பூந்தளிர் ஆட… 7

பூந்தளிர்- 7

தஞ்சாவூரை நெருங்க ஆரம்பிக்கும் பொழுதே ஹனியாவிற்கு தேகமெங்கும் வியர்த்துக் கொட்டத் தொடங்கி இருந்தது.

“புரோகிராம்ல சின்ன சேஞ்ச் பண்ணலாமா சில்? நாம சென்னை போயி ஒன் வீக் ரெஸ்ட் எடுத்துட்டு எங்க வீட்டுக்கு போவோமா?” சில்வியாவிடம் அந்தர்பல்டி அடித்தவளாக கேட்ட ஹனியாவை முறைத்துப் பார்த்தாள் சில்வியா.

“டோன்ட் ப்ளேயிங் வித் மீ ஹனி? நான் ஸ்டே பண்ணப்போற பீஜி-ல பேபீஸ் நாட் அலவ்டுன்னு ரூம் புக் பண்ணும்போதே சொன்னதை மறந்துட்டியா? நீ வேணும்னா உன் குட்டீஸ் கூட தனியா ஹோட்டல்ல ரூம் எடுத்து தங்கிக்கோ… என்னை விட்ருடி! என் டிரெஸ், ஹாண்ட்பேக், என் ஸ்கின் எல்லாமே உன் குட்டீஸ் ஸ்மெல்தான் வருது… மீ பாவம்!” கோபத்தில் ஆரம்பித்து அரண்டவாளாக முடித்தாள்.

சில்வியா, தான் பணிபுரியும் நிறுவனத்தின் வெளிநாட்டு பணி நியமனங்களை முடித்துக் கொண்டு, மீண்டும் சென்னையில் பணியினைத் தொடர வந்திருக்கிறாள்.

ஹனியாவிற்கும் அதே நிறுவனத்தில் வேலை. ஆனால் பிரசவத்திற்கென்று இருக்கும் விடுப்பு இன்னும் முடியாததால் தற்சமயம் இவள் வெட்டி ஆபீசர். இன்னும் ஆறு மாதம் விடுப்பு முடிந்த பிறகு மீண்டும் சென்னை நிறுவனத்தில் வேலையைத் தொடர வேண்டும்.

பணி நிமித்தமாக ஒப்பந்த அடிப்படையில் ஆறு மாதம் லண்டனுக்கு ஒன்றாகச் சென்ற தோழிகள், அதிகப்படியாக நிறுவனம் கொடுத்த வேலைப்பளுவிலும் கொரோனா கட்டுப்பாட்டிலும் சிக்கிக்கொண்டு, நான்கு வருட வெளிநாட்டு வாசத்தை அனுபவித்து விட்டு இப்போதுதான் இந்தியாவிற்கு திரும்பி இருக்கின்றனர்.

சில்வியாவின் பூர்வீகம் விசாகப்பட்டினம். நகரவாசிகளாக மாறியிருந்த பெற்றோரின் கெடுபிடிகள் அதிகமில்லாத காரணத்தால் தனது இஷ்டம் போலவே முடிவுகளை எடுக்கும் சுதந்திரம் அவளுக்கு எப்போதும் உண்டு.

ஹனியாவிற்கு முற்றிலும் நேர்மாறான குடும்பச் சூழ்நிலை. தஞ்சாவூருக்கு அருகே உள்ள கச்சமங்கலம் பூர்வீக கிராமம். அப்பா ஹக்கீம் விவசாயத்தை பார்க்க, அம்மா ஜன்னத் வீட்டில் இருந்தபடியே மீன்களை பதப்படுத்தி கச்சல்(கருவாடு) போட்டுக் கொடுக்கும் தொழிலைச் செய்து வருகிறார்.

பெரிய குடும்பத்தின் மூத்த மகனாகப் பிறந்த ஹக்கீம், தனக்கு அடுத்ததாகப் பிறந்த ஆறு சகோதரிகளின் கல்யாணம் காட்சியை முடித்து விட்டு, மாப்பிள்ளையாக மணமேடையில் அமரும்போது அவருக்கு வயது நாற்பது, ஜன்னத்திற்கு முப்பத்தியெட்டு.

இளம் விதவையான ஆதரவில்லாத ஜன்னத்தை பார்த்து, பழகி பிடித்துப் போனதில், வேண்டாமென்று விலக்கி வைத்த திருமணத்தின் மூலம் உறவுகளின் சம்மதத்தோடு கரம் பிடித்தார்.

இவர்களது திருமணத்தின் போது ஹக்கீமின் ஆறு சகோதரிகளும் குடும்பம் மற்றும் பொருளாதரத்தில் மிக நல்ல நிலைமையில் இருக்க, அண்ணணின் புதுக் குடித்தனத்திற்கு மட்டுமல்லாது அவருக்கு பிறந்த பெண் குழந்தைக்கும் சேர்த்தே தங்களது பாச பரிவர்த்தனைகளை அள்ளி வழங்கத் தொடங்கினர்.

எதிலும் சிறந்த ஒன்றை மட்டுமே அண்ணன் மகளான ஹனியாவிற்கு கிடைக்கும்படியாகச் செய்து மகிழ்ந்தனர். பிறந்து மூன்று வருடங்கள் மட்டுமே அன்னையின் மடியில் வளர்ந்தாள் ஹனியா.

அதன் பிறகு அவளின் வளர்ப்பு அத்தைகளிடத்தில் மாறிப் போனது. பனிரெண்டு வருட பள்ளிக் கல்வியை சென்னையில் உள்ள மூன்று அத்தைகளின் வீட்டில், மாறி மாறி வளர்ந்து முடித்தாள்.

கல்லூரிப் படிப்பை ஹைதராபாத் அத்தை வீட்டில் தொடர்ந்தாள். விடுமுறைக்கு வயநாடு அத்தை வீட்டிற்கு சென்று தங்கினாள். எங்கும் எப்படியும் சிறகை விரித்துச் செல்லும் பட்டாம்பூச்சியாக வலம் வந்தாள் ஹனியா.

முதுநிலை பட்டயப் படிப்பிற்காக அவளை வெளிநாட்டிற்கு அழைத்துக் கொண்டாள் அமெரிக்கா அத்தை. இரண்டு வருடம் கவனத்துடன் படித்ததில் ஹனியாவிற்கு அங்கேயே வேலை வாய்ப்பு கிடைக்கப் பெற ஹக்கீமும் ஜன்னத்தும், மகளை அமெரிக்காவிற்கு வந்து பார்த்து விட்டுச் சென்றனர்.

மகளை நினைத்து அத்தனை பெருமை பெற்றவர்களுக்கு! தங்களின் செல்லச்சீமாட்டி மூச்சினை இழுத்து விட்டால் கூட பதபதைத்து வெண்சாமரம் வீசத் தொடங்கி விடுவர்.

அனைவரின் வீட்டிலும் செல்லப்பிள்ளையாக வளர்ந்தவளுக்கு கண்டிப்பு, அதட்டல், அறிவுரையைத் தவிர மற்றவைகள் எல்லாம் நிரம்பவே கிடைத்தன.

எல்லோர் வீட்டிலும் இலக்கில்லாமல் இவள் வளர்ந்த சூழ்நிலையே, எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்கிற தவறான கணிப்பினைக் கொடுத்திருந்தது. குடும்ப வாழ்க்கையின் மகத்துவத்தை அதன் அறநெறிகளை அறியத் தவறியிருந்தாள் ஹனியா.

ஜன்னத்தின் இதயநோய் சிகிச்சைக்காக இந்தியா வந்தவள் தனது வேலையை சென்னைக்கு மாற்றிக் கொண்டு ஒரு வருடம் அங்கேயே தங்கினாள். அந்த சமயத்தில் கிடைத்த சில்வியாவின் தோழமையும் சென்னையின் நாகரீகமும் வெளிநாட்டு வாழ்க்கையை இங்கும் வாழலாம் என்கிற கண்மூடித்தனமான தைரியத்தை கொடுத்தது.

ஆறுமாத திட்டப்பணிக்காக(புராஜெக்ட்) லண்டன் செல்லும் போது அந்த எண்ணம் வலுப்பெற்று தனக்கேற்ற ஜோடியைத் தேடிக் கொண்டாள் ஹனியா. தனது இஷ்டம் போலவே கதகளி ஆடி தீனி போட்ட மூன்று வருட இளமைக்கு வெகுமதியாக இரட்டை குழந்தைகளை பரிசாக ஏந்திக் கொண்டு தற்போது மீண்டும் தாய்நாட்டுக்கே வந்து விட்டாள் இருபத்தியேழு வயது ஹனியா.

நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தவளை காரின் ஹாரன் ஒலித்து நிகழ்விற்கு அழைத்து வந்தது. எதையும் எதிர்கொள்ளும் மனநிலையோடு தனது வீட்டின் கதவைத் தட்டினாள் ஹனியா.

மனம் நிறைந்த கலவரத்துடன் வீட்டு வாசலில் வந்து நின்ற பெண்களை விழி விரித்துப் பார்த்து ஆனந்தித்தனர் அவளின் பெற்றோர்.

“ஏலே… ஹனி புள்ள… முன்னாடியே சொல்லியிருந்தா உங்க அத்தாவ அனுப்பி வச்சிருப்பேனே தங்கம்!” பூரிப்புடன் மகளின் முகம், தலை தடவி பேசிய ஜன்னத்,

அருகில் இருந்த சில்வியாவைப் பார்த்து, “ஃபோனுல பேசுறே சில்வியா பொண்ணு நீதானா பாப்பா?” அன்போடு கேட்டார்.

“அப்புறம் கேள்வி கேக்கலாம்… மொதல்ல உள்ளார கூப்புடு புள்ள…” மனைவியை அதட்டியவராக பெண்களை வரவேற்றார் ஹக்கீம்.

“ஏலே செல்லத்தங்கம்… அதே விளையாட்டுப் புள்ளையா சொல்லாம கொள்ளாம வந்து நிக்கிறியேடா!” மகளைக் கொஞ்சி முடித்து,

சில்வியாவைப் பார்த்து, “உள்ளே வா ராசாத்தி!” என அழைத்த பிறகே, இருவரின் கைகளிலும் ஏந்தியிருந்த மழலைகளை கவனித்தார்.

ஒரேயொரு நொடிதான் சிறியவர்களைப் பார்த்து பெரியவர்கள் திகைத்து நின்றது. பின்னர் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு சகஜமாயினர் ஹக்கீமும் ஜன்னத்தும்…

இம்மியளவு கூட இருவரின் கையில் இருக்கும் மழலைகள் தங்களது மகள் பெற்றெடுத்த முத்துக்கள் என யோசிக்க அவர்களுக்கு மனம் வரவே இல்லை.

உடன் வந்திருக்கும் தோழிக்கு பிறந்த குழந்தைகள் என நினைத்தே வரவேற்றார் ஹக்கீம். இதற்கு முன்னர் பார்த்து பழகியிறாத பெண்ணிடம் எடுத்த எடுப்பில் குழந்தை, குடும்பம் பற்றி கேட்கத் தயங்கி நின்றார் ஜன்னத்.

ஹக்கீமிற்கு அப்படிபட்ட சந்கோஜங்கள் எல்லாம் இல்லை. ஆறு பெண்களை வளர்த்து ஆளாக்கியவருக்கு பெண் பிள்ளைகளிடம் இயல்பாய் ஏற்படும் வாஞ்சையே மேலிட, நொடியில் குழந்தைகளை கையில் ஏந்தி அழகு பார்த்து கொஞ்சிப் பேசி, பயணக் களைப்போடு வந்து நின்ற பெண்களையும் விசாரித்தார்.

“துணைக்கு யாரும் வரலையா பாப்பா? நீ மட்டும் தனியா சென்னைக்கு போயிடுவியா?” மழலைகளை பார்த்துக் கொண்டே சில்வியாவிடம் கேட்க, இளம் பெண்களுக்கு அவரது தவறான கணிப்பு புரிந்து போனது.

“ஏன் அத்தா? வந்து ஒரு மணிநேரம் கூட ஆகல… அதுக்குள்ள இவளை அனுப்புறத பத்தி பேசணுமா!” என பேச்சினை மாற்றியவாறே, குழந்தைகளுக்கும் தனக்கும் வேண்டிய அவசரத் தேவைகளை குறிப்பாக எழுதிக் கொடுத்து வாங்கி வருமாறும் தந்தையை அனுப்பி வைத்தாள் ஹனியா.

அடுத்து வந்த ஒரு மணி நேரத்தில் ஜன்னத்தின் சிறப்பான கவனிப்பில் பெண்கள் இளைப்பாறி, உணவுண்டு, குளித்து முடிக்கவும் மழலைகள் பசியில் அழவும் சரியாக இருந்தது.

தூக்கம் களைந்து அழும் குழந்தைகளை தொட்டு தூக்கிக் கொள்ளவும் மறந்து திக்கற்ற பார்வையில் தோழிகள் ஒருவரையொருவர் பார்த்து விட்டு, பின் சகஜமானர்கள்.

வழக்கம் போல சில்வியா பால் பவுடரை கலக்க ஆரம்பிக்க, ஹனியா தயங்கித் தயங்கியே ஒரு பிள்ளையை மடியேந்திக் கொண்டாள்.

“என்ன பாப்பா பவுடர் கலக்கி கொடுக்குற? நீ பசியாத்த மாட்டியா!” சில்வியாவை கேட்டவாறே தொடர்ந்து வந்த ஜன்னத், மகள் குழந்தையை ஏந்திருப்பதை பார்த்து நொடிநேரம் அதிர்ந்து நின்றார்.

முதலில் புரியாமல் இமைதட்டி விழித்தார். பின்பும் நம்ப முடியாமல் பெண்களை மாறிமாறிப் பார்த்தார். பின் ஆத்திரமாய் மகளின் முகத்தை நிமிர்த்தி கோபத்துடன் முறைத்தார் ஜன்னத்.

‘இனியும் நாடகத்தை தொடர முடியாது.’ என கலக்கத்துடன் நிமிர்ந்த ஹனியாவும் கண்ணில் தேங்கிய நீருடன் அம்மாவைப் பார்க்க, “என்னடி இது கோலம்? நீ முட்டாள் ஆனியா? இல்ல… எங்களை முட்டாளாக்கப் பாக்கறியா?” என ஆவேசத்துடன் கேட்டவர், அதற்கு மேல் வார்த்தை வராமல் ஓவென்று ஓலமிட்டார்.

“அம்மா ப்ளீஸ்… நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க! எல்லாம் சரி பண்ணிடலாம். யாரும் முட்டாளாகப் போறதில்ல!” ஹனியாவின் நடுங்கிய வார்த்தைகளை ஜன்னத்தால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

“ஆமா ஆன்ட்டி, அமைதியா இருங்க… அவசரப்பட்டா, நம்ம பேருதான் அசிங்கப்பட்டு போகும்!” சில்வியாவும் தன் பங்கிற்கு பேச,

அவளை முறைத்தவர், “இப்ப மட்டும் ரொம்ப கெளரவமா, கோபுரத்துல ஏறி நிக்கறதா நெனப்போ!” கொதித்துக் கூறியவர், விருட்டென்று திரும்பி மகளின் கன்னத்தில் அறைந்தார்.

அந்த அதிர்வில் மடியில் இருந்த குழந்தை வீறிட, பின்பாட்டாக அடுத்த குழந்தையின் அழுகைச் சத்தமும் தொடர்ந்தது.

அந்த நேரத்தில் வெளியே சென்று திரும்பிய ஹக்கீமும், “என்ன ஆச்சு ஜன்னத்? எதுக்கு புள்ளகள சத்தம் போட்டுட்டு இருக்க?” படபடப்புடன் கேட்டபடி வந்தார்.

“நம்ம வீட்டு வெட்டருவாள எடுத்து வாருமய்யா… உம்ம பொண்ணையும் அவ பெத்தெடுத்த அசிங்கங்களையும் சீவிட்டு வாரும்… நாமளும் நாண்டுட்டு செத்துப் போவோம்!” அதீத ஆங்காரமாய் பேசிய ஜன்னத், மகளின் நிலையை காணச் சகியாமல் தள்ளாட்டத்துடன் கீழே விழுந்தார்.

மனைவியை தாங்கிக் கொண்டு அமர வைத்த அப்பாவை நிமிர்ந்து பார்க்கும் தைரியமின்றி தலைகுனிந்து நின்றாள் ஹனியா.

கணவரின் நிஜமா என்ற பார்வைக் கேள்வியில் ஆமென்று தலையசைத்த மனைவி, அதே வேகத்தோடு தலையில் அடித்துக் கொண்டு கதறியழத் தொடங்கினார்.

“நம்ம பொண்ணு சோரம் போயிட்டா மச்சான்!” என பெருங்குரலெடுத்து அழுத ஜன்னத், இல்லையென்று மறுக்க வந்த ஹனியாவை யோசிக்காமல் தள்ளிவிட்டார்

தள்ளாத வயதில், அடக்க முடியாத கோபத்தை வெளிப்படுத்தவும் வழியில்லாமல் ஸ்தம்பித்து நின்றனர் பெற்றவர்கள். பதில் பேசும் திராணியுமற்று வெறித்த பார்வையுடன் நடுங்கிக் கொண்டு நின்றாள் ஹனியா.

“எப்படியாவது நடந்ததை சொல்லிடு ஹனி…” சில்வியா அவளை உலுக்க, சற்றே சுயமடைந்தாள்.

“இப்படி ஆகும்னு நானும் எதிர்பாக்கல அத்தா!” தகப்பனிடம் மென்று முழுங்கிப் பேசிய நேரத்தில், அவரது கை மகளின் கன்னத்தில் இடியாக இறங்கி இருந்தது.

மீண்டுமொரு ஆர்ப்பாட்டமான மழலைகளின் அழுகை அரங்கேற்றம் பெற, “அடச்சே… நாதாரிகளா… வாய மூட மாட்டிங்க!” என எரிந்து விழுந்து தனது கோபாவேசத்தை இறக்கினார் ஹக்கீம்.

“இந்த நிமிசமே வீட்டை விட்டு வெளியே போயிடு… நிக்கா முடியாம கையில குழந்தையோட எங்க முன்னாடி தைரியமா வந்து நிக்கும்போதே உன் லட்சணம் விளங்கிடுச்சு! நீ தறுதலையா சுத்துன கதைய சொல்லி எங்களை கொலைகாரனாக்கப் பார்க்காதே!” கொதித்துப் பேசி விரட்டியதில் தந்தையின் கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள் ஹனியா.

“நீங்களும் விரட்டினா எனக்கு வேற போக்கிடம் இல்ல அத்தா!”

“செத்துப் போ நாயே!” ஜன்னத்தின் உக்கிரக் குரலில் வாயடைத்துப் போனாள் ஹனியா.

“ஊர் மேஞ்சிட்டு வர்ற தெருநாய வீட்டுல் சேத்துக்க மாட்டாங்க திமிரெடுத்த நாயே!” ஆத்திரத்துடன் பேசிய ஹக்கீம், மகளை எட்டி உதைக்க, அறையின் மூலையில் சென்று விழுந்தாள் ஹனியா.

“எதையும் விசாரிக்காம ஆத்திரப்படுறீங்களே அங்கிள்!” பரிதவிப்புடன் பேசிய சில்வியா, தோழியை எழ வைத்து நிறுத்தினாள்.

“என்னத்துக்கு கேக்கணும்ங்கறேன்? ஆம்பளையோட துரோகத்துக்கு ஏமாந்து பலியாடா நின்னிருந்தா, எப்பவோ எங்க முன்னாடி வந்து நின்னு கதறி அழுதிருப்பா… ஆனா இந்த நாதாரி பகுமானமா குடும்பம் நடத்தி கூத்தடிச்சு, நாறிப் போன பொறவுல பெத்தவங்களை தேடி வந்து நிக்குது! இதுல இருந்து தெரியல இந்த விளங்காதவளோட லட்சணம்!” என கர்ஜித்தவர், காறி உமிந்து விட்டே பேச்சை நிறுத்தினார்.

பெற்றவர்களிடத்தில் இத்தனை எதிர்ப்பை கடுமையை ஹனியா எதிர்பார்த்திருக்கவில்லை. சொல்லும் விதத்தில் பதமாக விளக்கிச் சொல்லி அமைதிபடுத்தி விடலாம் என நினைத்து வந்தவளுக்கு அவளின் நியாயம் என்று கருதியதை கூறவே முடியாத நிலையில் பெருந் துயரத்துடன் நின்றாள்.

“இந்தா பொண்ணு… இப்பவே இந்த கழிசடைகளை கூட்டிக்கிட்டு இடத்தை காலி பண்ணு! இல்லன்னா… என் வீட்டு வெட்டருவா ரத்தம் பார்த்துட்டு தான் அடங்கும்!” மீண்டும் ஹக்கீம் உறும ஆரம்பிக்க, வெடித்துக் கொண்டு அழுதாள் ஹனியா.

“ஊரு மெச்ச ஆறு பொண்ணுகள தங்கமா வளத்து கரையேத்தி இருக்கேன். தப்பான பார்வையோட ஒத்த பயலும் என் வீட்டு பொண்ணுகள பார்த்திருக்க மாட்டான்… ஆனா நீ…” மேற்கொண்டு பேசவும் வாய் கூசிப் போய் பல்லைக் கடித்து அடக்கிக் கொண்டார் ஹக்கீம்.

தந்தையின் வசைமொழிகளில் துடித்த மகளின் இதயம் அவளுக்கான நியாயத்தை சொல்லவும் மறந்து போனது. ‘அவர் சொல்வதும் உண்மைதானே!’ என வெட்கித் தலைகுனிந்தாள்.

குடும்ப கௌரவம், பாரம்பரியம், பண்பாடு என எதைப் பற்றியும் யோசிக்காமல் தான் ஆடிய கண்ணாமூச்சியின் எதிரொலியில் கரை கடக்காத புயலாக சின்னாபின்னமாகி நின்றாள் ஹனியா.

“உங்க பேர் சொல்லுற பொண்ணா வாழ தவறிப் போயிட்டேன் ப்பா… மன்னிப்பு கேக்க கூடாதுதான்! இந்த பிள்ளைகளை பார்த்த பிறகுதான் என் தப்பு என்னன்னு எனக்கே புரிஞ்சது. இவங்களுக்காக தான் உங்க முன்னாடி வந்து நிக்கிறேன்! அது தப்புன்னா என்னோட இந்த பிள்ளைகளையும் சேர்த்து வெட்டிப் போட்ருங்க!” தேம்பிய குரலில் கூறி தந்தையின் கால்களில் மண்டியிட்டாள் ஹனியா.

“இப்ப அழுது என்ன லே பிரயோசனம்… வெளங்காத மூதி! எங்க அத்த அம்மா எல்லாருமே ஹாஜி… அவங்க பேத்தி செய்யுற வேலையா இது? உன் ஆறு அத்தைமாருங்க உன்னை கண்ணுக்குள்ள வச்சு தாங்கினதுக்கு ரொம்ப நல்ல பேரு தேடிக் கொடுத்திட்டலே… ஒன்னுமறியாத இந்த பச்ச மண்ணுகளோட பாவத்தையும் சுமந்துட்டு இப்படி அசிங்கமா வந்து நிக்கிறியே லே! இந்த பாவத்தை எதை கொண்டு கரைக்க… யாஹ் அல்லா!” கடிந்த வார்த்தைகளோடு அழுகையும் சேர்ந்து வெடிக்க, காலில் விழுந்த மகளின் தலையை தந்தையின் கை தன்னால் ஆதரவாய் தடவியது.

தந்தையின் அந்த ஒற்றை வருடல் ஹனியாவிற்கு அத்தனை நம்பிக்கையை கொடுத்தது. மனதில் பரவியிருந்த பயத்தை துடைத்தெறியச் செய்தது. அழுகையோடு கட்டுப்பாடின்றி தான் வாழ்ந்த லட்சணத்தை சுருக்கமாக சொல்லி முடிக்க, பல்லைக் கடித்து கேட்டுக் கொண்டனர் பெற்றவர்கள்.

இனி பெண்ணின் எதிர்காலம் மட்டுமல்ல… அவள் ஏந்தி வந்த இரண்டு இளம் குருத்துகளின் வருங்காலமும் இவர்களின் கட்டுப்பாட்டில்தான் என தீர்மானித்த நேரத்தில் ஹக்கீம் பல முன்னேற்பாடுகளை மேற்கொள்ள ஆரம்பித்தார்.

***

மூன்றுநாள் மறுவீட்டு விருந்து வெகு ஜோராகவே முடிந்தது. புதுமணத் தம்பதியரின் பார்வைகளும் சிந்தனைகளும் காதல்மொழி பேச, உறவின் உன்னதத்தில் இன்னும் அதிகமாய் பிணைந்திருந்தனர்.

சீர்வரிசைகளோடு விருந்து முடிந்து மதுரைக்கு வந்த மறுநாளே மீண்டும் மனைவியுடன் தேனிக்கு புறப்பட்டு நின்றான் அரவிந்தலோசனன்.

“என்ன அவசரமான காரியம் அரவிந்தா?” வேகமாக கேட்ட பரிமளத்தின் குரலிலேயே அவரின் படபடப்பு தெரிந்தது.

மகன் மட்டுமே வாழ்வின் ஆதாரமென வாழ்ந்து வரும் அன்னையின் பல எண்ணங்கள் தடையில்லாமல் அலைமோதத் தொடங்கியிருந்தன.

“அவசரமில்லம்மா… ஆனா, சாலா போக வேண்டிய அவசியம் இருக்கு!”

“புரியல அரவிந்தா!”

“இந்த வருசம் ஸ்கூல் எக்ஸாம்ஸ் முடியுற வரைக்கும் அவ தேனியில இருந்து ஸ்கூலுக்கு போகட்டும். லீவு நாள்ல இங்கே வரட்டும். இந்த விவரத்தை இவங்க வீட்டுலயும் சொல்லிட்டு இவளை விட்டுட்டு வந்துடுறேன்!” சாதாரணமாகக் கூறியபடி அத்தை, அம்மாவோடு நின்றிருந்த சுமதியையும் பார்த்தான் அரவிந்தன்.

சுமதியின் பார்வையில் மெச்சுதல் தெரிய, பெரியவர்களின் முகமோ சட்டென அதிருப்தியைக் காட்டியது. அந்த நேரத்தில் அங்கு வந்து நின்ற கிருஷ்ணாவை பார்வையால் துளைத்தார் பரிமளம்.

மாமியாரின் பார்வைக்கு தடுமாறிப் போனவளாக, “என்கிட்டயும் இன்னைக்கு காலையிலதான் சொல்லி, ரெடியாகச் சொன்னாரு அத்தை!” மெதுவாக கூறி முடித்தாள்.

“உங்க முடிவு என்ன அண்ணி?” சுமதி கேட்க,

“முடிவு சொல்றதுக்கு ஒன்னுமே இல்ல சுமதி! என் கெரியருக்காக இவர் யோசிக்கிறதுல எனக்கு சந்தோஷம் தான்!”

“கல்யாணத்துக்கு முன்னாடி, இதைப் பத்தி பேசிக்கலையே  அரவிந்தா!” மனோன்மணி எடுத்துக் கூற,

“பெரியவங்க பேச்சும் நம்ம குடும்ப வழக்கமும் மாறாம இருக்கத்தான் நீங்க சொன்னமாதிரி கல்யாணம் வைக்க சம்மதிச்சேன். அதே மாதிரி என் பொண்டாட்டியோட எதிர்காலம் சம்மந்தப்பட்ட விஷயமும் குறையில்லாம இருக்க என்ன செய்யணுமோ அதை செய்யுறேன் அத்தே… இதுல வேற எந்த பேச்சையும் இழுக்காதீங்க!” அரவிந்தன் முற்றுப்புள்ளி வைத்துவிட, பெண்களின் மனதில் கலக்கம் கூடிப்போனது.

“நீ சொல்றது வாஸ்தவமா இருந்தாலும் வீட்டு மாப்புள்ளங்க கிட்ட இந்த யோசனையை சொல்லிட்டியா? உங்க பெரிய மாமா சரின்னு சொல்லிட்டாரா!” கதிரவனை மனதில் வைத்து கேட்டார் பரிமளவல்லி.

“என் பொண்டாட்டிய வேலைக்கு அனுப்ப, நான் யாருகிட்ட பெர்மிஷன் கேக்கணும்? கல்யாணம் முடியுற வரைக்கும் நடக்கிற ஒவ்வொரு பேச்சுக்கும் பெரியவங்க சம்மதம் வேணும். ஆனா, இப்ப நிலைமை அப்படி இல்ல…” அமைதியாக பதில் சொல்லி முடித்தான் அரவிந்தன்.

“நீ சொல்றது சரிதான்யா… ஆனா இதை அவர் முகத்துக்கு நேரா சொல்ல முடியாதே! என்னை மீறி முடிவெடுக்குறீகன்னு தானே பேசுவாரு!” அத்தையின் கூற்றில் உண்மை புரிபட கதிரவனை செல்பேசியில் அழைத்தான் அரவிந்தன்.

“நல்லா இருக்கியா மாப்புள? தங்கச்சி எப்படி இருக்கு?” எடுத்த ஏடுப்பிலேயே மகிழ்ச்சியோடு விசாரித்தார் கதிரவன்.

“நேத்து தானே மாமா உங்களை பார்த்து பேசிட்டு வந்தேன்… நமக்குள்ள எதுக்கு மாமா இந்த சம்பிரதாயம் எல்லாம்?” அரவிந்தன் கேட்க அட்டகாசமாய் சிரித்தார் கதிரவன்.

“ஹஹா… இதுதான்யா நீ! சொல்லு அரவிந்தா… என்ன விசயம்?”

“இன்னையில இருந்து வேலையை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் மாமா… ஆர்டர், கலெக்சன் எல்லாம் நிறைய பெண்டிங்ல இருக்கு.”

“அட… உன் வேலைய நீ பாருய்யா… எதுக்கு என்கிட்டே விளக்கம் சொல்லிட்டு இருக்க மாப்புள?”

“இதேன் மாமா நீங்க… நம்ம வேலைக்கு நாம யாருக்கும் விளக்கம் சொல்ல வேண்டியதில்லன்னு அத்தைகிட்ட சொன்னா ஒத்துக்காம உங்ககிட்ட கேட்டுகிட சொன்னாக?”

“என்ன கேக்கணும் மாப்புள?”

“என் பொண்டாட்டி இந்த வருசம் ஸ்கூல் முடியுற வரைக்கும் தேனியில தங்கி வேலைக்கு போகப் போறா… நான் கொண்டு போயி விடப்போறேன்! இதுக்கு யார்கிட்ட பெர்மிசன் கேக்கணும் மாமா?” சிரித்துக் கொண்டே கேட்டதில் ஒருநிமிடம் யோசித்து பின்னர் பல்லைக் கடித்துக் கொண்டார் கதிரவன்

எப்படி பேசினால் மசிவார் என்று அறிந்து வைத்திருப்பவனுக்கு, அவரவருக்கு ஏற்றபடி தாளம் தட்ட மிக நன்றாகவே தெரிந்திருந்தது.

“கல்யாணத்துக்கு பொறவு வேலைக்கு போறதா பேசிக்கலையே மாப்புள!”

“நாமளும் போகக்கூடாதுன்னு சொல்லலையே மாமா?” என்று விட்டு நொடி நேரம் நிறுத்தியவன், “அதோட இந்த வருசம் மட்டுந்தானே… அவ போயிட்டு வரதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல மாமா! ஆறுமாசத்துல அப்படியென்ன வேலை வெட்டி முறிச்சுற போறா இந்த வீட்டுல… எல்லாம் மெதுவா பழகிக்கட்டும் மாமா!” பதில் வார்த்தை பேச முடியாதபடிக்கு, இவன் தனது தரப்பினை கூறி முடிக்க, கதிரவன் மூக்குடைபட்டு நின்றார்.

‘தனியா பேசி சாதிச்சுக்க முடியாதத புருஷனை விட்டு நடத்திக்குதா இந்த பொண்ணு? புது மாப்பிள்ளை துள்ளுறதுக்கு காரணம் வேற வேணுமா!’ இதையும் தாண்டிய அதிகப்படியான எண்ணங்களில் இருவரையும் எடைபோட்டு புகைந்தார் கதிரவன்.

மறைந்து போயிருந்த கிருஷ்ணாவின் மீதான மனத்தாங்கல் மீண்டும் உருவம் கொள்ள இவனது பேச்சு ஒன்றே போதுமானதாக இருந்தது.

அரவிந்தனுக்கு இந்த எண்ணமெல்லாம் இல்லை. தன்னை நம்பி வந்து விட்டதால் மனைவிற்கான விருப்பங்கள், உரிமைகள் தட்டிப் போய்விடக் கூடாது என்பதில் அதிக சிரத்தையுடன் இருந்தான்.

புகைந்த எண்ணங்கள் தீயை கக்கினால்,   இருவருக்குமான புரிதல்கள் சாம்பலாகிப் போகுமா… புகையோடு தொலைந்தே போகுமா!?