பூந்தளிர் ஆட-17

பூந்தளிர்-17

ராம்சங்கரின் திறமையை மெச்சியே நண்பர்கள் கூட்டம் எப்போதும் அவனை மொய்த்துக் கொண்டே இருக்கும். பெண்களும் அதில் அடங்குவர். எல்லை மீறிய உறவில் பல பெண்கள் அவனிடம் விழுந்து கிடந்ததும் உண்டு.

இவனுமே அவர்களின் அழகு, திறமையைப் பார்த்து, தனக்கும் விருப்பமிருந்தால் கூடிக்களித்துவிட்டு மற்றவர்களை தூசியாக தட்டி விடுவான். இவனது அருகாமையில் இருக்க வேண்டுமென ஒரு பெண் விரும்பினாலும் அவளுக்கான தகுதிகளை இவனே வரையறுத்து விட்டான்.

மனதிற்குள் தன்னை ஒரு அரசனாகவே உருவகப்படுத்தி வைத்திருந்தான். அப்பேற்பட்டவனின் நிலை இப்பொழுதும் முற்றிலும் தலைகீழானது போன்றதொரு தோற்றம். தான் காதலாய், ஆசையாய் மோகித்த பெண், மற்றொருவனுடன் தன் கண்முன்னே இதழணைத்து நிற்பதை பார்க்கப் பார்க்க அவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது.

‘தன்னை விட்டு மொத்தமாக போய் விட்டாளே!’ என்கிற கோபம், ‘இவளை தவற விட்டு விட்டேனே!’ என்கிற ஆற்றாமை எல்லாம் சேர்ந்து அவனை கொதிநிலைக்கே இழுத்துச் சென்றது.

“எல்லாத்துக்கும் என்னை தப்பு சொல்ற நீ மட்டும் என்ன பண்ணியிருக்க? உனக்குன்னு ஒரு லைஃப் தேடி செட்டில் ஆகியிருக்க தானே? நீ செஞ்சா சரி. அதுவே, நான் தேடிப் போனா தப்பா?” முயன்று தன்னை நியாயப்படுத்திக் கொண்டான் ராம்சங்கர்.

எப்படியாகினும் அவள் தன்னிடம் தலைதாழ்ந்திட வேண்டுமென்கிற கொக்கரிப்பில், ‘என்ன பேசுவது? எதைக் கேட்பது!’ என்று யோசிக்காமல் வரைமுறையற்ற வார்த்தைகளை அள்ளி வீச ஆரம்பித்திருந்தான்.

“லிசன் மிஸ்டர். இப்ப அவ, என் வொய்ஃப், அவளை கேள்வி கேக்குற ரைட்ஸ் உனக்கு இல்ல!” இம்ரானின் எதிர்ப்பில் மேலும் பொறுமையிழந்தான்.

“எனக்கு பிள்ளை பெத்துட்டு, உன்னை கல்யாணம் பண்ணியிருக்கா! அதை நான் கேக்க கூடாதா?”

படிப்பு, பதவி தந்த நாகரீகம், மேல்தட்டு வர்க்கம் கற்றுக் கொடுத்த நாசூக்கான மேற்பூச்சுகளை களைந்தெறிந்தவனாக, தனது புத்தியின் நிலை இதுதான் என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தான் ராம்சங்கர்.

இம்ரானும் ஹனியாவின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அவளை பேசவே விடவில்லை. “லெட்ஸ் கோ ஹனி!” அவளை இழுத்து செல்ல முயல, ராம் தடுத்தான்.

“பதில் சொல்லிட்டுப் போ! நீ மட்டும் ஒழுங்கா?” தெனாவெட்டு கொட்டிக் கிடந்தது அவனது கேள்வியில்.

‘சரி, என்னென்ன பழி சொல்ல வேண்டுமோ சொல்லிவிட்டுப் போகட்டும்!’ எனும் ரீதியில் அமைதியாய் இருந்தாலும், ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து ராமின் சட்டையை பிடித்தாள் ஹனியா.

“இப்படித்தானே நானும் ஒருநாள் உன் பதிலை எதிர்பார்த்துட்டு நின்னேன். அப்போ என் பேச்சை கேட்டு நீ வந்திருந்தாலும் பிடித்தம் இருக்கோ, இல்லையோ உன்கூட வாழ யோசிச்சு இருப்பேன். வந்தியா நீ? குழந்தைங்க ஃபோட்டோ அனுப்பியும் விஷ் பண்ணிட்டு போயிட்ட… நானும் குழந்தைகளை கேர் பண்ணத் தெரியாம முழிச்சு என் பேரண்ட்ஸ் கிட்ட போய் நின்னுட்டேன்!”

“இவனுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லடா, வா போகலாம்!” இம்ரான் இழுக்க,

“பத்து நிமிஷம் எனக்கு டைம் குடு சிக்கு! அடுத்து இவனை பத்தி நினைக்கவே மாட்டேன்!” என்றவள் மீண்டும் அவனை காறி உமிழ்ந்தவளாக பார்த்தாள்.

“நான், என் பிள்ளைகளுக்காக அவங்ககிட்ட போயி நின்னேன். அவங்க தங்களோட பொண்ணுக்கு நல்லது பண்ண நினைச்சு, எனக்கொரு பாதுகாப்பான உறவை தேடிக் கொடுத்திட்டாங்க! பேரண்ட்ஸ்ன்னா அவங்க தான். நீயோ நானோ கிடையாது. பிள்ளை பொறக்க காரணமாவும், பெத்துக்கவும் தெரிஞ்சவங்க எல்லாம் அம்மா அப்பா ஆகிட முடியாது ராம்!” வீராப்பாய் பேசிவிட்டு,

“எனக்கு நல்லது பண்ண நினைச்சே எங்க அத்தா தன் தலை மேலே குழந்தைங்க பாவத்தை போட்டுகிட்டாரு!” உடைந்த குரலில் பேசியவளை புரியாமல் பார்த்தான்.

“என்ன சொல்றே நீ?” கேட்டவனுக்கும் உள்ளுக்குள் ஒரு திகில் பரவியது. ‘ஏற்கனவே தன்னை தகுதியற்றவன் என்று காறி உமிழ்ந்தாகிற்று! இன்னும் என்னென்ன இட்டுக்கட்டி சொல்லப் போகிறாளோ?’ அவஸ்தையுடன் அவனின் மனம் சஞ்சலப்படத் துவங்கியது.

ஏனோ இவள் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் இப்போது இவனை தீயாக உரசிக் கொண்டிருக்க, அந்த எரிச்சலில் எது பேசினாலும் அவனுக்கு கடுப்பினை கிளப்பியது. ஹனியா சொன்ன, ‘ஈகோயிஸ்ட் ராம்.’ முழுமையாய் வெளியில் வந்திருந்தான்.

“குழந்தைகளை உங்க வீட்டுல கொண்டு போயி விட்டாச்சு… அப்புறம் அவங்க நிலைமை என்னன்னு யாருக்கும் தெரியாது.” எனக் கூறியவள், “அவங்களை அனாதரவா விட்ட பாவத்துக்கு தான் எனக்கு அடுத்து குழந்தை தங்கலன்னு நினைக்கிறேன்!” வேதனைக்குரலில் கண்ணீர் வடித்தாள்.

“எமோசன் ஆகாதேடி… உனக்கு நல்லதில்ல!” இம்ரான் அவளை கட்டுப்படுத்த,

“முடியல சிக்கு, அந்த பாவத்துக்கு தண்டனையா தான் கடவுள் எனக்கு பிள்ளை வரம் கொடுத்தும் பெத்துக்க வழியில்லாம பண்றாரு போல! என்னோட ரெண்டு குழந்தைங்க அபார்ட் ஆனதுக்கு காரணமும் நீதான். நீ ஒரு கொலைகாரன்டா!” ஆக்ரோசத்துடன் ராமைப் பார்த்து கதறியவளை தாங்கிப் பிடித்துக் கொண்டான் இம்ரான். அவளை கட்டுப்படுத்த நினைத்தான், முடியவில்லை.

“இனிமே இவளைத் தேடி வந்தா, நீ உசிரோட போக மாட்ட!” எச்சரித்தபடியே விலகிப் போனான் இம்ரான்.

ராம்சங்கரின் மனமெங்கும் இப்பொழுது பல குழப்பங்கள். ‘நான் என்ன இத்தனை கேவலமானவனா?’ தன்னைத்தானே ஆராய்ந்து பார்த்தான். அவனளவில் அத்தனை தவறிழைத்தவனாக அவனுக்கே தோன்றவில்லை

‘அவ கிடக்குறா பைத்தியம், எமோசனல் ஃபூல்!’ என்று அலட்சியத்துடன் தட்டி விட்டுக் கொண்டாலும் உள்ளுணர்வு அவனது குடும்பத்தாரோடு அவனை ஒப்பிட்டுப் பார்த்தது.

அன்றைக்கு அரவிந்தனுடன் காணொளி அழைப்பில் திமிராகப் பேசிய பிறகு, வீட்டில் இருந்து அழைப்பு வருவது அறவே நின்று விட்டது. இவனுமே தேவையில்லாத தளையில் தன்னை சிக்க வைக்க முயற்சிக்கின்றனர் என நினைத்து, அதிலிருந்து தப்பித்துக் கொள்பவனாக வீட்டினருடன், இவனாக அழைத்துப் பேசுவதையும் நிறுத்தி விட்டான்.

அப்படிப் பேசியிருந்தாலாவது, ‘குழந்தைகளின் நிலைமை என்னவானது? தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்!’ என்று இவனுக்கு தெரிய வந்திருக்கும். ‘இப்போது யாரை அழைத்து, எப்படி கேட்பது?’ என்கிற பெருத்த குழப்பத்தோடு தன் பிள்ளைகள் என்ற உள்ளுணர்வும் சேர்ந்து அவனை சுத்தமாக பொறுமையிழக்க வைத்தது.

தர்மம், பாவ புண்ணியங்களை சொல்லிச் சொல்லியே தன்னை வளர்த்த குடும்பம், தன் பிள்ளைகளை அம்போ என விட்டிருக்க கூடும் என்பதை அவனால் நம்ப முடியவில்லை.

ஹனியாவின் கண்ணீர் குரலும் குழந்தைகள் மீதான அவளின் ஆசையும் சேர்த்து இவனுக்கும் அந்த மழலைகளை காண வேண்டுமென்ற ஆவலை உண்டாக்கி விட்டிருந்தது. அந்த உணர்வு தனக்குள் வந்ததை நினைத்து அவனே ஆச்சரியப்பட்டுப் போனான்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள நண்பர்களுடன் இங்கே வந்தவனுக்குள் இப்படியொரு அகத்தின் மறுமலர்ச்சி உண்டாகிப் போனதை நினைத்து, ‘நானும் நல்லவந்தான், அதான் யோசிக்க ஆரம்பிச்சதும் நல்லவிதமா என் மைன்ட் சேன்ஞ் ஆகிடுச்சு!’ பெருமிதப்பட்டுக் கொண்டான். அந்த மகிழ்வுடன் இந்தியாவிற்கு வந்திறங்க அவனுக்கு வரவேற்பு எப்படி இருக்கும்?

***

அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை. அரவிந்தலோசனின் வீடு வழக்கம் போல களைகட்டியிருந்தது. வழமையாக மகள்கள் குடும்பத்தோடு வாரம் ஒருமுறை அம்மா வீட்டிற்கு வரும் நிகழ்வு தான். மற்றபடி பெரிய விசேசமென்று ஏதும் இல்லை.

மதிய விருந்து பேரப் பிள்ளைகள் மாப்பிள்ளைகளுக்கு வீட்டிற்குள் நடந்து கொண்டிருக்க, வெளித்திண்ணையில் சிறுபிள்ளைகளுக்கு வெகு கலகலப்பாக உணவினை ஊட்டிக் கொண்டிருந்தனர் வீட்டுப் பெண்கள்.

“நா வைணவி, இது பிரணவி, இது சாகித்யா!” அம்மு, தன் அருகில் இருந்த குழந்தைகளை காட்டிச் சொல்ல,

“நா வைபவ், இவன் சஞ்சய் ண்ணா!” அப்புவும் தன் பங்கிற்கு சொல்லி முடித்தான்.

“நீ சொல்லு சாகி!” அம்மு, சாகித்யாவை பேச வைக்க, அரைகுறை மழலையில், ‘ம்மா. பெம்மா’ என சுமதியையும் சுதமதியையும் காட்டி சாகித்யா சிரிக்க, பிரணவி வாக்கரில் அமர்ந்தவாறு குதித்துக் கொண்டிருந்தாள்.

தன் எதிரில் எட்டு மாதமே நிறைவடைந்த பிரணவி மற்றும் ஒன்றரை வயது சாகித்யாவை வாக்கரில் அமர வைத்துக் கொண்டு பருப்பு சாத்தை ஊட்டிக் கொண்டிருந்தாள் சுமதி. பிரணவி, அரவிந்தன் கிருஷ்ணாவின் செல்லமகள். அப்படியே அம்மாவின் ஜாடை. அந்த வீட்டினில் எல்லோருக்கும் மிகவும் செல்லம்.

சுமதியின் மகள் ஒன்றரை வயது சாகித்யாவிற்கும் அவள்தான் செல்லம், பட்டு எல்லாம். இரண்டரை வயது அப்பு, அம்முவிற்கும் உணவூட்டும் வேலையை சுதாமதியும் சாருமதியும் ஏற்றுக் கொண்டிருக்க, அனைவருக்கும் சேவகனாக சஞ்சய் நடமாடிக் கொண்டிருந்தான்.

“நீயும் உள்ளே போயி சாப்பிடேன்டா!” சுமதி சொல்ல

“இல்ல, நான் உங்கூட சாப்பிடுறேன்! நான் அந்த பக்கம் போனா பட்டு அழுவா!” என்றவன் இருவருக்கும் விளையாட்டு காண்பிக்க ஆரம்பித்தான் ஏழுவயது சஞ்சய். இப்போது சற்றே வளர்ந்த விட்டபடியால் அவனது சுபாவங்களும் மாற்றம் பெற்றிருந்தன.

குழந்தைகளுக்கு விளையாட்டு காண்பிப்பதோடு, ‘அதை செய்யாதே, இங்கே போகாதே!” என்ற அறிவுரையோடு அவர்களை தன் பார்வையில் நிறுத்திக் கொள்வான்.

சுதாமதி சாருமதியின் மைந்தர்கள் இந்த குழந்தைகளை வெளியே அழைத்துச் சென்று வேடிக்கை காட்டுவதோடு தங்களின் பாச பரிவர்த்தனைகளை நிறுத்திக் கொள்வார்கள்.

கடந்த ஒன்றரை வருடங்களாக கிருஷ்ணா தனது கற்பித்தல் பணியை வீட்டில் இருந்தபடியே முடிந்தவரை செய்ய ஆரம்பித்திருந்தாள்.

தினசரி மாலை நேரத்தில் கிருஷ்ணாவின் கணித வகுப்பாக மாறிவிடும் வீட்டுத் திண்ணை வகுப்பு, மற்ற பொழுதுகளில் குழந்தைகளின் விளையாட்டுக் கூடாரம் ஆகிவிடும்.

“என்னடா குட்டீஸ், இன்னுமா சாப்பிட்டு முடிக்கல?” கேட்டபடி புல்லட்டை நிறுத்தினான் அரவிந்தன்.

வெளியே சென்று வீட்டிற்குள் நுழையும் போதே குழந்தைகளை பார்த்திருக்க அம்முவும் அப்புவும், “ப்பா ரவுன்ட் போலாம்!” என்றபடி வேகமாக திண்ணையை விட்டு இறங்கினர்.

“அப்பா சோ டயர்ட், அப்புறமா… சரியா?” சோர்வாக கூறவும் சரியென்று தலையாட்டிக் கொண்டனர். தாவி வந்த பிரணவியையும் அவன் தூக்கிக் கொள்ளவில்லை. “அப்பா அழுக்குடா, வந்து தூக்கிக்கிறேன்!” வழக்கமான தனது பல்லவியை பாடிவிட்டு அகன்றான்.

“ஏன்டா தம்பி, இந்த லீவு நாள்லயும் வேலைன்னு அலையணுமா? வீட்டுல இருக்கக் கூடாதா!” சுதாமதி கேட்க,

“செகண்ட் யூனிட் செட் ஆகுற வரைக்கும் கொஞ்சம் பிஸி, அப்புறம் ஃப்ரீ ஆகிடுவேன். அதான் எல்லாரும் இருக்கற நேரம் வீட்டுக்கு வந்துறேனேக்கா!” என்றவாறே உள்ளே சென்றான்.

“நல்ல காரணம் சொல்ற போ! வீட்டு மாப்பிள்ளைங்க கூட ஒருநாள், ஒருபொழுதாவது உக்காந்து சாப்பிடணும்னு நினைக்கிறியா? எப்ப பாரு, உன் வேலையை மட்டுமே பாக்கற!” சுதாமதி குற்றப்பாட்டை படிக்க,

“விடுக்கா… தானா தெரிஞ்சுக்கணும். இல்ல, இவன் பொண்டாட்டியாவது இவனுக்கு சொல்லிப் புரிய வைக்கணும். இங்கே ரெண்டும் நடக்காது.” நொடித்துக் கொண்டாள் சாருமதி.

“அண்ணேன் என்ன சொல்ல வருதுன்னுதாவது கேக்குறீங்களா? உங்க இஷ்டத்துக்கு நொட்டை சொல்லிட்டே போறது. இப்படி குறை சொல்லலைன்னா பொழுது போகாதா?” வள்ளலாய் கேட்டாள் சுமதி.

வீட்டினுள் சென்ற அரவிந்தன் மனைவியைத் தேட, கிருஷ்ணாவை அங்கே காணவில்லை. வேறு வழியின்றி அங்கேயே பேசிக்கொண்டு அமர்ந்து விட்டான். பெண்கள் மட்டும் உண்ண வேண்டியிருந்தது. பத்து நிமிடம் அமர்ந்து பேசியவன் கண்களால் மனைவியை நோட்டம் விட்டு தங்களின் அறைக்கு சென்றான்.

பெரிதாக மாற்றம் செய்யப்பட்ட அவர்களின் அறையில் நடுநாயகமாக அமர்ந்து, விளையாட்டுப் பொருட்களை எல்லாம் கவிழ்த்து போட்டு, எதையோ ஒன்றை தேடிக் கொண்டிருந்தாள் கிருஷ்ணா.

பிள்ளை பெற்ற பொலிவும், பேறுகாலத்தின் கனிவான கவனிப்பும் சேர்ந்து அவளின் அழகினை இன்னும் மெருகேற்றி இருந்தன. அறைக்குள் வந்த கணவனை கவனிக்காமல் தன் ஆராய்ச்சியில் தலை குனிந்திருக்க, சட்டென்று முத்தம் வைத்து, அவளின் கழுத்தடியில் மீசை உரசி குறுகுறுக்க வைத்தான் அரவிந்தன்.

“அச்சோ மாஸ்டர்! என்ன வேலை இது? யாராவது வந்திடப் போறாங்க!” அவசரமாக தள்ளி விட்டவளின் குரலில் அத்தனை பதட்டம். ‘திடீரென்று வந்து முத்தம் வைத்தால் கொஞ்சவா முடியும்?’ என்பவளாய் முறைத்துப் பார்த்தாள்.

“உம் புள்ளைகளை திண்ணையில நிறுத்தி வைச்சுட்டு வந்திருக்கேன்டி!”

“கீழே அத்தனை பேர் இருக்காங்க, நீங்க இங்கே வந்து வம்பு பண்றீங்க!”

“இப்படி அசந்த நேரத்துல லந்து பண்ணினாத் தான் உண்டு!” என்றவாறே கட்டிப்பிடிக்க,

“போய் கை கால் அலம்பிட்டு வாங்க. பிள்ளைங்க கிட்ட அழுக்கா இருக்கேன்னு சொல்லிட்டு, என்னை வந்து உரசுறது, என்ன ஒரு வில்லத்தனம்!” 

“என் சரிபாதி. என் அழுக்கையும் எடுத்துக்கோ!” வேண்டுமென்றே உரசியவன், 

“இந்த குப்பையை கவுத்து கொட்டி என்னத்தை தேடிட்டு இருக்க சாலா?” அவள் மீது சாய்ந்த வண்ணமே கேட்டான்.

“இந்த குட்டீஸ் காலையில என் ஹான்ட்பேக்கை தலைகீழா கவித்து போட்டுருந்துச்சு. அதை எடுத்து வச்சதுல, என்னோட திங்க்ஸ் ஒன்னு மிஸ் ஆகுது.” தேடலில் பார்வையை ஓட்டியபடி பேசினாள். 

“அதை தேட இதுவாடி நேரம்? கீழே அக்கா, மாமா எல்லாம் என்னன்னு நினைப்பாங்க?”

“ஹலோ மாஸ்டர், நீங்களும் நானும் இருந்தா தான் ஆயிரம் விதமா நினைப்பாங்க! நீங்க இல்லாத நேரத்துல நான் இங்கே வந்தா, இடத்தை ஒதுங்க வைக்கிறதா அர்த்தம். சுத்தியும் பாருங்க… நம்ம ரூம் எந்த லட்சணத்துல இருக்குன்னு தெரியும். தெனமும் எதையாவது ஒன்னு கொண்டு வந்து விளையாட்டு சாமான்னு குழந்தைங்க கிட்ட கொடுக்கறது. அதெல்லாம் எடுத்து வைக்கவே எனக்கும் பொழுது போயிடுது!” என்றவளின் பார்வை சோர்வாய் அறையை அலசியது.

நான்குபேர் படுக்குமளவிற்கு இருந்த பெரிதான கட்டிலில் முக்கால்வாசியை விளையாட்டு சாமானும், துணியும் பரப்பி இருக்க கட்டிலின் ஓரத்தில் குட்டிக் குழந்தையின் தொட்டில் அம்சமாய் இருந்தது.

அப்புவிற்கும் அம்முவிற்கும் அனைவரின் அரவணைப்பும் தாராளமாகவே கிடைத்தன. ஆசை மிகுதியில் ஒன்றுக்கு ஐந்தாகவே அத்தை, மாமா, அப்பா, பாட்டி என்று வரிசையாக வாங்கிக் கொடுக்க, அவர்களுக்கான பொருட்களை வைத்துக் கொள்ள இடம் போதவில்லை.

நினைத்தால் அரவிந்தன் அறையிலும், இல்லையென்றால் பாட்டியின் அறையிலும் உறங்கச் செல்லும் இரட்டை குழந்தைகள் அவ்வீட்டின் உயிரோட்டமாகவே மாறியிருந்தனர்.

“என்னன்னு சொல்லு சாலா? நானும் சேர்ந்து தேடுறேன்!” அரவிந்தன் மீண்டும் கேட்க, 

“வேணாம், நீங்க குளிச்சிட்டு கீழே போங்க… நான் வந்துடுறேன்!” என்றதோடு தேடலைத் தொடர்ந்தாள் கிருஷ்ணா.

“ம்ப்ச்… அப்படி எனக்கு தெரியாத அதிசயம் உன்கிட்ட என்ன இருக்கு? சொல்லேன், சீக்கிரம் தேடி முடிப்போம். அப்புறம் பிள்ளைங்க வந்துட்டா இருக்கிறதையும் இழுத்துப் போட்டு உனக்குதான் வேலை வைப்பாங்க!”

“அது வந்து, என்னோட பத்துரூபா காயின் தான் காணோம்.” 

“அவ்ளோ தானா? அதுக்கா இந்த பாடு? அதுக்கு பதிலா நான் நூறு காயின் தரேன். நீ வா, சாப்பிடுவியாம்!”

“இல்ல, எனக்கு அதுதான் வேணும்.”

“ஏன்டி இந்த பிடிவாதம்? உன் பிள்ளைங்களோட சேர்ந்து நீயும் அடம்பிடிக்க ஆரம்பிச்சுட்டியா?”

“மாத்தி சொல்றீங்க மாஸ்டர்! என்கிட்டே இருந்து தான் என் பிள்ளைகளுக்கு போயிருக்கு.” நொடித்தாள் கிருஷ்ணா

“சரிங்க டீச்சர்… அந்த பத்து ரூபாய யாருக்கோ பிச்சை போட்டதா நினைச்சுக்கோ, இப்ப வாடி!” 

“நீங்க போங்க, நான் தேடி எடுத்துட்டு வர்றேன்.” 

“அப்படி என்ன ஸ்பெசல் அந்த காயின்ல? கோல்ட் எதுவும் எக்ஸ்ட்ராவா உருக்கி வைச்சுருக்கியா?”

“அய்ய, நினைப்பு போகுது பாரு!” என கன்னத்தில் இடித்தாள்.

“வேறன்ன? சொன்னாத்தானே தெரியும்.”

“சொல்லிடுவேன் மாஸ்டர், நீங்க கேலி பண்ணக்கூடாது.”

“டீச்சரை யாராவது கேலி பேசுவாங்களா?” நக்கலாக இழுக்க, 

“பாத்தீங்களா, இப்பவே ஆரம்பிக்கிறீங்க. நான் சொல்ல மாட்டேன். அப்புறம் எல்லார்கிட்டயும் போட்டு உடைச்சுடுவீங்க!”

“இல்லங்க டீச்சர், சத்தியமா சொல்லல… எங்கேயாவது இருந்து சுட்டுட்டு வந்தியா? இல்ல, திருஷ்டிக்குன்னு சுடுகாட்டுல இருந்து பொறுக்கிட்டு வந்தியா?” விளையாட்டாய் கேட்டதும் பொங்கி விட்டாள்

“போய்யா, நீயும் உன் கற்பனையும்! அது, உங்ககிட்ட இருந்து தானா என்கிட்டே வந்து சேர்ந்த காசு! பொண்ணு பார்த்த அன்னைக்கு கீழே விழுந்ததே. நீங்களும் பத்திரமா எடுத்து வைச்சுக்க சொன்னீங்களே?”

“அதை உண்டியல்ல போட்டுட்டதா தானே நீ சொன்ன?”

“அது சும்மா சொன்னது. என் ஹாண்ட்பேக் உள்ஜிப்புல யாருக்கும் தெரியாம வச்சிருந்தேன். இன்னைக்கு அதையும் கவுத்துட்டாங்க!” சோகமாய் கூறியவளை ஆசையுடன் பார்த்தான் அரவிந்தன்.

“நான்தான் முழுசா உன் முன்னாடி நிக்கிறேனே, அதை விட அந்த காயின்தான் பெரிசா போச்சா?” வார்த்தைகள் குழைந்த வண்ணம் வெளியேற, அதே உணர்வு மனைவியிடத்திலும் எதிரொலித்தது.

“அந்த காயின் எப்போ கையில எடுத்துப் பார்த்தாலும் எனக்கொரு பிளசன்ட் ஃபீல் வரும் ரவி! நம்மோட உறவு ஸ்திரமாகுறதுக்கு அச்சாரமா தான் அந்த காசு என்கிட்டே வந்து சேர்ந்ததா நான் நம்பிட்டு இருக்கேன். அந்த ஃபீல் எல்லாம் உங்களுக்கு தெரியாது.”

“வரவர சென்டிமெண்டல் ஃபூல் ஆகிட்டு வர்ற!”

“அப்படியே இருந்துடப் போறேன், நீங்க இப்ப கெளம்புங்க! இன்னும் பத்து நிமிசத்துல நான் வர்றேன்.” வலுக்கட்டாயமாக கணவனை குளியலறைக்குள் தள்ளி விட்டாள்.

மதிய உணவை முடித்ததும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு முகிலனும் சுதர்சனும் அருகில் நடைபெறும் சர்க்கஸ் ஷோவிற்கு கிளம்பி இருந்தனர். சற்று நேரத்தில் கிருஷ்ணாவும் அரவிந்தனும் வந்துசேர அரட்டையுடன் அடுத்த பந்தியும் ஆரம்பித்தது.

உண்ட மயக்கத்தில் அங்கிருந்த அறை ஒன்றில் கதிரவனும் தலை சாய்த்திருந்தார். எப்போதும் கேளிக்கை விளையாட்டுகளில் இருந்து ஒதுங்கிக் கொண்டு விடுவார்.

“நேரத்துக்கு சாப்பிடணும் கிருஷ்ணா… புள்ளைக்கு பசியாத்துறவ புருஷன் வரணும், புழுக்கை காயணும்னு காத்திருக்க கூடாது.” எப்போதும் போல் மனோன்மணி அத்தை சொலவடையோடு அறிவுரை கூறிய நேரத்தில், அவர்களின் எதிரே அமைதியாக வந்து நின்றான் ராம்சங்கர்.

.