பூந்தளிர்-20
மதுரை பேருந்து நிலையத்தை ஒட்டிய உயர்தர பல்நோக்கு மருத்துவமனை அது. எப்போதும் பெருந்திரளான கூட்டம் இருக்கும். அரவிந்தன், கிருஷ்ணா, கதிரவன், முகிலன் என நால்வர் மட்டுமே கிளம்பி வந்திருந்தனர். வரவேற்பில் இருந்த பெண்ணிடம் குழந்தையின் பெயரைக் கூறி விசாரிக்க அப்படியொரு குழந்தை அட்மிட் ஆகவில்லையென்றே சாதித்தனர்.
வீட்டிற்கு வந்து தகவல் சொன்னவனை செல்பேசியில் அழைத்து மீண்டும் பொறுமையாக கேட்க, “மாஸ்டர், அவங்க பாப்பா பேரு சொல்லல… நம்ம ராம் தம்பியோட குழந்தைன்னு சொல்லித்தான் பேசுனாங்க! அட்டெண்டர்க்கு டிரீட்மென்ட் நடக்குதுன்னு சொல்லி வச்சுட்டாங்க!” என்று சொன்ன பிறகு ராம்சங்கர் பெயரை கூறி விசாரித்தனர்.
“ஒஹ்… அந்த பேசன்ட்டா! மிஸ்டர்.ராம் எமெர்ஜென்சில இருக்காரு. பேபி நேம் பவிகான்னு ரெஜிஸ்டர் ஆகியிருக்கு. பேபிய இப்பதான் ஐசியூக்கு ஷிஃப்ட் பண்ணி இருக்காங்க!” தகவலைக் கூறினர்.
“ஐசியூ போற அளவுக்கு பாப்பாக்கு என்ன?” கிருஷ்ணா பதட்டத்துடன் கேட்க,
“நத்திங் டு வொரி மேம்… அப்சர்வேஷன்க்கு கூட அங்கே ஷிஃப்ட் பண்ணுவோம்.” ஆறுதலாகக் கூறி அனுப்பி வைத்தனர் பணியாளார்கள்.
“குழந்தை பேர கூட ஒழுங்கா தெரிஞ்சு வைச்சுக்கல… இவனெல்லாம் புள்ளைய வளக்கறேன்னு கிளம்பிட்டான்.” கதிரவனும் முகிலனும் ஒன்றுபோலவே முணுமுணுத்தனர்.
“மாப்ள… நீ தங்கச்சியை கூட்டிட்டு பாப்பவ பாக்கப் போ! நானும் முகிலனும் அந்த கோமாளிய பார்த்துட்டு வர்றோம்.” என்று அனுப்பி வைத்தார் கதிரவன்.
கோபமோ ஆற்றமையோ கொள்வதற்கும் கூட நேரமில்லாமல் இருபுறமும் ஆட்கள் ஓட்டம் எடுத்தனர். ஐசியூ வார்டில் சென்று பெயரைச் சொன்னதும் அங்கிருந்த செவிலி விவரங்களை கூற ஆரம்பித்தார்.
“பேபி நல்லா இருக்காங்க… கண்ணு முழிக்க இன்னும் ரெண்டு மணிநேரம் ஆகும். டிரிப்ஸ் ஏறுது. குழந்தையோட அம்மா மட்டும் உள்ளே போங்க!” கடமையாக கூறி கிருஷ்ணாவை உள்ளே அனுப்பி வைத்தார்.
“குழந்தைக்கு என்ன சிஸ்டர்?” கேட்ட அரவிந்தனின் தவிப்பை சொல்ல வார்த்தைகள் இல்லை.
“ஃபுட் பாய்சன் அன்ட் சிவியர் இன்ஃபெக்ஷன். அதோட கீழே விழுந்ததுல ரொம்ப அழுது, அதுலயே பேபி மயங்கிப் போயிடுச்சு!” செவிலி ஒவ்வொன்றாய் கூறிக்கொண்டே வரவும் தகப்பனாய் துடித்துப் போனான்.
“புள்ள உசிரோட விளையாடிட்டியேடா!” தம்பியின் மேல் அதீத கோபம் கொண்டானே ஒழிய, ‘உன் பிள்ளைகளை வளர்த்ததற்கு நீ கொடுக்கும் பரிசா இது?’ என்று எள்ளவும் குரோதமாய் எண்ணவில்லை.
இவனளவில் வஞ்சம் கொள்வது என்பது கோபத்தோடு திட்டி முடிப்பது வரையில் மட்டுமே! அதுதான் அரவிந்தலோசனனின் இயல்பு.
செவிலியிடம் கெஞ்சிக் கூத்தாடி மகளைப் பார்க்க உள்ளே சென்று விட்டான். சின்னஞ்சிறு நிலாமுகத்தில் அழுது அரற்றிய சோர்வு படிந்திருக்க, பிஞ்சு உதடு இன்னமும் சன்னமாய் விசும்பிக் கொண்டிருந்தது.
‘அரைநாளில் அரை உயிராய் வாடி விட்டாளே… என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தாளோ! வாய் திறந்தும் பேசத்தெரியாத மழலைக்கு ஏன் இத்தனை வேதனை?’ கதறி அழுவதற்கும் வழியில்லாமல் துயரத்தை அடக்கிக்கொண்டு தேம்பிக் கொண்டிருந்தாள் கிருஷ்ணா.
“முடியல ரவி… சின்ன உடம்புல எத்தனை வயர் சொருகி இருக்காங்க. அப்படியென்ன ஆச்சாம் என் பொண்ணுக்கு?” மடியில் கிடந்த குழந்தையை தடவிக்கொண்டே கேட்டவளிடம், பதறாமல் விஷயத்தை கூறி முடித்தான் அரவிந்தன்.
“ரெண்டு மணிநேரத்துல நம்ம பட்டுகுட்டி கண்ணு முழிச்சிடுவா சாலா… நீ கவலபடாதே! வேற எதுவும் பெருசா இல்லடா!” என்றவனின் குரலும் கரகரத்து தான் வெளியே வந்தது.
“ரொம்ப நேரம் இருக்கக் கூடாது சார். பேபியோட மதர் மட்டுந்தான் இருக்கணும்.” அடுத்தடுத்த செவிலியின் உத்தரவுகள் அரவிந்தனை அந்த இடத்தில் நிறுத்தத் விடாமல் வெளியில் தள்ளியது.
வீட்டிற்கு அழைத்து குழந்தையின் நிலைமையை கூறி யாரையும் வரவேண்டாம் என்றும் சொல்லி விட்டான் அரவிந்தன். அந்த நேரத்தில் கதிரவனும் அவனை அழைத்து, குழந்தையின் நலத்தை பற்றி கேட்டறிந்தார்.
பின்னர், “நீ இங்கே வந்து இவனை பாக்கறியா மாப்ள?” எனக் கேட்க பல்லைக் கடித்து அமைதி காத்தான் அரவிந்தன். ‘எங்கே வாயை திறந்தால் தன்னையும் மீறி கடுமையாகப் பேசி விடுவேனோ!’ என்கிற பதட்டம் அவனை அடக்கி வைத்தது.
“பிடிக்கலன்னா வர வேண்டாம் மாப்ள… உன் மனசு புரியுது. இவனுக்கு அவ்ளோ ஒன்னும் பெருசா இல்ல. பாப்பாவ பிடிக்க வேகமா படியில இறங்கும்போது கால் இடறி விழுந்துட்டான் போல… மண்டையில லைட்டா அடிபட்டு மூனு தையல் போட்டிருக்கு. அதோட உள்ளங்கையில சின்னதா கிராக் ஆகி மாவுகட்டு போட்டு விட்ருக்காங்க, கால்லயும் லேசா தசைபிடிப்பா இருக்கு.” ராம்சங்கரின் விவரத்தை கூறி அழைப்பை முடித்தார் கதிரவன்.
தம்பியின் நிலை கேட்டதும் அவனுக்காக அனுதாபப்பட்டான். ‘ராஜாவா வீட்டுல வந்து இறங்கியிருந்தா, அவன் மனசை மெதுவா பேசி மாத்தி இருக்கலாம். மண்டக்கணம் பிடிச்சவன் புத்தியில்லாம நடந்துகிட்டு, இப்ப அனுபவிக்கிறான்.’ என நினைத்ததும் மகளின் நினைவு வந்தது.
‘தன் பிள்ளையை காப்பாற்றுவதற்காக இவ்வளவு துடித்திருக்கிறான். பின்னர் எப்படி கிருஷ்ணாவிடம் என் ரெண்டு பிள்ளை வேண்டுமா, உன் ஒரு பிள்ளை வேண்டுமா என மனசாட்சி இல்லாமல் கேட்டான். எதைப் பற்றிய பின்விளைவையும் யோசிக்காமல் காரியங்களை செய்துவிட்டு அவதிப்படுகிறான்.
எப்படி வாழவேண்டும் என்கிற நியதியை இவன் அறிந்து கொண்டாலே போதும். அவனை அவனே புரிந்து கொள்வான்.’ பலவகையான எண்ணங்களோடு ஓயாமல் வந்த செல்பேசி அழைப்புகளை ஏற்கத் தொடங்கினான். இவனது குழந்தையை, தம்பியை பற்றி சகோதரிகள் ஒவ்வொருவராய் விசாரித்துக் கொண்டே இருந்தனர்.
“அண்ணே, நான் உடனே பட்டுகுட்டிய பாக்கணும், கெளம்பி வந்துடவா?” சுமதி ஓயாமல் கேட்டுக்கொண்டே இருந்தாள்.
“பாப்பாக்கு ஒன்னும் இல்லடா… நாலு பிள்ளைகளை வச்சுட்டு நீயும் அலையாதே சின்னக்குட்டி!” அரவிந்தனின் அமைதியான பேச்சும் அவளை நிதானப்படுத்தவில்லை.
“நீ பேசாதேண்ணே… நேத்தே அவேனுக்கு இன்னும் நாலு அற இழுத்து விட்டிருந்தா, அந்த பக்கிக்கு இப்படி செய்ய தைரியம் வந்திருக்குமா? நேருல வந்து அவனை நாலு சாத்து சாத்தினாதான் என் மனசு ஆறும். இவேன் கெட்டகேட்டுக்கு புள்ளைகள இவேன் கையில தூக்கி கொடுக்கணுமா? இப்ப சொல்லிட்டேண்ணே… நீங்க சரின்னு சொன்னாலும் நான் குழந்தைகளை அவன்கிட்ட கொடுக்க ஒத்துக்க மாட்டேன். இப்படியே என் மாமியா கூட சோழவந்தான்ல அதுகளை வச்சுட்டு வளத்துட்டு போறேன். மொத அந்த வீணாப் போன எருமைய விரட்டி விடு!” அடக்க முடியாமல் கொட்டி முடித்தாள் சுமதி.
“அங்கே வரத்தான் முடியல, அண்ணிகிட்ட பேசுறேன். ஃபோன குடுண்ணே!” ஓயாமல் சொன்னபிறகே கிருஷ்ணாவை பேச வைத்தான்.
“ஏன் அண்ணி? நீங்களும் ரெண்டு பிள்ளைங்க மட்டும் போதும்னு பெரிய மனசா விட்டுக் கொடுத்தீங்களாம்! அந்த வெள்ளபன்னிக்கு நீங்களும் கொட பிடிக்கணுமா?” மனத்தாங்கலை இறக்கி வைக்க,
“மெதுவா பேசு சுமதி, இது ஹாஸ்பிடல்.”
“அது உங்களுக்கு, நான் வீட்டுல தானே இருக்கேன். நான் பேசுறதை வாங்கிக் கட்டிக்கோங்க, போதும். என் பட்டுகுட்டி என்ன உங்களுக்கு அவ்வளவு ஈசியா போயிட்டாளா? இந்த ஒரு பேச்சை வச்சே நான் அவளை எடுத்துக்கப் போறேன்.” மிரட்டலாய் கூற சோர்வாய் சிரித்தாள் கிருஷ்ணா
“ரெட்டை பிறவிங்கன்னு பேச்சு, செய்கையில கூட காட்டணுமா? அவனை மாதிரியே மிரட்டுறே… போதும்டி, ஒருநாள்ல எவ்வளவுதான் நானும் தாங்குவேன்?” கிருஷ்ணா சகஜமாய் பேசிய பிறகே நிம்மதியான பெருமூச்சு அனைவருக்கும் வந்தது.
“பாப்பா என்ன பண்றா அண்ணி?”
“நல்லா தூங்குறா சுமதி. அதான், நான் வெளியே வந்து பேசுறேன். ஒருமணி நேரத்துலயே கண்ணு முழிச்சு பார்த்துட்டா, இப்ப பயமில்ல.” என்றதும் அவளின் மனமும் இலகுவாகிப் போனது.
ஆனாலும் சுதர்சன் மனம் கேளாமல் புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறான் என்பதையும் சொல்லி பேச்சினை முடித்தாள் சுமதி.
“ரவி எனக்கு ஒரு செட் டிரஸ் வேணும். அப்படியே பாப்பாவோட ஸ்வெட்டர், சாக்ஸ், குல்லா கொண்டு வந்துடுங்க. உள்ளே சரியான குளிரு! இப்பவே பாப்பா மூணு தடவை ஈரமாக்கிட்டா!”
“ஏன், அவளுக்கு பேம்பர் போடலையா?”
“இல்லங்க… பாப்பா தொடை எல்லாம் சிவந்து போயிருக்கு இன்ஃபெக்சன்னு சொல்றாங்க! அது போட்டா இன்னும் ஸ்பிரெட் ஆகும்னு ஃபுல்லா காட்டன் தான் யூஸ் பண்றாங்க… உடம்புக்கு கூட வொயிட் டவல்தான் சுத்தியிருக்கு. ஈரமான உடனே மாத்திடுறாங்க!” கிருஷ்ணா சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் வீல்சேரில் அமர்ந்துகொண்டு லிஃப்டில் அங்கே வந்து சேர்ந்தான் ராம்சங்கர்.
அவனை இறக்கிவிட்டு மருத்துவமனை ஊழியர் சென்றுவிட, கதிரவனும் முகிலனும் பின்னோடு வந்து சேர்ந்தனர். இருவரும் கிருஷ்ணாவிடம் குழந்தையைப் பற்றிய விசாரிப்பை மேற்கொண்டு கேட்டுவிட்டு அமைதியாக நிற்க, ராம்சங்கர் தலைகுனிந்து அமர்ந்திருந்தான்.
“நான் உள்ளே போறேன் ரவி! நீங்க வீட்டுக்கு போயி டிரெஸ் கொண்டு வந்துடுங்க!” என்றபடி கிருஷ்ணாவும் உள்ளே செல்ல முயற்சிக்க, “சாரி அண்ணி!” நயந்த குரலில் பேச ஆரம்பித்தான் ராம். ஏனோ யாரையும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
“உன்கிட்டயும் சாரி கேக்குறேண்ணே! நான் எதுவும் வேணும்னு பண்ணல… குழந்தைக்கு இந்தளவுக்கு முடியாமப் போகும்னு நினைக்கல, என்னை நம்புண்ணே!” என்றவன் இந்தமுறை அரவிந்தனை ஏறிட்டு பாவமாய் பார்த்தான்.
“என் ஃபிரெண்ட் வீட்டுல தங்கியிருந்தேன். அங்கே யாரும் இல்ல, அதான் ஹோட்டலுக்கு போறதுக்கு பதிலா அங்கே தங்கிட்டேன். யாருமே வேண்டாம்னு சொல்லிட்டு நம்ம வீட்டுக்கு வர்றதுக்கு ரொம்ப தயக்கமா இருந்துச்சு. அதோட பயமும் கூட… எல்லாருமா சேர்ந்து என்னை நிக்க வச்சு கேள்வி கேட்டா என்ன பதில் சொல்றதுன்னு தெரியல! ஆனா குழந்தைகளை பாக்கணும்னு நினைச்சேன்.
அதுக்காகத்தான் வந்தேன். ஆனா யாருக்குமே நான் தேவையில்லாதவனா இருக்கேன்னு தெரிஞ்சதும், என் புள்ளைங்க மட்டும் ஏன் இங்கே இருக்கணும்னு ஒரு வேகம் வந்துடுச்சு. என்னோட கூட்டிட்டு போயி வளக்கலாம்னு உங்க எல்லார்கூடயும் பேசும்போதுதான் முடிவு பண்ணேன்.
யோசிக்காம எடுத்த முடிவுல பிடிவாதமா நின்னது என்னோட மடத்தனம். எனக்கு புரிய வைக்க நீங்க சொன்னதை எல்லாம், எனக்கு எதிரா இருக்கிறதுக்காக நீங்க எல்லாரும் சேர்ந்து பேசுறதா அர்த்தம் பண்ணிகிட்டேன்.!” இறங்கிய குரலில் சொல்லிக் கொண்டே வர, அமைதியாக நின்றனர்.
“இப்ப மட்டும் எல்லாமே தெளிவா புரிஞ்சு போச்சாடா?” அரவிந்தனே கோபத்தை அடக்கிக்கொண்டு கேட்டான்
“தெரியல… ஆனா தப்பு பண்ணிட்டேன்னு உணர முடியுது. என் குழந்தைகள பார்க்கிறதுக்குதான் வந்தேன். என்னோட ஈகோ, அண்ணி சொல்றதைக் கேட்டு சமாதானமா போக விடல! ஏதோ ஒரு வேகம் என்னை அழுத்திப் போட்டதுல பாப்பாவை தூக்கிட்டு வந்துட்டேன்.” பயத்துடன் கிருஷ்ணாவின் முகம் பார்த்தான் ராம்.
‘மேலே சொல்.’ எனும் விதமாக அவள் அமைதியாக நிற்க, “ஃபோனை எதுக்குடா ஆஃப் பண்ணி வைச்சே? உன்னால எத்தனை பேர் எத்தனை இடத்துல அலைஞ்சு கஷ்டப்பட்டாங்கன்னு தெரியுமா?” கதிரவன்தான் கடிந்து கொண்டார்
“ஃபோன் கீழே விழுந்து உடைஞ்சு போச்சு மாமா… வேகமா கார்ல ஏறுன சமயத்துல ஃபோன் கீழே விழுந்து, அது தெரியாம நானும் அதுமேல கால் வச்சு ஃபோன் மொத்தமா போச்சு!” ராம் சொல்ல, “சுத்தம்.” என முணுமுணுத்தார் முகிலன்.
“அந்த வீட்டுக்கு போனதும் பாப்பா முழிச்சுட்டா… மொதல்ல வீட்டை சுத்திப் பார்த்து அழுதா, அப்புறம் என்னை பார்த்தும் சிரிச்சிட்டா!” என்றபோதே அவனின் முகமும் மெல்ல சிரிப்பைக் காட்டியது.
“பக்கத்துக்கு டீ கடையில பால் வாங்கி ஷிப்பர்ல ஊத்தி குடிக்க வச்சேன். சமத்தா குடிச்சா! ஆனா அரைமணி நேரத்துல வெளியே எடுத்திட்டா… அடுத்து டயோரியாவா போக ஆரம்பிச்சிடுச்சு! பேம்பர்ஸ் வாங்கி மாட்டினதும் ரொம்பவே அழ ஆரம்பிச்சா. வெளியே கூட்டிப் போயி விளையாட்டு காட்டியும் தொடர்ந்து அழுதுட்டே இருந்தா… ஒருவேளை தண்ணி தாகம்னு மினரல் வாட்டர் குடிக்க வச்சேன். அது குடிச்சதும் வாந்தி அதிகமாயிடுச்சு!” என்றபோது தலையில் அடித்துக் கொண்ட அரவிந்தன்,
“பாப்பாக்கு இதெல்லாம் இன்னும் பழக்கப்படுத்தலடா!” என்று கனன்றான்.
“மடையா, மடையா! உங்க அக்காளுக்கு ஃபோன் அடிச்சு கேட்டிருந்தா கூட சொல்லி இருப்பாளேடா!” பல்லைக் கடித்து பார்வையால் எரித்தார் கதிரவன்.
“உன் வீம்புக்கு புள்ளை உசிருதானா கிடைச்சது? குழந்தைங்கன்னா அவ்ளோ ஈஸியாப் போச்சாடா பரதேசி!” மேற்கொண்டு திட்ட வந்ததை அடக்கிக்கொண்டார் முகிலன்.
“பாப்பா அழறதைப் பார்த்து எனக்கு ஒன்னுமே ஓடல மாமா… சொல்லப்போனா அவ பேர் கூட மறந்து போயி வாயில வந்த பேரைச் சொல்லி ரிஜிஸ்டர் பண்ணேன். யாரோட நம்பரும் எனக்கு ஞாபகத்துல இல்ல. அதான் ஹாஸ்பிடல்ல நம்பர் கேட்டப்பவும் மாஸ் மசாலா கம்பெனிக்கு அடிச்சு சொல்லச் சொன்னேன். நம்ம வீட்டு நம்பரே எனக்கு மறந்து போயிடுச்சு மாமா! நான் என்ன செய்யட்டும்?”
“சின்ன பிள்ளைக்கு ஒத்துக்கலன்னா, இப்படிதான்டா இழுத்து விடும். உனக்கு எப்படி அடிபட்டது? அதையும் சொல்லி முடி!” முகிலன் கேட்க,
“நான் இருந்தது மாடிவீடு மாமா… ரெஸ்ட்ரூம் போறப்போ வாசக்கதவ சாத்தாம, பாப்பவ ஷோபால உக்கார வைச்சிட்டு போயிட்டேன். எப்படியோ கீழே இறங்கி ஸ்டெப்ஸ்ல இறங்க ஆரம்பிச்சுட்டா! வெளியே வந்து பார்த்ததும் பதறிப் போயி பாப்பாவ தூக்கறதுக்குன்னு நான் இறங்கின வேகத்துல கால் சிலிப் ஆகி குப்புற விழுந்துட்டேன். நல்லஅடி எனக்கு. நான் விழுந்த சத்தத்துல அரண்டு போயிதான் பாப்பா கீழே விழுந்து மயக்கமாயிட்டா… அப்புறம் அவசரமா அவசரமா ஆட்டோல நானா வந்து அட்மிஷன் போட்டேன்.
உங்களுக்கு சொல்லும் போதுதான் எனக்கு டிரீட்மென்ட் குடுக்க உள்ளே அழைச்சிட்டு போனாங்க. நீங்க வர்ற வரைக்கும் இங்கே வெயிட் பண்றேன்னு சொன்னேன். சிஸ்டர்ஸ் தான் எப்படியும் வெளியேதான் நீங்க உக்காரணும் அதுக்கு பதிலா டிரெஸ்ஸிங் போட்டுடலாம்னு எக்ஸ்-ரேக்கு கூட்டிட்டுப் போயிட்டாங்க!” முழுதாக விளக்கம் கூறி முடிக்கும் பொழுது பரிமளம் அங்கே வந்து சேர்ந்தார்.
மருமகளின் முகத்தில் தெளிவை பார்த்ததும் நிம்மதியாகிப் போனார். இறுக்கம் தளர்ந்த ஆண்களின் முகமும் சூழ்நிலை அத்தனை பாதகமில்லை என்று சொன்னது.
“பெருமாளே… நடந்தே மலைக்கு வந்து முடி காணிக்கை செலுத்துறேன்யா!’ மனதிற்குள் வேண்டுதலும் வைத்து முடித்து விட்டு, அவரின் பார்வை மகன்களின் மீது திரும்பியது.
‘இவனுக்கு தம்பியின் மீது கோபம் இல்லையா? இத்தனை அருகில் நின்று கொண்டிருக்கிறானே?’ என்று கேள்வியாக அரவிந்தனைப் பார்த்தார்.
பின்னர் சின்னமகனைப் பார்த்து யாரும் எதிர்பாரா வண்ணம் அவனது கன்னத்தில் அடுத்தடுத்து அறைந்து தள்ளினார்.
“அம்மா, விடு அவன!” என அரவிந்தனும்,
“அத்தே, ஆஸ்பத்திரில வச்சு என்ன இது?” என்று மாப்பிள்ளைகள் தடுத்தாலும் பரிமளம் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.
வேகமாய் வந்த கிருஷ்ணாக்ஷி அவரது கைகளை பிடித்துக் கொண்டு, “அவருக்கு ஏற்கனவே அடிபட்டிருக்கு. நீங்களும் அடிச்சு வலிய ஏத்தி வைக்கணுமா?” என தடுத்தாள்.
“இவனுக்கு பாவம் பார்க்காதே கிருஷ்ணா! பச்சமண்ண தூக்கிட்டு போக இவனுக்கு எப்படி மனசு வந்தது? அப்படியென்ன பொல்லாப்பு இவனுக்கு நாம பண்ணிட்டோம்? இல்ல, நீதான் இவனுக்கு விரோதமா எதுவும் பேசி இருக்கியா? இவன் கெட்டு சீரழிஞ்சதுக்கு சாட்சியா வந்ததை பாதுகாப்பு கொடுத்து பத்திரம் பண்ணினதுக்கு, உங்களுக்கே இவன் ஆட்டம் காமிக்கிறானா?
இனி அம்மா, அண்ணன், குடும்பம்னு வீட்டு வாசப்படிய மிதிச்சிடாதேடா! இதுவே உன்னை, நான் பாக்கிறது கடைசியா இருக்கட்டும். அரைநாள் கூட பிள்ளையை வச்சு பாக்க துப்பில்ல… உனக்கு ரெண்டு பிள்ளைங்க வேணுமா? விதைச்சது நீயா இருந்தா, அப்பனாகிடுவியாடா? மொதல்ல மனுசனா வாழ முயற்சி பண்ணு. அப்புறம் தகப்பன் ஸ்தானத்துக்கு யோசிக்கலாம்.” ஆவேசமாக ஆரம்பித்து, அறிவுரையாக முடித்து விட்டு மருமகளிடம் திரும்பினார்.
“என் பேத்தியை கண்ணுல காட்டு தாயி! என் உசிரே பதறிட்டு இருக்கு!” மேலும் மூக்கு சிந்த, செவிலியிடம் கெஞ்சிக் கூத்தாடி உள்ளே அழைத்து சென்றாள் கிருஷ்ணா.
“அடிக்கடி இப்படி வரக்கூடாதும்மா. எந்த பேஷண்டுக்கும் இப்படி ஆள் வந்ததில்ல… நீங்கதான் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வந்துட்டு போயிட்டு இருக்கீங்க!” செவிலியின் நச்சரிப்பு ஏறிக்கொண்டே போக கண்களால் கெஞ்சி மாமியாரை வெளியே அழைத்து வந்தாள் கிருஷ்ணா.
“ஆத்தி… எம் பேத்தி உடம்புல எம்புட்டு ஒயரு! இந்த சின்ன உசுரு தாங்குமா கிருஷ்ணா?” அழுதபடி வெளியில் வந்தவர்,
“எல்லாம் இந்த தறுதலையால வந்தது. உன்னை யாருடா வரச் சொன்னா? ஒழிஞ்சு போடா!” மீண்டும் ராம்சங்கரை அடிக்க வந்தார்.
“அட சும்மா இரும்மா! பொசுக்கு பொசுக்குன்னு கைய நீட்டிட்டு இருக்க! ஆமா, நீ யாரு கூட வந்தே? தனியா வர்ற அளவுக்கு உனக்கு தைரியம் வந்திடுச்சா?” விளையாட்டாய் கேட்டான் அரவிந்தன்.
“ஏன் வர மாட்டேனா? எனக்கு யாரோட துணையும் தேவையில்ல” புதிதாய் முறுக்கிக் கொண்டார் பரிமளம்.
“இது எப்போ இருந்து?” சிரிப்போடு பார்க்க,
“சிரிக்காதே அரவிந்தா! யாருக்கும் தெரியாம தான் வந்தேன். வீட்டுல சொன்னா விடமாட்டாங்க! நீயும் ஒத்துக்க மாட்ட… அதான் வெளியே வர்றாப்புல முக்கு ஆட்டோவ பிடிச்சிட்டு வந்துட்டேன். காசு கூட வீட்டுல போயிதான் கொடுக்கணும். அவேன் கீழே நிக்கறான்!” என்றதும்,
“ஏதேது, பேத்தி பாசம் எங்க ஆத்தாவை வீராங்கனை ஆக்கிடுச்சு. இப்ப என்னை, நீ பத்திரமா கூட்டிட்டு போவியாம், வா போலாம்!” சூழ்நிலையை சகஜமாக்கிய அரவிந்தன்,
“நான் வீட்டுக்கு போயி டிரெஸ் எடுத்துட்டு வர்றேன் சாலா!” என்றுவிட்டு மாப்பிள்ளைகளின் முகம் பார்த்தான்.
“நாங்க இவேன் கூட இருக்கோம் மாப்ள, நீ போயிட்டு மெதுவா வா! ஆள் மாத்தி இருந்துக்கறோம்.” முகிலனும் கதிரவனும் சேர்ந்தே சொல்ல,
“வேணாம்ய்யா… இந்த கழிசடைய சேர்த்துக்காதீங்க!” என்று உறுதியாய் நின்றார் பரிமளம்.
“அம்மா ப்ளீஸ், நீயே இப்படி பேசினா, நான் எங்கே போறது?” முதன்முறையாக வேதனையோடு கூறினான் ராம்.
“எங்கேயோ போ… எந்த சாக்கடையில் விழுந்து பொரண்டியோ அங்கேயே போய் குடியிரு, இங்கன மட்டும் வந்துறாதே!” என்றவர் மருமகளிடம் திரும்பி
“இங்காரு கிருஷ்ணா… உனக்கு மூனு பிள்ளைங்க இருக்காங்க, அதை மட்டும் மனசுல வச்சுக்கோ! இவேன் மிரட்டுறான், கேக்குறான்னு ஒத்த பிள்ளையை தூக்கி கொடுக்குற முடிவுக்கு எல்லாம் வந்துடாதே! வீணாப் போனவேன், எல்லாரையும் அழ வச்சு பாக்கத்தான் ஆட்டங் காமிப்பானே ஒழிய காரியம் ஒன்னும் இருக்காது. வெத்து பட்டாசு, கண்டுக்காதே!” கோபமாய் கொட்டிவிட்டு விருட்டென்று நடையைக் கட்டினார்.
“அண்ணே, நீயாவது அம்மாக்கு எடுத்துச் சொல்லுண்ணே!” கெஞ்சலாக ராம் கேட்க, பெருமூச்சோடு தம்பியைப் பார்த்தான் அரவிந்தன்.
“அம்மா சொன்ன மாதிரி, மொத மனுசனா வாழப் பழகிக்கோடா! பொறுமையா இரு, எந்த காரியத்துக்கும் பின்விளைவு இருக்குன்னு யோசிச்சு முடிவெடு! அதுவே உனக்கு எப்படி வாழணும்னு கத்துக் கொடுக்கும். இப்போதைக்கு விலகியே இரு! அதுதான் எல்லாருக்கும் நல்லது. வீணா எல்லார் வாயிலும் விழுந்து திட்டு வாங்கிட்டு இருக்காதே!” அமைதியாய் அழுத்தமாய் கூறிவிட்டுச் சென்றான்.
பாசத்தை இழந்த வேதனையில், தன்னை விட்டுச் செல்பவர்களை ஏக்கத்தோடு பார்த்தான். “அப்ப நான் வீட்டுக்கு வரக்கூடாதா? எனக்கு யாருமே இல்லையா மாமா?” தவிப்புடன் கேட்க,
“இந்த குழந்தபுள்ள கேள்விக்கொன்னும் குறைச்சல் இல்லடா!” முகிலன் கடிந்து கொள்ள,
“நீ வளரேவே இல்லைடா மாப்ள… என்னத்த வெளிநாட்டுல தங்கி வேலை பார்த்து தனியா வாழ்ந்து வெட்டி முறிச்சியோ?” மனத்தாங்கலோடு முடித்துக் கொண்டார் கதிரவன்.
இதையெல்லாம் பார்த்தும் கேட்டும் கொண்டிருந்த கிருஷ்ணாவிற்குமே பாவமாகிப் போயிற்று! ராம்சங்கரின் மீது வரையறுக்க முடியாத கோபம் இருந்ததுதான். ஆனால் தனது இயலாமையை, மனதை முழுதாய் வெளிப்படுத்திய பின்பும் அவன் செய்த தவறை மீண்டும் குத்திக்காட்டிப் பேசுவதில் பலன் எதுவும் இல்லை என்பதை புரிந்து கொண்டு தன்னைத்தானே சமாதானப்படுத்தியும் கொண்டாள்.
வீணாக கேள்வி கேட்டு, குற்றம் சாட்டி அவனை வேதனைப்படுத்தி தன்னையும் வருத்திக்கொள்ள இவளுக்கு சுத்தமாய் விருப்பமில்லை. ‘அடுத்தடுத்த காரியங்கள் செய்வதற்கு வரிசைகட்டி நின்றிருக்க, குழந்தையின் உடல்நலத்தையும் கவனிக்க வேண்டிய அத்தியாவசிய நேரத்தில் மீண்டும் சண்டை சச்சரவுகள் வேண்டாமே!’ என்று நடந்ததை மனதிற்குள் புதைத்துக் கொண்டு அவனைப் பார்த்து பேச ஆரம்பித்தாள்.
“மனசை தளரவிடாதீங்க ராம்… உங்க அண்ணன் சொன்ன மாதிரி பொறுப்பா இருக்க கத்துகிட்டா, வாழ்க்கையோட நெளிவு சுளிவு நமக்கு தானா தெரியவரும். மனுசங்களோட மனசை படிச்சு பாக்கிற தெளிவு பிறக்கும். அந்த நேரத்துல நம்ம தவறை உணர்ந்து அடுத்தவங்களோட வலியை புரிஞ்சுக்கிற பக்குவமும் வரும். அந்த பக்குவம் சுயநலமா எதையும் பார்க்கவோ யோசிக்கவோ சொல்லாது.” அமைதியாக கூறிய கிருஷ்ணாவை புரியாமல் பார்த்தான்.
“நீங்க என்ன சொல்ல வர்றீங்கண்ணி?”
“சிம்பிளா சொல்லவா? உங்க பக்குவப்பட்ட மனசு, உங்க குழந்தைகளை நீங்க மட்டுமே வளர்க்கணும்னு நினைக்காது. என்கூட தனியா வளந்து வர்றதை விட பெரியவங்க அரவணைப்புல, அவங்க அன்பு பாசம் தர்ற நிழல்ல சுகமா வளரட்டும்னு நினைக்கும். இப்ப புரியுதா?” எளிமையாக கூறியவளை மெச்சுதலாகப் பார்த்தார் கதிரவன்.
“ரொம்ப அழகா சொல்லிட்டம்மா… இதுக்கு மேல யார் என்ன சொல்லி புரிய வைக்க முடியும்?” என்றபடி ராமின் முகத்தைப் பார்த்தார்.
“ம்ம்… ஆனா, எனக்குள்ள இப்ப என் பிள்ளைகளை பார்க்கணும்ங்கிற துடிப்பு கூட இல்ல அண்ணி. பாப்பாக்கு இப்படி ஆகிடுச்சேங்கிற பயத்துல அவங்களை நான் மறந்துட்டேன். இப்ப குழந்தைகளை கூட்டிட்டு போகச் சொன்னா நான் மாட்டேன்னு சொல்லிடுவேன். என்னால அரைநாள் கூட ஒரு குழந்தையை வச்சு சமாளிக்க முடியலையே! என்னோட பாசம், வீம்பை விட இப்ப பயம்தான் அதிகமா இருக்கு.” தனது நிலையை தெளிவாக கூறினான்.
“இதுவும் நல்லதுக்குன்னு நினைங்க ராம்! இந்த பயமே உங்க மாற்றத்துக்கான தொடக்கமா கூட இருக்கலாம். இனிமே கொஞ்சம் கொஞ்சமா மாறிடுவீங்க! அப்போ வாங்க… உங்க பிள்ளைகளை நீங்க தாராளமா பார்க்கலாம். ஆனா ஒரே ஒரு கண்டிசன். எடுத்த எடுப்புலயே அப்பாங்கிற அறிமுகத்தோட அவங்ககிட்ட வரப் பார்க்காதீங்க! அது உங்களுக்கும் உங்க பிள்ளைகளுக்கும் இடையே உருவாகப் போற உறவை விலக்கி வைச்சிடும்.”
“புரியுது அண்ணி… அவங்களுக்கு புரியுற மாதிரி சொல்லணும்னு சொல்றீங்களா?”
“அப்படியும் சொல்லலாம். இல்ல, சொல்லாம கூட இருக்கலாம். அது, குழந்தைகள் எடுத்துகிற பக்குவத்தை பொறுத்து இருக்கு. நம்பிக்கையோட இருங்க! எல்லாம் நல்லபடியா நடக்கும். உங்களை யாரும் வெறுக்க மாட்டாங்க. ஆனா இப்போதைக்கு சூழ்நிலை சரியில்லை. அதை மட்டுமே மனசு நிறுத்துங்க!” என தன்மையாக சொன்ன நேரத்தில்,
“பேபி பவிகா அலைஸ் பிரணவி அட்டெண்டர் இருக்காங்களா?” செவிலி அழைக்க, உள்ளே சென்றாள் கிருஷ்ணா.
“பாப்பா முழிச்சுட்டா போல… நான் உள்ளே போறேன் அண்ணே, பார்த்துக்கோங்க!” என்றபடி ராம்சங்கரை கனிவாக பார்த்துவிட்டுச் சென்றாள்
வெளியில் செவிலியிடம் குழந்தையை பார்ப்பதற்கு ராம் எத்தனையோ விதமாய் கெஞ்சிக் கேட்டும், கண்டிப்பாக முடியாதென்று மறுத்து விட்டார். “நீங்க ஒரு பேசன்ட் உங்களை அலவ் பண்ண முடியாது. உங்க வார்டுக்கு போங்க சார்!” விரட்டாத குறையாக அவனை அனுப்பி விட்டனர்.
“அட, வெசனப்படாம வா மாப்ள! இன்னைக்கு இல்லன்னா நாளைக்கு பார்த்துக்கலாம். நாளைக்கு உனக்கும் பாப்பாக்கும் டிஸ்சார்ஜ் சொல்லிட்டாங்க!” கதிரவன் கூறியதை அடுத்து அரைகுறை மனதோடு அங்கிருந்து கிளம்பினான் ராம்சங்கர்.
தனது அண்ணன், அண்ணி கூறியதைப் போல வாழ்ந்து காட்ட வேண்டுமென்கிற உத்வேகம் தன்னால் அவன் மனதில் வந்திருந்தது. அந்த எண்ணமே வருங்காலத்தின் மீதான புதியதொரு நம்பிக்கையை விதைத்து விட, வாழ்க்கையை ஒரு நேர்கோட்டில் இனி சந்திப்பதென்று தீர்மானத்தை எடுத்தான்.
புதிய நம்பிக்கை புதிய தீர்மானம், சோர்ந்த மனதில் உற்சாகத்தை கொடுத்ததில் அவன் தேடி வந்த பூந்தளிர்களை பார்க்க வேண்டும் என்கிற ஆசை கூட அதுவாய் அடங்கிப் போனது.
புதிய மனிதனாக நல்லதொரு பண்பாளனாக தன்னை திருத்திக் கொண்ட பின்னரே அவர்களின் முன் நிற்க வேண்டும் என்கிற உறுதிமொழியையும் தன்னால் எடுத்திருந்தான்.
அதுவரையில் அவனது பூந்தளிர்கள் தனது அண்ணனின் அரவணைப்பில் சுகமாய் ஆடட்டும் எனும் நினைவே அவனுக்கு பெருமளவு ஆசுவாசத்தை தந்தது.
மனதிற்குள் நம்பிக்கைத் திரியினை நூலாகப் பற்றிக்கொண்டு வாழ்வில் மேன்மையடையும் முயற்சியில் இறங்கியிருக்கிறான். சுகமாய் மேலேறி சுபமாய் வெற்றி பெற்று வாழ்க்கையை தன்வசப்படுத்திக் கொள்ளட்டும்.
வளரப்போவது பூந்தளிர்கள் மட்டுமல்ல… ஒரு மனிதனும் தகப்பனும் கூட! நம்பிக்கையோடு வளரட்டும், வாழ்வினில் வெற்றி காணட்டும் என்று மனமார்ந்த வாழ்த்துகள் கூறி விடைபெறுவோம் நண்பர்களே. நம்பிக்கை தானே எல்லாம்!!!