக்காதாம், இப்போ நீ அழபோறியா? தூங்கப்போறியா?”

“எனக்கு ஸ்டார்ஸ் (நட்சத்திரம்) காட்றியாப்பா, அத பார்த்துட்டே நான் தூங்குறேன்”

“சரி வா போகலாம், நீயும் உங்கம்மாவும் சேர்ந்து, எவ்வளவு அடிச்சாலும் தாங்குறேன், நான் ரொம்ப நல்லவன்னு உங்கம்மாட்ட கொஞ்சம் சொல்லிவைடா செல்லம்” மனைவியை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே, மகளை அழைத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு சென்று விட்டான்.

மனைவியின் பக்கம் அவன் திரும்பவில்லை… அவனுக்கு நன்றாக தெரியும் இப்பொழுது அவள் கொதிநிலையில் இருப்பாள் என்று, அதனால் பிள்ளை தூங்கிய பிறகு அவளை சமாதானப் படுத்த முடிவெடுத்தான்.

ஆனால் ரம்யாவோ மனதிற்குள் பொருமிக்கொண்டிருந்தாள்… கணவனுக்கு இரண்டாம் திருமணம் பற்றிய செய்தியை சொன்ன மாமியாரின் பேச்சே அவள் காதுகளில் ரீங்காரமிட்டு, மனம் கணவனை வசைபாடிக் கொண்டிருந்தது.

“நான் இங்கே வராம இருந்திருந்தா, இவன் இன்னொரு கல்யாணம் பண்ணிருப்பானோ? செய்றவன் தான்… பேசிபேசியே அவனோட நியாயத்தை மட்டுமே சொல்லி, என்னை இழுத்துட்டு வந்தவன் தானே, அதே பேச்சு பேசி இன்னொரு கல்யாணம் செய்ய கூட தயங்க மாட்டான், மண்டைக்கனம் பிடிச்சவன்” அவன் மேல் சந்தேகப் போர்வையை போர்த்தி விட்டு, இல்லாத பழிகளை எல்லாம் கணவனின் மேல் தூக்கி வைத்தவள், அந்த நினைவுடனேயே கண்மூடினாள்.

சிறிது நேரத்தில் மகளை தூங்க வைத்து விட்டு, பெற்றோரிடம் வர, அந்த சமயத்தில் சின்னத்தம்பியும் தன் குடும்பத்துடன் வந்து சேர, எல்லோரும் காலையில் பேசிக்கொள்ளலாம் என்று உறங்க சென்று விட்டனர்.

மனைவியை பார்க்க அவள் அறைக்கு செல்ல, அங்கே அவள் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை கண்டு அவன் அறைக்கு சென்று விட்டான்.

மறுநாள் ரம்யா மௌனவிரத்தை கிரிதரனிடம் கடைபிடிக்க, அவனுக்கு இவளை சமாதனம் செய்ய நேரம் அமையவில்லை… பக்கத்தில் இருந்த வீட்டில், வந்தவர்கள் தங்கியிருக்க, இரு வீட்டிற்க்கும் இடையில் ஒரு கதவே பாலமாக இருந்ததால், அவளிடம் அழுத்திக் கேட்கவும் முடியவில்லை. இங்கே இவளின் கோபம், கிரிதரனுக்கு முள் மேல் நிற்கும் நிலை தான்.

அன்றைய தினம் ரம்யா அவளுக்கான சமையலை விரைவாகவே முடித்துக்கொண்டு, வேலைக்கு கிளம்பி விட்டாள்.

குழந்தையையும் இவள் அழைத்து கொண்டு கிளம்ப, இவன் தான் பிள்ளையை இழுத்து வைத்துக் கொண்டான்.

மாலையில் ரம்யா வேலை முடிந்து வரும் போது, சத்தம் காதை பிளக்க, இரண்டு வாண்டுகள் கொட்டமடித்துக் கொண்டிருக்கும் காட்சி தான் அவள் பார்வையில் விழுந்தது.

அவளது அருமை மகளும், சின்னத்தம்பியின் மகனும் அங்கே டோரா புஜ்ஜிக்கு பின் பாட்டு பாடிகொண்டிருந்தனர்.

இன்னும் புது போர்சனில் டிவி வரவில்லை. அதனால் சீரியல் விட்டு போன எரிச்சலில், மீனாட்சி அம்மாள் அமர்ந்திருக்க, இவர்கள் சோபாவில் ஆடிக் கொண்டிருந்தனர்.

சற்றே சத்தம் போட்டால் அடங்கும் அவர்களின் நண்டுப்பயலும் (சசிதரன்-சின்னத்தம்பியின் மகன்), தனது புது அக்காவின் நட்பும், துணையும் சேர, அவனும் அடங்க மறுத்து, ஆடிக் கொண்டிருந்தான்.

இந்திராக்ஷிக்கோ சொல்லவும் வேண்டாம், ஏற்கனவே அட்டகாசத்தை நாள் முழுவதும் தன் இஷ்டம் போல் அரங்கேற்றிக் கொண்டிருப்பவளுக்கு, புதிதாய் ஒரு துணை, அதோடு அவளுக்கு “அக்கா” என்ற பதவி உயர்வு கிடைத்த சந்தோசம் எல்லாம் சேர்ந்து, யார் என்ன சொன்னாலும் கேட்காமல், தன் வேலை தொலைக்காட்சிக்கு பின்பாட்டு பாடுவதே என்ற ரீதியில் செயல் பட்டுக் கொண்டிருந்தாள்.

மீனாட்சி அம்மாவிற்கோ பற்றிக் கொண்டு வந்தது… “நேத்து பொறந்த கழுத!! கொஞ்சமாவது பெரியவங்க பேச்ச கேக்குதா பாரு? குழந்தையா இது? குட்டி சாத்தான்” மனதிற்குள் திட்டிக் கொண்டே, மீண்டும் அவளிடம் டிவி தொலையியக்கியை(டிவி ரிமோட்) கேட்க, அவள் தலையை அசைத்தே தன் பிடிவாத மறுப்பினை தெரிவிக்க, அதுவும் சேர்த்து கோபத்தை உண்டாக்கியது.

அந்த சமயத்தில் ரம்யாவும் வர, “புள்ளய பெரியவங்க சொல் பேச்சு கேக்குற மாதிரி வளக்க தெரியல, என் வீடுன்னு மட்டும் சட்டம் பேச தெரியுது” என்று ஜாடை பேச, ரம்யா பதில் சொல்லாமல் உள்ளறைக்கு செல்ல அப்பொழுதும் விடாமல்

“பதில் சொல்ல கூட இவளுக்கு வலிக்குது, என்ன பொண்ணோ? இவளை தலையில தூக்கி வச்சுகிட்டு ஆடறான் என் பையன், என்ன காதல் வந்துச்சோ? என்ன கருமாந்திரம் ஆட்டி வச்சுச்சோ? எல்லோரும் சேர்ந்து பெரியவங்கள மதிக்காம இருக்க மட்டும் கத்துக்குதுங்க” குரலை உயர்த்த

“பாட்டி கத்தாதே!! எங்களுக்கு டிஸ்டர்ப் ஆகுது…” பேத்தி சொல்ல

அவள் தம்பியும் “தித்தர்ப் ஆகுது” ஜால்ரா அடித்தான்

“போதும்டா… நீங்க பார்த்து கும்மாளம் போட்டது, கொஞ்ச நேரம் நான் பாக்குறேன் அமைதியா உக்காருங்க”

“மாட்டோம்… நீ அந்த வீட்டுல போய் உக்காரு பாட்டி” பேத்தி சொல்ல

“எவ்ளோ தைரியம்? என்னை அங்கே போகச் சொல்லுவே, நான் போக மாட்டேன்” சின்ன சிட்டுகளுடன் போட்டி போட்டு கொண்டிருந்தார்.

இதை கேட்டபடியே வந்த செந்தாமரையும் (சின்னத்தம்பியின் மனைவி)

“அத்தை நாளைக்கு டிவி பொட்டி வந்துரும்னு சொல்லிருக்காரு உங்க புள்ள, இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க, சின்ன குழந்தைங்கள திட்டாதீங்க”

சித்தியின் பதிலில் மகிழ்ச்சி அடைந்த சின்ன பெண்ணும்

“ஆமா சித்தி, நாங்கெல்லாம் கிட்ஸ், எங்கள திட்ட கூடாதுன்னு ஸ்கூல்ல சொல்வாங்க”

அந்த நேரம் ரம்யாவும் வெளியே வந்து தாமரையை வரவேற்று சௌகரியத்தை விசாரிக்க,

“இவளுக்கு என்கிட்டே பேச மட்டும் தான் வாய் வராது, மத்த எல்லார்கிட்டயும் இளிச்சுட்டு பேசுறா?” என மனதில் குமைந்து கொண்டே ரம்யாவை, மீனாட்சி அம்மாள் வெளிப்படையாய் முறைக்க

“எங்க அம்மாவ பார்த்து முறைக்காதே! நீ அந்த வீட்டுக்கு போ” பேத்தி கடுப்படிக்க

“இது என் பிள்ள வீடுடி, நீ போ உங்க பாட்டி வீட்டுக்கு” வம்பு வளர்த்தார்

“இல்ல இது என் அப்பா வீடு, எங்க வீடு, நீதான் போகணும்” என்று சொல்லியவாறே, பாட்டியின் கைகளை பிடித்து இழுத்துக்கொண்டே அடுத்த வீட்டின் கதவருகில் கொண்டு போய் விட, அடங்காத கோபம் வந்து மீனாட்சி அம்மாவும் அவளை அடிக்க போக, சுப்பையா மனைவியின் கையை பிடித்து தடுத்திருந்தார்.

பூவனம்-22

பேத்தியின் கூச்சலை கேட்டு, அடுத்த வீட்டின் உள்ளே இருந்து சுப்பையா எட்டி பார்க்கவும், மீனாட்சி அம்மாள் பேத்தியை அடிக்க கை நீட்டவும், சட்டென்று தடுத்திருந்தார்.

உள்ளே சமையலறையில் மருமகள்கள் இருவரும் பேசிகொண்டிருக்க, இங்கே நடந்தது அவர்களுக்கு தெரியவில்லை. டிவியும் கத்திக் கொண்டிருந்தது.

“அறிவிருக்கா உனக்கு? கொஞ்சம் நான் பாக்காம விட்டுருந்தா இந்த சின்ன புள்ளைய அடிச்சுருப்பே, அப்படி என்னடி விரோதம் அவங்க மேல? நீயும் உன்னை மாத்திப்பேன்னு பார்த்தா, அது நடக்காது போலிருக்கு, உன்னை எல்லாம் இப்படி சுகமா வச்சுருக்க கூடாது, எங்கேயாவது பொட்டல் காட்டுல தான் கூட்டிட்டி போய் தங்க வச்சுருக்கணும்” என அடிகுரலில் சீறியவாறே,

பேத்தியை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றவர் “இப்படி எல்லாம் செய்யகூடாது ராசாத்தி, பாட்டி பெரியவங்க, அவங்க சொல்ற பேச்சு கேக்கனும் கண்ணு”

“இது அவங்க வீடுன்னு சொல்றாங்க தாத்தா… எனக்கு இந்த பாட்டி பிடிக்கல” எந்த குழந்தைக்கு தான், தன் வீட்டை பங்கு போடப் பிடிக்கும், அந்த உணர்வே பிள்ளையின் சொல்லாக வெளி வந்தது

“அப்படி சொல்ல கூடாது… இது நம்ம வீடு ராசாத்தி… இவங்க உன்னோட மீனாட்சி பாட்டி, இங்கே கொஞ்ச நாள் உங்க கூட சந்தோசமா இருக்க வந்துருக்காங்க… நீ அவங்க கூட சிரிச்சு பேசி பேசினா தானே அவங்களும் உன் கூட சிரிச்சு பேசுவாங்க”

“அப்போ அவங்க பிஷ் பாட்டியா தாத்தா?” சின்னபிள்ளை தன் அறிவில், பாட்டியை அடையாளப்படுத்திக் கொள்ள, புரியாமல் முழித்து வைத்த சுப்பையாவிடம் “மீனுக்கு பிஷ் சொல்லனும் தாத்தா, நான் “பிஷ் பாட்டி”ன்னு கூப்பிடுவேன்”

“பிஷ் பாட்டி நீங்க எங்க கூட சிரிச்சு பேச வந்துருக்கீங்களா? இனிமே முறைக்காம இருக்கணும் சரியா? அப்பதான் நான் சிரிச்சு பேசுவேன் ஒகே? நீயும் நானும் பிரண்ட்ஸ் சரியா?” குழந்தையின் பேச்சு பாட்டிக்கு சீண்டலாய் தோன்ற தன்னறைக்குச் சென்று விட்டார்.

பேத்தியின் பேச்சில் தன்னை மறந்து சிரிக்க ஆரம்பித்த மாமனாரிடம் விஷயத்தை கேட்டறிந்து செந்தாமரையும், ரம்யாவும் சேர்ந்து சிரித்து வைத்தனர்.

“நீ எங்க ஆத்தா தான் ராசாத்தி, அதுல எந்த மாற்றமும் இல்ல”

“தாத்தா என் பேரு இந்திராக்ஷி… ராசாத்தி இல்ல”

“இது எங்க ஆத்தா பேரு ராசாத்தி, எப்படி நான் கூப்பிடுவேன்?, உங்க அப்பனும் சித்தப்பனும் சேர்ந்து, ரெண்டு பாட்டிகளோட பேரையும் சேர்த்து வைச்சு, என் பேத்திய வாய் நிறைய பேர் சொல்லி கூப்பிட விடாம பண்ணிட்டாங்க” என்று கூறியபடியே ரம்யாவை பார்க்க

“இது எப்ப நடந்தது மாமா?” முதன் முறையாய் ரம்யா தன் மாமனாரை பார்த்து பேசிட

“எல்லாம் உன்னோட பிரசவ சமயத்துல தான் மருமகளே!! ஆஸ்பத்திரி சீட்டுல பேர் எழுத கேட்டாங்க, அப்போ உன்னோட மாமியார் தான் இந்த பேர் வைக்க சொன்னது, “இந்திராணி”ங்கற பேர்ல இருந்து பாதியும், “மீனாட்சி”யில இருந்து மீதியும் எடுத்து, பசங்க தான் ரெண்டு பாட்டிகளோட பேரும் இருக்கட்டும்னு சேர்த்து வச்சாங்க, பேர் மட்டுமில்ல, பாப்பா முக ஜாடை கூட எங்க அம்மா தான்.” உணர்ச்சி மேலிட, அன்றைய நாளின் தாக்கத்தில் தன் மனதில் உள்ளதை சொல்லி வைத்தார்.

“பொறந்த குழந்தைக்கு பேர் முதற்கொண்டு தான் தான் வைக்கணும், வேற யாருக்கும் அந்த உரிமைய கூட விட்டு கொடுக்க மனசு வரல அவளுக்கு… என்னென்னமோ நடந்து போச்சு… பிடிக்காத காரியங்கள் எல்லாம் செய்ய வேண்டியதாயிருச்சு… அவளோட பேச்சு, எல்லா இடத்துலயும் நியாயம் பேசுற என்னையே தப்பு பண்ண வச்சுருச்சு. எல்லாம் நம்ம கெட்ட நேரம்னு தான் சொல்லணும் வேற என்ன சொல்ல? எதையும் மனசுல வச்சுக்காதேனு சொல்ல கூட எனக்கு தகுதி இல்ல” என ஆற்றாமையுடன் பெருமூச்சு விட

“இப்போ அதை பத்தி நினைக்காதீங்க மாமா…. பேத்திகிட்ட அத்தை நாளைக்கே ராசியாகிருவாங்க… ஏன்னா நம்ம பொண்ணு தான், நம்ம மாமியாருக்கே மாமியாராச்சே!!! சரிதானேக்கா நான் சொல்றது…” என செந்தாமரை சூழ்நிலையை சகஜமாக்கும் பொருட்டு, ரம்யாவிடம் கூற, சிரித்துக்கொண்டே இரவு உணவை தாயரிக்க சென்று விட்டனர் இருவரும்.

இரவு உணவின் போதும் மாமியாரின் ஜாடை பேச்சுக்கள் ரம்யாவை தொடர்ந்த வண்ணமே இருந்தன, எப்பொழுதும் போல் மகன்களுக்கு இடையில் பரிமாறவென்று அமர்ந்து கொண்டு, குற்றம் குறை சொல்லியே உணவு வகைகளை தட்டி கழிக்க தொடங்கினார். இடையிடையே பேத்தியின் “பிஷ்பாட்டி” என்ற அழைப்பு வேறு அவருக்கு கடுப்பை கிளப்பியது.

அந்த நேரத்தில் யாருடைய மனமும் புண்படும் படி பேச ரம்யாவிற்கு பிடிக்கவில்லை. அனைவரும் உணவு உண்ணும் சமயத்தில், எதிர்த்து பேசிட அவளது மனநிலை இடம் தரவில்லை. மேலும் மேலும் எதிர்த்து பேசி, பகைமையை வளர்த்துகொள்வது அவளது இயல்பல்லவே!! தன் இயல்பு நிலையில் இருந்து மாறமால் இருக்க மௌனம் சாதித்தவள், தான் சாப்பிடுவதையும் தவிர்த்து தன்னறைக்கு சென்று விட்டாள்.

மாமியாரின் இந்த செயல் சின்ன மருமகளுக்கு பிடிக்கவில்லை

“அத்தை குறை சொல்லியே ஆகணும்னு கங்கணம் கட்டிட்டு பேசாதீங்க… நாங்க செய்றது பிடிக்கலன்னா நீங்களே சமையலை கவனிச்சுக்கோங்க, நாங்க தூரமா இருக்குறோம், இன்னும் எவ்வளவு தான் பேசி அக்காவ சங்கடப்படுத்துவீங்க, அக்காவுக்கு தலையழுத்தா என்ன? நீங்க அவ்வளவு பண்ணியும் உங்களுக்கு சமையல் செஞ்சு குடுக்கனும்னு, இப்போ உங்க புண்ணியத்துல சாப்பிடாம உள்ளே போய்ட்டாங்க” என தன் பிடித்தமின்மையாய் காட்டி விட்டாள் செந்தாமரை.

“நான் என்ன பண்ணினேன்னு என்னை சொல்ல வர்ற? இதோ இந்த குட்டியும் தான் என்னை இழுத்துட்டு போறா? அதை எல்லாமா சொல்லிட்டு இருக்கேன்?” என மீனாட்சி அம்மாவும், பேத்தியின் நடவடிக்கையை பற்றி ஜாடையாக, கிரியிடம் முறையிட, உள்ளுக்குள்ளே கனன்று கொண்டிருந்தவன், கொந்தளித்து விட்டான் தன் தாயிடம்.

“என்ன சொல்லலம்மா நீ? சின்ன குழந்தை அவ மேல ஏன் இவ்வளவு வெறுப்பு? அவளுக்கு என்ன தெரியும்? உங்க பேத்தி பத்தின குறை சொல்றத விட்டுட்டு அவள குழந்தையா அரவணைச்சு பாருங்க…”

“எனக்கே புத்தி சொல்ல வந்துட்டியா பெரியதம்பி? என் பிள்ளையாடா நீ?”

“இத்தன வருஷம் உன்னோட பையனா, உன் பேச்சு கேட்டு இருந்துட்டேன், இனிமே என் பிள்ளைக்கு அப்பாவா, பொண்டாட்டிக்கு பக்கபலமா தான் இருக்கப்போறேன்,

“என்னை காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டத தவிர என் பொண்டாட்டி வேற என்ன தப்பும்மா பண்ணினா? நீங்க செஞ்ச வேலைக்கு, கிட்டத்தட்ட மறு ஜென்மம் எடுத்து வந்துருக்காம்மா…

“கல்யாணம் ஆன நாள்ல இருந்து அவ யார் கூடயாவது ஒரு சின்ன சத்தம் போட்டோ, சண்டை போட்டோ பாத்துருக்கியாம்மா?”

“கல்யாணம் ஆனதும் எந்த பொண்ணும் தன்னோட கணவனை, அவங்க குடும்பத்துல இருந்து பிரிக்க நினைக்க மாட்டாங்க… மாமியார் மாமனாரோட நடவடிக்கை தான் அவங்கள அந்த முடிவுக்கு போக வைக்குது.

மருமகள மகளா பார்த்தீங்கண்ணா இந்த பிரச்சனை உங்களுக்கு வராது… ஊர்க்காரங்க, உறவுக்காரங்க பேச்ச கேட்டு, நீங்க அவளுக்கு செய்யாத கெடுதல் இல்ல…

வீட்டுக்கு வர்ற மருமக கைல தான் அந்த வீட்டோட சந்தோசம் அடங்கி இருக்குனு சொல்வாங்க… ஆனா இப்போ அவளுக்கு இந்த வீட்டுல சந்தோசம் கிடைக்குமானு யோசிக்க வைக்கிறீங்க…

அவ வீட்டுல அவள எப்படி தாங்குனாங்க தெரியுமா? ஆனா நான் அவள நரகத்துல கொண்டு வந்து தள்ளிட்டேன்”

“நீ நல்ல மனைவியா, அம்மாவா இருந்தே… ஏன் நல்ல மாமியாரா இருக்க முடியலே? இதே நிலைமை உனக்கு பொறந்த பொண்ணுக்கு வந்திருந்தா நீ என்ன செஞ்சுருப்பே…

“இதுக்கும் மேல உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்குறதுன்னு எனக்கு தெரியலம்மா? முடிஞ்ச வரைக்கும் நீ அமைதியா இருந்து, எங்களை நிம்மதியா இருக்க விடு”

“ரெண்டு பேரை வீட்டு வேலைக்கு சொல்லியாச்சும்மா… நாளையிலிருந்து வந்துருவாங்க, உனக்கு எப்படி வேணுமோ அப்படி சொல்லி செஞ்சுக்கோ… வீணா நீயும் பேசி, மத்தவங்களையும் சங்கடப்பட்டுத்தாதே!! படாதபாடு பட்டு இப்போதான் கொஞ்சம் நிம்மதியா மூச்சு விட்டுட்டு இருக்கேன், அதுக்கு திரும்பவும் நீ வேட்டு வச்சா உன்னை எதுவும் சொல்ல மாட்டேன், என் குடும்பத்தோட தனிக்குடித்தனம் போயிருவேன், இது தான் என்னோட முடிவு” என கிரியும் எச்சரித்து ஒதுங்கி விட, மீனாட்சி அம்மாளின் பேச்சை கேட்ட ஆள் இல்லை.

முந்தியா நாள் இரவிலிருந்து மனைவியின் பாராமுகத்தோடு, இரவு உணவையும் தவிர்த்து விட்டு அவள் சென்றது என கிரியின் மனம் தவிக்க, அவளை சமாதனபடுத்தும் முயற்சியாக உணவோடு அவள் அறைக்கு சென்றான்.

“ஏன் ரம்யா சாப்பிடாம வந்துட்ட? சாப்பிடு…”

“பசிக்கல”

“பசிக்கலையா இல்ல? அங்கே இருக்க பிடிக்கலையா?”

“என்னை கொஞ்சம் தனியா இருக்க விடுங்க”

“எதையும் மனசுல வச்சு அடைச்சுக்காதே… என்ன இருந்தாலும் வெளியே கொட்டிடு, இது உன் வீடு ரமி, யார் என்ன சொன்னாலும், நீ அங்கே நிக்கனும்னு உனக்கு தோணலையா?

“எப்படி இருக்க சொல்றீங்க? அவங்க எந்த நேரமும் என்னை சொல்லறதும் இல்லாம, இப்போ பாப்பவ பேசும் போது என்னால சும்மா இருக்க முடியாது, எல்லோர் முன்னாடியும் எதாவது எதிர்த்து பேசி, சின்ன குழந்தைங்க மனசுல அது ஆழமா பதிஞ்சு, நாளைக்கு அதே பேச்ச அவங்களும் பேசிடுவாங்களோனு பயமா இருக்கு கிரி? என்னை பார்த்து அவங்க கெட்டு போயிரக்கூடாது… எந்த நேரமும் எதிர்த்து பேசிட்டு இருக்குறது என்னோட சுபாவம் கிடையாது”

“அப்போ இதுக்கு என்ன தான் தீர்வு? அவங்கள பேச விட்டு நீ வேடிக்கை பாக்க போறியா?”

“இந்த தர்ம சங்கடமான நிலைமை வரகூடாதுன்னு தான், நான் இங்கே வரமாட்டேன்னு சொன்னேன், அவங்களுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இருக்கக் கூடாது, முகத்தை கூட பாக்க கூடாதுன்னு நினைச்சேன், யார் என் பேச்சை கேட்டா? ரொம்ப உத்தமனா நான் சொன்னதுக்கெல்லாம் தலையாட்டி, இங்கே கூட்டிட்டு வந்து, திரும்பவும் என்னை இந்த சாக்கடையில தள்ளி விட்டுட்டு நீங்க நிம்மதியா இருந்தாச்சு கிரி? இப்போ சந்தோசம் தானே? நானும் என் பொண்ணும் உங்க வீட்டுக்கு நேர்ந்து விட்ட பலியாடா? என்ன சொன்னாலும் சூடு சொரணை இல்லாம கேட்டுகிட்டு இருக்க?” இப்பொழுது கோபம் முழுமையும் கணவனிடம் திரும்பிட,

“ஏன் ரம்யா பெரிய பேச்செல்லாம் பேசுற? அந்த அளவுக்கு போக விட்டுருவேனாடி நான்? என்மேல உனக்கு நம்பிக்கையே வராதா?”

“உங்க மேல நம்பிக்கை வச்சு நான் பைத்தியாகாரியா நின்னது தான் மிச்சம்”

“இப்போ அத பத்தி பேச வேணாம், சாப்பிட்டு முடி அப்பறம் தெம்பா பேசலாம் ரம்யா”

“வேணாம் பேச்சை மாத்தாதீங்க, உங்களை பாக்கவும் பிடிக்கல எனக்கு”

“பார்த்துகிட்டே இரு பிடிச்சு போயிரும்… வந்து என் பக்கத்துல உக்காந்து என்னை பார்த்துகிட்டே சாப்பிடு செல்லம்”

ரம்யாவிற்கு அவனை நன்றாய் கடித்துக் குதறி விடும் ஆவேசம் வர, கைக்கு சுலபமாய் சிக்கிய தலையணையை கொண்டு அவனை மொத்த ஆரம்பிக்க,

“போதும்… மெதுவாடி இவ்ளோ அடி அடிச்சா நான் தாங்குவேனா? கொஞ்சம் யோசிச்சு செய்டி எதுனாலும்… இன்னும் நிறைய பிள்ளை குட்டிங்க பெத்துக்கனும்னு லிஸ்ட் போட்டு வச்சுருக்கேன் நான்” என சீண்டலை தொடர

“உங்க அம்மா இன்னொரு பொண்ணை கை காட்டுவாங்க, அவகிட்ட போய் உங்க லிஸ்டை சொன்னா, உடனே பெத்து குடுப்பா”

“வாய இழுத்து வச்சு தைச்சுருவேண்டி, இனி ஒரு தடவை இப்படி பேசினா? நான்தான் சொல்றேனே அந்த விஷயம் பிடிக்காம தான் இங்கே வந்தேன்னு, அத காதுல கூட வாங்காம உன் இஷ்டத்துக்கு மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு போற? என்ன நினைச்சுக்கிட்டு இருக்க மனசுல?”

“உன்னை கொலை பண்ணனும்னு நினைச்சுட்டு இருக்கேன் கடுப்பேத்தாத கிரி!!… என்ன சொல்லி இங்கே வந்தேன்?, இப்போ என்ன நடக்குது? கொஞ்சமாவது யோசிச்சி பார்த்தியா என்னை பத்தி… உனக்கு உன்னோட சந்தோசம் தான் முக்கியம் காரியவாதி, சுயநலவாதி நீ, போயிரு என் மூஞ்சியில முளிக்காதே” கோபங்கள் வார்த்தைகளாய் வெளிவர தொடங்கின.

“வேண்டாம் ரமி!! இவ்வளவு வெறுப்பு யார்கிட்டயும் வச்சுக்காதேடி, நீ அப்படிபட்டவ இல்ல” என சொல்லியவாறே தன் தோள் வளைவில் அவளை கொண்டு வந்தவன், மார்போடு அணைத்துக் கொள்ள, முதலில் திமிறியவள், அவனின் அடக்கு முறையில், அவன் நெஞ்சோடு ஒன்றிப் போனாள்.

அணைத்தவனுக்கும், அணைப்பில் இருந்தவளுக்கும் அந்த நேரம் பொக்கிசமாய் தோன்ற, அந்த நிமிட நேரம் மௌனமாய் கரைய, இருவருக்குமே பேசும் எண்ணம் எழவில்லை. ரம்யாவின் உடல் குலுங்கும் அசைவில் அவள் அழுகையை உணர்ந்தவன்,

“சாரிடி, இப்படி உன்னை அழ வச்சு பாக்க, எனக்கு ஆசையா என்ன?, நிச்சயமா இப்படியெல்லாம் நடக்கும்னு கனவுல கூட நினைக்கலே? உன்னை பாக்கும் போதெல்லாம், உனக்கு நியாயம் செய்யலன்னு என் மனசு என்னை குத்தி காட்டுது, என்னோட சந்தோசத்துக்கு உன்னை நான் பலி குடுத்திட்டேனொன்னு நினைக்க தோணுது ரமி…”

“நீங்க ஒண்ணும் என்னை பத்தி நினைக்கவும் வேணாம், அக்கறை எடுக்கவும் வேணாம்” ரம்யா விசும்பலுடன் மீண்டும் திமிற

“இப்படியே கொஞ்ச நேரம் இரு ரமி, என்னை பேச விடு… போதும் இனிமே நடந்து முடிஞ்சத பேசி நமக்கு கஷ்டத்த நாமாளே குடுத்துக்க வேணாம்… புது வாழ்க்கைய தொடங்குவோம், உனக்கும் சரி, எனக்கும் சரி வேற யாரோட நினைப்பும் இல்லமா நம்ம குழந்தையோட நல்லதை மட்டுமே மனசுல வச்சு நடந்தத மறக்க முயற்சி செய்வோம் ரம்யா…”

“எப்படி மறக்க சொல்றே கிரி? நான் பட்ட கஷ்டம் என்ன கொஞ்சமா? மூணு வருஷம் நடைபிணமா வாழ்ந்திருக்கேன், அங்கே இருந்து என்னோட நிலைமைய தெரிஞ்சுகிட்டவனுக்கு என்னை வந்து பாக்கணும்னு தோணலையா? பொண்டாட்டி பிள்ளைய விட காசு பணம் பெருசா போயிருச்சா உனக்கு?” அவன் அணைப்பில் இருந்து விலகாமலேயே சண்டை பிடித்தாள்.

“இந்த கேள்விய இங்கே வந்த இத்தன நாள்ல கேக்கனும்னு தோணலையா ரமி? ஒரு நாளாவது என்கூட முகம் குடுத்து பேசிருக்கியாடி?” அவள் கையை எடுத்து தன் இடுப்பை சுற்றி போட்டுக் கொண்டு, தன் அணைப்பை இறுக்கி கொண்டான்.

“கேக்குற கேள்விக்கு பதில் சொல்லாம, இறுக்கிக்குற வேலையெல்லாம் வேணாம்”

“நீ அப்படியே இரு… நான் பதில் சொல்றேன்… இங்கே உன்னோட நிலைமைய நினைச்சு, வேலையில கவனத்த சிதற விட்டுட்டேன் ரமி. எனக்கு கீழே வேலை பாக்குறவங்கள கரெக்டா கைட்(guide) பண்ணல, புராஜெக்ட டீடைல்ஸ் எல்லாத்தையும் போட்டி கம்பெனிக்கு சொல்லிட்டேன்னு ஒரு புரளி கிளப்பி விட்டு, அந்த கெட்ட பேர் வேற எனக்கு. அங்கே ஆபீசில நிறைய டார்ச்சர் குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க, எங்கேயும் அசைய விடல என்னை, எந்நேரமும் அவங்க கண்காணிப்புல இருந்தேன், அவங்களோட நஷ்டத்துக்கு சமமா வேலை செஞ்சு கழிக்க சொன்னங்க, என் பேச்ச கேக்க அங்கே யாருமே இல்ல. இது எல்லாம் தான், நான் உடனே உன்னை பாக்க வர முடியாமா போயிருச்சு…”

இது எல்லாம் நிஜம்தானா என்கிற ரீதியில் ரம்யாவும் அவனை பார்த்து வைக்க,

“உன்னை மறந்துட்டு எப்படிடி நான் இருப்பேன்? கண்ணுக்குள்ள நீயும் பாப்பாவும் தான் வந்து நின்னிங்க. எந்த நேரமும் என்னை நோட்டம் விட்டுட்டு இருக்குறவங்க மத்தியில, என்னால யார்கூடயும் பொறுமையா பேச முடியல. எங்க அம்மாவோட பிடிவாதம் ஒரு பக்கம் இருந்தா, உங்க அப்பாவோட வீம்பு இன்னொரு பக்கம், நின்னு பேச வேண்டிய நீயும் என்ன நடக்குது ஏது நடக்குதுனு தெரியாத குழப்பத்துல இருந்தே, நானும் அங்கே மாட்டிக்கிட்டு எவ்ளோ தான் நான் பாக்க… வேலை பார்த்த இடத்தில எல்லாம் சரி செஞ்சு குடுத்த பிறகு தான், என்மேல எந்த தப்பும் இல்ல என்னோட கவனக்குறைவு மட்டுமே தான் காரணம்னு தெரிஞ்சு எனக்கு நஷ்டம் இல்லாம இங்கே அனுப்பி வச்சாங்க…

எல்லா கஷ்டத்தையும் அனுபவிச்சுட்டு இங்கே வந்தா… எல்லோரோட பேச்சும், உன்னோட வெறுப்பும் சேர்ந்து “போதும்டா சாமி”னு வாழ்க்கை மேல வெறுப்பு வரவச்சுருச்சு…

இந்த நிலைமை உனக்கு வந்திருந்தா நீ என்ன பண்ணிருப்பே? அவங்க அவங்க பக்கம் இருந்து பார்த்தா எல்லார் பக்கமும் நியாயம் இருக்கத்தான் செய்யுது… என்னோட நியாயம் தான் பெருசுன்னு பிடிச்சு தொங்குறத விட்டுட்டு வாழ்க்கைய வாழ்ந்து பார்த்து தான் என்னடி?”

“அப்போ உங்க அம்மா செஞ்சது நியாயம்னு சொல்ல வர்றியா?

“அவங்களுக்கும் அவங்க தப்பு என்னனு தெரிய வந்திருக்கு, அதனால தான் ஊருக்கு மத்தியில என்னை கூப்பிட்டு விட்டு மன்னிப்பு கேக்க வைக்காம, குடும்பத்தோட ஊரை விட்டு வந்துருக்காங்க… கோபப்படாம கொஞ்சம் யோசிச்சு பாரு ரம்யா உனக்கே புரியும்”

“ஆரம்பிச்சுட்டியா உன்னோட குடும்ப பாட்டு பாட? இது தான் எனக்கு பிடிக்கலன்னு சொல்றேன் கிரி… அவங்கள விட்டுக்கொடுக்காம பேசுறவனுக்கு, என்னோட வலிய தெரிஞ்சுக்க முடியல தானே?”

“திரும்பவும் ஆரம்பிச்ச இடத்துல வந்து நிக்காதே ரம்யா? எல்லோருக்கும் எப்பவும் சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் சரியா அமையுறதில்ல அப்படி அமைஞ்சா அது வாழ்க்கை இல்ல…”

“இந்த தத்துவம் பேசுறதெல்லாம் நிப்பாட்டு, வரவர உன் கூட பேசும் போது, பட்டிமன்றத்தில இருக்குற பீல் தான் வருது… அப்படி பேசிப்பேசியே கொல்றே என்னை… என்னை விட்டுடேன் கிரி என் வழிய பார்த்து நான் போயிர்றேன்”

“இப்படியே சொல்லிட்டு இருந்தா எப்ப தான்டி எனக்கு பாவ மன்னிப்பு கிடைக்குறது? எப்ப நாமா சந்தோசமா இருக்குறது? மன்னிக்கவும் வேணாம், மறக்கவும் வேணாம், என்னோட வாழ்ந்து உன்னோட கோபத்தை எல்லாம் தீர்த்துக்கோ”

“உன்னோட சந்தோசம் குடும்பம் நடத்துறதுக்கு பேரு தான் உனக்கு தண்டனையா? நல்லா இருக்கு உன்னோட நியாயம்… என்னை விட்ரு கிரி, எனக்கும் உனக்கும் எந்த காலத்திலயும் ஒத்து வராது. உங்க வீட்டுல பாக்குற பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இரு, எனக்கு என் பொண்ணு போதும், அவள மட்டும் என்கிட்டே குடுத்துருங்க, நான் எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு போயிறேன்”

கணவனை ஒட்டிக்கொண்டே இத்தனை பேச்சையும் பேசிட, கேட்டவன் அடுத்த நொடியே அவளை உதறிவிட்டு, எழுந்து விட்டான்.

“இவ்வளவு நேரம் நான் பேசினத கேட்டும் கூட, இப்படி பேச எப்படிடி மனசு வருது? உனக்கு உன்னோட வலிக்கு மருந்து வேணும், நீ பட்ட கஷ்டத்துக்கு நியாயம் வேணும்னா, அது என்கூட இருந்தா தான் நடக்கும், நீ தனியா இருந்தா மட்டும் உன் கை விட்டு போன சந்தோசம் உனக்கு கிடைச்சிடுமா என்ன? கொஞ்சம் யோசனை பண்ணு ரம்யா… மறுபடியும் என்னை விட்டுட்டு போகணும்னு நினைக்கிற நினைப்ப மறந்துரு…

யார் என்ன சொன்னாலும், உன் நியாயத்த சொல்லு, மனசுல இருக்குறத பேசு… தயவு செய்து இனிமேயாவது உன்னோட வாழ்க்கைய உனக்காக வாழ்ந்து பாரு…உனக்குள்ள போட்டு வச்சுருக்கிற வட்டத்த விட்டு வெளியே வா…

உன் கைய விட்டு ஒரு விஷயம் போகுதுன்னா எதுக்காகன்னு யோசனை பண்ணு, அந்த விஷயம் மறுக்குற ஆள் நானா இருந்தா கூட என்கிட்டே ஏன்னு கேட்டு சண்டை போடுடி… அத விட்டு கோழை மாதிரி ஓடி ஒழிய பார்க்காதே… தனியா வாழ்ந்து காட்டுவேன்னு சொன்னத என்கூட வாழ்ந்து காட்டு… சந்தோசமோ, சண்டையோ, கோபமோ, துக்கமோ எதுவும் ஏத்துக்க நான் ரெடி…

இனிமே உன்கிட்ட இது விசயமா நான் பேச போறதில்ல… உனக்கு எப்படி இருக்க தோணுதோ அப்படியே இரு, என் கண்முன்னாடி இரு அது போதும் எனக்கு…

சீக்கிரம் சாப்பிட்டு முடி… பாப்பவ போய் கூட்டிட்டு வந்துறேன், படுக்க வச்சுக்கோ” தன் மனதில் உள்ளதை ஒளிக்காமல் சொல்லிவிட்டு சென்று விட்டான். இனியும் சொல்வதற்கு ஒன்றுமில்லை, இனிமேலும் வேறு திசை நோக்கி சென்றாலும் சேரும் இடம் ஒன்றே என்ற எண்ணத்தை மனைவியின் மனத்தில் ஆழப் பதியவைத்து சென்றான் கணவன்.

பூவனம்-23-1

நாட்காட்டிகளும், கடிகார முட்களும் தங்கள் வேலையை ஓய்வின்றி செய்து கொண்டிருந்தன. கிரியின் பெற்றோர்கள் சென்னைக்கு வந்து மூன்று மாதம் முடிந்திருந்தது. கிரியின் தம்பி முரளிதரன் தன் நண்பனின் உதவியுடன், காய்கறி மண்டி ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்த ஆரம்பித்திருந்தான். அதிகாலை நான்கு மணிக்கு செல்பவனுக்கு உதவியாக சுப்பையாவும் காலை எட்டு மணிக்கு அங்கே சென்று, தினப்படி வேலைகளை சரிவர கவனித்து பகல் பொழுதில் வீட்டிற்க்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தனர்.

மாலை வேளைகளில் தன் அண்ணனின் உதவியுடன் “தரணி பிரெஷ்செஸ்” என்ற பெயரில் காய்கறி விற்பனை வலைதளத்தை ஆரம்பித்து, அதன் மூலம் மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரங்கள் நடத்தி, அதற்கு பகுதி நேர வேலையாக கல்லுரி மாணவர்களை வேலைக்கு அமர்த்தி இருந்தான் முரளிதரன்… இங்கு வந்த இரண்டாம் மாதமே செந்தாமரை கருவுற, அவளை கவனிக்கும் பொறுப்பையும் சேர்ந்தே செய்து வந்தான்.

சமையலறைப் பொறுப்பை மீனாட்சி அம்மாளே ஏற்க, அவரவர்க்கு வேண்டிய உணவை கேட்டு செய்தது தான் அங்கே ஆச்சரியம். அந்த நேரத்தில் மட்டுமே மருமகளிடம் பேசி வந்தார். கிரிதரனின் அன்றைய பேச்சு மீனாட்சி அம்மாளை பதம் பார்க்க, தன் பேச்சினை சற்றே குறைத்துக் கொண்டார் என்று சொல்வதை விட, அவருக்கு நேரம் வாய்க்கவில்லை என்று சொல்வதே பொருந்தும்… அந்த அளவிற்கு பேரபிள்ளைகள் அவர் நேரத்தை கபளீகரம் செய்து கொண்டிருந்தனர்…

சின்ன மருமகளின் மசக்கையின் காரணமாக பேரனை கவனிக்கும் பொறுப்பை மீனாட்சி அம்மாள் மேற்கொள்ள, தம்பியுடன் எந்நேரமும் விளையாடும் இந்திராக்ஷியும் இப்பொழுது பாட்டியை துணைக்கு அழைக்க தொடங்கி விட்டாள்… இருகுழந்தைகளின் கள்ளமில்லா சிரிப்பிலும், செயலிலும் மெதுமெதுவாக தன் சுபாவத்தை மாற்றிக்கொள்ள தொடங்கினார் என்றே சொல்ல வேண்டும்.

வாரம் இருமுறை ரம்யாவின் அன்னை செல்வி, மகளையும் பேத்தியையும் பார்த்து விட்டு செல்வதை வழக்கமாக்கி கொண்டிருந்தார்… பேத்தி இல்லாத வீட்டின் தனிமையை, மகள் வீட்டிற்கு வரும் பொழுதெல்லாம் கண்ணீர் விடாத குறையாக தன் தவிப்பை சொல்லிவிட்டு செல்வார். பேத்தியை தன்னோடு அழைத்து செல்லும் எண்ணம் தோன்றினாலும், மீண்டும் புது வாழ்வை தொடங்கிருக்கும் நேரத்தில், தனது அழைப்பினால் ஏதேனும் வார்த்தை தடிப்புகள் எற்பட்டுவிட்டால் எப்படி எதிர் கொள்வது என்று எண்ணமும் வர செய்தது.

தன் மகன் சிவாவிற்கு பெண் பார்க்கும் படலத்தையும் ஆரம்பித்து, அதற்கான வேலைகளும் துரித கதியில் நடந்து கொண்டிருக்க, இங்கே மகளின் வீட்டிற்க்கு வருபவர்க்கு, சம்மந்தி அம்மாளின் முகம் பார்த்து வரவேற்கும் அளவிற்கு உறவு நிலை பலப்பட்டிருந்தது… தன் ஓவியம் தீட்டும் திறமையில் அனைவரையும் தன் மீதே கவனம் கொள்ள வைத்து, வீட்டினை ஒரு வரைகூடமாக மாற்றி வைத்திருந்தாள் சுட்டிப்பெண்… ரெயின்போ கலர்ஸ் பாட்டிகளுக்கு தெரியவில்லை என்று வண்ணங்களை பற்றி எடுத்து சொல்லும் பெரிய வேலையையும் அவள் மேற்கொள்ள, நல்ல பிள்ளையாய் அவன் தம்பியும் தலையாட்டி கேட்டு வைத்து கொள்வான்…

முன்பானால் ரம்யாவின் அதட்டல் மகளிடம் சற்றே வேலை செய்யும், ஆனால் இப்பொழுது அனைவரும் ஒரு சேர தூக்கி வைத்து கொண்டாடிட ரம்யாவின் பேச்சு காற்றோடு பறந்து சென்றது.

“பெரியவங்கள எப்படி கூப்பிட்றதுனு குழந்தைக்கு சொல்லி குடுக்க மாட்டியா ரம்யா? வாங்க போங்கனு கூப்பிட சொல்லி பழக்கி விடு” என்று செல்வி குறைபட

“நான் சொல்லறத கேட்டுட்டு தான் உன் பேத்தி வேற வேலை பாக்குற பாரு? இதே பேச்ச நான் சொன்னப்போ செல்வி பாட்டிய எப்படி கூப்பிடுறேனோ, அப்படிதான் அவங்க பாட்டியையும் கூப்பிடுவேன்னு சொல்றா உன் பேத்தி, அவங்களும் உனக்கு பிடிச்ச மாதிரி கூப்பிடுனு சொல்லி ஏத்தி வைச்சு, அவங்களுக்கு மேல நல்லா ஆடிக்கிட்டு இருக்கா”

“என்னோமோ போ… அப்பறம் இதுக்குன்னு ஒரு பேச்சு வந்து, பிள்ளைய பேசிடாம ரம்யா, கொஞ்சம் சொல்லி வை” என்று சொல்லி வைக்க மகளும் சரியென்று தலையாட்டி வைத்தாள். தன் மாமியாரிடமும் “ஆம், இல்லை” என்ற சொல்லை தவிர வேறு பேச்சுக்களை வைத்துக் கொள்வதில்லை.

ஓய்வு நேரங்களில் வீட்டு நிலவரங்களை கவனித்து கொண்டு, செந்தாமரைக்கு தன்னால் முடிந்த சிறு சிறு உதவிகளை செய்து கொண்டு, நாட்களை கடத்திகொண்டிருந்தாள். மறந்தும் கிரியின் பக்கம் தன் எண்ணத்தை செலுத்த நினைக்கவில்லை.

அவனும் அப்படியே அன்றைய நீண்ட விளக்கத்திருக்கு பிறகு மனைவியை அவள் போக்கில் விட்டு விட தீர்மானித்து, அதன் படி செயல்பட தொடங்கினான்.

சிறிது நாட்கள் பிள்ளைக்காகவென தன் வேலை நேரத்தை மாற்றி வைத்துக் கொண்டவன், மீண்டும் முழுநேர வேலையினை கையில் எடுத்துகொண்டு ஒதுங்கிக்கொள்ள ஆரம்பித்திருந்தான். மொத்தத்தில் இருவரும் ஒட்டவும் இல்லை, ஒதுங்கவும் இல்லை.

வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் எங்கேயாவது வெளியே சென்று வருவதை வழக்கமாக்கி கொண்டிருந்த வேளையிலும் இருவரும் பிள்ளையை முன்னிட்டு சென்றனர். இவர்களின் ஒதுக்கம் வீட்டிலுள்ளவர்களுக்கு தெரிந்தாலும் என்னவென்று சொல்லி இவர்களை சேர்த்து வைப்பது என்ற பெரிய கவலையே அனைவரின் மனதையும் போட்டு குடைய ஆரம்பித்திருந்தது.

இந்த நிலையில் சிவாவிற்கு பெண் அமைய, வீட்டு பெண்ணாய் பெண் பார்க்கும் படலம் முதற்கொண்டு அனைத்து வேலைகளையும் செய்து பொறுப்பாய் நடந்து கொண்டாள் ரம்யா.

சண்முகமும் செல்வியும் சேர்ந்தே வந்து மாப்பிள்ளை மற்றும் சம்மந்தி குடும்பத்தை முறை கொண்டு அழைக்க, மறுப்பில்லாமல் நடந்து முடிந்தவைகளை பற்றி மேற்கொண்டு பேசாமல், திருமணத்திற்க்கு சென்று வந்தனர்.

விழா மேடையில் ரம்யாவும் கிரியும் தனித்தனியாக தங்கள் அன்பளிப்பை வழங்கிட, அவர்களது உறவின் தன்மை வெட்ட வெளிச்சமாகியது.

மனைவி கேட்ட பிறகு, தான் செய்யப்போவதை சொல்லலாம் என்று கிரியும், தன் அண்ணனுக்கு செய்யப்போவதில் யாரிடம் எதற்கு கேட்க வேண்டும் என்ற மனோநிலையும் சேர்ந்து ஒருவரிடம் ஒருவர் கேட்டு கொள்ளாமல் சபையில் மாட்டிகொண்டு முழித்து வைத்தனர்.

“என்ன மாப்பிள்ளை இப்படி தனித்தனியா செஞ்சுட்டு எங்களை குழப்ப விட்றீங்க? ரம்யா நீயாவது அவர்கிட்ட சொல்லகூடாதா? திரும்பவும் என்னம்மா?” என சிவா அண்ணனாய் அவள் நிலையை கேட்டு வைக்க,

“அது… அவர் உனக்கு மாப்பிள்ளை முறைக்கு செஞ்சுருக்கார்ன்னா, நான் செய்றது தங்கை முறைக்குனு வச்சுக்கோ… ஏன் நான் ரெண்டு முறை செஞ்சா ஏத்துக்க மாட்டியா நீ?”

“அப்படி இல்லடாம்மா… எப்படி சொல்றது?” அவனும் சபையில் தடுமாற

“நீ இல்லனா, இன்னைக்கு நானும், என் பொண்ணும் இல்ல… நீ செஞ்சதுக்கு நன்றி சொல்லி நான் தூரமா இருக்க விரும்பலண்ணா… இது என்னோட பாசத்த காட்ட எனக்கு ஒரு வாய்ப்பு… வேற எதுவும் சொல்லாதே” என சிவாவின் கேட்காத கேள்விக்கு பதில் சொல்லி வைத்தாள்.

மணப்பெண் நித்யாவிற்கு எல்லா விடயங்களும் முன்னரே சொல்லிருந்ததால் அவளும் நன்றாகவே அங்கு நடப்பதை புரிந்து கொண்டாள்.

இச்செயலை மீனாட்சி அம்மாவினால் சகஜமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. இவர்களின் மேம்போக்கான நிலை இப்பொழுது வெளியினில் தெரிய ஆரம்பித்திருக்க, தாமரை இலையின் மேல் தண்ணீரை போல் வாழத்தானா அந்த அளவிற்கு பாடுபட்டு, ஊராரிடம் பேச்சை வாங்கி கொண்டு இங்கே வந்தது என்று கவலைப்பட ஆரம்பித்துவிட்டார்.

கிராமத்து காற்றை சுவாசித்துக் கொண்டு அனைவரையும் அதிகாரம் செய்து கொண்டிருந்தவருக்கு, ஒரே வீட்டினில் அடைந்து கிடந்த உடல் புழுக்கம், மகனின் வாழ்வு இன்னும் சீராகவில்லையே என்ற மனபுழுக்கமும் சேர்ந்து அவரின் மனதை அழுத்திட, உடல் அதனை தாங்கிக் கொள்ளாமல் ரத்த அழுத்தத்தை ஏற்றி வைத்து அவரை மயக்கம் கொள்ள வைத்தது.

அந்த நேரத்தில் ஆண்கள் அனைவரும் வெளியில் சென்றிருக்க, வீட்டில் இருந்த செந்தாமரைக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, கணவனுக்கு அழைத்து அவன் எடுக்காமால் போனவுடன், தாமதிக்காமல் ரம்யாவை அழைத்து சொல்லி விட்டாள்.

அவளும் வரும்பொழுதே கையுடன் மருத்துவரை அழைத்து வந்து, அவரை மயக்கம் தெளிய வைத்த பின்னே, அனைத்து பரிசோதனைகளும் செய்யவென மருத்துவமனைக்கு அழைத்து சென்றாள். குழந்தையை வைத்துகொண்டு, ஏற்கனவே சோர்ந்திருந்த செந்தாமரையை உடன் அழைத்து செல்லவில்லை.

ஒரு மணிநேரம் கழித்து தத்தம் வேலைகளை முடித்துக்கொண்டு வந்தவர்களிடம் நிலைமையை சொல்லி, மருந்துடன், நல்ல ஒய்வு எடுப்பது மட்டுமே தீர்வு என்று சொன்னதனை விளக்கி வீட்டிற்கு அழைத்து வந்தாள்.

கூடுதல் பொறுப்புக்கள் தானாய் வந்து சேர வீட்டு மனுசியாய், எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்த மருமகளை பார்த்து விழியுயர்த்தி ஆச்சர்ய பார்வை பார்ப்பது மாமியாரின் முறையாயிற்று. அவரை பொறுத்தவரை “வேலை பார்ப்பதில் சற்றே சுணக்கம் கொண்டவள் தன் மருமகள்” என்ற தன் மனதில் இருந்த கூற்றை மீனாட்சி அம்மாள் உடைத்து கொண்டார். மருமகள்கள் கவனிப்பில் ரத்த அழுத்தம் சீரானாலும், மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரம் இன்னும் சீரடையவில்லை அவருக்கு.

மகனை அழைத்து தன் மன ஆற்றாமையை கூறி விட்டார்… “உன்னோட வாழ்க்கையே இன்னும் சரியாகத இந்த நேரத்துல நாங்களும் இங்கே வந்து உக்காந்து உனக்கு இடைஞ்சலா இருக்கிறோமோனு தோணுது பெரியதம்பி… கிராமத்துல இருந்துகிட்டே என் இஷ்டபடி உன்னோட வாழ்க்கைய என் மனம் போன போக்குல மாத்தி வச்சதுக்கு தண்டனையா தான், நாங்க ஊர விட்டு வந்தோம்னு நினைச்சுக்கிட்டு இங்கே இருக்கேன். ஆனா நீயும் உன் பொண்டாட்டியும் முகம் குடுத்து பேசாம இருக்குறத பாக்கும் போது, எங்கே நீ பட்ட கஷ்டம் எல்லாம் வீணா போயிருமோன்னு மனசு பதறுது பெரிய தம்பி… நான் வேணா மருமக கிட்ட பேசி பாக்காவா? அப்படியாவது அவ கோபம் குறைஞ்சு உன்கூட சகஜமா பேச வாய்ப்பிருக்கு தானே?”

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லம்மா… நாங்க நல்ல பேசிட்டு தான் இருக்கோம்.. உன் மருமக எண்ணி பேசுறதுல கலெக்டர்னு உனக்கு தெரியாதா என்ன? அதுவுமில்லாம உடனே சகஜமா வாழறதுக்கு நான் என்ன சின்ன வேலையா செஞ்சு வச்சுருக்கேன்… அவளுக்கு மத்தவங்க என்ன சொன்னாலும் நான் அவ பக்கம் நின்றுக்கனும்னு நினைச்சிருக்கா… அது ஒண்ணும் தப்பில்லையே, போக போக சரியாகிடும், சரியாக்கிருவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ எதையும் மனசுல போட்டு குழப்பிக்கமா ரெஸ்ட் எடு… உன் மருமகள பத்தின கவலை உனக்கு வேணாம்” என ஆறுதல் படுத்தினான். ஆனாலும் மனது கேட்காமல் தன் வருத்தத்தை மருமகளிடம் முறையிடவும் செய்தார்.

“என் மேல இருக்குற கோபத்தை என் பையன் மேல காமிச்சு நீயும் சந்தோசமா இல்லன்னு நல்லா தெரியுது எனக்கு, ஆனா என்ன செய்ய? காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டவ, எங்கே என் பையன எங்கிட்ட இருந்து பிரிச்சுடுவியோனு நினைச்சு தான், உன்னை கொஞ்சஞ்கொஞ்சமா ஒதுக்க ஆரம்பிச்சு, அதுவே எல்லை தாண்டி போய், உன்னை பிரிச்சு வச்சு பார்த்துருச்சு.. பெண் குழந்தைய ஒதுக்குறவ இல்ல நான், ஆனாலும் அந்த சமயத்துல கேட்பார் பேச்ச கேட்டு, மனசாட்சி இல்லாம நிறைய ஒத்து வராத காரியத்த எல்லாம் செய்ய வச்சுருசுன்னு நினைக்கிறேன்…”

“இப்போ எதுக்காக அந்த பேச்ச இழுக்கறீங்க அத்த… எல்லா மாமியாருக்கும் வர்ற கவலை தான், உங்களுக்கு கொஞ்சம் அதிகமா வந்துருச்சு, நானும் அங்கே உள்ள பழக்க வழக்கத்தை கத்துகிட்டு, அங்கே இருக்குறவங்களோட பேசி பழக முயற்சி பண்ணிருக்கணும் தானே, அத நான் செய்யலையே? எந்தொவொரு புது விசயமும் ஆரம்பத்துல கஷ்டமா தான் இருக்கும், நான் அதையே பெருசா நினைச்சு மனசுக்குள்ள பூட்டி வச்சுகிட்டேன். இதோட விட்ருங்க…”

“அப்படி சொல்லாதே ரம்யா… நானும் உனக்கு எல்லாமே பக்கத்துல இருந்து சொல்லி குடுத்திருக்கணும், ஆனா தூரமா இருந்து அதிகாரம் பண்ணதோட விட்டுட்டேன். தப்பு எல்லாமே என் பக்கம் தான் ஆரம்பிச்சுருக்கு…”

“நடந்து முடிஞ்சத பத்தி இப்போ பேச வேணாம் அத்த… நானே அத மறக்க முடியாமா முள்ளு மேல நிக்கிறத போல தான் இங்கே இருக்கேன்… நீங்களும் என் மேல பாவபட்டு பேசி என்னை சங்கடப்படுத்தாதீங்க, பெரியவங்க நீங்க என்கிட்டே இப்படியெல்லாம் பேசக்கூடாது”

“அப்படி இல்ல ரம்யா… நாங்க ஒதுங்கி இருந்தா தான் உன்னால இதுல இருந்து வெளியே வர முடியும்னு தோணுது, நான் வேற இடத்துக்கு போக கூட தயார இருக்கேன். நீங்க மனசு விட்டு பேசி சந்தோசமா வாழணும் அதுதான் இப்போ முக்கியம்… உங்கள இப்படி பார்த்துகிட்டே இருக்குறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இப்படி கேக்குறதும் என்னோட சுயநலம் தான், ஆனாலும் சொல்லாமா, கேக்கமா இருக்க முடியல” மன்னிப்பு கேட்காமல் சமாதான வார்த்தைகள் பேசி வைத்தார்.

“என்னடா இது ஆச்சரியமா இருக்கு, பேசுறது என் மாமியார் தானா? வார்த்தைக்கு வார்த்தை என் புள்ள, என் பையன்னு சொல்லிட்டு இருக்குறவங்க, உன் புருசன்னு சொல்லி மருமக கிட்ட பேசுறாங்க!! அது சரி புள்ளையோட சந்தோசத்துக்கு தானே பேசுறாங்க,,, இல்லனா இவங்க என்கூட இப்படி பேசுவாங்களா என்ன?” என மனதிற்குள் ஆச்சர்யப்பட்டு, தனக்கு தானே ஆறுதல் கூறி அமைதிப்படுத்திக் கொண்டாள்.

“போதும் அத்த மருந்து சாப்பிட்டு பேசமா ரெஸ்ட் எடுங்க… எல்லாமே தன்னாலே சரியாகும், எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு, நீங்களும் அத மனசுல வைங்க”

மருமகளின் இந்த பேச்சில் மீனாட்சி அம்மாள் அசந்து விட்டார். மகன் சொன்னதையே மருமகளும் சொல்லிவிட, இரண்டு பேரும் நல்ல ஜோடி பொருத்தம் தான்… இருவரின் எண்ணங்களும், செயல்களும் ஒன்றாய் தான் பயணித்து கொண்டிருக்கின்றது என்ற ஆறுதல் வந்துவிட, தன் கவலையினை சற்றே ஒதுக்கி வைத்து, அவர்களின் சந்தோஷ நாட்களை காண காத்திருக்க ஆரம்பித்தார்.

மாமியாரிடம் பேசிய பின்பு தன்னை பற்றிய சுய அலசலில் கணவனை பற்றிய நினைவு சற்றே இனிமையை கொடுத்தது எனலாம்.

“எல்லோரும் கவனிச்சு பாக்குற அளவுக்கா நான் என் புருஷனை படுத்தி வைக்கிறேன்… முன்னாடி இந்த குட்டி கூட இருக்குறேன்னு சொல்லிட்டு, என் முன்னாடியே சுத்தி சுத்தி வந்துட்டு இருந்த ஆளு இப்போ ரொம்ப சின்சியர் சிகாமணியா வேலை பாக்க ஆரம்பிச்சுடாரு. நானா ஒதுங்கிப் போக சொன்னேன்? நினைச்சா சுத்தி வர்றது இல்லைன்னா தூரபோறதுன்னு, இவன் தான் கண்ணாமூச்சி ஆடிக்கிட்டு இருக்கான். வரட்டும், கேட்டு வைப்போம் மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்கான்னு” மனதில் எண்ணியவாறே

“ஏண்டா குட்டி உங்க அப்பா உன்னை வெளியே கூட்டிட்டு போறதில்லையா? டெய்லியும் லேட்டா வர்றாரு?” மகளிடம் தூண்டில் போட

“நான் சித்தப்பா கூட தம்பிய கூட்டிட்டு போறேன்ம்மா… சண்டே மட்டும் அப்பா கிட்ட கூட்டிட்டு போக சொல்லிருக்கேன், ஹெவிவொர்க் இருக்காம், நானும் ஓகே சொல்லிட்டேன்”

“இவன் பேச்சுக்கு பிள்ளைய கூட தலையாட்டுற மாதிரி சொல்லி வச்சுருக்கான்” என மனதிற்குள் பொருமியவாறே அவனை எதிர் கொள்ள காத்திருக்க, அவன் வந்த நேரம் இரவு 11 மணியை தாண்டி இருந்தது.

“ஏன் இவ்ளோ நேரம்? இதுதான் வீட்டுக்கு வர்ற டைமா?”

“சீக்கிரம் வந்து என்ன செய்ய?”

“ஏன் உங்க பொண்ணு கூட பேசணும், அவள கவனிக்கணும் சொல்லி அலட்டுவீங்களே அதெல்லாம் எங்கே போச்சு?”

“அவ என்னை விட பெரிய மனுசி ஆகிட்டா, மேடம் ரொம்ப பிஸி, அவங்க தம்பி கூட சேர்ந்து விளையாட, அவனுக்கு எழுத சொல்லி குடுக்கனு ரொம்ப பொறுப்பா நடந்துக்குறா, அதான் நான் இடைஞ்சல் பண்ண வேண்டாம்னு தூரமா இருந்து அவகிட்ட காலையில பேசிக்கிறேன்”

“தூரம் அவகிட்ட மட்டும்தானா? இல்ல எல்லோர்கிட்டயுமா?”

“யாரும் என்னை தேடுன மாதிரி தெரியல, அதான் நான் எல்லோருக்கும் தூரமாயிட்டேன்” என்று சொல்லி செல்ல, இவளுக்கு தான் பதில் சொல்ல வாய் வரவில்லை

“இப்போ நான் என்ன சொல்லிட்டேனாம் இவன்கிட்ட? இந்த பேச்சு பேசிட்டு போறான்… ஐயோ பாவமே ரொம்ப கெஞ்ச வச்சோமே!! கொஞ்சம் பேசி வைப்போம்னு பார்த்தா, ரொம்பத்தான் பேசறான் போடா!! உனக்கெல்லாம் லோலோன்னு அலைய விட்டாதான் வழிக்கு வருவே… பெருசா வெளிநாட்டுக்கு போய் வேலை பார்த்துட்டு வந்து என்ன பிரயோஜனம்? பொண்டாட்டி கிட்ட எப்படி நடந்துக்கணும்னு ஒரு புண்ணாக்கும் தெரிஞ்சுக்க முடியல? எப்ப பாரு லாப்டாப் கட்டிட்டு அழுதுட்டு இருக்கான். உனக்கு இந்த ஜென்மத்துல பொண்டாட்டி கூட கொஞ்சி குலாவுற பாக்கியம் இல்லடா” மனதில் சபித்துக்கொண்டே முறைத்து வைத்தாள்.

“பேசினா காது ஜவ்வு கிழியுற அளவுக்கு கொட்டி வைக்குறது, இல்லன்னா ஒரு சிரிப்புக்கு கூட பஞ்சமா நிக்கிறது, இந்த லட்ச்சனத்துல இவன் கூட சந்தோசமா குடும்பம் நடத்திற வேண்டியது தான், நீ வந்து பேசும் போது இருக்குடா உனக்கு?”

மனதிற்குள் வீராவேசமாய் சவால்கள் விட்டாலும், அவன் ஒதுங்கி செல்வதை பொறுக்க முடியாமல் தன் தவிப்பினை முணுமுணுப்புடன் வெளிப்படுத்தி வந்தாள்.

“எல்லோர் கூடவும் பேச நேரமிருக்கு, நம்ம கிட்ட பேச மட்டும் நல்லநாள் பார்த்துகிட்டு இருப்பான் போல? எதிர்ல இருந்தா கூட பேச தெரியல, எனக்கு மட்டும் வேண்டுதலா என்ன?” என அவன் கேட்கும் படியே பேசி வந்தாள்.

மனைவியின் தவிப்பை அறிந்து கொண்டாலும், அவனால் சகஜமாய் பேசிட இயலவில்லை… தனிமை என்பது அரிதாகிப் போனது. அவனுக்கோ அல்லது அவளுக்கோ ஒருவர் மாற்றி ஒருவர் பக்கத்தில் இருப்பது, இருவரின் மனத்தவிப்பை அதிகரிக்க செய்ததே ஒழிய குறையவில்லை.

பூவனம்-23-2

நாட்களும் அதன் போக்கில் கரைய ஆரம்பிக்க, இருவரும் தத்தமது எண்ணங்களை, மனதிற்குள் பூட்டி வைத்து கொண்டு நடமாடிட, எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் சென்று கொண்டிருந்த வேளையில் செந்தாமரைக்கு ஆண்மகவு பிறந்தது.

பிரசவ நேரத்தில் செந்தாமரைக்கு ஆதரவாய் முரளிதரன் தாங்கியது, பிறந்த குழந்தையை வரவேற்று, குடும்பத்தினர் மகிழ்ந்தது என அனைத்தையும் பார்த்த ரம்யாவிற்கு அந்த சூழ்நிலையில் தான் தவித்த தவிப்புக்கள், பட்ட துயரங்கள் அனைத்தும் ஞாபகத்திற்கு வந்து அவளை பந்தாடின. அதன் பிரதிபலிப்பு கணவனிடம் எதிரொலிக்க, வீட்டிற்கு வந்து பேச்சிலேயே அவனை குதறி எடுத்து விட்டாள்.

மனதில் எழுந்த வெறுப்பு நொடிக்கு நொடி அதிகமாக, எத்தனை மணி நேரம் தாக்கு பிடிக்க முடியுமோ, அத்தனை மணி நேரம் அசையாமல் அவள் இருந்த இடத்திலே அமர்ந்திருக்க, மனைவியின் பேச்சில் கோபித்துக்கொண்டு வெளியே சென்றவன், பனிக்காற்றில் உடல் லேசான உதறல் எடுத்த சமயம், சுற்று புறம் உணர்ந்து, தன்னிலை அடைந்து, காரை கிளப்பி கொண்டு வீடு வந்து சேர்ந்தான்..

வீடு வந்ததும் அவன் கண்கள் தேடியது மனைவியை தான். அவனுக்கு சற்றும் ஏமாற்றம் தராமல் அவர்கள் அறையில் கண்ணீர் கோடுகளாய் முகத்தில் இறங்கி இருக்க, குழந்தையை அணைத்துக் கொண்டு உறங்கியவளை கண்டதும், உடலும்,மனமும் மிகவும் சோர்ந்து போய் விட்டது அவனுக்கு.

“எனக்கு மட்டும் ஏன் இந்த சபிக்கப்பட்ட வாழ்வு?” என ஒவ்வொரு தருணத்திலும் தன்னைத்தானே கேட்கும் கேள்வியை, மீண்டும் மனதிற்குள் கேட்டுகொண்டே, அவளை பார்த்த வண்ணமே தரையில் அமர்ந்து விட்டான்.

அவன் கேள்விக்கு பதில் தேடி தேடி தவித்து, உறக்கத்தையே தழுவி விட்டான். விடை கிடைக்காத கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்பது முட்டாள் தனம் என தெரிந்தும், கேட்கும் அவனின் நிலை…?

அவன் உறக்கத்திற்கு சென்று வெகு நேரம் ஆன பின்னே, ஏதோ ஒரு உந்துதல் தோன்ற, அவள் விழித்துப் பார்க்க அமர்ந்த நிலையிலேயே அவன் உறங்கிக் கொண்டிருக்க, அவனின் ஓய்ந்த தோற்றமும், முக வாட்டமும் ரம்யாவின் மனதை பிசைய, தான் அவனை பேசியது அதிகப்படியோ என்று தோன்ற, அவள் மேல் அவளுக்கே கோபம் வரவைத்தது. சரியான நிலையில் அவனை உறங்க வைத்து, அவன் அருகிலேயே அமர்ந்திருந்தவளுக்கு மேலும் தூக்கம் வர மறுத்து, பல சிந்தனைகளை மனமானது அசை போட ஆரம்பித்திருந்தது.

தெரியாமல் செய்த தவறை மன்னிக்க தயாராகும் மனது, தெரிந்தே செய்த தவறை மன்னிக்க அவ்வளவு எளிதில் தயாராவதில்லை. நண்பனிடம் மன்னிப்பை தூர வைத்து, அவன் என்ன செய்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனம், வாழ்வின் சரிபாதியாய் பாவித்து வந்த உறவு செய்த தவறை மன்னித்தாலும், ஏற்க மறுப்பதில் அங்கே தன் உறவிற்கான உரிமையே நிமிர்ந்து நிற்கிறது. அந்த உரிமையே மேலும் மேலும் தன் உறவிற்கான அன்பை பலப்படுத்திக்கொள்ள, எந்நேரமும் செய்த தவறை நினைவில் நிறுத்தி, தன் இருப்பை தக்க வைத்துக் கொள்கிறது.

இப்படியான தன் நிலையை எண்ணியவாறே, பலவிதமாய் கணவன் தன்னிடம் மன்னிப்பை வேண்டி நின்ற தருணமும் கண் முன்னே நிற்க, நீண்ட நெடு நாட்களுக்கு பிறகு கணவனின் தலையை ஆதுரமாய் தடவி கொடுத்தாள்.

அடுத்தடுத்து வந்த நாட்கள் அந்த வீட்டினரை களவாடிக் கொள்ள, வேலைகளில் தங்களை புதைத்துக் கொண்டு நடமாட ஆரம்பித்தனர். வீட்டின் புது வரவு, மழலைகளின் ஆர்பாட்டம் என பல்வேறு மகிழ்ச்சிகளை தன்னகத்தே கொண்டு நாட்கள் பயணிக்க தொடங்கியது. இடையினில் தன் பெண்ணின் பிறந்தநாளினை மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தான் கிரிதரன். சரியாய் ஒரு வருடம் முடிந்த நிலையில் அனனவரும் கிராமத்திருக்கு புறப்படும் வேளையில், ரம்யாவையும் கிரியையும் வற்புறுத்தி அழைத்தும் வர மறுத்து, வந்தவர்களை வழியனுப்பி வைத்தனர்.

இப்பொழுது தனிமையில் தவித்தது குழந்தை மட்டுமே. எப்பொழுதும் எல்லோரும் சூழ்ந்திருக்க, எந்நேரமும் ஆட்டமும், கொண்டாட்டமுமாய் பொழுதை கழித்தவளுக்கு ஏன் என்று கேட்க கூட ஆளில்லா தனிமை அவளை வீட்டினில் தாக்க, பெற்றோரை படுத்தி வைத்தாள்.

இருவரையும் ஒன்றாய் இருக்க வைத்து தன் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டாள் இந்திராக்ஷி. அதன் விளைவு தடையில்லா பேச்சுக்கள் இருவருக்கும்,

“வர வர உன் பொண்ணு ரொம்பத்தான் ஆடறா? சொல் பேச்சு கேக்குறதில்ல, பிடிவாதம் பிடிக்கிறா… நீ கொஞ்சமும் கண்டிக்க மாட்டேங்குறா ரம்யா”

“இதையே நான் சொன்னா சின்ன குழந்தை அதட்டாதேனு எனக்கு புத்தி சொன்னவங்க இங்கே நிறைய பேர் அது தெரியுமா கிரி? சொல் பேச்சு கேக்கலைன்னா என் பொண்ணு, அதுவே அவகூட சேர்ந்து கூத்தடிக்கும் போது உங்க பொண்ணு, இந்த லாஜிக் எப்படின்னு தான் தெரியல?”

“தெரியாம வாய குடுத்து மாட்டிகிட்டேன். விடு வேற பேச்சு பேசுவோம், அவளுக்கு ஸ்கூல்ல டான்ஸ் காம்படிசன் இருக்குனு சொல்லிருக்காங்க என்ன செய்வோம்?”

“பொண்ணு பேச்சுக்கு மண்டைய ஆட்டி, பேர் குடுத்துட்டு வந்து, இப்போ என்கிட்டே என்ன கேள்வி? இப்போ ட்ரெஸ் வாங்க கடை கடையா போய் இறங்கனும். நீங்களும் வந்தா தான் ஈஸியா முடியும். இவளை வச்சுட்டு என்னால சமாளிக்க முடியாது”

“எனக்கு வேலை இருக்கு, உங்க கூட கடைக்கு வந்தா பாதி நாள் அங்கேயே போயிருதுடி, உனக்கு பிடிச்சா அவளுக்கு பிடிக்காது அவளுக்கு ஒகேண்ணா உனக்கு பிடிக்காது. இதுல டிரஸ் கோட் ஸ்கூல்ல சொல்லி, அதுக்கு தனியா தேடி அலையவே நேரம் போயிரும், நீங்க ரெண்டு பேர் கூட வந்தா நான் தான் நொந்து நூடுல்ஸ் ஆயிடுவேன்”

“இந்தும்மா உங்க அப்பா என்னோவோ சொல்றார் என்னன்னு கேட்டு சொல்லு,” பிள்ளையை ஏற்றி விட்டு அவள் உள்ளே செல்ல, மகளிடம் மாட்டிகொண்டு முளித்தான்

“எங்க கூட வரமாட்டேன்னு சொன்னியாப்பா… நீதான்ப்பா உனக்கு பிடிச்ச கடைக்கு மட்டுமே எங்களை இழுத்துட்டு போற… லாஸ்ட் டைம் குட்டி பாப்பாக்கு வாங்கும் போது இப்படித்தான் செஞ்சு, எனக்கு பிடிக்காத டிரஸ் வாங்கி நான் அழுதேன் மறந்து போச்சாப்பா? நீதான் ரொம்ப சேட்டை பண்ணிட்டு இருக்க… நாங்க சொல்ற கடைக்கு மட்டும் கூட்டிட்டு போகணும் சரியா?”

“அச்சோ இதத்தான் சொந்த காசுல சூனியம் வச்சுகுறதுன்னு சொல்றதா? உன்னை பேச விட்டா என்னை டேமேஜ் பண்ணிட்டு தான் மறு வேலை பாக்குறேடா குட்டி, உங்களுக்கு டிரைவர் வேலை பார்த்தே என் காலம் ஓடிடும் போல”

“ஒரு வார்த்தை சொன்னா சரின்னு சொல்ற பேச்சு எப்போ தான் வரும் கிரி?”

“ஏன் நீ சொல்லி நான் எதையும் கேட்டதில்லையா? அதுவே நான் என்ன சொன்னாலும் நீ கேட்டுட்டு மறு வேலை பாக்கற மாதிரி தான் பேசறே ரமி”

“எனக்கு பிடிச்ச மாதிரி சொன்னா நான் கேக்கபோறேன், உங்களுக்கு தான் எனக்கு பிடிச்சத சொல்ல தெரியல”

“யாருக்கு எனக்கா? இல்ல உனக்கா?”

“இப்போ எதுக்கு குதிக்கிறீங்க பாப்பா பார்த்துட்டு இருக்கா? அப்பறம் நாம பேசுற பேச்சு அப்படியே உங்க வீட்டுல டெலிகாஸ்ட் ஆகும். இங்கே பேசுறத அப்படியே அவ தம்பி, பாட்டினு வரிசையா சொல்லி வைப்பா, கொஞ்சம் அடக்கி வாசிங்க”

ஹாலில் குழந்தை அமர்ந்திருக்க, சமையலறை வாசலில் அவனும், உள்ளே ரம்யாவும் நின்று பேசி கொண்டிருந்தனர்.

“நானாடி ஆரம்பிச்சேன் நீதானே தொடங்குனே?”

“ஷப்பா முடியல சாமி!! ஐஞ்சு வருஷம் இந்த தொல்லை இல்லாம இருந்தேன், வரமாட்டேன்னு சொன்னவளை இழுத்துட்டு வந்தாச்சு…” என்று பழைய பல்லவியை பாடிட

“ஆத்தா ரம்யாத்தா போதும், மலை இறங்குத்தா… இனிமே நான் உன்கிட்ட பேசினா போடா நாயேன்னு வெளியே விட்டு கதவை சாத்து” என முறுக்கிக்கொண்டு கோபமுடன் போய் விட்டான்.

அவன் சென்ற பிறகு தான் அவள் பேச்சின் வீரியம் புரிய

“அய்யோ என்ன பேச்சு பேசி வச்சுருக்கேன் நான்… இப்போ இவனை மலையிறக்கனுமே!! சும்மாவே எண்ணி எண்ணி பேசிட்டு இருந்தவன், இப்போதான் கொஞ்சம் நல்லா பேசினான், திரும்பவும் கோச்சுகிட்டு போய்ட்டான்”

அந்த இரவில் மகளை தூங்க வைத்து விட்டு, ஹாலில் கிரிதரன் தன் மடிக்கணினியில் வேலை பார்த்துகொண்டு இருக்க, அருகே வந்தமர்ந்த ரம்யாவை திரும்பியும் பார்க்கவில்லை.

“ரொம்ப பண்றடா நீ… ஏதோ வாய் தவறி சொன்னா விடாம தொங்கிட்டு இருக்கான்” முணுமுணுத்துக் கொண்டே,

“சாரி கிரி!! ஏதோ ஒரு வேகத்துல வந்துருச்சு, இனிமே இப்படி பேச மாட்டேன்”

“இப்படி சொல்லியே நிறைய தடவை நீ பேசிட்டே ரம்யா… விடு இது எனக்கு வந்த சாபக்கேடுன்னு நினைச்சுகுறேன், எனக்கு தேவையான தண்டனை தான் இது”

“அப்படியெல்லாம் பேச வேணாம், நானே கொஞ்சம் கொஞ்சமா மறக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன், திரும்பவும் அத பத்தி பேசி என்னை கஷ்டப்படுத்தாதே”

“அப்போ என் மேல இருக்குற கோபம் போயிருச்சா ரமி?”

“அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன், கோபம், வருத்தம் இருக்கு, அது கொஞ்ச நாள் போனா மாறும், இல்லைனா நீ அத மறக்க வைப்பேனு நம்புறேன்”

“நிச்சமயமா செய்வேன், என்னை நம்பு… சாரிடி உன்னை நினைச்சு பாக்காம நான் ரொம்ப சுயநலமா இருந்துட்டேன்”

“ம்ப்ச்… வேற பேசுவோம் கிரி இத பத்தி வேணாம்”

“சரி வேற என்ன பேச சொல்லு”

“எதுனாலும் பேசு, விசயமா இல்ல பேச? இல்ல உனக்கு பேசத் தெரியாதா? என்கிட்டே கேட்டுட்டு இருக்கே”

“நெஜமாவா சொல்றே?, இப்படியெல்லாம் பேசுற ரம்யா எனக்கு புதுசா தெரியுறா”

“ஏன் நாம இப்படி பேசினது இல்லையா?”

“இல்லடி, கொஞ்சநாளா நான் என்ன சொன்னாலும் நீ சண்டை போடுவியா? அதான் இப்போ நீ இப்படி பேசவும் கனவு தானோன்னு சந்தேகம் வந்துருச்சு..”

“உன்கிட்ட பேச வந்தேன் பாரு என்னை சொல்லணும்” என கையில் அழுந்த கிள்ளிவிட்டு “கனவா நனவான்னு கன்பார்ம் பண்ணிக்கோ” சொல்லிக்கொண்டே தன் அறைக்கு சென்று விட்டாள்.

“தானா பேச வந்தவகிட்ட, என்னமோ உளறி அவளை அனுப்பி வச்சுட்டேனே, பேசினாலும், பேசலைனாலும் இவ பின்னாடி போறதே என் பொழப்பா போச்சு” மனதிற்குள் சொல்லிக்கொண்டே அவளை நாடி

“ரமி செல்லம் சும்மா சொன்னேன்டா வா பேசுவோம்”

“இது என்ன வாங்க பழகலாம் மாதிரி வா பேசுவோம்னு கூப்பிட்றே!! போய் உங்க வேலைய பாருங்க எனக்கு தூக்கம் வருது”

“ஒழுங்கா வேலை செஞ்சுட்டு இருந்தவன பேச கூப்பிட்டு, இப்போ தூக்கம் வருது சொல்றது கொஞ்சமும் நல்லா இல்லடி, சொல்லிட்டேன்”

“இப்போ என்ன செய்யணும்?”

“வா பேசுவோம்”

“எனக்கு தூக்கம் வருது கிரி”

“நீ தூங்கு நான் பேசுறேன் உன்கிட்ட”

“கிறுக்கு பிடிச்சிருக்கா உனக்கு? தூங்குறவங்க கிட்ட எப்போ இருந்து பேச ஆரம்பிச்சீங்க கிரி”

“அந்த பழக்கம் ஆரம்பிச்சு ரொம்ப நாள் ஆச்சு, நீ தூங்கு” என சொல்லியபடியே, அவள் தலையை தன் மடியில் வைத்துகொண்டவன், பேசத் தொடங்கினான்.

என்ன கதை, எதை பற்றிய பேச்சு, எந்த வகையான பேச்சுக்கள் என்று ஏதும் பகுத்தறிய முடியா நிலையில் அவன் பேசிட அவளும் பதில் கூறிட நெடுநேரம் பேசிய வண்ணமே அப்படியே உறங்கிப் போயிருந்தனர்.

இரவின் பேச்சு மறுநாள் காலையிலும் தொடந்திட, ரம்யா தான் அலுத்து போனாள்.

“போதும் கிரி கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க எனக்கு காது வலிக்குது”

“ஆனா எனக்கு வாய் வலிக்கலடி நான் பேசுவேன், இப்போதைக்கு நீ அதுக்கு தான் பெர்மிசன் குடுத்திருக்கே”

“இங்கே எல்லாமே என்னோட பெர்மிஷன்ல தான் நடக்குதா கிரி?”

“உன்கிட்ட கேக்காம நான் எதுவும் செஞ்சதில்லையே ரமி”

“நீங்க எதுவும் செய்யாம இருந்தா அதுக்கு நானா பொறுப்பு?”

“என்ன? என்ன சொன்னே? இன்னொரு தடவை சொல்லுங்க மேடம்”

“இப்போ டைம் ஆச்சு, உங்க பொண்ண ஸ்கூலுக்கு கிளப்புற வழிய பாருங்க, இன்னைக்கு டிரஸ் எடுக்க போகணும், சீக்கிரம் வர பாருங்க கிரி”

“பேச்சை மாத்திட்டா சதிகாரி,” என புலம்பிக்கொண்டே மனைவி சொல்லியதை செய்ய சென்றான்.

மனதின் புத்துணர்ச்சி, அன்றைய பொழுதை இனிமையாக்க, மகளுக்கு தேவையான உடையை வாங்கிக்கொடுத்தவன், தேவையில்லாததையும் பார்த்து வைத்து மகளிடம் வாங்கிக் கட்டிகொண்டான்.

“உனக்கு எத்தன தடவ சொன்னாலும் தெரியலப்பா, இந்த கலர் ஜீன்ஸ் இருக்கு, பிராக் இருக்கு இப்போ ஒண்ணும் வேணாம்” என்று அவனை இழுத்து வந்தாள்.

முன்தினம் போலவே இரவினில் அவளுடன் பேச வந்தவன், அவளை அப்படியே தூக்கிக் கொண்டு பக்கத்து அறைக்கு செல்ல

“இங்கே இருந்தே பேசுவோம் கிரி பாப்பா தனியா இருக்கா? எந்திருச்சா தேடுவா…”

“அவ ஒண்ணும் கைக்குழந்தை இல்ல எந்திரிக்க… அவ போட்ட ஆட்டத்துக்கு நாளைக்கு நீ தான் தண்ணி தெளிச்சு எழுப்ப போற, அவ நிம்மதியா தூங்கட்டும் நாம இங்கே இருந்தே பேசுவோம்”

“அடப்பாவி நான் பாவமில்லையா? உன் பேச்ச கேக்கனும்னு இப்படி என்னை கடத்திட்டு வந்திருக்கியே”

“கூப்பிட்டா வரமாட்ட அதான் தூக்கிட்டேன்”

“வரவர ரவடியாட்டம் நடந்துக்குறே கொஞ்சமும் நல்லா இல்ல, எனக்கு பிடிக்கல”

“இப்பவே என்னை திட்டி முடிச்சுராதே, கொஞ்சம் ஸ்டாக் வச்சுக்கோ… இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு இத விட நல்ல வார்த்தை சொல்லி என்னை திட்டலாம்” என அவளை சீண்ட ஆரம்பித்தவனின் கைகள் அவளிடம் தன் தேடலை ஆரம்பிக்க,

“இதுக்கு உன்கிட்ட பெர்மிசன் கேக்கணுமா ரமி?”

“ஆமான்னு சொன்னா என்ன செய்வே கிரி?”

“என்னோட ரம்ஸ் சரின்னு சொல்ல வைக்கிற வேலைய செய்வேன்டி” என்றவாறே அவன் ஆரம்பிக்க, சரி என்று அவளும் தன் செயல்களால் அனுமதித்தாள்.

“பாப்பா தனியா இருக்கா வா… அந்த ரூம்க்கு போவோம் ரம்யா”

“இவ்ளோ நேரம் உன் பொண்ணு தனியா இருந்தது தெரியலையா? நானா வந்தேன் என்னை எப்படி கூட்டிட்டு வந்தியோ அப்படியே கொண்டு போய் விடு,”

“இம்சைடி நீ!! வா தூக்கிட்டு போறேன், நாளைக்கு இழுத்துட்டு வருவேன், அப்போ என்ன சொல்றனு பாக்குறேன், கொஞ்சமே கொஞ்சம் வெயிட் அதிகமாயிருக்கு உனக்கு, எங்கே கொழுப்பு கூடிருக்குன்னு நாளைக்கு செக் பண்ணி சொல்றேன்” அவளை கையில் ஏந்திக்கொண்டே சொல்ல

“நான் கேட்டேனா உன்கிட்ட, இப்படியெல்லாம் பேசிட்டு இருந்தா நாளைக்கு நீ இழுத்தாலும் வர மாட்டேன்”

“ஒண்ணும் கஷ்டம் இல்ல, பாப்பாவ அந்த ரூம்க்கு சிப்ட் பண்ணிடுவேன்”

“அடங்க மாட்டடா நீ”

“பொய் சொல்றேடி இவ்ளோ நேரம் உன்கிட்ட தானே அடங்கி இருந்தேன், மறந்து போச்சா உனக்கு?”

“அடப்பாவி!! இப்படி பேசியே என் மானத்த வாங்குறடா” என அவனை மொத்த தொடங்கினாள்.

“போடி நான் கோபமா போறேன்”

“எங்கே போனாலும் இங்கே தான் வந்தாகணும், அத நினைப்புல வச்சுட்டு எங்கேனாலும் போ!!”

“அது தான் தெரிஞ்ச விஷயமாச்சே… என்னோட பலம், பலவீனம் எல்லாம் உன்னோட உருவத்துல இருக்கும் போது எப்படி எங்கே போக முடியும் சொல்லு”

“அப்படி என்னதான் இருக்கு என்கிட்டே சொல்லேன் கிரி”

அவள் கண்களை ஒரு வித மயக்கத்தோடு பார்த்தவன் “உன்னை பார்த்த அன்னைக்கே ஆர்வம், அன்பு, பாசம், தேடல், காதல், அமைதி, தூக்கம்ன்னு என்னோட எல்லாமே உன்கிட்ட இருக்குன்னு என் உள்மனசு சொல்லிச்சு, அதான் உன்னை விடாம பிடிச்சுகிட்டேன்” என சொல்ல உணர்ச்சி மேலீட்டால், காதலோடு கணவனை அணைத்துகொண்டாள்.

மனதிற்குள் ஒரு நிம்மதி, என்னவென்று சொல்லத் தெரியாத பரவசம், இருவரின் மனதிலும் பரவ, அதன் பிரதிபலிப்பு புன்னைகையாய் இருவரின் முகத்திலும் பூத்திட, பாலைவனமாய் கசந்த வாழ்க்கை இருவருக்கும் சோலைவனமாய் குளிர்ச்சியை தந்தது.

பூவனம் – முடிவுரை

இரண்டு வருடங்களுக்கு பிறகு

அந்த பெரிய கிராமத்து வீடு விழாக்கோலம் கொண்டிருந்தது. சின்னத்தம்பி – செந்தாமரை இளைய மகன் அபிதரனுக்கும், பெரியதம்பி – ரம்யா மகன் ரோஹிதரனுக்கும் காது குத்து விழா வைபவம் விமரிசையாக நடக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. விடிந்தால் விசேஷம் என்ற நிலையில், இன்னும் ஊருக்கு வராமால் போக்கு காட்டிகொண்டிருந்த கிரிதரனின் வருகையை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருந்தார் மீனாட்சி அம்மாள்.

“குழந்தைங்களையும், பெரியவங்களையும் கூட்டிட்டு வரும் போது, நேரத்துக்கு வந்து சேருவோம்னு தோணுதா? கார்ல வர்றோம்னு சொல்லிட்டு இஷ்டப்பட்ட நேரத்துக்கு வந்து இறங்கினா என்ன அர்த்தம்?” என மீனாட்சி அம்மாள் நீட்டி முழக்க,

“எல்லோரும் வேலைய முடிச்சுட்டு வர கொஞ்சம் நேரம் பிடிக்கும், உனக்கு தெரிஞ்ச விவரம் அவங்களுக்கும் தெரியும், நீ ஏன் இவ்வளவு மெனக்கெட்டு இப்போ பேசிட்டு இருக்கேன்னு தெரியல?” வழக்கம் போல் சுப்பையா அலுத்துக்கொள்ள,

“பிள்ளைங்கள கொஞ்சம் முன்னே அனுப்பி இருந்தா நான் ஏன் இவ்ளோ சொல்ல போறேன்? எல்லாம் என் நேரம்… பெத்தது தான் சொல்பேச்சு கேக்குரதில்லன்னா, அவனுக்கு வாய்ச்சது அவன் சொல்றதுக்கெல்லாம் ஜால்ரா தட்டிட்டு அவன் கூடயே வர்றதும் போறதும் நல்லாவா இருக்கு?” என தன் சுபாவத்தில் இருந்து சற்றும் மாறாமல் பேச,

“கொஞ்சம் நேரம் அமைதியா இருங்க அத்த… ரெண்டு பிள்ளைங்கள வச்சுட்டு அக்கா எப்படி தனியா வர முடியும்? பாப்பா ஸ்கூல் போக வேணாமா? அங்கே காய்கறி மண்டிக்கு தோதான ஆள் பார்த்து வச்சுட்டு வரணும், வேலைக்கு போறத நிப்பாட்டி, இத கவனிக்க ஆரம்பிச்சவங்களுக்கு வேலை ரொம்ப இழுக்கத் தான் செய்யுது, காலையில பெரியத்தான் மண்டிக்கு போனா, இவங்க வேலை முடிச்சு, பாப்பவ ஸ்கூல் அனுப்பி, குட்டி பையன செல்வி அம்மாகிட்ட விட்டுட்டு இவங்களும், சண்முகம் அப்பாவும் அங்கே போன பிறகு தான், அத்தான் வேலைக்கு கிளம்பி போறாரு. கொஞ்ச வேலையாவா இருக்கு? எல்லாத்தையும் பார்த்து ஒரு குழப்பமும் இல்லாம செய்றவங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கும்?”

“நல்லா சொல்லும்மா செந்தாமரை… இவளுக்கு எத்தன தடவ சொன்னாலும் புத்தியில ஏறாது, என்ன செய்றது சுபாவம் அப்படி ஆகிப்போச்சு” என்ற உள்குத்துடன் மனைவியை சீண்டி முடித்தார் சுப்பையா.

“நானும் அங்கேயே போய் இருக்குற முடிவுக்கு வந்துட்டேன் மாமா… ஒருத்தர் வெளி வேலை பார்த்துட்டா, வீட்டுல ஒருத்தர் இருக்க சரியா வரும், பசங்களையும் கவனிச்சுக்க முடியும்”

“தாராளமா செய்ங்கம்மா.. எதுனாலும் சொல்லுங்க வந்து நானும் செய்றேன்” சுப்பையா மருமகளுக்கு தன் ஆதரவை கொடுத்தார்.

மீனாட்சி அம்மாளின் அலம்பலை தாங்க முடியாமல், கிரியின் இன்னோவா மிகவும் சீக்கிரமாய் வந்து சேர்ந்தாலும், தாமதமாய் வந்ததற்கு பல்லவியை பாடிக் கொண்டிருந்தார். அவரின் பேச்சு நிற்கவில்லை.

இத்தனைக்கும் விசேஷத்திற்கு என்று ரம்யாவின் பெற்றோரையும், உடன் அழைத்து வந்திருந்தும் அவர்கள் முன்னிலையில், தன் சலசலப்பை அரங்கேற்றிக் கொண்டிருந்தார். ஆனால் அதை சிறிதும் கருத்தில் கொள்ளாமல் கிரிதரன் உள்ளே வந்திட, செந்தாமரை வந்தவர்களை வரவேற்று தங்குவதற்க்கான ஏற்பாடுகளை செய்யச் சென்று விட்டாள். ரம்யாவின் பெற்றோர் அவரிடம் சற்றே சமாதான வார்த்தைகள் பேசி உள்ளே சென்றனர்.

ரம்யா எப்போதும் போல் அங்கு உள்ளவர்களின் சௌகரியத்தை கேட்டு விட்டு உள்ளே சென்று விட, அதற்கும் ஒரு குத்தல் பேச்சு தொடர்ந்து கொண்டே இருந்தது,

“வந்தவ என்ன செய்யணும்? ஏது செய்யணும்னு கேக்குறாளா? எல்லாம் அவ இஷ்டம் தான்… அவளுக்கு எப்போ தோணுதோ அப்போ மட்டுமே பேசி வைக்குறா” என தொடர

“அவங்க பேசினா நீ அதுக்கும் சேர்த்து குத்தம் கண்டுபிடிக்கும் போது அவங்களும் வேற என்ன தான் செய்வாங்கம்மா” என்று சின்னத்தம்பி கேட்க

“எல்லாம் என்னையே குத்தம் சொல்லுங்க” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்த வீட்டின் ராசாத்தி அங்கே வந்து நின்று

“பாட்டி எனக்கு சாப்பிட என்ன செஞ்சு வச்சுருக்கே? போன தடவை நான் கேட்ட பாவாடை தைச்சு வச்சாச்சா? என்னோட அளவுக்கு கரெக்டா இருக்குமா? தம்பிக்கு தொட்டில் தட்டி வச்சாச்சா?” என்று தன் தேவைகளை அடுக்கிக்கொண்டே கேட்க, அந்த பாட்டியின் மனம் முழுவதும் நொடியில் மாறி, பேத்திக்கு வேண்டியதை செய்ய கிளம்பி விட்டார்.

“நீ வா ராசாத்தி!! நீ தான் என்னை மறக்காம எல்லாத்தையும் கேட்டு வைக்குறே… வேற யாருக்கு இருக்கு இந்த அக்கறை?” என்று அங்கலாய்த்தபடியே உள்ளே சென்று விட்டார்.

“நல்லவேளை என் பொண்ணு வந்து அம்மா மனச திசை திருப்பிட்டாப்பா… இல்லைன்னா இன்னும் கொஞ்ச நேரம் இந்த பேச்ச கேட்டு கஷ்டப்படணும்” சின்னத்தம்பி சொல்ல

“என் பேத்திகிட்ட மட்டும் தான்டா கொஞ்சம் வாயா மூடுறா உங்கம்மா!!” என சுப்பையா சிரித்து வைத்தார்.

மீனாட்சி அம்மாளின் சுபாவம் அவ்வளவு சீக்கிரம் மாறாது… தன் குடும்பம், தன் குழந்தைகள் என்ற வட்டத்துக்குள்ளேயே சுற்றிக்கொண்டு இருக்கும். இன்னமும் மருமகளை குற்றம் சொல்லி பேசுவது குறையவில்லை. என்னதான் சமாதான வார்த்தைகள் மருமகளிடம் பேசினாலும், சகஜமாய் பேசிட மனம் ஒப்பவில்லை.

ரம்யாவிற்க்கும் அப்படியே “ஆம். இல்லை” என்ற ஒற்றை வார்த்தைகளை தவிர மிகுதி வார்த்தைகள் மாமியாரிடம் பேசுவது மிக அரிது. கொழுந்து விட்டு எரிந்த கோபத்தீயை என்னதான் சமாதானம் என்னும் நீர் ஊற்றி அணைத்தாலும், அது புகையினை கக்கி, காய்ந்து சருகாகி, காற்றில் பறந்து காணமால் போகும் வரை அந்த ரணம் ஆறாமல், மனமானது நினைத்துக்கொண்டே தான் இருக்க செய்கிறது… அதனால் காலபோக்கில் அவர்களின் உறவுநிலை மேம்படும் என்பதை கருத்தில் கொள்வோம்.

மறுநாள் அதிகாலை ரம்யாவின் அண்ணன் சிவா தன் மனைவி நித்யாவுடன் வந்திறங்க, நேரம் செல்லச்செல்ல உறவினர் கூட்டமும், வந்துசேர விழா களை கட்ட துவங்கியது. இந்திராக்ஷி தன் பேச்சில் அனைவரையும் ஆட்டி வைத்தாள்.

மூன்று தம்பிகளையும் சுற்றி வைத்துகொண்டு, இரு வீட்டு பாட்டி, தாத்தாகளுடன் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து, அவளின் சுட்டி தனத்திலும், பேச்சிலும் ஊர் மக்கள் அசந்து போனார்கள்.

“இந்த மாதிரி அழகு பிள்ளைய யாரவது விட்டு குடுப்பாங்களா? அதான் பெரிய தம்பி அன்னைக்கு அவ்ளோ பேச்சு பேசி, எல்லாத்தையும் கிழிச்சு போட்டான், மருமக மட்டும் குறைச்சலா என்ன? இந்த அம்மா என்ன பேசினாலும் எதிர்த்து பேசாமாயே, ஒரு பார்வை பார்த்து வைச்சு மாமியார் பேச்சை நிப்பாட்ட வைக்குது, இன்னொரு மருமக அதுக்கும் மேல அவங்க வாய்க்கு பூட்ட போட்டுட்டு தான் மறு வேலை பாக்குது” என்று பேசாதவர்கள் இல்லை.

பெரியவர்கள் பேரப்பிள்ளைகளுடன் இருக்க, சிறியவர்கள் தங்கள் துணைகளுடன் வந்தவர்களை வரவேற்று, அன்றைய நாளினை சிறப்பாக முடித்து வைத்தனர்.

இரவில் தன் அறையில் வந்தமர்ந்த கிரியினை பார்த்த ரம்யாவிற்கு சிரிப்பு தான் வந்தது

“அது என்ன கிரி? ஊருக்கு வந்தா ரொம்ப நல்லா பிள்ளையா மாறி, யார் என்ன சொன்னாலும் தலையாட்டுகிட்டே இருக்கீங்க?”

“உன்கிட்ட செஞ்சு செஞ்சு இப்போ அதுவே எனக்கு பழக்கமாகிபோச்சு”

“ரொம்பத்தான் உங்களுக்கு!!, நான் சொல்லி நீங்க தலையாட்டி கேக்குற மாதிரி தான்”

“அடிப்பாவி நான் ஒண்ணும் செய்றதில்லையா?”

“நீங்க தானே… நிறைய செஞ்சு வைக்கிறீங்க, வரவர ரொம்ப தொல்லை பண்ண ஆரம்பிச்சுட்டீங்க!! என் பையன கூட நான் சாமளிக்குறேன், ஆனா நீங்க இருக்கீங்களே?”

“நான் என்னதான்டி செஞ்சேன்? இப்படி அலுத்துக்குறே”

“என்ன செய்யல? ஏன் எங்கே போனாலும் என் பின்னாடியே வந்து நிக்கிறீங்க? ஏன் என்னை பார்த்துக்க எனக்கு தெரியாதா? ஆரம்பத்துல எப்படி இருந்தேனோ அப்படியே தான் இன்னமும் இருப்பேன்னு எப்படி நினைக்கலாம்?”

“அப்படி இல்ல ரம்யா!! தம்பிய கூட்டிட்டு நீ போனியா, துணைக்கு ஆள் தேவைப்படுமேன்னு நானும் உன் பின்னாடி வந்துட்டேன்,”

“ஆமா இப்போ பிள்ள தூக்கிட்டு போறேன்னு சாக்கு சொல்லி பின்னாடி வர்றது, இதுக்கு முன்னாடி கன்சீவ் ஆனா நேரத்துல என்ன செஞ்சீங்க? கொஞ்சமும் என்னை விட்டு போகாம பக்கத்துலயே இருந்து என்னை ஒரு வழி பண்ணியாச்சு, இருந்தா இப்படி, இல்லைனா எங்கேயோ கண்காணாத இடத்துல இருந்துகிட்டே என்னை கொல்லறது”

“அப்படி இல்ல ரம்யா!! என்னோட ஆசை எல்லாம் பாப்பா பிறக்கும் போதே உன் பக்கத்துல இருக்கணும், உன் பிரசவ நேரத்துல உன்னை தாங்கணும்னு நினைச்சேன், அது இப்போ நடந்திருக்கு, இந்துக்குட்டி எப்படி வளர்ந்தா? என்னென்ன சேட்டை செஞ்சானு எனக்கு தெரியாது? அதான் இப்ப கண்ணு முன்னாடி இவனை பார்த்து அந்த ஆசைய தீர்த்துக்குறேன். இதுல என்ன தப்பு இருக்கு சொல்லு”

“இந்த பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல? பாக்குறவங்க எல்லாம் என்னை தான் குத்தம் சொல்றாங்க, எப்படியெல்லாம் புருஷனை போட்டு பாடுபடுத்துறானு, அதுலயும் உங்க அம்மா முன்னாடி சத்தியமா நானும் பேசகூடாதுன்னு நினைக்கிறேன், அவங்க பேச வைச்சுடுவாங்க போல”

“விடு ரமி… அவங்க அப்படிதான்னு உனக்கு தெரியாதா?”

“இந்த ஒரு வார்த்தைய சொல்லியே எப்பவும் என் வாய அடைக்குறது, ஒண்ணு வார்த்தைய மாத்துங்க, இல்ல சொல்ற விதத்தையாவது மாத்துங்க பாஸ், உங்க பேச்ச கேக்க போர் அடிக்குது எனக்கு”

“போர் அடிக்காத வேலைய செய்வோமா ரமி?” என்றவாறே அவள் இடையினில் கைபோட,

“அரைக்கிழம் ஆயாச்சு, அனுசரிச்சு நடந்துக்கோங்க கிரி, வந்த இடத்துல என்னதிது?”

“அடிப்பாவி என்னை பார்த்து என்ன வார்த்தை சொல்லி வச்சுட்டே? நான் பொறந்து வளர்ந்த வீடுடி… இது உனக்கு புது இடமா?” என அவளை இழுத்து தன் மேல் போட்டு கொள்ள,

“ரெண்டு பக்க கிருதாலயும் வெள்ளை முடி எட்டி பாக்குது, முப்பத்தி மூணு வயசுக்கு மேல கொஞ்சம் அடக்கம் வேணும் கிரி”

“ரொம்ப டேமேஜ் பண்றடி நீ… செயல்ல இறங்கினா தான் வழிக்கு வருவே” என்று தன் ஆக்கிரமிப்பை அவளிடம் ஆரம்பிக்கவும், கதவு தட்டும் ஓசை கேட்கவும் சரியாய் இருந்தது.

தன் பரிவாரங்களுடன் வந்து நின்ற மகளை கண்டவன்,

“குட்டீஸ் தூங்காம என்ன பண்றீங்க?”

“ரோ குட்டியும், அபி குட்டியும் ரொம்ப சண்டை போட்றாங்கப்பா!! நீங்க இவங்கள பார்த்துக்கோங்க… நான் சசிக்குட்டிக்கு கலரிங் சொல்லி குடுக்கப்போறேன் இவன் எல்லாமே மறந்துட்டான்” என அங்கேயே அவள் கடை விரிக்க

“இந்த நேரத்துல வேண்டாம் காலையில பார்த்துக்கலாம் இந்தும்மா” என்ற தாயின் பேச்சிற்கு செவி சாய்க்காமல்

“இல்லம்மா எங்க ரெண்டு பேருக்கும் தூக்கம் வரல… பாட்டி தூங்கிட்டாங்க, சித்தியும், சித்தப்பாவும் வேண்டாம்னு சொன்னாங்களா… நாங்க அவங்கள ஏமாத்திட்டு வந்திருக்கோம்” என கிளுக்கி சிரித்துக் கொண்டே தங்கள் காரியத்தில் கண்ணாய் இருந்தனர் சிறுவர்கள்.

இவர்களை பார்த்துக்கொண்டே ரம்யா கிரியை பார்க்க, அவனது பாவமான பார்வையில் சிரிப்பு வந்து, சத்தமாய் அவள் சிரித்து வைக்க, அதை பார்த்து வாண்டுகளும் சேர்த்து சிரிக்க, அவர்களின் கள்ளமில்லா சிரிப்பில் தன்னை தொலைத்தவன், தானும் சிரித்துக்கொண்டே அவர்கள் அருகில் அமர்ந்துக்கொண்டு பிள்ளைகளின் செயலில் கிரியும் பங்கு கொள்ள, வண்ணமயமான அழகான பூவனம் அங்கே அழகோவியமாய் தீட்டப்பட்டது.