பூந்தளிர் ஆட…

பூந்தளிர் ஆட…

பூந்தளிர் – 1

தேனி மாவட்டம் அல்லி நகரத்தின் அந்த மத்திமவர்க்க வீட்டில் மகேந்திரா வேன் அமைதியாக வந்து நின்றது. வாகனத்தில் இருந்து நண்டு சிண்டு, பெரியவர் சிறியவர் என இருபதுக்கும் மேற்பட்டோர் கீழே இறங்கி தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.

“பெருமாளே… நல்லபடியா கொண்டு வந்து இறக்கிட்ட… இதே போல நாம வந்த காரியமும் சுபமா முடிய அருள் செய்யப்பா!” முணுமுணுப்புடன் வேண்டுதலை வைத்துக் கொண்டே இறங்கினார் மனோன்மணி.

வேனில் வந்திறங்கிய கூட்டத்தின் மூத்த பெண்மணி… எழுபதை தொட்ட அந்த முதியவரின் உருவமும் குரலும் கண்டிப்புடன் கருணையையும் ஒருசேர காட்டும் மதிப்பான தோற்றம்.

அவரை ஒட்டிக்கொண்டு வந்து நின்றார் பரிமளவல்லி. ஐம்பது வயதைத் தாண்டிய பெண்மணி. புன்சிரிப்பில் மலர்ந்த முகம். அதிலும் ஒரு எல்லையை போட்டு வைத்து பயணிப்பார் போலும்!

எந்த ஒன்றையும் கனிவோடு நோக்கும் பாந்தமான தோற்றம். நெற்றியில் சிறுகீற்றாக விபூதி அலங்கரித்து இருக்க, தங்கநிற ஃபிரேமினாலான கண்ணாடிக்குள் அடங்கியிருந்த அந்த கண்களில் தீட்சண்யம் நிறைந்திருந்தது.

இரு பெண்மணிகளும் சேர்ந்து டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தவனை கேள்வியாகப் பார்த்தனர்.

“எய்யா அரவிந்தா… வண்டிய ஓரம் கட்டிட்டு நீயும் சீக்கிரமா எறங்கி வாய்யா!” மனோன்மணி கூற, மறுப்பாக தலையசைத்தான் அரவிந்தன்.

“எல்லாரும் உள்ளார போயி பேசிட்டு இருங்கத்தே… நான் இதோ பக்கத்துல ஒரு வேலையை முடிச்சிட்டு வாரேன்!” சிரிப்போடு பேசி நழுவப் பார்த்தான்.

“சொல்லச் சொல்லச் கேக்காம இதென்னய்யா பழக்கம்?” அத்தை மனோன்மணி முகம் திருப்பிக் கொள்ள,

“நீ போயி உன் வட்டம், மாவட்டம் எல்லாம் சாரிச்சு வையி த்தே… அதுக்குள்ள வந்துர்றேன்!” இறங்காமல் பேசினான் அரவிந்தன்.

“என்ன தம்பி இது? பெரியவங்களை எதுத்து பேசிகிட்டு!” பரிமளத்தின் குரல் மகனை கடிந்து கொள்ள,

“ம்மா… எல்லாம் உன் முடிவுத்தேன்! நீ பரிசம்னு சொன்ன மோதிரம் போட வாரேன்… முகூர்த்தம்ன்னு சொல்லும் போது தாலி கட்ட வாரேன்…” அமைதியாக கூறியவன் அத்தையை பார்த்து,  

“எல்லாம் நீங்களே பார்த்து முடிங்கத்தே… உடால நான் என்னத்துக்கு இடைஞ்சல…” என்று கூறி முடிக்க,

“நீ சொல்றதெல்லாம் சரிதான் ண்ணே… ஆனா உள்ளே இருக்கறவகள கொஞ்சம் நினைச்சு பாரு! நாம பொண்ணை பாக்க ஆச பட்டாப்புல, அவுகளும் மாப்பிள்ளையை பாக்கணும்னு நெனைக்க மாட்டாகளா?” சின்னத்தங்கை சுமதி அண்ணனிடம் எடுத்துக் கூறினாலும் அசரவில்லை அவன்.

“அதேன் சின்னக்குட்டி… நீங்க பார்த்து பேசி முடிங்கடா! தோ போயி சரக்கை இறக்கிட்டு ஓடியாந்துறேன்!” சமாளித்தவனாக வண்டியை முடுக்கி விட, ‘இனி என்ன சொன்னாலும் இவன் கேட்க மாட்டான்!’ என அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்து போனது.

“என்ன மாப்புள… வந்த இடத்துல சலம்பல கூட்டிட்டு இருக்க?” வீட்டின் பெரிய மாப்பிள்ளை அங்கே வந்து நின்று விட, ‘இப்போ பதில் சொல்லு!’ பார்வையால் பேசினர் மூன்று பெண்களும்.

“ஒரு சின்ன வேலை முடிச்சிட்டு வாரேன் மாமோய்! அது வரைக்கும் நீங்க கொஞ்சம் பார்த்துகிடுங்க!” என்றவன் தனது மூத்த தமக்கையை அழைத்து, “எக்காவ்… மாமன் பக்கத்துல உக்காந்து அவரை பத்தி உள்ளார சொல்லி வையி… இந்தா வந்துட்டேன்! என்றவனாக வண்டியை கிளப்பி விட்டான் அரவிந்தன்.

காரியம் என்று வந்தால் யாராலும் இவனை அணைபோட்டு தடுத்து நிறுத்திவிட முடியாது. அதே போல எவருடைய மனம் கோணாமலும் குடும்ப விஷயங்களில் இவனைப்போல பொறுப்பாக ஏற்றுக் கொண்டு நடத்திட யாராலும் முடியாது.  

இவர்களின் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியில் வருவதற்குள் வேன் ஓட்டம் எடுத்திருந்தது. வந்தவர்களை இன்முகத்துடன் வரவேற்று அமரச் செய்தனர் அந்த வீட்டில் உள்ளவர்கள்.

அன்றைய தினம் பெண் பார்க்கும் படலம் அந்த வீட்டுப் பெண்ணிற்கு… அதன் பொருட்டு மதுரையில் இருந்து மாப்பிள்ளை வீட்டினர் வந்து சேர்ந்த நேரம் மாலை ஐந்து மணி.

பிரயாணக் களைப்பு தீரவும், வேனில் வந்த சூட்டை தணிப்பதற்கும் தண்ணீர் பழமும், பன்னீர் திராட்சையும் சிறிய கிண்ணங்களில் வழங்கப்பட்டது. பழத்தோடு வீட்டையும் பார்வையில் மென்று முழுங்கி திருப்திபட்டுக் கொண்டனர் மாப்பிள்ளை வீட்டினர்.

பழைய காலத்து முறைப்படி இருபுறமும் நல்ல நீள அகலத்தோடு வெளியே இரண்டு திண்ணையுடன் கட்டப்பட்ட அம்சமான வீடு. பெரிய மாளிகையல்ல என்றாலும் பார்வைக்கு பதவிசாக பெரிய வீடாகவே தெரிந்தது.

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பம் என்பது அந்த வீட்டை பார்க்கும்போதே விளங்கிப் போனது. பழம் உண்டு முடித்ததும் அடுத்து பொதுவாக அனைவரையும் அறிமுகப்படுத்தும் படலம் தொடங்கியது.  

மாப்பிள்ளை அரவிந்தலோசனன்… மதுரை கூடல்நகரில் வீடு, தொழில், நிலபுலன் என அனைத்தையும் சொந்தமாக வைத்துக் கொண்டு வளர்ந்து வரும் இளம் தொழிலதிபன்.

சமீப காலங்களில் ரேடியோவிலும் தினசரிகளிலும் அதிகமாய் விளம்பரப்படுத்தபட்டு மக்களிடம் பாராட்டை பெற்று வரும் ‘மாஸ் மசாலா’ நிறுவனத்தின் உரிமையாளன்.

இவனது அத்தை மனோன்மணி வீட்டோடு தங்கியுள்ளார். இளம் வயதிலேயே கணவரை இழந்து தம்பியின் வீட்டோடு வந்து விட்டார். இவனது அன்னை பரிமளவல்லி. முப்பதை தாண்டிய வயதில் கணவரை இழந்து நாத்தனாரின் அரவணைப்பு மற்றும் பக்கபலத்துடன் சுயதொழில் செய்து பிள்ளைகளை வளர்த்து இப்போதும் மகனுக்கு உறுதுணையாக வாழ்ந்து வருபவர்.

அரவிந்தனின் உடன்பிறந்தவர்கள் இரண்டு தமக்கைகள் சுதாமதி, சாருமதி… இவர்களின் குடும்பம் குழந்தைகள் என அனைவரும் வருகை புரிந்திருந்தனர்.

அரவிந்தனுக்கு அடுத்தபடியாக இரட்டையர்களாக சுமதியும் ராம்சங்கரும்… சுமதி எப்போதும் அரவிந்தனின் செல்லத் தங்கை. அவ்வண்ணமே தம்பி ராம்சங்கரும்… இதில் ராம்சங்கர் வெளிநாட்டு வாசியாக அங்கேயே தங்கிவிட்டபடியால் அவன் வரவில்லை.

உடன்பிறந்தவர்கள் அனைவரும் குடும்பம் குழந்தை என்று நிறைவாக வாழ்ந்து கொண்டிருக்க, இப்பொழுதுதான் குடும்பத்தின் மூத்தவனுக்கு கல்யாண யோகம் கூடி வந்திருக்கின்றது.

மாப்பிள்ளை வீட்டினரை முறையாக அறிமுகப்படுத்தி முடிக்கும்போதே நேரம் சென்றுவிட சுடச்சுட கேசரியும் வடையும் தேங்காய் சட்னியோடு பரிமாறப்பட்டது.

“மொதல்ல பொண்ண பார்த்துடலாம் அண்ணி!” பரிமளம் மெதுவாக மனோன்மணியின் காதினை கடிக்க, அவரும் அதே எண்ணம் கொண்டவராக பெண் வீட்டினரைப் பார்த்தார்.

“அதென்ன மணி இப்படி அந்நியமா பார்த்து வைக்கிற… உங்கப்பாவும் எங்கம்மாவும் கூடப் பொறந்தவுக முற தானே… அதால எதையும் மனசுல வச்சுக்காம மொதல்ல கை நனைங்க…” என்று பெண்ணின் பாட்டி விசாலம் கூறிட யாராலும் மறுத்துப் பேச முடியாமல் போனது.

பெண் வீட்டு மனிதர்கள் என்று ஆறு பேர் மட்டுமே! பெண்ணின் பாட்டி விசாலம்… பெண்ணின் அன்னை பங்கஜம்… பங்கஜத்தின் முதல் பெண் கோமளவல்லி. அவளது கணவன் கோவர்த்தனன் இவர்களின் பத்து வயது மகள் சாத்விகா. பெண்ணின் தந்தையும் அல்பாயுசில் இறைவனை நாடியிருந்தார். உடன் மாமன், அத்தை உறவுமுறைகள் என இருவரும் அங்கே அமர வைக்கப்பட்டிருந்தனர்.

மாப்பிள்ளை வீட்டினர் வந்து ஒரு மணிநேரம் விரயமாகி, விருந்து உபசரிப்புகளும் முடிந்து நேரம் கடந்து கொண்டிருந்தது.

“ஏண்டி… இங்கன கெழவிக மாநாடு நடக்கப் போகுதுன்னு சொல்லியிருந்தா, நான் வந்திருக்கவே மாட்டேனே… உந் தொம்பிக்கு இருக்கற கூறு எனக்கில்லடி!” பெரிய பெண் சுதாமதியின் காதினை கடித்தான் அவளது கணவன் கதிரவன்.

“அய்யே… குடும்பத்துக்கு மூத்தவரா வந்துட்டு பேச்சைப் பாரு!” முகம் சுருக்கினாள் சுதாமதி.

“யண்ணே… இவுக பொண்ணு கழுத்துல தாலி கட்டுறேன்னு மாப்பிள பய வந்து சொன்னாத்தேன் பொண்ணை கண்ணுல காட்டுவாகளோ!” இரண்டாவது பெண் சாருமதியின் கணவன் முகிலன் வம்பு பேச ஆரம்பிக்க,

“செத்த நேரம் சும்ம இருங்களேன்!” கிசுகிசுத்தாள் சாருமதி.

“எம்மோய்… மாப்பிள்ளை வந்த பிறகு இன்னொருக்கா வந்துட்டு போகட்டும்… இப்ப சீக்கிரமா வந்து பொண்ணு மொகத்தை காட்டச் சொல்லு! இல்லன்னா உம் மருமவனுங்க நடையை கட்டிடுவாங்க… அதுக்குள்ளார அண்ணனை நான் வெரசா வரச் சொல்றேன்!” சுதாரிப்புடன் சுமதி பேச,

“நான் செத்த வெளியே இருக்கேன் சுமதி!” என்றபடி குழந்தையுடன் எழுந்தான் அவளின் கணவன் சுதர்சன்.

“செத்த இருங்க மாப்பிள்ள… நான் பேசுறேன்!” படபடப்புடன் பரிமளம், விசாலம் பாட்டியை பார்க்க, சூழ்நிலையை புரிந்து கொண்டவராக பெண்ணை அழைத்து வருமாறு கோமளவல்லியிடம் ஜாடை காட்டினார் விசாலம்.

“சினிமா கொட்டாயில திரைய உசத்துற கணக்காவே பில்ட்-அப் பண்றாங்களே ண்ணே!” சுதர்சன், முகிலனின் காதில் கேலி பேசினான்.

இருவரும் ஒரே வயது, தொழிலும் அப்படியே! அதனால் இவர்களின் ஒட்டுதல் சற்றே அதிகப்படியாகவே இருக்கும். கதிரவன் இவர்களுடன் கூட்டு சேரமாட்டார். அவர் வழி என்றும் தனி வழி. மற்றவர்களை இம்சிக்கும் புதுமையை மட்டுமே யோசிக்கும் ரகம் இவர்.

ஒரு வழியாக பெண்ணும் சபைக்கு அழைத்து வரப்பட்டு, அனைவருக்கும் வணக்கம் வைத்தாள். பெண் வந்து நின்றதும் சற்றும் தயங்காமல், “இங்கன வாம்மா!” அன்போடு அழைத்து தன்னருகில் அமர்த்திக் கொண்டார் பரிமளவல்லி.

“ரொம்ப அழகா இருக்க தங்கம்!” கள்ளங் கபடமில்லாமல் தனக்கு திருஷ்டி கழித்த அந்த வெள்ளந்தி பெண்மணியை அப்போதே பெண்ணிற்கு பிடித்துப் போனது.

மனோன்மணியும் தப்பாமல் அவளை மெச்சுதலுடன் பார்த்து “இந்த சீல கலரு உனக்கு அழகா பொருந்தி போச்சுது கண்ணு!” பேச ஆரம்பிக்க,

“அத்தே… செத்தே நேரம் சும்மா இரு… பொண்ணை பேச வைக்கணும்!” வீட்டுப் பெண்ணாக கேள்வி கேட்க ஆரம்பித்தாள் சுதாமதி.

“உம் பேரன்ன ம்மா?”

“விசால கிருஷ்ணாக்ஷி!”

“பேருலயே வடநாட்டு வாசம் வீசுது… இது செரி வராது!” கதிரவன் முணுமுணுக்க, சுமதி வெளிப்படையாகவே கேட்டு விட்டாள்.

“இது நம்ம பக்கத்து பேரா தெரியலையே?” புரியாதவளாக கேட்டதும்,

“தாத்தா பேரு கிருஷ்ணசாமி… பாட்டி பேரு விசாலம். ரெண்டும் சேர்த்து எங்கப்பா வச்ச பேரு!” என்று பெண் விளக்கம் கூறிட, இடைபுகுந்தார் மனோன்மணி.

“திருநெல்வேலி இரட்டை திருப்பதி கோவில்ல தாயாரோட பேருடி இது! திருத்துலைவல்லி மங்கலம் திவ்யதேசம் பெருமாளோட பேரு அரவிந்தலோசனர்… தாயார் விசால கிருஷ்ணாக்ஷி பேரு பொருத்தம் பாத்துதேன் நான் சாதகமே எடுத்தேன்!” விளக்கம் கூறிய அத்தை, மருமகன்களின் முகம் பார்த்திட அங்கே மறுகேள்விக்கு இடமில்லாமல் போயிற்று!

“உங்களை எல்லாரும் எப்படி கூப்பிடுவாங்க?” சுமதி தீராத சந்தேகமாய் கேட்க,

“அக்ஷின்னு கூப்பிடுவாங்க… சிலர் கிருஷ்ணான்னும் கூப்பிடுவாங்க!” தயக்கமின்றி பதில் வந்தது.

“நம்ம வீட்டுக்கு நீ கிருஷ்ணா தான்!” உரிமையுடன் சொன்ன பரிமளம், மீண்டும் ஒருமுறை தன்னுடைய மகள்கள் மருமகன்கள், பேரன் பேத்திகள் என அனைவரையும் பெண்ணிடம் அறிமுகப்படுத்திட, சிறிய புன்னைகையுடன் அவர்களைப் பார்த்து தலையசைத்தாள் கிருஷ்ணா.

பேச்சு முடிந்ததும் சுமதியின் கையை சுரண்டிய மனோன்மணி, “பையில சாக்பீசு வச்சுருக்கியாடி?” மெதுவாக கேட்க,

“எதுக்குத்தே?”

“சும்மாத்தேன்… உன்கிட்ட இல்லன்னா பொண்ணுகிட்ட கேட்டு வாங்கு!”

“ம்ப்ச்… ஒன்னும் வேணாம். எம் புள்ள கிறுக்கவே பத்து சாக்பீசு பேக்குல போட்டுட்டு அலையுறேன்!” என்றவள் வெளியே எடுத்துக் கொடுத்தாள்.

“அம்மாடி கிருஷ்ணா… செத்த எந்திரிச்சு சுவரோரமா போயி நில்லு தங்கம்… உன்னை முழுசா பாக்கணும்!” அத்தை தடாலடியாக கூற மறுக்க முடியாத சங்கடத்தில் சுவரோரமாக சென்று நின்றாள் கிருஷ்ணா.

“அடியே சின்னவளே… பொண்ணை சுவத்தை ஒட்டி நிக்க வைச்சுட்டு சாக்பீசுல அவ உசரத்தை கோடு கிழிச்சுட்டு வந்துடு… ஓடு!” மனோன்மணி அவசரபடுத்த

“மானத்தை வாங்குறியே த்தே! ம்ஹூம்… நான் போ மாட்டேன்!”

“அடியே… ஒத்த நிமிஷம் போயி கோடு கிழிச்சுட்டு வாடி… நான் சொல்லுதேன்!” என்றவர் விசாலத்தை பார்க்க,

“அச்சுமா… சுவத்தை ஒட்டி நில்லு டா!” என்றவர் சுமதியை ஜாடை காட்ட, கிருஷ்ணாவின் உயரத்திற்கு சுவற்றில் கோடு இழுத்தாள் சுமதி.

“சாரி ங்க… இந்த அத்தை இப்படிதான்… அப்பப்ப ஏதாவது கோளாறு பண்ணி வைக்கும்” மெதுவாக கூறிவிட,

“பரவாயில்ல சுமதி… ஆனா, நான் நின்ன மாதிரி, உங்க அண்ணனும் இப்படி வந்து நிப்பாரா?” கிருஷ்ணா சந்தேகத்துடன் கேட்க,

“அவரு தானே… அதெல்லாம் பேஸா நிப்பாரு! அத்தையும் அம்மாவும் சொன்ன அதுதான் அவருக்கு வேதவாக்கு!” என்று இவள் கூறிய நேரத்தில்,

“இதை செய்ய சொல்லணும்னு நான் சொல்ல நினைச்சேன்… நீங்க செய்ய வைச்சுடீங்க பெரிம்மா!” கதிரவனின் பாராட்டு மனோன்மணிக்கு வந்தடைய, ‘இப்ப புரியுதா நான் எதுக்கு சொன்னேன்னு!’ பார்வையால் தனது புருவத்தை ஏற்றி இறக்கினார் அத்தை.

அடுத்த அரைமணி நேரத்தில் அரவிந்தனும் வந்து சேர்ந்தான். பெண்ணை பார்க்கும் முன்பே சுவற்றை ஒட்டி நிற்க வைத்து அவன் உயரத்திற்கும் கோடு கிழித்தாள் சுமதி.

“இந்தா வந்துட்டாரு எங்க அண்ணேன்… மாஸ் மசலா புரோபரைட்டரு… வேலை செய்யுற பசங்க எல்லாரும் மாஸ்டர்ன்னு கூப்பிட்டே, எல்லாரும் இவரை அப்படியே கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க!” சுமதி பெருமிதமாக கூறி முடிக்கவும், அவளது மகன், “மாஸ்டர் மாமா!” என்று அவன் மீது தாவிச் செல்லவும் சரியாக இருந்தது.

பெண்ணின் உயரக்கோடு கீழிறங்கி, ஆணவனின் கோடு சற்றே மேலே இருக்க, அனைவருக்கும் பரமதிருப்தி. காரணம் அரவிந்தனின் ஐந்தரை அடியும்… கிருஷ்ணாவின் ஐந்தேகால் அடி உயரமும்!

இருவரின் உயரத்தையும் காரணம் கூறியே வரும் வரன்கள் எல்லாம் தட்டிக் கழிந்த வண்ணமிருக்க, புகைப்படத்தை பார்ப்பதற்கு முன் உயரத்தை கேட்டே இருவரின் வீட்டினரும் பெண் பார்க்கும் படலத்திற்கு சம்மதித்து இருந்தனர்.

ஆறு அடியும் அதற்கு மேல் உயரமும் சர்வ சாதரணமாகிப் போன இந்த காலத்தில், ‘இதுவும் ஒரு குறையோ!’ எனுமளவிற்கு உயரத்தை குறிப்பிட்டுக் கூறியே கல்யாண சந்தையில் தட்டிக் கழிக்கப்பட்டன இருவரின் ஜாதகங்களும்.

சரியான காரண காரியமே இல்லாமல் திருமணச் சந்தையில் தட்டிக் கழிக்கப்பட நிலையில் அரவிந்தனின் முப்பத்தி மூன்று வயதிலும் கிருஷ்ணாவின் முப்பது வயதிலும் திருமண யோகம் இவர்களின் உயரத்தை கொண்டே நாடி, தேடி வந்தது.

காணும் காணும்
இருவிழி காதல் பேச
இமைகளிலே கவிதைபடி…

ஏதோ ஏதோ
ஒருவித ஆசை தோன்ற
தனிமை இது கொடுமையடி!

நீங்காமல் நாம்
சேர நீளமாகும் இன்பமே…

தூங்காமல்
கைசேர காதல் தங்குமே!

இனி மாஸ்டர்-கிருஷ்ணாவின் வாழ்க்கைப் பயணத்தில் நாமும் பங்கு கொள்ளலாம்  நண்பர்களே!!